எனது நாடக வாழ்க்கை
(முதல் பாகம், பகுதி 3, அத்தியாயம் 51-75)
அவ்வை தி.க. சண்முகம்

enatu nATaka vAzkai (volume 1)
by T.K.C. Shanmugam
In tamil script, unicode/utf-8 format

எனது நாடக வாழ்க்கை
(முதல் பாகம், பகுதி 3, அத்தியாயம் 51-75)
அவ்வை தி.க. சண்முகம்

Source:
எனது நாடக வாழ்க்கை
அவ்வை தி.க. சண்முகம் எம்.எல்.சி.
வானதி பதிப்பகம்
13. தீனனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17
முதற் பதிப்பு : ஏப்ரல், 1972
அவ்வை தி. க. சண்முகம் மணிவிழா வெளியீடு (28-4-72)
மூன்றாம் பதிப்பு : நவம்பர் 1986
திருகாவுக்கரசு தயாரிப்பு
விலை ரு. 60-00
குருகுலம் பிரின்ட்ர்ஸ். வேதாரண்யம்.
-----------

உள்ளுறை (பகுதி 3, அத்தியாயம் 51-75)


51. போரும் புரட்சியும்


கண்ணாக் கெட்டாத் தொலைவிலிருந்த யுத்தமேகம் நமது மண்ணை நெருங்கியது. ஜப்பானின் தாக்குதலும், விலைவாசி ஏற்றறமும் மதுரை நகர மக்களிடையே பெருங் குழப்பத்தை உண்டாக்கின. “கொழும்பில் குண்டு! கொச்சியில் ஜப்பான் படை! சென்னை காலி செய்யப்பட்டது! பாம்பன் பாலம்போயிற்று! கரை யோரம் எரிகிறது.” இவைகள்தாம் காலையில் கண் விழித்ததும் பரதேசித் தபாலில் வரும் பயங்கரச் செய்திகள்! அரிசிவிலை பவுன் விலையாக உயர்ந்தது. அன்றாடக் கூலிகளின் அடிவயிற்றில் தீப் பிடித்தது. வயிற்றுப்பிரச்னை வந்துவிட்டால் அதன் விளைவு என்ன வாகும்? பசி வந்தால் பத்தும் என்ன; எல்லாம் பறந்து போவது இயல்புதானே!

கொள்ளையும் கல்லெறியும்

கொள்ளை! கொள்ளை!! அரிசிக்கடை, மளிகைக்கடை,ஜவுளி கடை எங்கும் கொள்ளே !!! நள்ளிரவிலல்ல; பட்டப் பகலில், வெட்ட வெளியில், உணவு உடை இரு பகுதியிலும் பெருங் கொள்ளை. சந்தடிச் சாக்கில், சொந்த விருப்பு வெறுப்பில் வந்த தைச் சுருட்ட வந்தவர் சிலர். புரட்சியைப்பற்றி அறிந்திருக் கிறோம் புத்தகங்களில். அதன் அமைப்பில்-உருவத்தில் ஒரு பகுதியை அன்று கண்முன்னே கண்டோம் மதுரையில், ‘பல்பு’கள் உடையாத சினிமாக் கொட்டகைகளே இல்லை. அலங்கார விளக்குகள் அலங்கோலமாயின. தெருவெல்லாம் கண்ணாடிச் சிதறல்கள்!

எங்கள் நாடகக்கொட்டகையை ஒட்டிய விறகுக் கடையில் புரட்சி வீரர்கள் புகுந்தனார். ஒரு கட்டை விடாமல் காலி செய் யப்பட்டது. அடுத்த பாய்ச்சல் நாடகக் கொட்டகை பல்பு களின் மேல் என்றுதான் எதிர்பார்த்தோம். அவர்களை யாரும் தடுப்பாரில்லை. ஆனால், ஆவேசத்தினிடையே அன்பு தாண்டவ மாடியது. திடீரென்று ஒரு குரல். டே, டி. கே. பிரதர்ஸ் கொட்டகைடா, கல்லெறியாதீங்க” என்றது. தெய்வமே குரல் எழுப்பியதாக நினைத்தோம்.

திருமணமான நான், மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத் திய சமயமல்லவா? இந்தப் புரட்சியைக் கண்டு அவள் நடுங்கினாள். சேலத்தில் இதையெல்லாம் பார்த்ததில்லை. அவளுக்கு நான் ஆறுதல் கூறினேன். அன்று மாலை நான்கு மணி. வீட்டுக்கு அருகிலேயே கலகம்! எதிரே ஒரு மளிகைக் கடையில் கொள்ளை ! நானும் என் துணைவியுடன் மாடியில் நின்று வேடிக்கை பார்த்தேன். கொள்ளையில் குதுகலித்த வீரர்கள் கல்லாலும், கம்பாலும் வீதியிலிருந்த வீட்டின் கதவுகளை விசாரித்துக் கொண்டே சென்றார்கள். எங்கள் வீட்டுக் கதவிலும் ஒர் அடி! என் பக்கத்தில் ஒரு கல்! ‘ஐயோ!’ என்று அலறினாள் மனைவி. உடனே ஒரு சத்தம், “டே, அயோக்கியப் பயல்களா, டி. கே. ஷண்முகம் வீடுடா, நிக்கிறாரு தெரியலே?” அவ்வளவு தான், வீரர்கள் கண்கள் மேலே பார்த்தன. போகிற போக்கில் சில கைகள் தலைக்கு மேலே உயர்ந்து வணக்கமும் செய்தன. ரகசியப் போலிசார் பார்த்தார்களோ, என்னவோ. யாருக்குத் தெரியும்? காக்கி உடை தரித்த போலீஸ்காரர்களைத் தான் அன்று காணவே இல்லை: கலக வீரர்களின் இந்த அன்பு வணக்கம் எங்களையும் புரட்சிக் கூட்டுறவில் சம்பந்தப்படுத்தி விடலாமல்லவா? கம்யூனிஸ்டுகளுக்கு நாங்கள் உதவி புரிவதாக ஏற்கனவே போலீ சாருக்கு மொட்டைக் கடிதங்கள் போயுள்ளன. தலைமறைவாக. இருக்கும் சிலர் என்னை அடிக்கடி வந்து சந்திப்பதாகப் புரளியிருந்தது. இரண்டு நாட்கள் ஊரெங்கும் இந்த அமளி நடந்தது. இந்த நிலையில் இருட்டடிப்பு உத்தரவும் வந்தது. சென்னையில் எதிரி விமானம் பறந்தததாகச் சொன்னார்கள். நாங்கள் மதுரையிலிருந்து கும்பகோணத்திற்குப் பறந்தோம்.
---------------

52. இல்வாழ்வில் இன்பம்


குடந்தை வாணி விலாச சபைத் தியேட்டரில் நாடகம் தொடங்கினோம். மதுரையில் மகத்தான வெற்றி பெற்ற சிவலீலாவையே முதல் நாடகமாக நடித்தோம். அமோகமான ஆதரவு கிடைத்தது. சிவலீலாவே தொடர்ந்து நடைபெற்றது. ஏதேதோ இன்பக் கனவுகள் கண்டு கொண்டிருந்த என் மனைவி மீனாட்சியிடம் ஒய்வாக இருந்து உரையாடி மகிழக் குடந்தையில் தான் எனக்கு நேரம் கிடைத்தது. திருமணம் முடிந்தவுடனேயே சிவலிலா நாடகத் தயாரிப்பில் ஈடுபட்டோம். ஏறத்தாழ ஒரு வாரம் என் இல்லத்தரசியின் வீட்டில், சேலம் செவ்வாய் பேட்டையில் தங்கியிருந்தேன். என்றாலும், என் நினைவெல்லாம் சிவலீலாவின் வெற்றியிலேயே குறியாக இருத்தது. மறு வீடு சென்று மனைவியின் வீட்டில் இருந்த போதும் நாடகத்திற்குத் தேவையான குறிப்புகளை எழுதுவதிலேயே பெரும் பொழுது கழிந்தது. மனைவியின் வீட்டில் வரவேற்புக்கும் உபசாரத்திற்கும் குறைவில்லை. அவருடைய தமக்கையும் தங்கை சரசுவும் என்னிடம் மிகுந்த அன்பு காட்டினார். எனக்கோ இருக்கை கொள்ளவில்லை. மனைவியுடன் மதுரைக்குத் திரும்பினேன். இரவு நாடகமாதலால் பகல் வேளை உணவுக்குப் பின் சற்று உறங்குவேன். மாலையிலேயே கொட்டகைக்குப் போய் விடுவேன். நாடகம் முடிந்து வீடு திரும்ப இரண்டு மணி ஆகிவிடும். அதற்குமேல்தான் அன்பு மனே யாளுடன் அளவளாவி மகிழ நேரம் கிடைக்கும்.

மீனாட்சியக்காளின் அன்பு

எங்கள் குடும்ப உறவினார்களைப் பற்றிய சில குறிப்புகளை இங்கு கூறுவது இன்றியமையாததாகும். எங்கள் தந்தை வழிப் பாட்டனார் திரு சங்கரமூர்த்தியா பிள்ளை திருவனந்தபுரம் புத்தன்

சந்தையில் நல்ல மதிப்போடு வாழ்ந்து வந்தவர். அவர் ஓர் ஆசிரியர். சொந்தத்தில் ஒரு தொடக்கப் பள்ளியினையும் நடத்தி வந்தார். இளம் பருவத்தில் மரத்திலிருந்து விழுந்து காலில் ஊனம் ஏற்பட்டதன் காரணமாக அவரை எல்லோரும் நொண்டி அண்ணாவி என்றே குறிப்பிடுவார்கள். அவருக்கு இரு மனைவியர்; இரண்டாவது மனைவியின் பெயர் முத்தம்மை. அந்த அம்மையாரிடம் பிறந்த்வர்கள் சண்முகம்பிள்ளை, கண்ணாசாமிப்பிள்ளை, செல்லம் பிள்ளை ஆகிய மூவர். இவர்களில் சண்முகம்பிள்ளை எங்களுக்கு அறிவு தெரியுமுன்பே காலமாகி விட்டார். பாட்டனாருக்கு முதல் மனைவியிடம் பிறந்தவர் திரு சுந்தரம்பிள்ளை. அவரது மனைவி தாயம்மையிடம் பிறந்தவர்கள் செல்லம்மை, திரவியம்பிள்ளை, மீனாட்சியம்மை, இராமலிங்கம்பிள்ளை ஆகிய நால்வர். எங்களின் ஒன்றுவிட்ட சகோர-சகோதரியரான இவர்கள் நாகர்கோவிலிலேயே வசித்து வந்ததால்தான் எங்கள் அன்னையார் நாகர் கோவிலில் நிலம் வாங்கவும், அதனையே நிரந்தர இருப்பிடமாகக் கொள்ளவும் நேர்ந்தது. எங்களுக்கு அறிவு தெரிந்தபின் 1924இல் நாங்கள் முதல் முறையாக நாகர்கோவிலுக்குச் சென்றிருந்த போது அன்னையார் முலம் இவர்கள் அனைவரும் அறிந்து கொண்டோம். இவர்களில் மூத்த அண்ணா திரவியம்பிள்ளை, கம்பெனியில் சில காலம் மானேஜராகவும் இருந்தார் என்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். இளையவர் இராமலிங்கம்பிள்ளை வக்கீல் குமாஸ்தா. எங்களிடம் பாசமும் பரிவும் கொண்டவர். இவரோடு நாங்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தோம். மீனாட்சியக்காள் என்மீது மிகுந்த அன்புடையவர். இவருடைய மூத்த மகன்தான் நகைச்சுவை நடிகன் சிவதாணு. எனக்குத் திருமணம் நிகழ்ந்த சில நாட்களிலேயே திரவியம்பிள்ளையின் மூத்த மகள் சுந்தரிக்கும் சிவதாணுவுக்கும் திருமணம் நிகழ்ந்தது. மகளுக்கும் மருமகனுக்கும் இருந்த மன ஒற்றுமையை அறிந்த நான், இவர்கள் திருமணத்தை வற்புறுத்தி, அண்ணாவையும் அக்காளேயும் சம்மதிக்க வைத்தேன். என் திருமணத்திற்காக உறவினார்கள் அனைவரும் மதுரைக்கு வந்திருந்தபோது இந்த ஏற்பாடுகளெல்லாம் நடைபெற்றன. என் திருமணத்தைக் காண வந்திருந்த மீனாட்சியக்காள், நான் மனைவியுடன் தனிக்குடித்தனம் தொடங்கியதும் என் மீது கொண்டிருந்த அன்பின் காரண

மாக, என் இல்லத்திலேயே என் மனைவிக்குத் துணையாகத் தங்கி விட்டார். கம்பெனியின் ஒரே நடிகையான திரெளபதியும் வயது வந்த பெண்ணாக இருந்ததாலும், அவளுக்கு துணையாக வேறு யாரும் கம்பெனியில் இல்லாததாலும் வசதியைக் கருதி எங்களுடனேயே இருந்து வந்தாள்.

செல்லக் கோபம்

மதுரையில் நாங்கள் குடியிருந்தவீட்டின் மாடியறையில் நான் மனேவியுடன் தங்கியிருந்தேன். அக்காள் தன் மகனின் திருமணத்திற்குக் கூட நாகர்கோவிலுக்குப் போகவில்லை. மகனும் மருமகளும் மதுரைக்கு வந்து தனிக்குடித்தனம் தொடங்கினார். அப்போதும் அக்காள் என்னைவிட்டுப் போக மறுத்துவிட்டார். மகனிடம் சண்டை எதுவும் இல்லையானலும், அவன் இல்லத்தில் சென்று மருமகளுக்குத் துணையாக இருக்க அவர் ஏனோ விரும்ப வில்லை. அடிக்கடி போய் விசாரிப்பதோடு நிறுத்திக் கொண்டார்.

அக்காள் நல்ல உழைப்பாளி. வீட்டு வேலைகளையெல்லாம் தாமே தலைமேல் போட்டுக்கொண்டு செய்வார். நாடகம் முடிந்து வீடு திரும்பியதும், ஏதாவது சாப்பிட்டுவிட்டு நான் மாடிக்குச் செல்வேன். நான் வரும்வரை பெரும்பாலும் என் மனைவி உறங்கு வதே இல்லை. ஆனால், அயர்ந்து உறங்குவதுபோல் பாவனை செய் வாள். நான் நடிகனல்லவா? எனக்குத் தெரியாதா? சிறிது சல சலப்போடு அருகில் அமர்வேன் நான். கீழேயிருந்து அக்காளின் குரல் கேட்கும்.

“ ஏ சாந்தா, ஏ......சாந்தா”

ஆம், என் மனைவி மீனாட்சியை சாந்தா என்று தான் கூப்பிடுவோம். ஏ. சாந்தா என்றதும் “என்னக்கா?” என்பேன் நான்.

“இந்தப் பாலை வாங்கிகிட்டுப் போகச் சொல்லப்பா சாந்தாவை”

“அவ அசந்து தூங்குரு அக்கா; இதோ நானே வர்றேன்” என்று எழுந்திருப்பேன்.

அதற்குள் என் மனைவி அடித்துப் புரண்டு எழுந்து, வேகமாகக் கீழே ஒடுவாள்.

“மெதுவா...மெதுவா” என்பேன். பாலை வாங்கிக் கொண்டு மேலே வருவாள்.

‘மெதுவாப் போகக் கூடாதா? ஏன் இப்படி ஒடினே?’ என்று வாய்விட்டுச் சிரிப்பேன் நான்.

அவள் செல்லமாக ஒரக்கண்ணால் என்னைப் பார்த்து, ‘ஊம் சிளிப்பு வேறே” என்பாள். படுத்திருந்த தன்னை உரிமையோடு முதுகில் தட்டி எழுப்பவில்லையே என்ற கோபம் அவளுக்கு. அந்தச் செல்லக் கோபத்தையும், ‘சிளிப்பு’ என்று அவள் சொல்லும் அழகையும் ரசிப்பதில் எனக்கொரு தனி மகிழ்ச்சி.

மனையாளின் மனக்குறை

மீனாட்சியம்மன் கோயில், மாரியம்மன் தெப்பக்குளம், திரு மலை நாயகர் மகால், திருப்பரங்குன்றம், அழகர் கோயில் இங்கெல்லாம் என்னோடு தனியாக வந்து பார்க்கவேண்டு மென்பது அவள் ஆசை..எங்கள் திருமணம் நடந்த அன்று மாலை, இராமநாதபுரம் மன்னார் மாளிகைக்கு எதிரேயுள்ள மாரியம்மன் தெப்பக் குளத்தில் நானும் என் மனைவியும் படகில் ஏறி உலா வந்தோம். அப்போது அவள் தமக்கையும் மற்றுஞ் சில பெண்களும் படகில் இருந்தனார். ‘அதைப்போல் ஒருமுறை நாமிருவரும் தனியே அங்கு சென்று படகிலேறி மைய மண்டபம் பார்த்து வரலாம்’ என்றாள் என் மனைவி. ஒன்றன்பின் ஒன்றாகப் புதிய நாடகங்களை ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. அக்காளோடு போய்வரச் சொல்வேன் எப்போதும் செல்லமாகச் சிணுங்குவாள். நான் பல்வேறுபட்ட பாத்திரங்களை நாடகங்களிலும் நாவல்களிலும் பார்த்தும் படித்தும் அறிந்தவன் தான். என்ன செய்வது? நாடக வேலைகளில் எனக்கிருந்த அன்றைய ஆர்வத்திற்கு முன் மனையாளின் இந்த ஆசைக் கோரிக்கைகள் முதன்மையாகத் தோன்றவில்லை. அதுவே அவளுக்குப் பெரிய மனக்குறையாக இருந்தது. வெளியே எங்கு போவதான லும் கணவன் தன்னோடு வரவில்லையே என்று அவள் கொஞ்சம் வேதனைப்பட்டாள். இரவு நேரங்களில் இதற்கெல்லாம் ஏதாவது சமாதானம் கூறுவேன் நான்.

ஒரு நாள் இரவு திடீரென்று “நாக்கால் மூக்கைத் தொட முடியுமா உங்களால்?” என்றாள். அவள் எதற்காகக் கேட்கிறாள் என்பது எனக்குப் புரியவில்லை. “முடியாது” என்றேன்.

“முடியாதா? ஊம் ..... முடியவே முடியாதா?” என்றாள்.

“நீ தொடு பார்க்கலாம் என்றேன் நான். அழகான கூரிய முக்கு அவளுக்கு. நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, சட்டென்று நாக்கை நீட்டித் தன் மூக்கின் துனியைத் தொட்டாள். எனக்கு ரோஷம் வந்துவிட்டது. என்னல் முடிந்த மட்டும் நாக்கை நீட்டி நீட்டிப் பார்த்தேன். மூக்கின் பக்கத்தில்கூட நெருங்க வில்லை அது. மனைவி விழுந்து விழுந்து சிரித்தாள். தோல்வியை சமாளிக்க வேண்டுமே, “பெண்களுக்கே நாக்கு நீளந்தான்” என்றேன். வேறு என்ன செய்வது? ...மதுரையில் அவளுக்கு இருந்த மனக் குறையை எல்லாம் வட்டியும் முதலுமாகக் கும்பகோணத்தில் தீர்த்தேன். சிவ லீலாவில் எனக்கு முக்கியமான வேடம் இல்லாத தால் திரெளபதையை முன்னுல் அனுப்பிவிட்டு நான் சாவகாச கொட்டகைக்குப் போவேன். அதில் என் மனைவிக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.
--------------------

53. நடிப்பிசைப் புலவர் ராமசாமி


ஈரோட்டில் நாடகங்கள் சுமாரான வசூலில் நடைபெற்றன. நாவல் நாடகங்களில் பெரியண்ணா முக்கிய பங்கெடுத்துக் கொண்டார். ஈரோட்டிலிருந்து மீண்டும் கோவைக்கு வந்தோம். நாங்கள் தாயாருடன் இருக்கத் தனி வீடு கிடைக்காததால் தாயார் மட்டும் ஈரோட்டிலேயே தங்க நேர்ந்தது, நாங்கள் கோவைக்கு வந்தபின் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியார் ஈரோட்டில் நாடகங்கள் நடித்தார்கள். அவர்கள் அப்போது சி. கன்னையா கம்பெனியார் தயாரித்திருந்ததைப்போல் ஏராளமாகப் பொருட் செலவு செய்து, தசாவதாரம் நாடகத்தை நடித்துக் கொண்டிருந்தார்கள். நாவல் நாடகங்களை அதிகமாக நடிப்பதில்லை. எங்கள் தாயார் ஈரோட்டிலேயே இருந்ததால், ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நடிகர்களில் சிலர், அவர்களைப் பார்த்துப்போக அடிக்கடி வந்தார்கள். அப்படி வந்த சில நடிகர்கிளில் ஒருவர்தான் கே.ஆர்.ராமசாமி அவருக்கு எங்கள் கம்பெனிக்கு வரவேண்டுமென்ற ஆவல் இருந்தது. அந்த ஆவலை எங்கள் அன்னையாரிடம் சொல்லி,எப்படியாவது தன்னைக் கம்பெனியில் சேர்த்து விடுமாறு கேட்டுக் கொண்டார். அப்போது கே. ஆர். ராமசாமிக்குப் பதிமூன்று வயதிருக்கும். அவருடைய தகப்பனாருக்கு எழுதி, அதற்கு ஏற்பாடு செய்யுமாறு அன்னையார் சொல்லி விட்டார்கள். திடீரென்று ஒருநாள் கே. ஆர். ராமசாமி தன்னந் தனியே புறப்பட்டுக் கோவைக்கு வந்து சேர்ந்தார். ஈரோட்டி லிருந்து அம்மாதான், தன்னை அனுப்பியதாகச் சொன்னார். அம்மாவும், நடிகர்கள் சிலர் வந்து போகும் செய்திகளைப் பெரிய அண்ணாவுக்குக் கடிதமூலம் அறிவித்திருந்தார்கள். கே. ஆர். ராமசாமியைப் பாடச் சொல்லிக் கேட்டவுடன் எல்லோருக்கும் நிரம்பவும் பிடித்து விட்டது. அவருடைய சாரீரம் மிகவும் இனிமையாகவும், கெம்பீரமாகவும் இருந்தது. பெரியண்ணா அவரைக் கம்பெனியில் சேர்த்துக் கொள்ளச் சம்மதித்து விட்டார். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் அப்போது ஆசிரிய ஸ்தானத்தில் இருந்தவர் காளி. என். ரத்தினம். அவர் பெரியண்ணாவுக்குக் கடிதம் கொடுத்து, ஒருவரை அனுப்பியிருந்தார். அவர் வந்ததும் பெரியண்ணா, ராமசாமிக்கு விருப்பமிருந்தால் அழைத்துப் போவதில் எங்களுக்கொன்றும் தடையில்லை என்று கூறினார். வந்தவர் என்னென்னவோ சொல்லிராமசாமியை அழைத்துப் போக முயன்றார், எதுவும் பலிக்கவில்லை. ஒரே உறுதியாக ராமசாமி ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிக்கு வரமுடியாதென்று மறுத்துவிட்டார். ராமசாமிக்கு உடனடியாக அபிமன்யு, சுந்தரி நாடகத்தில் கிருஷ்ணன் வேடம் கொடுக்கப் பட்டது.

யாழ்ப்பாணம் சண்முகம் பிள்ளை

கோவை முடிந்து தாராபுரம் சென்றோம். தாராபுரத்தில் இருந்தபோது, கொழும்புக்கு வரவேண்டுமென்று யாழ்ப்பாணம் சண்முகம் பிள்ளை வந்து அழைத்தார். இவர் அந்த நாளில் இலங்கையில் பிரசித்தி பெற்ற காண்ட்ராக்டர். இவரைப்பற்றி” நிறைய கேள்விப்பட்டிருந்தோம். எஸ். ஜி. கிட்டப்பாவை முதன் முதலாக இலங்கைக்குக் கொண்டு சென்றவர் சண்முகம் பிள்ளை தான் என்று சிலர் பெருமையாகச் சொல்லிக் கொண்டார்கள். போகவரச்செலவு நீக்கி, மாதம் ஒன்றுக்கு ஆருயிரம்ரூபாய் பேசி, மாதம் பதினறு நாடகங்கள் நடத்துவதாக ஒப்பந்தம் செய்யப் பட்டது. ஒப்பந்தம் முடிந்ததும் கரூருக்கு வந்து சேர்ந்தோம்.

சம்பளத் தகராறு

கொழும்புப் பயணம் நிச்சயமானதும் எல்லோரும்: சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டுமென்று கேட்டார்கள். அந்த நாளில் இலங்கைக்குப் பயணம் என்றால், மாதம் இருபது ரூபாய் சம்பளம் பெறும் ஒருவருக்கு இலங்கையில் நாற்பதும், பர்மாவில் அறுபதும், மலையாவில் எண்பதுமாகச் சம்பளம் கொடுக்கவேண்டும். கொழும்புவுக்கு எல்லோருக்கும் இரட்டிப்புச் சம்பளம் தருவதாகப் பெரியண்ணா ஒப்புக்கொண்டார். கரூரில் சில நாடகங்கள் நடித்தபின் இலங்கைக்குப் பயணமானோம்.
------------------

54. தம்பி பகவதி திருமணம்


கரூரில் 2- 8- 42 முதல் சிவலீலா நாடகம் தொடங்கியது. நல்ல வருவாயும் இருந்தது. தம்பி பகவதிக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. சின்னண்ணா நாகர்கோவிலில் இருந்ததால் அங்கேயே பகவதிக்குப் பெண் பார்த்தார், பெரியண்ணாவும் நாகர்கோவில் சென்று பெண்ணைப் பார்த்து முடிவு செய்து விட்டுத் திரும்பினார். திருமணத்தேதி உறுதி செய்யப்பட்டது. கல்யாணக் கச்சேரியில் தமிழிசையே முழங்க வேண்டுமென நான் விரும்பினேன். மாலையில் இசையரசு எம். எம். தண்டபாணி தேசிகரின் இன்னிசையும் இரவில் திருமுருக கிருபானந்த வாரியாரின் வள்ளி திருமணம் கதையும் நடத்த முடிவு செய்தோம். தேசிகர் அப்போது காஞ்சீபுரத்தில் இருப்பதாக அறிவித்தேன். அறிஞர் அண்ணா அவர்களுக்குத் தந்தி மூலம் தகவல் அறிந்தேன். அவர் எங்கள் சார்பில் தேசிகர் அவர்களைச் சந்தித்துப் பேசி முடிவு செய்து கடிதம் எழுதினார். 1942 நவம்பர் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று கருருக்கு அருகிலுள்ள திருமுருகன் திருத்தலங்களில் ஒன்றான வெண்ணெய் மலையில் தம்பிபகவதிக்கும் திருவளர் செல்வி கஸ்தூரிக்கும் திருமணம் நடந்தேறியது.

கந்தலீலா

கரூரில் கந்தலீலா நாடகத்தை நல்ல முறையில் தயாரிக்கத் திட்டமிட்டோம். சின்னண்ணா நாகர் கோவிலில் இருந்ததால் புதிய நாடகத்தை உருவாக்கும் பொறுப்பினை நான் ஏற்றுக் கொண்டேன். யாக குண்டம்; திருச்செந்துTர் கோயில்; சுவாமி மலை; பழனி, சரவணப் பொய்கை, திருத்தணிகை மலை முதலிய காட்சிகளெல்லாம் புதிதாகத் தயாரிக்கப் பெற்றன. சிவபெரு மானின் விஸ்வரூபமும், நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்புப் பொறிகள் பறப்பதும், அவை சரவணப் பொய்கையில் விழுந்து ஆறு குழந்தைகள் ஆவதும் கார்த்திகைப் பெண்கள் அக்குழந்தை களைத் தாலாட்டுவதும், பின் அவர்கள் நட்சத்திரங்களாவதும் அருமையான காட்சிகள். மின்சாரத்தின் துணையோடு மிக அற்புத மாக இவற்றை உருவாக்கிக் காட்டினார் மின்சார நிபுணர் ஆறுமுகம் 1943 ஜனவரி 1 ஆம் தேதியன்று கந்தலீலா அரங்கேறியது. சிறந்த பாடகர் எம். எஸ். வேலப்பன் சுப்பிரமணியராக வும்; நான் நாரதராகவும், பகவதி சூரபத்மனாகவும், டி. வி. நாரயணசாமி சிவபிரானுகவும் நடித்தோம். நாடகம். மிகச் சிறப்பாக அமைந்தது.

பண்டித இராமசர்மா

கரூர் பிரபல ஆயுர்வேத வைத்தியர் பண்டித இராமசர்மா வுடன் எங்களுக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அவர் சிறந்த நாடக ரசிகர். அவரும் அவரது சகோதரரும் நாடகங்களை ஆர்வத்தோடு வந்து பார்ப்பார்கள், நோய், நொடி என்றால் அவரைத் தான் அணுகுவோம். அன்பும் பன்பும் நிறைந்த உத்தமமான மருத்துவர். கரூருக்கு வந்த சில நாட்களில் என் மனைவி நோயுற்றாள். எப்போதும் அவள் உடம்பு கதகதப்பாகவே இருந்தது. அடிக்கடி இருமிளுள். இராமசர்மா அவள் உடல் நிலையை நன்குகவனித்து ஏதேதோ மருந்துகள் கொடுத்தார். நோய் குணமாகவில்லை. ஒருநாள் என்னைத் தனியே அழைத்தார்.

“மனைவியைத் தாய்வீட்டுக்கு அனுப்பி வைப்பது நல்லது” என்றார்,

“ஏன் நீங்களே குணப்படுத்தமுடியாதா?” என்றேன் நான்.

“கணவனைவிட்டுப் பிரிந்திருந்தால் விரைவில் குணப்படலாம்” என்றார் சர்மா.

அவர் வற்புறுத்தலின் மீது நான் மனைவியைச் சேலத்துக்கு அனுப்பி வைக்க ஒப்புக் கொண்டேன். சேலத்துக்குத் தகவல் அறிவித்தேன். சாந்தாவின் தமையன் வந்து அவளை அழைத் துச் சென்றார். என்னைப் பிரிய மனமில்லாதவளாய் சாந்தா கண் கலக்கத்துடன் பிரிந்து சென்றாள். சேலம் சென்ற பிறகும்

அவள் உடல்நிலை தேறவில்லையென்று கடிதம் வந்தது. அவளே உருக்கத்தோடு எழுதியிருந்தாள்.

பண்டித சர்மா ஒருநாள் என்னை அழைத்தார். சென்றேன்.

“நீங்கள் தொடர்ந்து சில மருந்துகள் சாப்பிட வேண்டும் என்றார். “சாப்பிடுகிறேன்” என்று ஒப்புக் கொண்டேன்.

அவர் கொடுத்த மருந்துகளைச் சாப்பிட்டேன். “சாத்துக் குடிச்சாறு இரவு படுக்கைக்குப் போகு முன் ஒரு கோப்பை குடிக்க வேண்டும்” என்றார்.

அதன்படியே குடித்து வந்தேன். கரூர் நாடகம் முடிந்து பாலக்காடு புறப்படும்போது சர்மாவிடம் சென்று விடை பெற்றேன். புதிதாக மருந்துகள் எதுவும் கொடுக்கவில்லை. “சாத்துக்குடிச் சாறு மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள்” என்றார். “ஏன்?” என்று கேட்டேன். “வேறொன்றுமில்லை. உடம்புக்கு நல்லது” என்றார் சர்மா. என்ன காரணத்திற்காக சர்மா எனக்கு மருந்துகள் கொடுத்தாரென்று அப்போது எனக்குத் தெரியவில்லை. பின்னால்தான் புரிந்தது. மொத்தம் ஐந்து மாதங்கள் கரூரில் நாடகங்கள் நடந்தன. பாலக்காடு பயணமானுேம்.

பழைய நாடகங்களுக்குப் புதிய மதிப்பு

பாலக்காடு கவுடர் தியேட்டரில் சிவலீலா தொடங்கியது. 1940இல் எங்கள் நாடகங்களுக்கு பாலக்காட்டில் இருந்த ஆதரவைவிட அதிக ஆதரவு இப்போது கிடைத்தது. மதுரை சிவ லீலாவுக்குப் பிறகு நாங்கள் சென்றவிடமெல்லாம் சிறப்புத் தான். நைந்துபோன பழைய நாடகங்களுக்குக்கூட ஒரு புதிய மதிப்பு ஏற்பட்டது. ஐம்பது ரூபாய் கூட வசூலாகாமல் இடைக் காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த மனோகராவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இடமின்றித் தவித்தது எங்களுக்கே வியப்பாக இருந்தது. மனோகரனாக நான் நடித்த போது, புதிய புதிய கட்டங்கள் சிலவற்றை மக்கள் ரசனை உணர்வோடுகை தட்டிப் பாராட்டினார்கள். இராமாயணம் நாடகத்திற்கு அதற்கு முன் கண்டிராத முறையில் நாடக வெறி பிடித்தவர்களைப் போல ரசிகப் பெருமக்கள் நாலா பக்கங்களிலிருந்தும் வந்து குவிந்தனார். இராமாயணம் இரவு 9 மணிக்கு ஆரம்பமாகும். ஆனால் ரசிகர்கள் மாலை 4 மணி முதலே இரட்டை மாட்டு வண்டிகளிலும், பஸ்களிலும், கார்களிலுமாகச் சாரி சாரியாக வரத் தொடங்கினார்கள். தியேட்டரின் பின்புறம் பெரிய தென்னத்தோப்பும், அதன் நடுவே கம்பெனி வீடும் இருந் தன. மாட்டு வண்டிகளையும்,கார்களையும், பஸ்களையும் தாண்டித் தான் நாங்கள் தியேட்டருக்குள் நுழைய வேண்டும். ஆண்களும் பெண்களுமாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கட்டுச்சோற்றை வைத்துக் கொண்டு சிறுசிறு கூட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவது காட்சிக்குப் பெரும் விருந்தாக இருந்தது. மற்ற நாடகங்களுக்கு வசூல் குறையும்போது மனோகராவும், இராமாயணமுந்தான் வசூலுக்கு நம்பிக்கை தரும் நாடகங்களாக அமைந்தன.
---------------

55. வருங்காலத் தமிழர் தலைவர்


நாடகங்களைப்பற்றி மேலே தொடருமுன் பேரறினார் அண்ணா அவர்களோடு எனக்கேற்பட்ட பெருமைக்குரிய ஒரு தொடர்பினே இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஆம், பாலக்காடு முகாமில் தான் இது நடந்தது. அறிஞர் அண்ணா அவர்களின் திராவிட நாடு இதழ் காஞ்சீபுரத்திலிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. குமாஸ்தாவின் பெண் அல்லது கொலைகாரியின் குறிப்புகள் என்னும் பெயரில் அண்ணாவின் முதல் நவீனம் வாரந் தோறும் அதில் வெளியாயிற்று. அதனை நாங்கள் தொடர்ச்சி யாகப் படித்து வந்தோம். அடிக்கடி நான் அண்ணாவுக்குப் பாராட்டுக் கடிதங்களும் எழுதினேன். பாலக்காடு வந்த சமயம் அந்தத் தொடர் கதை முடிவு பெற்றிருந்தது. அதனை நூல் வடி வில் வெளியிட விழைந்தார் அண்ணா. கதை நாங்கள் நடித்த நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதால் முறைப்படி அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு வேண்டினேன். அதன்படி அனுமதி கோரிக் கடிதம் எழுதிய அண்ணா, அத்தோடு நாவலுக்கு நானே ஒரு முன்னுரை எழுத வேண்டுமென்றும் கேட்டிருந்தார். இதனை எனக்குக் கிடைத்த பெரும் பேருகக் கருதினேன். 30. 1. 1943 இல் அண்ணாவின் முதல் நாவலுக்கு நான் எழுதிய முன்னுரை இது.

“தோழர் சி. என். அண்ணாதுரை அவர்கள் வருங்காலத் தமிழர் தலைவர். இன்று தமிழகத்தில் சிறந்த எழுத்தாளர்கள் என்று புகழப்படும் ஒரு சிலரில் தோழர் அண்ணாதுரை அவர்கள் முன்னணியில் நிற்பவர். இவரது ஆராய்ச்சி நிறைந்த ஆணித் தரமான சொற்பொழிவைக் கேட்க, கொள்கையில் வேறுபட்ட கூட்டத்தினரும் குழுமி நிற்பர். இவரது அழகிய உரைநடையை “கவிதை நடை” என்றே கூறலாம். இந்த நடைச் சித்திரத்தைக் நண்டு வியந்த தமிழறினார் பலர். இன்று தோழர் அண்ணாதுரை

அவர்களே “அடுக்குச் சொல் வீரர்” என அடைமொழி கொடுத்து அழைக்கின்றனார். இவரது எழுத்தின் வேகம் படிப்பவர் மூளையைப் பண்படுத்தி, புதைந்து கிடக்கும் பகுத்தறிவைத்துருவி எடுக்கும் தன்மை வாய்ந்தது. எந்த இலக்கியமும் மனித சமூகத்திற்குப் பயனளிக்கும் பான்மையதாய் இருக்க வேண்டுமென்பதை தோழர் சி. என். ஏ. அவர்கள் நன்றாய் அறிந்தவர். அதன்படியே தொண்டாற்றியும் வருபவர்.

இவரது உள்ளச் சோலையிலேயே பூத்த நறுமண மலர்தான் “குமாஸ்தாவின் பெண் என்ற கொலைக்காரியின் குறிப்புக்கள்.”

உயிருள்ள சித்திரம்; அறிவுக்கு விருந்து: கற்பனே ஒவிய மல்ல; இன்று நம் கண்முன் நிகழும் காட்சி.

எங்கள் நாடக குமாஸ்தாவின் பெண் ணின் பிற்பகுதியை தமது கருத்திற்கேற்பச் சிறிது மாற்றி எழுத, தோழர் சி. என். ஏ அவர்கள் விரும்பினார். ஆவலுடன் அனுமதி அளித்தோம்; தமது ‘திராவிட நாட்டில் வெளியிட்டார், படித்தோம். இவ்வரிய சித்திரத்தை வரைய எங்கள் ‘குமாஸ்தாவின் பெண்’ திரையாக இருந்தது என்பதை யெண்ணும் போது உண்மையிலேயே பெருமையடைகிறோம்.

தமது உள்ளத்தில் குமுறிக் கொண்டிருக்கும் உணர்ச்சிப் பெருக்கின, தோழர் அண்ணாதுரை அணை போட்டுத் தடுத்து, சந்தர்ப்பம் நேரும் போதெல்லாம் வாரியிறைத்திருக்கிறார் கதையில் —

"கன்னியாக இருக்கையில் காதல் கொண்டு, அது கணியாததால் வெம்பிய வாழ்வு பெற்று, விதவையாகி விபசார வாழ்க்கையிலே ஆனந்தம் பெற, ஆசை நாயகனைப் பெற்று, அவனது துரோகத்தால் துயருற்று அவனேக் கொன்ற காந்தாவின் கதை இதுவே”
என்று தோழர் அண்ணாதுரையே இக்கதைச் சுருக்கத்தை, அழகாகக் கூறி முடிக்கிறார். வெறும் கதையை ரசித்தால் போதாது. அதனுள் பொதிந்து கிடக்கும் உண்மையை உணர வேண்டும்.

கதாபாத்திரங்களின் மனோ நிகழ்ச்சிகளைச் சித்தரிப்பதில் தோழர் சி. என். ஏ. எவ்வளவு திறன் படைத்துள்ளார் என்பதை

காந்தா நெ. 1-க்கும் காந்தா நெ. 2-க்கும் நடக்கும் தீவிரப் போராட்டத்தின் மூலம் அறிந்து கொள்ளாலம். பன்முறை. படித்துச் சுவைக்க வேண்டிய கட்டம் இது. கதையின் ஜீவநாடி.

விதவை நிலையடைந்த காந்தாவின் உள்ளம் எப்படியிருக்கிறது பாருங்கள்!

“நான் விதவையானேன்; சகுனத் தடையானேன்; சமுதாயத்தின் சனியனனேன்; என் இளமையும் எழிலும் போகவில்லை; கண்ணாெளி போகவில்லை; நான் அபலையானேன்; அழகியாகத் தானிருந்தேன்; தாலி யிழந்தேன்; ஆனால் காய்ந்த தளிர் போலிருந்தேனேயன்றி சருகாக இல்லை... வாடாத பூவாக இருந்தேன். ஆனால் விஷவாடையுள்ள மலரென்று உலகம் என்னைக் கருதிற்று. அது என்னுடைய குற்றமா?... எங்கள் ஏழ்மை யைக் கண்டு உதவி செய்ய முன்வர யாருமில்லை; எனக்குத் தக்கவனத் தேடித்தர ஒருவரும் வரவில்லை; என் வாழ்வு கொள்ளை போவதைத் தடுக்க யாரும் வர வில்லை. எல்லாம் முடிந்து நான் விதவையானதும், என் விதவைத் தன்மை கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளும்படி செய்ய, உபதேசிக்க, உற்றார் வந்தனார். அவர்களுக்கிருந்த கவலை எல்லாம் குலப்பெருமைக்குப் பங்கம் வரக்கூடாதென்பது தான். என்னைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. எனக்கு வீடே ஜெயில்; அப்பா அம்மாவே காவலாளிகள், உறவினார் போலீஸ்; ஊரார் தண்டனை தரும் நீதிபதிகள். இது உலகம் எனக்குண்டாக்கி வைத்த ஏற்பாடு; இதற்காகவா நான் பிறந்தேன்?”
என்று கேட்கிறாள் காந்தா. இது கதையில் காந்தா சொல்வதல்ல. கோடிக்கணக்கான இளம் விதவையர் உள்ளத்திலிருந்து எழும் கூக்குரல்.

பக்கம் பக்கமாக எழுதிப் படிப்பவர்களுக்கு அலுப்பை உண்டாக்காமல் விஷயத்தைச் சுருக்கி இனிய நடையில் தோழர் சி. என். ஏ. அவர்கள் சொல்லும் எழிலைப் பாருங்கள்!

“அவரிடம் (கிழவரிடம்) பணம் இருந்தது. ஏழ்மையில் நெளிந்துகொண்டு நானிருந்தேன். கிடாபோல்
வளர்ந்தவளை எவனுக்காவது பிடித்துக் கட்டி வைக்காமலிருக்கலாமோ வென்று கேட்க ஊரிலே பல பித்தர்களிருந்தனார்; எத்தகைய பொருத்தமும் தட்சணை தந்தால் சரியாக இருக்கின்றதெனக் கூறும் சோதிடர் சிலர் இருந்தனார். உலகில் எது இல்லை? பளபளப்பான தோலைப் போர்த்துக் கொண்டிருக்கும் பாம்பு இல்லையா? எப்படியோ ஒன்று என் கழுத்தில் தாலி ஏறிற்று”

கசப்பு மருந்தைக் கனியுடன் கலந்து கொடுப்பது போல் நகைச் சுவையுடன் நல்லுணர்ச்சி யூட்டுவது தோழர் அண்ணாதுரையின் தனிப் பண்பு. கீழ்வரும் வாக்கியங்களைப் படித்துப் பாருங்கள்.

“சீதாவுக்கு ராமு என்ற ஒருவன் மேல் ஆசை; அவனுக்கோ கோயில், குளம், பூஜை, புத்தகம் முதலியவற்றிலே ஆசை; அவளையும் கல்யாணம் செய்து கொண்டு அவன் கோயிலுக்குப் போவதை எந்தக் கடவுள் வேண்டாமென்று கூறிவிடுமோ தெரியவில்லை!...... எந்தக் கோயிலிலும் தேவியிருக்க, நாம் ஏன் கல்யாணம் வேண்டா மென்று சொல்ல வேண்டுமென்று ராமு யோசிக்கவில்லை.”
என்கிறார் தோழர்.

காந்தாவின் மீது ராமு கடைக்கண் செலுத்தவில்லையாம்: இதைக் காந்தா உதாரணத்துடன்,

“அவரோ பக்தர்களின் பாடலைக் கேட்டுக் கேட்டு மெளனமாக இருக்கும் பழக்கம் கொண்ட தேவன்போல் என் கண்களின் வேண்டுகோளைக் கண்டு, அசையா உள்ளங் கொண்டவராகவே யிருந்தார்”
என்று அழகாய்க் கூறுகிறாள்.

நினைத்ததைக் கொடுக்கும் ‘கற்பகவிருட்சம்’ ‘காமதேனு’ என்பன போன்ற நைந்துபோன பழைய உதாரணங்களுக்கு, அண்ணாதுரையின் கற்பனையில் எழுந்த புதிய உதாரணம்,

மிராசுதாரர் அவளுக்கு ‘அலாவுதீனின் தீபமானார்’ என்பது இலக்கியச் சுவைக்கு ஒர் எடுத்துக் காட்டு.
“நான் தொட்டு விளையாட முடியாத பருவம் என் கிட்ட வரமுடியாத வயது ... அவன் என்ன செய்தான் தெரியுமோ? யாரது புதிதாக இருக்கிறதே என்று நான் பார்த்தேனே இல்லையோ, ஒரே தாவாகத் தாவி என் நெஞ்சிலே புகுந்து கொண்டான். அந்த உருவம் எதிர் வீட்டு வாசற்படியண்டைத் தானிருந்தது; ஆனால் நெஞ்சிலே சித்திரம் பதித்து விட்டது.”
இந்தச் சொற்றொடரை “வசன கவிதை” என்று ஏன் கூறக் கூடாது?

வாசகத் தோழர்கள் மேற்போக்காகக் கதையைக் படிக்கக் கூடாதென்பதற்காகச் சிலவற்றை எடுத்துக் கூறினேன். காகித விலையேற்றம் கையைப் பிடித்து நிறுத்துகிறது. கடைசியாக தான் கூறுவது ஒன்றே. எழுதியவர் பால் கொள்கை காரணமாகவோ, தனிப்பட்ட முறையிலே விரும்பு வெறுப்புகளிருந்தால் அவற்றையெல்லாம் ஒரு புறம் மூட்டை கட்டி வைத்து விட்டுப் படிக்கத் தொடங்குங்கள் - இது போன்ற பல கதைகளைத் தமிழருக்களிக்குமாறு மனமார வாழ்த்துங்கள்”

நான் இந்த முன்னுரையினை எழுதிய அந்தநாளில் அண்ணாவுக்கு அறிஞர் என்ற அடைமொழி இல்லை. அவர் நாடகாசிரியராகவும் வரவில்லை. நடிகராகவும் மேடையேறவில்லை. எழுச்சி மிக்க தலையங்கங்களையும் சில திறனாய்வுக் கலைக் கட்டுரைகளையும் தவிர அதிகமான கட்டுரைகளோ கதைகளோகூட எனக்குத் தெரிந்தவரையில் எழுதாத காலம் அது. இந் நிலையில் அவரை வருங்காலத் தமிழர் தலைவர் என்று எழுதினேன் நான். எப்படி எழுதினேன்? ஏன் எழுதினேன்? நானா எழுதினேன்? இல்லை. இல்லை. இறைவன் என்னை எழுத வைத்தான். ஆம், அதுவே உண்மை. தெய்வ வாக்குப் பலித்தது!
-----------------

56. இரு பெரும் கலைஞர்கள்


ஒருநாள் பாலக்காட்டில் இராமாயணம் நடந்தது. கே. ஆர். இராமசாமி வழக்கம்போல் ஆஞ்சநேயராக நடித்தார். அருமையாக பாடினார். முற்பகுதிக் காட்சிகள் முடிந்தன. இனி ஆஞ்சநேயர் கடல் தாண்டி இலங்கைக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு தாண்டுவதற்கு அப்போதெல்லாம் வெறும் அட்டையில் செய்த அனுமாரை இழுப்பது வழக்கமில்லை இராமசாமியே மேலிருந்து தொங்கும் நான்கு வளையங்களில் கை கால்களை துழைத்துக்கொண்டு கடலைத் தாண்டுவார். பார்ப்பதற்குப் பிரமிப்பாக இருக்கும். அன்று இராமசாமி அங்கதன் ஜாம்பவான் முதலிய வானர வீரர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கடல் தாண்டப் புறப்பட்டார். “ராம ராம ராம சீதா” என்ற வானர வீரர்களின் ராம நாம கோஷம் ஒலித்துக் கொண்டிருந்தது. இராமசாமி உள்ளே வந்தார். குதிரை ஏணிமேல் ஏறித் தொங்கிக் கொண்டிருந்த நான்கு வளையங்களில் கைகளையும் கால்களையும் நுழைத்துப் பாய்ந்து செல்வது போல் ஒரு கையையும் காலையும் முன்னல் நீட்டிக்கொண்டு போஸ் கொடுத்தார். எதிர்ப்புறமிருந்து குறுக்கே கட்டப்பட்டிருந்த கம்பியை இழுத்தார்கள். கம்பிகள் மிகச்சிறியவை. சபையோர் கண்ணாக்குத் தெரியாது. ஆகையால் இராமசாமி பாய்ந்தபடியே கடலைத் தாண்டி எதிர்ப்புறம் செல்லும் போது ஒரே கரகோஷம். திரை விடப்பட்டது. மீண்டும் குறுக்குக்கம்பியை முன்னிருந்த இடத்திற்கே இழுத்தார்கள், கம்பி மேடையின் நடுவே வந்ததும் மேலே கட்டப் பட்டிருந்த குறுக்குக் கம்பி படாரென்று அறுந்து விட்டது. ஆஞ்சநேயர் அப்படியே கீழே விழுந்தார். எல்லோரும் பதறிப் போய் ஒடினோம். நல்ல வேலையாகக் கீழே வரிசையாகக் கட்டப் பட்டிருந்த கூர்மையான மரத் துண்டுகளோடு கூடிய அலைகளின் மேல் விழவில்லை. இரு அலைகளின் நடுவே விழுந்தார். குப்புற

விழுந்ததால் மார்பில் பலத்த அடி. அப்படியே தூக்கிப் போய் மின்சார விசிறியின் கீழே படுக்க வைத்தோம். சோடா கொடுக் கப்பட்டது. ஆஞ்சனேயரின் உடை ரோமம் போல் தோன்று வதற்காக அடுக்காகத் தைக்கப்பட்டு, மெத்தை போன்றமைக்கப் பட்டிருந்ததால். அபாயும் எதுவும் ஏற்படவில்லை. இரண்டொரு நிமிடங்களில் சமாளித்துக் கொண்டார். நாடகம் தொடர்ந்து நடைபெற்றது.

இளம் நடிகர் எஸ். வி. சுப்பையா

கலைமாமணியென இன்று நம்மால் போற்றப்பெறும் நடிகர் எஸ். வி. சுப்பையா அப்போது கம்பெனியில் இருந்தார். 1939 இறுதியில் திருச்சிராப்பள்ளியில் இருந்தபோதே அவர் எங்கள் குழுவில் சேர்ந்தார். நன்றாகப் பாடுவார். பல்வேறு நாடகங் களில் சிறிய வேடங்களைப் புனைந்து வந்தார். சிவலிலா மதுரை யில் தொடர்ந்து நடைபெற்றபோது, சிவபெருமானைக் கால் மாறி ஆடச்சொல்லும் அபிஷேகப் பாண்டியனாக நடித்தார். நடிகர்கள் ஏராளமாக இருந்ததால் பெரிய வேடங்களைத் தாங்கி நடப்பதற்குரிய வாய்ப்பு அப்போது அவருக்குக் கிடைக்கவில்லை. அன்று அவர் புனைந்த பாத்திரங்களிலே குறிப்பிடத்தக்கதாக இருந்தது கர்ணன். ஆம், மகாபாரதம் மாதக் கணக்கில் தொடர்ந்து நடைபெறும் நாடகமாகஇருந்தது. அதில் சுப்பையா கர்ணனாக நடித்தார், குந்தியும் கர்ணனும் சந்திக்கும் காட்சியில் மிக உருக்கமாக நடித்தார். சபையோரை மட்டுமல்ல. உள்ளிருந்த எங்களேயெல்லாங்கூடக் கண்கலங்க வைத்தார். அவரை மேலும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பினை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தோம்.

அடக்கம் நிறைந்த ஆர். எம். வீரப்பன்

இப்போது சத்யா மூவீசின் அதிபராக விருக்கும் ஆர். எம். வீரப்பன் அவர்கள் அப்போது எங்கள் நாடகக் குழுவில் இருந்தார். அடக்கமான இளைஞர். யாரோடும் வம்புக்குப் போக மாட்டார். சின்னச் சின்ன வேடங்கள் புனைவார். அவருடைய கையெழுத்து அந்தச் சிறு வயதிலேயே அழகாக இருந்தது. எனவே எங்கள் கணக்குப்பிள்ளை ஏ. டி. தர்மராஜூ ஆர்.எம்.வீரப்பனைக் கணக்குகள் எழுத நன்கு பயன்படுத்திக் கொண்டார். கணக்குப் பிள்ளையோடு அவர் எழுதிக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். இந்தப் பையன் நல்ல நிர்வாகி யாக வருவான் போல் தோன்றுகிறது. என்று அன்றே கணக்குப் பிள்ளையிடம் கூறினேன். ஆர். எம். வீரப்பனுக்கும், எஸ். வி. சுப்பையாவுக்கும் மிகுந்த நட்பு. இருவரும் எப்போது பார்த்தாலும் நெற்றியில் திருநீற்றோடு தான் காட்சியளிப்பார்கள். சுப்பை யாவைவிடப் பெரியவர்கள் சிலர், என்னப்பா, நீதான் பண்டா ரமாப் போயிட்டே வீரப்பனையும் பண்டாரமாக்கிடா தேப்பா” என்று வேடிக்கையாகப் பேசுவார்கள்.

கே. ஆர். இராமசாமிக்கும், எஸ். வி சுப்பையாவுக்கும் எந்நேரமும் தகராறுகள். பிரண்டு இராமசாமிக்கும் இதில் பங்குண்டு. இதற்குக் குறிப்பான காரணம் எதுவும் சொல்ல இயலாது. நாடகக் கம்பெனிகளில் இதுபோன்ற சண்டைகளும், சமரசங்களும் சாதாரண நிகழ்ச்சிகள். இரண்டு நடிகர்கள் சண்டை போட்டுக் கொள்வார்கள். இறுதியில் சண்டை முற்றி ஒருவரைக் கம்பெனியிலிருந்து விலக்கப்படுவார்; விலகுவதற்குச் பூசல் வளர்ந்துவிடும். ஒருவர் விலக்கப்படுவார். விலக்குவதற்குக் காரணமாயிருந்த நடிகரே அவரைப் போய் வழியனுப்பி விட்டுக் கண்கலக்கதோடு திரும்புவார். இத்தகைய நிகழ்ச்சிகள் எத்தனை எத்தனையோ எங்கள் கம்பெனியில் நடைபெற்றுள்ளன.

இரு இராமசாமிகளும் ஒரே கட்சி

கே.ஆர்.இராமசாமியும், பிரண்டு இராமசாமியும் கம்பெனியின் பழைய நடிகர்கள். இவர்களுக்குப் பெரியண்ணாவிடம் மிகுந்த செல்வாக்கு. சுப்பையா தன்னை ஏதேதோ கெட்ட வார்த்தைகள் சொல்லி ஏசிவிட்டதாக கே. ஆர். இராமசாமி பெரியண்ணாவிடம் புகார் செய்தார். பெரியண்ணா சுப்பையா வைக்கூப்பிட்டு விசாரித்தார். சுப்பையாவின் பதில் அடக்கமாக இல்லை. பெரியண்ணாவுக்குக் கோபம் மூண்டது.

