உமார் கயாம் (நாவல்)
எழுதியவர் நாரா. நாச்சியப்பன்
பாகம் 1 (அத்தியாயம் 1-24)

umAr kayAm (novel)
by nArA. nAcciyappan
part 1 (chapters 1-24)
In tamil script, unicode/utf-8 format

உமார் கயாம் (நாவல்)
எழுதியவர் பாவலர் நாரா. நாச்சியப்பன்


Source:
---------
நூல் வெளியிடு விவரணம்

பதிப்புரை....


உலகமகா கவிகளுள் ஒருவரான உமார் கயாமின் இளமைக் கால காதல் வாழ்வை, சுவையும் விறுவிறுப்பும் நிறைந்த ஒரு தொடர் கதையாக “காதல்” மாத இதழில் திரு. நாரா. நாச்சியப்பன் அவர்கள் எழுதினார். பதினொன்றாம் நூற்றாண்டில் பெர்ஷியாவில் (தற்பொழுதைய ஈரான்) பிறந்தவர் உமார் கயாம். பழைமைவாத மதத் தலைவர்களின் பல வகையான எதிர்ப்புகளுக்குமிடையே, ராஜவமிச ஆதரவினால் உமார் கயாம் மேற்கொண்ட வான் மண்டல ஆராய்வுகளும், கணித தெளிவு முறைகளும் பிற்கால வளர்ச்சிகளுக்கு பெரிதும் உதவின. அரசியல் மாற்றங்களினால் அவருடைய வாழ்வு நிலை அவ்வப்பொழுது பாதிப்புக்கு உள்ளாயினும், அவரது நான்கு வரிப் பாடல்கள் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. வாசகர்களின் பேராதரவைப் பெற்ற அந்த வரலாற்று நாவலை இப்பொழுது புத்தகமாக வெளியிடுவதில் பெரிதும் உவகை அடைகின்றோம்.

நன்றி
பிரேமா பிரசுரம்
---------------
உள்ளடக்கம்
---------------

உமார் கயாம் (நாவல்)
1. புத்தகப் பித்தனிடம் பூங்கொடியின் உள்ளம்


பழைய நிஜாப்பூர் நகரத்தில், பழைய புத்தகக் கடைகள் நிறைந்த ஒரு பஜார்.

புத்தக வியாபாரிகள் தூங்கி விழுந்து கொண்டிருந்தார்கள். வீதியில் பெண்கள் தங்க வாத்துகளைப் போல, தண்ணிர் ஜாடிகளுடன் போய்க் கொண்டிருந்தார்கள்.

ஒரு பழைய புத்தகக் கடையில் ரோஜா மொட்டைப் போல யாஸ்மி உட்கார்ந்திருந்தாள்.

யாஸ்மி ஒரு சின்னப் பெண். வயது பனிரெண்டிருக்கும். தலையில் ஒரு சின்ன முக்காட்டைப் போட்டுக் கொண்டு அவளுடைய தகப்பனாருடைய புத்தகக் கடையில் உட்கார்ந்திருப்பாள்.

அவளுக்கு ஓர் ஏக்கம். வீதியில் போகிற ஒரு பையன் கூடத் தன்னைக் கவனிப்பதில்லையே என்பதுதான் அது. சில சமயம் அவளுக்குத் தன் வீட்டில் உள்ளவர்கள் மேலேயே கோபம் கோபமாக வரும். வீட்டில் ஏதாவது வேலையாயிருந்தால்தான் அவளைப் பற்றி நினைப்பார்கள். இல்லாவிட்டால் கவனிப்பதேயில்லை. தகப்பனாருக்குப் புத்தகங்களும் அவற்றின் விலை மதிப்பும்தான் பெரிது. பெண் பெரிதல்ல.

எல்லோரும் தன்னை அலட்சியப் படுத்துவதற்கு என்ன காரணம்? அவள் அழகாக இல்லையா? இல்லை. அவள் இன்னும் பெரியவள் ஆகவில்லையாம்.

அவள் மட்டும் பெரிய முக்காடாகப் போட்டுக் கொண்டு, பெண்கள் வசிக்கும் அந்தப்புரப் பகுதியிலேயே யிருந்தால் அவளை எட்டிப் பார்க்க எத்தனை பையன்கள் ஆசைப்படுவார்கள். இப்பொழுது அவள் தகப்பனாருடைய புத்தகக் கடையில் இருந்துகொண்டு அவருக்கு, அதையிதை எடுத்துக் கொடுப்பதும், உள்வீட்டுக்கும் கடைக்கும் தூது போவதற்கும் உதவியாக இருந்தாள். சும்மாயிருக்கிற நேரங்களிலே, ஏதாவது துணியை எடுத்துக் கொண்டு பூப்பின்னுவாள். அவளிடம் சாம்பல் நிறமான பூனைக்குட்டி இருந்தது. அதனுடன் விளையாடுவதும் உண்டு.

அவர்களுடைய புத்தகக் கடையில் எல்லாவிதமான பழைய புத்தகங்களும் இருக்கும். அந்த வீதியிலே புத்தக வியாபாரிகள் அதிகம். காரணம், அந்த வீதியின் கோடியில்தான் பள்ளி வாசலும், அதையடுத்து ஒரு பள்ளிக் கூடமும் இருந்தன. பள்ளிக்கூடம் விட்டதும் பையன்கள் கத்திக் கொண்டே ஓடுவார்கள். இது யாஸ்மிக்குப் பிடிக்காது. சில சிறுவர்கள் புத்தகக் கடைக்கு வருவார்கள். அவளுடைய தகப்பனார், புத்தகங்களின் முக்கியமான பகுதிகளை அவர்களுக்குப் படித்துக் காட்டுவார். அப்போதெல்லாம் யாஸ்மி அவற்றைக் கவனிப்பாள். ஆனால், புரிந்துகொள்ள முயற்சிப்பதுமில்லை. கண்ணுக்குத் தெரியாத எவரெவரையோ பற்றியும் அவர்கள் முன்னே தொங்கும் திரையைப் பற்றியும், இரவு நேரத்திலே ஆகாயத்தில் தோன்றும், அதிசய வாத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டியது, ஆடவர்களின் வேலையாக இருக்கலாம். ஒரு பெண்ணுக்கு அதில் என்ன அக்கறை வேண்டியிருக்கிறது? பெண்ணுக்கு ஆத்மா இல்லையென்று கருதப்படுகிறபொழுது அவள் வாழ்வு முடிந்தபின், பூனையும் குதிரையும் போகிற இடத்திற்குப் போய்ச் சேர வேண்டியது தானே? ஐந்து வேளையும் அயராமல் தொழுகை புரியும் ஆடவர்கள் போகும் இடத்துக்குப் போக முடியுமா?

அப்படி வருகிற பையன்களிலே, வயது வந்த இரண்டு பையன்கள் அடிக்கடி அவர்களுடைய புத்தகக் கடைக்கு வருவதும் ஏதாவது புத்தகங்கள் வாங்குவதும் பழக்கம். அவர்களிலே உயரமாக இருந்தவன் பெயர் ரஹீம்.

ரஹீம்சேடா என்பது அவன் முழுப் பெயர். அவனுடைய தந்தை நிஜாப்பூரிலே ஒரு நிலச்சுவான்தார். ரஹீம் அழகாக இருப்பான். அவனை யாஸ்மிக்குப் பிடித்திருந்தது. ஒரு நாள் ரஹீம் அவர்கள் கடையில் ஒரு புத்தகம் வாங்கினான். அந்த புத்தகத்தின் அட்டையில், ஒரு சுல்தான் படம் போட்டிருந்தது. சுல்தான் குதிரை மீது இருந்தபடி, வாளை வீசி, ஒரு மதவிரோதியான மேலை நாட்டானின் கழுத்தைச் சீவிக் கொண்டிருக்கிறான். அந்தப் படம் ரஹீமுக்கு அதிகம் பிடித்ததாக இருக்க வேண்டும். அந்தப் படத்துக்காகவே அவன் அதை வாங்கியிருக்கவும் கூடும்.

ஆனால், சுல்தான், சண்டை, மத விரோதி போன்றவையெல்லாம் ஆடவர் உலகத்தைச் சேர்ந்த விஷயங்கள். யாஸ்மிக்குப் புரியாதவை. புரிந்தாலும் பயனில்லாதவை.

அவள் நேருக்கு நேரே பார்த்ததெல்லாம் சில சமயங்களில் அந்த வீதி வழியாகப் போகும் ராஜ அமீர்தான்! வெள்ளைக் குதிரையொன்றின் மீது வீரவாளுடன் செல்லும் அமீரைத்தான் அவள் பார்த்திருக்கிறான். அந்த அமீர், ராஜ உடையும், வெல்வெட்டுப் பட்டயமும் அணிந்திருப்பான். அவனைத் தொடர்ந்து, பத்துப் பன்னிரெண்டு துருக்கிய வீரர்கள் தூக்கிப்பிடித்த வாளுடன் செல்வார்கள்.

யாஸ்மி, தன் கணவனாக வருபவனும் அந்த அமீரைப் போல் இருக்கவேண்டுமென்று கனவு கண்டிருக்கிறாள். என்றாவது ஒரு நாள் வீதியிலே செல்லும் இளவரசனான அவன், தன்னைப் பார்த்துத் தன் அழகில் மயங்கித் தன் தகப்பனாரிடம் வந்து பெண் கேட்பான். வெள்ளிக் காசுகளும் ஒளி வீசும் நவரத்தினக் கற்களும் அள்ளி அள்ளித் தன் தகப்பனாருடைய பையில் கொட்டி நிரப்பி விட்டுத் தன்னையும் அந்த அழகான வெள்ளைக் குதிரையிலே தூக்கி வைத்துக் கொண்டு போய்விடுவான். ஆற்றங்கரையின் அருகிலே உள்ள அரண்மனையொன்றிலே தன்னைக் கொண்டுபோய் ராணி போல் வைத்திருப்பான். அங்கே தெள்ளிய நீர் தடாகங்கள் இருக்கும். அவற்றிலே வெள்ளை நிற அன்னப் பறவைகள் மிதந்து வரும். வாசலுக்கு வாசல் பலகணிக்குப் பலகணி பட்டுத் திரைச் சீலைகள் கட்டித் தொங்கவிடப் பட்டிருக்கும். வெள்ளித் தட்டுக்களிலே விதவிதமான பழங்களைக் கொண்டு வரும் வேலைக்காரிகள் அவள் ஆணைக்குக் காத்துக் கிடப்பார்கள். வெள்ளைக் குதிரை வீரனான அந்த இளவசரன் உள்ளங் கொள்ளை கொண்ட தன்னையே சுற்றிச் சுற்றி ஓடி வருவான். மற்ற மனைவிகளை மதிக்க மாட்டான். தனக்குப் பிறக்கும் குழந்தைகளையே அதிகமாக நேசிப்பான். இவ்வளவிருந்தும், அவன் சிரிப்பதே கிடையாது. இளவரசர்கள் சிரிப்பதில்லை போலிருக்கிறது! வீதியில் எப்போதாவது போகும் அந்த அமீர் சிரிப்பதேயில்லையே? ஆனால் இந்த ரஹீம் மட்டும் அதிகமாகச் சிரிக்கிறானே...?

ரஹீமை அந்த அமீரோடு யாஸ்மி ஒப்பிட்டுப் பார்த்தாள். ரஹீம் ரஹீமாகவே இருந்தான். அமீர் ஆகவில்லை! இருந்தாலும் ரஹீம் நல்லவன். நல்லவன் மட்டுமல்ல, செல்வக் குடியில் பிறந்தவன். அவனுக்காக ஓடி ஒடி வேலை பார்க்க எத்தனையோ அடிமைகள் இருக்கிறார்கள். அவனை யாஸ்மிக்குப் பிடித்திருந்தது. ஆனால், அவன் கூட வருகிறானே, ஒரு நண்பன் அவனைக் கண்டால் அவளுக்குப் பிடிக்கவேயில்லை. அந்தப் பையன் அவளை ஏறிட்டுப் பார்ப்பதேயிலை. எப்பொழுதும் ஊமை போலவே இருப்பான். எதுவும் பேசுவதேயில்லை. அவன் இப்ரஹீமின் பிள்ளையாம். அவன் ஒரு புத்தகப் புழு. கடுகடுவென்ற முகத்தோடு எப்பொழுது பார்த்தாலும் புத்தகங்களையே படித்துக் கொண்டிருப்பான். அவன் ரஹீமோடு வருவான். கடையில் ரஹீமும் அப்பாவும் பேசிக் கொண்டிருக்கும் போது அந்த இப்ரஹீமின் பையன் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டு இருப்பான். இருட்டிக் கொண்டு வருவதுகூடத் தெரியாது. நன்றாக இருண்டு புத்தகங்களை எல்லாம் மூடி மாலைத் தொழுகைக்குப் புறப்படும் வரையில் படிப்பான். யாஸ்மியை அவன் உற்றுப் பார்ப்பதேயில்லை. வீதியில் நடக்கும்பொழுது, தோள் துண்டு காற்றில் பறந்து கொண்டிருக்கும், தலைப்பாகையை ஒழுங்காகக் கட்டியிருக்கமாட்டான். வீதியின் குறுக்கே நடக்கும் போதாவது பார்த்து நடந்து வருவானா? கழுதைகளை உரசிக் கொண்டும் ஒட்டகத்தின் கழுத்துகளுக்குக் கீழே நுழைந்துகொண்டும் அவசர அவசரமாக நடப்பான். அவனும் அவன் ஆடை லட்சணமும் எதுவும் இப்ராஹீமுக்குப் பிடிப்பதில்லை. இங்கே இப்ராஹீமின் பிள்ளை ஊமைபோல் பேசாமல் இருக்கிறானே பள்ளிக் கூடத்தில் அப்படியில்லையாம். ஆசிரியர்களோடு எப்பொழுதும் தகராறாம். அவர்களைக் கேள்வி கேட்பதும் கிண்டல் செய்வதும்....! ‘உருப்படுகிறவனாகத் தோன்ற வில்லை’ என்று அப்பாவே ஒரு நாள் சொன்னார். இந்த ரஹீம் ஏன்தான் அந்தப் பையனோடு சேர்கிறானோ தெரியவில்லை!

இப்படியாக, யாஸ்மியின் எண்ணத்திலே இப்ராஹீம் மகன் வெறுப்புக் குரியவனாகவும் ரஹீம் விருப்புக்குரியவனாகவும் இருந்து வந்தார்கள். ஆனால் அவள் இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளும்படியான நிகழ்ச்சியொன்று நடந்தது.

ஒரு நாள் யாஸ்மி தன்னுடைய ஆசைப் பூனைக்குட்டியைத் தேடிக் கொண்டு திரிந்தாள். அது அவளுக்குத் தெரியாமல் எங்கே ஊர்வலம் போனதோ? வெளியிலே வந்து பார்த்தபொழுது, ஐந்தாறு பையன்கள் ஒரு மரத்தின் மீது கல்லெறிந்து கொண்டிருந்தார்கள். அந்த மரக்கிளையொன்றில் பயந்து நடுங்கி பதுங்கிக் கொண்டிருந்தது, அந்த சாம்பல் வண்ணப் பூனைக்குட்டி. “எரியாதீர்கள்! எரியாதீர்கள்!” என்றுக் கத்திக்கொண்டே ஓடி வந்தாள் யாஸ்மி. ஆனால் அந்தச் சுட்டிப் பயல்கள் பூனையைக் கொல்லும் வரை நிறுத்தமாட்டார்கள் போலிருந்தது. யாஸ்மி விறுவிறுவென்று மரத்தின் மேல் ஏறினாள். அவள் பூனைக்குட்டியைப் பிடித்துத், தன் நெஞ்சோடு அனைத்துக் கொண்டாள். அதன் பிறகுதான் கல்லெறி நின்றது. அந்தப் போக்கிரிகளும் ஓடி விட்டார்கள். பூனைக்குட்டியை அணைத்தபடி யாஸ்மி மெதுவாக ஒவ்வொரு கிளையாக மாறி ஆகக் கீழேயிருந்த கிளைக்கு வந்து சேர்ந்தாள். பூனைக் குட்டியையும், வைத்துக் கொண்டு இறங்குவது முடியாத காரியம். குதிக்கலாமென்றாலோ, அந்தக் கிளை மிக உயரமாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் யாஸ்மி திருதிருவென விழித்தாள். வீதியில் போகும் யாரும் அவளைக் கவனிக்கவேயில்லை. சிறிது நேரத்தில் கீழேயிருந்து “குதி!” என்ற ஒரு குரல் கேட்டது. ஒரு பையன் இரு கைகளையும் நீட்டிக் கொண்டு மேலே பார்த்து அவளைக் குதிக்கச் சொன்னான். அவன் யாரென்று பார்த்தாள். அவன் ரஹீம் கூட வருவானே, இப்ராஹீம் மகன் அவனேதான்! அவன் கையில் குதிக்க அவள் விரும்பவில்லை. “முடியாது” என்று சொல்லித் தலையை ஆட்டி விட்டாள்.

