எனது நாடக வாழ்க்கை
(முதல் பாகம், பகுதி 1, அத்தியாயம் 1-25)
அவ்வை தி.க. சண்முகம்

enatu nATaka vAzkai (volume 1)
by T.K.C. Shanmugam
In tamil script, unicode/utf-8 format

எனது நாடக வாழ்க்கை
(முதல் பாகம், பகுதி 1, அத்தியாயம் 1-25)
அவ்வை தி.க. சண்முகம்

Source:
எனது நாடக வாழ்க்கை
அவ்வை தி.க. சண்முகம் எம்.எல்.சி.
வானதி பதிப்பகம்
13. தீனனதயாளு தெரு
தி. நகர், சென்னை-17
முதற் பதிப்பு : ஏப்ரல், 1972
அவ்வை தி. க. சண்முகம் மணிவிழா வெளியீடு (28-4-72)
மூன்றாம் பதிப்பு : நவம்பர் 1986
திருகாவுக்கரசு தயாரிப்பு
விலை ரு. 60-00
குருகுலம் பிரின்ட்ர்ஸ். வேதாரண்யம்.
-----------

முன்னுரை
மு. கருணாநிதி

மு. கருணாநிதி
முதலமைச்சர், தமிழக அரசு,
தலைமைச் செயலகம், சென்னை-9
14-4-'72

‘எனது நாடக வாழ்க்கை’ என்ற தலைப்பில் முத்தமிழ்க்கலா வித்துவரத்தினம், ஒளவை திரு டி. கே. ஷண்முகம் எம். எல். சி. அவர்கள், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாடகத் துறையில் தமக்கு ஏற்பட்ட அனுபவக் கனிகளைப் பிழிந்தெடுத்து, அந்த நறுஞ்சாற்றினை நாமனைவரும் பருகிடுமாறு அரியதோர் நூல் வடிவில் தமிழ் மக்களுக்கு இன்று வழங்கியுள்ளார்கள்.

மணிவிழா எடுத்திருக்கும் இந்த இனிய மகிழ்ச்சிகரமான நாளிலே நாடகத்துறையில் தொல்காப்பியர் எனத் தகும் எல்லா விதமான ஆற்றல்களும் நிரம்பிடப் பெற்ற அன்னார், எளிய சுவையான நடையிலும், கடந்த காலத்தைத் திரும்பிப்பார்த்தும், இக்கால இளைனார்களின் சிந்தனைக்கு விருந்தாகவும், கருத்துத் தெளிவுக்கு மருந்தாகவும் இதனைப் படைத்துள்ளார்கள்.

நாடகத்துறையில் தோல்வி காணாது வெற்றிகள் பல ஈட்டியுள்ள அவர்கள், நல்ல தமிழ்ப் பற்றும் தமிழ்ச் சான்றாேர்கள்பால் நீங்காத பக்தியும் உடையவர்கள்; அரசியல் தலைவர்களிடத்திலும் நல்ல முறையிலான தொடர்பும் மதிப்பும் கொண்டுள்ளவர்கள் என்பதையெல்லாம் இந்நூல் நன்கு எடுத்துக் காட்டுகின்றது.

பொதுவாகத் தமிழ் மக்கள் அனைவரும் போற்றுதற் குரியது என்ற என் பணிவான கருத்தினைத் தெரிவித்துத் திரு டி. கே. எஸ் அவர்களின் அரிய முயற்சி வெல்க என வாழ்த்துகின்றேன்.

வணக்கம்.
--------------

அணிந்துரை
சிலம்புச்செல்வர் ம. பொ. சிவஞானம் எம். எல். சி. அவர்கள்

‘எனது நாடக வாழ்க்கை’ எனும் பெயரில் அவ்வை தி. க. சண்முகம் எழுதி வானதி பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள இந்நூல் தமிழ் இலக்கியக் களஞ்சியத்துக்குப் புதிய வரவு எனலாம். ஆம்; நாடக நடிகர் எவரும் இதுவரை தனது நாடகவாழ்க்கையை ஒரு நூலாக உருவாக்கித் தந்ததில்லை. கலைஞர் சண்முகம் போற்றி வரும் நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார், “நான் கண்ட நாடகக் கலைஞர்கள்” எனும் பெயரில் சிறிய நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை நான் படித்தும் இருக்கிறேன். ஆனால், அது முதலியாரின் நாடக வாழ்க்கையன்று. நாடக உலகில் தாம் சந்தித்த சில நடிகர்களைப் பற்றிய குறிப்புக்களேயே அவர் அந்நூலில் தந்துள்ளார்.

கலைஞர் சண்முகம், “எனது நாடக வாழ்க்கை” என்று இந்நூலுக்குப் பெயரிட்டிருப்பினும், கடந்துபோன அரை நூற்றாண்டு காலத்தில் தமிழ்நாடகம் வளர்ந்து வந்த வரலாற்றையும் விரிவாகக் கூறியுள்ளார்.

ஐந்தாண்டு பிள்ளைப்பருவத்தில் இந்நூலாசிரியர் நாடக மேடையில் தோன்றினார். அறுபதாண்டு நிறைவு பெற்று, தமக்கு மணிவிழா நடைபெறும் இந்நாளிலே, தமது 55 ஆண்டு கால நாடக வாழ்க்கையை விரித்தெழுதும் பேற்றினைப் பெற்றிருக்கிறார் என்றால், இதனைத் தமிழ் நாடகம் செய்த தவம் என்றே சொல்ல வேண்டும்.

நடிகரெல்லாம் ஆற்றல் மிக்க எழுத்தாளராகி விடுவதில்லை. அப்படியே ஆற்றல் மிக்க எழுத்தாளரெல்லாம் புகழ் மணக்கும் நடிகராகி விடுவதில்லை. இந்த இரண்டு ஆற்றல்களும் அவ்வை சண்முகனாரிடம் நிறைவு பெற்று விளங்குகிறது என்பதற்கு இந்நூல் சான்றாகும். கடந்த காலத்தில் நாடக அரங்கில் தோன்றிப் புகழோடு விளங்கிய பலர் காலப்போக்கிலே மக்கள் கவனத்திலிருந்து மறைந்தே போயினர், ஆம்; மக்கள் என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றத்தக்க பெருமைக்குரிய நடிக-நடிகையர்கூட இன்றையத் தலைமுறையினரின் நினைவுக்கு அப்பாற்பட்டவராகி விட்டனர். அவர்களை எல்லாம் இந்நூலில் நல்லவிதத்தில் அறிமுகப்படுத்தி, அவர்களுடைய பெயர்கள் மறைந்து போகாத படி செய்துவிட்டார் ஆசிரியர் சண்முகனார். பொருமையற்ற பண்பாளர்களுக்கே இது சாத்தியமாகும். கலைஞர் சண்முகம் தம்மிலே நாடக உலகை அடக்கிவிடாமல் நாடக உலகில் தம்மை ஒரு அங்கமாகக் கருதக்கூடிய உயர்குணம் படைத்தவர். அதனால் தமது வாழ்க்கையை மையமாகக் கொண்டு தமிழ் நாடக உலகின் அரை நூற்றாண்டு காலச் சரித்திரமாக இந்நூலைப் படைத்துள்ளார்.

ஒருவருடைய சுய சரிதம் எப்படி எழுதப்பட வேண்டுமோ, அப்படி எழுதப்பட்டுள்ளது இந்நூல். பல இடங்களில் நாடகக் காட்சிகளைப்பற்றிப்படிக்கிறோம் என்பதனை மறந்து, அந்தக் காட்சி களைப் பார்க்கிறோம் என்ற உணர்வையே பெற்றுவிடுகிறோம்.

நாடக மேடையிலே நடிகர்களுக்கு விபத்துக்கள்கூட ஏற்படுவதுண்டு. இதனை, தாம் பெற்ற அனுபவத்தைக் கொண்டு படிப்பவருடைய மனம் உருகும்படி எழுதியுள்ளார். ஒரு காட்சியிலே கலைஞருக்கு ஏற்படவிருந்த விபத்திலிருந்து அவர் தெய்வாதீனமாகத் தப்பியதனை நாம் படிக்கும்போது, மணிவிழாக் காண வேண்டிய நம் சண்முகனார் விபத்திலிருந்து தப்பியது குறித்து நாம் வியப்பும் மகிழ்ச்சியும் அடைகிறோம். இந்த ஒரு நிகழ்ச்சியை சான்றாகக் கொண்டு, நாடக உலகுக்கு ரசிகர் உலகம் எவ்வளவோ கடமைப் பட்டிருக்கிறது என்பதனை நன்றியறிதலோடு உணர்கிறோம்.

கலைஞர் சண்முகம் நகைச்சுவை ததும்ப எழுதுவதில் தமக்குள்ள ஆற்றலை இந்நூலில் பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தி, யுள்ளார். நகைச்சுவை ததும்பப் பேசுவது வேறு; எழுதுவது வேறு. நகைச்சுவை ததும்பப் பேசும் ஆற்றல்பெற்றவரைப்போல் அதே முறையில் எழுதுகின்ற ஆற்றலைப் பெற்றவர் கலைஞர் சண்முகம். சில நடிகர்களைப் பற்றி நகைச்சுவையோடு குறிப்பிடும் போது பலமுறை என்னையறியாமலே நான் சிரித்ததுண்டு.

சின்னஞ்சிறு பிள்ளைகளைக் கொண்ட “பாய்ஸ் கம்பெனி” எதுவும் இந்நாளில் இல்லை. அதனல் நாடக உலகில் பிள்ளைகள் பட்ட அல்லல்களை இந்நூலின் வாயிலாகவன்றி வேறு வகையில் தெரிந்துகொள்ள வருங்காலத் தலைமுறையினருக்கு வாய்ப்பில்லை. இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வறுமையோடு உறவு கொண்டுதான் நாடகக்கலை வளர்ந்து வந்திருக்கிறது. ஐந்து வயதில்-பள்ளிக்குச் செல்ல வேண்டிய பருவத்தில் நாடகத் துறையில் பிள்ளைகள் ஈடுபடுத்தப்பட்ட கொடுமை கடந்த தலைமுறையோடு முடிந்துபோனதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, நாடகக் கம்பெனி என்பது, நடிக்கின்ற பிள்ளைகளை அடைத்து வைக்கும் சிறைச்சாலையாகவும் இருந்து வந்த கொடுமையினை கலைஞர் சண்முகத்தின் நாடக வாழ்க்கையைக் கொண்டே நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றிக் குறிப்பிடும் இடங்களில், குரு பக்தியை நன்றி உணர்வோடு வெளிப்படுத்துகிறார் இந்நூலாசிரியர். தம்முடைய பெற்றோர்களிடமும் பக்தியையும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்துகிறார் என்றாலும், நாடகக் குருநாதரிடமே இந்த அரிய பண்புகளை அதிகமாக வெளிப் படுத்துகிறார். இதனை எல்லா நடிகர்களிடமும் நாம் காண முடிவதில்லையல்லவா?

இந்த நூலை மிகச் சிறந்த இலக்கியமாகவே நான் கருதுகின்றேன். தமிழிலுள்ள இதனைப் பிற மொழிகளில்-குறிப்பாக உலகமொழியான ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும். இது சரித்திர நூல் மட்டுமல்ல; நாடக உலகைப்பற்றிய மிகச் சிறந்த தகவல்நூல். இன்னொரு வகையில் சொன்னால், தமிழ் நாடக மேடையைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் தரும் நாடகக் கலைக் களஞ்சியம் என்றும் கொள்ளலாம். நூலாசிரியருக்கு என் மனமுவந்த வாழ்த்துக்கள்.

தம்மோடுபிறந்து, தம்மோடுவளர்ந்து, தமதுவளர்ச்சிக்குத் துணை புரிந்து வருபவர்களான தம் சகோதரர்கள் பற்றி மிகுந்த வாஞ்சையோடு நூலின் பல்வேறு இடங்களில் குறிப்பு களைத் தந்துள்ளார் ஆசிரியர். இந்த உயரிய சகோதர வாஞ்சை தான் “டி. கே. எஸ். சகோதரர்கள்” என்ற பெயரே கலைச்சொல் ஆக்கி விட்டது. வருங்கால எழுத்தாளர்கள் இதைவிடவும் பெரிய நூல் ஒன்றைப் படைப்பதற்கான முதல் நூலாக இந்நூல் அமைந்து விட்டது.

அன்பர் திருகாவுக்கரசு நடத்தும் வானதி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுத் தனது வரலாற்றிலே புதியசிறப்பொன்றைச் சேர்த்துக் கொண்டுவிட்டது. நல்ல காகிதத்திலே, பிழையற்ற முறையிலே, அழகிய பதிப்பாக இதனை வெளியிட்ட அன்பர் திருநாவுக்கரசைப் பாராட்டுகின்றேன்.

சென்னை ம. பொ. சிவஞானம்
20-4-72
------------------

அறிமுகவுரை - தி. க. ஷண்முகம்

1918 முதல் 1972 வரை நாடகத்துறைக்கே வாழ்வைக் காணிக்கையாக்கிய ஒரு நடிகனின் வாழ்க்கைக் குறிப்பு இது. நான் அறிந்த வரையில் இப்படி ஒரு விரிவான நாடகக் கலைஞனின் குறிப்பு இந்திய மொழிகள் எதிலுமே வந்ததாகத் தெரியவில்லை. புதிய முயற்சி இது. கலைஞனின் கன்னி முயற்சி!

ஆசிரியர் திரு பி. எஸ். செட்டியார் அவர்கள் நடத்தி வந்த ‘சினிமா உலகம்’ ஆண்டு மலரில் 1942இல் எங்கள் வாழ்க்கைக் குறிப்பினைச் சுருக்கமாக எழுதினேன், இரண்டாவதாக, என் அருமை நண்பர் திரு பி. மகாலிங்கம் அவர்கள் நாகர்கோவிலில் இருந்து வெளியிட்ட ‘தேவி’ என்னும் திங்கள் இதழில் 1943இல் ‘எங்கள் நாடக வாழ்க்கை’ என்னும் தலைப்பில் சிறிது விரிவாக எழுதினேன். அதன் பிறகு சகோதரர் கவி. கா. மு. ஷெரீப் அவர்கள் சென்னையிலிருந்து வெளியிட்ட ‘சாட்டை’ வார இதழில் 8-11-59 முதல் 26-3-61 வரை தொடர்ச்சியாக, ‘என் நாடக வாழ்க்கை’ யை மேலும் சற்று விரிவாக வரைந்தேன். எனவே அவர்களுக்கெல்லாம் இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்.

இப்போது வெளியிடப் பெற்றுள்ள எனது நாடக வாழ்க்கை அவற்றைவிட விரிவாகவும் தெளிவாகவும் சரியான தேதிக் குறிப்புக்களோடும் தீட்டப் பெற்றிருப்பதாகக் கருதுகிறேன்.

எனது 54 ஆண்டுகால நாடக வாழ்க்கையில், 30ஆண்டு வாழ்க்கையினைப் பற்றி எனக்கு நினைவிருந்த வரையில் இதில் சொல்ல முயன்றிருக்கிறேன். இன்னும் 24ஆண்டுகால வாழ்வினை இதன் தொடர்பாக வெளிவரும் எனது நாடக வாழ்க்கை இரண்டாவது பாகத்தில் சொல்வேன்.

தலைநகராகிய சென்னைக்கு வந்தபின் நாடகம், அரசியல் ஆகிய இரு வாழ்விலும் பிணைந்து பணியாற்றியிருக்கிறேன். 1950-இல் நாடகக் குழுவுக்கு, ‘மூடுவிழா’ நடத்தியதும், மீண்டும் தொடர்ந்து ‘ஸ்பெஷல்’ நாடக முறையில் புதிய பல நாடகங்களை நடத்தி வந்ததும் எங்கள் நாடக வாழ்வின் பொற் காலமாகும். வெளி மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் சென்று உலாவந்த பெருமைக்குரிய நிகழ்ச்சிகள், அந்தக் காலகட்டத்தில் தான் வருகின்றன. எனவே இரண்டாம் பாகம் மேலும் சுவையாகவும் பயனுடையதாகவும் இருக்குமென்பதில் ஐயமில்லை.

அதனை எழுத என்னை வாழ்விக்குமாறு இறைவனை வேண்டுகிறேன்.

எனது நாடக வாழ்க்கையை எனது கண்ணோட்டத்திலே தான் எழுதியிருக்கிறேன். இதன் முழுப்பொறுப்பும் என்னைச் சார்ந்தது. சகோதரர்களின் கண்ணோட்டத்தில் பல செய்திகள் இதில் விட்டுப் போயிருக்கவும் கூடும்.

எங்கள் குழுவிலிருந்த. என்னோடு தொடர்புகொண்ட-நான் கண்டு மகிழ்ந்த எல்லா நாடக நடிக-நடிகையரைப் பற்றிய செய்திகளும் ஒரளவுதான் இதில் இடம் பெற்றுள்ளன. பெருமைக் குரிய நாடகக் கலைஞர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் நான் தனியாகவே கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அவையெல்லாம் தனி நூல்களாக வெளிவரும்.

என்னோடு தொடர்பு கொண்ட எத்தனையோ நண்பர்கள் இதில் விடுபட்டுப் போயிருக்கலாம். எனக்கே தெரிகிறது. பாரங்கள் அச்சான பிறகுதான் சிலருடைய பெயர்கள் நினைவுக்கு வந்தன. நூலில் இடம் பெறுவதற்குத் தகுதியும் உரிமையும் உடைய கலைஞர்கள், நண்பர்கள் அன்பு கூர்ந்து எனக்கு நினைவூட்டுமாறு பணிவுடன் வேண்டுகிறேன். அவர்களின் பெயர்களை அடுத்த பதிப்பில் சேர்த்துக் கொள்வேன்.

மணிவிழாவிலே எனது நாடக வாழ்க்கை கட்டாயம் வெளிவர வேண்டும் என்று என்னைவற்புறுத்திய தலைவர் சிலம்புச்செல்வர் அவர்கட்கும், பெருமைக்குரிய மாணவர் கலைஞர் ஏ.பி. நாகராஜன், மருகர் நகைச்சுவைச்செல்வர் டி. என். சிவதாணு, தம்பி பகவதி ஆகியோருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இந்த நூலை வெளியிடுவதில் வானதி பதிப்பக உரிமையாளர் அன்பர் திருநாவுக்கரசு அவர்கள் காட்டிய ஆர்வத்தையும் உற்சாகத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அடேயப்பா! என்ன சுறுசுறுப்பு! விரைவாகச் செயலாற்றுவதில் அவருக்கு இணை அவரேதான். திருநாவுக்கரசு அவர்களை ஒரு பதிப்பக உரிமையாளராக - வணிகராக மட்டும் நான் கருதவில்லை. அவர் ஒர் அருங்கலைஞர். ஆம், பல்வேறு கலைப் படைப்புகளைத் தமிழுலகுக்குத் தந்த அவர், எனது நாடக வாழ்க்கையினையும் ஒர் உயர்ந்த கலைப்படைப்பாகவே வெளியிட்டிருக்கிறார்.

அந்த அருமைக் கலைஞருக்கு என் உளமார்ந்த நன்றி.

இந்நூலை வெளியிடுவதில் எனக்குப் பேருதவியாளராக உடனிருந்து பணியாற்றியவர் கவிஞர் தே. ப. பெருமாள் அவர்கள். அவர் எனது நீண்டநாளைய நண்பர். என் உள்ளத்தை உணர்ந்தவர். அவ்வப்போது எனக்கு ஆலோசனைகள் கூறி உறுதுணை புரிந்தவர். உன்னிப்போடு பிழைதிருத்திப் பெரும் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட அவருக்கு என் நன்றி உரித்தாகட்டும்.

நூலினை அச்சிட்ட மூவேந்தர் அச்சக உரிமையாளர் திரு முத்து அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர். ஊக்கம் நிறைந்தவர். எத்தனைமுறை பிழைதிருத்தம் செய்தாலும்முகங்கோணாமல் மிகுந்தபொறுமையோடும் பொறுப்போடும் இந்நூலை அச்சிட்டுத்தந்தார். அவருக்கும், அச்சகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது நன்றி.

இனி, பாடுபட்டு உழைத்து உருவாக்கியுள்ள இக்கலைப் படைப்பினை வாசக நண்பர்களும், படிப்பகத்தாரும், நூலகத் தாரும் வாங்கி, விரைவில் அடுத்த பதிப்பு வெளிவரவும், இரண்டாவதுபாகத்தை உற்சகாத்தோடுவெளியிடவும் அன்பர்திருநாவுக்கரசு அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

இந்நூலுக்கு முன்னுரை எழுதி என்னைச் சிறப்பித்த மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கட்கும், அணிந்துரை தந்து எனக்கு ஆசி கூறிய தலைவர் சிலம்புச் செல்வர் அவர்கட்கும் என் இதயம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

‘அவ்வை அகம்’         தி. க. ஷண்முகம்
சென்னை-86
திருவள்ளுவர் ஆண்டு 2003 சித்திரை 8௳
-------------

பதிப்புரை

கலைஞர் அவ்வை தி. க. சண்முகம் அவர்களின் எனது நாடக வாழ்க்கை என்னும் இந்நூல், அவரது வாழ்க்கை வரலாறாக இருப்பினும் தமிழ் நாடகக் கலையின் முப்பது ஆண்டுகால வரலாற்று நூலாக விளங்குகிறது.

இந்நூலில் இவரோடு தொடர்பு கொண்ட நாடக ஆசிரியர்கள், நடிக-நடிகையர், கவிஞர்கள், அறிஞர் பெருமக்கள் ஆகியோர் பற்றி இவர் வெளியிடும் செய்திகள் சுவையளிப்பன. அக்கால நாடகமேடை விநோதங்கள், மேடைகளில் நடிகர்கள் மேற்கொண்ட நடிப்பு முறைகள், பார்த்து ரசிக்கும் ரசிகர்களின் விசித்திர இயல்புகள் போன்ற பற்பல செய்திகள் படித்து ரசிக்கத் தக்கவை.

இந்நூலில் கலைஞர், தம் சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளை மனம் திறந்து சொல்கிறார். அவர் தம் வாழ்வில் சந்தித்த பலரைப்பற்றிப் பாரபட்சமின்றி விமர்சிக்கிறார். இந்நூலைப் படிக்கும் போது காந்தியடிகளின் சத்தியசோதனை நம் நினைவுக்கு வராமல் போகாது.

அவ்வை சண்முகத்தின் அடக்க இயல்பும், அன்புப் பெருக்கும், பிற கனிந்த பண்புகளும்வசீகரம் மிக்கவை. மற்றவர்களுக்குப் போதனை நல்கும் ஒருவர், தம் சொந்த வாழ்க்கையிலும் எத்துணைத் தூய்மையுடைய வராக இருக்க வேண்டும் என்பதற்கு இவர் எடுத்துக்காட்டாக விளங்குபவர்.

தமக்குப் பயிற்சி அளித்த நாடகத் தலைமை ஆசிரியர் தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகள் பெயரால் மன்றம் அமைத்து தமது நன்றிப் பெருக்கை நாள்தோறும் காட்டி வருகிறார் கலைஞர்.

எண்ணற்ற கலைஞர்களையும் ‘எழுத்தாளர்களையும் நடிக-நடிகையரைபும் நாடக உலகத்துக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவருக்குண்டு.

புராண - இதிகாச நாடகங்களை நடத்தி வந்த நாடக மேடைகளில் சீர்த்திருத்தக் கருத்துக்கள், தேசியப்பற்று, சுதந்திர எழுச்சி ஆகியவற்றைக் கொண்ட கதைகளையும் நடத்தி மக்கள் உள்ளத்தில் மகத்தான மாறுதலை ஏற்படுத்திய பெருமை இவருக்கும் இவரது சகோதரர்களுக்கும் உரியதாகும்

இவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது தமிழ்ப் பெருமக்கள் வாழும் இடங்களாகிய இலங்கை மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளுக்கும் சென்று, தமிழ் நாடகக் கலையின் சிறப்பைப் பரப்பியுள்ளார்கள். இன்று தமிழ்நாடகக் கலையின் ஒளி விளக்காகத் திகழும் திரு. சண்முகம் அவர்கள் தம் பிள்ளைப் பிராயத்திலிருந்தே கலைத் திருவோடு பிரகாசிக்கலானார்.

வாழ்க்கை முழுதும் நாடகக்கலைக்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட கலைஞர் சண்முகம் அவர்கள் தாம் எழுதிய சுவைக் களஞ்சியமான இந்த அரிய பெரிய நூலை வானதி பதிப்பக வெளியீடாக வெளியிட இசைவு தந்தமைக்கு என் நன்றிப் பெருக்கினை வணக்கத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இடையறாத தம் பணிகளுக்கிடையே என் விருப்பத்துக்கிசைந்து கேட்டவுடன் இந்நூலுக்கு அன்போடு முன்னுரை வழங்கியிருக்கிரார் மாண்புமிகு முதல்வர் கலைஞர் டாக்டர் மு. கருணாநிதி அவர்கள். நாடகக் கலைஞர் எழுதிய நூலுக்குக் கலைகளின் உருவாக அமைந்துள்ள கலைஞரின்

முன்னுரை தங்கக் குடத்துக்கிட்ட கஸ்தூரி திலகமெனத் திகழ்கின்றது. இதற்கு முதல்வர் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன்.

நாடகக் கலைஞர் சண்முகம் அவர்களோடு மிக்க ஈடுபாடும் மதிப்பும் கொண்ட சிலம்புச்செல்வர் ம. பொ. சி. அவர்கள் வழங்கியிருக்கும் அணிந்துரை இந்நூலுக்கு ஒரு நல்ல அணியாகவே திகழ்கின்றது. அவர்களுக்கு என் இதயம் கலந்த நன்றி.

இராமனுக்கு இளையோன் இலக்குவனைப்போல் கலைஞர் சண்முகம் அவர்களுக்கு உடன் பிறப்புத் தம்பி தி. க. பகவதியவர்கள். இந்நூல் வெளி வர அவர் நல்கிய ஒத்துழைப்பை என்னால் மறக்க முடியாது.

இந்நூல் உருவாகக் கருத்தோடு ஒத்துழைத்த கவிஞர் தே. ப.பெருமாள் அவர்களுக்கு என் அன்பு கனிந்த நன்றி.

விரைவில் இந்நூல் வெளிவரத் தூண்டு கோலாக இருந்த நண்பர் -நகைச்சுவைச் செல்வர் நடிகர். டி. என். சிவதாணு அவர்களுக்கும் செப்பமுற நூலைத் துரிதமாக அச்சிட்டுத் தந்த மூவேந்தர் அச்சகத்தாருக்கும் என் நன்றி.

ரசனை மிக்க இந்நூலை வாசகப் பெருமக்கள் பெருமளவு வாங்கி ஆதரித்து என்னை இப்பணியில் மேலும் ஊக்குவிக்க வேண்டுகிறேன்.

23. 4. 72         ஏ. திருநாவுக்கரசு
சென்னை - 17
------------

மூன்றாம் பதிப்பின் பதிப்புரை

முத்தமிழ்க்கலா வித்வரத்தினம் அமரர் அவ்வை சண்முகம் அவர்களின் ‘எனது நாடக வாழ்க்கை’ எனும் இந்நூல் தமிழ் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இப்பொழுது மூன்றாம் பதிப்பாக வெளிவருகிறது.

இந்நூலைப் பாராட்டி எண்ணற்ற கடிதங்கள் வந்துள்ளன, தமிழறிஞர்களும் சாதாரணமாக தமிழ்ப்படிக்க தெரிந்த அன்பர்களும் இந்நூலைப் பாராட்டியதோடல்லாமல் இந்நூலின் மறுபதிப்பை உடனடியாகக் கொண்டு வாருங்கள் என்று என்னைத் துரண்டிக்கொண்டே இருந்தார்கள். நூல் அளவில் பெரிது. நூலிலுள்ள விஷயமும் மிகப் பெரிது. இந்நூலை வெளியிடுவதில் வானதி பதிப்பகம் உண்மையிலேயே பெருமை கொள்கிறது.

இந்நூலின் மூன்றாம் பதிப்பை வெளியிட அனுமதியளித்த வணக்கத்துக்குரிய அவ்வை சண்முகம் அவர்களின் திருக்குமாரர்களுக்கு முதற்கண் உளமார்ந்த நன்றியை வானதி பதிப்பகம் செலுத்துகிறது.

அவ்வை சண்முகனாரின் மூத்தமகன் திரு டி. கே. எஸ் கலைவாணன் அவ்வை சண்முகம் அவர்களைப் போலவே அருங்கலைஞர். அவர் முன் பதிப்புக்களில் இல்லாத படங்களை எல்லாம் தேடிப்பிடித்து எடுத்துக் கொடுத்து இப்புதிய பதிப்பில் சேர்க்க வேண்டும் என மிக ஆர்வமுடன் சொன்னார். அதன்படி மூன்றாம் பதிப்பு சில புதிய படங்களுடன் இப்பொழுது வெளிவருகிறது.

“இம்மூன்றாம் பதிப்பை விரைவில் கொண்டுவரத்தான் வேண்டும். நடிகர் உலகமும் தமிழ்வாசகர் உலகமும் பெரிதும் இந்நூலை வரவேற்கிறது. உடனடியாகக் கொண்டு வாருங்கள்” என்று எனக்கு அன்புக் கட்டளையிட்டவர்களில் தலையாயவர் சிறந்த சிரிப்பு நடிகரும் நல்ல நண்பருமான உயர்திரு டி.என்.

சிவதாணு அவர்கள். அவருக்கு அன்புகணிந்த நன்றியை வாசகர் உலகமும், வானதியும் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறது.

இந்நூலின் மூன்றாம் பதிப்பை அழகுற அச்சிட்ட குருகுலம் அச்சகத்தாருக்கும், குருகுலம் அச்சுப்பள்ளி மாணவிகளுக்கும் நன்றி.

எனது நாடக வாழ்க்கை நூலை ஏற்று மகிழுங்கள்!

29–10–86 ஏ. திருகாவுக்கரசு
வானதி பதிப்பகம். சென்னை-17
---------

உள்ளுறை (பகுதி 1, அத்தியாயம் 1-25)


1. நாடக உலகில் நுழைந்தோம்

‘ஒரு தொழிலும் இல்லாதார் நாடகக்காரரானார்’ என்று நாடகக் கலைஞர்களைப்பற்றி மக்கள் இழித்துரைத்த காலம். கூத்தாடிகள், குடிகாரர்கள் இவை போன்ற பெயர்கள் நாடகக்காரர்களுக்கு அடைமொழிகளாயிருந்து வந்தன. நாடகக்காரன் என்றால் குடியிருக்க வீடும் கொடுக்கமாட்டார்கள். அவ்வளவு நல்ல பெயர் நடிகனுக்கு. இளம் பெண்களைக் கடத்திச் சென்று விடுவான் என்று மக்கள் பயப்பட்டார்கள். இந்தப் பயத்தில் ஒரளவு உண்மையும் இருந்தது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நாடகம் பார்க்க அனுமதிக்கமாட்டார்கள். நாடகம் பார்த்த இளைனார்கள் அதை நாலு பேருக்கு நடுவில் சொல்லிக்கொள்ள வெட்கப்படுவார்கள். நாடகக் கொட்டகைக்கு எதிரிலேயே ஒரு கள்ளுக் கடையும் இருக்கும்.

ஆம்; இயல், இசை, நாடகம் என்று தமிழ்மொழியை மூன்றாக வகுத்த நாட்டிலேதான் இந்தக் கேவலநிலை. நாடகத்திற் கென்று தனித்தமிழ் கண்ட நம் நாட்டில், நாடகத்துறை இவ்வாறு அவல நிலையில் இருந்த சமயத்தில் தான் நான் நாடக உலகில் நுழைய நேர்ந்தது.

தாயும் தந்தையும்

என் தந்தையார் திரு டி. எஸ். கண்ணாசாமிப்பிள்ளை; தாயார் திருமதி சீதையம்மாள். தந்தையாரும் ஒரு நடிகர். பெண் வேடம் தரித்து நடிப்பதில் பிரசித்தி பெற்றவர். அக்காலத்தில் பிரபலமாய் விளங்கிய வள்ளி வைத்தியநாதையர், அல்லி பரமேசுவரய்யர் ஆகியோர் நடத்தி வந்த கம்பெனிகளில் என் தந்தையார் நீண்டகாலம் பணி புரிந்திருக்கிறார். திரு.பி.எஸ். வேலுநாயர் பின்பாட்டுப் பாடுவதிலிருந்து ராஜபார்ட் வேடத்திற்கு வரத் துாண்டுகோலாயிருந்தவர் என் தந்தையார். இச்செய்தியினைத் திரு நாயரவர்களே என்னிடம் கூறி, என் தந்தையாரைப் பாராட்டினார். அந்த நாளில் எல்லா நாடக நடிகர்களுக்கும் ஆசிரியராக இருந்தவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். அவரைத் தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என்றே எல்லோரும் குறிப்பிடுவார்கள். என் தந்தையும் அவரது மாளுக்கர்களிலே ஒருவர்.

நாடகத் தொழிலுக்கு அக்காலத்தில் தாய் வீடாக விளங்கியது மதுரைமாரு கரம். நாடகக் கம்பெனிகள் பெரும்பாலும் மதுரையிலிருந்தே தொடங்கும். வேறு ஊர்களில் நாடகம் தொடங்குபவர்கள்கூட மதுரை என்றே போட்டுக் கொள்வது வழக்கம், எனவே, என் தந்தையாரும் மதுரையை இருப்பிடமாகக் கொண்டார்.

தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை

அந்தச் சமயம், சங்கரதாஸ் சுவாமிகளை ஆசிரியராகக் கொண்டு ஒரு நாடகக் கம்பெனி தொடங்கியது. இளஞ் சிறுவர்களையே முழுதும் நடிகர்களாகக் கொண்ட அந்தச் கம்பெனியின் பெயர், மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா.

ஒரு நாள் என் தந்தையார் என் சகோதரர்களுடன் என்னையும் அழைத்துக் கொண்டு, தமது ஆசிரியராகிய சுவாமிகளைக் காணச் சென்றார். அப்போது எங்களைக் கூர்ந்து நோக்கிய சுவாமிகள், “கண்ணா, உன் குழந்தைகளே இந்தக் கம்பெனியிலே சேர்த்துவிடு, நான் கவனித்துக் கொள்கிறேன்” என்றார். நாடகத்துறையை வெறுத்திருந்த தந்தையார் தயங்கினார். ‘குழந்தைகள் படிக்கிறார்கள்; அவர்களுடைய படிப்பு ...’ என்று ஏதோ சொல்ல முயன்றார். உடனே சுவாமிகள், “நானே தமிழ்ப் படிப்பும் சொல்லி வைக்கிறேன்; படித்து வக்கீல் உத்தியோகம் செய்யப் போகிறார்களா, என்ன! நல்ல சந்தர்ப்பம், இங்கேயே சேர்த்துவிடு” என்று வற்புறுத்திச் சொன்னார். எங்கள் தந்தை அப்போது ஸ்பெஷல் நாடகம் என்ற மரக் கட்டையைப் பற்றிக் கொண்டு வாழ்க்கைக் கடலில் நீந்திக் கொண்டிருந்தார். கொழும்பு, யாழ்ப்பாணம் முதலிய இலங்கைத் தீவின் நகரங்களிலேதான் அவரது நாடகப்பணி மிகுதியாக நடை பெற்று வந்தது. மதுரை அம்மன் சந்நிதியை அடுத்த சோற்றுக் கடைத்தெருவில் நாங்கள் குடியிருந்தோம். பண்டை நாளில் இத் தெருவில் உணவு விடுதி இருந்திருக்குமென நினைக்கிறேன். ஆனால், நாங்கள் இருந்தபோது சோற்றுக்கடையோ, இந்தக் காலச் சாப்பாட்டு ஒட்டலோ எதுவுமில்லை. அருகே தெற்கு ரத வீதியிலுள்ள வெள்ளியம்பலம் கலாசாலேதான் நான் படித்த பள்ளிக்கூடம். என் மூத்த அண்ணா திரு டி. கே. சங்கரன் ஆறாவது வகுப்பிலும், சின்னண்ணா திரு டி. கே. முத்துசாமி நான்காவது வகுப்பிலும், நான் இரண்டாவது வகுப்பிலுமாகப் படித்துக் கொண்டிருந்தோம். தம்பி பகவதி அப்போது கைக்குழந்தை.

கம்பெனியில் சேர்ந்தோம்

என் தந்தையார் நன்கு சிந்தித்தார். எங்களோடு கலந்து பேசினார். என்னையும், சின்னண்ணாவையும் சேர்த்துவிட எண்ணி னார். பெரியண்ணா மட்டும் படிப்பது நலமெனத் தோன்றியது. ஆனால், பெரியண்ணாவோ அப்பாவின் முடிவைக் கேட்டுக் கலங்கினார். எங்களைப் பிரிய அவர் மனம் இடம் தரவில்லை. எனவே, பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. நாங்கள் நாடகக் கம்பெனியில் சேர்ந்தோம். தந்தையார் சிறந்த பாடகர். நல்ல சாரீர வன்மையுடையவர். எனவே, அக்காலத்தில் மிக அவசியமாகக் கருதப்பட்ட பின்பாட்டுப் பாடும் ஸ்தானத்தில் அவரையும் கம்பெனியில் சேர்த்துக் கொண்டார்கள். எங்களைத் தனியே விட்டுப் போகத் தந்தையார் இசையவில்லை.

பெரிய அண்ணாவுக்குப் பத்து ரூபாய் மாதச் சம்பளம். சின்னண்ணாவுக்கு எட்டு ரூபாயும் எனக்குப் பதினேந்து ரூபாயும் கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது. பின்பாட்டுப் பாடும் என் தந்தையாருக்கு மட்டும் அறுபத்தி ஐந்து ரூபாய் சம்பளம். 1918-ஆம்ஆண்டில் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையின் நாடகங்கள் மதுரையில் ஆரம்பமாயின. காரதா கலகப்ரியா:

நாடகக் கம்பெனி மதுரை புட்டுத்தோப்பிலுள்ள ஒரு வீட்டில் இருந்து வந்தது. நாடகங்களுக்குப் பயிற்சி நடந்து கொண்டிருந்ததால் நாங்கள் கம்பெனி வீட்டிலேயே தங்கினோம். எனக்கு முதன்முதலாகச் சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் நாரதர் வேடம் கொடுக்கப்பட்டது. அப்போது கம்பெனியிலிருந்த நடிகர்கள் அனைவரிலும் நான் தான் மிகச் சிறியவன். அதனால் ஆசிரியர் சங்கரதாஸ் சுவாமிகளுக்கு என்மீது அளவு கடந்த பற்றுதல். அவர் என்னைப்பற்றி என்ன நினைத்தாரோ எனக்குத் தெரியாது. அநேகமாக எல்லா நாடகங்களிலும் எனக்கு நாரதர் வேடமே கொடுக்கப்பட்டது.

கம்பெனியில் அப்போது ‘சட்டாம் பிள்ளை’யாக இருந்து பாடங்கள் சொல்லி வைத்தவர் திரு டி. எஸ். குற்றாலிங்கம்பிள்ளை. சீமந்தனி, சதியனுகுயா, சுலோசன சதி, பார்வதி கல்யாணம் முதலிய நாடகங்களில் எல்லாம் நாரதர் வேடமே எனக்குக் கிடைத்தது. தொடர்ந்து நான் நாரதர் பாடம் செய்து வருவதைக் கண்ட மற்றப் பிள்ளைகள் என்னைக் கேலி செய்தார்கள். “நாரதா, கலகப் பிரியா” என்றெல்லாம் அடிக்கடி என்னைப் பெயர் வைத்துக் கூப்பிட்டார்கள். இந்தச் செய்தி சுவாமிகளின் செவிக்கும் எட்டியது. அவர் ஒருநாள் எல்லோரும் இருக்கும் சமயத்தில், “நாரதர் கலகக்காரர்தான்; ஆனால், அவர் செய்யும் கலகத்தினால் யாருக்கும் கெடுதி நேராது; நன்மையே விளையும்” என்று விளக்கம் தந்தார்.

வையை யென்னும் பொய்யாக் குலக் கொடி

புட்டுத்தோப்பில் கம்பெனி வீட்டிற்கு எதிரே முழுதும் ஒரே மணற் பரப்பு. வைகையாறு எதிரே இருந்ததால் தினசரி காலையில் ஊற்று நீரில் குளிப்பதற்கும், மாலே நேரங்களில் “பலிஞ் சடுகுடு விளையாடுவதற்கும் எங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது. “வையை யென்னும் பொய்யாக் குலக்கொடி” என்று சங்க இலக்கியம் வைகையின் வளத்தைப் பற்றிப் பேசுகிறது. அதெல்லாம் பழங்காலம். இப்போதெல்லாம் மழைக் காலங் களில் நாலைந்து நாட்கள் வெள்ளம் கரை புரண்டு ஒடும். மீண்டும் பழைய குருடிதான். அதற்குப் பின் ஊற்று நீரில்தான் குளிக்க வேண்டும்.

நான் எந்தப் பாடத்தையும் மிக விரைவில் நெட்டுருப் போட்டுவிடுவேன். அதனுல் பாடத்திற்காக ஆசிரியர் சுவாமி களிடம் நான் அடிவாங்கியதே இல்லை. சட்டாம்பிள்ளையும் எனக்கு அன்போடு நடிப்புச் சொல்லித் தருவார். ஆனால், மற்ற வர்கள் பாடம் செய்யாமல் அடிபடுவதைப் பார்க்கும்போது எனக்குக் கஷ்டமாக இருக்கும்.

முதல் நாடகம்

முதல் நாடகம் ‘சத்தியவான் சாவித்திரி’ மதுரை பெரிய தகரக் கொட்டகையில் அரங்கேறியது. இப்போது அந்தக் கொட்டகை இருந்த அடையாளமே தெரியவில்லை. எல்லாம் வீடுகள் நிறைந்து விட்டன.

மேல மாசி வீதியில் சின்னத் தகரக் கொட்டகை ஒன்று இருந்தது. இப்பொழுது அது சந்திரா டாக்கீஸ் என்று சொல்லப் படுகிறது. இவ்விரண்டைத் தவிர அப்போது மதுரையில் நான் அறிந்த வரையில் வேறு நாடக அரங்கம் கிடையாது.

பெயர் பெற்ற நகைச்சுவை நடிகர் திரு சி. எஸ்.சாமண்ணா ஐயர் எங்களுக்கெல்லாம் பவுடர் தொட்டு நெற்றியிலிட்டு வேஷம் போட்டு விட்டார். எனக்குத் தலையில் நிறைய முடி இருந்ததால் அதிலேயே கொண்டை போட்டார்கள். இடுப்பில் முழங்கால் வரை, தூக்கி ஒரு மஞ்சள் பட்டுத் துண்டைத் தார் போட்டுக் கட்டினார்கள். அதற்குமேல் இடுப்பைச் சுற்றி ஒரு சிவப்புப் பட்டு இரண்டு கால்களிலும் ‘கஜ்ஜை’ கட்டப்பட்டது. நாரதர் கதித்தை போட்டு ஆடிக் கொண்டே வரவேண்டும். நான் அரங்கில் பிரவேசிக்கும் சமயத்தில் யாரோ ஒருவர் வந்து என் கையில் மரத்தால் செய்த ஒரு வீணையைக் கொடுத்தார்.

எமனைக் கண்டு பயம்

‘சரிகம பதநியாம் ஏழு சுர நிலை லய சங்கீத சுகமே பெரிய சுகம்’ என்ற பாடலைப் பாடிய வண்ணம் நான் ஆடிக் கொண்டே அரங்கில் பிரவேசித்தேன். எல்லோரிலும் நான் மிகச் சிறுவனாக இருந்ததால் வந்தவுடனேயே சபையில் கைதட்டலும் கலகலப் பும் ஏற்பட்டன. பாட்டு முடிந்ததும் அசுவபதி ராஜா, அவர் மனைவி மாளவி, புதல்வி சாவித்திரி மூவரும்பாட்டுப்பாடி என்னை வணங்கி உட்காரச் சொன்னார்கள். மேடையில் உயரமான நாற். காலி போடப்பட்டிருந்தது.ஒரு கையில் வீணை இருந்ததால் அந்த உயரமான நாற்காலியில் உட்கார இயலாமல் நான்சற்று, தயங்கினேன். பிறகு கையிலிருந்த வீணையைக் கீழே போட்டுவிட்டு, நாற்காலியைப் பிடித்து ஏறி ஒருவாறு அதில் உட்கார்ந்தேன். சபையில் அதற்கும் கை தட்டினார்கள். எனக்கு ஒன்றும் புரிய வில்லை. பாடத்தை மட்டும் தவறாமல் பேசினேன்; பாடினேன். ஒருவகையாக நாரதரின் முதல் காட்சி முடிந்தது.

உள்ளே வந்ததும் சுவாமிகள் என்னைத் தூக்கி முத்தமிட்டுப் பாராட்டினார். ‘பையன் சீக்கிரம் முன்னுக்கு வந்துவிடுவான்’ என்று எல்லோரும் புகழ்ந்தார்கள். நாரதர் வர வேண்டிய அடுத்த காட்சி. எமதரும ராஜனின் சபை. நான் மகிழ்ச்சியோடு சபையில் பிரவேசித்தேன். எமனுக்கும் எனக்கும் வாதம் நடந் தது. சத்தியவான் உயிரைக் கவரக் கூடாதென நான் பலமுறை வேண்டிக் கொண்டேன். எமதருமன் சாதாரணமாக வாதித்துக் கொண்டே வந்தவர், இறுதியாகக் கோபம் கொண்டு, “எட்டி நில்லும் நாரதரே” என்ற பாட்டைத் தொடங்கித் தன் கையிலிருந்த சூலாயுதத்தை நீட்டிக் கொண்டு என்னை நெருங்கினார்.

நான் பயந்து அலறிய வண்ணம் உள்ளே ஓடிப் போய் சுவாமிகளைக் கட்டிக் கொண்டேன். சபையில் ஒரே சிரிப்பு, கோலாகலம். திரை விடப்பட்டது.

சுவாமிகள் பரிவு

அன்று எமன் வேடம் போட்டிருந்தவர் கந்தசாமி என்னும் பெயருடையவர். அவருடைய ஊர் துரத்துக்குடி. வேஷம் போட்டு ஒத்திகை பார்ப்பதெல்லாம் அப்போது கிடையாது. முகமெல்லாம் நீலத்தைப் பூசி, பெரிய கறுப்பு மீசை எழுதி, கண் களில் ஏதோ விழி பிதுங்கியது போன்ற ஒரு நீலக்கண்ணாடியைப் போட்டுக்கொண்டு, பயங்கரமான தோற்றத்தில் நின்ற கந்த சாமியைப் பார்த்ததும் நான் முதலிலேயே பயந்துவிட்டேன். அப்புறம் அவர் கோபத்தோடு சூலத்தை நீட்டிக் கொண்டு என்னை நெருங்கியதும் ஏதோ செய்யப் போகிருரென்று அஞ்சி உள்ளே ஒடி விட்டேன். தேம்பித் தேம்பி அழவாரம்பித்தேன். சுவாமிகள் என்னைச் சமாதானப்படுத்தினார். எமனைக் கூப்பிட்டு, என் பக்கத்தில் நிறுத்தினார், அவருடைய தலையிலிருந்த தகரக் கிரீடத்தையும் ‘டோப்பா’ வையும் மூக்கில் போட்டிருந்த நீல வலைக் கண்ணாடியையும் கழற்றச் செய்தார். “நம்ம கந்தனடா இவன்: நன்றாய்ப் பார். எமனில்லை! அதெல்லாம் வெறும் நடிப்பு!...பயப்படாதே!” என்று தட்டிக் கொடுத்தார், அந்த எமக் கந்தசாமி யும் என்னோடு சிரித்துக் கொண்டே பேசினார். ஒருவாறு பயம் நீங்கியது.

மீண்டும் திரை தூக்கப்பட்டது. காட்சியை விட்ட இடத் திலிருந்து தொடங்கினார் கந்தசாமி, எட்டி நில்லும் நாரதரே’ என்ற பாடலைப் பாடினார். அப்போதும் நான் சற்று நடுங்கிக் கொண்டிருந்தேன். எமன் பேசி முடித்ததும், “கச்சை கட்டிக் கொண்டு, நானே உன் கைவரிசையைப் பார்க்கிறேன்” என்று பாட ஆரம்பித்தேன். அவ்வளவுதான். சபையில் ஒரே கை தட்டல்; சிரிப்பு. நாரதர் பயந்து ஓடிப்போனதைப் பார்த்த சபையோ, இப்போது கைவரிசையைப் பார்க்கிறேன்’ என்றால் வேறு என்ன செய்வார்கள்? எப்படியோ நடுக்கத்துடன் பாடி முடித்து உள்ளே வந்து சேர்ந்தேன்.

அந்த முதல் நாடகத்தில் நான் பயந்தோடிய சம்பவம் இன்னும் பசுமையாக என் நினைவில் இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.

கம்பெனியின் உரிமையாளர்கள்

இந்தச் சந்தர்ப்பத்தில் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையைப் பற்றியும், தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றி யும் சில செய்திகள் குறிப்பிடுவது அவசியமெனக் கருதுகிறேன்.

நாடக சபைக்கு உரிமையாளர்கள் நால்வர். திருவாளர்கள் சின்னையாபிள்ளை, பழனியாபிள்ளை, கருப்பையாபிள்ளை, சுப்ரமணிய பிள்ளை. இந்த நால்வரில் நாடக சபைக்கு அதிக முதலீடு செய்தவர் சின்னையாபிள்ளை. இவர் கம்பெனி வீட்டில் தங்குவதில்லை. அடிக்கடி வந்து பார்த்துவிட்டுப் போவார். கருப்பையா பிள்ளை கம்பெனியின் கணக்கு விவகாரங்களையெல்லாம் பார்த்துக் கொள்வார். பெரும்பாலும் கம்பெனி வீட்டிலேயே தங்குவார். சுப்பிரமணிய பிள்ளை எப்போதாவது மாதத்திற்கொரு முறை வந்து போவார். பழனியா பிள்ளை ஒருவர் தான் எல்லோருடனும் நெருங்கிப் பழகக் கூடியவர். அதிலும் ஆசிரியர் சுவாமிகளிடம் ஏதாவது சொல்ல வேண்டுமானால் பழனியா பிள்ளை தான் சொல்வார். மற்ற உரிமையாளர்கள் சுவாமிகளிடம் நெருங்கவே பயப்படுவார்கள்.
-------------

2. சங்கரதாஸ் சுவாமிகள்


அந்தநாளில் தமிழ் நாடக உலகில் சுவாமிகள்’ என்றாலே போதும், அது சங்கரதாஸ் சுவாமிகள் ஒருவரைத்தான் குறிக்கும். சுவாமிகள் காலத்தில் இருந்த மிகப் பெரிய புலவர்களும் நாடகாசிரியர்களுமான உடுமலைச் சரபம் முத்துச்சாமிக் கவிராயர், சித்திரக்கவி சுப்பராய முதலியார், ஏகை சிவசண்முகம் பிள்ளை, குடந்தை வீராசாமி வாத்தியார் முதலியோரெல்லாம் சுவாமிகளின் புலமைக்குத் தலைவணங்கிப் பாராட்டினார்கள்.

நடிகர்கள் ஒழுக்கமாகவும், கட்டுப்பாடாகவும் இருக்க வேண்டும் என்பதில் சுவாமிகள் மிகவும் அக்கறையுடையவராக இருந்தார். வெற்றிலை போடுவது, பொடி போடுவது, பீடி சிகரெட் முதலிய லாகிரிப் பொருட்களை உபயோகிப்பது இவை யெல்லாம் சுவாமிகளுக்குப் பிடிக்காது. நடிகர்கள் யாராவது இவற்றை உபயோகிப்பதாகத் தெரிந்தால் அவன் பாடு தீர்ந்தது. பிறகு யார் தடுத்தாலும் பயனில்லை; பயங்கரமான அடி விழும். சுவாமிகளின் இந்த அடிக்குப் பயந்து கம்பெனியை விட்டு ஓடிய நடிகர்கள் பலருண்டு.

சுவாமிகள் தாமே நடிப்புச் சொல்லிக் கொடுப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். எமதருமன், இரணியன், கடோற் கஜன் முதலிய வேடங்களுக்கு அவரேதாம் நடிப்புப் பயிற்சி அளிப்பார். கம்பீரமான அவரது குரல் வெண்கல நாதம்போல் ஒலிக்கும்.

ஒரே நாளிரவில் ஒரு நாடகம் முழுவதையும் கற்பனையாக எழுதி முடிக்கும் மகத்தான ஆற்றல் சுவாமிகளுக்கு இருந்தது. இது வெறும் புகழ்ச்சியன்று; என் கண்கண்ட உண்மை.

நாடகப் புலமை

அநேகமாக எல்லா நாடகங்களிலும் எனக்கு நாரதர் வேடமே கொடுக்கப்பட்டு வந்ததாக முன்பு குறிப்பிட்டேனல்லவா? ஒருநாள் பழனியா பிள்ளை, ‘சுவாமி! நம்முடைய சண்முகம் கதாநாயகனுக நடிப்பதற்கு ஏற்றபடி ஒரு நாடகம் எழுத வேண்டும்’ என்று கூறினார்.

சுவாமிகள் அவரைப் பார்த்துப் புன்னகை புரிந்தார். அந்த விநாடியே அவரது சிந்தனை செயல்பட ஆரம்பித்துவிட்டது. பழனியாபிள்ளை சொல்லிய வார்த்தைகள் சுவாமிகளின் நாடக இதயத்தை தொட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அப்பொழுதிருந்தே அவர் வானத்தையும் பூமியையும் பார்த்துச் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்.

அன்று மாலேயே சுவாமிகள் புத்தகக் கடைக்குச் சென்றார். ‘அபிமன்யு சுந்தரி’ அம்மானைப் பாடல் பிரதியொன்று வாங்கி வந்தார். இரவு சாப்பாட்டுக்குப் பிறகு ‘அரிக்கன் விளக்கை’ வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தார். மறுநாள் பொழுது விடிந்து நாங்கள் எழுந்தபோது சுவாமிகள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். அவருடைய படுக்கையருகே அவர் எழுதிய கையெழுத்துப் பிரதிகள் இருந்தன. அபிமன்யு நாடகம் மங்களப் பாட்டுடன் முடித்து வைக்கப் பெற்றிருந்தது. என்ன ஆச்சரியம்! ....

இந்தக் காலத்தில் ஒரு நாடகம் எழுதுவது என்றால் எத்தனை எத்தனை முன் ஏற்பாடுகள்; ஆலோசனைகள்; விவாதங்கள். வசனம் எழுதுவது ஒருவர்; பாடல் இயற்றுவது வேறொருவர்; இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு இயற்றிய நாடகம் மேடையில் நடிப்பதற்குப் பொருத்தமாக இருக்குமாவென்பது வேறு விஷயம். சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே நாள் இரவில் நூற்றுக் கணக்கான பாடல்கள் உரையாடல்களுடன் அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுதியிருந்த அபிமன்யு சுந்தரி நாடகத்தைக் கண்டு எல்லோரும் அதிசயப்பட்டார்கள். ஒரு நாடகத்தை நகல் எடுப்பதற்குக்கூட ஒருநாள் இரவில் முடியாது. நான்கு மணி நேரம் நடைபெறக் கூடிய ஒரு நாடகத்தைக் கற்பனையாகவே ஒர் இரவுக்குள் எழுதி முடித்துவிட்டார் சுவாமிகள். அவரை முருகன் அருள் பெற்ற அருட்பெரும்புலவர் என்றே எல்லோரும் வியந்து பாராட்டினார்கள்.

‘அடே சின்னப் பயலே! இந்த அபிமன்யு நாடகம் உனக் காகவே எழுதப் பெற்றது’ என்று கூறிச் சுவாமிகள் அன்று என் முதுகிலே தட்டியபோது அது எனக்குப் பெரிதாகத் தோன்ற வில்லை. இன்று அதை எண்ணியெண்ணிப் பெருமைப்படுகிறேன். பெருமிதம் கொள்கிறேன்.

தந்தையார் நடித்த நாடகம்

முதல் நாடகம் சத்தியவான் சாவித்திரி முடிந்த பிறகு, நான்கு நாட்கள் ஒய்வு கொடுக்கப்பட்டது. இடையே ஒருநாள் நாங்கள் நடித்த அதே கொட்டகையில் சுவாமிகளின் கோவலன் நாடகம் நடைபெற்றது. ஸ்பெஷல் நாடக நடிகர்கள் அதில் கலந்து கொண்டார்கள்.

திரு. எம்.எஸ்.தாமோதரராவ் கோவலனாக நடித்தார். மாதவியாக ரத தினசாமிப் பிள்ளையும் கண்ணகி, காளியாக என் தந்தை டி. எஸ் கண்ணாசாமிப்பிள்ளையும் நடித்தார்கள். என்னுடைய நான்கு வயதுப் பருவத்தில் ஒரு முறை என் தந்தையார் நல்ல தங்காள் நாடகத்தில் நல்லதங்கையாக நடித்ததைப் பார்த்திருக்கிறேன். அப்போது நான் நல்லதங்கையின் கடைசிப் பிள்ளையாக நடித்த நினைவிருக்கிறது. நாஞ்சில் நாட்டிலுள்ள தாமரைக் குளம் என்ற ஊரில் அந்த நாடகம் நடந்தது. ஆனால், அது ஏதோ கனவுபோலத்தான் நினைவில் இருந்தது. இப்போது கோவலன் நாடகத்தில் அவர் கண்ணகியாக நடித்ததைத்தான் முதலும் கடைசியுமாய்ப் பார்த்ததாகக் கொள்ளவேண்டும். இந்த நாடகமும் சுவாமிகளின் ஏற்பாட்டிலேயே நடைபெற்றதால் நாங்கள் எல்லோரும் நாடகம் பார்த்தோம்.

எம். எஸ். தாமோதரராவ் அந்தநாளில் மிகச் சிறந்தநடிகராக விளங்கியவர், அவருடைய நாடகங்கள் பலவற்றை நான் பார்த்திருக்கிறேன். நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்தனாரின் மனோகரன், நாடகத்தில் மனோகரனக அற்புதமாக நடிப்பார் தாமோதரராவ் சங்கிலி யறுக்கும் காட்சியில் அவர் நடிப்பதைப் பார்க்கும் போது மெய்சிலிர்க்கும். பழம்பெறும் நடிகர்களிலே ஒருவர் அவர்.

என் தந்தையார் நடிகராகக் கலந்து கொண்டது கடைசியாக அந்தக் கோவலன் நாடகத்தில்தான். அதன்பிறகு நடிக்கும் சந்தர்ப்பம் அவர் வாழ்க்கையில் ஏற்படவே இல்லை. பின்பாட்டுக் காரராகவே இறுதி வரையும் வாழ்ந்தார்.

தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபையின் நாடகங்கள் மதுரையில் தொடர்ந்து ஒரு மாதகாலம் நடைபெற்றன. பவளக் கொடி, சதியனு சூயா, சுலோசன சதி, சீமந்தனி, பிரகலாதன், கோவலன், பார்வதி கல்யாணம் முதலிய நாடகங்களெல்லாம் நடிக்கப் பெற்றன. சிறுவர்கள் நடிக்கும் நாடகம் ஆனதால் சிறந்த வரவேற்பைப் பெற்றனவென்றே சொல்லவேண்டும்.

தங்கப் பதக்கம் பரிசு

அடுத்த ஊர் விருதுப்பட்டி ஆம், விருதுப்பட்டிதான்; நமது தலைவர் திரு. காமராசர் அவர்கள் பிறந்த ஊர்தான். விருதுநகர் என்ற பெயர் அப்போது இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஏற்பட்டது. விருதுப்பட்டியை நான் மறக்க முடியாது. அங்குதான் 1936 இல் மனிதகுல மாணிக்கம் பண்டித நேரு அவர்களைத் தரிசித்தேன். வீராங்கனையாக இன்று விளங்கும் திருமதி இந்திரா அவர்களை இளம்பருவத்திலே கண்ட இடமும் விருதுப் பட்டிதான்.

விருதுப்பட்டியில் நாடகங்கள் ஆரம்பமாயின. எங்கள் அன்னயார் மதுரையிலே இருந்தார். தந்தையாருடன் நாங்கள் மூவரும் கம்பெனி வீட்டிலேயே தங்கினோம் விருதுப்பட்டியில் தான் எனக்கு முதன்முதலாக ஒரு தங்கப் பதக்கம் பரிசாகக் கிடைத்தது. விருதுப்பட்டி ரயில்வே அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து அளித்த பரிசு அது. பின்னால் எங்களுக்கு எவ்வளவோ கஷ்டங்கள் நேர்ந்த காலங்களில்கூட அந்த முதற் பரிசை மட்டும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருந்தோம்.

புலங்திரன் எங்கே?

பவளக்கொடி நாடகத்தில் நான் புலந்திரனக நடிப்பேன். முதல் காட்சியில் வந்து, தாயார் அல்லி மகாராணியிடம் பவள ரதம் வேண்டுமென்று கேட்டுவிட்டுப் போய்விடுவேன். பிறகு நாடகத்தின் கடைசியில்தான் புலந்திரன் வரவேண்டும். சுமார் நான்கு மணிநேர இடைவேளை இருக்கிறது. அத்தனைநேரம் என்னால் எப்படி விழித்துக் கொண்டிருக்க முடியும்! நாடகம் அந்த நாளிலெல்லாம் இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகி ஏறத்தாழ இரவு 2.30 மணிக்கு முடிவுபெறும். பக்கத் தட்டிகளின் ஒரத்தில் நின்று பார்ப்பேன். தவிர்க்க முடியாத நிலையில் தூக்கம் வந்து என் கண்களைத் தழுவிக் கொள்ளும். யாருக்கும் தெரியாதபடி எங்காவது ஒரு மறைவில் படுத்து உறங்கிவிடுவேன். நான் வர வேண்டிய காட்சிக்கு முன்பாகவே என் தந்தையார் என்னைத் தேடிக் கண்டுபிடித்து எழுப்பி விடுவார். இதுவே வழக்கம்.

விருதுப்பட்டியில் ஒரு நாள் பவளக்கொடி நாடகம் நடை பெற்றபோது நான் படுத்துறங்கிய இடம் யாருக்கும் தெரியாது போயிற்று புலந்திரன் காட்சி வருவதற்கு முன்பே என்னைத் தேடத் தொடங்கியவர்கள், அந்தக் காட்சி வரும்வரையில் கண்டு பிடிக்கவில்லை. காட்சியும் வந்துவிட்டது. புலந்திரனைக் காணோம். என்ன செய்வார்கள்!

“எங்கே புலந்திரன்? எங்கே ஷண்முகம்?” என்று தேடினார்கள். கடைசியாக அல்லிவேடம் புனைந்திருந்த நடிகரே என்னைக் கண்டுபிடித்தார். உறக்கம் கலைக்கப்பட்டதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகுதான் தெளிவுபெற்றேன். சுவாமிகள் என்ன செய்வாரோ வென்று பயந்து நடுங்கினேன். காட்சி முடிந்து வந்ததும் சுவாமிகள் என்னைத் தட்டிக் கொடுத்து “டே சின்னப் பயலே! இனிமேல் எல்லோருக்கும் தெரியும் படியான இடத்தில் படுத்துறங்கு. இப்படி மூலை முடுக்குகளில் கிடந்து உறங்காதே” என்று அன்போடு கூறினார். அன்று முதல் பவளக்கொடி நாடகத்தில் மட்டும் பகிரங்கமாக எல்லோர் முன்னிலையிலும் உறங்க எனக்கு அனுமதி யளிக்கப்பட்டது.

விளம்பரங்கள்

நாடக சினிமா விளம்பரங்கள் இந்தக் காலத்தில் எவ்வளவோ வளர்ச்சியடைந்திருக்கின்றன. புதிய புதிய: முறைகளில் போட்டி போட்டுக் கொண்டு விளம்பரங்கள் செய்கிறார்கள். எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதைச் சரியானமுறையில் விளம்பரம் செய்யாவிட்டால் விலை போகாது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

புதிய நாடகம் ஒன்றை அரங்கேற்றுவதனால் அதைப் பொது மக்களிடையே விளம்பரப்படுத்த, இன்று மிகவும் சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பெரிய பெரிய சினிமாசுவரொட்டி களுக்கிடையே இன்றையச் சிறிய நாடகச் சுவரொட்டிகள் மங்கி விடுகின்றன. முழுப் பக்கம், அரைப்பக்கம், கால்பக்கம் என்று சினிமா விளம்பரங்கள் வரும் பத்திரிகைகளில் ‘இஞ்சு’ க் கணக்கில் வெளியிடப்படும் நாடக விளம்பரங்கள் மக்களுக்குத் தெரிவதில்லை. இன்று நாடக உலகம் இருக்கும் நிலையில் மிகப் பெரிய அளவில் விளம்பரம் செய்வது முடியாமல் இருக்கிறது. நாடகத்திற்காக ஏற்படும்செலவினங்களே அதிகமாக இருப்பதால் விளம்பரத்திற்கென்று ஒரு பெருந்தொகை ஒதுக்குவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

இந்தக் கால நாடக விளம்பர நிலை இப்படி ....

அந்தநாளில் நாடகத்தை விளம்பரப்படுத்துவது எவ்வளவு சுலபமாக இருந்தது தெரியுமா? சுவாமிகள் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபைக்கு எழுதிய விளம்பரத் துண்டுப் பிரசுரங்கள் மிக வேடிக்கையாக இருக்கும். ‘பிரகலாதன்’ நாடகத்திற்கு அவர் எழுதிய விளம்பரத்தாள் ஒன்று இரண்டாண்டுகளுக்கு முன்புவரை என்னிடம் இருந்தது.

“இவன் யார்? ஏன் இப்படிப் பார்க்கிறான்? வலது புறம் திரும்பும்போது கண்களில் நீர் ததும்புகிறது இடது புறம் திரும் பும்போது கண்களில் கோபாக்னி வீசுகிறதே! ....”

“ஆம், இவன் இரணியகசிபு -தன் தம்பி இரண்யாட்சன் இறந்து போன செய்தியைத் தூதர் மூலம் அறிந்து வருந்துகிறான். அதே சமயம் தன் தம்பியைக் கொன்ற மாயாவியான ஹரியைப் பழி வாங்க வேண்டுமென்ற ஆவேச உணர்ச்சியால் கோபாக்னி வீசுகிறது”

“வீரம், சோகம், கோபம் ஆகிய மூன்று உணர்ச்சிகளையும் மாறி மாறித் தோன்றும்படியாகச் செய்வது எவ்வளவு அற்புதமாக இருக்கிறது”.

இவ்வாறு கேள்வியும், விடையுமாக நாடகத்தின் முக்கிய கட்டங்களைப்பற்றியெல்லாம் குறிப்பிட்டு, நீளமான விளம்பர அறிக்கை வெளியிடுவார் சுவாமிகள். இந்த விளம்பரங்களைச் சேகரித்து வைப்பதில் அந்த நாளில் எனக்குப் பெரும் பைத்தியம்.

மாட்டு வண்டிப் பயணம்

இப்போது நான் சொல்லப் போகும் செய்தி உங்களுக்குப் பெரும் வியப்பாக இருக்கும். கற்பனையல்ல; உண்மையாக நடந்த சம்பவம்.

விருதுப்பட்டிக்குச் சில மைல் தூரத்தில் மல்லாங்கிணறு: என்று ஒரு சிற்றுார். விருதுப்பட்டியில் ஒரு மாத காலம் நாடகங்கள் நடத்தியபின் மல்லாங்கிணறு சென்றோம். அப்போது அந்த ஊருக்குப் போவதற்கு நல்ல பாதையில்லை. பஸ் போக்கு வரத்தெல்லாம் கிடையாது. கரடு முரடான அந்தப் பாதையில் இரட்டை மாட்டு வண்டியில் அமர்ந்து போய்ச் சேர்ந்தோம். பெரியவர்கள் சிலர் வண்டியின் ஆட்டத்திற்குப் பயந்து தமாஷாகப் பேசிக்கொண்டே நடந்து வந்து சேர்ந்தார்கள்.

வேட்டு விளம்பரம்

நாங்கள்போன மறுநாள் நாடகம் வைக்கப்பெற்றிருந்தது. முதல் நாடகம் சத்தியவான் சாவித்திரி. விளம்பர அறிக்கை களைச் சேகரித்து வைப்பதில் அந்த நாளில் எனக்குப் பெரிய பைத்தியமென்று முன்பே குறிப்பிட்டேனல்லவா? நாடக நோட்டீஸ் வேண்டுமென்று சில பெரியவர்களிடம் கேட்டேன். கிடைக்கவில்லை. “இந்த ஊரில் நோட்டிஸ் போடும் வழக்கம் கிடையாது” என்று சொல்லிவிட்டார்கள். எங்களுக்குப் பெரிய அதிசயமாக இருந்தது. விளம்பரம் ஒன்றும் இல்லாமல் நாடகத்திற்கு மக்கள் எப்படி வருவார்கள் என்ற கேள்வி மனத்தில் எழுந்தது. எவரிடமிருந்தும் சரியான விடை கிடைக்வில்லை.

நாடகம் இரவு பத்து மணிக்கு ஆரம்பம் என்று சொன்னார்கள். இரவு 7.30 மணிக்கு நாங்கள் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். திடீரென்று காது செவிடு படும்படியாக ஒரு பெரிய வேட்டுச் சத்தம் கேட்டது ஊரே அதிர்ந்து விடும் போல இருந்தது. அந்தச் சத்தத்தைக் கேட்டதும் எல்லோரும் பயத்துடன் நான்கு புறமும் பார்த்தோம். உடனே சங்கரதாஸ் சுவாமிகள்,“ டேய்! ஒன்றுமில்லை. நாடக விளம்பரத்திற்காக வேட்டுப் போடுகிறார்கள்” என்றார், அப்போதுதான் எங்களுக்கு விஷயம் புரிந்தது.

அந்த ஊரில் கொட்டகை வாசலில் வேட்டுப் போடுவதற்காக ஒர் இடம் அமைக்கப்பட்டிருந்ததைப் போகும்போது பார்த்தோம், இரவு 7.30 மணிக்குமேல் மூன்று முறை வேட்டுப் போடுவார்களாம். அந்த ஊரிலும், சுற்றுப்புறத்தில் சுமார் ஏழு எட்டு மைல் தூரத்தில் உள்ள சிற்றுார் மக்கள் இந்த வேட்டுச் சத்தத்தைக் கேட்டுவிட்டு, மல்லாங்கிணறு கூத்து மேடையில் நாடகம் இருக்கிறது என்று தெரிந்து கொள்வார்களாம். எவ்வளவு எளிமையான விளம்பர முறை பார்த்தீர்களா?

வெளிச்சம் போடும் முறை

இரவு 8.30 மணிக்கு எல்லோரும் கொட்டகைக்குப் போய்ச் சேர்ந்தோம். அப்போதெல்லாம் மதுரையிலேயே கூட மின்சார விளக்கு கிடையாது. ஆக மொத்தம் நான்கு கியாஸ் லைட்டுகள் தாம் கொட்டகை முழுதும் வெளிச்சம் கொடுக்க வேண்டும். பிரதான வாயிலில் ஒன்று; மேடையுள்ளே வேடம் புனையும் இடத்தில் ஒன்று, மேடையின் இருபுறமும் இரண்டு கியாஸ் லேட்டுகள் மேலே கட்டித் தொங்கவிடப்பெற்றிருக்கும். கொஞ்சம் பெரிய நகரமாய் இருந்தால் இன்னும் இரண்டு கியாஸ் லைட்டுகள் வரும். சபை நடுவில் ஒன்று; மேடை நடுவில் ஒன்று. மல்லாங் கிணறு சிற்றுாரானதால் நான்கு லேட்டுகள்தாம் இருந்தன. இந்த வெளிச்சத்தில் எப்படி நாடகம் பார்த்தார்கள் என்பதை இன்று எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. நம் கண்களுக்கு இன்னும் நுண்ணிய பார்வை இருந்திருக்க வேண்டுமென்றே நினைக்கிறேன். மின்சார வெளிச்சம் வந்த பின் கண் பார்வைக்கிருந்த வலிமை போய்விட்டது. ஒலி பரப்பும் மைக் வந்தபின் அதைக் கேட்டுக் கேட்டு, நம் செவிகளின் வலிமையும் குறைந்து விட்டது.

திறந்த வெளி அரங்கம்

இரவு ஒன்பது மணியிலிருந்து பத்து மணிக்குள் நாலா பக்கங்களிலுமிருந்து இரட்டை மாட்டு வண்டிகளிலும், கால் நடையிலுமாகப் பெருந் திரளாக மக்கள்வந்து கூடிவிட்டார்கள், பத்தரை மணி சுமாருக்கு நாடகம் தொடங்கியது. திறந்த வெளியில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் அமர்ந்திருந்தார்கள்.