என்று வள்ளுவர் கூறயிருக்கிறாரல்லவா? இதற்கு இலக்கியமாக விளங்குபவர் பெரியண்ணா. அவ்வளவுதான், சுப்பையாவுக்கு நல்ல அடி. ஒவியர் தேவராஜய்யர். கணக்குப்பிள்ளை தர்மராஜு யார் யாரோ குறுக்கே வந்து தடுத்தார்கள். பயனில்லை. பலமாக அடித்த பிறகுதான் ஒய்ந்தார் அண்ணா. அப்போது இரவு மணி ஏழு. அன்று ஸ்ரீ கிருஷ்ண லீலா நாடகம். நான் கொட்டகையை அடுத்த ஒரு வீட்டில் குடியிருந்தேன். இரவு 8-30 க்குத் தியேட்டருக்கு வந்தேன். சுப்பையா என்னிடம் வந்தார். “என் மீது ஒரு குற்றமும் இல்லை. கறுப்பு இராமசாமியும், சிவப்பு இராமசாமியும் கோள் மூட்டியதால் பெரியண்ணாச்சி என்னை அநியாயமாக அடித்து விட்டார்” என்றார். அவர் உடம்பில் அடிபட்ட காயங்கள் இருந்தன. நான் அவருக்கு ஆறுதல் கூறினேன். இதே போன்று தம்பி பகவதி, எஸ். வி. சகஸ்ரநாமம் போன்றவர்களெல்லாம் கூட அடி வாங்கியவர்கள் தாம் என்று கூறி அவரைச் சமாதானப்படுத்த முயன்றேன். இரு இராமசாமிகளையும் பெரியண்ணாவிடம் புகார் கூறியதற்காகக் கடிந்து விட்டு வெளியே சென்றேன்.

நள்ளிரவில் சென்ற கலைஞர்

சுப்பையா சோகமே உருவாக ஒருபுறம் உட்கார்ந்திருந்தார். இரவு மணி 9. இன்னும் அரைமணி நேரத்தில் நாடகம் தொடங்க வேண்டும். அன்று நாடகத்தில் சுப்பையாதான் வசு தேவர். அவரோ வேடம் புனையவில்லை. முதல் காட்சியிலேயே வசுதேவர் வரவேண்டும். இரண்டொருவர் சுப்பையாவிடம் போய் இன்னும் வேடம் புனையவில்லையா?’ என்று கேட்டார்கள். அவர் வேடம் புனைய மறுத்து விட்டார். சுப்பையா வசு தேவர் போட மறுக்கிறார் என்று சொல்லி எனக்கு ஆள் வந்தது. பகவதி அன்று கம்சன், கே. ஆர். இராமசாமியும், பகவதியும் மாறி மாறிப் போடுவார்கள். அன்று பகவதியின் முறை. பகவதி கம்சன் வேடத்தோடு வந்து, வேடம் புனையும் படியாகச் சுப்பையாவிடம் கூறினார் போல் இருக்கிறது. சுப்பையா அவரிடமும் மறுத்து விட்டார். ஒப்பனை அறையில் ஒரே ரகளே. சுப்பையா வேடம் புனைய மறுப்பதாகப் பெரியண்ணாவிடம் சொல்ல ஆள் போய் விட்டதாக அறிந்தேன். எனக்கும் தகவல் வந்தது. நான் வந்து சுப்பையாவிடம் எவ்வளவோ சொன்னேன். அவர் ஒரே பிடிவாதமாக வேடம் புனைய மறுத்து விட்டார். உடனே நான் கே. ஆர். இராமசாமியை வசுதேவர் போடச் சொல்லி விட்டு சுப்பையாவையும் அழைத்துக் கொண்டு அருகிலுள்ள என் விட்டிற்குச் சென்றேன். கிருஷ்ணலீலாவில் எனக்கு வேடம் இல்லையாதலால் நிறைய நேரம் கிடைத்தது. வேடம் புனையாததற்காகப் பெரியண்ணா மீண்டும் வந்து அடிப்பார் என்பதைச் சுப்பையா நன்றாக அறிவார். ஆனாலும் அவருக்கு அசட்டுப் பிடிவாதம் ஏற்பட்டிருந்தது. மேலும் அடிபடவும், வேடம் புனையாததன் விளைவுகளை ஏற்கவும் சுப்பையா சித்தமாக இருந்தார். நான் சுப்பையாவுக்கு அறிவுரைகள் கூறினேன். என்னத்தான் இருந்தாலும் வேடம் புனைய மறுத்தது தவறு என்பதை அவருக்கு உணர்த்தினேன். பெரியண்ணாவின் கோபத்தை நன்கு உணர்ந்தவன் நான். விடிந்தால் சுப்பையாவுக்கு என்ன நேருமோ என்று எனக்கு அச்சமாக இருந்தது. சுப்பையா மேற்கொண்டு கம்பெனியில் இருக்கவும் விரும்பவில்லை. இரவோடிரவாக அவரை ஊருக்கு அனுப்பி விடுவது நல்லது என எனக்குத் தோன்றியது. அவரும் என் யோசனையை ஏற்றார், கையிலிருந்த சிறு தொகையை அவரிடம் கொடுத்தேன். அன்றிரவே அவரைப் பாதுகாப்பாக. ஊருக்கு அனுப்பிவைத்தேன். எல்லோரும் சுப்பையா தானாகவே ஒடி விட்டதாக எண்ணினார்கள். நானே அவரை அனுப்பினேன் என்பது பெரியண்ணாவுக்குக் கூடத் தெரியாது.

கலைமாமணி கே. பி. கேசவன்

ஒருநாள் பழம் பெரும் கலைஞர் கே. பி. கேசவன் மனோகரா நாடகம் பார்க்க வந்திருந்தார். நாடகம் முடிந்ததும் உள்ளே வந்து என்னைப் பாராட்டினார். தன் இல்லத்திற்கு ஒருநாள் விருந்துண்ண வர வேண்டுமென்று அழைத்தார். அழைப்பினை ஏற்று ஒலவக்கோட்டிலுள்ள அவரது இல்லத்திற்குத் தம்பி பகவதி, சிவதாணு, கே. ஆர். இராமசாமி ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன். மலர்ந்த முகத்துடன் எங்களே வரவேற்றார் கேசவன். கம்பெனியின் பழங்கால நிகழ்ச்சிகளைப் பற்றி வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். விருந்துண்ட பின்னும் பேச்சு முடியவில்லை. நாடகம் இருந்ததால் விடைபெற்றுக் கொண்டு திரும்பினோம்.

கே. பி. கேசவன் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் சிறந்த நடிகர்களிலே ஒருவர். நன்றாகப் பாடவும் திறமை வாய்ந்தவர். அவரது ஆற்றல்மிக்க நடிப்பினை ஏற்கனவே நான் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். 1934இல் நாங்கள் விருத்தாசலத்தில் இருந்த போது மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியார் கூடலூர் முத்தையா தியேட்டரில் பம்பாய் மெயில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது எங்கள் கம்பெனியிலும் பம்பாய் மெயில் முக்கிய நாடகமாக இருந்ததால், கே. பி. கேசவனின் பம்பாய் மெயில் நாடகத்தைப் பார்க்க ஆசைப்பட்டேன். எங்களுக்கு நாடகம் இல்லாத நாளில் இதற்காகவே கூடலூர் சென்றேன். பம்பாய் மெயில் நாடகம் பார்த்தேன். நாடகத்தில் கே. பி. கேசவனின் அபாரமான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. நாடகம் முடிந்ததும் அவர் வருகைக்காகக் காத்திருந்து நேரில் சந்தித்தேன். மனமாரப் பாராட்டி விட்டு விருத்தாசலம் திரும்பினேன். கே. பி. கேசவனின் பம்பாய் மெயில் நடிப்பைப் பார்த்தது எனக்குமிகவும் பயனுடையதாக இருந்தது. அதன் பிறகு நான் நடித்த பம்பாய் மெயிலில் புதிய மெருகுடன் நடித்தாக எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.

திரைப்பட உலகில் கே. பி. கேசவன் நடித்த பதி பக்தியும் இரு சகோதரர்களும் இன்னும் கூட என் நினைவிலிருந்து அகல வில்லை. தமிழ் நாடக உலகை விட்டு அவர் விலகிய வெகு காலத்திற்குப் பிறகுகூட, தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்தின் சிறந்த நாடக நடிகருக்குரிய விருதினை அவருக்கு வழங்கவேண்டுமென்று, நான் ஆர்வத்தோடு பரிந்துரைத்தேன். கே.பி. கேசவன் சென்னை க்கு வந்து சங்கத்தின் விருதினைப் பெற்றுக் கொண்டபோது, அப்படியே அவரைக் கட்டித் தழுவிக் கொண்டேன்.

கலைவாணர் கடிதம்

சென்னையிலிருந்து கலைவாணர் கிருஷ்ணன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். கே. ஆர். இராமசாமியை சிவசக்தி என்னும் படத்தில் கதாநாயகனுக நடிக்க ஏற்பாடு செ ய்திருப்பதாகவும் அவரை அனுப்புவதால் கம்பெனிக்குத் தொந்தரவு எதுவும் இல்லை யென்றால் பெரியண்ணாவிடம் கூறி அனுப்பிவைக்க வேண்டு, மென்றும் பெரியவரின் ஒப்புதல் இருந்தால் இதனுள் இருக்கும் கடிதத்தை இராமசாமியிடம் கொடுக்கலாம் என்றும் எழுதப் பெற்றிருந்தது. உள்ளே இராமசாமிக்கு ஒரு கடிதமும் இருந்தது. நான் மிகுந்த மகிழ்ச்சியோடு கடிதத்தைப் பெரியண்ணாவிடம் காட்டினேன். என். எஸ். கே. இராமசாமிக்கே நேராக எழுதாமல் எனக்குக் கடிதம் எழுதியதற்காக அவரைப் பாராட்டினார் அண்ணா. “இராமாசாமி தாராளமாகப் போய் நடிக்கட்டும்; அவன் திரைப்படத்தில் நடித்தால் நமக்குத்தானே பெருமை! எப்பொழுது தேவையோ அப்பொழுது அனுப்பலாமென்று நான் சொன்னதாகக் கிருஷ்ணனுக்கு எழுது” என்றார். அண்ணா சொன்னபடியே கலைவாணருக்கு எழுதினேன். கடித்ததையும் இராமசாமியிடம் கொடுத்தேன். இராமசாமிக்கு ஒரே மகிழ்ச்சி. அண்ணாவின் அனுமதியோடு கலைவாணருக்குக் கடிதம் எழுதினார். நாலைந்து நாட்களில் உடனே புறப்படும்படியாகக் கலைவாணரிடமிருந்து தந்தி வந்தது. அன்றிரவே இராமசாமி சென்னைக்குப் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டது. எல்லோருடைய அன்புக்கும் பாத்திரமாக இருந்த கே. ஆர். இராமசாமி கண்கலக்கத்துடன் விடைபெற்றுச் சென்னைக்கு சென்றார்.

மயங்கி விழுந்தேன்

அப்போது மயில் ராவணன் தொடர்ச்சியாக நடந்து வந்தது. நான் அதில் இராமர் போடுவது வழக்கம். சிறிய வேடம் அது. இராமசாமி ஆஞ்சநேயராக நடிப்பார். அவர் போன அன்று நானே ஆஞ்சநேயராக நடிக்க நேர்ந்தது. அதுவரை மயில் ராவணன், இராமாயணம் ஆகிய நாடகங்களில் நான் ஆஞ்சநேயர் பாத்திரத்தை ஏற்றதே இல்லை. அதுமட்டுமல்ல; சுக்ரீவனாகவோ, வாலியாகவோ கூட நடித்ததில்லை. குரங்குகளுக்குரிய உடையை அன்றுதான் முதலாவதாகப் புனைந்தேன். ஏப்ரல் மாதம் அது. உள்ளே ஒரே புழுக்கம். ரோமம் போன்று அடுக்கடுக்காக வைத்துத் தைக்கப்பட்ட அதிகக் கனமாக உடையைப் போட்டேன். தலையில் குல்லாவையும் வைத்துக் கட்டினேன். அதன்மேல் கிரீடத்தை வைத்தேன். உடலுக்குள் காற்று புகுவதற்கு வழியே இல்லை. வியர்வை கொட்டியது. துடைக்கவும் இயலவில்லை. இரண்டு காட்சிகளில் நடித்தேன். மின்சார வெளிச்சம் மேடையில் மேலும் வெப்பத்தை உண்டாக்கியது. ஏதோ தலை சுற்றுவது போலிருந்தது. அவ்வளவுதான். மயங்கி விழுந்து விட் டேன். காரணம் எல்லோருக்கும் புரிந்தது. என் உடைகளைத் தளர்த்தி மின்விசிறியின் கீழே படுக்கவைத்தார்கள். ஐந்து நிமிடங் களுக்குப் பிறகுதான் நினைவு வந்தது. எப்படியோ ஒருவகையாக நடித்து நாடகத்தை முடித்தேன். மறுநாள் இந்தச் செய்திகளை யெல்லாம் இராமசாமிக்கு விவரமாக எழுதினேன். உன்னுடைய அருமையும் பெருமையும் இப்போது முன்னைவிட அதிகமாகப் புரிகிறது. உனக்கு அடுத்தபடியாக உன்னுடைய வேடங்களைப்புனைய தகுதியுடையவனுக இருந்த சுப்பையா கம்பெனியை விட்டு விலகு வதற்கு நீயே காரணமாக இருந்தாய். இப்போது நீயும் விலகிக் கொண்டாய். நான்தான் உன் வேடத்தைப் போட்டுக் கொண்டு அவஸ்தைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தேன். ஏறத்தாழ ஐந்து மாத காலம் பாலக்காட்டில் நாடகம் நடத்திவிட்டு ஈரோட்டுக்குப் பயணமானோம்.
--------------

57. குடும்ப விளக்கு!


ஈரோடு கான்சாகிப் சேக்தாவுத் அவர்களின் சென்ட்ரல் நாடக அரங்கில் 1-6-43இல் நாடகம் தொடங்கியது. மதுரை சிவலீலா வெற்றிக்குப்பின் நாங்கள் சென்ற நகரங்களிலெல்லாம் சிவலிலாவையே முதல் நாடகமாக ஆரம்பித்தோம். ஈரோட்டில் தொடர்ந்து ஐம்பது நாட்கள் சிவலீலா நடைபெற்றது. இப்போ தெல்லாம் சென்னையில் புதிய நாடகங்கள் நடந்தால், அது 25 முறை நடைபெற்று வெள்ளி விழாக் காணுவதே வியப்பாக இருக்கிறது. அப்படி வெள்ளி விழாக்காணும் நாடகம் கூடத் தொடர்ந்து ஒரே அரங்கில் நடைபெறுவதில்லை. நாடகம் தொடங்கிப் பல மாதங்களுக்குப் பிறகுதான், வெள்ளிவிழா, பொன்விழா எல்லாம் நடை பெறுகின்றது. 1940 ஆம் ஆண்டிலும் அதற்கு முன்பும்கூட, இது போன்ற விழாக்கள் எல்லாம் தொழில்முறை நாடக சபைகளுக்குச் சாதாரண நிகழ்ச்சிகளாக இருந்தன.

ஈரோட்டில் சிவலிலாவுக்குப் பின் கிருஷ்ணலீலா, மகா பாரதம், ராஜாபர்த்ருஹரி, கந்தவீலா, ஒளவையார், மேனகா ஆகிய நாடகங்கள் ஒவ்வொன்றும் மாதக்கணக்கில் நடந்தன. திரைப்படமாக வந்து ஓடிக்கொண்டிருந்த ‘குமாஸ்தாவின் பெண்’ நாடகம் கூட ஈரோட்டில் 25 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. வசூலும் நல்ல முறையில் இருந்தது. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒவ்வொரு நாடகத்தையும் பலமுறை பார்த்து மகிழ்ந்தார். பார்த்த மறுநாள் அதைப்பற்றித் திறனாய்வு செய்யவும் தவறுவதில்லை,

பட்டக்காரர் பங்களா

இந்தமுறை எங்கள் குடும்பத்தினருக்கு வீடு கிடைப்பது கஷ்டமாக இருந்தது. கம்பெனிக்கு மட்டும் நகருக்குள் ஒரு பெரிய வீடு கிடைத்தது. அங்கேயே குடும்பத்தினரும் தற்காலிகமாகத் தங்கி யிருந்தார்கள்.கம்பெனிசாமான்கள் தியேட்டரில்வந்து இறங்கின. பட்டக்காரர் பங்களா தியேட்டரின் அருகே இருந்ததால் பல லாரிகளில் வந்து இறங்கிய எங்கள் நாடகசாமான்களைப் பார்க்கப் பட்டக்காரர் நல்ல தம்பி சர்க்கரை மன்றாடியாரும், கைவல்ய சாமியாரும் வந்தார்கள். வீடு கிடைக்காத நிலையைப்பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்தோம். ஏன் நம்முடைய பங்களா காலியாக தான் இருக்கிறது. எங்களுக்குச் சில அறைகள்தான் வேண்டும். பின்புறம் முழுதும் நீங்களே தங்கிக்கொள்ளலாம். வேறு இடம் பார்த்துச் சிரமப்படவேண்டாம்” என்று பரிவோடு கூறினார் பட்டக்காரர். எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. அன்றே மீனாட்சி அக்காள், பகவதி தம்பதிகள், சிவதாணு தம்பதிகள் எல்லோரும் பட்டக்காரர் பங்களாவில் குடியேறினார். எனக்கும் அங்கேயே தனியாக ஒர் அறை ஒதுக்கித் தர ஏற்பாடு செய்தார் பட்டக்காரர். நாடகங்களைப் பார்ப்பதற்காகப் பட்டக்காரர் குடும்பத்தார் அடிக்கடி பங்களாவில் வந்து தங்குவார்கள். அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும் நெருங்கிய நட்பு ஏற் பட்டது.

கைவல்ய சாமியார்

பட்டக்காரர் நாடகம் பார்க்க வரும்போதெல்லாம் கை வல்ய சாமியாரும் வருவார். சாமியார் சிறந்த ஆராய்ச்சியாளர். உலாகானுபவம் நிறைந்தவர். காவி கட்டாத வெள்ளை வேட்டிச் சாமியார் இவர். இவரது பகுத்தறிவுக் கட்டுரைகளைப் பெரியாரின் ‘குடியரசு’ வார இதழில் தொடர்ந்து படித்தவன் நான். மேலட்டையைப் புரட்டியதும் முதல் பக்கத்தில் கைவல்ய சாமியாரின் கட்டுரை தான் காணப்படும். சாமியாரிடம் மிகுந்த அன்பு செலுத்தி வந்தார் பட்டக்காரர். பங்களாவின் முகப்பிலுள்ள ஹாலில் நான் சாமியாரைச் சந்திப்பேன். சிரிக்கச் சிரிக்கப் பேசுவார் இவர். எல்லோரும் இவரை “சாமி” என்றே அழைப்பார்கள். பட்டக்காரரின் இரண்டாவது மகன் திரு. அர்ச்சுனன் முற்போக்கான இளைஞர். சுயமரியாதைக் கொள்கைகளைப் பின் பற்றுபவர். பெரியாரிடம் மிகுந்த ஈடுபாடுடையவர். கைவல்ய சாமியாரின் உபதேசத்தால்தான் இளையவர் அர்ச்சுனன் கெட்டுப் போய் விட்டார் என்று பங்களாவிலுள்ள ஊழியர்கள் பேசிக் கொண்டார்கள். சாமியாரே இதை என்னிடம் கூறினார். “பட்டக்காரரின் இளைய பையனை நான் தான் கெடுத்து விட்டேன் என்று. எல்லோரும் முணுமுணுக்கிறார்கள். என்மீது வீண்பழி” என்றார். சாமியார் கூறியது முற்றிலும் உண்மையென்பது எனக்குத் தெரியும். அர்ச்சுனன் அவர்கள் துடிப்பான இளைஞர். அவர் இளமைப் பருவத்திலேயே காலமானது தமிழகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றே சொல்ல வேண்டும். கைவல்ய சாமியாரின் மீது இளையவரைக் கெடுத்து விட்டதாகக் குறை சொல்லப் பட்டாலும், அவருக்குரிய மரியாதையினைச் செலுத்த யாரும் தவற வில்லை. சாமியாரோடு பேசிக்கொண்டிருப்பதில் எனக்குத் தனி இன்பம். அவ்வளவு சுவையாகப் பேசுவார் அவர். பட்டக் காரரின் மூத்த மகன் நல்லசேனதிபதி சர்க்கரை மன்றாடியார் நல்ல கலையுணர்வுடையவர். சிறந்த நாடக ரசிகர். அவர் ஒருநாள் சிவ லீலா நாடகத்திற்குத் தலைமை தாங்கினார். எனக்கு ஒரு தங்கச் சங்கிலி பரிசளித்துப் பாராட்டினார்.

அவசரத் தந்தி

நாடகம் தொடர்ந்து நடந்து வந்தது. ஒருநாள் சேலத்திலிருந்து அவசரத் தந்தி கிடைத்தது. அதில் என் மனைவி மீனாட்சியின் நிலை அபாயம் என்று கண்டிருந்தது. உடனே காரில் சேலம் சென்றேன். மனைவியைப் பார்த்தேன், என்னைக் கண்டவுடன் அழுதாள். என் கண்களும் கலங்கின. அழகே வடிவாக இருந்த அவள் மெலிந்து நலிந்துபோன நிலையில் படுக்கையில் கிடந்தாள். மைத்துனார் சுப்பிரமணியம் தங்கைக்கு காசநோய் என்றும் பெருந்துறை சானிட்டோரியம் கொண்டுபோய் உடனடியாகச் சிகிச்சை செய்யும்படி டாக்டர் கூறியதாகவும் உருக்கத்தோடு சொன்னார். நான் டாக்டரைச் சந்தித்தேன். மனைவியின் உடல் நிலைப்பற்றி விபரமாக அறிந்தேன். உடனே ஈரோட்டிலுள்ள பெரியண்ணாவுக்குத் தந்திமூலம் தகவல் கொடுத்தேன். உடனடியாகப் பெருந்துறை சானிட்டோரியத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மறுநாளே மனைவியைப் பெருந்துறைக்குக் கொண்டுபோய் சானிட்டோரியத்தில் சேர்த்தேன். தனியறையில் வைத்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன். மருத்துவமனை மேலதிகாரி விசுவநாதனும், டாக்டர் முத்துசாமியும் மிகுந்த

பரிவுடன் என் மனைவிக்கு சிகிச்சை அளித்தார்கள். மனைவியுடன் அவரது தமக்கையார் மட்டும் உடனிருந்தார்கள்.

ஈரோடும் பெருந்துறையும்

காசநோயின் கொடுமையைப் பற்றி அறிய அதற்குமுன் எனக்கு வாய்ப்பு ஏற்படவில்லை! மனைவியை சானிட்டோரியத்தில் சேர்த்த பிறகுதான் அதைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டேன். கரூர் பண்டித இராமசர்மாவுக்கு மனைவியின் நிலையைப்பற்றி விவரமாக எழுதினேன். உடனே பதில் கிடைத்தது. “தங்கள் மனைவிக்குக் காசநோய் என்பது எனக்கு முன்பே தெரியும். அதனால்தான் அவர்களை ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கூறினேன். இதனால் தங்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதனால் தங்களுக்குச் சில மருந்துகள் கொடுத்தேன். இப்போது தங்களைப் பொறுத்தவரை எதுவும் இல்லை. தங்கள் மனைவிக்குக் குணம் உண்டாக இறைவனப் பிராத்திக்கிறேன்” என்று எழுதியிருந்தார். சர்மா இதை முன்பே என்னிடம் கூறியிருந்தால் சில மாதங்களுக்கு முன்பே நோயின் ஆரம்ப நிலையிலேயே தக்கபடி சிகிச்சை செய்திருக்கலாமே என்று தோன்றியது.

இப்போது மனைவியின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அவள் தொடர்ந்து இருமுவதைக் கேட்கும்போது என் உள்ள மெல்லாம் உருகும். அவளுடைய தாங்க முடியாத வேதனையை எண்ணி நான் துன்பப்படுவேன். அருகிலிருந்து ஆறுதல் கூறுவேன். ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிவரை மனைவியோடிருப்பேன். அதற்கு மேல் ஈரோட்டுக்கு வருவேன். நாடகத்தில் எனது கடமையை நிறைவேற்றுவேன். நாடகம் முடிந்ததும் உடனே காரில் பெருந்துறை சென்று மனைவிக்குத் துணையாக அவள் அறைக்கு வெளியேயுள்ள தாழ்வாரத்தில் படுத்துக் கொள்வேன். இப்படியே பகல் முழுவதும் பெருந்துறையிலும், இரவு பாதி நேரம் ஈரோட்டிலுமாக ஏறத்தாழ மூன்று மாத காலம் அலைந்தேன். இந்த நிலையிலுங்கூட நான் ஈரோட்டிலிருந்து நாடகம் முடிந்து திரும்பும் வரை மனைவி உறங்குவதில்லையென்று அவள் தமக்கையார் கூறினார். அவள் உள்ளத்தில் என்னென்ன எண்ணங்கள் அலமோதிக் கொண்டிருந்தனவோ ; இறைவனே அறிவான்! பெரியாரின் பெருங்குணம்

1943 அக்டோபர் 30ஆம் நாள். குடும்ப விளக்கு சிறிது சிறிதாக மங்கத் தொடங்கியது. டாக்டர் வந்து பார்த்தார். கண் கலக்கத்தோடு நின்ற எனக்கு ஆறுதல் கூறினார். அதிகமாகப் போனல் இன்னும் ஒரு வார காலந்தான்... நீங்கள் விரும்பினால் இப்பொழுதே ஈரோட்டுக்குக் கொண்டு போகலாம். இனிநாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்றார். இது நான் முன்னரே எதிர் பார்த்ததுதான். எனவே புதிதாக அதிர்ச்சி எதுவும் ஏற்பட வில்லை. குடும்பத்தார் அனைவரும் வந்து பார்த்தார்கள். பெரியண்ணாவிடம் கலந்து பேசினேன். மனைவியை ஈரோட்டுக்கே கொண்டு வந்து விடலாம் என முடிவு செய்தோம். ஆனால் புதிய சிக்கல் ஏற்பட்டது. காச நோயால் பீடிக்கப்பட்டுக் காலனின் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் என்காதல் மனையாளை ஈரோட்டில் எங்கே படுக்க வைப்பது? இன்னும் இரண்டு நாளில் இறந்து விடுவாள் என்ற நிலையில் பட்டக்காரர் பங்களாவில் படுக்க வைப்பது எனக்கே சரியாகத் தோன்றவில்லை. தனி வீடு தேடி அலைந்தேன். நிலமையை அறிந்த எவரும் எங்களுக்கு வீடு கொடுக்க முன்வரவில்லை. பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி என்பது எல்லோருக்கும் தெரியும். என்றாலும் வீடுகொடுக்க அஞ்சினார்கள். அப்போது ஒளவையார் நாடக நூல் பெரியாரின் தமிழன் அச்சகத்தில் அச்சாகி முடிந்திருந்தது. அதற்குப் பதிப்புரை எழுத வேண்டியதுதான் பாக்கி. சிந்தனையைச்சிறிது இலக்கியத் துறையில் செலுத்த எண்ணித் தமிழன் அச்சகத்திற்குள் நுழைந்தேன். துணையாசிரியர் புலவர் செல்வராஜ் அவர்களிடம் நிலைமையைச் சொல்லிக் கொண்டிருந்தேன். உள்ளிருந்து ஈ. வெ. ரா. பெரியார் வந்தார். “என்ன மிகவும் சோர்ந்திருக்கிறீர்களே; மனைவி எப்படி யிருக்கிறார்?” என்று அன்போடு விசாரித்தார். டாக்டர்கள் கைவிட்டதையும் மனைவியை ஈரோட்டுக்குக் கொண்டுவர இருப்பதையும் கூறினேன். பெரியார் மிகவும் கவலையோடு ஆறுதல் கூறினார். “மனைவியை இங்கு கொண்டு வந்து படுக்க வைக்க வீடு கிடைக்காமல் திண்டாடுகிறேன்” என்றேன். உடனே பெரியார் அவசர அவசரமாக ஒரு சாவியை என்னிடம் கொடுத்தார். பக்கத்தில் நம்முடைய புதிய வீடு இருக்கிறது. சுயமரியாதை சங்கத்திற்காக வாங்கியது, சுண்ணாம்பு அடித்துச் சுத்தமாக வைத்திருக்கிறது. உடனே அங்கே கொண்டு வந்து படுக்க வைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார். நான் சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை. பெரியாருக்கு நன்றி கூறிவிட்டுப் பெருந்துறைக்கு விரைந்தேன். அன்று மாலையே என் மனைவி ஈரோட்டுக்குக் கொண்டுவரப்பட்டாள்.

விளக்கு அணைந்தது

சேலத்திற்குத் தகவல் அறிவிக்கப்பட்டது. உறவினார்கள் வந்தனார், இளமைக் கனவுகள் நிறைவேற்றாமல் ஏக்கத்தோடு என்னை விட்டுப்போகும் இல்லாள் மீனாட்சிக்காக எல்லோரும் கண்ணிர் விட்டனார்.

நவம்பர் முதல்நாள் மாலை உற்றார் உறவினார் சூழ, உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் மீனாட்சி படுக்கையிலே கிடந்தாள். “அவளை அமைதியாக இருக்க விடுங்கள்” என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டு வெளியே வந்தேன். அருகிலுள்ள தமிழன் அச்சகத்திற்குள் நுழைந்தேன். எழுதாமல் விட்டிருக்கும் ஒளவை நாடக நூலின் பதிப்புரையினை எழுதத் தொடங்கினேன். சிந்தனையை ஒருமுகப்படுத்திக் கொண்டு ஒருவாறு எழுதி முடித்தேன். யாரோ வந்தார்கள். மனைவி என்னைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னார்கள். விரைந்து சென்றேன். மனைவியின் அருகில் அமர்ந்தேன். தனியே பேச விரும்பியதால் எல்லோரும் சற்று விலகி நின்றார்கள்.

“இன்னும் இரண்டு நாட்களில் நான் இறந்துவிடப் போகிறேன் என்று டாக்டர் சொல்லிவிட்டாரா? இதற்காகத்தான் என்னை ஈரோட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டாள். அவள் கேள்வி என் நெஞ்சை உருக்கியது. யாரோ அவளிடம் சொல்லியிருக்கிறார்கள். அறிவிருக்கும் நிலையில் நல்ல நினைவோடு படுத்திருக்கும் அவள் தாங்க இயலாத இந்த வேதனையை எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்? “இன்னும் இரண்டு நாட்களில் நான் இறந்துவிடப் போகிறேன்” என்ற நினைவே மரண வேதனையைத் தருவதல்லவா? இந்த வேதனையை அவள் எப்படித்தான் தாங்கினாளோ இறைவனுக்குத்தான் தெரியும். அவள் கேள்விக்கு நான் என்ன பதில் கூறுவது? மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு “அப்படியொன்றும் இல்லை; நீ அமைதியாக உறங்கு” என்று சொன்னேன்...

மறுநாள் 2-11-1943 அன்று மாலை ஆறு மணியளவில் என் குடும்ப விளக்கு அணைந்தது. மீனாட்சி என்னை விட்டுப் போய் விட்டாள். மறுநாள் முற்பகல் 11 மணிக்கு, காவிரிக் கரையில் என் அருமை மனைவியின் சடலத்திற்கு நானே எரியூட்டினேன்.

அடுத்த வாரம் திராவிடநாடு இதழில் இருண்ட வீடு என்னும் தலைப்பில் அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு தலையங்கம் தீட்டி எனக்கு ஆறுதல் கூறி யிருந்தார்.
----------------

58. அண்ணாவின் சந்திரோதயம்


பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய முதல் நாடகம் சந்திரோதயம். அஃது காஞ்சிபுரத்தில் ஒத்திகைப்போல் ஒருமுறை நடைபெற்றது, ஈரோட்டில் பெரியார் அவர்கள் முன்னிலையில் தான் அந்நாடகத்தின் உண்மையான அரங்கேற்றம் நடைபெறப் போகிறது என்று அண்ணாவே என்னிடம் கூறினார். அண்ணாவிடம் , பற்று கொண்டிருந்த எங்கள் நடிகர்களுக்கெல்லாம் ஒரே ஆனந்தம். நாடகத்தில் அண்ணாவே முக்கிய வேடம் தாங்கி நடிக்கப் போகிறார். என்பதை அறிந்ததும் எங்களுக்கெல்லாம் எல்லையற்ற மகிழ்ச்சி. நாடகத் தேதியை எதிர்பார்த்துக் காத்தி திருந்தோம். 19-11-43இல் சந்திரோதயம் நடைபெறப் போவதாக விளம்பரம் செய்யப் பெற்றது

தேதியும் நெருங்கியது. சந்திரோதயம் நாடகத்திற்கு முதல் நாள் எங்கள் சம்பூர்ண இராமாயணம் நடைபெற்றது. காலை 6 மணிவரை நடைபெறும் நாடகமல்லவா? நாடகம் முடிந்ததும் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, காலை எட்டு மணிக்கே சாப்பாட்டை முடித்துக் கொண்டு எங்கள் நடிகர்கள் அஃனவரும் நன்றாக உறங்குவது வழக்கம். ஆனால், அன்று மேடையில் சந்திரோதயத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றதால், எங்களில் பெரும்பாலோர் உறங்கவில்லே. இரவு நாடகத்திற்காக நாடக மேடையில் தேவையான காட்சிகள்-நடிகர்களுக்குரிய உடைகள் யாவற்றையும் ஒழுங்குபடுத்துவதில் பெரும் பங்கு கொண்டோம்.

பெரியார் முன்னிலையில்

சந்திரோதயம் நடிகர்களுக்கு ஒப்பனை செய்வதில் நாங்கள் எல்லோரும் பங்கு கொண்டோம். சி. வி. இராஜகோபால் எம். எல். சி.,வி. எம். அண்ணாமலை எம். எல். ஏ, ஈழத்து அடிகள் முதலியோர் அன்று நாடகத்தில் நடித்ததாக நினைவிருக்கிறது. மற்றவர் களைப்பற்றி எனக்குச் சரியாக நினைவில்லை. நாடகம் நன்றா யிருந்தது, அண்ணாவின் ஜமீந்தார் நடிப்பு அற்புதமாக அமைந்தது. நாடகப் பேராசிரியர் பம்பல் சம்மந்த முதலியாரைப் போலவே அண்ணா நாடகாசிரியராகவும் நாடகத்தில் முக்கியப்பொறுப்பேற்றது எங்களுக்கெல்லாம் பெருமை அளிப்பதாக இருத்தது. கோவை விஞ்ஞான மேதை ஜி. டி, நாயுடு அவர்கள் அன்று தலைமை தாங்கியதாக நினைக்கிறேன். பெரியார், நாடகத்தைப் பிரமாதமாகப் பாராட்டினார். என்னையும் சில வார்த்தைகள் பேசும்படியாகக் கேட்டுக் கொண்டார். பெரியார் அவர்களின் ஆணைப்படி நானும் பேசினேன். இப்படியே தொடர்ந்து சில நாடகங்களில் அண்ணா அவர்கள் நடித்துவிட்டால் பரம்பரை நடிகர்களான எங்களையெல்லாம் மிஞ்சி விடுவார் போல் தோன்றுகிறது. நாடகத்தையே தொழிலாகக் கொண்ட நாங்கள் பல நாட்கள் பயிற்சி பெற்று, ஒத்திகைகள் நடத்தி அதன் பிறகு நாடகங்களை நடிக்கிறோம். அத்தகைய வாய்ப்பும் வசதியும் இல்லாமல், பல்வேறு துறைகளில் பணிபுரிந்துவரும் திராவிட நடிகர் கழகத்தினர் இன்று நடிப்பதைப் பார்த்தால், எங்களை போல் நிரந்தரமாகவே இவர்கள் நாடகத்துறையில் ஈடுபடுவர்களானால், நாங்களெல்லாம் இந்தத் தொழிலையே விட்டுவிட வேண்டியதாக இருக்குமென நினைக்கிறேன்” என்று கூறினேன். அவ்வளவு அருமையாகவும் இயற்கை யாகவும் நடித்தார் அறிஞர் அண்ணா.

என் காலைத் தூக்கி மேலே வை

நாடகத்தில் ஒரு கட்டம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அண்ணா ஜமீந்தராக வந்து ஜமீந்தாரிசத்தின் ஆணவம், சோம்பேறித்தனம், மற்றவர்களை அலட்சியமாகக் கருதும் மனப் போக்கு அத்தனையையும் அப்படியே அப்பட்டமாகக் காட்டினார். எதிரே நின்ற வேலையாளிடம், “அடே, என் காலைத் தூக்கி மேலே வை” என்று சொல்லி, காலைத் தூக்குவதற்குக் கூடப் பண மூட்டைகளுக்குப் பணியாட்கள் வேண்டுமென்ற உண்மையை மிக அழகாகக் காட்டினார். சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டு எதிரேயிருந்த முக்காலியைச் சுட்டிக் காட்டி அவர் வெளிப்படுத்திய அந்த மெய்ப்பாடு பிரமாதமாக இருந்தது.

எல்லோரும் பாராட்டிப் பேசிய பிறகு நன்றி கூற வந்த அண்ணா எங்களைப் பாராட்டினார். முத்தமிழ்க்கலா வித்துவ ரத்தின டி. கே. எஸ். சகோதரர்களின் நாடக அரங்கில், அவர்களுடைய அற்புதமான காட்சிகளோடு நடிக்க எங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பினை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம், நான் நன்றாக நடித்ததாகப் பாராட்டுப் பெறுவதற்குரிய வகையில் ஏதாவது நடித்திருந்தால் அதற்கெல்லாம் டி.கே. எஸ். சகோதரர்களின் நடிப்பைத் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பார்த்து வந்ததே காரணமாகும் என்பதை மிகுந்த நன்றியுடன் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன் என்று கூறினார் .

அவருடைய அந்த நன்றியுரை எங்களுக்குப் பாராட்டாக அமைந்ததோடு அறிஞர் அண்ணா அவர்கள் எங்கள் பால் வைத்துள்ள அன்புக்கு எடுத்துக் காட்டாகவும் விளங்கியது.

நாடகம் கேட்டேன்

சந்திரோதயம் முடிந்த மறுநாள் நாங்கள் அண்ணாவிடம் உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது நான் மிகுந்த ஆர்வத்தோடு கேட்டேன்.

‘சந்திரோதயம்’ போன்ற அப்பட்டமான பிரசார நாடகங்களை நாங்கள் நடிக்க இயலாது. எங்களைப் போன்றவர்கள் நடிக்க இயலாத கருத்துக்கள் இந்த நாடகத்தில் இருக்கின்றன. எனவே, பொதுவான சமுதாய சீர்த்திருத்தக் கருத்துக்களை வைத்து ஒரு நாடகம் எழுதித்தாருங்கள்; நடிக்கிறோம்” என்றேன். விரைவில் எழுதித் தருவதாக வாக்களித்தார் அண்ணா. ஆனால் அந்த அரிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமிக்குக் கிடைத்தது. அவற்றைப் பின்னல் கூறுவேன். இரு குழுவினருக்கும் பாராட்டு

அன்று மாலை 20-11-48 இல் காஞ்சி திராவிட நடிகர் கழகத்தார்க்கும் எங்களின் ஸ்ரீ பால சண்முகானந்த சபையார்க்கும் கோவை மாவட்டத் திராவிடக் கழகத்தின் சார்பில் ஒரு தேநீர் விருந் தும் பாராட்டும் நடைபெற்றன. இருகுழுவினரும் கலந்து கொண்டனார். பெரியார், பெருமாள் முதலியார் எம். ஏ.எல். டி. பழைய

கோட்டை அர்ச்சுனன் முதலியோர் பாராட்டிப் பேசினார். நான் நன்றி கூறுகையில்,

“இராமாயணம், சிவலீலா, கிருஷ்ணலீலா, கந்தலீலா, மகாபாரதம் முதலிய புராண இதிகாச நாடகங்களையே பெரும் பாலும் நடித்து வரும் எங்கள் குழுவுக்கும், நேற்று சந்திரோதயம் என்னும் ஒர் அருமையான சீர்திருத்த நாடகத்தை நடித்துப் பெருமை பெற்றுள்ள அண்ணா அவர்களின் திராவிட நடிகர் குழுவுக்கும் சேர்த்து இந்தப் பாராட்டை நடத்தியது, கோவை மாவட்டத் திராவிடக் கழகத்தின் பெருந்தன்மைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. ஆனால் நாங்கள் இந்தப் பாராட்டுக்கு தகுதியுடையவர்கள் அல்லர் என்பதை மிகப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினேன்.

எனக்கு அடுத்தபடியாக நன்றி கூற வந்த அறிஞர் அண்ணா அவர்கள் என் பேச்சை மறுத்தார்.

தோழர் டி. கே. ஷண்முகம், தாம் இந்த பாராட்டுக்குத் தகுதியுடையவர் அல்ல என்று கருதினார். அது அவருடைய அடக்கத்தைக் காட்டுகிறது. அவர் கூறிய நாடகங்களுக்காக மட்டும் இந்தப் பாராட்டினை வழங்கவில்லை. அன்றும் இன்றும் அவர்கள் நடத்தி வரும் குமாஸ்தாவின் பெண், வித்தியாசாகரர், பதிபக்தி, பம்பாய் மெயில், மேனகா, தேசபக்தி போன்ற சமுதாயச் சீர்திருத்த நாடகங்களுக்காகத் தான் பெரியார் அவர்கள் ஷண்முகம் குழுவினரைப் பாராட்டுகிறார். இனியும் பாராட்டுவார். எங்களைப்போல் முழுதும் சீர்திருத்தப் பிரசாரக் குழுவாக டி. கே. எஸ். குழு இருக்க வேண்டுமென்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை யென்பதை கழகத்தின் சார்பில் நான் சொல்லுகிறேன். அவர்களுடைய ஒளவையார் நாடகத்தில் புராணக் கற்பனைகள் சில இருந்தாலும் தமிழுணர்வினை ஊட்டும் சிறந்த நாடகமாக அது அமைந்திருப்பதை நாம் மறந்துவிடுவதற்கில்லை” என்று கூறிவிட்டுப் பெரியாரைப் பார்த்தார். பெரியார் அவர்கள் சிரித்துக்கொண்டே அதனை வரவேற்பது போல் தலையை அசைத்தார். அன்று அண்ணா அவர்கள் பேசிய அழகிய பேச்சு இன்னும் பசுமையாக என் நெஞ்சத்தில் நிலைத்திருக்கிறது.
--------------

59. முதல் நாடகக் கலை மாநாடு


“எல்லோரும் மாநாடுகள் கூட்டுகிறார்களே; நாடகக்கலை வளர்ச்சிக்காக நீங்கள் ஏன் ஒரு தனி மாநாடு கூட்டக்கூடாது?” என்றார் எங்கள் அருமை நண்பர் மதுரை கருப்பையா. எங்களுக்கும் இந்த எண்ணமுண்டு. என்றாலும் நாள்தோறும் நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒருமாநாட்டின் பொறுப்பினை ஏற்று நடத்துவது மிகவும் சிரமமானது என்று கருதினுேம். மதுரை கருப்பையா பிடிவாதக்காரர். தேசீய மாநாடுகள் சிலவற்றை நடத்திப்பழக்கப் பட்டவர். 1941இல் மதுரையில் நாங்கள் இருந்த போது எங்கள் அரங்கிலேயே ஒரு மாநாட்டைக் கூட்டி அதில் என்னையும் பங்குபெறச் செய்தவர். நகைச்சுவை நடிகர் டி. என் சிவதாணு, நண்பர் கருப்பையாவின் கருத்தினை ஆதரித்தார். கருப்பையாவுடன் தானும் பொறுப்பேற்றுக் கொள்வதாகச் சொன்னார். சிவதாணுவும் கருப்பையாவும் செயலாளர்களாக இருந்து பணிபுரிய ஆர்வத்தோடு முன் வந்தார்கள். செயலாற்றுவதற்கு இருவர் சித்தமாக இருந்ததால் நானும் உற்சாகத்துடன் ஒப்புதல் அளித்தேன். பெரியண்ணாவிடமும் அனுமதி பெற்றேன். ஈரோடு நகரப் பிரமுகர்களும், நகரசபையாரும் ஏனைய அதிகாரிகளும் எங்களோடு ஒத்துழைப்பதாக உறுதி அளித்தார்கள். மாநாட்டுக்குரிய வேலைகளைத் தொடங்க சிவதாணு, கருப்பையா இருவருக்கும் அனுமதி அளிக்கப் பட்டது.

வரவேற்புக் குழுவினர்

மாநாட்டுச் செயலாளர்கள் இருவரும் சுறுசுறுப்பாகப் பணி புரிந்தார்கள். ஒருவாரக் காலத்திற்குள் வரவேற்புக் குழு அமைத்தார்கள். குழுவினார் நகரின் முக்கிய பிரமுகர்களாகவும், நாடகக் கலை வளர்ச்சியில் ஆர்வமுடையவர்களாகவும், எல்லோருடைய நம்பிக்கைக்குப் பாத்திர முடையவர்களாகவும் இருந்தார்கள்.

வரவேற்புக் குழுவினார்

தலைவர்: பொருளாளர்;
திரு. ஆர். கே. வெங்கடசாமி நாயக்கர்
திரு எஸ். மீனாட்சிசுந்தர முதலியார் பி. ஏ. எல். டி.(நகரசபைத் தலைவர், ஈரோடு)

செயலாளர்கள்
திரு டி. என், சிவதானு (நகைச்சுவை நடிகர்)
ஸ்ரீ பாலஷண்முகானந்த சபா
திரு எம். கருப்பையா (தேசபக்தர்)

நிருவாக உறுப்பினார்கள்
திரு கான்சாகிப் ஷேக் தாவுதுசாய்பு, ஈரோடு
“நல்ல சேனாபதி சர்க்கரை மன்றாடியார், பழையக் கோட்டை
“எம். சிக்கைய நாயக்கர், ஈரோடு
“ஈ. எம். அண்ணாமலைப்பிள்ளை பி. ஏ. பி. எல். ஈரோடு
“வி. வி. சி. ஆர். முருகேச முதலியார், ஈரோடு
“கே. என். பழனிச்சாமிக் கவுண்டர், நகரசபைத் தலைவர் திருப்பூர்
“ஈ. வே. கிருஷ்ணசாமி நாயக்கர், ஈரோடு
“எஸ். கிருஷ்ணசாமி முதலியார், ஈரோடு
“எம். எஸ். முத்துக் கருப்பஞ் செட்டியார், ஈரோடு
“ என். சி. இராஜகோபால், ஆடிட்டர், ஈரோடு
“டி.கே.சண்முகம் ஸ்ரீ பால ஷண்முகா னந்தசபா

குழுவினரின் ஏற்பாடுகள்

வரவேற்புக் குழுவினர் கூடி நன்கு விவாதித்து இரண்டு வார காலத்திற்குள் மாநாட்டுத் தலைவரையும் பேச்சாளர்களையும் முடிவு செய்தனார். காலை மாலை இரு வேளைகளிலும் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்வதென்றும் மாநாட்டன்று இரவு, ஒளவையார் நாடகத்தை நடத்திக் கொடுக்கும்படி டி. கே. எஸ். சகோதரர்களைக் கேட்டுக் கொள்வதென்றும் ராவ்பகதூர் சம்பந்த, முதலியார், எம். என். எம். பாவலர், எம். கே. தியாகராஜ பாகவதர், டி. கே. ஷண்முகம் ஆகியோருக்குப் பட்டங்கள் வழங்கிப் பாராட்டுவதென்றும், மாநாட்டுக்குக் கட்டணம் வைத்து நடத்தவேண்டுமென்றும் ஒருமனதாக முடிவெடுத்தனார்.

குழுவினரின் முடிவுப்படி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடிதங்கள் எழுதியும், நேரில் சந்தித்தும் ஒப்புதல்கள் பெறப் பட்டன. 1944 பிப்ரவரி 11ஆம் தேதி ஈரோடு சென்ரல் தியேட்டரில் மாநாடு சிறப்பாக நடைபெறுமென விளம்பரம் செய்யப்பெற்றது.

நிகழ்ச்சிகளின் பட்டியல்

தொழில்முறை சபைகள், பயில்முறை சபைகள் என்ற வேறு பாடின்றி எல்லோருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது தமிழ்நாட்டிலிருந்த பெரும்பாலான நாடக சபைகளின் பிரதிநிதிகள் மாநாட்டின் பேச்சாளர்களாகக் கலந்து கொண்டார்கள். இலங்கைத் தமிழரின் பிரதிநிதியாக ஏ. கே. இராமலிங்கம் என்பவர் மாநாட்டில் பங்குகொண்டார். முற்போக்கான கொள்கைகளைக் கொண்ட சீர்திருத்தவாதிகளும் தம் கருத்துக்களை வெளிப்படையாக எடுத்துச்சொல்லி மாநாட்டைச் சிறப்பித்தனார். காலை-மாலை நிகழச்சிகள் பின் வருமாறு ஒழுங்கு செய்யப் பெற்றன.

காலை நிகழ்ச்சிகள்
கொடியேற்று விழா ... ராவ்பகதூர் சம்பந்த முதலியார்
திறப்பு விழா ... எம். கே. தியாகராஜ பாகவதர்
வரவேற்புரை ... ஆர். கே. வேங்கடசாமி
தலைமைப் பேருரை ... சர் ஆர். கே. சண்முகம் கே. சி. ஐ. ஈ.
சங்கரதாசர் படத்திறப்பு ... எம். என். எம். பாவலர்
கந்தசாமி முதலியார் படத்திறப்பு ... டி. கே. ஷண்முகம்

மாலை நிகழ்ச்சிகள்
நாடகமும் அதன் பயனும் … நவாப் டி.எஸ். இராஜமாணிக்கம்
(ஸ்ரீ தேவி பால வினேத சங்கீத சபா )
இலக்கியமும் சம்பிரதாயமும் … சி. ஆர். மயிலேறு எம். ஏ.
(பேராசிரியர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
நாடகத்தில் பெண்கள் … பி.எஸ். சிவபாக்கியம்
(ஸ்பெஷல் நாடக நடிகை, மதுரை)
நாடகமும் சினிமாவும் … நகைச்சுவையரசு
என். எஸ். கிருஷ்ணன்
இன்றைய நாடகம் … ஏ. ஆர். அருணாசலம்
(ஸ்ரீராம பாலகான வினேத சபா)
கலையின் நிலைமை … சி. என். அண்ணாதுரை எம். ஏ.
(திராவிட நடிகர் கழகம்-காஞ்சீபுரம்)
நடிகர் வாழ்க்கை … கே. டி. சுந்தானம்
(ஸ்ரீ மங்கள பால கான சபா)
நாடகக் கலை … கி. ஆ. பெ. விசுவநாதம்
(திருச்சி நகர அமைச்சூர் சபை)
நடிகர்களின் கடமை … எம். எம். சிதம்பரநாதன்
(ஸ்பெஷல் நாடக நடிகர்-மதுரை)
நாடகக்கலை வளர்ச்சி … பூவாளுர் அ. பொன்னம்பலனார்
(சீர்திருத்தக் கழகம்-பூவாளுர்)
நடிப்புக் கலையால் இன்பம் … ஏ. கே. இராமலிங்கம்
(இலங்கை நாடகசபைகளின் பிரதிநிதி)
சீர்திருத்த நாடகங்கள் … எஸ். ஆர். சுப்பரமணியம்
(நாடக ரசிகர்-திருப்பூர்)
ஒழுக்கம் வேண்டும் … என். தண்டபாணிப்பிள்ளை
(நாடக ரசிகர்-சிதம்பரம்)
நல்ல நாடகங்கள் … எஸ். மீனாட்சி சுந்தர முதலியார் பி. ஏ., எல். டி
(நாடக ரசிகர். ஈரோடு)
நாடும் நாடகமும் … எம். வி. மணி (நடிகர், சென்னை)
நன்றியுரை … டி. என். சிவதானு
28ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு பல்வேறு கொள்கை யாளர்களை ஒருங்கு சேர்த்து, கட்டணமும் வைத்து ஒரு நாடக மாநாட்டினை நடத்த முன் வந்தது வியப்புக்குரிய செய்தி யல்லவா? அதுவும் ஒரு நாடக சபையின் பின்னணியிலேயே இதனை நடத்துவதென்பது தனிச் சிறப்பு வாய்ந்ததல்லவா?

முத்தமிழ் நுகர்வோர் சங்கம்

மாநாட்டின் தேதியும் நிகழ்ச்சிகளின் பட்டியலும் விளம்பரப் படுத்தப்பட்ட உடனேயே ஈரோட்டில் புதிதாக ஒரு சங்கம் தோன்றியது இதன் பெயர் முத்தமிழ் நுகர்வோர் சங்கம். இச்சங்கத்தைப் பற்றிய செய்திகள் விடுதலை, குடியரசு இதழ்களில் வெளிவந்தன. நாடகக்கலை மாநாட்டினைப்பற்றி வாரந்தோறும் பெரியாரின் குடியரசு வார இதழில் 1, 2, 3, என்று எண்கள் போட்டுத் தலையங்கம் எழுதப் பட்டது. நாடககலை மாநாட்டை நாங்கள் ஏதோ உள்நோக்கத்தோடு நடத்துவதாகப் பெரியாரிடம் யாரோ சொல்லியிருக்க வேண்டுமென நினைக்கிறேன். அதனால் அவர் மாநாட்டை அழுத்தமாகக் கண்டித்து எழுதினார். மாநாடுக்குக் தலைமை தாங்க வரும் ஆர். கே. சண்முகம் செட்டியாருக்குக் கறுப்புக் கொடி பிடிக்கவேண்டுமென்று முத்தமிழ் நுகர்வோர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாக ஈரோட்டிலுள்ள எங்கள் நண்பர்களில் சிலர் பேசிக் கொணடார்கள். இந்தச் செய்தி எனக்குக் கவலையைத் தந்தது; நான் பெரியார் அவர்களைச் சந்தித்துப் பேச விரும்பினேன். அவர் ஊரில் இல்லையென்றும் சேலத்தில் இருக்கிறாரென்றும் தகவல் கிடைத்தது. கடிதம் எழுதினேன்.

மாநாட்டுத் தேதி நெருங்க நெருங்க எனக்கு மிகுந்த கவலை ஏற்பட்டது. மாநாட்டுத் தலைவரை ரயில் நிலையத்தில் வரவேற்கும்போது கறுப்புக்கொடி காட்டச் சிலர் முயல்வதின் காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. மாநாட்டுக்கு ஒருவாரத்திற்கு முன்பே பெரியார் சேலம் போய்விட்டதால் அவரைச் சந்தித்துப் பேசவும் வாய்ப்பு கிட்டவில்லை. மாநாட்டுக்கு முதல் நாள் காலை அறிஞர் அண்ணா காஞ்சியிலிருந்து வந்தார். அவரைச் சந்தித்துப் பேசினேன். பெரியார் கோபத்தைப் பற்றியும், முத்தமிழ் நுகர்வோர் சங்கம் கறுப்புக்கொடி பிடிக்க இருப்பது பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தேன். அண்ணா “ஒரு குழப்பமும் நேராது; மாநாடு ஒழுங்காக நடைபெறும்” என்று உறுதி கூறினார்.