இப்ரஹீமின் பையன் விறுவிறுவென்று மரத்தின் மேல் ஏறினான். அவள் பக்கத்திலே வந்தான். அவளை ஒரு கையில் இறுக்கமாக அணைத்துப் பிடித்துக் கொண்டு, மறு கையால் மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு கால்களைத் தளர்த்திக் கீழே தொங்கினான். யாஸ்மியின் நெஞ்சு துடித்தது. அவளுடைய பூனைக்குட்டி கால்களை நீட்டிப் பாதத்தில் புதைந்திருக்கும் நகங்களை வெளிப்படுத்தி அவன் தலைப் பாகையைப் பற்றிக் கொண்டது. அப்படியே தரையில் குதித்தான். யாஸ்மியின் முகம் அவனுடைய தலையில் இடித்தது. கரிய கண்களிரண்டும் விரிய அந்தக் குறும்புக்காரன் அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தான். அவளை விடுவித்து விட்டு, “நீயும் உன் பூனைக் குட்டியும், ஆளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டீர்களே!” என்று அவன் சிரித்தான்.

“ஐயோ, கேலிபண்ணாதே!” என்று கூவிக் கொண்டே யாஸ்மி ஒடி ஒளிந்து விட்டாள். அன்று மாலை நேரம் முழுவதும், தன்னைப் பரிவுடன் பிடித்த அந்தக் கையையும் புன்சிரிப்புடன் தன்னைப் பார்த்த அந்தக் கரிய விழிகளையுமே நினைத்துக் கொண்டிருந்தாள்.

அன்று முதல் யாஸ்மிக்கு, இப்ராஹீம் மகனைத் தவிர வேறு நினைவேயில்லை! எப்பொழுதும் வீதியிலே பூங்காவனத்தை நோக்கிப் போகும் பிரயாணிகளைப் பார்த்தபடி உட்காரும் அவள், அன்று முதல் பள்ளிக்கூட வாசல் தன் கண்ணுக்குத் தெரியும்படியாகப் புத்தகக் கடையின் முன்பக்கத்திலே வந்து உட்கார்ந்து கொண்டான். எப்பொழுது பள்ளிக் கூடம் விட்டுக் கதவு திறப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பாள். விரைந்து நடந்து வரும் பையன்களின் மத்தியிலே, இப்ரஹீமின் மகனின் அந்த அலங்கோலமான உருவம் வந்தவுடனே அவள் உள்ளம் துள்ளிக் குதிக்கும் கன்னஞ் சிவக்கும். நாணத்துடன் திரும்பிக் கொள்வாள். பிறகு கடைக்கண்ணால் திரும்பிப் பார்ப்பாள். நிமிர்ந்து நிற்கும் அந்தக் குறும்புக்காரனுடைய தோற்றத்தையும், உறுதியாகக் கால் வைத்து நடக்கும் அவனுடைய நடையழகையும் வியப்புடன் அவள் பார்த்துக் கொண்டேயிருப்பாள். அவனுடைய கரிய உதடுகளும் கண்களும் அவளைக் கண்டதும் விரியும். அவன் அவளைப் பார்த்துப் புன்சிரிப்புக் காட்டும்போது, அவனுடைய கடுகடுப்பான முகத்திலும் ஒருவித மென்மையுண்டாவதை யாஸ்மி கண்டு உள்ளம் பூரிப்பாள். அவன் கவனத்தைத் தன்னிடத்தில் திருப்புவதற்காக அவள் என்னென்னவெல்லாமோ செய்தாள். அழகான ஆடைகளை அணிந்துகொண்டாள். கவர்ச்சிகரமாகக் கண்ணுக்கும் புருவத்துக்கும் மைதீட்டிக் கொண்டாள். கடையிருகில் அவன் வரும்போது தன் கையிலுள்ள ரோஜாப் பூவை நழுவவிட்டுப் பார்த்தாள். தனக்குத் தெரிந்த பெண்மணிகள் இதற்கு முன்னே, தங்கள் காதலர் கவனத்தைத் திருப்ப என்னென்ன செய்தார்களென்று எண்ணிப் பார்த்து, அதையெல்லாம் தானும் செய்து பார்த்தாள். ஆனால் அவனோ, அவள் நழுவ விட்ட பூவை எடுத்து, அவள் மடியிலே போட்டுவிட்டுப் போய் விடுவான். அவளுக்கோ வெட்கம், பயம், அதிகப் பிரசங்கித்தனமாகச் செய்து விட்டோமே என்ற எண்ணம் எல்லாம் உண்டாகிவிடும். யார் கண்ணுக்கும் தெரியாமல் மணிக்கணக்கில் போய் ஒளிந்துகொண்டு விடுவாள். தன் தாயாருடைய வெண்கலக் கண்ணாடியிலே, அடிக்கடி முகம் பார்த்துக் கொண்டு தான் மிக அழகாக இருப்பதாக முடிவு செய்து கொள்ளுவாள். பெரிய பெண்ணாகவும், கவர்ச்சியும், அழகும் பொருந்தியவளாகவும் இருக்கும் தன்னை ஓர் இளவரசி என்றே எண்ணிப்.பல மனிதர்கள் தேடி வருவதாகக் கற்பனை செய்து கொள்வாள். வீட்டுப் பெண்மணிகள் மூலையில் உள்ள கட்டிலில் உறங்குகிறாள் என்று நினைத்துக் கொண்டு தாங்களும் தூங்கி விடுவார்கள். இவளோ தன் பூனைக் குட்டியிடம் தன் அழகைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பாள். இப்ராஹீம் மகன் தன்னோடு பேசமாட்டானா என்று ஏக்கமாக இருந்தது அவளுக்கு.

இப்ராஹீமின் பிள்ளை தங்கள், புத்தகக் கடைக்கு வரும்பொழுது அவனுடைய ஒவ்வொரு செய்கையையும், யாஸ்மி, உற்றுக் கவனித்தாள்.

வெளிச்சம் தெரியும் இடமாகத் தேர்ந்து அவன் உட்கார்ந்து கொள்வதும், எப்படிப்பட்ட புத்தகங்களை விருப்பத்தோடு எடுத்துப் படிக்கிறானென்பதும் எப்படி விரல்களால் வரியாகத் தடவிப் படிக்கிறானென்பதும் அவள் கவனித்தாள். அவன் எப்பொழுதும் விரும்பிப் படிக்கும் புத்தகம் இருந்தது. யாஸ்மி மட்டுமே கடையில் தனியாக இருந்தபோது அந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தால் அதில் பலப் பல படங்கள் இருந்தன. ஆனால் அவை யாவும், வட்டங்களாகவும் கோடுகளாகவும் விசித்திர கட்டங்களாகவும் வெட்டுப்பட்ட கோணங்களாகவும் இருந்தன. அது ஒரு ஷேத் (சேத்)திர கணித புத்தகம். அவள் படித்தறிந்து கொள்ள முடியா விட்டாலும் அதன் அடையாளம் அவளுக்கு நன்றாகத்தெரியும். அவள், அதை வேறு பல கையெழுத்துப் பிரதி, புத்தகங்களின் ஊடே மறைத்து வைத்தாள். அன்றைக்கு அவள் மிகக் கவர்ச்சியாகத் தோற்றமளித்தாள். ரஹீமும், இப்ராஹீம் மகனும் உள்ளே, நுழைந்தவுடன், ரஹீம் அவளைப் பார்த்து “யாஸ்மி அடேயப்பா! உன் அழகுக்கு முழு நிலவு ஈடாகுமா? இல்லை அந்த இன்பபுரி இளவரசிதான் இணையாவாளா?” என்று கேட்டான். இனிமையான அந்த வருணனையைக் கேட்டதும் யாஸ்மி தன் புருவத்தை உயர்த்தி மலர்ந்த பார்வையால் அவனை நோக்கினாள். “வெட்டும் அந்தப் பார்வையைத் தடுக்கும் கேடயம் என்னிடம் இல்லை. கருணை காட்டு” என்று ரஹீம் சிரித்தான்.

யாஸ்மியும் புன்சிரிப்புக் காட்டினாள். அவளுடைய பார்வை முழுவதும், இப்ராஹீமின் மகன் புத்தகத்தைத் தேடுவதையே கவனித்துக் கொண்டிருந்தது. கையெழுத்துப் பிரதிகளைக் கலைத்துத் தேடுவதுபோல் பாவனை செய்து, யாஸ்மி அந்த சிவப்புப் புத்தகத்தை எடுத்தாள். அப்படி எடுக்கும்போது அதில் ஒரு பக்கம் குறுக்குவாட்டில் கிழிந்து போய் விட்டது. அதே சமயத்தில் அவளுடைய தந்தை உள்ளேயே வந்து கொண்டிருந்தார். நல்ல வேளையாக, அது கிழியும் சமயத்தில் அவர் பார்க்கவில்லை. என்றாலும் உள்ளே வந்ததும், புத்தகத்தைப் பார்த்தவர், அது, கிழிந்து போயிருப்பதைக் கவனித்து விட்டார். தன்னைக் கடிந்து கொள்ளப் போகிறாரே என்று யாஸ்மி பயந்து நெஞ்சு படபடக்கத் துடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“நான்தான் தவறுதலாகக் கிழித்து விட்டேன், அதை, நானே வாங்க முடிவுகட்டி விட்டப்படியால் நீங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. விலை என்ன? என்று கேட்டான் இப்ராஹீம் மகன்

“எவ்வளவு நல்லவன்!” என்று வியந்தது, யாஸ்மியின் இளம் உள்ளம். விளக்கப் படங்களுடன் கூடிய இந்தக், கோண கணிதப் புத்தகத்தை இவன் எப்படி வாங்க முடியும் என்று வியப்படைந்தார். இப்ராஹீம் மகனிடம் அதை வாங்கப் போதுமான பணமில்லை, என்பது அவருக்கு மட்டுமல்ல ரஹீமுக்கும் தெரியும். அது மிக விலை உயர்ந்த கையெழுத்துப் பிரதியாகும். எல்லாவிதமான வரைவுப் படங்களும் கூடிய இதுபோன்றப் புத்தகம், இந்த நிஜாப்பூர்ப் புத்தக நிலையத்தில் கூட, இல்லையே என்று பேரம் பேசத் தொடங்கினார் யாஸ்மியின் தந்தை.

ரஹீம், குறுக்கிட்டு, “இந்தப் புத்தகத்தை, நானே விலைகொடுத்து வாங்குகிறேன். இப்ராஹீம் மகனான இந்த என் நண்பன் உமாருக்கு இதை நான் என் அன்புப் பரிசாகக் கொடுக்கப் போகிறேன்” என்றான்.

இப்ராஹீம் மகன் ஆவலுடன் அந்தச் சிவப்புப் புத்தகத்தைத் தன் வலிவான கரங்களால் எடுத்துக் கொண்டான்.

எடுத்துக்கொண்டே “பழைய புத்தகம்தானே கிழவரே, இதுதான் சுல்தான் முகமது தனது தங்கச் சிங்காதனத்தில் வைத்திருந்த புத்தகம் என்று கதையளக்கத் தொடங்கி விடாதீர். நெடுநாட்களுக்கு முன் இறந்து போன நம் மத விரோதியான ஒரு கிரேக்கன் எழுதியது இந்த நூல் என்பதும் பதினான்கு தீனார்கள்(பொன்கள்) தான் பெறும் என்பதும் எங்களுக்குத் தெரியும்” என்றான்.

“வரைவுப்படம் இல்லாமல் வெறும் எழுத்துடன் கூடிய புத்தகமே நீர் சொல்லும் விலையைப் போல் இரண்டு மடங்கு இருக்கும். இதில் நிறைய விளக்கப்படங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் தையலும் கட்டடமும்..” என்று இழுத்தார் யாஸ்மியின் தந்தை.

சுமார் ஒரு மணிநேரம் பேரம் நடந்தது. உமாருக்கு அதை எப்படியும் வாங்கிவிட வேண்டுமென்ற ஆவல் இருந்தது. கடைசியில் தன் நண்பன் உமாருக்காக பத்தொன்பது பொன்களும் சில்லறையும் கொடுத்து ரஹீம் அந்தப் புத்தகத்தை வாங்கினான். கிழிந்தது பற்றிய பேச்சுக்கு வேலையில்லாமல் போய்விட்டது.

கடையை விட்டு வெளியே சென்றவுடன் தன்னுடைய பையில் இருந்த பேனா வைக்கும் அழகான பெட்டியை எடுத்து ரஹீமின் கையில் திணித்து விட்டு உமார் ஓடுவதைக் கவனித்தாள் யாஸ்மி.

நண்பன் எவ்வளவு கூவியழைத்தும் உமார் நிற்கவில்லை!

----------

2. காரிருளில் போர் அழைப்பு

உமாருக்கு அன்று மாலைப் பொழுது, மறக்க முடியாததாகும். அவசர அவசரமாக, ஊற்றுக் கேணிக்குச் சென்று கைகால் கழுவிக் கொண்டு, மாலையுணவை முடித்துக் கொண்டு கூடுதலாக ஒரு விளக்கு வாங்கிப் பற்றவைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றான். அவனுடைய அறை, ஒரு வீட்டு உச்சியில், களிமண்ணால் கட்டப் பெற்றிருந்தது. அது, வெங்காயமும் புல்லும் காயவைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் இடமாகும். அதற்கு வாடகை சில செப்புக் காசுகள்தான். அத்துடன் நட்சத்திரங்களை அங்கிருந்து நன்றாகப் பார்க்க முடியும். இந்த இரண்டையும் எண்ணித்தான் அந்த அறையை வாடகைக்குப் பிடித்திருந்தான் உமார். இரவிலே குளிர்ந்த காற்று வீசும் பொழுது வெங்காயத் தாள்களும், புல் கட்டுகளும் உயிர் வந்தது போல சலசலக்கத் தொடங்கும். படுக்கையில் படுத்தபடியே, கூரைகளுக்கு மேல் உள்ள வானத்தையும், சுல்தானுடைய மேன்மாடச் சிகரத்தையும் உமார் பார்க்க முடியும்.

இன்று காற்றில்லை. அது அவனுக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது. இரண்டு விளக்குகளையும் ஏற்றிச் சுவரின் இரு பக்கத்துப் படிகளிலும் மாட்டி வைத்து விட்டுக் கோணகணிதப் புத்தகத்தை எடுத்துத் தன் மடியில் வழவழப்பான பலகையின் மேல் வைத்துக் கொண்டு பக்கங்களைப் புரட்டலானான். பள்ளிக்கூடத்தில் கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்ப படித்ததையே படிப்பதைக் காட்டிலும், இது எவ்வளவோ உயர்ந்த படிப்பாக இருந்தது.

கணிதத்தைப் படிக்கப் படிக்க உமாரின் ஆர்வம் அதிகமாயிற்று. பேனாவும், மையும், தாளும் அவன் கைகளில் ஏறின. அளவுகோலும், வட்டமாக்கியும் ஒரு கோணம் வரைந்தான். அதைப் பல பகுதிகளாகப் பிரித்தான். எண்களும் கோடுகளும் அவன் கைவிரல்களில் நடனமாடின. அவனுடைய மனம் கணக்கில் சுழன்றது. அவன் வேலை செய்த சுவையில், அங்கிருந்த அவனுடைய அறை விளக்குகள், புத்தகம் அத்தனையும் மறைந்து விட்டன. ஒரு நிமிடம் உமாரின் அமைதி கலைந்தது. ஒரு பழக்கமான குரல் எழுந்தது. இரவு நேரத் தொழுகைக்காக அழைக்கும் குரல் அது. அவன் தொழுகை நடத்த வேண்டும். இந்தப் புத்தகம் மதவிரோதியொருவன் எழுதுயது. இப்படியொரு எண்ணம் அவன் மனத்திலே ஊசலாடியது. எரியும் விளக்குகளைப் பார்த்தான். எதுவும் புரியாமல் ஒரு வினாடி இருந்தான். மறுபடியும் கணக்கு வேலையில் ஆழ்ந்து விட்டான்.

நள்ளிரவுக்குக் கொஞ்சம் நேரம் இருக்கையில் மறுபடியும் அவன் அமைதி கலைந்தது. வீதியில் தடதடவென்று நடமாடும் ஓசை கேட்டது. வெளிச்சங்கள் அங்குமிங்குமாகத் தோன்றின. வீட்டின் உச்சியிலே ஓரத்திலே நின்றபடி கீழே வீதியைக் கவனித்தான்.

கருத்த, தலைப்பாகையணிந்த ஒரு பெரிய உருவத்தைச் சுற்றி ஒரு கூட்டமே திரண்டிருந்தது.

ஒரு இஸ்லாமிய செய்தியறிவிப்போன், அங்கே நின்று கூட்டத்தினரிடம் கூறிக் கொண்டிருந்தான்.