திறந்த வெளியிலே நாடக அரங்கம் அமைப்பது நமக்குப் புதிதன்று. பண்டைக் காலத்திலேயே நாடகம், நடனம், பிற கூத்து வகைகள் எல்லாம் திறந்த வெளி மேடைகளில் தாம் நடைபெற்று வந்தன. தமிழ்நாட்டின் சிறப்புக்குரிய ஆலயங்களிலெல்லாம் விழாக் காலங்களில், அன்றும் இன்றும் கல நிகழ்ச்சிகள் பெரும்பாலும் திறந்த வெளிகளிலேதான் நடை பெற்று வருகின்றன. இந்தத் திறந்த வெளி அரங்குகளைத் ‘தெருக்கூத்து மேடைகள்’ என்று மக்கள் குறைவாகக் கருதி வந்தார்கள். சென்ற பல ஆண்டுகளாகத் திறந்த வெளி அரங்கின் நினைவு மாறாமல், அழியாமல் பாதுகாத்து வந்தவர்கள் தெருக் கூத்து ஆடியவர்கள்தாம் என்பது மறுக்க முடியாத உண்மை. அது மட்டுமன்று, பாரத விடுதலைப் போராட்டத்தில் தன்னை முதல் பலியாகக் கொடுத்த வீரபாண்டிய கட்டபொம்மணத் தமிழர் மறந்துவிடாதபடி நினைவூட்டிக் கொண்டிருந்தவர்கள், இந்தத் திறந்த வெளி மேடைகளிலே கூத்து நடத்திய கலைஞர் களே என்றால் அதுவும் நன்றியறிதலோடு ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை. எனவே, திறந்த வெளி அரங்கம் புதுமை யானதன்று, பழமையெல்லாம் இன்று புதுமையாகக் கருதப் படுவதுபோலத்தான் இதையும் கொள்ளவேண்டும்.

பயங்கர அமைதி

நாடகம் நடந்து கொண்டிருந்தது. இல்லை. நாடகத்தை மக்கள் தெரியவில்லை. உள்ளே சபையில் சத்தமே கொஞ்சங்கூட ரசித்ததாகத் இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் இதைப்பற்றி முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். நான் சின்னப் பையனாக இருந்ததால் மேடைக்கு வந்தவுடனேயே ஜனங்கள் கைதட்டி வரவேற்பது வழக்கம். சபையோர் மந்த மாக உட்கார்ந்திருப்பதைக் கண்ட சங்கரதாஸ் சுவாமிகள்,

“எல்லாம் சண்முகம் பயல் மேடைக்குப் போனவுடன் சரியாய்ப் போய்விடும்.”

என்று கூறியது என் காதில் விழுந்தது. நாரதர் வர வேண்டிய காட்சியும் வந்தது. “சங்கீத சுகமே பெரிய சுகம்” என்று பாடிக்கொண்டு நான் அரங்கில் பிரவேசித்தேன். வழக்கம் போல் பெருத்த கரகோஷத்தை எதிர்பார்த்த எனக்குப் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. சபையில் முழு அமைதி நிலவியது. தூரத்தில் கற்றாழைப் புதர்கள்; குறைவான வெளிச்சம், எதிரே பயங்கரமான அமைதி. எனக்கு என்னமோ போலிருந்தது. திறந்த வெளியில் நடிப்பது எனக்குப் புதிய அனுபவம். அவையோரின் மரண அமைதி எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. முகத்தில் சோகச்சுவை ததும்ப, நான் உள்ளே வந்து சேர்ந்தேன்.

எமதருமன் தோன்ற வேண்டிய காட்சி வந்தது. சிந்தனை யிலேயே உட்புறம் உலாவிக் கொண்டிருந்த சுவாமிகள், எம தருமனக வேடம் புனேந்திருந்த கந்தசாமியிடம் போய் ஏதோ காதில் சொல்லிக்கொண்டிருந்தார். உடனே எமதருமன் காலில் ‘சலங்கை’ கட்டப் பெற்றது. காட்சி தொடங்கியது.

எமதருமன் ஆட்டம்

“விண்டலமும் மண்டலமும் எண்டிசை யடங்களுக் விளங்கும் கீதி மார்க்கம் அடுப்பேன்”

என்று தொடங்கும் பாடலே முழக்கிக் கொண்டு எமன் கந்தசாமி மேடைக்கு வந்தார். வழக்கத்திற்கு மாருகக் கையிலிருந்த குலா யுதத்தைச் சுழற்றிக் கொண்டு. ‘தை தக்க தை தக்க தை’ என்று குதித்துக் கொண்டு, ‘ஜல் ஜல்’ எனச் சலங்கைகள் ஒலி செய்ய, அரங்கம் முழுவதும் ஆட்டம் போடத் தொடங்கினார்.

சபையில் ஒரே கரகோஷம்! அமைதியாயிருந்த சபையில் ஆரவாரம்!! பலே பலே என்ற சத்தம் !!!

அப்போதுதான் எல்லோருக்கும் விஷயம் புரிந்தது. நடிகர்கள் ஆடிக்கொண்டு வரவேண்டும் என்பதையும், ஆடாத நாடகம் அதுவரை மல்லாங்கிணற்றில் நடந்ததே இல்லை யென்பதையும் தெரிந்து கொண்டோம்.

இந்த நாளிலே கூட நாடகத்தை ‘ஆட்டம்’ என்று சொல்வது வழக்கில் இருந்து வருவதைப் பார்க்கிறோமல்லவா?

அன்றைய நாடகத்தில் எமனுக நடித்த கந்தசாமிக்குப் பிரமாதமான பேர். அவரைத் தவிர மற்ற நடிகர்கள் நன்றாயில்லை யென்று பலரும் பேசிக் கொண்டார்களாம்.

எப்படி வேட்டில் விளம்பரமும் வினோத ஆட்டமும்?

மல்லாங்கிணற்றில் நாடகங்கள் அதிக நாட்கள் நடைபெற வில்லை. வெகு விரைவிலேயே சாத்துரர் போய்ச் சேர்ந்தோம், சாத்துரில் நாடகங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.

கம்பெனியின் நடிகர்கள்

அந்த நாட்களில் இப்பொழுது நடைபெறுவதைப் போல் தினசரி நாடகம் கிடையாது, வாரத்திற்கு மூன்று நாட்கள் தான் நாடகங்கள் நடைபெறும். இன்னொரு வியப்புக்குரிய செய்தி என்னவென்றால் பொது விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை நாடகம் வைப்பது வழக்கமில்லை. இப்பொழுதெல்லாம் சனி, ஞாயிறுதாம் முக்கியமான நாடக நாட்கள்; அந்தக் கிழமைகளில்தான் வசூலாகும் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது . அந்தக் காலத்தில் “பிரதி செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் நாடகம் நடைபெறும்”, “ஆட்ட கால சட்டத்தை அனுசரிப்பதே முறை”, “அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும்” என்றெல்லாம் விளம்பர அறிவிப்பிலேயே போட்டு விடுவார்கள். ஆக மொத்தம் ஒரு மாதத்தில் பன்னிரண்டு அல்லது பதிமூன்று நாடகங்கள் நடைபெறுவது வழக்கம்.

நடந்தே சென்றோம்

நடிகர்களும் மற்றத் தொழிலாளர்களும் எல்லோருமாக ஏறத்தாழ நாடக சபையின் மொத்த எண்ணிக்கை நூறு பேரிருக்கலாம். நாங்கள் தங்கியிருக்கும் வீடு நாடகக் கொட்டகைக்கு அருகிலிருந்தாலும் தொலைவிலிருந்தாலும் எல்லோரும் நடந்தே தான் போய் வருவோம். மாலை நாடகம் என்பதெல்லாம் கிடையாது. எப்போதும் இரவு 9.30 மணிக்குத் தான நாடக ஆரம்பம். இரவு 7 மணிக்குள் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் புறப்படத் தயாராகி விடுவோம். பெரியவர் யாராவது ஒருவர், ஒரு அரிக்கன் விளக்கைக் கையில் பிடித்துக் கொண்டு முன்னே செல்வார். அவரைப் பின்பற்றி நாங்கள் எல்லோரும் செல்வோம். வீதிகளில் ஆங்காங்கு மினுக்-மினுக்’ கென்று வெளிச்சம் தெரியும், சில இடங்களில் வெளிச்சமே இராது. இருள் சூழ்ந்திருக்கும். பாதை தெரிந்து நடப்பதே கஷ்டமாக இருக்கும்.

எல்லோருக்கும் தலைமுடி

அநேகமாக எல்லா நடிகர்களும் தலைமுடியை நீளமாக வளர்த்திருந்தார்கள். இந்த நாளைப்போல் ‘டோப்பா’ வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் பெரும்பாலும் ஏற்பட்டதில்லை. ஆண் வேடதாரிகள் தலைமுடியைப் பின்னல் சுருட்டி விட்டுக் கொள்வார்கள். பெண் வேடதாரிகள் கொண்டையோ அல்லது சடையோ போட்டுக் கொள்வார்கள். அபூர்வமாக யாராவது ‘கிராப்புத் தலை ஆசாமி, பெண் வேடம் புனைய வேண்டிய நெருக்கடி ஏற்படுவதுண்டு. அப்பேர்ப்பட்ட சமயத்தில் கம்பெனி யிலிருக்கும் ‘டோப்பா’ அவரது தலையை அலங்கரித்து, அகோரமாகக் காட்சி அளிக்கும். அந்த நடிகரும் தமது டோப்பா வைத்த அழகிய முகத்தைக் கண்ணாடியில் பார்த்துவிட்டு உடனடியாகத் தலைமுடி வளர்க்க வேண்டிய அவசியத்தைப் புரிந்து கொள்வார்.

கம்பெனியில் அப்போது முக்கிய வேடங்களைத் தாங்கிய நடிகர்கள் சிலரைப்பற்றி இங்கே குறிப்பிடுவது கடமையெனக் கருதுகிறேன்.

பாட்டா ராமகிருஷ்ணன்

அப்போது நாடக சபையில் முக்கிய கதாநாயகனாகவிளங்கியவர் திரு டி. ஆர். ராமகிருஷ்ணன். இவர் சங்கரதாஸ் சுவாமிகளின் பேரன். இவரை நாங்கள் எல்லோரும் ‘பாட்டா’ என்றே அழைப்பது வழக்கம். சங்கரதாஸ் சுவாமிகளை நாங்கள் எல்லோரும் சுவாமி என்று கூப்பிடுவோம். இவர் சுவாமிகளின் பேரன் என்ற முறையில் அவரைப் ‘பாட்டா’ என்றே அழைப்பார். எனவே நாளடைவில் இவரையே நாங்கள் ‘பாட்டா’ என்று கூப்பிடத் தொடங்கி விட்டோம். பாட்டா என்ற பெயரே இவருக்கு நிலைத்து விட்டது. சுவாமிகளும் இவரைப் பாட்டா என்றே கூப்பிடுவார்.

சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் பாட்டா இராம கிருஷ்ணன் சத்தியவானாகத் திறம்படப் பாடி நடிப்பார்.

சாரீரம் கணிரென்றிருக்கும். சீமந்தனி நாடகத்தில் சந்திராங்கதனுகவும், அபிமன்யு சுந்தரியில் அரவானுகவும், சுலோசன சதியில் ஆதிசேடனுகவும் நடிப்பார். ஆண் வேடத்தில் எப்படித் திறமையாக நடிப்பாரோ அப்படியே பெண் வேடத்திலும் பெயர் பெற்றவர். பவளக்கொடியில் அல்லியாகவும், சதியனுசூயாவில் அனுசூயாவாகவும் தோன்றுவார்.

1922-இல் நாடக சபை திண்டிவனத்தில் நாடகம் நடத்திக் கொண்டிருந்த போது, இவர் கம்பெனியிலிருந்து விலக நேர்ந்தது. அதன் பிறகு பல நாடக சபைகளில் பணி புரிந்திருக்கிறார், ஸ்பெஷல் நாடக நடிகராக இலங்கையில் சில ஆண்டுகள் இருந்து, இறுதியாக நாடகத்துறையை விட்டே விலகி, இப்போது சொந்த ஊரான தூத்துக்குடியில் இருந்து வருகிறார்.

பெரியண்ணா டி. கே. சங்கரன்

என் மூத்த அண்ணா டி. கே. சங்கரன் நாடக சபையில் மற்றொரு கதாநாயகனாக விளங்கினார். ‘சுலோசன சதி’ நாடகத்தில் அண்ணாதான் இந்திரஜித்துவாக நடிப்பார். சாரீரம் கெம்பீரமாக இருக்கும். வசனங்களைத் தெளிவாகப் பேசுவதில் இவருக்கு ஒரு தனித் திறமை இருந்தது. சுலோசனையை இந்திர ஜித்து சிறையெடுத்துப் போவதாகத்தான் கதை. சுவாமிகளும் அப்படியேதான் மற்றவர்களுக்கு, சுலோசன சதி நாடகத்தை எழுதிக் கொடுத்திருந்தார். ஆனால் பெரியண்ணாவின் பேச்சுத் திறமையைக் கண்டு மகிழ்ந்த சுவாமிகள், சிறையெடுத்துப் போவதை மாற்றி, சுலோசனை தானுக மனமிசைந்து இந்திரஜித்து வுடன் செல்லுவதாகக் கதையை அமைத்துக் கொண்டார். இதற்காக இந்திரஜித்துவுக்கு ஒரு நீண்ட வசனம் எழுதினார். இந்த வசனத்தைப் பேசி முடிக்கச் சுமார் பத்து நிமிடங்கள் ஆகும். இந்த வசனத்தில் தமிழின் சிறப்பும், தமிழர்களின் திருமண வாழ்க்கை பற்றிய செய்திகளும் விரிவாக இடம் பெற். றிருந்தன. ஒரு மங்கை தன் மனத்திற் கிசைந்த ஆடவனோடு தனித்துச் செல்வது தவருகாது என்பதை இந்திரஜித்து சுலோ சனைக்கு விளக்கமாக எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ள வசனம் இது. இந்த வசனத்தை அந்த நாளில் பெரியண்ணா பேசி முடித்ததும் சபையோர் மகிழ்வோடு கைதட்டிப் பாராட்டு வார்கள். ‘தமிழ் வசனம்’ என்றே நாங்கள் இதைக் குறிப்பது வழக்கம்.

இன்னும் சீமந்தனியிலே அவலோகன்: பவளக்கொடியில் அருச்சுனன்; பிரகலாதாவில் இந்திரன்; அபிமன்யு சுந்தரியில் துரி யோதனன் ஆகிய வேடங்களில் அண்ணா நடித்து வந்தார். இடைக் காலத்தில் 1924-இல் இவர் நடிப்பைக் கைவிட்டுக் கம் பெனியில் கணக்கு வேலைகளைப் பார்த்து வந்தார். பிறகு நாங்கள் இசாந்தக் கம்பெனி துவக்கியபோது மீண்டும் நடிப்புத் துறைக்கு வந்து விட்டார்.

கதாநாயகி சிங்காரவேலு

சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் முன் சாவித்திரியாக நடித்தவர் திரு சிங்காரவேலு. இவர் தம்முடைய பெயருக்கு ஏற்ற படி சிங்கார பாகங்களில் மிகத் திறமையாக நடிப்பார். அந்தநாளில் முன், பின் என்று ஒரே பாத்திரத்தை இரு பகுதிகளாகப் பிரித்துக் கொடுப்பது வழக்கம். அநேகமாகக் காதல் காட்சிகளெல்லாம் இவருக்கே கொடுப்பார்கள். சுலோசன சதியிலும் இவர் முன் சுலோசனையாக நடிப்பார். பவளக்கொடி, அபிமன்யுசுந்தரி இரு நாடகங்களிலும் இவர் சுபத்திரையாகத் தோன்றுவார். 1921- இல்சென்னையில் நடித்துக் கொண்டிருந்த சமயம் சிங்காரவேலு ‘ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’ க்குப் போய் விட்டார். அங்கு, பல ஆண்டுகள் நடித்துப் புகழ் பெற்றார்.

நல்ல பாடகர் நல்லகண்ணா

திரு கல்லகண்ணா திருநெல்வேலியில் பிறந்தவர். பின் சாவித்திரியாகவும், பின் சுலோசனையாகவும் நடிப்பார். இனிமை யான குரல்; அருமையாகப் பாடுவார். சோகமாக நடிக்க வேண்டிய பாகங்களில் இவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கும். சதியனுசூயாவில் நருமதையாகவும், பவளக்கொடியில் பவளக் கொடியாகவும் தோன்றுவார். இவர் 1922-இல் கம்பெனி பூவிருந்தவல்லியில் இருந்தபோது விலகிக்கொண்டார். வேறு சில நாடக சபைகளில் இருந்த பின்பு, திருநெல்வேலியில் தையற் கடை வைத்துக் கொண்டிருந்தபோது நான் இவரைச் சந்திக்க நேர்ந்தது.

எமன் கந்தசாமி

எமனக நின்று என்னைப் பயமுறுத்திய திரு கந்தசாமியை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இவர் தான் என் நினைவில் இன்னும் பசுமையாக இருப்பவர், இரணியன் கடோற்கஜன் முதலிய இராட்சதவேடங்கள் இவரது தனி உரிமை இவரும் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். இவர் 1922-இல் கம்பெனியிலிருந்து விலகினார். பிறகு வேறு துறைகளில் ஈடுபட்ட தாகக் கேள்வி.

பயூன் ராமசாமி

கம்பெனியின் ஒரே நகைச்சுவை நடிகராகத்தனியரசு புரிந்தவர் திரு ராமசாமி. எல்லா நாடகங்களிலும் இவர் நகைச் சுவைப் பாத்திரங்களை ஏற்று நடிப்பார். அந்த நாளில் அவசிய மென்று கருதப்பட்ட ‘பபூன்’ ஆகவும் அடிக்கடி வந்து பாடிப் போவார். அவருக்கென்றே சுவாமிகள் சில புதிய நகைச் சுவைப் பாடல்களை இயற்றினார். இவர் ஆஞ்சநேயராக நடிப்பதற் கென்றே ‘இலங்காதகனம்’, நாடகமும் தயாரிக்கப் பெற்றது. கம்பெனி பூவிருந்தவல்லியில் இருந்த பொழுது இவரும் விலகிக் கொண்டார். நாங்கள் தூத்துக்குடிக்குப் போகும் போதெல் லாம் இவரைச் சந்திப்பதுண்டு.

சின்னண்ணா டி.கே. முத்துசாமி

சின்னண்ணா திரு. டி. கே. முத்துசாமி கம்பெனியின் ஆரம்ப காலத்தில் சிறு சிறு வேடங்கள்தாம் புனைந்து வந்தார். சுலோசன சதியில் சின்னண்ணா ராமராகவும், நான் லட்சுமணனுக வும் நடிப்போம். சீமந்தனியிலே அவர் சுமேதாவாக நடிப்பார். நான் சாமவானக நடிப்பேன். மற்ற நாடகங்களில் எல்லாம் சின்னண்ணாவுக்குப் பெரும்பாலும் தோழி வேடந்தான். 1921இல் சென்னைக்கு வந்தபிறகுதான் அவர் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார். சின்னண்ணாவுக்கு ஆரம்பத்தில் நன்றாகப் பாட வராது. அந்தக் குறையைப் போக்க அவர் அரும்பாடு பட்டுச் சங்கீதம் கற்றுக் கொண்டார். பின்னல் அவர் நன்முகப் பாடவும், ஆர்மோனியம் வாசிக்கவும், ஆசிரியராக இருந்து, மற்றவர்களேத் தயாரிக்கவுமாகத் தம்மை வளர்த்துக் கொண்டார். 1935-இல் நாங்கள் சகோதரர்கள் நால்வரும் நடித்த மேனகா பேசும் படத் திற்குச் சின்னண்ணா சங்கீத டைரக்டராகவும் இருந்தார் என்பதை இங்கே மகிழ்வோடு குறிப்பிட விரும்புகிறேன்.

சாத்துளரிலும் சிவகாசியிலும் நாடகங்கள் நடித்துவிட்டு மீண்டும் மதுரைக்கு வந்து சேர்ந்தோம். புதிய நாடகங்கள் சில தயாரிக்கப் பெற்றன. புதிய நடிகர்களும் சிலர் கம்பெனியில் சேர்ந்தார்கள். மதுரையில் மீண்டும் ஒரு மாத காலம் நடித்து விட்டுச் சிவகங்கைக்குப் பயணமானோம்.

பாட்டி முத்தம்மாள்

சிவகாசி வரையில் நாங்கள் கம்பெனி வீட்டிலேயே வசித்து வந்தோம். தாயார் மதுரையிலே இருந்தார்கள். அவர்களைப் பிரிந்திருப்பது எனக்கு வேதனையாகத்தான் இருந்தது. தந்தை யாரைப் பெற்ற தாயார் திருமதி முத்தம்மாள் அன்னையாருக்குத் துணையாக இருந்தார்கள். 1920-இல் எங்களுக்கு ஒரு தங்கை பிறந்தாள். சுப்பம்மாள் என்று அவருக்குப் பெயர் சூட்டப் பெற்றது.தாய்க்கும் பாட்டிக்கும் மாமி, மருமகள் உறவு ஒத்துப் போகவில்லை. சின்னண்ணா பெரியண்ணா இருவரும் திருவனந்த புரத்தில் பாட்டியிடமே வளர்ந்தவர்கள். மதுரைக்கு வரும்போது நானும் பகவதியும் தானிருந்தோம். மதுரை வாசம் உறுதிப்பட்ட பிறகு, பாட்டியார் அவர்களை அழைத்து வந்தார்கள். மதுரைக்கு வந்த பாட்டியார், இறுதிக்காலம் வரை எங்களோடு இருக்கத் திட்டமிட்டுத்தான் வந்தார்கள். அதற்குத் தடையாக இருந்தது, வீட்டில் எந்நேரமும் சச்சரவு. தாயார் எவ்வளவு அடங்கிப்போனலும் சண்டை ஓய்வதில்லை. இந்த நிலையில் பாட்டி, தம் சின்ன மகனிடம் போகவேண்டுமென்று நச்சரித்தார்கள்.தந்தையாரால் பாட்டியின் தொல்லையைப் பொறுக்க முடியவில்லை. விருதுப்பட்டியிலிருந்தபோது பாட்டியாரைத் திருவனந்தபுரத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தார் தந்தை. அதன்படி இரண்டு நாள் ஒய்வில் மதுரை சென்று, பாட்டியையும் அழைத்துக் கொண்டு செங்கோட்டை வரை ரயிலில் சென்றார். பிறகு திடீரென்று என்ன நினைத்தாரோ, தெரியவில்லை. பாட்டியாரைத் தனியே அனுப்பிவிட்டு, அங்கேயே தலையை மொட்டை போட்டுக் கொண்டு, உச்சிக் குடுமியோடு விருதுப்பட்டி வந்து சேர்ந்தார். “எதற்காக இந்த மொட்டை?” என்றார்கள் அவரது நண்பர்கள். “தாயாரை ஊருக்கு அனுப்பி விட்டேன். இனிமேல் மீண்டும் அவர்களைப் பார்ப்பேனென்ற நம்பிக்கை இல்லை. எனவே இறுதிக் கடமையை முடித்துக் கொண்டேன்” என்று சமாதானம் கூறினார். இப்போது சிவகங்கைக்குப்பயணமானவுடன் அன்னயாரும் உடன் வந்தார்கள். சிவகங்கையில் தாயாருடன் தனி வீட்டிலேயே வசித்து வந்தோம்.
---------------

3. பேய் வீடு


சிவகங்கை, ஜமீனுக்குச் சொந்தமான நகரம். ஆங்கி லேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த ராணி வேலுநாச்சியாரும், மருது பாண்டியர்களும் வாழ்ந்த பிரதேசம். அந்த ஊரில் கம்பெனிக்கு வீடே கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டார்கள். கடைசியாகக் கொட்டகைக்கு அருகிலேயே ஒரு பெரிய வீடு கிடைத்தது. அது, சிவகங்கை அரண்மனைக்குச் சொந்தமான வீடு. அந்த வீடு, பல ஆண்டுகளாகப் பூட்டிக் கிடந்ததாகவும், அதில் யாருமே குடியிருப்பதில்லையென்றும் பேசிக் கொண்டார்கள். அந்த வீட்டுக்குப் பக்கத்திலேயே மற்றொரு பெரிய வீடு பாழ டைந்து கிடந்தது. அதுவும் அரண்மனையைச் சேர்ந்த வீடுதான்.

கம்பெனியார் குடியிருந்த வீட்டில், ஏற்கனவே பேய்கள் குடியிருப்பதாகப் பலரும் சொல்விக் கொண்டார்கள். அந்த வீட்டில் இருந்த அரண்மனையைச் சேர்ந்த பல குடும்பங்கள் நசித்துப் போனதாகவும் கதை கதையாகப் பேசிக்கொண்டார்கள்

இந்தக் கதைகளை உறுதிப்படுத்தும் முறையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒரு நாள் சுலோசன சதி நாடகத்தில் ஆதிசேடன் வேடம் புனைந்திருந்த பாட்டா இராமகிருஷ்ணன் தன் வேலை முடிந்து விட்டதால் சுவாமிகளிடம் சொல்லிவிட்டுக் கம்பெனி வீட்டுக்குப் போயிருக்கிறார். சமையல் அப்பாஜிராவிடம் சாப்பாடு போடச் சொல்லிவிட்டுப் புழக்கடைப் பக்கம் போனவர், எதிரே யாரோ ஒருவர் நிற்பதைப் பார்த்து, “யாரையா?” என்று கேட்டிருக்கிறார். உடனே திடீரென்று அந்த உருவத்தின் கண்களிலிருந்து நெருப்புப் பொறிகள் வீசவும், குள்ளமாக இருந்த உருவம் பெரிய பனைமரம் அளவுக்கு வளர்ந்து தலைவிரிகோலத் துடன் பயங்கரமாக நின்றதாம். இதைப் பார்த்த இராம கிருஷ்ணன், ‘ஐயோ’ என்று கூச்சலிட்டலறி அப்படியே சாய்ந்து விட்டாராம்.

நாடகம் முடிந்து எல்லோரும் வீடு திரும்பியதும் இச் செய்தியை அறிந்து இரவு முழுவதும் நடிகர்கள் உறக்கமே இல்லாமல் இருந்திருக்கிரு.ர்கள். இராமகிருஷ்ணனுக்குக் காய்ச்சல் கண்டுவிட்டது. ஒரு வார காலம் சிரமப் பட்டார். மறுநாள் தந்தையார் மூலம் இந்தப்பேய் விஷயத்தைக் கேட்டதும் தாயாருடன் தனி வீட்டில் இருக்க நேர்ந்ததற்காக நாங்கள் சந்தோஷப்பட்டோம்.

அதன்பிறகு கொட்டகையில் எப்போதும் பேய்க் கதைகள் பேசுவது சகஜமாகிவிட்டது. “நேற்றிரவு 12 மணிக்கு ஒருபெண் தலைவிரிகோலமாய் அழுது கொண்டிருந்ததை நான் பார்த்தேன்” என்பார் ஒரு நடிகர். “விடிய 4 மணிக்குப் பயங்கரமான சத்தம் மூன்று முறைக்கேட்டேன்” என்பார் மற்றொரு நடிகர். இப்படியே நாளடைவில் பேய்க் கலவரம் அதிகமாகி விட்டது. நகைச்சுவை நடிகர் ராமசாமி, ஒரு நாளிரவு வீட்டில் பேயாகவே நடிக்கத் தொடங்கிவிட்டார். அவரோடு சண்டைப் போட்டுக் கொண்ட இன்னொரு நடிகரைப் பயமுறுத்துவதற்கு இந்த பேய்க்கலவரத் தைப் பயன்படுத்திக்கொண்டார். அந்தவீட்டில் நெல் போட்டு வைக்கும் பெரிய குதிர் ஒன்று இருந்தது. அந்தக் குதிருக்குள்தான் இரவில் அடிக்கடி சத்தம் கேட்பதாகச்சொல்லிக்கொண்டார்கள். பயூன் ராமசாமி மிகவும் துணிச்சல் பேர் வழி. அவர் இந்தக் குதிருக்குள் ஏறி உள்ளே யிருந்து கொண்டு இரவில் பேயாக அலறத்தொடங்கினார். இரண்டொரு நாட்கள் இவ்வாறு அட்ட காசம் செய்து வந்தது ராமசாமிப் பேய். கடைசியாக ஒரு நாள் இரவில் திடீரென்று சுவாமிகள் விழித்துக் கொண்டார். குதிர் அசைவதைப் பார்த்தார். அவருக்கு உண்மை விளங்கிவிட்டது” பெரிய விறகுக்கட்டை ஒன்றைக் கையிலெடுத்துக் கொண்டு குதிர் அருகே வந்தார். “வா பேயே வெளியே” என்று கர்ஜித்தார். சுவாமிகளின் கர்ஜனையைக் கேட்டு நடுங்கிய பேய், வெல வெலத்துப் போய் வெளியே வந்தது. குதிருக்குள்ளிருந்து ஏறிக் குதித்த ராமசாமிப் பேயைக் கண்டதும் எல்லோரும் பயத்தோடு வாயைமூடிக்கொண்டு சிரித்தார்கள். அன்று பேய் சுவாமிகளிடம் நல்ல பூசை வாங்கியது.

சிவகங்கையில் வேறு வீடு கிடைக்காமையால் நாடகம் முடியும்வரை அந்தப் பேய் வீட்டிலேயே இருந்து காலம் தள்ளினார்கள்.

சுவாமிகளின் உறுதி

சிவகங்கையில் நாடகங்களுக்கு மற்ற ஊர்களைவிட அதிக மான வசூல். ஜமீன்தாரும் அடிக்கடி நாடகம் பார்த்து வந்தார். ஒருநாள் சதியனுசூயா நாடகத்தன்று ஜமீன்தார் வந்திருந்த பொது நடிகர்கள் சிலருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. சங்கர தாஸ் சுவாமிகளுக்கும். ஒரு பரிசு .ெ கா டு க் க விரும்பினார் ஜமீன்தார். சுவாமிகளை மேடைக்கு அழைத்தார்கள். சுவாமிகள் எப்போதுமே மேடைக்கு வருவது வழக்கமில்லை. ஜமீன்தார் தமது திவான உள்ளே அனுப்பி சுவாமிகளை மேடைக்கு வந்து பரிசைப் பெற்றுக்கொள்ளுமாறு சொன்னார். திவான் வந்து சொல்லிய பிறகுங்கூட சுவாமிகள் பிடிவாதமாக மேடைக்கு வர மறுத்துவிட்டது எனக்கு நன்முக நினைவிருக்கிறது.

புகழ்பாட மறுத்தல்

நாங்கள் சிவகங்கைக்கு வருமுன் மதுரையிலிருந்தபோது இதைப் போலவே மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. அக்காலத்தில் தமிழறினார்களேயும் புலவர்களையும் ஆதரித்துப் போற்றி வந்த வள்ளல் இராமநாதபுரம் சேதுபதி மன்னார் அவர்கள், சுவாமி களைக் காண விரும்பினார். மன்னருடைய அரண்மனை நிர்வாகி ஒருவர் சுவாமிகளை அணுகி, “நமது சேதுபதி மன்னரைப் பாடாத புலவர்கள் ஒருவரும் இல்லையே! சுவாமிகள்மட்டும் ஏன் இன்னும் மன்னார்மீது பாடவில்லை? நேரில் வந்து ஒரு பாடல் பாடினல் தங்களுக்குக் கனகாபிஷேகம் செய்வாரே மன்னார்!” என்றார்.

சுவாமிகள் தொடக்க முதலே மனிதர்களைப் புகழ்ந்துபாடு வதில்லையென்று நோன்புகொண்டவர். ஆதலால் மன்னார்மீது புகழ்மாலை பாட மறுத்துவிட்டார். மீண்டும் மீண்டும் பல அன்பர்கள் வந்து இதுபற்றி வற்புறுத்தினார்கள். சுவாமிகள் சினம் கொண்டு, நானும் மறவன் மன்னனும் மறவன் என்னைவிட மன்னன் எந்த வகையிலும் உயர்ந்தவனல்லன் எதற்காக நான் அவனைப் புகழவேண்டும்? மன்னன்மீது பாடினால்தான் எனது. புலமை மன்னனுக்குப் புரியுமோ?” என்று கூறிவிட்டார்.

சுவாமிகளின் இத்தகைய தன் மதிப்பின் பெருமையும், நெஞ்சுறுதியின் அருமையும் எனக்குப் புரியவில்லை. புரிந்து கொள்ள இயலாத பருவம். இன்று அதன் சிறப்பை உணர்ந்து பெருமிதம் அடைகிறேன். சுவாமிகள் தமது வாழ்நாளில் இறுதி வரையில் ‘நரஸ்துதி’ பாடவேயில்லை என்பதை இங்கே மகிழ் வோடு குறிப்பிட விரும்புகிறேன்.

அன்னம் ஊட்டிய தெய்வம்

சிவகங்கையில் தாயோடு வசித்துவந்ததின் அருமை எனக்கு நன்முகத் தெரிந்தது. விருதுப்பட்டி, சாத்துரர் முதலிய ஊர்களில் நாடகம் முடிந்து வந்ததும் நான் அப்படியே உறங்கி விடுவேன் மதுரையில் நாடகங்கள் நடைபெற்றப்போது கூட வீடு தொலை விலிருந்ததால் பெரும்பாலும் வீட்டுக்குப் போவதில்லை. கம்பெனி வீட்டிலேயே படுத்துக் கொள்வது வழக்கம். சிவகங்கையில் தாயாருடன் தனியே இருந்ததால் நாடகம் முடிந்து வந்தவுடன் உறங்க முடிவதில்லை எங்கள் தாயார் பாற்சோறு பிசைந்து அதிலேகொஞ்சம் மோர் வி ட் டு வைத்திருப்பார்கள். நாங்கள் வந்தவுடன் அந்தச் சோற்றைப் பிசைந்து எங்களுக்கு உருட்டிப் போடுவார்கள், சுடச்சுட சுண்டக் கறியோடு அதைச் சாப்பிடும் போது தேவாமிருதமாய் இருக்கும். சில சமயங்களில் அவர்கள் சாதத்தைக் கொண்டு வருமுன் நான் உறங்கி விடுவேன்.

அன்னயார், உறங்கிய என்னை மடியில் போட்டுக்கொண்டு அன்னத்தை ஊட்டுவார்கள். நான் பாதி உறக்கத்திலேயே சாப்பிடுவேன். மறுநாள் காலேயில் எனக்கு இரவு சாப்பிட்ட நினைவே இராது “ஏனம்மா, என்ன எழுப்பிச் சாப்பாடு போட வில்லை?” என்று தாயைக் கோபித்துக் கொள்வேன். தாயார் சிரிப்பார்கள். “பெரியண்ணா ஏண்டா, துரங்கிக் கொண்டே சாப்பிட்டது நினைவில்லையா?” என்று கேட்பார். அப்போதுதான் எனக்குச் சாப்பிட்ட நினைவு வரும். அந்த அருமைத் தாயின் அன்பினை எண்ணி யெண்ணி இப்போது இன்புறுகிறேன்.

பட்டாபிஷேக நாடகம்

சிவகங்கையில் ஒருமாத காலம் நாடகம் நடந்தது. கடைசி பட்டாபிஷேக நாடகம் ‘பிரகலாதன்’ வைக்கப் பெற்றிருந்தது. நான் பிரகலாதனாக நடித்தேன். நல்ல கூட்டம். நாடகம் சிறப்பாக நடைபெற்றது.

நாடக சபைகளில் ஒரு வழக்கமுண்டு. கடைசி நாடகத்தன்று காட்சிகள் முடிய முடியப் பின்புறம் திரைகளை அவிழ்த்துக் கட்டி மறுநாள் பயணத்திற்கு ஆயத்தம் செய்துகொண்டே இருப்பார்கள். நாடகம் முடியுந் தருவாயில் முன்புறமுள்ள இரண்டொரு திரைகள்தாம் இருக்கும். அவற்றையும் மேலே பரண் மீதிருந்தபடியே சுருணையோடு சுருட்டிக் கட்டி வைத்து, மங்களம் பாடி முடிந்ததும், அப்படியே சுருணையோடு கீழே இறக்கி விடுவார்கள். இது சபையோருக்கு வேடிக்கையாக இருக்கும். மேலும் கீழுமாக சுருண்டு உயர்ந்து விழுந்து கொண்டிருந்த திரையை எதிர்பாராத விதமாகக் சுருணையோடு அப்படியே கீழிறக்குவதால், சபையோரின் கண்திருஷ்டி கழிந்து விடும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

பட்டாபிஷேக நாடகத்தன்று அந்த நாளில் எல்லா ஊர்களிலும் நடிகர்களுக்குப் பரிசு வழங்கும் வழக்கம் உண்டு. இந்த நாளில் அது மறைந்து வருகிறது. அந்த நாளில் ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் தாராள மனம் படைத்தவர்களாக இருந்தார்கள். அத்தோடு, விளம்பரப் பிரியர்களாக இல்லாமலும் இருந்தார்கள். யாருக்கு எங்கிருந்து பரிசு வரப் போகிறது என்பதே ஒருவருக்கும் தெரியாது. பரிசு கொடுப்பதற்காகவென்று எந்தப் பெரிய மனிதருக்கும் இலவசச் சீட்டுக் கொடுப்பதில்லை. நடிகர்களுக்கு நிறையப் பரிசுகளும் கிடைத்து வந்தன.

மறு பிறவி

நாடகம் முடிந்தது வழக்கம்போல் மங்களம் பாடுவதற்கு முன், பரிசு வழங்குவார்கள், ஒவ்வொருவராக மேடைக்கு வந்து பெயர்களைச் சொல்லிப் பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். பிரகலாதனுக்கு முடி சூட்டுவதோடு நாடகம் முடிவடைவதால் நான் முடி சூட்டிக் கொண்ட நிலையில் அப்படியே சிம்மாதானத் தில் வீற்றிருந்தேன். அன்று எனக்கும் இரண்டு தங்கப் பதக் கங்கள் பரிசாகக் கிடைத்தமையால் உற்சாகத்தோடு உட்கார்ந்திருந்தேன்.

என் தந்தையார் பின்பாட்டுப் பாடும் இடத்திலிருந்து உட்புறத் தட்டிக்குப் பக்கத்தில் வந்து, ஏதோ சைகை செய்து கொண்டிருந்தார். நான் தற்செயலாகத் தந்தையைப் பார்த் தேன். அவரது சைகையால் என்னைச் சிம்மாதனத்தின் கீழ்ப்படி யில் இறங்கி உட்காரச் சொல்கிரு ரென்பது புரிந்தது. காரணம் புரியாத நிலையில், நான் அவர் சொன்னபடி இருந்த இடத்தி லிருந்து ஒருபடி இறங்கி உட்கார்ந்தேன்.

அவ்வளவுதான். அடுத்த விநாடியில் என் தலைக்குமேல் கட்டப்பட்டிருந்த தர்பார் திரை அப்படியே சுருணையோடு ‘தடா’ ரென்ற சத்தத்துடன் விழுந்தது. என்மேல் விழவில்லை என்றாலும் அது விழுந்த அதிர்ச்சியால் நான் சுருண்டு விழுந்தேன் உள்ளே நின்ற தந்தையார் ஓடி வந்து, என்னை வாரியெடுத்து அணைத்துக்கொண்டார்.

ஒரு படி நான் கீழே இறங்கி உட்கார்ந்திராவிட்டால் என் வாழ்நாள் அன்றே முடிந்திருக்கும். தெய்வத்தின் திருவுள்ளம் வேறு விதமாக இருந்ததால் பிழைத்தேன். ஏதோ தற்செயலாக நான் கீழ்படியில் உட்கார்ந்ததாக எண்ணி, சுவாமிகள் ஆனந்தக் கண்ணிர் சிந்தி, என்னை வாழ்த்தினார் தெய்வம், தந்தையார் உருவத்தில் நின்று, என்னைக் காத்ததை அறிந்தபோது எல்லோரும் அதிசயித்தனார்.

என் தலைக்கு நேராகக் காட்சி அமைப்பாளர் ஒருவர், சுருணையோடு திரையைக் கட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த என் தந்தையார் ஏதோ எண்ணி, என்னைக் கீழிறங்குமாறு செய்தார் என்பதைப் பின்னல் அறிந்தேன். சில நிமிடங்களில் பரண் மீதிருந்து கீழிறங்கி வந்த காட்சியமைப்பாளர் திரு ராமசாமி என்னைக் கட்டியணைத்துக் கொண்டு, “மறு பிறவி எடுத்தாயே அப்பா” என்று கதறியழுத காட்சி, இன்றும் என் மனக் கண் முன்னால் நிற்கிறது.
----------------

4. மறக்க முடியாத இரசிகர்!


நாடக இரசிகர்களிலேயே பல தரப்பட்டவர்கள் உண்டு. நான் என் நாடக வாழ்க்கையில் எத்தனையோ விதமான இரசிகர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் சிவகங்கையில் எங்களுக்கு அறிமுகமான ஒரு இரசிகரை இன்னும் என்னால் மறக்க முடிய வில்லை.

இந்த நாடக இரசிகர் ஒரு முஸ்லீம். சிவகங்கையில் எங்கள் நாடகங்களை விடாமல் பார்த்து வந்தார். நாடகம் முடிந்த மறு நாள் எங்கள் வீட்டுக்கு வருவார். வரும்போது மிட்டாய் பிஸ்கத்து, பழங்கள் முதலியவற்றைக் கொண்டு வந்து கொடுப்பார். தந்தையாரோடு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார். தந்தையாருக்கு அந்த இரசிகர் போனால் போதுமென்றிருக்கும். ஆனால் இவர் ஒரு நாளும் எளிதாகப் போனதே இல்லை. இந்த இரசிகர் போவதற்காக மரியாதையான முறையில் தந்தையார் என்னென்னவோ செய்வார். ஒன்றும் அவரிடம் பயன்படாது. கடைசியாக, எங்களுக்கு வேலையிருக்கிறது. நீங்கள் போய் வாருங்கள், என்று அப்பட்டமாகச் சொன்ன பிறகுதான் அவர் போவார்.

சிவகங்கையில் இந்த இரசிகரை முதன்முதலாகச் சந்தித்த போது எங்களுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் அவர் வந்து நாடகத்தைப்பற்றியும், நடிப்பைப் பற்றியும் புகழ்ந்து பேசிப் பேசி, எங்களைச் சலிப்படையச் செய்து விட்டார். தந்தையாருக்கு இவரோடு பேசுவதே ஒரு தொல்லையாகப் போய்விட்டது. அந்த இரசிகரோ எதைப் பற்றியும் சிந்தனைப்படாமல் தொடர்ந்து வந்து கொண்டேயிருத்தார்.

பட்டாபிஷேகம் முடிந்த மறுநாள் காலையிலும் வழக்கம் போல் வந்து விட்டார். அந்தத் திரையோடு கூடிய மர உருளை என்மீது விழுந்திருந்தால் என்ன கதி நேர்ந்திருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். தாரை தாரையாகக் கண்ணிர் விட்டார். அவர் அழுததைப் பார்க்க எனக்கே பரிதாபமாக இருந்தது. எப்படியோ ஒரு வகையாக அவரை வெளியே அனுப்பினார் தந்தையார்.

பரமக்குடிப் பயணம்

சிவகங்கையில் நாடகம் முடிந்ததும் பரமக்குடிக்குப் பயணமானோம். அப்போது சிவகங்கைக்கு இரயில் பாதை கிடையாது. மதுரையிலிருந்து பஸ் வழியாகத்தான் போனோம். சிவகங்கையிலிருந்து பஸ்ஸிலேறி மானாமதுரை போய் அங்கிருந்து இரயிலேறிப் பரமக்குடிக்குப் போக வேண்டும். நாங்கள் அனைவரும் பஸ்ஸிலேறிப் பயணத்திற்குச் சித்தமாக இருந்தோம். பஸ் புறப்படும் நேரத்தில் அந்த அற்புத நாடக இரசிகர் திடீரென்று வந்து விட்டார். “நானும் உங்களோடு மானுமதுரை வந்து, வழியனுப்பிவிட்டு வந்து விடுகிறேன்” என்று கூறிப் பஸ்ஸில் ஏறினார். என்ன செய்வது? பஸ் புறப்பட்டு விட்டது. வேறு வழியின்றித் தந்தையாரும் தலையசைத்தார்.

மானாமதுரை இரயில் நிலையம் வந்து சேர்ந்தோம். பஸ்ஸிலிருந்து சாமான்களை இறக்குவதிலும், மீண்டும் அவற்றை இரயிலில் ஏற்றுவதிலும் இரசிகர் வஞ்சகமில்லாமல் உதவி புரிந்தார். இரயிலும் புறப்பட்டது. நான் தலையை வெளியே நீட்டி அவரைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். கண்களில் நீர் ததும்ப அவர் ஏக்கத்தோடு நின்றார்.

பரமக்குடிக்கு வந்து சேர்ந்தோம். தந்தையார் முன்பே ஒரு முறை வந்து வீடு பார்த்து வைத்திருந்ததால் நாங்கள் எங்கள் தாயாருடன் தனிவீடு போய்ச் சேர்ந்தோம். அன்றிரவு பயணக் களைப்பு அதிகமாக இருந்தது. நிம்மதியாக உறங்கினோம்.

மறுநாள் காலை

மறுநாள் காலை ஏழுமணி அளவில் எழுந்து நான் பல் துலக்கிக் கொண்டிருந்தேன். தந்தையார் அம்மாவுடன் ஏதோ சண்டை போட்டுக் கொண்டிருந்தார். கவனித்தேன். அம்மா, காலையில் கோபி போடுவதற்குக் ‘கருப்பட்டி’ இல்லையென்று சொல்லி யிருக்கிறார்கள். அதுதான் சண்டைக்குரிய விஷயம்.

ஆம்; அந்த நாளில் நாங்கள் கருப்பட்டிக் காபி தான் சாப்பிடுவது வழக்கம். இப்போதுகூட எங்கள் நாகர்கோவிலுக்குப் போகும் நேரங்களில் வீட்டில் என் அண்ணியாரிடம் கருப்பட்டிக் கோபி போடச் சொல்லுவேன். அந்தக் ‘காபி'யில் எனக்கு ஒரு தனி ஆசை.

“பொழுது விடிந்து, காபி குடிக்க வேண்டிய நேரத்தில் தான கருப்பட்டி இல்லையென்று சொல்வது?” இது அப்பாவின் கேள்வி.

“இன்று ‘காபி’ வேண்டியதில்லை. தண்ணீர் குடித்தால் போதும். மற்ற காரியங்களைப் பார்” என்று தந்தையார் இறுதியாக முடிவு கூறி விட்டார். அவரும் பல் துலக்கத் தொடங்கினார்.

வெளியே யாரோ வருவதுபோல் சத்தம் கேட்டது. நாங்கள் எட்டிப் பார்த்தோம். கையில் ஒரு பெரிய கருப்பட்டிப் பொட்டலத்தோடு சிரித்துக் கொண்டே நின்றார் சிவகங்கை நாடக இரசிகர். எங்களுக்கு வியப்பாகப் போய்விட்டது. இவர் எப்படித் திடீரென்று கருப்பட்டியோடு வந்தார்...?

நாடக இரசிகர் எங்கள் பிரிவைத் தாங்காது அடுத்த வண்டியிலேயே பரமக்குடிக்குப் புறப்பட்டு விட்டார். காலையில் எங்கள் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து வந்திருக்கிரு.ர். உள்ளே அம்மாவும் அப்பாவும் கருப்பட்டிக்காகச் சண்டை போட்டுக் கொண்டது அவர் காதில் விழுந்திருக்கிறது. உடனே அவசரமாக ஒடிப் போய், பக்கத்திலுள்ள கடையிலிருந்து கருப்பட்டியை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்.

இந்த விபரத்தை அறிந்ததும் தந்தையாருக்கு இவரிடம் மிகுந்த அனுதாபம் ஏற்பட்டது. அவரையும் தம்மோடு பலகாரம் சாப்பிடச் சொன்னார். பிறகு நாடகப் பைத்தியத்தால் ஏற்படும் தீமைகளைப் பற்றியெல்லாம் அவருக்கு விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறினார். அவரை ஒருவாறு சமாதானப் படுத்தித் தாமே உடனழைத்துச் சென்று இரயிலில் ஏற்றி அனுப்பிவிட்டுத் திரும்பினார்.

நிலாச் சாப்பாடு

பரமக்குடியில் நாடகம் தொடங்கியது. நல்ல வசூல். சிவகங்கையிலும் பரமக்குடியிலும் வசூல் அதிகமாகும் செய்தியை அறிந்ததும் கம்பெனி உரிமையாளர்கள் எல்லோரும் அடிக்கடி வந்துபோனார்கள். சங்கரதாஸ் சுவாமிகள், பெளர்ணமியன்று நிலாச் சாப்பாடு சிறப்பாகப் போடவேண்டுமென்று திட்டம் போட்டார். அந்த ஏற்பாடு, உரிமையாளர்களில் இரண்டொருவருக்குப் பிடிக்கவில்லை. சுவாமிகளின் திட்டப்படி அதற்கு அதிகமாகச் செலவாகுமென்று தெரிந்தது. உரிமையாளர்கள் யோசித்தார்கள். சுவாமிகள், அவர்களைப்பற்றிக் கவலைப்படவில்லை. தமது திட்டப்படியே சிறப்பான முறையில் நிலாச்சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்தார். நடிகர்களுக்கெல்லாம் ஒரே குதுரகலம், எல்லோரும் முழு நிலவு உலாவரும் நந்நாளில் விருந்துண்டு களித்தோம்.

உரிமையாளர்கள் திட்டம்

உரிமையாளர்கள் கூடிக்கூடிப் பேசினார்களாம். சுவாமிகளின் போக்கில் அவர்களில் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டதாம் தேவையான நாடகங்களேயெல்லாம் தயாரித்தவுடன் சுவாமிகளை விலக்கிவிடவும், சட்டாம்பிள்ளை திரு குற்றாலலிங்கம் பிள்ளையை வைத்துக் கொண்டே நாடகங்களைத் தொடர்ந்து நடத்தவும் திட்டமிட்டதாக எங்கள் தந்தையார் வந்து கூறினார். உழைப்புப் பங்காளியான திரு பழனியாப்பிள்ளை ஒருவர் மட்டும் இந்த ஏற்பாட்டுக்கு இசையவில்லையென்றும் சொன்னார்.

உரிமையாளர்களின் திட்டமெல்லாம் சுவாமிகளுக்குத் தெரிந்துவிட்டது. அதன் காரணமாகப் புதிதாக நாடகம் தயாரிப்பதும் நிறுத்தப்பட்டது. நிலைமையை அறிந்த உரிமையாளர்கள் சில நாட்கள் அமைதியாக இருந்து பார்த்துவிட்டு மதுரைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். பழனியாப்பிள்ளை மட்டுமே இருந்து நிர்வாகத்தைக் கவனித்து வந்தார்.

பரமக்குடி நாடகம் முடிந்து திண்டுக்கல்லில் ஒரு மாத காலம் நாடகங்கள் நடத்திவிட்டு மீண்டும் மதுரை வந்து சேர்த்தோம். மதுரையில் சில நாடகங்கள் நடைபெற்றன.

திங்கட்கிழமை பஜனை

கம்பெனியில் திங்கட்கிழமைதோறும் பஜனை நடைபெறுவது வழக்கம், நடிகர்கள் எல்லோரும் கூட்டமாகச் சுவாமிகளின் பாடல்களைப் பாடுவோம். கடைசியில் தனித்தனியாக ஒவ்வொரு நடிகரும் பாடவேண்டும் கூட்டத்தில் கோவிந்தா போடும் சிலர், தனியாகப் பாடும்போது குளறி வழிவார்கள். இவர்களையெல்லாம் சட்டாம்பிள்ளை குறித்துக் கொள்வார். பின்னல் சுவாமிகள் கவனித்துக் கொள்வார்கள். எனவே பாடும் ஒவ்வொருவரும் பய பக்தியோடு பாடுவார்கள். மதுரையில் ஒரு நாள் புட்டுத்தோப்பிலுள்ள கம்பெனி வீட்டில் பஜனை வழக்கம் போல் நடந்தது. சித்திரைத் திருவிழா நடைபெறும் சமயம் அது. இரவோடிரவாக, சொக்கேசப் பெருமான் ஊர்வலம் புறப்பட்டு புட்டுத்தோப்புக்கு வருகிற நாள். பஜனையில் நாங்கள் எல்லோரும் பாடிமுடித்து விட்டோம். பஜனைக்கு வந்திருந்த நண்பர்களிலும் சிலர் பாடினார்கள். கடைசியாகச் சுவாமிகள் பாட வேண்டுமென எல்லோரும் வற்புறுத்தினார்கள் சுவாமிகள் சிறிது சிந்தித்தார்கள். குறுநகையோடு, “எவ்வளவு நேரம்பாட வேண்டும்?” என்று கேட்டார்கள். “தங்கள் மனம்போல் பாடுங்கள்” என்றார் ஒருவர். சுவாமிகளின் புலமையை நன்கறிந்தவரான பழனியாயிள்ளை, “சுவாமி ஊர்வலம் இங்கு வருகிற, வரை பாடுங்கள்” என்றார்.

“ஆண்ட சக்ரவர்த்தி” என்று திருப்புகழ்ச் சந்தத்தில் பாடத் தொடங்கினார் சுவாமிகள். கண்களை மூடிய வண்ணம் பாடிக்கொண்டேயிருந்தார், ஏற்கனவே நெட்டுருப் போட் டிருந்த பழைய பாடலன்று; அப்போதுதான் கற்பனையாக எழுந்த புதிய பாடல். எல்லோரும் வியப்பே வடிவாக வீற்றிருந்தனார். பாடல் முடியவில்லை. தொடர்ந்து பாடிக்கொண்டே பரவச நிலையிலிருந்தார் சுவாமிகள். நீண்டநேரத்திற்குப் பின் சுவாமி ஊர்வலம் வருவதை அறிவிக்கும் நாதசுர இன்னிசைக் கேட்டது. மேளச் சத்தம் தன் பாட்டுக்கு இடையூராக வந்த நிலையில் கண்களைத் திறந்தார் சுவாமிகள். பாடலை முடித்தார். சுமார் ஒரு மணி நேரம் சுவாமிகள் பாடியதாக எல்லோரும் பேசிக்கொண்டது என் காதில் விழுந்தது. மதுரை நாடகங்களை முடித்துக் கொண்டு விருதுப்பட்டி, சாத்துார், திருநெல்வேலி முதலிய நகரங்களுக்குச் சென்றோம். வசூல் சுமாரான முறையில் இருந்து வந்தது.

ஒப்பந்த நாடகம்

தமது ஊராகிய தூத்துக்குடியில் நாடகம் நடத்த வேண்டு மென்று சுவாமிகள் திட்டமிட்டார். திருநெல்வேலியிலிருந்து துரத்துக்குடிக்குப் போனோம். துரத்துக்குடியில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தபோது பக்கத்தில் சுமார் இருபது மைல் தொலைவிலுள்ள ஏரல் என்னும் ஊரிலிருந்து கம்பெனியைக் ‘கண்ட்ராக்ட்’ பேச ஒருவர் வந்தார்.

அவர், மாதம் பதிமூன்று நாடகங்களுக்குச் சகல செலவுகளும் போக ஆயிரத்தி ஐநூறு ரூபாய்கள் தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டார். இப்போதெல்லாம் ஒரு நாடகத்திற்கு 1500 ரூபாய்கள் கொடுத்தாலும் நாடகம் நடத்துவது கஷ்டமாயிருக்கிறது. அந்த நாளில் 13 நாடகங்களுக்கு 1500 ரூபாய்கள் என்றால், கால மாறுபாட்டை எண்ணிப் பாருங்கள். எல்லோரும் இரட்டை மாட்டு வண்டிகளில் பயணம் செய்து ஏரல் போய்ச் சேர்ந்தோம். ஏரலில் வீடு கிடைக்காததால் தாயார் மட்டும் தூத்துக்குடியிலேயே இருக்க நேர்ந்தது.

ஏரலில் நாடகக் கொட்டகைக்கு எதிரேயே ‘கள்ளுக்கடை’ இருந்தது. நாடகம் பார்த்துக் கொண்டிருப்பவர்களில் பலர் அடிக்கடி வெளியே சென்று வருவார்கள். ஒரு சிலர் மொந்தை யோடு உள்ளே வந்து உட்கார்த்து கொண்டு குடிப்பார்கள். இந்தக் கோலாகலத்தைக் கண்டு யாரும் அதிசயப்படுவதுமில்லை; தடுப்பதுமில்லை. நாடகங்கள் நல்ல வசூலில் தொடர்ந்து நடை பெற்று வந்தன.

தகராறும் குழப்பமும்

நாடகத்தைக் ‘கண்ட்ராக்டு’ எடுத்தவர் மிகுந்த புத்திசாலி. அவர் சுவாமிகளை எப்படியோ சரிப்படுத்திக் கொண்டார். சுவாமிகளுக்குத் தேவையான சகல வசதிகளையும் தனிப்பட்ட முறையில் செய்து கொடுத்து விட்டார். ஒப்பந்தப்படி கம்பெனிக்கு அன்றாடச் சாப்பாட்டுக்குரிய பணத்தைக் கூடக் கொடுக்காமல் ஏதேதோ சொல்லி வந்தார். சாப்பாட்டுவகையில் ஒருநாள் தகராறு ஏற்பட்டதும் எங்கள் தந்தையாருக்குப் பிரமாதக் கோபம் வந்துவிட்டது. அன்று கடைசி நாடகம், நடிகர்கள் எல்லோரையும் வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு “ஒருவரும் இன்று நாடகத்திற்குப் போகக் கூடாது” என்று ஆணை பிறப்பித்து விட்டார். விபரம் அறிந்தவுடன் கண்ட்ராக்டரிடமிருந்து ஆள் வந்தது. வந்தவர் தந்தையார் வாசற்படியில் கையில் பெரிய தடியோடு உட்கார்ந்திருக்கும் நிலையைப் பார்த்தவுடன் பயந்து ஓடிவிட்டார். பிறகு கண்ட்ராக்டர் சுவாமிகளிடம் விஷயத்தைச் சொல்ல, சுவாமிகளே நேரில் வந்தார். சுவாமிகள் வருவதை அறிந்ததும் தந்தையார் பெட்டிப் பாம்பாய் அடங்கிவிட்டார். ஒன்றும் பேசாமல் கதவைத் திறந்துவிட்டு, எங்கோ போய்விட்டார். அன்று கடைசி நாடகம்; சுவையில்லாமல் கவலையோடு நடந்து முடிந்தது. எல்லோரும் தூத்துக்குடி வந்து சேர்ந்தோம்.

இந்தச் சம்பவத்திற்குப் பின் சுவாமிகளுக்கும், எங்கள் தந்தையாருக்கும் மனக் கசப்பு வளர்ந்தது. துரத்துக்குடிக்கு வந்ததும் திடீரென்று ஒரு நாள் சுவாமிகளிடமும் சொல்லாமல் தந்தையார் எங்கள் எல்லோரையும் அழைத்துக் கொண்டு இரயிலேறி மதுரை வந்து சேர்ந்தார்.

மதுரைக்கு வந்த மறுநாள் தந்தையார், சின்னையா பிள்ளையைப் போய்ப் பார்த்தார். ஏரலில் நடந்த விஷயங்களை யெல்லாம் கூறினார். இனிமேல் கம்பெனியிலிருந்தால் சுவாமிகளுக்கும் தமக்கும் மனத் தாங்கல் வளருமென்றும் கணக்குத் தீர்த்துத் தங்களை நிறுத்திவிடுமாறும் வேண்டிக்கொண்டார். சின்னையா பிள்ளை, கம்பெனியின் முக்கியமான பங்காளி. அதிகப் பணம் போட்டவர். அவர் அப்போது மதுரை பொன்னகரத்தில் தமது குடும்பத்தோடு வசித்து வந்தார். தந்தையாரின் மொழியைக்கேட்டதும், அவர் தந்தையாரைச் சமதானப்படுத்தி விட்டு, உட்புறம்சென்று இரண்டு தந்திகளைக் கொண்டு வந்து கொடுத்தார். அவ்விரண்டு தந்திகளும் தூத்துக்குடியிலிருந்து சுவாமிகளால் கொடுக்கப்பட்டிருந்தன. முதல் தந்தியில், “கண்ணாசாமிப் பிள்ளை கோஷ்டியாரை வைத்து இனிமேல் தொழில் நடத்த முடியாது. வேறு ஏற்பாடு செய்யவும்” என்று குறிப்பிட்டிருந்தது. இரண்டாவது தந்தியில்,

“கண்ணாசாமிப்பிள்ளை கோஷ்டியார் என்னிடம் சொல்லாமல் போய் விட்டார்கள். உடனடியாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யவும்” என்று எழுதப்பட்டிருந்தது. மாறுபட்ட கருத்துடனிருந்த இவ்விரண்டு தந்திகளையும் படித்துவிட்டுத் தந்தையார் சிரித்தார்.

முதல் தந்தி கொடுத்தபோது நாங்கள் தூத்துக்குடியை விட்டுப் புறப்பட்டுப் போய்விட்ட செய்தி சுவாமிகளுக்குத் தெரியாது போலிருக்கிறது. அந்தத் தந்தியில் சுவாமிகளுக்கு எங்கள்மேல் இருந்த கோபம் தெரிகிறதல்லவா? சுவாமிகள் முடிவு செய்யுமுன்பே நாங்கள் புறப்பட்டுப் போய்விட்டோமென்று தெரிந்ததும், அந்தக்கோபம் ஒருவாறு தணிந்திருக்கிறது. இரண்டாவது தந்தியைக் கொடுத்திருக்கிறார். சின்னையாபிள்ளை தந்தையாருக்கு நீண்ட நேரம் சமாதானம் சொன்னார், கடைசி யாக மீண்டும் கம்பெனிக்குப் போகச் சம்மதித்து, தந்தையார் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

தந்தையார் வந்து அம்மாவிடம் இந்த விஷயங்களை யெல்லாம் சொன்னார். அம்மா மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். சுவாமிகளோடு மன வேற்றுமைப் படுவதும், அதற்காகக் கம்பெனியிலிருந்து விலகுவதும் அம்மாவுக்குப் பிடிக்கவேயில்லை.

புதியம்புத்துார்

கம்பெனி புதியம்புத்துருக்குப் போயிருப்பதாகவும், அங்கு போய்ச் சேரவேண்டுமென்றும் சொல்லி, சின்னையாபிள்ளை எங்களை அனுப்பி வைத்தார்.

மணியாச்சிக்கும், துரத்துக்குடிக்குமிடையே ‘தட்டப் பாறை’ என்றொரு ஸ்டேஷன் இருக்கிறது. அந்த ஸ்டேஷனில் இறங்கி, மாட்டு வண்டியில் ஏறித்தான் புதியம்புத்துார் போக வேண்டும். நாங்கள் தந்தையாருடன், புதியம்புத்துார் வந்து சேர்ந்தோம். புதியம்புத்துார் ஒரு சிற்றுார்; அந்த ஊர் மக்கள் மிகவும் நல்லவர்கள், எங்களிடம் அன்பும் ஆதரவும் காட்டினார்கள் நாள் தோறும் ஊர் மக்களில் யாராவது ஒருவர், கம்பெனிக்குத் தேவையான காய்கறிகளைக் கொண்டு வந்து கொடுப்பார். வாரத்திற்கு இரண்டு நாள் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுவோம். அந்த நாட்களில் புலால் உணவு போடுவது வழக்கம். ஊர் மக்கள் ஆடுகள், கோழிகள் இவற்றையெல்லாம் அன்புடன் அளித்து உதவினார்கள்.

நாங்கள் புதியம்புத்துருக்கு வந்த பிறகு, சுவாமிகள் சில நாட்கள் எங்களோடு பேசாதிருந்தார். அவரைப் பார்க்கவே எங்களுக்குப் பயமாக இருந்தது. என்னுடைய பாடங்களை யெல்லாம் வேறொரு பையனுக்குக் கொடுத்தார். பெரியண்ணாவின் பாடங்களையும் கேட்டனுப்பினார். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. நான் ‘சுலோசன சதி’ யில் போடும் நாரதர், இலட்சுமனன், சின்னண்ணா போடும் ‘ராமர்’ ஆகிய பாடங்களை யெல்லாம் கொண்டு வரும்படி ஒருநாள் என்னிடமே சொன்னார். நான் அழுதுகொண்டே போய் அப்பாவிடம் கூறினேன். அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது. எங்கள் மூன்று பேருடைய பாடங்களும் வைத்திருந்த புத்தகப் பெட்டியை அப்படியே தூக்கிக் கொண்டு போய், சுவாமிகளின் முன்னால் போட்டுவிட்டு வந்தார். சுவாமிகள் இப்படி நடக்குமென்று சற்றும் எதிர்பார்க்க வில்லை. உடனே ஏதோ சமாதானம் கூறும் முறையில், “பாடங்களைப் பலபேர் நெட்டுருப் போட்டு வைத்திருந்தால் நோய் நொடி ஏற்படும் சமயங்களில், பயன்படுமே என்பதற்காகத்தான் பாடங்களைக் கேட்டேன். வேறு தவறான எண்ணம் எதுவுமில்லை” என்று மழுப்பினார். புத்தகப் பெட்டி எல்லாப் பாடங்களுடனும் எங்கள் அறைக்கு மீண்டும் வந்து சேர்ந்தது.
-----------------

5. மதுரை மாரியப்ப சுவாமிகள்


பிரபல தமிழிசைப் பாடகர், மதுரை மாரியப் பசுவாமிகளை நாங்கள் முதன்முதலாகப் புதியம்புத்துாரில்தான் சந்தித்தோம். அவர் திருச்செந்தூர் முருகன் ஆலயத்திற்குமுன், தாமே நாக்கை அறுத்துக் கொண்டாரென்றும், முருகன் திருவருளால் நல்ல பாடல்களை இயற்றும் திறனுடையவராய் விளங்குகிறாரென்றும் எல்லோரும் பேசிக்கொண்டார்கள். திரு மாரியப்ப சுவாமிகள் திருச்செந்துTர் முருகனுக்குப் பால்காவடிப்பிரார்த்தனை செலுத்துவதற்காக, சுவாமிகளிடம் பொருளுதவிபெற வந்திருந்தார்.

மாரியப்ப சுவாமிகள் சங்கரதாஸ் சுவாமிகளின் சிறந்த மாணாக்கர்களிலே ஒருவர். சுவாமிகளின் சமரச சன்மார்க்க நாடக சபையில் பிரதம நடிகராக விளங்கியவர். சங்கீத ஒளி விளக்காகத் திகழ்ந்த எஸ் ஜி கிட்டப்பாவும், அவரது சகோதரர்களும் சுவாமிகளின் மாணாக்கர்களாக, இந்த நாடக சபையிலே பயிற்சி பெற்றவர்கள்தாம்.

“என்ன மாரியப்பா! பாடல்கள் எழுதுகிறாயாமே? எங்கே நீ எழுதின பாடல்களைப் பாடு. கேட்போம்” என்றார் சுவாமிகள். மாரியப்ப சுவாமிகள் பாடத் தொடங்கினார். கடைசி அடியைப் பாடும்போது ஏதோ சிறிது தயக்கத்துடன் நிறுத்தினார். உடனே சுவாமிகள், “என்னடா, அப்பன் மாரியப்பன் என்று முத்திரை பாடி வைத்திருக்கிறாயா? பாதகமில்லை, பாடு” என்றார். எங்களுக்கெல்லாம் பெரும் வியப்பாகப் போய்விட்டது, சுவாமிகள் கூறியபடியேதான் அந்தப் பாடலின் அடி அமைக்கப்பட்டிருந்தது. சுவாமிகள் துவக்க முதலே தமது பெயரை முத்திரையடியாக வைத்துப் பாடும் வழக்கமில்லாதவர். எனவே மாரியப்ப சுவாமி கள் தமது ஆசிரியர் எதிரில் முத்திரையடி வைத்துப் பாடத் தயங்கினார் என்பதைப் பின்னால் உணர்ந்தோம்.

மதுரை மாரியப்ப சுவாமிகள் தமிழிசைக்குப் பெரும் பணி புரிந்தவர்களிலே தலைசிறந்த ஒருவர். தமிழிசை இயக்கம் தோன்றுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழிசைப் பெரும் புலவராக விளங்கியவர் நூற்றுக் கணக்கான சாகித்தியங்களை அவரே புனைந்திருக்கிறார். அத்தனையும் அருமையான பாடல்கள். சிட்டா ஸ்வரங்களுக்கெல்லாம் சாகித்தியங்கள் அமைத்துப் பாடியிருக்கிறார்.

நண்பர் கருப்பண்ணன்

புதியம்புத்துரரில் நாடகங்கள் சிறப்பாக நடைபெற்று வந்தன. அந்த ஊரில் கருப்பண்ணன் என்று ஒருவர் இருந்தார். அவர், ஒரு சலவைத் தொழிலாளி. ஊரில் பெரிய போக்கிரி அவர் கம்பெனிக்கும், சிறப்பாக எங்கள் தந்தையாருக்கும் நெருங்கிய நண்பரானார்.

திரு கருப்பண்ணனுக்குப் பதின்மூன்று மனைவியர் இருந்தார்கள். அவர்கள் பல்வேறு சாதியினார். ஒருநாள் நாங்கள் நாடகக் கொட்டகைக்குப் போகும்போது, அவர்களைப் பார்க்க நேர்ந்தது. பெண்கள் பலர் கூட்டமாக வாயிலில் நிற்பதைப் பார்த்து, “இவர்கள் யார்?” என்று கேட்டோம். உடனே அங்கு நின்று கொண்டிருந்த திரு கருப்பண்ணன், “இவர்களெல்லோரும் அடியேனுடைய வீட்டுக்காரிகள்: உங்களைப் பார்ப்பதற்காகத் தான் நிற்கிறார்கள்” என்றார். எங்களுக்கு ஒரே ஆச்சரியம்! பதின் மூன்று மனைவியரை வைத்துக்கொண்டு, இவர் எப்படித்தான் வாழ்க்கை நடத்துகிறாரோ ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

பிள்ளையார் உடைப்பு

புதியம்புத்துரில் ஒரு குறிப்பிடத்தக்க விசேஷம் நடந்தது. தலைப்பைப் பார்த்ததும் திகைப்படைய வேண்டாம். பிள்ளையாரை உடைக்கும் இயக்கம் பிறக்காத காலம் அது. அந்தக் காலத்தில் ஒருவர் பிள்ளையாரை உடைத்தார் என்றால் அது வியப்புக்குரிய செய்தியல்லவா?

சுமார் பதினைந்து வயதுடைய ஒர் இளைனார் கம்பெனியில் இருந்தார். நல்ல இனிமையான குரல். அவர் பாடும் உச்ச ஸ்தாயிக்கு, ஆர்மோனியத்தில் கட்டையே யில்லையென்று புகழுவார்கள். அவ்வளவு அற்புதமான சாரீரம். நடிப்பிலும் நல்ல திறமை. எந்தப் பாடமாயிருந்தாலும் சிலமணி நேரங்களில் நெட்டுருச் செய்துவிடக்கூடிய அபாரமான நினைவாற்றலும் அந்த இளைஞரிடம் இருந்தது.

இத்தனை தகுதியுடைய ஒருநடிகனுக்கு எப்படி ஓய்வு இருக்க முடியும்? யாராவது காய்ச்சல், தலைவலி என்று படுத்து விட்டால் உடனடியாக அந்தப் பாத்திரத்தை ஏற்க வேண்டிய பொறுப்பு அந்த இளைஞன் தலையில் விழும். இவ்வாறு பல நடிகர்களின் ஸ்தானத்தைப்பூர்த்தி செய்ய வேண்டிய நெருக்கடி அடிக்கடி அவருக்கு ஏற்படுவதுண்டு.

ஒரு நாள் பிரகலாதன் நாடகம். இரணியன் வேடதாரி கந்தசாமி திடீரென்று நோயாய்ப் படுத்துவிட்டார். வழக்கம் போல் நமது இளைஞரே இரண்யனின் இடத்தைப் பூர்த்தி செய்ய வேண்டியதாயிற்று. நடிகருக்கு ஒரே ஆத்திரம். எதிர் பாராது பல வேடங்களில் நடிப்பதற்குக் கிடைக்கும் இந்த நல்ல வாய்ப்புக்கள் அந்த நடிகருக்குச் சிறிதும் மகிழ்ச்சியை உண்டாக்க வில்லை.

அந்த நாளில் காலை, மாலை, இருவேளைகளிலும் நடிகர்களை ஊர்ப்புறத்தில் உலாவ அழைத்துச் செல்வது வழக்கம். ஏரிக் கரையை அடுத்த சமவெளியில் ஓர் அரசமரமும், அதன்கீழ் கெம்பீரமான ஒரு பிள்ளையார் சிலையும், அதைச் சுற்றி நாகர்களும் அமைந்திருந்தன. நடிகர்கள் அந்த இடத்தைத் தாண்டித்தான் ஏரிக்கரைக்குச் செல்லவேண்டும். பிரகலாதன் நாடகம் முடிந்த மறுநாள் அந்த வழியாகச் செல்லும்போது, ஏதோ சத்தம் கேட்டுச் சில நடிகர்கள் திரும்பிப் பார்த்தார்கள். நமது நடிக இளைனார் அரசமரத்தின் முன் நின்று கொண்டு, ஆவேசத்தோடு கையில் கிடைத்த கற்களையெல்லாம் எடுத்து, எதிரேயிருந்த பிள்ளையாரின் மீது வீசிக் கொண்டிருந்தார்.

“ஏனப்பா, இப்படிப்பிள்ளையாரை உடைக்கிறாய்” என்றார் ஒருவர். “இந்த நாசமாப் போற பிள்ளையார் எனக்கு வளமான சாரீரத்தைக் கொடுத்திருப்பதாலல்லவா இந்த வம்பெல்லாம் வருகிறது. பாவிகள் எதற்கெடுத்தாலும் என்னையே போட்டுச் சாகடிக்கிறார்களே! எனக்குச் சாரீரம் கெட்டுப் போகும் வரை இந்தப் பிள்ளையாரை உடைத்தே தீருவேன் என்று சொல்லி மீண்டும் கற்களை வீசினார். அரச மரத்தடிப் பிள்ளையார் சிறிது சேதமடைந்தது. நல்ல குரல் வேண்டும், நல்ல வேடம் புனைய வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டுத் தினமும் பிள்ளையாரை வழிபட்டு வரும் நடிகர்களும் சிலர் இருந்தார்கள். அவர்களுக்கு இளைஞரது செயல் பெரும் வியப்பாக இருந்தது.