நிருவாகக் குழுக் கூட்டம்

மாநாடு நடைபெறுவதற்கு முந்திய நாள் மாலை நிருவாக குழுக் கூட்டம் சென்ட்ரல் தியேட்டரில் நடைபெற்றது. நூற்றுக்கு மேற்பட்ட தீர்மானங்கள் வந்திருந்தன. அவற்றில் முத் தமிழ் நுகர்வோர் சங்கத்தார் புராண-இதிகாச நாடகங்களைக் கண்டித்துச் சில தீர்மானங்களை அனுப்பியிருந்தனர். டி. கே. எஸ். சகோதரர்கள் சார்பில் நாங்களும் சில தீர்மானங்களை இம் மாநாடு நிறைவேற்ற வேண்டுமெனக் கோரி அச்சிட்டு அனுப்பி யிருந்தோம். நீண்டநேரம் விவாதித்த பின் குழப்பம் நேருவதைத் தவிர்ப்பதர்காக, எந்தத் தீர்மானமும் மாநாட்டில் நிறைவேற்ற வேண்டியதில்லையென்றும் நூற்றுக்கு மேற்பட்ட தீர்மானங்கள் வந்திருப்பதால் அவற்றையெல்லாம் நன்கு பரிசீலனை செய்து அடுத்த மாநாட்டில் வைக்க வேண்டுமென்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டி. கே. எஸ். சகோதரர்கள் அனுப்பி யுள்ள தீர்மானங்களை நிறைவேற்றினல் ஆக்க பூர்வமாகச் செயலாற்ற நல்ல வாய்ப்பு கிட்டுமென்று நான் எவ்வளவோ வற்புறுத்தினேன். ஏற்கனவே குழப்பம், கறுப்புக்கொடி, கலகம் இவற்றைப்பற்றிப் பரவலாக நகர் முழுவதும் பேச்சு பரவி யிருந்ததால் நிருவாகக் குழுவினார் எந்தத் தீர்மானமும் நிறை வேற்ற இயலாதென உறுதியாக மறுத்து விட்டனார்.

மாநாட்டைச் சிறப்புற நடத்துவதில் எங்களுக்குத் தவறான உள்நோக்கம் எதுவும் இல்லையென்பதையும் நாடகக் கலை வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயலாற்ற முனைந்தோம் என்பதனையும் பின்னே வரும்.எங்கள் தீர்மானங்கள் எடுத்துக் காட்டும்.

தமிழ்நாடு நாடகக் கலை அபிவிருத்தி மாகாட்டிற்கு டி. கே. எஸ். சகோதரர்கள் அனுப்பியுள்ள தீர்மானங்கள்
1. நாடகக் கலை வளர்ச்சிக்கு உருப்படியான தொண்டாற்றத் “தமிழ்நாடு நாடகக்கலை வளர்ச்சிக் கழகம்” என்ற பெய ரால் கழகம் ஒன்று நிறுவ வேண்டுமென்றும், கழகத்தின் நேக்கங்களும் நிபந்தனைகளும் கிழ்க்கண்டவாறு இருக்கவேண்டு மென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

நோக்கங்கள்
(அ) தமிழர்களின் முன்னேற்றத்தையும், தமிழ்மொழி வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு சிறந்த நாடகங்களை இயற்ற எழுத்தாளர்களைத் துண்டுவதும், அவ்வாறு எழுதப்பட்ட நாடகங்களுக்குப் பரிசுகள் வழங்குவதும், அந்நாடகங்களைக் கழகத்தின் சார்பிலேயே புத்தகமாக வெளியிடுவதும்.

(ஆ) கழகத்தினரால் ஒப்புக்கொள்ளப்பட்ட நாடகங்களை நடிக்கும் சபையாருக்கும் சிறந்த நடிகருக்கும் பரிசுகள் வழங்குவது.

(இ) தற்போது தமிழகத்தில் நிரந்தரமாகத் தொழில் நடத்தும் நாடக சபைகளைக் கொண்டு மேற்படி நாடகங்களை நடிக்கத் துரண்டுவது.

(ஈ) ஒவ்வொரு ஊரிலும் நாடகக் கழகங்கள் அமைத்து, நாடக வருவாயை எதிர்பாராத அறிஞர்களை அங்கத் தினார்களாக்கி, மேற்குறித்த நாடகங்களை நடிக்கச் செய்வது.

(உ) கழகத்தின் சார்பில் மாநாடுகள் நாடெங்கும் கூட்டி நாடகக் கலையின் மேன்மை பற்றிப் பிரசாரம் செய்வது.

(ஊ) நாடகக் கலை வளர்ச்சிக்கென்று பத்திரிக்கைகள் தோற்றுவிப்பது.

(எ) நகரசபைகளின் நிர்வாகத்திலுள்ள ஒவ்வொரு நகரங் களிலும் கலை வளர்ச்சிக்காகவும், பொது உபயோகத் திற்காகவும் ஒவ்வொரு தியேட்டர் (திருச்சி நகரசபை ஹாலைப் போல) அமைக்கும்படி நகரசபைகளைத் தூண்டுவது.

(ஏ) கழகத்தின் சார்பில் நிதி திரட்டி, தமிழ்நாட்டின் முக்கிய

நகரங்களில் நாடகசாலைகள் நிறுவுவது.

நிபந்தனைகள்
(க) மேற்கண்ட நோக்கங்களை ஒப்புக்கொண்ட எவரும் இக் கழகத்தில் அங்கத்தினராக இருக்க உரிமையுடை யவராவர்.

(ங) அங்கத்தினார்கள் வருடச் சந்தா ரூ. 6 - செலுத்த வேண்டும்.

(ச) நிருவாகிகள் அங்கத்தினார்களின் பெயரால் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

2. அடுத்த மாநாடு கழகத்தின் பேரால் கூட்டப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை கீழ்க்கண்டவர்களை இக்கழகத்தின் நிருவாகிகளாக இருந்து செயலாற்ற வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தலைவர்; சர் பி. டி. இராஜன் அவர்கள்
உபதலைவர்; ராவ் பகதூர் பி. சம்பந்த முதலியார் அவர்கள்

நிர்வாக அங்கத்தினார்கள்;
நாடக கேசரி நவாப் டி. எஸ். இராஜமாணிக்கம் பிள்ளை
நாடக ஆசிரியர் திரு. டி. பி. பொன்னுசாமிப்பிள்ளை(ஸ்ரீ மங்கள பாலகான சபா)
திரு வயிரம் அரு. அருளுச்சலம் செட்டியார் (ஸ்ரீ ராமபாலகான சபா)
திருமதி கே. பி. சுந்தராம்பாள்
இசை நாடக ஒளி எம். கே. தியாகராஜ பாகவதர்
நகைச்சுவையரசு என். எஸ் கிருஷ்ணன்
திரு பி. எஸ். வேலுநாயர்
ராவ்சாகிப் வி. ஐ. குமராசாமிப்பிள்ளை (கரந்தைத் தமிழ்ச் சங்கம்)
திரு ஏ. கார்மேகக் கோன் (மதுரைத் தமிழ்ச் சங்கம்)
“சி. ஆர். மயிலேறு எம். ஏ. (அண்ணாமலைப் பல்கலைக் கழகம்)
“சி. என். அண்ணாதுரை எம். ஏ.
“கி. ஆ. பெ. விசுவநாதம்
பேராசிரியர் வ. ரா. (சென்னை)
கான்சாகிப் ஜனப் கே. ஏ. ஷேக்தாவுத் சாகிப்

காரியதரிசி: டி. கே. ஷண்முகம்

பொக்கிஷதார்: டி. கே. பகவதி

3. இக்கழகத்தின் போஷகர்களாகக் கீழ்க்கண்ட பெரியார்களை இம்மாநாடு தேர்ந்தெடுக்கிறது.

4. 1. ராஜா சர். மு. அண்ணாமலைச் செட்டியார் அவர்கள்

2. சர். ஆர். கே. சண்முகம் செட்டியார் “
3. இராமநாதபுரம் சேதுபதி மன்னார் “
4. வள்ளல் அழகப்பச் செட்டியார் “
ஈரோடு

11 – 2– 44

இத் தீர்மானம் மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேறி யிருக்குமானல் அதன்படி செயலாற்ற என்னைப் பொறுத்த வரையில் சித்தமாக இருந்தேன். இதற்குப் பெரியண்ணாவின் அனுமதியையும் பெற்றிருந்தேன். ஆனால் அன்று எங்களுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்த பெரியவர்கள், எங்களைப் புரிந்து கொள்ளாமல் செயலாற்றியதால் அந்த அருமையான வாய்ப்பினைத் தமிழகம் இழந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

இரண்டாவதாக மகாநாட்டுத் தலைவரை மறுநாள் காலை ரயில் நிலையத்திலிருந்து அவர் தங்குமிடமாகிய கான்சாகிப் இல்லம் வரை மேளதாளத்தோடு ஊர்வலமாக அழைத்துவர ஏற். பாடு செய்யப்பட்டிருந்தது. இதுபற்றி ஆர். கே. சண்முகம் அவர்களே ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதற்கிணங்க ஊர்வலம் எதுவும் தேவையில்லையென்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஊர்வலத்தில் கறுப்புக் கொடி பிடிக்கத் திட்டமிட்டிருந்த நண்பர்கள் அண்ணா அவர்களின் அறிவுரைக்கிணங்க அந்த எண்ணத்தைக் கைவிட்டனார் என்பதைப் பின்னல் அறிந்தோம்.

மாநாடு தொடங்கியது

மறுநாள் 11, 2- 44 காலை 9- 30- மணிக்கு தமிழ் மாகாண நாடகக் கலை அபிவிருத்தி மாநாடு ஈரோடு சென்ட்ரல் நாடக அரங்கில் துவங்கியது. அதிகாலை ஈரோடு வந்து சேர்ந்த மாநாட்டுத் தலைவர் ஆர். கே. சண்முகம் செட்டியார் கான்சாகிப் ஷேக்தாவுத் சாகிப் இல்லத்தில் தங்கியிருந்தார். அவரை அரங்கிற்கு அழைத்து வந்தார்கள். தலைவரைப் பிரேரேபிக்கும் போது அதை எதிர்த்துக் குழப்பம் செய்யத் திட்டமிட்டுச் சிலர் டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதனை யறிந்த ஆர். கே. சண்முகம், “தலைவர் பெயரைத்தான் விளம்பரப்படுத்தியிருக்கிறீர்களே, பின் ஏன் பிரேரணை, ஆமோதிப்பு, எல்லாம் வேண்டும்? அது ஒன்றும் தேவையில்லை. தலைவர் பிரேரணை இல்லாமலையே மாநாட்டைத் தொடங்கி விடலாம்” என்றார். நிர்வாகிகளுக்கும் அதுவே சரியெனப் பட்டது.

மேடையில் முன்திரை விடப்பட்டிருந்தது. அது துாக்கப் பட்டதும் மேலேயிருந்து வரிசையாகப் பூச்சரங்களைத் தொங்க விட்டு மேடை முழுதும் மறைத்திருந்தோம். கொடியேற்று விழாச் சொற்பொழிவினைப் பூச்சரங்களுக்கு முன்புறமே நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தார்கள். திறப்புரையின்போது ஒருகயிற்றைப் பிடித்துத் திறப்பாளர் இழுத்ததும் மேடையை மறைத்துத் தொங்கவிடப் பெற்றுள்ள பூச்சரங்கள் அப்படியே மேலுயர்ந்து விலகி மேடையை மறைக்காமல் இருபுறமும் அழகாகத் தொங்கி கொண்டிருக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார்கள் எங்கள் காட்சி அமைப்பாளர்கள்.

முதலில்; ‘நாட்டினுக் கணிகலம் நாடகக் கலேயே’ என்னும் கவி ஆறுமுகனார் பாடலே அப்போது எங்கள் கம்பெனி முக்கிய நடிகரும் சிறந்த பாடகருமான எஸ். சி. கிருஷ்ணன் இனிமையாகப் பாடினார். ராவ்பகதுரர் சம்பந்தமுதலியார் அவர்கள் நாடக அரங்கின் சின்னம் வரையப் பெற்ற மஞ்சள் வண்ண நாடகக் கலைக் கொடியினை அரங்கிற்கு வெளியே உயர்த்தி வைத்துவிட்டு மேடையில் வந்து சொற்பொழிவாற்றினார். அச்சொற்பொழிவின் சுருக்கம் இது:

‘தமிழ் நாடகாபிமானிகளே, தமிழ் அன்பர்களே, உங்கள் அனுமதியின்மீது நான் இப்போது வெளியில் ஏற்றி வைத்த தமிழ் நாடகக் கலைக் கொடியானது என்றும் அழியாப் புகழுடன் தமிழ் நாடகத்தின் பெருமையைத் தமிழ் பேசப்படும் நாடுகளிலெல்லாம் பிரகாசிக்குமாறு செய்ய எல்லாம் வல்ல இறைவன் இணையடியினைப் போற்றுகிறேன்.

இந்திய நாட்டில் எங்கும் இதுவரை நாடகத்திற்குத் தனியாக மகாநாடு நடைபெற்றதில்லை. அந்தப் பெருமை தமிழ் மக்களாகிய நமக்குத்தான் கிடைத்திருக்கிறது. இந்தப் பாக்கியத் தையும் பெருமையையும் எனக்குக் கொடுத்த இந்நாடக மகா நாட்டைக் கூட்டிய சங்கத்தார்க்கு என் மனமாாந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன்.

53 வருடங்களுக்கு முன் நான் தமிழ் நாடகங்களில் ஆட ஆரம்பித்தபோது தமிழ் நாடகம் இருந்த நிலைமையையும், அது தற்காலம் இருக்கும் நிலையையும் கருதுமிடத்து நான் மிகவும் சந்தோஷப்பட வேண்டியவகை இருக்கிறேன். நாடகமாடுவதென்றால் மிகவும் இழிவான ஒரு தொழிலாக எல்லோராலும் கருதப் பட்டு வந்தது. என்னப் பற்றிய ஒரு உதாரணத்தைக் கூறினாலே போதும். நான் நாடகமாடுவதைக் கேள்விப்பட்ட என் நெருங்கிய பந்து ஒருவர், ‘என்ன சம்பந்தம் கூத்தாடியாகப் போய்விட்டானாமே’ என்று கூறினராம். அக்காலத்தில் கூத்தாடி என்பது ஒரு வசை மொழியாகக் கருதப்பட்டது. அக்காலமெல்லாம் போய், பிறகு நாடகம் ஆடுவதில் இழிவில்லை; கற்றவர்களும் அப்படிச் செய்ய லாம், எல்லா வர்ணத்தாரும் செய்யலாம்; குலஸ்திரீகளும் அதில் பங்கெடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டதற்காகத் தமிழ் நாடக அபிமானிகள் யாவரும் சந்தோஷப்பட வேண்டும்.

நான் இந்த நாடக மகாநாட்டிற்குப் புறப்பட்டபோது சென்னையிலிருக்கும் எனது நண்பர் ஒருவர் “தமிழ் நாடகம் தான் சினிமா வந்தபிறகு செத்துப் போய்விட்டதே. இதற்காக நீங்கள் ஈரோட்டுகுப் போவானேன்?’ என்று கேட்டார். இதற்குப் பதில் சொல்ல வேண்டியது என் கடமையாகும். தமிழ் நாடகக் கலையானது அழிந்து போகும் என்று ஒரு நாடகாபிமானியும் பயப்பட வேண்டியதில்லை. கிராமபோன் ரிக்கார்டுகள் வந்த பிறகும் அவற்றைப் பாடிய சங்கீத வித்துவான்களை நேரில் கேட்க நாம் அதிகமாக விரும்புவதில்லையா? பேசும் படத்தில் நடித்த நடிகர்களை நாம் நேரில் பார்க்க ஆசைப்படுவதில்லையா? இந்த உணர்வு இருக்கும் வரை நாடகம் ஒரு நாளும் அழியாது என்று நான் உறுதியாக கூறுவேன்.”

பம்மல் முதலியார் அவர்கள் இவ்வாறு பேசி முடித்ததும் எம். கே. தியாகராஜ பாகவதர் மாநாட்டைத் திறந்து வைத்தார். அவர் சூத்திரக் கயிற்றை இழுத்ததும் மகேந்திர ஜாலம்போல் மேடையை மறைத்துக் கொண்டிருந்த பூச்சரங்கள் அப்படியே இருபுறமும் உயர்ந்து விலகி மேடையை அலங்கரித்துக் கொண்டு நின்றது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. மாநாட்டுக்கு வந்திருந்த ரசிகப் பெருமக்கள் பெருத்த கைதட்டலுடன் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். மேடையின் நடுவே அமர்ந்திருந்த தலைவர் ஆர்.கே. சண்முகம் “இதுவும் ஒரு நாடகம்போலிருக்கிறதே!” என்றார். திறப்புரை நிகழ்த்திய திரு. தியாகராஜ பாகவதர் தமது பேச்சில் முக்கியமாகக் குறிப்பிட்ட கருத்து இது.

“பெரியோர்களே, தாய்மார்களே!”

நம் தமிழ் நாடகத்தில் எடுத்ததற்கெல்லாம் பாட்டாகவே பாடி விடுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இது ஒரளவு குறைய வேண்டியதுதான். என்றாலும், ஒரேயடியாய்ப் பாட்டுக்களைக் குறைத்து விட்டால் பொதுமக்களின் ஆதரவு கிடைக்குமென்று நான் நம்பவில்லை. ஏனென்றால் நாடக மேடை யில் பாட்டு அதிகமாக ஏற்பட்டது இன்று நேற்றல்ல. முற் காலத்தில் நம் நாடகம் முழுவதுமே பாட்டாகதான் இருந்தது என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. வரவர அது குறைந்து தான் வந்து கொண்டிருக்கிறது. ஒரேயடியாகப் பாட்டைத் தள்ளிவிடக் கூடாது. இயலையும், இசையையும் தன்னுள் கொண்டதாகவே இருக்க வேண்டும் நாடகம். கதைக்குத் தகுந்த முறையில் பாடல்கள் அமைக்க வேண்டும் “.

பாகவதர் பேச்சுக்குப் பின் ஈரோடு நகரசபைத் தலைவர் திரு. ஆர். கே. வேங்கடசாமி எல்லோரையும் வரவேற்றார் . அவரது வரவேற்புரையில் ஒரு பகுதி,

“அன்பர்களே, இவ்வளவு காலமும் இல்லாமல் இப்பொழுது ஈரோட்டிலுள்ள சில பெரிய மனிதர்களுக்கு நாடகக் கலை அபிவிருத்தியைப் பற்றி என்ன அக்கரை வந்தது? இதில் உள்ளூர ஏதேனும் சூழ்ச்சி இருக்குமோவெனச் சிலர் நினைக்கக் கூடும். எவ்விதச் சூழ்ச்சியுமில்லை, தந்திரமும் இல்லையென்று நான் உறுதியாகக் கூறுவேன். சென்ற ஏழெட்டு மாத காலமாக டி. கே. எஸ், சகோதரர்களின் நாடகங்களை இந்நகரில் பார்த்தபின் நாடகக் கலையின் மேன்மையும் அது மக்களிடையே பெற்றுள்ள செல்வாக்கையும் அதனால் ஏற்படும் பயனையும் ஒருவாறு நன்குணர்ந்தோம். அதன் காரணமாக இக் கலையை நல்ல முறையில் போற்றி வளர்ப்பதற்குத் தமிழ் நாட்டிலுள்ள அறிஞர்களையெல்லாம் ஒருங்கு கூட்டி யோசிக்கவும், இயலுமானால் உருப்படியான திட்டங்கள் வகுக்கவும் முடிவு செய்தோம். அதற்கிணங்க, கலை வளர்ச்சி எல்லோருக்கும் பொதுவென்ற முறையில் பல்வேறு கொள்கையுடையவர்களும் ஒன்று சேர்ந்து, தொழில் நடத்தும் கம்பெனியாரின் பூரண ஒத்துழைப்பையும் பெற்றதால் இன்று மகாநாடு நடைபெறுகிறதேயன்றி, தனிப் பட்ட சிலருடைய பெருமைக்கோ, புகழுக்கோ அல்லவென்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாடகக் கலை அபிவிருத்தி மகாநாடு முதல் முதலாக இந்நகரில் கூட்டப்பட்டது இந்நகருக்கும் நகரமக்களுடைய கலையுணர்ச்சிக்கும் பெருமை யளிப்பதாக நான் கருதுகிறேன்.”

வரவேற்புரை முடிந்த பிறகு தலைவர் ஆர். கே. சண்முகம் அவர்களுக்கும் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களுக்கும் ஈரோடு நகர சபையின் சார்பில் வரவேற்புப் பத்திரம் படித்துக் கொடுக்கப்பட்டது. நாடகத் துறையில் ஈடுபட்டுள்ள பெரு மகனார் ஒருவருக்கு நகர சபையின் சார்பில் வரவேற்புப் பத்திரம் அளித்தது இதுவே முதல் தடவையென்பதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். இந்த வகையில் ஈரோடு நகரசபை மற்ற நகர சபைகளுக்கு வழிகாட்டியாக நின்றதுபோற்றுதற்குரிய ஒன்றாகும். நாடகப் பேராசிரியருக்கு நகர சபை வரவேற்பளிக்க வேண்டு மென்ற எண்ணத்தை உருவாக்க, நாங்கள் அந்த நாளில் பெரு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது என்பதை அடக்கத் தோடு சொல்லிக் கொள்கிறேன்.

தலைவர் பிரேரணையின் போது தகராறு

நகரசபைத்தலைவர் வரவேற்புப் பத்திரங்களே வாசித்தளித்த பின் மாநாட்டுத்தலைவர் ஆர். கே. சண்முகம் தலைமையுரை நிகழ்த்த ஒளி பெருக்கியின் முன்னே வந்து நின்றார். அப்போது பெஞ்சிலிருந்தும் தரையிலிருந்தும் சிலர் எழுந்து நின்று “தலைவரைப் பிரேரேபிக்க வேண்டும்” என்று கூச்சல் போட்டார்கள். “தலைவர் பிரேரணை இல்லாமல் ஆர். கே. சண்முகம் பேசக் கூடாது” என்றார்கள். முத்தமிழ் நுகர்வோர் சங்கத்தாரால் முன் கூட்டியே திட்டமிட்டு டிக்கட் வாங்கிக் குழப்பம் செய்ய வந்த கூட்டம் இது. தலைவரைப் பிரேரேபித்ததும் எழுந்து நின்று கூச்ச லிட்டார்கள். உடனே மேடைமீது நின்ற சின்னண்ணா டி. கே. முத்துசாமி ஒலிபெருக்கி முன்னல் வந்து எழுந்து நின்றவர்களை உட்காரும்படி கையமர்த்தியப்படி,

‘அன்பர்களே, மகாநாட்டின் தலைவர் சர். ஆர். கே.சண்முகம் செட்டியார் என்பதை அழைப்பிதழில் தெளிவாகப் போட்டிருக்கிறோம். விளம்பரச் சுவரொட்டிகளிலும் தலைவர் பெயர் இருக்கிறது. அதன் பிறகு, இங்கே தலைவரை ஒருவர் பிரேரேபிக்கவும், மற்றொருவர் ஆமோதிக்கவும் வேண்டுமென்ற அவசியம் இல்லை. வெறும் சடங்குதான். முற்போக்காளர்கள் அதிகமாகப் பங்கு பெறும் இந்த மகாநாட்டில் பழைய மூட நம்பிக்கைச் சடங்கெல்லாம் தேவையில்லையென்று தான் தலைவர் பிரேரேணையை நிறுத்தி விட்டோம். அமைதியாக உட்காரும்படி கேட்டுக் கொள்கிறேன். தலைவர் அவர்கள் பேசுவார்” என்று கூறினார்.

பெரும்பாலான ரசிகப் பெருமக்கள் “உட்கார், உட்கார்” என்று, எழுந்து நின்ற கூட்டத்தை உட்காரச் செய்தார்கள். சுமார் பத்துப்பேர் மட்டும் முணுமுணுத்துக் கொண்டு வெளியே சென்றார்கள். கூட்டத்தில் அமைதி ஏற்பட்டது. தலைவர் சொற்பொழிவாற்றினார். அதன் சுருக்கத்தை மட்டும் இங்கு தருகிறேன்.

“நண்பர்களே, நகரசபைத் தலைவர் அவர்களே, அங்கத்தினர்களே, நமது நாட்டிலே நாடகக்காரர்களைக் கூத்தாடிகள் என்று கேலியாகப் பேசுகிறார்கள். மேனாடுகளிலே அவர்களைப் பாராட்டுகிறார்கள். நகரசபைகள் நாடகக் கலைக்காக உதவி செய்கின்றன. மேடுைகளில் காணப்படும் பெரிய தியேட்டர்கள் நகர சபைகளுக்குச் சொந்தமானவைகளே. பாரீஸ் பட்டணத்திலுள்ள பெரிய அருமையான நாடகக் கொட்டகை அந்த ஊர் நகர சபையின் சொந்தக் கட்டிடம். அதுபோலவே மேனாடுகளிலே மற்ற இடங்களிலும் நாடகக் கொட்டகைகள், நாட்டிய சாலைகள் எல்லாம் நகரசபைகளுக்குச் சொந்தம். இனி இங்கும் நகரசபைகள் நாடகக் கலைக்கு ஆதரவு தருமென்று நம்புகிறேன்.

நாடகக் கலையென்பது நமது தமிழ்நாட்டிலே பழமையானது. 2000 ஆண்டுகட்கு முன்பும் இருந்தது. ஆனால் இன்று சிலர் நாடகம் என்ற சொல் கூடத் தமிழல்ல, சமகிருதம் என்று கருதுகிறார்கள். நாடகம் என்ற சொல் நடை என்ற தமிழ்ச் சொல்லின் கருத்தைக் கொண்டது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்திலே நாடகக்கலை இருக்கிறது.

பழங்காலத்திலே நாடகங்களை மூன்று வகையாகப் பிரித்திருந்தார்கள். ஒன்று பக்தி ரசமான புராணக் கதைகள். இவைகளைக் கோவில்களிலே நடத்திவந்தார்கள். மற்றொன்று வீரர் கதைகள். இவை அரசர்கள் முன்னிலையிலே மாளிகைகளிலே நடிக்கப் பட்டன. மூன்றாவது அறிவு வளர்ச்சிக் கதைகள். இவைகளே மக்கள் முன்னிலையில் நடத்தி வந்தார்கள். இப்பொதோ நாடகங்கள் யாவும் புராணக் கதைகளாக உள்ளன.அவைகளைப்பார்க்கும். போது கஷ்டமாகத்தானே இருக்கிறது. புதிய கருத்துள்ள சீர் திருத்த நாடகங்கள் நடத்த வேண்டும்.

“பழங் காலத்திலிருந்து வளர்ந்து வரும் இந் நாடகக் கலையை அபிவிருத்தி அடையச் செய்யவே இன்று இந்த மகாநாடு நடைபெறுகிறது.”[1]

தலைமைப் பேருரை முடிந்ததும் எம். என். எம். பாவலர் அவர்கள் தமிழ்நாடகத் தலைமையாசிரியர் தவத்திரு தூ.தா சக்கரதாஸ் சுவாமிகளின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைத்தார். தமிழ் நாடகத் துறை வளர்ச்சியில் சுவாமிகளுக்கிருந்த முதன்மையை விரிவாக விளக்கி நீண்டதொரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அதனையடுத்துச் சமுதாயச் சீர்திருத்த நாவல் நாடகாசிரியர் திரு எம். கந்தசாமி முதலியார் அவர்களின் திருவுருவப் படத்தினை அடியேன் திறந்து வைத்து, அந்த மறுமலர்ச்சி நாடகப் பெருந்தகையின் தனிச் சிறப்புக்களையும் நடிப்பினைப் பயிற்றுவிப்பதில் அவருக்கிருந்த ஆற்றலையும் எடுத்து விளக்கினேன்.

இத்துடன் காலை நிகழ்ச்சிகள் பகல் 1 மணிக்கு முடிந்தன. பகல் உணவுக்குப் பின் மாலை 4 மணிக்கு மாநாடு தொடர்ந்து நடைபெற்றது. நாடகக் கலையரசு நவாப் டி. எஸ். ராஜமாணிக்கம் பிள்ளை, நாடகமும் அதன் பயனும் என்னும் தலைப்பில் பேசினார். அவரது நீண்ட சொற்யொழிவின் சுருக்கம் வருமாறு:

“அறிவிற் சிறந்த தலைவர் அவர்களே, அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,

அரிய பெரிய நூல்களைப் படிப்பதற்கு அவகாசம் இல்லாதவர்களுக்கும், படிக்கத் தெரியாதவர்களுக்கும் நல்லறிவு புகட்டவே நாடகம் ஏற்பட்டது. இயல்-இசை-நாடகம் என்னும் முத்தமிழுள் இயலும் இசையும் படித்தாலும் கேட்டாலும் மாத்திரமே இன்பம் தரும். நாடகமோ, அந்த இரண்டு இன்பங்களோடு காண்பதற்கும் இன்பம் தரும்.

உயர்ந்த வேடங்கனைத் தரித்து மெய் மறந்து நடிக்கின்றவர்களுடைய உள்ளங்களில், மேற்படி பாத்திரங்களின் உயர்ந்த நற்குணங்கள் படிவது இயற்கை, இந்தக் குணங்கள் நாளடைவில் மிகுவதால் அந்த நடிகர்கள் தெய்வீகத் தன்மையை அடைகின்றனார்.

நம்நாட்டில் நல்வழி புகட்டும் நூல்களை மூன்று வகையாகப் பிரித்திருக்கிறார்கள். அவை 1, வேதங்கள் 2, புராணங்கள் 3, நாடகம் முதலிய காவியங்கள்.

இவைகளில் முதலாவதான. வேதம் அரசனைப்போல் கட்டளையிட்டு, நல்ல காரியங்களைச் செய்ய ஏவுகிறது. இரண்டாவதான புராணங்கள், ஆருயிர் நண்பனைப்போல நயமொழிகளால் கதைகளின் மூலம் நல்ல செயல்களைக் செய்யத் தூண்டுகின்றன. நாடகங்களோவெனில் அழகும் கற்பும் அமுதமொழியும் அமைந்த மனேவி, கணவனைத் திருத்துவதுபோல் கெட்ட ஒழுக்கம் உள்ளவரையும் நல்லொழுக்க முள்ளவராக்குகின்றன.

இத்தகைய தெய்வக் கலையை, மாசற்ற கலையை, உலகம் போற்றும் உத்தமர் மகாத்மாவுக்குச் சத்திய வழி காட்டிய கலையை, கல்வியறிவு இல்லாதவர்களுக்குக் கல்வி புகட்டும் கலையை, தானும் பயனுற்றுப் பிறருக்கும் பயனைக் கொடுக்கும் பண்புள்ள கலையை, தீண்டாமையை ஒழிக்கும் கலையை, ஜாதி பேதம் போக்கும் கலையை, தாய்நாட்டின் பெருமையை உயர்த் தும் தவக்கலையை நன்கு உலகுக்குப் பயன்படுத்த வேண்டுமானல் அரசாங்கத்தாரும் பொதுமக்களும் நடிகர்களும் ஒத்துழைத்து, இவ்வரும் பெரும் நாடகக் கலை தன் பழம்பெரும் சிறப்புகளி லிருந்து என்றும் குன்றாது வளர்ந்தோங்கி வர, எல்லாம் வல்ல அன்னை ஆதிசக்தி அருள்புரிவாளாக!”

நவாப் அவர்கள் பேசியதும் இலக்கியமும் சம்பிரதாயமும் என்னும் தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி.ஆர் மயிலேறு எம். ஏ. அவர்களும், நாடகத்தில் பெண்கள் என்னும் தலைப்பில் பிரபல நடிகை திருமதி பி. எஸ். சிவபாக்கியம் அவர்களும் சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து நகைசுவை மன்னர் என். எஸ். கிருஷ்ணன் நாடகமும் சினிமாவும் என்ற பொருளை நகைச்சுவை ததும்பப் பேசினார். அவரது பேச்சின் சுருக்கம் பின்வருமாறு.

“தலைவர் அவர்களே, பெரியோர்களே, அன்பர்களே எல்லோரும் சொல்கிறர்கள் நாடகக் கலை எங்கேயோ மறைந்து போய் விட்டதென்று. அது இருந்த இடத்தையே கானோம்; முன்பு உச்சாணிக் கொப்பில் இருந்தது. இப்பொழுது பாதாளத்தில் விழுந்து விட்டது என்று இந்தப் பேச்சுக்களெல்லாம் வெறும் பொய். உண்மை கலவாத பொய். நாடகக்கலை எங்கும் போய்விட வில்லை. அது முழுக்க முழுக்க நோய் நொடி ஒன்றுமில்லாமல் உயிரோடு இருக்கிறது. வளர்ந்து கொண்டும் வருகிறது.

“ஆஹா! அந்தக் காலத்தைப்போல் வருமா? முந்தி அப்படி யெல்லாமிருந்தது; இப்படியெல்லாமிருந்தது என்ற வீண் புகழ்ச்சி உளுத்துப்போன பழைய போக்கு. நான் சொல்லுகிறேன்; பண்டைக் காலத்தில் நாடகக்கலை மாட்டு வண்டி வேகத்தில் இருந்து வந்தது. இப்போது அது விமான வேகத்தில் இருந்து வருகிறது. மாட்டு வண்டி வேகத்திலிருந்து திடிரென்று விமான வேகம் வந்துவிடவில்லை. படிப்படியாகதான் வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது.

“காளை மாடு பூட்டிய கட்டை வண்டி வேகத்தில் ‘தெருக் கூத்து'களும், சைக்கிள் முதலியவற்றின் வேகத்தில், ஸ்பெஷல் நாடகங்களும் மேட்டார் வேகத்தில் முறைப்படி தொழில் நடத்தும் கம்பெனியாரின் நாடகங்களும் முன்னேறித்தான் வந்திருக்கின்றன. அதிலும் நவாப் ராஜமாணிக்கம் அவர்களும் டி.கே.எஸ். சகோதரர்களும் நான் முன் குறித்த விமான வேகத்திற்கே வந்து விட்டார்கள் என்று கூறலாம்.

“நிலைமை இப்படியிருக்கும்போது, கொஞ்சம்கூட அஞ்சாமல் சினிமா வந்து நாடகத்தைக் கொன்றுவிட்டதென்று பழி போடுவது ஞாயமா? நீங்களே சொல்லுங்கள்! இது மிகவும் அபாண்டமான பொய்ப் பழி.

“நாடகமும் சினிமாவும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் தான். இரண்டு பேருக்கும் நல்ல வலுவிருக்கிறது. ஒருவரை யொருவர் கொல்ல முடியாது. நடிப்பு இருவருக்கும் பொதுச் சொத்து. இதை இருவரில் யார்வேண்டுமானலும் வாரியெடுத்துக் கொள்ளலாம். அவரவர் திறமையைப் பொறுத்த விஷயம். இது. எடுக்க எடுக்கக் குறையாத சொத்து. இதில் சண்டையென்ன, சச்சரவென்ன?”

“நாடகக் கலை அபிவிருத்தி அடைந்துவிட்டது என்பது உண்மையானால் இந்த மாநாடு எதற்கு? என்று கேள்வி உண்டாகிறதல்லவா? இதெல்லாம் ஒரு விளம்பரந்தானே! என்னென் னவோ மகாநாடுகள் நடக்கின்றன. ஏன் நாங்கள் மட்டும் ஒரு மகாநாடு நடத்தக் கூடாது?”

“நாடகமும் சினிமாவும் ஒன்றுதான். ஒன்று உண்மை யுருவம், மற்றொன்று நிழல். இதில் எதுவும் சாகவில்லை. சாகப் போவதும் இல்லை. இன்றிருக்கும் நிலையிலிருந்து நாடகக் கலை வளர வேண்டுமானால் நடிகர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்ல வாழ்க்கை வசதி வேண்டும், தன் வாழ்க்கை முழுதும் நாடகத் தொழிலில் உழைத்துவிட்டு, கடைசியில் வயிற்றுச் சோற்றுக்கு வாடும்படியான நிலையில் நடிகர்கள் இருப்பார்களானல் நாடகக் கலை அபிவிருத்தி அடைய முடியாது.”

கலைவாணர் இவ்வாறு சிரிக்கச் சிரிக்கப் பேசினார். ஆனால் சிந்தனைக்கு வேலை கொடுப்பதாகவும் அந்தப் பேச்சு அமைந்தது. அடுத்து இன்றைய நாடகம் என்னும் தலைப்பில் ஸ்ரீ ராம பால கான சபா வைரம் அருணாசலம் செட்டியார் அவர்கள் சார்பில் திரு ஏ. ஆர். அருணாச்சலம் பேசினார். அவரைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா அவர்கள் ஒலிப்பெருக்கியின் முன்னே வந்து நின்றார். அவருக்குக் கொடுத்திருந்த தலைப்பு கலையின் நிலைமை என்பது. அவையில் முழு அமைதி நிலவியது. அண்ணா பேசத் தொடங்கினார்.

“நாடக அபிமானிகளும், நாடகக் கலையிலே ஈடுபட்டுள்ள தோழர்களும் இசைவாணர்களும் கலாரசிகர்களும் நிரம்பியுள்ள இந்த மகாநாட்டிலே எனக்கும் பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நாடகக் கலையின் முன்னேற் றத்திற்காக இந்த மகாநாடு நடைபெறுகிறது. காலையிலே தலைவர் சர் சண்முகம் அவர்கள் சொற்பெருக்காற்றினார். வேறு பல அன்பர்களும் பேசினார். இயலே வளர்க்கவும் இசையை வளர்க்கவும் அமைப்புகள் இருக்கின்றன. நாடகக் கலை வளர்ச் சிக்கான அமைப்பும் முயர்ச்சியும் இல்லை. எனவே எனது தோழர் சிவதானு இதற்கான ஒரு தனி மாநாட்டை முதன்முறையாகக் கூட்டியதுபற்றி நான் அவரைப் பாராட்டுகிறேன்.”

“நாடகக் கலை முன்னேற்றத்திற்குப் பல காரியங்கள் நடை பெற வேண்டியிருக்கின்றன. முதலிலே ஊருக்குத் தியேட்டர் வசதி வேண்டும். இப்போது எல்லாம் சினிமாக் கொட்டகைகள் ஆகிவிட்டன. நாடகத்திற்கெனத் தனித் தியேட்டர்கள் இல்லை. திருச்சி நகரசபைஒன்றில் மட்டும் தனித் தியேட்டர் அமைக்கப் பட்டிருக்கிறது. அதுபோல ஒவ்வொரு நகரசபையும் செய்ய முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும், சர்க்காரும் செல்வவான்களும் நாடகக்கலை அபிவிருத்திக்கு உதவியளிக்க வேண்டும். இவைகளுக் கெல்லாம் பொதுமக்கள் முயலவேண்டும்.

“பொதுவாக நாடகக்காரர் என்றால் முன்பெல்லாம் மதிப்பு கிடையாது. நையாண்டி செய்வார்கள், பொது மக்களுக்கும் நடிகர்களுக்கும் தொடர்பு இருப்பதில்லை. இப்போது நடிகர்களிடம் நன்மதிப்பும் நல்ல தொடர்பும் ஏற்பட்டிருக்கிறது. இத் தொடர்பு நீடிக்கவேண்டும். இதனால் தக்க பயனும் ஏற்பட வேண்டும். என் நண்பர் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் அழகுறக் கூறினார். நாடகக்கலை அபிவிருத்தியடைய வேண்டு மென்றால் நாடகக் கலையின் முக்கிய அம்சமாக விளங்கும் நடிகனுக்கு நல்ல சம்பளம் வாழ்க்கை வசதி முதலியன கிடைக்க வேண்டும். இலாபப் பங்கீடும் தரப்படவேண்டும். பங்குதாரர்கள் கொண்ட ஒரு லிமிடெட் கம்பெனி அமைக்கப்படவேண்டும். அதிலே சீர்திருத்த நாடகங்கள் நடத்தப்பட வேண்டும். அதன் வருவாயை நாடகத் தொழிலாளருக்கு இலாபப் பங்கீடாகத் (Bonus) தரப்படவேண்டும். அப்போதுதான் திருப்தியான மனமுடைய நடிகர்கள் இருப்பார்கள். நடிப்பு நேர்த்தியாக இருக்கும். நாடகக் கலையும் வளரும். வேதனை நிரம்பிய வாழ்க்கையிலேயுள்ள வித்துவான் பாடுகிற காம்போதி கூட முகாரியாகத் தானே இருக்கும்! பத்து வருடங்களுக்கு முன் பிரபல நடிகர்களாக இருந்துவிட்டு இன்று பிழைக்கும் வழியற்றுள்ள மாஜி நடிகர்களைப் பார்க்கிறேன். மீசையைத் தடவியபடி நானுந்தான் ராஜபார்ட்டாக இருந்தேன் என்று கூறிக்கொள்வதைவிட அவர்களுக்கு வேறோர் சுவை இல்லை. இப்படி நடிகர்களின் வாழ்வு நொடித்துப் போகிறதென்றால் எப்படிப் படித்தவர்களும் பண்புள்ளவர்களும் நாடகத் தொழிலிலே ஈடுபட முடியும்? ஆகவே நாடகக் கலை அபிவிருத்தியிலே அக்கரை கொண்டவர்கள் முதலிலே முக்கியமாகக் கவனிக்கவேண்டியது நடிகர்களின் - நாடகத் தொழிலாளர்களின் நலத்தைத்தான் - அது நடைபெற்றால்தான் நாடகக்கலை முன்னேறும்.

“இன்று நடத்தப்படும் நாடகங்கள் பெரிதும் புராணங்கள். இவைகளைக் காண்பதால் மக்களுக்கு என்ன பயன் உண்டு? மூடப் பழக்க வழக்கங்கள் வளரத்தானே இந்த நாடகங்கள் பயன்படுகின்றன. சமூக சீர்திருத்த நாடகங்களையே நாடகக்காரர்கள் பெரிதும் நடத்த வேண்டும். அதுதான் கலை அபிவிருத்தி. இந்த உணர்ச்சி இன்று எங்கும் பரவியிருக்கிறது. பொதுமக்களும் இனி நாடு சீர்திருத்த நாடகங்களையே காண விரும்புகிறது என்பதை நாடகக்காரர்கள் உணரும்படி செய்ய வேண்டும்.

அண்ணா மேலும் தொடர்ந்து பேசுகையில், காலையில் தலைவர் கூறிய சில கருத்துகளுக்கு விடையளித்தார். தலைவர் ,ேப ச் சிலே அவற்றையெல்லாம் குறிப்பிடவில்லையாதலால் அவற்றுக்களித்த பதில்களையும் குறிப்பிடாமல் விட்டேன். முன் கூறியபடி ‘நாடக உலகில் அண்ணா’ என்னும் நூலில் இவ் விரிவுரைகளைக் காணலாம்.

இதன் பிறகு ஸ்ரீ மங்கல பாலகான சபையின் சார்பில் கே. டி. சந்தானம் அவர்கள் நடிகர் வாழ்க்கை என்னும் தலைப்பில் மிக அருமையாகப் பேசினார். நாடகக் கலை பற்றி முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களும், நடிகர்களின் கடமை என்னும் தலைப்பில் கலைஞர் எம். எம். சிதம்பரநாதன் அவர்களும், நாடகக்கலை வளர்ச்சி பற்றி பூவாளுர் அ. பொன்னம்பலனார் அவர்களும், நடிப்புக் கலையில் இன்பம் என்பது பற்றி இலங்கை ஏ. கே. இராமலிங்கம் அவர்களும் சீர்திருத்த நாடகங்கள் என்னும் தலைப் பில் திரு எஸ்.ஆர். சுப்பிரமணியம் அவர்களும், ஒழுக்கம் வேண்டும் என்பது பற்றிச் சிதம்பரம் என். தண்டபாணி பிள்ளை அவர்களும் பேசினார்கள்.

கடைசியாகத் தலைவர் தமது முடிவுரையில் கீழ் வருமாறு குறிப்பிட்டார்.

“நான் இந்த மகாநாட்டுக்குக் காலையிலே வந்ததும் சில பேர் என்னிடம் வந்து, இந்த மகாநாட்டிலே ஏதோ கலகம் விளையப் போவதாகவும் மகாநாடு கலைக்கப் பட்டுவிடப் போவ தாகவும் சொன்னார்கள். “யார் இவ்விதம் செய்யப் போகிறார்கள்?” என்று கேட்டேன். அவர்கள் சிலருடைய பெயரைக் குறிப்பிட்டார்கள். உடனே நான், அப்படியெல்லாம் அவர்கள்

நடக்க மாட்டார்கள் என்று கூறினேன். மகாநாடு அமைதியாக நடைபெற்றது. பல அரிய சொற்பொழிவுகள் நடைபெற்றன. இப்போது ராவ் பகதூர் சம்பந்த முதலியார், எம். கே. டி. பாகவதர், எம். என். எம். பாவலர் இவர்கட்கு முறையே நாடகப் பேராசிரியர், இசை நாடக ஒளி, நாடக மணி என்று பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டங்கள் வழங்கும் அதிகாரத்தைச் சர்க்கார் எனக்கு அளித்தால் நான் சர், திவான் பகதூர் போன்ற பட்டங்களே நமது நடிகர்களுக்கு அளிப்பேன். மேடுைகளிலே சிறந்த நடிகர்களின் சேவை பாராட்டப் பட்டு அவர்களுக்கு டாக்டர், நைட் போன்ற பட்டங்கள் அளிக்கப் படுகின்றன.

“மாநாட்டில் பேசிய பலரும் கூறியதைப்போல் சீர்திருத்த நாடகங்கள் நடத்தப் படவேண்டும். நண்பர் அண்ணாதுரை சக்திரோதயம் என்ற நாடகம் எழுதி நடித்துக் கொண்டுவருகிறார். அதைப்போல ஒன்று போதுமா? நூற்றுக்கணக்காக எழுதி நடிக்க வேண்டும். யாரும் நடிக்க முன் வராவிட்டால் நண்பர் அண்ணா துரை எழுதும் நாடகத்தில் நான் நடிக்கிறேன்.

இனி இம் மகாநாட்டை இவ்வளவு நன்முக நடத்திய நண்பர்களுக்கு என் நன்றியறிதலைக் கூறிக்கொண்டு என் முடிவுரையை நிறுத்திக் கொள்கிறேன்.”

தலைவர் முடிவுரைக்குப்பின் மாநாட்டுச் செயலாளர் டி. என். சிவதானு அவர்கள் நன்றி கூற மாநாடு முடிவுபெற்றது. மாநாடு முடிந்த சில நிமிடங்களில் ஒளவையார் நாடகம் தொடங்கிச் சிறப்பாக நடை பெற்றது. மாநாட்டில் கலந்து கொண்ட பெருமக்கள் அனைவரும் நாடகத்தை இறுதி வரையில் இருந்து ரசித்தார்கள். நாடகம் முடிந்ததும் மாநாட்டு வரவேற்புக் குழு சார்பில் எனக்கு ‘ஒளவை’ என்னும் பட்டம் அளிக்கப்பட்டது. அதற்குரிய வெள்ளிப் பேழையினை சர். ஆர். கே. சண்முகம் அவர்கள் வழங்கிப் பாராட்டினார். அப்போது,

“நான் என்வாழ்க்கையில் கண்ட நாடகங்கள் யாவற்றிலும் ஒளவை'தலைச்சிறந்த நாடகம். இந்த நாடகத்தை நான் காணத் தவறியிருந்தால் ஒரு அரிய சந்தர்ப்பத்தை இழந்திருப்பேன் . டி. கே. எஸ். சகோதரர்கள் ஒளவை நாடகத்தின் மூலம் தமிழ் நாடக உலகில் முதலிடம் பெற்று விட்டார்கள் என்பதில் ஐயமில்லை” என்று கூறினார்.

கலைவாணர் என். ஏஸ். கிருஷ்ணன் எதிரே அமர்ந்திருந்தார். அவர்மிகுந்த உணர்ச்சியோடு தாமே மேடைக்கு வந்து,

“இரண்டொரு வார்த்தைகளாவது இதைப் பற்றிப் பேசாமலிருக்க என்னல் முடியவில்லை. சர்.சண்முகம், டி.கே. ஷண்முகத் திற்கு ஒளவை’ என்றபட்டம் அளித்தது முற்றிலும் பொருந்தும். நான் சமீபத்தில் ஒரு மலையாள நாடகத்திற்குத் தலைமை வகித்த போது, மலையாள நடிகர்களைப்போல் தமிழ் நடிகருலகில் எவரும் இல்லையென்று கூறினேன்.அதை இன்று ‘வாபஸ்’ பெற்றுக்கொள்கிறேன். எனது சகோதரன் ஒளவை சண்முகம் ஒருவராலேயே தமிழ் நாடகக்கலை வளர்ந்தோங்குமென்று உறுதியாய்க் கூறுகிறேன்.”

என்று உணர்ச்சி பொங்கக் கூறி என்னைத் தழுவிக் கொண் டார். நான் எல்லோருக்கும் நன்றி கூறும்போது, குழப்பம் கலகம் எதுவுமில்லாமல் மாநாடு அமைதியாக நடந்தது குறித்து இறைவனுக்கு நன்றி கூறினேன்.

முதல் நாடகக்கலை அபிவிருத்தி மாநாட்டினை மிகச் சிறப்பாக நடத்தியமைக்காகச் செயலாளர்கள் இருவரையும் எல்லோரும் பாராட்டினார்கள். மாநாடு முடிந்தபின் அடுத்தவாரம் வெளி வந்த குடியரசு இதழில் நாடகக் கலை மாநாடு பெருந்தோல்வி அடைந்ததாகச் செய்தி வெளிவந்தது. அதே வாரத்தில் காஞ்சி புரத்திலிருந்து வெளிவந்த அறிஞர் அண்ணா அவர்களின் திராவிட நாடு இதழில் நாடகக் கலை மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதாகச் செய்தி வந்திருந்தது. இரு பத்திரிக்கைகளையும் படித்து நாங்கள் சிரித்தோம்.

[1] தலைவர் சண்முகம் அவர்களி தலைமைப் பேருரை முழுவதும் ‘சங்கரதாஸ் சுவாமிகள் மன்றம்’ வெளியிட்டுள்ள ‘நாடக உலகில் அண்ணா’ என்னும் தனி நூலில் உள்ளது.
---------------

60. மூன்று இலக்கிய நாடகங்கள்


ஈரோடு ரசிகப்பெருமக்கள் அளித்தபேராதரவுஎங்களுக்கு மிகுந்த உற்சாகம் ஊட்டியது. அந்த உற்சாகத்தில் மூன்று இலக்கிய நாடகங்கள் தயாராயின.மூன்றையும் வரலாற்று நாடகங்களாகவே குறிப்பிடலாம். ஒன்று மராத்தி நாடகத்தின் தழுவல், மற்றொன்று தமிழ்க்கவியரசரின் வாழ்க்கைச்சித்திரம். மூன்றாவது வட மொழிக் கவிஞரின் வரலாறு. இம் மூன்று நாடகங்களில் இருநாடகங்கள் நாடகக் கலை மாநாட்டுக்குப் பின்னும், ஒரு நாடகம் மாநாட்டுக்கு முன்னும் நடைபெற்றன. மூன்று நாடகங்களும் நாடகக் குழுவின் தரத்தினை உயர்த்தியவென்றே சொல்ல வேண்டும்.

வீர சிவாஜி

வீர சிவாஜி நாடகம் 1944 ஜனவரி 1 ஆம் தேதி அரங்கேறியது. இந்நாடகம் பாலக்காட்டில் இருந்தபோதே எங்களுக்குக் கிடைத் தது. தஞ்சை டி. வி. இரத்தினசாமி அவர்களால் எழுதப் பெற்ற நாடகம். நாடக அமைப்பு மிக நன்றாயிருந்தது. உரையாடல்கள் நல்ல தமிழில் இலக்கிய நயத்துடன் எழுதப் பெற்றிருந்தன. நாடகத்தின் இடையே வரும் காதல் காட்சிகளைத் திருக்குறள் காமத்துப் பாலிலுள்ள சில குறள்பாக்களே அடிப்படையாக வைத்துச் சிறப்பாக எழுதியிருந்தார் ஆசிரியர். சிவாஜியின் நேர் மையையும் நெஞ்சுறுதியையும் விளக்கிக் காட்டும் நாடகம் இது. இந்நாடக ஆசிரியர் இதனை மராத்தி நாடகத்தின தழுவல் என்று முன்பே கூறியிருக்கலாம். அதனால் அவருடைய திறமை உறுதியாக மேலும் உயர்ந்திருக்கும். அதற்கு மாறாக, ஆசிரியர் ரத்தின சாமி இந்நாடகம் என் சொந்தக் கற்பனையென்று தேவையற்ற ஒரு பொய்யைச் சொல்லி விட்டார். கெட்டிக்காரன் புளுகுக்கும் எட்டு நாட்கள்தானே கணக்கு வைத்திருக்கிறார்கள்!

தஞ்சையிலிருந்து ஒரு கடிதம் வந்தது. சிவாஜி நாடகம் மராத்தியில் வெளிவந்த சந்திர கிரகணம் என்ற நாடகத்தின் தழுவல் என்றும், டி. வி. இரத்தினசாமி அதைத் தன்னுடைய நாடகம் என்று சொல்லியிருப்பதாகவும் நண்பர் ஒருவர் எழுதி யிருந்தார், அத்தோடு மராத்தி மொழியிலுள்ள, சந்திர கிரகண்” நாடக அச்சுப் பிரதியையும் அனுப்பியிருந்தார். ஆனால் இந்தக் கடிதம் வந்தபோது ரத்தினசாமி தஞ்சையில் இருந்தார். பாலக்காட்டிலேயே மேற்படி நாடக உரிமையை எங்களுக்குக்கொடுத்து விட்டார். நாடகம் தயாரிக்கும் போது வருவதாகச் சொல்லிப் போனார். உண்மை தெரிந்தபின் நாங்கள் அவருக்குக் கடிதம் எழுதினோம். அதற்குப் பதிலே இல்லை. அதற்குள் சென்னை பிரபல கண் டாக்டர் டி. எஸ். துரைசாமி அவர்களிடமிருந்து மற்றொரு கடிதம் வந்தது, அதில் வீர சிவாஜி நாடகம் தனக்குச் சொந்தமானதென்றும் அதனுடைய முழு உரிமையையும் பல ஆண்டுகளுக்கு முன்பே மராத்தி நாடக ஆசிரியரிடமிருந்து தான் வாங்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, நாடகக் கதை மராத்தி ஆசிரியருடையது. அதைத் தமிழில் எழுதியவர் தஞ்சை டி. வி. இரத்தினசாமி, தமிழ் நாடகத்தின் உரிமை யாளர் டாக்டர் டி. எஸ். துரைசாமி, வேடிக்கையாக இருக் கிறதல்லவா? கடைசியாக நாங்கள் டாக்டர். துரைசாமி அவர்களிடம் அனுமதி பெற்று அவருக்கு ‘ராயல்டி’ கொடுத்துதான் நாடகத்தை நடித்தோம். “டாக்டர் துரைசாமி உரிமைபெற்றது என்று கூடப் போடவில்லை. “நாடக ஆசிரியர் - டி. எஸ். துரைசாமி” என்றே விளம்பரத்தில் போட்டோம். இத்தனை குழப்பங் களுக்கிடையே புதிய நாடகம் அரங்கேறியது.