மத நம்பிக்கை உள்ளவர்களே! அமைதியும், இன்பமும் அனுபவிக்க நீங்கள் விரைவிலே, எச்சரிக்கைக்காரர் ஒருவரால் அழைக்கப்படுவீர்கள். நம்பிக்கையில்லாத, மதவிரோதிகளுக்கெதிராக வாள்பிடிக்கும் நாள் வந்ததும் முரசுகள் அதிரும்! உடனே, உங்கள் அமைதியைக் கலைத்துக்கொண்டு மதவிரோதிகளை, வெட்டி வீழ்த்துவதற்கான வீர வாள் பிடிக்க நீங்கள் போர்க்களத்திலே, குதிக்க வேண்டும். காற்று மணலை, அடித்துக் கொண்டு போவது போல, உங்கள் வீரம் எதிர்ப்பை வீழ்த்த வேண்டும். அழைப்பு வரும்! காத்திருங்கள்.

செய்தியறிவிப்போனுடைய குரல் இருட்டைத் துளைத்துக் கொண்டு எழுந்தது. அங்கே கூடியிருந்தவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டு பிரிந்து சென்றார்கள். அவனுடைய பேச்சுத் திறமையை வியந்து கொண்டிருந்த உமாரின் எண்ணத்திலே, இன்னொரு கேள்வி உதயமாகியது. இந்த சுல்தான் எப்பொழுது பார்த்தாலும், “போர் போர்! என்று திரிகிறானே” என்பதுதான் அந்தக் கேள்வி.

செய்தியறிவிப்போனும், “மத நம்பிக்கையுள்ளவர்களே!” என்ற அழைப்பும் மறைந்த பிறகு, உமார் நட்சத்திரக் கூட்டங்களை நோக்கித் தன் பார்வையைச் செலுத்தினான். திடீரென்று அவனுக்குக் கொட்டாவி வந்தது. விளக்குகளை அணைத்து விட்டுக் காலையும் கையையும் நீட்டிப் படுத்தான். மறுகணம் அவன் ஆழ்ந்த உறக்கத்திலே இருந்தான்.
---------

3. முக்காட்டுச் சிறைக்குள்ளே மூடி வைத்த கட்டழகி!

பள்ளி வாசலிலிருந்து புறப்பட்ட வீதியின் மறுகோடியிலே ஒரு பூங்காவனம் இருந்தது. அதில் திராட்சைக் கொடிகள் அடர்ந்து, படர்ந்து கூடாரம் போல் காட்சியளித்துக் கொண்டிருந்தன. நல்ல நிழல், கொஞ்ச தூரத்தில் வீதி திரும்பும் இடத்திலே ஒரு பெரிய மரமும், நீருற்று ஒன்றும் இருந்தன. இந்த நீர் ஊற்றிலேதான், நிஜாப்பூர் பெண்கள் தண்ணீர் எடுக்க வருவார்கள். வரும்பொழுது அந்த மரத்தடி நிழலிலே குளு குளுவென்று வீசும் காற்றிலே உட்கார்ந்து ஊர்வம்பு பேசுவதும் உண்டு. உமார் இங்கேதான் கால், முகம் கழுவுவதற்கும், தண்ணீர் குடிப்பதற்கும் வருவது வழக்கம்.

ஒருநாள் யாஸ்மியின் தாயார் அவளைத் தண்ணீர் எடுத்துக் கொண்டுவரும்படி அங்கே அனுப்பினாள். ஜாடியில் தண்ணீர் மொண்டு கொண்டு அதைத் தலையிலே தூக்கி வைப்பதற்காக யாஸ்மி முயற்சித்துக் கொண்டிருக்கும் போது உமார் தண்ணீர் குடிப்பதற்காக வந்து சேர்ந்தான். வழக்கத்திற்கு மாறாக அவன் கையில் எந்தவிதமான புத்தகமும் இல்லை. அவன் கூட யாரும் நண்பர்களும் இல்லை. தன்னந்தனியாக வந்திருந்தான்.

தண்ணீர் குடித்தவுடன் உமார் போய் விடுவானோ என்று நினைத்த யாஸ்மி அவனிடம் பேச்சுக்கொடுக்கத் தொடங்கினான்.

“விதண்டாவாதம் பேசுகிறவன் என்று உன்னைப்பற்றி அப்பா சொன்னார். நீ ஏன் இப்படிக் கெட்டுப் போகிறாய்?” என்று யாஸ்மி கேட்டாள்.

திடீரென்று பேசக் கற்றுக் கொண்ட பச்சைக் கிளியொன்றைப் பார்ப்பது போல் உமார் அவளைப் பார்த்தான். யாஸ்மி மேலும் பேசத் தொடங்கினாள். அவனைத் திருத்தி நல்லவழிக்குக் கொண்டு வரவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. ‘எதற்காக விதண்டாவாதம் பேசி பள்ளிக்கூட ஆசிரியர்களைக் கேலி செய்து கெட்டபெயர் எடுக்க வேண்டும்? பிறரோடு இனிமையாகப் பேசி நல்லவன் என்று பெயரெடுக்கக் கூடாதோ?’ என்று கேட்டுவிட்டு, “உன் வயதென்ன? பள்ளிக் கூடத்தில் படிக்காதபோதும் ரஹீமுடன் சுற்றாமல் இருக்கும்போதும், நீ என்ன செய்வாய்?” என்று கேட்டாள்.

“எனக்குப் பதினேழு வயதாகிறது. என் தந்தை கூடாரமடிப்பவர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவர். சில சமயம் நான் அவருடைய கடைக்குச் செல்வேன். இப்பொழுது அவர் இறந்துவிட்டார், ரஹீம்தான் துணையாக இருக்கிறான்”, என்று உமார் சொன்னான்.

ஒரு பாறையின் மீது போய் உட்கார்ந்து கொண்டு யாஸ்மி அவனையும் அதில் வந்து உட்காரச் சொன்னாள்.

வேலையே ஒன்றும் பார்க்கவேண்டியதில்லாத நேரத்திலே நீ என்ன செய்வாய்? என்ன செய்ய விரும்புவாய்?” என்று கேட்டாள். அவன் தன்னைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணித்தான், அவள் அவ்வாறு கேட்டாள். அருகிலே வந்து உட்கார்ந்து கொண்டு உமார் சொன்னான் “ஓர் ஆராய்ச்சிகூடம் ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்” என்றான். அது என்னவோ யாஸ்மிக்குப் புரியாத விஷயமாக இருந்தது, அப்புறம்...? என்றாள்.

“நட்சத்திர வட்டம் காட்டும்கோளம், டோலமி என்பவருடைய நட்சத்திரக் கணிதம் இதெல்லாம் வேண்டும்”: என்றான் உமார். ஆராய்ச்சிக்கூடம் என்றால் இன்னும் என்னென்ன வேண்டுமோ? தன்னுடைய இன்பக் கனவு போல, உமாருக்கும். ஏதோ இலட்சியக் கனவு இருக்கிறது என்பதை மட்டும் யாஸ்மி உணர்ந்து கொண்டாள். தான் எப்படி அமீரின் அரண்மனையிலே, வெள்ளிய அன்னம் மிதக்கும் தெள்ளிய நீர்த்தடாகங்களை உள்ளத்திலே எண்ணியிருந்தாளோ அதுபோல உமாரும் ஏதோ ஒரு இலட்சியத்துடன்தான் இருக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. “தெரியும் தெரியும். நட்சத்திரங்களைக் கணக்கிட்டு விதியையறிந்து சொல்லுகிற சிதி அகமது போல நீயும் ஒரு சோதிடனாக விரும்புகிறாய். அதுதானே!” என்று யாஸ்மி கேட்டாள்.

சிதி அகமது என்பவன் பெரிய சோதிடப்புலி என்று பெரிய பெண்கள் பேசிக் கொள்வதை யாஸ்மி கேள்விப்பட்டிருந்தாள். “ஜாதகக் கட்டத்தைப் போட்டு வைத்துக் கொண்டு அர்த்தமில்லாமல் முனு முணுத்து அசைபோடும் கழுதை போன்ற அந்த முடர்களின் தலைவன் சிதி அகமது அவனைப் போல் நான் ஏன் ஆகவேண்டும்?” என்று ஆத்திரமாகப் பேசினான் உமார்.

அவனுக்கு சிதி அகமதின் பெயரும் பிடிக்கவில்லை; சோதிடத்தில் நம்பிக்கையும் இல்லை என்பதை யாஸ்மி புரிந்து கொண்டாள். ஆனால் உமார் என்ன செய்ய எண்ணுகிறான் என்பது மட்டும் அவளுக்குப் புரியவில்லை, காலத்தையும் நேரத்தையும் அளந்து கணக்கிடப் போகிறானாம்; கதிரவன் உதித்தால் காலை தோன்றுகிறது ஐந்து வேளைத் தொழுகையும் முடிந்து ஆகாயத்தில் நட்சத்திரங்கள் பூத்துவிட்டால், இரவு வந்து விடுகிறது. மாதங்களைக் கணக்கிட நிலவு இருக்கிறது. வளர்பிறை, தேய்பிறை இரண்டும் சேர்ந்தால் ஒரு மாதம். இதுதான் கால அளவைப்பற்றி யாஸ்மி கண்டு வைத்திருந்த முடிவு.

ஆனால், உமாருக்கு மாதங்களைக் கணக்கிடும் பிறைக் கணக்குப் பிடிக்கவில்லை. இதனால் ஓர் ஆண்டில் பல மணி நேரங்கள் விடுபட்டுப் போகின்றன. ஏன் அப்படிப் பல மணிகளை நாம் இழக்க வேண்டும்? நிலவு ஒழுங்காக மணி காண்பிக்காவிட்டால், அதை விட்டு விட்டு வேறு வழி தேடக்கூடாதா என்ன? சரியான ஆண்டுக்கணக்கையுண்டாக்க வேண்டும் என்பது உமாரின் இலட்சியமாக இருந்தது.

யாஸ்மி அவன் சொன்ன எல்லாவற்றிற்கும் தலையாட்டினாள். அவள் உள்ளத்தின் உள்ளே ஓர் கற்பனைகனவு உருவாகிக் கொண்டிருந்தது. உமார் ஆராய்ச்சிக்கூடம் அமைத்துவிட்டால், யாஸ்மியிடம் தன் அன்பைச் செலுத்துவானேயானால் எவ்வளவு நன்றாக இருக்கும். அவனுடைய கூடம் முழுவதும் கூட்டிப்பெருக்கி, எல்லாச் சாமான்களையும் தூசி துடைத்து ஒழுங்காக வைத்து அவனுடைய ஆடைகளைத் துவைத்துக் காயப்போட்டு அவனுடைய கால் மிதியடிகளின் மேல் பகுதியில் பூ வேலை செய்து - ஆகா; அன்று முதலே அவனுக்கு அவளால் என்னென்ன உதவி செய்ய முடியுமோ அத்தனையும் செய்து கொண்டு, அவன் கூடவே அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து விடுவாள். இருவரும் ஒன்றாக இருப்பதைப் போல் இன்பமான வாழ்வு வேறு எதுவும் உண்டா? அவளுடைய பெண் உள்ளத்திலே வேறு எவ்விதமான கனவுதான் தோன்ற முடியும்? நெஞ்சில் நிறைந்த அன்பனை நீங்காமல் சேர்ந்திருப்பதுதானே எந்தப் பெண்ணும், எதிர்பார்க்கும் இன்பமாக இருக்கிறது! அவளுக்கு வீட்டுக்குப் போக வேண்டுமே என்ற எண்ணம் தோன்றவேயில்லை. அப்படியே உமாரின் அருகிலேயேயிருந்து, அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டு, அவன் அங்க அசைவுகளையும், முக பாவத்தில் ஏற்படுகின்ற மாறுதல்களையும் பார்த்துக் கொண்டேயிருந்து விடலாம் போலிருந்தது. அவனைப் பிரிந்து அவளால் வாழ முடியுமா என்ற ஐயமே யாஸ்மியின் உள்ளத்தில் உருவாகிவிட்டது அந்தப் பிஞ்சு உள்ளத்திலே அந்த உமார் இல்லாத உலகம் வெறும் வெட்ட வெளியாய் பாலைவனமாய் வேண்டாத வெயிலாய் ஒன்றும் இல்லாத தன்மையாய்த் தோன்றியது. உமாருடன் இருப்பதைத் தவிர வேறு எதிலும் வாழ்வோ, இன்பமோ இல்லையென்று தோன்றியது. அவனுக்குச் சற்று நெருங்கி உட்கார்ந்து கொண்டாள். தான் சூடுவதற்காக யாஸ்மி பறித்து வைத்திருந்த ஒரு ரோஜாப்பூவை எடுத்து நீட்டி, “இது உனக்குப் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டாள்.

உமார், அதை வாங்கி நுகர்ந்து பார்த்துவிட்டு, “இது உன்னுடையதல்லவா? நீயே வைத்துக் கொள்” என்றான்.

“இல்லை, அதை உனக்குக் கொடுக்க விரும்புகிறேன். நீ அதை வைத்துக் கொள்கிறாயா?” என்று யாஸ்மி கேட்டாள். ஒருமுறை அவளுடைய அக்காள் தன்வீட்டு மாடியிலிருந்து ரோஜாப் பூவைக் கீழே போட்டாள். அவளை காதலித்த பாக்தாது நகரத்து இளைஞன் ஒருவன் அதை வாங்கித்தன் நெஞ்சில் பொருத்திக் கொண்டாள். அதுபோல உமாரும் செய்வானென்று யாஸ்மி எதிர்பார்த்தாள். ஆனால் உமாரின் மனமோ, பிறைக் கணக்கு மாதத்தைப் பற்றியும், பற்பல விஷயங்களைப் பற்றியும் எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. கையிலிருந்த ரோஜாவை நோக்கிக் கொண்டிருந்த கண்களிலே அதன் உருவம் தெரியவில்லை, வேறு எவை எவையோ தோன்றி மறைந்து கொண்டிருந்தன. எங்கோ போய்க் கொண்டிருந்த உமாரின் உள்ளத்தை யாஸ்மி இந்த உலகத்திற்கு இழுத்து வந்தாள். அவன் அமைக்கப் போகும் ஆராய்ச்சிக்கூடம் ஏதோ பெரிய கோட்டைக் கோபுரத்தைப் போன்றது என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

“நீ ஆராய்ச்சிக்கூடம் அமைத்துவிட்டால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்” என்றாள் யாஸ்மி.

உமார் புன்சிரிப்புடன் “யாஸ்மி உனக்கு என்ன வயதாகிறது?” என்று கேட்டான்.

“கிட்டத்தட்டப் பதின்மூன்றாகிறது” என்று யாஸ்மி மெல்லியகுரலில் சொன்னாள். பதின்மூன்று வயதாகிவிட்டால் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளத் தகுதியுடையவளாகி விடுவாள் என்று தன் தாயும் மற்ற பெண் மணிகளும் பேசிக் கொண்டது அவள் நினைவுக்கு வந்தது.

உனக்குப் பதின்மூன்று வயது நிறையும் பொழுது உனக்கு நான் நிறைய ரோஜாப் பூக்கள் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு, உமார் எழுந்து நடந்து விட்டான். அப்படி நடந்து போகும்போது அந்தச் சிறுமியிடம் எப்படி நான் இந்த மாதிரிச் சொல்லி விட்டேன் என்று நினைத்துக் கொண்டான். வயது வந்த பெண்ணிடம் சொல்ல வேண்டிய சொற்களை அவளிடம் சொல்ல நேர்ந்துவிட்டதே என்று அபாசப்பட்டான்.

ஆனால், யாஸ்மி அசையாத சிலைபோல் அந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு இருந்தாள். அவள் கண்களிலே ஆர்வஒளி நடமாடியது. அவள் உடலெங்கும் ஏதோ ஒரு இன்ப உணர்வு பரவியது. தன்னை மறந்து இவ்வளவு நேரமும் அசைவற்றிருந்த அவள் காதுகளில் கழுதைகளின் மணியோசை விழுந்தது. தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் உருவங்கள் தெரியத் தொடங்கின. இருந்தும், அவளுடைய இன்ப எண்ணங்கள் மாறுதலடையாமலே இருந்தன. “நீருற்றின் அருகிலேயே நேரத்தைக் கழிக்கிறாயே?” என்று சில பெண்கள் வந்து சுட்டிப் பேசியதும்தான் அவளுக்கு வீட்டு நினைப்பு வந்தது.

சிறிது நேரம் சென்றதும், யாஸ்மி ஏற்கெனவே ரோஜாப்பூப் பறித்த இடத்திற்குச் சென்று, மற்றொரு பூவைப் பறித்துக் கொண்டு தன்னுடைய பூனைக்குட்டியையும் அழைத்துக் கொண்டு தன்னுடைய படுக்கைக்குச் சென்றாள். “நீரூற்றுக்குப் பக்கத்திலே நேற்று முழுவதும் மீசை முளைக்காத ஒரு பையனோடு திரிந்து கொண்டிருந்தாள் உன்னுடைய யாஸ்மி! இனி அவளைவிட்டு வைக்கக்கூடாது. முக்காடு போட்டு முலையில் கிடத்த வேண்டியதுதான்!” என்று தன் வீட்டுப் பெண்மணிகளில் ஒருத்தி தன் தாயிடம் சொல்வதைக் கவனித்தாள் யாஸ்மி.