ஒரு நாளோடு அவர் இந்தப் பிள்ளையார் உடைப்பை நிறுத்தவில்லை. சுவாமிகள் காதில் செய்தி எட்டிக் கண்டிக்கும் வரை தினமும் இவ்வாறு பிள்ளையார் பூசை நடத்திக் கொண்டே யிருந்தார். இப்படிப் பிள்ளையார் உடைப்பை நடத்திய அந்த நடிகப் பெரு வீரர் யார் தெரியுமா? நன்கு மெருகேறிய பழம் பெரும் நகைச்சுவை நடிகர் அவர். அவரது பெயரை அறிந்து கொள்ள ஆவல் உண்டாகிறதல்லவா? அவர்தாம் திரைப்பட நடிகர் திரு எம். ஆர். சாமிநாதன்!

எம். ஆர். சாமிநாதன்

மிகச் சிறந்த நடிகர், நகைச்சுவை நடிகர்களுக்குச் சாதாரணமாக எல்லா விதப் பாத்திரங்களையும் நடிக்க வராது. அப்படி ஒரு சிலர் நடித்தாலும் ரசிகர்கள் நகைச் சுவையுடனேயே அவர் நடிப்பை வரவேற்பது வழக்கம். திரு சாமிநாதன் அதற்கு முற்றிலும் விலக்கானவர் எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடித்து வெற்றி பெற்றுவிடுவார். அவர் தொடர்ந்து தத்துவ மீனலோசினி வித்துவ பால சபையிலும், பிறகு எங்கள் சொந்தக் கம்பெனியிலும் பல ஆண்டுகள் நகைச்சுவை நடிகராக விளங்கி யிருக்கிறார், நாங்கள் முதன் முதலாகத் திரைப்படத் துறையில் புகுந்தபோதும் எங்கள் குழுவோடு சேர்ந்து “மேனகா” படத்தில் நடித்தவர். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களுக்கு, எம். ஆர் சாமிநாதன் அவர்களை ‘ஆசான்’ என்றே குறிப்பிடவேண்டும். இருவரும் பல ஆண்டுகள் எங்கள் குழுவில் நகைச்சுவை நடிகர்களாக இருந்திருக்கிறார்கள்.

நடிகர் மட்டுமன்று எம். ஆர், சாமிநாதன், ஒரு நாடகாசிரி யருமாவார். இவர் எழுதிய ‘ஜம்புலிங்கம்’ என்னும் சீர்திருத்த நாடகத்தை நாங்கள் 1934ஆம் ஆண்டில் நடித்திருக்கிறோம். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் கோயமுத்தூரில் ‘அசோகன பிக்சர்ஸ்’ என்னும் படக் கம்பெனி வைத்திருந்தபோது, எம்.ஆர். சாமிநாதன் கதை எழுதும் பொறுப்பிலும் சிறந்த முறையில் பணி புரிந்திருக்கிறார். பழனியாபிள்ளை அவர்கள் ஸ்ரீ மீனலோசனி பால சற்குண நாடக சபா’ என்னும் பெயரால் ஒரு சொந்தக் கம்பெனியை நிறுவி, இலங்கையில் நாடகங்கள் நடத்தி வந்த போது திரு எம். ஆர். சாமிநாதன், திரு டி. எஸ்.துரைராஜ் ஆகிய இருபெரும் நடிகமணிகளும் அக்குழுவின் பிரதம நகைச்சுவை நடிகர்களாக விளங்கி வந்தார்கள். டி. எஸ். துரைராஜ் அவர்கள் தயாரித்த "பானை பிடித்தவள் பாக்கியசாலி" என்னும் திரைப் படத்தில் எம். ஆர். சாமிநாதன் ஜட்காவாலா வாக நடித்ததை இரசிகர்கள் இன்னும் மறந்திருக்க முடியாது. இவரைப்பற்றி இன்னும் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட நேருமாதலால் இத்தோடு இங்கே நிறுத்திக் கொள்ளுகிறேன்.

சிதம்பரனரைத் தந்த சிற்றூர்

புதியம்புத்தூரில் நாடகங்களுக்கு நல்ல வசூல் ஆயிற்று. ஒரு மாத காலம் நாடகம் நடந்தது. அடுத்த ஊர் முடிமன்; புதியம் புத்துரரிலிருந்து சுமார் ஏழு மைல்கள் இருக்கும். எல்லோரும் மாட்டுவண்டிகளில் முடிமன்னுக்குப் புறப்பட்டோம். வழியில் ஒட்டப்பிடாரம் என்னும் ஊரைத் தாண்டிதான் போக வேண்டும். ஒட்டப்பிடாரம் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரைத் தந்த சிற்றுார். அப்போது தாலுகாவின் தலை நகராக இருந்ததால் பெரிய ஊராகத் தோன்றியது. சிறந்த வாணிபத் தலமாகவும் விளங்கியது.

முடிமன் சென்றபிறகு அங்கு நாடகக் கொட்டகை இல்லை யென்பதை அறிந்தோம். பக்கத்தில் போலிநாய்க்கனூர், என்றொரு சிற்றுார். அந்த ஊரில்தான் கொட்டகை இருந்தது. முடி மன்னில் கம்பெனி வீடு; போலிநாய்க்கனூரில் நாடகக் கொட்டகை. இடையேயுள்ள சுமார் ஒரு மைல் தூரத்திற்குச் சரியான பாதை கிடையாது.

கட்டபொம்மன் சீமை

முடிமன்னுக்குச் சுமார் மூன்று அல்லது நான்கு மைல் தொலைவில் பாஞ்சாலங்குறிச்சி இருப்பதாகப் பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள். அந்த மண்ணாக்கே ஒரு தனி வீரமென்றும், முயல் நாயைத் துரத்தும், பாம்பு கீரியைத் துரத்தும் என்றெல்லாம் கதை கதையாகப் பேசுவார்கள். அந்தப் பாஞ்சாலங்குறிச்சி மண்ணை யாரும் எடுத்துப் போகாதபடி வெள்ளைக்காரர்கள் காவல் போட்டிருப்பதாகக் கூடப் பேசிக் கொண்டார்கள்.

எங்களுக்கெல்லாம் அந்த வீரம் செறிந்த பாஞ்சாலங்குறிச்சியைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. என்ன செய்வது? யாராவது அழைத்துப் போனால்தானே? அன்று அந்தப் பிரதேசத்தின் பெருமைக்குரிய வரலாறு எங்களுக்குத்தெரியாது. இன்று அதைப்பற்றி எண்ணாம் போதெல்லாம் எனக்கு உள்ளத்தில் ஒரு தனி மகிழ்ச்சியுண்டாகிறது. வீர சிதம்பரனார் பிறந்த ஒட்டப்பிடாரத்திற்கு அருகில் ஐம்பத்தொரு ஆண்டுகளுக்கு முன் நாங்கள் நாடகம் நடித்திருக்கிறோம் வீரபாண்டிய கட்டபொம்மன் சீமையில் எங்கள் கலைப்பணி நடந்திருக்கிறது! ஆஹா, எண்ணாம் போதே உள்ளம் பூரிக்கிறது!

ஒற்றையடிப் பாதை

இந்த இடத்தில் ஒரு முக்கியமான நிகழ்ச்சியைக் குறிப்பிட வேண்டியது என் கடமையெனக் கருதுகிறேன். போலிநாய்க்னுாரில் நாடகம். முடிமன்னிலிருந்து நாங்கள் எல்லோரும் நடந்தே செல்ல வேண்டும். சப்பாத்திக் கள்ளிகளும், முட்புதர்களும் நிறைந்த கரடுமுரடான ஒற்றையடிப் பாதை. இரவு ஏழு மணி சுமாருக்கு முடிமன்னிலிருந்து புறப்படுவோம். மங்கலான வெளிச்சமுள்ள ஓர் அரிக்கன் விளக்கைப் பிடித்துக் கொண்டு முன்னால் ஒருவர் போவார். நாங்கள் எல்லோரும் அவரை நெருங்கியபடி நடந்து செல்வோம். நாடகம் முடிந்து திரும்பும்போது எங்களில் சிலருக்குக் குலை நடுக்க மெடுக்கும் சில சமயங்களில் அருகில் ‘புஸ்’ ஸென்று சத்தம் கேட்கும். புதர்களுக்கிடையே ஏதோ ஒடுவது போலத் தோன்றும். பக்கத்தில் வரும் பெரியவர்களைக் கட்டிக் கொள்ளுவோம். சில நேரங்களில் சமையல் அப்பாஜிராவ் என்னைத் தூக்கிக் கொள்வார்.

ஒருநாள் வழக்கம்போல் நாடகம் முடிந்து திரும்பி வரும் போது, புதர்களின் மறைவிலிருந்து திடிரென்று, ஐயா, ஐயா, என்று ஒரு குரல் கேட்டது. எல்லோரும் சட்டென்று நின்றார்கள். எனக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. முன்னால் சென்றவர், விளக்கை முகத்திற்கு நேரே பிடித்தபடி, “யாரையா?” என்று அதட்டிக் கேட்டார். இருளின் வலிமையை இன்னும் அதிகப் படுத்திக் காட்டும் அந்த மங்கிய வெளிச்சத்தில் கரிய நிறமுடைய ஒரு மனித உருவம் நிற்பது தெரிந்தது. பெரிய ஆஜானுபாகு வான தோற்றம்: முழுதும் வெண்மை நிறமுடைய கிருதா மீசை; வலது கையில் நீளமான ஒரு வேல் கம்பு. அந்த உருவத்தைப் பார்க்கவே பயமாக. இருந்தது.

“சங்கர தாஸ்சாமி கூட வருகளா? அவங்களைப் பாக்கணும் செளகரியமாய்ப் பேசணும்”.

அந்த உருவம் இவ்வாறு பேசியது. உடனே எங்களில் ஒருவர், “சாமிங்களுக்கு ஒடம்புசரியில்லே, நாளைக்குவெள்ளென முடிமன்னுக்கு வாங்க பாக்கலாம்” என்று சொல்லிவிட்டு நடந்தார். நாங்களும் அவரைத் தொடர்ந்தோம்.

உண்மைதான். முடிமன்னுக்கு வரும்போதே சுவாமிகள் உடல்நலம் குன்றியிருந்தார். இரவில் நாடகக் கொட்டகைக்கு வருவதில்லை. ஒருதனி வீட்டில் தங்கியிருந்தார். மறுநாள் பொழுது புலர்ந்ததும் நானும் மற்றும் சில நடிகர்களும் சுவாமிகள் இருந்தவீட்டிற்குச்சென்றோம். இரவு கண்டது பேயா, மனித உருவமா என்பதைத் தெளிவுப்படுத்திக் கொள்வதற்காகத்தான்.

ஏட்டுச் சுவடிகள்

மனிதன்தான், ஐயமில்லை. அதே பெரியவர், கைத்தடியை ஊன்றியபடி இருமிக்கொண்டே வந்து, சுவாமிகள் அருகில் உட்கார்ந்தார். சுவாமிகளுக்கும் பெரியவருக்கும் நீண்ட நேரம் பேச்சு நடந்தது. பெரியவர் கூறியதன் சுருக்கம் இதுதான்.

“கட்டபொம்மு ஊமைத்துரையைப் பற்றியும்’ தாகுப்பதிப் பிள்ளை, பகதூர் வெள்ளை இவர்களைப் பற்றியும் பலப்பலப்பொய்க் கதைகள் கட்டிவிடப்படுகின்றன. வெள்ளையருக்குப் பயந்து

உண்மையான செய்திகளைச் சொல்ல மக்கள் அஞ்சுகிறார்கள். என்முன்னோர்கள் வெள்ளையத்தேவர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் எங்கள் வீட்டில் ஒருபழைய ஏட்டுச் சுவடிக் கட்டு இருக்கிறது. அதில் நடந்தது நடந்தபடியே செய்யுட்களாக அந்தக் காலத்தில் எங்கள் பெரியவர்களால் எழுதிவைக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் பெரிய நாடகாசிரியரென்றும், மறக் குலத்தில் பிறந்தவரென்றும் கேள்விப் பட்டேன். அந்தச் சுவடிகளை உங்களிடம் கொடுத்துவிடுகிறேன். அவற்றை வைத்துக் கொண்டு இப்போதில்லாவிட்டாலும் எப்போதாவது ஒருகாலத்தில் இந்த உண்மை நிகழ்ச்சிகளை மக்கள் தெரிந்து கொள்ளும் முறையில் நாடகமாக்கி நடிக்கவேண்டும்.”

இவ்வாறு கூறி விட்டுத் தம்மோடு கொண்டு வந்திருந்த ஒரு சிறு மூட்டையை அவிழ்த்தார். கந்தல் துணியில்சுற்றியிருந்த சில சுவடிக் கட்டுகளைச் சுவாமிகளிடம் கொடுத்தார். இதைச் சொல்லும்போது அவர் கண்கள் சிவப்பேறின. குரல் தழுதழுத்தது. சுவாமிகள் அதை வாங்கி இரண்டொரு ஏடுகளைப் புரட்டிப் பார்த்துவிட்டு, “அருமையான நடை” என்று பாராட்டினார். “இதற்காக உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார் சுவாமிகள். ஒன்றும் வேண்டாம், எங்கள் முன்னோர்களின் சிறப்பை ஒரு காலத்தில் உலகம் அறிய வேண்டும். அதுதான் என் ஆசை” என்றார் பெரியவர்.

அதற்குமேல் அவர்கள் பேச்சு எங்களுக்குச் சுவையளிக்காததால் நாங்கள் போய் விட்டோம். அதன்பின் இரண்டொரு நாட்கள் கம்பெனி வீடு முழுவதும் கட்டபொம்மன் பேச்சுத்தான். பெரியவர்கள் ஒவ்வொருவரும் அவ்வீரனைப்பற்றித் தாங்கள் அறிந்திருந்த கதைகளையெல்லாம் சொன்னார்கள். சுவாமிகள் கட்டபொம்மன் நாடகத்தை விரைவில் எழுத உத்தேசித்திருப்பதாகவும் பேசிக் கொண்டார்கள்.

நிழற் படங்கள்

எதிர்பாராதபடி சென்னைக்குக் கம்பெனியைக் ‘கண்ட்ராக்டு’ பேச ஒருவர் வந்தார். பேச்செல்லாம் முடிவடைந்து அடுத்தபடியாகச் சென்னைக்குப் போவதென்று தீர்மானிக்கப் பட்டது. அதுவரையில் கம்பெனிக்குப் புகைப்படங்கள் எதுவும் எடுக்கவில்லை. சென்னைக்குப் போவதென்று முடிவானதால் புகைப்படம் எடுப்பதற்காக மதுரையிலிருந்து ஒருவரை அழைத்து வந்தார்கள். நாடகமில்லாத ஒருநாள், போலிநாயக்கனூர் கொட்டகையில் சில புகைப் படங்கள் எடுக்கப்பட்டன. அப்போதுதான் நான் முதன் முதலாகப் படமெடுத்துக் கொண்டேன். முதல் படம் என்ன தெரியுமா?... . நாரதர்.

ராஜா எம். ஆர்

அருகில் குமாரபுரம் என்றொரு சிற்றுார். முடிமன்னிலிருந்து சுமார் ஆறு மைல்கள் இருக்கலாம். ராஜா எம். ஆர். கோவிந்த சாமிப் பிள்ளையின் நாடகம் நடப்பதாகக் கேள்விப்பட்டோம். பிள்ளையவர்கள் சுவாமிகளின் அபிமானத்திற்குரிய மாணவர். சுவாமிகளை அவர், “அப்பா” என்றுதான் அழைப்பார். முன்பே மதுரையில் புட்டுத்தோப்பில் இருந்தபோது அவரை ஒருமுறை பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்தில் பிள்ளையவர்கள் மிகப் பிரசித்திபெற்ற நடிகர். “சந்தச் சரப சங்கீத சாகித்ய ராஜ போஜ ராஜா எம். ஆர். கோவிந்தசாமி” என்றுதான் அவரைக் குறிப்பிடுவார்கள்.

ஒருநாள் நல்லதங்காள நாடகம் நடப்பதாக அறிந்தோம். சுவாமிகள் எங்களை அழைத்துப் போய் வரும்படி ஆணையிட்டார்கள். தந்தையாருடன் நாங்கள் நாடகம் பார்க்கச் சென்றோம். நல்லண்ணகை வந்த ராஜா எம். ஆர். ‘கழுகு மாமலை முருகா’ என்று தொடங்கும் ஒரு பாடலைப் பாடிக்கொண்டு மேடைக்கு வந்தார். என்ன அற்புதமான சாரீரம்! இடையிடையே பேசிப் பேசி, அவர் பாட்டைத் தொடங்கும்போதெல்லாம், மக்கள் மகிழ்ச்சியோடு கைதட்டி வரவேற்றது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

நாடகமேடையில் நின்ற நிலையில் சொந்தமாகவே கவி பாடும் புலமை பெற்றவர் ராஜா எம். ஆர். அந்த நாளில் தென்பாண்டிப் பகுதி முழுமைக்கும் நாடக மேடைக்கு அவர் ராஜாவாகவே விளங்கினார்.

புதியம்புத்துார், முடிமன், குமாரபுரம் முதலிய ஊர்களெல்லாம் அப்போது எட்டையபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்தவை. எட்டையபுரத்தை ஆண்டு வந்தவர் ராஜா ஜெகவீரராம வெங்கடேசுர எட்டப்பன் அவர்கள். ராஜா எம். ஆர். கோவிந்தசாமிப்பிள்ளை எட்டையபுரம் மன்னரின் செல்லப்பிள்ளையாக விளங்கினார். அவர் மேடையில் புனைந்து வந்த ராஜ உடைகளெல்லாம் மன்னரால் பரிசளிக்கப்பெற்றவை யெனத் தந்தையார் மூலம் அறிந்தோம். எங்கள் தந்தையார் அவரோடும் பல நாடகங்களில் கதாநாயகியாக நடித்தவராதலால் எம். ஆர். எங்களை அன்புடன் வரவேற்றார், வெளியே நெருக்கடியான கூட்டம், நாங்கள் மேடையிலேயே ஒரு பகுதியில் உட்கார்ந்து நாடகம் பார்த்தோம். நாடகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நாடகம் முடிந்ததும் எம். ஆர். எங்களை விட வில்லை. தந்தையாரும் அவரும் நீண்ட நேரம் பழங் கதைகளை யெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் உறங்கி விட்டோம். பொழுது புலர்ந்ததும் வண்டியேறி முடிமன்னுக்கு வந்து சேர்ந்தோம்.
--------------

6. சென்னை மாநகரம்


சென்னைக்குப் போவது உறுதி செய்யப்பட்டதால் முடிமன் நாடகம் முடிந்ததும் எல்லோரும் மதுரைக்கு வந்து சேர்ந்தோம். சங்கரதாஸ் சுவாமிகளின் உடல்நிலை சரியில்லாததால் அவர்கள் மட்டும் தூத்துக்குடிக்குப் புறப்பட்டார்கள். உடல் நிலையைச் சரிசெய்து கொண்டு தாம் சென்னைக்கு வருவதாகவும் கம் பெனியைச் சென்னைக்குப் போகும்படியாகவும் சுவாமிகள் சொன்னதாக அறிந்தோம்.

மதுரைக்கு வந்தபின் ஒருவார காலம் சென்னைப் பயண ஏற்பாடுகள் கோலாகலமாக இருந்தன. எங்களுக்கெல்லாம் ஒரே குதுகலம். பட்டினத்தைப் பார்க்கப் போகிறோம் என்பதில் பெருமகிழ்ச்சி. நாள், நட்சத்திரம், யோகம், சூலம் இராகுகாலம், எமகண்டம் எல்லாம் பார்த்துப் புறப்பட்டார்கள். 1921 செப்டம்பர் மாதம் மதுரையிலிருந்து இரயிலேறிச் சென்னைக்கு வந்து சேர்ந்தோம்.

எழும்பூரில் இரயிலே விட்டிறங்கியதும் எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. பெருந்திகைப்பாக இருந்தது. இரயில் நிலையமும், மக்கள் கூட்டமும், இதர சூழல்களும் எங்களுக்கு புதுமையாகக் காட்சியளித்தன. மதுரை, திருச்சிராப்பள்ளி இரயில் நிலையங்களெல்லாம் இன்று இருக்கும் அளவு பெரியதாக அப்போது இல்லை. எனவே, அன்றையச் சென்னை எழும்பூர் இரயில் நிலையம் பிரம்மாண்டமானதாகத் தோன்றியது. நடிகர்களை அழைத்துப் போகக் காண்ட்ராக்டர்கள் கார்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். எல்லோரும் கார்களில் ஏறிப் புறப்பட்டோம். வழியில் டிராம் வண்டிகளைப் பார்த்தபோது ஒரே வியப்பு! இரயில் வண்டி தெருக்களிலேயே போவதாக எண்ணினோம். பிறகு தந்தையார். “இது மின்சாரத்தால் ஒடும் டிராம் கார்” என்று அதைப் பற்றி விளக்கியபோது, புரிந்துகொண்டது போல் தலையசைத்தோம். வேறென்ன செய்வது? மின்சாரம் என்றாலே என்னவென்று புரியாத எங்களிடத்தில் மின்சார வண்டியைப் பற்றிச் சொன்னல் எப்படிப் புரியும்?

மனிதர்கள் வண்டியிழுப்பதை நான் அதுவரையில் பார்த்ததில்லை. மாடு, குதிரை ஆகிய மிருகங்கள் இழுப்பதைத்தான் பார்த்திருக்கிறேன். நாகரீகம் மிகுந்த பெரிய பட்டினத்தில் மனிதர்கள் இழுக்கும் ரியக்‌ஷா’ வண்டிகளைப் பார்த்தபோது அந்தச் சின்னஞ்சிறு வயதிலே கூட எனக்குக் கஷ்டமாகத்தானிருந்தது. இந்த அதிசயங்களேயெல்லாம் பார்த்துக்கொண்டே ‘கிராண்ட் தியேட்ட'ருக்கு வந்து சேர்ந்தோம்.

கிராண்ட் தியேட்டர்

சென்னையில் இப்போது முருகன் டாக்கீஸ் என்ற பெயரால் பட மாளிகை ஒன்று இருக்கிறதல்லவா? அதே கொட்டகைதான் அப்போது கிராண்ட் தியேட்டராக விளங்கியது. நாங்கள் வந்து இறங்கியது காலை நேரமானதால் எல்லோரும் பல் துலக்கிக் கொண்டு சிற்றுண்டியருந்த மேடையில் உட்கார்ந்தோம். எல்லோருக்கும் பூரி மசால் பரிமாறப் பட்டது. நான் அதுவரை யில் பார்த்தறியாத புதிய உணவு பூரி. இட்டளி, தோசை, புட்டு, இடியாப்பம், முதலிய பலகாரங்களையே சாப்பிட்டு வந்த எனக்கு, பூரி. மசால் என்னவோ போலிருந்தது. அது வட இந்தியாவில் பிரசித்தமான உணவு என்று சொன்னார்கள். எனககுப் பிடிக்கவில்லை. பிறகு தந்தையார் இட்டளி வர வழைத்துக் கொடுத்தார்.

சிற்றுண்டி முடிந்ததும் கம்பெனியார் அனைவரும் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். நாங்கள் பெற்றோருடன் ஒரு ஒட்டுக் குடித்தனத்தில் குடியேறினோம்.

ஞாயிற்றுக்கிழமை நாடகம்

கிராண்ட் தியேட்டரில் நாடகம் தொடங்கியது. முதல் நாளன்றே கூட்டம் குறைவாக இருந்தது. அதுவரையில் கியாஸ் விளக்குகளில் நாடகம் நடித்து வந்த நாங்கள் அன்று தான் முதன் முதலாக மின்சார விளக்கில் நாடகம் ஆடினோம். என்றாலும், வசூல் இல்லாததால் எங்களுக்கு உற்சாகம் ஏற்பட வில்லை.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு நாடகம் என்றதும் எங்களுக்கு வியப்பாக இருந்தது. அதற்குமுன் எந்த ஊரிலும் ஞாயிறன்று நாடகம் போட்டதில்லை. அதுவும் மாலை நேரத்தில் நடித்ததேயில்லை. செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் மட்டும் இரவு 6.30 மணிக்கு நாடகம். ஆக வாரத்திற்கு மூன்று நாடகம் என்றிருந்தது போய் சென்னைக்கு வந்தபின் வாரத்திற்கு நான்கு நாடகங்கள் ஆயின. ஞாயிற்றுக்கிழமை நடந்த மாலை நாடகத்துக்கு வசூலும் மற்ற நாட்களைவிட அதிகமாக இருந்தது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் சென்னையில் வசூலாகும் என எங்கள் தந்தையார் கூறினார்.

நோயும் சிகிச்சையும்

நாடகம் தொடர்ந்து நடைபெற்றது. நானும் என் தமையன் மார்களும் நோயில் படுத்தோம். சென்னைக்குப் புதிதாக வருபவர்களுக்கெல்லாம் ஒரு திடீர் காய்ச்சல் வருவது வழக்கமாம். அந்தக் காய்ச்சல் எங்களையும் பீடித்ததால் மிகவும் தொல்லைப் பட்டோம்.

இது ஒரு புது விதமான காய்ச்சல். நாடகம் நடந்த செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில்தான் இந்தக் காய்ச்சல் எங்களை அதிகமாகப் பீடித்தது. முறை ஜூரம் என்றார்கள் சிலர்: மலைரியா ஜுரம் என்றார்கள் வேறு சிலர். பகல் உணவு அருந்தும் வரையில் ஒன்றும் இருப்பதில்லை. பிற்பகல் மூன்று மணிக்குமேல் சகிக்க முடியாதபடி குளிர் எடுக்கும். ஒரு மணி நேரத்திற்குப் பின் காய்ச்சல் அடிக்கும். மறுநாள் காய்ச்சல் விட்டுவிடும்.

அண்டை அயலில் இருந்தவர்கள் சொல்லிய மருந்துகளை யெல்லாம் எங்கள் அன்னையார் கொடுத்துப் பார்த்தார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. எங்கள் தாயார் இக்காலத்துப் பெண்டிரைப் போன்றவர்கள் அல்லர். எடுத்ததற்கெல்லாம் டாக்டரைத் தேடியோடும் நிலையில் அவர் எங்களை வளர்க்கவில்லை குழந்தைகளுக்கு வரக்கூடிய நோய்களும், அதற்குரிய மருத்துவ சிகிச்சை முறைகளும் அன்னையாருக்கு நன்றாகத் தெரியும். சென்னைக்கு வரும் வரையில் நாங்கள் டாக்டரைச் சந்தித்ததே யில்லை. எந்த நோய் வந்தாலும் அன்னையாரே ஏதாவது கஷாயம் போட்டுக் கொடுப்பார்கள். இரண்டொரு நாளில் குணமாய் விடும். இப்பொழுது எங்களைப் பீடித்தது, பட்டணத்திற்கே உரிய புதுக் காய்ச்சலாக இருந்ததால், அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை.

புதிய மருந்து

தந்தையார் இரண்டு வாரங்கள் ஏதேதோ மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தார். நோயினல் நாடகம் தடைப்படவில்லை. அது தொடர்ந்து நடைபெற்று வந்தது. நாங்கள் ஜுரத்துடன் மிகவும் போராடி எப்படியோ நடித்தோம். இறுதியாகத் தந்தையார் தமது சொந்த மருந்தையே கொடுக்கத் தொடங்கினார். குளிர் நின்று காய்ச்சல் வந்ததும் நாடகத்திற்குப் புறப்படும் நேரத்தில் கொஞ்சம் பிராந்தியை ஊற்றி எங்களுக்குக் குடிக்கக் கொடுப்பார். இதைக் குடித்ததும் தேகத்தில் ஒரு புதிய தெம்பு ஏற்படும். நோயினால் உண்டாகும் தளர்ச்சி தெரியாமல் நாங்கள் நடித்து விடுவோம். காய்ச்சல் உண்டாகும் நாட்களில் எல்லாம் இவ்வாறு பிராந்தியே எங்களுக்கு மருந்தாக இருந்து வந்தது. நாடகம் முடிவடையும் நேரத்தில் நாங்கள் உணர்வற்ற நிலையில் இருப்போம். எங்களை வண்டியில் போட்டுத்தான்.வீட்டில் கொண்டு வந்து சேர்ப்பது வழக்கம்.

தோழி கதாநாயகியானாள்

ஒருநாள் சத்தியவான் சாவித்திரி நடந்து கொண்டிருந்தது. நந்தவனக் காட்சி. சின்னண்ணா தோழியாக நடித்தார். ஒரே ஒரு வசனம்தான் தோழிக்கு உண்டு. சாவித்திரி ஒரு நீண்ட வசனத்தைப் பேசி முடித்ததும் தோழி,

“ஆம் அம்மா, இங்குள்ள கிளிகள் உன்சொற்களைக் கேட்டும், அன்னங்கள் உன் நடையை மதித்தும், மயில்கள் உன் சாயலைக்கண்டு வெட்கியும் அங்கங்கு பதுங்கி நாண முறுகின்றன பார்!”....

என அதற்கு விடை பகருகிறாள். சின்னண்ணா திரு டி. கே. முத்துசாமி இந்த வசனத்தை நடிப்புணர்ச்சியோடு பேசியதும் சபையில் பெருத்த கரகோஷம் ஏற்பட்டது. சாவித்திரியைவிடத் தோழி நன்றாயிருப்பதாய்ச் சபையோர் பேசிக்கொண்டார்கள். சின்னண்ணாவுக்கு யோகம் அடித்தது; இரண்டாவது முறை சாவித்திரி நாடகம் போட்டபோது, சின்னண்ணாவே சாவித்திரி யாக நடித்தார். அதன் பிறகு தொடர்ந்து பல நாடகங்களில் கதாநாயகி வேடம் இவரைத் தேடி வந்தது.

சென்னைக்கு வந்தவுடன் தந்தையார் ஒரு நாதசுர வித்துவானை எங்களுக்குச் சங்கீதம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார். அந்த வித்துவானிடம் சிரத்தையோடு இசை பயின்றவர் சின்னண்ணா ஒருவர்தான். நோய், நொடி இவற்றினிடையேகூட விடாமல் இசைப் பயிற்சியில் முழு அக்கரை செலுத்தியதால் மிக விரைவில் சின்னண்ணா நன்றாகப் பாடவும் பழகிக் கொண்டார். எல்லா நாடகங்களிலும் கதாநாயகியாக நடித்து நல்ல புகழைப் பெற்றார்.

திடுக்கிடும் செய்தி

ஒருநாள் திடீரென்று வந்த தந்தி எங்கள் எல்லோரையும் திடுக்கிட வைத்தது.

“சுவாமிகள் வாத நோயால் பீடிக்கப்பட்டார்; வாய்பேச முடியவில்லை. வலது கையும், இடது காலும் முடங்கி விட்டது. படுக்கையில் இருக்கிறார்”.

எதிரிகளும் இரக்கம் கொள்ளத்தக்க இச்செய்தியை அறிந்ததும், கம்பெனியின் உரிமையாளர்களில் ஒருவரான பழனியா பிள்ளை தூத்துக்குடிக்கு விரைந்தார். சென்னையிலேயே வைத்து, சிகிச்சை செய்யும் நோக்கோடு சுவாமிகளை மிகவும் சிரமப்பட்டு, சென்னைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்.

நாங்கள் கம்பெனி வீட்டிற்குச்சென்று சுவாமிகளைப் பார்த்தோம். எல்லோருடைய கண்களிலும் நீர் பொங்கி வழிந்தது. எத்தனை எத்தனையோ நடிகர்களைப் பேச வைத்த பேராசான் இன்று பேச முடியாமல் ஊமையாகக் கிடந்தார். எண்ணற்ற நாடகங்களை எழுதிக் குவித்த வலக்கரம் செயலற்ற நிலையில் முடங்கிக் கிடந்தது. ஏறுபோல் நடமாடிய அவரது கால்கள் பிறர் உதவியின்றி எழுந்திருக்க இயலாத நிலையில் அடங்கிக் கிடந்தன; பார்த்தோம், பரிதவித்தோம்!

சென்னையில் யார் யாரோ புலவர் பெருமக்கள், நடிக நடிகையர், சுவாமிகளை வந்து பார்த்தார்கள். பல்வேறு சிகிச்சை முறைகளைக் கூறினார்கள். மருத்துவர்கள் பலர் வந்தார்கள். சிகிச்சை செய்தார்கள். ஒன்றும் பயனில்லை. சுவாமிகளின் பணி விடைக்காகத் தனியாக இருவர் நியமிக்கப் பெற்றார்கள். உரிமையாளர்கள் உண்மையான சிரத்தையோடு சுவாமிகளுக்குச் சிகிச்சை செய்து வந்தார்கள்.

கட்டபொம்மன், ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் ஜூலியத்தும் ஆகிய இருநாடகங்களையும் சுவாமிகள் விரைவில் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தார். எனக்கு ஜூலியத் பாடம் கொடுக்கப் பெற்றிருந்தது. இந்தச் சமயத்தில் எதிர்பாராத நிலையில் சுவாமிகள் நோயுற்றது எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. விரைவில் குணப்பட்டு விடுவார்; புதிய நாடகங்களைத் தயாரிப்பார் என்றெல்லாம் உரிமையாளர்கள் எண்ணினார்கள். நம்பிக்கையோடு சிகிச்சை செய்து வந்தார்கள்.

எம்பிரஸ் தியேட்டர்

சுவாமிகளின் பழைய நாடகங்கள் சில பாடம் கொடுக்கப் பெற்றன. வள்ளி திருமணம், அல்லியர்ஜுனா, குலேபகாவலி முதலிய நாடகங்களை நடித்தோம். இந்த நேரத்தில் சென்னை கண்ட்ராக்டு முடிவடைந்து விட்டது. மீண்டும் ஒரு மாத காலம் சென்னையிலே சொந்தமாக நாடகம் நடத்த முடிவு செய்தார்கள். கிராண்டு தியேட்டரில் தொடர்ந்து நடத்துவதைவிட வேறொரு தியேட்டருக்குப் போவது நல்லதென்று எண்ணி, திருவல்லிக்கேணி எம்பிரஸ் தியேட்டரில் நடத்த ஏற்பாடாயிற்று.

இப்போது ஸ்டார் டாக்கீஸ் என்னும் பெயரோடு திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்து வருகிறதல்லவா? இதுதான் அந்த நாளில் எம்பிரஸ் தியேட்டராக விளங்கியது. தியேட்டர் மாறியதும் கம்பெனி வீடும், எங்கள் வீடும் திருவல்லிக்கேணிப் பகுதிக்கு மாற்றப்பட்டன.

திருவல்லிக்கேணிக்கு வந்ததும் எங்களுக்கு நோய் இன்னும் அதிகமாயிற்று. அம்மா, அப்பா, தம்பி பகவதி, தங்கை சுப்பு எல்லோருமே காய்ச்சலில் படுத்துவிட்டார்கள். நாடகங்களுக்கு வசூல் இல்லாததால் செலவுக்குப் பணம் கிடைப்பது கூடக் கஷ்டமாகிவிட்டது.

பாட்டியார் மறைவு

இந்த நேரத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து எங்கள் பாட்டி இறந்து போனதாக ஒருநாள் தகவல் வந்தது. அம்மாவுக்கும் பாட்டிக்கும் ஒத்துப் போகாததால் பாட்டி தம்இளைய மகனுடன் திருவனந்தபுரத்தில் இருக்க நேர்ந்ததாக முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். இந்த மரணச்செய்தி வந்த அன்று இரவு, நாடகம் வைக்கப் பெற்றிருந்தது. உரிமையாளர்களில் ஒருவரான சின்னையா பிள்ளை காலையில் வந்த கடிதத்தை இரவு ஏழு மணிக்குக் கொண்டு வந்து தந்தையாரிடம் கொடுத்தார். இருவரும் ஏதேதோ பேசினார்கள். எல்லோரும் காய்ச்சலோடு குளித்துவிட்டு நாடகத்தில் நடிக்கச் சென்றோம். ஊருக்குப் புறப்படும் எண்ணம் கைவிடப்பட்டது. வீட்டுச் செலவுக்குக் கம்பெனியிலிருந்து சரியாகப் பணம் கிடைப்பதில்லை. எல்லோரும் நோயுற்றதால், வீட்டில் யாரும் சாப்பிட வேண்டிய அவசியமும் இல்லாதிருந்தது. ரொட்டியும், காபியும்தான் எல்லோருக்கும் உணவு. இப்படியே நாட்கள் ஓடின. நாடகமும் ரூ. 50, 60 வசூலில் நடந்து கொண்டிருந்தது.

காமேஸ்வர ஐயர்

உரிமையாளர்களில் இருவர் ஊருக்குப் போய்ச்சேர்ந்தார்கள். பழனியாப்பிள்ளை, கருப்பையாபிள்ளை, இருவர் மட்டுமே இருந்து நிர்வாகத்தை நடத்தி வந்தார்கள். கம்பெனி தள்ளாடியது. இந்தச் சமயத்தில் திரு. காமேஸ்வர ஐயர் என்ற ஒருவர் வந்து சேர்ந்தார். அவர் கருப்பையாபிள்ளையின் நண்பர். அவர் தாமாகவே கம்பெனி நிர்வாகங்களில் தலையிட்டுக் கம்பெனியை வேலூருக்குக் கொண்டுபோக ஏற்பாடுகள் செய்தார். அவருடைய முயற்சியால் எல்லோரும் சென்னையை விட்டு வேலூருக்கு வந்து சேர்ந்தோம்.

வேலூர் தோட்டப்பாளையம் கொட்டகையில் நாடகங்கள் தொடங்கின. நாடகங்களுக்கு வசூல் நல்ல முறையில் இருந்து வந்தது. அப்போது தோட்டப்பாளையம் கொட்டகைக்குச் சொந்தக்காரராக இருந்தவர் திரு க. மாணிக்க முதலியார். இவரைக் கழுதை மாணிக்க முதலியார் என்றே இரசிகர்கள் கூப்பிடு வார்கள். இவர் அந்த நாளில் ஒரு சிறந்த ‘ராஜபார்ட்'டாக விளங்கினார். இவருடைய நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். வடபகுதி மாவட்டங்களில் மிகவும் பெயர் பெற்ற நடிகர் இவர். நன்றாகப் பாடக் கூடியவர். பெயருக்குமுன் வந்த தலையெழுத்து ‘க’ வாக இருந்ததால் குறும்புத்தனமான இரசிகர்கள் இவருக்கு கழுதை மாணிக்கம் என்ற ப்ட்டத்தைச் சூட்டி விட்டார்கள்.

மறக்க முடியாத மசால்வடை

சென்னைக்கு வந்தபின் நாடகத்தின் நடுவில் சில நிமிடங்கள் இடைவேளை விடுவது வழக்கமாகி விட்டது. வேலூரில் அந்த வழக்கம் தொடர்ந்தது. இடைவேளைக்காக கொட்டகைக்கு உள்ளேயிருந்த சிறிய ஒட்டலில் உப்புமா, மசால்வடை போடுவார்கள். மிக அற்புதமாக இருக்கும். மறக்கமுடியாத மசால் வடை. எங்கள் தந்தையார் வாங்கிக்கொண்டு வந்து அன்போடு கொடுப்பார். அந்த மசால் வடையின் சுவை இன்னும் நினைவை விட்டு அகலவில்லை.

வேலூருக்கு வந்த பின்னும் எங்கள் காய்ச்சலுக்கு விடிவு ஏற்படவில்லை. அடிக்கடி வந்து தொல்லை கொடுத்துக் கொண் டிருந்தது.

வள்ளி திருமணம்

ஒரு நாள் வள்ளி திருமணம். சின்னண்ணா வள்ளி வேடம் தாங்குவது வழக்கம். இரண்டு நாட்களாக அண்ணாவுக்குக் கடுமையான காய்ச்சல். வேறு நடிகர் இல்லாததால் முதல்நாள் காய்ச்சலோடு நடித்தார். வள்ளி திருமணத்தன்று அவரால் எழுந்து நிற்கவே முடியவில்லை . இரவுக்குள் சரியாகிவிடுமென்ற நம்பிக்கையோடு ஏதேதோ வைத்தியம் செய்தார்கள்.

இரவு மணி எட்டு. வழக்கம்போல் எல்லோரும் வேடம் புனைவதற்காகக் கொட்டகைக்கு வந்துவிட்டோம். 9.30 மணிக்கு நாடகம் தொடங்க வேண்டும். முதலாளிகளும் எங்கள் தந்தை யாரும் சின்னண்ணாவைச் சுற்றி உட்கார்ந்திருக்கிறார்கள்.

“என்ன முத்து! நடிக்கமுடியுமா?” ......இது முதலாளியின் கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதிலே கிடைக்கவில்லை. அண்ணாவால் பேசவே முடியவில்லை. கேள்விக்கு விடையாக ஒருமுறை வாந்தியெடுத்தார். அன்று அவரை வள்ளி வேடம் போட்டு நாடகம் நடத்த இயலாதென்பது உறுதி செய்யப்பட்டது. அடுத்த யோசனை?...

“ஏண்டா பசங்களா! யாராவது வள்ளியாக நடிக்கிறீங்களாடா? இல்லேன்ன நாடகத்தை நிறுத்த வேண்டியதுதான்...” அடிக்கடி இப்படி யாருக்காவது உடல் நலமில்லாது போனால் அடுத்த வேடத்தைப் புனைய ‘நான் முந்தி நீ முந்தி’ என்று நடிகர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு வருவது வழக்கம். எல்லோரும் அநேகமாக எல்லா நாடகப் பாடங்களையும் ஒரளவுக்குக் கேள்வியிலேயே நெட்டுருப் போட்டு வைத்திருப்பார்கள். ஆனால், இன்று முதலாளியின் கேள்வி, பலர் வாயிலாகமீண்டும். மீண்டும் எதிரொளித்ததே தவிர யாரும் நடிக்க முன்வரவில்லை.

யார் வள்ளி?

மணி 9 ஆகிவிட்டது. நாடகத்திற்கு அன்று நல்ல வசூல். நடிகர்கள் எவரும் தாமாக முன்வராததால், சில நடிகர்களை. அணுகி வள்ளியாக நடிக்கும்படி முதலாளிகள் வற்புறுத்தியும் பார்த்தார்கள். ஒன்றும் பலிக்கவில்லை.

அப்போது குழுவில் இருந்தவர்களில் நான் மிகச் சிறுவன். எனவே என்னை யாரும் கேட்கவில்லை “நான் வேண்டுமானல், நாரதராக நடிக்கிறேன்” என்றார் ஒரு நடிகர். ஏற்கனவே ஒரு தடவை நான் நோயுற்றிருந்தபோது நடித்தவர் அவர். இன்னும் சிலரும் நாரதராக நடிக்க முன்வந்தார்கள். நான்தான் எப்பொழுதும் நாரதராக நடிப்பது வழக்கம்.

பல நாரதர்கள் முன் வந்ததும், “சண்முகம் வள்ளியாக நடிக்கட்டுமே” என்றது ஒரு குரல்.

“ஆ! சரியான யோசனை! அவன் நடித்துவிடுவான் அண்ணா. முதல் மணியை அடிக்கச் சொல்லுங்கள். சண்முகம்தான் வள்ளி” என்றது மற்றொரு குரல். முதலாளிகள் என்னை நெருங்கினார்கள். வானளாவப் புகழ்ந்தார்கள். தைரியம் கூறினார்கள். “நீதான் நடிக்க வேண்டும்” என்றார்கள். நான், “எனக்குக் கொஞ்சம் கூடப் பாடமில்லையே” என்றேன்.

வள்ளியின் பாடல்களையெல்லாம் நான் அடிக்கடிசின்னண்ணாவுடன் போட்டி போட்டுப் பாடிக் கொண்டிருப்பது என் தந்தையாருக்குத் தெரியும். அவர் என் அருகில் வந்து,

“டே, பயலே! சும்மா போடுடா. நான் பின்னலேநிண்ணா பாடிட்றேன்” என்றார்.

மந்திரம் ஒதினார்

பாடம் சொல்லித் தருவதாகச் சிலர் உற்சாகப் படுத்தி -னார்கள். நான் தயங்கிக் கொண்டே நின்றேன். முதலாளிகளில் ஒருவரான கருப்பையாப்பிள்ளை என்னை ஒருபுறமாகத் துாக்கிக் கொண்டு போனார், காதில் ஒரு மந்திரத்தைச் சொன்னார். அவ்வளவுதான்; நான் நடிப்பதாக ஒப்புக் கொண்டேன்.

நாடகம் நடந்தது. நான் வள்ளியாக நடித்தேன். உளறிக் ’கொட்டாமல் ஒழுங்காகவே நடித்தேன். எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள். என்னை நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளச் செய்த அந்த மந்திரம்...! முதலாளி கருப்பையா பிள்ளை என் காதில் ஒதிய அந்த மந்திரம்-என்ன தெரியுமா?

“டே பயலே! நீ இன்னிக்கு வள்ளியாக நடிச்சா உனக்கு முழுசா அஞ்சு ரூபாய் இளும் தருகிறேன்” என்பதுதான்.

முதலாளி கருப்பையாபிள்ளை என் காதில் சொன்ன ஐந்து ரூபாய் ரகசியம் நாடகம் முடியுமுன் நடிகர்களுக்கெல்லாம் தெரிந்து விட்டது. பலர் என்னைப் பார்த்து கேலி செய்யத் தொடங்கினார்கள். அஞ்சு ரூபாய் வள்ளி: அஞ்சு ரூபாய் வள்ளி’ என்று என் காதில் விழும்படிக் கிண்டல் செய்தார்கள். நான் அவற்றையெல்லாம் இலட்சியம் செய்யவேயில்லை. நாடகம் முடிந்ததும் எனக்கு ஐந்து ரூபாய்கள் கொடுத்தார் முதலாளி கருப்பையா பிள்ளை.

அந்த ஊரிலேயே சில நாட்களில் எங்கள் சம்பளமும் உயர்த்தப்பட்டது. சின்னண்ணு கம்பெனியின் பிரதம நடிகராய் விட்டதால் அவரது சம்பளம் மாதம் எட்டு ரூபாய்களிலிருந்து இருபத்தி ஐந்து ரூபாய்களாக உயர்ந்தது. எனக்கும் அதே சம்பளம் போடப்பட்டது. தொடக்கத்தில் எங்கள் எல்லோருக்கு மாக மொத்தச் சம்பள வரவு தொண்ணுாற்றி எட்டு ரூபாய்கள். இப்போது மொத்தம் எல்லோருக்கும் நூற்றி நாற்பது ரூபாய்கள் சம்பளம் கிடைத்தது.

ஆசிரியர் குப்புசாமி நாயுடு

வேலூரில் திரு. கே.ஜி.குப்புசாமிநாயுடு கம்பெனிக்கு ஆசிரியராக வந்து சேர்ந்தார். இவர் சுவாமிகளின் மாணாக்கர்களில் ஒருவர். மிகச் சிறந்த பெண்வேடதாரியென்று பலரும் புகழுவார்கள். "தாராச சாங்கம்" நாடகத்தில் ‘தாரை'யாக நடிப்பதில் சிறந்து விளங்கியதால் தாரை குப்புசாமி நாயுடு என்றே இவரைக் குறிப்பது வழக்கம். கம்பெனிக்கு வந்து சேர்ந்த சமயத்தில் இவர் வேடம் புனைவதை நிறுத்திவிட்டு நாடகாசிரியராகவே பணி புரிந்து வந்தார். ஒருநாள் இவர் சுவாமிகளைப் பார்க்க வந்திருந்தார். வந்த இடத்தில் சுவாமிகளுடைய விருப்பத்தின்படி கம்பெனியில் இருக்க ஒப்புக்கொண்டார். கே. ஜி. குப்புசாமி நாயுடு சேர்ந்தபின் மற்றுஞ் சில புதிய நாடகங்கள் தயாராயின. அவற்றில் முக்கியமான நாடகம் ஞானசெளந்தரி, வேலூர் முடிந்ததும் பிரஞ்சிந்தியாவைச் சேர்ந்த பாண்டிச்சேரிக்குப் பயணமானோம்.

ஞானசெளந்தரி நாடகம்

பாண்டிச்சேரியில் எனக்கு ஞானசெளந்தரி பாடம் கொடுக்க பெற்றது. சின்னண்ணாவுக்கு ஞானசெளந்தரியின் சிற்றன்னை ‘லேனாள்’ பாடம் கொடுத்தார்கள். பாண்டிச்சேரிக்கு வந்தவுடனேயே அவசர அவசரமாக இந்தப் புது நாடகத்தை அரங்கேற்ற முயற்சியெடுத்துக் கொண்டார்கள். பாடத்தை நெட்டுருப் பண்ணுவதற்குக்கூட நாட்கள் போதாது. மிகவும் துரிதப் படுத்தினர்கள். ஞானசெளந்தரி மிகப் பெரிய பாடம். பாடத்தைப் பார்த்தவுடனேயே எனக்குப் பயமாக இருந்தது. நாடகத்தில் ‘லேனா'ளின் சூழ்ச்சியால் ஞானசெளந்தரியின் இருகைகளும் வெட்டப்படுகின்றன. பாதி நாடகம் முழுதும் ஞானசெளந்தரி கைகளைப் பின்புறம் கட்டிக்கொண்டே நடிக்கவேண்டும். இந்த விஷயத்தைக் கேட்டவுடன் எனக்கு மேலும் பயம் அதிகரித்தது. பாடம் கொடுத்தவுடனேயே நாடகத்திற்குத் தேதியும் குறித்து விட்டார்கள். ஒத்திகைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

கடுக்கன் பரிசு

நாடக அரங்கேற்றத்திற்கு இன்னும் இரண்டே நாட்கள். நான் சரியாகப் பாடத்தை நெட்டுருப் பண்ணவில்லை. முதலாளி கருப்பையாபிள்ளை எங்கள் வீட்டுக்கு வந்தார். ஒரு ஜதைக் கடுக்கன்களை என்னிடம் கொடுத்தார். அதன் விலை பத்து ரூபாய், அப்போது பாண்டிச்சேரியில் ஒரு பவுனின் விலையே பதின்மூன்று ரூபாய்கள்தான். அரைப் பவுனில் செய்யப்பட்டிருந்த அந்த ஐந்து கல்பதித்த கடுக்கனைக் கண்டதும் எனக்கு மிகவும் ஆசை உண்டாயிற்று. வாங்கித் தரும்படி அப்பாவிடம் வற்புறுத்தினேன். உடனே கருப்பையாபிள்ளை “ஞானசெளந்தரி பாடத்தை நாடகத்தன்று சரியாக ஒப்பித்து விட்டால் இதை உனக்கு இனமாகவே கொடுத்து விடுகிறேன்” என்றார்.

வேலூரில் வள்ளி நாடகத்தின்போது ஐந்து ரூபாய்கள் செய்த அற்புதத்தைப் பார்த்தாரல்லவா? இம்முறையும் அவருடைய யோசனை பலித்தது. கடுக்கன் போட்டுக்கொள்ளவேண்டு மென்ற ஆசையில் ஒரே மூச்சாக உட்கார்ந்து ஞானசெளந்தரி பாடத்தை நெட்டுருப் போட்டு விட்டேன். வாக்களித்தபடி கடுக்கனைப் பரிசாகப் பெற்றேன்.

முதல் நாடகத்தன்று பிலேந்திரன் ஞானசெளந்தரியைக் காட்டில் சந்தித்து அழைத்துப் போகும் காட்சியில், ஞாபக மில்லாமல் பின்னல் கட்டிக் கொண்டிருந்த கைகளை வெளியே எடுத்து விட்டேன். சபையோர் கொல் வென்று சிரித்து விட்டார்கள். இரண்டாவது நாடகத்திலிருந்து முன் ஜாக்ரதையாக என் கைகள் வெட்டப்பட்டவுடன், கைகளிரண்டையும் பின்புறமாகச் சேர்த்து வைத்து, நாடா போட்டுக் கட்டி விட்டார்கள்.

சுவாமிகளின் நாடக ஆர்வம்

பாண்டிச்சேரியில் சுவாமிகளின் உடல்நிலை சுமாராக இருந்தது. அவரும் அடிக்கடி நாடகங்களுக்கு வருவார். உள்ளே பக்கத் தட்டிக்கருகே அவருக்காக ஒரு கான்வாஸ் சேர் போடப் படும். சுவாமிகள் அதில் படுத்துக்கொண்டு கடைசிவரை நாடகத்தைப் பார்த்துக்கொண்டேயிருப்பார். நடிகர் யாராவது பாடம் உளறில்ை சுவாமிகள் அவர்களை எளிதில் விடமாட்டார். காட்சி முடிந்தவுடன் உளறிய நடிகர் சுவாமிகள் இருக்கும் பக்கம் போகவே பயப்படுவார். நடிகரைக் கூப்பிட்டு அவர் பாடம் உளறியதைச் சைகையாலேயே சுட்டிக் காட்டுவார். சில சமயங்களில் அடிக்கவும் முயலுவார். கை கால்கள் சரியாக விளங் காத நிலையில் இருந்ததால் நடிகர்கள் அடிவிழாமல் தப்பித்துக் கொள்ளுவார்கள். எல்லா நாடகங்களும் சுவாமிகளுக்கு மனப் பாடம். நாடகப் புத்தகத்தை வைத்துக் கொண்டு பாடம் சொல்லிக் கொடுக்கும் வழக்கமேயில்லை.

உளறலும் பாராட்டும்

ஒரு நாள் பாதுகா பட்டாபிஷேகம் நாடகம் நடந்தது. சின்னண்ணா டி. கே. முத்துசாமி பரதனாக நடித்தார். கேகய நாட்டில் பரதன் தீயகனாக் கண்டு, அதைத் தம்பி சத்துருக்கனனிடம் சொல்லும் காட்சியில், ‘தம்பி சத்துருக்கனா’ என்பதற்குப் பதிலாகத் “தம்பி லட்சுமணா” என்று சொல்லிவிட்டார். சபையோர் அனைவரும் சிரித்துவிட்டார்கள்.

இலங்காதகனம், கலோசனசதி ஆகிய நாடகங்களில் சின்னண்ணா ராமராகவும், நான் லட்சுமணனுகவும் நடிப்பது வழக்கம். பாதுகா பட்டாபிஷேகத்திலும் எனக்கு லட்சுமணன் வேடந்தான் கொடுக்கப்பட்டிருந்தது. சின்னண்ணா பரதனாக நிற்பதை மறந்து, ராமர் வேடம் போட்டுப் பேசிய பழக்கத்தில் “தம்பி லட்சுமணா” என்று தவறுதலாகச் சொல்லி விட்டார். ஆனால் அந்தத் தவறை உடனே புரிந்து கொண்டு,

“தம்பி சத்ருக்கனா! எப்போதும் அண்ணன் ராமச்சந்திரனையும், தம்பி லட்சுமணனையும் என் மனம் நினைத்துக் கொண்டே யிருப்பதால் வாய் தவறி உன்னையும் லட்சுமணாவென்றே அழைத்து விட்டேன்” என்று பேசிச்சமாளித்தார். அண்ணாவுக்கு அப்போது வயது பன்னிரெண்டு இந்த இளம் வயதில் இவ்வளவு சாதுரியமாகச் சமாளித்ததற்காகச் சபையோர் அனைவரும் கரகோஷம் செய்து பாராட்டினார்கள். காட்சி முடிந்து உள்ளே வந்ததும் சுவாமிகள் சின்னண்ணாவைக் கூப்பிட்டார். அவருக்குப் பயந்தான். தன்னுடைய தவறுதலுக்காகச் சுவாமிகள் கோபித்துக் கொள்வாரென்றெண்ணி நடுங்கிக்கொண்டே வந்து நின்றார், சுவாமிகள் அண்ணாவை அருகில் அழைத்து, கண்களில் மகிழ்ச்சிப் பரவசத்துடன் இடது கையால் தட்டிக் கொடுத்தார்.

‘ரம்’ செய்த ரகளை

பாண்டிச்சேரியில் காமாட்சியம்மன் கோயில் தெருவில் நாங்கள் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டுக்கு அடுத்தாற்போல் ஒரு பிரபல வழக்கறிஞர் வசித்து வந்தார். அவருக்கு நாடகக்காரர்கள் என்றாலே பிடிப்பதில்லை, நாங்கள் அடிக்கடி பாடிக் கொண்டிருப்போம். எங்கள் வீட்டுச் சுவரையொட்டினாற் போலிருந்தது அவரது படுக்கையறை. அந்த வழக்கறிஞர், நாடக மில்லாத நாட்களில் இரவு நேரங்களில் நாங்கள் பாடும்போதெல்லாம் ஏதாவது முணு முணுத்துக் கொண்டேயிருப்பார். ஒரு நாள் எங்கள் தந்தையார் ‘ரம்’ என்னும் ஒரு புது வகையான மதுவைக் குடித்து விட்டு வந்திருந்தார். போதை தலைக்கேறி விட்டது; ஒரே குஷி, இரவு ஒன்பது மணி: தமது கெம்பீரமான குரலையெழுப்பிப் பாடத் தொடங்கினார். அவரது பாட்டைக் கேட்டவுடன் வழக்கறிஞருக்குப் பிரமாதக் கோபம் வந்து விட்டது. ஆங்கிலமும், தமிழும் கலந்த மணிப்பிரவாள நடையில் ஏதேதோ ஏசத் தொடங்கினார். இரவு ஒன்பது மணிக்குமேல் “இப்படிக் கழுதைபோல்கத்தினால் நாங்கள் எப்படித் துரங்குவது?” என்று சத்தம் போட்டார். வீட்டு வாசவில் ஒரே குழப்பம். எங்கன் தாயார் வழக்கறிஞரைச் சமாதானம் செய்தனுப்பினார்.

நள்ளிரவில் கச்சேரி

தந்தையார் பாடுவதை நிறுத்திவிட்டு, அவசரமாக வெளியே சென்றார், நாங்கள் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் வீட்டிலேயே முத்துக் கன்னி மேஸ்திரி என்ற கம்பெனியின் தையல்காரரும் தம் மனைவி யோடு குடியிருத்தார். மேஸ்திரி அப்பாவுக்கு நண்பர். எப்போதும் இருவரும் ஒன்றாகத்தான் வெளியே போய்வருவது வழக்கம். அன்று மேஸ்திரியும் நல்ல குடிபோதையில் இருந்தார். அப்பா மேஸ்திரியை வீட்டுக்குக் காவல் வைத்து விட்டுத் தனியாக வெளியே சென்றதால் எங்களுக்கு மேலும் வியப்பாக இருந்தது. பதினைந்து நிமிடங்களில் இரண்டு புஷ் வண்டிகள் வந்து வாசலில் நின்றன. அவற்றில் ஆர்மோனியம் திரு வைத்திலிங்கம் பிள்ளையும், மிருதங்கம் திரு துரைசாமி நாயுடுவும், கம்பெனியில் அப்போது மிகவும் பலசாலியென எல்லோராலும் கருதப் பெற்ற திரு கோபால பிள்ளையும் வந்து சேர்ந்தார்கள்.

புஷ்வண்டி என்பது ரிக்‌ஷாவைப் போன்று மனிதர்கள் இழுக்கும் வண்டிதான். ரிக்‌ஷாவை முன்னால் நின்று இழுத்துச் செல்வார்கள். இது நாலு சக்கிர வண்டியாதலால் பெரும்பாலும் பின்னல் நின்று தள்ளிச் செல்வது வழக்கம். வண்டியில் உட்கார்ந்திருப்பவர்களே தம் கையில் முன்னாலுள்ள கம்பியைப் பிடித்துக் கொண்டு வண்டியைச் செலுத்த வேண்டும். இந்தப் புஷ் வண்டி அப்போது, பாண்டிச்சேரியிலும் கடலூரிலும் காணப்பட்டது. இப்போது நான் பார்த்ததாக நினைவில்லை.

புஷ் வண்டிகளில் ஆர்மோனியம் மிருதங்கத்துடன் இவர்கள் எல்லோரும் வந்ததும் என்ன நடக்குமோவென நாங்கள் பயந்து விட்டோம். இரவு மணி பத்திருக்கும். வீட்டுக்குள் கச்சேரி தொடங்கியது. தந்தையார் தம்மால் முடிந்த மட்டும் மேலே குரலெழுப்பிப் பாடினார். வைத்திலிங்கம் பிள்ளையும் துரைசாமி நாயுடுவும் அவரோடு சேர்ந்து வாசித்தார்கள். முத்துக்கன்னி மேஸ்திரியும், கோபால் பிள்ளையும் வீட்டு வாயிற் படியில் கையில் தடியோடு காவல் புரிந்தார்கள்.

வழக்கறிஞரின் மன்னிப்பு

வழக்கறிஞர் வெலவெலத்துப்போய்விட்டார். அவர் ஆர்ப் பாட்டமெல்லாம் அடங்கி விட்டது, சண்டைக்குக் கச்சை கட்டி நிற்பதைக் கண்டதும், அவர் குரல் கீழே இறங்கிவிட்டது. உள்ளே நடக்கும் கச்சேரியைக் கேட்க வீதியில் ரசிகர்கள் கூடிவிட்டார்கள். பிறகு வழக்கறிஞர், முத்துக்கன்னி மேஸ்திரியிடம் வந்து சமாதானமாகப் பேசினார்.முதலில் தாம் ஏசிப் பேசியதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். எப்படியாவது இந்தக் கச்சேரியை, நிறுத்தினால் போதும் என்றாகி விட்டது அவருக்கு. கோபாலபிள்ளை ஒருவாறு எல்லோரையும் சமாதானப்படுத்தினர். கச்சேரியை நிறுத்தச் செய்தார். ஆர்மோனியம், மிருதங்க வித்துவான்களை வீட்டுக்கழைத்துச் சென்றார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு வழக்கறிஞர் எந்த வம்புக்கும் வருவதேயில்லை.

தங்கை பிறந்தநாள்

1921ஆம் ஆண்டு டிசம்பர் கடைசி நாள். அன்று அபிமன்யு சுந்தரி மாலை நாடகம்; நாடகம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் அன்னயார் எல்லோருக்கும் உணவு பரிமாறினார்கள். இரவு ஒரு மணியளவில் உறங்கினோம். ஏதோ சலசலப்புக் கேட்டு விழித்தோம். இரவு மூன்று மணிக்கு, எங்களுக்கு இரண்டாவதாக ஒரு தங்கை பிறந்திருப்பதை அறிந்தோம்; மகிழ்ந்தோம்.

காமாட்சியம்மன் கோயில் தெருவில் குடியிருந்தால் தங்கைக்குக் காமாட்சி எனப் பெயரிடப் பெற்றது தங்கை பிறந்த இரண்டாம் நாள் முதன் முதலாக வீடு பெருக்குவதற்கு ஒரு வேலைக்காரியை நியமித்ததாகத் தந்தையார் தமது நாட்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். எனவே ஏழு குழந்தைகளுக்குத் தாயாகும் வரையில் எங்கள் வீட்டில் வேலைக்காரி வைக்க வேண்டிய அவசியமே இல்லாதபடி அன்னையாரே யாவற்றையும் கவனித்து வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

எங்கள் அன்னையார் ஒர்.அபூர்வப்பிறவி. அவர்கள் காலையில் எழுந்திருப்பதையும் இரவில் உறங்குவதையும் நான் பார்த்ததே யில்லை. நாங்கள் விழித்தெழுந்தவுடன் வெந்நீர் தயாராயிருக்கும். அவர்களேதாம் குளிப்பாட்டி விடுவார்கள். எங்கள் எல்லோருக்கும் தலைமுடி நீளமாக யிருக்கும். எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் நாட்களில் பெரியண்ணாவுக்கும் தாயார் தாம் தலை தேய்த்து விடுவார்கள். அவர்கள் எப்பொழுது ஒய்வு எடுத்துக் கொள்வார்களோ எங்களுக்குத் தெரியாது. இயந்திரம் போல் சதா வேலை செய்து கொண்டே யிருப்பார்கள். அவர்கள் பிரசவ அறையிலிருந்த நாட்களில் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். தையல் வேலை முத்துக்கன்னி மேஸ்திரி எங்களுடன் குடியிருந்தா ரென்று குறிப்பிட்டேனல்லவா? அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது மனைவியார் எங்களுக்கு வேண்டிய உதவிகள் செய்தார்.

பாண்டிச்சேரியில் நாடகங்களுக்கு நல்லவரவேற்பிருந்தது . பாண்டிச்சேரி முடிந்து திண்டிவனம் சென்றோம். அங்கும் நல்ல வசூல். சென்னையில் வசூல் இல்லாமல் கஷ்டப்பட்ட நிலை மாறி விட்டது. தொடர்ந்து வேலூர், பாண்டிச்சேரி, திண்டிவனம் ஆகிய மூன்று ஊர்களிலும் நல்ல வசூலாயிற்று. கருப்பையா பிள்ளை மற்ற முதலாளிகளை விடக்கொஞ்சம் தாராளமான மனம் உடையவர்: நுணுக்கம் தெரிந்தவர். அவரும் காமேசுவர ஐயரும் தாம் இப்போது கம்பெனியை நிருவகித்து வந்தார்கள். உழைப்புப் பங்காளியான பழனியாப் பிள்ளை ஒன்றுஞ் செய்யத் தோன்றாது அவர்களோடு பேருக்கு ஒத்துழைத்தார்.

ஏ. கே. சுப்பிரமணியன்

திண்டிவனத்தில் பாட்டா இராமகிருஷ்ணன், கம்பெனியை விட்டுப் போய்விட்டார். அவருடைய ஸ்தானத்தை அருப்புக் கோட்டை ஏ. கே. சுப்பிரமணியன் பெற்றார். சுப்பிரமணியன் மிகச் சிறந்த பாடகர், நல்ல வளமான சாரீரம்; இயற்கையாகவே அவருடைய குரலில் ‘பிருகா’ பேசும். சென்னைக்கு வந்தவுடனேயே பல நாடகங்களில் சுப்பிரமணியன் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி விட்டார், இப்பொழுது பாட்டா இராம கிருஷ்ணன் போய்விட்டதால், எல்லா வேடங்களும் அவருக்கே கொடுக்கப் பெற்றன. சுப்பிரமணியன் நடித்த சத்யவான், கோவலன், வள்ளி நாடகத்தில் வேலன் - வேடன் - விருத்தன் முதலிய பாத்திரங்களில் அவர் பாடிய பாடல்கள் இன்னும் என் நினைவை விட்டு அகலவில்லை. விருத்தங்கள் பாடும்போது அவர் ரசிகர்களிடத்தில் கரகோஷம் பெறுவார். இளம்பருவத்தின்றாகிய சுப்பிரமணியனின் அபாரமான இசைத் திறமை அந்த நாளில் எல்லோராலும் பாராட்டப் பெற்றது.

திண்டிவனத்தில் கண்டம்

திண்டிவனத்தில் எனக்கு ஒருபெரிய கண்டம் ஏற்பட்டது. ஒருநாள் ‘இலங்காதகனம்’ நாடகம் நடந்து கொண்டிருந்தது. தான் முதலில் இலட்சுமணனுகவும் கடைசியில் அட்சய குமாரனாகவும் நடிப்பது வழக்கம். அந்த நாளில் தனியே உட்கார்ந்து ஒருவரோடு ஒருவர் அரட்டையடிப்பது இல்லை. பெரும்பாலும் வேடம் புனையாத நேரங்களில் பக்கப் படுதாவின் அருகே நின்று நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருப்போம்.

அன்று கடல் காட்சியைப் போட்டுக்கொண்டிருந்தார்கள் முன்னல் காட்டுத் திரை விடப்பட்டிருந்தது. அனுமார் வானரங் களுடன் பாடிக் கொண்டிருந்தார்.நான் இலட்சுமண வேடத்தை கலைத்துவிட்டு, வெறும் உடம்போடு மேடையின் நடுவே நின்று காட்சி அமைப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது திண்டிவனத்தில் மின்சார விளக்குகள் இல்லை. கியாஸ் விளக்கு கள்தான் போடப்பட்டிருந்தன. மேடையில் காட்சி அமைப்பைப் பார்த்துக் கொண்டிருந்த என் தலைக்கு நேராக ஒரு கியாஸ் விளக்குக் கட்டப்பட்டிருந்தது. கடல் தாண்டும் ‘அட்டை அனுமாரை அங்குமிங்குமாக இழுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் சுவையோடு அந்தக்காட்சியை ரசித்துநின்றேன்.

யாரோ ஒரு காட்சி யமைப்பாளர் மேடையின் நடுவே: தொங்கிக் கொண்டிருந்த கியாஸ் விளக்கை மேலே தூக்கிக் கட்ட முயன்றிருக்கிறார், விளக்கோடிருந்த நூல்கயிறு பரண்மீது எங்கோ மூங்கிலில் சிக்கித் தேய்ந்து போயிருக்கிறது. அவர் விளக்கை வெட்டி இழுத்ததும் கயிறு அறுந்து போய்விட்டது. பெரிய கியாஸ் விளக்கு அப்படியே நேராகக் கீழேநின்ற என்மேல் விழுந்தது. நான் ‘அம்மா’ என்றலறிக் கீழேசாய்ந்தேன். விளக்கு. சுக்கல் சுக்கலாக உடைந்துவிட்டது.

தந்தையின் ஆவேசம்

என் அலறல் சத்தத்தைக் கேட்டதும் தந்தையார் ஓடி வந்தார். மேலே கட்டப்பட்டிருந்த கியாஸ் விளக்கு என்மேல் அறுந்து விழுந்து விட்டதையும், நான் கீழே கிடப்பதையும் கண்டார். ஆவேசம் கொண்டார். அதற்குள் சிலர் ஓடி வந்து என்னைத் துளக்கிச் சென்றார்கள். தந்தையார் தம்மையே மறந்து விட்டார். பவுடர் போடுமிடத்திலும் வெளியேயும் போடப் பட்டிருந்த கியாஸ் விளக்குகளைத் தம் கையாலேயே அடித்து உடைத்தார். அவரைப் பிடித்து நிறுத்தச் சிலர் பெரும் பாடுபட் டார்கள். எனக்குப் பெரிய அபாயம் ஏதுமில்லை யென்பதை விளக்கினார்கள்.

கியாஸ் விளக்கு என் தலையோடு உராய்ந்து கொண்டு இடது தோளில் விழுந்தது. விளக்கின் அடியிலிருந்த கம்பி ஆழ மாக என் தோளில் காயத்தை உண்டாக்கியது; இரத்தம் பீறிட் டது. நான் மூர்ச்சித்து விட்டேன். மேடையில் காற்றில்லாத தால் என்னை வெளியே தூக்கிவந்து கொட்டகையின் பிரதான வாயிலருகே ஒரு கட்டிலில் படுக்க வைத்தார்கள். அன்று நாடகம் பார்க்க வத்திருந்த ஒரு டாக்டர் எனக்குச் சிகிச்சை செய்தார். காயம் விரைவில் ஆறிவிடுமென்றும் பயப்பட வேண்டாமென்றும் என் தந்தைக்கு ஆறுதல் கூறினார்.

நான் மூர்ச்சை தெளிந்தபோது வெளியே கட்டிலில் படுத் திருந்தேன். நாடகம் பார்க்க வந்த ஜனங்களில் பலர் என்னைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள் நாடகம் நடந்து கொண் டிருத்தது. எனக்குப் பதிலாக அட்சயன் வேஷத்தை யாரோ ஒரு நடிகர் போட்டார். படுக்கையில் கிடந்த எனக்கு அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. நான் எழுந்து பார்த்தால் மேடை நன்றாகத் தெரியும். ஆனால் தந்தையார் என்னை எழுந்திருக்க விடவில்லை. நாடகம் முடியும் வரை அப்படியே படுத்திருந்தேன்.

வீட்டுக்கு வந்ததும் அன்னையார் எனக்குத் ‘திருஷ்டி’ சுற்றிப் போட்டார்கள். மயிலம் முருகப் பெருமான வேண்டிக் கொண்டார்கள். காயம் ஆறுவதற்கு ஒரு வாரம் ஆயிற்று. அம்மாவோடும் அப்பாவோடும் அருகிலிருந்த மயிலத்திற்குச் சென்று முருகப் பெருமானைத் தரிசித்து வந்தோம்.

வண்டிப் பாளையம்

திண்டிவனத்தில் இரண்டு மாத காலம் நாடகம் ஆடிய பின் திருப்பாதிரிப்புலியூருக்கு அருகிலுள்ள வண்டிபாளையம் சென்றாேம். வண்டிப்பாளையத்தில் நல்ல வசூல் இல்லை. திருப்பா திரிப்புலியூரிலேயே நாடகம் நடிக்க முதலாளிகள் முடிவு செய் தார்கள். அவ்வாறே உடனடியாகத் திருப்பாதிரிப்புலியூரில் நாடகம் துவக்கப்பட்டது. நல்ல வருவாயும் ஏற்பட்டது. அங்கு வீடு கிடைக்காததால் நாங்கள் வண்டிப்பாளையத்திலேயே இருப்தோம். நாடகத்திற்குப் போய் விட்டு, குதிரை வண்டியில் வண்டிப்பாளையம் திரும்புவோம். இப்படியே தொடர்ந்து நடை பெற்று வந்தது.

ஒருநாள் எங்கள் தந்தையாருக்கும், மானேஜர் நிலையி லிருந்த காமேஸ்வர ஐயருக்கும் பெரிய சச்சரவு ஏற்பட்டது. காமேஸ்வர ஐயர் ஏதோ தவருகப் பேச, தந்தையார்கொட்டகை யில் போட்டிருந்த பந்தல் காலைப் பிடுங்கிக்கொண்டு அவரை அடிக்கப்போக, ஒரே குழப்பம் ஏற்பட்டு விட்டது. ஐயரை எப்படியும் அடித்தே தீருவது என்று அப்பாவும் முத்துக்கன்னி மேஸ்திரியும் பலமுறை முயன்றார்கள்.