கதாநாயகனக இராஜேந்திரன்

நாடகத்தின் பெயர் வீர சிவாஜி என்றிருந்தாலும் உண்மை யில் நாடக நாயகன் ஜெயவந்த் என்னும் தளபதி தான். இந்தப்பாத்திரம் இராஜேந்திரனுக்குக் கொடுக்கப் பட்டது. அவர் கதாநாயகனாக நடித்த முதல் நாடகம் வீர சிவாஜி. ஜெயவந்த் பாத்திரத்தை அருமையாக நடித்தார். தம்பி பகவதி சிவாஜியாக நடித்தார். அவரது கம்பீரமான தோற்றம் சிவாஜிக்குப் பொருத்தமாக இருந்தது. குரல், நடை, உடையாவும் பகவதியை சிவாஜி யாகவே காட்டின. சிவாஜியை எதிர்க்கும் வீரன் ஜெகதேவாக நான் நடித்தேன். நாடகம் நல்ல வசூலுடன் சிறப்பாக நடை பெற்றது. பிரண்டு ராமசாமியும் டி. என். சிவதாணுவும் ஹிக்குமத் துக்குமத் என்னும் இரு வீரர்கள் நடித்தனார். இவ் விருவருடைய நகைசுவைக் காட்சிகள் மேலும் மெருகூட்டி நாடக வெற்றிக்குத் துணைபுரிந்தன.

காளமேகம்

கவியரசு காளமேகத்தின் பாடல்களைப் படித்த நாளிலிருந்து அப்புலவர் பெருமானுடைய வாழ்க்கையை நாடகமாக நடத்த ஆவல் கொண்டிருந்தோம். சின்னண்ணா ஏற்கனவே குமாஸ்தாவின் பெண், ராஜாபர்த்ருஹரி, வித்யாசாகரர் ஆகிய மூன்று நாடகங்களை எழுதிஅவை வெற்றியோடு நடந்து விட்டதல்லவா? அந்த உற்சாகத்தில் இப்போது காளமேகத்தையும் அவரே எழு தினார். அதற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் வாங்கிப் படித்தார். தனிபாடல் திரட்டிலுள்ள கவி காளமேகத்தின் நகைசுவை மிகுந்த பாடல்களுக்குச் சிறப்பிடம் கொடுத்து நாடகத்தை உருவாக்கினார். நாடகக்கதை பெரும்பாலும் விநோத ரச மஞ்சரி யிலுள்ள காளமேகப் புலவரின் கதையைத் தழுவியே அமைக்கப் பெற்றது.

ஆயர் குலப் பெண்ணாெருத்தி காளமேகம் களைத்து வரும் போது குடிப்பதற்கு மோர் கொடுக்கிறாள். தண்ணிர் மிகுதியாகக் கலந்த மோர். மேரைக் குடித்துவிட்டுப் புலவர் பாடுகிறார். வானத்திலிருக்கும்போது இந்த மோருக்குக் ‘கார்’ என்று பெயர். மழையாகத் தரையில் விழுந்த பின் இதற்கு ‘நீர்’ என்று பெயர். இவரைப்போன்ற ஆய்ச்சியர் கையில் வந்தபிறகு ‘மோர்’ என்று பெயர் பெற்று விடுகிறது. மோர் தண்ணிராக உள்ளது என்பதைக் கவினார்,

காரென்று போர்படைத்தாய் ககனத் துறும்போது
நீரென்று பேர்படைத்தாய்நெடுந்தரையில் வந்ததன்பின்
வாரொன்று மென்முலையார் ஆய்ச்சியர்கை வந்ததன்பின்
மோரென்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே!"

என்று நகைக்சுவையாகப்பாடி வியப்படைவதுபோல் முடிக்கிறார். இச்சுவை நிறைந்த கவிக்காக ஒரு காட்சியை உருவாக்கி னோம். கவியாக மட்டும் இதனைப் படிக்கும் போது ஏற்படாத ஒரு நிறையுணர்வு காட்சி வடிவாகப் பார்க்கும்போது ஏற்படுகின்றதல்லவா? இப்படியே காளமேகப் புலவரின் நகைச்சுவை பாடல்கள் பலவற்றைக் காட்சிப் படுத்தியிருந்தார் சின்னண்ணா. நாடகத்தில் திருவரங்கம் கோயில், மடப்பள்ளி, திருவானைக்கா ஆலயம், முதலிய காட்சிகள் வருகின்றன. இவற்றையெல்லாம் தயாரித்திருந்தோம்.

எமகண்டம்!

இறுதியில் காளமேகம் எமகண்டம் பாடும் காட்சியினைப் பிரமாதமாக அமைத்திருந்தோம். கவி காளமேகம் எமகண்டம் பாடுவதற்குச் சிரமப்பட்டாரோ என்னமோ, எனக்குத் தெரியாது. காளமேகமாக நடித்த நான் எமகண்டம் பாடுவதற்கு உண்மையாகவே சிரமப்பட்டேன். மேலே நான்கு சங்கிலிகளில் கட்டப் பெற்ற பலகையின் மீதிருந்து பாடவேண்டும்.நான் உட்கார்ந்திருக்கும் பீடமோ சங்கிலிகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது. கீழே பெரிய அக்னிக் குண்டம். அதில் நெருப்பு எரிந்து கொண்டிருப்பதுபோலத் தந்திரக் காட்சி அமைக்கப் பெற்றிருந்தது. இடையிடையே சாம்பிராணி புகை போட்டு மேலேயிருக்கும் என்னத் திணற அடித்துவிட்டார்கள் காட்சியமைப்பாளர்கள். சுற்றிலும் திருமலைராய மன்னனின் சமஸ்தானப் புலவர்கள் உட்கார்ந்தபடியே பல கேள்விகளைக் கேட்கின்றனார். அவர்கள் கேள்விகனாக் கெல்லாம் உடனுக்குடன் காளமேகம் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே பாடவேண்டும் நான் சிரிக்கத்தான் முயன்றேன். ஆனால் வியர்த்து விறுவிறுத்துப்போன அந்நிலையில் சிரிப்புக்களை முகத்தில் தோன்றியதா? இல்லையா? என்று அன்று நாடகம் பார்த்த ரசிகர்கள் தாம் சொல்லவேண்டும்! ஆம் உண்மை! தாய் மொழியாகிய தமிழின் மீது நான் கொண்டிருந்த எல்லையற்ற பற்றின் காரணமாகத்தான் இந்த எமகண்டத்தைத் தாங்கிக் கொண்டேன். பாடிய பாடல்களின் பொருளிலே உள்ளம் திளைத்திருந்ததால்தான் அந்தச் சிரமம் எனக்குத் தெரியவில்லை. காளமேகம் நாடகம் 17-2-1944 இல் தொடங்கி 13 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. நாடகத்தை ஈரோடு நகரமக்கள் பிர மாதமாக ரசித்தார்கள்.

மண்மாரிப் பொழிந்தது

நாடகத்தின் இறுதிக் காட்சியில் கவி காளமேகம் மனம் நொந்து அறம் பாடுகிறார். மண்மாரி பொழிகிறது. அத்தோடு நாடகம் முடிகிறது. இக்காட்சி சிறப்பாக அமைய வேண்டும் என் பதற்காக ஏதேதோ செய்து பார்த்தோம். வழக்கம்போல மின்னல் இடி, மழை, அதற்கேற்ற ஒசை இவற்றையெல்லாம் காண்பித் தோம்; ஆனால் எங்களுக்கு மன நிறைவு ஏற்படவில்லை. பத்து நாட்கள் நாடகங்கள் நடந்தபின் ஒரு புதிய யோசனை தோன்றி யது. மேலே பரண்மீது பல இடங்களில் இருந்து மரத்துரள்களை அப்படியே தூவிக் கொண்டிருந்தால் மண்மாரிப் பெய்வது போல் இருக்குமெனத் தோன்றியது. அப்படியே காலையில் ஒத்திகை பார்த்தோம். பிரமாதமாக இருந்தது. இரவு நாடகத்திலும் அப்படியே செய்யத் திட்டமிட்டோம். பெரியண்ணாவுக்கு எங்கள் திட்டம் தெரியாது.

இரவு நாடகத்தில் எமகண்டம் பாடிவிட்டுக் கீழிறங்கினேன். கோபத்தோடு அறம் பாடினேன்.

கோளர் இருக்கும் ஊர்: கோள்கரவு கற்ற ஊர்:
காளைகளாய் நின்று கதறும் ஊர் காளையே
விண்மாரி யற்று வெளுத்து மிகக் கருத்து
மண்மாரிப் பெய்கஇந்த வான்

கேதார கௌளை ராகத்தின் நான் வெண்பாவை ஆவேசத்தோடு பாடி முடித்ததும் திட்டப்படி ‘சோ’ என்று மழை ஒசையும் மின்னல் மின்னி இடியும் முழங்கின. மேலிருந்து மரத்துாள் மண் மாரியாகப் பொழிந்தது. சபையோரெல்லாம் ஆரவாரத்தோடு பிரமாதமாகக் கைதட்டிப் பாராட்டினார்கள். எங்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. நாடகம் முடிந்ததும் மேலிருந்து முன்மாரியாகப் பெய்த மரத்துாள் மாரியைத் துடைத்துச் சுத்தப்படுத்துவதுதான் பெரும்பாடாக இருத்தது.

“நேற்று மண்மாரி பொழியும் காட்சி ரொம்பப் பிரமாதம்!” என்று யாரோ பெரியண்ணாவிடம் சொன்னார்கள் போலிருக்கிறது. அந்தக் காட்சியைப் பார்க்க அவரும் ஆர்வத்தோடு வந்திருந்தார். காட்சி நடைபெற்றது. எங்கள் துரதிர்ஷ்டம் அன்று, காற்று கொஞ்சம் அதிகமாய் இருந்தது. மேலிருந்து மரத் துரள்களைத் தூவிய போது அது மேடையிலிருந்து சபைக்குப் பறந்து சென்றது. முன்னலிருந்த பக்க மேளக்காரர்கள் திண்டாடினார்கள். ஆர்மோனியம், மிருதங்கம், கிளாரிநெட், பிடில் ஆகிய இசைக் கருவிகளெல்லாம் மரத்துாள் புகுந்துகொண்டு அவர்களைத் திக்குமுக்காடச் செய்தது. நாடகம் முடிந்து சபையோர் வெளியே போகும்போது “மேடையில் பெய்ய வேண்டிய மண் மாரி நம்மீது பெய்து விட்டதே” என்று சபித்துக் கொண்டே சென்றார்கள். மண்மாரி மீது பெரியண்ணாவுக்கு ஒரே கோபம். “என்னடா இது மண்மாரி மீது நாடகம்? மேடை சபை எல்லாம் அலங்கோலப்படுத்தி விட்டீர்களே! இந்த நாடகம் இனி நமக்குத் தேவையில்லை. நீ எமகண்டம் பாடுவதைப் பார்க்கும் போது எனக்குப் பரிதாபமாக இருந்தது. வேண்டாம். இந்த அறம் பாடும் நாடகமே நமக்கு வேண்டாம். நாளையோடு நிறுத்தி விடுங்கள். இந்த மரத்துாள் மாரியும் நாளை வேண்டாம்” என்று சொல்லிவிட்டார். இதற்கு மேல் அப்பீல் ஏது?

இதற்கேற்றாற்போல் காளமேகம் கடைசி நாளன்று 29.2.1944 ஆம் தேதி இரவு 10 மணிக்கு எங்கள் சிற்றப்பா திரு. டி. எஸ். செல்லம்பிள்ளை அவர்கள் காலமானதாகத் தந்தி வந்தது. எல்லாம் சேர்ந்து நன்றாக உருவாகியிருந்த காளமேளம் நாடகத்தைத் தொடர்ந்து நடத்த வாய்ப்பின்றி நிறுத்தும் படியாக நேர்ந்தது.

பில்ஹனன்

திருச்சி வானெலி நிலையம் 29.8-1943ல் பில்ஹணன் நாடகத்தை ஒலிபரப்பியது. நாடகத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர் பங்கு கொண்டார். எனவே அதனை ஆர்வத்தோடு கேட்டோம். நாடக உரையாடல்கள் நன்றாக இருந்தன. அதன் ஆசிரியர் ஏ. எஸ். ஏ. சாமி என்பதை அறிந்தோம். அவரோடு தொடர்பு கொண்டோம், வானெலி நாடகத்தை மேடை நாடகமாக்கித் தருமாறு கேட்டோம். அவர் ஈரோட்டுக்கு வந்து எங்களைச் சந்தித்தார். நாடகத்தைப் படித்தோம். எங்களுக்கு நிரம்பவும் பிடித்தது. நகைச்சுவைக் காட்சிகள் சிலவற்றை எழுதிச் சேர்த்தார் சின்னண்ணா. மதுரகவி பாஸ்கரதாஸ் பாடல்களை எழுதினார். ஏற்கனவே புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பில்ஹணியத்தைப் படித்து அதன் சுவையை அனுபவித்தவன் நான். நாடகத்தின் பிற்பகுதி அதனைத் தழுவியிருக்க வேண்டுமெனக் கூறினேன். ஏ. எஸ். ஏ. சாமி ஏற்றுக்கொண்டார். அதன்படியே எழுதித் தந்தார். அவருடைய உரையாடல்கள் சின்னஞ்சிறு வாக்கியங்களாக புதிய நடையில் அமைந்திருந்தன. ஏ. எஸ். ஏ. சாமி திரைப்படத் துறையில் சிறந்த வசனகர்த்தாவாகப் புகழ் பெறுவார் என்று அப்போதே கூறினேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்குப் பில்ஹணன் நடைபெறவிருப்பது பற்றி எழுதினேன். “தங்கள் பில்ஹணியத்திலுள்ள புரட்சிக்கவியின் அடிப் படையில்தான் நாடகத்தின் பிற்பகுதி அமைந்திருக்கிறது. அதனைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டிருந்தேன், அதற்கு பாவேந்தரிடமிருந்து பதிலில்லே. ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் எழுதினேன். அதற்கும் பதில் இல்லை. மூன்றாவது முறையாக ஒரு கடிதம் எழுதினேன்.

“தங்கள் புரட்சிக் கவியிலுள்ள சில கருத்துக்களை ‘பில்ஹணன்’ நாடகத்தில் கையாளப்போகிறோம். அதற்குத் தங்களின் அன்பான அனுமதி தேவை. இந்த மூன்றாவது கடிதத்திற்கும் தங்களிடமிருந்து பதில் கிடைக்காவிட்டால் தாங்கள் அனுமதி யளித்ததாகவே கருதப்படும் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.”

என்று எழுதினேன். அதற்கும் பதில் இல்லை. சரி இனி நேரில் கண்டு சொல்லிக்கொள்ளலாம் என்ற துணிவோடு நாடகத்தை நடத்தினோம். 1944 மார்ச்சு 13ஆம் தேதி பில்ஹனன் அரங்கேறியது.

நிலவுக் காட்சி

பில்ஹணனுக்கென்று சில காட்சிகளைத் தயாரித்தோம். பில்ஹணனின் ஆசிரமம், யாமினியின் பூஜை அறை, சூரிய பகவானின் சிலை, கலைபயில் மண்டபம், நிலவுக்காட்சி, சிறைச் சாலை. நாடகத்திற்குப் புதிய ஆடையணிகளும் தயாராயின, ஒரு சிறந்த இலக்கிய நாடகத்தை எந்தெந்த வகையில் அழகு படுத்த முடியுமோ அந்த வகையிலெல்லாம் பில்ஹணனை அழகு செய்தோம். இந்நாடகத்தில் பில்ஹணனாக நான் நடித்தேன். கதாநாயகி யாமினியாக திரெளபதி நடித்தாள். பில்ஹனனில் அவளுடைய அருமையான நடிப்பினை இப்போதும் எண்ணிப் பார்க்கிறேன்; மறக்க முடியவில்லை! இன்னொருவர் அப்படி நடிக்க முடியுமா என்றே எண்ணத் தோன்றுகிறது. திரெளபதியின் இசைத் திறனும் அபாரமான நடிப்பாற்றலும் பில்ஹணன் நாடகத்தின் தரத்தை பன்மடங்கு உயர்த்தின என்பதில் ஐயமில்லே.

பில்ஹணனைப் பிறவிக் குருடனாக எண்ணியிருக்கிறாள் யாமினி. பாடம் நடந்து கொண்டிருக்கிறது. நேரம் போனதே இருவருக்கும் தெரியவில்லை. அன்று பெளர்ணமி; முழு நிலவு தோன்றுகிறது. கவிஞனின் உள்ளம் துள்ளுகிறது. கவிதை ஊற் றெடுக்கப் பாடுகிறான் பில்ஹணன். இந்தக் கட்டத்தில் புரட்சிக் கவிஞரின் பாடலை அப்படியே சேர்த்துக் கொண்டேன்.

தேன் சொட்டும் கவிதை

நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை!
கோலமுழு தும்காட்டி விட்டால் காதல்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ? நீதான்
சொக்கவெள்ளிப் பாற்குடமோ? அமுத ஊற்றோ?
காலைவந்த செம்பளிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ?

பாவேந்தரின் தேன் சொட்டும் உவமை நயம் செறிந்த இந்தக் கவிதையினை பியாகு ராகத்தில் பாடிவிட்டு, மதுரகவி பாஸ்கர தாசரின் “அமுத பூரணக் கலையின் மதி” என்னும் பாடலை அத்தோடு இணைத்துப் பாடி உச்சஸ் தாயையில் நிறுத்துவதும், முழு நிலவு தோன்றுவதும், இளவரசி யாமினி பிறவிக் குருடனை கவிஞன் நிலவை எப்படிப் பார்த்தான் என்று வியப்புணர்ச்சியை

வெளிப்படுத்தி நடிப்பதும் சபையோரை மெய்சிலிர்க்க வைக்கும். திரையைக் கிழித்து யாமினி கவிஞனைப் பார்க்கிறாள். அவனும் அவளைப் பார்க்கிறான். கவிஞன் கண்ணிழந்தவன் அல்லன் என்பதை உணர்கிறாள் யாமினி. அவள் நோய் கொண்டவள் அல்லள் என்பதைக் கவிஞனும் அறிகிறான் . இருவர் கண்களும் சந்திக்கின்றன. கவிஞன் மீண்டும் பாடுகிறான்.

மின்னற் குலத்தில் விளைந்ததோ! வான்
வில்லின் குலத்தில் பிறந்ததோ!

கன்னல் தமிழ்க்கவி வானரின் உளக்
கற்பனையே உருப் பெற்றதோ!
பொன்னின் உருக்கிற் பொலிந்ததோ! ஒரு

பூங்கொடியோ மலர்க்கூட்டமோ!
என்னவியப்பிது! வானிலே-இருந்

திட்டத்தோர் மாமதி மங்கையாய்
என்னெதிரே வந்து வாய்த்ததோ-புவிக்கு
ஏதிது போலொரு தண்ணாெளி?

அடடா! என்ன அருமையான கவிதை! இதைப் போன்ற இலக்கிய நயஞ்செறிந்த நாடகங்களை இனிப் பார்க்கப் போகிறோமா என்றே ஏக்கமுண்டாகிறது.

பில்ஹனனில் யாமினியின் தந்தை மன்னன் மதனனாக நடித்தார் தம்பி பகவதி. மன்னன், யாமினி, பில்ஹணன் மூவரும் வாதிடும் கட்டம் சபையோரிடையே சொல்லுக்குச் சொல் கை தட்டலைப் பெற்றது. அவ்வளவு உணர்ச்சிகரமான உரையாடல்களை எழுதியிருந்தார் ஏ. எஸ். ஏ. சாமி.

பில்ஹனனில் நகைச்சுவைப் பகுதி நாங்கள் எதிர்பார்த்த தைவிடச் சிறப்பாக அமைந்தது. மெய்க்கவியாக டி. என். சிவதானு தோன்றிச் சபையோரை வயிறு குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்தார்.

யாமினியின் கனவுக்காட்சிகள் திரைப்படக்காட்சிபோன்று மிக உயர்ந்த முறையில் அமைக்கப் பெற்றிருந்தன. துஷ்யந்தன் சகுந்தலை சந்திப்பு; ராமர் சீதை கன்னிமாடச் சந்திப்பு; அம்பிகாபதி அமராவதி காதல்; குலோத்துங்கன் கோபாவேசத்தோடு வந்து வாளை வீசுதல் ஆகிய காட்சிகளை யாமினியின் படுக்கை அறையில் மெளன நாடகங்களாக மெல்லிய திரையுள்ளே நடித்துக் காட்டச் செய்தோம். ஒவ்வொரு காட்சி மாறும்போதும் சபையோர் ஆரவாரத்தோடு கரகோஷம் செய்தனார்!

திரைப்படத் துறை வரவேற்றது

ஏ. எஸ். ஏ. சாமியின் உரையாடல்கள் நன்றாக இருப்பதாகவும், உடனே வந்து நாடகத்தைப் பார்க்க வேண்டுமென்றும் ஜூபிடர் பிக்சர்ஸ் சகோதரர் சோமுவுக்குக் கடிதம் எழுதினேன். அவரும் தந்தி கொடுத்துவிட்டு மறுநாளே வந்தார். நாடகத்தைப் பார்த்தார். சாமியைச் சந்தித்தார். ஆறு படங்களுக்கு வசனம் எழுத உடனே ஒப்பந்தம் செய்தார். பில்ஹணன் 15 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. நாடகம் முடிந்ததும் சென்னைக்குச் செல்லச் சித்தமானார் ஏ. எஸ். ஏ. சாமி. சாமியை அன்போடு ஆதரித்துத் திரையுலகில் முன்னுக்குக் கொண்டு வரவேண்டு மென்று கலைவாணருக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தனுப்பினேன். சென்னை சென்ற ஒரு வாரத்திற்குப்பின் சாமியிடமிருந்து கடிதம் வந்தது. கலைவாணர் தனக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்துவருவதாக எழுதியிருந்தார். திரைப் படத் துறையில் பணிபுரிய பல ஆண்டுகளாக முயன்று, பின் அம் முயற்சியையே கைவிட்டவர் ஏ. எஸ். ஏ. சாமி. இப்போது பில்ஹணன் நாடகத்தின் மூலம் அவரை இருகரம் கூப்பி வர வேற்றுக் கொண்டது திரைப்படத் துறை. ஈரோட்டை விட்டு சகோதரர் சாமி சென்னைக்குப் புறப்பட்டபோது அவரை மனதார வாழ்த்தி வழியனுப்பினேன்.

சம்பூர்ண இராமாயணமும் சாத்வீக மறியலும்

நாடகக் கலை மாநாடுவரை எங்களிடம் நட்பும் பாசமும் வைத்திருந்தார் பெரியார் ஈ. வே. ரா. அவர்கள். மாநாடு குழப்பம் எதுவுமின்றி நல்ல முறையில் நடந்தபின், அந்தப் பாசமும் பரிவும் சிறிது குறைவதுபோல் தோன்றியது. நான் அச்சகத்திற்கு அடிக்கடி செல்வேன். பெரியார் முன்போல் கலகலப்பாகப் பேசுவது இல்லை. எங்கள் மேல் ஏதோ சிறிது கோபமிருப்பதை நான் புரிந்துகொண்டேன். ஆனாலும் அதனைப் புலப்படுத்திக் கொள்ளாமல் வழக்கம் போல் அன்பாகவே பழகி வந்தேன்.

ஏறத்தாழ 11 மாதங்கள் ஈரோட்டில் நாடகங்கள் நடை பெற்றன. நாடக வளர்ச்சிக்குரிய வகையில் நாடகக் கலை அபிவிருத்தி மாநாடும் நடந்தது. சிவாஜி, காளமேகம், பில்ஹணன் ஆகிய மூன்று இலக்கியச் சிறப்பு வாய்ந்த புதிய நாடகங்கள் அரங்கேறின. அடுத்தபடியாகத் திருப்பூருக்குப் போகத் திட்டமிட்டோம். அதில் ஏதோ சிக்கல் ஏற்பட்டது. எனவே காரைக்குடி ஷண்முக விலாஸ் தியேட்டர் பேசி முடிவு செய்யப்பட்டது. ஈரோட்டில் 1944 ஏப்ரல் 1ஆம் தேதி சம்பூர்ண இராமாயணம் பட்டா பிஷேக நாடகமாக வைக்கப்பட்டது.

நாடகத்திற்கு முந்திய நாள் அதிர்ச்சி தரத்தக்க ஒரு செய்தி பரவலாகக் காதில் விழுந்தது. நாளை நடைபெறவிருக்கும் இராமாயணத்தை யாரோ மறியல் செய்யப்போகிறார்கள் என்று. நான் நம்பவில்லை. நன்கு விசாரித்தேன். செய்தி உண்மைதான் என்று தெரிந்தது. நாடக அரங்கின் நுழைவாயிலில் நின்று கொண்டு, “பகுத்தறிவுக்கு முரணான இந்தப் புராண இதிகாச நாடகங்களைப் பார்க்காதீர்கள்” என்று உள்ளே நுழைவோரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாக மறியல் நடத்தும் பெரியார் அவர்களின் தொண்டர்கள் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார்கள். காலமெல்லாம் நாங்கள் நடத்திய இராமாயணம், பாரதம், சிவ வீலா, கந்தலீலா, கிருஷ்ணலீலா, மயில்இராவணன் எல்லா நாடகங்களையும் பார்த்துவிட்டு, எங்களுக்குப் பாராட்டுகளும் நடத்திப் பெருமைப் படுத்திய பெரியார் அவர்கள் ஏணிப்படிச் செய்கிறார் என்பது புரியாமல் தவித்தோம்.

பெரியண்ணா இச்செய்தியை அறிந்ததும் நாடகத்தன்று காலை போலீஸ் பெரிய அதிகாரியைச் சந்தித்தார். பெரியார்.அவர்களின் தொண்டர்கள் மறியல் செய்வதைத் தாம் தடை செய்ய வில்லையென்றும், பொதுமக்களுக்குத் தொந்தரவு ஏற்படாதவகையில் அமைதியாக மறியல் நடைபெறும்படி பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். போலீஸ் அதிகாரி தாம் வேண்டிய நடவடிக்கையெடுத்துக் கொண்டு அமைதி காப்பதாக வாக்களித்தார்.

எல்லோம் வருந்தினர்

நான் பெரியார் அவர்களைச்சந்திக்க முயன்றேன். அவர் அச்சகத்திலும் இல்லை; வீட்டிலும் இல்லை. எங்கு போய்ச் சந்திப்பது? பெரியாரின் தமையனார் ஈ. வே. கிருஷ்ணசாமி நாயக்கர் அவர்களைச் சந்தித்து விபரங்களைச் சொன்னேன். அவர் மிகவும் வருத்தப்பட்டார். பெரியார் அவர்களின் கடவுள் பற்றிய கொள்கையில் கருத்து வேறுபாடுடைய நண்பர்கள் ஈரோட்டில் ஏராளமாக இருந்தனார். அவர்களெல்லாம் செய்தியைக் கேட்டு வருந்தினார்கள். இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்ற கிளர்ச்சி சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த காலம் அது. அந்தக் கொள்கையிலே நாங்கள் முற்றிலும் மாறுபட்டு நின்றோம்.

சமுதாய சீர்திருத்தக் கொள்கைகளிலே பெரியார் அவர்களோடு எங்களுக்கு நெருங்கிய உடன்பாடு இருந்தது. அவரது பெருமைக்குரிய தொண்டினை நாங்கள் சிறிதும் குறைத்து மதிப்பிடவில்லை. பெரியார் அவர்கள் என்றும் எங்கள் மதிப்புக்கு உரியவர்தாம். ஆனாலும் எங்கள் அடிப்படையான சில கொள்கைகளை இதற்காக இழக்க முடியாதல்லவா?

மாலை 6 மணி ஆயிற்று. அறிஞர் அண்ணா ஈரோட்டில் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அவரைச் சந்திக்க இயல வில்லை. நாடக அரங்கின் முன் போலீசாரின் நடமாட்டம் அதிகரித்தது. ஆங்காங்கு சிலர் கூட்டங் கூட்டமாக நின்றார்கள். ஏதோ நடைப்பெறப் போவது போன்ற சூழ்நிலை காணப்படது. மணி 8 அடித்தது. டிக்கட் கொடுக்கும் அறை திறக்கப்பட்டது. மக்கள் ஆண்களும் பெண்களுமாக சாரி சாரியாக வந்து டிக்கெட் வாங்கினார்கள். வாயில் திறக்கப்பட்டது. பெரியண்ணாவும், கொட்டகைச் சொந்தக்காரர் முதலாளி சாய்புவும் சாய்மான நாற்காலிகளில் நுழை வாயிலருகே அமர்ந்திருந்தார்கள்.

சிவதானு பெற்ற பட்டம்

சரியாக 9.30க்கு நாடகம் தொடங்கப் பெற்றது. உள்ளிலும் வெளியிலுமாக மக்கள் குழுமியிருந்தனார். மரியல் எதுவும் நடை பெறவில்லை. எவ்விதக் குழப்பமும் இல்லை. நாடகம் அமைதியாக நடந்தது. அதற்கு முன் நடந்த எல்லா இராமாயண நாடகங்களையும் விட அன்று மிகச் சிறப்பாக் நடந்தது. தமிழ் நாடகக்கலை அபிவிருத்தி மாநாட்டினைப் பொறுப்பேற்று முன்னின்று நடத்திய எங்கள் நகைச்சுவை நடிகர் சிவதானுவை நாடக மாநாட்டின் வரவேற்புக் குழுவினரும், நகரப் பொதுமக்களும் பாராட்ட விரும்பினார். அதற்கு முன் கூட்டியே எங்கள் அனுமதியையும் பெற்றனார். ஈரோடு நகரப் பொது மக்கள் சார்பில் நகரசபைத் தலைவர்.திரு ஆர். கே. வேங்கடசாமிநாயக்கர் அவர்கள்.சிவதாணு வின் நாடகக்கலை ஆர்வத்தினையும் நகைச்சுவைத் திறனையும் பாராட்டி நகைச்சுவைச் செல்வன் என்ற சிறப்புப் பட்டம் பொறிக்கப் பெற்ற பொற்பதக்கத்தை வழங்கினார்.

அண்ணா தலையீட்டால் அமைதி நிலவியது

மறுநாள் விடிந்ததும் அறிஞர் அண்ணா அவர்கள் தலையீட்டினல் முன்னாள் இரவு மறியல் நடைபெறவில்லை என்பதை அறிந்தேன். நாடகக்கலை மாநாட்டன்று தலைவர் ஆர். கே. சண்முகம் அவர்களுக்கு கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடை பெறாமல் தடுத்ததும் இப்போது இராமாயணம் நாடகத்தை மறியல் செய்ய இருந்தவர்களுக்கு அறிவுரை கூறித் தடுத்து நிறுத்தியதும் அறிஞர் அண்ணா அவர்களிடம் நான் வைத்திருந்த மதிப்பைப் பன்மடங்கு உயர்த்தின. அவருக்கு நன்றி கூறி நீண்ட கடிதம் எழுதினேன்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னும் பெரியார் அவர்கள்மீது என்னை பொறுத்த வரையில் மனத்தாங்கல் எதுவும் இல்லை. ஏப்ரல் 20 ஆம் தேதி கொட்டகை முதலாளி கான்சாகிப் சேக்தாவுத் அவர்கள் கம்பெனிக்கு ஒரு பெரிய விருந்து நடத்தினார். நகரப்பிரமுகர்கள் எல்லோரும் கலந்து கொண்டார்கள். பெரியார் அவர்கள் வந்து கலந்துகொள்ளாதது எனக்குப் பெருங்குறையாக இருந்தது, இருந்தாலும் விருந்து முடிந்ததும் நான் மட்டும் பெரியார் அவர்கள் இல்லம் சென்று வழக்கம்போல் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டேன். மறுநாள் புறப்பட்டு காரைக்குடி வந்து சேர்ந்தோம்.
-------------

61. பாகவதரின் கலைக் குடும்பம்


காரைக்குடி வைரம் அருணசலம் செட்டியாரின் தியேட்டரில் 5.5.44-இல் சிவலீலா தொடங்கியது. தியேட்டரில் நாடகம் நடத்துவதற்கு லைசென்ஸ் கொடுக்க நகர சுகாதார அதிகாரி ஏதோ தகராறு செய்தார். அவரைச் சரிபடுத்தி லைசென்ஸ் வாங்குவதற்குள் 14 நாட்கள் ஓடிவிட்டன. ஏப்ரல் 21ம் தேதி காரைக்குடிக்கு வந்தோம். மே 5-ம் தேதிதான் நாடகத்திகுரிய லைசென்ஸ் கிடைத்தது.

சிவலீலா தொடர்ந்து நல்ல வசூலில் நடைபெற்றது. சூல மங்கலம் பாகவதரின் பிள்ளைகளான டாக்டர் மீனாட்சி சுந்தரமும் சங்கீத பூஷணம் ராதாகிருஷ்ணனும் திருமயத்தில் இருந்தார்கள். டாக்டர் மீனாட்சி சுந்தரம் சிறந்த ரசிகர். அவருடைய மனைவி கற்பகம் அம்மையார் அவரைவிடப் பிரமாத ரசிகை. கணவனும் மனைவியும் குழந்தைகளோடு இரண்டு நாளைக்கு ஒரு முறை சிவ லீலா பார்க்க வருவார்கள். வரும்போதெல்லாம் எங்களுக்குச் சாப்பிட ஏதாவது கொண்டு வருவார்கள். பலகாரங்களைச் சுவை யோடு தயாரிப்பதில் கற்பகம்மாளுக்கு நிகர் அவரேதான். கொண்டுவரும் காபிக்காகவும், கோதுமை அல்வாவுக்காகவும் எங்கள் சிவதாணுவும், பிரண்டு ராமசாமியும் காத்துக் கிடப்பார் கள். கற்பகம்மாளின் அன்புக்கும் ஆர்வத்துக்கும் ஈடு இணை சொல்ல முடியாது. நல்ல சங்கீதக் குடும்பம் அது. டாக்டரும் அவர் துணைவியும் பேசிக் கொள்வதைக் கேட்பதற்கே சுவையாக இருக்கும் டாக்டர் மீனாட்சி சுந்தரம் ஏதாவது சொல்லுவார்; உடனே கற்பகம் அம்மையார் “பாத்தேளோ! இப்படித்தான் இவர் சதா ஏதானும் உளறிண்டிருப்பார். இவாளுக்கெல்லாம் என்ன தெரியும்? எல்லாம் பெரியவாள் போட்ட பிச்சை, ஏதோ அந்தக் குடும்பத்தில் வந்து, அவர் புள்ளையாப் பொறந்த தனாலே இவாள்ளாம் மனுஷா மாதிரி நடமாடறா!” என்று மாமனார் சூலமங்கலம் பாகவதரை எப்போதும் உயர்த்தியே பேசுவார். மாமனரிடம் இந்த அளவுக்கு அன்பும் மரியாதையும் காட்டும் ஒரு மருகியை நான் இதுவரை கண்டதில்லை. பாகவதர் குடும்பம் நாடகத்திற்கு வந்து விட்டால் ஆயிரம் ரசிகர்கள் வந்தது போல, எங்களுக்கெல்லாம் ஒரே குதுரகலமாயிருக்கும்.

அக்குடும்பத்தாரின் ஒவ்வொரு செயலிலும் கலையம்சம் நிறைந்திருக்கும். குலமங்கலம் பாகவதர் அவர்களுடைய ஒவ்வொரு பேச்சிலும் நகைச்சுவை ததும்பி நிற்கும். அனுபவப் பேருண்மைகளை அனாயசமாகக் கொட்டுவார். இத்தகைய புலமையும் அன்பும் நிறைந்த பெரியவர் 1943-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி இறைவன் திருவடியில் அமைதி பெற்றதை அறிந்தபோது நாங்கள் அனைவரும் பெரும் துக்கத்தில் ஆழ்ந்தோம். அவருடைய திருப்பெயரால் குலமங்கலத்தில் ஒரு சங்கீதமகால் நிறுவ அப்போது நிதி சேகரித்துக் கொண்டிருந்தார் கள். அந்த நிதிக்கு நாங்களும் ஒருநாள் நாடக வசூலை காணிக்கையாக அளித்தோம்.

22வது நாள் நடந்த சிவ லீலாவுக்கு குமரராஜா முத்தையா செட்டியார் அவர்கள் வந்திருந்தார். மூன்று பெரிய வெள்ளிக் கோப்பைகளைப் பரிசாக வழங்கிப் பாராட்டினார். மொத்தம் 37 நாட்கள் சிவலீலா நடைபெற்றது. 37 வது சிவலீலா நாடகம் சூலமங்கலம் பாகவதர் நிதிக்காக நடத்தப் பெற்றது. அன்று ஆயிரம் ரூபாய்களுக்கு மேல் வசூலாயிற்று. அந்தத் தொகையை அப்படியே டாக்டர் மீனாட்சி சுந்தரத்திடம் கொடுத்தோம். 1937-இல் ஐம்பதும் நூறும் வசூலான காரைக்குடியில் இப்போது ஆயிரக்கணக்கில் வசூலாயிற்று.

தனி வீட்டில் குடியிருந்தேன்

கம்பெனிக்கு ஒரு பெரிய வீடும், அதற்கு ஒரு பர்லாங் துரத்தில் திரெளபதி தம்பதிகள், அக்கா மற்றும் பெண்களுக்காக ஒரு வீடும் பார்த்துக் குடியிருந்தார்கள். ஒத்திகை முதலியவை பார்ப்பதற்கு வசதியாக நானும் எனக்குத் துணையாக எங்கள் குழுவின் நீண்ட காலப் பணியாளர் அனந்தன் நாயரும் குடியிருந்தோம். அனந்தன் கம்பெனியில் ஆரம்பகால முதலே இருந்து வருபவர். இடைக்காலத்தில் ஆடை அணிவிப்போராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். என்னிடம் மிகுந்த அன்பு கொண்டவர். இடையே சில ஆண்டுகள் நோயினல் பீடிக்கப்பட்டு காசி-கயா முதலிய வட இந்தியத் தலங்களுக்கெல்லாம் சென்று சன்னியாசியாகவே காலம் கழித்தவர். மதுரையில் 108-வதுநாள் சிவலீலா நடைபெற்ற போது ஏறத்தாழ ஆயிரம் பரதேசிகளுக்கு அன்னம் பாலித்தோம். அப்போது பரதேசிகளுள் ஒருவராக வந்த அனந்தனை நாங்கள் அடையாளம் கண்டு பிடித்தோம். சந்நியாசிக் கோலத்தைக் களைத்து விட்டுக் கம்பெனியிலேயே இருக்கும்படி கேட்டுக் கொண்டோம். அதன் பிறகு அனந்தன் எனக்கு அன்புப் பணியாளராகக் கம்பெனியிலேயே இருந்தார்.

கம்பெனிப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் முறைப்படி பரத நாட்டியம் கற்றுத்தர பிரபல நட்டுவனார் திரு முத்துக்குமா சாமிப்பிள்ளையைக் கம்பெனியில் சேர்த்துக் கொண்டோம். அவர் அதிகாலையிலேயே நீராடி பூஜை புனஸ்காரங்களெல்லாம் செய்யக் கூடியவர். நானிருந்த தனிவீட்டிலேயே அவருக்கு ஒர் அறை ஒதுக்கிக் கொடுத்தேன். தினமும் காலை 10 மணிமுதல் 12மணி வரை நானிருந்த இடத்திலேயே நடனப் பயிற்சி நடைபெறும். கம்பெனிப் பிள்ளைகளில் சிறப்பாக ஜெயராமன், செளந்தராஜன், சங்கரன் ஆகிய மூவரும் மற்றும் சிலரும் இவரிடம் மிகுந்த சிரத்தையோடு நடனம் கற்றுக் கொண்டார்கள். அவர்கள் மூவரும் இப்போது பரதநாட்டிய ஆசிரியர்களாக நல்லமுறையில் பணியாற்றி வருகிறார்கள்.

ஈரோட்டில் வந்த இளஞ் சிறுமியர்

ஈரோட்டில் சிவலீலா நடை பெற்ற போது, எங்கள் கம்பெனியின் பழைய பலசாலி கோபாலபிள்ளை தம் சொந்த ஊராகிய கோட்டயத்திலிருந்து இரு சிறுமியரை அவர்கள் தந்தையோடு அழைத்து வந்தார். இருவரில் மூத்தவள் சீதாவுக்குப் பதினான்கு வயதிருக்கும். நன்றாகப் பாடினாள். அவள் தங்கை இரத்தினம் சுமாராகப் பாடினாள். இருவருக்கும் குரல் நன்றாயிருந்தது. எனவே, கம்பெனியில் சேர்த்துக் கொண்டோம். இரு சிறுமியரும் சின்னஞ்சிறு வேடங்களில் நடித்தார்கள். சீதா இராமாயணத்தில் பால சீதையாக நன்றாக நடித்தாள். பில்ஹணன் நாடகம் தயா ரான போது யாமினியின் தோழி மஞ்சுளா வேடத்தைச் சீதாவுக்குக் கொடுத்தோம். அதனையும் அழகாகச் செய்தாள். எதிர் காலத்தில் சிறந்த நடிகையாக வருவதற்குரிய அறிகுறிகள் அவளிடமிருந்தன. இவ்விரு சகோதரியரும் முத்துக் குமாரசாமிப் பிள்ளையிடம் நடனப்பயிற்சி பெற்றனார்.

கடையம் சகோதரிகள்

இவர்களைப் போலவே மற்றும் இரு சகோதரியர் காரைக்குடியில் சேர்ந்தார்கள். அவர்களுக்கும் இதே வயதுதான் இருக்கும். இருவருக்கும் நல்ல குரல். மூத்தவள் பெயர் ராஜம். இளையவள் சந்திரா. இவ்விருவரும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் துணைவியார் திருமதி செல்லம்மாள் பாரதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த கடையம் என்ற சிற்றுார். எனவே ராஜம் சந்திரா சகோதரியரைக் கடையம் சகோதரிகள் என்றே நாங்கள் குறிப்பிட்டு வந்தோம். இவ்விளம் சிறுமியரும் நட்டுவனார் முத்துக்குமாரசாமிப் பிள்ளையிடம் மிகுந்த ஆர்வத்தோடு நடனப் பயிற்சி பெற்றார்கள்.

வள்ளல் டாக்டர் அழகப்பச் செட்டியார்

காரைக்குடியில் தமிழ்க்கடல் ராய சொக்கலிங்கம்அவர்கள். தேசபக்தர் சா. கணேசன் அவர்கள், பட அதிபர் ஏ. வி.மெய்யப்பன் அவர்கள் ஆகிய எல்லோரும் ஒளவையார் நாடகம் பார்க்க ஆர்வத்தோடு வந்தார்கள். ஒளவையார் தொடர்ந்து ஒருமாதத்திற்கு மேல் நடைபெற்றது. 26-8-44இல் நடந்த ஒளவையார் நாடகத்திற்குக் கோட்டையூர் கொடை வள்ளல் டாக்டர் அழகப்ப செட்டியார் அவர்கள் தலைமை தாங்கி அருமையாகப் பேசினார். பெரிய வெள்ளிக் கோப்பையொன்று பரிசளித்தார். தமிழ் வளர்ச்சிக்குரிய புதிய நாடகம் ஏதாவது தயாரிக்கும் போது, அதற்குரிய காட்சித் தயாரிப்புச் செலவு முழுவதையும் தாமே ஏற்றுக் கொள்வதாகத் தமது செயலாளரிடம் சொல்லி யனுப்பினார். எங்களுக் கெல்லாம் நிரம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒளவையாருக்கு ஆச்சியர் வருகை நாளாக ஆக அதிகமாகிக் கொண்டே வந்தது. தாய்மார்களுக்காக ஆண்கள் பகுதியிலிருந்தும் கொஞ்சம் இடம் ஒதுக்கினோம்.

கலைவாணர் வருகையும் கலையுணர்வும்

கந்தலீலா நாடகம் ஒருமாத காலம் தொடர்ந்து நடைபெற்றது. திடீரென்று ஒரு நாள் கலைவாணரும், ஏ. எஸ். ஏ. சாமியும் காரில் வந்து நான் தங்கியிருந்த தனி வீட்டின் முன் இறங்கினார்கள். நான் அவர்களை வரவேற்றேன். கலைவாணர் உள்ளே வந்து என்னோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். சாமி, பெரியண்ணாவைப் பார்த்து வரச்சென்றார். கே. ஆர். இராமசாமியைப்பற்றிக் கேட்டேன். “இராமசாமி இனி நாடகத்துக்கு வருவது சந்தேகம். திரைப்படத் துறையில் அவனுக்கு நல்ல சந்தர்ப்பம் இருக்கிறது” என்று கூறினார் கலைவாணர். முத்துக்குமாரசாமி நட்டுவனரை நான் அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன், “ஓ! இவரைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன்.” என்றார் கலைவாணர். நட்டுவனார் மிகுந்த ஆர்வத்தோடு ‘சிறிது அபிநயம் பார்க்கிறீர்களா?’ என்று சொல்லிவிட்டு கலைவாணரின் அனுமதிக்காகக் காத்திராமல் உட்கார்ந்த நிலையிலேயே பாடி அபிநயம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார். கலைவாணர் அவரைத் தடுத்து நிறுத்தாமல் முழுதும் கேட்டார். பாட்டு முடிந்ததும் தன் சட்டைப் பையிலிருந்த 10 ரூபாய் நோட்டை யெடுத்து ‘மன்னிக்க வேண்டும்; இப்போது என் கையிலிருப்பது இதுதான்; கட்டாயம் நீங்கள் பெற்றுக் கொள்ளவேண்டும்’ என்று நட்டுவனார் கையில் கொடுத்தார். நட்டுவனார் இயன்றவரையில் நோட்டை வாங்க மறுத்தார். கலைவாணர் விடவில்லை, “தங்களைப் போன்ற கலைஞர்களுக்கு நான் எவ்வளவோ செய்ய வேண்டும். தற்சமயம் இதை வாங்கிக் கொள்ளுங்கள். சென்னைக்கு வரும்போது அவசியம் என்னை வந்துபாருங்கள்” என்றார். கலைவாணரின் அந்த உணர்வைக் கண்டு என் மெய்சிலிர்த்தது. பின்னும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுச் சென்றார் கலைவாணர். நாடகம் பார்க்க வருமாறு அழைத்தேன், “வேறு காரியமாக வந்தேன். இருந்தால் வருகிறேன்” என்று புறப்பட்டு விட்டார்.

சென்னைப்பயணம்

பில்ஹணன் நாடக நூலை அச்சிட விரும்பினோம். சென்னையில் அச்சிட வேண்டுமென்று ஆசைப்பட்டார் ஆசிரியர் சாமி. எங்கள் சார்பில் அதன் முழுப்பொறுப்பையும் தாம் ஏற்றுக்கொள்வதாக வாக்களித்தார். பெரியண்ணாவின் ஒப்புதலோடு சென்னையில் அதற்கான வேலைகளைத் தொடங்கினார். ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் அதற்குப் பொறுத்தமான நிழற்படங்களை வரைய ஏற்பாடு செய்தார். நாடகத்தை மூன்று அங்கங்களாகப் பிரித்து, மொட்டு, மலர், மணம் என்று மூன்று அங்கங்களுக்கும் பெயர்சூட்டி ஒவ்வொன்றுக்கும் தனியேஒவியங்கள் தீட்டச் செய்தார். சென்னை கமர்ஷியல் பிரிண்டிங் அச்சகத்தில் பில்ஹணன் அச்சாகிக் கொண் டிருந்தது, ஈரோட்டில் நடந்த தமிழ் மாகாண நாடகக்கலை அபிவிருத்தி மாநாட்டு நடவடிக்கைகளையும் அப்படியே அச்சிட விரும்பினார். மாநாட்டின் செயலாளர் சிவதாணு. அந்நூல் காரைக் குடி குமரன் பவர் பிரஸ்ஸிலேயே அச்சிடப்பெற்றது. மேலட்டையை மட்டும் சென்னையிலேயே அச்சிட ஏற்பாடு செய்தோம். இருநூல்களுக்குமான வரைபடங்கள் சென்னையிலிருந்து வந்தன. இவை சம்பந்தமான வேலைகளைக் கவனிக்க நான் சென்னைக்குப் பயணமானேன்.

சென்னையில் கலைவாணரைச் சந்தித்தேன். ஜூபிடர் அலுவலகத்தில் ஏ. எஸ். ஏ. சாமியைப் பார்த்தேன். பில்ஹணன் நாடக நூலின் மேலட்டை மிக அழகாக இருந்தது. கண்ணைக் கவரும் முறையில் அச்சிடப் பெற்றிருந்தது. நடிப்பிசைப் புலவரையும் பார்த்தேன். நான்கு நாட்கள் அங்கு தங்கினேன். நாடகக் கலை மாநாட்டு நூலின் மேலட்டையையும் பில்ஹணன் நாடக நூலையும் விரைவாக அனுப்பச் சொல்லி விட்டுக் காரைக்குடிக்கு வந்து சேர்ந்தேன்.

நாடகக்கலை மாநாட்டு நூல்

நாடகக்கலை மாநாட்டு நூல் அழகாக அமைந்தது. அப்போது தமிழ் நாட்டிலிருந்து வந்த அத்தனை நாடக சபையினரும் விளம்பரம் கொடுத்து ஆதரித்தனார். மாநாட்டுக்கு,

இருப்புத் தொகையையும் விளம்பரத் தொகையையும் வைத்துக் கொண்டு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தமிழ் மாகாண நாடகக்கலை அபிவிருத்தி மாநாடு என்னும் நூலை மிகச் சிறப்பாக வெளியிட்டார் சிவதாணு. காரைக்குடியில் பில்ஹணன் நாடகம் நடை பெற்றபோது மாநாட்டு நூலும், பில்ஹணன் நாடக நூலும் வெளியிடப் பெற்றன. பில்ஹணன் காரைக்குடியில் ஒரு மாத காலம் நடைபெற்றதால் நாடக அரங்கிலேயே முன்னுாற்றுக்கும் மேற்பட்ட நாடக நூல் விற்பனை ஆயிற்று.

அடுத்தபடியாக திருச்சிராப்பள்ளியில் நாடகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 1-11-44 இல் மனோகராவை பட்டா பிஷேக நாடகமாக நடத்தி முடித்துக் கொண்டு திருச்சிக்குப் பயணமானோம்.
-------------

62. தமிழ் நாடகப் பரிசுத் திட்டம்


நவம்பர் 4 ஆம் நாள் திருச்சி சேர்ந்தோம். நாடகம் நடை பெறும் நகர சபைத் தியேட்டரில் தங்கினோம். கம்பெனிக்கு வீடு தேடியலைந்தோம். எங்கும் கிடைக்கவில்லை. பெண்களுக்கு மட்டும் தென்னுரில் ஒரு வீடு கிடைத்தது. நாங்கள் எல்லோரும் தியேட்டரிலேயே குடியிருக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. சமையல்மட்டும் பக்கத்திலுள்ள ஒருசிறிய வீட்டில் செய்து கொட்டகையில் கொண்டு வந்து பரிமாறினார்கள். இதனால் நாடகத்தைத் தொடங்கவும் தாமதம் ஏற்பட்டது. கரூர் வெண்ணெய் மலை செட்டியாருக்குத் தென்னுாரில் பெரிய வீடு இருந்தது. அவர் தேவகோட்டையில் இருந்தார். அவரைப் பார்த்துவர தம்பி பகவதி தேவக்கோட்டை போய்த் திரும்பினார். செட்டியார் ஊரில் இல்லை.வேறு வழியின்றிக் கொட்டகையிலேயே தங்கியிருந்தோம்.

17.11.44இல் திருச்சியில் சிவலீலா தொடங்கியது. 1939 இல் திருச்சியில்தான் சிவலீலாவை அரங்கேற்றினோம். அப்போது வருவாயில்லை. இப்போது அதேதிருச்சியில், அதே நாடக அரங்கில் நான்காண்டுகளுக்குப் பின் சிவலீலாவை அமோகமாக வரவேற்றார்கள். ஞாயிறு புதன்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கும்,மற்ற நாட்களில் இரவு 9-30 மணிக்குமாக நாடகம் தொடர்ந்து 60 நாட்கள் நடைபெற்றது. வைரவிழா கொண்டாடினோம். தஞ்சை நகரசபைத் தலைவர் திரு ஏ. ஒய். அருளானந்தசாமி காடார் சிவ லீலா வைர விழாவுக்குத் தலைமை வகித்துப் பாராட்டினார்.

தமிழ் நாடகப் பரிசு

சிறுகதைப் போட்டிப்பரிசு; தொடர்கதைப் போட்டிப்பரிசு; கட்டுரைப்பரிசு என்றெல்லாம் பத்திரிகைகள் நடத்துகின்றனவே நாடகப்பரிசு என்று ஏன் ஒருவரும் நடத்தவில்லை? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இரண்டு மூன்று நாட்கள் இதைப் பற்றி நன்கு சிந்தித்தேன். ஏன்?நாமே ஒரு போட்டி நடத்தினுலென்ன? என்று தோன்றியது. பெரியண்ணா சின்னண்ணா இருவரிடமும் கலந்து யோசித்தேன். 1000 ரூபாய்கள் பரிசுக்காக ஒதுக்கலா மென்று பெரியண்ணா கூறினார். மறுநாளே அதற்கான ஒரு பெரியதிட்டம் வகுத்தோம். பரிசுக்குரிய நாடகங்களைத் தேர்ந் தெடுப்பதற்கு நீதிபதிகளாக யாரைப்போடலாம் என்றவிவாதம் எழுந்தது. இந்தப் பிரச்சினைகளைப்பற்றி திருச்சியிலுள்ள எழுத் தாள நண்பர்கள் சிலருடன் கலந்து ஆலோசித்தோம். எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு மனப்பட்ட கருத்து உருவாகவில்லை. ஒருவருக்குப் பிடித்த நீதிபதி மற்றொரு எழுத்தாளருக்குப் பிடிக்க வில்லை. எங்களுடைய நடுநிலை உணர்வில் எனக்கு நம்பிக்கை யிருந்தது. எல்லோரிடமும் நன்கு விவாதித்த பின் கடைசியாக நாங்களே நீதிபதிகளாக இருந்து நாடகங்களைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தோம். 1-12-44ல் தமிழ் நாடகப்பரிசு என்ற துண்டுப் பிரசுரத்தின் மூலம் எங்கள் திட்டத்தைப் பத்திரிகைகளுக்கு அறி வித்தோம். போட்டிப் பரிசு என்னும் சொல்லை இந்தத் திட்டத்தில் பயன்படுத்த நாங்கள் விரும்பவில்லை. அதனால்தான் ‘தமிழ் நாடகப் பரிசு’ என்று அறிவித்தோம். நாங்கள் பத்திரிகைகளுக்கு அனுப்பிய பிரசுரம் இதுதான்.

தமிழ் நாடகப் பரிசு
ரூ. 1000
தமிழ் நாடகக் கலை வளர்ச்சியில் நாட்டங் கொண்ட எழுத்தாளர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

1. தமிழ் நாட்டின் முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு தமிழர்களின் இன்றைய சமூக வாழ்க்கையையோ, பழந்தமிழ் மன்னார்களின் சரித்திரத்தையோ அடிப்படையாக வைத்துக் கற்பனையாக எழுதவேண்டும்.