“இனிமேல், அவளைக் கடைக்கும் அனுப்பக் கூடாது!” என்று தாயார் சொன்னாள்.

யாஸ்மி ஒன்றும் பேசவில்லை. இது எதிர்பார்த்ததுதான் திருமணம் செய்யத் தகுந்தவள் என்பதற்கு அடையாளமாக முக்காடு தரப்போகிறார்கள் என்பது அவளுக்குப் பெருமையாக இருந்தது. இனிமேல் யாரும் தன்னை அலட்சியப் படுத்த மாட்டார்கள் அல்லவா?

ஆனால், அவள் உமாரைப் பார்க்க முடியாதே! ஏன் பார்க்க முடியாது? எப்படியாவது பார்க்கத்தான் வேண்டும். நான்கு சுவர்களும் பலகணித் திரைகளுமா அன்பைத் தடுத்து நிறுத்திவிடும்? எப்படியும் உமாரைப் பார்ப்பேன், என்று யாஸ்மி உறுதி கொண்டாள்.

ஆனால், உமார் ஊரைவிட்டே போய்விட்டான்!
-----------

4. அறியாமல் சொன்ன ஆபத்தான சோதிடம்!

நிஜாப்பூருக்கு மேற்கே, கொராசான் பாதையில் ஓர் ஒட்டகச்சாரி போய்க் கொண்டிருந்தது. குதிரைப் படையொன்று அதைத் தொடர்ந்தது, நெடுந்துரப் பயணத்திற்குப் பிறகு, அவ்வழியில் மலைப்பாங்கான இடத்தில் உள்ள சத்திரம் ஒன்றில் அதன் பிரயாணிகள் தங்கினார்கள். முதல்நாள் இரவு, அங்கே யாரும் தூங்கவும் முடியவில்லை.

திறந்த வெளியில், முட்செடிகளின் சுப்பிகள் எரிந்து கொண்டிருந்தன. ஒட்டகங்கள் ஒருபுறம் அசைபோட்டுக் கொண்டிருந்தன. குதிரைகள் ஒருபுறம் புல்மேய்ந்து கொண்டிருந்தன. படையாட்கள் சோற்றுப் பானைகளைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு, கடைசிப் பருக்கையைக் கூட விடாமல் வழித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்களைச் சுற்றி ஒரே பிச்சைக்காரக் கும்பல். அத்தனை பேருக்கும் இல்லையென்று சொல்லாமல், செப்புக் காசுகளையும், காய்ந்த பழங்களையும் பிச்சையோடுகளிலே போட்டுக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அவர்கள் போகும் பயணம் சாதாரணமானதல்ல. ஆபத்து நிறைந்த இடம் நோக்கிப் போகிறார்கள். உயிரைப் பணயம் வைத்து, வெற்றி தோல்வி பார்க்க வேண்டிய போர்க் களம் நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் அவர்கள், தங்கள் விதி நல்லமுடிவாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்திலே தருமம் கொடுக்கச் சளைக்காதவர்களாக இருந்தார்கள். போர் அணியிலே கலந்து கொள்வதற்காகப் புறப்பட்டு வரும் வீரர்கள், கூட்டம் கூட்டமாகத் தினந்தோறும் வந்து கொண்டிருப்பதால், சத்திரக்காரனுக்கு நல்ல வரும்படி! பணத்தை மறைமுகமாக எண்ணி எண் பெட்டிக்குள்ளே போட்டுக் கொண்டிருந்தான் அவன். வீரர்கள் அடிக்கடி, தண்ணிர் கேட்டார்கள். இருந்த தண்ணீர் எல்லாம் தீர்ந்து போய்விட்டது, நான் என்ன மூசாநபியா நினைத்ததும், தண்ணிரைக் கொண்டுவர? என்று சத்திரக்காரன் கத்திக் கொண்டிருந்தான். தோலாடைகளை விரித்துப் படுக்கைகளைத் தயார் பண்ணிக் கொண்டிருந்தனர் சிலர். கணப்புகளை எரித்து மலைக்காற்றின் குளிர்ச்சியைத் தடுப்பதற்காக அதைச் சுற்றி இருந்தார்கள் பலர். கொரசானியர்களும் அரேபியர்களும் பாரசீகர்களும் கணப்புகளைச் சுற்றி இருக்கும்போது அந்த நெருப்பின் ஒளியிலே தாடி நிறைந்த முகங்கள் மின்னி ஒளிவிட்டுக் கொண்டிருந்தன. துருக்கியர்கள்தான் அந்தக் குளிர்க்காற்றைத் தாங்கும் வலுவுடையவர்களாக இருந்தார்கள். போரும் அலைச்சலும் அவர்களுக்குப் புதிதல்ல.

இப்படிப்பட்ட போர்மறவர் கூட்டத்திலே, நிஜாப்பூர் நிலச் சுவான்தார் புதல்வன் ரஹீம் சேடாவும் இருந்தான். அவன் தனக்கெனத் தனியே ஒரு கணப்புடன் தோல் அடைப்புடன் கூடிய கதகதப்பான அறையொன்றில் இருந்தான்.

நிஜாப்பூரில் ஒருநாள் இரவு, அவன் தன் அறைக் கதவைத் தாளிட்டுக் கொண்டு, திராட்சை மது, குடித்துக் கொண்டிருந்தான். அப்பொழுதுதான் அந்த ஆர்வமான போரழைப்பு கூக்குரல் கேட்டது. அந்தக்குரல் போரழைப்பாக மட்டுமில்லை; எச்சரிப்பாகவும் இருந்தது. ரஹீம் சாதாரணமாக கேளிக்கைகளில் விருப்பங் கொண்டவன். மற்ற விஷயங்களில் அவன் விருப்புக் காட்டுவதே கிடையாது. ஆனால் இந்தப் போரழைப்பில் கலந்திருந்த ஏதோ ஒரு சக்தி அவனையும் இந்தப் போரில் கலந்து கொள்ளும்படி தூண்டியது. தூரமேற்குப் பிரதேசத்திலே, சுல்தான் ஆல்ப் அர்சலான் நடத்தப்போகும், அந்தப் போரிலே, மதவிரோதிகளை எதிர்த்து முறியடிப்பதற்காக அவன் கிளம்பி வந்திருந்தான். அவனுடன் அவனுடைய உயிர்த் தோழன், உமார் கூட வந்திருந்தான். ரஹீம், இரானிய பரம்பரையிலே வந்த பாரசீகப் பெருங்குடியைச் சேர்ந்தவன். அவன் குடிமரபு கிரேக்கர்கள் மரபினும் பழமையானது.

அவனிடம் குற்றமற்ற தன்மைகளும், நற்குணங்களும் நிறைந்திருந்தன. இருந்தாலும் இனிப்புக் கலந்த மதுவிலே விருப்பமுடையவன். சிறுவயதில் போலோ முதலிய விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தாலும், பின்னால் அவன் விளையாட்டுக்களை அதிகமாக விரும்பவில்லை. அவனுக்குப் போர் கூட ஏதோ மான்களை வேட்டையாடுவது போலத் தான் தோன்றியது, கூட இருந்த ஒருவன், குளிர்தாங்க முடியவில்லையே என்று கூறினான். ரஹீமுக்கும் குளிராகத்தான் இருந்தது. கொட்டாவி வந்தது. ஆனால், அவனால் அமைதியாகத் தூங்கமுடியவில்லை. தோல்படுக்கைகளின் ஊடே, மூட்டைபூச்சிகள் வேறு புகுந்து கொண்டு அவனுக்குத் தொல்லை கொடுத்தன. சத்திரக்காரன் அவன் எதிரே வந்து நின்று கொண்டு போகாமல் அங்கேயே நின்றான்.

பேச்சுக் கொடுத்த பிறகுதான் அவன் அங்கேயே நின்று கொண்டிருப்பதன் காரணம் புரிந்தது. சத்திரத்துக்குப் பின்னாலேயுள்ள வீட்டில் சில பெண் பிரயாணிகள் வந்து தங்கியிருக்கிறார்களாம். அவர்களில் சில பெண்கள் பாக்தாதிலிருந்து வந்தவர்களாம், அழகிகளாம். இரவுப் பொழுதைச் சுவையாக்கும் பயிற்சி பெற்றவர்களாம். ரஹீம் இரவை இன்பமாகக் கழிக்க விரும்பினால் ஏற்பாடு செய்ய அவன் ஆயத்தமாக இருக்கிறானாம். இதுதான் விடுதிக்காரன் கூறிய செய்தி. ரஹீம் இந்த மாதிரி விஷயங்களில் பின்வாங்குவது கிடையாது. உடனே எழுந்து அங்குள்ள வேலைக்காரர்களை நோக்கி, உமார் வந்தால் தான் சில நண்பர்களைக் கண்டு பேசச் சென்றிருப்பதாகச் சொல்லும்படி கூறிவிட்டுக் சத்திரக்காரனைத் தொடர்ந்து சென்றான். கூட இருந்த சிப்பாய்கள் ரஹீமைப் பொறாமைக் கண்களோடு பார்த்தார்கள். சாதாரண மனிதர்களாகிய அவர்கள் இந்த மாதிரியான இன்பத்தை இந்தச் சமயத்தில் அனுபவிப்பதென்பது இயலாது. ரஹீம் போன்ற செல்வந்தர்கள் தான் நினைத்ததைச் செய்யமுடியும். அல்லா அருள் புரிந்தால், சண்டையிலே வெற்றி பெற்றுத் திரும்பும்போது, மதவிரோதிகளின் பெண்களை அடிமைகளாகப் பிடித்துவரும் நேரத்திலே ஒவ்வொரு சாதாரணச் சிப்பாயும் கூட ஆளுக்கு ஒன்றிரண்டு பெண்களோடு மகிழலாம். ரஹீம் போன திசையைப் பார்த்து ஏங்கிவிட்டுக் கணப்பிலே கதகதப்பேற்றிக் கொண்டு சிப்பாய்கள் தூங்கத் தொடங்கினார்கள்.

ரஹீம், அலுத்துச்சலித்துப் போய் நெடுநேரத்திற்குப் பிறகு திரும்பி வந்தான். என்னவோ அவனுக்கு நாடிப்போன இடத்தில் இன்பம் இல்லை போலிருக்கிறது. சத்திரக்காரனைத் திட்டிக் கொண்டே வந்தான், படுக்கையில் இருந்த உமார் எழுந்து நின்று கணப்புத் தீயை அதிகமாக விசிறிவிட்டுத் தன் உயிர்த்தோழனுக்கு இடம் ஒதுக்கிக் கொடுத்தான். எங்கே போயிருந்தாய் என்று கேட்ட உமாருக்குப் பதில் சொல்லாமல் சத்திரக்காரனைக் கண்டபடி திட்டிக் கொண்டே அருகில் உட்கார்ந்த ரஹீம், “நீ எங்கே போயிருந்தாய்?” என்று உமாரைத் திருப்பிக் கேட்டான்.

உமார், சண்டைக் களத்திற்கே புதியவன். ஆனால் பாலைவனப் பிரதேசங்களிலே அலைந்து திரிந்து அனுபவப்பட்டவன். அதிலும் அந்தக் கொரசான் வீதி நெடுகிலும் அந்தச் சமயம் கலகலப்பாக இருந்தது. ஆங்காங்கே நடந்துவரும் படைகளும் வழிச் சத்திரங்களில் தங்கியிருக்கும் வீரர்களும், போரிலே பங்கு கொள்ளத் தேசத்தின் பல பகுதிகளிலிருந்து வந்து கூடாரமடித்துக் கொண்டிருக்கும் இளவரசர்களும் இப்படியாக அந்தப் பாதை நெடுகிலும், மக்கள் நடமாட்டம் அதிகரித்திருந்தது. உமாருக்கு எல்லா விஷயங்களிலும் ஆர்வமாயிருந்தது. பலப்பல பகுதிப் படைகள் தங்கியிருக்கும் இடங்களுக்கும் சென்று ஒவ்வொருவரையும் விசாரிப்பதும், பேசிக் கொண்டிருப்பதும், அவர்கள் கொண்டு வந்திருக்கும் சாமான்களைப் பார்வையிடுவதுமாக அவன் திரிந்தான். ஓர் ஆற்றைக் கடந்து செல்லும் போது உமார் கண்ட அதிசயங்கள் அபூர்வமானவை. இப்படியே அவன் அந்தச் சாலைவழிக்குப் போகும்போது தூரத்திலே ஓர் அமீரி (இளவரசனின்) கூடாரத்திற்குச் செல்லும்படி நேர்ந்தது. அந்தப் பெரிய கூடாரத்திற்குள் சென்று அந்த இளவரசனைக் கண்டு பேசும் வாய்ப்பு உமாருக்குக் கிடைத்தது. அந்த இளவரசனைச் சுற்றியிருந்த துருக்கி வீரர்கள், தங்கத் தலைக்கவசம் அணிந்திருந்தார்கள். கூடாரத்தின் நடுவிலே நெருப்புக் கணப்பின் அருகிலே ஒரு சிவந்த விரிப்பின் மீது அந்த இளவரசன் அமர்ந்திருந்தான். அவனோடு அவனுடைய ஆசிரியர்களான சட்டநுணுக்கக்கலை அறிஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவன் ரஹீமைக் காட்டிலும் இரண்டு வயது இளையவன். அவனிடம் அந்த அறிஞர்கள் அவன் கண்ணில்பட்ட அந்த நட்சத்திரம் வடமீன் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் உமார் அது வடமீன் அல்லவென்றும் அந்த இடத்திலிருந்து பார்த்தால் வடமீன் தெரிவதற்கு மார்க்கமில்லையென்றும் தெரிந்து கொண்டிருந்தான். அந்த அறிஞர்கள் பெயர் அளவில் அறிஞர்களே தவிர எந்தவிதமான அறிவும் இல்லாத முட்டாள்கள். உமார் அந்த இளவரசனிடம் போய் அந்த வடமீன் நட்சத்திரத்தை இங்கிருந்து பார்க்க முடியாது என்று கூறினான். தன் ஆசிரியர்களின் பேச்சை மறுத்துச் சொல்லும் ஒருவனை செருப்பால் அடித்து விரட்டுவதை விட்டு விட்டு இளவரசன் “நட்சத்திரங்கள் மூலம், ஏதாவது, போரைப்பற்றிய செய்திகள் அறிந்து சொல்ல முடியுமா” என்று கேட்டான். வருங்காலத்தைப்பற்றிக் குறி சொல்ல முடிந்தால் ஞானிகளைக் காட்டிலும் உயர்ந்த நிலையில் இருந்திருக்கலாம். உமாருக்கு இதில் நம்பிக்கையில்லை, இருந்தாலும் இளவரசன் கேட்பதற்காகச் சொன்னான். தான் சொல்கிறபடி நடக்கும் என்பதில் அவனுக்கு நம்பிக்கையே கிடையாது. ஏதோ கேட்கிறான் சொல்லுவோம் என்ற முறையிலே சொல்லி வைத்தான்.

இரண்டு அரசர்கள் போரிடப் போவதாகவும், அந்தப் போரிலே, கீழைநாட்டைச் சேர்ந்த அரசன் மேலோங்கி வெற்றி பெறக் கூடுமென்றும், மேலைநாட்டுப் பேரரசன் தோற்றுவீழப் போவதாகவும் சொன்னான், முடிவில் அந்த இரண்டு அரசர்களுமே சாவுக்குப் பலியாவார்களென்றும் கூறினான். ஆனால் இதைக் கேட்ட அந்த இளவரசன் பேயையோ பூதத்தையோ கண்டு மிரண்டவன் போல விழித்தான். இந்த விபரங்களையெல்லாம் உமார் தன் உயிர்த் தோழனான ரஹீமிடம் கூறியபோது, அவன் அந்த இளவரசன் யார் என்று கேட்டான். உமார் “அதைத்தானே நான் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. அவனை எல்லோரும் இளஞ்சிங்கம், இளஞ்சிங்கம் என்று குறிப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள்” என்றான்.

“உமார் இளஞ்சிங்கம் யார் என்று நீ கேள்விப்பட்டதே இல்லையா? அதுதான் நம் பேரரசர் சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்களின் முத்தமகன். சுல்தானை வீரசிங்கம் என்றும் மகனை இளஞ்சிங்கம் என்றும் மக்கள் குறிப்பிட்டுப் பேசுவதுண்டு. நீ சோதிடம் சொல்லிவிட்டு வந்தாயே அதை கேட்டவன் நம் இளவரசன். அவனுடைய தந்தையின் மரணத்தைப்பற்றி அவனிடமே சொல்ல எவனுமே துணியமாட்டான். நீ துணிந்து சொல்லிருக்கிறாய் உன்னை அவன் சும்மாவிட்டதே பெரிது இருந்தாலும் அவன் ஆட்சிக்கு வருவதுபற்றி நீ குறிப்பிட்டிருக்கிறபடியால் அவன் மனதுக்குள் மகிழ்ந்திருக்கவும்கூடும். அவன் உன்னைப்பற்றி எதுவும் கேட்கவில்லையா” என்று ரஹீம் கேட்டான்.