சின்னையா யிள்ளை வருகை

காமேஸ்வர ஐயர் நடிகர்களிடமும், ஏனைய தொழிலாளர் களிடமும் நடந்து கொண்டவிதம் தந்தையாருக்குப் பிடிக்க வில்லை.

உரிமையாளர்களும் இதில் போதிய கவனம் செலுத்த வில்லை. கம்பெனியின் முக்கிய பங்குதாரரான சின்னையாபிள்ளை சென்னையிலிருந்தது போனவர் திரும்பி வரவே இல்லை, காமேஸ் வர ஐயரின் நடத்தையைப் பற்றியும் அவர் தொழிலாளர்களிடம் நடந்து கொள்ளும் முறைகளைப் பற்றியும் தந்தையார் மதுரையி லிருந்த சின்னையாபிள்ளைக்குக் கடிதம் எழுதினார். கடிதத்திற்குப் பதில் இல்லாததால் ஒரு நாள் மதுரைக்கே நேரில் சென்று விவரங்களே எடுத்துரைத்தார். தந்தையார் மதுரைக்குச் சென் நிருப்பதை அறிந்ததுமே காமேஸ்வர ஐயர் கம்பெனியிலிருந்து விலகிவிட்டார். சகல விவரங்களையும் தந்தையாரின் மூலம் அறிந்த சின்னையாபிள்ளை சில நாட்களில் திருப்பாதிரிப்புலியூர் வந்து கம்பெனியின் நிருவாகத்தை ஏற்றுக் கொண்டார்.

திருப்பாதிரிப்புலியூரில் வசூல் இல்லாததால் மீண்டும் வேலூருக்கு முகாம் மாற்றப்பட்டது. வேலூரிலும் இம்முறை வசூலாகவில்லை. காஞ்சிபுரம் போவதென்று முடிவு செய்தார்கள். காஞ்சிபுரம் வந்தோம். கருடசேவைப் பெருவிழா, நகரில் பிர மாதமாக நடக்கும் சமயம். ஆடிசன்பேட்டை கொட்டகையில் நாடகம். வெளியே ஊரெங்கும் ஒரே ஜனத்திரள். நாடகத்திற்கு மட்டும் வசூல் மிகவும் மோசமாக இருந்தது. சின்னையா பிள்ளை வந்ததும் இந்த நிலை ஏற்படவே எல்லோரும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லையென்று பேசிக் கொண்டார்கள்.

மலேரியாவுக்கு மருத்துவம்

காஞ்சிபுரத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு சித்த மருத்துவர் குடியிருந்தார். சென்னையில் எங்களைப் பீடித்த காய்ச்சல் காஞ்சிபுரத்திலும் தலை காட்டியது. அந்த மருத்துவர் வந்து பார்த்தார். அவரிடம் நாங்கள் நீண்ட காலமாக உபாதைப் படும் நிலையைத் தந்தையார் எடுத்துச் சொன்னார் அவர் நன்கு சிந்தித்து ஏதோ ஒரு பச்சிலையை அரைத்துப் பெரிய உருண்டைகளாக்கி, நாள் ஒன்றுக்கு மூன்று வேலை சாப்பிடும் படியாக மூன்றுநாட்கள் தொடர்ந்து கொடுத்தார். காய்ச்சல் நின்றது. அன்று நின்றதோடு மட்டுமல்ல; இன்று வரை அந்த வேதனைக்குரிய மலேரியாக் காய்ச்சல் எனக்கு வருவதேயில்லை யென்பதை மகிழ்வோடு குறிப்பிட விரும்புகிறேன். சித்தமருத்து வத்தில் நம்பிக்கையில்லாத நண்பர்கள் இதுபற்றிச் சிந்திக்க வேண்டுகிறேன்.

காஞ்சிபுரத்தில் நாடகம் தொடர்ந்துநடைபெற்று வந்தது. திடீரென்று ஒருநாள் முக்கிய நடிகனக இருந்த ஏ. கே சுப்பிரமணியன் சொல்லாமல் ஒடிப்போய் விட்டார். நாடகம் நிறுத்தப் பட்டது. அவருக்குப் பதிலாக மீண்டும் எங்கிருந்தோ பாட்டா இராமகிருஷ்ணன அழைத்து வந்தார்கள். மழையும் அடிக்கடி பெய்ததால் சில நாட்கள் நாடகம் நிறுத்தப்படவும் நேர்ந்தது. காஞ்சிபுரம் யாருக்குமே வசூலாகாத ஊரென்று சிலபேர் ஊரின் மேல் பழி சுமத்தினார்கள்.

வசூல் இல்லாத நிலையில் நாடகங்கள் நடைபெற்று வந்தன. இந்தச் சமயத்தில் அப்பாவுக்குக் கால் பெருவிரலில் ஒரு விஷக்கல் குத்தியதால் சிறு காயம் ஏற்பட்டது. அதை அவர் அலட்சிய மாய் கவனியாது விட்டு விட்டார். சில நாட்களில் அந்தக் காயம் ரணமாகிச் சீழ் வடிய ஆரம்பித்தது. ரண வைத்தியர் ஒருவர் காயத்தைச் சோதித்துப் பார்த்தார். காயம் பட்ட இடத்திலிருந்த துவாரத்தில் ஒரு சிறு கம்பியைச் செலுத்தினார். அந்தக் கம்பி குதிங்கால் வரை வலியே யில்லாமல் உள்ளே போயிற்று பாதம் முழுதும் புறையோடி இருப்பதாகத் தெரிந் தது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்பா வலி பொறுக்க மாட்டாமல் படுக்கையில் கிடந்து சில நாட்கள் கஷ்டப்பட்டார். இதற்குள் காஞ்சீபுரம் நாடகம் முடிந்து விட்டதால் வைத்திய ரிடம் மருந்து வாங்கிக் கொண்டு சைதாப்பேட்டைக்குப் பயணப் பட நேர்ந்தது.

சைதாப்பேட்டை

கம்பெனி சைதாப் பேட்டைக்குப் போன மூன்று நாட் களுக்குப் பிறகு நாங்களும் சைதாப் பேட்டைக்கு வந்து சேர்ந் தோம். முதல் நாடகத்தன்று பெருமழை பெய்தது. நாடகம் நடைபெறவில்லை. மூன்று நாட்களுக்குப் பின் மீண்டும் நாடகம் துவக்கப் பெற்றது. வசூல் சுமாராக இருந்தது. எங்கள் ஒப் பந்தம் தீர்ந்து விட்டதால் மறுபடியும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமென உரிமையாளர்கள் வற்புறுத்தினார்கள். அப்பாவுக்கும் உழைப்புப் பங்காளியான பழனியாபிள்ளைக்கும் சிறு சிறு தகராறுகள் ஏற்பட்டுக் கொண்டே யிருந்ததால் மறு ஒப்பந்தம் எழுதுவது தடைப்பட்டது. பாட்டியின் முதல் ஆண்டுத் திதி அடுத்து வந்ததால் அதற்குக்குடும்பத்துடன் திருவனந்தபுரம் போய் வரவேண்டுமென்றும், அதன் பிறகு ஒப்பந்தம் எழுதிக் கொள்ளலாமென்றும் அப்பா கூறி விட்டார். அந்த நிலையில் எங்களை ஊருக்கு அனுப்ப சின்னையாபிள்ளை இசையவில்லை.

பால மனோகர சபை

சென்னை ராயல் தியேட்டரில் அப்போது திரு தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலரின் பால மனோகர சபையார் நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள். ராயல் தியேட்டர் என்பது அப்போது சென்னையில் இருந்த எல்லா நாடகக் கொட்டகை களிலும் சிறந்த ஒன்முகக் கருதப் பட்டது. ஆனைக்கவுனிக்கு மேற்புறமுள்ள பாலத்திற்குக் கீழ்ப்பக்கம், சால்ட்கொட்டகைக்கு அருகில் அமைந்திருந்தது. மிகப் பெரிய நாடக அரங்கம்.

அந்தக் காலத்தில் ஒரு கம்பெனியிலிருந்து. மற்றொரு கம்பெனிக்குப் பையன்களைக் கடத்திக் கொண்டுபோவது சாதாரணமாக நிகழ்ந்து வந்தது. இந்தத் திருப்பணிக்கென்றே சில தரகர் களும் நிரந்தரமாக இருந்து வந்தார்கள். நாங்கள் சைதாப் பேட்டைக்கு வந்த நாளிலிருந்தே பாவலரின் தரகர்கள் எங்களுக்கு வலைவீசத் தொடங்கினார்கள். ஒரு நாள் எங்களுக்கு நாடகமில்லாத நாளில் அப்பாவுடன் சென்னைக்குப் போய் பாவலர் கம்பெனியின் நாடகத்தைப் பார்த்து வந்தோம். பாவலர் குடிப்பழக்கம் உள்ளவர். எங்கள் தந்தையாரோ கேட்கவே வேண்டியதில்லை. இருவரும் மிக விரைவில் தோழமை கொண்டு விட்டார்கள்.

வலை வீசும் படலம்

‘பாவலர் கம்பெனிக்குப்போக வேண்டும்’ என்ற எண்ணத்தைத் தந்தையார் அன்னையாரிடம் தெரிவித்தார். அன்னையார் இந்த எண்ணத்தை வண்மையாக எதிர்த்தார். சுவாமிகள் வாய் பேச இயலாத நிலையில் படுக்கையிலிருக்கும் நேரத்தில் கம்பெனியை விட்டும் போவது நல்லதல்லவெனக் கண்டித்தார். தாயாரின் இந்த எண்ணத்தைப் பாவலர் அறிந்ததும், “தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் எனக்கும் குருவைப் போன்றவர். அவரையும் நானே சென்னைக்கு அழைத்து வந்து வேண்டிய சிகிச்சைகளைச் செய்கிறேன். அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று சமாதானம் கூறினார்.

ஒரு நாள் மாலையில் தந்தையார் சென்னைக்குச் சென்றார். எனக்கும் சின்னண்ணாவுக்கும் மட்டும் மாதம் இருநூற்றி ஐம்பது ரூபாய் சம்பளம் தருவதாகப் பாவலர் ஒப்புக் கொண்டார். 250 முன் பணமாகவும் கொடுத்தார். பெரியண்ணாவுக்கு அந்தச் சமயம் ‘மகரக் கட்டு’ வந்து சாரீரம் சரியில்லாதலால் அவரை வேடம் புனைய அப்பா அனுமதிக்கவில்லை. அப்போது சென்னையில் பாவலர் கம்பெனியில் பின் பாட்டுப் பாடும் வழக்கம் இல்லை. அதனால் அப்பாவுக்கும் வேலையில்லை. எங்கள் நால்வருக்கும் அப்பாவுமாகச் சேர்த்து 140 ரூபாய்கள் இங்கே சம்பளம். பாவலர் கம்பெனியில் எனக்கும் சின்னண்ணாவுக்குமே 250 சம்பளம்.

நூற்றிப் பத்து ரூபாய்கள் அதிக வரவு; எங்கள் வளர்ச்சியிலுள்ள ஆர்வம் எல்லாமாகச் சேர்ந்து தந்தையார் பாவலர் விரித்த வலையில் விழுந்து விட்டார். ஒருநாள் இரவு சைதாப் பேட்டையில் ‘சுலோசனா சதி’ நாடகம் முடிந்ததும் இரவு மூன்று மணி சுமாருக்கு பாவலர் அனுப்பியிருந்த காரில் நாங்கள் எல்லோரும் புறப்பட்டோம். சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள பாவலர் வீட்டுக்கு வந்து இரவோடிவராகக் குடியேறினோம். தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையிலிருந்து 1922 ஆகஸ்டு 3 ஆம் நாள் இரவு பாவலரின் பால மனோகர சபாவுக்கு வந்து சேர்ந்தோம்.

பாவலரின் திறமை

நாங்கள் வந்த இரண்டாம் நாள் ‘கதரின் வெற்றி’ நாடகம் வைக்கப்பட்டிருந்தது. அன்றைய நாடகத்திற்குச் சர்க்காரின் அனுமதி கிடைக்கவில்லை. பாவலர் காலையிலிருந்து படாத பாடு பட்டார். முன்னாள் இரவே டிராம் வண்டிகளில் பிரமாதமாக விளம்பரங்கள் கட்டப்பட்டுப் புறப்படத் தயாராய் இருந்தன. பாவலர் நேராகக் கவர்னரிடமே சென்றார். அப்போது ராஜதானியின் கவர்னராக இருந்தவர் லார்டு வெலிங்டன். பாவலர் சாரணர் படையில் ஒரு தளபதியாக இருந்தார். அந்தச் சலுகையில் எப்படியோ கவர்னரிடமே விசேஷ அனுமதி பெற்று வந்து விட்டார். பகல் 12மணிக்கு மேல் விளம்பரம் செய்யப் பட்டது. கதரின் வெற்றி நாடகம் சிறப்பாக நடைபெற்றது. அமோகமான வசூல். பாவலரை எல்லோரும் புகழ்ந்தார்கள். அன்று நடைபெற்ற கதரின் வெற்றி நாடகத்தில் நாங்கள் நடிக்கவில்லை.

புதிய நாடகங்கள் தயாரான வேகம்

மறுநாள் சுவாமிகளின் ‘சதியனுசூயா’ நாடகம் பாடம் கொடுக்கப்பட்டது. தந்தையாரும் பெரியண்ணாவும் எல்லாப் பாடங்களையும் எழுதிக் கொடுத்தார்கள். நடிகர்கள் மிகவிரைவில் நெட்டுருப் பண்ணிவிட்டார்கள். நாங்கள் வந்து சேர்ந்த ஒன்பதாவது நாள் சனி, ஞாயிறு இரு நாட்களிலும் ‘சதியனுகுயா’ நாடகம் நடத்தப் பெற்றது. ஒரு புதிய நாடகத்தை ஒன்பதே நாட்களில் அரங்கேற்றுவதென்பது வியப்புக்குறிய செய்தி யல்லவா? எங்களுக்கே வியப்பாகத்தான் இருந்தது. அந்த நாளிலிருந்த நடிகர்களின் நினைவாற்றலை எண்ணி அதிசயிக்கவேண்டியதாக இருக்கிறது. இந்த நாளில் குறைந்த பட்சம் பதினைந்து நாட்களாவது ஒத்திகை நடைபெற்றால்தான் சில நடிகர்களுக்குப் பாடமே நெட்டுருவாகும். அந்தக் காலத்தில் நடிகர்களுக்கு. நாடகம், நடிப்பு, வேடம் இவற்றைப்பற்றியே சிந்தனை. இந்தக் காலத்தில் நடிகர்களுக்கு எத்தனை எத்தனையோ சிந்தனைகள்! என்ன செய்ய முடியும்?

பர்த்ருஹரி

அப்போது சென்னையில் ‘பர்த்ருஹரி’ என்னும் ஒரு மெளனப்படம் ஒடிக்கொண்டிருந்தது. பாவலர் அந்தக் கதையை நாடகமாக நடிக்க விரும்பினார். நாலைந்து இரவுகள் சிரமப்பட்டு நாடகத்தை எழுதி முடித்தார். எல்லோருக்கும் பாடம் கொடுத்தார். எனக்கு விக்ரமன் பாடமும், சின்னண்ணா டி. கே. முத்துசாமிக்கு மோகன பாடமும் கொடுக்கப்பட்டது. நடிப்புப் பயிற்சி யளிப்பதற்குக்கூடப் போதிய நாட்கள் இல்லை. நடிகர்கள் எல்லோரையும் ஒரு நாள் படம்பார்க்க அழைத்துப்போனார். ஏறத்தாழப் படக்கதையை யனுசரித்தே நாடகமும் எழுதப்பட்டிருந்ததால் பாவலர் எங்கள் அருகில் இருந்து படத்தில் நடிப்பவர்களைப் போலவே நடிக்கவேண்டும் என்று கூறினார். நாங்களும் உன்னிப்பாக அந்த ஊமைப் படத்தைப் பார்த்தோம். ஒரே நாள் ஒத்திகை நடந்தது. சதியனுகுயா நடைபெற்ற. ஆறாவது நாள் பர்த்ருஹரி நாடகம் அரங்கேறியது. அப்போது சென்னையில் பர்த்ருஹரி படமும் ஒடிக்கொண்டிருந்ததால் ஊமைப் படத்தைவிட நாடகத்திற்கு அமோகமான வருவாய்’ ஏற்பட்டது. எல்லோரும் பாவலரின் அபாரமான ஆற்றலை வியந்து புகழ்ந்தார்கள்.

தேசீயப் புரட்சி நாடகம்

‘கதரின் வெற்றி’ ஒரு தேசியப்புரட்சி நாடகம். தமிழ்: நாட்டில் முதன் முதலாக நடைபெற்ற தேசீய சமூக நாடகம். அந்த நாடகத்தில் சின்னண்ணாவுக்குக் கதாநாயகி மரகதம்: வேடமும், எனக்கு வக்கீல் வேடமும் கொடுத்தார்கள். சின்னண்ணா கைராட்டையைச் சுற்றிக்கொண்டு பாடும் ஒரு பாடல் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

பாவலரின் இந்தப் பாடலைச் சின்னண்ணா மரகதமாக வந்து பாடும்போது சபையோர் நீண்ட நேரம் கைதட்டிக் கொண்டே யிருப்பார்கள். நாடகத்தில் இரண்டொரு பாத்திரங்களைத் தவிர எல்லோரும் கதராடைகளையே புனைந்து வருவார்கள். நாடகம் முழுதும் கதர் பிரசாரமாகத்தான் இருக்கும்.

பாவலரின் அவதானம்

பாவலர் அபாரமான நினைவாற்றலுடையவர். மிகச் சிறந்த முறையில் அவதானம் செய்யக் கூடியவர். ‘சதாவதானம் பாவலர்’ என்றே அவரைக் குறிப்பிடுவார்கள். எட்டுப்பேருடைய கேள்விகளுக்கு விடை சொல்லுபவரை ‘அட்டாவதானி’ என்றும், பத்துப் பேருக்கு விடை சொல்லுபவரைத் ‘தசாவதானி’ என்றும், பதினாறு பேருக்கு விடை சொல்லுபவரைச் ‘சோடசாவதானி’ என்றும், நூறு பேருக்கு விடை சொல்லுபவரைச் ‘சதாவதானி’ என்றும், குறிப்பது வழக்கம். இக்கலையில் தேர்ச்சி பெற்றோர் இப்போது மிகக் குறைந்துவிட்டார்கள். பாவலர் இந்தக்கலையை நன்கு பயின்றிருந்தமையாம் நாங்கள் எல்லோரும் அவரை அவதானம் செய்து காண்பிக்குமாறு வேண்டினோம். சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள கம்பெனி வீட்டில் ஒருநாள் வேடிக்கையாகத் தசாவதானம் நடைபெற்றது. நான் பாவலரின் முதுகின் பக்கமாக இருந்து உளுந்தம்பருப்பை ஒவ்வொன்முக அவரது முதுகில் எறியும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். சின்னண்ணா எதிரிலிருந்த கதவைப் பூட்டித் திறக்கும் பணியை ஏற்றுக்கொண்டார். மற்றும் பல நடிகர்கள் பலவிதமான பொறுப்புக்களை ஏற்றார்கள். சுமார் ஒருமணி நேரம் அவதானம் நடைபெற்றது. நான் எத்தனை உளுந்துகள் முதுகில் எறிந்தேன் என்பதையும், சின்னண்ணா எத்தனை முறை பூட்டுத் துவாரத்தில் சாவியைப் புகுத்தினார் என்பதையும், பாவலர் சரியாகச் சொன்னபோது எங்களுக்கெல்லாம் பெரு வியப்பாக இருந்தது. இதைப் படிப்பவர்களில் சிலருக்கு அவதானம் என்றாலே என்னவென்று புரியாதென நினைக்கிறேன். அதை விரிவாக விளக்குவது கடினம். அவதானத்தின் இலக்கணத்தைப் பற்றிச் சரவணப்பெருமாள் கவிராயர் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.அந்தப் பாடலின் ஒரு பகுதியை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன்.

இப்படியே இன்னும் பலவகையான அற்புதச் செயல்களையெல் லாம் நினைவாற்றலோடு செய்ய வேண்டும். அவதானம் செய்வோர் சபைக்குத் தக்கவாறு தம் செயல்களை மாற்றிக் கொள்வதும் உண்டு. இது ஒர் அபூர்வமான கலை, காகர்கோவில் ஆறுமுகம்பிள்ளை தசாவதானம் செய்வதை நான் இருமுறைபார்த் திருக்கிறேன். அபாரமான திறமை, நினைவாற்றல் இவற்றோடு கடவுளின் திருவருளும் இருந்தால்தான் இந்தக் கலையில் வெற்றி பெற முடியும் என்பது என் நம்பிக்கை.

சிந்தாதிரிப்பேட்டையில் கம்பெனி வீட்டோடு இருந்தது எங்கள் தாயாருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் கொஞ்சம் வைதீக மனப்பான்மை உள்ளவர்கள். வேறு தனி வீட்டுக்குப் போக வேண்டுமெனப் பிடிவாதம் செய்தார்கள். வேறு வழியின்றி ஆனைக்கவுணி யருகில் ஒரு ஒட்டுக் குடித்தனத்தில் ஒரு தனிவீடு பார்க்கப்பட்டது. நாங்கள் அந்த அந்த வீட்டில் குடியேறியதும் பாவலரும் கம்பெனி வீட்டை மாற்றிக்கொண்டு ஆனைக் கவுணிக்கே வந்துவிட்டார். எங்களை அதிக தூரத்தில் தங்கவிடக் கூடாதென்பது அவர் எண்ணம்போல் தோன்றியது.

மனோஹரா

ஆனைக்கவுணி வீட்டுக்கு வந்ததும் நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் ‘மனோஹரா’ நாடகம் பாடம் கொடுக்கப்பெற்றது. எனக்கு மனேஹரன் பாடமும் சின்னண்ணாவுக்கு வசந்தசேன பாடமும் கொடுத்தார்கள். தொடர்ந்து ஒத்திகை நடைபெற்றது. பாவலர் மிகச்சிறந்த முறையில் எனக்கு நடிப்புப் பயிற்சியளித்தார். அவர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் சென்னை சுகுண விலாச சபையில் சில காலம் நடிகராக இருந்தவர். முதலியாரவர்கள் மனேஹரனாக நடித்தபோது பாவலர் ராஜப்பிரியனாக நடித்திருக்கிறார்.

மனோஹரா ஒத்திகை நடந்துகொண்டிருக்கும் பொழுதே சுவாமிகளின் அபிமன்யு சுந்தரி நாடகம் பாடம் கொடுக்கப் பெற்று அரங்கேறியது. அந்நாடகத்தில் என் நடிப்பைப் பார்த்த பாவலர் என்னைப் பாராட்டி உற்சாகப்படுத்தினார். மனோஹரன் நாடகத்திற்கு மிகப் பெரிய சுவரொட்டிகள் அச்சிட்டு, சென்னை நகரெங்கும் ஒட்டச் செய்தார். பிரமாதமாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. முதல் நாடகத்திற்கு மனோஹரா நாடகத்தை எழுதிய பம்மல் சம்பந்த முதலியார் அவர்களையே தலைமை தாங்கச் செய்தார். தொடர்ந்து ஒத்திகை நடைபெற்று வந்ததால் நாடகத்தன்று எனக்குத் தொண்டை கட்டிக்கொண்டது. பாவலர் என்னைத் தட்டிக் கொடுத்துப் பயப்படாமல் நடிக்கச் சொன்னார்.

நாங்கள் வேடம் புனைந்து கொண்டிருக்கும்பொழுது பம்மல் சம்பந்த முதலியார் அவர்களையும் அவருடன் கதாநாயகியாக நடிக்கும் திரு. ரங்கவடிவேலு முதலியாரையும் பாவலர் உள்ளே அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். நாங்கள் பெருமகிழ்ச்சி யடைந்தோம். எனக்கும், அன்று விஜயாளாக வேடம் புனைந்த தருமலிங்கத்திற்கும் ரங்கவடிவேலு முதலியார் பக்கத்தில் நின்று ஒப்பனை செய்வதில் உதவி புரிந்தார். பம்மல் சம்பந்தனார் பாராட்டுரை

1922 அக்டோபர் 7-ஆம் நாள் மனோஹரன் நாடகம் பம்மல் சம்பந்த முதலியார் தலைமையில் சிறப்பாக அரங்கேறியது. மஞேஹரனில் முக்கிய கட்டமான சங்கிலி அறுக்கும் காட்சி முடிந்ததும் பாவலர் ஓடிவந்து, கீழே கிடந்த என்னைத் தூக்கி முத்தமிட்டுப் பாராட்டினார். தலைமை தாங்கிய பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் கீழ்வருமாறு ஆக்கிலத்தில் பேசினார்.

“சீமாட்டிகளே, சீமான்களே! நான் எழுதிய நாடகங்கள் யாவற்றிலும் ‘மனேஹரா’ மிகவும் உயர்ந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இந் நாடகத்தைச் சென்ற இருபத்தைந்து ஆண்டுகளாக எங்கள் சுகுண விலாச சபையில் நானே மனோஹரனாக வேடம் பூண்டு நடித்துவருகிறேன். சிறந்த நடிகர்கள். பலர் மஞேஹரனாக வேடம் தரித்து நடிப்பதையும் நானே நேரில் பார்த்திருக்கிறேன். எனக்கோ வயதாகி விட்டது. முதுமைப் பருவத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். வீர மனோகரனக நடிப்பதற்குரிய வலிமை குறைந்து வருகிறது. நான் நாடகத் துறையிலிருந்து ஒய்வு பெறும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இன்றிரவு மாஸ்டர் டி. கே. ஷண்முகம் மனோகரனாக நடித்ததைப் பார்த்ததும் என்மனதிற்குச் சாந்தியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. நான் வெகுநாட்களாக ஆவலோடு எதிர்ப்பார்த்திருத்த ஓர் உத்தமநடிகர் தோன்றிவிட்டார் என்பதை இந்த இளஞ்சிறுவருடைய நடிப்பு வெளிப் படுத்தியது. கடவுள் இச்சிறியவருக்கு நீண்ட ஆயுளையும் நாடகக் கலைத்துறையிலும் மேன்மலும் வளர்ச்சியையும் சிறப்பையும் தருவாராக.”

நாடகப் பேராசிரியர் பேசியதை யெல்லாம் பாவலர் தமிழில் மொழி பெயர்த்து எனக்குச்சொன்னார். முதலியார் அவர்கள்பேசி முடித்து உள்ளே வந்ததும்நான் அவரது பாதங்களில்பணிந்தேன். பேராசிரியர் என்னை மகிழ்வோடு கட்டிக்கொண்டு உச்சிமோந்து வாழ்த்தினார்.

போட்டாப் போட்டி

அப்போது ஒற்றைவாடைத்தியேட்டரில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் பாவலர் கம்பெனியில் ‘அதிரூப அமராவதி’ நாடகம் நடத்தி முடித்து விட்டு நாங்கள் எல்லோரும் ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனியின் சதியனுசூயா நாடகம் பார்க்கச்சென்றோம். செவ்வாய், வியாழக் கிழமைகளில் நடைபெறும் நாடகங்களைப் பாவலர் நடிகர்களின் விருப்பத்திற்கே விட்டுவிடுவார். சில நாட்களில் நாடகம் மிக விரைவில் முடிந்துவிடும். ‘சரச சல்லாப உல்லாச மனேரஞ்சனி’ என்று ஒரு நாடகம் நடந்தது. அதில் நான் மனோரஞ்சனியாக நடித்தேன். நடிகர்களே திட்டமிட்டு நடத்தும் இந்த நாடகங்களுக்குப் பெரும்பாலும் நல்ல வசூலானதில்லை.

நாங்கள் மனோகரா நாடகம் போட்ட அன்று ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியிலும் மனோகரா நடைபெற்றது. அப்போது அங்கு மனோஹரனாக நடித்தவர் எம். ஜி. தண்டபாணி. அவர் 1920ல் சுவாமிகள் கம்பெனியில் எங்களோடு இருந்தவர். அவருக்கு என்னைவிட நாலைந்துவயது அதிகமிருக்கலாம். ‘வெங்கலத்வனி’ எம். ஜி. தண்டபாணி- பால மனோகரன்’ என்று ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனுயார் விளம்பரம் செய்தார்கள். உடனே பாவலர், யார் பால மனோகரன்? பால மனோகரா சபா எது?” என்ற கேள்வியுடன் ஒரு விளம்பர அறிக்கை விட்டார் அதில், “பால மனோகர சபாவின் நிகரற்ற பால மனோகரன் மாஸ்டர் டி. கே. ஷண்முகம்” எனக் குறிப்பிட்டார். இரு கம்பெனியாருக்கும் விளம்பர அறிக்கைகளிலேயே விவாதம் நடந்தது. மனோகரா போட்டாப் போட்டி நாடகமாக விளங்கியது. மறுவாரம் நடை பெற்ற மனோஹரா நாடகத்தில் பம்மல் சம்பந்தமுதலியார் எனக்கு ஒரு தங்கப்பதக்கம் பரிசளித்தார். இந்து, சுதேசமித்திரன் இரு பத்திரிகைகளிலும் ‘தங்கப் பதக்கம் பரிசளிப்பு’ என்ற தலைப்பில் இச்செய்தி பிரமாதமாக வெளியிடப் பெற்றது. நாங்கள் பெருமகிழ்ச்சியில் திளைத்திருந்தோம்.

சுவாமிகளின் நிலை

நாங்கள் சைதாப்பேட்டையிலிருந்து இரவோடிரவாகச் சென்னைக்கு வந்த மறுநாள், செய்தி எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இரண்டு நாட்கள் நாடகம் நடைபெறவில்லை. தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை தள்ளாடியது. பிறகு வேறு யார் யாரையோ எங்களுக்குப் பதிலாக போட்டு நாடகத்தை தொடர்ந்து நடத்தினார்கள். வசூல் மிகவும் மோசமாகப் போய் விட்டது. கம்பெனியின் நிலையைக் கண்ட மற்றுஞ் சில நடிகர்கள் கம்பெனியிலிருந்து விலகிக் கொண்டார்கள். உரிமையாளர்களில் ஒருவரான சின்னையாபிள்ளை பணம் கொண்டுவருவதாகச் சொல்லி மதுரைக்குப் போப்விட்டார். பழனியாபிள்ளை எப்படியோ சமாளித்து ஆசிரியர் கே. ஜி. குப்புசாமிநாயுடுவின் உதவியால் கம்பெனியைச் சைதாபேட்டையிலிருந்து பூவிருந்தவல்லிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார். பூவிருந்தவல்லியில் நாடகம் நடத்தினார்கள். அங்கும் வசூல் இல்லை. நிலைமை மிகவும் நெருக்கடியாய்விட்டது. அன்றாடச் சாப்பாட்டுக்குக்கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார்கள். எதிர்பாராத இச் சிரமங்களால் சுவாமிகளின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அவரைக் கவனிப்பதிலும் அசிரத்தை ஏற்பட்டது. அவ்வப்போது சுவாமிகளைக் காண வந்த பெரியவர்கள் சிலரிடம் அவர் தமது கைகளால் சாடைகாட்டி, இரண்டு பையன்கள் இருந்தார்கள்; அவர்கள் ஓடிப்போய் விட்டார்கள்; அதனால் வசூல் இல்லை, கஷ்டப்படுகிறேன்” என்று மனம் நொந்ததாக அறிந்தோம்.

அன்னையின் வெற்றி

ஆனைக்கவுணிக்கு வீடு மாறி வத்தபின் குப்புசாமி நாயுடுவின் மனைவியார் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வரத்தொடங்கினார்கள். அவர்கள் மூலம் இச்செய்திகளையெல்லாம் அறிந்தோம். சுவாமிகளின் நிலையைத் தெரிந்ததும் எங்கள் தாயார் மிகவும் வேதனைப்பட்டார்கள். எண்ணத்தை வாய்விட்டுச் சொல்ல முடியாத நிலையில் சுவாமிகளின் மனம் எவ்வளவு வேதனை யடையும் என்பதை எண்ணி யெண்ணி உருகினார்கள். ஒருநாள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இதுபற்றிப் பலத்த விவாதம் நடந்தது. பாவலர் கம்பெனியில் நாங்கள் பெரும் புகழுடன் சீரும் சிறப்புமாக இருந்து வருவதை அப்பா எடுத்துக் கூறினார். மீண்டும் பழைய கம்பெனிக்குப் போய்ச் சிரமப்பட வேண்டுமா?’ என்று கேட்டார். அப்பாவின் எந்தச் சமாதானமும் அம்மாவைத் திருப்திப் படுத்தவில்லை. “என் குழந்தை களுக்குக் குரு சாபம் பிடித்துவிடும், பொருள் புகழ் இல்லாது போனாலும் குழந்தைகளுக்கு எதுவும் நேராதிருக்க வேண்டும். உடனே எப்படியாவது சுவாமிகள் கம்பெனிக்கே போய்விட வேண்டும்’ என்று சொல்லி, அம்மா அழ ஆரம்பித்து விட்டார்கள். அப்பாவின் எண்ணமும் மாறியது. தாய்மை யுணர்ச்சி. வெற்றிபெற்றது. நாயுடுவின் மனைவியாரிடம் மீண்டும் கம்பெனிக்கு வந்துவிடுவதாகத் தகவல் சொல்லியனுப்பினார் தந்தையார். குப்புசாமி நாயுடு பெரு முயற்சி செய்து பூவிருந்த வல்லியிலிருந்து கம்பெனியைத் தம் சொந்த ஊராகிய பாண்டிச்சேரிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார். எங்கள் வருகையை எதிர்பார்த்துக் கொண்டு கம்பெனியார் காத்திருந்தார்கள்.

அப்பா எங்களையும் அழைத்துக் கொண்டு திருவனந்தபுரம் போய் வர வேண்டுமென்று பாவலரிடம் விடுமுறை கேட்டார். அத்தோடு சுவாமிகள் மிகவும் அபாயமான நிலையில் இருப்பதால் அவரையும் பார்த்து வரவேண்டுமெனக் கூறினார். கம்பெனியில் புகழும் பொருளும் ஓங்கி உச்ச நிலையடைந்திருக்கும் அந்த நேரத்தில், நாங்கள் போகக் கூடாதென்று பாவலர் கண்டிப்பாக மறுத்துவிட்டார். முன் பணமாகக் கொடுத்த 250 ரூபாய்களைக் கழித்துக் கொள்ளாமலேயே மாதச் சம்பளத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வந்தார். ஜனவரி மாதம் முடிந்தபின் விடுமுறை அளிப்பதாயும் அப்போது ஊருக்குப் போய் வரலாமென்றும், மேலும் பணம் தேவைப்பட்டால் கொடுப்பதாகவும் கூறி விட்டார். அப்பாவின் நிலை தருமசங்கடமாகி விட்டது.

பாவலர் கம்பெனி நடிகர்கள்

பாவலர் கம்பெனியில் அப்போது இருந்த சில முக்கிய நடிகர்களைப்பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

கதாநாயகர்கள் இரண்டுபேர் இருந்தார்கள். ஒருவர் ஏ. என். ராஜன், மற்றொருவர் டி. எம். மருதப்பா. இவ்விருவரும் இரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்கள். ஏ. என். ராஜன் அருமையாகப் பாடக் கூடியவர். டி. எம். மருதப்பா திறமையாக நடிக்கக் கூடியவர். பர்த்ருஹரி நாடகத்தில் ஏ. என் ராஜன் பர்த்ருஹரியாக நடிப்பார். மனோகரன் நாடகத்தில் டி. எம். மருதப்பா புருஷோத்தமனக நடிப்பார். கதரின் வெற்றி யில் கதாநாயகன் சுந்தரம் வேடத்தை இருவரும் திறம்பட நடிப்பார்கள்.

தருமலிங்கம் என்ற ஒருவர் இருந்தார். அவருக்கு என்னுடைய வயதுதான் இருக்கும். அபிமன்யு சுந்தரியில் சுந்தரி யாகவும், மனோஹரனில் விஜயாளாகவும் அற்புதமாக நடிப்பார். நல்ல இசை ஞானமுடையவர். இனிமையான குரல். அருமையாகப் பாடுவார். சில ஆண்டுகளுக்குப் பின் நாங்கள் சொந்தக் கம்பெனி நடத்திய பொழுது, தருமலிங்கம் எங்கள் கம்பெனியிலும் சில காலம் இருந்திருக்கிறார்.

கொண்டிக் கை சுவாமிநாதன்

சுவாமிநாதன் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர். அவரை ‘கொண்டிக் கை சுவாமிநாதன்’ என்றுதான் எல்லோரும் குறிப்பிடுவார்கள். அவருடைய கைகளில் ஒன்று கொஞ்சம் ஊனமா யிருந்தது. இவருடைய உடன் பிறந்த தமையனார் திரு பக்கிரி சாமிப் பிள்ளை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில்சிறந்த நகைச் சுவை நடிகராக விளங்கினார். சகோதரர்கள் இருவரில் ஒருவர் பாய்ஸ் கம்பெனியிலும், மற்றொருவர் பாவலர் கம்பெனியிலுமாக இருந்தது, அப்போது எங்களுக்குப் புதுமையாகத் தோன்றியது. நொண்டிக் கை சுவாமிநாதன் மேடைக்கு வந்தவுடனேயே சபையோர் சிரித்து விடுவார்கள். அவர் செய்வதெல்லாம் கொனஷ்டையாகவே இருக்கும். கதரின் வெற்றியில் இன்ஸ் பெக்டராக வந்து அவர் செய்யும் அட்டகாசங்களே இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

ஒரு நாள், கதரின் வெற்றி நீதிமன்றக் காட்சியில் நொண்டிக்கை சுவாமிநாதன் இன்ஸ்பெக்டராக வந்து வாக்கு மூலம் கொடுத்தார். நான் கோடம்பாக்கத்தில் என்று அவர் பேசத் தொடங்கியதும், மூக்கில் சொருகியிருந்க கம்பிமீசை கீழே விழுந்துவிட்டது. வக்கீலாக நின்ற எனக்குச் சிரிப்புத் தாங்க வில்லை, சபையோர் கைதட்டிச் சிரித்தார்கள். அதற்காக அவர் ஒன்றும் பதற்றமடைய வில்லை. இன்ஸ்பெக்டர் எவ்வித பரப் பரப்பும் இல்லாமல் சாவாசமாகக் குனிந்தார். கீழேகிடந்த மீசையை எடுத்தார். கைக்குட்டையால் அதைத் தட்டினார். மீண்டும் மூக்கில் சொருகிக் கொண்டு பேசத் தொடங்கினார். வேறு எவ்வித உணர்ச்சியையும் அவர் காட்டாமல் அமைதியாக இதைச் செய்ததால் சபையோரின் சிரிப்பு அடங்க வெகு நேர மாயிற்று. மனோகரன் நாடகத்தில் வசந்தனாக அவர் நடிப்பார். “கல்லாசனத்தின் கீழே உட்கார்ந்து, முதுகு வளைந்து போய் விட்டது” என்று வசந்தன் சொல்லும்போது உண்மையாகவே முதுகு வளைந்து போனதுபோல் நடித்துக் காட்டுவார். அவர் உடம்பு, சொல்லுகிறபடி யெல்லாம் வளையும்.

பாயாசமும் பார்த்த சாரதியும்

துரைக்கண்ணு என்று மற்றொரு இளம் ஹாஸ்ய நடிகர் இருந்தார். அவர் கதரின் வெற்றியில் வேலையாளாக நடிப்பார். அவரைப் ‘பாயாசம்’ என்றே சபையோர் குறிப்பிடுவார்கள். பாயாசப் பைத்தியம் பிடித்த வேலைக்காரனாக அவர் நடிப்பதை மக்கள் பெருமகிழ்வோடு பாராட்டுவார்கள் எந்த நாடகத்தில், என்ன வேடத்தில், அவர் வந்தாலும் ஜனங்களில் சிலர் ‘பாயாசம், பாயாசம்’ என்று அவருக்குப் பட்டம் சூட்டிக் கூப்பிடுவது வழக்கம்.

மற்றொரு நடிகர் பார்த்தசாரதி. இவர் பெண் வேடம் பூண்டு நடிப்பவர். பெரும்பாலும் சோகச் சுவைப் பாத்திரங்களிலே தோன்றித் திறமையாக நடிக்கக் கூடியவர்.மனோஹரனில் பத்மாவதியாக நடிப்பார். பார்த்தசாரதி பிற்காலத்தில் பல அரசியல் கட்சிகளிலும் பத்திரிக்கைத் துறையிலும் இருந்தபோது பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இப்போது இவர் திராவிட முன் னேற்றக்கழகத்தில் இருந்து வருகிறார்.

பாவலரின் சந்தேகம்

தந்தையார் விடுமுறைக் கேட்டது முதல் பாவலருக்கு எங்கள் மேல் சந்தேகம் உண்டாகிவிட்டது. எங்களோடு ஒட்டுக் குடித்தனத்திலிருந்த சிலரிடம் நாங்கள் திடீரென்று எங்காவது புறப்பட்டால் உடனே தகவல் கொடுக்கும்படியாக ரகசியமாகச் சொல்லிவைத்தார். இது தந்தையாருக்குத் தெரிந்துவிட்டது. அந்த வீடு வசதியில்லையென்றும் வேறு வீடு பார்க்கவேண்டு மென்றும் தந்தையார் எல்லோருடைய காதிலும் விழும்படியாக அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு வாரத்திற்குப் பின் செங்காங்கடைப் பக்கம் ஏதோ வீடு கிடைத்து விட்டதாகச் சொன்னார். நாங்கள் நாடகத்திற்குப் போனபின் பெரியண்ணா அம்மாவையும் அழைத்துக்கொண்டு புது வீட்டுக்குப் போய்விட வேண்டுமென்றும், தாம் நாடகம் முடிந்து நேரே புது வீட்டுக்கு வந்துவிடுவதாகவும் சந்தேகப்படாத முறையில் சொல்லிவிட்டுத் தந்தையார், எங்களையும் அழைத்துக் கொண்டு ராயல் தியேட்டருக்கு வந்தார்.

பாண்டிக்கு ஒடினோம்

1922 அக்டோபர் 15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை. அன்று ‘அபிமன்யு சுந்தரி’ மாலை நாடகம். சர் சி. பி. இராமசாமி ஜயர் தலைமை தாங்கினார். அவர் அப்போது கவர்னரின் நிருவாக சபையில் முதல் மெம்பராக இருந்தார். சர் சி. பி. நாடகத்தைப் பாராட்டிப் பேசினார். பாவலர், சி. பி. கையால் எனக்கு ஒரு தங்கப் பதக்கம் பரிசளிக்கச் செய்தார். நாடகம் சிறப்பாக நடந்து முடிந்தது. தந்தையாரின் முன்னேற்பாட்டின்படி பெரியண்ணா அம்மாவுடன் சூளையிலுள்ள கே. ஜி. குப்புசாமி நாயிடுவின் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்று விட்டார். நாடகம் முடிந்ததும் நாங்கள் நேராகச் சூளை வீட்டிற்குச் வந்து சேர்ந்தோம். இரவு உணவுக்குப்பின் எல்லோரும் காரில் சைதாப்பேட்டைக்கு வந்து, அங்கிருந்து ரயிலேறி மறுநாள் காலை பாண்டிச்சேரியை அடைந்தோம்.

சுவாமிகளைக் கண்டோம்

மறுநாள் காலை கம்பெனி வீட்டிற்குச் சென்று சுவாமிகளைக் கண்டோம். கீழே விழுந்து வணங்கினோம். சுவாமிகளின் கண்கள் கலங்கின. சிறிது நேரம் அமைதியாக நின்றோம். எங்களுக்கும் அழுகை வந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டோம். சுவாமிகள் ஏதேதோ சொல்ல விரும்பினார். வாய் பேச இயலாத நிலையில் அவரது கண்கள்தாம், எண்ணங்களை வெளிப்படுத்தின. நீண்ட நேரத்திற்குப் பின் சுவாமிகள் புன்முறுவல் செய்தார்.

இரண்டு நாட்களில் பாண்டிச்சேரியில் நாடகம் தொடங்கியது. வருவாயும் சுமாராக இருந்தது. விளக்கு அணையும்போது ஒளி விடுவது இயற்கையல்லவா? அதைப்போலச் சுவாமிகளுக்கு ஒரு நாள் திடீரென்று, பக்கவாதத்தினால் முடக்கப்பட்டிருந்த காலும் கையும், நிமிர்ந்து நின்றன. ஒரு சில நிமிடங்கள்தான். மீண்டும் பழைய நிலையையே அடைந்தார். இறுதி நாட்களில் சுவாமிகள் பட்ட கஷ்டத்தை எடுத்துச் சொல்வதே கடினம். எல்லாம் படுக்கையிலேதாம் நடைபெற்றன. கோட்டயம் கோபாலபிள்ளையும், பாண்டிச்சேரி குப்புசாமியும் ஒரு குழந்தையைக் காத்துப் பராமரிப்பது போல் சுவாமிகளுக்கு அன்புடன் பணிவிடை செய்து வந்தார்கள். அவ்விரு பணியாளர்களின் உண்மையான சேவையை எல்லோரும் புகழ்ந்தார்கள்.

பருவுடல் மறைந்தது.

1922 நவம்பர் 13 ஆம் நாள், சுவாமிகளின் நிலை நெருக்கடி யாய் விட்டது. எல்லோரும் பதறினார்கள். அன்று திங்கட்கிழமை. சுவாமிகளுக்கு மிகவும் பிடித்தமான புனித நாள். வழக்கம் போல் பஜனை நடைபெற்றது. இரவு 11 மணிக்கு, சுவாமிகளின் ஆவி அமைதியாகப் பிரிந்தது.

தமிழ் நாடகத்தாய் பெறற்கரிய புதல்வனை இழந்தாள்; தமிழ் நடிகர்கள் தங்கள் தந்தைக்கொப்பான பேராசிரியரை இழந்தனர்; கலையுலகம் ஓர் ஒப்பற்ற மாமேதையை இழந்து கண்ணிர் வடித்தது.

தமிழ் நாடக உலகின் தலைமையாசிரியராகவும், நாடக ஆசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியராகவும் விளங்கிய தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் தமது பருவுடலை விட்டுப் புகழுடம்பை யடைந்தார். 1867ஆம் ஆண்டில் தூத்துக்குடியிலே பிறந்த அப் பெருமகனார், 1922-இல் பாண்டிச்சேரியிலே சமாதியடைந்தார்.

மறுநாள் காலை சுவாமிகளின் சடலத்துடன் புகைப்படம் எடுக்கப் பெற்றது. குழுவினரோடு எடுத்த படத்தில் தம்பி பகவதி நிற்கப் பயந்து மறுத்து விட்டான். அப்போது பகவதிக்கு நான்கு வயதிருக்கும். பிறகு பூஜைக்குரிய முறையில் சுவாமிகளைத் தனியாக எடுத்தார்கள். அப்போது திடீரென்று பகவதிக்குத் தைரியம் வந்து விட்டது. “நானும் படத்தில் நிற்கிறேன்” என்றான். புகைப்படக்காரர் “ஒரே ‘நெகட்டிவ்’ தானிருக்கிறது” என்றார். தம்பி அழ ஆரம்பித்தான். பிறகு அவனைச் சமாதானப் படுத்திக் கையில் மலர்களைக் கொடுத்து, சடலத்தின் பக்கத்தில் நிற்கச் செய்து படமெடுத்தார்கள்.

புலவர்களின் கண்ணிர்

சுவாமிகள் மறைந்த செய்தி நாடெங்கும் அறிவிக்கப் பட்டது. தமிழ் நாட்டில் அப்போது வாழ்ந்த நாடகப் புலவர்களெல்லாம் இரங்கற் பாக்கள் பாடி அனுப்பியிருந்தார்கள். சுவாமிகளோடு நெருங்கிய தோழமை கொண்டவர் உடுமலை சக்தச் சரபம் முத்துச்சாமிக் கவிராயர். அவர் சுவாமிகளோடு சக மாணவராகப் பழனி தண்டபாணி சுவாமிகளிடம் பாடம் கேட்டவர். கவிராயர் அவர்கள் அனுப்பியிருந்த இரங்கற் பாக்கள், மனத்தை உருக்குவதாக அமைந்திருந்தன. ஒரு பாட்டை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

பாவலர் நோட்டிஸ்

பாவலர் கம்பெனியில் நாங்கள் இரண்டரை மாதங்களே இருந்தோம். ஆனால் அந்தக் குறுகிய காலத்தில் நடிப்புத் துறையில் நாங்கள் பெற்ற பயிற்சி மிகச் சிறப்பானது. அப் பயிற்சி நாடகத் துறையில் முன்னேறுவதற்கு எங்களுக்குப் பெருந்துணையாக இருந்தது என்பதை மகிழ்வோடு குறிப்பிட வேண்டியது என் கடமை.

பாவலர் கம்பெனியிலிருந்து நாங்கள் வந்த பின் அவர் ஏதேதோ முயற்சிகள் செய்தார். எங்கள்மீது குற்றம் சாட்டி நோட்டீஸ் விட்டார். தந்தையாரும் ஒருவக்கீலைக் கலந்து பதில் நோட்டீஸ் கொடுத்தார். சில நாட்கள் இவ்வாறு நோட்டீஸ்களிலேயே வாதம் நடந்தது. கடைசியில் பாவலர் தமது முயற்சியைக் கைவிட்டார்.

சுவாமிகள் மறைவோடு வசூலும் குறைந்து போனதால் சில ஸ்பெஷல் நாடகங்களை நடத்தத் திட்டமிட்டார்கள். பாலாமணி அம்மாள் குழுவினரைக் கொண்டு டம்பாச்சாரி நாடகம் போடச் செய்தார்கள். இக்குழுவினர் அனைவரும் சுவாமிகளிடம் பாசமும் பக்தியும் கொண்டவர்கள்.

அப்போது பாலாமணி அம்மாள் மிகவும் வயதுமுதிர்ந்தவர். அவர்தாம் குழுவின் உரிமையாளர். எனக்கு முதன் முதலாகப் பவுடர் பூசிவிட்ட சி. எஸ். சாமண்ணா ஐயர், குழுவின் மானேஜராக இருந்தார். இந்தக் குழுவில் அதிகமான பெண்கள் இருந்தார்கள். ‘டம்பாச்சாரி’ நாடகம் போடுவதில் இந்தச் சபையார் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தார்கள். பாலாமணி அம்மையார் இளமைப் பருவத்தில் மிகச் சிறந்து விளங்கினராம். கும்பகோணத்தில் பாலாமணி அம்மையார் கதாநாயகியாகவும் பாலாம்பாள் அம்மையார் கதாநாயகனாகவும் நடித்து வந்த காலத்தில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணத்திற்கு, ‘பாலாமணி ஸ்பெஷல்’ என்ற பெயரால் ஒரு ரயிலே விடப்பட்டதாம், பாலாமணிச் சாந்து, பாலாமணிப் புடவை என்றெல்லாம் வியாபாரிகள் விளம்பரப்படுத்துவார்களாம். இவற்றையெல்லாம் என் தந்தையார் மூலம் அறிந்தேன்.

டம்பாச்சாரி உதவி

பாலாமணி அம்மையாரே டம்பாச்சாரியாக நடித்தார். கதாநாயகி மதனசுந்தரியாக வடிவாம்பாள் நடித்தார். சி. எஸ். சாமண்ணா ஐயர் முதலிலிருந்து முடிவு வரை மொத்தம் பதினொரு வேடங்களில் தோன்றினார். அற்புதமாக நடித்தார். அவரை ‘இந்தியன் சார்லி சாப்ளின்’ என்றே அக்காலத்தில் குறிப்பிட்டார்கள். இந்தப் பட்டம் அப்போது சென்னை கவர்னராக இருந்த லார்டு வெல்லிங்டன் அவர்களால் இவருக்கு வழங்கப் பட்டது. பதினொரு வேடங்கள் என்று குறிப்பிட்டேனல்லவா? ஒப்பனை முறைகளெல்லாம் நன்கு வளர்ச்சி பெறாத அந்த நாளில் சாமண்ணா ஐயர் பல்வேறுபட்ட குணங்களையுடைய இந்தப் பாத்திரங்களைத் தாங்கி நடித்ததுதான் மிகவும் வியப்புக்குரியது. பாத்திரங்களின் பெயர்களைக் கேட்டால் நீங்களே வியப்படைவீர்கள். நாவிதர், தவசிப்பிள்ளை, டாபர் மாமா, எஞ்சினியர், தமிழ்ப்புலவர், கோமுட்டி செட்டியார், ஷேக்மீரா லெப்பைடு அமீனா, வக்கில், அப்பர்சாமிகள், சட்டிப்பரதேசி ஆகிய இவ் வேடங்கள் அனைத்தையும் புனைந்து அந்தந்தப் பாத்திரங்களுக்கு ஏற்றவாறு அவர் பேசி நடிப்பது பிரமிக்கத் தக்கதாக இருக்கும். தமிழ், தெழுங்கு, ஆங்கிலம், கன்னடம், மலையாளம் முதலிய பல்வேறு மொழிகளைச் சரளமாகப் பேசத் தெரிந்தவர் அவர். சாமண்ணா ஐயரின் இந்த அபாரமான திறமையை எல்லோரும் பாராட்டினார்கள்.

டம்பாச்சாரி நாடகம், தமிழகத்தில் தன் முதலாக நடிக்கப் பெற்ற சமுதாய நாடகம். இந்த நாடகத்தின் கதை உண்மையாகவே நடந்த ஒரு செல்வச்சீமானின் கதை. தாசியின் மையலில் சிக்கிச் சீரழிந்த ஒருவரின் வரலாறு. இதைப் போன்ற கதைகள் மக்களின் உள்ளத்தில் இன்றுவரை நீங்காது இடம் பெற்றிருப்பதை நாம் பார்க்கிறோம், கடம்பாச்சாரி முதல் “இரத்தக் கண்ணிர்” வரை எத்தனையோ நாடகங்கள் இந்த அடிப்படையிலே எழுதி நடிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

டம்பாச்சாரி நாடகத்திற்கு நல்ல வசூலாயிற்று. அந்த உதவியுடன் எங்கள் நாடக சபை திருப்பாதிரிப்புலியூருக்கு வந்து சேர்ந்தது. சுவாமிகள் காலமானபோது வந்திருந்தவர்களில் முதலாளி சின்னைய்யாபிள்ளை மீண்டும் மதுரைக்குப் போய் விட்டார். கருப்பையாபிள்ளையும், காமேஸ்வர ஐயரும் கம்பெனியிலே மீண்டும் இடம் பெற்றார்கள். பழனியாபிள்ளையின் உதவியுடன் அவர்களே கம்பெனியை நடத்தி வந்தார்கள். வசூலும் சுமாராக ஆயிற்று. கம்பெனியிலிருந்து விலகிய பல நடிகர்கள் மீண்டும் வந்து சேர்ந்தார்கள். மனோகரா நாடகம் நடத்தினோம். புதிய நாடகமாதலால் பிரமாதமான வரவேற்புக் கிடைத்தது.

மனோஹரன் நாடகத்தில்

திருப்பாதிரிப்புலியூரில் ஒருநாள் மனோஹரன் நாடகம் நடந்து கொண்டிருந்தது. மனோஹரனில் முக்கியமான காட்சி; சங்கிலிகளால் கட்டப்பெற்று ஆவேசங் கொண்ட நிலையில் நிற்கிறான் மனோகரன். “என் மைந்தனா நீ?” என்கிறார் தந்தை புருஷோத்தமர். உடனே மனோஹரன், “என்ன சொன்னீர்?” என்று ஆக்ரோஷத்தோடு சங்கிலிகளை அறுத்துக் கொண்டு எதிரே நிற்கும் காவலனின் வாளை உருவி, தந்தையைக்கொல்லப் பாய்கிறான்.

புருஷோத்தமன் பேச்சு முடிந்தது. மனோஹரனாக நின்ற நான். “ஆ, என்னசொன்னீர்?” என்று கர்ஜித்தபடி சங்கிவிகளைப் பிணைத்திருந்த சுருக்குக் கயிற்றை இழுத்தெறிந்து விட்டு அதாவது சங்கிலிகளை அறுத்தெறிந்து விட்டு, எதிரே நின்ற காவலனின் உடைவாளை உருவிக்கொண்டு, சிம்மாதனத்தில் வசந்த சேனையுடன் வீற்றிருந்த புருஷோத்தமரை நோக்கிப்பாய்ந்தேன்.

பரிதாப நிலை

சபையில் ஒரே சிரிப்பொலி, எவ்வளவு ரசனைக் குறைவான சபையாயிருந்தாலும் சிரிக்கக் கூடிய கட்டமல்ல அது. எதிரே சிம்மாசனத்தில் வீற்றிருந்த புருஷோத்தமர் உதடுகளிலும் புன்னகை தவழ்ந்தது.வசந்தசேனை வேடத்திலிருந்த சின்னண்ணாவும் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். ஒரு விடிை எனகொன்றும் புரியவில்லை ...பிறகு, உண்மையை உணர்ந்தேன். என் உயிரே போய்விடும்போல் இருந்தது வீர தீர மனோஹரனுடைய அப்போதைய நிலைமை மிகப் பரிதாபகரமானது... . . ... விஷயம் என்ன தெரியுமா? காவலனிட மிருந்து நான் உடைவாளை உருவியபோது, என் கையோடு வந்தது, கத்தியின் கைப்பிடி மட்டும்தான். கத்தி, பிடியிலிருந்து விடுபட்டு வெளியே வராமல் காவலனின் உறைக்குள்ளேயே தங்கி விட்டது. எனக்கிருந்த உணர்ச்சி வேகத்தில் நான் இதைக் கவனிக்கவில்லை. வெறும் கைப்பிடியோடு நின்ற மனோகரனின் நிலையைக் கண்டு யார்தான் சிரிக்கமாட்டார்கள்?

எனது நடிக நண்பர்களுக்கு இதைப் போன்ற பரிதாப நிலை ஏற்படாதிருக்குமாக! எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்காகவே இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டேன்.

அப்பாவுக்கு நோய் அதிகப்பட்டது

திருப்பாதிரிப்புலியூரிலிருந்து சில சிற்றுரர்களுக்குச் சென்று சிதம்பரம் வந்து சேர்ந்தோம். அப்போது அண்ணாமலைப் பல்கலை கழகமும், அண்ணாமலை நகரும் இல்லாத காலம். சிதம்பரத்தில் ஒடுகள் வேய்ந்த ஒருகொட்டகையில் நாடகங்கள் நடைபெற்றன. நல்ல வசூலாயிற்று. தம்பி பகவதி, தொடக்கப் பள்ளியில், சேர்க்கப்பட்டான். காஞ்சீபுரத்தில் தந்தையாருக்குக் காலில் விஷக்கல் குத்தி நோய் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டேனல்லவா? அந்த நோய் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியது. அடிக்கடி உடல் நலமில்லாமல் சிரமப்பட்டார். திடீரென்று ஒருநாள் மயக்கம் வந்துவிட்டது. தமக்கு இறுதி நாள் நெருங்கிவிட்ட தென்ற எண்ணம் அவரது உள்ளத்தில் தோன்றி விட்டது. குடும்பத்தோடு, பிறந்த ஊருக்குப் போகவேண்டுமென முதலாளிகளிடம் பிடிவாதம் செய்தார். எங்களை மட்டும் விட்டுப் போகும்படி உரிமையாளர்கள் ஏதேதோ சொன்னார்கள். அப்பா ஒப்பவில்லை.

“தான் திடீரென்று இறந்துபோக நேரலாம். பிறந்த ஊரில் சுற்றத்தார் முன்னிலையில் இறக்க விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்குப் பின் ஊருக்குப் போவதால் பிள்ளைகளையும் அவசியம் அழைத்துப் போகவேண்டும். ஒரு வாரத்தில் அவர்களை அனுப்பி விடுகிறேன். நான் சில மாதங்கள் தங்கியிருந்து உடல் நிலை சுகமடையுமானால் வருகிறேன்” என்று கூறினார். வேறு வழியின்றி முதலாளிகளும் இசைந்தார்கள். தூரப் பயணமாதலால் துணைக்காகக் கோட்டயம் திரு கோபாலபிள்ளையையும் அழைத்துக் கொண்டு, எல்லோரும் குடும்பத்துடன் பிறந்த ஊராகிய திருவனந்தபுரத்திற்குப் பயணமானோம்.

பிறந்த நகரம்

திருவனந்தபுரத்திற்குப் போகிறோம் என்பதில் எங்களுக்கெல்லாம் பெரு மகிழ்ச்சி. நானும், என் தமையன்மார்கள் இருவரும் திருவனந்தபுரத்தில்தான் பிறந்தோம். சின்னஞ் சிறு வயதில் நான் தவழ்ந்து விளையாடிய இடம். திருவனந்தபுரத்தில் இப்போது இருக்கும் பெரிய ரயில் நிலையம் அப்போது இல்லை. கடற்புரத்திற்கு அருகில் ஒரு சின்ன ரயில் நிலையம் இருந்தது. அதில் தான் இறங்கினோம். குதிரை வண்டிகள் பெட்டி வண்டிகளைப் போல் அழகாக இருந்தன. எனக்கு நினைவு தெரிந்தபின் நான், பிறந்த ஊரையே பார்த்ததில்லை. காணும் காட்சியெல்லாம் புதுமையாக இருந்தது. எல்லோரும் இரண்டு வண்டிகளில் ஏறியதும் ‘புத்தன் சந்தை’ என்ற இடத்திற்கு வண்டியை விடச் சொன்னார் தந்தையார்.

ஆம், புத்தன் சந்தையில்தான் எங்கள் உறவினார்கள் அதிகமாக இருந்தார்கள். நாங்கள் பிறந்த இடமும் அதுதான். தந்தையார் தம் தம்பிக்குக் கடிதம் எதுவும் எழுதாமல் திடீரென்று புறப்பட்டதால், அவர் தங்கியிருந்த இடம் தெரியாமல் தேடினார். கடைசியில் எப்படியோ ஒருவகையாக எங்கள் சிற்றப்பா செல்லம்பிள்ளை, தம் மனைவியுடன் குடியிருந்த வீட்டைக் கண்டு பிடித்தோம். சிற்றப்பா சர்க்காரில் ஏதோ ஒரு ‘பியூன்’ வேலையில் இருந்தார்.அடிக்கடி வெளியூர் போகவேண்டிய வேலை. நாங்கள் போன சமயம சிற்றப்பா வெளியூர் போயிருந்தார். அவர் அப்போதுதான் புதிதாகத் திருமணம் செய்திருந்தார். அக்கம் பக்கத்திலுள்ள உறவினார்கள் சித்தியை அம்மாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். சிற்றப்பா மிகுந்த வறுமை நிலையிலிருந்தார். அவர் குடியிருந்த வீடும் எல்லோரும் தங்குவதற்கு வசதியாக இல்லாதிருந்தது. அருகிலேயே வேறு வீடு பார்த்துக் குடியேறினோம். இரண்டு நாட்களில் சிற்றப்பா வந்து சேர்ந்தார். நீண்ட காலத்திற்குப்பின் சந்தித்த அப்பாவும், சிற்றப்பாவும் எதுவும் பேசாமல் கண்ணிர் விட்டுக் கொண்ட காட்சி, இன்னும் என் நினைவில் இருக்கிறது.

திருவண்ணாமலையில்

வாக்களித்தபடி ஒரு வாரம் கழிந்து விட்டது. கோபால பிள்ளையுடனும் பெரிய அண்ணாவுடனும், நானும் சின்னண்ணாவும் சிதம்பரம் வந்து சேர்ந்தோம். சிற்றப்பாவும் எங்களுடன் சிதம்பரம் வரை துணைக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கிவிட்டுத் திரும்பினார். கம்பெனி திருவண்ணாமலைக்கு இடம் மாறியது. திருவண்ணாமலையில் நாடகம் பிரமாதமான வசூலில் நடை பெற்றது. சத்தியவான் சாவித்திரி நாடகத்திற்கு நல்ல பேர். அந்த நாடகம் பலமுறை நடிக்கப் பெற்றது.

ஒரு நாள் பெரியண்ணாவுக்கு ஊரிலிருந்து தந்தி வந்தது. அந்தத் தந்தியைப் பார்த்த உரிமையாளர்கள், காவடிப் பிரார்த்தனை செலுத்த எங்களை ஊருக்கு அனுப்பிவைக்க வேண்டு மென்று எழுதப்பட்டிருப்பதாகவும், திருவண்ணாமலை முடிந்து ஊருக்குப் போகலாமென்றும் சொன்னார்கள். புத்தன்சந்தை, சுப்பிரமணியசுவாமி கோவிலுக்குக் காவடியெடுப்பதாக நேர்த்திக் கடன் இருந்ததால் நாங்களும் அதை நம்பி விட்டோம். அன்றிரவு, பவளக்கொடி நாடகம் மிகச் சிறப்பாக நடை பெற்றது.

மறுநாள் பகலில் மற்றொரு தந்தி வந்தது. அதைப் பார்த்த உரிமையாளர்கள் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டார்கள். அன்று ஒய்வு நாள். அப்போது விழுப்புரத்தில் திரு.கன்னையா கம்பெனியின் நாடகங்கள் நடைபெற்று வந்தன. அந்த நாடகத்தைப் பார்க்கவேண்டுமென நாங்கள் அடிக்கடி ஆசையோடு பேசிக் கொள்வோம். உரிமையாளர் கருப்பையா பிள்ளை எங்களிடம், “கன்னையா நாடகம் பார்த்து வரலாமா?” என்று கேட்டார். பெரியண்ணா ஒப்புக்கொண்டார். நாங்கள் மூவரும் கருப்பையாபிள்ளையுடன் மாலையில் பயணமானோம் விழுப்புரம் ரயில் நிலையம் வந்தது. இறங்கவில்லை. பயணம் தொடர்ந்தது. அண்ணா, கருப்பையாபிள்ளையிடம் காரணம் கேட்டார். சும்மா வேடிக்கையாகச் சொன்னதாகவும், காவடிக் கட்டுக்குத் திருவனந்தபுரம் வரும்படியாக வற்புறுத்தி இரண்டாவது தந்தியில் குறிப்பிட்டிருப்பதாகவும், திருவனந்தபுரம் போவதாகவும் சொன்னார். நாங்கள் சிந்தனையில் ஆழ்ந்தோம்.

புகைவண்டி வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. முதலாளி கருப்பையாபிள்ளை எங்கள் சிந்தனையைக் கலைக்க. ஏதேதோ பேசினார். பெரியண்ணா மட்டும் அவருடைய பேச்சில் ஈடுபடவில்லை. நானும் சின்னண்ணாவும் அவரோடு உரையாடிப் பொழுது போக்கினோம். நீண்ட நேரத்திற்குப் பின் கண்ணயர்ந்தோம்.

தங்தையை இழந்தோம்

மறுநாள் மாலை திருவனந்தபுரம் வந்து சேர்ந்தோம். வீட்டை நெருங்கியதும் அவலச் செய்தி எங்களுக்காகக் காத்திருந்தது. வெள்ளைப் புடவை யுடுத்தித் தலைவிரி கோலத்துடன் இருந்த அன்னையாரைக் கண்டதும், “ஐயோ” என்றலறினோம். “உங்களைத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரேடா அப்பா” என்று அம்மாவின் அடிவயிற்றிலிருந்து எழுந்த குரல், நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

ஆம்; 1923 ஏப்ரல் 27ஆம் நாள் இரவு 12.30 மணிக்கு, நாங்கள் திருவண்ணாமலையில் பவளக்கொடி நாடகத்தில் நடித்து கொண்டிருந்த நேரத்தில் தந்தையார் இறைவனடி சேர்ந்தார். பவளக்கொடி நாடகத்தில் கிருஷ்ணன் மாயப் பெண்ணாகவும், அர்ஜுனன் கிழவனாகவும் வேடம் பூண்டு, பவளக்கொடியை ஏமாற்றி, வண்டு கடித்து இறந்ததுபோல் நடிப்பதுண்டல்லவா? அந்தக் காட்சியில் அர்ஜுனனப் படுக்கவைத்து, நான் மாயப் பெண்ணாக நின்று ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்த அதே நேரத்தில்தான், தந்தையார் இறந்திருக்கிறார்! இதையறிந்த போது இறைவனின் செயலை எண்ணி எல்லோரும் வியந்தார்கள். அப்போது பெரியண்ணாவுக்கு வயது பதினேழு. நிலைமையை அறிந்ததும் அவர் அழவேயில்லை. உள்ளே வந்து அம்மாவைப் பார்க்கவுமில்லை. அப்படியே வெளித்திண்ணையில் உணர்வற்று உட்கார்ந்து விட்டார். அவரது உள்ளத்திலிருந்த ஆயிரமாயிரம் எண்ண அலைகளால் ஏற்பட்ட உணர்ச்சியின் கொந்தளிந்பு கண்களில் தெரிந்தது. இரத்தச் சிவப்பேறி நின்ற அவரது கண்களைக் கண்டு எல்லோரும் பயந்தார்கள். அவரது அருகில் போய் உட்கார்ந்து ஆறுதல் கூறினார்கள். அம்மாவையும், ஐந்து தம்பி தங்கை மார்களையும் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு, தம்மேல் சுமத்தப் பெற்றதையும், அந்த எதிர் கால வாழ்வையும் எண்ணி ஏங்கினார் போலிருக்கிறது.

எங்கள் நிலை

அப்பாவின் இறுதிச் சடங்குகள் நடந்தேறின. நாங்கள் போட்டிருந்த சில நகைகளையும், பரிசு பெற்ற தங்க மெடல்களையும் தவிர வேறு ஆஸ்தி எதுவும் இல்லை. எனவே அதற்கான குழப்பங்கள் ஒன்றும் ஏற்படவில்லை. அப்பாவின் அளவுக்கு மீறிய குடியினால் அவரது ஈரலில் துவாரங்கள் விழுந்து விட்டதாயும் அதனாலேயே விரைவில் மரணம் ஏற்பட்டதென்றும் மருத்துவர் கூறினார்.

பதினாறாவது நாள் சடங்கு முடியும் வரை முதலாளி எங்களோடு தங்கியிருந்தார். மறு நாள் திருவண்ணாமலைக்குப் புறப்பட முடிவு செய்தோம். சிற்றப்பா செல்லம்பிள்ளையும் எங்கள் தாயுடன் பிறந்த மாமா செல்லமபிள்ளையும் எங்களோடுவருவதாக அறிவித்தார்கள். அம்மாவும் அதை விரும்பினார். அவர்கள் இருவருக்கும் வெளி வேலைகள் ஏதாவது கொடுப்பதாகக் கருப்பையாபிள்ளை கூறினார். கைம்மைக் கோலம் ஏற்றதாயுடனும் சிற்றப்பா, மாமா, எல்லோருடனும் மறுநாள் புறப்பட்டுத் திருவண்ணாமலை வந்து சேர்ந்தோம்.
------------------

7. முத்துச்சாமிக் கவிராயர்


திருவண்ணமலையில் நாடகங்கள் தொடர்ந்து நடை பெற்றன. மாமாவும் சிற்றப்பாவும் எங்களோடு தனி வீட்டில் தங்கினார்கள். அவர்கள் இருவருக்கும் வேலை கொடுத்து, ஆளுக்கு இருபத்தைந்து ரூபாய்கள் வீதம் சம்பளம் கொடுக்கப் பெற்றது. எங்களுக்குக் கொடுத்து வந்த இருநூற்றி இருபத்தி ஐந்து ரூபாய் சம்பளம், அப்பா காலமானதால் நூற்று எழுபத்தைந்தாகக் குறைந்தது.

சில நாட்களில் உடுமலை சந்தச் சரபம் முத்துசாமிக் கவிராயர் எங்கள் கம்பெனிக்கு நாடகாசிரியராக வந்து சேர்ந்தார். இவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் நன்கு பயின்றவர். மூன்றிலும் கவிபுனையும் ஆற்றல் பெற்றவர். எல்லோரிடமும் இனிய முறையில் பழகக் கூடியவர். சாதுரியமாகப் பேசி அனைவரையும் சிரிக்க வைக்கும் தன்மை வாய்ந்தவர். வேடிக்கை கதைகள் சொல்லுவதில் கவிராயர் நிபுணர். எப்போதும் கம்பெனிப் பிள்ளைகளைக் கூட்டி வைத்து ஏதாவது கதைகள் சொல்லிக் கொண்டேயிருப்பார். பாடத்தைவிடக் கதைகளைத்தான் நாங்கள் அதிக ஆர்வத்துடன் கேட்போம். பாடம் சொல்லிக் கொடுக்கும் நேரங்களில் கூட அதை மறந்து விட்டு, கதைகள் சொல்லும்படி நாங்கள் வற்புறுத்துவோம். அவரும் சளைக்காமல் அன்போடு சொல்லுவார். சங்கரதாஸ் சுவாமிகளைவிட வயதில் மூத்தவர். வாயில் ஒரு பல் கூட இல்லை. பொக்கை வாய்க் கிழவராகக் காட்சி அளித்தார். மதுரைவீரன், மன்மத தகனம் ஆகிய இரு நாடகங்களையும் அவர் எழுதிக் கொடுத்தார். மதுரை வீரனில் எனக்கு, ‘சக்கிலிச்சி’ பாடம் கொடுக்கப்பெற்றது. சின்னண்ணாவுக்குப் ‘பொம்மி’ பாடமும் ‘பிரதி’ பாடமும் தரப் பெற்றன. மதுரை வீரன் நாடகத்தில் தெலுங்குப் பாடல்களும் உரையாடல்களும் இடையிடையே உண்டு.