2. மொழிப்பெயர்ப்போ, தழுவலோ கூடாது.

3. மூன்று மணி நேரத்தில் மேடையில் நடிப்பதற்கேற்ற முறையில் 25 காட்சிகளுக்கு மேற்போகாமல் இருக்க வேண்டும்.

4. நாடகத்துடன் கதைச் சுருக்கமொன்றும், காட்சி விபரக் குறிப்பொன்றும் இணைக்கப்பட வேண்டும்.

5. 1945 ௵ ஜூன் மாதம் 1௳ க்குள் எமக்குக் கிடைக்கும் படி அனுப்பப்பட வேண்டும்.

6. எல்லாவற்றிலும் சிறந்ததென்று கருதப்படும் நாடகத்திற்கு முதற்பரிசாக ரூ. 600ம், இரண்டாவதாகக் கருதப் படும் நாடகத்திற்கு ரூ400ம் அளிக்கப்படும்.

7. பரிசுக்குரிய நாடகங்களைத் தேர்ந்தெடுக்கும் சகல பொறுப்பும் எம்மைச் சேர்ந்தது.

8. பரிசு பெறும் நாடகங்களின் சகல உரிமைகளும் எம்மைச் சேர்ந்தது.

9. பரிசு பெறும் நாடகங்களில் எந்தவிதத் திருத்தமும் செய்து நடிக்க எமக்கு உரிமையுண்டு.

10. பரிசு பெறாதவைகளில், நடிப்பதற்கேற்றவை என்று கருதப்படும் நாடகங்களை, ஆசிரியர் அனுமதியின் மேல் பரிசளித்து ஏற்றுக் கொள்ளப்படும்.

11. 1945 ௵ செப்டம்பர் மாதம் 1.ந்தேதி பரிசின் முடிவு அறிவிக்கப்படும்.

டி. கே. எஸ். சகோதரர்கள்
1- 12-44. திருச்சி.

பத்திரிகைகளின் பாராட்டு
எங்களுடைய இந்த ஆத்மார்த்தமான முயற்சியினை வர வேற்றும், பாராட்டியும், தலையங்கம் தீட்டியும் உற்சாகப் படுத்திய பத்திரிகைகள் பல, அவற்றில் எனக்குக் கிடைத்தவை.


பத்திரிக்கை மூலம் இவ்வாறு கிடைத்த பாராட்டைவிட நூற்றுக் கணக்கான நாடக ரசிகர்கள் எங்களுடைய இந்த முயற்சிகளைப் பாராட்டி நாங்கள் இதில் வெற்றி பெற வேண்டுமென நல்லாசி கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.

தமிழ் நாடகப் பரிசு சம்பந்தமான இந்தப் பிரசுரங்களை, எங்களுக்கு அறிமுகமான தனிப்பட்ட எழுத்தாளர்கள் பலருக்கும் அனுப்பியிருந்தோம். பத்திரிக்கைகளிலே வந்த செய்திகளைப் பார்த்து, எங்களுக்கு எழுதிக் கேட்ட எழுத்தாளர்கள் பலருக்கும் பிரசுரங்களை அனுப்பி வைத்தோம். இந்தத் திட்டத்தில் புராண இதிகாச நாடகங்கள் வேண்டுமென்று நாங்கள் கேட்கவில்லை. சமூக நாடகங்களையும் சரித்திர நாடகங்களையும்தான் கேட்டிருந்தோம். ஈரோட்டில் நாடகக்கலை அபிவிருத்தி மாநாடு கூட்டிய எங்கள் நோக்கத்தில் சூழ்ச்சியோ தந்திரமோ எதுவும் இல்லையென்பதை இதன் மூலம் தெளிவுப்படுத்தி இருந்தோம். புதிய நாடகக்தை உருவாக்கப் போதுமான அவகாசம் கொடுத்திருந்தோம். ஆனால் முதல் நாடகம் 8- 1-45ல் எங்களுக்குக் கிடைத்தது, உற்சாகமளிப்பதாக இருந்தது. தொடர்ந்து வாரத்திற்கு இரண்டொரு நாடகங்கள் வந்து கொண்டேயிருந்தன. பிரசுரத்தில் குறித்தபடி 1. 6. 45 வரை காத்திருந்தோம். அதற்குப் பின்னார் நானும் சின்னண்ணாவும் தனித் தனியாகப் படித்துக் குறிப்பெடுத்தோம். மொத்தம் வந்த 59 நாடகங்களில் 10 நாடகங்களை முதலில் தேர்ந்தெடுத்தோம். அவற்றை மீண்டும் படித்தோம்.

பரிசுக்குரிய நாடகங்கள்

இறுதியாகப் பரிசுக்குரிய இரு நாடகங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டன. குறித்தபடி 1. 9. 45இல் எங்கள் முடிவினைப் பிரசுரமாக வெளியிட்டுப் பத்திரிக்கைகளும் போட்டியில் கலந்து கொண்ட எழுத்தாளர்களுக்கும் அறிவித்தோம். ஒரு தினசரிப் பத்திரிகை யிலும், வார இதழிலும், எங்கள் முடிவை விளம்பரமாகவும் கொடுத்தோம். நடுநிலையுணர்வோடு நாங்கள் அளித்த தீர்ப்பு இது.

தமிழ் நாடகப் பரிசு ரூ 1000

முடிவு விவரம்
இப்பரிசுத் திட்டத்தில் கலந்துகொண்டு நாடக மெழுத முன் வந்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் எங்கள் அன்பு நிறைந்த வணக்கங்கள்.

முதற் பரிசு ரூ. 600 இரண்டாவது பரிசு ரூ. 400
அவள் விபசாரியா? இராஜராஜசோழன்
சமூக நாடகம் சரித்திர நாடகம்
ல. சேதுராமன், அரவங்குறிச்சி அரு. இராமநாதன், கண்டனூர்

நடிப்பதற்கேற்றவை யென்று கருதி ஆசிரியரின் அனுமதி பெற்ற நாடகங்கள்.

புயல் (சமூக நாட்கம்) வீரப்பெண் (சரித்திரநாடகம்)
‘அகிலன்’ பி. எக்ஸ். ரங்கசாமி பி. ஏ.
பாளையங்கோட்டை
இப்பரிசுத் திட்டம் 1. 12. 44ல் வெளியிடப்பட்டது.

290 எழுத்தாளர்களுக்குத் தனிப்பட்ட முறையில் அழைப்புகள் அனுப்பப்பட்டன.

குறித்தபடி 1- 6. 45 வரை வந்த நாடகங்களின் மொத்த எண்ணிக்கை-59.

பரிசுத் தொகை 1- 9. 45ல் அனுப்பி வைக்கப்பட்டது.

இதர நாடகங்கள், குறித்த விலாசப்படி திருப்பியனுப்பி வைக்கப்படும்.

எங்களுடைய இம்முயற்சியை வரவேற்று ஆசி கூறிய அன்பர்களுக்கும் குறிப்புகள் வரைந்த பத்திரிக்கைகளுக்கும் இதய பூர்வமான நன்றி.

டி. கே. எஸ். சகோதரர்கள்
உரிமையாளர்கள் ஸ்ரீபாலஷண்முகானந்தசபா

1. 9. 45. முகாம். திருச்சி
1945 இல் தமிழ் நாடகப் பரிசுகள் மூலம் எங்களுக்குக் கிடைத்த இராஜராஜ சோழன் நாடகத்தைத்தான், பத்தாண்டுகளுக்கு பின் 1955இல் அரங்கேற்றினோம். அதனைப் பற்றிய விவரங்களைப் பின்னால் அறிவிப்பேன்.

தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்காக இப்படி ஒரு பரிசுத் திட் டத்தை 28 ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் நடத்தினோம் என்ற செய்தியினை இன்றையத் தலைமுறையினார் அறிந்திருக்க முடியாதல்லவா? அதனால்தான் சற்று விவரமாக இதனைக் குறிப்பிட்டேன்.

தமிழ் நாடகப் பரிசினை நாங்கள் வெளியிட்டதற்கும், அது பற்றிய முடிவினை அறிவித்ததற்கும் இடைப்பட்ட நீண்டகால இடைவெளியில் எத்தனையோ சுவையான நிகழ்ச்சிகளும், கவலை தரும் சம்பவங்களும் நடந்துள்ளன. பரிசு பற்றிய செய்தினைத் தொடர்பாக அறிவித்துவிட எண்ணியே இடைப்பட் நிகழ்ச்சிகளைச் சிறிது ஒத்தி வைத்தேன்.
--------------

63. மேதைகளின் விசித்திரப் பண்புகள்


காரைக்குடியில் இருந்தபோது புரட்சிக் கவினார் பாரதிதாசன் கானாடுகாத்தான் வந்திருப்பதாகச் செய்தி கிடைத்தது. கவிஞரை நேரில் காணவும் பில்ஹணன் சம்பந்தமான அனுமதியைப் பெறவும் எண்ணிக் கானடுகாத்தான் சென்றேன். எங்கள் நண்பர் திரு வை. சு. சண்முகம்செட்டியார் இல்லத்தில் இருப்பதாக அறிந்து அங்கு சென்றேன். செட்டியார் அவர்களைப் பார்த்தேன். செய்திகளை விபரமாகச் சொன்னேன், வை. சு. ச. அவர்கள் மகாகவி பாரதியோடு நெறுங்கி பழகியவர். கவினார்களோடு எச்சரிக்கையாகப் பழகவேண்டுமென்று எனக்குச் சில அறிவுரைகளையும் கூறினார். பாரதிதாசன் 10 நிமிடங்களுக்கு முன்புதான் பள்ளத்துரர் போயிருப்பதாகச் சொன்னார். பாரதியாரைப்பற்றி ஒரு விசித்திரமான செய்தியையும் அறிவித்தார்.

நூறு ரூபாய் கோட்டு

ஒருநாள் செட்டியார் இல்லத்திற்குப் பாரதியார் வந்து தங்கியிருந்தபோது, திடிரென்று “எனக்கு அவசரமாக ஒரு நூறு ரூபாய் வேண்டும்; கொடுப்பீரா?” என்றாராம் பாரதி. உடனே வை.சு.ச. “இதோ கொடுக்கிறேன்” என்று பெட்டியைத்திறந்து ஒரு நூறு ரூபாய் எடுத்து வந்து பாரதியிடம் கொடுத்தார். பாரதி நோட்டை இருபுறமும் திருப்பிப் பார்த்துவிட்டு, “இது எனக்குத் தானே?” என்றார்.

“ஏன்? என்ன சந்தேகம்?” என்றார் வை. சு. ச.

“இல்லை; எனக்குச் சொந்தமான இந்த நோட்டை நான் எப்படி வேண்டுமானலும் பயன்படுத்திக்கொள்ள எனக்கு உரிமை யுண்டல்லவா?” என்றார் பாரதி.

“தாராளமாக, எப்படி வேண்டுமானலும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.” இது வை. சு. ச. வின் பதில், மீண்டும் பாரதியார் நோட்டைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டே எழுந்து நின்றார். வை. சு. ச. வுக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏன்? ஏதாவது தேவையானால் வாங்கி வரச் சொல்கிறேனே?” என்று அவரும் எழுந்தார். அதற்குள் கண்மூடித் திறப்பதற்குள் பாரதியார் தம் கையிலிருந்ந நூறு ரூபாய் நோட்டைச் சுக்கு நூருகக் கிழித்துப் போட்டு விட்டார். வை. சு. ச. வுக்கு ஒரே வியப்பு. “ஏனய்யா கிழித்தீர்?” என்று கேட்டாராம். “என் நோட்டை நான் என்ன வேண்டுமானலும் செய்வேன். உமக்கென்னேயா அக்கறை?” என்று சொல்லிக் கொண்டு கலகலவென்று சிரித்தாராம் பாரதி. இந்த நிகழ்ச்சியைக் சொல்லிவிட்டு, மேதைகளான கவினார்களின் விசித்திரப் பண்புகளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. புரட்சிக் கவிஞரும் அந்தப் பாரதியாரின் தாசன்தானே? அவருடைய குணத்தில் இவருக்கு பாதியாவது இருக்குமல்லவா?” என்றார்.

நான் செட்டியாரிடம் விடைபெற்றுப் பள்ளத்துTர் சென்றேன். பள்ளத்தூர் வந்த கவினார் நான் வந்திருப்பதைச் கேள்விப் பட்டு நச்சாத்துப் பட்டிக்குப் போய்விட்டதாகத் தகவல் கிடைத்தது; கடைசியாகப் போன ஊரில் பாரதிதாசன் என்னைத்சந்திக்க விரும்பாமல் பாண்டிசேரிக்கே காரில் போய் விட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். நானும் பல இடங்களில் அலைந்து அலைந்து அலுத்துப்போய் ‘இது மேதைகளின் இயல்பு’ என்று கவிஞரைப் பார்க்காமலை காரைக்குடிக்குத் திரும்பினேன். கடைசியில் பில்ஹணன் நாடக நூலில் நான் நினைத்தபடி புரட்சிக் கவிஞரின் இரு பாடல்களைச் சேர்க்க முடியவில்லை.

“புரட்சிக்கவினார் பாரதிதாசன் அவர்களின் புரட்சிக்கவியிலுள்ள கருத்துக்கள் சில இந்நாடகத்தில் இடம் பெற்றுள்ளன. கவினார் அவர்களுக்கு நாங்கள் என்றும் கடமைப் பட்டிருக்கிறோம்” என்று மட்டும் என்னுடைய பதிப்புரையில் குறிப்பிட்டேன்.

புரட்சிக் கவினார் நிதிக்கு நாடகம்

திருச்சிக்கு வத்தபின் (சிவலீலா நடந்து கொண்டிருக்கை யில் கவிஞரோடு கடிதத் தொடர்பு கொண்டேன். “திருச்சியில் தங்களுக்கு ஒரு நாடகம் நடத்திக் கொடுக்க விழைகிறோம். அதை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கும் ஒரு வாரத்திற்குமேல் பதில் இல்லை. எனக்கு மிகவும் கவலையாகத்தான் இருந்தது. 10 நாட்களுக்குப் பின் ஒரு கடிதம் வந்தது.

“1945 ஜனவரி மாதம் 20ஆம் தேதி நடைபெறும் ராஜா பர்த்ருஹரி நாடகம் எனக்கு” என்று மட்டும் குறிப்பிட்டிருந்தது. நாங்கள் உடனே ஒப்புதல் அளித்தோம்.

திருச்சியில் 20-1-45இல் நடைபெற்ற ராஜா பர்த்ருஹரி முதல் நாடகம் புரட்சிக் கவினார் நிதிக்காகக் கொடுக்கப்பட்டது. கவிஞரே நேரில் வந்து அன்றைய வசூல் 1251ஐயும் பெற்றுக் கொண்டார். இரண்டு நாட்கள் திருச்சியில் தங்கினார். பில்ஹணனைப் பற்றி அவரிடம் பேச்செடுத்தேன். “அது சரிதாம்பா நடத்துங்க, நடத்துங்க” என்றார். பாண்டிச்சேரி சென்றபின், நாடகம் நடத்திக் கொடுத்ததற்கு நன்றி கூறிப் பெரியண்ணாவுக்கு ஒரு கடிதமும் தம் கைப் பட எழுதினார்.

கலைவாணர் கைது செய்யப்பட்டார்

திருச்சியில் சிவலீலா தொர்ந்து நடந்து கொண்டிருக்கும் பொழுது டிசம்பர் 29ஆம் தேதி தினமணியில் கலைவாணர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியினைப் படித்து அதிர்ச்சி யடைந்தோம். இலட்சுமிகாந்தன் என்னும் ஒருவர் இந்துகேசன் என்ற வார இதழை நடத்தி வந்தார். அவ்விதழில் கலைவாணர், தியாகரா பாகவதர் போன்ற விளம்பரம் பெற்ற பெரியார்களின் சொந்தநடவடிக்கைகள் பற்றிப் புரளியாக வாரந்தோறும் செய்தி வெளியிட்டு வந்தார். இவைபோன்ற பத்திரிகைகளை மஞ்சள் பத்திரிகைகள் என்று குறிப்பிடுவார்கள். இவ்வாறு வெளிவரும் மஞ்சள் பத்திரிகைகள் பெரும்பாலான பொதுமக்களை எளிதில் கவர்ந்து விடுகின்றன. இலட்சுமிகாந்தன் இதை ஒரு வியாபாரமாகவே செய்துவந்தார். உண்மையான கலைஞன் எவனும் இந்தப் புரளிகளைப்பற்றிக் கவலைப்பட மாட்டேன். நான் காரைச்குடியிலிருந்து சென்னைக்குச் சென்றிருந்த சமயம் கலைவாணரிடம் அதைப்பற்றி யாரோ கேட்டார்கள். “இலட்சுமிகாந்தனைச் சும்மா விடக்கூடாது. சட்டப்படி வழக்குத் தொடர வேண்டும்” என்றார்கள். உடனே கலைவாணர், “ஒரு பத்திரிகைக்காரன் கிளப்பிவிடும் புரளிகளால், காலமெல்லாம் நாம் செய்து வரும் கலைப்பணியை மக்கள் மதிக்கவில்லையென்றால் போகட்டுமே. அதனால் பொது மக்களுக்கு நஷ்டமே தவிர நமக்கொன்றும் நஷ்டம் இல்லை” என்றார். இப்படிச் சொல்லிய அப்பழுக்கற்ற கலைமேதையின் மீது அந்தப் பத்திரிகையாளரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டியது மிக மிகக் கொடுமையல்லவா? கலைவாணரும் பாகவதரும் சென்னை சிறைச்சாலையில் இருப்பதாக அறிந்து வருந்தினோம். இந்த வழக்கு சம்பந்தமான செய்திகளைப்பத்திரிகைகளில் பரபரப்போடும் கவலையோடும் படித்து வந்தோம். 28.4-45 இல் கலைவாணரைப் பார்க்க நான் சென்னை சென்றேன். அப்போது என். எஸ். கே. நாடக சபையின் முழுப் பொறுப்பையும் சகோதரர் எஸ்.வி. சகஸ்ரநாமம் ஏற்று நடத்தி வந்தார். அவரோடு தங்கினேன்.

களங்கமற்ற பசலை முகம்

முற்பகல் 11 மணியளவில் சகஸ்ரநாமத்தோடு சிறைச் சாலைக்குச் சென்றேன். நாங்கள் இருவரும் ஜெயில் சூப்பரின் டெண்டுடன் அமர்ந்திருந்தோம். கலைவாணரை உட்புறமிருந்து அழைத்து வந்தார்கள். அவர் வரும்போதே, “என்ன ஷண்முகம் எப்போ வந்தே? திருச்சியிலே வசூல் நல்லா ஆகுதா? அண்ணாச்சி யெல்லாம் செளக்யமா?” என்று கேட்டுக் கொண்டே எப்போதும் போல் கலகலப்போடு வந்தார்.

என் கண்களில் நீர் நிறைந்து விட்டது. பொங்கி வரும் அழு கையை அடக்க எவ்வளவோ முயன்றேன். முடியவில்லை. அவ ருக்கு ஆறுதல் கூறவந்த நான் கலங்கி நிற்பதைக் கண்டு, எனக்கு அவர் ஆறுதல் கூறினார். “30ம் தேதி நம் கே. எம். முன்ஷியின் வாதம் முடிந்ததும் எனக்கு விடுதலை கிடைத்து விடும். எல்லோரையும் கேட்டதாகச் சொல்லு” என்றார். நாங்கள் இருந்த நேரம் வரையில் அவர்தான் உற்சாகத்தோடு பேசிக் கொண்டிருந்தாரே தவிர நான் பேசவே இல்லை. சிறிதும் களங்கமற்ற அந்தப் பசலை முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். கீழ்ப் பாக்கம் சென்று கலைவாணரின் துணைவி மதுரம் அம்மையாரைப் பார்த்து ஆறுதல் கூறினேன்.

கல்கியின் மேதைப் பண்பு

அதன்பின் கல்கி அலுவலகம் சென்று ஆசிரியர் திரு ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பார்த்தேன். சுபத்திரையின் சகோதரன் சிறுகதையை நாடகமாக்கித் தரும்படியாக வேண்டி னேன். கல்கி சிரித்துக் கொண்டே சொன்னார். “மிஸ்டர் ஷண்முகம், கிருஷ்ணமூர்த்தி என்ன, சகலகலாவல்லவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு நாடகம் எழுதவராது. உங்களுக்குப் பிடித்தமான நாடக எழுத்தாளர் யாரையாவது எழுதச் சொல்லுங்கள். அந்த எழுத்துப் பிரதியை எனக்கு அனுப்பி வையுங்கள். நான் சரி பார்த்துக் கொடுத்து விடுகிறேன்.”

என்றார் ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர் கல்கி. எந்த எழுத் தாளர் இப்படித் தன் திறமையைக் குறைத்துக் கொண்டு சொல்வார்! மாமேதை கல்கிக்குத்தான் அந்தத் துணிவு இருந்தது. இப்படித் தைரியமாகத் தன்னைப் பற்றி ஒப்புக்கொள்ளவும் ஒரு தனிப் பண்பு வேண்டுமல்லவா?

கல்யாணி ராமசாமி இணைப்பொருத்தம்

அன்றிரவு என்னெஸ்கே நாடக சபையின் ஸ்ரீ கிருஷ்ணலீலா ஒற்றைவாடையில் நடைபெற்றது. ஒவியர் மாதவன் அவர்களின் ஒப்பற்ற கைவண்ணத்தைக் கண்டு களித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டனவல்லவா? அன்று மீண்டும் அவர் படைத்த அற்புதக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன். கே. ஆர். இராமசாமி ஸ்ரீ கிருஷ்ணனாகவும், செல்வி கல்யாணி ருக்மணியாகவும் நடித்தார்கள். இருவரையும் மேடையில் பார்த்த போது இணைப்பொருத்தம் பிரமாதமாக இருந்தது. நாடகம் முடிந்ததும் கம்பெனி வீட்டி லேயே தங்கும்படி சகஸ்ரநாமம் கூறினார்.

மறுநாள் காலை ஆசிரியர் எம்.எஸ். முத்துக்கிருஷ்ணனோடும் மற்றும் பழைய நண்பர்களோடும் பேசிக் கொண்டிருந்தேன். அப் போது கே. ஆர். இராமசாமிக்கும் செல்வி கல்யாணிக்கும் விரை வில் திருமணம் செய்து வைத்து விடுமாறு கூறினேன். ராமசாமி யும் என்ைேடு இருந்தார். அவருக்கும் அந்த எண்ணம் இருப் பதை எல்லோரும் உணர்ந்தோம். என். எஸ்.கே. சிறையிலிருந்து வந்ததும் அப்படியே நடத்திவிடாலாமென்றார் முத்துகிருஷ்ணன்.

அன்று மாலையும் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியையும் டி. சதாசிவம் அவர்களையும் சந்தித்தோம். 19.5.45இல் திருச்சி யில் நடைபெறவிருக்கும் எங்கள் ஒளவையார் நாடகத்திற்குத் தலைமை தாங்கும்படி கேட்டுக்கொண்டேன். கல்கி மகிழ்வோடு ஒப்புக் கொண்டார். அதன்பின் சென்னையில் பல்வேறு நண்பர் களைச் சந்தித்தேன். நான் எப்போது சென்னைக்கு வந்தாலும் எங்களோடு மேனகாவில் நடித்த கே.டி. ருக்மணியைச் சந்திக் காமல் போவதில்லை. அவரையும் சென்று பார்த்து வந்தேன். அன்றிரவும் சகோதரர் சகஸ்ரநாமத்தோடு தங்கினேன்.

கே. எம். முன்வியின் வாதத்திறன்

30 ஆம் தேதி முற்பகல் உயர்நீதிமன்றம் சென்று இலட்சுமி காந்தன்கொலை வழக்கு விசாரணையைப் பார்த்தேன்.கலைவாணர் பாகவதர் இருவரையும் கைதிக்கூண்டிலே பார்த்தபோது என்னல் தாங்க முடியவில்லை, கைதிக் கூண்டிலேயே நாற்காலிகள் போட்டுக் கலைமணிகள் இருவரையும் சென்ட்ரல் ஸ்டுடியோ ஸ்ரீராமுலு நாயுடு அவர்களையும் உட்கார வைத்திருந்தார்கள். கே. எம். முன்ஷியின் திறமையான வாதம் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டுக் கூண்டிலிருப்பவர்களின் உள்ளத்தில் கோடி கோடி எண்ணங்கள். அல மோதிக் கொண்டிருக்குமல்லவா? அதுதானே இயல்பு! பாகவதர், நாயுடு இருவருக்கும் அப்படி இருந்திருக்கலாம். ஆனால், கலைவாணர் எதைப் பற்றியும் சிந்தித்ததாக எனக்குத் தோன்றவில்லை. அவர் உற்சாகத்தோடு பாகவதரின் முதுகைத்தட்டி நான் கோர்ட்டுக்கு வந்திருப்பதைச் சிரித்துக் கொண்டே சுட்டிக் காட்டினார் . துன்பத்தின் எல்லையிலும் இன்பத்தைக் காணும் இந்த உயரிய நிலை மேதைகளுக்கே உரிய விசித்திரப் பண்பல்லவா? அன்று மாலையே புறப்பட்டு மறுநாள் காலை திருச்சிக்கு வந்துசேர்ந்தேன்.

நான் திருச்சிக்கு வந்த நான்காம் நாள் காலைப் பத்திரிகைகளில் நெஞ்சந் திடுக்கிடும் செய்தி வந்திருந்தது. கலைவாணர், பாகவதர் இருவருக்கும் தீவாந்திர தண்டனை விதிக்கப்பட்டது என்ற துயரமிக்க செய்தி. இதனைப் படித்ததும் கம்பெனி நடிகர்கள் சிலர் அழுதார்கள். நானும் ஒர் அறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதேன்.
----------------

64. பாரதி மண்டபத்துக்கு ஒளவையார்


ஒருவார காலம் கலைவாணர் பாகவதர் ஆகியோரின் தீவாந்திர தண்டனையைப் பற்றிய பேச்சாகவே இருந்தது.நீண்ட கால உழைப்பினல் சோர்வுற்றிருந்த பெரியண்ணா டி.கே. சங்கரன் அவர்கள் கம்பெனித் தொல்லைகளிலிருந்து சிறிது ஓய்வு பெற எண்ணினார். சின்னன்ணா டி. கே. முத்துசாமி அவர்களிடம் நிர் வாகப் பொறுப்பினை ஒப்படைத்து விட்டு 16.5.45இல் அவர் நாகர்கோவில் சென்றார்.

கல்கி தலைமையில் ஒளவையார்

எட்டையபுரம் பாரதி மண்டப நிதிக்காக 19-5.45 இல் ஒளவையார் நாடகம் நடைப்பெற்றது. இந் நாடகத்திற்கு ‘கல்கி’ ஆசிரியர் திரு. ரா. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி மிக அருமை யாகப் பேசினார். சென்னை, தஞ்சை, திருச்சி முதலிய நகரங்களி லுள்ள பத்திரிகை ஆசிரியர்கள் பலருக்கும் ஒளவையாரை வந்து பார்த்து வாழ்த்துமாறு அழைப்புகள் விடுத்திருந்தோம். பல அன்பர்கள் வந்து பார்த்தார்கள். பத்திரிகையில் விமர்சனங்கள் வரைந்தார்கள். அவர்களிலே குறிப்பிடத்தக்கவர்கள் திருவாளர்கள் நாரண துரைகண்ணன் (பிரசண்டவிகடன்) நவீனன் (நவ யுவன்) வல்லிக்கண்ணன் (கிராம ஊழியன்) ஏ. எஸ். ரங்கநாத சிரோமணி (ஹிந்துஸ்தான்) ராஜகோபாலன் (கலாமோகினி) ப. நீலகண்டன் (கலைவாணி) சீனிவாசராவ் (நாரதர்) சாவி (மாலதி) திருலோகசீதாராம் (சிவாஜி) மேற்குறிப்பிட்ட பத்திரி கைகள்தாம் திருச்சியில் எங்களுக்குக் கிடைத்தவை. இன்னும் பலர் எழுதியிருக்கலாம். ஆக, பத்திரிகையாளர்களின் இந்த விமர்சனங்களெல்லாம் சேர்ந்து ஒளவையாருக்கு 1942இல்மதுரை யில் கிடைக்காத வருவாயை 1945ல் திருச்சியில் கிடைக்கும்படி செய்தன என்பதை நன்றியோடு குறிப்பிட விரும்புகிறேன்.

உயிர்ச் சத்தான ஒரு சொல்

‘கர்நாடகம்’ என்னும் புனைபெயரில் ரா. கிருஷ்ணமூர்த்தி கல்கியில் எழுதிய விமர்சனத்தில் ஒளவையாராக நடிக்கும் ஷண்முகத்திற்கு இந்த நடிப்புக்காகவே நோபல் பரிசு வழங்கலாம்!’ என்று எழுதினார். நான் அதற்குத் தகுதியுடையவனா, அல்லவா என்பது ஒருபுறமிருக்கட்டும். அந்த ஒரு சொல் எனக்கு எவ்வளவு உற்சாகத்தைக் கொடுத்தது! தொடர்ந்து 50 நாட்கள் ஒளவையாராக நான் நடிப்பதற்கு அந்த சொல்தான் உயிர்ச்சத்தாக... ‘டானிக்'காக இருந்தது என்பதில் ஐயமில்லை. கல்கி மேலும் எழுதுகையில்,

“இந்த நாடகத்தைப் பார்த்து வந்தபோதும் அதன் முடிவிலும் எனக்கு என்ன தோன்றியது என்றால், நம் கையில் மட்டும் அரசாங்க அதிகாரம் இருந்தால் இந்த நாடகக் கம்பெனியையும் இந்த ஒளவையார் நாடகத்தையும் உடனே நாட்டின் பொதுவுடமையாக ஆக்கிவிடவேண்டும் என்பதுதான். ஆம், தமிழ் நாட்டிலுள்ள எல்லாக் குழந்தைகளும் இந்த நாடகத்தைப் பார்த்துவிட வேண்டும். மேற்கூறியவாறு ஒளவை நாடகத்தைப் பொதுவுடமையாகச் செய்யும் காரியத்திற்காக மேற்படி நாடகக் கம்பெனியின் செலவுக்கு சர்க்காரிலிருந்து வருஷம் மூன்றுலட்சம் ரூபாய் நன்கொடை கொடுக்கும்படி இருக்கலாம். இந்த மூன்று. லட்ச ரூபாய்ச் செலவினல் தமிழ் நாட்டின் குழந்தைகள் எத் தனேயோ பல லட்ச ரூபாய் செலவில் அடைய முடியாத நன் மைகள் அல்லவா அடைந்து விடுவார்கள்! ஒளவையார் நாடகம் தமிழரின் வாழ்வையே உயர்த்தக் கூடிய நிர்மானத் திட்டத்தைச் சேர்ந்தது.”

என்று குறிப்பிட்டிருந்தார். அன்பர் நாரண-துரைக்கண்ணன் அவர்கள் தமது பிரசண்ட விகடன் இதழில் எழுதிய நீண்ட விமர்சனத்தில், “தமிழில் நாடகமில்லை என்று பிதற்றும் மேதாவிகள் ஒளவையார் நாடகத்தைப் போய்ப் பார்க்கட்டும். ஸ்ரீபால ஷண்முகானந்த சபை நாடக அரங்கில் நாடகக்கலை சீரிளமைத் திறங் குன்றாது இருப்பதை அவர்கள் காண்பார்கள்” என்று சுட்டிக் காட்டியிருந்தார். இவ்வாறு ‘எழுதப்பட்ட விமசனங்களின் உந்துதலால் ஒளவையார் தொடர்ந்து, நடைபெற்று வந்தது.

தலைவரைச் சந்தித்தேன்

எங்களோடு மிகநெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ‘ஜன சக்தி’ வார இதழில் 18.6.45இல் ஔவையார் விமர்சனம் வந்திருந்தது. ஜனசக்தியிலிருந்து யாரும் நாடகம் பார்க்க வரவில்லையாதலால், எழுதியவர் யாரென்று பார்த்தேன். ம. பொ. சிவஞான கிராமணி என்று போட்டிருந்தது. விமர்சனத்தைப் படித்தேன். நாடகத்தைப் பாராட்டி விரிவாக எழுதிவிட்டு இறுதியாக ஒன்று குறிப்பிட்டிருந்தார் விமர்சகர்.

“டி.கே.எஸ். சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள். நாடகத்தின் இறுதியில் ‘ஒளவையார்’ விண்ணெய்தும் முன்னார், தமிழர் மேன்மையை விளக்கும் பாடலொன்றைப்பாடி, ஜனங்கள் கொட்டகையை விட்டுச் செல்லும்போது அவர்கள் காதுகளில் தமிழோசையை முழக்கித் தமிழுணர்ச்சியை யூட்டுவது நல்லது.”

இதைப் படித்தவுடன் எனக்குச் சிறிது வியப்பாகவே இருந்தது. முழுக்க முழுக்கத் தமிழ்நாட்டின் பெருமையும் தமிழ்மொழியின் சிறப்பும் நாடகம் முழுதும் பேசப் பெறுகிறது; பாடப் பெறுகிறது. இதைப் பார்த்த பிறகும் மன நிறைவு பெறாமல் வேண்டுகோள் விடுத்திருக்கிறாரே என்று யோசித்தேன். அப்போதுதான் சில நாட்களுக்கு முன் அவரைச் சந்தித்ததும் பேசியதும் நினைவுக்கு வந்தது. 26.6.45 அன்று மாலை பொதுவுடமைக் கட்சித் தலைவர் தோழர் பி. இராமமூர்த்தி எங்களைப் பார்க்க வந்தார். அவரோடு முன்பே எங்களுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. இராமமூர்த்தியோடு ஒல்லியான உருவமுடைய மற்றொருவரும் வந்தார். வந்தவருடைய அடர்ந்த கம்பீரமான மீசை என் கவனத்தைக் கவர்ந்தது. தமிழனுக்குரிய வீரம் அவருடைய கண்களிலே பளிச்சிட்டது. உற்று நோக்கினேன். இவர்தான் ம.பொ. சிவஞான கிராமணியார் என்று அவரை அறிமுகப்படுத்தினார் இராமமூர்த்தி. இப்படித்தான் நான் முதன் முதலாக தலைவர் சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்களைச் சந்தித்தேன். அன்றிரவு நாடகத்திற்கு அவரையும் அழைத்துவரும்படி தோழர் இராமமூர்த்தியைக் கேட்டுக் கொண்டேன். அதன்படி இரவு அவரும், ம.பொ. சியும், இஸட், அகமது என்னும் தோழரும் நாடகம் பார்க்க வந்தார்கள். அன்றைய நாடகத்தைப் பார்த்து விட்டுத்தான் விமர்சனம் எழுதியிருக்கிறார் என்பது புரிந்தது. விமர்சனத்தில் வெளியிட்டிருந்த கருத்து எனக்கு நிரம்பவும் பிடித்தது. அதற்கு நன்றி கூறி ஜனசக்தி மூலமாக ம.பொ. சி. அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதன் பிறகு தான் “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே” என்ற பாரதி பாடலை நாடகத்தின் இறுதியில் பாடும் வழக்கத்தை தாங்கள் மேற்கொண்டோம். இடையே ஒரு நாள் நாடகத்திற்கு தேசீயக் கவினார் நாமக்கல் வெ. இராமலிங்கம்பிள்ளை தலைமை தாங்கி எங்களைப் பாராட்டினார். 9.7.45இல் 50வது பொன் விழா பிரபல அமைச்சூர் நடிகர் எப். ஜி. நடேசய்யர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நாடகாசிரியர் திரு எதி ராஜுலு நாயுடுவுக்குக் கம்பெனியின் சார்பில் ஒரு பொற்பதக்கம் பரிசளிக்கப்பட்டது. நாடகாசிரியரையும் நடிகர்களையும் பிரமாத மாகப் பாராட்டிப் பேசினார் நடேசய்யர்.

நாமக்கல் கவிஞருக்கு நாடகம்

19-7.45இல்தொடங்கிய முதல் சிவாஜி நாடகம் நாமக்கல் கவிஞரின் நிதிக்காக நடத்திக் கொடுக்கப் பெற்றது. அன்று வெங்களத்தூர் சாமிகாத சர்மா அவர்கள் தலைமை தாங்கினார். அருமையாகப் பாராட்டிப் பேசினார். திரு அ. சீனிவாசராகவன், நண்பர் சாவி ஆகியோரும் பாராட்டிப் பேசினார்கள். அன்றைய வசூல் ரூ 1201 நிதியின் பொருளாளர் திரு சக்தி வை. கோவிந்தள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

23.7.45இல் நடைபெற்ற சிவாஜி நாடகத்திற்கு மேற்படி நாடகாசிரியரும் பிரபல கண் வைத்தியருமான டாக்டர் டி. எஸ். துரைசாமி அவர்களின் தமையனார் திரு டாக்டர் டி.எஸ். திருமூர்த்தி தலைமை தாங்கிப் பாராட்டினார். 15-8-45இல் நடைபெற்ற சிவாஜி நாடகத்திற்கு பிரசண்ட விகடன் ஆசிரியர் திரு. காரண துரைக்கண்ணன் தலைமை தாங்கி, டி. கே. எஸ். சகோதரர்கள் விரைவில் சென்னைக்குவந்து,தலைநகரிலுள்ள ரசிகர்களையும் மகிழ் விக்க வேண்டுமென்று கூறிப் பாராட்டினார். திருச்சியில் சிவாஜி நாடகம் தொடர்ந்து 35 நாட்கள் நடைபெற்றது.
---------------

65. அந்தமான் கைதி


ஒளவையார் நாடகம் நடந்து கொண்டிருக்கும்பொழுது கவிஞர் கு. சா. கிருஸ்ணமூர்த்தி அவர்கள் ஒரு நான் நாடக அரங்கில் என்னைச் சந்தித்தார். 1941இல் என்ன மதுரையில் சந்தித்து ஒரு நாடகக் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்ததாகவும் நினைவு படுத்தினார். ‘எனக்கு நினைவிவில்லை, மன்னியுங்கள்’ என்றேன். “இல்லை, பாதகமில்லை. அந்த நாடகத்தையே இப்போது அச்சுவடிவில் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறேன். நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்” என்றார். நாடக நூலை வாங்கி முதல் பக்கத்தைப் புரட்டினேன். கலை மன்னன் ராஜா சாண்டோவின் படமும், நாடக நூலை அவருடைய நினைவுக்குக் காணிக்கை யாக்கியிருப்பதாகப் படத்தின் கீழே ஒரு கவிதையும் இருந்தது. அதைப் பார்த்தவுடனேயே கவினார் கு. சா. கி. யை எனக்குப் பிடித்துவிட்டது. “படிக்கிறேன்; நன்றாயிருந்தால் நடிக்கிறேன்” என்று கூறினேன். பிறகு ராஜா சாண்டோ அவர்களைப் பற்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

நாடகம் நன்றாயிருந்தது

நாடகத்தைப் படித்தேன். நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் அவரைச் சந்தித்தேன். “நாடகம் திருத்தம் எதுவும் செய்யாமல் அப்படியே மேடையேற்றக் கூடியவகையில் அமைந்திருக்கிறது. இதுவரை இப்படி ஒருவரும் நாடகம் கொண்டு வந்து கொடுத்ததில்லை. இதனை எப்படித் தங்களால் உருவாக்க முடிந்தது?” என்று கேட்டேன். அவர் சிசித்துக் கொண்டே ‘நானும் ஒரு நடிகன்தானே’ என்றார். பிறகு பாய்ஸ் கம்பெனிகளின் அனுபவங்கள் பற்றியும், எங்கள் ஆசிரியர் கந்தசாமி முதலியார் அவர்களிடம் அவர் நடிப்புப் பயிற்சி பெற்ற விபரங்களைப் பற்றியும், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

அந்தமான் கைதி நாடகம் எனக்கு நிரம்பவும் பிடிந்திருந்தது நாங்கள் நடத்த வேண்டுமென்று விரும்பிய கல்கியின் சுபத்திரையின் சகோதரன் கதைக் கருவை உள்ளடக்கியதாக நாடகம் அமைந்திருந்தது. நாடகம் சரியாக நடத்தப்பட்டால் மகத்தான வெற்றிபெறும் என்று கவினார் கு. சா. கி. அவர்களுக்கு நான் அப்போதே உறுதி கூறினேன்.

சிவாஜி நாடகத்தில் எஸ்.எஸ். இராஜேந்திரன் கதாநாயகன் ஜெய்வந்தாக மிகவும் நன்றாக நடித்ததால் அந்தமான் கைதியிலும் அவரே கதாநாயகன் பாலுவாக நடிக்கலாம் என்று நான் கூறினேன். “அப்படியானால் நீங்கள் எந்தப் பாத்திரத்தை ஏற்கப் போகிறீர்கள்?” என்றார் கு.சா. கி. “இந்த நாடகத்தில் நான் ஒய்வெடுத்துக் கொள்ளப் போகிறேன்” என்றேன். அவருக்குத் கொஞ்சம் வருத்தம். நான் நடிக்காவிட்டால் நாடகம் வெற்றி பெறுமா? என்பதில் அவருக்குச் சந்தேகம். “அப்படியானல், நடராஜன் பாத்திரத்தை நீங்கள் போடலாமே” என்றார் கவினார். என்னைவிடத் தம்பி பகவதி அந்த வேடத்திற்கு மிகவும் பொருத்தமானவர். தங்களுக்குக் சிறிதும் கவலை வேண்டாம். நாடகத்தை வெற்றியோடு நடத்திய பிறகுதான் நான் ஒய்வெடுத்துக் கொள்ளப் போவேன் என்றேன்.

குண்டு கருப்பையா

எல்லோருக்கும் பாடம் கொடுக்கப் பெற்றது, நகைச்சுவை நடிகர் குண்டு கருப்பையா திருச்சியில்தான் எங்கள் குழுவிற்கு வந்துசேர்ந்தார். அவருடைய சரீரமே நகைச்சுவைக்கு வாய்ப்பாக இருந்ததால் புதிய நாடகத்தில் அவருக்கும் ஒருவேடம் கொடுக்க எண்ணினோம். அதேபோல் குட்டி நகைச்சுவை நடிகர்களில் அப்போது எங்கள் குழுவில் முதன்மையாக இருந்தவர் துவரங்குறிச்சி சுப்பையன். அவருக்கும் அந்தமான் கைதியில் ஒரு பாத்திரத்தைப் படைக்க முனைந்தோம். சமையல் கணபதி ஐயர் என்ற பாத்திரத்தை நகைச்சுவையோடு உருவாக்கிக் குண்டு கருப்பையாவுக்கும், திவான் பகதூரின் வேலையாள் வேடத்தை சுப்பையனுக்கும் கொடுத்தோம். இவ்விரண்டு வேடங்களும் நகைச்சுவை காட்சிகளுக்கு மேலும் மெருகூட்டவும், காட்சிகள் தாமதமின்றி நடைபெறவும் துணையாக அமைந்தன.

நாடகத்திற்கான பாடல்கள் சிலவற்றைக் கவினார் கு. சா கி. யே புதிதாக எழுதினார். புரட்சிக் கவினார் பாரதிதாசனின் “அந்த வாழ்வுதான், எந்த நாள் வரும்” “சோலையிலோர் நாள் எனயே” “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ” என்னும் மூன்று பாடல்களிையும் தக்க இடங்களில் சேர்த்துக் கொண்டோம். பாரதியின் “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலை மிகுந்த சுவையாக நடராஜன் தன் தங்கை லீலாவுக்குச் சொல்லிக்கொடுப்பதுபோல் அமைத்துக் கொண்டோம். தேவையான ஒரு சில காட்சிகளும் தயாராயின. அந்தமான் கைதியைப் பொறுத்த வரையில் காட்சிகளுக்கு நாங்கள் முதன்மை அளிக்கவில்லை. சமூக நாடகமாதலால் ஆடை அணிபணிகளுக்கும் அவசியம் ஏற்படவில்லை. சுருக்கமான செலவில் கதையை முதன்மையாக வைத்து நாடகம் தயாராயிற்று. 20-9-45இல் அந்தமான் கைதி அரங்கேறியது.

குமாஸ்தாவின் பெண்ணுக்குப்பின் சிறந்த சமூகநாடகமாகக் அந்தமான் கைதி விளங்கியது. பேராசிரியர் வ. ரா. அவர்கள் ஒருநாள் நாடகத்திற்குத் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் “கவினார் கு. சா. கிருஷ்ணமூர்த்தி ஒன்றும் அறியாத சாது போல இருந்துகொண்டு ஒரு அற்புதமான நாடகத்தைப் படைத்து விட்டாரே!” என்று கூறிப் பாராட்டினார்.

அறிஞர் அண்ணா அவர்கள் இந் நாடகத்தைப் பார்க்க வேண்டுமென நான் ஆசைப்பட்டேன். அவருக்குக் கடிதமும் எழுதினேன். நாடகக்கலை மாநாட்டுக்குப் பின் ஏற்பட்ட சில விரும்பத்தகாத விளைவுகளின் காரணமாக அவர் எனக்குப் பதில் எழுத வில்லை. அந்தமான் கைதி நடைபெற்ற நேரத்தில் அறிஞர் அண்ணா திருச்சியில் ஒரு மாநாட்டில் கலந்துகொண்டார். நான் அவரைச் சந்திக்க முயன்றேன்; இயலவில்லை. மாநாட்டுக்கூட்டம் அந்தமான் கைதிக்கு வந்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரிந்தது.

லீலா தன் காதலனிடம் அண்ணனைப் புகழ்ந்து பேசுகிறாள். காதலன் பாலு, அவருடைய சொற்பொழிவுத் திறனைப் பற்றி அவளிடம் பாராட்டிப் பேசுகிறான்; பாலு: ... அடடா, இன்றையக் கூட்டத்தில் உன் அண்ணா பேசியிருக்கிறார் பார். அதைப்பற்றி என்ன அபிப்பிராயம் சொல்வதென்றே எனக்கு விளங்கவில்லை.

லீலா: .... தாங்கள் முழுமையும் கேட்டீர்களா? அடடா; நான் கேட்கமுடியாமல் போய்விட்டதே: எதைப்பற்றிப் பேசினார்? என்னென்ன பேசினார்?

பாலு:- பால்ய விவாகத்தின் தீமைகளைப் பற்றியும், காதல் மணம், மறுமணம் இவற்றின் அவசியத்தைப் பற்றியும் அழகாகப் பேசினார். இன்னும் மொழிப்பற்று, நாட்டுப்பற்று, அடிமை வாழ்வின் கேவலநிலை; சுதந்திரம் அடைய வேண்டியதன் அவசியம், பெண்கள் முன்னேற்றம், விபசாரத்தின் இழிவுத்தன்மை, தற்காலக்கல்வி முறையின் சீர்கேடு, கைத் தொழில், கிராம முன்னேற்றம் அடடா, இனிமேல் சொல்ல வேண்டியது என்பதாக ஒன்றும் பாக்கியில்லை. அப்பப்பா! என்ன கம்பீரமான பேச்சு, உயர்ந்த உபமானங்கள்; ஆணித் தரமான எடுத்துக்காட்டுகள்; ஒவ்வொரு வார்த்தைக்கும் சபையில் கரகோஷமும் ஆரவாரமும்தான். உன் அண்ணாவும் இவ்வளவு உயர்வாகப் பேசுவாரென்று நான் எதிர் பார்க்கவேயில்லை. எனக்கே ஆச்சரியமாகப் போய்விட்டது, போயேன்!

இந்த உரையாடலில் அண்ணா என்ற சொல் வரும் நேரத்தில் சபையில் பெருத்த கைத்தட்டல் ஏற்பட்டது. ஒரே ஆரவாரம்! இதைச் சொல்பவர் எஸ்.எஸ். இராஜேந்திரன். அவர் ஏற்கனவே அறிஞர் அண்ணா முதலியவர்களோடு தொடர்பு கொண்டவர். கேட்க வேண்டுமா? மாநாடு நடைபெற்ற இரண்டு நாட்களிலும் இந்தக் காட்சியில் மக்களின் பாராட்டு அதிகமாக இருந்தது.

அந்தமான் கைதி 1938 இல் எழுதப்பெற்ற நாடகம்! நாங்கள் அதனை நடிக்குமுன்பே அமைச்சூர் சபையினரால் நான்கு முறை நடிக்கப் பெற்றுள்ளது. எங்கள் குழுவில் நடிக்கப்பட்டப் பின் நாடகம் மகத்தான வெற்றி பெற்றது.

அந்தமான் கைதியைப் படைத்ததன் மூலம் கவினார் கு. சா. கி. தமிழ் நாடக உலகில் அழியாத இடம் பெற்றுவிட்டார். தமிழ் நாட்டிலும், இந்தியாவின் பிறமாநிலங்களிலும் சிங்கப்பூர், மலைசியா, இலங்கை, பர்மா, தென்னப்பிரிக்கா முதலிய தமிழர் வாழும் பிரதேசங்கள் அனைத்திலும் அந்த நாளில் அந்தமான் கைதியை நடத்தாத அமைச்சூர் சபைகளே இல்லையெனலாம். திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், தமிழரசுக் கழகம் இன்னும் சமுதாய முற்போக்குக் கொள்கைகளை ஆதரிக்கும் எல்லாக் கட்சியினரும் தமது நாடக சபைகளில் அந்தமான் கைதியை நடித்திருக்கின்றனார். நம்முடைய நண்பர் திரு ஏ.வி. பி. ஆசைத்தம்பி எம். எல். ஏ. அவர்கள் இதில் நடராஜன் பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் என்பது மகிழ்ச்சிக் குரியதாகும். இதற்கெல்லாம் மேலாகத் தமிழில் வெளிவரும் நாடக இலக்கியங்களுக்குப் பரிசு வழங்கும் முறையில் சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்தமான் கைதி நாடக நூலுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
---------------

66. முள்ளில் ரோஜா


அந்தமான் கைதியில் எனக்குக் கிடைத்த ஓய்வை நான் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டேன். எனக்கு முழங் காலுக்குக் கீழே ஒரு கழலை இருந்தது, அதனல் வலியோ வேறு தொந்தரவோ இல்லையென்றாலும் ஒரு சிறுகட்டிபோல் இருந்தது ஒருநாள் எங்கள் நண்பர் டாக்டர் பாலு அதைப் பார்த்தார். “இதைச் சுலபமாக எடுத்துவிடலாமே ஒரு வாரம் ஓய்விருந்தால்போதும்” என்றார். அந்தமான்கைதி அரங்கேறிய மறுவாரம் நான் டாக்டர் பாலுவிடம் அந்தக் கழலைக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அப்போது தென்னுாரில் ஒரு தனி வீட்டில் தங்கியிருந்தேன்.

திரைப்பட இயக்குகர் ப. நீலகண்டன்

திருச்சியில் சிவலிலா வெற்றியோடு நடைபெற்றபோதுபுதுக் கோட்டை கலைவாணி ஆசிரியர் ப. நீலகண்டன் அவர்கள் 5-1-45 இல் சிவலீலா பார்க்க வந்திருந்தார். நாடகம் முடிந்ததும் நானும் அவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். திரைப்படத் துறையில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. “ஏதாவது ஒரு நாடகம் எழுதிக்கொடுங்கள். அதன் மூலம் திரைப்படத் துறை தங்களைத் தானாக வரவேற்கும்” என்று கூறினேன். ஏற்கனவே அவர் ‘தாசிப்பெண்’ என்னும் பெயரில் ஒரு குறுநாவல் எழுதியிருந்தார். அதை நான் முன்பே படித்திருந்தேன். அதையே நாடகமாக்கலாம் என்று கூறினேன். அவரும் ஒப்புக்கொண்டார். “என்னுடன் கூடவேயிருந்து நாடகம் எழுதினால் நன்றாக அமையலாம். அப்படி எழுதத் தங்களுக்கு வசதி படுமா?” எனக் கேட்டேன். அவரும் அதையே விரும்பினார். கு. சா. கி. யும் ப. நீ. யும் நெருங்கிய நண்பர்கள். ‘அந்தமான் கைதி’ நாடகத் திற்குப் ப. நீ. யும் வந்திருந்தார். அறுவை இகிச்சையில் கிடைத்த ஒய்வு நாட்களைப் புதிய நாடகம் எழுதப் பயன் படுத்திக் கொண்டோம்.

இருவரும் நீண்டநேரம் விவாதித்து முள்ளில் ரோஜா என்று நாடகத்திற்குப் பெயர் வைத்தோம். நண்பர் ப. நீலகண்டன் விரைவாக எழுதுவார். எழுத்துக்கள் பிழையில்லாமல் தெளிவாக இருக்கும். “நான் எழுதியிருப்பது தங்களுக்குப் பிடிக்கவில்லே யென்றால் கூச்சப்படாமல் சொல்லுங்கள் வேறு எழுதுகிறேன்” என்று முன்கூட்டியே சொல்வி விடுவார்.

சிறந்த ரசிகர் அவர். தான்படிக்கும்போது என்முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பார். என் உள்ளத்தின் ரசனையை முகத்தைப் பார்த்தே புரிந்து கொள்வார். சரி, பிடிக்கவில்லை போலிருக்கிறது. சொல்வதற்குக் கூச்சப்படுகிறீர்கள். வேறு எழுதிவிடுகிறேன்” என்று சொல்வி உடனே தாம் எழுதிய காகிதத்தைக் கிழித்து போட்டு விடுவார்.

முள்ளில் ரோஜாவில் ஒரு உணர்ச்சிக்கரமானகாட்சி. ராம நாதனை அவனுடைய தோழர்கள் தாசி விட்டுக்கு அனுப்புகிறார்கள். அவன் அனுபவமில்லாதவன். அப்பாவி. தாசி செல்லத்தின் படுக்கையறைக்குள் நுழைகிறான். உள்ளே வந்து மிரள மிரள விழிக்கிறான். கைகள் நடுங்குகின்றன. செல்வத்தைப் பார்க்கிறான். கிரிக்கமுயல்கிறான். உண்மையான சிரிப்பு வரவில்லை. அசடு வழிகிறது. செல்லம் “எங்கே வந்நீர்கள்?” என்று கேட்கிறாள். ராமநாதன் திகைக்கிறான். இந்தக் காட்சியில் செல்லம் அவனுக்கு அறிவுரை கூறும் முறையில் ஆத்திரத்தோடும் ஆவேசத்தோடும் பேசுகிறாள். ‘அந்தப் பேச்சு இயல்பாக இருக்க வேண்டும். எழுச்சியோடு அமையவேண்டும். வார்த்தைகள்தங்கு தடையில்லாமல் வரவேண்டும். புரியாத வார்த்தைகளைப் போட்டுக் குழப்பாமல் எளிமையாகப் பேச வேண்டும். ஆனால் கொச்சை நடையாக இருக்கக் கூடாது’ என்றெல்லாம் சொல்லி விட்டு எழுதுங்கள் என்றேன். எழுதினார். முழுதும் எழுதிவிட்டுப் படித்தார், நான் முகத்தை சுளித்தேன். உடனே கிழித்துப் போட்டார். மீண்டும் எழுதினார். ஏறத்தாழப் பத்துமுறையாவது அந்த ஆவேசப் பேச்சை எழுதியிருப்பாரென நினைக்கிறேன். கடைசியாக எழுதி முடித்த பேச்சு அற்புதமாக அமைத்தது. அதைப் பலமுறை சொல்விச்சொல்லி நானே ரசித்தேன்.