“என் பெயரைக் கேட்டான், சொன்னேன். எங்கே வேலை செய்கிறாய் என்று கேட்டான். நிசாப்பூர் பள்ளிக்கூடத்திலே படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன்” என்றான் உமார்.

“உமார், நீ சொன்ன சோதிடம் பலித்து வெற்றியும் கிடைத்துத் தந்தையும் இறந்து தான் அரசனாக வந்தால் அப்போது, நீ அந்த இளஞ்சிங்கத்திடம் சென்று கேட்டால், நிச்சயமாக உன்னை அரசாங்கச் சோதிடனாகப் பதவி கொடுத்துப் பெருமைப் படுத்துவான். அப்படி நடந்தால், உனக்கு சமுக்காளம் விரிக்கும் வேலைக்காரனாகவாவது என்னை ஏற்றுக் கொண்டு நல்லசம்பளம் கொடுப்பாயா?” என்று கேட்டான் ரஹீம். உமார் திரு திருவென்று விழித்துக் கொண்டு பேசாமல் இருந்தான். “உமார், நிச்சயமாக நீ ஒரு ஜோதிடனாக விளங்குவாய் ! உன்னைக் கண்ட எல்லோரும் அதை நம்புவார்கள்!” என உறுதி கூறினான்.

பிறகு அவன் அங்கு துங்கிக் கொண்டிருந்த ஒரு வேலைக்காரனை எழுப்பி தோல் பெட்டியில் இருக்கும் ஜாடியையும், கண்ணாடிக் குவளையையும் எடுத்து வரும்படி கட்டளையிட்டான். அது மது. திருமறையால் தடைசெய்யப்பட்ட பொருள். ஆனால் அந்தப் புனிதமான மகத்தான போரிலே அடையப்போகும் வெற்றிக்கு முன்னாலே, மது குடிக்கும் இந்தச் சிறிய பாவம், கடலில் கரைத்த பெருங்காயம் போல் மறைந்துவிடும் என்று சொல்லிக் கொண்டே அதைக் குடித்தான். உமாரும் உயிர்த் தோழனின் பாதையைப் பின்பற்றி அவனும் குடித்தான்.

“இருந்தாலும் நான் தோற்றுப்போக நேரிட்டாலும் நேரிடலாம்” என்று உமார் சொன்னதற்கு, “இல்லை, நாம் தோற்கவே மாட்டோம். நம் துருக்கிய சுல்தான் சாதாரண வீரராக இருக்கலாம். ஆனால், அவர் எந்தச் சண்டையிலும் தோற்பதேயில்லை. இது சரியான குறிச்சொல்லாகும், நாம் நிச்சயம் வெற்றியடைவோம்!” என்று கூவினான் ரஹீம்.

இனிக்கும் அந்த மது அவனுக்குப் புத்துணர்ச்சி அளித்தது. மறுபடியும் ஒரு குவளை ஊற்றிக் குடித்தான்.

சுல்தானுடைய செங்கொடியின் கீழே தன் அருமையான கருப்புக் குதிரையின் மேலே வீசிய வாளுடன் தான் பறந்து செல்வது போலவும், படைவீரர்களின் அணிவரிசைகளின் ஊடே, தன் குதிரை செல்வது போலவும். எதிரிகளான கிறிஸ்தவர்களின் சேனைகளை நோக்கிச் சென்று, அவர்களில் ஒரு தலைவனை நேருக்கு நேரே சந்தித்து வாளைச் சுழற்றிப் போருக்கு இழுத்து, அந்த மாற்று மதக்காரனுடைய தலையைத் தன்னுடைய வாளால் துண்டித்து விடுவது போலவும், இஸ்லாமியப் படைகள் உடனே ஜெயபேரிகை முழக்கித் தன்னைப் புகழ்ந்து கூவித் துள்ளிக் குதிப்பது போலவும், தான் வெட்டி வீழ்த்திய அந்த வீரனின் தலை துடித்துப் பறந்து சென்று தன் சுல்தானுடைய குதிரையின் காலடியிலே போய் விழுந்து மிதிபடுவது போலவும் ஒரு கற்பனை அவன் உள்ளத்திலே உருவாகியது.

அந்தக் கற்பனை வெறியிலே தன்னை மறந்து ரஹீம் தன் வெற்றியை உயிர்த்தோழன் உமாரும் காணவேண்டும் என்று அவனைக் கூவியழைத்தான்.

ஆனால், அந்த உயிர்த்தோழன் உமாரோ, போரையும் பூசலையும் வெற்றியையும் விழாவையும் சற்றும் எண்ணாமல் ஒட்டகத்தோல் ஆடைகளின் ஊடே ஆழ்ந்து அயர்ந்து அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தான்!

--------------

5. ஆருயிர்த் தோழனின் ஆவி பிரிந்தது!

கிழக்கையும், மேற்கையும் ஒருங்கே ஆண்ட பேரரசர், உலகத்தின் இறைவர் சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்கள் தம்முடைய படை பயணிகளுடன் போர்க்களத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அவர்களுடைய ஒட்டகங்களும், குதிரைகளும், கழுதைகளும் அர்மீனியன் மலைப்பள்ளத்தாக்கில் உள்ள அர்சானா ஆற்றங்கரைச் சமவெளியை நோக்கி நடந்து கொண்டிருந்தன. அரசருடைய விகடனான ஜபாரக்கும் அந்தக் கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று கொண்டிருந்தான். குள்ளமான அவனுடைய கால்கள் இரண்டையும் இரு பக்கங்களிலும் தொங்கவிட்டுக் கொண்டு, கழுதையின் மீது உட்கார்ந்திருந்தான். குறித்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்ததும் அவனைச் சாமான்களும் மிருகங்களும் இருக்கும் இடத்திலேயே இருக்கச் சொன்னார்கள். இஸ்லாமிய மதத்தலைவர்களான முல்லாக்களும் கூட அங்கேயிருந்தார்கள். ஏனென்றால் அதுதான் போர்க்களத்தின் ஆபத்தில்லாத பகுதியாகும். ஆனால் கோமாளி ஜபாரக் சுல்தானுடைய முதுகுப்புறம்தான் ஆபத்தில்லாத இடம் என்று கூறினான். இஸ்லாமியர்கள் அவர் முதுகை நோக்கி அம்பு எய்ய மாட்டார்கள் என்றும் கிறிஸ்தவர்களுக்கு அவர் முதுகு தெரியவே தெரியாதென்றும், ஆகவே முதுகுப் புறத்தில் இருப்பவனை எந்தவிதமான அம்பும் தாக்க இடமில்லை என்றும் அவன் விளக்கம் கூறினான். சுல்தான் அவர்களுக்கு ஜபாரக்கின் இந்த அபூர்வ யோசனையைக் கேட்டதும், சிரிப்பு வந்தது. போர் பற்றிய சிந்தனை ஏற்பட்டதிலிருந்து இன்றுவரை ஒருமுறை கூடச் சிரித்தறியாத சுல்தான் அன்று சிரித்துவிட்டார். அவருடைய ஆணைப்படி, ஜபாரக் அவர் அருகிலேயே இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அடிமைகள் படைக்கலங்கள் அணிந்து, செங்கொடியும் ராஜகுடையும் பிடித்துவர சுல்தான் அவர்களின் அருகிலேயே ஜபாரக்கும் இருந்து வந்தான்.

பள்ளத்தாக்குப் பிரதேசத்தின் தொடக்கத்திலேயே மாலஸ்கர்டு பட்டணத்தின் கோட்டைச் சுவர் அருகே தம்முடைய கொடியை நாட்டச் சொன்னார். அவருக்கு எதிரிலே நீண்டு விளங்கிய வளமான அந்தப் பள்ளத்தாக்கின் மேற்பகுதியிலிருந்து கிறிஸ்துவர்களின் படை முன்னேறி வந்து கொண்டிருந்தது. அந்த ரோமன் படைகளைத் தலைமையரசரான கான்ஸ்டான்டிநோபிள் பேரரசரே நடத்திக்கொண்டு வந்தான். கான்ஸ்டான்டிநோபிள் பேரரசரின் முன்னோர்கள், பரம்பரையாகவே கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளாகவே இஸ்லாமிய மதத்தின் நேர் எதிரிகளாக விளங்கி வந்திருக்கிறார்கள்.

சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்கள், அந்தப் பேரரசரின் ஆளுகைக்குட்பட்ட தேசங்களிலே அடிக்கடி தன் படைகளை அனுப்பிப் பலபகுதிகளைத் தாக்கிக் கொண்டு வந்தார். இது தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஒருமுறை ஆசியா தேசத்தின் ரோமாபுரி என்று பெயர் பெற்று விளங்கிய ஆசியா மைனர் வரையிலும் சென்றுகூட அவருடைய குதிரைப்படை தாக்கிவிட்டு வந்திருக்கிறது. சுல்தானின் படையினர் ரோமர்களைத் தாக்கிக் காயப்படுத்திப் பெருங்கோபம் கொள்ளும்படி செய்துவிட்டு வந்தது, கான்ஸ்டாண்டி நோபிள் பேரரசரின் பெருஞ்சினத்தைக் கிளப்பிவிட்டது. தன்னை எதிர்த்துப் படைதிரட்டி வந்து, தம்முடைய எல்லைக்குள்ளேயே நடந்து வந்துவிட்ட இஸ்லாமியப் படைகளை எதிர்த்து முறியடிப்பதற்காக அந்தப் பேரரசர் தம் வசமுள்ள எல்லாவிதமான ஆயுதங்களையும் ஒன்று திரட்டினார். விற்பயிற்சியில் தேர்ந்த பல்கேரியப் படைகளும், வாட்போரில் இணையில்லாத ஜார்ஜிய சேனைகளும், இஸ்லாமியரின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக இணைந்து வந்த ஆர்மீனியப் படைகளும்; தன்னுடைய திறமை பெற்ற குதிரைப் படைகளும், எண்ணிக்கை மிகுந்த காலாட்படைகளும் ஒருங்குசேர ஒரு பெருஞ்சேனையையே நடத்திக்கொண்டு ரோமர்களின் பேரரசர் கான்ஸ்டாண்டி நோபிளின் கிறிஸ்தவ மன்னர், துருக்கிப் படைகளை விரட்டியடித்துக் கொண்டு முன்னேறி வந்தார். துருக்கிப் படைகளின் எண்ணிக்கை பதினையாயிரம். எதிர்த்து வந்த ரோமர் படைகளின் எண்ணிக்கையோ எழுபதினாயிரம். கிறிஸ்தவர்களின் பேரரசர் பேராண்மைமிக்க ஒரு வீரர். துருக்கியரின் குதிரைப் படையினர் எத்தனையோ நாட்களாகத் தனக்குக் கொடுத்து வந்த தொல்லைகளைக் கண்டு பொறுமை மீறப் போருக்குக் கிளம்பி வந்திருக்கிறார். அவருடைய ஆவேசமும் அதிகம்! படைகளும் அதைவிட அதிகம்! சுல்தான் ஆல்ப் அர்சலான், தம் படைத் தலைவர்களே வியப்படையும்படி, தரையில் தமது கொடியை ஊன்றி நட்டு, தம் படைகளை அந்தப் பள்ளத்தாக்கின் குறுக்கே அணிவகுத்து நிறுத்தினார். சீறிவரும் கிறிஸ்தவப் படைகளை எதிர்ப்பதற்காக அந்தப்படை காத்திருந்தது.

ஜபாரக்கிற்கு இது எதோ முட்டாள்தனமான காரியமாகத் தோன்றியது, பதினையாயிரம் பேர் எழுபதினாயிரம் பேரை, எதிர்த்து வெற்றி பெறுவதென்பது எளிதான செயலல்ல, விகடனைத்தவிர வேறு யாரும் கவனிக்காதபோது சில அமீர்கள் பேசிக் கொண்டார்கள். ரோமர்கள் பெரிய வேற்படையினரின் தாக்குதலை, நன்கு தேர்ச்சி பெற்ற துருக்கிக் குதிரைப்படைகூடத் தாக்குப் பிடிக்க முடியாதென்று அவர்கள் கருதினார்கள். போரில் வெற்றி கிடைக்குமென்பதில் அவர்களுக்கே நம்பிக்கையில்லை, கிறிஸ்துவப் படைகள் சேறு நிறைந்த வயல்களின் வழியாகச் சிறிது சிறிதாக முன்னேறி வந்து கொண்டிருந்தன. அஞ்சா நெஞ்சம், உறுதியும் ஆண்மையும் படைத்த சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்கள் தம் குதிரைப்படையை அங்கே நிறுத்தி, அவர்கள் நெருங்கி வருவதற்காகக் காத்திருந்தார். எதிரிகளைத் தாக்கித் துரத்துவதற்கும், அதே சமயம் வேகமாய் பின்வாங்குவதற்கும் நன்கு பயிற்சி பெற்றவர்கள். தாங்கள் அடியுண்டு வீழ்ந்து மரணமடைய நேரிடுமோ என்று பல தலைவர்கள் பயந்து கொண்டிருப்பது ஜபாரக்கிற்குத் தெரியும்.

நாம் பின்வாங்க வேண்டியதேயில்லை. ரோமர்களின் முகாம், பள்ளத்தாக்கின் கோடியில் வெகு தூரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. அவர்களோ, நம்மோடு பொருதுவதற்கு வெகு வேகமாக வந்து கொண்டிருக்கிறார்கள், நாம் அவர்களை எதிர்த்துத் தாக்குவதற்காகவே இங்கே காத்திருக்கிறோம். இது தான் முடிவானபேச்சு, இப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது, எழுதப்பட்ட படிக்குத்தான் நடக்கப் போகிறது.

சுல்தானின் இந்தப் பேச்சு அவருடைய முத்தமகனின் முகத்தில் பயத்தையுண்டாக்கியதை ஜபாரக் கவனித்தான். சோதிடர்கள் குறிசொன்னபடியும், முல்லாக்கள் அறிவித்தபடியும் நாளைய சண்டையின் முடிவு ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டபடியே நடக்கும் போலும், கிறிஸ்தவப் பேரரசனின் அவசரத் தன்மையும், சேறு குழம்பிய வயல் வெளியும், எந்தப் போரிலும் தோல்வியே கண்டறியாத துருக்கிப்படைகள் ஆடாதசையாமல் நிற்கும் வன்மையையும் பார்க்கும் பொழுது, விகடன் ஜபாரத்திற்கு இது ஏற்கெனவே விதியால் எழுதப்பட்டபடிதான் நடந்தாலும் நடக்கும் போலவும், வெற்றி தோல்வி முன்னாலேயே நிச்சயிக்கப்பட்டது போலவும், விதியின் சொக்கட்டான் விளையாட்டில், நாளைக்கு இந்தப் படைகளெல்லாம் அங்கும் இங்கும் காய்கள் உருட்டப்படுவது போல் நகர்த்தப்படப் போவது போலவும் தோன்றியது.

சுல்தான் ஆல்ப் அர்சலான் அன்று இரவு முழுவதும் தூங்கவேயில்லை.

குளிர் நடுக்கத்தைத் தாங்க முடியாமலும், உள்ளத்திலே ஓடிக் கொண்டிருந்த உணர்ச்சியின் காரணமாகவும், விடிவெள்ளி தோன்றுவதற்கு முன்னாலேயே ரஹீம் எழுந்து விட்டான். யார்மார்க் என்ற வேலைக்காரனிடம் வாளைக் கொடுத்து அதைத் தீட்டிக் கூராக்கி வைக்கும்படி அடிக்கடி ஆணையிட்டான், மற்ற வேலைக்காரர்களை விட்டு அவனுடைய கருப்புக் குதிரையைத் தேய்த்துவிடச் சொன்னான். அவசர அவசரமாக ஊற வைத்த பார்லியையும் பேரீச்சம் பழத்தையும் கொஞ்சம் விழுங்கினான். போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆனால், மான் வேட்டையாடுவது போல் அது தோன்றவில்லை. அல்லது அவன் எதிர்பார்த்தபடியும் இல்லை. காலை விடிந்தவுடன் போரழைப்பு வருமென்றும், வந்தவுடன் முழக்கமிட்டுக் கொண்டு கிளம்ப வேண்டுமென்றும் காத்திருந்த ரஹீம், அமைதியில்லாமல் அவனுடைய குதிரையைச்சுற்றி வந்தான். திரைக்கு அப்பால் அவனுடைய ஆட்கள் சொக்கட்டான் உருட்டிக் கொண்டிருந்தார்கள். அவன் குதிரை மேல் ஏறிய சமயம் அவனைக் கடந்து நடந்து செல்லும் ஈட்டிபிடித்த வீரர்களின் எண்ணற்ற தலைகளைக் கண்டான். சில சமயங்களில், தூரத்தில் உள்ள காட்டின் ஊடே காற்று துளைத்துக் கொண்டு அடிப்பது போன்ற ஓசை கேட்டது. நிஜாப்பூர் பகுதியில் மக்கள் கூடும்போது ஏற்படும் இரைச்சல் போலப் பள்ளத்தாக்கிற்கு அப்பால் இருந்து பெருங்கூச்சலும் சப்தமும் அடிக்கடி எழுந்ததையுணர்ந்தான். முன்பின் அறியாத ஒரு மனிதன் குதிரை மீது விரைந்து கொண்டிருந்தபோது, அவனை நிறுத்திப்போரின் விவரத்தைப்பற்றி ரஹீம் விசாரித்தான். அந்த மனிதன் ஒரு துருக்கியன். வெறுமனே ரஹீமை உற்றுப்பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் போய்விட்டான். பொறுமையில்லாத ரஹீம் அவனுடைய சேனைக் தளபதியான ஓர் அமீரிடம் சென்றான். அவனுடைய கொடியைச்சுற்றி, நிஜாப்பூர் வீரர்கள் கூடியிருந்தார்கள்.