சேஷாத்திரி சுவாமிகள்

திருவண்ணமலையில் அப்போது, சேஷாத்திரி சுவாமிகள் இருந்த காலம். அவருடைய சித்து விளையாடல்களில் மக்களுக்கு அதிக நம்பிக்கை இருந்து வந்தது. சேஷாத்திரி சுவாமிகள் திடீரென்று ஒருநாள், சத்தியவான் சாவித்திரி நாடகம் நடந்து கொண்டிருக்கும் போது கொட்டகைக்குள் வந்தார். நான் நாரதராக நடித்துக் கொண்டிருந்தேன். யாரோ ஒருவர் வைத்துக் கொண்டிருந்த மாலையைப் பிடுங்கினார். வேகமாக மேடை மீது ஏறினார். மாலையை என் கழுத்தில் போட்டு விட்டுக் கைதட்டினார். அங்கிருந்த அனைவரும் மகிழ்ச்சியோடு கரகோஷம் செய்தார்கள். அடுத்த விநாடியில் வேகமாகக் கீழிறங்கிப் போப் விட்டார். சுவாமிகளின் கையால் மாலை வாங்கிய அது பாத்தியத்தை எல்லோரும் வியப்பாகச் சொல்லிக் கொண்டார்கள். அந்த நாளில் எனக்கொன்றும் புரியவில்லை. இன்று சேஷாத்திரி சுவாமிகளின் பெருமையையும் அவரது அற்புதச் செயல்களையும் உணர்ந்த நான் அந்தப் பழைய நிகழ்ச்சியை எண்ணிப் பெருமையடைகிறேன் உண்மையிலேயே அது பெற்றகரிய பேறு என்றே கருதுகிறேன்.

திருவண்ணாமலையிலிருந்து மேக்களுர், செங்கம், காஞ்சி ஆகிய சிற்றுார்களுக்குச் சென்று நாடகம் நடித்தோம். சிறிய கிராமங்களாக இருந்தாலும் மேக்களுரிலும் செங்கத்திலும் வசூல் பிரமாதமாக இருந்தது. மேக்களுரில், நடிகர்கள் மேடையில் போட்டுக் கொள்ள, ஊரிலுள்ள தாய்மார்கள் தங்கள் விலை யுயர்ந்த நகைகளை அன்போடு கொடுத்துதவியது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

தெய்வத் தொண்டர் தேவ சேனாதிபதி

மேக்களுரில் ஒரு சிவாலயமிருந்தது. நாங்கள் குடியிருந்த வீடு அதன் அருகிலிருந்தது. அப்போது கம்பெனியில் என் ஒருவனைத் தவிர எல்லோரும் புலால் உண்ணக் கூடியவர்கள். நான் ஒருவன்தான் சைவம். அந்த ஊரில் ஒட்டலும் இல்லை. எனக்கு மட்டும் தனியாகச் சைவ உணவு தயாரிப்பது சிரமமல்லவா? ஆலயத்தில் அர்ச்சகராக இருந்து வந்த ஒருபெரியவரின் குடும்பத்தோடு தொடர்பு கொள்ள, இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. கம்பெனியில் புலால் போடும் நாட்களில் ஆலயக் குருக்கள் வீட்டில் எனக்குச் சாப்பாடு. பகல் வேளைகளில் குருக்களின் பிள்ளைகளோடு சேர்ந்து நாங்கள் கோலி விளையாடுவது வழக்கம். இதில் தேவன் என்ற ஒரு சிறுவன் என் கூட்டாளி. சின்னஞ் சிறு பருவத்தில் ஏற்பட்ட நட்பல்லவா? எப்படி மறக்க முடியும்? இந்த நட்பு விடுபடாதிருக்க இடையிடையே அச் சிறுவனைச் சந்திக்கும் வாய்ப்பும் எனக்கேற்பட்டது. அச் சிறுவன் தான் இன்று சென்னை இராயப்பேட்டை சித்திபுத்தி விநாயகர் கோயில் அர்ச்சகராக இருக்கும் தேவ சேனதிபதி குருக்கள்.

மேக்களுர் முடிந்து மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்து நாடகங்கள் நடித்தோம். பட்டாபிஷேக நாடகத்தன்று நான் மறக்க முடியாத ஒரு விசேஷம் நடந்தது.

பரிசு கொடுப்பதில் போட்டி

சத்தியவான் சாவித்திரிக்கு நல்ல வரவேற்பு என்று முன்பே குறிப்பிட்டேனல்லவா? அதையே பட்டாபிஷேக நாடகமாகவும் வைத்திருந்தார்கள். நாடக முடிவில் வழக்கம்போல் அப்போது சட்டாம் பிள்ளையாக இருந்த திரு கல்யாண வீரபத்திரன் மேடைக்கு வந்து, “நடிகர்களுக்குப் பரிசு கொடுப்பவர்கள் கொடுக்கலாம்” என்று அறிவித்தார். சபையிலிருந்த சிலர், ‘பபூன் வேடதாரிடம் பரிசுகளைக்கொடுக்க, அவர் பரிசு கொடுத்த ஒவ்வொருவர் பெயரையும் சொல்லி, நடிகர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

சத்தியவானாக நடித்த ஏ. கே. சுப்பிரமணியனுக்கும், சாவித்திரியாக நடித்த சின்னண்ணா டி. கே. முத்துசாமிக்கும் ஊரில் நல்லபெயர். “சத்தியவான்தான் உயர்ந்த நடிகர்” என்றார்கள் சில ரசிகர்கள். “இல்லை; சாவித்திரிதான் உயர்ந்த நடிகர” என்றார்கள் வேறு சிலர். இவ்வாறு ஊரிலுள்ள நாடக ரசிகர்கள் இரு நடிகர்களிடத்திலும் ஆதரவு காட்டி வந்ததால், “ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்னும் பழமொழிப்படி அந்த இரு நடிகர்களுடைய ஆதரவாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.

நாரதரும் நாடகத்தில் ஒரு முக்கியமான பாத்திரமல்லவா? அன்று நாரதராக நடித்த அடியேனை ஒருவருமே கவனிக்கவில்லை. மற்ற ஊர்களில் எல்லாம் எனக்குத்தான் அதிகப் பரிசுகள் கிடைப்பது வழக்கம். திருவண்ணாமலையில் என்னுடைய அதிர்ஷ்டம் வேறு விதமாக இருந்தது. சத்தியவானும் சாவித்திரியும் பரிசு பெறும் கோலத்தைப் பார்த்துச் சோர்ந்து போய், ஏமாற்றத்தோடு நான் நின்று கொண்டிருந்தேன். இந் நிலையில் எமதருமனாக நடித்த இராமானுஜத்திற்கும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்தது.

தங்கப் பதக்கங்கள் கொடுக்கப் பெற்று முடிந்ததும், சபை யிலிருந்த ஒருவர், சத்தியவானுக்குப் பத்து ரூபாய்’ என்று ஒரு நோட்டை விட்டெறிந்தார். உடனே மற்றொருவர், ‘சாவித்திரிக்கு இருபது ரூபாய்’ என்று இரண்டு நோட்டுக்களைக் கொடுத்தார். இதிலும் போட்டி ஏற்படவே நூற்றுக் கணக்கான ரூபாய்கள் மேடைக்கு வரத் தொடங்கின. மாறி மாறிச் சத்தியவானுக்கும் சாவித்திரிக்குமே நோட்டுகள் வந்தன. ஏங்கி நின்ற என்னை எவருமே பொருட்படுத்தவில்லை.

நாரதரின் அழுகை

நாரதருக்கு நெஞ்சம் குமுறியது. கண் கலங்கியது. அந்த நிலையிலும் என்னை யாருமே கவனிக்கவில்லை. இரண்டொரு நிமிடங்களில், பொருமலை அடக்க முடியாமல் அழ ஆரம்பித்தேன். மங்களம் பாடி முடிந்ததும் திரை விடப் பெற்றது. உள்ளேயிருந்து நான் படும் வேதனையைப் பார்த்துக் கொண்டிருந்த கருப்பையா பிள்ளை என்னிடம் வந்து “சீ, இதற்காகவா அழுகிறாய்? இந்த ஊர் ஜனங்களுக்கு ரசிக்கவே தெரியவில்லை” என்று சொல்லி, என்னைச் சாமாதானப் படுத்தினார். பக்கத்திலிருந்த நடிகர் சிலர் சிரித்தார்கள். வேறு சிலர் அனுதாபம் காட்டினார்கள். ஆனாலும் என் அழுகை ஓயவில்லை.

எதற்காக அன்று அப்படித் தேம்பியழுதேன் என்பதை எண்ணியெண்ணிப் பார்க்கிறேன். இன்னும் அதன் மர்மம் எனக்குப் புரியவில்லை. பிஞ்சு உள்ளங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் பெரும் வேதனையாக இருக்கும்போல் தோன்றுகிறது.

திருவண்ணமலையில் நாடகம் முடிந்தது. திருக்கோவிலூரில் நாடகம் தொடங்கப் பெற்றது. நல்ல வசூல். ரசிகர்கள் பலர் எங்களோடு நெருங்கிப் பழகினார்கள். திருக்கோவிலூரில்தான் நாங்கள் முதன் முதலாக ரசிகர்கள் அழைப்பிற்கிணங்கி விருந் துக்குப் போைேம். ரசிக நண்பர்களோடு 1923இல் எடுக்கப் பெற்ற புகைப்படம், இன்னும் எங்கள் பெரியண்ணா இல்லத்தில் இருக்கிறது.

ஆவுடையப்ப முதலியார்

திருக்கோவிலூரில் நல்ல வருவாயுடன் கம்பெனி நடந்து கொண்டிருந்த நிலையில், மதுரையிலிருந்து சின்னையாபிள்ளை வந்தார். இவர் கம்பெனிக்குப் பணம் அதிகமாகப் போட்டவர். ஆனால் இதுவரை எவ்விதப்பயனையும் அடையாதவர். கம்பெனியை எப்படியாவது மதுரைப்பக்கம் அழைத்துப் போக வேண்டும் என்பது இவருடைய எண்ணம். அதற்காகக் கூடவே ஒரு காண்ட்ராக்டரை கூட்டி வந்திருந்தார். புதுக்கோட்டை, காரைக்குடி இருநகரங்களிலும் இரண்டு மாதங்கள் நாடகம் நடத்த ஒப்பந்தம் செய்வதாக ஏற்பாடு. இந்த விவரங்களை அறிந்ததும், மானேஜர் காமேஸ்வர ஐயரும், கருப்பையாப்பிள்ளையும் காண்ட்ராக்டரைத் தனியே அழைத்து, உபதேசம் செய்தார்கள். புதுக்கோட்டை போவது அதிகச் செலவென்றும், பக்கத்தில் விழுப்புரம், பண்ணுருட்டி போனல் அதிக லாபம் கிடைக்குமென்றும் ஆசைக் காட்டினார்கள். காண்ட்ராக்டர் ஆவுடையப்ப முதலியார், அவர்கள் பேச்சில் மயங்கி அப்படியே வற்புறுத்தி ஒப்பந்தம் செய்தார்.

விழுப்புரத்திலும், பண்ணுருட்டியிலும் நாடகங்கள் நடை பெற்றன. திருக்கோவிலுரிலும் திருவண்ணாமலையிலும் பிரமாதமாக வசூலான கம்பெனிக்கு, விழுப்புரத்திலும் பண்ணுருட்டியிலும் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. ஆவுடையப்ப முதலியார் அவதிப் பட்டார்.

ஈ ஜோசியர்

ஆவுடையப்ப முதலியாரின் தமையனார் ஒருவர் இருந்தார். அவர் ஒவ்வொரு நாளும் எங்கள் வீட்டுக்கு வருவார். சிறுதுண்டுக் காகிதங்களில் நாலைந்து நாடகங்களின் பெயர்களை எழுதிப் போடுவார். அவற்றில் முதலாவதாக எந்தக் காகிதத்தில் “ஈ” வந்து உட்காருகிறதோ, அதைப் பிரித்துப் பார்த்து அந்த நாடகத்தையே போட ஏற்பாடு செய்வார். இவருடைய செயலைப் பார்த்து நாங்கள் இவருக்கு ‘ஈ ஜோசியர்’ என்று பெயர் வைத்தோம். எந்த ஜோசியமும் பலிக்கவில்லை. வசூல் வர வரக் குறைந்து கொண்டே வந்தது.

இந்த நிலையில் ஆவுடையப்ப முதலியாருக்குச் சொந்தமாகக் கம்பெனி நடத்த வேண்டுமென்ற ஆசையும் ஏற்பட்டது. வசூல் இல்லாத அந்த நிலையிலும்கூட எனக்கு அவர் அவ்வப்போது ஐந்து ரூபாய்கள் பரிசளித்து வந்தார். சின்னையாபிள்ளைக்கும் தேவைபோல் பணம் கொடுத்தார். கடைசியாக, காண்ட்ராக்ட் முடியும் சமயத்தில் கம்பெனியார் காண்ட்ராக்டருக்குப் பணம் திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலை நேரிட்டது. ஆவுடையப்ப முதலியார் தம் பணத்திற்குத் தொந்தரவு கொடுக்கவே, சின்னையாபிள்ளை முழுத் தொகைக்கும் நோட்டு எழுதிக் கொடுத்து விட்டுக் கூடலூருக்குக் கம்பெனியைக் கொண்டு சென்றார்.

கருப்பையாபிள்ளை சொந்தக் கம்பெனி

கூடலூரில் நாடகம் நடந்தது. வசூல் மிகவும் மோசமாக இருந்தது. இந்த நிலையில் முதலாளி கருப்பையாபிள்ளை, சின்னையா பிள்ளையுடன் வேற்றுமைப் பட்டு கம்பெனியை விட்டு விலகிக் கொண்டார். திருப்பாதிரிப்புலியூரில் உடனடியாகச் சொந்தக் கம்பெனி துவக்க ஏற்பாடுகள் செய்தார். காமேஸ்வர ஐயர் மட்டும் அவரோடு போகாமல் எங்கள் கம்பெனியிலேயே இருந்து வந்தார்.

கூடலூரில் கொட்டகைக்குரிய வாடகை சரியாகக் கொடுக்கப் படவில்லை, அதற்காகக் கொட்டகைக்காரர் ஒரு ஆளை டிக்கெட் விற்கும் அறையிலேயே இருக்கச் செய்து வசூல் பணத்தை எடுத்துவர ஏற்பாடு செய்தார். அந்த ஆள் பலே பேர்வழி. அந்த நாளில் கொட்டகைக்காரருக்கு ஒவ்வொரு நாடகத்திற்கும் இலவச அனுமதிச் சீட்டுகள் ஏராளமாகக் கொடுப்பதுண்டு. அந்த இலவச டிக்கெட்டுக்களையெல்லாம் இந்த ஆள் விற்றுச் சொந்தத் தில் பணம் திரட்டத் தொடங்கினார். அதனால் கம்பெனிக்கு வருவாய் மேலும் குறைந்தது.

காமேஸ்வர ஐயரின் தில்லுமுல்லுகள்

கம்பெனி மானேஜர் காமேஸ்வர ஐயர், சின்னையாபிள்ளையிடமிருந்து நல்ல நடிகர்களையெல்லாம் கலைத்துக் கருப்பையாபிள்ளையின் கம்பெனிக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் திருப்பணியில் ஈடுபட்டிருந்தார். பெரியண்ணாவையும், மாமாவையும் ஒருநாள் திருப்பாதிரிப்புலியூருக்கு அழைத்துப்போய், கருப்பையாப்பிள்ளையைச் சந்திக்கச் செய்தார். கருப்பையாப்பிள்ளை, எங்களைத் தம் கம்பெனிக்கு வந்துவிடும்படியும் அதிகச் சம்பளம் தாம் தருவதாகவும் வற்புறுத்தினார். பெரியண்ணா, அம்மாவிடம் கலந்து கொண்டு இதற்குப் பதில் சொல்லுவதாகக் கூறிவிட்டார். இந்தச் செய்தி எப்படியோ சின்னையா பிள்ளைக்குத் தெரிந்துவிட்டது. அவர் அலறியடித்துக் கொண்டு அம்மாவிடம் வந்து அழுதார். “யார் போனலும் நான் கம்பெனியை நடத்திக் கொள்வேன். நீங்களும் போய்விட்டால் எனக்கு வேறு வழியேயில்லை. எங்கே யாவது போய் விழுந்து உயிரை விடுவதென்று முடிவு செய்து விட்டேன். என் மனைவியின் மாங்கல்யத்தை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று புலம்பினார்.

முதலாளி கருப்பையாபிள்ளை, எங்களோடு மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தந்தை இறந்த சமயத்தில் அவர் செய்த உதவிகள் மறக்க முடியாதவை. அவருக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருந்தோம். என்றாலும், சின்னையா பிள்ளையின் அப்போதைய நிலையை எண்ணிப் பார்த்தபோது, அம்மாவுக்கு அவர்மீது இரக்கம் உண்டாயிற்று. என்ன நேர்ந்தாலும் கருப்பையாபிள்ளையின் கம்பெனிக்குப் போவதில்லையென முடிவு கூறி விட்டார்.

எங்கள் சிற்றப்பா செல்லம்பிள்ளை நல்ல உடற்கட்டும் வலிமையும் உடையவர். அவரைக் கண்டால் எல்லோரும் பயப்படுவார்கள். அவர் ஒருநாள் காமேஸ்வர ஐயர் வந்திருந்தபோது எச்சரிக்கை செய்தார். கூடலூரிலும் திருப்பாதிரிப்புலியூரிலுமாக இரண்டு கம்பெனிகளில் ஒரே சமயத்தில் நீர் இவ்வாறு தில்லுமுல்லு வேலைகள் செய்து வந்தால் வீணாக அடிபட்டுச் சாக நேரிடும்’ என்று கோபத்துடன் அச்சுறுத்தினார். இதன் பிறகு காமேஸ்வர ஐயர் கருப்பையாபிள்ளை கம்பெனிக்கே போய் விட்டார். கம்பெனியில் முக்கிய நடிகராக இருந்த ஏ. கே. சுப்பிரமணியம், அவரோடு வந்த மற்றுஞ் சில நடிகர்கள் எல்லோரும் கருப்பையாபிள்ளை கம்பெனிக்குப் போய்ச் சேர்ந்தனார்.

போஸ்ட் மாஸ்டர் உதவி

கூடலூரில் கம்பெனியின் நிலைமை மிகவும் நெருக்கடியாய் விட்டது. காட்சியமைப்புப் பொருட்களையெல்லாம் கொட்ட கைக்காரர் கொடுக்க மறுத்துவிட்டார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வாடகைப் பணம் கொடுக்காது போனால் எல்லாவற்றையும் கொட்டகைக்காரரே எடுத்துக்கொள்ளலாமென்றும் எழுதிக் கொடுக்கப்பட்டது.

மாமாவும், பழனியாபிள்ளையும் சிதம்பரம் போய்கொட்டகை பேசிவந்தார்கள். முன்பணம் கொடுக்கப் பணம் இல்லாததால் மாமா, தமது மோதிரத்தை விற்றுப் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்து வந்தார். சிதம்பரம் போக இரயில் செலவுக்கும் பணம் இல்லை. சின்னையாபிள்ளை செய்வதறியாது திண்டாடினார். அப்போது கூடலூரில் போஸ்ட்மாஸ்டராக இருந்த கிருஷ்ணசாமி ஐயர் சிறந்த நாடக ரசிகர். அவர் எங்களுக்கு நண்பராகவும் இருந்தார். அவரும், கூடலூர் ஸ்டேஷன் மாஸ்டரும் பேருதவி செய்து, எவ்விதச் செலவுமில்லாமல் கம்பெனியைச் சிதம்பரத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

இராஜாம்பாள் நாடகம்

சிதம்பரத்தில் வசூல் சுமாராக இருந்தது. எஸ். என். இராமையா என்னும் புதிய நடிகர் ஒருவர் வந்து சேர்ந்தார். நல்ல இனிமையான குரல். அவருக்குக் கதாநாயகன் வேடம் கொடுக்கப்பட்டது.

சக்கரவாகம்பிள்ளை என்று ஒரு புதிய ஆசிரியரும் கம்பெனிக்கு வந்து சேர்ந்தார். அவர் ஏற்கனவே பாலாமணி அம்மாள் கம்பெனியில் இருந்தவர். அங்கே அவருக்குப் பாடமாகியிருந்த ஜே. ஆர். ரங்கராஜூ அவர்களின் இராஜாம்பாளை எங்களுக்குப் பயிற்றுவித்தார். இராஜாம்பாள் நாடகத்திற்கு அனுமதி சுலபத்தில் கிடைக்கவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு மாமா நேரில் சென்னைக்குப்போய் ரங்கராஜுவிடம் அனுமதி வாங்கி வந்தார். ரங்கராஜுவின் சட்ட திட்டங்கள் நிரப்பவும் கெடுபிடியானவை. அவரது நாவல்களை யாரும் எளிதில் நாடகமாக நடித்துவிட இயலாது. அவற்றையெல்லாம் பின்னால் விவரமாகச்சொல்லுகிறேன். மாமா அனுமதிபெற்று வந்ததும் கடைசிநாடகமாக “இராஜாம்பாள்” நடித்துவிட்டு எல்லோரும் தஞ்சாவூர் போய்ச் சேர்ந்தோம்.

ஆரிய கான சபை

தஞ்சாவூர் வந்த அன்று, நாங்கள் நடிக்கவிருந்த கொட்டகையில் ஆரிய காண சபையின் கடைசிநாடகம் சதி சுலோசன நடைபெற்றது. நாங்கள் வழக்கமாக நடித்துவரும் நாடகமாதலால் எல்லோரும் இரவு அந்நாடகத்திற்குப் போயிருந்தோம்.

மன்னார்குடி எம் ஜி. நடராஜபிள்ளை இந்திரஜித்துவாகவும் கே. எஸ். அனந்தநாராயணகய்யர் சுலோசனையாகவும் நடித்தார்கள். இவர்கள் இருவரும் நடித்த அந்த நாடகம் மிகவும் சிறப்பாக இருந்தது. இருவரும் அருமையாகப் பேசினார்கள். அனந்த நாராயணய்யரின் தளுக்கும், குலுக்கும், ஒரு பெண்ணைப் போலவே குழைந்து குழைந்துபேசும் அழகும், இசைத்திறமையும் மறக்க முடியாதவையாக இருந்தன. இடையிடையே இவர்கள் சொந்தமாகப் பேசிக்கொண்ட சில உரையாடல்களைத் தவிர, எல்லாம் நாங்கள் நடிக்கும் சுவாமிகளின் பாடம்தான், எனவே, நாடகம் எங்களுக்கு மிகவும் சுவையாக இருந்தது. சுவாமிகளின் கம்பெனி நடிகர்கள் என்றறிந்ததும் அனந்தநாராயணய்யரும் நடராஜபிள்ளையும் எங்களை அன்புடன் வரவேற்றார்கள்.

சங்கீதக் காவலன்

மறுநாள் தஞ்சை காமாட்சியம்பாள் நாடகக் கொட்டகையில் நாடகம் தொடங்கியது. எஸ். என். இராமையாவின் பாட்டுக்குப் பிரமாதமான பேர். கோவலன் நாடகத்தில் பாடல்கள் அதிகம். அந்த நாடகமே பலமுறை வைக்கப் பெற்றது. கோவலன் நாடகத்தில் நான் இடைச்சியாகவும், நன்மந்திரி யாகவும் நடித்தேன். நான் இடைச்சி வேடத்தில் ‘தயிர் வாங்கலேயோ’ என்று பாடி, மேடையில் வரும்போது சபையில் சில ரசிகர்கள் சில்லரை நாணயங்களையும், ரூபாய்களையும் என் மீது வீசி எறிவார்கள்.

அப்போது சங்கீத ஒளி விளக்காகக் கருதப் பெற்ற எஸ். ஜி. கிட்டப்பா மற்றொரு கொட்டகையில் வந்து ஸ்பெஷல் நாடகம் போட்டார். அந்தச் சமயம் அவருக்கு மகரக்கட்டு ஏற்பட்டு சாரீரம் தொந்தரை கொடுத்துக் கொண்டிருந்த காலம். அவருடைய நாடகங்களுக்கு வசூல் ஆகவில்லை. “எஸ். என். இராமையா பாட்டுக்கு முன், கிட்டப்பா பாட்டு செல்லாது” என்றெல்லாம் ரசிகர்கள் பேசிக்கொள்வதாகப் பெரியண்ணா அடிக்கடி சொல்லி வருத்தப்படுவார். அவருக்குக் கிட்டப்பா பாட்டில் அதிக மயக்கம், கிட்டப்பாவின் நாடகங்களைப் பார்த்துவிட்டு வந்து, அண்ணா எங்களிடம் சதா புகழ்ந்து கொண்டேயிருப்பார். இருந்தாலும், என்ன செய்வது? கிட்டப்பா நாடகங்களுக்கு வசூல் இல்லை. எஸ். என். இராமையா நடித்த எங்கள் சங்கீதக் கோவலனுக்குப் பிரமாதமான வசூல். அந்த நாளில் தஞ்சையில் எட்டு முறை கோவலன் நாடகம் வைக்கப் பெற்றதென்றால், அந்த நாடகத்தை மக்கள் எப்படி வரவேற்றிருப்பார்கள் என்பது தெரிகிறதல்லவா?

தஞ்சாவூரில் நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே நாகைப்பட்டினத்துக்குப் போய் கோவலன் நாடகம் போட்டு வந்தோம். தஞ்சையில் நல்ல வசூலானதால் ஏற்கனவே இருந்த பல கடன்கள் தீர்ந்தன. நடிகர்களுக்கும், மற்றத் தொழிலாளர்களுக்கும் பல மாதங்கள் இருந்து வந்த சம்பளப் பாக்கியும் தீர்ந்தது. அடுத்த ஊர், புதுக்கோட்டை போவதாக முடிவு செய்தார்கள்.
--------------

8. நாட்டுக்கோட்டை நகரத்தில்


புதுக்கோட்டை அப்போது தனி சமஸ்தானமாக இருந்தது. பல கம்பெனிகள் புதுக்கோட்டைக்குப் போய் வசூல் இல்லாமல் சிரமப்பட்டதாக அறிந்தோம். பிரசித்தி பெற்ற நடிகராகிய மனமோகன அரங்கசாமி நாயுடுவின் நிருவாகத்தில் இருந்த ஆலந்துார் ஒரிஜினல் டிராமடிக் கம்பெனியார் புதுக்கோட்டையில் அதிகக் கஷ்டப்பட்டதாகவும், அதன்பிறகு யாரும் புதுக்கோட்டைக்கே போனதில்லையென்றும் பேசிக் கொண்டார்கள். பல ஆண்டுகளாகப் புதுக்கோட்டையில் நாடகமே நடந்த தில்லையென்பதை அறிந்தபோது எங்களுக்கெல்லாம் அச்சமாக இருந்தது. தஞ்சையிலிருந்து புதுக்கோட்டைக்கு அந்த நாளில் லாரி வசதிகளெல்லாம் இல்லை. திருச்சி வழியாக ரயில்கூட இல்லாத காலம் அது. சாமான்களை இரட்டை மாட்டு வண்டிகளில் ஏற்றி அனுப்பிவிட்டு, நாங்கள் பஸ்ஸில் போய்ச் சேர்ந்தோம்.

புதுக்கோட்டையில் முதல் நாடகம் தொடங்கியது. வசூல் சுமாராக இருந்தது. இரண்டாவது நாடகத்திலிருந்தது எதிர் பாராதபடி அமோகமாக வசூலாயிற்று. எங்களுக்கு ஒரே குதுரகலம். புதுகோட்டை பிரஹதாம்பாள் தியேட்டரில் வேறு எந்தக் கம்பெனிக்கும் இப்படி வசூலானதில்லையென்று எல்லோரும் அதிசயப்பட்டார்கள். நாடகம் பார்க்க வந்த ரசிகர்களில், நாட்டுக்கோட்டை செட்டிப்பிள்ளைகள் அதிகமாக இருந்தார்கள்.

சின்னையாபிள்ளையின் மனமாற்றம்

நாலைந்து நாடகங்கள் நடந்ததும் கூடலூர் கொட்டகையில் அடகுவைக்கப்பட்டிருந்த சாமான்களை மீட்டு வர, சின்னையா பிள்ளை பணத்துடன் போனார்.நான்கு நாட்களில் திரும்பினார். அடகு வைக்கப்பட்டிருந்த தவணை நாட்கள் தீர்ந்துவிட்டதால் கொட்டகைகாரர் சாமான்களையெல்லாம் விற்று விட்டதாகவும், அவற்றைத் தன் தம்பியே வாங்கியிருப்பதாகவும், தம்பியிட மிருந்து தான் வாடகைக்கு வாங்கி வந்திருப்பதாகவும் கூறினார். மற்றப்பங்காளிகளை வஞ்சிக்கும் நோக்கமுடன் இவ்வாறு ஒரு தந்திரம் செய்திருப்பதாக ஊகித்தோம். இவற்றை எல்லோரும் நம்பும் விதத்தில் பத்திரங்களும் தயார் செய்து கொண்டு வந்திருந்தார்.

புதுகோட்டைக்கு வந்தபின் பெரியண்ணா டி. கே. சங்கரன் கம்பெனியில் கணக்குப்பிள்ளை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப் பட்டார். அவருக்கு இருபத்தைந்து ரூபாய் சம்பளம் போடப் பெற்றது. சின்னையாபிள்ளை கூடலூருக்குப் போகும் போது வசூலாகும் பணத்தை நடிகர்களுக்கு கொடுக்கும் படியாகப் பெரியண்ணாவிடம் சொல்லிவிட்டுப் போனார். அதன்படியே கொடுக்கப்பட்டது. திரும்பி வந்ததும் பூராப் பணத்தையும் செலவு செய்து விட்டது பற்றிக் கடிந்து கொண்டார். எங்களைப் பற்றித் தாறுமாருகத் தப்பும் தவறும் பேசியதாக மற்றொரு பங்காளியான பழனியாபிள்ளை முலம் அறிந்து வருந்தினோம். பேச்சு வார்த்தை வளர்ந்தது. இறுதியாக அந்த ஊரோடு கம்பெனியை விட்டு விலகிக் கொள்வதாகத் தெரிவித்து விட்டு வந்தார் பெரியண்ணா.

பிறகு, சின்னயாபிள்ளை அம்மாவிடம் வந்து, தான் ஒன்றுமே தவருகச் சொல்லவில்லையென்றும், யாரோ வேண்டு மென்று கோள் மூட்டியிருக்கிறார்களென்றும் கூறினார். கம்பெனிக்கு நல்ல வசூலாகி வருவதால் பாவலர் கம்பெனியில் கொடுத்து வந்த இருநூற்றி ஐம்பது ரூபாய்கள் சம்பளம் போட்டுத் தாம் தருவதாகவும் அறிவித்தார். மீண்டும் சமரசம் ஏற்பட்டுக் கம்பெனியில் இருக்க ஒப்புக்கொண்டோம். எனக்கும் சின்னண்ணாவுக்கும் ரூ. 250 சம்பளம் போடப்பட்டது.

பி. யூ சின்னப்பா

புதுக்கோட்டையில் பிற்காலத்தில் பிரசித்தி பெற்ற நடிகராக விளங்கிய பி. யூ. சின்னப்பா சுவாமி கம்பெனியில் நடிகராக வந்து சேர்ந்தார். அவருடைய சாரீரம் கணிரென்றிருந்தது. அவருக்கு இராஜாம்பாள் நாடகத்தில் துப்பறியும் கோவிந்தனை அடிக்கும் ரெளடிகளில் ஒருவனான ‘அம்மாவாசை’ வேடம் கொடுக்கப்பட்டது. சாவித்திரி நாடகத்தில் புண்ணிய புருஷனாக வந்து அருமையாகப் பாடினார்.

சின்னப்பா சிறுவயதில் படுசுட்டியாக இருந்தார். கம்பெனி வீட்டுக்குப் பின்புறம் பெரிய தென்னந்தோப்பு இருந்தது. சின்னண்ணாவும், சின்னப்பாவும் அவற்றில் ஏறி, இளநீர்க் குலைகளப் பறித்து, எல்லோருக்கும் தானம் வழங்குவார்கள். ஒருநாள் வாத்தியார் குற்றாலலிங்கம்பிள்ளை, சின்னப்பா தென்னைமரத்தில் இருப்பதைப் பார்த்து விட்டார். அவருக்குச் சரியான பூசை கிடைத்தது. அவ்வளவுதான். மறு நாள் சின்னப்பாவைக் காணோம். அவருடைய வீடு தேடிப் போனார்கள். பையன் அடி பட்டிருப்பதைப் பார்த்த அவரது தந்தையார், சின்னப்பாவை அனுப்ப மறுத்து விட்டதாகச் சொன்னார்கள்.

டி. பி. இராஜலெட்சுமி நாடகம்.

புதுக்கோட்டை நாடகம் முடிந்து காரைக்குடிக்குப் போனோம். அப்போது காரைக்குடியில் டி.பி. இராஜலட்சுமியின் நாடகம் நடந்துகொண்டிருந்தது. நானும், சின்னண்ணாவும் சிற்றப்பாவுடன் நாடகம் பார்க்கப் போயிருந்தோம். அன்று. சாவித்திரி நாடகம். எம். ஜி. நடராஜபிள்ளை சத்தியவாளுகவும். எமதர்மனகவும் நடித்தார். எஸ். வி. சுப்பையா பாகவதர் நாரதராக நடித்தார். அந்த நாளில் டி. பி. இராஜலட்சுமிக்கு, செட்டி நாட்டில் அபாரமான பேர். கடைசி நாடகமானதால் மக்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தார்கள்.

காரைக்குடியில் அப்போதிருந்து வந்த வழக்கத்தையும், நாட்டுக் கோட்டைச் செட்டிப்பிள்ளைகள் நாடகம் பார்க்கும் முறையைப்பற்றி இங்கே சற்று விபரமாகக் குறிப்பிடவேண்டியது இன்றியமையாதது எனக் கருதுகிறேன்.

காரைக்குடி அக்காலத்தில் செல்வம் கொழிக்கும் நகரமாக விளங்கியது. மற்ற ஊர்களிலெல்லாம் இல்லாத ஒரு புதுமையைக் காரைக்குடியிலே கண்டோம். நாடகக் கொட்டகையில் முதல் வகுப்பு கான்வாஸ்சேர்-அதாவது சாய்மான நாற்காலி, ஐந்நூற்றுக்கு மேற்பட்ட சாய்மான நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டும், சில நேரங்களில் படுத்துக் கொண்டுதான் செட்டிப் பிள்ளைகள் நாடகம் பார்ப்பார்கள். அந்த நாளில் மற்ற ஊர்களில் முதல் வகுப்பு ரூ. 1- 8.0 போடுவது வழக்கம். காரைக் குடியில் மட்டும் முதல்வகுப்பு ரூ. 2- 8.0 போடப்பட்டிருப்பதைப் .பார்த்து நாங்கள் வியப்படைந்தோம். சபையில் நான்கில் ஒரு பகுதியை நீளமாகத் தனியே தடுத்து அந்த இடம் பெண்களுக்காக ஒதுக்கப் பெற்றிருந்தது. முன்னால் சிறிது தூரம்வரை பாய் விரித்திருக்கும். அதற்கு எட்டணா கட்டணம். வெறும் தரையில் உட்காருவதற்கு ஆறணு கட்டணம். இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், பெண்கள் யாரும் முதல் வகுப்புச் சாய்மான நாற்காலிகளில் உட்காரக் கூடாது. ஆண்களோடு பெண்களும் சரிசமானமாக இருக்கக் கூடாது என்பது அவர்கள் எண்ணம். இதை யாரும் எதிர்க்காததால் நடைமுறையில் இந்த விதி ஒழுங்காகச் செயல் பட்டு வந்தது.

ஆண் பெண்ணாண அதிசயம்

டி.பி. இராஜலட்சுமியின் நாடகத்தைப் பார்த்து நானும் சின்னண்ணாவும் பிரமாதமாக ரசித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் சிற்றப்பாவோடு சாய்மான நாற்காலியில் அமர்ந்திருந்தோம், சிண்னண்ணாவுக்கு அப்போது பதினைந்து வயது. அழகிய தோற்றம்; நீளமான தலை முடி; பெண் போலவே இருப்பார். கைகளில் காப்பு, கொலுசு, சிறு தங்க வளையல்கள் எல்லாம் போட்டிருந்தார். காதில் ஐந்து கல் பதித்த கடுக்கனும் இருந்தது. எங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு செட்டியார், சின்னண்ணாவை முறைத்து முறைத்துப் பார்த்தார். யாரோ ஒரு பெண்தான் வேட்டி, சட்டை போட்டுக்கொண்டு வந்திருப்பதாக எண்ணிக்கொண்டார். அவர் நன்றாகக் குடித்திருந்தார். அந்தப் போதையும் இப்படி எண்ணாவதற்குத் துணை செய்தது. அவரால் சும்மா இருக்க முடியவில்லை. பக்கத்திலிருந்த மற்றொரு செட்டியாரிடம் சின்னண்ணாவைக் காட்டிப் புகார் செய்தார். அந்தச் செட்டியார், நாங்கள் மறுநாள் நாடகம் போடப் போவதை அறிந்தவர். எனவே அவர், “அது பையன்தான், பெண்ணல்ல” என்று கூறினார். நாடகம் நடந்து கொண்டிருக்கும் போதே முதல் வகுப்பில் இது பற்றிச் சலசலப்பு ஏற்பட்டது. பெண்ணென்றே கருதிய செட்டியார், இறுதியாக நேரிலேயே கேட்டுவிட முடிவு செய்தார். மெதுவாகச் சின்னண்ணாவிடம் நெருங்கி, “பெண்கள் இங்கே உட்காரக் கூடாது” என்றார், உடனே சிற்றப்பா சிரித்துக் கொண்டே, “பெண்ணல்ல ஐயா, அவன் பையன்” என்று கூறினார். இருந்தாலும் செட்டியார் மனம் அமைதியுறவில்லை. சில நிமிடங்கள் கழித்து மீண்டும், “நீ பெண்ணா, ஆணா?” என்று சிறிது கோபத்தோடு கேட்டார். சிற்றப்பாவுக்கும் கோபம் வந்து விட்டது. அவர் ஆத்திரத்தோடு, எழுந்து, “என்னய்யா, நான்தான் பையன்என்று சொன்னேனே; ஒரு மணி நேரமாக அவதிப் படுகிறீரே ! பையனா பெண்ணா. என்று பார்க்கிறீரா?” என்று சத்தம் போட்டார். சபையில் குழப்பம் ஏற்பட்டது. அப்புறம் தெரிந்தவர்கள் சிலர் வந்து, சிற்றப்பாவையும் செட்டியாரையும் சமாதானப் படுத்தினார்கள். பிறகு இறுதிவரையில் இருந்து, நாடகத்தை நன்கு ரசித்துப் பார்த்தோம்.

அபராதக் காணிக்கை

மறுநாள் எங்கள் நாடகம் தொடங்கியது. வசூல் அமோகமாக இருந்தது. இதற்கு முன் எந்த ஊரிலும் இந்த அளவுக்கு வசூலானதில்லை. மூன்று நாடகங்கள் நடைபெற்றதும் சின்னையா பிள்ளைக்குக் கொஞ்சம் நப்பாசை ஏற்பட்டது. முதல் வகுப்பு மட்டும் இரண்டரை ரூபாயிலிருந்து மூன்று ரூபாயாக உயர்த்தப் பெற்றது. அதற்கும் செட்டிப் பிள்ளைகள் சளைக்கவில்லை. மேலும் இரண்டு நாடகங்கள் நடைப்பெற்றன. மீண்டும் முதல் வகுப்புக் கட்டணம் மூன்றரை ரூபாயாக உயர்ந்தது. அப்போதுதான் செட்டிப் பிள்ளைகள் கட்டணம் உயருவதைக் கொஞ்சம் கவனித்தார்கள். இரண்டு நாடகங்களுக்குப் பின், முதல்வகுப்பு நான்கு ரூபாய் என அறிவிக்கப்பெற்றதும் செட்டிப்பிள்ளைகள் விழித்துக் கொண்டார்கள். அன்றும் நல்ல கூட்டம். நாடகம் தொடங்கியதும் முன் வரிசையில் இருந்தவர்கள் எல்லோரும் எழுந்து நின்று கட்டணம் நான்கு ரூபாயாக உயர்த்தப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தார்கள். சின்னையாபிள்ளை வந்து அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அன்றைய நாடகத்திற்கு ஆன வசூலி லிருந்து 125 ரூபாய்கள் கொப்புடையம்மன் கோயிலுக்கு அபராதக் காணிக்கையாகச் செலுத்தவேண்டும் என்றார்கள் சில பெரியவர்கள். சின்னையாபிள்ளை அவ்வாறே அபராதம் செலுத்தினார். அப்புறம் நாடகம் தொடர்ந்து நடைபெற்றது. மறுநாள் முதல் - மூன்றரை ரூபாய் கட்டணத்தோடு முதலாளிதிருப்தி அடைந்தார்.

ஐநூறு ரூபாய் சம்பளம்

காரைக்குடியில் வருவாய் அதிகமாக ஏற்பட்டதும் சின்னையாபிள்ளையின் சுபாவத்திலும்பெரிய மாறுதல் ஏற்பட்டது. பெரியண்ணாவுக்கும் அவருக்கும் அடிக்கடி தகராறுகள் நேர்ந்தன. தான் போட்ட பணமெல்லாம் புதுகோட்டை, காரைக்குடியிலேயே வந்து விட்டதாகவும், இனி யாருக்கும் பயப்படப் போவதில்லையென்றும் ஆத்திரத்தோடு பேசியதாகப் பழனியா பிள்ளை கூறினார். அம்மாவின் செவிக்கு இந்தச்செய்தி எட்டியதும் அவர்கள், உடனே நாங்கள் அங்கிருந்து விலகி, வேறு கம்பெனிக்குப் போகவேண்டுமென்று முடிவுசெய்தார்கள். இதைக்கேள்விப் பட்டதும் சின்னையாபிள்ளை மீண்டும் வந்து, தான் ஒன்றும் சொல்லவில்லையென்று சாதித்தார். நீண்ட நேரம் வாத பிரதி வாதங்கள் நடந்தன. கடைசியாக இனிமேல் கம்பெனியில் இருக்க வேண்டுமானுல் எனக்கும் சின்னண்ணாவுக்கும் ஐநூறு ரூபாய் சம்பளமும், ஆயிரம் ரூபாய் முன்பணமும் கொடுக்க வேண்டுமென்று பெரியண்ணா கேட்டார். வேறு வழியின்றி இந்தச் சம்பளத்திற்குச் சம்மதித்து முன்பணமாக ஐநூறு ரூபாய் கொடுத்தார் சின்னையாபிள்ளை.

நாங்கள் கேட்டபடி ஐநூறு ரூபாய் சம்பளம் கொடுத்தும் சின்னையாபிள்ளையிடம் பெரியண்ணாவுக்கு நம்பிக்கை ஏற்பட வில்லை. கூடலூரில் அவர் தற்கொலை செய்து கொள்ளச் சித்தமாயிருந்த நிலையையெல்லாம் மறந்து விட்டார்; ஆதலால் எந்த நிமிஷத்திலும் கம்பெனியை விட்டு நிறுத்திவிடக் கூடும் என்றெண்ணினார் அண்ணா. காரைக்குடி நாடகம்முடிந்ததும் மீண்டும் புதுக்கோட்டையில் சில நாடகங்கள் நடத்தி விட்டு மதுரைக்குப் பயணமானோம்.

சொந்தக் கம்பெனிக்கு ஆயத்தம்

மதுரை வந்ததும் பெரியண்ணா கணக்கர் வேலையிலிருந்து விலகிக் கொண்டார். அண்ணாவும் மாமாவும் கலந்து யோசித்தார்கள். எதிர்பாராது கம்பெனியில் தகராறு ஏற்படுமானால் உடனே சொந்தமாகக் கம்பெனி தொடங்குவதற்கான ஆயத் தங்களைச் செய்தார்கள். ஒரு தையற்காரரை வீட்டிலேயே அமர்த்தி, நாடகங்களுக்கு உடைகள் தயாரிக்க ஏற்பாடு செய்தனார். வெல்வெட், சரிகை முதலியவைகள் வாங்கப்பட்டன. எனக்கும் சின்னண்ணாவுக்கும் எல்லா நாடகங்களுக்கும் உடைகள் தயாராயின.

இந்த விபரத்தை அறிந்த சின்னையாபிள்ளை பெரிய அண்ணாவைக் கூப்பிட்டுக் காரணம் கேட்டார். “தங்களுடைய மனநிலை எப்படியெல்லாம் மாறுமென்று எங்களுக்குப் புரிய வில்லை. எதிர்பாராத நிலையில் திடீரென்று கம்பெனியை விட்டு விலக்கி விட்டால் என்ன செய்வது? அதற்காக, முன் எச்சரிக்கையாய்த் தயாராகிறோம். தாங்கள் சரியாக நடந்து கொள்ளும் வரையில் நாங்கள் கம்பெனியிலிருந்து விலகமாட்டோம்” என்று பெரியண்ணா உறுதி கூறினார்.

உடைகள் தயாரித்தது அம்மாவுக்குப் பிடிக்கவில்லை யென்றாலும், பெரியண்ணாவும் மாமாவும் இந்த வகையில் மிகவும் பிடிவாதமாக இருந்ததால் விட்டுக் கொடுத்தார். மதுரையில் நாடகங்கள் நல்ல வசூலோடு நடைபெற்றன.
------------------

9. குமார எட்டப்ப மகாராஜா


மதுரையில் நடைபெற்ற நாடகங்களை எட்டையபுரம் அரண்மனை அதிகாரிகள் சிலர் வந்து பார்த்தார்கள். அவர்கள் மூலம் நாடகங்களின் சிறப்பை அறிந்த எட்டையபுரம் அரசர், தமது திவானை அனுப்பிக் கம்பெனியை எட்டையபுரத்திற்கு அழைத்தார். அரசனின் அழைப்பை ஏற்று, எட்டையபுரம் சென்றாேம். எட்டையபுரம் கொட்டகையில் நாடகங்கள் நடை பெற்றன. அப்போது எட்டையபுரம் அரசராக இருந்தவர் குமார எட்டப்ப மகாராஜா. இவர் மிகுந்த கலையுண்ர்ச்சியுடையவர்: வயது முதிர்ந்தவர்; தாத்தா மகாராஜா என்றுதான் இவரைக் குறிப்பிடுவார்கள். இவரது புதல்வர்கள் இருவ மூத்தவர் தங்க மகாராஜா. இளையவர் காசி மகாராஜா. எல்லோரும் கலையறிவு நிறைந்தவர்கள். ஊருக்குப் பொதுவாக அமைக்கப் பெற்றிருந்த நாடக அரங்கத்தைத் தவிர, அரசருக்கென்றும், அவரது புதல்வர்களுக்கென்றும் தனித்தனியாகப் பல நாடக அரங்குகள் அங்தவர் அரண்மனைக்குள்ளேயே அமைக்கப் பெற்றிருந்தன. தாத்தா மகாராஜாவுக்கு முன்னர் அரசராக இருந்தவர் ராஜா ஜெகவீர ராம வெங்கடேசுர எட்டப்பர். அவர் காலமாகிவிட்டதாலும், அவருக்குப் புதல்வர்கள் இல்லாததாலும் ஜமீன் பட்டம் அவரது சிற்றப்பாவாகிய இளைய பரம்பரைக்கு வந்து விட்டது.

தாத்தாவின் அறிவுரை

எட்டையபுரம் போன இரண்டாம் நாள் நாங்கள் அனைவரும் தாத்தா மகாராஜாவைப் பார்க்கப் போனோம். பிரம்மாண்டமான அரண்மனை, அதற்கு முன் அதைப் போன்ற ஒருகட்டிடத்தை நாங்கள் பார்த்ததே இல்லை. அரசர் சாய்மான நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவர் எங்களைப் போலவே இடுப்பில் வேட்டி, மேலே சட்டை எல்லாம் போட்டுக் கொண்டு சாதாரணமாக இருந்தார். நான் அரசரை வேறுவிதமாக உருவகப் படுத்தி வைத்திருந்தேன். வெல்வெட் சரிகையில் கால்சட்டை, மேலங்கி யெல்லாம் அணிந்திருப்பார்; பீதாம்பரம் மேலே போட்டிருப்பார், என்றெல்லாம் எண்ணியிருந்தேன். அரசர் சாதாரணமாகவும், எளிமையாகவும் இருக்கவே எங்களுக்குத் தைரியம் ஏற்பட்டது. நாங்கள் எல்லோரும் கைகூப்பி வணங்கி நின்றோம். அவர் எங்களிடம் நாடகங்களைப்பற்றிப் பேசத் தொடங்கினார், ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தார். திடீரென்று ஒரு நிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு, “நீங்களெல்லாம் குடிகாரர்களாகிக் கெட்டுப் போகக் கூடாது. எம். ஆர். கோவிந்தசாமி, குடியினால்தான் அழிந்தான். இன்னும் எத்தனையோ கலைஞர்கள் குடிப் பழக்கத்தால் நாசமாகியிருக்கிறார்கள். இந்தக் காலத்தில் தந்தையார் கூடத் தம் புதல்வர்களுக்கு மருந்து என்று சொல்லி மது வகைகளைக் கொடுக்கிறார்கள். அப்படிக் கொடுத்தாலும் நீங்கள் குடிக்கக் கூடாது. பிறகு அதுவே பழக்கமாகி விடும்” என்றார்.

அரசர் இவ்வாறு கூறியதும் நானும், சின்னண்ணுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். சென்னையில் எங்கள் தந்தையார் மலேரியா ஜுரத்திற்குப் பிராந்தியை மருந்தாகத் தந்தது நினைவிற்கு வந்தது.

கல்யாணராமையர்

அரசரின் எதிரே ஆள் உயரத்தில் ஒரு படம் சுவரில் மாட்டப் பெற்றிருந்தது. வேட்டியை மூலக் கச்சமாகக் கட்டி, நீண்ட கோட்டு, தலைப்பாகையெல்லாம் அணிந்து, அந்தப் படத்தில் காணப்பட்ட உருவத்தை நாங்கள் யாரோ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என எண்ணினோம். அரசர் அந்தப் படத்தை எங்களுக்குச் சுட்டிக் காட்டி,

“இதோ, இந்தப் படத்திலிருப்பவர்தான் பிரபல நடிகர் கல்யாணராமையர். பெண்ணாக நடிப்பதற்கு அவரைப்போல் இனியொருவர் பிறக்க வேண்டும். பாமா விஜயத்தில் அவர் சத்தியபாமாவாக நடித்தது இன்னும் என்கண்முன்னே நிற்கிறது. அவரது நினைவு மாறாதிருக்கவே இந்தப் படத்தை எதிரே வைத்திருக்கிறேன். நானறிந்தவரையில் இவர் ஒருவர்தான் குடிக்காத நடிகர்” என்று கூறினார்.

பிறகு, கல்யாணராமையர் நாடகக் குழுவின் சிறப்பையும், அந்தக் குழுவில் நடிகர்களாக இருந்த ராமுடு ஐயர், சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோர் பெருமையையும்பற்றி நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தார். சிறுவர்களாக இருந்ததால், அவருடைய நீண்ட பேச்சு எங்களுக்கு அலுத்துப் போய்விட்டது. பிறகு, தம் சமஸ்தானத்தின் வெளியீடாக அச்சிட்ட கல்யாணராமையரின் பாமா விஜயம், லதாங்கி ஆகிய இரு நாடகங்களையும் கொண்டு வரச் சொல்லி, என் கையில் ஒரு பிரதியும் சின்னண்ணா கையில் ஒரு பிரதியும் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

மனோஹரனுக்குச் சிறப்பு

அன்றிரவு அரசரின் அரண்மனை அரங்கில் மனோஹரா நாடகம் வைக்கப் பெற்றிருந்தது. அரசரும், அவரது இகளய புதல்வர் காசி மகாராஜாவும், மற்றும் சில அதிகாரிகளும் மட்டும் கூடியிருந்தார்கள். அவர்களுக்குப் பின்புறம் அந்தப்புரப் பெண்கள் இருப்பதாகப் பேசிக் கொண்டார்கள். ஆனால், எங்களுக்குத் தெரியவில்லை. பத்துப் பதினைந்து பேர் முன்னிலையில் நாடகத்தை நடிப்பது எங்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அன்று எனக்கும் சின்னண்ணாவுக்கும் மிகப் பெரிய பதக்கங்கள் பரிசளிக்கப் பட்டன. ஒவ்வொரு பதக்கமும் ஆறு பவுனில் செய்யப்பட்டிருந்ததாகச் சொன்னார்கள். காட்சிகள் நடந்து கொண்டிருக்கும்போது இடையே என்னை அழைத்தார்கள். நான் போய் வணங்கி நின்றேன். காசி மகாராஜா தமது புதல்வரின் கழுத்திலிருந்த ஒரு வைரம் பதித்த சங்கிலியைக் கழற்றி என் கழுத்தில் போட்டார். அப்படியே சின்னண்ணாவுக்கும் ஒருதங்கச்சங்கிலி பரிசு கிடைத்தது. மற்றும் பலநடிகர்களுக்கும் பரிசுகள் வழங்கினார்கள். நாடகம் முடிந்து, வீடு திரும்பினோம்.

மறுநாள்காலை மீண்டும் அரசர் எங்களைக் கூப்பிட்டனுப்பினார். முதல் நாள் அரசர் உட்கார்ந்திருந்த இடத்திற்கு மிக அருகிலேயே ஒரு சிறிய நாடக அரங்கு இருந்தது. மனோஹரன் சங்கிலியறுக்கும் காட்சியை அந்த அரங்கிலே நடிக்கச் சொன்னார் அரசர். எனக்கு என்னவோபோலிருந்தது. பகல்வேளை, உடைகள் இல்லை; ஒப்பனை இல்லை; சங்கிலியில்லை. இரண்டுபேர். மேல் துண்டை என் கைகளிலே கட்டியிழுத்துப் பிடித்துக் கொண்டார்கள். நான் எப்படியோ ஒரு வகையாக நடித்தேன். அரசர், தம் பேரரின் கையிலே போட்டிருந்த மோதிரத்தைக் கழற்றி என் கையிலே போட்டார். அவரது போற்றத் தகுந்த அந்தக் கலையுணர்ச்சி, அன்று எனக்குப் புரியவில்லை. இன்று அதன் சிறப்பினை எண்ணிப் பெருமகிழ்ச்சியடைகிறேன். அன்றைய மறு நாள் காசி மகாராஜா அரண்மனையிலுள்ள நாடக அரங்கில் மனோஹரன் நாடகம் நடந்தது. அன்று தாத்தா மகாராஜா வரவில்லை. மற்றவர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். மற்றும் பல பரிசுகள் வழங்கப் பெற்றன. சின்னண்ணாவுக்கு அந்தப்புரப் பெண்கள் ஒரு புடவையைப் பரிசாக அனுப்பினார்கள்.
--------------

10. கலைவள்ளல் காசிப் பாண்டியன்


காசிப் பாண்டியன் அவர்களைப்பற்றி இங்கே சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். வீரபாண்டியக் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தது எட்டப்பர் பரம்பரை என்று நாம் எல்லோரும் பேசி வருகிறோம். அதே நேரத்தில் அந்தப் பரம்பரையில் பின்னால் தோன்றிய பல ஜமீன்தார்கள், தமிழ் மொழிக்கும், தமிழ்க் கலைக்கும் செய்துள்ள சிறந்த சேவையை நாம் நன்றி யுணர்வோடு போற்றவும் கடமைப் பட்டிருக்கிறோம். இராமநாதபுரம் சேதுபதி மன்னார்கள், தமிழ்ப் புலவர்களை ஆதரிப்பதில் எவ்வாறு முன்னணியில் நின்றார்களோ, அதேபோன்று கலைஞர்களை ஆதரிப்பதில் காசிப் பாண்டியன் அவர்களும், அவரது முந்திய பரம்பரையினரும் முன்னணியில் நின்றார்கள் எனக் கூறுவது சிறிதும் மிகையாகாது. இசை, நடனம், நாடகம், சிற்பம், சித்திரம் ஆகிய நுண்கலைகளையெல்லாம் நமது தமிழ் மன்னார்கள் ஆதரித்து வளர்த்தார்கள் என்பதற்குச் சான்றாக விளங்கக் கூடியவர் காசிப் பாண்டியன் அவர்கள். காசிப் பாண்டியன் சித்திரக் கலையில் வல்லவர். புகைப்படம் எடுப்பதில் நிபுணர். இசைக் கலையிலே தேர்ந்தவர். இவரது அரண்மனையில் எப்போதும் இன்னிசை முழங்கிக் கொண்டே இருக்கும். இவரது கையால் வரைந்த அற்புதச் சித்திரங்கள் சுவரை அழகுபடுத்தி நிற்கும். இசைக் கலைஞர்களுக்கும், நாடகக் கலைஞர்களுக்கும் பரிசுப் பொருட்களை வாரி வாரி வழங்கிய பெரு வள்ளல் என இவரைக் கூறலாம். இவரது அரண்மனையே ஒரு காட்சி சாலையாக விளங்கியது. இவர்கள் தந்த பரிசுகளும், காட்டிய ஆதரவும் எங்கள் நாடக வாழ்க்கையில் குறிப்பிடத் தக்க இடம் பெறக்கூடியவையாகும்.

எட்டையபுர அரசரின் அழைப்பு எங்களுக்கு எல்லா வகை யிலும் சிறப்பாக அமைந்தது. மற்றும் சில நாடகங்களை நடித்து விட்டு மதுரைக்குத் திரும்பினோம்.

தீ விபத்து

மதுரையில் நாடகம் முடிந்ததும் இராமநாதபுரத்தில் - நாடகம் தொடங்குவதாக ஏற்பாடு. இராமநாதபுரத்தில் அப்போது கொட்டகையில்லாததால் சொந்தத்தில் கீற்றுக் கொட்டகை போட்டார்கள். எட்டையபுரம் நாடகம் முடிந்ததும் இராமநாதபுரம் போவதாக இருந்ததால், கம்பெனியின் காட்சிச் சாமான்களும் இராமநாதபுரத்திற்கு அனுப்பப்பட்டன. நாங்கள் மதுரைக்குத் திரும்பியதும் திடுக்கிடத்தக்க செய்தி கிடைத்தது. இராமநாதபுரம் கொட்டகையும் அதிலிருந்த சாமான்களும் யாரோ வைத்த தீயால் எரிந்து சாம்பலாகி விட்டதாக அறிந்தோம். சின்னையாபிள்ளை அலறியடித்துக் கொண்டு இராமநாதபுரத்திற்கு ஓடினார்.

எட்டையபுரம் நாடகத்திற்காக உடைகளைக் கையோடு வைத்திருந்ததால் அவை மட்டும் விபத்துக்கு இரையாகாமல் தப்பின. இராமநாதபுரம் சென்றிருந்த சின்னையாபிள்ளை துயரத்தோடு திரும்பினார். அப்போது; பிரபல ஓவியர் கொண்டையராஜு கம்பெனியில் இருந்தார். அவரைக் கொண்டு புதிய சாமான்கள் எழுதத் திட்டம் போட்டார்கள். மதுரையிலேயே மேலும் சில நாடகங்கள் நடத்திவிட்டுத் திருநெல்வேலிக்குப் பயணமானோம்

பழனியாபிள்ளை விலகினார்

திருநெல்வேலி மனோரமா தியேட்டரில் நாடகங்கள் நல்ல வசூலுடன் நடைபெற்றன. ஒவியர் கொண்டையராஜு புதிதாகச் சாமான்கள் எழுதத் தொடங்கினார். இந்த நிலையில் பழனியா பிள்ளைக்கும் சின்னையாபிள்ளைக்கும் மன வேற்றுமை ஏற்பட்டது. ஆதிமுதலே உண்மையாக உழைத்து வந்தவர் பழனியாபிள்ளை. அவர் பணம் எதுவும் போடாதவர். உழைப்புப் பங்காளி. புதுக் கோட்டை, காரைக்குடி, மதுரை ஆகிய இடங்களில் வசூல் மிகவும் லாபகரமாக இருந்தது. அந்தச் சமயத்தில்கூட பழனியா பிள்ளைக்குப் பங்கு எதுவும் கொடுக்கவில்லை. எனவே பழனியா பிள்ளை கம்பெனியிலிருந்து விலகிக் கொண்டார். அவர் தொடர்ந்து கம்பெனியில் உழைத்து வந்தவரானதால் எல்லோ ருக்கும் அவரிடம் மதிப்பும் அனுதாபமும் இருந்தன. பிரிந்துபோன அவர் உடனடியாகச் சொந்த கம்பெனி துவக்க ஏற்பாடு செய்வ தாகவும் அறிந்தோம். அவர்மீது பற்றுக் கொண்ட சில நடிகர்கள் கம்பெனியை விட்டுச் சொல்லாமலேயே விலகி அவரிடம் போய்ச் சேர்ந்தார்கள். வேறு சில முக்கியமான தொழிலாளர் களும் அவருக்காக விலகினர்கள். திருநெல்வேலி நாடகம் முடிந்து நாகர்கோவிலுக்குச் சென்றோம்.
-------------

11. நாஞ்சில் நாட்டில்


நாகர்கோவிலில் எங்களுக்கு உறவினார்கள் பலர் இருந்தார்கள். நான், எனக்கு அறிவு தெரிந்த பருவம் முதல் மதுரையில் இருந்து வந்ததால் உறவினார்கள் எவரையுமே சந்தித்ததில்லை. நாகர்கோவிலில்தான் முதன்முதலாக அந்த வாய்ப்பு ஏற்பட்டது. தந்தை வழியில் சொந்தக்காரர்களான பலரை அம்மா எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். அம்மாவின் உடன் பிறந்த தங்கை, அம்முக்குட்டியம்மாள் நாகர்கோவிலுக்குப் பத்து மைல் தொலைவிலுள்ள அழகிய பாண்டியபுரத்தில் வாழ்க்கைப்பட்டிருந்தார். சின்னஞ்சிறு வயதில், சில காலம் நானும் அழகிய பாண்டியபுரத்தில் சித்தி வீட்டில் இருந்திருக்கிறேன். சித்தியைப் பார்த்ததும் சின்னஞ்சிறு பருவத்தில் நடந்த நிகழ்ச்சிகள் என் நினைவுக்கு வந்தன.

சின்னஞ்சிறு வயதில்

அப்போது எனக்கு நான்கு வயது இருக்கும். அழகிய பாண்டியபுரத்தில் சித்தி வீட்டில் இருந்தேன். நான் எப்போது போனாலும் சித்தி எனக்கு அவல் விரவிக்கொடுப்பார்கள். நாஞ்சில் நாட்டுச் சம்பா அவல் மிகுந்த சுவையாக இருக்கும். அவலை உரலில் போட்டு இடித்து, வெல்லச்சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஏலம், சுக்கு இவை எல்லாம் போட்டு விரவித் தருவார்கள். ஒரு நாள் யாரோ நண்பர்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். சித்தி இரும்பால் செய்யப்பட்ட அரைப்படி நாழியை எடுத்துக் கொண்டு, வீட்டின் எதிரேயுள்ள கடையில் அவல் வாங்கப் புறப்பட்டார்கள். உடனே நான் நாழியை அவர்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டு, அவல் வாங்கக் கடைக்கு ஓடினேன். அவலை வாங்கிக் கொண்டு மீண்டும் வேகமாக வீட்டுக்குத் திரும்பினேன். ஏதோ கல் தடுக்கியது; கால் இடறி நாழியோடு கீழே குப்புற விழுந்தேன். விழுந்த வேகத்தில் நாழியின் கூரான விளிம்பு, என் நாடியின் வலப்புறத்தில் தாக்கியது. ஆழமான காயம், ரத்தம் கொட்டியது. சித்தி ஓடி வந்து, என்னை மார்போடு அணைத்துக் கொண்டார்கள். உடனடி சிகிச்சை செய்யப் பெற்றது. காகிதங் கள் சிலவற்றைக் கொளுத்தி, அந்தக்கரியைத் தேங்காயெண்ணெ யில் குழப்பிக் காயம்பட்ட இடத்தில் வைத்துக் கட்டினார்கள். ரத்தம் வருவது நின்றது. இரண்டொரு நாட்களில் காயமும் ஆறிவிட்டது. வேறு எந்த மருந்தும் போட்டதாக எனக்கு நினைவில்லை. 56 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், அந்தக் காயத்தின் வடுமட்டும் சித்தி வீட்டின் நினைவாக இன்னும் மாறாமல் இருக்கிறது. சித்தியிடத்தில் அம்மா அதிகமான அன்பு வைத்திருந்தார். வறுமையாயிருந்த நிலையில்கூடச் சித்திக்குப் பல வகைகளில் உதவிபுரிந்து வந்தார்.

பகவதி பிறந்த ஊர்

நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரிக்குப் போகும் வழியில் மூன்றாவது மைலில், ஆசிராமம் என்ற ஒரு சிற்றுார். அந்த ஊரில் தந்தையார் குடும்பத்தோடு சில காலம் வசித்து வந்தார். ஆசிராமத்தில் தம்பி பகவதி பிறந்தான். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது நான் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஏடு படித்துக் கொண்டிருந்தேன். எங்களைத் தனியே விட்டு அப்பா அடிக்கடி நாடகத்திற்காக வெளியூர்களுக்குப் போவார். ஒருமுறை தாமரைக்குளம் என்னும் அருகேயுள்ள சிற்றுாரில் அப்பா நல்லதங்காள் வேடம் பூண்டு நடிப்பதை நான் பார்த்திருக்கிறேன். அன்று, நான் ஏழாவது பிள்ளையாக நடித்ததை முன்பே கூறியிருக்கிறேன். ஏதோ கனவுபோல் இருக்கிறது. அப்பா ஆறு பிள்ளைகளையும் கிணற்றில் போட்டுவிட்டு என்னைத் தூக்க வந்தார். நான் அழத் தொடங்கிவிட்டேன். அவர் பிடிக்கு அகப்படாமல் உள்ளே ஒடினேன். அப்பா என்னைத் துரத்திப் பிடித்துக் கிணற்றில் போட்டதாக நினைவு.

சுட்டித்தனம்

ஒருநாள் வீட்டின் வெளியே நடுத்தெருவில் விளையாடிக் கொண்டிருந்தேன். கன்னியாகுமரிக்குப் போகும் முக்கியமான சாலை அது. அந்தக் காலத்தில் போக்கு வரத்து அதிகம் இல்லை. என்றாலும், மணிக்கொரு வண்டியாவது போய்க்கொண்டுதான் இருக்கும். யாரோ ஒருவர் சைக்கிளில் வேகமாக வந்தார். அவரைத் தடுக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது. சைக்கிளை வழிமறித்து நின்றேன். அவர் மற்றொரு புறமாக விலகிச் சென்றார். நானும் விடவில்லை. அந்தப் பக்கமும் ஒடி வழிமறித்தேன். என்னைத் தாண்டிச் செல்ல அவர் சைக்கிளை இருபுறமும் திருப்பி ஒட்டினார். அதுவும் பலிக்கவில்லை. நான் வீரனல்லவா? விடுவேனா? குறுக்கே விழுந்து தடுத்தேன். அவர் வேகமாகப் போக முயன்றதால் சைக்கிள் என்மீது பலமாக மோதியது. நானும் அவரும் கீழே விழுந்ததோடு, சைக்கிளும் விழுந்தது. வீதியில் ஒரே குழப்பம். அப்பா ஓடி வந்து, என்னையெடுத்து அணைத்துக் கொண்டார். சைக்கிள்காரருக்கு நல்ல பூசையும் விழுந்தது. அவரைப் பார்க்க எனக்கே பரிதாபமாக இருந்தது. பாவம், அவர் என்னசெய்வார்? நானல்லவா குற்றவாளி! நாகர் கோவிலில், இந்தப்பழைய நினைவுகளெல்லாம் எனக்கு இன்பமாக இருந்தன.

பகவதி பால பார்ட்டு

நாடகங்கள் ஒழுகினசேரி சரஸ்வதி தியேட்டரில் நடை பெற்றன. நல்ல வசூலும் ஆயிற்று. அந்த நாளில் ‘பாலபார்ட்டு’ என்று ஒரு வேடம் உண்டு. மூன்று அல்லது ஐந்து பேர், திரை தூக்கியவுடன் மேடைமீது நின்று தோத்திரப் பாடல்களைப்பாடுவார்கள். அவர்கள் சில பாடல்களைப் பாடிவிட்டு, உள்ளே வந்ததும் ‘பபூன்’ போவார். அவரும் சில பாடல்களைப் பாடுவார். அதன் பிறகுதான் நாடகக் காட்சி தொடங்கும். இந்தப் பால பார்ட்டுகளில் ஒருவகைத் தம்பி பகவதியும் நாகர்கோவிலில் அரங்கேறினன். நடிகர்கள் கூட்டமாகப்பாடப் பயிற்சி பெறுவதற்கு இந்த பால பார்ட்டு மிகவும் உபயோகப்பட்டது. தாளம் சரியாக வராதவர்களையெல்லாம் பால பார்ட்டில் ஒரு மாத காலம் போட்டு வைத்தால், கூட்டத்தோடு பாடி அவர்களுக்குத் தாளம் வந்துவிடும். பகவதியும் இவ்வாறு பயிற்சி பெறத் தொடங்கினன். நாகர்கோவில் நாடகம் முடிந்து, திருவனந்தபுரம் போகலாமென்று சிற்றப்பா, மாமா ஆகியோர் கருத்துத் தெரிவித்தார்கள். திருவனந்தபுரம் எங்களுடைய சொந்த ஊரானதால் நாங்கள் அங்கேயே கம்பெனியைக் கலைத்துவிடக் கூடுமெனச் சின்னையாபிள்ளை பயந்தார். எனவே, கொல்லம் கொட்டகையைப் பேசி வந்தார். நாகர்கோவில் நாடகம் முடிந்து கொல்லத்திற்குச் சென்றோம்.

மகரக்கட்டு

கொல்லம், காயிக்கரை முதலாளி சாய்புவின் கொட்டகையில் நாடகங்கள் நடைபெற்றன. கொல்லத்தில் சின்னண்ணாவுக்கு, “மகரக் கட்டு ஏற்படுவதற்குரிய அறிகுறிகள் தோன்றின. பெண்கள் மங்கைப் பருவம் அடையும்போது உடலிலே மாறுதல் ஏற்படுவதுபோல் ஆண்களின் பருவ வளர்ச்சியைக் காட்டுவதற்குரிய அறிகுறிதான் ‘மகரக்கட்டு’ என்பது. பதினைந்து அல்லது பதினாறாவது வயதில் இந்த மகரக்கட்டு தோன்றும். இனிமையான குரல் மாறி கனமான குரல் ஏற்படும். இந்த இடைக்காலம் அந்த நாளில் நடிகர்களுக்கு மிகவும் பயங்கரமான காலமென்று சொல்லலாம். குரல் நாம் நினைக்கிறபடி கட்டுப்படாமல் அதன் போக்கில் நம்மை இழுத்துப் போகும். பிசிர் அடிக்கும் பருவம் என்று நாங்கள் இதைக் குறிப்பிடுவோம். பாட்டுக்கு முதன்மை யிருந்த காலமாதலால் பெரும்பாலான நடிகர்கள் இந்தக்கட்டத்தைத் தாண்டுவது கஷ்டம். இந்த மகரக்கட்டு வரும் சமயத்தில் பெரும்பாலும் நடிகர்கள் மதிப்பிழந்து விடுவார்கள். குரலிலே கோளாறு ஏற்படுகிறது என்று தெரிந்ததும் அவருடைய வேடங்களெல்லாம் உடனடியாக மாற்றப்படும். அதிலும் பெண்வேடம் புனையும் இளைஞர்களுக்கு இந்த நேரத்தில் சொல்ல முடியாத மனோவேதனை.

சின்னண்ணாவுக்கு மகரக்கட்டு ஏற்படுவதைக் கண்ட சின்னையாபிள்ளை ஏதேதோ சொன்னதாக அறிந்தோம். “இனி மேல் முத்துசாமி, வேடத்திற்குப் பயன்பட மாட்டான். ஷண்முகத்திற்கு மட்டும் ஐநூறு ரூபாய் சம்பளம் தர இயலாது” என்று சின்னையாப் பிள்ளை சொன்னதாகப் பெரியண்ணா வந்து கூறினார். குறைந்த சம்பளம் போட்டுப் புதிதாக ஒப்பந்தம் எழுத வேண்டுமென்றும் பேசிக் கொண்டதாக அறிந்தோம். பெரியண்ணாவுக்கும் சின்னையாப் பிள்ளைக்கும் பேச்சு வார்த்தை தடித்தது. அம்மாவுக்கு இந்தச் செய்தி எட்டியதும், எந்தக் காரணத்தைக் கொண்டும் கம்பெனியிலிருந்து விலகக்கூடாதென்று சொல்லிக்கொண்டிருந்த அவர்கள், உடனேயே கம்பெனியிலிருந்து விலகிவிட வேண்டுமென அறிவித்தார்கள். இரண்டு நாட்களில் கம்பெனியை விட்டுப் பிரிந்து திருவனந்தபுரம் வந்து சேர்ந்தோம்.
----------------

12. ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா


திருவனந்தபுரம் ஆரிய சாலைத் தியேட்டரில், உள்ளேயே சில வீடுகள் இருந்தன. அங்கே வந்து தங்கி, சொந்தக் கம்பெனி ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்தோம். மாமா செல்லம்பிள்ளை பல இடங்களுக்குப் போய், புதிய பையன்களைக் கொண்டு வந்து சேர்ந்தார். எஸ். எஸ். சங்கரன் நன்றாகப் பாடக் கூடியவர். அவரைத் திருநெல்வேலியிலிருந்து அழைத்து வந்தார்கள். அவருக்குக் கோவலன் பாடம் கொடுக்கப்பெற்றது. கம்பெனிக்கு, ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா எனப் பெயர் சூட்டப் பெற்றது. திருவனந்தபுரத்தில்தான் கம்பெனியைத் துவக்கினோம். என்றோலும், மதுரை நகரத்தின்பால் எங்களுக்கு ஏற்பட்டிருந்த பற்றுதலினல் ‘மதுரை ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா’ என்றே பெயர் வைத்தோம். நாடகங்கள் வேகமாய்த் தயாராயின.