முள்ளில் ரோஜா பாடம் கொடுக்கப்பட்டது. எங்கள் கம்பெனியின் கவினார் க. ஆ. ஆறுமுகனார் முள்ளில் ரோஜாவுக்கு அருமையான பாடல்களை இயற்றித்தந்தார். மகாகவி பாரதியாரின் ‘மோகத்தைக் கொன்றுவிடு,’ அன்பென்று கொட்டு முரசே,’ புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின், ‘பெண்களால் முன்னேறக்கூடும்,” “அண்ணி வந்தார்கள் எங்கள் அண்ணாவுக்காக” ஆகிய பாடல்களையும் பொருத்தமான இடங்களில் சேர்த்துக் கொண்டோம். இந்தப் பாடல்கள் நான்கும் நாடகத்திற்காகவே எழுதப் பெற்ற பாடல்களைப்போல் சிறப்பாக அமைந்தன.

முள்ளில் ரோஜாவின் கதாநாயகன் இராமனாதன் பாத்திரமும் எஸ். எஸ். இராஜேந்திரனுக்கே கொடுக்கப் பெற்றது. அந்த நாடகத்திலும் நான் ஒய்வெடுத்துக் கொண்டேன். ஒய்வு என்றால் வேடம் புனைவதிலிருந்து ஒய்வு பெற்றேனே தவிர நாடகத்தின் பொறுப்பு முழுவதையும் நான்தான் ஏற்றுக் கொண்டிருந்தேன்.

22-12-42-இல் முள்ளில் ரோஜா நாடகம் அரங்கேறியது.

நாடகம் என்மனத்திற்கு முழுநிறைவினைத் தந்தது. பொது மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். எல்லா நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்தார்கள். அன்றைய நாடக வசூல் 1070.60. இத் தொகையை ஒரு தாம்பாளத்தில் வைத்து நாடகாசிரியர் ப. நீல கண்டன் அவர்களின் நாடகத் திறமையைப் பாராட்டி, அவர் மேலும் தொடர்ந்து பல நாடகங்களைத் தமிழுக்கு அளிக்க வேண்டுமென்று வாழ்த்தி அவரிடம் கொடுத்தேன்.

அந்தமான் கைதி ஒரு துன்பியல் நாடகமாக அமைந்தது. அதேபோல முள்ளில் ரோஜாவையும் துன்ப நாடகமாகவே முடித்திருந்தோம். அந்தமான் கைதியில் நடராஜன் அந்தமான் கைதியாக இருக்கும் நிலையில், தன் தங்கையும் அவள் காதலனும் மறுமணம் புரிந்து கொண்டு மகிழ்வோடு வாழ்வார்கள் என்பதை எண்ணிப் பார்க்கிறான்.அப்போது அவன் மனத்தில் எண்ணுவதை மேகத்தில் காட்சி வடிவாகக் காட்டுவோம். அவன் தங்கை லீலாவும் பாலுவும் மணமாலை சூட்டிய தம்பதிகளாக மேகக் கூட்டத்தில் காட்சியளிப்பார்கள். முள்ளில் ரோஜாவில் அந்தச் சிறு மகிழ்ச்சிகூட இல்லை. கதாநாயகி செல்லம் தன் காதலன் இராமனாதனுக்கு ஒரு உருக்கமான கடிதம் எழுதி அனுப்பிவிட்டு ஆற்றில் விழுந்து தற்கொலே செய்து கொள்கிறாள். அவள் கடிதத்தைப் படித்த இராமனாதன் அலறிக் கொண்டு ஓடுகிறான். ஆற்றுப் பாலத்தின் மீதிருந்து செல்லம் குதித்ததும் அவளைத் தொடர்ந்து ஒடி வந்த இராமனாதனும் ஆற்றில் குதிக்கிறான். அடுத்த காட்சியில் கைகோர்த்தபடி இருக்கும் இரு சடலங்களையும் கரையில் எடுத்து போட்ட நிலையில் உறவினரும் பொதுமக்களும் கண்ணிர் விட்டபடி நிற்கிறார்கள். “மலர்ந்த ரோஜா மலரே மடிந்தாயோ” என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. அத்தோடு நாடகம் முடிகிறது.

முதல் நாள் நாடகம் முடிந்ததும் முள்ளில் ரோஜா நாடக முடிவினைப்பற்றி பொது மக்கள் தங்கள் கருத்தினை எழுதி யனுப்ப வேண்டுமென வேண்டுகோள் விடுத்தோம். அதன்படி நூற்றுக்கணக்கான விமர்சனக் கடிதங்கள் வந்தன. சமுதாயத்தோடு போராடி வெற்றி பெறாமல் தற்கொலை செய்து கொள்வதாக நாடகத்தை முடித்திருப்பது சீர்திருத்தவாதிகளுக்கு உற்சாகம் அளிப்பதாக இல்லையென்றும், காதலர் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக நாடகத்தை முடிக்கவேண்டுமென்றும் சிலர் எழுதியிருந்தார்கள். இப்படிக் கருத்தறிவித்த கடிதங்கள் ஏறத்தாழ 50க்கு மேலிருந்தன. ரசிகர்கள் வேண்டுதலுக்கிணங்கத் துன்பியலிலேயே முடிந்த முள்ளில் ரோஜாவை இன்பியலிலேயே முடிப்பதாக விளம்பரம் செய்தோம். இரண்டாவது வாரமுதல் ஆற்றிலே விழப்போகும் செல்லத்தை இராமனதன் ஓடிவந்து காப்பாற்றுவதாகவும், அடுத்த காட்சியில் இருவருக்கும் திருமணம் நிகழ்வதாகவும் நாடகத்தை முடித்தோம். இந்த முடிவு ரசிகர்களின் உள்ளத்தில் அனுதாபத்தை உண்டாக்கவில்லை.

இன்பியலில் நாடகத்தை முடிக்க வேண்டுமென்று கடிதம் எழுதிய ரசிகர்களில் நாற்பதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் துன் பியலிலேயே முடிந்ததுதான் பொது மக்கள் உள்ளத்தில் நிலைத்து நின்றதென்று கடிதம் எழுதினார்.

சீர்திருத்தக் கருத்துக்களை சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டுமானல் அவர்கள் மனத்திலே மாற்றம் காணச் செய்வது தான் நல்ல வழி. அதற்கு மாறாகப் பெற்றோர்களையோ சமுதாயத்தையோ எதிர்த்து இளைஞர்கள் இன்பமாக வாழ்ந்தார்கள் என்று காட்டுவது இளம் உள்ளங்களை மட்டுமே நிறைவு செய்யும். பெரும்பாலானவர்கள் சமுக சீர்திருத்தத்தை ஏற்க வேண்டுமானால் - அதற்காக நடைபெறும் நாடகங்கள் துன்பியலில்தான் முடியவேண்டும் என்பது அறிஞர்கள் கருத்து. நாடக ஆசிரியரின் கருத்தும் இதற்கு ஒத்திருந்தது. எனவே மூன்றாவது வாரம் முதல் முள்ளில் ரோஜா நாடகத்தைத் துன்பியலிலேயே முடித்தோம்.
-----------------

67. சிறப்புக்குரிய நிகழ்ச்சிகள்


திருச்சியில் நாங்கள் இருந்த 1945-46இல் சிறப்புக்குரிய நிகழ்ச்சிகள் பல நடைபெற்றன. அவற்றில் நாடகத் துறையின் வளர்ச்சியினை விரும்பும் கலா ரசிகர்களுக்கு, மகிழ்வளிக்கக் கூடிய நிகழ்ச்சிகள் இரண்டு. ஒன்று ஈரோடு மாநாட்டினைப் பின்பற்றி 31-3-45இல் தஞ்சையிலுள்ள கரந்தை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடந்த இரண்டாவது நாடகக்கலை மாநாடு. சங்கத் தலைவர் திரு ஐ. குமாரசாமிப்பிள்ளை முன்னின்று இதனை நடத்தினார். இந்த மாநாட்டில் எங்கள் நாடக சபையின் சார்பில் சின்னண்ணா டி. கே. முத்துசாமி கலந்து கொண்டார். முதல் நாடகக்கலை மாநாட்டின் செயலாளர் டி. என். சிவதாணு இம் மாநாட்டிலும் செயலாளராக இருந்து மாநாட்டைச் சிறப்புற நடத்தி வைத்தார்.

இரண்டு, 9.2.46இல் சென்னையில் நடைபெற்ற முன்றாவது நாடகக்கலை மாநாடு. இதனை முன்னின்று நடத்தியவர் நாடகமணி எம். என். எம். பாவலர். இந்த மாநாட்டிலே தான் கே. ஆர் இராமசாமிக்கு கடிப்பிசைப் புலவர் என்றபட்டம் வழங்கப்பட்டது இந்த மாநாட்டிலும் டி. என், சிவதாணு கலந்து கொண்டார். இம் மூன்று மாநாடுகளுக்குப் பின், சென்ற 28 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நாடக வளர்ச்சிக்கென்று மாநாடு எதுவும் இன்று வரை நடைபெற வில்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பழைய முதலாளி பழனியாபிள்ளை

எங்கள் பழைய நாடக முதலாளி திரு. பழனியாபிள்ளை திருச்சியில் எங்களைச் சந்தித்தார். அவர் மிகவும் சிரமமான நிலையிலிருந்தார். ஸ்ரீமீனலோசனி பால சற்குண நாடக சபா என்னும் பெயரால் ஒரு நாடக சபையைப் பல ஆண்டுகள் சிறப் பாக நடத்தியவர். இலங்கைக்கும் சென்று பெரும்புகழ் பெற்றவர். திரு. டி. எஸ். துரைராஜ்,எம். ஆர். சாமிநாதன் சி.வி. முத்தப்பா, சபாபதி முதலிய எத்தனையோ நடிகர்கள் அந்தக்குழுவிலிருந்து பெருமைப் பெற்றார்கள். அந்தப் பெரியவர், கம்பெனி யெல்லாம் கலைந்துவிட்ட நிலையில் தன்னந்தனியாக வந்திருந்தார். அவருக்கு உதவ வேண்டியது எங்கள் கடமையென்பதை உணர்ந்தோம். 5-3-45இல் நடந்த குமாஸ்தாவின் பெண் நாடகத்தின் வசூல் முழுவதையும் அவருக்குக் காணிக்கையாக மேடையிலேயே அளித்தோம்.

கவியின் கனவு

23-4-45இல் ஸ்ரீசக்திநாடக சபாவின்கவியின் கனவு நாடகம் பார்ப்பதற்காக நாகப்படடினம் சென்றிருந்தேன். திரு. சக்தி கிருஷ்ணசாமி அவர்களின் பெரு முயற்சியால் அந்த நாடக சபை புதிதாக உருவாயிருந்தது. காட்சிகளையெல்லாம் புதிய முறையில் அமைத்திருந்தார்கள். கவியின் கனவு ஒரு புரட்சிக்கரமானதேசிய சரித்திர நாடகம். இந்நாடகத்தை எழுதியவர் இப்போது சங்கீத நாடக சங்கத்தின் செயலாளராகப் பணி புரிந்துவரும் கவிஞர் கலைமாமணி எஸ்.டி.சுந்தரம் அவர்கள், மக்களுககு எழுச்சியும் உணர்ச்சியும் ஊட்டத்தக்க முறையில் நாடகத்தின் உரையாடல்கள் அமைந்திருந்தன. பாலக்காட்டில் எங்களை விட்டுப் பிரிந்த எஸ். வி. சுப்பையா அவர்களை மீண்டும் அந்த மேடையிலேதான் நான் பார்த்தேன். நாடகத்தில் அவர் புரட்சிக் கவிஞனாகவந்து அற்புதமாக நடித்தார். திரு. எம். என். நம்பியார் சர்வாதிகாரியாக நடித்தார். அவருடைய திறமையான நடிப்பு, வட இந்தியத் திரைப்பட நடிகர் சந்திரமோகனை நினைவூட்டியது. நாடகத்தை நான் மிகவும் ரசித்தேன்.

நாடகம் முடிந்ததும் திரு. எஸ். டி. சுந்தரம், திரு. சக்தி கிருஷ்ணசாமி இருவரையும் மனமாரப் பாராட்டினேன். நண்பர் எஸ். வி. சுப்பையாவுக்கு வாழ்த்துக் கூறினேன். மறுநாள் நாகையிலேயே தங்கி, அவர்கள் கம்பெனி வீட்டிலேயே விருந்துண்டு 24- 4. 45இல் திருவாரூர் வந்தேன். அங்கு காரைக்குடி ஸ்ரீராம பாலகான சபையாரின் எதிர்பார்த்தது என்னும் சமூக நாடகம் பார்த்தேன். இந்நாடகம் திரு. நா. சோமசுந்தரம் அவர்களால் எழுதப் பெற்றது. உரையாடல்கள் புதியநடையில் எழுதப்பெற். றிருந்தன. நாடகம் நன்றாயிருந்தது. நடிகர்களும் சிறப்பாக நடித்தார்கள். கவியின் கனவு, எதிர்பார்த்தது ஆகிய இரு நாடகங்களும் எனக்குப் புதிய உற்சாகத்தை தந்தன. இரு நல்ல நாடகங்களைப் பார்த்த களிப்புடன் திருச்சிக்குத் திரும்பினேன்.

பூவளூர் பொன்னம்பலனார்

பெரியார் அவர்கள் கண்ட சுயமரியாதை இயக்கத்தோழர்களில் பூவாளுர் அ. பொன்னம்பலனார் அவர்கள் குறிப்பிடத்தக்க தலைவராவார். சிறந்த சொற்பொழிவாளர். கோட்டையூரில் சண்டமாருதம் என்னும் வார ஏட்டினை அவர் நடத்தி வந்தார். எங்கள்பால் மிகுந்த அன்புடையவர். பெரியண்ணாவுக்குப் பொன்னம்பலஞரிடம் பெருமதிப்பு உண்டு. நீண்ட காலமாக அவர்தம்முடைய ஊருக்கு வரவேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய விருப்பத்தை ஏற்று, முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பே. விசுவகாதம் அவர்களுடன் 1.5-45 இல் நானும் பெரியண்ணா, பகவதி எல்லோரும் பூவாளுர் சென்றோம். பொன்னம்பலனார் இல்லத்தில் விருந்து புசித்தோம். பூவாளுர் உடற் பயிற்சிக் கழகத்தார் எங்களுக்கு ஒரு பாராட்டுக் கூட்டம் நடத் தினார்கள். அங்கிருந்து லால்குடி சென்றோம். லால்குடி திரு வள்ளுவர்கழகத்தில் எங்களுக்கு வரவேற்பு நடந்தது. திரும்பு கையில் திருச்சி வரும்வரை முத்தமிழ்க்காவலரும் நானும் மிகவும் பயனுள்ள ஒரு நாடகக் கதை அமைப்பினைப்பற்றி உரையாடிக் கொண்டு வந்தோம். சில ஆண்டுகளுக்குப் பின் முத்தமிழ்க் காவலர் அவர்கள் உருவாக்கிய தமிழ்ச்செல்வம் நாடகக்கதை அன்றைய உரையாடலிலே உருவானதுதான் என்பதுகுறிப்பிடத் தக்கதாகும்.

மகாத்மா காந்தியடிகள் திருச்சிக்கு வருகை

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் 2. 2. 46ல் திருச்சிக்கு வருகை புரிந்திருந்தார். அன்று திருச்சி மாநகரமே விழாக்கோலம் கொண்டிருந்தது. நாங்கள் செய்த தவப்பேற்றின் காரணமாக அன்றுதான் எங்கள் தேசபக்தி நாடகமும் திருச்சியில் ஆரம்பமானது. 1931இல் நாங்கள் மரையில் அரங்கேற்றியபோது தேச பக்தியின் மூலக்கதையான பாணபுரத்து வீரன் நாடகாசிரியர் திரு வெ. சாமிகாத சர்மா அவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. பர்மாவில் இருந்தார். அப்போது அந் நாடகநூல் தடை செய்யப்பட்டிருந்த தால் அவரைத் தேடிப்பிடித்துச் சிறப்பிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிட்டவில்லை. எனவே, திருச்சியில் அந்தச் சிறப்பினச் செய்ய விழைந்தோம். காந்திஜியின் அன்றைய திருச்சி வருகை அதற்கு மேலும் உயர்வளிப்பதாக அமைந்தது. அன்றிரவு தேச பக்திநாடகம் நடைபெற்றது. அன்றைய வசூல் 1122-12-0 ஐயும் வெ. சாமிநாதசர்மா அவர்களுக்குக் காணிக்கையாகக் கொடுத் தோம். அன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காந்திஜியைத் தரிசித்தேன். ஏற்கனவே ஒருமுறை அடிகளை நாகர் கோவிலில் பார்த்திருக்கிறேன். என்றாலும் அன்று அவரைத் தரிசித்தது எனக்குப் புதிய உணர்வினைத் தந்தது.

தேசபக்தி நாடகம் முன்பெல்லாம் நடைபெற்றதைவிடச் சிறப்பான முறையில் இப்போது தயாரிக்கப் பெற்றிருந்தது. “ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே” என்ற பாடலைப் புதிதாகச் சேர்த்து, பாணபுரம் விடுதலை பெற்றபின் சிறுமியர் ஆடிப் பாடுவதாகக் கூட்டு நடனம் அமைத்திருந்தோம். இந்த நாட்டியத்தை அழகிய முறையில் தயாரித்திருந்தார். டி. என். சிவதாணு. நாமக்கல் கவினார் அவர்களின் ‘சுதந்திரம் இல்லாமல் இருப்பேனோ’ என்ற பாடலை முக்கியமான ஒரு கட்டத்தில் சேர்த்திருந்தோம்.

பேராசிரியர் வ. ரா.

தேசபக்தி நாடகம் 19.2.46இல் நடைபெற்றபோது பிரபல எழுத்தாளர் பேராசிரியர் வ. ரா. அவர்கள் தலைமை தாங்கினார். நாடகத்தை ரசித்த அவர் பாராட்டிப் பேசுகையில், இப் படிப்பட்ட ஒரு புரட்சிகரமான நாடகத்தை 1931 முதல் நடித்து வரும் டி. கே. எஸ். சகோதரர்களை நான் எவ்வளவு பாராட்டினலும் போதாது.இந்த தேசம் விடுதலை பெற்றபின் சுதந்திர இந்தியாவில் இந்தக் கலைஞர்களெல்லாம் கட்டாயம் கெளரவிக்கப்படவேண்டும். என்றுகூறினார்.பேராசிரியர் வ.ரா. மிகப் பெரிய சிந்தனையாளர். அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது புதிய புதிய கருத்துக்களையெல்லாம் அயைாசமாகக் கொட்டுவார். அவருடைய எழுத்தோவியத்தை நான் முதலா வதாகப் படித்தது காலணு விலையுள்ள காந்தி பத்திரிகையில். திரு. வி. க., பெரியார் ஈ. வே. ரா. முதலியோரைப் பற்றி அவர் எழுதி வந்த குறிப்புகள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. அதன் பிறகு நான் மணிகொடி இலக்கிய ஏட்டின் தோழனானேன். வ. ரா. விடம் எனக்கு ஒரு தனி மதிப்பு. அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல். கோவையில் நடைபெற்ற தமிழ் மாகாண மாநாட்டுக்குச் சென்று, பாரதி பாடல்களைப் பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அத்த மாநாட்டிலேதான் உடலுழைப்பில்லாத காங்கிரஸ் உறுப்பினார்கள் நூல்சந்தா கொடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைவர் ராஜாஜி அவர்கள் அந்தத் தீர்மானத்தைப் பற்றி விளக்கிக்கொண்டிருந்த பொழுது, “அந்தத் தீர்மானந்தின் வாசகம் சரியில்லை. திருத்தம் வேண்டும்” என்று பிரதிநிதிகள் கூட்டத்திலிருந்து ஒரு குரல் கம்பீரமாக ஒலித்தது. அதைத் தொடர்ந்து ஒர் உருவமும் எழுந்து நின்றது.

உடனே ராஜாஜி, எழுந்து நின்ற அந்த உருவத்தை நோக்கி “ஸ்ரீமான் வ. ராமசாமி ஐயங்கார் வாசகத்தைச் சரியாகத் திருத்திக் கொடுப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை’. என்று கூறினார். அன்றுதான் வ. ரா. அவர்களை நான் முதன் முதலாகச் சந்தித்தேன். ‘ஐயங்கார்’ என்றதும் பட்டைநாமம் , பஞ்சகச்சம், இவைகலெல்லாம் என் கண்முன் நின்றன. பார்த்தேன்; உண்மையாகவே பிரமித்துப் போனேன். அருகிலிருந்த நண்பரிடம் வ. ரா. அவர்கள் ‘ஐயங்காரா?’ என்று கேட்டேன், “பூணூலைக்கூட வெகு நாட்களுக்கு முன்பே அறுத்தெறிந்து விட்ட புரட்சி வீரர்” என்றார் நண்பர். இதைக் கேட்டதும் வ. ரா. அவர்களிடம் நான் வைத்திருந்த அன்பும் மதிப்பும் பன் மடங்கு உயர்ந்தன. 1945இல் தான் நான் அவரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிட்டியது. சில மணி நேரங்களே அவருடன் கழித்தேன். அது மறக்க முடியாத நாள். எனக்கேற்பட்டிருந்த மனத் தளர்ச்சி, உற்சாகக் குறைவு எல்லாம் எங்கேயோ ஒடி மறைந்துவிட்டன. வ. ரா. அவர்களின் எழுத்தில் நான் கண்ட அதிசயம் ஒன்று. புத்தகத்தைப் படிக்கிறோம் என்ற உணர்ச்சி மறைந்து, அவர் நம்முடன் பேசிக் கொண்டிருப்பது போலவே உணருவோம். மகாகவி பாரதியாரின் புகழைப் பரப்பியவர்களில் முதலாவதாகக் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர் வ. ரா. அவர்களே ஆவர். நாம் இருவர்-தாகசாந்தி

பேராசிரியர் வ. ரா அவர்களைப் பார்க்கச் சென்னைக்குச் சென்றிருந்த பொழுது என்னெஸ்கே நாடக சபையின் நாம் இருவரை ஒற்றைவாடை அரங்கில் பார்த்தேன். ப. நீலகண்டன் அவர்களின் இரண்டாவது நாடகம் இது. முள்ளில் ரோஜா திருச்சியில் நடந்து கொண்டிருக்கும் போதே சகோதரர் எஸ். வி. சகஸ்ர நாமத்தின் அழைப்பினை ஏற்று என்னெஸ்கே நாடக சபைக்கு நாம் இருவர் நாடகத்தைக் கொடுத்திருந்தார் ப. நீலகண்டன். நாடகத்தை மிகவும் உன்னதமாகத் தயாரித்திருந்தார் சகஸ்நாமம். இப்போது கே. ஆர். இராமசாமி தனியே கிருஷ்ணன் நாடக சபை என்ற ஒரு புதிய சபையைத் தஞ்சாவூரில் தொடங்கி விட்டதால் நாம் இருவரில் சகஸ்ரநாமமே கதா நாயகனாக நடித்தார். திரு வி. கே. ராமசாமி டி. ஏ. ஜெயலட்சுமி முதலியோரும் இதில் நடித்தனார். நாடகம் ப. நீலக்கண்டனின் நாடகப்புகழை மேலும் பலபடிகள் உயர்த்தியது. மறுநாளும் சென்னையில் தங்கினேன். ஸ்ரீ ராம பாலகான சபையாரின் தாகசாக்தி நாடகத்தை சென்னை சுகுண விலாச சபா நாடக அரங்கில் பார்த்ததாக எனக்கு நினைவு. இப்போது பிளாசா டாக்கீஸ் என்ற பெயரில் நடந்து வரும் அதே தியேட்டர்தான் அப்போது சுகுணவிலாச சபைக்குச் சொந்தமான நாடக அரங்காக இருந்தது. தாகசாந்தி நாடகத்தை நாஞ்சில் இராஜப்பா நல்ல முறையில் தயாரித்திருந்தார்.

காஞ்சில் இராஜப்பா

வைரம் அருணாசலம் செட்டியாரின் ஸ்ரீ ராமபால கான சபாவில் நாஞ்சில் இராஜப்பா நடிகராகவும் ஆசிரியராகவும் இருந்தார். இவர் ஒரு சிறந்த நடிகரும் எழுத்தாளரும் ஆவர். பக்தசாருக தாசராக இவர் நடித்ததை நான் ஒரு முறை காரைக் குடியில் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். புயலுக்குப்பின் என்று மற்றொரு சரித்திர நாடகத்தையும் பார்த்திருக்கிறேன். இதில் திரு. கே. ஆர். ராம்சிங் அவர்கள் மிக அற்புதமாக நடித்தார். இவருடைய அபாரமான நடிப்பு பிரபாத் டாக்கீசாரின் அமர்ஜோதியில் நடித்த சக்திரமோகனின் நடிப்பை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும். வைரம் செட்டியார் கம்பெனியில் பல நடிகமணிகள் தோன்றிப் புகழ் பெற்றனார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் எம்.கே. முஸ்தபா, குலதெய்வம் ராஜகோபால், சட்டாம்பிள்ளை வெங் கட்ராமன், சாயிராம், ஏ. ஆர். அருணாசலம் எம். எஸ். எஸ். பாக்கியம், கே. மனோரமா, ஆர். முத்துராமன் ஆகியோராவர்.

அறிஞர் அண்ணா சந்திப்பு

திருச்சியில் நாடகம் தொடங்கியபோது வீடு கிடைக்காமல் தியேட்டரிலேயே தங்கியிருந்ததாகக் குறிப்பிட்டேனல்லவா? சில மாதங்களுக்கு பின் தென்னுாரில் வீடு கிடைத்தது. இப்போது தென்னுாரில் வெண்ணெய் மலைச் செட்டியார் இல்லத்தில் குடி யிருந்தோம், 4-3-46இல் முற்பகல் 10 மணி இருக்கும். திடீரென்று அன்புத் தோழர் அறிஞர் அண்ணா அவர்கள் வந்தார். ஈரோடு நாடகக் கலை மாநாட்டுக்குப் பின்னங்களிடையே சந்திப்பு ஏற்பட வில்லை. கடிதத் தொடர்பும் நின்றுவிட்டது. எனவே, எதிர் பாராத அவரது வருகை எனக்கு வியப்பைத் தந்தது. நான் மகிழ்வோடு வரவேற்றுப் பேசினேன். “புதிய நாடகங்களையெல்லாம் தாங்கள் எப்போது பார்க்கப் போகிறீர்கள்? அந்தமான் கைதி, முள்ளில் ரோஜாவெல்லம் தங்களுக்கு நிரம்பப் பிடிக்கும். திராவிட நாட்டில் அவற்றிற்கெல்லாம் விமர்சனம் வரவில்லையே. ஏன்?” என்று கேட்டேன். வேலைகள் அதிகமாகி விட்டதென்றும், இப்போதெல்லாம் ஒய்வே கிடைக்கவில்லையென்றும் கூறினார். கே. ஆர். இராமசாமிக்கு நாடகம் எழுதிக் கொடுக்கப் போவதாகக் கேள்விப்பட்டேன். எங்களுக்குத்தான் அந்தப் பேறு கிடைக்கவில்லை. ஆலுைம் பரவாயில்லை. எங்கள் ராமசாமிக்குத் தானே கொடுக்கிறீர்கள்! தங்கள் நாடகம் அமோகமாக வெற்றி பெற இறைவனே வேண்டுகிறேன் என்றேன். இறைவனை வேண்டுவதைவிடத் தோழர் ராமசாமியை வேண்டினல் பய னுண்டு. நாடகத்தை நனருக நடத்தும்படி கே. ஆர். ஆருக்கு எழுதுங்கள்’ என்றார். ஏறத்தாழ இரண்டு மணிநேரம் பல்வேறு விஷயங்களைப்பற்றி பேசிகொண்டிருந்துவிட்டு விடை பெற்றுச் சென்றார். நீண்ட காலத்திற்குப்பின் அண்ணா அவர்களைச் சந் தித்தது எனக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.

கிருஷ்ணன் நாடக சபா

நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி தஞ்சையில் ஒரு நாடக சபையைத் தொடங்கினார். சிறையிலிருக்கும் கலைவாண ரின் நினைவாக அந்த நாடக சபைக்கு, கிருஷ்ணன் நாடக சபை என்று பெயர் வைத்தார். அந்தப் பெயரே நடிப்பிசைப் புலவ ரின் நன்றியுணர்வினைக் காட்டியது. கிருஷ்ணன் நாடக சபையின் முதல்நாடகமாக மனோகரா தொடர்ந்து நடைபெற்றது.7.3.46ல் மனோகரா நாடகம் பார்க்க நான் தஞ்சைக்குச் சென்றிருந்தேன். சுதர்சன சபா ஹாலில் மனோகரா நடைபெற்றது. கே. ஆர். இராமசாமி என்னெஸ்கே நாடக சபையில் மனோகரனக நடித்த போது அதனைப் பார்க்க எனக்கு வாய்ப்பு கிட்டவில்லை. தொடர்ந்து பலநாட்களாக அவர்மனோகரனாகநடித்தது எனக்கு வியப்பாகவே இருந்தது. நான் இரண்டு நாட்களுக்கு மேல் தொடர்ந்து மனோகரனாகநடித்ததேயில்லை. அப்படி நடிக்க என்னல் முடிவதில்லை. எங்கள் கம்பெனியில் அவர் இருந்த காலத்தில் நான் அவரை மனோகரனக நடிக்க எத்தனையோ முறை வற்புறுத்தியிருக்கிறேன். பணிவோடு மறுத்துவிட்டார். அவரது மனோகரன் நடிப்பைப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஒரே ஆர்வமாக இருந்து. பார்த்தேன்; ரசித்தேன்; வியந்தேன்; பாராட்டினேன்.

வி. சி. கணேசனின் பத்மாவதி நடிப்பு

அன்று மனோகரனின் தாயார் பத்மாவதியாக நடித்த இளைஞரின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. 1922ஆம் ஆண்டு முதல் 1946ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நான் மனோகரன் பாத்திரத்தை ஏற்று நடித்து வந்திருக்கிறேன். ஆண்களும் பெண்களுமாக எத்தனையோ நடிக-நடிகையர் என்னுடன் பத்மாவதியாக நடித்திருக்கிறார்கள். ஆனால் அன்று பத்மாவதியாக நடித்த அந்த இளைஞரைப்போல் அவ்வளவு துணுக்கமாகவும் திறமையாகவும் யாருமே நடித்ததில்லையென உறுதியாகக்கூறலாம். அநேகமாகப் பாய்ஸ் கம்பெனி நடிகர்கள் எல்லோரையும் ஒரளவுக்கு நான் அறிவேன்.இந்த இளைஞர் எனக்குப் புதியவராகஇருந்தார். அருகிலிருந்த கம்பெனியின் நாடக ஆசிரியர் எம்.எஸ்.முத்துக்கிருஷ்ணன் என்னுடைய பழைய நண்பர். என்னோடு சுவாமிகள் கம்பெனியில் நடித்தவர். அவரிடம் கேட்டேன். “இந்த பத்மாவதி யார்?” என்று. “இவரைத் தெரியாதா? இவர்தான் வி, சி. கனேசனின்” என்றார் அவர், அன்றுதான் முதல்முறையாக திரு. கணேசனின் நடிப்பைப் பார்த்தேன். நாடகம் முடிந்ததும் கே. ஆர். இராம சாமியைச் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பத்மாவதியின் நடிப்பைப்பற்றி மிகவும் பாராட்டினேன். இந்த இளைனார் விரைவாக முன்னுக்கு வரக்கூடியவர். இவரை விட்டு விட வேண்டாம்” என்று கூறினேன்.

முன்னாள் நடிகமணிகள்

இதன் பிறகு கே. ஆர். இராமசாமி, தான் என்னெஸ்கே நாடக சபையிலிருந்து பிரிந்து தனியே கம்பெனி தொடங்கி யதற்கான காரணங்களை விளக்கினார். அவர் கூறிய காரணங்கள் சரியோ, தவறோ எனக்குத் தெரியாது. ஆனால் சிறையிலிருக்கும் கலைவாணர் பெயரால் என்னெஸ்கே நாடகசபை என்று ஒன்றும் கிருஷ்ண நாடகசபை என்று ஒன்றுமாக இரு நாடகக் குழுக்கள் இயங்கி வருவதும் இவ்விரு குழுக்களையும் நடத்துபவர்கள் எங்கள் குழுவின் முன்னாள் நடிகமணிகள் எஸ். வி. சகஸ்ரநாமமும், கே. ஆர். இராமசாமியும் என்பதிலே நான் பெருமை அடைவதாகவும் கூறினேன். உடனே இராமசாமி சட்டென்று “யார் பெயரால் நடத்துகிறோமோ அந்தப் பெயருக்குரிய கலைவாணரும் நம் கம்பெனியின் நடிகர்தானே!” என்றார். அவர் அவ்வாறுமணம் விட்டுக் கூறியது என்னை மேலும் பெருமைப் படுத்துவதாக இருந்தது. நன்றி கூறிவிட்டுத் திருச்சிக்குத் திரும்பினேன்.

வானொலி நிலையத் தொடர்பு

நாங்கள் திருச்சிக்கு வந்த முதல் மாதத்திலேயே திருச்சி வானொலி நிலையத்தோடு தொடர்பு ஏற்பட்டு விட்டது. எங்கள் குழுவின் இளம் நடிகர்கள் பக்ததுருவன், கந்தலீலா ஆகிய இரு நாடகங்களில் நடித்தார்கள். தம்பி பகவதி பக்தமீராவில் ராணாவாக நடித்தார். 23. 3- 45இல் மனோகரா நாடகத்தைப் பெரும்பாலும் நாங்களே நடித்தோம். பெ. கோ. சுந்தரராஜன் அவர்களின் ஸ்ரீஹர்ஷன் என்னும் சரித்திர நாடகத்திலும் நான் நடித்தேன். நிலையத்திலுள்ள எழுத்தாள நண்பர்கள் சுகி. சுப்பிரமணியம், கே. பி. கணபதி (மாறன்) எம். பி. சோமு, ஆறுமுகம் குகன், இசை இயக்குநர் கே. சி. தியாகராஜன் முதலியவர்களுட னெல்லாம் எனக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அகிலன், ‘சிவாஜி’ ஆசிரியர் திருலோக சீதாராம், ‘கிராம ஊழியன்’ ஆசி ரியர் வல்லிக்கண்ணன், ‘கலாமோகினி’ ஆசிரியர் இராஜ கோபால் முதலிய திருச்சி எழுத்தாளர்களோடெல்லாம் எங்களுக்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. திருச்சியில் ஒவ்வொரு நாளும் நாடகம் முடிந்த பிறகு தியேட்டருக்கு முன்புறமுள்ள முற்ற வெளியில் ஒர் இலக்கியக் கூட்டமே நடைபெறும். எங்கள் நாடகங்களைப் பற்றிய பல்வேறு வகையான விமர்சனங்களை நாங்கள் ரசனையோடு கேட்டுக் கொண்டிருப்போம். அந்த இன்ப நாட்களையெல்லாம் இப்போது நினைத்தாலும் இதயம்பூரிக்கிறது. திருச்சியில் ஒன்றரை ஆண்டு காலமாக நாடகம் முடிந்த பிறகு இவ்வாறு இலக்கியச் சிந்தனைகளில் ஒவ்வொரு நாளும் திளைத்திருந்தோம்.

வாழ்வு சிறிது வளர்கலை பெரிது

“உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்” என்ற வாக்கியத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் முன்திரையில் எழுதித் தொங்கவிட்டிருப்பது பற்றிச் சில நண்பர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். ஒரு நாள் மாலை நாடகம் முடிந்த பிறகு வழக்கம்போல் கூடும் இலக்கிய நண்பர்கள் கூட்டத்தில் இதைப்பற்றி விவாதித்தோம், கலை சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு வாக்கியத்தை அமைப்பது நல்லதென சிவாஜி ஆசிரியர் திருலோக சீதாராம் யோசனை கூறினார். எங்களுக்கும் அவருடைய யோசனை சரி யாகப்பட்டது. தோழர் ஜீவானந்தம் அவர்களைத் திருச்சியில் சந்தித்தபோது அவருடனும் கலந்து பேசினோம். கலைத்தொடர்புடைய ஒரு வாக்கியத்தைத் தேர்ந்தெடுத்துச் சொல்லும்படி அவரைக் கேட்டுக்கொண்டோம். “Life is short, art is great” என்னும் ஆங்கில வாக்கியத்தை அவரே எடுத்துச் சொன்னார். அந்த வாக்கியத்தைத் தமிழில் அழகாக மொழி பெயர்த்தார் திருலோக சீதாராம். மறுநாளே வாக்கியம் முன்திரையில் எழுதப் பட்டது. வாழ்வு சிறிது; வளர்கலைப் பெரிதே!

ஆம், இந்த வாக்கியம் கலை சம்பந்தமான எங்கள் குறிக்கோளின் விளக்கமாகவும் அமைந்தது. திருச்சியில் 31. 3. 46 இல் பட்டாபிஷேக நாடகமாக மனோகராவை நடத்தி விட்டுக் கோவைக்குப் பயணமானோம்.
-----------------

68. பில்ஹணன் திரைப் படம்


கோவை தியேட்டர் ராயல் புதிய நாடக அரங்கம். அது 15.4.46க்குள் கட்டி முடிந்து விடும் என்று எங்களுக்குச்சொல்லப் பட்டிருந்தது. 19ஆம் தேதி நாடகம் தொடங்கலாம் என்ற திட்டத்துடன் 4-4-46 இல் கோவை வந்து சேர்ந்தோம். சரியாக ஒன்றரை மாத காலம் தியேட்டருக்காகக் காத்திருக்க நேர்ந்தது. கம்பெனி வீடு நகருக்குள் கிடைக்கவில்லை. தியேட்டரிலிருந்து ஒன்றரை மைல்தொலைவில் இராமநாதபுரத்தில் தங்கியிருந்தோம் அதிக தூரம் என்றாலும் வீடு மிகவும் வசதியாக இருந்தது. அருகிலேயே பெண்களுக்குத் தனி வீடும் கிடைத்தது.

ஷண்முகா அரங்கம்

கோவை நகரப் பிரமுகர்கள் சிலருடன் சின்னண்ணா கலந்து ஆலோசித்தார். நாடகத்திற்காக ஒரு நல்ல அரங்கம் கோவையில் கட்டுவதற்குத் திட்டமிட்டார். பிரிமியர் சினிடோன் உரிமையாளர் திரு ஏ. என். மருதாசலம் செட்டியார், சர். ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்களின் மருமக்கள் திரு ஏ. சண்முகம் சகோதரர்கள், திரு டி. கே. சங்கரன் சகோதரர்கள், திரு. சி. எஸ். இரத்தின சபாபதி முதலியார் அவர்கள் மகன் திரு சதாசிவ முதலியார் ஆகியோர் பங்குதாரர்களாகச் சேர்ந்து கோவை மேட்டுப் பாளையம் சாலையில் தியேட்டருக்குத் தேவையான இடத்தை வாங்கினார். ஷண்முகம் கம்பெனி என்ற பெயருடன் ஒரு கூட்டுக் கம்பெனியை நிறுவினார். கட்டப்படும் நாடக அரங்குக்கு சண்முகா அரங்கு எனப் பெயர் வைப்பதாக ஒரு முகமாக முடிவு செய்யப் பெற்றது.

22. 4. 1946 இல் சண்முகா அரங்குக்கு அடிப்படைக் கல் காட்டு விழா விமரிசையாக நடைபெற்றது.

ஷண்முகம் கம்பெனிக்கு முதல் நிர்வாக டைரக்டராக ஏ. என். மருதாசலம் செட்டியார் பொறுப்பேற்றார், அரங்க அமைப்பு வேலைகள் விரைவாக நடைபெறத் தொடங்கின.

தியேட்டர் ராயலில் சிவலீலா

10.5-46ஆம் தேதி தியேட்டர் ராயலில் சிவலீலா நாடகம் தொடங்கியது. நாங்கள் எதிர் பார்த்ததைவிட அதிகமாக வசூலாயிற்று. திங்கட்கிழமை தோறும் விடுமுறை விடும் வழக்கத்தை மேற்கொண்டோம். தினசரி நாடகம் நடைபெறுவதிலிருந்து ஒருநாள் ஒய்வு கிடைத்தது நடிகர்களுக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கும் ஆறுதலாக இருந்தது. தியேட்டருக்குப் போகவும் வரவும் வசதியாக இருக்கும் பொருட்டு ஒரு பழய ‘வேன்’ வாங்கினோம். அதில் 20 பேர்வரை போகலாம். இரண்டு தடவைகளில் நடிகர்கள் எல்லோரையும் கொட்டகையில்கொண்டு சேர்ப்பதற்கு ‘வேன்’ மிகவும் செளகரியமாக இருந்தது.

பில்ஹணன் பட முயற்சி

வெற்றிகரமாக நடைபெற்று வந்த பில்ஹணன் நாடகத்தை வெள்ளித்திரையில் கொண்டுவரச் சின்னண்ணா விரும்பினார். புதுத் தியேட்டர் கட்டுவதற்குக் கூட்டுச் சேர்ந்திருந்த நிலையில் மேலும் படப்பிடிப்பில் பணத்தைச் செலவு செய்வது சிரமமாக இருக்கு மென்று பெரியண்ணா கருதினார். குமாஸ்தாவின் பெண் படத்தில் கூட்டு டைரக்டராகப் பணி புரிந்த திரு. கே. வி. சீனிவாசன் பில்ஹணனைத் தாமே தனியாக டைரக்ட் செய்ய விரும்பினார். அவரும் சின்னண்ணாவும் இதில் அதிக ஆர்வம் காட்டியதால் அந்த ஆர்வத்தைத் தடை செய்ய பெரியண்ணா விரும்பவில்லை. சேலம் சண்முகா பிலிம்ஸ் கூட்டுறவோடு பில்ஹணனச் சென்ட்ரல் ஸ்டியோவில் ஆறு மாத காலத்திற்குள் எடுத்து முடித்து விடலாம் என்று டைரக்டர் கே. வி. சீனிவாசன் உறுதி கூறினார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. நாடகக் குழுவின் நடிக-நடிகையரைக் கொண்டே பில்ஹணனைப் படமெடுக்க முடிவு செய்யப் பட்டது. சேலம் ஷண்முகா பிலிம்ஸ் திரு கந்தசாமி செட்டியாருடன் கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

நீதிபதி செளத்திரி பாராட்டு

அந்தமான் கைதியிலும், முள்ளில் ரோஜாவிலும் எஸ்.எஸ். இராஜேந்திரன் கதாநாயகனக நடித்ததால் எனக்கு ஒய்வு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மேலும் சில நாடகங்களில் ஒய்வுபெற விரும்பினேன். என் எண்ணம் நிறைவேறவில்லை. எஸ்.எஸ். இராஜேந்திரன் கோவையிலேயே விலகிக்கொண்டார். ஆராய்ச்சிமணி என்னும் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் காரணமாக அவரைக் கம்பெனியிலேயே இருக்கும்படி வற்புறுத்த நாங்கள் விரும்பவில்லை. கோவையில் இராஜேந்திரன் இல்லாததால் 10.6.46இல் ஆரம்பமான அந்தமான் கைதியில் கதாநாயகன் பாலுவாக நானே நடிக்க நேர்ந்தது. 11-6-46இல் நடைபெற்ற அந்தமான் கைதிக்கு நீதிபதிசெளத்திரி அவர்கள் தலைமை தாங்கி மிக நன்முகப் பாராட்டிப்பேசினார்.

இந்த நாடகம் நீதிபதியாகிய எங்களுக்கு வழி காட்டும் நாடகமாக அமைந்திருக்கிறது. குற்றம் செய்பவர்கள் எந்தச் சூழ்நிலைகளில் எல்லாம் அதைச் செய்கிறார்கள் என்பதை இந் நாடகத்தின் மூலம் நாங்கள் புரிந்துகொள்ளுகிறோம். கொலைக்குற்றம் செய்தவனுக்கு அதற்குரிய தண்டனையைக் கொடுக்கும் நாங்கள் அந்தக் குற்றத்தை அவன் ஏன் செய்கிறான்? எப்படிச் செய்கிறான்? எந்தச் சூழ்நிலையில் செய்கிறான்? என்பனவற்றை யெல்லாம் நன்கு ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டும் என்பதை இந்த நாடகம் எடுத்துக் காட்டுகிறது” என்று கூறினார் நீதிபதி செளத்திரி. அன்றைய வசூல் ரூ. 1275ம் நாடகாசிரியர், கவினார் கு.சா.கிருஷ்ணமூர்த்திக்கு அன்பளிப்பாக வழங்கப் பெற்றது.

வளையாபதி முத்துக்கிருஷ்ணன்

அந்தமான் கைதி நல்ல வசூலில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் நடைபெற்றது. 9.7-46இல் தம்பி பகவதி திடீரென்று மனைவியின் உடல்நிலை காரணமாக நாகர்கோவில் செல்ல நேர்ந்தது. அப்போது நான் பகவதி நடித்த நடராஜன் வேடத் தைப் புனைந்தேன். பாலு வேடத்திற்கு வளையாபதி முத்துக கிருஷ்ணனுக்குப் பயிற்சி அளித்தேன். முத்துகிருஷ்ணன் அதற்கு முன்பெல்லாம் அதிகமாக வேடம் புனைவதில்லை. வெளியே வேறு அலுவல்களைப் பார்த்து வந்தார். அவரது தோற்றம் கதா நாயகன் வேடத்திற்குப் பொருத்தமாக இருந்ததாலும், நடிப்புத் துறையில் ஈடுபட அவருக்கு ஆர்வம் இருந்ததாலும் அவரைப் பாலுவாக உருவாக்கினேன். நாலைந்து நாடகங்களில் நடித்த பின் அவருக்குப் பாலு மிகவும் பொருத்தமாக இருந்தது. தம்பி பகவதி திரும்பியபின் எனக்கு மீண்டும் அந்தமான் கைதியில் ஒய்வு கிடைத்தது.

10.10-46 முதல் தியேட்டர் ராயல் வாடகை உயர்த்தப் பட்டதாலும் நாங்கள் சொந்தமாகக் கட்டி வந்த கொட்டகை முடியாததாலும் எங்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. பில்ஹனன் படப்பிடிப்புக்குத் தேதி நிச்சயித்து விட்டதால் கேவைக்கு அருகிலேயே இருக்கவேண்டிய சூழ்நிலையும் உருவானது.

பில்ஹணன் தொடக்க விழா

6-11-46இல் பில்ஹணன் படப்பிடிப்பு தொடக்கவிழா சென்ட்ரல் ஸ்டுடியோவில் கோலாகலமாக ஆரம்பமாயிற்று. திருச்சி திருலோக சீதாராம் மற்றும் நண்பர்களெல்லாம் வந்திருந்து விழாவினைத் தொடங்கி வைத்தார்கள். பில்ஹனன் நாடக ஆசிரியர் ஏ. எஸ். ஏ. சாமி அப்போது சென்ட்ரல் ஸ்டுடி யோவில் ஜபிடர் பிக்சர் ஸின் ஸ்ரீ முருகன் படத்திற்கு வசன கர்த்தாவாக நன்கு வளர்ச்சி பெற்றிருந்தார். அவரேபில்ஹனன் திரைப்படத்துக்குரிய உரையாடல்களையும் எழுதித் தர ஒப்புக் கொண்டார். நாடக பில்ஹணனைத் திரைப்பட பில்ஹணனாக எழுதும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பில்ஹணன் தொடக்கவிழா முடிந்ததும் 9-11-46இல் கோவையில் பட்டாபிஷேகம் முடித்துக்கொண்டு பாலக்காடு செல்ல முடிவு செய்தோம். பாலக்காடு கவுடர் பிக்சர் பாலஸ் அதிபர் திருமலைக் கவுடர் அவர்கள் எங்கள்பால் மிகுந்த அன்புடையவர். எனவே அவருடைய தியேட்டர் எளிதாகக் கிடைத்தது. கம்பெனி பாலக்காடு சென்றது.

சேரன் செங்குட்டுவன்

ஒருநாள் சென்ட்ரல் ஸ்டுடியோவில் நானும் ஜூபிடர் சோமசுந்தரம் அவர்களும் கலந்து உரையாடினோம். அப்போது புதிய கதைகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். சேரன் செங்குட்டுவனைத் திரைக்குக் கொண்டு வந்தால் மகத்தான வெற்றி கிடைக்குமென்று நான் கூறினேன். சோமு அதனை வரவேற்றார். கதையை உருவாக்குவதற்குத் தகுதிவாய்த்த ஓர் எழுத்தாளரைக் குறிப்பிடுமாறு என்னைக் கேட்டார். நான் உடனே சிறிதும் தயக்கமின்றி அறிஞர் அண்ணாவின் பெயரைக் கூறினேன். “அவர் எழுதித் தருவாரா”? என்றுகேட்டார் சோமு. “அவருக்கு எழுதிச் சம்மதிக்க வைக்கிறேன். அவர் ஒப்புக் கொண்டால் நாமிருவரும் சென்னைக்கு சென்று அவரை நேரில் சந்திக்கலாம்” என்றேன். அன்றே அண்ணா அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். இரண்டு நாட்களில் பதில் கிடைத்தது. இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

தங்கள் கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி. நன்றி. கொஞ்சம் ஆச்சரியப்பட்டேன், சேரன் செங்குட்டுவனைத் திரை உலகு நினைவில் கொண்டு வந்தது பற்றி. தங்கள் யோசனைப்படி, நான் கதை வசனம் தீட்டத் தடையில்லை. முன்கூட்டி, கதைப்போக்கு எவ்வண்ணம் இருக்க வேண்டும் - என்னென்ன சம்பவங்கள் மட்டும் மக்களிடம் காட்ட விருப்பம் என்பது பற்றி, ஜுபிடரைக் கலந்து பேசுவது அவசியம் என்று கருதுகிறேன்.ஆவன செய்யும் படி அவர்கட்குக் கூறவும்.
அன்பன்
அண்ணாதுரை

இக்கடிதத்தை ஜூபிடர் சோமுவிடம் காண்பித்தேன். அவர் கூறியபடி காஞ்சியில் விரைவில் நேரில் சந்திப்பதாக அண்ணா அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். 10-11-46இல் இருவரும் சென்னைக்குக் காரிலேயே புறப்பட்டோம். 11 இல் சென்னை வந்து உட்லண்ட்ஸ் ஒட்டலில் தங்கினோம். 11ஆம் தேதி என். எஸ் கே. நாடகசபையின் பைத்தியக்காரன் நாடகம் பார்த்தேன். சகோதரர் எஸ். வி. சகஸ்ரநாமம் உருவாக்கிய நாடகம் இது என்பதை அறிந்த போது மிகவும் பெருமிதமுற்றேன். நாடகத்தைப் பேராசிரியர் வ. ரா. வும் நானும் ஒன்றாக இருந்து பார்த்து ரசித் தோம். அருமையான நாடகம்; உணர்ச்சி மிக்க உரையாடல்கள்; எஸ். வி. எஸ். ஸின் நடிப்பு பிரமாதமாக இருந்தது.

என். எஸ் கே. சந்திப்பு

12ஆம் தேதி மகாஜன சபையில் எழுத்தாளர் கூட்டம் நடை பெற்றது. நண்பர்கள் பலரைச் சந்தித்தேன். திரு நாரண துரைக்கண்ணன் அவர்களைக் கண்டேன். உயிரோவியத்தை நாடகமாக்குவதுபற்றி விவாதித்தோம். 13ஆம் தேதி திருநாரண துரைக்கண்ணன் இல்லத்தில் பகல் உணவருந்தினேன். அன்று மாலை நானும் ஜூபிடர் சோமுவும் சிறையில் கலைவாணர் என். எஸ். கே.யைச் சந்தித்தோம். அன்றிரவு ஸ்ரீராம பாலகான சபையின் குடும்ப வாழ்க்கை நாடகம் பார்த்தேன். கதை யமைப்பு எனக்கு நிறைவளிக்கவில்லை. 14 ஆம் தேதி சோமுவும் நானும் காஞ்சீபுரம் சென்றோம். அண்ணா அவர்கள் ஊரில் இல்லாததால் திரும்பினோம். அன்று மாலையே நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியாரைச்சந்தித்து மனோஹரா திரைப்பட உரிமையைக் கேட்டார் சோமு. “ஷண்முகம் மனோகரனாக நடிப்பதாக இருந்தால் தருகிறேன். வேறு எண்ணமிருந்தால் சொல்லுங்கள்” என்றார் பேராசிரியர்; உடனே, “இப்போதைய நிலையில் என்னைத்தான் நடிக்கச் சொல்கிறார். பின்னால் இருக்கும் நிலைமைகளை அனுசரித்து மாறவும் கூடும். எனவே நிபந்தனை எதுவும் போடாமல் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டேன். சோமு அவர்கள், “இல்லை; இல்லை, ஷண்முகந்தான் மனோகரனாக நடிக்க போகிறார். தேவையானால் அந்த நிபந்தனையைத் தாங்கள் போட்டுக் கொள்ளலாம்” என்றார். நான் தான் வற்புறுத்தி, நிபந்தனை எதுவும் போடாமல் மனோகராவின் உரிமையை வாங்கிக் கொடுத்தேன்.

15ஆம்தேதி ஓர் இரவு நாடகம் பார்க்கத்தஞ்சை வந்தேன், பெருத்த மழையினால் அன்று நாடகம் நிறுத்தப்பட்டு விட்டது. 16ஆம் தேதி பில்ஹணனுக்குப் பாடல்கள் எழுத மதுர பாஸ்கரதாஸ் வருவதாக அறிவித்திருந்ததால் மறுநாள் தங்கி நாடகம் பார்க்கும் வாய்ப்பின்றி 16ஆம் தேதி கோவை வந்து சேர்ந்தேன். மதுர பாஸ்கரதாஸுடன் இரண்டு நாட்கள் இருந்து பாடல்கள் பற்றி விவாதித்து விட்டு 19 ஆம் தேதி பாலக்காடு சேர்ந்தேன்.