“நாங்கள் களத்திற்குச் செல்ல ஆணையிடுங்கள், போர் துவங்கப்படுவதைப் பார்க்க வேண்டும் முதற்போரிலேயே நாம் கலந்து கொள்ள வேண்டும்” என்று ரஹீம் ஆவலோடு கூறினான்.

பள்ளத்தாக்கில் போர் தொடங்கி வெகுநேரம் ஆகிவிட்டதென்பதை அறிந்து அவன் வியப்படைந்தான். இன்னும், அங்கிருந்தவர்கள் கூறிய பல்மாதிரியான புதுமையான செய்திகளையும் அவன் கேட்டுக் கொண்டிருந்தான். கிறிஸ்தவர்கள் இரும்புக்கூண்டுகளில் அடைத்து வைத்திருக்கும் பூதங்களை முஸ்லிம்களின் மேல் ஏவிவிடுகிறார்களாம். முஸ்லிம் பட்டாளத்தின் சேனையின் ஒருபகுதி முழுவதும் அப்படியே ஆற்றுக்குள் முழுகிப் போய்விட்டதாம், ஜார்ஜியர்களும் அர்மீனியர்களும் வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்களாம். பள்ளத்தாக்கு முழுவதும் வெகு தூரத்திற்கு வெறும் கிறிஸ்தவப் படைகளாகவே காட்சியளிக்கிறதாம். சுல்தானும் வலப்புறத்தில் உள்ள மலைகளின் ஊடே ஓடி ஒளிந்து விட்டாராம். இவ்வாறு ஒருவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது, மற்றொருவன் “பொய்! பொய் ! அதோ பாருங்கள் நம் பேரரசர் சுல்தான் அதோயிருக்கிறார்!” என்று கூவினான். ரஹீம் குதிரைச் சேணத்தின் மிதியில் எழுந்து நின்றபடி உற்று நோக்கினான். அவனுக்குச் சமீபத்தில் இருந்த மணல் மேடொன்றின் மீது குதிரைப் படைவீரர்களின் கூட்டமொன்று, பாய்ந்து செல்வதைக் கண்டான். அந்தப் படையின் தலைவன் ஒரு வெள்ளைக் குதிரையின் மீது ஒரு வெள்ளிய தந்தக்கோலும் கடிவாளமும் பிடித்த கையுடன், முதுகுப் புறத்தில், அம்புறாத்துணியும் கொண்டிருந்தான். அவனுடைய, நெஞ்சு அகன்று தோள்பட்டைகள், புடைத்துச் சுருண்டு கட்டியாகி வீங்கியிருந்தன. கருப்புக் குல்லாயுடன் பழுப்பு நிறங்கொண்டு விளங்கிய அவன், அரண்மனைக் காவலாள் போல் தோன்றினான்.

“சுல்தான் எங்கேயிருக்கிறார்? என படைத் தலைவர்களின் பக்கம் திரும்பி கேட்டான் ரஹீம்.

“அல்லாஹீ! அதோ படைவீரர்களுக்கெல்லாம் முன்னாலே போகிறாரே அவர்தான்!”

சுல்தான் என்றால், பட்டாடை காற்றில் பறக்க பாய்ந்துவரும் குதிரைமேல் ஏறிப் பவிசாக அலங்காரத் தலைக்கவசம் அணிந்து பறக்கும் கொடிகளும் முழங்கும் முரசும் சூழ்ந்துவர வருவார் என்று ரஹீம் எண்ணிக் கொண்டிருந்தான். சாதாரண மனிதனைப் போல் தோன்றிய அந்தச் சுல்தானைப் பார்க்க அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. பேசாமல் அவனுடைய இடத்திற்குத் திரும்பிச் சென்றான்.

நடுப்பகலிலே, அலுப்பும் பசியுமாக அவன் இருந்தபோது உமார் அவனை அழைத்தான்.

“ரஹீம் ! போர் நம்மை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. நான் துருக்கியர்களுடன், மணல் மேட்டிலிருந்து கவனித்தேன். இங்கே வா” என்று அழைத்தான்.

அவர்கள் இருவரும், சுல்தான் கடந்துபோன அந்த மணல் மேட்டின் உச்சியில் ஏறி நின்று பார்த்தபோது ஆயிரக்கணக்கான தேன் கூடுகளிலிருந்து எழும் ஒசை காதில் வீழ்ந்தது. குதிரைக் குளம்படிகளின் சத்தமும், வாட்படையும், பிற படைகளும் மோதும் ஓசையும் மிக மென்மையாக இருந்தன. சூரிய வெளிச்சம் அந்தப் பள்ளத்தாக்கு முழுவதும் தெளிவாகப்பட்டு அங்கே நடந்த காட்சியை விளக்கமாக எடுத்துக் காட்டியது.

நகர்ந்து கொண்டிருக்கும் குதிரைப்படைகளும் பொருதிக் கொண்டிருக்கும் வீரர்களும், உயரத்திலிருந்து பார்ப்பதற்கு மிகமிகச் சிறிய உருவங்களாகத் தெரிந்தன. சில சமயங்களில் அவை மிக மெதுவாகவே நகர்ந்தன. ஆடு மாடுகள் புல் மேய்வதைப் போல், சாவதானமாக நகர்ந்து கொண்டிருக்கும் படைகள், சில சமயங்களில், புயல் காற்றடிப்பது போல் வெகு வேகமாகப் பாய்வதையும், ஓடுவதையும் கூடப் பார்க்க முடிந்தது. நான்கு மணி நேரம், கிறிஸ்தவப்படைகள் துருக்கிப்படைகளின் மேல் தங்கள் அம்புகளை ஏவிப் பின்வாங்க வைத்தன. மெதுவாகப் பின்வாங்கிக் கொண்டிருந்த துருக்கிப்படைகள் திரும்பவும் சிறுகச் சிறுக முன்னேறத் தொடங்கின. துருக்க வில்லாளிகளின் அம்புகளின் ஓசை குறையவேயில்லை. இந்தத் துருக்கி தேசத்துப் பெரும் படையில் ஒரு பகுதியான அந்தக் குதிரை வீரர்கள், அந்தப் பள்ளத்தாக்கு முழுவதையும் கைப்பற்றிக் கொள்ள முடிவு செய்துவிட்டது போல் தோன்றியது.

சிறிது நேரத்தில் கொரசானியப்படைகளும் போராட்டத்தில் குதிப்பதற்கு முன்னேறத் தொடங்கிவிட்டன. போர் முரசுகள் பேரொலி எழுப்பிய அந்தக் காட்சியை உமார் சுட்டிக் காண்பித்தான். வேலைக்காரர்கள் இவர்களை அழைத்தார்கள்.

“அப்பா! அவர்களும் போரில் இறங்கிவிட்டார்கள்!” என்று ரஹீம் கூவினான். உமாரும், ரஹீமும் அவர்களோடு கலந்து கொள்ளப் புறப்பட்டார்கள். அப்பொழுது, நீண்ட வேல் ஒன்றை இழுத்துக் கொண்டு வந்த ஒரு பையன் ரஹீமின் குதிரைச் சேணத்து மிதியை பிடித்துக் கொண்டு, அல்லல்லா இல்லல்லா என்று கத்திக் கொண்டே குதிரையோடு தொடர்ந்து ஓடி வந்தான்.

தான் காத்துக் கொண்டிருந்த நேரம்வந்து விட்டதென்று ரஹீமுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவன் தன் வாளை உருவினான். ஆனால், மறுகணமே, தன் வாளை உறைக்குள் போட்டு விட்டான். கூட வந்தவர்கள், கேடயத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு முன்னேறினார்களே தவிர வாளையுருவவில்லை. “கொல்லுங்கள் கொல்லுங்கள்!” என்று கூவிக்கொண்டே, இழுத்து வந்த வேலுடன் ஓடிய பையன், குதிரையோடு தொடர்ந்து ஓட முடியாமல், கீழே, தரையில் வீழ்ந்து விட்டான். சேறும், நீரும் நிறைந்த நிலத்தின் குறுக்கே, அவர்கள் குதிரைகள் போய்க் கொண்டிருந்தன. சுமார் ஒருமணி நேரமாக ஓடிக் கொண்டிருந்துங்கூட அவர்கள் அந்த பள்ளத்தாக்கிலேயே சென்று கொண்டிருந்தார்கள். போர் செய்யும் இடம் அவ்வளவு தூரத்தில் இருந்தது. போகும் வழிகளில், சகதிகளில், பாதிபுதைந்த உடல்களும், வெட்டுப்பட்ட முண்டங்களும் ஆங்காங்கே கிடந்தன. அவற்றைக் கண்ட குதிரைகள், மிரண்டு விலகித் திசைமாறித் திரும்பி ஓடின. ஆளில்லாத குதிரைகளும் அவர்களைப் பின்பற்றி ஓடிவரத் தொடங்கின. ஆங்காங்கே சிதறிக்கிடந்த பொருள்களை அரபியர் சிலர் கொள்ளையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இப்பொழுது நிச்சயமாக சுல்தான் நம்மையும் போரில் குதிக்கச் சொல்லுவார் என்று ரஹீம் எதிர்பார்த்தான். ஆனால், பொழுது சாய்ந்து இருண்டுவரும் நேரத்தில் ஒரு தோட்டத்தில் வந்து இறங்கிய துருக்கிக் குதிரைப் படைகளின் அருகே, வந்து சேர்ந்தார்கள். துருக்கிப் படைகள் எங்கோ கிடைத்த காய்ந்த சுப்பிகளைக் கொண்டுவந்து எரித்து நெருப்பு காய்ந்து கொண்டிருந்தார்கள்.

அங்கேயே, இரவு தங்கும்படி, ஆணையிடப்பட்ட கொரசானியப் படைக்கு உணவும் கிடைக்கவில்லை; குளிர்காய நெருப்பும் கிடைக்கவில்லை.

இந்த சங்கடமான சூழ்நிலையில் அன்றைய இரவைக் கழித்துக் கொண்டிருந்த அவர்கள், காலை வெளிச்சம் தோன்றிய சமயத்தில் தூரத்தில் பேரிகை முழக்கம் கேட்டு எழுந்தார்கள்.

அந்தப் பேரிகையொலி கிறிஸ்தவர்களின் முகாமிலிருந்து கிளம்பியது. இருட்டில் நடந்த ஏதோ ஒரு சூழ்ச்சியினால், கிறிஸ்தவப் பேரரசருடைய பின்னணிப்படை, வெகு தூரத்திற்குப் பின்னோக்கிச் சென்றுவிட்டது. காலாட்படைகளோ, மலைப்புறத்திலே துண்டிக்கப்பட்டு தனியாக சுல்தானுடைய படைகளால் சூழப்பட்டுச் சரண் அடைந்துவிட்டது. இந்த இக்கட்டான, சூழ்நிலையில் கிறிஸ்தவச் சக்கரவர்த்திக்கு, தன்னுடைய படையைச் சிறிது பின்வாங்கிக் கொள்ளும்படி நேர்ந்துவிட்டது. இப்பொழுது, பொழுது விடிந்ததும் புதிய படையெடுப்புக்குக் கிளம்பும்படி தன்னுடைய குதிரைப் படையை அழைக்கும் அடையாளமாகத்தான் பேரிகையொலி எழுப்பப்பட்டது. உமாரும், ரஹீமும், குளிர்தாங்காமல், ஒடுங்கி உறங்கிக் கிடந்தார்கள். அவர்களுக்கு இந்த விஷயங்களே அடியோடு தெரியாது. அவர்களுடன் கூட வந்தவர்கள் அவர்களுடைய குதிரைகளுக்கும், சேணம் பூட்டி ஆயத்தம் செய்து, அவர்களையும் எழுப்பிக் கிளம்பச் செய்தார்கள். என்ன நடக்கிறது என்று புரியாமலே அவர்கள் இருவரும், பாய்ந்தோடும் குதிரைகளின் மேலே, பக்கமெல்லாம் படைவீரர்கள் சூழப் போய்க் கொண்டிருந்தார்கள். ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது, உமாருக்குப் பார்த்த இடமெல்லாம் குழப்பமாகவேயிருந்தது. ஒரு குதிரை வீரனின் தலைப்பாகை சரியாகக் கட்டப்படாமல் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. ஒரு மனிதன் வாயைத் திறந்தபடியே, வெறுங்காலால் ஓடிக் கொண்டிருந்தான். ஒரு வண்டி கவிழ்ந்து கொண்டிருந்தது. அதன் கீழே, ஒரு குடியானவன் நசுங்கிக் கிடந்தான்.

திடீரென்று ஒரு பக்கத்திலே ஒரு மனிதன், மண்டியிட்டு ஊர்ந்து வருவது தெரிந்தது. காயமடைந்திருந்த அவன் அருகிலே குதிரையை நிறுத்தித் தன் கைவேலால் அவனைக் குத்தினான், ஒருவீரன். அந்த வேல், கவசத்தைத் துளைத்துக் கொண்டு அவனுடைய உடலிலே, ஆழப் பதிந்தது. அவன் வாய்வழியாக, குருதி கொட்டித் தலைசாய்ந்து, கீழே விழுந்தான். அப்படியிருந்துங்கூட அவன் உடல் நகர முயற்சித்துக் கொண்டிருந்தது. அப்படிச் செத்து வீழ்ந்த வீரனை உமார் ஆச்சரியத்தோடு உற்று நோக்கினான். அவன் ஒரு கிறிஸ்தவ வீரன் போல் இருந்தது.

ரஹீம் எங்கே இருக்கிறான் என்று தெரிந்து கொள்வதற்காகத் திரும்பிப்பார்த்தான் உமார். தலைப்பாகை சரியாகக் கட்டாமல் வந்து கொண்டிருந்த வீரன், தன் இடுப்பிலே பாய்ந்த ஓர் அம்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வலிதாங்காமல் முனகிக் கொண்டிருந்ததைக் கண்டான்.

குதிரைகள் போய்க் கொண்டேயிருந்த பாதையில் இங்குமங்கும் கூடாரங்கன் தெரிந்தன. இரும்புகள் மோதும் சத்தமும், அலறும் ஒலியும் எழுந்தன. தன்னுடைய குதிரை நுரை தள்ளிக் கொண்டிருப்பதைக் கண்ட உமார் தன் கடிவாளத்தைத் தளர்த்தினான்.

இவ்வளவு நேரமும் போர்க்களத்தின் உள்ளே சண்டையின் மத்தியிலே புகுந்து வந்திருக்கும் தான் அதையுணராமலும், உறையில் இருந்த வாளை உருவாமலும் இருந்தது நினைப்புக்கு வந்தபோது உமாருக்குச் சிரிப்பாய் வந்தது. ஒரு பெரிய கூடாரத்தின் அருகிலே ரஹீம் நின்று கொண்டிருந்தான். அவனைச்சுற்றி எங்கும் நிறைந்திருந்த கொரசானியர்கள் கூடாரங்களுக்குள் ஏதும் பொருள்கள் கிடைக்குமா என்று தேடிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை எதுவும் செய்யும்படி யாரும் சொல்லவில்லை. அவர்கள் குழந்தைகளைப் போலக் கூவிக்கொண்டும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டும் இருந்தார்கள். ரஹீமுடன் வந்தவர்களில் மூன்று பேர் அந்தக் கூடாரத்தின் உள்ளேயிருந்து பட்டுத் துணிகளையும் வெள்ளிப் பாத்திரங்களையும் அள்ளிக் கொண்டு வந்தார்கள். அவர்கள் ஒரு பெண்ணையும் இழுத்துக்கொண்டு வந்தார்கள்.