விளையும் பயிர் முளையிலே

மாமா நாகர்கோவிலிலிருந்து நாலைந்து பையன்களைக்கூட்டி வந்திருந்தார். அவர்களில் ஒருவருடைய சாரீரம், மகரக் கட்டு வந்து, தேறிய சாரீரம் போல் கனமாகவும் கம்பீரமாகவும் இருந்தது. புதிய பையன்களுக்குப் பாட்டுகளைச் சொல்லி வைக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப் பெற்றது. புதிதாக வந்த நான்கு பேரையும் உட்கார வைத்து நான், ‘மூல மந்திர மோன நற்பொருளே’ என்னும் சுவாமிகளின் பாடலைச் சொல்லிக் கொடுத்தேன். ஐந்தாறு முறை சொல்லிக் கொடுத்து விட்டுத். தண்ணிர் குடிக்கச் சென்றேன். மீண்டும் மாடிக்கு வரும்போது, புதிதாக வந்தவர்களில் கனமான சாரீரமுடையவர், மற்ற மூன்று பேருக்கும் அந்தப் பாடலைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். எனக்கு ஒரே வியப்பாக இருந்தது. “இந்தப் பாட்டு உனக்கு ஏற்கனவே தெரியுமா?” என்று அவரைக் கேட்டேன். “நாகர்கோவிலில் உங்கள் நாடகம் நடைபெற்றபோது நான் அடிக்கடி வந்து பார்த்திருக்கிறேன். பால பார்ட்டுகள் இந்தப் பாடலைத் தினமும் பாடுவதைக் கேட்டிருக்கிறேன்” என்றார். எனக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. “சரி, நீயே சொல்லிக் கொடு” என்று சொல்லி விட்டு, நான் வேறு வேலையைக் கவனிக்கச்சென்றேன். பாடம் சொல்லிக்கொடுத்த முதல் நாளே ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அந்த இளைஞர் யார் தெரியுமா? அவர்தாம் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன். விளையும்பயிர் முளையிலே தெரியும் என்பார்கள். அதைப்போல என். எஸ். கிருஷ்ணன், வருங்காலத்தில் மகோன்னதமாக விளங்கப்போகிறார் என்பதை அவரது இளம் பருவச் செயல்கள் காட்டின.

விளையாட்டுத் திறன்

மாதம் பதிமூன்று நாடகங்கள் நடந்துகொண்டிருந்த காலமாதலால் எங்களுக்கு நிறைய ஒய்வுண்டு. ஒய்வுநேரங்களில் பலீன் சடுகுடு, கிளிதட்டு, நொண்டி, பிள்ளையார் பந்து முதலிய பலவிதமான விளையாடல்களை நாங்கள் ஆடுவோம். எந்த விளையாட்டுக்கும் இரண்டு கட்சி உண்டல்லவா? கட்சி பிரிக்கும் போது ஒவ் வொருவரும், என். எஸ். கிருஷ்ணன் எந்தக் கட்சியில் இருக்கிறாரோ, அந்தச் கட்சியில் சேரவே விரும்புவார்கள். ஏன் தெரியுமா? என். எஸ். கிருஷ்ணன் இருக்கும் கட்சி கண்டிப்பாய் வெற்றி பெறும். நான் எப்போதும் என். எஸ். கே. கட்சியில் தான் சேருவேன்.

‘கிளித்தட்டு’ என்பது ஒரு நல்ல விளையாட்டு, அதில் ஒவ்வொரு கட்சியிலும் கிளியாக இருப்பவருக்குச் சில தனி உரிமைகள் உண்டு. கட்டத்தைச் சுற்றி வரவும், குறுக்கே தாண்டியடிக்கவும் கிளிக்கு மாத்திரம் உரிமையுண்டு. இந்த ஆட்டத்திலும் வழக்கமாக என். எஸ். கே. கட்சிதான் வெற்றி பெறும். அவர் கிளியாக நின்று அற்புதமாக விளையாடுவார். வழக்கமாக அவர் கட்சி ஜெயிப்பதைக் கண்டதும், நாங்கள் எல்லோரும் அவரை இரு கட்சியாருக்கும் பொதுக் கிளியாக இருக்க வேண்டுமென்று சொல்வோம். அவ்வாறே அவர் பொதுக்கிளியாக இருந்து, ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் தம் கட்சிக்கு வெற்றியைத் தேடிக் கொடுப்பார்.

விளையாட்டுகளில் இவ்வாறு முதன்மை பெற்றிருந்தாலும் நாடகங்களில் சிறிய பாத்திரங்களையே தாங்கி வந்தார். அவர் கோவலனில் பாண்டியன், சாவித்திரியில் சத்தியவானின் தந்தை துயுமத்சேனன், மனோஹரனில் பெளத்தாயணன் இவைதாம் என். எஸ். கிருஷ்ணனுக்குத் துவக்கத்தில் கிடைத்த வேடங்கள்.

எஸ். ஆர். ஜானகி நாடகம்

திருவனந்தபுரம் ஆரிய சாலையில் எங்கள் கம்பெனி தொடங்கிய நேரத்தில், ஓவியர் பொன்னுசாமிப் பிள்ளை கம்பெனியார் அங்கே நாடகங்கள் நடத்தி வந்தார்கள். அவர்களும் எங்களுடனேயே தியேட்டருக்குள் குடியிருந்தார்கள். அவர்களுடைய நாடகங்கள் சிலவற்றைப் பார்க்க எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்தக் கம்பெனியில் எஸ். ஆர். ஜானகி அம்மாள் கதாநாயகனாக நடித்து வந்தார். கதாநாயகி எஸ். என் இராஜலட்சுமி, ஜானகியம்மாள் மிக நன்றாக பாடுவார். அவரது குரல் கெம்பீரமாக இருக்கும். வேடம் புனைந்து, மேடைக்கு வந்துவிட்டால் பெண் என்ற நினைவே சபையோருக்கு ஏற்படாது, தோற்றம், நடை, பாவனை எல்லாம் ஆண் போலவே இருக்கும். அவர்கள் நடித்த நாலைந்து நாடகங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்ததும் எங்களுக்கெல்லாம் அவர்கள் மீது பற்றுதல் உண்டாகி விட்டது. நாங்கள் எங்கள் அன்னையாருடன் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையிலேயே தங்கியிருந்தோம். எஸ்.ஆர். ஜானகியம்மாள் எங்கள் தாயாருடன் நெருங்கிப் பழகினார்கள். அங்கு, சிலநாட்கள் ஒன்றாகக் குடியிருந்து விட்டு, அவர்கள் பிரிந்து சென்றபோது எங்களுக்கு வருத்தமாக இருந்தது.

நாடகத் துவக்கம்

1925 பிப்ரவரி 15 ஆம் நாள் சின்னையாபிள்ளை கம்பெனியை விட்டு விலகினோம், ஒன்றரை மாதத்திற்குப் பின் 1925 மார்ச்சு 31ஆம் நாள், ஆரியசாலைத் தியேட்டரில், எங்கள் சொந்தக் கம்பெனியின் முதல் நாடகம் அரங்கேறியது. ஆரம்ப நாடகம் கோவலன்.

நாடகக் கம்பெனி தொடங்குவதற்காய் நாங்கள் செலவிட்ட பணம் சுமார் ஐநூறு ரூபாய். சின்னையாபிள்ளை கம்பெனியிலிருந்து பல நடிகர்கள் எங்கள் கம்பெனிக்கு வரத் தயாராக இருந்தார்கள். என்றாலும், அம்மா யாரையும் சேர்த்துக் கொள்ளக் கூடாதென்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள். கோவலனாக நடித்த எஸ். எஸ். சங்கரன் முன்பே நாடகங்களில் நடித்தவர். மற்ற நடிகர்கள் அனைவரையும் புதிதாகவே சேர்த்துக் கொண்டோம். நகைச் சுவை நடிகர் எம். ஆர். சாமி நாதன் ஒருவர் மட்டும் சின்னையாபிள்ளையிடமிருந்து விலகிப் பிடிவாதமாக வந்து எங்களிடம் சேர்ந்து கொண்டார். அவருடைய வேண்டுகோளை அம்மாவாலும் தடுக்கமுடியவில்லை.

முதல் நாடகத்தில் தம்பி பகவதி பபூனாக நடித்தான். சுவாமிகளின் அருமையான நகைச்சுவைப் பாடல்களை அவன் பாடியபோது, சபையோர் வெகுவாக ரசித்தார்கள். இரண்டாவதாக மனோஹரா நடைபெற்றது. மொத்தம் ஆறு நாடகங்களே தயாராகியிருந்தன. அவற்றை நடித்துவிட்டு நாகர்கோவிலுக்குச் சென்றோம்.

செய்கு தம்பிப் பாவலர் தீர்க்க தரிசனம்

நாகர்கோவிலிலும் இதே ஆறுநாடகங்கள் நடைபெற்றன. கோவலன் நாடகத்திற்குப் பெரும் புலவரான கோட்டாறு சதாவதானம் செய்குதம்பிப் பாவலர் வந்திருந்தார். ஒழுகினசேரி சரஸ்வதி ஹாலில் நாடகங்கள் நடைபெற்றன. என். எஸ். கிருஷ்ணன் ஒழுகினசேரியைச் சேர்ந்தவராதலால், அங்குள்ள சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து, என். எஸ். கிருஷ்ணனுக்கு ஒரு தங்கப் பதக்கம் பரிசளித்தார்கள். அந்தப் பதக்கத்தைப் பாவலரைக் கொண்டு, வாழ்த்திக் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். செய்கு தம்பிப் பாவலர் இன்று நம்மிடையே இல்லை. அவர் பெரும் புலமை வாய்ந்தவர். புத்தேரி, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை யவாகள், பாவலர் மறைந்தபோது பாடிய ஒரு உருக்கமான பாடல், அவரது பெரும் புலமைக்குச் சான்றாக நிற்கின்றது.

இத்தகைய பெரும் புகழ்படைத்த முஸ்லீம் பெரியார், அன்று மேடையேறி, பாண்டியன் வேடத்தில் நின்ற என். எஸ். கிருஷ்ணனை வாழ்த்திப் பரிசளித்தார்.

“நம் நாஞ்சில்நாட்டு இளஞ்சிறுவன் என்.எஸ். கிருஷ்ணன் வருங்காலத்தில் மகா மேதையாக விளங்கப் போகிறான். இவனுடைய புகழால் நம் நாஞ்சில்நாடு மட்டுமல்ல; தமிழ்நாடே பெருமையடையப் போகிறது.”

எனச் செய்குதம்பிப் பாவலர்தம் செந்தமிழ்த் திருவாயால் வாழ்த்தியது என் நினைவில் இருக்கிறது. அப்பெரியாரது தீர்க்க தரிசனத்தை எண்ணி, இப்போதும் நான் பெருமையடைகிறேன். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் எத்தனையோ முறை இதைப் பெருமையோடு சொல்லி மகிழ்ந்திருக்கிறார்.

யார் உரிமையாளர்?

கம்பெனி திருநெல்வேலிக்கு வந்தது. கொல்லத்தில் நாங்கள் விலகியபின் சின்னையாபிள்ளை மிகவும் சிரமப்பட்டதாக அறிந்தோம். எப்படியோ தட்டுத் தடுமாறி அவரும் திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தார். எங்கள் கம்பெனி மனோரமா தியேட்டரிலும், சின்னையாபிள்ளை கம்பெனி கணபதி விலாஸ் தியேட்டரிலும் நடைபெற்றது. பல நடிகர்கள் போய் விட்டதால் அவருடைய கம்பெனி தள்ளாடிக் கொண்டிருந்தது.

சகோதரர்கள் நாங்கள் நால்வரும் சிறுவர்களாய் இருந்ததால் மாமா செல்லம்பிள்ளை, தம் பெயரையும், சிற்றப்பா பெயரையும் உரிமையாளர் ஸ்தானத்தில் போட்டார். இதைப் பார்த்த சிற்றப்பா யாராவது ஒருவர் பெயர் இருந்தால் போதும்’ என்றார், உடனே மாமா, தம் பெயரை எடுத்து விட்டார். ‘டி. எஸ்.செல்லம்பிள்ளை உரிமையாளர்’ என்று சிற்றப்பா பேரே விளம்பரப் படுத்தப் பட்டது. இந்த நிலையில் நாங்கள் சொந்தக் கம்பெனி தொடங்கிய விஷயம் தெரிந்து, பழைய மானேஜர் காமேஸ்வர ஐயர் வந்து சேர்ந்தார். கருப்பையாபிள்ளை கம்பெனி அதற்குள் கலைந்து விட்டதால் சும்மா இருந்த ஐயரை அவரது விருப்பத்தின்படி எங்கள் கம்பெனியில் சேர்த்துக் கொண்டோம். அவருடைய போக்கு எங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் நல்ல நிருவாகத் திறமையைக் கருதி, இடமளித்தோம். மானேஜர் ஐயர் வந்து சேர்ந்தவுடன் இரண்டாம் நாளே ஒரு மாறுதல் செய்தார். உரிமையாளர் ஸ்தானத்திலிருந்த சிற்றப்பா பெயரை நீக்கி விட்டார். இரண்டு நாடக விளம்பரங்களில் எந்தப்பெயரும் இல்லாதிருந்தது. சிற்றப்பாவுக்குக் கோபம் வந்து விட்டது. ஐயரைக் கடுமையாகக் கண்டித்தார். ஐயர் ஏதோ சமாதானம் சொல்லிப் பார்த்தார். ஒன்றும் சரிப்படவில்லை. கடைசியாகச் சிற்றப்பா பெயர் மறுபடியும் ஒழுங்காக விளம்பரங்களில் போடப் பெற்றது.
-----------------

13. தூத்துக்குடி கலவரம்


திருநெல்வேலி நாடகம் முடிந்து தூத்துக்குடி சென்றோம். அந்த நாளில் அநேகமாக எல்லா ஊர்களிலும் ரெளடிகள் உண்டு. அவர்கள் நாடகக்காரர்களிடம் எப்போதும் தங்கள் கைவரி சையைக் காண்பிப்பது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஊரிலும் சில ரெளடிகளுக்கு ஒசி டிக்கட் கொடுத்துச் சரிப்படுத்துவதுண்டு. தூத்துக்குடியில் இப்படிப்பட்ட ரெளடிகள் அந்த நாளில் அதிகம். நாங்கள் துரத்துக்குடியில் நாடகம் துவக்கிய அன்று, சில் ரெளடிகள் கம்பெனி வீட்டுக்கு வந்தார்கள். நானும் மானேஜர் ஐயரும் திண்ணையில் உட்கார்ந்திருந்தோம். ஐயரிடம் அவர்கள் ஏதோ பேசினார்கள். எந்தக் கம்பெனி வந்தாலும் தாங்கள்தாம் நுழைவு வாயிலில் இருப்பது வழக்கமென்றும், அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகை தரவேண்டுமென்றும் சொன்னார்கள். ஐயர், வந்தவர்களிடம் பொறுமையோடு பேசவில்லை. பேச்சு வளர்ந்து தகராறு முற்றியது. வந்த ரெளடிகள், ‘இன்று நாடகம் நடப்பதைப் பார்க்கலாம்’ என்று போய் விட்டார்கள். ஐயர் கோபத்தோடு, “இது என்ன வெள்ளரிக்காய் பட்டணமா?” என்று முணுமுணுத்தார். கொட்டகையோ மூக்கமேஸ்திரியின் பழைய ஓலைக் கொட்டகை. துரத்துக்குடியைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். எனவே, இரவு நாடகத்தின் போது என்ன நேருமோவென்று நான் பயந்து கொண்டே இருந்தேன்.

முதல் நாடகம் அபிமன்யு சுந்தரி. நாடகம் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. வெளிவாயிலுக்குச் சுமார் ஐம்பதடி தூரத்தில்தான் அரங்கின் நுழைவாயில். கொட்டகை முழுதும் மெல்லிய மூங்கிற் பாயினால் போடப் பெற்றிருந்தது. நான் மூங்கிற் பாயின் இடுக்குகளின் வழியாகவெளிவாயிலைப்பார்த்துக் கொண்டிருந்தேன். குழப்பம் ஏதாவது நடக்கிறதாவென அடிக்கடி விசாரித்துக் கொண்டே நின்றேன். சுந்தரி, அபிமன்யுவுக்கு ஒலை எழுதியனுப்பும் காட்சியும் முடிந்தது. அடுத்து அபிமன்யு வரவேண்டிய காட்சி. நான் வேட்டைப் பாட்டுப் பாடியபடி மேடைக்கு வந்தேன். அவ்வளவுதான்.

வாயிலில் குழப்பம்

வெளியே வாயிலில் ஏதோ குழப்பம் நடப்பது நன்றாகத் தெரிந்தது. டிக்கட் விற்குமிடத்திலும் ஒரு கூட்டம் பாய்ந்தது. அடி, குத்து, வெட்டு என்றெல்லாம் பெருஞ் சத்தம் கேட்டது. பலத்த அடிதடி நடப்பதை மேடையிலிருந்தே பார்த்தேன் . எனக்குக் குலை நடுக்கம் எடுத்தது. இதில் பெரிய ஆச்சரியம் என்ன வென்றால், உள்ளேயிருந்த சபையோர் அப்படியொரு கலவரம் நடப்பதாகவே கருதியதாகத் தெரியவில்லை. அமைதியாக நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எவரும் இந்தக் குழப்பத்தைப்பற்றிச் சட்டை செய்யவில்லை. ஆணகள்தான் அப்படியென்றால் பெண்களும் வீராங்கனைகளாக இருந்தார்கள். யாரும் எழுந்திருக்கவில்லை. கலவரத்தைக் கவனிக்கவுமில்லை. எதுவும் நடவாததுபோல் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்களுக்கு இது புதிய அனுபவமாயிருந்தது. கூச்சலும், குழப்பமும் அதிகரித்தது. கலவரம் உச்சநிலையடைந்தது, முன் திரை விடப்பெற்றது. நான் அச்சத்தோடு பின்புறம் நின்று கொண்டிருந்தேன். ஆர்மோனியம் கிருஷ்ணமூர்த்திஐயர் வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆர்மோனியம், மிருதங்கம் எல்லாம் அரங்கின் வலதுபுறத்தில்தான் இருக்கும். முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு ரசிகர்க்கு, நாடகத்தை நிறுத்தியது பிடிக்கவில்லை போலிருக்கிறது. நாடகத்தைத் தொடர்ந்து நடத்தும்படி சத்தம் போட்டார். அத்தோடு நிற்கவில்லை. தான் உட்கார்ந்திருந்த நாற்காலியைத் தூக்கி, ஆர்மோனியக்காரரின் மேல் வீசினார். நல்ல வேளையாக நாற்காலி அவர்மேல் விழவில்லை. முன் வீதித் திரையைக் கிழித்துக் கொண்டு, உள்ளே நின்ற என் காலடியில் வந்து வீழ்ந்தது.

அரங்கிற்குள் ஆர்ப்பாட்டம்

இந்தச் சமயத்தில் பெருங்கூச்சலுடன் மேடைக்குள் ஒரு கூட்டம் நுழைந்தது. “இதோ இருக்கிருண்டா” என்றது ஒரு குரல். அடுத்த வினாடி யாருக்கோ பலமான- அடி விழுந்தது. ஐம்பது அறுபது பேர் தாக்கினார்கள் ஒருவரை. அடிப்பட்டவர் “நானில்லே, நானில்லே’ என்று கதறினார். அந்தக்குரல் எங்கள் சமையல் மாதவன் நாயருடைய குரல். நாங்கள் பதறினோம்; சிறுவர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கி ஒருபுறமாக நின்றோம். வந்தவர்களில் ஒருவர், “டே, பையன்களை யாரும் ஒண்ணாம் செய்யாதீங்கடா” என்று தெய்வம்போல் குரல் கொடுத்தார். இதற்குள் சமையல் மாதவன் நாயரை உற்றுப் பார்த்த ஒருவர் “அடே, இவனில்லேடா, குத்தினவன் வேறு ஆளு. வாங்க வெளியே போய்ப் பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார். அனைவரும் அவரைப்பின் தொடர்ந்தார்கள்.

சில நிமிடங்களில் கொட்டகையின் பின்புறமிருந்த மூங்கிற் பாயைக் கிழித்துக் கொண்டு ஒரு உருவம் எட்டிப்பார்த்தது. அவர் எங்கள் சிற்றப்பா. கலவரக்காரர்கள் அவரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. அவரைப் போய் விடுமாறு வேண்டிக்கொண்டோம். அவர், தான் அருகிலேயே இருப்பதாகவும், பயப்படாதிருக்குமாறும் கூறிவிட்டுமறைந்தார். இதற்குள் நாடகத்தை நடத்துமாறு சபையோர் சத்தம் போட்டார்கள். இத்தனைக்குழப்பத்திலும் நாடகம் பார்க்க வந்தவர்களில் யாரும் கலவரம் அடையவில்லை. இதுபோன்ற கலவரங்கள் பலவற்றை அவர்கள் அடிக்கடி பார்த்து பழகிவிட்டதுதான் காரணமென்று பின்னால் தெரிந்தது. நாடகம் தொடர்ந்து நடை பெற்று முடிந்தது. கம்பெனி வீடு அருகிலேயே இருந்தது. என்றாலும் எங்களுக்கு வெளியே போகப் பயமாகவே இருந்தது. பெரியவர்கள் சிலர் தைரியமாக நின்று அழைத்துச் சென்றார்கள். மறு நாள் பொழுது புலர்ந்த பிறகு, சிற்றப்பாவின் மூலம் நடந்த விபரங்கள் தெரிய வந்தன.

கண்டகோடரியும் கத்தி வீச்சும்

மானேஜர் ஐயரிடம் பயமுறுத்தி விட்டுப் போன ரெளடிகள் இரவு நன்றாகக் குடித்துவிட்டு, ஆட்களைத் திரட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள். சிற்றப்பாவும் மற்றொருவரும் வெளிவாயிலில் அவர்களைத் தடுத்திருக்கிறார்கள். சிற்றப்பாவுடனிருந்த மற்றொருவர், தாம் வைத்திருந்த கண்டகோடரியால் ஒருவரைத் தாக்கியிருக்கிறார். ரத்தக்காயம். ஏற்பட்டதும் கலவரம் வலுத்து விட்டது. பிறகு சிற்றப்பா, தம் கையிலிருந்த நீண்ட கத்தியால், பலபேரைக் குத்தியிருக்கிறார். கலவரம் வலுத்துவிடவே பையன்களுக்கு ஆபத்து வரக்கூடுமென்று அஞ்சிக் கூட்டத்திலிருந்து மறைந்து விட்டார். கண்டகோடரியால் தாக்கியவரும் தலை மறைவாய் போய்விட்டார். இருவரையும் தேடிக் கொண்டு தான் கலவரக்காரர்கள் அரங்கிற்குள் வந்திருக்கிறார்கள். இத்தகைய எதிர்ப்பைக் கலவரக்காரர்களும் எதிர்ப்பார்க்கவில்லை. குத்தியவரைத் தேடிப் பார்த்துவிட்டு, வேறு எதுவும் செய்யத் தோன்றாது அவர்கள் திரும்பிச் சென்றிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

சமாதானம்

சுவாமிகளின் நண்பரும், பரதவர் சமூகத்தில் மிகுந்த செல்வாக்குள்ளவருமான அலங்காரப்பரிசு என்பவர் கலவரச் செய்தியறிந்து கம்பெனி வீட்டுக்கு வந்தார். கலவரம் செய்தவர் களையும் சிற்றப்பாவையும் ஒன்றாக வைத்துப்பேசிச் சமரசம் செய்து வைத்தார். இரண்டாவது நாடகத்திற்குக் கலவரம் செய்தவர்களே வெளிவாயிலில் இருக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனார். கலவரம் செய்த ரெளடிகளே பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின் கலவரம் நடக்குமா? அதன் பிறகு நாடகங்கள் அமைதியாக நடை பெற்றன. இவ்வளவு குழப்பத்திலும் போலீஸார் யாரும் தலையிடாதது எங்களுக்குப் பெரும்வியப்பாக இருந்தது. கலவரம் விளைவதற்குக் காரணமாயிருந்த மானேஜர் காமேஸ்வர ஐயர், வெளிவாயிலில் அடிதடி விழுந்ததுமே ஓடிப்போனவர் மறுநாள் தான் கம்பெனிவீட்டிற்கு வந்துசேர்ந்தார். தூத்துக்குடி நாடகங்கள் முடிந்து, சாத்துாருக்குப் புறப்பட்டோம்.

காசிப்பாண்டியனின் கலை ஆர்வம்

சாத்துரரில் எட்டையபுரம் இளையராஜா காசிப் பாண்டியன் தினமும் நாடகம் பார்க்க வந்தார். நடிகர்களுக்குப் பெரும் பரிசுகள் வழங்கினார். தம் புதல்வர்கள் காதில் போட்டிருந்த வைரக் கடுக்கன்களைக் கழற்றி, எனக்கும், சின்னண்ணாவுக்கும் போட்டார். தம் கையில் போட்டிருந்த வைர மோதிரங்களையும் பரிசாகக் கொடுத்தார். மற்றொரு நாள் திடீரென்று தம் மனைவி கழுத்திலிருந்த கெம்பு அட்டிகையைக் கழற்றிச் சின்னண்ணா கழுத்தில் போட்டார். இவற்றையெல்லாம்விட அவர் செய்த மற்றொரு செயல் எங்களைப் பிரமிக்க வைத்தது. ஒருநாள் மனோஹரா நாடகத்தின் போது சின்னண்ணா உடுத்தியிருந்த புடவை அவருடைய மனத்திற்குத் திருப்தியளிக்கவில்லை. வசந்த சேனை இம்மாதிரிப் புடவையையா உடுத்திக் கொள்வது என அவருக்குத் தோன்றியது போலிருக்கிறது. தம் மனைவியின் காதில் ஏதோ ரகசியமாகச் சொன்னார். அந்த அம்மையார் காருக்குச் சென்று, மற்றொரு சாதாரணப் புடவையை உடுத்திக் கொண்டு திரும்பி வந்தார். அவர்கள் முதலில் உடுத்தியிருந்த விலையுயர்ந்த பட்டுப்புடவை, சின்னண்ணாவுக்குப்பரிசாக வழங்கப் பெற்றது. அடுத்த காட்சியில் அதை உடுத்திக் கொண்டு வரும் படியாகக் கட்டளையும் பிறந்தது. இளையராஜா காசி விஸ்வநாத பாண்டியனையும், அவரது கலையார்வத்தையும் எண்ணாம்போது இனி அப்படியொருவர் தோன்றுவாரா என்றே வியப்பாக இருக்கிறது. சாத்துார் முடிந்து திருச்சிக்குப் போனோம்.

திருச்சியில் எங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. திண்டாடினோம் என்றே சொல்லவேண்டும். திருச்சியில் பிரண்டு ராமசாமி கம்பெனிக்கு வந்து சேர்ந்தார். அப்போது அவரது பெற்றோர் யாரென்றே அவருக்குத் தெரியாது. மலையாள மொழி அவருக்குத் தெரிந்திருந்ததால் கேரளத்தில் எங்கோ பிறந்திருக்க வேண்டுமென்பது மட்டும் புரிந்தது.
--------------

14. கலைவாணரின் வளர்ச்சி


திருமயத்திலிருந்து சாய்பு ஒருவர் கம்பெனியை ஒப்பந்தம் பேசித் திருமயத்திற்கு அழைத்துப் போனார். மாதம் பதிமூன்று நாடகங்களுக்கு ரூபாய் 1500 என்று ஒப்புக் கொண்டோம். இந்த நாளில் ஒரே ஒரு நாடகம் நடத்த 1500 ரூபாய்கள் தேவைப்படுகிறது. அன்று பதிமூன்று நாடகங்களுக்குக்கொட்டகை வாடகை, விளம்பரச் செலவு மட்டும் நீக்கி, ரூபாய் 1500 என்றால் ஆச்சரியமாக இல்லையா? காண்ட்ராக்டரின் அதிர்ஷ்டம் திருமயத்தில் நல்ல வசூலாயிற்று. இரவு 8.45 வரையில் கூட்டமே இராது. இரவு 9 மணி சுமாருக்கு, நான்கு புறங்களிலிருந்தும் ரேக்ளா வண்டிகளிலும், மாட்டு வண்டிகளிலுமாகச் செட்டிப் பிள்ளைகள் வந்து கூடி விடுவார்கள்.

பாம்புக் காடு

திருமயத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. ஒருநாள் அல்லி அர்ஜ்ஜுன நாடகம் நடந்துகொண்டிருந்தது. பாம்புப் பிடாரன் மகுடி ஊதும் காட்சியில் ஆர்மோனியம் கிருஷ்ணமூர்த்தி ஐயர் ஆர்மோனியத்தில் மகுடி வாசித்தார். காட்சி முடியும்போது ஆர்மோனியக்காரரின் பக்கத் தட்டியில், ஒரு நாகப்பாம்பு இருப்பதைப் பின்பாட்டுக்காரர் சாமிக்கண்ணு பார்த்து விட்டார். கூச்சல் போடாமல் ஆர்மோனியக்காரருக்கு ஜாடை மூலம் அறிவித்தார். அந்தப் பாம்பை அடிக்க முயன்றார்கள். அதற்குள் பாம்பு சரசரவென்று கீழிறங்கி எங்கோ மறைந்துவிட்டது. திருமயம் அந்த நாளில் ஒரு பாம்புக் காடாகவே இருந்தது. கற்றாழைப் புதர்களுக்கும், கரையான் புற்றுக்களுக்கும் நடுவேதான் கொட்டகை அமைந்திருந்தது. இரவு கொட்டகைக்குப் போய் வரவே எங்களுக்குப் பயமாக இருக்கும்.

மாலை நேரங்களில் வெளியே போகும்போது அடிக்கடி பாம்புகளைப் பார்க்க நேரும். அது என்ன பாம்பு என்று எங்களுக்குள் விவாதம் நிகழும். ஒவ்வொருவரும் பலவிதமான பாம்புகளின் பெயர்களைக் குறிப்பிடுவார்கள். துணிவுள்ள சில பையன்கள் இருந்தார்கள். அவர்கள் என்ன பாம்பென்று சோதித்துப் பார்க்க முயல்வார்கள். ஒரு நாள் கற்றாழைப் புதர்களின் நடுவே நாங்கள் நின்று கொண்டிருந்தோம். சரசரவென்று சத்தம் கேட்டது. சுமார் நாலடி நீளமுள்ள ஒரு பாம்பு, எங்களை லட்சியம் செய்யாமல் புதர்களுக்கிடையே சென்றது. “அது விரியன் பாம்பு” என்றார்கள் சிலர். இல்லை, “ஓலைப் பாம்பு” என்றார் நகைச்சுவை நடிகர் எம். ஆர். சாமிநாதன். இதற்குள் புதர்களுக்கிடையே சென்ற பாம்பு, இரை விழுங்கியது போல் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. சாமிநாதன் தன் வாக்கை மெய்ப்பித்துக் காட்ட எண்ணி, கொஞ்சம் மண்ணை அள்ளி அதன்மீது வீசினார். அவ்வளவுதான்; ஊர்ந்து கொண்டிருந்த பாம்பு நின்றது; தலையைத் துாக்கி, தான் இன்னார் என்பதைக் காட்டுவதுபோல் மெதுவாகப் படத்தை விரித்தது. ‘ஐயோ, நல்ல பாம்பு’ என்று சிலர் அலறிக்கொண்டு ஓடினார்கள். அப்புறம் நாங்கள் ஏன் அங்கே நிற்கிறோம்?...இவ்வாறு திருமயத்தில் பாம்பைப் பற்றி நினைக்காத நேரமே இல்லை என்னும்படியாகப் பல நிகழ்ச்சிகள் நடை பெற்றன.

நடிகப் பரம்பரை

திருமயத்தில் சதியனு சூயா நாடகம் தயாராயிற்று. அதிலே ஒரு ராஜா, அந்த ராஜாவுக்குப் பெயர் இல்லை. இருட்டு ராஜா என்று நாங்கள் குறிப்பிடுவது வழக்கம். நறுமதையின் சாபத்தால் உலகம் இருளடைந்து விடுகிறது. கதிரவன் ஒளியின்றிக் குடிகள் கஷ்டப்படுகிறார்கள். இருள்நீக்கி, ஒளி காட்டி உதவுமாறு இருட்டு ராஜா, பதிவிரதை அனுசூயாவிடம் முறையிடுகிறார். இந்த இருட்டு ராஜாவாகச் சுவாமிகளிடம் பாடம் கேட்டு நடித்தவர் எங்கள் பெரியண்ணா டி. கே. சங்கரன். இருட்டு ராஜா வேடம் இப்போது என்.எஸ் கிருஷ்ணனுக்குக் கொடுக்கப் பெற்றிருந்தது. பெரியண்ணா பயிற்சியளித்துக் கொண்டிருந்தார்.

என்ன ஆச்சரியம் இது-ஆகா!
என்ன ஆச்சரியம் இது
எங்கும் இருள் சூழ்ந்துல கிருண்டிருக்குது,
ஏழுநாள் ஓர் வாரத்துக்கு மேலானது .. (எ)

இது இருட்டுராஜா பாட வேண்டிய பாட்டு. என். எஸ். கிருஷ்ணன் பாடினார். ‘ஆகா!’ என்னும் இடத்தில் கொஞ்சம் தாளத்தைக் கவனித்து எடுக்கவேண்டும். பெரியண்ணா நாலைந்து முறை சொல்லிக் கொடுத்தார். தாளம் சரியாக வரவில்லை. பெரியண்ணாவுக்கு ஆத்திரம் வந்தது. ‘நிமிட்டாம்பழம்’ கொடுத்தார். நிமிட்டாம் பழம் என்றால் தெரியுமல்லவா? தொடையில் பெருவிரலையும் சுட்டுவிரலையும் சேர்த்துக் கொண்டு கிள்ளுவது. சகிக்க முடியாத வலியெடுக்கும். இதெல்லாம் அந்த காலத்தில் சர்வ சாதாரணம். என். எஸ். கிருஷ்ணன் அழுதுகொண்டே பாடினார். அழுகை வந்தாலும் பாடுவதை நிறுத்தக் கூடாது. நிறுத்தினல் மேலும் பூசை விழும். என். எஸ். கிருஷ்ணன் ஆகா என்று அழுது கொண்டே பாடியது எங்களுக்கெல்லாம் சிரிப்புண்டாக்கியது. பாடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் பெரியண்ணா வெளியே சென்றார், நாங்கள் என். எஸ். கிருஷ்ணன் பாடியதுபோல் பாடிக் காட்டிச் சிரித்தோம்.

“ஏம்பா சிரிக்கிறீங்க... அண்ணாச்சிதானே அடிச்சாரு; பரவாயில்லே. அவரும் இந்தப்பாட்டைக் கத்துக்கிட சங்கரதாஸ் சுவாமிக்கிட்ட அடி வாங்கித்தான் இருப்பாரு. நானும் இனிமே எத்தனையோ பேரை இப்படி அடிக்கத்தான் போறேன். இது தானே நடிக பரம்பரை. இது புரியாமே ஏன் சிரிக்கிறீங்க?” என்றார் கலைவாணர். அப்போது அதன் பொருள் எங்களுக்குப் புரியாததால் மீண்டும் சிரித்தோம். திருமயம் முடிந்ததும் கம்பெனி காரைக்குடிக்குச் சென்றது.

காரைக்குடியில்தான் என். எஸ். கிருஷ்ணன் நகைச்சுவை நடிகராவதற்குரிய சூழ்நிலை உருவாயிற்று. சாவித்திரி நாடகத்தில் ஒருமுறை சாவித்திரியின் தந்தை அஸ்வபதியாக அவர் நடித்தார். அந்தக் காலத்தில் பெரும்பாலும் நன்றாகப் பாடக் கூடிய நடிகர்களாக இருந்தால் அரங்கில் பிரவேசிக்கும் போதே பாடிக் கொண்டு வருவது வழக்கம். திருப்பரங்குன்றில் விளங் கும் குகா என்னும் மதுர பாஸ்கரதாஸின் பாடலை என். எஸ். கிருஷ்ணன் மிக நன்றாகப் பாடுவார். அஸ்வபதி மேடைக்கு வரும்போது அந்தப் பாட்டைப் பாடிக்கொண்டு வந்தார். சபையோர் அன்று இவரை உன்னிப்போடு கவனித்தார்கள்.

எனக்கும் கலைவாணருக்கும் கம்பெனி தொடங்கிய நாளிலிருந்து நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருந்தது. விளையாட்டு, கதை பேசுதல், எல்லாவற்றிலும் நாங்களிருவரும் இணைந்தே கலந்து கொள்வோம். நான் எப்போதாவது சோர்ந்திருக்கும் நேரத்தில், எனக்குச் சிரிப்பூட்டுவதற்காக ஏதாவது வேடிக்கை செய்வார் அவர். கலைவாணரின் இயற்கையான நகைச்சுவைப் பண்பை அறிந்த நான், நாடகங்களில் எம். ஆர். சாமிநாதன் போட்டு வந்த நகைச்சுவைப் பாத்திரங்களையெல்லாம் நெட்டுருப் போட்டு வைக்கும்படியாக அடிக்கடி அவரிடம் கூறுவதுண்டு.

எம். ஆர். சாமிநாதனிடம் ஒரு கெட்ட குணம் இருந்தது. எந்தக் குழுவிலும் நிரந்தரமாக் இருக்க மாட்டார். திடீர் திடீரென்று சொல்லாமல் ஒடிப்போய் விடுவார். அப்புறம் திடீரென்று சொல்லாமலே வந்து விடுவார். அவருடைய தங்கை மீனாட்சியும் அப்போது எங்கள் குழுவில் நடித்துக் கொண்டிருந்தாள். அவள்தான் மனோஹரனில் விஜயாளாக நடிப்பாள். அண்ணனும் தங்கையும் ஒருநாள் சொல்லாமல் போய்விட்டார்கள். அன்று மனோஹரன் நாடகம் வைக்கப் பெற்றிருந்தது. விஜயாளாக நடிப்பதற்கு, செல்லம் என்னும் ஒரு பையனை ஏற்கனவே பயிற்சி கொடுத்து வைத்திருந்தோம். பைத்தியக்காரன் வசந்தகை யார் நடிப்பதென்பது பெரும் பிரச்னையாய் விட்டது. பழைய நடிகர்கள் யாரும் அப்போது கம்பெனியில் இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும்படியாக நான் என். எஸ். கிருஷ்ணனைத் தூண்டினேன். பெரியண்ணாவிடம் போய், “என். எஸ். கிருஷ்ணன் நடிப்பதாகச் சொல்கிறார். அவர் நன்முக நடிப்பாரென்று தோன்றுகிறது” என்றேன். அண்ணா என். எஸ். கே. யைக் கூப்பிட்டுக் கேட்டார். அவர் முதலில் அஞ்சினார்; நாங்கள் அனைவரும் உற்சாகப்படுத்தவே ஒப்புக் கொண்டார். அன்று மனோஹரன் நாடகம் சிறப் பாக நடந்தது. எம். ஆர். சாமிநாதனுக்குச் சிறிதும் குறைவு படாத முறையில் என். எஸ். கிருஷ்ணன் அன்று வசந்தனாக நடித்தார். எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. எல்லோரும் அவரைப் பாராட்டினார்கள். அன்று முதல் எம். ஆர். சாமிநாதன் புனைந்து வந்த எல்லா வேடங்களையும், என். எஸ். கிருஷ்ணனுக்கே கொடுத்தார் பெரியண்ணா. கலைவாணர், கம்பெனியின் நிரந்தர நகைச் சுவை நடிகரானார். 1956இல் இராஜா அண்ணாமலை மன்றத்தில் இராஜராஜசோழன் நாடகம் நடந்தபோது கலைவாணர் தலைமை தாங்கினார். அப்போது இந்தச் செய்திகளையெல்லாம் மேடையிலேயே வெளிப்படையாக அவர் கூறி, என்னைப் பாராட்டிய போது எங்கள் இருவர் கண்களும் கலங்கின.

சின்னையாபிள்ளை வருகை

காரைக்குடியில் நல்ல வசூலில் கம்பெனி நடந்து கொண்டிருக்கும் பொழுது சின்னையாபிள்ளை வந்தார். நடிகர்களும் ஏனைய தொழிலாளர்களில் பலரும் பழனியாபிள்ளையின் ஸ்ரீ மீன லோசனி பால சற்குண நாடக சபைக்குப் போய் விட்டதாகக் கூறினார். தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபை மூடப்பட்ட சேதியைக் கேட்டு வருந்தினோம், நாங்கள் சொந்தமாகக் கம்பெனி நடத்த ஆரம்பித்த பிறகுதான் அதிலுள்ள கஷ்டங்களை ஒருவாறு உணர முடிந்தது. பெரியண்ணாவுக்கும் சிற்றப்பாவின் நிருவாகத்தில் கம்பெனியைத் தொடர்ந்து நடத்த இஷ்ட மில்லை. எனவே, நாங்கள் அதுவரை கம்பெனிக்காகச் செலவு செய்த ரூபாய் 2000த்தையும் கொடுத்து விட்டால் கம்பெனியை அப்படியே சின்னையாபிள்ளையிடம் ஒப்படைத்து விடுவதாகப் பெரியண்ணா கூறினார். சின்னையாபிள்ளை அப்போது அதை ஏற்க இயலாத நிலையில் இருந்ததால் போய்விட்டார். மேலும் பல நாடகங்களை நடத்திவிட்டு நாங்கள் கரூருக்குச் சென்றோம்.
-------------------

15. கொங்கு நாட்டில்


மானேஜர் காமேஸ்வரய்யர் கரூரில் சில தகிடுதத்த வேலைகள் செய்ய ஆரம்பித்தார். நாடகம் முடிந்ததும் காலையில் கணக்குப் பார்க்கும் பொறுப்பு மானேஜரிடம் ஒப்படைக்கப் பெற்றது. இரவு கொட்டகையில் கூட்டம் பிரமாதமாக இருக்கும். ஆனால் காலையில் வசூல் கணக்கைப் பார்த்தால் மிகவும் குறைவாக இருக்கும். இது எல்லோருக்கும் அதிசயமாக இருந்தது. அந்த நாளில் தரை டிக்கட்டுகளைக் கொஞ்சம் கனமான அட்டை களிலேயே அச்சிட்டுக்கொடுத்து வந்தார்கள். பலவண்ண அட்டைகளில் இவற்றை அச்சிட்டு வைத்துக்கொண்டு, ஒவ்வொரு நாடகத்திற்கும் வண்ணங்களை மாற்றிக் கொள்வது வழக்கம். தவிர டிக்கெட்டுகளைக் கிழிப்பதில்லை. மானேஜர் ஐயர் ஒரு தந்திரம் செய்தார். தரை வாயிலில் டிக்கெட்டுகளை வாங்கி ஒரு பெட்டியில் போட்டு விடுவார்கள். மானேஜர் காலையில் அந்தப் பெட்டியைத் திறந்து விற்பனையான டிக்கெட்டுகளில் பலவற்றை மறுபடியும் கணக்குப் பெட்டிக்குள் வைத்து விட்டு அவற்றுக்குரிய பணத்தை எடுத்துக் கொள்வார். இப்படியே ஐயரின் வேலை நடைபெற்று வந்தது. ஒருநாள் பெரியண்ணா சந்தேகங்கொண்டு. ஐயருக்குத் தெரியாமல் இரவே வசூல் கணக்கைப் பார்த்து முடித்து விட்டுப் பெட்டிச் சாவியை ஐயரிடம் கொடுத்து விட்டார். விபரம் தெரியாத ஐயர், வழக்கம்போல் தமது காரியத்தைச் செய்யவே அவருடைய திருட்டு வெளிப்பட்டு விட்டது. மாமா, ஐயரை உடனே நீக்கிவிட வேண்டுமென்று ஆத்திரப்பட்டார். பெரியண்ணா சிபாரிசின் பேரில் ஐயருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு மானேஜரிடம் பெட்டிச் சாவி கொடுப்பதை நிறுத்திக் கொண்டார்கள். மாமாவே முன்னின்று எல்லாக் காரியங்களையும் மேற்பார்த்து வந்தார். மானேஜருக்கு வெளி அலுவல்களை மட்டுமே கவனித்துக் கொள்ளும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அடுத்த ஊர் திருப்பூர் போவதாக முடிவு செய்தனர்

திருப்பூருக்கு நாங்கள் போனபோது தண்ணிர்ப் பஞ்சம் அதிகமாயிருந்தது. பல ஆண்டுகளாக மழையே இல்லை. எங்கு பார்த்தாலும் வறண்டு போயிருந்தது. காலையிலும் மாலையிலும் தண்ணிருக்காக நெடுந்துாரம் சென்று வருவோம். இறங்கிக் குளிக்கக் கூடிய முறையில் சில கிணறுகள் இருந்தன. சிலர் குளிக்க அனுமதிப்பார்கள். ஒருசிலர் கூடாதென்று மறுத்து விடுவார்கள். எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி, இலவச டிக்கெட்டுகள் கொடுத்து, சிலரைச் சரிபடுத்திக் கொண்டோம்.

காக்கை வலிப்பு

கம்பெனியில் எம். சங்கரன் என்று ஒரு நடிகர் இருந்தார். அவர் பெண் வேடம் புனைபவர். அவருக்கு காக்கைவளி நோய் உண்டு. அது எதிர்பாராமல் திடீரென்று வந்துவிடும். அதுவும் தண்ணிர்த்துறைகளில்தான் இந்த நோய் பெரும்பாலும் வருவது வழக்கம். ஒருநாள் முற்பகலில் நாங்கள் எல்லோரும் எண்ணெய் தேய்த்துக் குளித்துக் கொண்டிருந்தோம். எம். சங்கரன் சாவ காசமாகவே எதையும் செய்வார். குளிப்பதிலும் அப்படித்தான். முதலில் ஒரு கிணற்றில் சீயக்காய் தேய்த்துத் தலையை நன்றாக அலசிவிட்டு, பிறகு அருகிலுள்ள மற்றொரு கிணற்றில் குளிக்க வேண்டும். எனவே நடிகர்கள் இரண்டு கிணற்றிலுமாகக் குளித்துக் கொண்டிருந்தோம்.

முதல் கிணற்றில் சங்கரனும், சின்னண்ணாவும் இன்னும் இரண்டொருவரும் மட்டுமே இருந்தார்கள். சங்கரன் திடீரென்று கை கால்களே அடித்துக்கொண்டு தண்ணிரில் மூழ்கினார்... ஒரு நிமிடம், இரண்டு நிமிடம்; மூழ்கியவர் வெளிவரவே இல்லை. பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் பரபரப்படைந்தார்கள். சின்னண்ணா கொஞ்சம் துணிவுள்ளவர். மூழ்கிப் பார்த்தார். ஆழமான கிணறு. அடிப்புறத்தில் ஏதோ உருவம் கிடப்பது போல் புலப்பட்டது அவருக்கு. இரண்டாவது முறையும் மூழ்கித் துாக்கிப் பார்த்தார். முடியவில்லை. இதற்குள் செய்தியறிந்து பக்கத்துக் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்களும் ஓடி வந்தார்கள். வந்தவர்களில் கோபால் பிள்ளை மிகவும் தைரிய சாலி, அவர் வந்த வேகத்திலேயே கிணற்றில் குதித்து மூழ்கினார். அடுத்த நிமிடத்தில் சங்கரனையும் தூக்கிக் கொண்டு மேலே வந்தார். எல்லோரும் வியப்போடும், கவலையோடும் அவரையே பார்த்துக்கொண்டு நின்றோம். கரைக்குக் கொண்டு வந்து, மூர்ச்சித்துக் கிடந்த சங்கரனைத் தலைமீது வைத்துக் கொண்டு சுற்றினார். சங்கரன் வாய்வழியாகத் தண்ணிர் வெளியேவந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு சங்கரனுக்கு மூச்சு வந்தது. எங்களுக்கும் உயிர் வந்தது.கோபாலபிள்ளையின் துணிவை எல்லோரும். பாராட்டி வாழ்த்தினார்கள்.

கோபால பிள்ளை இவ்வாறு பலசந்தர்ப்பங்களில் எங்களுக்கு மகத்தான உதவிகள் புரிந்திருக்கிறார். இவர் கோட்டயத்திலே பிறந்தவர். ஆர்மோனியம் கே. டி. கடராஜ பிள்ளை நடத்தி வந்த சிறுவர் கம்பெனியில் சில ஆண்டுகள் பணிபுரிந்தவர். பின்னால் தத்துவ மீனலோசினி வித்துவ பாலசபையில் ஆடையணிவிக்கும் பொறுப்பில் பல ஆண்டுகள் சிறப்பாகச் செயலாற்றியவர். நாங்கள் சொந்தக் கம்பெனி தொடங்கியபின் உரிமையோடு எங்களிடம் வந்து, பணியாளராக மட்டுமல்லாது, பாதுகாப்பாளராகவும் இருந்து வந்தார். இவருடைய வலிமையும் வீரமும். எங்கள் குழுவுக்குத் தோன்றாத் துணையாக இருந்து வந்தன.
---------------------

16. சீர்திருத்த நாடகாசிரியர்


திருப்பூரில் நாடகங்கள் நடந்துகொண்டிருந்தபொழுது, சீர் திருத்த நாவல் நாடகாசிரியர்’ எனப்புகழ்பெற்ற திரு எம் கந்தசாமி முதலியார் எங்கள் கம்பெனிக்கு வந்துசேர்ந்தார். முதலியா ரோடு அவரது புதல்வரான நடிகமணி எம். கே. ராதாவும், மற்றொரு சிறந்த நடிகரான கே கே. பெருமாளும் வந்தார்கள். ஏற்கனவே நடந்து வந்த இராஜாம்பாள் நாடகம், ஆசிரியர் முதலியார் வந்ததும் புதுமை பெற்றது. கந்தசாமி முதலியார் சென்னை சுகுண விலாச சபையில் பெண் வேடநடிகராக இருந்தவர். பம்மல் சம்பந்த முதலியாரிடம் பயிற்சி பெற்றவர். பாலாம்பாள் கம்பெனி, பி. எஸ். வேலுநாயர் கம்பெனிகளுக்கெல்லாம் பம்மல் முதலியாரின் மனோஹரன் நாடகத்தை இவர்தான் சொல்லி வைத்தார். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நீண்டகாலம் இருந்தார். ஜே. ஆர். ரங்கராஜூவின் இராஜம்பாள், இராஜேந்திரா, சந்திரகாந்தா, ஆனந்த கிருஷ்ணன் ஆகிய நாவல்களையெல்லாம் நாடகமாக்கி அரங்கேற்றினார். இவரை எங்கள் ஆசிரியராகப் பெற்றது பெரும் பாக்கியம் என்றே கருதினோம். திருப்பூர் நாடகம் முடிந்து கம்பெனி பாலக்காடு சென்றது.

புதிய நாடகங்கள்

பாலக்காடு வந்ததும் பம்மல் சம்பந்தனரின் இரத்தினாவளி பாடம் கொடுக்கப் பெற்றது. அப்போது எங்கள் கம்பெனியில் எஸ். என். இராமையா, மனோகரனத் தவிர மற்றெல்லா நாடகங்களிலும் கதாநாயகனுக நடித்து வந்தார். இரத்தினவளியில் வத்சராஜன் பாடம் மிகவும் அதிகமான வசனங்கள் உள்ளது. அதை இராமையாவுக்குக் கொடுக்க வாத்தியார் விரும்பவில்லை. “வுண்முகம்தான் வேண்டும்” என்று வற்புறுத்தினார். வத்சராஜன் பாடம் எனக்குக் கொடுக்கப்பெற்றது. பாலக்காடு அமிட்டி ஹாலில் இரத்தினுவளி நாடகம் அரங்கேறியது. எம். கே. ராதா வசந்தகளுகவும், கே. கே. பெருமாள் பாப்ரவ்யளுகவும், என். எஸ். கிருஷ்ணன் டாம்ரவ்யனுகவும், சிறப்பாக நடித்தார்கள். சின்னண்ணா வாசவதத்தை இரத்தினவளி பாத்திரத்தை இரு பகுதிகளாகப் பிரித்து, முற்பகுதியைச் சேதுராமனும் பிற் பகுதியைச் செல்லமும் நடித்தார்கள். நாடகம் மிகவும் நன்றாய் இருந்ததாக அனைவரும் சொல்லிக் கொண்டார்கள்.

தம்பி பகவதி அதுவரை பபூன் வேடமே புனைந்து வந்தான். வாத்தியார் வந்ததும் அவனுக்கு வேறு வேடங்களும் கொடுக்கப் பட்டன. மனோஹரனில் ராஜப்பிரியன் வேடம் கொடுத்து, நன்முக நடிப்பும் சொல்லிக் கொடுத்தார். விளம்பரங்களிலும் அவனைப்பற்றித் தனியாகக் குறிப்பிட்டு எழுதினார். இராஜாம்பாள் நாடகத்தில் நான் வக்கீலாகவும், பகவதி பாரிஸ்டராகவும் நடிப்போம். கடைசியாக நடைபெறும் நீதிமன்றக் காட்சியில் ஆங்கிலத்தில் எனக்கும் பகவதிக்கும் வசனம் எழுதிக்கொடுத்தார். ஆங்கிலத்தை தாங்கள் தமிழிலேயே எழுதி நெட்டுருப் போட்டோம். ஆங்கிலம் நன்முக அறிந்தவர்கள் பேசுவதைப்போல் அந்த வசனத்தைப் பேசவும் எங்களுக்குப் பயிற்சி கொடுத்தார். நானும் பகவதியும் ஆங்கிலத்தில் பேசியதை ரசிகர்கள் பெருத்த கரகோஷம் செய்து வரவேற்றார்கள்.

இராஜேந்திரா

பாலக்காடு முடிந்து, கோயமுத்துர் சென்றதும் இராஜேந்திரா நாடகம் தயாராயிற்று. இராஜேந்திரா ஒரு சமூகச் சீர்திருத்த நாடகம், வரதட்சணையின் கொடுமையை உயர்ந்த முறையில் எடுத்துக் காட்டும் நாடகம். 1922ல் பாவலர் கம்பெனிக்குப் போன சமயம் வேஷத்தை நிறுத்திய பெரியண்ணா டி. கே. சங்கரன், நாவல் நாடகங்கள் தயாரானதும் வேடம் புனையத் தொடங்கினார். இராஜேந்திரனில் பெரியண்ணாவுக்கு ராகவன்வேடம் கொடுக்கப் பெற்றது. நான் ராகவனின் மகள், லட்சுமியாக நடித்தேன். ஒரு படுகொலையை நேரில் பார்த்ததால், லட்சுமிக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது. அது மிகவும் சிரமப்பட்டு நடிக்க வேண்டிய காட்சி. அந்தக் காட்சியில் நடிப்பதற்கு வாத்தியார் எனக்குப் பிரத்தியேகப் பயிற்சி அளித்தார். லட்சுமியின் காதலன் ரங்கநாத், ஒரு காதல் காட்சியில் மகாகவி ஷேக்ஸ்பியர் சங்கீதத்தைப் பற்றிச் சொல்லியிருக்கும் சில வரிகளை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும். ரங்கநாத்தாக நடித்த ராமையாவுக்கு ஆங்கிலத்தில் பேச வரவில்லை. எனவே அந்த வசனத்தை லட்சுமியே பேச வேண்டியதாயிற்று. “மகாகவி ஷேக்ஸ்பியர் சொல்லுகிறார்”...என்று சொல்லத் தொடங்குவார் ராமையா. உடனே நான் இடைமறித்து, “ஒ, அதுவா? எனக்குத் தெரியுமே” என்று ஷேக்ஸ்பியரின் கவியைச் சொல்லி முடிப்பேன். ராமையா பேச வேண்டிய வசனத்தைத்தான் நான் பேசுகிறேன் என்று ரசிகர்கள் எளிதாகப் புரிந்து கொண்டார்கள். நாடக அரங்கேற்றத்தன்று, இந்த ஆங்கில வசனத்தை நான் பேசி முடித்து ராமையா மீண்டும் பேசத் தொடங்கியதும் ரசிகர்கள் கைதட்டி வரவேற்றார்கள்,

வரதட்சணையின் கொடுமை

இராஜேந்திரனாக எம். கே. ராதாவும், ருக்மணியாகச் சின்னண்ணா டி. கே. முத்துசாமியும் அற்புதமாக நடித்தார்கள். இராஜேந்திரனில் முக்கியமான கட்டம் இது: கோபாலாச் சாரியின் சூழ்ச்சியால் சிற்றன்னை ரங்கம்மாள், ருக்மணிக்கு மயக்க மருந்தைப் பாலில் கலந்து கொடுத்து விடுகிறாள். ஸ்ரீ ரங்க நாதரைத் தரிசித்து வரலாமென்று போக்குக் காட்டி ஆலயத்துக்கு அழைத்து வருகிறாள். வருகிற வழியில் ருக்மணிக்கு மயக்கம் வந்து விடுகிறது. உடனே அருகிலிருக்கும் கோபாலாச் சாரியின் வீட்டுக்குள் நுழைகிறார்கள். அங்கு ருக்மணியைப் படுக்க வைக்கிறார்கள். கோபாலாச்சாரியின் திட்டப்படி அங்கே காத்திருக்கிறான் இராஜேந்திரன். ருக்மணியைத் தனியே அறையில் கட்டிலில் கிடத்திவிட்டு ரங்கம்மாளும், கோபாலாச் சாரியும் மறைகிறார்கள். ருக்மணி மயக்கமாயிருக்கும் அந்நிலையில் இராஜேந்திரன் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறான். இளமையின் வெறி அடங்கியதும் அவன் உள்ளத்திலுள்ள நல்லுணர்வுகள் மேலெழும்புகின்றன. மனச்சாட்சி அவனைக் கண்டிக்கிறது. ஒழுக்கத்தை உயிரென மதிக்கும் அந்த இளம் பெண், உணர்வு பெற்றுத் தன் அலங்கோல நிலையைக் கண்டு தற்கொலை செய்து கொள்ளக் கூடாதே என்று எண்ணாகிறான், அவளிடம் மன்னிப்புக் கேட்கத் துடிக்கின்றான். தற்கொலை செய்து கொள்ளக் கூடாதென்று அவளிடம் வாக்குறுதி பெற விரும்புகிறான். அவன் சிந்தனையில் மூழ்கித் தத்தளித்து நிற்கும் இந்த நேரத்தில், ருக்மணி கண்விழிக்கிறாள்; சுற்று முற்றும் பார்க்கிறாள்; சித்தி, தன்னை மோசம் செய்து விட்டதை உணர்ந்து ஆவேசம் கொள்ளுகிறாள்.

நடிப்புத் திறமைக்கே சவால்விடும் ஒர் அற்புதமான கட்டம் இது. இந்தக் காட்சியில் எம். கே. ராதாவும் சின்னண்ணாவும் அபாரமாக நடித்தார்கள். கற்பிழந்த அந்த நிலையில் நின்று, கதறி, அதனைச் சூறையாடிய அந்த இளைஞனைச் சபித்து, ஆவேசமாகப் பேசி, “ஐயோ, அம்மா, அப்பா” என்று அலறி ருக்மணி மூர்ச்சையடைகிறாள்.

சின்னண்ணா இந்தக் காட்சியில் மூர்ச்சித்து விழுந்ததும் சபையோர் மிகுந்த உணர்ச்சியுடன் பலமாகக் கைதட்டிப் பாராட்டினார்கள். காட்சியைப் பார்த்துக்கொண்டு, உள்ளே இருந்த எங்களுக்கெல்லாம் புல்லரித்துப் போய்விட்டது. காட்சி முடிந்ததும் வாத்தியார், சின்னண்ணா நடித்ததை அபாரமாகப் பாராட்டிப் புகழ்ந்தார்.

இராஜேந்திரனில் சிறந்த நகைச்சுவைப் பாத்திரம் கோபாலாச்சாரி. அந்தப் பாத்திரம் என். எஸ். கிருஷ்ணனுக்கே தரப்பெற்றது. என். எஸ். கே. அதைத் திறம்பெற நடித்து, வாத்தியாரின் பாராட்டைப் பெற்றார். தம்பி பகவதிக்கு, சீனிவாசன் வேடம் கொடுக்கப் பெற்றது. சீனிவாசன் ஒரு சின்ன வில்லன் பாத்திரம். அதில் பகவதிக்கு நல்லபேர். மிகச்சிறுவனாக இருந்ததால் அடிக்கடி ரசிகர்கள் கைதட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.

கே. கே. பெருமாள், துப்பறியும் கோவிந்தகை நடித்தார். இராஜேந்திரனுக்காக ஸ்ரீரங்கம் கோவில், காளிவிக்ரஹம் முதலிய சில புதிய காட்சிகளையும் தயாரித்தோம். கோவை, வெரைட்டி ஹாலில் இராஜேந்திரன் நாடகத்திற்கு அபாரமான வசூலாயிற்று. கொட்டகை உரிமையாளர் திரு. வின்சென்டை வாத்தியாரே நேரில் கண்டு, சினிமாவுக்கு உபயோகிக்கும் ‘ஆர்க் லைட்டை'க் கொடுத்துதவும்படியாகக் கேட்டுக் கொண்டார், “வெரைட்டி ஹால் உரிமையாளர் வின்சென்ட் அவர்கள், அன்புடன் உதவிய சினிமா கார்பன் ஆர்க் லைட்டின் ஒளியில் எங்கள் அற்புதக் காட்சிகளைக் காணத் தவறாதீர்கள்” என்று ஆர்க் லைட்டைக் குறித்துத் தனியாக விளம்பரமும் செய்தார். நாடகம் நடைபெறும்போது ஸ்ரீ ரங்கம் கோவில், காளிவிக்ரஹத்தின் அருகே நடக்கும் கொலை, ருக்மணி பாங்க் ஆகிய முக்கிய காட்சிகளில், மெளனப் படம் காண்பிக்கும் அறையிலிருந்து ஆர்க் லைட்டின் வெளிச்சம் விதவித நிறங்களில் பளிச்சிட்டு ஒளி வீசும், ரசிகர்கள் அந்த நாளில் இந்தச் சாதாரணக் கலர் லைட்டை வியப்போடு பார்த்தார்கள். அந்த லைட் காண்பிக்கப்படும் போதெல்லாம் மசிழ்ச்சியோடும், ஆரவாரத்தோடும் வரவேற்றார்கள்.
-------------

17. திரைப்படமும் நாடகமும்


கோவையில்தான் முதன் முதலாகத் திரைப்படம் காண்பிக்கும் தியேட்டரில் நாடகம் நடித்தோம். மாலை 6.30 முதல் 9.மணி வரை மெளனப் படம் ஏதாவது நடைபெறும். அதன் பிறகு 9.30 க்கு நாடகம் தொடங்குவோம். நாங்கள் எல்லோரும் படம் பார்க்கும் ஆசையால் விரைவாகவே சாப்பிட்டுவிட்டுக் கொட்டகைக்கு வந்துவிடுவோம்.

வெரைட்டி ஹாலில் நாங்கள் நாடகம் நடத்திய சமயத்தில் ஆங்கில சீரியல் படங்கள் ஒடிக் கொண்டிருந்தன. வில்லியம் டெஸ்ட்மாண்ட் என்னும் நடிகர் நடித்த நீளப் படம் எங்களை மிகவும் கவர்ந்தது. ஒரு படத்திற்குச் சுமார் 60 சுருணைகள் இருக்கும். இந்தச் சுருணைகளை நான்கு பகுதிகளாக்கிக் கொள்வார்கள். ஒவ்வொரு பாகத்தையும் ஒரு வாரம் போடுவார்கள். வெள்ளிக்கிழமை பாகம் மாற்றுவார்கள். பொதுமக்கள் தொடர்ந்து ஒரு மாதம் படத்தைப் பார்த்தால்தான் முழுக் கதையையும் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு பகுதியும் முடியும் நேரத்தில் கதாநாயகனையோ, அல்லது கதாநாயகியையோ மிகவும் அபாயகரமான நிலையில் சிக்க வைத்துவிட்டு, அந்த அபாயத்திலிருந்து அவர்கள் எப்படித் தப்புகிறார்கள் என்பதைப் பார்க்கப் பொது ஜனங்களின் உணர்ச்சியைத் துண்டி விடுவார்கள். அடுத்த பகுதியை எப்போது பார்க்கப் போகிறோமென்று எங்களுக்கு ஏக்கமாக இருக்கும். நிகழ்ச்சி மாற்றத்தன்று சாப்பாட்டைக்கூட மறந்து விட்டு, முன்னாடியே சிலர் கொட்டகைக்கு வந்துவிடுவதுமுண்டு.

கடிகமணி சகஸ்ரநாமம்

கோவையிலிருந்தபோதுதான் நடிகமணி எஸ். வி. சகஸ்ர நாமம் கம்பெனியில் வந்து சேர்ந்தார். அவர் சேர்ந்ததே ஒரு சுவையான நிகழ்ச்சி. கம்பெனியில் பெற்றோர்கள் அனுமதி யில்லாமல் யாரையும் சேர்ப்பது வழக்கமில்லை. சகஸ்ரநாமம் வந்து கேட்டபோது அவருக்கு 13 வயதிருக்கலாம். “உன் தகப்பனரிடமிருந்து கடிதம் வாங்கிக் கொண்டு வா சேர்த்துக் கொள்கிறேன்” என்றார் பெரியண்ணா. உடனே சகஸ்ரநாமம் கம்பெனியில் சேரவேண்டுமென்ற ஆர்வத்தால், தகப்பனார் எழுதுவதுபோல் ஒரு கடிதத்தைத் தாமே எழுதினார். பெரியண்ணாவிடம் கொண்டு வந்து கொடுத்து விட்டுக் கம்பெனியில் சேர்ந்து கொண்டார். பிறகு அந்தக் கடிதத்தில் கண்ட முகவரிக்குப் பெரியண்ணா கடிதம் எழுதினார். தகப்பனார் அலறியடித்துக் கொண்டு வந்து சேர்ந்தார். அவருக்கு சகஸ்ரநாமத்தைக் கம்பெனியில் சேர்க்க விருப்பம் இல்லை. பெரியண்ணா அவரோடு வெகு நேரம் வாதாடினார். “நாடகத் துறையில் விருப்பமிருக்கும் பையனை வேறு துறைக்கு அனுப்புவது சரியல்ல” என்று எடுத்துச் சொன்னார். கடைசியாகத் தந்தையின் பூரண சம்மதத்தோடு சகஸ்ரநாமம் கம்பெனியில் சேர்ந்து கொண்டார்.

எடிபோலோ, எல்மோ

கோவை நாடகம் முடிந்ததும் கம்பெனி சேலம் சென்றது. சேலம் கொட்டகைகளிலும் சினிமா சீரியல் படங்கள் நடந்து வந்தன. அவை எடியோலோ, எல்மோ நடித்த படங்கள். இவ்விரு நடிகர்களும் சீரியல் மெளனப் படங்கள் வந்த காலத்தில் பிரமாதமான பெயர் பெற்றிருந்தார்கள். இந்த இரு நடிகர்களுக்கும் தனித்தனி ரசிகர்கள் இருந்தார்கள். இவர்கள் அந்நடிகரின் பெயரால் கட்சியாக நின்றனர். எங்கள் கம்பெனி நடிகர்களில் சிலர் எடிபோலோ கட்சி; சிலர் எல்மோ கட்சி; இருவரில் யார் நல்ல நடிகர்? யார் பலசாலி? என்பதில் இரு கட்சியாளருக்கும் போட்டி. சில சமயங்களில் இதற்காக வாய்ச் சண்டைகூட ஏற்படுவதுண்டு. பழங்காலத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவங்களே யெல்லாம் நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. இப்போதும் கட்சிச்சண்டைகள் வேறு உருவங்களில் இருந்து வருகிறதே தவிர, அடிப்படை உணர்ச்சி மாறிவிட்டதாகக் கூறுவதற்கில்லை. இவ்வாறு நாங்கள் சினிமா பார்த்து வந்த போதெல்லாம் இந்தச் சினிமாப் படம் வாய் திறந்து பேசுவது நம் காதில் விழுந் தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும் என எண்ணிப் பார்ப்பதுண்டு. நாமும் ஒரு காலத்தில் சினிமாப் படத்தில் நடிக்க நேருமென நாங்கள் அப்போது கனவு கூடக் காணவில்லை.

பிரதாபச்சந்திரன்

சேலத்தில் பிரதாபச்சந்திரன் நாடகம் தயாராயிற்று. இந்நாடகம் பல ஆண்டுகளுக்கு முன் இராமசாமி ராஜா என்பவரால் எழுதப் பெற்றது. திரு. கந்தசாமி முதலியாரே இந்நாடகத்தைப் பயிற்றுவித்தார். நான் பிரதாபச்சந்திரனில் விசுவாசகாதகன் என்னும் பாத்திரத்தை ஏற்றேன். பெயரே பாத்திரத்தின் பண்பை உணர்த்துகிறதல்லவா? நான் முதன் முதலாகத் தியோனாக வேடம் தாங்கியது இந்த நாடகத்தில்தான். இந் நாடகத்தை மொத்தம் நான்கு முறையே நடித்திருக்கிறோம். தொடர்ந்து நடைபெறவில்லை. காரணம், இது பெரும்பாலும் டம்பாச்சாரி நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. இளஞ்சிறுவர்களுக்கு வேண்டாத பல கருத்துக்கள் இந்நாடகத்தில் இருந்தன. சிறுவர்கள் இந்நாடகத்தில் நடிப்பதை ரசிகர்கள் அவ்வளவாக வரவேற்கவில்லை. உரையாடல்கள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய பல மொழிகளைக் கொண்டிருந்தன. இந்நாடகத்தில் எம். கே. ராதா, முழுவதும் தெலுங்கு பேசும் செட்டியாராக ஒரு நகைச்சுவைப் பாத்திரத்தை ஏற்று, அற்புதமாக நடித்ததை என்னால் மறக்க முடியவில்லை.

ரயில்வேயில் லஞ்சம்

சேலத்தில் சந்திரகாந்தா நாடகம் பாடம் கொடுக்கப் பெற்றது. ஒத்திகையும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அடுத்த ஊரில் அரங்கேற்றமாகும் என நம்பிக் கொண்டிருந்தோம். இந்த நேரத்தில் கம்பெனி பெங்களுருக்குப் புறப்பட்டது. பெங்களுர் கண்டோன்மெண்ட் லக்ஷிமி தியேட்டரில் நாடகங்கள் நடத்தினோம். இங்கு நாடகம் தொடங்கு முன்பே சிறிது தொல்லை ஏற்பட்டது. சேலத்திலிருந்து சீன் சாமான்களைக் கூட்ஸ் வண்டியில் ஏற்றிவிட்டு, நாங்கள் பெங்களுருக்குப் போய் விட்டோம். சாமான் குறிப்பிட்டபடி வந்துவிடுமென்று நம்பி நாடகத் தேதியும் விளம்பரம் செய்து விட்டோம். ஆனால், சாமான்கள் குறித்த தேதியில் வரவில்லை. எங்களுக்கும் எவ்விதத் தகவலும் இல்லை. சேலம் ஜங்ஷனில் கூட்ஸ் வண்டி கழற்றி விடப்பட்டிருப்பதால் அது சரியான நிலையில் இல்லையென்றும், மீண்டும் எங்கள் ஆட்கள் வந்து சாமான்களை வேறு வண்டியில் ஏற்ற வேண்டுமென்றும், சேலத்திலிருந்து வந்த ஒரு நண்பர் கூறினார். பிறகு சேலம் போய் விசாரித்ததில் இது, ரயில்வே கூட்ஸ் ஷெட் அதிகாரி ஒருவருக்கு இலவச டிக்கெட் கொடுக்காததால் ஏற்பட்ட வினையென்பது தெரிய வந்தது. அந்த அதிகாரி தன்னால் இயன்ற புண்ணியத்தைச் செய்து, முதல் நாடகத்தையே நிறுத்தும் படியாகச் செய்து விட்டார். விபரம் தெரிந்ததும் அவருக்கு லஞ்சம் கொடுத்து, அதே வண்டியை மீண்டும் பெங்களுருக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வந்தார் மானேஜர்.

பார்சி கம்பெனி நாடகம்

பெங்களுரில் எங்கள் நாடகம் நடைபெறுவதற்கு முன் அதே கொட்டகையில் பார்சி கம்பெனியாரின் இரு நாடகங்களைப் பார்த்தோம். காட்சி அமைப்புகள் பிரமாதமாக இருந்தன. பிரதான நாடகத்திலேயே நகைச்சுவையை இணைக்காமல் அதற்கென்று ஒரு தனி நாடகமே நடித்தார்கள். பிரதான நாடகத்தில் ஒரு காட்சி முடிந்ததும், நகைச்சுவை நாடகத்தின் காட்சி யொன்று நடைபெறும். இரு நாடகங்களின் காட்சிகளும் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து நடைபெறும். பிரதான நாடகம் முடியு முன்பே நகைச்சுவை நாடகம் முடிந்துவிடும். இந்த முறை எங்களுக்குப் புதிதாக இருந்தது. இருந்தாலும், நாடகங்களை நன்கு ரசித்தோம். இந்த நாடகத்தைப் பார்த்ததின் மூலம் சில புதிய அனுபவங்களைப் பெற்றோம். பெங்களுரில் சரியானபடி வசூல் ஆகவில்லை. இந்த நிலையில் வாத்தியார் கந்தசாமி முதலியாரும், எம். கே. ராதாவும், கே. கே. பெருமாளும் திடீரென்று கம்பெனியிலிருந்து விலகிக் கொண்டார்கள். வாத்தியார் தயாரித்த நாடகங்களை அவர் இல்லாது நடத்துவது கஷ்டமாகி விட்டது. பெரியண்ணா டி. கே. சங்கரன், எம். கே. ராதா புனைந்து வந்த பாத்திரங்களை ஏற்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. பெங்களுரில் விரைவில் நாடகத்தை முடித்துக்கொண்டு திருப்பத்தூர் வந்துசேர்ந்தோம்.