கடினமான உழைப்பு

பில்ஹணன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததால் பகலில் கோவையிலும் இரவில் பாலக்காட்டிலுமாக நாள் முழுதும் உழைக்க நேர்ந்தது. என்னதான் உள்ளத்தில் உற்சாக மிருந்தாலும் இந்தக் கடினமான உழைப்பை உடல் தாங்க வில்லை. மாலை 5 மணி வரை கோவையில் படப்பிடிப்பு. அதற்கு மேல் காரில் புறப்பட்டுப் பாலக்காடு வருவேன். நாடகத்தில் உழைப்பேன். நாடகம் முடிந்ததும் உடனே புறப்பட்டுக் கோவை சென்று படுத்துறங்குவேன். காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து படப்பிடிப்புக்கு ஆயத்தமாக வேண்டும். ஒளவையார் நாடகம் தொடங்கிய பின் உண்மையிலேயே நான் மிகவும் சோர்ந்து விட்டேன். பகல் முழுதும் படப்பிடிப்பில் இருந்து விட்டு இரவில் ஒளவையாராக நடிப்பது என் சக்திக்கு மீறிய உழைப்பாக இருந்தது. என் சிரமத்தை நான் வெளியே சொல்லவில்லை என்றாலும் தொண்டைக் கட்டிக் கொண்டது. உடல் நலமும் குன்றிய தால் 26. 1. 47 இல் எங்கள் நண்பர்களான பாலக்காடு டாக்டர்கள் ராகவன், சிவதாஸ் இருவரிடமும் உடலைப் பரிசோதித்துக் கொண்டேன். இரண்டு நாள் நன்கு சோதித்த பின் மூன்று மாதங்கள் கட்டாயம் ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், இரவில் 10 மணிக்கு மேல் கண்விழிக்கக் கூடாதென்றும், இப்படியே தொடர்ந்து உழைத்தால் 40 வயதுக்கு மேல் நரம்புத் தளர்ச்சி ஏற்படுமென்றும் கூறினார் டாக்டர் ராகவன். அன்றைய நிலையில் நான் ஒய்வு பெறுவது எப்படி? டாக்டரிடம் நிலைமையை எடுத்துக் கூறினேன். ஒய்வு பெறுவதைத் தவிர வேறு ஏதாவது வழி சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். பிறகு டாக்டர் ராகவனும் சிவதாஸு கலந்து யோசித்தார்கள். நிலைமை அவர்களுக்கே தெரியுமாதலால் அதற்கேற்றபடி எனக்கு மருந்துகள் எழுதிக் கொடுத்தார்கள். அவர்கள் யோசனைப்படி தினந்தோறும் ஊசிபோட்டுக் கொள்ளவும், குறிப்பிட்ட சில மருந்துகளைக் காலை மாலை இரு வேளைகளிலும் தொடர்ந்து சாப்பிட்டு வரவும் ஒப்புக் கொண்டேன். பாலக்காட்டில் இருக்கும்போது அவர்களிடம் ஊசிப்போட்டுக் கொண்டேன். கோவையில் இருந்தபோது எனது நண்பர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் போட்டுக் கொள்வேன். இப்படியே பில்ஹணன் படம் முடியும்வரை மருந்திலேயே காலம் கழித்தேன்.

மனுஷ்யன் நாடகம்

ஒருநாள் திங்கள்கிழமை ஒய்வு நாளன்று பாலக்காடு வாரியார் ஹாலில் மனுஷ்யன் என்னும் மலையாள நாடகம் பார்த்தேன். நாடகக் கதை எனக்கு நிரம்பவும் பிடித்தது. நாடக ஆசிரியர் திரு முதுகுளம் ராகவன் பிள்ளை, அதில் பிரண்டாக நடித்தார். டாக்டராக பிரபல மலையாள நடிகர் அகஸ்டின் ஜோசப் நடித்தார். அவருடைய நடிப்பை முன்பே கொச்சியில் ஏசு நாதர் நாடகத்தில் ஒரு முறை பார்த்திருக்கிறேன். இப்போது மனுஷ்யன் நாடகத்தில் அவரை டாக்டராகப் பார்த்ததும் அவர்மீது எனக்குப் பெருமதிப்பு ஏற்பட்டது. காட்சிகளின் கவர்ச்சியோ ஆடம்பர உடைகளோ எதுவுமில்லாமல் அந்த நாடகம் என்னைக் கவர்ந்தது.

இதே நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து நல்ல காட்சி யமைப்புகளோடு நடித்தால் நாடகம் அபார வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. நாடகம் முடிந்ததும் நாடக ஆசிரியரையும் அகஸ்டீன் ஜோசப் அவர்களையும் பாராட்டினேன். நாடகத்தைத் தமிழில் நடிக்க விரும்புவதாகக் கூறினேன். முதுகுளம் ராகவன் பிள்ளை மிகவும் மகிழ்ந்தார். “விரும்பினல் அப்படியே செய்யலாம். அது எனது பாக்யம்” என்றார். அதற்குப் ஏற்பாடு செய்வதாகக் கூறிவிட்டு விடைபெற்றேன்.

கலையுலகின் எல்லையற்ற மகிழ்ச்சி

ஒருநாள் வாளையார் பகுதியில் வெளிப்புறக் காட்சியில் நடித்துவிட்டு வீடு திருப்பினோம். எல்லையற்ற மகிழ்ச்சி எங்களுக்காகக் காத்திருந்தது. ஆம் கலைவாணரும் பாகவதரும் விடுதலைப்பெற்றார்கள் என்ற நல்ல செய்தியினைக் காதாரக் கேட்டோம். உள்ளம் மகிழ்ச்சிக் கடலிலே மிதந்தது. 23. 5. 47இல் கலைவாணருக்குப் பட்சிராஜா ஸ்டுடியோவிலும் 24. 5. 47இல் எங்கள் ஷண்முகா தியேட்டரிலும் வரவேற்பு விருந்துகள் நடந்தன. நானும் இந்த வரவேற்புக்களிலே கலந்து கொண்டேன். என். எஸ். கே. தமது சிறை அனுபவங்களை விரித்துச் சொன்னபோது என்னல் தாங்க முடியவில்லை. கண்கள் கலங்கின.

பாலகாட்டில் வசூல்குறைந்தது. கோவையில் பில்ஹணன் படமும் முடியவில்லை. கோவைக்கு அருகிலுள்ள திருப்பூர், தாராபுரம் ஆகிய இடங்களில் தியேட்டர் கிடைக்கவில்லை. எனவே கம்பெனி திண்டுக்கல் சென்றது. 27. 5. 47 இல் திண்டுக்கல்லில் நாடகம் தொடங்கப் பெற்றது. திண்டுக்கல்லிலிருந்து அடிக்கடி கோவை படப்பிடிப்புக்காக வந்து போய்கொண்டிருந்தோம்.

வானெலியில் முதல் பேச்சு

தமிழ் நாடகமேடை வசனங்கள் என்னும் தலைப்பில் திருச்சி வானெலி நிலையத்தார் என்னைப் பேச அழைத்தனார். அவர்கள் அழைப்பினை ஏற்றுக்கொண்டேன். 30.7. 47இல் அந்தப்பேச்சை பதிவு செய்யத் திருச்சிக்குச் சென்றேன். பண்டைக்கால நாடகங்களில் வசனங்கள் இருந்த நிலையையும், அதன் பிறகு தவத்திரு சுவாமிகள், பம்மல் சம்பந்தனார் வசனங்களையும் விமர்சித்தேன். தேசபக்தியில் வெ. சாமிநாத சர்மா, அந்தமான் கைதியில் கவினார் கு. சா. கி. முள்ளில் ரோஜாவில் ப. நீலகண்டன் கவியின் கனவில் எஸ். டி. சுந்தரம் குமாஸ்தாவின் பெண்ணில் டி. கே. முத்துசாமி ஓர் இரவில் அறிஞர் அண்ணா ஆகியோர் கையாண்டுள்ள வசன நடை அழகைப்பற்றி ஆய்வுரை செய்தேன். திருச்சி நிலைய எழுத்தாள நண்பர்கள் என் ஆய்வுரையினை வெகுவாகப் பாராட்டினார்கள். அடுத்த வாரத்தில் என்னுடைய வானெலிப் பேச்சு பிரசண்ட விகடனில் வெளிவந்தது. ஆசிரியர் நாரண துரைக்கண்ணன் அவர்களும் அதனைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். வானெலிப் பேச்சுக்காய்த் திண்டுக்கல்லிலிருந்து திருச்சிக்குச் சென்ற அன்றே முற்பகல் பேச்சைப் பதிவு செய்து விட்டுத் தஞ்சை வந்து அன்றிரவே அறிஞர் அண்ணா அவர்களின் வேலைக்காரி நாடகம் பார்த்தேன். வசனங்கள் அற்புதமாக இருந்தன. கதை அமைப்பும் புதுமையாக இருந்தது. கே. ஆர். இராமசாமி இந்நாடகத்தில் மிக உருக்கமாக நடித்தார். சில நாட்களுக்குப்பின் 13-8- 47இல் குடந்தைக்குச் சென்று கே. எஸ் இரத்தினம் அவர்களின் தேவிநாடக சபாவில் ‘சூறாவளி’ என்னும் நாடகம் பார்த்தேன். நாடகத்தின் ஆசிரியர் திரு. ஏ. கே. வேலன் அவர்கள் இந்த நாடகத்திலும் வசன நடை எழுச்சி வாய்ந்த தாக இருந்தது. நண்பர் கே. என். இரத்தினமும், திரு. ஏ. கே. வேலனும் விரும்பியபடி அன்று நாடகத்திற்குத் திண்டுக்கல் தலைமை தாங்கி தேவி நாடக சபாவை மனமாரப் பாராட்டி விட்டுத் திரும்பினேன்.

சுதந்திரத் திருநாள்

1947 ஆகஸ்டு 15ஆம்நாள். ஆங்கில ஏகாதிபத்தியம் ஒன்றுபட்ட இந்தியாவை பாகிஸ்தான் இந்தியா என்று இரு கூறுகளாகப் பிரித்துவிட்டு வெளியேறியது. சுதந்திரத் திருநாள் இந்தியா முழுதும் பட்டி தொட்டிகளிலெல்லாம் கொண்டாடப் பெற்றது. திண்டுக்கல்லில் விடுதலை விழாவினைக் கோலாகலமாகக் கொண்டாடினோம் வெள்ளை ஏகாதிபத்தியம் வெளியேறும் இந்த மகத்தான விடுதலைத் திருநாளைத் துக்ககாள் என்று கொண்டாடினார் பெரியார் ஈ.வே. ரா. இன்ப நாள் என்று கொண்டாடினார் அறிஞர் அண்ணா. அண்ணா அவர்களும் பெரியார் ஈ வே. ரா அவர்களும் தலைவர் ம. பொ. சி. அவர்களும் திராவிட நாடு, விடுதலை, தமிழ் முரசு ஆகிய இதழ்களில் இந்தச் சுதந்திரத் திருநாளைப்பற்றி எழுதியுள்ள தலையங்கங்களை நாங்கள் அனைவரும் ஆர்வத்தோடு படித்தோம். தலைவர் ம. பொ. சி., அறிஞர் அண்ணா ஆகியோரின் கருத்துரைகள் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தன. இருவரும் ஒன்று சேர வேண்டுமென்று என்னுடைய ஆர்வத்தை வெளியிட்டு இரு அறிஞர்களுக்கும் நீண்ட கடிதங்கள் எழுதினேன். சுதந்திரத் திருநாளன்று திண்டுக்கல் நகர முழுவதும் விழாக் கோலம் கொண்டிருந்தது, நான் தரகுமண்டி குமாஸ்தாக்கள் சங்கத்திலும் மற்றும் மூன்று இடங்களிலும் சுதந்திரக் கொடியினை ஏற்றி வைத்துப் பேசினேன். அன்று நடைபெற்ற எங்கள் சிவாஜி நாடகத்தில் இந்த மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் முறையில் தக்க இடங்களில் வசனங்களைச் சேர்த்துப் பேசி ரசிகப் பெருமக்களின் பாராட்டுதல்களைப் பெற்றோம்.

திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 1946ஆம் ஆண்டிலேயே திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிந்து, திருவிதாங் கூரிலுள்ளப் தமிழ் பகுதிகளைத் தமிழகத்தோடு இணைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என்ற அமைப்புத் தோன்றியது. திருவாளர்கள் எஸ். நதானியல் ஆர். கே. ராம், பி. எஸ். மணி, எஸ். ரீவிதாஸ் , வி. மார்க்கண்டன் இரா. வேலாயுதப் பெருமாள் முதலிய தேசபக்தர்கள் அந்த அமைப்பைத் தோற்றுவிப்பதற்கு பெருமுயற்சி யெடுத்துக் கொண்டனார். திருவிதாங்கூரில் தமிழியக்கத்தை வளர்ப்பதற்கு இந்த அமைப்பைச் சார்ந்த பெருமக்கள் அரும்பாடுபட்டார்கள். தமிழ்நாட்டிலிருந்து இந்த அமைப்புக்குத் தொடக்கக் காலத்திலேயே பேராதரவு காட்டினார் தலைவர் ம. பொ. சிவஞானம்.அவர்கள். நாங்களும் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களும் திரு-தமிழர் இயக்கத்திற்கு ஆரம்ப நாள்தொட்டே ஆதரவளித்து வந்தோம். தாய்த்தமிழகத்தோடு இணைய விரும்பும் இவர்களுடைய முயற்சிகளை வரவேற்றுத் தமிழ்நாடு காங்கிரஸ் நிதிக்காக 24. 8. 47இல் திண்டுக்கல்லில் தேசபக்தி நாடகத்தை நடத்தினோம். அன்றைய வசூல் ரூபாய் 1035ம் திரு.தமிழரியக்க நிதிக்காக அவர்களிடம் எங்கள் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டது. மேடையில் நான் பேசிய போது, திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசின் முயற்சிகள் வெற்றி பெறவும், அங்குள்ள தமிழ்ப்பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை ஆகிய தாலுக்காக்களும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிந்து தாய்த் தமிழகத்தோடு சேரவும் வாழ்த்துக்கூறினேன்.

பாரதி மண்டபத் திறப்பு விழா

எட்டையபுரம் பாரதி மண்டபத் திறப்பு விழாவுக்கு அழைப்பு வந்திருந்தது. சென்னையிலிருந்து ‘பிரசண்ட விகடன்’ ஆசிரியர் திரு நாரண துரைக்கண்ணனும் கடிதம் எழுதியிருந்தார். 11-10-72ல் அவர் திண்டுக்கல் வந்தார். மறுநாள் நாங்களிருவரும் புறப்பட்டுப் பகலில் எட்டையபுரம் சேர்ந்தோம். தமிழக முழுவதிலுமிருந்து எழுத்தாள நண்பர்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனார். பேராசிரியர் சீனிவாசராகவன், கு. அழகிரி சாமி, திருலோக சீதாராம், புத்தனேரி சுப்பிரமணியம், கவினார் தே. ப. பெருமாள், பெ. தூரன் முதலிய பலர் எனக்குப் பழக்கமானவர்கள் இருந்தார்கள். எல்லோரும் எட்டைய புரம் அரசரின் மைத்துனார் திரு அமிர்தசாமி பங்களாவில் தங்கினோம். மாலையிலும் இரவிலும் இசைவாணி திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி, இசையரசு திரு எம். எம். தண்டபாணி தேசிகர் ஆகியோரின் இன்னிசை அமுதினைப் பருகினோம். மக்கள் வெள்ளம் போல் குழுமியிருந்தனார். ஒரே நெருக்கடி; வரவேற்புக் குழுவினரால் கூட்டத்தைச் சமாளிக்க முடியவில்லை. தமிழ்நாடே எட்டைய புரத்திற்குள் இருப்பது போன்ற ஒரு பிரமை எனக்கு ஏற்பட்டது. முதல் நாள் விழா முடிந்து நாங்கள் உறங்குவதற்கு இரவு மூன்று மணி ஆயிற்று.

மறுநாள் அதிகாலையில் எழுந்து பாரதி மண்டபத் திறப்பு விழாவில் கலந்து கொண்டோம். தலைவர் இராஜாஜி அவர்கள் அப்போது வங்காளத்தின் கவர்னராக வந்து விழாவில் கலந்து கொண்டார். கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எல்லோரையும் வரவேற்று மிக அருமையாகப் பேசினார். தலைவர் ம. பொ. சி. தோழர் ப. ஜீவானந்தம் ஆகிய இருவரின் பேச்சும் உணர்ச்சிக் கனலாக அமைந்தன.

ஜெய பேரிகை கொட்டடா!

அன்றைய விழாவில் பாட வேண்டுமென்று என் உள்ளம் துடித்தது. முன்னால் சிலர் பாடினார்கள். அவர்கள் பாட்டிலே இனிமையிருந்தது; இசைத்திறன் இருந்தது; ஆனால் பாரதி பாடல்களுக்குத் தேவையான எழுச்சியும் உணர்ச்சியும் இல்லை. நான் கீழே அமர்ந்திருந்தேன். பாரதி பாடல்களை நான் பாடுவதைக் கேட்ட நண்பர்கள் சிலர் பக்கத்திலே இருந்தனார். அவர்கள் என்னைப் பாடும்படியாகத் தூண்டினார். என்னல் அமைதியாக, உட்கார்ந்திருக்க முடியவில்லை. நேராக எழுந்து மேடைக்குச் சென்றேன். தலைவர் இராஜாஜியை வணங்கி விட்டு “நான் ஒரு. பாரதி பாடலைப்பாட அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டேன். அப்போது இராஜாஜிக்கு நான் அறிமுகமில்லாதவன். அவர், “இல்லையில்லை, நேரமில்லை. இனி அனுமதிப்பதற்கில்லை” என்றார். நல்லவேலையாகத் தலைவர் திரு காமராஜ் அவர்கள் இராஜாஜியின் அருகில் இருந்தார். அவர் என்ன அறிந்தவராதலால், “ஷண்முகம் பாரதி பக்தர்; நன்றாகப்பாடுவார்; பாடச்சொல்லுங்கள்,” என்றார், கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியும் எனக்காக இராஜஜியிடம் பரிவுரை செய்தார். அதன் பிறகு இராஜாஜி “அப்படியானால் ஏன் நிகழ்ச்சியில் சேர்க்கவில்லை?” என்று சொல்லிக்கொண்டே “சரிசரி, பாடுங்கள்,” என்றார். நான் ‘மைக்’ கின் முன்னால் வந்து நின்றவுடனே என்னையறிந்தரசிகர்கள் கையொலி எழுப்பினார்கள். நான் உணர்ச்சிப்பிழம்பாக நின்றேன்.

உச்சத்தில் குரலெழுப்பிப் பாடினேன். வெள்ளம்போல் இருந்த மக்கள் கூட்டம் மந்திர சக்தியால் கட்டுண்டதுபோல் நிசப்தமாக இருந்தது. பாட்டு முடிந்ததும் கடலலைபோல் கரவொலி எழுந்தது. நான் சபையை வணங்கிவிட்டுத் திரும்பியதும், தலைவர் இராஜாஜி “மிகநன்றாகப் பாடினீர்கள், இனி யாரும் பேசவோ பாடவோ வேண்டியதில்லை. நன்றி உரை மட்டும் போதும்,” என்றார்.... ...

அன்று மாலையிலேயே புறப்பட்டுத் திண்டுக்கல் வந்து சேர்ந்தோம்.

ஜனசக்தி நாளிதழாக வர ரூ. 5000

திண்டுக்கல்லில் முள்ளில்ரோஜா நாடகம்பார்ப்பதற்காக தோழர் ஜீவானந்தமும் வந்திருந்தார். அவரோடு நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். ஜனசக்தி வார இதழை நாள் இதழாகக் கொண்டு வரத் தீவிர முயற்சிகள் செய்வதாகவும், குறிப்பிட்ட ஒரு அச்சு இயந்திரத்தை வாங்குவதற்கு ரூ. 5000 தேவைப்படுகிறதென்றும், அந்தத் தொகையைக் கடனாகக் கொடுத்தால் இரண்டு மாதத் தவணையில் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் கூறினார். அப்போது எங்களுக்குப் பண நெருக்கடி அதிகம். கோவை ஷண்முகா தியேட்டர் இன்னும் கட்டி முடியவில்லை. அதற்கு எங்கள் பங்குத் தொகையைக் கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் போட்ட திட்டத்தைவிட ஷண்முகா தியேட்டர் அதிகமான தொகையை விழுங்கிக் கொண்டிருந்தது. பில்ஹணன் படப்பிடிப்பும் திட்டமிட்டபடி விரைவில் முடியவில்லை. ஆறு மாதத்தில் படத்தை

முடிக்கலாமென்று எண்ணினோம். பல்வேறு தகராறுகளால் ஏறத்தாழ ஒராண்டாகியும் படம் முடியவில்லை. இந்தநிலையில் தோழர் ஜீவா கேட்ட தொகையைக் கொடுத்து உதவுவது எங்கள் சக்திக்கு மீறிய ஒன்றாகத் தோன்றியது. இதுபற்றிப் பெரியண்ணாவும் நானும் கலந்து யோசித்தோம். தோழர் ஜீவாவின் லட்சியத்திலும் அயராத உழைப்பிலும் பெரியண்ணாவுக்கு அபார நம்பிக்கை இருந்தது. ஆழ்ந்து சிந்தித்த பிறகு எப்படியும் அவர் கேட்கும் தொகையைக் கொடுத்து உதவ உறுதி கொண்டார். மறுநாள் தோழர் ஜீவானந்தத்திடம் ரூ. 5000/-ரொக்கமாகவே கொடுக்கப் பெற்றது. முறைப்படி அதற்காக கடன் பத்திரமோ ரசீதோ எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை.

சென்னை சென்ற ஜீவா நன்றிக்கடிதம் எழுதினார். ஒருவார காலத்திற்குள் கம்யூனிஸ்டுகள் பலர் கைது செய்யப்பட்டதாகவும் தோழர் ஜீவானந்தம் தலைமறைவாகிவிட்டதாகவும் அறிந்தோம். எங்கள் பணத்திற்காக நாங்கள் கவலைப்படவில்லை. தோழர் ஜீவாவைச் சந்திக்கும் வாய்ப்பினை இழந்தமைக்காகவருந்தினோம்.

ஷண்முகா தியேட்டர் திறப்புவிழா

கோவையில் கட்டப்பெற்று வந்த ஷண்முகா அரங்கம்கட்டி முடிக்கப்பட்டு விட்டதாகவும் திறப்புவிழா நடைபெறப் போவதாகவும் அழைப்பு வந்தது. சின்னண்ணா மட்டும் விழாவில் கலந்துகொண்டார். 25. 10. 47இல் திவான் பகதூர் சி. எஸ். இரத்தின சபாபதிமுதலியார் அவர்களால் கோவை ஷண்முகா அரங்கு திறந்து வைக்கப் பெற்றது. எங்களையும் பங்குதாரர் களாகக்கொண்டு கட்டப்பட்ட நாடக அரங்கு ஆதலால் தியேட்டர் வாடகை கொஞ்சம் சாதகமாக இருக்குமென்று எதிர் பார்த்தோம். ஆனால்ஒரு மாதத்திற்கு முன்பே வாடகையை நிர்ணயம் செய்வதில் தகராறு வந்துவிட்டது. வாடகை அதிக மாகக் கொடுக்கவேண்டுமென்ற நிலையேற்பட்டதும் பெரியண்ணா சொந்தத் தியேட்டரில் நாம் நாடகம் நடத்தத்தான் வேண்டுமா என்பது பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார். பெரியண்ணாவின் கோபம் நியாயமானது என்பதைப் பங்குதாரர்கள் உணர்ந் தார்கள். அதன்பின் கோவை ஷண்முகா அரங்கில் நாடகம் நடத்துவது உறுதி செய்யப்பட்டது. கோவைக்குப் பயணமானோம்.
-------------

69. எங்கள் நாடக அரங்கம்


நாடகவாழ்க்கையில் பல ஆண்டுகள் உழன்று தட்டித் தடுமாறி வந்த நாங்கள் எங்கள் நாடக அரங்கு என்று உரிமை யோடு சொல்லிக் கொள்ளத்தக்க வகையில் ஷண்முகா அரங்கம் உருவாகியிருப்பது குறித்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.

சொந்தத் தியேட்டரில் முதல் நாடகமாக 11- 11. 47இல் ஒளவையார் நாடகம் நடைபெற்றது. சுதத்திரம் பெற்ற இந்தியாவின் முதல் நிதியமைச்சர் திரு. ஆர். கே. சண்முகம் செட்டியார் அன்று தலைமை தாங்கினார். மனம் திறந்து பாராட்டினார்.

கே. ஆர். சீதாராமன் ஒளவையார்

பில்ஹணன் படப்பிடிப்பும் தொடர்ந்து நடைபெற்று வந்ததால், இரவில் நாடகத்திலும் பகலில் படத்திலுமாக நடித்து வந்தேன். அடிக்கடி தொண்டை கட்டிக்கொண்டு நாடகம், படம் இரண்டுக்கும் இடையூறு ஏற்படும்போல் தோன்றியது. இரவில் படப்பிடிப்பை வைத்துக் கொள்வதற்கும் முடியாமலிருந்தது. ஒளவையாருக்கு நல்ல வசூலாகியதால் அதனை நிறுத்தவும் விரும்பவில்லை. எனவே எங்கள் குழுவின் நீண்டகால அனுபவம் பெற்றநடிகரான கே. ஆர் சீதாராமனை ஒளவையாராக நடிக்க வைக்கலாம் என்று முடிவுசெய்தேன். 19.11.47 முதல் கே ஆர். சீதாராமன் ஒளவையாராக நடித்தார். மாலை 6மணிக்குமேல் நான் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட நேர்ந்ததால் நாடகத்தைப் பார்க்க இயலவில்லை. படப்பிடிப்பு ரத்து செய்யப் பட்டதால் அதைப்பயன் படுத்திக் கொண்டு ஒருவருக்கும் சொல்லாமல் சபையில் இருந்து நாடகத்தைப் பார்த்தேன். தம்பி சீதாராமன் ஒளவையாராக மிக அருமையாக நடித்தார். அற்புதமாகப் பாடினார். தொடர்ந்து அவரே ஒளவையாராக நடிக்கலாம்

என்ற உறுதி எனக் கேற்பட்டது. நாடகம் முடிந்ததும் உள்ளே சென்று சீதாராமனைப் பாராட்டி உற்சாகப் படுத்தினேன்.

ஔவை ஆசிரியருக்குக் காணிக்கை

ஒளவை நாடகத்தின் உரிமையை திரு. பி. எதிராஜூ அவர் களிடம் நாங்கள் பெற்றபோது அவருக்கு ஒரு சிறு தொகை தான் அன்பளிப்பாகக் கொடுக்க முடிந்தது. எனவே ஆயிரக் கணக்கில் வசூலாகும் கோவையில் அவருக்குக் காணிக்கையாக. ஒரு நாடகம் நடத்திக் கொடுக்க விரும்பினோம். 30.11-47 இல் நடைபெற்ற ஒளவையார் நாடகவசூல் ரூ.1619.8.0ஆசிரியருக்குக் காணிக்கையாகக் கொடுக்கப் பெற்றது. ஒளவையார் முழுவதை யும் பார்த்து, நாடகத்தின் தமிழ்ச்சுவையை நன்முக ரசித்து, நாடகத்தின் மங்களப் பாடலும் தமிழ் மொழி வாழ்த்தாக இருக்க வேண்டுமென்று விமர்சனம் வரைந்த தலைவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களின் திருக்கையாலேயே இந்தக்காணிக்கையை ஒளவை ஆசிரியருக்கு அளிக்கச்செய்தோம். ஆம்; அன்று சிலம்புச்செல்வர்தான் தலைமை தாங்கி வாழ்த்தினார்.

சிலம்புச் செல்வரோடு மேலும் தொடர்பு

1946இல் கோவையில் இருந்த போது, திரு ம. பொ. சி. அவர்கள் நடத்தி வந்த திங்கள் இதழைத் தொடர்ந்து படித்து வந்தேன். 1946 ஆகஸ்டு இதழில் “கண்ணகிக்குக் கோயில் உண்டா?” என்னும் தலைப்பில் சிலம்புச்செல்வர் எழுதியிருந்த சிறிய கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு பெரிய ஆராய்ச்சிக்குத் தோற்றுவாயாக அக்கட்டுரை அமைந்திருந்தது. தமிழ்ப் பேராசிரியர்கள் பலரும் செய்யாத ஒரு சிறந்த ஆராய்ச்சிக்கு வித்திட்டது போன்றிருந்தது அக்கட்டுரை. அவரது கட்டுரையினை பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன். இக்கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு மேலும் நன்கு. ஆராய்ந்து ஒரு நூல் எழுதுமாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து கடிதங்கள் மூலமே எங்கள் உறவு வளர்ந்தது.

1947 நவம்பரில் நடைபெற்ற தமிழரசுக்கழக மாநாட்டிற்கு 100 ரூபாய்கள் நன்கொடை அனுப்பினேன். அதன் காரணமாக நட்புறவு மேலும் வளர்ந்தது. நவம்பர் முன்றாவது வாரத்தின் தலைவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. உடல்நலம் மிகவும் குன்றி யிருப்பதாகவும், வயிற்று நோய் அதிகரித்திருப்பதாகவும், எங்காவது பத்து நாட்கள் சென்னையைவிட்டு வெளியே போய் ஒய்வு பெற விரும்புவதாகவும் எழுதியிருந்தார். கோவை இராமனத புரத்தில் படப்பிடிப்பை முன்னிட்டு ஒரு பெரிய வீட்டில் தங்கி யிருப்பதாகவும், விரும்பினல் எங்கள் இல்லத்திலேயே தங்கிப் பூரண ஒய்வு பெறலாமென்றும் பதில் எழுதியிருந்தேன். தலைவர் அவர்கள் என் அழைப்பினை ஏற்றுக் கொண்டார். 1947 நவம்பர் கடைசி வாரத்தில் கோவைக்கு வந்து எங்களோடு தங்கிளுர், ஒய்வு பெறும் நோக்கத்தோடு தான் வந்தார். ஆனால் நண்பர்கள் அவரை ஒய்வுபெறவிடவில்லை. தினமும் யாராவதுவந்து அவருக்கு அன்புத் தொல்லை கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். திங்கட்கிழமை எனக்கு ஒய்வு நாள். அன்று நானும் தலைவரும் திரைப்படம் பார்க்கச் செல்வோம். திரைப்படத்தில் அவருடைய கவனம் அதிகமாகச் செல்லுவதில்லை, வேறு ஏதாவது இலக்கியங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். 30-11-47இல் அவர் எங்களோடிருந்தால் அவரையே இந்தக் காணிக்கையை அளிக்கப் பயன்படுத்திக் கொண்டோம்.

சி. ஏ. அய்யாமுத்துவின் கஞ்சன் படம்

மறுநாள் 1-12-47இல் இருவரும் கஞ்சன் படம் பார்த்தோம். எனது பெருமதிப்புக்குரிய நண்பர் கோவை சி. ஏ. அய்யாமுத்து அவர்களால் எழுதப் பெற்ற கதை அது. வசனம் பாட்டு அனைத்தையும் அவரே அருமையாக எழுதியிருந்தார். தமிழர் காட்டிலே தமிழர் ஆட்சியே தழைத்திடச் செய்யடா தமிழா ! என்று படத்திலே ஒரு பாடல் வருகிறது. இந்தப் பாடலே மிக உணர்ச்சியோடு பாடியிருந்தார் என் அருமைத் தோழர் எம். எம், மாரியப்பா. பாட்டு மேலும் தமிழர்களுக்குத் தணிக்கொடி வேண்டு மென்றும் முழக்கி முடிகிறது. இந்தப் படத்தைப் பார்த்ததில் தலைவருக்கும்எனக்கும் அளவற்றமகிழ்ச்சி.திரு சி.ஏ.அய்யாமுத்து அவர்களைப் பாராட்டி மறு நாள் கடிதம் எழுதினேன். கஞ்சன் படத்தில் சிறிதும் கஞ்சத்தனம் செய்யாமல் கருத்தை விளக்கமாகப் பாடல் மூலம் முக்கியதற்காக அவரைப் பாராட்டினேன்.

ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம்

பகல் நேரங்களில் பில்ஹணன் படப்பிடிப்புக்குத் தலைவர் அடிக்கடி என்னோடு வந்தார். அங்கும் இலக்கியப் பேச்சுத்தான். வ்ந்த இடத்தில் வேடிக்கையாக படப்பிடிப்பைப் பார்த்துக் கொண்டிருக்கலாமல்லவா? ஸ்டூடியோவுக்குள் வந்தும் அங்கு நடைபெறும் வினோதங்களைப் பார்க்காமல் இலக்கியம் பேசிக் கொண்டிருந்தது எல்லோருக்கும் வியப்பாக இருந்தது. 9.12.47 இல் நடைபெற்ற முள்ளில் ரோஜா முதல் நாடகத்திற்கும் ம. பொ. சி தலைமை தாங்கினார். நாடாகாசிரியர் ப.நீலகண்டன் அவர்களை மனமாரப் பாராட்டினார். அன்று காலை கோவைக்கு அருகிலுள்ள பேரூருக்குச் சென்றிருந்தோம். ஆலயத்திலுள்ள அழகிய சிற்பங்களைக் கண்டு ம. பொ. சி. அதிசயப்பட்டார். தலைவர் எங்களோடு தங்கியிருந்த பதினேந்துநாட்களும் எங்களுக்கு உற்சாகமாக இருந்தது. எங்கள் பெரியண்ணா திரு டி.கே.சங்கரன் ஒர் அதிசய மனிதர் என்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். ஒழுக்கத்தின் உறைவிடம் அவர். அதிகமாக யாரோடும் பேச மாட்டார். அவரை எப்படியோ கவர்ந்து விட்டார் தலைவர் டி. பொ. சி. ஒய்வு நேரங்களில் தலைவரும் பெரியண்ணாவும் தனியேயிருந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். 10. 12. 47இல் எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு சிலம்புச் செல்வர் சென்னைக்குப் புறப்பட்டபோது எங்களுக்கெல்லாம் வருத்தமாக இருந்தது அவர் தங்கயிருந்த நாட்களில் ஒருவரை யொருவர் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டதால் எங்கள் நட்புறவு மேலும் வளர்ந்தது.

உயிரோவியம் அரங்கேற்றம்

திரு. நாரணதுரைக்கண்ணன் அவர்கள் திருச்சிக்கு ஒளவயா ரைப் பார்க்க வந்திருந்தபொழுதே அவரது உயிரோவியம் நாவலை நாடகமாக்கித் தர வேண்டினோம். கோவை முகாமில் நாடகத்துக் கான காட்சிகளுக்குக் குறிப்புகள் எடுத்தோம். நாடகத்தை உயரியமுறையில் அமைத்துத்தந்தார் ஆசிரியர். கவினார். கு. சா. கிருஷ்ணமூர்த்தி உயிரோவியத்திற்கான பாடல்களை எழுதினார். உயிரோவியத்தைப் பற்றிய பல்வேறு சிறப்புக்களை இரண்டாவது பாகத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமெனக் கருது கிறேன். தமிழ்க் காதலை உயர்ந்த முறையில் விளக்கும் ஓர் ஒப்பற்ற நாடகமாக உயிரோவியம் அமைந்தது. மூன்று நாட்கள் தொடர்ந்து மேடை ஒத்திகைகள் நடைபெற்றன. இலண்டன் மாநாகரத்திலிருந்து டிம்மர் செட் ஒன்று வரவழைத்திருந்தோம். எட்டு அடி சமசதுரமுள்ள ஒரு சிறிய இரும்புக் குழாய் மேடை யுடன் அது வந்திருந்தது. அதனை எவ்வாறு இயக்குவது என்பது: புரியவில்லை. எங்கள் கம்பெனி மின்சார நிபுணர் டி.வி. ஆறுமுகம் தாம் அதை இயக்குவதாகக்கூறி, சில மணி நேரங்களில் வெற்றி கரமாக இயக்கிக் காட்டினார். உயிரோவியம் நாடகத்தில் உள் நாடகக் காட்சி ஒன்று வருகிறது. துரோபதை என்னும் நாடகம் கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது. நாடகத்தின் லட்சிய முடி வினைச் சூசனையாகச் சுட்டிக்காட்டும் உள் நாடகம் துரோபதை. இந்த நாடகக்காட்சிக்கு அந்த எட்டடி மேடையை நல்ல முறை. யில் பயன்படுத்திக் கொண்டோம். வெளியிலுள்ள விளக்குகள் முழுவதையும் அணைத்துவிட்டு டிம்மர் செட் டின் துணையோடு: உள்மேடையில் துரோபதை நாடகம் நடைபெறுவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். 14. 1. 48ல் உயிரோவியம் கோவை ஷண்முகா அரங்கில் அரங்கேறியது. கோவைக்கிழார் சி. எம். ராமச்சந்திர செட்டியார் அவர்கள் நாடகத்திற்குத் தலைமை தாங்கினார். அன்றைய நாடக வசூல் ரூ. 1259. 14.0 ம். நாடக ஆசிரியர் திரு. நாரண துரைக்கண்ணன் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பெற்றது.

இரண்டாவது நாள் நடைபெற்ற நாடகத்தில் மாறுங் காட்சியின்போது எனக்கு முகத்தில் பலத்தஅடிப்பட்டது. மூக்குக் கண்ணாடிக்காக ‘பிரேம்’ மாத்திரம்போட்டிருந்தேன். அடிப்பட்ட போது அந்த பிரேம் அப்படியே என் கண்களுக்கு அடிப்பகுதியில் பதிந்து ரத்தக் காயம் உண்டாக்கி விட்டது. கண்ணாடி இருந்தால்: அது உடைந்து கண்களே. ஊறுபடுத்தியிருக்கும், ‘பிரேம்’ மட்டும் போட்டிருந்ததால் கண்கள் பிழைத்தன. எல்லோரும்: நாடகத்தால் ஏற்பட்ட கண் திருஷ்டி என்றார்கள். நாடகம் முடிந்ததும் நேராக எங்கள் நண்பர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் சென்று மருந்து போட்டுக் கொண்டேன்.
-------------

70. தமிழ் மாகாண 43வது அரசியல் மாநாடு


1948 ஜனவரியில் தமிழ் மாகாண 43-வது அரசியல் மாநாடு கோவையில் நடைபெற்றது. அந்த மாநாட்டு நிதிக்காக 17-1-48இல் நாங்கள் உயிரோவியம் நாடகம் நடித்து அதன் வசூல் ரூ. 1448.00 முழுவதையும் மாநாட்டின் தலைவர் திரு காமராஜ் அவர்களிடம் கொடுத்தோம். முதல் அமைச்சராக இருந்த திரு ஒமந்துர் ராமசாமி ரெட்டியார் அன்று தலைமை தாங்கிப் பேசினார். தலைவர் காமராஜ் அவர்களும் பாராட்டினார். நாடக ஆசிரியர் திரு நாரண.துரைக்கண்ணன் அவர்களுக்கும் பொற் பதக்கமும் வழங்கினார்.

இருபெரும் தலைவர்கள் போட்டி

19.1-48இல் நடைபெற இருந்த அந்த மாநாட்டுத்தலைவர் தேர்தலிலே தான் திரு ம. பொ. சி. அவர்கட்கும் திரு காமராஜ் அவர்கட்கும் பலத்த போட்டி ஏற்பட்டது. திரு ம. பொ. சி. அவர்கள் பெறும் பதவிக்காகப் போட்டியிடவில்லை. அதை அவரே தமது ‘தமிழ் முரசு’ இதழில் விளக்கமாக எழுதியிருந்தார். வேங்கடமலை குமரி முனைக்குள் அடங்கிய தமிழ் மாகாணம் அன்மய வேண்டும் என்பதற்காகவே திரு ம. பொ. சி போட்டி யிட்டார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. மூன்றில் ஒரு பங்கு வாக்குகளே அவருக்குக் கிடைத்தன. கிடைத்த வாக்குகள் 111. காங்கிரஸ்காரராகிய திரு ம. பொ. சி. அடைந்ததைக் கேலி செய்யும் முறையில் அப்போது நடைபெற்று வந்த ஒரு. காங்கிரஸ் நாளிதழ் ‘கிராமணியாருக்குப் பட்டை நாமம்’ கட்டம் கட்டிப் பிரசுரித்திருந்தது.

‘கிராமணியாருக்குப் பட்டை நாமம்’ என்ற தலைப்பைப் படித்ததும் என் மனம் வருந்தியது. ஒரு காங்கிரஸ் நாளிதழ் மற்றொரு காங்கிரஸ் ஊழியர் தோல்வி அடைந்ததை இவ்வாறு நையாண்டி செய்திருந்தது எனக்கு வியப்பாகவே இருந்தது.

பக்தவத்சலனார் தீர்மானம்

1948 ஜனவரி 18,19இல் தமிழ் மாகாண அரசியல் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அம்மாநாட்டில் நானும் கலந்து கொண்டு துவக்கத்தில் பாடல்கள் பாடினேன். இரண்டாம் நாள் மேடையில் அன்றைய முதல் அமைச்சர் திரு ஓமந்துர் ராமசாமி ரெட்டியார் அவர்களும், அன்றையத் தமிழ்நாடு காங்கிரஸ் தலை வரும், மாநாட்டின் தலைவருமாகிய திரு காமராஜ் அவர்களும் திரு ஜி. டி. நாயுடு போன்ற உள்ளுர்ப் பிரமுகர்களும், ஏனைய அமைச்சர்கள் சிலரும், திரு ம. பொ. சி. அவர்களும் வீற்றிருந்தார்கள். நானும் மேடையில் அமர்ந்திருந்தேன். மாநாட்டிலே அமைச்சர் பக்தவத்சலம் அவர்கள் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள்.

இந்தியாவில் மொழி வழிப்பட்ட மாகாணங்கள் அமையும் போது தமிழர் பெருவாரியாகவாழும் தொடர்ந்தாற்போலுள்ள பகுதிகளைக் கொண்ட தனி மாகாணம் அமைக்க வேண்டும் என்று அத்தீர்மானம் கூறியது. இது திரு ம, பொ. சி. அவர்களையும் அவரை ஆதரித்தகாங்கிரஸ் காரர்களையும் திருப்திப் படுத்துவதற். காகவே கொண்டுவந்த தீர்மானம். ஆனால் தீர்மானம் மொழி வழி மாகாணங்கள் அமைக்க வேண்டுமென்று உறுதியாகச் சொல்லாமல் அமையும்போது என்று சொல்லப்பட்டது குறித்து திரும, போ.சி. அதிருப்தியடைந்தார். அவர் எழுந்து தம்முடைய கருத்தை அறிவித்தார். அத்தோடு, வடக்கே வேங்கடமலையும் தெற்கே குமரி முனையும் உள்ள தமிழ்நாடு வேண்டும் என்ற திருத்தத்தைப் பிரேரபித்தார். ஆம்; பின்னல் நடைபெற்ற வட எல்லைப் போராட்டத்திற்கு அன்றே ம. பொ. சி. வித்திட்டா ரென்றே நினைக்கிறேன். மாநாட்டுத் தலைவர் திரு காமராஜ், திரு. ம. பொ. சி. அவர்களின் திருத்தலத்தில் வேங்கடம், குமரிமுனை ஆகிய எல்லைகளைப்பற்றிய பகுதியை ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு கோரும் பகுதியை நிராகரித்தார்.

கிச்சலும் குழப்பமும்

இந்தியாவிலிருந்து பிரிந்துபோகக்கூடிய ‘தனித் தமிழ்நாடு ம. பொ. சி. கேட்பதாக, அவர் பொருள் கொண்டு விட்டார். காரணமின்றி இவ்வாறு மாதாட்டுத் தலைவர் தமிழ்நாடு கோரும் பகுதியை நிராகரித்தது எனக்கு மட்டுமல்ல, மாநாட்டில் கூடி யிருந்த பிரதிநிதிகள் யாவருக்கும் வருத்தமாக இருந்தது. தலைவர் காமராஜ் அவர்களின் தவறான கருத்தைப் போக்குவதற்காக நிராகரிக்கப்பட்ட பகுதிக்கு விளக்கம் தர ம.பொ.சி முனைந்தார். ஆனால், தலைவர் காமராஜ் அவரைப் பேசவிடவில்லை. மேடையில் உட்கார்ந்திருந்த எனக்கு மிகவும் ஆத்திரமாக இருந்தது. என்னைப்போல் பிரதிநிதிகள் பலரும் ஆத்திரமடைந்தனார். ‘கிராமணியார் பேசட்டும், கிராமணியார் பேசட்டும்’ என்று சபையில் ‘பெருங்கூச்சல் எழுந்தது. ஆம், திரு ம. பொ. சி. அவர்களைக் கிராமணியர்’ என்றுதான் காங்கிரஸ்காரர்கள் அழைப்பது வழக்கம். அப்போதும் காமராஜர் அவரைப் பேச அனுமதிக்கவில்லை. ம. பொ. சி ஒலிபெருக்கியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இடத்தை விட்டு நகராமல் சிங்கம்போல் நின்றார். ஒன்றுபட்ட இந்தியாவைப் போற்றி வரும் ம. பொ. சி. தனி நாடு பிரித்துத் துண்டாட விரும்புகிறார் என்று காமராஜர் பொருள்கொண்டதை யாரால்தான் பொறுக்கமுடியும்? சபையில் கூச்சல் அடங்கவில்லை. பதினைந்து நிமிடங்கள் ஒரே குழப்பமாய் இருந்தது. மேடையில் இருந்தவர்கள் சிலரும், குறிப்பாகத் திரு. சி.சுப்பிரமணியம், திரு சி. பி. சுப்பையா, காலம் சென்ற ஜகுப் உபையத்துலலா முதலியோரும் கிராமணி யாரைப் பேச விடுங்கள் என்று தலைவர் காமராஜரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். முடிவில் ம. பொ. சி. பேச அனுமதிக்கப் பட்டார்.

கட்டுப்பாட்டைக் காத்த கண்ணியா!

“நான் கேட்பது இந்தியாவிலிருந்து பிரிந்து போகும் தனி நாடல்ல” என்பதை விளக்கினார். அப்போதும் பிடிவாதமாகத் திருத்தத்தை ஏற்க மறுத்தார் காமராஜர். மீண்டும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதற்குள் விபரீதம் ஏற்படாமலிருக்கப் போலிஸ் லாரிகள் வந்து பந்தலைச் சுற்றி அணிவகுத்து விட்டன. ஆத்திரப்பட்ட பிரதிநிதிகள் கூட்டம் ஒன்றுக்கொன்று மோதிக்

கொள்ளும் நிலையில் இருந்தது. பலாத்காரத்தில் இறங்கிவிடும் அறிகுறிகள் தென்பட்டன. இது கண்ட ம. பொ. சி. மீண்டும் ஒலிபெருக்கி அருகில் வந்து நின்று “தமிழ்ப் பெரு மக்களே! நான் காங்கிரஸ்காரன். அதன் கட்டுப்பாட்டை விரும்புகின்ற ஒரு படைவீரன். நான் தலைவரின் நிராகரிப்பை ஏற்கவில்லையென்றா லும்,அதனைத்தொடர்ந்து எதிர்ப்பதன்மூலம் இந்தமாநாடு குழப்பத்தில் கலைவதை விரும்பவில்லை. என்ன ஆதரிக்கும் அன்பர்கள் இப்போது என் வேண்டுகோளை ஏற்று, அமைதி காக்குமாறு வேண்டுகிறேன். தலைவர் விருப்பம்போல் நடத்திக்கொள்ளலாம்” என்று கெம்பீரமாகக் கூறிவிட்டுத் தம் இடத்தில் வந்தமர்ந்தார். மேடையிலிருந்த பலரும் அவரைப் பாராட்டினார். தலைவர் காமராஜ் அவர்களும் கட்டுப்பாடுகாத்த ம.பொ. சி அவர்களைப் பாராட்டினார். அந்த நிலையில் குழப்பத்திற்குக் காரணமாயிருந்த அந்த ஒரு தீர்மானத்திற்கு மட்டும் மறுநாள் காலை ஷண்முகா தியேட்டரில் மாநாட்டைக் கூட்டி அதன் மீது ஒட்டெடுத்து முடிவு கூறப் போவதாகக் காமராஜ் அறிவித்தார். ஆனால் அப்படி ஒரு மாநாடு நடைபெறவே இல்லை.

அன்று ம. பொ.சி. அவர்கள்காட்டிய உறுதியும்,கொள்கைப் பற்றும், நாட்டுப் பற்றும் எனக்கு அவர்பால் இருந்த மதிப்பை மேலும் உயர்த்தின. மறுநாள் ஜி. டி. நாயுடு அவர்கள் இல்லத் திற்கு நாங்கள் சென்றிருந்தபோது, “நீங்கள் ஒலிபெருக்கியைப் பிடித்துக் கொண்டு அஞ்சா நெஞ்சுடன் சிங்கம்போல் நின்ற நிலையைக் கண்டு நான் உங்களைக் காதலித்து விட்டேன்” என்று கூறினார் நாயுடு.

திரு ம.பொ.சி.க்கு நிதி திரட்ட வேண்டுமென்று 1948இல் திரு சின்ன அண்ணாமலை முயற்சி செய்தார். கோவை தேசபக்தர் திரு சுப்ரி மூலம் 500 ரூபாய்கள் நிதி திரட்டியதாகநினைவு.இதைக் குறித்து திரு ம. பொ. சி. எனக்குக் கடிதம் எழுதினார். “இது என் அனுமதியில்லாமல் நடைபெறுகின்றது. இந்த முயற்சியை நான் விரும்பவில்லை” என்று அறிவித்திருந்தார். இதன் பிறகு திதி திரட்டும் முயற்சி கைவிடப்பட்டது. அப்போது ம. பொ. சி. அவர்களின் ஐம்பதாண்டு நிறைவுநாளில் நானே வரவேற்புக் கழகத் தலைவராயிருந்து நிதி திரட்டிக் கொடுத்துக் கெளரவிக்க வாய்ப்பு ஏற்படுமென்று சிறிதும் எண்ணவே இல்லை.
---------------

71. அறவழி காட்டிய அண்ணலின் மறைவு


ஜனவரி 30ஆம் நாள். மக்கள் குலத்திற்குத் துக்க நாள் உலகமே அதிர்ச்சியடைந்தது. இதயம் படைத்தவர் எல்லோரும் அழுதனார். மாலை 6 மணிக்கு அகில இந்திய வானெலி மகாத்மா காந்தியடிகள் மறைந்தார் என்ற அவலச் செய்தியினைப் பலமுறை அலறியது. புதுதில்லியில் அன்று மாலை நான்கு மணி அளவில் ஒரு வெறிபிடித்த இந்துவால் காந்தி மகாத்மா சுடப்பட்டார் என்ற கல்லும் உருகும் செய்தியினைக் கேட்டுக் கலங்கினோம். உடனே நாடகத்தை நிறுத்திவிட்டு மேற்கொண்டு செய்திகளை அறியத் துடித்தோம். இரவு முழுதும் உறக்கமில்லை. மறுநாள் நடை பெற்ற மெளன ஊர்வலத்தில் கம்பெனி முழுதும் கலந்து கொண்டது.

பாரதி பாடல் உரிமை

பிப்ரவரி 2 ஆம் நாள் பாரதி பாடல் உரிமை சம்பந்தமாக ஏ. வி. எம். அவர்களின் நோட்டீஸ் வந்தது. அதுபற்றி எங்கள் வக்கீல் திரு தாண்டவன் செட்டியார் அவர்களைக்கலந்து ஆலோசித்தோம். பில்ஹணன் நாடகத்தில் “தூண்டிற் புழுவினப்போல்” என்னும் மகாகவி பாரதியின் பாடலை நாங்கள் நாட்டியப் பாட லாக அமைத்திருந்தோம். அப்பாடல் பில்ஹணன் படத்திலும் பதிவு செய்யப்பட்டது. பாரதியின் பாடல்களை இசைத் தட்டு களிலும் திரைப்படத்திலும் பதிவு செய்யும் உரிமை சட்டப்படி தம்மைச் சேர்ந்ததென்றும், ஆகவே, பில்ஹணன் படத்திலிருந்து அப்பாடலை நீக்கிவிட வேண்டுமென்றும், அப்பாடலுடன் பில்ஹணன் படம் திரையிடப்படுமானல் தாம் நஷ்டயீடு கோரி

நடவடிக்கை எடுத்துக் கொள்ள நேருமென்றும் நோட்டீசில் குறிப்பிட்டிருந்தது. வக்கீலின் யோசனைப்படி,

பாரதி பாடல்கள் தமிழ்நாட்டின் பொதுச்சொத்தென்றும் அவற்றிற்குத் தனி மனிதர் உரிமை கொண்டாடுவதை ஒப்புக் கொள்ள முடியாதென்றும் நாங்கள் பதில் நோட்டீஸ் கொடுத்தோம்.

காவிரியில் காந்தி அண்ணலின் அஸ்தி கரைப்பு

காந்தியடிகளின் அஸ்தியினை இந்தியாவின் புண்ணிய நதி களிலெல்லாம் கரைக்க வேண்டுமென்று பாரதப் பேரரசு விரும்பியது. அதன்படி திருச்சிராப்பள்ளியில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபக் கரையருகில் அஸ்தி கரைக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. புனிதமான அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நானும் திரு ஏ. என். மருதாசலம் செட்டியார், திரு ஏ. கிருஷ்ணசாமி செட்டியார் முதலியோரும் திருச்சிக்குச் சென்றிருந்தோம். 12. 2. 48இல் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அம்மா மண்டபக் கரையருகில் மக்கள் வெள்ளம் அலைமோதியது. கூட்ட நெருக்கடியில் போக வேண்டாமென்று நண்பர்கள் என்னைத் தடுத்தார்கள். உணர்ச்சிப் பிழம்பாக நின்ற நான் அந்தக் கூட்டத்தில் “வாழ்க நீ எம்மான்” என்ற மகாகவி பாரதியின் பாடலைப் பாடவேண்டுமென்று துடித்தேன். போலீசார் தங்களால் இயன்ற அளவு பெரு முயற்சி செய்து ஜன சமுத்திரத்தில் மூழ்க இருந்த என்னைக் காப்பாற்றி மைக் அருகிலே கொண்டு போய்ச் சேர்த்தார்கள். கண்ணிர் விட்டுக்கொண்டே “மகாத்மா நீ வாழ்க, வாழ்க!” என்ற பாரதி யின் பாடல்களைப் பாடிக் கதறினேன். அன்று நான் பிழைத்ததே ஆண்டவன் அருள் என்றுதான் சொல்ல வேண்டும்...இரவு 12 மணிக்கு, கடமையை நிறைவேற்றிய உணர்வோடு கோவை வந்து சேர்ந்தோம்.

அகிலனின் ‘புயல்’ அரங்கேற்றம்

தமிழ் நாடகப் பரிசுத் திட்டத்தில் வந்த நண்பர் அகிலன் அவர்களின் புயல் நாடகத்தினைக் கோவையில் அரங்கேற்றவிரும்பினோம். எங்கள் அழைப்பினை ஏற்று அகிலன் கோவைக்கு வந்தார்.

இருவரும் நாடகத்தைப் பற்றி நன்கு விவாதித்தோம். ஒரு வார காலத்திற்குள் நாடகத்தைத் திருத்தி எழுதிக்கொடுத்தார். நான் எதிர்பாராத அதிசயம் என்னவென்றால், நாடகத்திற்கான பாடல் களேயும் அவரே எழுதிக் கொடுத்தார். பாடல்கள் நன்றாக இருந்: தன. அதற்கு மெட்டுகள் அமைக்கும் பொறுப்பினே அப்போது எங்கள் குழுவில் நடிகராக இருந்த திரு ஆத்ம நாதனிடம் ஒப்படைத்தேன். ஆத்மநாதன் அப்போதே பாடல்களும் எழுது வார். அவரைப் பற்றிய விரிவான குறிப்புக்களை இரண்டாவது பாகத்தில் சொல்லவிருப்பதால் இங்கு சுருக்கிக் கொள்கிறேன். பாடல்களுக்கு ஆத்மநாதன் அமைத்திருந்த மெட்டுக்கள் அருமை யாக இருந்தன. நான் பாரதி பாடல் உரிமை சம்பந்தமாக. சென்னை செல்ல முன் கூட்டித் திட்டமிட்டிருந்ததால் புயல் நாடகத்தில் வேடம் புனைய வாய்ப்பில்லாது போய்விட்டது.

13.4-48இல் புயல் நாடகம் அரங்கேறியது. நாடகத்தின் கதையமைப்பு நன்முக இருந்தது. நடிகர்கள் அனைவரும் திறமையாக நடித்தார்கள். 20 நாட்கள் நாடகம் தொடர்ந்து நடை பெற்றது. நாடகத்தை அரங்கேற்றி விட்டு 18-4-48 இல் நான் சென்னைக்குப் பயணமானேன்.