அவள் மருண்டவள் போல் தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். அவளுடைய கண்களின் இருபுறத்திலும் ஒளிவீசும் தலைமயிர்கள் சாய்ந்து விழுந்திருந்தன. காய்ந்த கோதுமைத் தாள்கள் போல் அவை பளபளத்தன. அவள் முக்காடு அணிந்திருக்கவில்லை. அவளுடைய மெல்லிய இடையில் பொன்னுடை ஒன்றை அணிந்திருந்தாள்.

அந்தக் கொரசானியர்கள் இதற்குமுன்னே இப்படிப்பட்ட ஓர் கிறிஸ்துவ இளமங்கையைப் பார்த்ததேயில்லை. எல்லோரும் அவளுடைய அழகிய உருவத்தைத் திறந்த வாயுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“உமார்! அல்லா நமக்கு அருள் புரிந்துவிட்டார் வெற்றி கிடைத்துவிட்டது” என்று ரஹீம் மகிழ்ச்சியுடன் கூறினான்.

வெற்றி என்று அவன் கூறிய குரலிலே விசித்திரமான ஓர் ஒலி இழைந்து கலந்திருந்தது.

‘இந்தப் புெண் கிறிஸ்துவப் பேரரசரின் அடிமைகளில் ஒருத்தியாக இருக்க வேண்டும். என் பங்குக்கு நான் ஒரு மத ரோதியான நாயைக் கொன்று விட்டேன்! வாருங்கள்; கூடாரத்திற்குள்ளே போய்ப் பார்க்கலாம்!’ என்று ரஹீம் அழைத்துக் கொண்டிருந்தபோது அவனுடைய வேலைக்காரன் யார்மார்க் ‘எச்சரிக்கையாயிருங்கள்’ என்று கூவினான். கூடாரங்களுக்கு ஊடே சில மனிதர்கள் விரைந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏறிவந்த குதிரைகள் வியர்த்து விறுவிறுத்து அதன் உடலெங்கும் சேறும் சகதியுமாக ஓடிவந்து கொண்டிருந்தன. பேய் பிடித்தவர்கள் போலத் தீராத வெறியுடன் கத்திகளையும் கோடாரிகளையும் ஏந்திப் பிடித்துச் சுழற்றிக் கொண்டு ஓடிவந்து கொண்டிருந்தார்கள். இரும்புத் தலைக்கவசங்களின் கீழேயிருந்த அவர்களின் முகங்கள் கடு கடுத்துச் சுருங்கியிருந்தன. அந்தக் குதிரை வீரர்கள் நெருங்கி வந்ததும் யார் என்று தெரிந்தது. ஆவேசம் பிடித்துப் பாய்ந்தோடி வந்த அவர்கள், தோற்ற கிறிஸ்தவர்களிலே சிலர்!

அவர்களைக் கண்டதும், உமார் தன் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்துத் திருப்பினான். அந்த வீரர்கள் அவன் மேல் பாய நெருங்கும்போது, அந்தக் குதிரை திடீரென்று திரும்பிப் பின்வாங்கி உமாரைக் கீழே தள்ளிவிட்டு ஓடியது.

கீழே விழுந்த உமாரின் தோளில் ஏதோ ஒரு பொருள் இடித்தது. பாய்ந்து செல்லும் ஒரு குதிரையின் கால்கள் அவன் தலைக்கு மேலே தாவிச்சென்றன. வாயும் கண்களும் சகதியடித்து முடிப் போயிருந்தன. கண்களை நன்றாகத் துடைத்துக் கொண்டு பார்த்தபொழுது அவன் விழுந்து கிடப்பது தெரிந்தது. தள்ளாடிக் கொண்டே அவன் எழுந்து நின்றான். வேலைக்காரர்களில் ஒருவன் கண்ணுக்குத் தெரியாத ஓர் எதிரியுடன் கைகலப்பது போல் தரையின் மீது சுழன்று கொண்டிருந்தான். அவனுக்கருகிலே ரஹீம் தரையின் மீது கிடந்தபடி எழுந்து உட்கார முயற்சித்துக் கொண்டிருந்தான். யார்மார்க் குனிந்து அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தான். உமார், ஒடிப் போய் ரஹீமின் கைகளைப் பிடித்துக் கொண்டான். அவன் ஏதோ ஒரு புது மாதிரியாக உமாரை நோக்கி மெதுவாகச் சிரித்தான்.

“உனக்கு யார் இந்தக் கொடுமை செய்தார்கள். எப்படிக் காயம் ஏற்பட்டடது? சொல்?” என்று உமார் துடிதுடித்துக் கொண்டே கேட்டான். காயம்பட்டுக் குருதி யொழுகிச் சோர்ந்துபோன ரஹீம் ஏதும் சொல்லாதவனாக அவனையே கூர்ந்து பார்த்தான். யார்மார்க்கை ஒரு சுத்தமான துணி கொண்டு வரும்படிச் சொல்லிவிட்டு ரஹீமை மெதுவாகத் தரையிலே கிடத்தி அவனுடைய சட்டையைத் தூக்கி காயம் ஏற்பட்ட இடத்தைப் பார்த்தான். குருதி அவன் கைகளிலே சூடாகப் பாய்ந்து வழிந்தது. அந்தக் குருதியிலிருந்து மெல்லிய ஆவி எழுந்து காற்றிலே கலந்தது. யார்மார்க் உமார் அருகிலே வந்து நின்று கொண்டு மெல்லிய குரலிலே “தொண்டைக் குழியிலே அவனுடைய உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறதை நீங்கள் பார்க்கவில்லையா? இனி, என்ன செய்யப் போகிறீர்கள்!” என்று கேட்டான். எழுந்து நின்று உமார் தன் குருதி தோய்ந்த கைகளைப் பார்த்தான். கதிரவனின் ஒளிக்கதிர்கள் அவன் கைகளிலும், சிதறிக்குழம்பிக் கிடந்த தரையிலும் பட்டுத் தெளித்தன. ரஹீம் முகம் வெளுத்து மூச்சு விடுவதை நிறுத்திவிட்டான். தொண்டைக் குழி சிறிது நேரம் துடித்துக் கொண்டிருந்து விட்டுப் பிறகு நின்று போய்விட்டது.

ரஹீமின் வேலைக்காரன் ஒரு மிருகம் போல் உறுமிக் கொண்டே தன் இடுப்பில் இருந்த ஒரு வளைந்த கத்தியை உருவினான். ரஹீம் செத்துக் கொண்டிருக்கும் போது அருகிலேயே நின்று கொண்டிருந்த, பிடிபட்ட அந்தக் கிறிஸ்தவப் பெண்ணின் மீது பாய்ந்தான் யார்மார்க்.

உதடு துடிக்க, “உயிருக்கு உயிர், பழிக்குப் பழி’ என்று கூவிக்கொண்டே அவளைத் தாக்கினான். அவள் பின்னுக்கு விலகிக்கொண்டாள். அவளுடைய ஆடை கத்தியால் கிழிபட்டது. அவள் ஓடிவந்து உமாரின் காலடியிலேயே வீழ்ந்து, அவன் கால்களைப் பிடித்துக் கொண்டாள். அவளுடைய உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவள் எதுவும் பேசவில்லை. ஆனால் அவள் கண்கள் வேதனையோடும் துடிப்போடும் அவனை உற்று நோக்கின.

“முட்டாளே!” என்று கூவிக்கொண்டே உமார் யார்மார்க்கின் கையைப்பிடித்து அப்புறம் தள்ளினான். அவன் எலும்பில் வலுவில்லாததுபோல் தரையில் வீழ்ந்து “ஆய்லல்லா ஆய்லல்லா” என்று முனகினான்.

அந்த ரோமானியப் பெண்ணை, கூடாரத்திற்குள் போகும்படி உமார் சொன்னான். அவன் பேச்சு விளங்காமல் அங்கேயே நின்றாள். அவன் கூடாரத்தைச் சுட்டிக் காண்பித்ததும், திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே கூடாரத்தை நோக்கி நடந்தாள். மற்ற வேலைக்காரர்களின் உதவியுடன் ரஹீமின் உடலைக் கூடாரத்திற்குள்ளே தூக்கிவந்து சமுக்காளத்தின் மேலே கிடத்தினான். தன் கைக்குருதியைத் துணியில் துடைத்துக் கொண்டு அவர்களை நல்ல தண்ணீர் கொண்டு வரும்படி ஏவினான். தண்ணீரில் தன் உயிர்த் தோழன் முகத்தைக் கழுவித் துடைத்தான். சிறிது நேரம் சென்றதும் அந்தப் பெண்ணும் அவன் அருகிலே வந்து உட்கார்ந்துக் கொண்டு, அவனிடமிருந்து துணியை வாங்கிக் கொண்டாள். அவள் ரஹீம் தலையிலும், தொண்டையிலும் படிந்திருந்த அழுக்கைத் துடைத்து விட்டுத் தூய்மைப் படுத்தினாள். அவ்வாறு செய்து உமாரின் உள்ளத்தில் நல்லஎண்ணம் உண்டாக்கலாம் என்று அவள் நம்பியது போல் இருந்தது. பிறகு அவள் அந்த உடலின் ஆடைகளை ஒழுங்கு படுத்தினாள். நானாக இருந்தால் செத்துப்போன ஒரு கிறிஸ்துவனுடைய உடலைத் தொடவே மாட்டேன் என்று உமார் எண்ணிக் கொண்டான். ரஹீமுக்காகச் செய்ய வேண்டிய காரியங்கள் எத்தனையோ இருந்தன. அவற்றில் ஒன்றுகூட விடுபட்டுப் போகாமல் செய்து முடிக்க வேண்டுமென்று அவன் தீர்மானித்தான்.

அன்று இரவு பழுத்த தாடியுடன் கூடிய முல்லா அவனைப் பார்த்து அனுதாபத்தோடு கூறினார். “மகனே! புனிதமான கிணற்றிலிருந்து வெளிவரும் தண்ணிரும், கடைசியில் தரைக்குள்ளே போய்ச்சேர வேண்டியதுதான்! அல்லாவிடமிருந்து உயிர் தோன்றுகிறது. திரும்பவும் தீர்ப்பு நாள் வரும்போது அவரிடம் இந்த ஆத்மா போய்ச்சேர வேண்டியதுதான்” என்று அந்த முல்லா கூறினார்.

அவனுடைய மனதிலே, ரஹீமின் முகம் தோன்றியது. ஈரமண்ணிலே சகதியின் நிறத்திலே அது தெரிந்தது. இப்பொழுதோ, தூய்மையான புதைகுழியிலே இருண்ட மண்ணின் அடிப்பரப்பிலே, மெக்காவை நோக்கிக் கால்களை நீட்டிக் கொண்டு அவனுடைய உடல் கிடந்தது.

வேலை முடிந்ததும் முல்லா கிளம்பிவிட்டார். அவரால் புதைக்கப்பட வேண்டிய பிணங்கள் எத்தனையோ இருந்தன. உமாரை யார்மார்க் ஒரு நாயைப்போல் பின் தொடர்ந்து வந்து, அவனருகிலே கீழே உட்கார்ந்து கொண்டான். அவன் உடல் முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தது. அவனுடைய தலைவன் புதைக்கப்பட்டு விட்டான், அவனுக்கு ஒரு வகையில், அது நல்லதே! இனி அவன் அடிமையாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், உமாருக்கு அப்படியில்லை, ஒன்றாக வளர்ந்து அண்ணன் தம்பி போல் பழகிய அவனை இழப்பதென்றால் அது பொறுக்க முடியாத வேதனையன்றோ? அந்த இடத்தைவிட்டு அவன் போவதென்பது பெருங்கஷ்டமான காரியம். இந்த இடத்திலே மழையால் அரிக்கப்பட்டுப் புல் வளர்ந்து கோதுமை விதைத்து அறுக்கப்பட்டும், எத்தனையோ ஆண்டுகள், பலவிதமான செயல்களும் நடத்தப்படும் பூமியின் கீழே அவன் படுத்துக் கிடக்க வேண்டும். தீர்ப்பு நாள் வந்து ஒவ்வோர் ஆத்மாவும் அதனதன் உடலிலே சேர்ந்து கொள்ளும் வரையிலே, பார்வைக்கெட்டாத திரைமறைவிலே ரஹீம் காத்துக் கொண்டு கிடக்க வேண்டும். கன்னத்தில் கைவைத்தபடி விடியுமட்டும் உட்கார்ந்திருந்தான் உமார். கடந்த இரண்டு நாள் அலைச்சலும் இப்போது இல்லாமல் இருந்தது, தவிர அவன் மனம் முழுவதும் துன்பத்திலாழ்ந்திருந்தது.

“ரஹீம்! உன்னுடைய உடல் ஒரு கூடாரம் போன்றது. உன் உயிர் அதிலே வந்து சில நாள் தங்கியிருந்தது. கூடாரம் தாக்கப்பட்டுவிட்டது, தன்னுடைய நெடும் பயணத்தைத் தொடங்கிவிட்டது. அந்தப் பயணத்திலே விரைவில் நானும் கலந்து கொண்டு உன்னைக் காண வருவேன்” என்று உமார் புலம்பினான்.

“ஆமென்! அமைதியுண்டாகட்டும்!” என்று யார்மார்க் உடன் மொழிந்தான்.

கூடாரத்திற்குள்ளே ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. அதை விழித்துப் பார்த்துக் கொண்டு உமார் உட்கார்ந்திருந்தான். ஒரு மூலையிலே கிடந்த ஆடைகளின் மத்தியிலே தூங்கிக் கொண்டிருந்த அந்த ரோமானியப் பெண் எழுந்து ஒரு ஜாடியிலிருந்த திராட்சை மதுவை ஒரு கண்ணாடிக் குவளையிலே ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தாள். உமார் அதை உதறித் தரையிலே தள்ளுவதற்காகத் தன் கையை ஓங்கினான். நிசாப்பூர் வீதியில் உள்ள சத்திரத்தில், அவனும் ரஹீமும் ஒன்றாகப் பேசிக் கொண்டிருந்தபோது, ரஹீம் அவனுக்கு மது ஊற்றிக் கொடுத்த காட்சி நினைவுக்கு வந்தது. அவன் அவளிடமிருந்து அந்தக் குவளையை வாங்கி அதில் இருந்த மதுவைக் குடித்தான். குளிர்ந்திருந்த அவனுடைய உடலிலே ஒருவிதமான கதகதப்பு உண்டாகியது. உமார் குடிக்கக் குடிக்க அந்தப் பெண் குவளையை நிரப்பிக் கொண்டேயிருந்தாள். அலுப்பு மிகுதியால் பெருமூச்சு விட்டுக்கொண்டே உமார் துணிக் குவியலின் மேல்படுத்து உறங்கத் தொடங்கினான்.

மெழுகுவர்த்தியை அணைத்துவிட்டு அவன் அருகிலே உட்கார்ந்து கொண்டு வானம் வெளுத்து வருவதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். எல்லாம் தெளிவாகத் தெரியும், அளவு வெளிச்சம் வந்ததும் ஒரு வெண்கலக் கண்ணாடியை எடுத்து வைத்துக் கொண்டு அவள் அதில் தன் உருவத்தைப் பார்த்துக் கொண்டே தலையை வாரிவிட்டுக் கொண்டாள். ஒரே இரவிலே தன்னுடைய எஜமானர்களை மாற்றிக் கொள்ளுவது அவளுக்குப் புதிதல்ல பழக்கமான விஷயந்தான்.
--------------

6. பகைவனுக்கருளும் பண்புள்ள சுல்தான்!

அந்த மலைப் பள்ளத்தாக்கின் மறு கோடியிலே சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்களுடைய கூடாரம் அடிக்கப்பட்டது.

அந்தக் கூடாரத்தின் வாசலிலே துருக்கி அமீர்கள் கூட்டங் கூட்டமாக வந்து நுழைந்தார்கள். மத்தியிலே விரிக்கப்பட்டிருந்த நடை பாதைச் சமுக்காளத்தின் இருபக்கத்திலும் பலர் குழுமியிருந்தார்கள். நடைபாதைச் சமுக்காளத்தின் ஒரு கோடியிலே இருந்த மூன்று பேரையும் பார்ப்பதற்காக அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் இடித்துக் கொண்டும் தோளுக்குமேல் எட்டிப்பார்த்துக் கொண்டும் நின்றார்கள். அந்த மூன்று பேரும் யார் என்றால், ரோமானஸ் டயஜீன்ஸ் என்ற ரோமானியர்களின் பேரரசர். அந்தப் பேரரசர், போர்க்களத்தில் அடிபட்டு முர்ச்சையுற்றுக் கிடந்தபோது, அவரைக் கண்டு பிடித்துக் கொண்டு வந்து, சுல்தான் காலடியிலே ஒப்படைத்த ஒரு முஸ்லிம் அடிமை, சுல்தான் ஆல்ப் அர்சலான் ஆகியோர்தாம்.