பிரண்டுக்கு யோகம்

அப்போது கம்பெனியில் சிறு வேஷங்களைப் போட்டுக் கொண்டிருந்த பிரண்டு ராமசாமிக்கு யோகம் அடித்தது. பெருமாள் போட்டு வந்த துப்பறியும் கோவிந்தன் பாத்திரத்தை இராஜாம்பாள், இராஜேந்திரா ஆகிய இரு நாடகங்களிலும் அவர் ஏற்றார், தெளிவாகப் பேசித் திறம்பெற நடித்தார். அந்தக் காலத்தில் துப்பறியும் கோவிந்தன் ஒன்றுதான் பாட்டுகள் இல்லாத பாத்திரம். பிரண்டு ராமசாமிக்கு நன்றாகப் பாட வராது. துப்பறியும் கோவிந்தன் வேடத்தில் அவருக்கு அபாரமான பெயர் கிடைத்தது. இரத்தினாவளியில் எம்.கே. ராதா நடித்த வசந்தகன் வேடத்தையும் ராமசாமியே திறமையாக நடித்தார்.

எம். எம். சிதம்பராாதன் நாடகம்

திருப்பத்துாரில் நாங்கள் நடித்துக் கொண்டிருந்தபோது. அருகிலிருந்த கிருஷ்ணகிரியில் எம். எம். சிதம்பரநாதனின் அரிச்சந்திரா மயான காண்டம் நாடகம் நடந்தது. நாங்கள் பாவலர் கம்பெனியை விட்டுப் பிரிந்தபின் பாவலரிடம் பயிற்சி பெற்று முன்னுக்கு வத்தவர் சிதம்பரநாதன். அரிச்சந்திரா நாடகத்தில் அப்போது அவருக்கு நல்ல பெயர். அன்று எங்களுக்கு நாடகமில்லாததால் நானும் மற்றுஞ்சிலரும் கிருஷ்ணகிரிக்கு நாடகம் பார்க்கச் சென்றோம். அப்போது கிருஷ்ணகிரிக்குத் தனியாக ரயில் வண்டித் தொடர் இருந்தது. சின்ன ரயில் அது. இப்போது பொருட்காட்சிகளில் ஒடும் விளையாட்டு ரயில்போல இருக்கும். அதில் பயணம் செய்தது எங்களுக்கு மிகுந்த குதுரகலமாக இருந்தது. அரிச்சந்திரா நாடகத்தில் சிதம்பரநாதன் மிகுந்த சுறுசுறுப்பாகவும், அற்புதமாகவும் நடித்தார். சந்திரமதியாக நடித்தவரின் பெயர் நினைவில்லை. ஆனால், சின்னஞ்சிறுவகை நின்ற அரிச்சந்திரனுக்கு, சந்திரமதி தாய்போலத் தோற்றமளித்தார். சிதம்பரநாதனுக்கு அப்போது பதினன்கு வயதிருக்கலாம். சந்திரமதியாக நடித்தவர் முப்பது வயதுக்கு மேற்பட்ட அம்மை. யாராக இருந்தார். சிதம்பரநாதன் திறமையாக நடித்ததோடு அருமையாகவும் பாடினார். அந்த நாளில் பிரசித்தி பெற்றிருந்த டி. எஸ். வேலம்மாள், தாணுவம்மாள், டி. டி. ருக்மணி, எஸ். டி. சுப்புலட்சுமி, டி. பி. இராஜலட்சுமி, டி. ஆர். முத்துலட்சுமி, மிகவும் முதுமைப் பருவமடைந்த வி. பி. ஜானகியம்மாள் உள்ளிட்ட பெரிய நடிகையர் அனைவரும் சிதம்பரநாதனோடு சந்திரமதியாக நடித்திருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும். நாடகம் முடிந்ததும் சிதம்பரநாதனப் பார்த்துப் பாராட்டிவிட்டு, திருப்பத்துாருக்குத் திரும்பினோம்.

சவுக்கடி சந்திரகாந்தா

வாத்தியார் ஏற்கெனவே பயிற்சி அளித்திருந்த சந்திர காந்தா நாடகத்தை நடத்த நாங்களே முயற்சித்தோம். ஓவியர் கே. மாதவன் அப்போது எங்கள் கம்பெனியில் இருந்தார். அவரிடம் அந்த நாளிலேயே அற்புதமாக வரையும் ஆற்றல் நிரம்பியிருந்தது. அவரைக்கொண்டு சந்திரகாந்தாவுக்குப்பெரும் பொருட் செலவில் காட்சிகளை உருவாக்கினோம்.நாடக ஒத்திகை தீவிரமாக நடந்தது. ஏராளமான புகைப்படங்கள் எடுத்துப் பிரமாத விளம்பரம் செய்யப் பெற்றது.

ஜே. ஆர். ரங்கராஜு

சந்திரகாந்தாவை நாவல் வடிவில் எழுதிய ஜே.ஆர். ரங்க ராஜூ நேரில் வந்து பார்த்துத்தான் அனுமதி கொடுப்பது வழக்கம். இராஜாம்பாள் நாடகத்திற்கு இருபத்தி ஐந்து ரூபாய்களும், இராஜேந்திரா, சந்திரகாந்தா ஆகிய நாடகங்களுக்கு முப்பது ரூபாய்களும் அவருக்கு ‘ராயல்டி’ யாகக் கொடுக்க வேண்டும். அவர் சொல்வதுதான் சட்டம். நாடகத்தில் எந்த அம்சமாவது அவருக்குத் திருப்தியளிக்காவிட்டால் அனுமதி கொடுக்க மாட்டார். சந்திரகாந்தா நாடகத்திற்குத் தேதியும் போட்டுச் சுவரொட்டிகள் ஒட்டப் பெற்றன. நாடகங்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன் ஜே. ஆர். ரங்கராஜு வந்தார். அன்றே காலையிலும் மாலையிலுமாக உடைகளைப் போட்டுக் காட்சிகளுடன் ஒத்திகை நடத்திக் காண்பித்தோம். ஒத்திகை முடிந்ததும் சிலதிருத்தங்களைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். மாமாவும், சிற்றப்பாவும் அவர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றார்கள். அனுமதி அளிக்கவேண்டுமென்று கேட்டார்கள். அவரிடமிருந்து கிடைத்த பதில் சிறிதும் எதிர்பாராததாக, அதிர்ச்சி தருவதாக இருந்தது.

நாடகம் சரியில்லை; காட்சிகளின்அமைப்புச் சரியில்லை; நடிகர்களின் நடிப்புச் சரியில்லை; பாடங்கள் சரியில்லையென்று எல்லாவற்றையுமே குறை சொல்லிவிட்டு, “இவை யெல்லாவற்றையும் விரைவில் சரிபடுத்திக் கொண்டு எழுதுங்கள். மறுபடியும் வந்து ஒத்திகை பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்னைக்குப் புறப்பட்டுவிட்டார். அன்று, அவர்மீது எங்களுக்கு வந்த கோபம், இவ்வளவு அவ்வளவென்று சொல்ல முடியாது. என்ன செய்வது? அனுமதியில்லாததால் குறித்த தேதியில் நாடகம் நடைபெறவில்லை. மீண்டும் சந்திரகாந்தாவை நடத்தும் எண்ணத்தைக் கைவிட்டோம்.

ஒவியர் மாதவனின் உன்னதக் காட்சிகள்

சந்திரகாந்தாவுக்காக ஒவியர் மாதவன் எழுதிய காட்சிகள் எங்களைப் பார்த்துச் சிரித்தன. அவற்றில் திருக்கள்ளுர் பண்டார சந்நிதியின் அந்தப்புரம் ஒன்றை மிக அருமையாக சிருஷ்டித்திருந்தார். அதில் ஆறு கதவுகள் இருந்தன. அந்த ஆறு கதவுகளிலும் ஒரு ஆள் உயரத்தில் எழுதப் பெற்றிருந்த மடாதிபதியின் காதல் மனைவியரின் உருவங்கள் கண்ணையும், கருத்தையும் கவர்வனவாக அமைந்திருந்தன. ஆறு பேரும் ஆறு ஜாதிப் பெண்கள்; உயிருடன் நிற்பது போலவே பார்ப்பவருக்குத் தோன்றும். அந்த அற்புதக் காட்சியைக் காண்பிக்க முடியாமல் செய்துவிட்ட ஜே. ஆர். ரங்க ராஜுவை நானும், கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனும் சபித்துக் கொண்டே இருந்தோம்.

பெரியம்மை விளையாட்டு

இந்தச் சமயத்தில் கம்பெனியின் சில நடிகர்களுக்கு அம்மை நோய் வந்தது. அவர்களைத் தனியாக வைத்து, சிகிச்சை புரிவது சிரமமாக இருந்தது. எங்கள் தாயார் நிமோனியா ஜுரத் தால் மிகவும் கஷ்டப்பட்டார்கள். தங்கை சுப்பம்மாள், சிற்றப்பா செல்லம்பிள்ளை இருவருக்கும் அம்மை போட்டிருந்தது. இன்னும் சில பையன்களும் அம்மை நோயால் அவஸ்தைப் பட்டார்கள். இந்த நிலையில்நாங்கள் பட்டாபிஷேகத்தை முடிக்காமல்கோவை நாடகத்தை நிறுத்திவிட்டோம். நோயுற்றவர்களையெல்லாம் கோவையிலேயே தங்கவைத்து, வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டுக் கரூருக்கு வந்து சேர்ந்தோம். லஷுமணன் என்னும் ஒரு நடிகர் கம்பெனியில் இருந்தார். பெண்வேடம் புனைபவர். நன்றாக நடனம் ஆடக்கூடியவர். தாம்பாள நடனம் ஆடிக்கொண்டே புறா மாதிரி துணியில் புனைந்து காட்டுவார்; பரதநாட்டியம் போன்ற பல்வேறு நடனங்களையும் நன்றாக ஆடுவார்; நாடகத்திலும் பெண் வேடங்களில் மிகத் திறமையாக நடிப்பார். அவர் அம்மை நோய்க்கு அதிகமாகப் பயந்தவர். கரூர் ரயில் நிலையத்தில் இறங்கியதும் லஷுமணன், “அப்பா! ஒரு வகையாக அம்மை நோயிலிருந்து தப்பிவிட்டேன்” என்று கூறினார். எல்லோரும் கம்பெனி வீடுவந்து சேர்ந்தோம். மறுநாட் காலையில் லஷுமணனுக்கு அம்மைக் கொப்பளங்கள் இருப்பதைக் கண்டு எல்லோரும் அதிசயித்துப் போனோம். அவர் முன்னாள் ரயில் நிலையத்தில் பேசியதின் விளைவே இது என்று பலபேர் அபிப்ராயப்பட்டார்கள். இதில் அம்மன் விளையாட்டு, தெய்வீக சக்தி என்பது மெய்யோ, பொய்யோ, ஆனால் லஷுமணன்மட்டும் அதுதெய்வசக்தியென்று: உறுதியாக நம்பிவிட்டார். அவரை, அடுத்த ரயிலில் கோவை வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். கோவையில் எல்லோருக்கும் குணம் ஆயிற்று. ஆனால் லஷுமணன் அம்மை விளையாட்டுக்குப் பலியானார். கம்பெனி துவங்கியபின் அதுதான் முதல் மரணம். அவரை அடக்கம் செய்துவிட்டு, சிற்றப்பா முதலியவர்கள் வந்து சேர்ந்தார்கள்.

எஸ். என். இராமையா

கரூரில் நாடகங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. எங்கள் கம்பெனியில் அப்போது கதாநாயகனாகவேடம் புனைந்து வந்தவர் எஸ். என். இராமையா என்பதை முன்பே சொல்லி யிருக்கிறேன். சுவாமிகள் நாடகங்கள் எல்லாவற்றிலும் இவர் கதாநாயகனுக நடித்து வந்தார். மிக நன்றாகப் பாடக் கூடியவர். ஏற்கனவே சின்னையாபிள்ளை கம்பெனியில் எங்களோடு: இருந்தவர். அந்தக் கம்பெனி நிறுத்தப்பட்டதும் நாங்களே விரும்பி ராமையாவைச் சேர்த்துக் கொண்டோம். அவர், தம் குடும்பத்துடன் தனியே வசித்து வந்தார். அவருக்குப் பல புதிய நண்பர்கள் சேர்ந்தார்கள். அவர் க ளின் போதனையினல் ராமையா, அதிகச் சம்பளம் கொடுத்தால்தான் கம்பெனியில் இருக்க முடியும் என அறிவித்தார். மாதம் ஆயிரம் ரூபாய்கள் வேண்டுமென்று கேட்டார். அவருக்குப் பின்பலமாக உள்ளுரிலுள்ள ஒரு வக்கீல் இருந்து வேலை செய்தார். இராமையாவை: நிறுத்திவிட்டு, நாங்கள் நாடகம் நடத்த ஆரம்பித்தோம். அவருக்குத் துணையாக இருந்த வக்கீல், கரூரில் நல்ல செல்வாக்கு. உடையவர். அவருடைய ஆட்கள் நாடகம் நடைபெறாமல் குழப்பம் செய்து வந்தார்கள். வேறு வழியின்றிப் பஞ்சாயத்துப் பேசி ரூபாய் ஐநூறு சம்பளம் தருவதாகச் சொல்லி இராமையாவை மீண்டும் சேர்த்துக் கொண்டோம்.

கரூரிலிருந்து கம்பெனி புதுக்கோட்டைக்குப் போனதும் இராமையா மீண்டும் தொல்லை கொடுக்கத் தொடங்கினார். அவரை விலக்கிவிட்டு நன்னிலம் நடராஜன் என்னும் புதிய நடிகர் ஒருவரைச் சேர்த்துக் கொண்டோம்.
-------------------

18. புதுக்கோட்டைத் தம்புடு பாகவதர்


புதுக்கோட்டையில் தம்புடு பாகவதர் என்றால் அனை வருக்கும் தெரியும். அப்போது எங்கள் கம்பெனியில் ஆர்மோனியம் வாசித்து வந்த பி. ஆர். கிருஷ்ணமூர்த்தி ஐயர் புதுக்கோட்டையைச்சேர்ந்தவர்.அவர்தான் தம்புடு பாகவதரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். தம்புடு பாகவதர் சிறந்த சங்கீதஞானம் உடையவர்; கதா காலட்சேபக் கலையில் விற்பன்னர்; புதுக்கோட்டையிலேயே தம் தந்தையின் பெயரால் ஒரு சிறந்த கலாசாலையை நடத்தி வந்தார் அவர்.

இளஞ் சிறுவர்களுக்குப் பாடல்களைப் பயிற்றுவிப்பதில் இவருக்கு நிகரான ஒருவரை நான் இதுவரையிலும் கண்டதில்லை. சிதம்பரபாகவதர் என்பது இவரது பெயர். ஆனால் எல்லோரும் தம்புடு பாகவதர் என்றே அழைப்பார்கள்.

இவர் துருவச் சரித்திரத்தை நாடகமாக எங்களுக்குப் பயிற்றுவித்தார். பாடங்கள் அனைத்தும் நல்ல கர்னடக இசையில் அமைந்திருந்தன. அவற்றை அவர் எங்களுக்குப் பயிற்றுவித்த முறையே போற்றத் தக்கதாக இருந்தது. நான் துருவகை நடித் தேன். புதுக்கோட்டையில் துருவன் நாடகத்திற்கு அமோகமான வரவேற்பு இருந்தது. இதைநாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி சென்றோம். அங்கும் துருவன் நாடகத்திற்குப் பிரமாதமான வரவேற்பும், வசூலும் இருந்தன. காரைக்குடியில் மட்டும் தொடர்ந்து துருவன் நாடகத்தையே பலமுறைகள் நடித்தோம். நாடகம் மக்களை மிகவும் கவர்ந்தது.

துருவனில் ஆங்கிலம்

அந்தநாளில் ஸ்பெஷல் நாடக நடிகர்கள் புராண இதிகாச நாடகங்களில் சாதாரணமாக ஆங்கில வார்த்தைகளைப் பயன் படுத்துவார்கள். ஆனால் பாலர் கம்பெனிகளில் இந்தக் கொடுமை யெல்லாம் இல்லை. துருவச் சரித்திரத்தில் மட்டும் ஆங்கிலம் எப்படியோ இடம் பெற்று விட்டது.

துருவன் நாடகத்தில் ஒரு காட்சி. துருவனும், உத்தான பாத மகாராஜாவின் இளையாள் பிள்ளை உத்தமனும் விளையாடும் காட்சி அது. அந்த நாளில் எல்லாம் பாடல்கள்தானே! பிள்ளைகள், பாடல்களிலேயே விளையாடுகிறார்கள். பிள்ளைகள் கூடி விளையாடும் இடத்தில் விகடப் பையனும் ஒருவன் இருந்தாக வேண்டுமே!...... துருவன் பாடியதும், விகடப் பையனாக வேடம் புனைந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் பாடுவார்:

பாடலைக் கவனித்தீர்களா? டென்னிஸ், புட்பால் இவைபோன்ற விளையாடல்களை எல்லாம் துருவனும், உத்தமனும் விளையாடுகிறார்கள்! எப்படி? அந்தக் காலத்துப் புராண இதிகாச நாடகங்களில் ஆங்கில மொழி எப்படி ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. பார்த்தீர்களா? இந்தக் கேலிக் கூத்தையெல்லாம் பொது மக்கள் அமோகமாக ரசிக்கத்தான் செய்தார்கள்!

பக்த ராமதாஸ் தயாரிப்பு

பக்த துருவனில் மகத்தான வெற்றியைக் கண்டதும். தம்புடு பாகவதர், மற்றொரு சிறந்த காலட்சேபக் கதையான பக்த ராமதாசையும் எங்களது வேண்டுகோளுக்கிணங்கி நாடக. மாக்க முனைந்தார். காரைக்குடி முடிந்து, சிவகங்கை சென் றோம். பக்த ராமதாஸ் பாடம் கொடுக்கப்பட்டது. வழக்கம் போல் எல்லோருக்கும் பாடல்களை முதலில் சொல்லிக் கொடுத். தார் பாகவதர். துருவச் சரித்திரத்தில் அவர் பாடல்களைச் சொல்லிக் கொடுத்தபோதே கணத்த குரலில் அவர் பாடும். பாணி, சாதாரணமாகச் சிலருக்கு நகைப்பையே உண்டாக்கும். நகைச்சுவை நடிகர்களுக்குக் கேட்க வேண்டுமா, என்ன! அவர் பாடும்போது தலையை அசைக்கும் பாங்கையும், உதடுகள் குவிந்து விரியும் தோற்றத்தையும் அப்படியே காப்பியடித்தார்கள் சிலர். இவர்களில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனும், புளிமூட்டை ராமசாமியும் முதன்மையாக இருந்தனார். ராமதாசில் ஸ்ரீராம நவமி உத்ஸவத்தில் சாப்பிட்டு விட்டு வந்து, அதைப்பற்றி வர்ணித்துப் பாடும் இரு பிராமணர்களாக நடிக்க வேண்டிய நிலை இவ்விருவருக்கும் நேர்ந்தது. பிறருக்குச் சொல்லிக் கொடுப் பதையே நையாண்டி செய்யும் இவர்கள், தாங்களே பயிலும் நிலை ஏற்பட்டபோது, நிரம்பவும் திண்டாடினார்கள். ஒரு நாள் என். எஸ். கிருஷ்ணனையும், ராமசாமியையும் எதிரே உட்கார வைத்துக் கொண்டு பாகவதர் பாட்டுச் சொல்லிக் கொடுத்தார்.

இதைத் தம்புடு பாகவதர் அவருடைய வழக்கமான ‘பந்தாவில்’ பாடத் தொடங்கிய உடனேயே என். எஸ். கிருஷ்ணனுக்குச் சிரிப்பு வந்து விட்டது. அவர் நேராகப் பாகவதர் முகத்தைப் பார்க்காமல் சிரிப்பை அடக்கிக்கொண்டு, ராமசாமியைப் பார்த் தார். அவரும் அதே நிலையில் இருந்தார். வாயைத் திறக்காமல் உதட்டைக் கடித்த வண்ணம் இருந்தால் ஒரளவு சிரிக்காமல் சமாளிக்க முடியும்; ஆனால் வாயைத் திறந்து பாடவேண்டுமே! இரண்டு மூன்றுமுறை பாகவதர் பாடிவிட்டு, ‘நீங்கள் பாடுங்கள், பாடுங்கள்’ என்றார். இருவரும் பாடுவதற்கு வாயைத் திறந்து, “கூட்டு கறிகள் பாருமே” என்றார்கள். ‘பா’ என்ற சொல்லிலேயே பற்கள் முப்பத்திரண்டும் தெரியும்படியாக ‘குபுக்’ என்று இருவரும் சிரித்துவிட்டார்கள். இது பாகவதருக்கு எப்படி இருந்திருக்கும். இளம்பிள்ளைகளின் விளையாட்டு என்ற முறையில் பெருந் தன்மையோடு “சரி நாளைப் பாடலாம்” என்று எழுந்து போய் விட்டார். செய்தி பெரியண்ணா காதுவரைக்கும் எட்டியது. அவர், இருவரையும் கூப்பிட்டுக் கண்டித்தார். “இனிமேல் சரியாகப் பாடுகிறோம்” என்றார்கள் நகைச்சுவை நடிகர்கள் இருவரும்.

வாய்ப்பினை இழந்தோம்

மறுநாள் பொழுது விடிந்த உடனேயே, இன்று சிரிக்காமல் பாடவேண்டும் என்று இருவரும் தங்களுக்குள்ளேயே உறுதி செய்து கொண்டார்கள். பாகவதர் வந்து உட்கார்ந்தார். இருவரும் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ஒழுங்கான பிள்ளைகளாக வந்து, எதிரில் அமர்ந்தார்கள். பாகவதர் பழைய தோரணையில் பாடலைத் தொடங்கினார். என். எஸ். கிருஷ்ணனும், ராமசாமியும், பாகவதர் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமல் தலையைக் குனிந்து கொண்டே பாடத் தொடங்கினார்கள். ஆனால் மிகுந்த சிரமத்தோடு அவர்கள் அடக்கி வைத்திருந்த அந்த சிரிப்பு ஒரு முறைதான் கட்டுப்பட்டிருந்தது. இரண்டாம் முறை அவர்கள் கட்டுப்பாட்டை உடைத்துக் கொண்டு, சத்தத்தோடு பொட்டிச் சிதறியது. இருவரும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார்கள். பாகவதர் பொறுமை இழந்தார். “இந்தப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க என்னால் இயலாது” என்றார். அப்படிச் சொன்னதோடு மட்டும் நில்லாமல் உடனடியாகப் புதுக்கோட்டைக்கும் பயணமானார், பெரியண்ணா அவரை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் பயனில்லாமல் போயிற்று. என். எஸ். கிருஷ்ணன் இதற்காக மன்னிப்புக் கேட்டுப் பாகவதருக்குக் கடிதமும் எழுதினார். ஆனால் பாகவதர் திரும்பி வரவே இல்லை. நாங்கள் மிகவும் வருந்தினோம். மும் மொழி நாடகமான பக்த ராமதாசை அரங்கேற்றும் வாய்ப்பு அப்போது எங்களுக்குக் கிட்டவில்லை. அந்த நல்ல வாய்ப்பு மதுரை ஸ்ரீ பால மீன ரஞ்சனி சங்கீத சபாவுக்குக் கிடைத்தது. பின்னர் சிவகங்கையிலிருந்து திருநெல்வேலிக்குப் போய்ச் சேர்ந்தோம்.

திருநெல்வேலியில் மீண்டும் வாத்தியார் கந்தசாமி முதலியாரும், அவரது புதல்வர் எம். கே. ராதாவும், கே. கே. பெருமாளும் வந்து சேர்ந்தார்கள். இம்முறை அவர்களோடு கே. பி. காமாட்சி சுந்தரமும் வந்து சேர்ந்தார். அவர்கள் வந்தபின் சந்திர காந்தா நாடகம் மீண்டும் பாடம் கொடுக்கப் பெற்றது.

தம்பி பகவதிக்கு டைபாய்டு

திருநெல்வேலியில் தம்பி பகவதி, அம்மா,சிற்றப்பா மூவரும் டைபாய்டு ஜுரத்தால் பீடிக்கப்பட்டார்கள். வீட்டில் வைத்து சிகிச்சை செய்யமுடியவில்லை. பாளையங்கோட்டைஆஸ்பத்திரியில் மாதக்கணக்கில் அவர்கள் இருக்க நேரிட்டது. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். அம்மாவும், சிற்றப்பாவும் விரைவில் குணமடைந்தார்கள். தம்பி பகவதி மட்டும் நீண்ட காலம் ஆஸ்பத்திரியிலேயிருந்து சிகிக்சை பெற்றான். ஆஸ்பத்திரியின் பிரதம கம்பவுண்டர் ரங்கமன்னார் நாயுடுவும், கம்பவுண்டர் ஷண்முக சுந்தரம் பிள்ளையும் இந்தச் சமயத்தில் எங்களுக்குப் பேருதவி புரிந்தார்கள். இதன் காரணமாக அவர்கள் எங்கள் குடும்ப நண்பர்களாகவே ஆகிவிட்டார்கள்.

கம்பெனியில் நடத்திக் கொண்டிருந்த எல்லா நாடகங்களையும் நடித்து விட்டோம். மேற்கொண்டு புதிய நாடகம் ஏதாவது நடத்தினால்தான் வசூலாகும்போல் தோன்றியது. நிலைமை நெருக்கடியாய் விட்டது. வெளியூர்களில் ஸ்பெஷலாகச் சில நாடகங்களை நடத்தினோம். வசூலாகவில்லை. தம்பி பகவதிக்குத் துணையாக அம்மாவையும் ஆஸ்பத்தியிரிலேயே இருக்கச் செய்து விட்டு, நாங்கள் மதுரைக்குச் சென்றோம். மதுரையிலிருந்து எட்டையபுரம் இளையராஜா காசிவிஸ்வநாதபாண்டியன் அவர்கள் வேண்டுகோளின்படி மீண்டும் எட்டையபுரம் சென்றோம். ஒரே ஒரு இரத்தினவளி நாடகம் மட்டும் போடவேண்டும் என்ற ஏற்பாட்டில் தான் போயிருந்தோம். ஆனால் எட்டையபுரத்தார் எங்களை விடவில்லை. தாத்தா மகாராஜா, தங்க மகாராஜா, காசி மகாராஜா ஒவ்வொருவர் அரண்மனை அரங்கிலும் இரத்தினவளி நாடகம் சிறப்பாக நடைபெற்றது. வாத்தியார் கந்தசாமி முதலியாருக்கு எட்டையபுரம் அரசர் ஏராளமான சன்மானங்கள் செய்தார். இரத்னவளியாக நடித்த செல்லத்திற்கு இரண்டு கைக் கொலுசுகள் பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்க ஒரு விசேஷம். கலைவாணர் என். எஸ் கிருஷ்ணனுக்கு வைரக்கற்கள் பதித்த தம் கைக்கெடியாரத்தையே காசிமகாராஜா அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார். மற்றும் எல்லா நடிகர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பெற்றன.

கலைவாணர் தமக்கையார் வீட்டில்

எட்டையபுரத்தில் என். எஸ். கிருஷ்ணனின் மூத்த சகோதரி இருந்து வந்தார். நாங்கள் சகோதரர்கள் நால்வரும்: கலைவாணருடனும், வாத்தியார் முதலியாருடனும் அவரது இல்லத்தில் உணவு புசிப்பது வழக்கம். வாத்தியாருடன் நான் அடிக்கடி சிறுபிள்ளைத்தனமாக ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பேன். ஒருநாள் நாங்கள் எல்லோரும் உணவு அருந்திக் கொண்டிருந்தபொழுது, வாத்தியாருக்குத் தாகம் எடுத்தது. அவர், எதிரிலிருந்த டம்ளரை எடுக்கக் கையை நீட்டினார். நான் உடனே விளையாட்டாக அவருக்குமுன் அந்த டம்ளரை எடுத்து, அதிலிருந்த தண்ணிரைக் குடித்துவிட்டு, வெறும் டம்ளரை வாத்தியார் முன்னால் வைத்தேன். எல்லோரும் சிரித்தார்கள். மீண்டும் டம்ளரில் ஜலம் ஊற்றப்பட்டது. வாத்தியார் கையை நீட்டினார். மறுபடியும் நான் டம்ளரிலுள்ள நீரை எடுத்துக் குடித்து விட்டேன். அவ்வளவுதான். வாத்தியார் விக்கி விக்கித் தவித்தார். அவரது கண்கள் மேலே செருகிப் போய்விட்டன. அப்படியே பின்னால் சாய்ந்தார். உடனடியாகத் , தண்ணிர் கொண்டுவரப்பட்டு, அவரது முகத்தில் தெளிக்கப்பட்டது. தண்ணீரைக் குடித்தார். பிறகு ஒருவாறாகச் சமாளித்து எழுந்து உட்கார்ந்தார். நான் திடுக்கிட்டுப் போய்விட்டேன். இப்படி நேருமென்று எதிர்பார்க்கவே இல்லை. எல்லோரும் என்னைக் கோபத்தோடு பார்த்தார்கள். பெரியண்ணாவின் கண்களைப் பார்க்கவே எனக்குப் பயமாக இருந்தது. “சிறுபிள்ளை விளையாட்டாகச் செய்துவிட்டான்” என்று வாத்தியாரே மற்றவர்களைச் சமாதானப் படுத்தியது, எனக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.

எட்டையபுரத்தில் அரண்மனைக்கு வெளியேயும் ஒரு பெரிய நாடகக் கொட்டகை இருந்தது. இரத்தினவளி நாடகம் அங்கும் நடிக்கப்பெற்றது. ஆக, ஒரே ஒரு நாடகத்திற்காக எட்டையபுரம் சென்ற நாங்கள், அரண்மனையின் உள்ளிலும், வெளியிலுமாக மொத்தம் பதினைந்து நாடகங்கள் நடிக்க நேர்ந்தது. மதுரைக்குத் திரும்பியதும் விரைவில் பட்டாபிஷேகத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தோம்.

சந்திரகாந்தா அரங்கேற்றம்

இம்முறை சந்திரகாந்தா நாடகம் எவ்வித விக்கினமும் இல்லாமல் அரங்கேறியது. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், கோவையில் நேரில் வந்து ஒத்திகை பார்த்து அனுமதி கொடுக் காமல் போன ஜே. ஆர். ரங்கராஜு, இப்போது அதைப் பார்க் காமலே அனுமதி கொடுத்துவிட்டார். வாத்தியார் முதலியாரின் நாடகத் தயாரிப்பில் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை.

சந்திரகாந்தா, இராஜேந்திரா முதலிய நாவல் நாடகங்களில் இப்போது கே. பி. காமாட்சி பிரதம வேடம் தாங்கினார், காமாட்சி மிகச் சிறந்த நடிகர். “இந்தியன் எடிபோலோ” என்று அடைமொழி கொடுத்து, அவர் பெயரை விளம்பரப் படுத்துவது வழக்கம், அவருடைய நடிப்பு, மற்றவர்கள் நடிப்பினின்றும் முற்றிலும் வேறுபட்டிருக்கும். கைகால்களே அதிகமாக அசைக் காமல் முகத்திலேயே உணர்ச்சிகளைக் காட்டி நடிப்பார். அவரது அற்புதமான நடிப்புத் திறமையை எல்லோரும் புகழ்வார்கள்.

காரைக்குடியில் கம்பெனியை விட்டுப்போன எம். ஆர். சாமிநாதன் மீண்டும் இப்போது கம்பெனியில் சேர்ந்திருந்தார். ஆனால் பழைய ஸ்தானம் அவருக்குக் கிடைக்கவில்லை. என். எஸ். கிருஷ்ணன் அவருடைய இடத்தைப் பிடித்துக்கொண்டதால் சாமிநாதன் வேறு சில்லரை வேடங்களே புனைய நேர்ந்தது. நாடகங்களில் இரண்டாவதாக வரும் நகைச்சுவை வேடமே அவருக்குக் கொடுக்கப் பெற்றது. சந்திரகாந்தாவில் நாவிதர் முனிசாமியும், திருக்கள்ளுர் பண்டார சந்நிதியும் கலைவாண ருக்கே கிடைத்தன. எம். ஆர், சாமிநாதனுக்கு மொந்தையூர் பண்டாரசந்நிதி வேடமே கொடுக்கப்பட்டது. நான் அவரிடம் மிகவும் அனுதாபம் கொள்வேன். ஆனால் சாமிநாதன் இதுபற்றிக் கவலைப்படாதவர் போல் காட்டிக் கொள்வார். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனுக்கு, அவரது மனநிலை ஒருவாறு தெரியும். எனவே அவர், எம். ஆர். சாமிநாதனிடம் எப்போதும் மரியாதை கொடுத்து, அன்புடனேயே பழகி வந்தார்.

சுண்டூர் இளவரசன்

நான் சுண்டூர் இளவரசனாக நடித்தேன். சின்னண்ணா சந்திரவதனாவாக நடித்தார். சந்திரகாந்தாவில் சுண்டூர் இளவரசன் ஒரு பொறுப்பான பாத்திரம். அந்த வேடத்திற்கு எனக்கென்றே தனியாக வாத்தியார் ஒரு ஆங்கில வசனம் எழுதினார். அந்த வசனம் ஒரு சிறந்த கவிதைபோல் அமைந்திருக்கும். அதற்குத் தெளிவாகப் பொருள் கூறிச் சொல்லிக் கொடுத்தார். அந்த ஆங்கில வசனத்தை நான் பேசியபொழுது ரசிகர்கள் மகிழ்ச்சி யோடு கைதட்டிப் பாராட்டினார்கள். சுண்டுர் இளவரசன் வேடத்தில் எனக்குப் பெரிய வரவேற்புக் கிடைத்தது. அந்த நாளில் நான் நடித்த பாத்திரங்களில், எனக்கு மிகவும் பிடித்தமான பாத்திரம் சுண்டூர் இளவரசன்தான்.

மாமாவுடன் மனத்தாங்கல்

ஆஸ்பத்திரியிலிருந்து தம்பி பகவதி உடல் நலமாகி வீடு வந்து சேர்ந்தான். டைபாய்டு ஜுரம் அவனை உருக்குலைத்திருந்தது. மிகத் தெளிவாகப் பேசிக் கொண்டிருந்த பகவதியின் வார்த்தையில் இப்போது தடுமாற்றம் காணப்பட்டது. திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் வந்து சேர்ந்தோம். நாகர் கோவிலில் நாடகம் தொடங்கியது. அப்போது கைவசமிருந்த சொற்பத் தொகையைக் கொண்டு நாகர்கோவிலில் ஒரு நிலம் வாங்க எங்கள் தாயார் திட்டமிட்டார்கள். மாமா செல்லம் பிள்ளை ஒரு நிலம் பார்த்து வந்தார். அந்த நிலம் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. அது சம்பந்தமாக அம்மாவுக்கும், மாமாவுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. வார்த்தை வளர்ந்தது. மாமா ஏதோ தவறாகப் பேசினார். அம்மா மாமாவைக் கன்னத்தில் அறைந்து விட்டார்கள். அவர்கள் தம்பி என்ற முறையில் அடித்தாலும், அவ்வளவு பெரியவரை அடித்தது எங்களுக்கெல்லாம் கஷ்டமாகவே இருந்தது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பெரியண்ணாவுக்கும், மாமாவுக்கும் மனத்தாங்கல் ஏற்பட்டது. அடுத்த ஊர் திருவனந்தபுரம் வந்ததும் மாமா, கம்பெனியிலிருந்து விலகிக் கொண்டார். அவருக்கும் பெரியண்ணாவுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தின் காரணத்தை அறிய எங்களால் முடியவில்லை. பெரிய அண்ணாவும் அதை யாரிடமும் சொல்லவிரும்பவில்லை. திருவனந்தபுரத்தை விட்டுப் புறப்பட்டபோது, அப்போது முக்கிய பெண் வேடதாரியாக இருந்த செல்லம், கம்பெனியோடு வர மறுத்து விட்டான். அவனை மாமா மிகவும் அபிமானத்தோடு நடத்தி வந்ததால், மாமா இல்லாமல் அவன் வர விரும்பவில்லை. மாமாவே செல்லத்தைப் போக வேண்டாமென்று சொல்லி நிறுத்தி விட்டதாகவும் கேள்விப்பட்டேன். பணம் சம்பந்தமாகவும் மாமா எங்களுக்குப் பெரிய மோசடி செய்துவிட்டதாக அம்மா கூறினார்கள். எனவே, மேற்கொண்டு நான் எதுவும் கேட்க விரும்பவில்லை.

காவடிக் கட்டு

திருவனந்தபுரம் புத்தன் சந்தையிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எனக்குக் காவடி எடுக்கும் நேர்த்திக் கடன் இருந்தது. அம்மா எப்போதோ நேர்ந்திருந்தார்கள். இதற்கு முன் திருவனந்தபுரம் சென்றபோதெல்லாம் இக்கடனைத் தீர்க்கச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. இம்முறை அதை நிறைவேற்ற முடிவு செய்தார்கள். காவடியைத் தூக்கித் தோளில் வைத்ததும் சுவாமி வரும்; தன் நினைவே இராது என்று நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தேன். நான் கடவுள் நம்பிக்கை உடையவன். என்றாலும் இதில் எனக்கு நம்பிக்கையில்லை. நேர்வுக் கடன் தீர்க்கும் தினத்தன்று காலை நீராடிக் காவியுடை கட்டி, பூஜைக்கு ஆயத்தமானேன். செண்டை, முரசு, நாதசுரம், தவுல் போன்ற மேளதாளச் சத்தங்கள் என் செவிகளைத் துளைக்கத் தொடங்கின. காவடி எடுத்துத் தோளில் வைத்ததும், என் முன்னே இசைக்கருவிகளை உச்ச ஸ்தாயையில் முழக்கி, ஆட்டம் போடலாயினார். அவ்வளவுதான். தலை சுற்றுவது போன்ற நிலை; என் உணர்வில் ஒரு எழுச்சி. நினைவை இழந்தேன். மீண்டும் எனக்கு நினைவு வந்தபோது, சுப்பிரமணிய சுவாமி கோவிலின் முன் காவடியோடு நின்று கொண்டிருந்தேன். ஏறத்தாழ ஒரு மைல் தொலைவிலுள்ள கோவிலுக்கு எப்படி வந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. இந்த அனுபவம் எனக்குப் புதுமையாக இருந்தது.
------------------

19. மலையாள நாட்டில்


திருவனந்தபுரத்திலிருந்து கம்பெனி கொல்லம் வந்து சேர்ந்தது. கொல்லத்தில் வசூல் மிகவும் மோசமாக இருந்தது. நாடகங்களை விரைவில் முடித்துக் கொண்டு ஆலப்புழைக்குச் சென்றோம். ஆலப்புழையில் நாவல் நாடகங்களுக்கு மட்டும் சுமாராக வசூல் ஆயிற்று. அந்த நாளில் மலையாளத்தின் அந்தப் பகுதியில் பஸ் போக்குவரத்துகள் அதிகமாக இல்லை. எங்கு பார்த்தாலும் நீண்ட நீர்க் பரப்பு; ‘காயல்’ என்று அதைக் குறிப்பிடுவார்கள். வேம்ப நாட்டுக் காயல், காயங்குளம் காயல் போன்ற பல காயல்கள் ஒன்று சேர்ந்து சமுத்திரம்போல் கிடக்கும். சாமான்களையெல்லாம் பெரிய வள்ளங்களில் ஏற்றி அனுப்பிவிட்டு நாங்கள் எல்லோரும் சிறு கப்பல்களைப் போலிருக்கும் போட்டுகளில்தான் பிரயாணம் செய்தோம். கொல்லத்திலிருந்து எர்ணாகுளம் வரை இதே நிலைதான். ஆலப்புழை, கொச்சி முதலிய ஊர்களில் நாடகம் நடத்திவிட்டுத் திருச்சூர் வந்து சேர்ந்தோம். திருச்சூரிலும் வசூலாகவில்லை. தொடர்ந்து வசூல் இல்லாத அன்றைய நிலை எனக்கு மிகவும் கவலையை அளித்தது. நாடகங்கள் சிறப்பாக நடைபெற்றன. நல்ல திறமையுள்ள நடிகர்கள் கம்பெனியில் இருந்தார்கள். வசூல் மட்டும் ஆகவில்லை. இராஜாம்பாள், இராஜேந்திரா, சந்திரகாந்தா முதலிய எல்லா நாடகங்களும் தோல்வி யடைந்தன. கே.பி. காமாட்சி, எம். கே. ராதா, கே. கே. பெருமாள், என். எஸ். கிருஷ்ணன், எம். ஆர். சாமிநாதன், நன்றாகப் பாடக்கூடிய பல இளம் நடிகர்கள் எல்லோருமிருந்தும் பயனில்லை. மிகவும் சிரமப்பட்டோம்.

மகத்தான துரோகம்

கம்பெனி திருச்சூரிலிருந்து எப்படியாவது தப்பிப் பிழைத்தால் போதும் போலிருந்தது. பொள்ளாச்சியில் கொட்டகையை பேசிவந்தார் பெரியண்ணா. எல்லோரும் பொள்ளாச்சிக்குப் புறப்பட்டோம். வாத்தியார் கந்தசாமி முதலியார் தனி வீட்டில் இருந்தார். அவரும், மற்றும் சில முக்கியமான நடிகர்களும் இரண்டு நாட்களுக்குப்பின் வருவதாகச் சொன்னார்கள். ஒரு சிலர் சொந்த ஊருக்குப் போய் வருவதாகப் புறப்பட்டுச் சென்றார்கள். நாங்கள் பொள்ளாச்சி வந்து சேர்ந்தோம். முதல் நாடகத்திற்குச் சுவரொட்டிகள் அடிக்கப் பெற்றன. விளம்பர அறிவிப்புகளும் தயாராயின. திருச்சூரில் தங்கியவர்கள் வருகைக்காகக் காத்திருந்தோம். குறித்தபடி இரண்டு நாட்களாயின. யாரும் வரவில்லை. ஊருக்குப் போனவர்களிடமிருந்தும் எவ்விதத் தகவலும் இல்லை. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த நிலையில் திருச்சூரில் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம், இடி போன்ற ஒரு அதிர்ச்சியான செய்தியைத் தாங்கி வந்தது. திருச்சூரில் தங்கியவர்களும், ஊருக்குப் போவதாகப்புறப்பட்டவர்களும் ஆக எல்லோருமாகப் பதினாலு பேர்கள்-வேறு ஒரு கம்பெனியில் முன்பணம் வாங்கிக் கொண்டு மங்களுருக்குப் போய்விட்டார்கள் என்று அக்கடிதத்திலிருந்து தெரிய வந்தது. நாங்கள் சிறிதும் எதிர்பாராத இந்தச் செய்தி எங்களைத் திடுக்கிடச் செய்தது. வாத்தியார் கந்தசாமி முதலியார், அவரது புதல்வர் எம். கே. ராதா, கே.பி. காமாட்சி, கே.கே. பெருமாள், எம். ஆர். சாமிநாதன், நன்னிலம் நடராசன் உள்ளிட்ட பதினாலு பேர்களைத் திடீரென்று இழந்த நிலையில் எப்படி நாடகங்களை நடத்த முடியும்?

துரோகத்தில் சிக்காத தூயவர்

ஊருக்குப்போன சில நடிகர்களின் பெட்டிகளைத் திறந்து பார்த்தோம். சில பெட்டிகளில் ஒன்றுமே இல்லை. இரண்டொரு பெட்டிகளில் வெறும் காகிதக் குப்பைகள் கிடந்தன. ஒருவர் மிகவும் புத்திசாலி. பெட்டி கனமாக இருப்பதற்காக அவர் இரண்டு, கனத்தபெருங்கற்களை உள்ளேவைத்திருந்தார். இவ்வளவு பெரிய துரோகத்தை எங்களில் யாரும் கனவுகூடக் காணவில்லை.

ஆனால் ஒருவருக்கு மட்டும் இப்படி நடக்குமென்று முன்னாடியே தெரிந்திருந்தது. அவரையும் ஓடிப் போனவர்கள், தம்மோடு வர அழைத்திருந்தார்கள்.ஆனால் அவருக்குக் கம்பெனியின் மீது இருந்த பற்றுதல், நன்றியுணர்ச்சி, அவர்களோடு போகவிடாது தடுத்து விட்டன. அவர் என்னிடம் இந்த உண்மையைக் கூறியபோது, நான் அவரை ஆனந்தத்துடன் தழுவிக் கொண்டேன். அவர்தான் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்.

முக்கிய நடிகர்கள் பலர் போய்விட்டதால் பொள்ளாச்சியில் நாடகங்களைத் துவக்க இயலாமல் சிரமப்பட்டோம். பதினைந்து நாட்கள் நாடகம் நடைபெறவில்லை. சில்லரை வேடங்களைப் புனைந்து வந்த பல நடிகர்களுக்கு நல்ல வேடங்களைத் தாங்கச் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. புதிதாகச் சில நடிகர்கள் சேர்க்கப் பட்டனார். எப்படியோ ஒருவாறாக நாடகம் மீண்டும் துவங்கியது. இந்த நிலையில் வசூலை எதிர்ப்பார்க்க முடியுமா? மிகவும் கஷ்டப் பட்டோம்.

காலவ ரிஷி

பொள்ளாச்சியில் இந்தக் கஷ்டத்திலும் புதிய நாடகமாக, பம்மல் சம்பந்தனரின் காலவரிஷி தயாராயிற்று. அந்நாடக அரங்கேற்றத்தன்று வேடிக்கையான ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

காலவரிஷி நாடகம் தொடங்கி நடந்துகொண்டிருந்தது. காலவ முனிவர் ஆற்றின் நடுவே நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு மண்டு, கமண்டு என்னும் இரு சீடர்கள். அவர்களும் கரையருகே கண்களை மூடியவண்ணம் வீற்றிருக்கிறார்கள்.

திரை உருண்டு உயர்ந்ததும், சித்திரசேனன் என்னும் கந்தர்வன் ஊர்வசி சமேதனாய் உல்லாசத்துடன் விமானத்தில் பறந்து வருகிறான். விமானம் ஆற்றைக் கடந்து செல்லும்போது தன்வாயிலிருந்த தாம்பூலத்தைக் கீழே உமிழ்கிறான். அது ஆற்றில் கண்களை மூடிக் கைகளை நீட்டி நிஷ்டையிலிருந்த காலவ முனிவரின் வலதுகரத்தில் விழுகிறது. கரத்தில் ஏதோ விழுந்துநிஷ்டை கலைக்கப்பட்டதும் காலவர் நாற்புறமும் பார்க்கிறார். சினத்துடன் சிஷ்யர்களை அழைக்கிறார். பிறகு ஞான திருஷ்டியால், உண்மையறிந்து, ஏதோ சபதம் செய்கிறார். இதன் காரணமாக, கிருஷ்ணுர்ஜுன யுத்தம் நடக்கிறது. இதுதான் நாடகக் கதை.

காலவர் நிஷ்டையிலிருக்கும் நிலையில் காட்சி தொடங்கியது. அன்று காலவராக வேடம் புனைந்திருந்தவர் திரு. மாதவராவ் என்னும் சிறந்த ஹாஸ்ய நடிகர். சாதாரணமாக வீட்டிலேகூட அவருடைய நடவடிக்கைகள் எங்களுக்குச் சிரிப்பைத் தருவனவாக இருக்கும். காலவரின் சிஷ்யர்களான மண்டு, கமண்டு வேடங்களில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், சுந்தரமையர் இருவரும் நடித்தார்கள். மேலே பறந்து செல்லும் கந்தர்வன் சித்திரசேனனுக நான் நடித்தேன்.

நாடகம் அன்றுதான் முதன் முறையாக நடிக்கப் பெற்றதால் நடிகர்கள் அனைவரும் உணர்ச்சியோடு நடித்தார்கள்.

மேடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கம்பியில் இணைக்கப் பட்டிருந்த ஒர் அட்டை விமானத்தில் நான் ஊர்வசியுடன் பறந்து சென்றேன். ஆற்றின் நடுவே விமானத்தை நிறுத்தித் தாம்பூலத்தையும் உமிழ்ந்தேன்.

கொண்டை பறிபோனது

சபையில் ஒரே கரகோஷம். அதைத் தொடர்ந்து பெருஞ் சிரிப்பு. காட்சியை மக்கள் பிரமாதமாக ரசித்ததாக எண்ணிப் பூரிப்படைந்தேன்.

“அடே மண்டு, கமண்டு” என்று ஆவேசத்துடன் கூச்சலிட்டு, “என் வலக்கரத்தில் உச்சிஷ்டத்தை உமிழ்ந்தவர் யார்?” என அலறினார் காலவராக வீற்றிருந்த நடிகர் மாதவராவ். மண்டுவும், கமண்டுவும் ஸ்வாமி என்று ஒடி வந்ததும் சபையில் மேலும் சிரிப்பொலி அதிகரித்தது.

திரை மறைவில், மேலே விமானத்தில் இருந்த எனக்கு என்ன நடக்கிறதென்பது தெரியவில்லை. தலையை நீட்டிப் பார்த்தேன். சிஷ்யர்களான என். எஸ். கிருஷ்ணனும், சுந்தரமையரும் மாதவராவைப் பார்த்து, வாயைப் பொத்தியவாறு சிரிப்புத் தாங்காமல் பொருமிக் கொண்டிருந்தார்கள். சிஷ்யர்களின் சிரிப்பைக் கண்ட சபையோர், மேலும் கை தட்டிச் சிரித்தார்கள். மாதவராவ் இருந்த இடம் எனக்குத் தெரியவில்லை. இதற்குள் உள்ளேயும் சிரிப்பொலிகள் கேட்கத் தொடங்கின. என்.எஸ்.கே. பேசவேண்டும், அவரோ பேச முடியாமல் “ஸ்வாமி, தங்கள் தங்கள்..."என்று தவித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் “திரை விடுங்கள், திரை விடுங்கள்” என்ற பல குரல்கள்! திரைவிடப் பட்டது. விமானம் கீழே இறக்கப் பட்ட பிறகுதான் எனக்கு உண்மை விளங்கியது.

விமானம் காலவரைக் கடந்து செல்லும் போது அந்த அட்டை விமானத்தில் நீண்டு கொண்டிருந்த ஒரு ஆணி,நிஷ்டை யிலிருந்த முனிவரின் நீளக் கொண்டையோடு கூடிய சடைமுடி டோப்பாவையும் பூப்போல எடுத்துக் கொண்டு போய் விட்டது. விமானம் மறைந்ததும், நிஷ்டை கலைந்த காலவர் மொட்டைத் தலையில் உச்சிக் குடுமியோடு சபைக்குக் காட்சியளித்தார். உணர்ச்சியோடு வீற்றிருந்த அவருக்குக் கொண்டை பறிபோனதுகூடத் தெரியவில்லை. இந்த நிலையில் முனிபுங்கவரைப் பார்த்த சிஷ்யர்களால் எப்படி வாய் திறந்து பேச முடியும்?... ரசிகர்களால்தான் எப்படிச் சிரிப்பை அடக்க முடியும்?

நாடகங்களுக்கு வருவாய் குறைவாக இருந்தாலும், இவ்வாறு மேடையில் நிகழும் சுவையான நிகழ்ச்சிகள் எங்கள் கவலைக்கு மருந்தாக அமைந்தன. பொள்ளாச்சி முடிந்து ஈரோடு வந்தோம்.
--------------

20. நடிப்பிசைப் புலவர் ராமசாமி


ஈரோட்டில் நாடகங்கள் சுமாரான வசூலில் நடைபெற்றன. நாவல் நாடகங்களில் பெரியண்ணா முக்கிய பங்கெடுத்துக் கொண்டார். ஈரோட்டிலிருந்து மீண்டும் கோவைக்கு வந்தோம். நாங்கள் தாயாருடன் இருக்கத் தனி வீடு கிடைக்காததால் தாயார் மட்டும் ஈரோட்டிலேயே தங்க நேர்ந்தது, நாங்கள் கோவைக்கு வந்தபின் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியார் ஈரோட்டில் நாடகங்கள் நடித்தார்கள். அவர்கள் அப்போது சி. கன்னையா கம்பெனியார் தயாரித்திருந்ததைப்போல் ஏராளமாகப் பொருட் செலவு செய்து, தசாவதாரம் நாடகத்தை நடித்துக் கொண்டிருந்தார்கள். நாவல் நாடகங்களை அதிகமாக நடிப்பதில்லை. எங்கள் தாயார் ஈரோட்டிலேயே இருந்ததால், ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நடிகர்களில் சிலர், அவர்களைப் பார்த்துப்போக அடிக்கடி வந்தார்கள். அப்படி வந்த சில நடிகர்கிளில் ஒருவர்தான் கே.ஆர்.ராமசாமி அவருக்கு எங்கள் கம்பெனிக்கு வரவேண்டுமென்ற ஆவல் இருந்தது. அந்த ஆவலை எங்கள் அன்னையாரிடம் சொல்லி,எப்படியாவது தன்னைக் கம்பெனியில் சேர்த்து விடுமாறு கேட்டுக் கொண்டார். அப்போது கே. ஆர். ராமசாமிக்குப் பதிமூன்று வயதிருக்கும். அவருடைய தகப்பனாருக்கு எழுதி, அதற்கு ஏற்பாடு செய்யுமாறு அன்னையார் சொல்லி விட்டார்கள். திடீரென்று ஒருநாள் கே. ஆர். ராமசாமி தன்னந் தனியே புறப்பட்டுக் கோவைக்கு வந்து சேர்ந்தார். ஈரோட்டி லிருந்து அம்மாதான், தன்னை அனுப்பியதாகச் சொன்னார். அம்மாவும், நடிகர்கள் சிலர் வந்து போகும் செய்திகளைப் பெரிய அண்ணாவுக்குக் கடிதமூலம் அறிவித்திருந்தார்கள். கே. ஆர். ராமசாமியைப் பாடச் சொல்லிக் கேட்டவுடன் எல்லோருக்கும் நிரம்பவும் பிடித்து விட்டது. அவருடைய சாரீரம் மிகவும் இனிமையாகவும், கெம்பீரமாகவும் இருந்தது. பெரியண்ணா அவரைக் கம்பெனியில் சேர்த்துக் கொள்ளச் சம்மதித்து விட்டார். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் அப்போது ஆசிரிய ஸ்தானத்தில் இருந்தவர் காளி. என். ரத்தினம். அவர் பெரியண்ணாவுக்குக் கடிதம் கொடுத்து, ஒருவரை அனுப்பியிருந்தார். அவர் வந்ததும் பெரியண்ணா, ராமசாமிக்கு விருப்பமிருந்தால் அழைத்துப் போவதில் எங்களுக்கொன்றும் தடையில்லை என்று கூறினார். வந்தவர் என்னென்னவோ சொல்லிராமசாமியை அழைத்துப் போக முயன்றார், எதுவும் பலிக்கவில்லை. ஒரே உறுதியாக ராமசாமி ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிக்கு வரமுடியாதென்று மறுத்துவிட்டார். ராமசாமிக்கு உடனடியாக அபிமன்யு, சுந்தரி நாடகத்தில் கிருஷ்ணன் வேடம் கொடுக்கப் பட்டது.

யாழ்ப்பாணம் சண்முகம் பிள்ளை

கோவை முடிந்து தாராபுரம் சென்றோம். தாராபுரத்தில் இருந்தபோது, கொழும்புக்கு வரவேண்டுமென்று யாழ்ப்பாணம் சண்முகம் பிள்ளை வந்து அழைத்தார். இவர் அந்த நாளில் இலங்கையில் பிரசித்தி பெற்ற காண்ட்ராக்டர். இவரைப்பற்றி” நிறைய கேள்விப்பட்டிருந்தோம். எஸ். ஜி. கிட்டப்பாவை முதன் முதலாக இலங்கைக்குக் கொண்டு சென்றவர் சண்முகம் பிள்ளை தான் என்று சிலர் பெருமையாகச் சொல்லிக் கொண்டார்கள். போகவரச்செலவு நீக்கி, மாதம் ஒன்றுக்கு ஆருயிரம்ரூபாய் பேசி, மாதம் பதினறு நாடகங்கள் நடத்துவதாக ஒப்பந்தம் செய்யப் பட்டது. ஒப்பந்தம் முடிந்ததும் கரூருக்கு வந்து சேர்ந்தோம்.

சம்பளத் தகராறு

கொழும்புப் பயணம் நிச்சயமானதும் எல்லோரும்: சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டுமென்று கேட்டார்கள். அந்த நாளில் இலங்கைக்குப் பயணம் என்றால், மாதம் இருபது ரூபாய் சம்பளம் பெறும் ஒருவருக்கு இலங்கையில் நாற்பதும், பர்மாவில் அறுபதும், மலையாவில் எண்பதுமாகச் சம்பளம் கொடுக்கவேண்டும். கொழும்புவுக்கு எல்லோருக்கும் இரட்டிப்புச் சம்பளம் தருவதாகப் பெரியண்ணா ஒப்புக்கொண்டார். கரூரில் சில நாடகங்கள் நடித்தபின் இலங்கைக்குப் பயணமானோம்.
---------------

21. இலங்கைப் பயணம்


1928ஆம் ஆண்டில் இலங்கைக்கு முதன் முறையாக ரயில் மூலமாகப் புறப்பட்டோம். பயணம் மிகவும் கஷ்டமாக இருந்தது. தனுஷ்கோடியை நெருங்கியதும் மண்டபம் கேம்ப்பில் எங்களை இறக்கி விட்டார்கள். ஒரு வார காலம் அங்கேயே தங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது, வைத்தியர் சண்முகம்பிள்ளை ஏற்கனவே ஒரு நாடகக் கம்பெனியைக் கொண்டு போயிருக்கிறாரென்றும், அவர்களே இன்னும் திருப்பிக்கொண்டுவந்து சேர்க்காததால் நாங்கள் போக இயலாதென்றும் சொல்லப்பட்டது. ஒரு கல் மண்டபத்தில் தங்கி, நாற்றம் பிடித்த அரிசியைச் சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டோம். சண்முகம்பிள்ளை எப்படியோ நிலைமையைச் சமாளித்து, இலங்கைக்கு எங்களைக் கொண்டு போக அனுமதி பெற்றுவிட்டார். ஒருவாரத்திற்குப் பின் தனுஷ்கோடி போய்க் கப்பலேறினோம். கப்பலில் வீசிய மணம் சிலபேருக்குப் பிடிக்கவில்லை. தலைச்சுற்று, மயக்கம் எல்லாம் வந்தன. இரவு எட்டு மணியளவில் தலைமன்னார் போய்ச் சேர்ந்தோம். தலைமன்னரில் கொழும்புக்குப் புறப்பட ரயில் காத்துக் கொண்டிருந்தது. எல்லோரும் விழுந்தடித்துக்கொண்டு ரயிலில் போய் ஏறினோம். ரயிலில் உட்காரவே இடமில்லை. மிகவும் நெருக்கடி. இடையில் லுங்கியும், மேலே ஜாக்கெட் மட்டும் போட்ட சிங்களப் பெண்கள் சிலர் வந்து, நெருக்கித் தள்ளிக் கொண்டு உட்கார்ந்தது எங்களுக்கு வியப்பாக இருந்தது. அலுப்பு மிகுதியாக இருந்ததால் நான் விரைவில் உறங்கி விட்டேன். அதிகாலேயில் கொழும்பு மருதானே ரயில் நிலையத் திற்கு வந்து சேர்ந்தோம். சண்முகம்பிள்ளை எங்களை வரவேற்று ஜிந்தும்பிட்டி ஹாலுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்.

ஜிங்தும்பிட்டி ஹால்

அப்பொழுது கொழும்பில் நாடகம் நடைபெறும் பெரிய தியேட்டர் ஒன்றுதானிருந்தது. அதுதான் ஜிந்தும்பிட்டி ஹால். சுமார் இரண்டாயிரம் பேர் தாராளமாக உட்காரக்கூடிய நாடக அரங்கம். தரை இல்லை. அதற்குப் பதிலாக ஏறக்குறைய ஆயிரம் பேர் வசதியாக உட்காரக் கூடிய முறையில் காலரி அமைத்திருத்தது. 5, 4, 3, 2, 1 எனக் கட்டணம் வைத்து, ஐந்து வகுப்புகள் பிரித்திருந்தார்கள். இந்தக் கட்டணம் நாங்கள் தமிழ்நாட்டில்: அந்த நாளில் கேள்விப்படாத கட்டணம். நாடகக் கொட்டகை இருந்த இடம் ஒரு பெரிய சுற்று வட்டகைக்குள் காலனிபோல் தனியிடமாக இருந்தது. கொட்டகை இருந்த வட்டகைக் குள்ளேயே சுமார் பத்து வீடுகளுக்கு மேலிருந்தன. முதல் வீடு எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. அந்த வீட்டில் குடியேறினோம். அடிக்கடி நாடகங்களை ஒத்திகைப் பார்க்கவும், பகல் நேரங்களில் விளையாடவும் கொட்டகை எங்களுக்கு வசதியாக இருந்தது. தம்பி பகவதி, கே. ஆர். ராமசாமி, பிரண்ட் ராமசாமி, சகஸ்ரநாமம் இவர்களையெல்லாம் சாப்பாட்டு நேரம் தவிர மற்ற நேரங்களில், கொட்டகையில்தான் பார்க்கலாம். நாடகமேடையில் முழுதும் பலகை போட்டு, அடியில் ஒரு ஆள் உயரம் வசதியாக இடமிருந்ததால் வெயில் படாது ஓடிவிளையாடுவதற்கு செளகரியமாக இருந்தது. காலரி போட்டிருந்த இடத்திலும் அதே போன்று வசதியிருந்தது. இவ்விரு இடங்களையும் நாங்கள் விளையாடுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டோம். பகல் நேரம் முழுதும் அங்குதானிருப்போம்.

பெருங் கலகம்

நாடகம் தொடங்கியது. நல்ல வசூலாயிற்று. வைத்தியர் சண்முகம்பிள்ளை ஒரே உற்சாகமாக இருந்தார். நாற்காலி,பெஞ்சி, காலரிக்குரிய வாயில்களில் நிற்பதற்காக நாலைந்து பேரை நிரந்தரமாக வைத்திருந்தார். அவர்களில் மூக்குப்பரி என்பவர் ஒருவர். நல்ல ஆஜானுபாகுவான ஆசாமி. பார்ப்பதற்கே பயமாக இருக்கும். ஏறத்தாழ எட்டடி உயரமிருப்பார். அவர் எப்போதும் கொட்டகையில்தான் படுத்துக் கொள்வது வழக்கம். பிற்பகல் நேரங்களில் மூக்குப்பரி குடித்துவிட்டுவந்து அட்டகாசம் செய்வார். இரவு நாடகமாதலால், பகல் உணவுக்குப்பின் எல்லோரும் உறங்குவார்கள். இவர் யாரையும் உறங்கவிடாமல் உபத்திரவம் செய்வார். ஒருநாள் தம்பி பகவதியைப் பிரியத்தோடு தூக்கிக் கீழே போட்டுவிட்டார். வேண்டுமென்று போட வில்லை. குடிவெறியில் தள்ளாடிக் கொண்டிருந்த நிலையில் அவ்வாறு நேர்ந்துவிட்டது. இந்தச் செய்தி சிற்றப்பா காதுக்கு எட்டியதும் அவர் சண்முகம் பிள்ளையிடம் புகார் செய்தார். மூக்குப்பரியைக் கண்டிப்பதாகச் சண்முகம்பிள்ளைக் கூறினார். மூக்குப்பரியின் அட்டகாசம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஒருநாள் பிற்பகலில் மூக்குப்பரி நன்றாகக் குடித்துவிட்டு வந்து வழக்கம்போல் ரெளடித்தனம் செய்துகொண்டிருந்தார். செய்தி அறிந்ததும் கம்பெனி வீட்டிலிருந்து எல்லோரும் ஓடினார்கள். முதலில் போன கம்பெனி பலசாலி கோபாலபிள்ளை, மூக்குப் பரியை ஒரே அறையில் கீழே வீழ்த்தினார். சிற்றப்பா மூக்குப்பரியை இடுக்குப் பிடிப்போட்டுப் பிடித்துக்கொண்டார். அந்தப்பிடி இரும்புப் பிடியாக இருந்தது. கம்பெனியில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் மூக்குப்பரியை ஆசை தீர அடித்துத் தமது வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டார்கள். பெரியண்ணா ஒருவர் மட்டும் இந்த அடிதடியில் கலந்துகொள்ளவில்லை. அடித்துக் கட்டிப் போட்டுவிட்டு எல்லோரும் போய்விட்டார்கள். சற்று நேரம் கழித்துப் போதை தெளிந்தபின் அவர் எழுந்தார். கொட்டகையைவிட்டு வெளியே வந்தார். அவருக்குத்துணையாக ஒரு பெருங்கூட்டம் இருந்தது. அந்தக் கூட்டத்தாரைத் திரட்டிக் கொண்டு மீண்டும் கொட்டகைக்குள் நுழைந்தார்.

அப்போது நாவல் நாடகங்களில் பயன்படுத்துவதற்காக நாங்கள் ரிவால்வர் வைத்திருந்தோம். பொய்த் தோட்டாக்களை உபயோகிப்பதற்குத்தான் அனுமதி இருந்தது. ஆனால் உண்மையான தோட்டாக்களை உபயோகிக்கவும் அனுமதி இருப்பதாக ஒரு வதந்தியைப் பரப்பி விட்டிருந்தோம். நாடகங்களில் நாங்கள் ரிவால்வர் உபயோகிப்பதை மூக்குப்பரி பார்த்திருந்தார். எனவே இந்த வதந்தியை அவரும் நம்பியிருந்தார். சிற்றப்பா ரிவால்வரைக் கையில் வைத்துக்கொண்டு கலகக் கூட்டத்தார் யாராவது கம்பெனி வீட்டிற்குள் நுழைந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவதாகப் பயமுறுத்தினார். உயிருக்குப் பயந்த கலகக் கூட்டம் உள்ளே நுழையாமல் வாயிலுக்கு வெளியிலேயே நின்று கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது. சிற்றப்பாவையும், முதலில் தன்னை அடித்து வீழ்த்திய கோபால் பிள்ளையையும் கொன்று விடுவதாக மூக்குப்பரி சபதம் செய்திருப்பதாக அறிந்தோம். இரவு நேரங்களில் உறக்கமே வருவதில்லை. எந்த நேரத்திலும் என்ன நடக்குமோவென்று அச்சமாயிருந்தது.

நீதி மன்றத்தில்

கண்ட்ராக்டர் சண்முகம் பிள்ளை எதுவும் நேராதென்று எங்களுக்கெல்லாம் தைரியம் கூறினார். இந்தக் கலகத்தால் யாரும் வெளியே போகவோ, எதையும் பார்க்கவோ இயலாமல் மிகுந்த கஷ்டப்பட்டோம். எங்களுக்கும், மூக்குப்பரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. சிற்றப்பா நீதிமன்றத்திற்குப் போகும்போது அவருக்குப் பாதுகாப்பாக இரு போலீஸ்காரர்களும், கொழும்பிலே இருந்த வேறு சில தமிழ் வீரர்களும் உதவினார்கள், மூக்குப் பரியும் அவரது ஆட்கள் சிலரும் எந்நேரமும் கொட்டகையின் வெளி வாயிலருகே ஒரு கட்டையில்தான் உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் நிலையையும் உறுதியையும் கண்ட பெரியண்ணா, எந்தக் காரணத்தைக்கொண்டும் யாரும் வெளியே போகக்கூடாதென்று உத்தரவு போட்டு விட்டார். எல்லோரும் இறுதிவரை கொட்டகையிலேயே அடைபட்டுக் கிடந்தார்கள். நீதிமன்றத்தில் வழக்கு சமரசமாய்ப் போகச் சண்முகம்பிள்ளை ஏற்பாடு செய்தார். சிற்றப்பாவையும் மூக்குப்பரியையும் இணைத்து வைத்தார். மூக்குப்பரிக்குத் தன்னை முதலில் அடித்த ஒருவரை மட்டுந்தான் நன்றாகத் தெரியும். அவரை மாத்திரம் எப்படியாவது தீர்த்துக் கட்டி விடுவதென்று முடிவு செய்து கொண்டார்.

நாங்கள் செய்த தந்திரம்

மூக்குப்பரிக்குத் தெரியாமல் கோபால்பிள்ளையைத் தமிழ் நாட்டுக்கு அனுப்பிவிடப் பெரியண்ணா ஏற்பாடுகள் செய்தார். கோபால்பிள்ளை நல்ல வீர உள்ளம் படைத்தவர். எனவே, அவர் இவ்வாறு கோழைத்தனமாக ஓடிப்போகச் சம்மதிக்க வில்லை. என்றாலும், குழுவின் பொது நன்மையைக் கருதிப் பெரியண்ணா வற்புறுத்தவே ஒருவாறு இசைந்தார். ஒருநாள் மூக்குப்பரி வெளியில் இல்லாத சமயம் பார்த்து, தந்திரமாகக் கோபால் பிள்ளையை வெளியேற்றி ரயிலுக்கு அனுப்பிவைத்தோம். அவர் எவ்வித இடையூறுமின்றிக் கரூர் போய் சேர்ந்தார். கரூரிலிருந்து கடிதம் வந்தபிறகுதான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது

நாடகம் நல்ல வசூலுடன் நடைபெற்று வந்தது. யாழ்ப் பாணம் சண்முகம் பிள்ளைக்கு என்னை நிரம்பவும் பிடித்திருந்ததால், அவருடைய வேண்டுகோளின் பேரில் நான் சில நாடகங்களில் கதாநாயகனாக நடித்தேன். சத்தியவான் சாவித்திரியில் நாரதராகவே நடித்து வந்த நான், கொழும்பில் சத்தியவாகை நடித்தேன். சண்முகம்பிள்ளை என்னை மிகவும் பாராட்டினார். வெளியே எங்கும் போக முடியாததைப்பற்றி நாங்கள் - நடிகர்கள் கவலைப் படவில்லை. பகல் நேரங்களில் விளையாடுவதற்கு வேண்டிய வசதி கள் இருந்ததால் மகிழ்ச்சியாகவே பொழுதைப் போக்கிைேம்.

கலைவாணர் கற்பனையும் மன்னிப்பும்

ஒருநாள் மனோகரா நாடகம் நடந்தது.வழக்கம்போல் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் வசந்தனக நடித்தார். அவர் எந்த நாடகத்திலும் கற்பனையாக ஏதாவது வேடிக்கை செய்வார். அவரும் சின்னண்ணாவும் இதுபற்றி வீட்டிலேயே திட்டம் போட்டுப் பேசி முடிவு செய்து கொள்வார்கள். மனோகரனில் நந்தவனக் காட்சி நடைபெற்றது. வசந்தன் கல்லாசனத்தின் இழே ஒளிந்திருந்து மனோகரன் தன் தாயார் பத்மாவதியிடம் சபதம் செய்வதைக் கேட்கும் காட்சி அது. பத்மாவதி போன பின் விஜயாள் வந்து மனோகரன விளையாட அழைக்கிறாள். மலர் மாலையால் அவனைக் கட்டி இழுக்கிறாள். இந்தச் சமயத்தில் ராஜப் பிரியன் வந்து மனோகரனக் கேலி செய்கிறான், வசந்தன் கல்லா சனத்தின் கீழிருந்து வெளியே வருகிறான். முதுகு வளைந்துபோய் விட்டதாகப் புலம்புகிறான். அவனுடைய பைத்தியச் செயல்களைக் கண்டு எல்லோரும் சிரிக்கிறார்கள். வசந்தனின் தாய்வசந்தசேனை வருகிறாள். அவன் தன் தாயிடம் புகார் செய்கிறான். மனோஹரனும் விஜயாளும் தனியே ஒருபுறம் நின்று சிரிக்கிறார்கள். உடனே வசந்தன், “அண்ணாத்தே, நீ அந்த்ப் பொண்ணை வச்சுக்கிட்டு சிரி; நான் இந்தப்பொண்ணை வச்சுக்கிட்டுச் சிரிக்கிறேன்" என்று தன் தாயைக் கட்டிக் கொள்கிறான். இதைக் கேட்டு மேலும் எல்லோரும் சிரிக்கிறார்கள்.

கலைவாணர் பேசிய இந்த வசனம், பம்மல் சம்பந்தனரின் நாடகத்தில் இல்லை. என். எஸ். கே. கற்பனையாகப் பேசியது. இந்த வசனத்துக்குச் சபையில் பெருத்த கைதட்டல் ஏற்பட்டது. காட்சி முடிந்ததும் சண்முகம்பிள்ளை உள்ளே வந்தார். என். எஸ் . கிருஷ்ணனைக் கூப்பிட்டார்.

“என்னப்பா, மனோஹரன் மனைவியை வைத்துக் கொண்டு சிரித்தால், வசந்தன் தன் தாயை வைத்துக் கொண்டு சிரிப்பதாகச்சொல்வதா? என்னதான் பைத்தியக்காரனாக இருந்தாலும் தாய்க்கு மரியாதை கொடுக்க வேண்டாமா?” சண்முகம் பிள்ளையின் கேள்வி இது. என். எஸ். கிருஷ்ணன் அவர் இவ்வாறு கேட்பாரென்று எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் கேட்டபின் நிலைமையைச் சமாளிக்க வேண்டுமே!