பாரதியின் விடுதலைப் பயணம்

சென்னையில் பாரதிபாடலை நாட்டின் பொதுச்சொத்தாக்கு. வது சம்பந்தமாகப் பேராசிரியர் வ. ரா., பரலி சு. நெல்லையப்பர், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஆகியோரை நானும் என் ஆத்மசகோ தரர் நாரண-துரைக்கண்ணனும் சந்தித்துப் பேசினோம். எங்கள் முயற்சிகள் வெற்றிபெற அப்பெரியவர்கள் மூவரும் நல்லாசி” கூறினார்கள். அன்றிரவு நாரண - துரைக்கண்ணன் வல்லிக் கண்ணன், இருவருடனும் கடற்கரை சென்று பாரதி பாடல் விடுதலை முயற்சி பற்றி இரவு 12 மணிவரை உரையாடிக் கொண்டிருந்தோம். மறுநாள் இரவு 10.30க்கு வல்லிக்கண்ணன், நாரண-துரைக்கண்ணன், ஆகியோருடன் பாரதி விடுதலைக்காகத் திருநெல்வேலிக்கு யாத்திரை புறப்பட்டேன்...

மறுநாள்கால திருச்சிவந்து வானெலிநிலையம் சென்றோம். நிலைய எழுத்தாளர் நண்பர் கே. பி.கணபதியைப் பாரதி விடுதலை யாத்திரையில் எங்களுடன் நெல்லைக்கு வருமாறு வேண்டினோம்.

அவர் ஆர்வத்தோடு இசைந்தார். சிவாஜி பத்திரிசை அலுவலகம் சென்று நண்பர் திருலோகசீதாராம் அவர்களையும் அழைத்தோம். அன்று எங்களோடு புறப்பட அவருக்கு வாய்ப் பில்லை. மீண்டும் வானெலி நிலையம் சென்றோம். அங்கு எதிர்பாராது பேராசிரியர் அ. சீனிவாசராகவன் அவர்களே ச் சந்தித்தோம். அவரும் எங்களோடு புறப்படச் சம்மதித்தார். அன்றிரவே செங்கோட்டைப் பாசஞ்சரில் ஐவரும் நெல்லைக்குப் பயணமானோம். இடநெருக்கடியால் பயணம் மிகவும் சிரமமாக இருந்தது. 22-4-48இல் காலை 10-மணிக்கு திருநெல்வேலி வந்து கஸ்தூரிகபே'யில் தங்கி உணவருந்தினோம்.

செல்லம்மா பாரதியைச் தரிசித்தோம்!

பாரதியின் துணைவியார் திருமதி செல்லம்மாபாரதி அவர்களையும், அவரது மூத்த மகள் திருமதி தங்கம்மா பாரதி அவர்களையும் அவர்கள் இல்லத்திற்குச் சென்று சந்தித்தோம்; பாரதி பாடல்களைத் தேசத்தின் பொதுச் சொத்தாக்குவதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென்று திருமதி செல்லம்மாபாரதி எழுதிக் கொடுத்தார். திருமதி தங்கம்மாபாரதியும் அதில் கையெழுத்திட்டார். அதன்பின் நெல்லை நகரசபைத் தலைவர் திரு ப. ரா. அவர்களைக்கண்டு பேசினோம். இரவு தாமிரபரணி சிந்துபூந்துறையில் நாங்கள் ஐவரும் மற்றும் நெல்லை எழுத்தாள நண்பர்கள் சிலரும் கூடினோம். பாரதியின் கவிதைகளே நான் உரத்த குரலில் பாடி எல்லோரையும் மகிழ்வித்தேன். மறுநாள் பிற்பகல் பேராசிரியர் அ. சீ. ரா. அம்பாசமுத்திரம் சென்றார். மற்ற நால்வரும் ஊருக்குத் திரும்பினோம். திண்டுக் கல்லில் நண்பர். கே. பி. கணபதியை வழியனுப்பிவிட்டு மற்ற மூவரும் கோவை வந்து சேர்த்தோம். மறுநாள் இரவு வல்லிக்கண்ணன், நாரண-துரைக்கண்ணன் இருவரும் சென்னைக்குப் புறப்பட்டார்கள். புனிதமான இந்தப் பாரதி விடுதலைப் பயணம் வெற்றிபெற வேண்டுமென்று வாழ்த்தி அவர்களிருவரையும் வழியனுப்பிவைத்தேன்.

திரு நாரண-துரைக்கண்ணனிடமிருந்து இரண்டாம் நாள் கடிதம் வந்தது. பாரதி விடுதலைக்குத் தம் அருமை மகனைப் பலி கொடுத்து விட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். நாங்கள் திருநெல்வேலியிலிருந்த 23. 4. 48 இல் அவரது அருமைத் திரு. மகன் காலமாகி விட்டான். துரைக்கண்ணன் போயிருக்கும் இடம் தெரியாத காரணத்தால் அவருக்குத் தகவல் கொடுக்க இயலவில்லை. மகனின் சடலத்தை வைத்துக்கொண்டு அன்று முழுதும். துரைக் கண்ணனே எதிர்பார்த்திருக்கிறார் அவரது துணைவியார். பயனில்லை. 26.4-48 இல் துரைக்கண்ணன் அவர்கள் தம் இல்லத் திற்குச் சென்ற பிறகுதான் செல்வமகன் மறைந்து விட்ட செய்தி தெரிந்தது. சடலத்தைக் கூடப் பார்க்க முடியாமல் போய். விட்டதே என்று கதறியழுதிருக்கிறார் துரைக்கண்ணன், என்ன செய்வது? சகோதரருக்கு ஆறுதல் கூறி, நீண்ட கடிதம் எழுதினேன்.

1. 5.48-இல் கோவைக்கு வந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு காமராஜ் அவர்களேக் கண்டேன். பாரதி பாடல் விடுதலை சம்பந்தமாக, பாரதியின் துணைவியாரைச் சந்தித்த, விபரங்களை அவரிடம் கூறினேன். சென்னை ராஜ்ய முதலமைச்சர் விரைவில் அதுபற்றி நடவடிக்கை எடுத்துக்கொள்வாரென தலைவர் காமராஜ் அவர்கள் உறுதி கூறினார்.
---------------

72. மூன்றாவது தமிழ் எழுத்தாளர் மாநாடு


தமிழ் எழுத்தாளர் மூன்றாவது மாநாடு நாகர்கோவிலில் திரு. நாரண.துரைக்கண்ணன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.மாநாட்டை முன்னின்று நடத்திய அதன்செயலா வளர்கள், திரு வெ. நாராயணன், திரு பி.மகாலிங்கம் இருவரும் கோவைக்கு வந்திருந்தனார். மாநாட்டுக்கு நிதி சேகரிப்பதற்காக அவர்களோடு ஒருநாள் முழுதும் இருந்து உதவினேன். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் மாநாட்டை நடத்துவதில் மிகுந்த அக்கறையெடுத்துக் கொண்டார். அந்த மாநாட்டில் நான் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென்று கூறியிருந்தார். 12. 5. 48இல் நானும் தலைவர் ம.போ.சி. அவர்களும் கோவையிலிருந்து விமானத்தில் திருவனந்தபுரம் சென்று, அங்கி ருந்து நாகர்கோவில் போய்ச் சேர்ந்தோம். நான் விமானப் பயணம் செய்தது. அதுவே முதல் முறையாகும். 14- 5. 48 ஆம் தேதி காலே மாநாட்டில் கலந்து கொண்டேன். தலைமையுரை முடிந்து எழுத்தாள அன்பர்களின் சில சொற்பொழிவுகளும் நடந்தேறிய்பின் நாடகமும் பத்திரிகையும் என்னும் தலைப்பில் நான் பேசினேன். என் பேச்சு வருமாறு;

“அன்பர்களே நீங்கள் அறிஞர்கள். எதிர்காலத்தின் சிருஷ்டி கர்த்தர்கள். புதுயுகத்தை மலரச் செய்பவர்கள். உங்கள் பேனு முனேக்கு அணுகுண்டைவிட வலிமையுண்டு. உங்கள் முன்னிலை யில் நாடகக் கலையின் பயனைப் பற்றியோ, அதன் வளர்ச்சி நிலையைப் பற்றியோ, நான் அதிகமாக எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

நாடகம் கலைக்கரசு; நாட்டின் நாகரீகத்திற்குக் கண்ணாடி: “பாமரமக்களின் பல்கலைக்கழகம்” என்பனவற்றை யெல்லாம் எழுத்தாளர்களாகிய நீங்கள் நன்கறிந்தவர்கள்.

நமது கவிமணி அவர்கள் ஈரோட்டில் முதலாவதாக நடந்த நாடகக்கலை மாநாட்டிற்கு ஒரு ஆசிச் செய்தி அனுப்பி யிருந்தார்கள். அதில்...... “ஆதிகாலத்தில் தமிழில் நாடகம் இருந்ததோ இல்லையோ என்ற ஆராய்ச்சி அவசியமேயில்லை. இப்பொழுது தரித்திரளுயிருக்கிற ஒருவன், அவனுடைய முப்பாட்டன் கப்பலோட்டி வியாபாரியாய் இருந்தான் என்ற கதையைக் கூறிக் கொண்டிருப்பதானால் யாதும் பயனுண்டா? தரித்திரன் முயற்சி செய்து குபேரன் ஆவதில் ஆட்சேபமில்லையே” என்று குறிப்பிட்டிருந்தார்கள். பொன்னான வார்த்தைகள்!

இன்றைய நிலையில் நாடக இலக்கிய வளர்ச்சிக்கு நாம் என்ன செய்ய வேண்டும்? எழுத்தாளர்கள் என்ன செய்யவேண்டும்? பத்திரிகைகள் என்ன செய்ய வேண்டும்? என்பனவற்றை ஆராய்வதில் செலவழிக்கும் பொழுதுதான் பயனுடையதாயிருக்கும்.

அன்பர்களே, இலக்கியத்துறையின் பல பிரிவுகளில் நாடகமும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்கள். கட்டுரை, சிறுகதை, நாவல் முதலிய இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகள் வளர்ச்சி பெற்று வருவது போல நாடக இலக்கியமும் வளர வேண்டும் என்பதுதான் உங்கள் கருத்தாக இருக்க முடியும். தமிழ் நாட்டில் நாடக நூல்கள் இப்பொழுதுதான் அரும்புகின்றன! இலக்கியச் சுவையுடைய எழுத்தாளர்கள் இப்பொழுது தான் இந்த உலகத்தில் நுழைய முயற்சி செய்து வருகிறார்கள்.

ஆனால், நாடக இலக்கியம் நூல் வடிவில் மட்டும் வளரும் இலக்கியமல்ல. படித்துமட்டும் ரசிக்கும் இலக்கியமல்ல. பார்த்து ரசிக்கும் இலக்கியம். அழகாக அச்சிட்டு வெளியிட்டால் போதாது. அரங்கத்தில் ஆடியாக வேண்டும். நாடக இலக்கியம் நூல்வடிவில் மாத்திரம் இருக்குமானல் அது வளர்ச்சி பெற்றதாக நாம் பெருமை பாராட்டிக் கொள்ள இயலாது.

இலக்கியப் பிரிவுகளில் நாடகம் தலைசிறந்ததாகவும் அதிகப் பயனுடையதாகவும் கருதப்படுவதன் காரணமே இதுதான்.

கண்ணால் பார்க்கும்போது ஏற்படக்கூடிய உணர்ச்சி காதால் கேட்கும் பொழுதோ படிக்கும் பொழுதோ ஏற்படுவதில்லை யல்லவா?

“ஒரு பொருளே, அல்லது தத்துவத்தை ஜனசமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டுமானல், கட்டுரை வாயிலாக, அல்லது சொற்பொழிவு மூலமாகக் கூறுவதைவிடக் கதை வாயிலாக, நாடகவாயிலாக வெளிப்படுத்துவது பெரும் பயன, அதுவும் உடனடியாகத் தருமென்பது என் கருத்து” என்று நமது தலைவர் திரு நாரண-துரைக்கண்ணன் அவர்கள் எழுதியுள்ளார். நமது புரட்சிக் கவினார் பாரதிதாசன் அவர்களும்,

“ஒரு நாட்டின் வேரிலுள்ள தீமை நீக்கி உட்புறத்தில் புத்தொளியைச் சேர்ப்பதற்கும், பெருநாட்கள் முயன்றாலும் முடியா ஒன்றைப் பிடித்த பிடியில் பிடித்துத் தீர்ப்பதற்கும், பெருநோக்கம் பெருவாழ்வு கூட்டுதற்கும் பிறநாட்டார் நாடகங்கள் செய்வார்” என்று கூறுகிறார். முடிவில் “எந்தன் திருநாட்டில் பயனற்ற நாடகங்கள் சினிமாக்கள் தமிழர்களைப் பின்னே தள்ளும்” என்று முடிக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடல் இது. இன்று தமிழ் நாடக உலகம் பூரணமாகப் பயனுள்ள வழியை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. ஒரு எழுத்தாளன் தனது துறையில் உச்சநிலையடைய வேண்டு மென்றால்,அவன் ஒரு நாடகாசிரியகை முயற்சிக்கவேண்டும்.அப் போதுதான் பூரணத்வம் பெறுகிறான் என்பது அறிஞர்கள் முடிவு.

நாடகாசிரியனுக ஆகும்போதுதான் எழுத்தாளனின் கற்பனைகள் கருத்துக்கள் எல்லாம் பொது மக்களுக்கு நன்கு பயன்படுகின்றன. ஷேக்ஸ்பியர் மகாகவிதான். ஆனால், நாடகாசிரியர் என்ற பெருமைக்குள்தான் அவரது கவிதா சக்தி அடங்கி யிருக்கிறது. வங்காளக் கவினார் துவிஜேந்திரலால்ராய் அவர்கள் இலக்கியத்தின் பல பிரிவுகளிலும் புகுந்திருந்தாலும் நாடக ஆசிரியர் என்றே மக்களால் அழைக்கப்படுகிரு.ர். பேரறினார் பர்னட்ஷா அவர்கள் கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் எல்லாம் எழுதியிருந்தாலும் பிரபல நாடாகாசிரியர் பர்னட்ஷா என்றே அழைக்கப்படுகிறார். நாம் வெகுதூரம் போகவேண்டாம். தோழர் அண்ணாத்துரை அவர்கள் நாடகாசிரியரான பிறகுதான் அறிஞர்

அண்ணாத்துரையென நம்மால் புகழப்படுகிறார். இதெல்லாம் எதைக் குறிக்கின்றது?... கட்டுரை, சிறுகதை, நாவல், எழுது வதைவிட நாடகம் எழுதுவ்து கஷ்டமானது என்பது மட்டுமல்ல: நாடகம் மக்களுக்கு அதிகப் பயனளிக்கக்கூடியது என்பதுதான் இதன் உண்மை.

அன்பர்களே, நாடகம் மட்டுமல்ல; பொதுவாக எந்தக் கலையை எடுத்துக்கொண்டாலும் அதன் குண தோஷங்களை ஆராய்ந்து பொதுமக்களுக்கு அறிவித்து, கலை வளர்ச்சிக்கு ஆதர வளிக்கும் பொறுப்பு இன்று பத்திரிகைகளிடம் இருக்கிறது. பத்திரிகைகள் நடுநிலையிலிருந்து விருப்பு வெறுப்பின்றி நன்மை தீமைகளை எடுத்துச் சொன்னல்தான் கதைகள் வளர்ச்சி பெறும்.

பகல் முழுவதும் உழைத்துவிட்டு அலுத்துப் போய் வரும். பாட்டாளிக்குச் சிலமணி நேரங்கள் சிரித்து மகிழ்வதுதான் இன்றையத் தேவையாயிருக்கலாம். வேடிக்கையாகப் பொழுது போக்க நாடகம்பார்க்க வருபவர்களுக்கு அரங்கத்திலும்அரசியல் பிரசாரம் செய்வது அவசியமில்லாததாகத் தோன்றலாம். மக்களின் உடனடித் தேவையைப் பயன்படுத்திக்கொண்டு அவர் களின் சிலமணி நேர மகிழ்ச்சிக்காக நாடகங்கள் நடைபெற்றால், போதாது.

மக்களின் வாழ்க்கைநிலை உயர, அவர்கள் நல்வாழ்வுவாழ, என்னதேவை? அவர்களுக்கு நாம் எதைச் சொல்லவேண்டும்? என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு கலைஞர்களிடம் இருக் கிறது. மக்களின் தேவையென்னவென்பதை அவர்களுக்கும். எடுத்துக்காட்டி கலைஞர்களுக்கும் எடுத்துக்காட்டி மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டும் கலைஞர்களே, கலைகளை, நாடகங்களைப் பாராட்டி ஆதரிக்கும்படிசெய்து, மக்களின் ரசனையை உயர்த்தும். பொறுப்பு, இன்று பத்திரிக்கைகளிடம் இருக்கிறது.

மக்களின் ரசனைக்குத் தக்கவாறு கலைகள் வளர்ந்தால் வளர்ச்சியில் வேகமிருக்காது. மக்கள் கீழே இருக்கிறார்கள் என்பதற்காக இலக்கியமும் கீழே இறங்கி விடாதபடி பத்திரிகைகள் கண்காணிக்க வேண்டும். மக்களுக்குப் புரிகிற பாஷையில் எழுதவேண்டும்; புரிகிற பாஷையில் பேசவேண்டும். புரிகிற பாஷை-புரிகிற பாஷை என்று உரையாடலின் தரத்தைக் குறைத்துக் கொண்டே போவோமானால் சின்னாட்களில் பாஷையே இராது. வேறு உருவத்தில் மாறிவிடும். குறிப்பிட்ட ஒரு நிகலயை நிர்ணயம் செய்துகொண்டு அந்த நிலைக்கு மக்களின் ரசனையை உயர்த்தவேண்டியது விமர்சகர்களின் கடமை. நாடகக்கலையால் மக்கள் திருந்தவேண்டும். மக்களின் ஆராய்ச்சி அறிவிகுல் நாடகக் கலை வளரவேண்டும்.

ஒருநாடகம் குறைந்தது ஒருமாத காலமாவது நடைபெறு கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் நாடகங்களைப் பார்க் கிறார்கள், நாடகப் பயன் மக்களைத் தவருன வழியிலும் திருப்ப லாம், நேரான வழியையும் காட்டலாம். இவ்வாறு மக்களைப் பாதிக்கும் ஒரு அறிய கலையைக் கலைஞர்கள் தவருண பாதையில் கொண்டு செல்லாமல் தடுப்பதும், கண்டிப்பதும், நேரான வழி காட்ட முயன்று ஆதரவு குறையுமானல் அவர்களைப் பாராட்டி ஊக்குவிப்பதும் பத்திரிகைகளின் கடமையல்லவா?... அலட்சிய மனோபாவம் காட்டி இதை புறக்கணிப்பது நாட்டுக்கு நலம் செய்வதாகுமாவென்று கேட்கிறேன். கண்மூடித்தனமான புகழுரைகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாட்டுக்கு நன்மை பயப்பதாயின் பாராட்டுங்கள். சிறந்த அம்சங்களை எடுத்துக் காட்டி ஊக்கமளியுங்கள். தீமை செய்வதாயின் அதையும் எடுத்துக் காட்டித் திருத்துங்கள். நோக்கத்திலேயே பழுதிருந் தால் கண்டியுங்கள். குறை களைந்து தெளிவு பெறத்தக்க முறை யில் மக்களின் அறிவை வளர்த்து அவர்கள் ஆதரவு காட்டும்படி விமர்சனம் செய்யுங்கள் என்றுதான் வேண்டுகிறேன்.

விமர்சனங்களில் நேர்மையிருந்தால்தான் மக்களின்ரளிகத் தன்மை வளரும். மக்களின் ரஸிகத் தன்மை வளர்ந்தால் தான் கலைகள் பூரண வளர்ச்சி பெறும்.

கலைகள் இன்று தொழிலாகத்தானிருந்து வருகின்றன. சர்க்கார் கலைஞர்களை வளர்க்கவில்லை...... கலைஞர்கள் தங்கள் பிழைப்புக்கும் இதிலிருந்துதான் வழி தேடவேண்டும். ஆதலால் பொதுமக்கள் ரசனையைப் புறக்கணிப்பது சாத்தியமில்லை.

நாடகக் கம்பெனிகளின் இன்றையநிலையையும், அவற்றின் நிர்வாகக் கஷ்டத்தையும் அத்துறையிலீடுபட்ட ஒரு சிலர்தான் உணரமுடியும். யுத்தகால வருவாய் இன்றில்லை. சிலமாதங்களாக எல்லா நாடகக் கம்பெனிகளுக்குமே வருவாய் குறைந்துவிட்டது. ஆனால், செலவினங்கள் சிறிதும் குறையவில்லை...... ஆனாலும்

இன்று நடைபெறும் நாடகங்கள் பெரும்பாலும் நாட்டின் நிலையைச் சித்தரிப்பவையாகவும் சமூக முன்னேற்றத்திற்கு வழி காட்டுபவையாகவும் இருக்கின்றன. வெறும் பொழுது போக்கா யில்லை. புத்திக்கும் வேலை கொடுப்பவைகளாயிருக்கின்றன. ஆகவே, பத்திரிக்கைகள் இவற்றை போற்றி வளர்க்க வேண்டும்.

இந்தியா முழுவதும் பார்த்தாலும் நமது தமிழ்நாட்டில் தான் நாடகங்கள் சீரிய முறையில் நடைபெற்று வருகின்றன வென்று உங்கள்முன்னிலையில் நான் ஆணித்தரமாகக் கூறுகிறேன்: தற்புகழ்ச்சியல்ல, உண்மை. இதற்காக நாம் பெருமைப்பட வேண்டும். எல்லாவகையிலும் தன்னைப் பற்றிக் குறைவாக மதிப் பிடுவதும், பிறரை, பிறர் பொருளை, பிறர் செயலை, பிறர் இலக்கியத்தைப் புகழ்வதுமே தமிழனின் நீண்டகாலப் பண்பாகி விட்டதென்று நமது ம.பொ.சி. அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். அது உண்மை...

நான் ஒரு ரஸிகன்: இலக்கியங்களை நன்றாக ரவிக்கத் தெரியும் எனக்கு. எனது ரஸிப்புத் தன்மையில் பூரண நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஒன்று கூற விரும்புகிறேன்.

ஹிந்தி, குஜராத்தி, முதலிய பிறமொழிகளிலிருந்து மொழி பெயர்த்த பல கதைகளை நான்படித்திருக்கிறேன். உண்மையாகச் சொல்லுகிறேன். குப்பை கூளங்கள் கூட மொழி பெயர்க்கப் படுகின்றன. பிறநாட்டு நல்லறினார்கள் சாத்திரங்களைத்தானே நமதுமகாகவி பாரதியார் மொழிபெயர்க்கச் சொல்லியிருக்கிறார். ........இதுபற்றி எனது நண்பர்களான சில எழுத்தாளர்களைக் கேட்டேன். என்னசார் செய்வது? மொழிபெயர்ப்பு நாடகங்கள் தான் சீக்கரம் விற்பனையாகின்றனவென்று பிரசுரகர்த்தர்கள் கூறுகிறார்கள் என்றார். தமிழ் மக்களின் தாழ்வு மனப்பான்மைக்கு வேறென்ன சான்று வேண்டும்?

இன்று தமிழுலகில் வெளி வந்துள்ள சிறு கதைகளையும், கவிதைகளையும் பிற மொழிகளில் பெயர்த்தால் தெரியும் தமிழனின் இலக்கியத் திறமை. அறிவிலும் கற்பனையிலும் தமிழன் யாருக்கும் இளைத்தவனல்ல என்ற உண்மையை அப்போதுதான் உலகம் தெரிந்து கொள்ளும். நம்மை நாம் குறையாக எண்ணா கிறோம் என்பதைச் சுட்டிக் காட்டதான் இதைக் கூறினேன்:-

தமிழ் நாடக நூல்கள் அதிகமாக வெளிவரவில்லை. ஆனால், மேடையில் நாடக இலக்கியம் பிறமாகாணங்களை விடப்பெருமைப் படத்தக்க விதத்தில் வளர்ந்திருக்கிறதென்பதை மறுக்க முடியாது. படவுலகைவிட இன்று நாடக உலகம்தான் மக்களுக்குப் பயன்படுகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை, சினிமா, நாடகத்தைவிட விரைவான பிரசாரக் கருவி என்பது உண்மையேயானலும் இன்று சினிமாவின் நிலை மக்களின் ஒழுக்கத்தைக் கெடுப்பதாய்த்தானிருக்கிறது. நமது கலைவாணரைப் போன்ற ஒருசிலர்தான் வருவாயை மதியாது வாழ்வை முன்னிலை படுத்திக் கலை வளர்க்க முடியும். தலை வாங்கி அபூர்வ சிந்தாமணிக்கும், சந்திரலேகாவுக்கும் மக்கள் காட்டும் ஆதரவைப் பார்த்த பிறகும்கூட நல்லதம்பியைப் போன்ற கதைகளைப் படம் பிடிக்க அபாரத் துணிச்சலும் தன்னம்பிக்கையும் வேண்டும்.

பொதுவாக படப்பிடிப்பாளர்களிடம் பயன் தரும் கதை. களை எதிர்பார்ப்பதில் பயனில்லை. படங்கள் பெரும் பொருட். செலவில் தயாரிக்கப்படுவதால் அவர்கள் அதிக வருவாயை எதிர் பார்த்து பொது ஜனங்கள் விரும்பும் அம்சங்கள் என்னென்ன என்பதைத் துருவித்துருவி ஆராய்ந்து அவ்வழியே சென்று கொண்டிருக்கிறார்கள்.

நாடகக் கம்பெனிகள் அவர்களைப் பின்பற்றவில்லை, ஓரள வுக்கு வருவாய் அவசியமென்றாலும் மக்களுக்குப் பயன் தரும் நாடகங்களை நடித்துப் புகழ் பெறவேண்டுமென்ற லட்சியத்துடன் தொண்டாற்ற முயல்கின்றன. இந்த வேற்றுமையை கவனித்துப் பத்திரிகைகள் தமது ஆதரவைக் காட்டவேண்டும். சமூக முன்னைற்ற நாடகங்களுக்குப் பத்திரிக்கைகள் அதிக ஆதரவளிக்க வேணடும்.

வார மலர்கள் வெளியிடும் தினசரிகள் நாடகச்செய்தி களுக்கும் விமர்சனங்களுக்கும் பக்கங்கள் ஒதுக்க வேண்டும். நாடக வளர்ச்சியை நாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

பம்பாய், டில்லி மாகாணங்களில் நடிகர் “பிரதிவிராஜ்” அவர்களின் பிரசார நாடகங்கள் சிலவற்றிக்கு தமாஷா வரி இல்லையென்று அறிவிக்கப்பட்டிருந்ததை ஒரு வாரத்திற்கு முன் நமது தினசரிப் பத்திரிகைகளில் பார்த்தேன். அத்தகைய பிரசார நாடகங்கள் தமிழ் நாட்டில் நடைபெருமலில்லை; நடைபெறு

கின்றன. சர்க்கார் அவற்றில் கவனம் செலுத்தவில்லை. சர்க் காருக்கு நாடகப் பயனை எடுத்துக் காட்டி பிரசாரம் செய்ய செல்வாக்குள்ள தினசரி பத்திரிக்கைகள் முன்வரவில்லை. --

பத்திரிகைகள் மனம் வைத்தால்இன்று தமிழ்நாட்டில் நடை பெறும் பல நாடகங்களுக்கு தமாஷா வரி இல்லாமற் செய்ய சர்க்காரைத் துண்டலாம், தமாஷா வரி இல்லாதிருந்தால் நல்ல பிரசார நாடகங்கள் குறைந்த வருவாயிலும் அதிகநாட்கள் நடை பெற உதவி புரிவதாயிருக்கும். தமாஷா வரி விலக்கத்திற்காக வென்றே கல்விப் பிரசார நாடகங்கள் பல தோன்றக்கூடும். மேடை நாடகவளர்ச்சியும் இலக்கிய வளர்ச்சியில் ஒருபிரிவு என் பதைப்பத்திரிகைகளும் எழுத்தாளர்களும் உணர்ந்து செயலாற்றி ல்ை கலைவளரும்; நாடு நலம்பெறும்; இருக்கும் நிலையை எடுத்துக் கூறிப் பரிகாரம் பெறும் நோக்கோடு செய்யப்பட்ட எனது சொற்பொழிவைக் குறை கூறியதாகக் கருதவேண்டாமென்று உங்களைக்கேட்டுக் கொள்ளுகிறேன்:--

என்பது நமது தமிழ் மறை...ஆகவே,சொல்லேருழவர் ஸ்தானத்திலிருக்கும் நீங்கள் பகையுணர்ச்சி கொள்ளாமல் எனது சொற் பொழிவின் கருப்பொருளை மட்டும் கருத்தில் கொண்டு நாடகக் கலைக்கு ஆக்கமளிக்குமாறு வேண்டுகிறேன்.”

மாநாட்டில் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.,ம.ப.பெரியசாமி, துாரன், கி. வா. ஜகந்நாதன், அகிலன், கவினார் புத்தனேரி ரா.சுப்பிரமணியன்,கவினார் தே.ப. பெருமாள் முதலிய பல்வேறு எழுத்தாளர்கள் கலந்துகொண்டார்கள். கலைவாணர் இல்லத் தில் பெரும்பாலோர் தங்கினார்கள். நாகர்கோவிலில் உள்ள எங்கள் இல்லத்தில் எழுத்தாள அன்பர்களுக்கு விருந்தளித்தேன்.

மறுநாளும் மாநாடு நடைபெற்றது. அன்றிரவு ஒரு பொதுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தார் கலைவாணர். 16.5.48இல் நானும் தலைவர் ம. பொ. சி.யும் புத்தேரி சென்று கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்களைப் பார்த்து வந்தோம். 18.5.48இல் நான் விமான மூலம் கோவைக்குத் திரும்பினேன்.
----------------

73. காதல் திருமணம்


என் முதல் மனைவி மீனாட்சி ஈரோட்டில் காசநோயால் காலமானாள்; அவள் என்னை விட்டுப் பிரிந்தபின் நாடகத் தயாரிப்பிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தியதால் திருமணத்தைப் பற்றி நான் சிந்திக்கவேயில்லை. அக்கா, நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று அடிக்கடி வற்புறுத்தி வந்தார். திருச்சியிலிருந்து பெரியண்ணா அவர்கள் நாகர்கோவில் சென்று ஒய்வெடுத்துக் கொண்டசமயம், எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் நான் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும், என்னுடைய ஒப்புதலைத் தெரிவித்தால் உடனே பெண் பார்த்துத் தாம் ஏற்பாடு செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதற்குநான் பதிலெழுதியிருந்தேன். திருமணத்திற்கு இப்போது அவசரமில்லையென்றும் நானே ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துச் சொல்வதாகவும், அப்போது திருமணம் முடித்துக் கொள்ளலாமென்றும் அதில் தெரிவித்திருந்தேன்; உண்மையில் எந்தப் பெண்ணையும் மணந்து கொள்ளும் எண்ணம் அப்போது எனக்கில்லை.

திருமணம் சுவர்க்கத்தில் உறுதி செய்யப்படுகிறது

திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சிலர் சொல்லுகிறார்கள். அதில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கையில்லை. ஆனால், எனது இரண்டாவது திருமணம் நடைபெற்றதை இப்போதும் எண்ணிப் பார்க்கிறேன். அப்படித்தான் இருக்குமோவென்ற சிறு நம்பிக்கை இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் உதயமாகிறது. 1947இல் கம்பெனி திண்டுக்கல்லில் இருந்த போது ஒருநாள் பில்ஹணன் காதல் காவியத்தை நடித்து விட்டு இல்லத்திற்குத் திரும்பினேன், அன்றுதான் மீண்டும் திருமணம்

செய்து கொள்ளும் எண்ணம் என் உள்ளத்தில் அரும்பியது. எத்தனை எத்தனையோ காதல் கதைகளை நான் படித்திருக்கிறேன். என்றாலும் என் வாழ்வில் இப்படியொரு காதல் கதை உருவாகுமென்று நான் எண்ணவேயில்லை.

இதயத்தில் இடம் பெற்றாள்

எங்கள் நாடகக் குழுவின் நடிகை செல்வி. சீதாலட்சுமி என் இதயத்தில் இடம் பெற்றாள். நான் அவளைக் காதலித்தேன், அவளும் என்னை நேசித்தாள். அவளேயே திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினேன். காதலிப்பதை வேறாகவும் கல்யாணம் செய்து கொள்வதை வேறாகவும் நான் கருதவில்லை. என் எண்ணத்தை நேராக நின்று பெரியண்ணாவிடம் சொல்ல என்னல் முடியவில்லை. அதற்கான துணிவு எனக்கு ஏற்படவில்லை.

“சீதாலட்சுமியை நான் திருமணம் செய்து கொள்வதாக முடிவுசெய்திருக்கிறேன். அன்புகூர்ந்து ஆசீர்வதிக்கவேண்டும். அனுமதிக்க வேண்டும்.”

என்று கடிதம் எழுதினேன். பெரியண்ணாவின் கையில் கொடுத்தேன். மறுநாள் பதில் கிடைத்தது.

“உன்முடிவை நான் தடுக்கப் போவதில்லை. உன் விருப்பம் போல் செய்து கொள்ளலாம்.”

என்று பெரியண்ணா எழுதியிருந்தார். நான் மகிழ்ச்சியடைந்தேன். சீதாலட்சுமியின் பெற்றேரின் அனுமதியைப் பெற அவர் கள் இருக்குமிடம் சென்றேன். அவளுடைய தந்தையாரைக் கண்டேன். அனுமதி வேண்டினேன். அவர் எளிதில் இசைவளிக்க வில்லை. வேண்டாவெறுப்பாக சம்மதித்தார்.

பாசங்களுக்கிடையே மோதல்

கோவைக்குத் திரும்பியதும் பேரதிர்ச்சி எனக்காகக் காத்திருந்தது. பெரியண்ணா நாகர்கோவில் செல்ல முடிவு செய்து விட்டதாகவும், என் திருமணத்திற்கு அவர் கோவையில் இருக்க மாட்டாரென்றும் தெரிந்தது. என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என் நிலைமையை விளக்கி உருக்கமாக மீண்டும் பெரியண்ணாவுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். அக்கடிதத்தை அவர் பார்க்க விரும்பவில்லை. சகோதர பாசத்திற்கும் காதல் பாசத்திற்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. அன்றிரவு முழுதும் நானும் சீதாவும் சிந்தனை செய்தோம். காதல் கதைகளில் வருவது போல எத்தனையோ முடிவுகள் எனக்குத் தோன்றின. சீதா உறுதியாகக் கூறிவிட்டாள். “நீங்கள் என்ன முடிவு செய்கிறீர்களோ அந்த முடிவை நானும் ஏற்றுக்கொள்ளச் சித்தமாயிருக்கிறேன்” என்று.

வாழ்க்கையே ஒரு போராட்டம்தானே? பெரியண்ணா மீது எனக்குக் கோபம் உண்டாகவில்லை; வருத்தமும் ஏற்படவில்லை. அவர் முடிவு செய்தது சரியென்றே என் மனத்திலும் பட்டது. விளைவுகளை ஏற்பது தான் ஆண்மை என்ற முடிவுக்கு நானும் வந்தேன்; நான் இந்த முடிவுக்கு வர, காலை ஐந்துமணி ஆயிற்று. அதற்குமேல் சிந்தனை எதுவுமில்லை. அமைதியாக உறங்கினேன்.

காலை 8 மணிக்கு எழுந்தேன். மீண்டும் சிந்தனை “சாவு ஒன்று தான் எங்களைப் பிரிக்க முடியும்” என்று ஒரு சமயம் நான் பத்திரிகையில் எழுதியிருந்தேன். இப்போது உயிருடன் இருக்கும் போதே பிரிகிறோமே என்று எண்ணினேன்.

காதலயைக் கைப்பிடித்தேன்

1948 மார்ச்சு 31 ஆம் நாள், நான் மறக்க முடியாத நாள். ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் உயிராகப்போற்றும் எங்கள் பெரியண்ணா கம்பெனியை நடிகர்களின் கூட்டு நிர்வாகத்தில் நடத்தும்படி யோசனை கூறிவிட்டு நிரந்தரமாக ஊருக்குப் புறப் பட்டு விட்டார்
.....................

நான் என் இதயத்தை இரும்பாக்கிக் கொண்டேன். ஜூன் மாதம் முதல் தேதி சின்னண்ணா என்னை அழைப்பதாகத் தகவல் வந்தது. சென்றேன். நானும் சின்னண்ணாவும் தம்பி பகவதியும் கலந்து யோசித்தோம் கம்பெனியைத் தொழிலாளர் கூட்டுறவில் விடுவதென்றும், கம்பெனி கணக்குப்பிள்ளை ஏ. டி. தர்மராஜுவையும் நீண்ட காலமாக வெளி நிர்வாகத்தில் எல்லாக் காரியங்களையும் கவனித்து வரும் பழம் பெரும் நடிகர் கொல்லம் பாலகிருஷ்ண னையும் பொறுப்பேற்றுக் கொள்ளச் சொல்லலாமென்று ஒரு திட்டம் வகுக்கப் பட்டது. அவ்விருவரையும் அழைத்துக் கேட்டோம். நிர்வாக சிரமங்களை அறிந்தவர்களாதலால் பொறுப்பேற்றுக் கொள்ள அவர்கள் மறுத்தார்கள் ........ சின்னண்ணாவே எல்லாப் பொறுப்புக்களையும் துணிவோடு ஏற்றார்.

1948 ஜூன் 4 ஆம் நாள் சீதாவைத் திருமணம் செய்து கொள்ள பதிவாளர் முன்னிலையில் மனுக்கொடுத்து ரசீது பெற்றேன். அன்றிரவு எங்கள் இல்லத்தில் திருவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. மணமக்களாகப் புத்தாடையுடுத்தி நாங்களிருவரும் விளக்கின் முன் அமர்ந்தோம். இறைவனை வணங்கினோம். சின்னண்ணா; மீனாட்சி அக்காள், சீதாலட்சுமியின் தாய், தந்தை, என் அன்புக்குரிய, என்னை உயிராகக் கருதும் நடிகர். தம்பி எம். கருப்பையா ஆகியோர் முன்னிலையில் என் காதலி சீதாலட்சுமிக்கு நான் மங்கலகாண் பூட்டினேன். திருமணம் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது மெய்தானோ?......
--------------

74. இமயத்தில் நாம்


வீரமும் காதலும் விரவிக் கிடக்கும் தமிழர்களின் வரலாற்று நாடகங்களை மேடைக்குக் கொண்டுவர வேண்டு மென்பது எங்கள் நீண்ட நாள் ஆசை. அதிலும் சிறப்பாக வட ஆரியர் முடித்தலை மேல் இமயக்கல் கொணர்ந்து பத்தினி கண்ணகிக்குப் படிவம் சமைத்த சேராமாவீரன் செங்குட்டுவனின் செயற்கரும் செயலை நாடகமாக்கி நடிக்க வேண்டுமென்பதில் எங்களுக்கிருந்த ஆர்வம் சொல்வி முடியாது.

ரா. வேங்கடாசலம் அறிமுகம்

செங்குட்டுவனை நாடகமாக எழுதுங்கள் என்று எங்களோடு தொடர்பு கொண்ட எழுத்தாளர்கள் பலரிடமும் கூறினேன். இரண்டொருவர் எழுதுவதாகக் கூறினார்கள். சிலர் காட்சிக் குறிப்புக்கள் வரைவதோடு நிறுத்திக் கொண்டார்கள். திரு ரா. வேங்கடாசலம் அவர்களே திருச்சி வானெலி நிலைய எழுத்தாள நண்பர்கள் கே. பி. கணபதி, ரா. ஆறுமுகம் இருவரும் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். பத்திரிகைகளில் வெளிவந்தசிறு கதைகளின் வாயிலாக ரா. வே. அவர்களின் கதை புனேயும் ஆற்றலே நான் அறிந்திருந்தேன். அவரை நேரில் சந்தித்துச் சிறிது நேரம் பழகியதும் செங்குட்டுவனே எழுதுவதற்கு அவர் மிகவும் தகுதி வாய்ந்தவர் என்பது எனக்குப் புலப்பட்டது, அவரே ஒரு செங்குட்டுவனாகத் தோன்றினார்.

தமிழ், தமிழ்நாடு, தமிழ்இனம், தமிழ் எழுத்தாளர் என்றால் அதற்கிணை உலகில் எங்குமில்லையென்ற உணர்ச்சிராவே இதயத்தோடு ஒட்டிக் கிடந்தது. தன்னைப் பற்றி, தன் எழுத்துக்களைப் பற்றி சிறிதும் குறைத்து எண்ணும் மனோபாவம் அவரிடமில்லை. தன்னைத் தாழ்வாக எண்ணியெண்ணியே தமிழன் தன்னிகலயழித் தான் என்பது என் உறுதியான கருத்து. தாழ்வு மனப்பான்மை நம்மைவிட்டு ஒழிந்தால்தான் நாம் உலகின்முன் எல்லாத் துறை. களிலும் தலை நிமிர்ந்து நிற்க முடியுமென்ற உறுதி எனக்குண்டு.

பெயரே பெருமையைப் பேசியது

நண்பர் ரா. வே. ‘தமிழன் பெருமை’ என்ற ஒருநாடகத்தை. தன்னுடன் கொண்டு வந்திருந்தார். ‘இதை நடிக்கிறீர்களா?’ என்று கேட்டார். நாடகப் பரிசு வைத்து அப்போதுதான் சில நாடகங்களை வாங்கி வைத்திருந்தோம். “இதை நடிப்பதற்கு இயலாது; சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தை நாடக உருவில் எழுதுங்கள். நன்றாயிருந்தால் நடிக்கிறோம்” என்று கூறினேன். ஆவலோடு ஒப்புக்கொண்டார். முதல்முறை கோவையில் காட்சிக் குறிப்புக்கள் காண்பித்தார். திண்டுக்கல் முகாமில் நாடகம் கொடுத்தார். இமயத்தில் நாம் என்ற நாடகத்தின் பெயரைப் படித்தேன். என் தோள்கள் விம்மின. ரா. வே. அவர்களின் பெருமித உணர்ச்சி அந்தப் பெயரிலேயே பேசியது.

கோவையில் நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்தோம்: கவி. ஆறுமுகனார் அவர்கள் பாடல்களை எழுதினார், பாடல்களுக்கு. பண் அமைக்கும் பொறுப்பினை எம். கே. ஆத்மநாதன் ஏற்றுத் தமது பொறுப்பினைச் செம்மையாகச் செய்தார். தம்பி பகவதி செங்குட்டுவளுகவும், நான் இளங்கோவாகவும் பாத்திரங்களே ஏற்றோம். நிமித்திகன் பாத்திரம் குண்டு கருப்பையாவுக்குக் கொடுக்கப்பட்டது. செங்குட்டுவனின் துணைவி வேண்மாளாக எம். கருப்பையா நடித்தார். பொற்றொடி என்று புதிய கற்பனைப் பாத்திரமொன்றைப் படைத்திருந்தார் ரா. வே. அந்தப் பாத்தி ரத்தை எம். எஸ். திரெளபதி ஏற்றார். பி. எஸ் வேங்கடாசலம் சீத்தலைச் சாத்தனராகவும், கே. கோவிந்தசாமி கல் சுமக்கும். கனகவிஜயனாகவும் பாத்திரமேற்று நாடகத்திற்குப் பெருமை சேர்த்தார்கள். ஒத்திகை பார்த்தபோதே நாடகம் பிரமாதமாக இருக்குமெனத் தோன்றியது.

வில்-புலி-கயல் சின்னம்

திரு. விஸ்வேஸ்வரன் என்ற மின்சார நிபுணர் ஒருவர் எங்களுக்குக் கிடைத்தார். அவருடைய யோசனைப்படி பிரமாண்ட் மான ஒரு பெட்டி செய்யப்பட்டது, தமிழ்நாட்டிலிருந்து வட நாடு சென்று இமயத்தின் உச்சியில் வில், புலி, கயல் சின்னங்கள் பொறிக்கும் காட்சியை அந்தப் பெட்டியிலேயே மின்சாரத்தின் துணையோடு அவர் செய்து காண்பித்தார். நாடக ஆரம்பத்தில் அதைப் பயன்படுத்திக் கொண்டோம். விளக்குகள் அணைக்கப் பட்டதும் அரங்கில் தமிழ் நாடு ஒளிக்கோடுகளாகக் காட்சி யளிக்கும். இமயத்தில் நாம் என்ற பாடல் தொடங்கியதும் படிப்படியாக அந்த ஒளிக்கோடுகள் விரிந்து பரந்து இமயம்வரை செல்லும். பாட்டு முடியும்போது இமயத்தின் உச்சியிலே மூவேந்தர்களின் வில்-புலி-கயல் சின்னங்களோடு தமிழ்க் கொடி ஒளிவடிவில் பறக்கும். இதனை மிக அற்புதமாகத் தயாரித்திருந்தார் விஸ்வேஸ்வரன்.

21-6. 48இல் இமயத்தில் நாம் முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவகாதம் அவர்கள் தலைமையில் அரங்கேறியது.

கி. அ. பெ அவர்களின் பேச்சு நாடகத்திற்குத் தெம்பூட்டுவதாக இருந்தது. தமிழ்நாட்டில் முதன்முதலாக நடைபெறும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்நாடகத்தை மக்கள் மகிழ்வுடன் வரவேற்றார்கள். முதல் நாடக வசூல் ரூ. 1222-00 ஆசிரியர் ரா. வே. அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பெற்றது. இமயத்தில் நாம் 87நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.

தமிழறினார்கள் தலைமை

தமிழறினார் பெருமக்கள் இவ்வரலாற்று நாடகத்தைக்கான வெளியூர்களிலிருந்தெல்லாம் வந்து குழுமினார்கள். 1-7-48இல் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களும், 11-7-48இல் திரு நாரண - துரைக்கண்ணன் அவர்களும், 24-7-48 இல் சென்னைப் பல்கலை கழக தமிழ் ஆராய்ச்சி துறைத் தலைவர், ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களும், 25-7-48 இல் தேசபக்தர் சி.பி. சுப்பையா அவர்களும், 1-8-48இல் விருதுநகர் வி.வி. இராமசாமி அவர்களும், 2-8-48இல் கோவைக் கிழார் சி. எம். இராம சந்திரன் செட்டியார் அவர்களும் தலைமை தாங்கி, இது போன்ற வரலாற்று நாடகங்களுக்கு அரசினார் மானிய உதவி வழங்கி ஆதரிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்கள்.
-------------

75. மனிதன்


பாலக்காடு வாரியர் ஹாலில் மனுஷ்யன் என்ற ஒரு மளையாள நாடகத்தைக்காணும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டதைப் பற்றி முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். அதன் பின் சில நாட்களில் தமிழ் வித்துவானும் மலையாள மொழியிலே நன்கு பயிற்சி பெற்ற வருமான திரு பா. ஆதிமூலனார் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது மனிதன் நாடகத்தைத் தமிழில் நடிக்க விரும்புவதாகத் தெரிவித்தேன். அவர் தாமே மலையாள நாடகாசிரியர் முதுகுளம் ராகவன் பிள்ளையைச் சந்தித்து, நாடகத்தின் உரிமையை வாங்கித் தமிழில் எழுதித்தருவதாக வாக்களித்தார். கோவை முகாமில் மனிதன் நாடகம் எங்கள் கையில் கிடைத்தது. திரு பா. ஆதிமூலஞரோடு திரு கா.சோமசுந்தரம் அவர்களும் வந்திருந்தார். இவர் ஏற்கனவே வைரம்செட்டியார் கம்பெனிக்கு எதிர்பார்த்தது என்னும் நாடகத்தை எழுதிக் கொடுத்தவர். சோமசுந்தரம் ஆதிமூலஞரின் மாணவர். ஆசிரியரும் மாணவரும் சேர்ந்தே மனிதனை உருவாக்கியிருப்பதாக அறிந்தோம்.

மனிதன் மனுஷ்யனின் தழுவல்

மனிதன் மனுஷ்யனின் மொழி பெயர்ப்பு அன்று; தழுவல் என்றே சொல்ல வேண்டும். ஆம்; கருத்து ஒன்றைத்தவிர நாடக அமைப்புகள் முழுவதும் தமிழ் ஆசிரியர்களால் உருவாக்கப் பட்டவையே. மலையாள மனுஷ்யன் நாடகத்திலே இருந்த, குறைபாடுகளையெல்லாம் போக்கி, கதையின் கருத்தைத் தெளிவு படுத்தும் முறையில் புதிய உத்திகள் சிலவற்றைச் சேர்த்து, தமிழ் மனிதனை மிக உயர்வாகப் படைத்திருந்தார்கள் ஆசிரியரும், மாணவரும். நாடகத்தின் கருப்பொருள் எங்கள் உள்ளத்தைக் கவர்ந்தது. இதனை வெற்றிகரமாகத் தயாரிப்பதற்குரிய வழி வகைகளை ஆராய்ந்தோம்.

காட்சிகள் ஓரளவுக்குத் தாயாரிக்கப்பட்டன. எல்லோருக்கும் பாடம் கொடுக்கப்பெற்றது. மனிதன் என்ற பெயருக்குரிய டாக்டர் சுகுமாரனாக தம்பி பகவதியும், ஒவியன் ராஜனாக நானும், டாக்டரின் மனைவி சாவித்திரியாக எம். எஸ். திரெளபதியும், ஓவியனின் தங்கை சரசாவாக எம். கருப்பையாவும், டாக்டரின் சிற்றன்னை பிரேமாவாக கே. ஆர். சீதாராமனும், பிரண்டாக (பிரண்டு) ராமசாமியும், டாக்டரின் தந்தையாக டி. என். சிவதாணுவும் பாத்திரங்களை ஏற்றார்கள்.

உருண்டோடும் மனிதன்

மின்சார நிபுணர் விஸ்வேஸ்வரன் இமயத்தில் நாம் ஆரம்பத்தில் தமிழ்க் கொடியை இமயத்தில் பறக்கவிட்டுக் காட்டியது போல் மனிதனிலும் ஒரு புதுமையைச் செய்தார். மதமிலான் - மானியான் - உத்தமன் - மன்னிப்பான் என்ற எழுத்துக்களை தனித்தனியே பெட்டிகளாக செய்து, பல்புகள் போட்டு, சிவப்புக் காகிதங்கள் ஒட்டி ம-னி-த-ன் என்ற ஒவ்வொரு எழுத்தும் தலைகீழாக உருண்டோடுவது போல் காட்டி, இறுதியாக, மனிதன் என்ற எழுத்துகள் நிலைத்து நிற்பதுபோல் மிக அருமையாக செய்திருந்தார்.

5-8-48இல் மனிதன் நாடகம் மிகச்சிறப்பாக அரங்கேறியது. அன்று கோவை நகரசபைத் தலைவர் டாக்டர் நச்சப்பா தலைமை வகித்தார். அன்றைய வசூல் ஆசிரியர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

கருப்பையா பெண் வேடம்!

சரசுவாக நடித்த எம். கருப்பையாவும், பிரேமாவாக நடித்த கே. ஆர். சீதாராமனும் மிக அற்புதமாக நடித்தார்கள். சீதாராமனும் பெண் வேடத்தில் இளமையிலிருந்தே அனுபவம் பெற்றவர். எம். கருப்பையாவின் நடிப்புத்திறமையை பற்றித் தான் எல்லோரும் வியந்தோம். பல்வெறு உணர்ச்சிகளைக் கொட்டி நடிக்க வேண்டிய பாத்திரம் சரசு. இந்தப் பாத்திரத்தைத் திறமையாக நடித்து எல்லோருடைய பாராட்டுதலையும் பெற்றார் கருப்பையா. பிரண்டு ராமசாமியைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவருக்குப் பிரண்டு என்ற அடை மொழி வந்ததே மனிதன் நாடகத்தின் மூலம்தான். இவருடைய நடிப்பின் சிறப்பினைப் பற்றியும் மனிதன் நாடகத்தின் மகத்தான வெற்றியைப் பற்றியும் இரண்டாவது பாகத்தில்சொல்ல எண்ணி விருக்கிறேன்.

நாடகத்திற்கான பாடல்களையும் வித்துவான் பா. ஆதி மூலனார் எழுதியிருந்தார். மனிதன் நாடகம் ஒழுக்கத்தை வலியுறுத்தும் உன்னதமான நாடகமாக விளங்கியது.

தமிழ் முரசுக்கு உதவி நாடகம்

சிலம்புச் செல்வர் ம.பொ.சி.அவர்கள் நடத்தி வந்த தமிழ் முரசு என்னும் திங்கள் இதழின் நிதிக்காக 9-6-48இல் வித்தியா சாகரர் நாடகம் நடைபெற்றது. இந்நாடகம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே ம. பொ, சி. அவர்கள் கோவைக்கு வந்திருந்தார். நானும் தலைவருமாகச் சில நண்பர்களிடம் சென்று நாடகத்திற்கென்று நிதியும் திரட்டினோம். ஆக, நடைபெற்ற வித்தியாசாகரர் நாடகத்திற்கு தியேட்டர் வசூல் நிதி வசூல் எல்லாமாகச் சேர்த்து ரூ. 3000 வசூலாயிற்று. இத் தொகையை தலைவரிடம் கொடுத்து தமிழ் முரசுக்கு வாழ்த்துக் கூறினோம்.

15-8-48 வரை மனிதன் நாடகம் தொடர்ந்து நடை பெற்றது. சின்னண்ணா சென்னைக்குச் சென்று ஒற்றை வாடைத் தியேட்டரைப் பேசி முன் பணமும் கொடுத்து வந்து விட்டபடியால் மனிதன் நாடகத்திற்கு நல்ல வசூலாகியும், மேற்கொண்டு நடத்த முடியவில்லை.

16- 8- 48 இல் மனோகராவைப் பட்டாபிஷேகமாக நடத்திக் கோவை நாடகத்தை முடித்துக் கொண்டோம்.

ஏறத்தாழ ஒராண்டுகாலம் கோவையில் நாடகங்கள் நடித்தோம். பில்ஹணன் படம் எடுத்து முடிக்கப் பெற்றது. சமூக நாடகங்கள் மூன்றும், வரலாற்று நாடகம் ஒன்றும் ஆக நான்கு புதிய நாடகங்கள் தயாராயின.

தலைநகராகிய சென்னை மாநகருக்கு வந்து நாடகங்கள் நடத்த வேண்டுமென்று பேரறிஞர் அண்ணா, திரு. நாரண துரைக் கண்ணன், பேராசிரியர் வ.ரா., சொல்லின்செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை, தலைவர் ம. பொ. சி. முதலிய பல அறிஞர்கள் எங்களை அடிக்கடி வற்புறுத்தி வந்தனார். எல்லோருடைய விருப்பத்தையும நிறைவேற்றும் நோக்கோடு, 19-8-48 இரவு கொச்சி எக்ஸ்பிரசில் தலைநகராகிய சென்னை மாநகருக்குப் பயணமானோம்.

(முதல் பாகம் நிறைவுறுகிறது)
----------------------

This file was last updated on 21 Nov. 2019.
Feel free to send the corrections to the .