ஆசிரியர் சம்பந்த முதலியார் அப்படித்தான் எழுதியிருக்கிறார், அதைத்தான் பேசினேன்” என்றார் கலைவாணர்.
சண்முகம் பிள்ளைக்குக் கோபம் வந்து விட்டது. “என்னப்பா, கதையளக்கிறாய்? சம்பந்த முதலியாரை எனக்குத் தெரியாதா? நான் இப்பொழுதுதான மனோகரன் நாடகம் பார்க்கிறேன். அவருடைய நாடகத்தையே நான்தானே இங்கு நடத்தினேன். எனக்குத் தெரியாதா?” என்றார். என். எஸ். கே. இதன் பிறகு வாதாடவில்லை. தான் தவறாகப் பேசிவிட்டதாகக் கூறி, அவரிடம் மன்னிக்க வேண்டினார். கலைவாணர் அவ்வாறு அடங்கிப் போனதும், மன்னிப்பு கேட்டதும் எங்களுக்கெல்லாம் வியப்பாக இருந்தது. அவர் எங்கள் குழுவிலிருந்த காலம்வரை, மன்னிப்புக் கோரியது, இதுதான் முதல் தடவை. மேலும். சண்முகம் பிள்ளையிடம் வாதாடாமல் சமரசமாகப் போனதற்கு நாங்கள் எல்லோரும் சந்தோஷப் பட்டோம். கலைவாணரைப் பாராட்டினோம்.
-------------------

22. தமிழகம் திரும்பினோம்


கொழும்பில் இரண்டு மாதங்கள் நடித்த பிறகு, மேலும் பல ஊர்களுக்கு வரவேண்டுமென்று சண்முகம் பிள்ளை வற்புறுத்தினார். கொழும்பில் ஏற்பட்ட மூக்குப்பரி கலக அனுபவத்தால் வேறு ஊர்களுக்குப் போக நாங்கள் சம்மதிக்கவில்லை. நாடகங்கள் முடிந்தன.கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு எல்லோரும் புறப்பட்டோம். எதிர்பாராத நிலையில் எங்களுக்கு எதுவும் அபாயம் ஏற்படாதிருக்கச் சண்முகம் பிள்ளை ஏற்பாடு செய்திருந்தார். இருந்தாலும் கடைசி நிமிஷத்தில் என்ன நேருமோவென்று நடிகர்கள் பயந்து கொண்டிருந்தார்கள். மூக்குப்பரி சமரசமாகப் போய்விட்டதால் எல்லோரையும் பார்க்கவேண்டுமென்று ரயில் நிலையத்துக்கு வந்திருந்தார். சிற்றப்பா அவர் அருகிலேயே நின்று கொண்டு ஜாக்கிரதையாக அவரது ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாகக் கவனித்து வந்தார். முக்குப்பரியின் சிவப்பேறிய கண்கள் கோபால் பிள்ளையைத் தேடிக் கொண்டிருந்தன. பெரியண்ணாவிடம் மட்டும் மூக்குப்பரி அபார மதிப்பு வைத்திருந்தார். பெரியண்ணா அவரை நெருங்கி, “யாரைப் பார்க்க வேண்டும்?” என்று கேட்டார். “என்னை முதலில் அடித்தானே, அந்தத் தைரியசாலியைப் பார்க்க வேண்டும். அந்த ஆசாமி எங்கே?” என்று கேட்டார் அவர். “ஒரு அவசர காரியமாக அவர், முன்பே ஊருக்குப் போய்விட்டாரே” என்றார் பெரிய அண்ணா. இந்தச் செய்தியை அறிந்ததும் மூக்குப்பரி, ‘ஆஹா மோசம் போய்விட்டேனே; அவனையல்லவா தீர்த்துக் கட்டத் திட்டம் போட்டிருந்தேன்’ என்று வருத்தப்பட்டார். இதை மூக்குப்பரி வாய்விட்டுச் சொல்லியதும், எங்களுக்கெல்லாம் குலை நடுக்கம் எடுத்தது. அதற்குள் ரயிலும் புறப்பட்டு விட்டது. எல்லோரும் மீண்டும் கப்பலிலும், ரயிலிலுமாகப் பிரயாணம் செய்து கரூருக்கு வந்து சேர்ந்தோம்.

கலைவாணர் ஊடல்

கரூரில் மீண்டும் நாடகங்கள் தொடங்கின. என். எஸ். கிருஷ்ணனுக்கும் சிற்றப்பாவுக்கும். ஏதோ சிறு தகராறு ஏற்பட்டது. கிருஷ்ணனுக்குப் பெரியண்ணா அதிகமாகச் சலுகை கொடுத்து விட்டதாகவும், அதனால் தன்னை அவன் மதிப்பதில்லை யென்றும் சிற்றப்பா புகார் செய்தார். பெரியண்ணா என். எஸ். கிருஷ்ணனைக் கூப்பிட்டுக்கேட்டார். அவருடைய பதில் திருப்தி யளிக்கவில்லை. எனவே, உடனடியாகக் கணக்குத் தீர்த்து, அவரைக் கம்பெனியிலிருந்து நிறுத்தி விட்டார்.

எங்களுக்கு நிரம்பவும் கவலையாயிருந்தது. கலைவாணர் கம்பெனியின் முக்கிய நடிகராக மட்டும் இல்லை. எங்கள் எல்லோருடைய உள்ளங்களையும். கவர்ந்திருந்தார். மீண்டும் அவரைக் கம்பெனியில் சேர்த்துக்கொள்ளச் சின்னண்ணா எவ்வளவோ முயன்றார். பயனளிக்கவில்லை. கலைவாணரும் உடனே ஊருக்குப் போகவில்லை. அவருக்குக் கம்பெனியை விட்டுப் போக மனமுமில்லை. கம்பெனி வீட்டு அருகிலேயே ஒரு தனி அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, அடிக்கடி எங்கள் கண்ணில் படும்படியாகப் போவதும் வருவதுமாக இருந்தார். ஒரு நாள் “கள்வர் தலைவன்” நாடகம் நடைபெற்றது. அதற்கு டிக்கட் எடுத்துக் கொண்டு முன்வரிசையில் வந்து உட்கார்ந்து நாடகம்பார்த்தார். அவர், நாடகத்தில் ‘வயத்தான்’ என்ற பாத்திரத்தை ஏற்று, மிகச் சிறப்பாக நடிப்பார். அந்தப் பாத்திரத்தை அன்று, மற்றொரு நகைச்சுவை நடிகராகிய சுந்தரமையர் போட்டிருந்தார். ஒருவருக்கும் நாடகத்தில் மனம் செல்லவில்லை. என்.எஸ். கிருஷ்ணனையே பார்த்துக் கொண்டு நடித்தார்கள். பல நடிகர்கள் பகல் நேரங்களில் அவருடைய தனியறைக்குப் போய்ப் பேசிக் கொண்டிருப்பது வழக்கமாகி விட்டது. என். எஸ். கிருஷ்ணன் விலகியதும் தன் தந்தைக்குக்கடிதம் எழுதியிருப்பார்போல் தெரிகிறது. நாலந்து நாட்களில் அவரது தந்தையார் சுடலைமுத்துப் பிள்ளை நாகர்கோவிலில் இருந்து வந்து சேர்ந்தார். சிற்றப்பாவுடன் கலந்து பேசினார். இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்ததால் ஒன்றாகவே போய்க் குடித்துவிட்டு வந்தார்கள். குடியினால் ஏற்படும் நட்பு மிகவும் வலிமையானது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது முற்றிலும் உண்மை. பிறகு சிற்றப்பாவே வந்து கிருஷ்ணனை மீண்டும் கம்பெனியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று பெரியண்ணாவிடம் சிபாரிசு செய்தார். சுமார் பதினைந்து நாட்கள் கம்பெனியோடு கலைவாணருக்கிருந்து வந்த ஊடல் நீங்கியது. மீண்டும் கம்பெனியில் சேர்த்துக்கொள்ளப் பெற்றார்.

கலைவாணரின் ஆற்றல்

அந்த நாளிலேயே என். எஸ். கிருஷ்ணனுக்கு அபாரமான திறமை இருந்தது. ஆர்மோனியம் வாசிப்பார். மிருதங்கம் வாசிப்பார்; ஒவியம் வரைவார். ஒவியர் கே. மாதவனிடம் அவருக்கு நெருங்கிய நட்புறவு இருந்தது. மாதவன் அவர்கள், என். எஸ். கிருஷ்ணனின் ஓவியக் கலை உணர்ச்சியை வளர்ப்பதில் பெரும் பங்கு கொண்டார். மாதவனும் மிருதங்கம் வாசிக்கக் கூடியவர்; இராகங்களை அற்புதமாகப் பாடுவார். கே. ஆர். ராமசாமிக்கு, மாதவன் அடிக்கடி இசைப்பயிற்சி அளிப்பதுண்டு.

ஒருநாள், நாடகத்தில் மிருதங்கம் வாசிப்பவருக்கு உடல் நலம் கெட்டுவிட்டது. வேறு யாரும் கிடைக்கவில்லை. அந்த நெருக்கடியில், அன்று என். எஸ். கிருஷ்ணன்தான் மிருதங்கம் வாசித்து, நாடகத்தைச் சிறப்பாக நடத்தினார். இதே போன்று சில நாடகங்களுக்கு என். எஸ். கிருஷ்ணன் ஆர்மோனியம் வாசிக்கவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்பட்டதுண்டு. ஒவியர் மாதவன் இல்லாத நேரங்களில் காட்சிகளும் வரைந்து கொடுத்திருக்கிறார். பொதுவாகக் கலைவாணர் கிருஷ்ணன் ஒரு சகல கலா வல்லவராகவே விளங்கி வந்தார். அவரைப் பற்றிய அபூர்வமான குறிப்புகள் மேலும் தொடருமாதலால் இப்போது இவ்வளவோடு விட்டுவிட்டு மேலே செல்லுகிறேன்.

கே. பி. சுந்தராம்பாள் அம்மையார்

கரூரிலிருந்தபோது எங்களுக்கும் திருமதி கே. பி. சுந்தராம்பாள் அம்மையாருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். பவளக்கொடி நாடகத்தில் நான் கிருஷ்ணனாக நடிப்பேன். அந்த வேடத்திற்குரிய பாடல்கள் சிலவற்றை, எனக்குச் சொல்லிக் கொடுத்தார். நாங்களும் அவர் வீட்டிற்குப் போவதுண்டு. ஒருநாள் எங்கள் தாயாருடன் கொடுமுடியிலுள்ள தமது இல்லத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார். காவேரியில் எல்லோருமாகக் குளித்துவிட்டு, பாடல் பெற்ற புண்ணியத் தலமாக விளங்கும் தென்பாண்டிக் கொடுமுடி ஈஸ்வரன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டோம். பிறகு அம்மையார் இல்லத்தில் தங்கி விருந்து புசித்தோம். அப்போது அவர் எஸ்.ஜி.கிட்டப்பா ஐயரோடு ஊடல் கொண்டிருந்த இடைக் காலம். அவரது இல்லத்தில் கிட்டப்பா ஐயருடன் அவர் எடுத்துக் கொண்ட பல்வேறு புகைப்படங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் என்னிடம் காண்பித்துத் தமது குறைகளையெல்லாம் கதை கதையாகச் சொன்னார். எங்கள் தாயாருக்கு, கே. பி. எஸ். மீது அதிகமான பற்றுதல் ஏற்பட்டிருந்தது. கரூருக்குப் போகும் பொழுதெல்லாம் நாங்கள் சுந்தராம்பாள் அம்மையார் வீட்டுக்குப் போகாமல் இருப்பதில்லை.

மேனகா அரங்கேற்றம்

கரூர் முடிந்து, வேறு பல ஊர்களுக்குச் சென்றபின் மதுரைக்கு வந்தோம். மீண்டும் வாத்தியார் கந்தசாமி தமது முதலியார், புதல்வரோடு வந்து சேர்ந்தார். இம்முறை வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் எழுதிய மேனகா என்னும் அருமையான நாவலை, நாடகமாகத் தயாரித்தார். திருநெல்வேலி யிலிருந்தபோது பாடம் கொடுக்கப்பெற்றது. - நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி மேனகா, தம்பி பகவதி வராகசாமியாகவும், எம். கே. ராதா டிப்டிக் கலெக்டர் சாம்பசிவமாகவும், என். எஸ். கிருஷ்ணன் சாமா ஐயராகவும் நடிக்க ஏற்பாடாயிற்று. மேனகாவில் நான் நைனமுகமதுவாகவும், தாசி கமலமாகவும் ஒரே சமயத்தில் இரு வேடங்களில் நடித்தேன். பெண்வேடம் புனைபவர்கள் அப்போது கம்பெனியில் பலர் இருந்தார்கள். என்றாலும், தாசி கமலம் நான்தான் நடிக்கவேண்டு மென்று வாத்தியாரும் கலைவாணரும் விரும்பினார்கள். வேறு வழி யின்றி நான் அதை ஏற்றுக் கொண்டேன். மேனகாவுக்கு ஏராளமான பொருள் செலவு செய்து காட்சிகளையும், உடைகளையும் தயாரித்தோம். கல்லிடைக்குறிச்சியில் மேனகா அரங்கேறியது. கே. ஆர். ராமசாமி மேனகா பாத்திரத்தை மிக அற்புதமாக. நடித்தார். அருமையாகப் பாடினார். மாயூரம் வேதகாயகனாரின் ‘நாயகர் பட்சமடி எனக்கது ஆயிரம் லட்சமடி’ என்ற பாடலை அவர் பிலஹரி இராகத்தில் பாடியது, இன்னும் பசுமையாக என் நினைவில் இருக்கிறது. பகவதிக்கும், ராமசாமிக்கும் கணவன் மனைவி இணைப் பொருத்தம் பிரமாதமாக இருந்தது. இந்த இணைப்புப் பொருத்தத்தைப் பார்த்து, மேலும் பல நாடகங்களில் கணவன் மனைவி பாத்திரங்கள் இவர்களுக்கே அளிக்கப்பட்டன. மேனகாவுக்கு நல்ல பேரும், புகழும் கிடைத்தன. மேனகா அரங் கேறியபின், நாங்கள் நடித்த எல்லா நாடகங்களிலும் இதுவே முதன்மையாக நின்றது.

கல்லிடைக்குறிச்சி எழில் மிக்க சிற்றுார். வாய்க்காலிலும், தாமிரபரணி ஆற்றிலும் நிறையத் தண்ணிர் ஓடிக்கொண் டிருந்தது. எல்லோரும் காலையில் ஆற்றில் குதித்து விளையாடிக் குளித்து விட்டுத்தான் வீடு திரும்புவோம். கல்லிடைக்குறிச்சி டாக்டர் சங்கரய்யரும், அவரது மனைவி லட்சுமியம்மாளும் பிரபல மாணவர்கள். தேசீய இயக்கத்தில் ஈடுபட்டவர்கள். அவர்கள் எங்கள் நடிகர்களிடம் மிகுந்த அன்பு காட்டினார்கள். நாடகக் கொட்டகைக்கு அருகிலேயே அவர்கள் வீடும் இருந்தது. எங் களுக்கு ஏதாவது தலைவலி,காய்ச்சல்என்றால் உடனே சங்கரய்யர் வீட்டுக்குப் போவோம். அவர்கள் வீடு, எங்கள் சொந்த வீடு மாதிரி, அந்த அளவுக்கு நெருங்கிப் பழகினோம்.

மேனகா நாடகம் பல வகையில் எங்களுக்குத் தொல்லை கொடுத்தது. முஸ்லீம்கள் அதிகமாக இருக்கும் ஊரில் “இந்துப் பெண்ணை ஒரு முஸ்லீமுக்கு விற்பதா?” என்று கூறி, இந்துக்கள் நாடகத்தை எதிர்ப்பார்கள். ஜாதி இந்துக்கள் அதிகமாக இருக்கும் ஊரில், “ஒரு முஸ்லீமை அயோக்கியணாகக் காட்டுவதா?” என்று கூறி, முஸ்லீம்கள் நாடகத்தை எதிர்ப்பார்கள். இப்படியே பல ஊர்களில் எங்களுக்குச் சிரமம் ஏற்பட்டு வந்தது. ஆனால், எல்லா ஊர்களிலும் நடுநிலையோடு நாடகம் பார்க்கும் ரசிகர்களும் இருப்பார்களல்லவா? அவர்களின் துணையோடு இந்த எதிர்ப்புக்களை யெல்லாம் சமாளித்து வந்தோம்.
-----------------

23. பெரியண்ணா திருமணம்


கல்லிடைக்குறிச்சியில் இருந்தபோது பெரியண்ணாவுக்குத் திருமண ஏற்பாடு நடைபெற்றது. நாடகம் முடிந்தபின் சாமான்களையெல்லாம் கொல்லத்திற்கு அனுப்பிவிட்டு எல்லோருமாக நாகர்கோயில் போய்ச் சேர்ந்தோம். கவிமணி தேசிக விநாயகனாரின் ஊராகிய புத்தேரியைச் சார்ந்த திருமதி பேச்சியம்மை அவர்களுக்கும் பெரியண்ணா டி. கே. சங்கரன் அவர்களுக்கும் 1929 நவம்பர் 21 இல் புத்தேரியில் திருமணம நடந்தேறியது. இதுவே எங்களுக்குத் தெரிந்து, குடும்பத்தில் நடந்த முதல் திருமணம், நாங்களெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தோம். ஆனால், பெரியண்ணாவுக்கு மட்டும் , திருமணம் மகிழ்ச்சியை உண்டாக்கவில்லை.

திருமணத்திற்காக நாங்கள் எல்லோரும் நாகர்கோவில் ஒழுகினசேரியில் ஒரு இல்லத்தில் தங்கியிருந்தோம். திருமணம் முடிந்த இரண்டாம் நாள் இரவு, சிற்றப்பாவுக்கும், என். எஸ். கிருஷ்ணனுக்கும் சிறு தகராறு ஏற்பட்டது. சிற்றப்பா என். எஸ். சிருஷ்ணனை வாயில் வந்தபடி திட்டிவிட்டார். என். எஸ் கிருஷ்ணன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, திடீரென்று அன்றிரவே மதுரைக்குப் புறப்பட்டுப் போய், ஜெகன்னாதைய்யரின் பால மீன ரஞ்சனி சங்கீத சபையில் சேர்ந்துகொண்டார். விபரம் அறிந்த நாங்கள் வருந்தினோம். பெரியண்ணாவுக்கு ஏற்கனவே மண வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டிருந்த நிலையில் என். எஸ். கிருஷ்ணன் ஒடிப்போன செய்தி மேலும் வேதனையை வளர்த்தது.

கலைவாணரின் நல்லுணர்வு

நாங்கள் கொல்லம் நாடகம் முடிந்து, ஆலப்புழையில் நடித்துக் கொண்டிருந்தோம். ஜெகன்னாதய்யர் கம்பெனியி லிருந்து அப்போது தான் நவாப் ராஜமாணிக்கம், காமடியன் சாரங்கபாணி, ஏ. எம். மருதப்பா, சிதம்பரம் ஜெயராமன் முதலியோர் விலகி, அவர்களுக்கும் ஜெகன்னதய்யருக்கும் வழக்கு நடந்து கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் என். எஸ். கிருஷ்ணன் தமது கம்பெனிக்கு வந்ததும் ஐயர் மிகவும் சந்தோஷப்பட்டு, சாரங்கபாணி போட்டு வந்த வேடங்களை யெல்லாம் கிருஷ்ணனுக்குக் கொடுத்துக் கெளரவத்தோடு நடத்தி வந்தார்.

ஜெகன்னாதய்யரிடம் செல்வாக்கோடு இருந்து வந்த அந்த நிலையிலும், என். எஸ். கிருஷ்ணனுக்கு எங்கள் குழுவின் மீதே பற்றுதல் இருந்து வந்தது. இரவில் உறக்கம் பிடிக்கவில்லை. அவசரத்தில் ஐயருக்கு ஒப்பந்தமும் எழுதிக் கொடுத்திருந்தார். ஒரு நாள் திடீரென்று புறப்பட்டு, நேராக ஆலப்புழைக்கே வந்து விட்டார். தம்மால் அங்கிருக்க முடியவில்லையென்றும், பயிற்சி பெற்ற இடத்திலேயே இறுதிவரை இருக்க வேண்டுமென்று தமது நல்லுணர்வு தூண்டியதாகவும் கூறினார். நாங்கள் அனைவரும் அளவற்ற மகிழ்ச்சியடைந்தோம்.

கலைவாணருக்கு நெருக்கடி

சில நாட்கள் சென்றன. ஒருநாள் எல்லோரும் ‘பாட் மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தோம். யாரோ ஒருவர் வந்து, என். எஸ். கிருஷ்ணனைப் பார்க்கவேண்டுமென்று கூறினார். நாங்கள் கிருஷ்ணனைக்காட்டினோம், வந்தவர் ரகசியப்போலீசைச் சேர்ந்தவர். அவர் உடனே என். எஸ். கிருஷ்ணனைக் கைது செய்து அழைத்துச் சென்றார். எங்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சி! ஜெகன்னாதய்யர், என். எஸ். கிருஷ்ணனைத் திருட்டு வழக்கில் சம்பந்தப்படுத்தி, வழக்குத் தொடர்ந்திருந்தார். *அரஸ்ட் வாரண்ட் பிறப்பித்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள், மானேஜர் காமேஸ்வர ஐயரும், சிற்றப்பாவும், போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று ஏதேதோ செய்து பார்த்தார்கள். ஜாமீனில் விடுவிக்க முயற்சி செய்யப்பட்டது. திருவாங்கூர் சமஸ்தானத்தில் ‘பிரிட்டிஷ் ரெசிடெண்ட்’ கட்டளைப்படி கைது செய்யப்பட்டதால் எதுவும் செய்ய இயலவில்லை. மதுரைக்குப் போய்த்தான் ஜாமீனில் விடுதலைக்கு முயற்சிக்க வேண்டுமென்று திருவாங்கூர் போலீசார் கூறிவிட்டார்கள். கைதியைப்போல் கையில் விலங்கு பூட்டப்பட்டுக் கலைவாணர் கால்நடையாகவே கொல்லம்வரை அழைத்துச் செல்லப்பட்டதாக அறிந்து எல்லோரும் வேதனைப்பட்டோம். வேறு முயற்சிகள் எடுத்துக் கொள்ளக்கூடிய வசதிகள் ஏதுமில்லாததால் சக்தியற்ற நிலையில் புலம்பிக் கொண்டிருந்தோம். பெரியண்ணா மீதும், சிற்றப்பா மீதும் எங்களுக்கெல்லாம் வருத்தம் ஏற்பட்டது. மதுரையில் ஏதோ செய்யப் போவதாக எண்ணியிருந்தோம். மதுரையி லிருந்த எங்கள் நண்பர்கள் வீரமணி ஐயருக்கும் கிட்டு ராஜு விக்கும் இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டது. ஜெகன்னதய்யரின் சூழ்ச்சியின் முன், அவர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் என். எஸ். கிருஷ்ணனின் தந்தையார் மதுரைக்குச் சென்று, கிருஷ்ணனை ஐயர் கம்பெனியிலேயே இருக்கச் செய்த பிறகுதான் திருட்டு வழக்கு வாபஸாயிற்று. கம்பெனியிலிருந்து விலகிச் செல்லும் நடிகர்கள்மீது இவ்வாறு திருட்டுக் குற்றம் சுமத்துவதும், போலீஸாரைக் கையில் போட்டுக் கொண்டு தொல்லைகள் கொடுப்பதும், விடுபட இயலாத சூழ்நிலையை உண்டாக்கி அவர்களை மீண்டும் தங்கள் கம்பெனியில் சேர வைப்பதும் அன்று சில குறிப்பிட்ட நாடக முதலாளிகளின் வழக்கமாக இருந்து வந்தது.

இரு சகோதரர்கள்

பெரியண்ணாவுக்குத் திருமணம் முடிந்து புறப்பட்டபோது இரு சகோதரர்கள் கம்பெனிக்கு வந்து சேர்ந்தார்கள். மூத்தவர் என். எஸ். பாலகிருஷ்ணன். இளையவர் என். எஸ். வேலப்பன். இருவரும் வெகு விரைவில் முன்னுக்கு வந்தார்கள். என். எஸ். பாலகிருஷ்ணன் கம்பெனியின் முக்கிய பெண் வேடதாரியாக விளங்கினார். வேலப்பனும் மாயா சூர்ப்பனகை போன்ற பாத் திரங்களில் மக்களின் புகழ்ச்சிக்குப் பாத்திரமானார். பால கிருஷ்ணன் சிறந்த முறையில் நடித்து வந்ததோடு, ஒய்வு நேரங் களில் ஆர்மோனியமும் பயின்று வந்தார். எதிர்காலத்தில் அவர் ஒருசங்கீத டைரக்டராகத் திகழுவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆம்; பிற்காலத்தில் பிரபலத் திரைப்படப் பின்னணி சங்கீத இயக்குநராகவும், எம். ஜி. ஆர். குழுவின் சங்கீத டைரக்ட ராகவும் விளங்கிய என். எஸ். பாலகிருஷ்ணனைத்தான் குறிப்பிடு கிறேன். என். எஸ். கிருஷ்ணன் திரைப்படத் துறையில் புகுந்த பின் அவர் பாலகிருஷ்ணனுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வந்ததாலும், தமது இடைவிடா முயற்சியிலுைம் இவர் ஒரு சிறந்த சங்கீத டைரக்டராக விளங்கினார்.

சங்கரமேனன்

கேரளப் பகுதிக்கு நாங்கள் சென்றபோது சங்கரமேனன் எங்கள்கம்பெனியில் சேர்ந்தார்.இவர் மிகநன்றாக ஆர்மோனியம் வாசிப்பார். ஏற்கனவே ஜெகன்னுதையர் கம்பெனியில் நீண்ட காலம் இருந்தவர். இவர் கம்பெனியில் சேர்ந்தபின் நடிகர்கள் எல்லோருக்கும் முறையாக சங்கீதப் பயிற்சி அளிக்கப்பட்டது. கே. ஆர். ராமசாமி, டி. கே. பகவதி, நான், சின்னண்ணா அனைவரும் இவரிடம் இசை பயின்றுவத்தோம். ஜண்டை வரிசை யிலிருந்து தொடங்கி, வர்ணம் வரை எல்லா நடிகர்களும் கர்நாடக இசையை இவரிடம் பயின்றார்கள். தியாகையர், திட்சிதர், சாமா சாஸ்திரி, பட்டினம் சுப்பிரமணிய ஐயர் ஆகியோரின் தெலுங்கு வடமொழிக் கீர்த்தனைகளை இவர் நன்கு பயிற்றுவித்தார். ஏற்கனவே நல்ல இசைத் திறமையுள்ள நடிகர்கள், இவர் அளித்த பயிற்சியால் மேலும் தேர்ச்சிப் பெற்று விளங்கினார். சிலர் பிற்காலத்தில் இசைப்புலவர்களாகவே விளங்கு வதற்கு இவர் அளித்த பயிற்சியே பயன்பட்டதென்று சொல்ல வேண்டும். இவரை சங்கர பாகவதர் என்றே நாங்கள் அழைத்து வந்தோம். -

பெரியண்ணாவின் உறுதி

கம்பெனி தொடர்ந்து நடைபெற்று வந்தது. பெரியண்ணா வின் திருமணத்திற்குப்பின் நாங்கள் மதினியோடும், தாயோடும் தனியே வசித்து வந்தோம்; பெரியண்ணா வீட்டிற்கு வருவதே இல்லை. அம்மாவுக்கு இதனால் ஏற்பட்ட மன வருத்தம் சொல்லி முடியாது. பெரியண்ணாவுக்கு இரண்டாந் தாரமாக மற்றொரு அழகிய பெண்ணே மணம்செய்து வைக்க எவ்வளவோ முயன்றார், பெரியண்ணா மனைவியுடன் மனமொத்த வாழ்க்கை நடத்தவில்லை யென்றாலும், மறுதாரம் செய்து கொள்ளப் பிடிவாதமாக மறுத்துவிட்டார். ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். அம்மாவுக்கு இதுவே பெரிய கவலையாகப் போய்விட்டது. அடிக்கடி ஏதாவது நோய் வந்து தொல்லே கொடுக்க ஆரம்பித்தது.

மனநோய்க்கு மருந்தேது? அன்னையார் எப்போதும் இதே நினைவில் இருந்து மனம் வெதும்பினார். மூத்த புதல்வரின் வாழ்க்கையைப் பாழ்படுத்தி விட்டோமே என்ற உணர்ச்சி அவரை உருக்குலைத்து விட்டது.பெரியண்ணா வீட்டிற்கு வருவதே இல்லை. உணவு, உறக்கம் எல்லாம் கம்பெனி வீட்டிலேயே நடந்துவந்தன. மதினியாரின் நிலை மிகவும் பரிதபிக்கத் தக்கதாய் இருந்தது. பாவம்! பெண்ணல்லவா? அவர் தமது மன உணர்ச்சிகளையெல் லாம் அடக்கிக்கொண்டு ஒரு உத்தமமான குடும்பத் தலைவிக் குரிய முறையில் எல்லோரிடமும் அன்போடும், பண்போடும் பழகினார். நானும் சின்னண்ணாவும் மதினியாரின் நிலையை எண்ணியெண்ணி வருந்தினோம். முக அழகு குறைந்துவிட்டால்: என்ன? வேறு எவரிடமும் காண்பதற்கரிதான அக அழகு. அண்ணியாரிடம் நிறைவு பெற்றிருந்தது. அதுவே அவரது: வாழ்க்கையை உயிர்ப்பித்தது என்றும் சொல்லலாம்.

உத்தமமான மனிதர்

இந்தச் சமயத்தில் ஆலப்புழையில் என் சிறு தவருல் நேர இருந்த ஒரு பேரிழப்பு என் நினைவிற்கு வருகிறது. நாங்கள் எங்களுடைய பரிசுப் பொருட்கள் அனைத்தையும் ஒரு சிறு பெட்டி யில் வைத்து, நாடகத்திற்குப் போகும்போது கையில் கொண்டு. செல்வதும் திரும்பும்போது பத்திரமாகக் கொண்டு வருவதும். வழக்கம். அப்பெட்டியில் இருந்த பொருட்களின் மொத்த மதிப்பு அந்த நாள் கணக்குப்படி பத்தாயிரம் ரூபாய்வரை இருக்கலாம். ஒருநாள், நாடகம் முடிந்து திரும்பியபோது மிகுந்த அசதியாக இருந்தது. இரவு இரண்டு மணிக்கு வந்து, வீட்டுக் கதவைத் தட்டினோம். கதவைத் திறக்கச் சற்று நேரமானதால் பெட்டியை வைத்துவிட்டு முன் திண்ணையில் உட்கார்ந்தோம். சற்று நேரத். தில் கதவு திறக்கப்பட்டது. என்ைேடு வந்த சின்னண்ணாவும், பகவதியும், சிற்றப்பாவும் உள்ளே சென்றார்கள். நானும் மறதி யால் பெட்டியை எடுக்காது அவர்களைப் பின் தொடர்ந்தேன். பெட்டியைப் பற்றிய நினைவே எனக்கில்லை. வரல்லை. வழக்கம் போல் உறக்கத்தில் ஈடுபட்டோம். பொழுது விடிந்தது. அப்போது பெட்டியைப் பற்றிய நினைவு வரவில்லை.வெளியில் யாரோ அழைப்பதாக ஒரு பையன் சிற்றப்பாவைக் கூப்பிட்டான். அழைத்தவரின் பெயரைக் கேட்டதும் சிற்றப்பா விரைவாகச் சென்றார், ஒருமணி நேரத்திற்குப்பின் முன்னால் இரவு தவற விட்ட பெட்டியோடு திரும்பி வந்த அவரைக் கண்டதும் எனக்கு ‘பகீர்’ என்றது. இரவு திண்ணையில் வைத்த பெட்டியை உள்ளே எடுத்துவர மறந்தது அப்போதுதான் நினைவு வந்தது.

ஆலப்புழையில் திரு. ராஜப்ப ரெட்டியார் என்பவர் பெரிய வணிகர். நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலேயே அவரது வீடு இருந்தது. வழக்கம்போல் அதிகாலையில் உலாவப் புறப்பட்ட அவர், கருக்கிருட்டில் திண்ணையில் ஒரு பெட்டியிருப்பதைக்கண்டு சுற்றுமுற்றும் பார்த்திருக்கிறார், எங்கும் யாரையும் காணவில்லை. சற்றுநேரம் நின்று பார்த்துவிட்டு, பெட்டியை அவரே எடுத்துக் கொண்டு போயிருக்கிறார். வீட்டுக்குச் சென்று பெட்டியைத் திறந்து பார்த்ததும் அவருக்குத் தூக்கிவாரிப்போட்டது. மெடல்களிலிருந்த பெயர்களைப் பார்த்ததும் அவருக்கு உண்மை விளங்கி விட்டது. உடனே சிற்றப்பாவுக்கு ஆளனுப்பியிருக்கிறார், *சின்னப்பிள்ளைகள் மறந்தாலும், “பெரியவராகிய நீரல்லவா பெட்டியைப் பத்திரமாகக் கொண்டு போயிருக்க வேண்டும்!” என்று சிற்றப்பாவையும் கடிந்துகொண்டார் அவர். எங்களுக்குப் பொருளாதார நெருக்கடி அதிகமாயிருந்த அந்த நேரத்தில், ! நாங்கள் அப்பெட்டியை இழந்திருந்தால் என்ன ஆயிருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தபோது எங்களுக்கு உண்மையிலேயே அழுகை வந்துவிட்டது. பெட்டி ஒரு உத்தமமான மனிதரின் கையில் கிடைத்ததற்காக இறைவனுக்கு வணக்கம் செலுத்தினோம். 1931-இல் கம்பெனிக்கு மிகப்பெரிய கஷ்டம் வந்த காலத்தில் இந்தப் பெட்டியிலிருந்த விலையுயர்ந்த பொருட்கள் தான் எங்களுக்கு உதவின என்பதை எண்ணிப்பார்க்கும்போது இப்போதும் அந்த உத்தமமான மனிதரை நினைத்துக் கொள்கிறோம்.

மீண்டும் கலைவாணர் வந்தார்

ஆலப்புழைக்குப் பிறகு கோட்டயம், கொச்சி, திருச்சூர், பொள்ளாச்சி முதலிய பல ஊர்களுக்குச் சென்றோம். எங்கும். வருவாய் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டோம். சிலமாதங்களுக்குப் பின் கரூர் வந்து சேர்ந்தோம். திடீரென்று ஒரு நாள் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. என். எஸ். கிருஷ்ணன் எழுதியிருந்தார். ஜெகன்னதையர் கம்பெனி யாழ்ப் பாணத்தில் கலைந்துவிடக் கூடிய நிலையில் இருப்பதாகவும், அப்படி ஏற்படுமானல் மீண்டும் எங்கள் கம்பெனிக்கே வந்து விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்தச் செய்தி எங்களுக்குப் பெரு, மகிழ்ச்சி அளித்தது. ஒரு வாரத்திற்குப்பின் என். எஸ். கிருஷ்ணன் தந்தி கொடுத்திருந்தார். ஐயர் கம்பெனி கலைந்து விட்டதாகவும், உடனே பணம் அனுப்பும்படியாகவும் வந்த தந்தியைக் கண்டதும், பெரியண்ணா மகிழ்ந்து தந்தி மணியார்டர் அனுப்பினார். கிருஷ்ணன் மூன்று நாட்களில் கரூருக்கு வந்துசேர்ந்தார். ஜெகன்னதையர் கம்பெனிச் செய்திகளையெல்லாம் கதை. கதையாகச் சொன்னார். ஒரு வார காலம் அவர் கூறிய சுவையான கதைகளைக் கேட்பதிலேயே பொழுதைப் போக்கினோம்.

புதிய இளைஞர்

கரூரில் புதிய இளைஞர் ஒருவர் எங்கள் குழுவில் சேர்ந்தார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். அங்குள்ள பிள்ளையார் கோயிலில் அர்ச்சகராக இருந்தவர். வைதீகப் பிராமணர்போல் குடுமி வைத்திருந்தார். சுமாராகப் பிடில் வாசிக்கக் கூடியவர். தம்மோடு ஒரு பிடிலையும் கொண்டு வந்திருந்தார். சின்னண்ணாவும் பிடில் வாசிக்கக் கூடியவரானதால் அவரும் புதிய இளைஞரும் அடிக்கடி பிடில் வாசித்து வந்தார்கள். இளைஞருக்கு நல்ல வாட்டசாட்டமான சரீரம். சாரீரமும் அதற்கேற்றபடி அமைந்திருந்தது. அப்போதெல்லாம் இரணியன், எமதருமன், கடோற்கஜன் முதலிய பாத்திரங்களை எல்லாம் எங்கள் பெரியண்ணா டி. கே. சங்கரன் தாம் ஏற்று நடிப்பது வழக்கம். அவர் தம் வேடங்களை ஒவ்வொன்றாகக் குறைத்துக் கொண்டு வந்தார். புதிதாக வந்த இளைஞர் இரண்டொரு நாடகங்களில் சில்லரை வேடங்களில் நடித்துப் பழகினார். பிறகு அவருக்கு அபிமன்யு சுந்தரியில் கடோற்கஜன் கொடுக்கப்பட்டது.

அபிமன்யு கதை

சங்கரதாஸ் சுவாமிகளின் அபிமன்யு சுந்தரி நாடகக் கதை உங்களுக்குத் தெரியுமல்லவா? ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, தமது புதல்வி சுந்தரியைத் துரியோதனன் மகன் இலக்கணனுக்குக் கொடுக்க முடிவு செய்து விடுகிறார். இந்தச் செய்தியறிந்த சுந்தரி தன் அத்தை மகன் அபிமன்யுவுக்கு ஒலை அனுப்புகிறாள். வீரன் அபிமன்யு அந்தத் திருமணத்தைத் தடுத்துச் சுந்தரியை மீட்க வீராவேசத்தோடு புறப்படுகிறான்; வழியில் பீமன் மகன் கடோற் கஜனச் சந்திக்கிறான். இன்னாரென்று தெரியாமல் இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். கடைசியில் உண்மை யறிந்து உறவாடி இருவருமாகப் புறப்படுகிறார்கள். அதன் பின் அர்ஜூனனின் மற்றொரு மகன் அரவானைச் சந்திக்கிறார்கள். அங்கேயும் ஆள் தெரியாமல் போர் நடக்கிறது. இறுதியில் சகா தேவன் மகன் தொந்திசெட்டி குறுக்கிடுகிறான். அங்கேயும் சண்டை நடக்கிறது. பிறகு சமாதானம். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நால்வரும் துவாரகைக்குச் செல்லுகிறார்கள். துரியோ தளுதியரை முறியடித்து வெற்றி பெறுகிறார்கள். அபிமன்யுவுக்கும் சுந்தரிக்கும் திருமணம் இனிது நடைபெறுகிறது. இது தான் நாடகக் கதை.

தொந்திசெட்டி ஒரு நகைசுவைப் பாத்திரம். சகோதரர் மூவரோடும் அவர் சண்டை போடுகிற காட்சி மிகவேடிக்கையாக இருக்கும். கடோற்கஜனும், தொந்திசெட்டியும் மற்போர் புரிவது, சபையோரிடையே பெரும் ஆரவாரத்தையெழுப்பும். இறுதியில் தொந்திசெட்டியே தோல்வியடைய வேண்டும். புதிய இளைஞர் கடோற்கஜன் வேடம் தாங்கி மிக நன்றாக நடித்தார். தோற்றமே கடோற்கஜனுக்குப் பொருத்தமாக இருந்ததால் விரைவில் சபையோரின் பாராட்டைப் பெற்றார். தொந்தி செட்டியோடு நாங்கள் சண்டை போடும் காட்சி வந்தது. என்ன செய்யவேண்டும் என்பதையெல்லாம் ஒத்திகையில் அவருக்குத் தெளிவாகச் சொல்லியிருந்தோம். அந்தக் கடோற் கஜன், தம் உடல் வலிமையில் நம்பிக்கை வைத்து, ஹாஸ்ய நடிகரான தொந்தி செட்டியை அலாக்காக மேலே தூக்கிக் கீழே போட்டு உருட்ட எண்ணினார். அதற்கு முன் கடோற்கஜனுக நடித்தவர்கள் யாரும் அப்படிச் செய்ததில்லை. அந்தக் காட்சியில் மேடைக்கு வரும்போது கடோற்கஜன் என்னிடம் இந்த ஆசையை வெளியிட்டார். நான் சிரித்துக் கொண்டே, “முடிந்தால் செய்யுங்கள். அதிலொன்றும் தவறில்லை. வேடிக்கையாகத் தானிருக்கும்” என்று கூறினேன்.

கடோற்கஜன் வீழ்ந்தார்

காட்சி நடைபெற்றது. சண்டை துவங்கியது. கடோற்கஜன் தொந்தி செட்டியைத் தூக்க முயன்றார். எதிர்பாராத நிலையில் தொந்தி செட்டி லாவகமாக விலகிக் கொண்டார். அத்தோடு நிற்கவில்லை. கடோற்கஜனின் வலது கையைப் பிடித்து அப்படியே அவரை முதுகில் தூக்கித் தடாரென்று கீழே மல்லாந்து விழச் செய்தார். எல்லாம் இமைகொட்டும் நேரத்தில் நடந்து விட்டது. கடோற்கஜன் கீழே பரிதாபமாகக் கிடக்கிறார். தோல்வியடைய வேண்டிய தொந்திசெட்டி, வெற்றிப் பெருமிதத்தோடு, “தொந்திசெட்டியைத் தூக்கவா பார்க்கிறாய்?” என்று கூறி நகைக்கிறார். அபிமன்யுவாக நின்ற எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. சபையில் ஒரே கரகோஷம்.

தொந்திசெட்டியாக நடித்தவர் என். எஸ். கிருஷ்ணன். அவர் ஒல்லியான சரீரமுடையவர். ஆனால் கொஞ்சம் குஸ்தி முறைகளெல்லாம் தெரிந்தவர். நல்ல துணிச்சல் பேர்வழி. அவர் மலை போன்ற சரீரத்தைத் தூக்கியடித்தது எல்லோருக்கும் பெரு வியப்பை அளித்தது. மேடையில் நின்ற எனக்கும் அரவானுக்கும் . சிரிப்புத் தாங்கவில்லை. தொந்தி செட்டி தம்மைத் துாக்க முடியுமெனக் கனவிலும் கருதாத புதிய இளைஞர் கடோற்கஜன் அசட்டுச் சிரிப்புடன் எழுந்து நின்றார். அன்று அவ்வாறு திண்டாடித் திணறிய கடோற்கஜன் மலை வேறு யாருமல்ல. நமது புளிமூட்டை ராமசாமியே!

பிள்ளை விளையாட்டு

புளிமூட்டை ராமசாமி நன்றாகப் பாடுவார். கதா காலட் சேபம் செய்வார். வடமொழியில் உள்ள மந்திரங்கள் பலவற்றை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். நாங்கள் எல்லோரும் காலையில் அமராவதி ஆற்றுக்குப் போய் குளிப்பது வழக்கம். போகும்போது நான், என். எஸ். கிருஷ்ணன், புளிமூட்டை ராம சாமி, எஸ். வி. சகஸ்ரநாமம், மற்றொரு நகைச்சுவை நடிகர் சுந்தரம் ஐயர் எல்லோரும் ஒன்றாகக் கையைக் கோர்த்துக் கொண்டு வீதியில் மந்திரங்களை முழக்கிக் கொண்டே போவோம்.

என இவ்வாறு நாங்கள் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு போவதை வீதியில் அனைவரும் பார்த்துச் சிரிப்பார்கள். சில பிரா மணர்கள், இதைப் பிள்ளை விளையாட்டாகக் கருதாமல் தங்களைக் கேலி செய்வதாக எண்ணிப் பெரியண்ணாவிடம் புகார் செய்தார் கள். இதன் பிறகு மந்திரங்களை வீதியில் சொல்லக் கூடாதென்று எங்களுக்குத் தடையுத்திரவு போடப்பட்டது.
--------------

24. துன்பத்திலும் சிரிப்பு


கரூரிலிருந்து புதுக்கோட்டைக்குச் சென்றோம். அப்போது மழைக்காலம். புதுக்கோட்டையில் கடுமையானமழை. வசூலே இல்லாமல் மிகுந்த சிரமப் பட்டோம். பெரியண்ணா நிலத்தை அடமானம் வைத்துப் பணம் கொண்டு வர நாகர் கோயிலுக்குப் போயிருந்தார். புதுக்கோட்டையில் நான்கு புறங்களிலும் பெரு மழையால் உடைப்புகள் ஏற்பட்டு விட்டன. புதுக்கோட்டை ஒரு தீவுபோல ஆகிவிட்டது.

ஒரு நாள் சாவித்திரி நாடகம். வசூல் ஏழே ரூபாய்கள். ஆனாலும் நாடகத்தை நிறுத்தாமல் நடத்திைேம். மின்சார விளக்குக்காகத் தனியே பாலகிருஷ்ண சாஸ்திரி என்பவரிடம் ஒப் பந்தம் செய்திருந்தோம். அவரது இஞ்சின் மூலம் எங்களுக்கு மின்சாரம் கிடைத்து வந்தது. அந்த இஞ்சின், கொட்டகையின் பின்புறம் ஒடிக் கொண்டிருந்தது. மழையின் வேகத்தால் இஞ்சின் புதைந்திருந்த இடம் முழுவதும் வெள்ளக் காடாகி விட்டது. இஞ்சின் ஒடவில்லை. கொட்டகையில் இருள் சூழ்ந்தது. வழக்கம்போல் இரண்டு கியாஸ் லேட்டுகள் மேடையில் வைக்கப் பட்டன. சாவித்திரி நாடகம் தொடர்ந்து நடந்தது. அன்று நான் சத்தியவானக நடித்தேன். என். எஸ். கிருஷ்ணன் சுமாவியாக நடித்தார். சத்தியவானின் திருமணச் செய்தியைச் சுமாலியிடம் சொல்லியனுப்புகிறார்கள். சுமாவி ஒரு கிழவனுக மாறுவேடம் பூண்டு வந்து, சத்தியவானுக்குக் கோபத்தை மூட்டுகிறான். சத்தியவான் கோபத்தில் அவனது தாடியைப் பிடித்து இழுக்க, தாடி கையோடு வந்து விடுகிறது. உண்மை வெளியாகிறது. இந்தக் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. என். எஸ். கிருஷ்ணன் அன்று கிழவகை வேடம் பூண்டு வந்து செய்த வேடிக்கைகள்-கற்பனைகள் எனக்குத் தாங்க முடியாத சிரிப்பை யுண்டாக்கின. கோபிக்க வேண்டிய நான், சிரித்துக் கொண்டே நின்றேன். உடனே என். எஸ். கிருஷ்ணன் “நான் என்ன செய் தாலும் உனக்குக் கோபம் வராது போலிருக்கிறதே? “ என்றார், நான், “நீர் யாரென்று எனக்கு நன்றாகத்தெரியும். சத்தியவானை உம்மால் ஏய்க்க முடியாது” என்று கூறிக்கொண்டே அவர்கட்டி யிருந்த தாடியை இழுத்தேன். அவரும் நான் இப்படிச் செய்வே னென்று எதிர்பார்க்கவில்லை. விழுந்து விழுந்து சிரித்தார். சபை யில் அங்கொருவர் இங்கொருவராக அமர்ந்திருந்த பொது மக்க ளும் எங்கள் விளையாட்டைப் பார்த்துச் சிரித்தார்கள். துன்பமய மான அந்த நேரத்திலும் எங்களுக்குச் சிரிப்பூட்டி இன்பத்தைத் தந்த அந்தப் பொன்னை நாட்களை என்னல் மறக்க முடிய வில்லை.

வெள்ளத்தில் நீந்தினார்

நிலத்தை அடமானம் வைத்துப் பணம் கொண்டுவரச் சென்ற பெரியண்ணா, பணத்தோடு திரும்பினார். புதுக்கோட் டைக்கு அவர் வரமுடியாமல் மழையில் ஏற்பட்ட உடைப்புகள் தடுத்தன. எங்கும் ஒரே வெள்ளக் காடு. காரைக்குடிக்கும் புதுக்கோட்டைக்கும் இடையே பாதை உடைப்பெடுத்துக் கொண்டது. காட்டாறு கரை புரண்டு ஓடியது. பெரியண்ணாவின் வருகையை ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். நெருக்கடியான நிலைமை.

பணத்துடன் வந்த பெரியண்ணா வெள்ளத்தைக் கண்டார்; சிந்தித்தார். வெள்ளம் குறைந்த பின் போகலாமென்று எண்ணவும் இடமில்லை. மழை மேலும் பெய்துகொண்டே இருந்தது. ஒரு முடிவுக்கு வந்தார். வேட்டி, சட்டையைக் களைந்து எல்லா வற்றையும் பணத்தோடு தலையில் கட்டிக் கொண்டார். ஒடும் வெள்ளத்தில் குதித்து நீந்தத் தொடங்கினார்.அவருடைய இந்தத் துணிவைக் கண்டு, கூடி நின்ற மக்கள் எல்லோரும் வியப்படைந் தார்கள். பெரியண்ணா நன்முக நீந்தக் கூடியவர். சிறிதும் அஞ்ச வில்லை, துணிவோடு நீந்தி மறு பக்கம் வந்து சேர்ந்தார். பெரி யண்ணா வந்து, தாம் நீந்தி வர நேர்ந்த நிலைமையைப் பற்றிச் சொன்னபோது, எங்களுக்கெல்லாம் பயமாகஇருந்தது. கம்பெனி யின் இந்தக் கஷ்டமான நிலையிலும் நடிகர்கள் அன்போடு மனம் கலங்காது ஒத்துழைத்தார்கள்.

நகைச்சுவை நடிகர் சிவதாணு

புதுக்கோட்டையில் கம்பெனி இவ்வாறு தள்ளாடிக் கொண்டிருந்த நிலையில், அம்மா நாகர்கோவிலுக்குப் போய்த் திரும்பியபோது சிவதானுவையும் அழைத்து வந்தார்கள். சிவதாணு எங்கள் ஒன்றுவிட்ட தமக்கை மீனாட்சியம்மையாரின் புதல்வர். பள்ளிக்கூடத்தில் மிகவும் குறும்புகள் செய்து கொண்டிருந்த சிவதாணுவை எங்கள் தமக்கையார்,தாயாரோடு அனுப்பி வைத்தார்கள். சிவதாணுன்வக் கண்டதும் எங்கள் குழுவிலிருந்த நடிகர்கள் சிரித்தார்கள். பார்ப்பதற்கு முரட்டுத் தனமாக இருந்த சிவதாணு, ஒரு நகைச்சுவை நடிகராக வரக் கூடுமென்று யாரும் எண்ணவில்லை. புதுக்கோட்டையில் அம்மாவுக்கு உடல் நலம் குன்றியது. படுக்கையிலேயே கிடந்தார்கள். இந்நிலையில் நாங்கள் காரைக் குடிக்குப் பயணமானோம். காரைக்குடி வெற்றி விநாயகர் தியேட்டரில் நாடகம் தொடங்கியது. அம்மா மட்டும் புதுக் கோட்டையிலேயே இருந்தார்கள். காரைக்குடியில் அமோகமாக வசூலாயிற்று. நாவல் நாடகங்களுக்கு நல்ல பேர். புதுக்கோட்டையில் திண்டாடிக் கொண்டிருந்த கம்பெனிக்குக் காரைக்குடி வசூல் வியப்பை அளித்தது.

சீனிவாசபிள்8ள கம்பெனி

அப்போது காரைக்குடி ஷண்முக விலாஸ் தியேட்டரில், பிர சித்தி பெற்ற சீனிவாசபிள்ளை கம்பெனியார் நடித்து வந்தார்கள். ஏராளமான காட்சியமைப்புக்களும், கண் கவரும் உடைகளும் வைத்திருந்த பெரிய கம்பெனி அது. அவர்கள் இராமாயணம், மகாபாரதம், மயில் இராவணன், புல்புலையான், அலியாதுஷா முதலிய நாடகங்களையெல்லாம் நடித்தார்கள். புல்புலையான் நாடகத்தில் மேடையிலேயே இரயில் ஒடுவதுபோல் காண்பிப்பார்கள். அவ் வளவு பெரிய கம்பெனிக்கு ஐம்பது, நூறுதான் வசூலாகியது. அதே நேரத்தில் பழைய ஓட்டை உடைசல் சாமான்களை வைத்துக் கொண்டு நாடகங்களை நடித்த எங்களுக்கு ஆயிரம் ரூபாய்கள் வரை வசூலாயிற்று. எங்களுடைய சிறுவர் கம்பெனி, பெரியவர்கள் கம்பெனிக்குப் போட்டியாக நின்று சமாளித்து, வெற்றியும் அடைந்தது. சீனிவாசபிள்ளை கம்பெனியார் வேறு ஊருக்கு மாற்றிக் கொண்டு போய் விட்டார்கள். எங்கள் நடிகர்களுக்கு ஒரே குதூகலம். திடீரென்று ஒருநாள் அம்மா அபாயகரமான நிலையிலிருப்பதாகத் தகவல் வந்தது. நாடகம் முடிந்ததும் நண்பர் ஒருவர் உதவிய காரில் நாங்கள் நால்வரும் இரவோடிரவாகப் புதுக்கோட்டைக்கு வந்தோம்… அந்தக் கண்டத்திலிருந்து அம்மா ஒருவாறு தப்பிப் பிழைத்தார்கள்.

குடந்தையில் காலரா காரைக்குடி நாடகம் முடிந்த பின் திருவாரூரில் ஒரு மாத காலம் நடித்து விட்டுக் கும்பகோணம் வந்தோம். வாணி விலாஸ் தியேட்டரில் நாடகங்கள் நடைபெற்று வந்தன. கும்பகோணத்தில் அப்போது காலரா நோய் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. அந்நோய் முதன்முதலாக என்னையும், என். எஸ். பாலகிருஷ்ணனையும் பீடித்தது. எங்கள் இருவருக்கும் அம்மாவே பல மருந்துகள் கொடுத்தார்கள்.

நோயோடு போராடிக் கொண்டே நாங்கள் இருவரும் தொடர்ந்து நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தோம். அம்மாவில் மருந்து எங்கள் நோயைக் குணப்படுத்தியது. நாடகத்திற்கு வசூல் மிக மோசமாக இருந்தது. இந்நிலையில் கம்பெனியில் முக்கிய வேடம் தாங்கி வந்த சுப்பையா என்னும் சிறுவனுக்குக் காலரா நோய் கண்டது. சுப்பையா நல்ல நடிகன்; பாடங்களை விரைவாக நெட்டுருப் போடும் ஆற்றல் வாய்ந்தவன். ஒரு சமயம் மேனகா நாடகத்தில் மேனகா பாடத்தை ஒரே நாளில் பாடம் செய்து நடித்தவன். அவன் மீது எல்லோரும் அபிமானம் வைத்திருந்தோம். அவன் திடீரென்று நோய் கண்ட இரண்டாம் நாளே இறந்து விட்டான். இந்த எதிர்பாராத அதிர்ச்சியால் நாடகம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, சின்னண்ணா டி.கே.முத்துசாமிக்குக் காலரா நோய் கண்டது. ஏற்கனவே மனநோய் பிடிந்திருந்த நிலையில், அம்மாவினால் இந்த அதிர்ச்சியைத் தாங்க முடிய வில்லை . அவர்கள் என்னென்னவோ மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தார்கள். எதுவும் பயனளிக்கவில்லை.

டாக்டர் சாம்பசிவய்யர்

அப்போது கும்பகோணத்தில் டாக்டர் சாம்பசிவய்யர் பிரசித்தி பெற்ற டாக்டராக இருந்தார். அவரிடம் சின்னண்ணாவைக் கொண்டு போய் வந்தோம். அவரும் ஏதோ மருந்து கொடுத்தார்; ஊசி போட்டார்; வீட்டுக்கும் வந்து பார்த்தார். “பிழைப்பது கடினம். ஏதோமுயல்கிறேன்.இறைவன் திருவருள்’ என்று சொல்லிப் போய்விட்டார். இந்தச் செய்தி அறிந்ததும், அம்மாவுக்கு ஆறுதல் கூற முடியவில்லை. சின்னண்ணா முன்னிலையில் அழக்கூடாதென்று சொல்லி அம்மாவை ஒருவாறு சாந்தப் படுத்தினோம். மூத்தப்பிள்ளையோ முகங்கொடுத்துப் பேசுவதில்லை. இரண்டாவது பிள்ளை பிழைப்பது கடினம் என்று டாக்டர் சொல்லிவிட்டார். இதை ஒரு தாயுள்ளம் எப்படி தாங்க முடியும்?

அம்மா மனத் துயரங்களையெல்லாம் அடக்கிக் கொண்டு அண்ணாவைக் கவனித்தார்கள். இடைவிடாது அவர் அருகிலேயே இருந்து வேண்டியது செய்தார்கள். மூன்றாம் நாள் காலை அம்மா வுக்குக் காலரா நோய் வந்துவிட்டது. டாக்டர் வந்து பார்த்தார். ஏற்கெனவே மிகவும் பலஹlனமான உடல்.பிழைப்பது கஷ்டம்’ என்று சொல்லி விட்டார். நான் பெருந் துயரத்திலாழ்ந்தேன். அறைக்குள் படுத்திருந்த சின்னண்ணாவை வெளியே கூடத்தில் படுக்க வைத்துவிட்டு, அம்மாவை அறைக்குள் படுக்கவைத்தேன்.
----------------------

25. அம்மாவின் அந்திய நேரம்


அம்மாவுக்கு நோய் கண்ட அன்று மாலை பெரியண்ணா வந்திருந்தார். கல்யாணமான நாளிலிருந்து அவர் அம்மாவோடு பேசுவதும் இல்லை; வீட்டுக்கு வருவதும் இல்லை. அன்று வந்தவர் வாசலிலேயே நின்று விசாரித்துவிட்டுப் பார்க்காமல் போய் விட்டார். காலரா கண்டு குணமடைந்தவன் ஆகையால் நான் அம்மாவின் அருகிலேயே இருந்தேன். அப்போது எனக்கு என்றுமில்லாத துணிவு ஏற்பட்டிருந்தது. அம்மாவின் வயிற்றில் பூச டாக்டர் ஒரு மருந்து கொடுத்திருந்தார். நான் அந்த மருந்தைப் பூசிக் கொண்டிருந்தேன். மதினி கோதுமைத் தவிடு வறுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதை வாங்கி டாக்டர் சொன்னபடி ஒத்தடம் கொடுத்தேன். அம்மாவுக்குத் தன் நினைவு இல்லை, கண்கள் மேலே சொருகின. மதினி பயந்து அழத் தொடங்கினார்கள். வெளியே சின்னண்ணாவும் மரணத் தருவாயில் படுத்திருப்பதைச் சைகையால் காட்டி, நான் மதினியின் அழுகையை அடக்கினேன்... சில நிமிடங்களில் அம்மா மீண்டும் கண் திறந்தார்கள். “பெரியண்ணாவை அழைத்து வரச் சொல்லட்டுமா?” என்று கேட்டேன். அம்மா வேண்டாமென்று கையசைத்தார்கள். பேச முடியவில்லை. கோதுமைத் தவிடு கொடுத்துவிட்டுப் போன மதினியைச் சுட்டிக் காட்டி “அவளைக் கை விடாதிருக்கச் சொல்” என்று ஜாடை காட்டினார்கள். மீண்டும் ஏதோ சொல்ல முயன்றார்கள். பேச்சு வரவில்லை. நான் அருகில் குனிந்து ‘என்னம்மா’ என்றேன். அவர்கள் காட்டிய சைகையிலிருந்து தங்கைமார்களை நினைவுபடுத்துவதாகப் புரிந்து கொண்டேன். “சுப்பு-காமாட்சியைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் அம்மா” என்றேன். அம்மாவின் கண்கள் மலர்ந்தன. சற்று நேரத்தில் மீண்டும் கண்கள் மேலே சொருகிக் கொண்டன. அம்மா உறங்குவதாக நினைத்து நான் வெளியே வந்தேன். சின்னண்ணாவுக்கும் உறக்கம் இல்லை. வாயால் பேசவும் இயலாத நிலை.அவரது கண்கள்,அம்மாவின் நிலையை அறிய ஆவல் கொண் டிருப்பது தெரிந்தது. அம்மா உறங்குவதாக அவருக்குச் சைகை காண்பித்து விட்டு,வாயிலில் இறங்கிவிதிக்கு வந்தேன்.நள்ளிரவு: வீதியில் ஜன நடமாட்டமே இல்லை. வானம் நிர்மலமாயிருந்தது. நட்சத்திரங்கள் பளிச்சிட்டன. கம்பெனியின் நீண்ட பணியாளரான கோபால்பிள்ளை மட்டும் திண்ணையில் படுத்திருந்தார். உள்ளே தங்கைமார்கள் சுப்புவும், காமாட்சியும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். இரண்டொரு நாய்கள் ஊளையிட்டன. அருகிலிருந்த கம்பெனி வீட்டுக்குப் போய்வர எண்ணி இரண்டடி நடந்தேன். மீண்டும் தயக்கத்துடன் வீட்டினுள் நுழைந்தேன். அறைக்குள்ளே மதினி அழுதுகொண்டிருப்பது தெரிந்தது.அறைக் குள் அடியெடுத்து வைத்தேன். அம்மா எவ்விதச் சலனமுமின்றி அமைதியாகக் கிடந்தார்கள். கோபால்பிள்ளையை அழைத்து பார்க்கச் சொன்னேன்... அவர் பார்த்தார். அம்மா எங்களை விட்டுப் பிரிந்து விட்டார்கள் என்பதை அவர் முகம் காட்டியது.

என் நெஞ்சம் ஏனே கல்லாய் உறைந்திருந்தது!அழுகையே வரவில்லை. மதினியையும் அழ வேண்டாமென்று சமாதானப் படுத்தினேன். சின்னண்ணா ஒன்றும் புரியாமல் விழித்தபடி கிடந் தார். பெற்ற அன்னையார் எங்களைப் பிரிந்து நெடுந்துாரம் சென்று விட்டார்கள். கொடுங் காலரா நோய் பெற்ற தாயை விழுங்கிக் கொண்டது. 1931 ஜனவரி 29-ஆம் நாள் இரவு 12.30க்கு எங்கள் அன்னயார் இறைவனடி சேர்ந்தார்.

மறுநாள் முற்பகல் 11 மணியளவில் அம்மாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதுதான் எங்கள் நாடக வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் சோதனைக் காலம்.கம்பெனி நிலை தத்தளித்தது. திசை தெரியாத காட்டில், சேறு நிறைந்த பாதையில் சிக்கிக் கொண்ட வண்டிக்காரனுடைய நிலைமையில் நாங்கள் இருந்தோம். கம்பெனி என்னும் வண்டியை எப்படி மேலே கொண்டு செல்வது? நடிகர்களின் பெற்றோர்கள் பலர் தமது பையன்களை ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கடிதங்கள் வரைந் தனார். சிலர் நேராகவே வந்து அழைத்துச் சென்றனார். ஒரு மாத காலம் நாடகம் நிறுத்தப்பட்டது.

பரிவு காட்டிய பால்ய நண்பர்கள்

இந்த நெருக்கடியான நேரத்தில் எங்களுக்கு இரு நண்பர்கள் உதவி புரிந்தார்கள்.ஒருவர் கிட்டுராஜூ, மற்றவர் வீரமணி ஐயர். இவ்விருவரும் 1924ஆம் ஆண்டு முதல் எங்களோடு நெருங்கிப் பழகியவர்கள். பெரும் செல்வந்தர்களாகப் பிறக்கவில்லையென்றா லும் நல்ல மனம் உடையவர்கள்.இவ்விரு நண்பர்களும் அடிக்கடி வந்து சந்தித்தார்கள்;ஆதரவு கூறினார்கள். பொருள் கொடுத்தும் உதவினார்கள். கையில் பொருளின்றிக் கடன் கேட்க மனமின்றி, விடுபட வழியுமின்றி, நாங்கள் வேதனைக்கடலுள் ஆழ்ந்து கிடந்த போது, பாசத்தோடு பரிவு காட்டிய கண்பர் கிட்டுராஜுவை உயி ருள்ள வரை மறக்க முடியாது. பல நாடக ரசிகர்களால் எங் களுக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களும் நகை களும் இருந்தன. எட்டையபுரம் ஜமீந்தார் காசி விஸ்வநாத பாண்டியன் அன்புடன் வழங்கிய வைர மோதிரங்கள், கடுக் கன்கள், கெம்பு அட்டிகை முதலிய விலையுயர்ந்த பொருட்கள் எல்லாம் இந்த நேரத்தில் கம்பெனிக்கு உயிர் கொடுத்தன.

எங்கள் நிருவாகம்

அம்மாவின் மரணத்திற்குப் பின் சிற்றப்பாவுக்கும், பெரியண்ணாவுக்கும் மனத்தாங்கல் ஏற்பட்டது. எதிலும் பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட சிற்றப்பா, இனித் தாம் கம்பெனியில் உரிமையாளராக இருக்க இயலாதென்று கூறி விட்டார். பெரியண்ணாவும் இதையே எதிர்பார்த்திருந்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் எங்கள் சார்பில் நிருவாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கம்பெனி நேரடியாக எங்கள் நிருவாகத் தில் வந்தது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனுக்கு நாகர்கோவிலில் திருமணம் நடை பெற்றது. அம்மா இறந்த சமயம் என். எஸ். கிருஷ்ணன் நாகர் கோவிலில் இருந்தார். திருமண சம்பந்தமாக அவருக்கு பண உதவிசுட நண்பர் கிட்டுராஜுவே செய்தார். கொடுங் காலரா நோய் அம்மாவைக் கொள்ளை கொண்டபின் வேறு யாரையும் துன்புறுத்தவில்லை. சின்னண்ணா மறுபிறவிஎடுத்தது போல் படிப் படியாகக் குணம் அடைந்தார். திருமணத்தால் பெரியண்ணா வுக்கு ஏற்பட்டிருந்த மனக்கசப்பும் அம்மாவின் மறைவுடன் தீர்ந்தது. இனிக் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய முழுப் பொறுப்பும் பெரியண்ணாவின் தலையில் சுமந்தது. சிறு குழந்தை களாக இருந்த இரண்டு தங்கைமார்களைக் காப்பாற்றிக் கல்யாணம் செய்துகொடுக்க வேண்டிய கடமையும் அண்ணாவுக் கிருந்தது. எனவே அவர் பழைய வெறுப்பு மனோபாவத்தை விட்டுத் தமது மனைவியுடன் ஒன்றுபட்டிருந்து வாழ்க்கை நடத்தத் தொடங்கினார்.

கிட்டப்பா நந்தனார்

நாங்கள் நாடகத்தை நிறுத்தியிருந்த சமயத்தில் எஸ். ஜி. கிட்டப்பாவின் ஸ்பெஷல் நந்தனார் நாடகம் ஒன்று எங்கள் கொட்டகையிலேயே நடந்தது. நாங்கள் எல்லோரும் நாடகம் பார்க்கப் போயிருந்தோம்.

அன்று காயக சிகாமணி ஹரிகேசவகல்லூர் முத்தையா பாகவதரும் உள்ளே எங்களோடு உட்கார்ந்து நாடகம் பார்த்தார். கிட்டப்பா நந்தகைவந்து,அன்று பாடிய அற்புதமான பாடல்கள் இன்னும் என் செவிகளிலே ரீங்காரம் செய்து கொண்டிருக் கின்றன. சபையோர் கிட்டப்பாவின் இசையமுதத்தைப் பருகி, மதுவுண்ட வண்டுபோல் மயங்கிக் கிடந்தனார் என்றே சொல்ல வேண்டும். பாடல்களிலே நடிப்புணர்ச்சியைக் கொட்டிப் பாடும் பாவத்தோடு கூடியபாடல்களை நாங்கள் அன்றுதான் கேட்டோம். என் வாழ்நாளில் அப்படிப் பாடிய ஒரு சங்கீத தெய்வத்தை நான் இன்னும் சந்திக்கவில்லை. எங்களுக்கு ஏற்பட்டிருந்த எண்ணற்ற கவலைகளையெல்லாம் மறந்து, நான்கு மணி நேரம் கிட்டப்பாவின் இசை வெள்ளத்திலே மூழ்கிக் கிடந்தோம்.

மானேஜரின் துரோகம்

கம்பெனிக்கு நல்ல வருவாய் ஏற்பட்ட காலத்திலெல்லாம் அவற்றை உள்ளிருந்த மனிதக் கரையான்கள் அரித்துத் தின்று கொண்டிருந்தன. மானேஜர் காமேஸ்வர ஐயர் இப்படிச் செய்தவர்களிலே முதல்வர். எத்தனை எத்தனையோ துன்பங்களுக்கு அவர் காரணமாக இருந்தார். நகைகளை அடகு வைப்பதில் என்னென்னவோ தந்திரங்களைக் கையாண்டார். சில நகைகளைத் தாமே வைத்துக் கொண்டு பணம் கொடுத்தார். அவற்றின் கெடு தீர்ந்ததும் ஏலத்தில் போய்விட்டதாகப் பொய்யுரைத்தார். அவருடைய துரோகச் செயல்களேத் தெரிந்திருந்தும் விடுபட வழியின்றி அவஸ்தைப்பட்டோம். சிற்றப்பா நிர்வாகத்தை விட்டதோடு காமேஸ்வர ஐயரையும் கம்பெனியிலிருந்து விலக்கினோம், அவருக்கு ஒரு பெருந்தொகை சம்பளப் பாக்கியாகக் கொடுபட வேண்டியிருந்தது. அதைச் சில மாதங்களில் கொடுத்துவிடுவதாகப் பெரியண்ணா எழுதிக் கொடுத்தார். எப்படியாவது மானேஜர் போனால் போதுமென்றிருந்தது.

காட்சி அமைப்பாளர்கள்

இச்சமயம் காட்சியமைப்பாளர்களில் முதல்வராயிருந்த பகவதியாபிள்ளை இரண்டு திரைகளை யாருக்கோ விற்றுவிட்டார். மற்றொருவரும் இதற்கு உடந்தையாக இருந்தார் என்று தெரிந்தது. என்ன செய்வது? நிருவாகத்தில் குழப்பம். நாடகம் நடைபெறாத நிலைமை. எல்லாம் ஒன்று சேர்ந்து அவர்களை இவ்வாறு செய்யத் தூண்டியிருக்க வேண்டும்! பகவதியாபிள்ளை ஆரம்பகாலத்தில் எங்களிடம் உண்மையாக உழைத்த ஊழியர்களில் ஒருவர். காகிதத்தில் செடி, கொடி, பூ இவற்றைச்செய்வதில் நிபுணர். அவர் இவ்வாறு நடந்து கொண்டது எங்களுக்கெல்லாம் வேதனை அளித்தது. மேலும் மேலும், நாடக அரங்கில் பல பொருட்கள் களவாடப்பட்டு வந்தன. கடைசியாக வேறுவழி யின்றிப் பகவதியாபிள்ளையை விலக்க நேர்ந்தது. கும்பகோணத்திலிருந்து வேறு ஊருக்குப்போக முடிவு செய்தோம். புது ஊர்கள் எதிலும் கொட்டகை கிடைக்கவில்லை. பெரியண்ணாவும் கோபால் பிள்ளையும் பல ஊர்களுக்குப் போய்த் திரும்பினார்கள். கடைசியில் தஞ்சாவூருக்குப்போக முடிவு செய்யப் பெற்றது.

மோகனசுந்தரம்

தஞ்சையில் வாத்தியார் கந்தசாமி முதலியார் மீண்டும் கம்பெனிக்கு வந்துசேர்ந்தார். மோகனசுந்தரம் நாடகம் தயாராயிற்று. மோகனசுந்தரம் ஒரு அருமையான நாடகம் ஜே. ஆர். ரங்கராஜுவின் சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று. முற்போக்குக் கருத்துக்கள் அமைந்த நாடகம். பின்னல்திரைப்படத்தில் எல்லோரும்கண்டு மகிழ்ந்திருக்கிருேமாதலால் இதைப்பற்றி விரிவாகக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இந்நாடகம் மிகச் சிறப்பாக அரங்கேறியது. கம்பெனியின் இந்தக் கஷ்டமான நிலையிலும் புதிய நாடகத்திற்குக் காட்சிகள் தயாராயின. சின்னண்ணா லீலாவதியாகவும், எம். கே. ராதா சுந்தர முதலியாராகவும் தோன்றி நடிக்கும் காட்சிகள் மிக நன்முக இருக்கும். இந்நாடகத்தில் முக்கியபாத்திரமான விசாலாட்சியாக எம். ஆர். சந்திரன் என்ற இளைனார் நடித்தார். இவர் மிக அழகிய தோற்றம் உடையவர். ஒப்பனை ஒன்றும் இல்லாமல் சாதாரண நிலையிலேயே பாவாடை, தாவணி கட்டிவிட்டால் பகலில் கூட. இவரைப் பெண்ணென்றே எல்லோரும் நினைப்பார்கள். தலைமுடி யும் நன்றாக வளர்ந்திருந்ததால் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். இவரிடம் ஒரு சிறிய குறைபாடு இருந்தது. எப்போதும் தொண்டை ‘கரகர’ என்று இரு குரல்களிலேயே பேசும். ஒப்பனை முடிந்த பின் இவரைத் தொடர்ந்து ஐம்பது தோப்புக் கரணங்கள் போடச் சொல்வோம். கொஞ்சம் மூச்சு வாங்கினால் தொண்டையிலுள்ள அந்தக் கரகரப்பு போய்விடும். பிறகு சாரீரம் இனிமையாக இருக்கும். இவர் மிக நன்றாக நடிக்கக் கூடியவர். மோகனசுந்தரத்திற்கு சுமாராக வசூலாயிற்று.
--------------
Continued in part 2 (chapters 26-50) and part 3 (chapters 51-75)

This file was last updated on 21 Nov. 2019
Feel free to send the corrections to the .