ரோமானஸ் என்ற கிறிஸ்தவப் பேரரசன், சுல்தான் அவர்களின் முன்னாலே மண்டியிட்டு வணங்கும்படி கட்டாயப்படுத்தப் பட்டார். தலைகுனிந்த தன்னுடைய அரசியல் கைதியின் கழுத்தின்மேலே தன் காலடியைத் தூக்கி ஒருமுறை வைத்தெடுத்த பிறகு அவரை வலப்புறத்திலேயிருந்த ஆசனமெத்தையொன்றில் அமர வைத்தார் சுல்தான். கிழக்கையும் மேற்கையும் ஆளும் அந்தப் பேரரசர்கள் இருவரும் முதன்முதலாக நேருக்கு நேராகப் பேசிக்கொள்வதைப் பார்க்க அங்கு கூடியிருந்தவர்கள் மிக ஆவலாக இருந்தார்கள். சுல்தான் ஆல்ப் அர்சலான், அரசியல் கைதியான அந்தக் கிறிஸ்துவப் பேரரசர் ரோமானஸைப் பார்த்துக்கேட்டார்: “நான் உம்முடைய கைதியாக்கப்பட்டு உம் முன்னாலே கொண்டு வந்து நிறுத்தப்பட்டால், நீர் என்னிடம் எவ்வாறு நடந்து கொள்வீர்? சொல்லும்” . இதுதான் அவருடைய கேள்வி.

கேள்வி மொழிபெயர்த்துச் சொல்லப்பட்டதும் ரோமானஸ் சற்றுத் தலைநிமிர்ந்து சிரித்துவிட்டு “தங்களை மிகக் கொடுமையாக நடத்துவேன்” என்றார்.

சுல்தான் அவர்களின் இருண்ட முகத்திலே ஒரு புன்னகை மின்னியது. “இப்பொழுது நான் உம்மை என்ன செய்வேன் என்று எதிர்பார்க்கிறீர்? என்று மறுபடியும் கேட்டார்.

பிடிபட்ட அந்தக் கிறிஸ்துவச் சக்கரவர்த்தி, கூர்மையான தன் எதிரிகளின் முகங்களை ஒருமுறை கவனித்துவிட்டு ஒரு தீர்மானத்திற்கு வந்து பதில் கூறினார்.

“இந்த இடத்திலேயே தாங்கள் என்னை வாளால் சீவிக் கொன்றுவிடலாம், அல்லது தங்களுடைய நாட்டுக்கு என்னை இரும்புச் சங்கிலிகளால் பிணைத்து அழைத்துக்கொண்டு போகலாம், அல்லது என்னிடமிருந்து விடுதலைப் பணம் பெற்றுக் கொண்டு விடுவிக்கலாம். இம்மூன்றில் எதையாவது செய்வீர்களென்றுதான் எதிர்பார்க்கிறேன்” என்றார்.

இந்தக் கிறிஸ்தவச் சக்கரவர்த்தியின் வார்த்தைகள் ஆல்ப் அர்சலான் அவர்களின் உள்ளத்திலே ஒரு விருப்பத்தை உண்டாக்கின. ஆண்மை குறையாத ஒருவனைத் தாம் அடிமைப்படுத்தியதை நினைக்க அவருக்குப் பெருமிதமாக இருந்தது. ரோமாபுரியின் சீஸர் ஒருவனுடைய கழுத்திலே தாம் காலடிவைக்க நேர்ந்தது, அவருக்குப் பெருமையாக இருந்தது.

“நான் உம்மை என்ன செய்வதென்று முடிவு செய்துவிட்டேன், என்ன தெரியுமா? என்று சுல்தான் அவர்கள் கேட்டவுடனே, தகப்பனாருக்குப் பின்னாலே வீற்றிருந்த இளஞ்சிங்கம் முன்னாலே நிமிர்ந்து பார்த்தான். அவனுடைய கைகள் இடுப்பைத் தடவின. முஸ்லீம்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் இரண்டு அரசர்களுமே இறந்து போவார்களென்றும், சோதிடம் சொல்லப்பட்டதை அவன் மறக்கவில்லை.

சுல்தான் தான் சொல்ல வந்ததைத் தொடர்ந்து “உம்மிடமிருந்து நான் விடுதலைப் பணம் பெற்றுக் கொண்டு, ஆண்டுதோறும் கப்பங்கட்ட வேண்டுமென்ற கட்டுப்பாட்டின் பேரில் நான் உம்மை விடுதலை செய்கிறேன். எல்லாவிதமான மரியாதைகளுடனும் படைவீரர்களுடனும் உம்முடைய தேசத்திற்கு நான் உம்மை அனுப்பி வைக்கிறேன்” என்று முடித்தார். இளஞ்சிங்கம் பெருமூச்சு விட்டுக்கொண்டே, தன் இருக்கையில் சாய்ந்தான்.

நிசாப்பூரைச் சேர்ந்த அந்த இளம் மாணவன் அவனுக்குச் சொன்ன சோதிடம் பலிக்க வேண்டுமானால் கிறிஸ்தவ அரசன் அந்த இடத்திலேயே கொலையாளியால் கொல்லப்பட்டிருக்க வேண்டாமோ?

இளஞ்சிங்கத்தின் கனவு - இப்படி ஆயிற்று.
--------------

7. அடிமைக்கும் கவலைகள் ஆயிரம் உண்டு!

உமார் தூங்க முடியாமல் புரண்டு கொண்டிருந்தான். உடம்பு களைத்துப் போய் இருந்தாலும்கூட மனம் அலைபாய்ந்து கொண்டேயிருந்தது. தன் நண்பன் ரஹீம் சாகும்போது புது மாதிரியாகப் புன்னகை புரிந்த அவனுடைய முகம் உமாரின் மனக்கண்ணை விட்டு நீங்கவேயில்லை.

நண்பர்கள் இருவரும் ஒரு தாய் வயிற்றிலே பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் போல் ஒட்டிப் பழகியவர்கள். வழிநெடுக எல்லாவற்றையும் பங்கு போட்டுக்கொண்டு அனுபவித்தவர்கள். இப்போது தன் உடம்பில் சரிபாதி போலிருந்த நண்பன் செத்துப் போய்விட்டான்! இனி என்ன செய்வது? எதைப்பற்றியும் கவலைப்படாதவனாக இருந்துவந்த உமாருக்கு இப்பொழுது ரஹீமுக்குப் பதிலாக அவனுடைய பணியாட்களை நடத்தும்முறை தெரியவில்லை. ஆனால் பணியாட்களோ தங்கள் எஜமானன் இறந்துவிட்ட பிறகு உமாரிடமிருந்தே உத்தரவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

போரில் வெற்றி கண்ட அராபியர்களும் மற்றவர்களும் கொள்ளைப் பொருள்களோடும், பிடிபட்ட அடிமைகளோடும் தத்தம் பகுதிகளை நோக்கிப் பயணப்படத் தொடங்கினார்கள். உமாரும் நிஜாப்பூருக்குப் புறப்பட வேண்டிய காரியங்களில் ஈடுபட வேண்டியவனானான்.

ஆனால் உமார் போர்க்களத்திலிருந்து ஒருசிறு கத்திகூட எடுத்துக் கொண்டுபோக விரும்பவில்லை. தன் உயிர் நண்பனான ரஹீமைப் பறிகொடுத்த துயரத்தை நினைவூட்டக்கூடிய எந்தப் பொருளையுமே அவன் எடுத்துச் செல்ல விரும்பவில்லை.

ரஹீமின் பணியாளான யார்மார்க் தன் எஜமானனின் கருப்புக் குதிரைக்கு சேனங்கட்டி, இறந்துபோன தன் தலைவனுடைய ஆயுதங்களையும் பொருள்களையும் முட்டையாகச் சேணத்தின் பின்புறத்திலே கட்டினான். உமார் அந்தக் கருப்புக் குதிரையைப் பார்த்தான். வெறும் சேணத்துடன், அதைத்தன் பக்கத்தில் நடத்திக் கொண்டு வழி முழுவதும் செல்வது இயலாத காரியம் என்று தோன்றியது. ஆனால் அவற்றை ரஹீமுடைய தகப்பனாரிடத்தில் ஒப்படைக்க வேண்டிய கடமையும் அவனுக்கு இருந்தது.

“இந்த ரோமானியப் பெண்ணை அந்தக் குதிரையைச் செலுத்திக் கொண்டுவரச் செய்யலாமே! அவளைச் சுமந்து செல்ல வேறு மிருகங்களும் இல்லை” என்று யார்மார்க் சொன்னான்.

அடிமையாகப் பிடிபட்ட அந்தப் பெண் ரஹீமின் சொத்தாவாள். அவளையும் கூட அழைத்துச் செல்ல வேண்டும். பட்டுப் போன்ற கூந்தலும், அழகும் இளமையும் பொருந்திய அவளை, நிசாப்பூர் அடிமைச் சந்தையில் நல்ல விலைக்கு விற்கலாம். ரோமானியர்களின் தேசத்தைச் சேர்ந்த அவளோடு கிரேக்க மொழியில்தான் பேசமுடியும். பள்ளிக் கூடத்தில் உமார் படிக்கும்போது, பல கிரீக் வார்த்தைகளைத் தெரிந்து கொண்டிருந்தான். அந்த அரைகுறைக் கிரேக்கச் சொற்களை வைத்துக் கொண்டு அந்தப் பெண்ணோடு பேசி, அவளைப் பற்றிய சில விவரங்களைத் தெரிந்து கொண்டான்.

அவளுடைய பெயர் அழகி ஸோயி என்பது. கான்ஸ்டான்டிநோபிள் நகரில் அவள் எப்போதும் அடிமைப் பெண்ணாகவே இருந்து வந்ததால் அவளுக்கு வேறு உறவு எதுவும் கிடையாது. ரோமானியச் சக்கரவர்த்தியைப் போலவே, இஸ்லாமியர்களை எளிதாக அடித்து விரட்டி விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த கிறிஸ்துவ இராணுவ அதிகாரி ஒருவர் அவளைத் தன் அடிமைப் பெண்ணாகப் போர்க்களத்திற்குக் கூட்டி வந்திருந்தார். அந்த அதிகாரி முறியடிக்கப்பட்டு அவரிடமிருந்து அழகி ஸோயி பறிக்கப்பட்டு எதிரிகளின் கையில் சிக்கிக் கொண்டு விட்டாள். இவ்வளவுதான் அவளுடைய கதை!

‘நான் அந்தக் கறுப்பு குதிரையில் ஏறி வருகிறேன். அழகி ஸோயிக்கு என்னுடைய குதிரையைக் கொடுங்கள்!’ என்றான் உமார். வீர மரணம் அடைந்த, செல்வனான தன் நண்பனின் கறுப்பு குதிரையில் ஓர் அடிமைப்பெண் ஏறிவரக் கூடாதென்று நினைத்தான் போலும்.

அழகி ஸோயி முக்காடு போட்டுக் கொண்டு, உமாருக்குப் பின்னாலே வந்துங்கூட, வழியில் கண்டவர் எல்லாம், அவளுடைய உடையையும், பழுப்பான கூந்தலையும் பார்த்து, அவள் போரிலே பிடிபட்ட ஓர் அடிமைப்பெண் என்றும் அவள் அருகில் தனியாகவும் அமைதியாகவும் வரும் வீரனுடைய உடைமை என்றும் எண்ணிக் கொண்டார்கள்.

நீண்டவழிப் பயணத்தின்போது, முதன்முதலாக இரவிலே தங்குவதற்காக அவர்கள் பிடித்த இடம் மிகவும் வசதிக் குறைவாக இருந்தது. ஒட்டகப்பாதை முழுவதும் ஒரே கூட்டம்! ஏராளமான படைகளோடு முகாமிட்டிருந்த ஒர் அமீரின் கூடாரத்திற்கு அருகில், ஒரு சுனை நீர்க்கிணற்றின் பக்கத்தில் உமார் தன்னுடைய கூடாரத்தை அமைக்கும்படி நேரிட்டது. அவனுடன் வந்த வேலைக்காரர்களோ, எந்த விஷயத்தையும் சொல்லாமல் செய்வதேயில்லை என்றிருந்தது. குதிரைகளை எங்கு கட்டவேண்டுமென்றும், அமீருடைய ஆட்களிடம், பேரம் பேசி ரொட்டியும் பார்லியும் வாங்கி வருவது எப்படி என்றும் அவன் ஒவ்வொன்றும் அவர்களுக்குச் சொல்ல வேண்டியிருந்தது. அந்த இரவில் உமார் படுத்துறங்கப் போகும் சமயத்தில் ரஹீமின் நினைவு அவன் மனத்திலே வந்து நிறைந்து கொண்டது.

கூடாரம் நட்டு வைத்திருந்த கம்பின் அருகிலே நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அது அடங்கிச் சாம்பலாகும் வரையில், படுக்கையில் உட்கார்ந்தபடி உமார் விழித்துக் கொண்டேயிருந்தான். முதல் நாள் காலையில் குடித்த மது சிலமணி நேரங்கள் அவனைத் தன்னை மறக்கச் செய்திருந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஆனால் இப்பொழுது மதுக்குவளைதான் இருந்தது; மது இல்லை! மது ஜாடியில் கொஞ்ச நஞ்சமாவது மீதியிருக்காதா என்ற ஆவலோடு மூட்டையை அவிழ்த்து, அதில் இருந்த வெள்ளி ஜாடியைக் கையில் எடுத்துப் பார்த்தான். ரஹீமின் வாழ்வு என்னும் மது இருந்த கோப்பை அதிவிரைவில் காலியாகிவிட்டது அவன் இப்பொழுது சாவைத் தழுவிக் கொண்டு புதை குழியிலே கிடக்கிறான்.

அந்தத் துயர நினைவைக் கலைப்பது போல் அவனருகில் ஓர் ஒசை உண்டாயிற்று. படுக்கையறை உடைகளுடன் அவனருகில் தூங்கிக் கொண்டிருந்த அடிமைப்பெண் ஸோயி புரண்டு படுத்துப் பெருமூச்சு விட்டாள். உமார் குனிந்து அவள் கண்களை மூடிக் கொண்டிருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான். அவளுடைய அழகிய கண்கள் இருண்டு நனைந்து போய் இருந்தன. ஏதோ கவலையின் மிகுதியால் அந்தப் பெண் தனக்குத்தானே அழுது கொண்டு இருந்திருக்கிறாள்.

அவளை எழுப்பியபடி, “என்ன ஸோயி? என்று மிருதுவாக உமார் கேட்டான்.

கண்விழித்த அழகிஸோயி தன் உதடுகளை விரித்து உமாரை நோக்கிச் சிறிய புன்னகையொன்றை நெளியவிட்டாள். தான் கண்ணிர் விட்டதாக உமார் அறிந்து கொள்ளக் கூடாதென்று அவள் எண்ணினாள். தன் சொந்த தேசத்தை விட்டுப் புறப்படும் இந்த நீண்ட பயணத்தில், இந்தப்பெண் எதைப்பற்றி நினைத்துக் கொண்டு இருந்திருப்பாள் என்று உமார் வியந்தான். இப்படி, அவளைப்பற்றி அவன் சிந்தித்தது இதுதான் முதல் தடவை. ஓர் அடிமைப் பெண்ணுக்கும் பேரரசனாகிய சுல்தானுக்கு இருப்பது போல் கவலைகள் உண்டு. ஆனால் அதை வெளியே சொல்லிக் குறைப்படுவதற்குத்தான் அனுமதிக்கப் படுவதில்லை!

உமார், அழகி ஸோயியை நெருங்கி அவளுடைய கூந்தலைப் பரிவோடு ஒதுக்கிவிட்டான். அழகி வியப்போடும் ஆவலோடும் உமாரை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு அவனுக்குத் தன் பக்கத்தில் இடம் கொடுப்பதற்காக கொஞ்சம் பின்னுக்கு நகர்ந்து படுத்துக் கொண்டாள். இப்பொழுது அவள் அழுகையெல்லாம் எங்கேயோ போய்விட்டது. உமாரின் கைபட்டதும் அழகியின் நாடித் துடிப்பு அதிகமாகியது. அவளை உமார் தன் கைகளுக்குள்ளே வாஞ்சையோடு அணைத்துக் கொண்டான். தான் போர்த்தியிருந்த துணியை எடுத்து இருவருக்கும் சேர்த்துப் போர்த்திக் கொண்டான். குழம்பிய சததியும், இராக்காற்றும், ரஹீமின் சாவுப் புன்னகையும் தன் நினைவைவிட்டு இப்பொழுதாவது அகலும் என்று எதிர்பார்த்தான்.

தன் தோளுக்குக் கீழே புரண்டு கொண்டிருந்த தலை மயிரை ஒதுக்கிவிட்டுக் கொள்வதற்காக அழகி ஸோயி அசைந்தாள். உமாரின் பக்கமாகப் புரண்டாள். அப்பொழுது உமாரின் உதடுகள் அழகியின் கழுத்தில் பதிந்தன. தேகத்தின் கதகதப்பும் கூந்தலின் மணமும் உமாருக்கு இதமாக இருந்தன. அந்தக் கதகதப்பே ஒரு வேட்கையாக மாறி உமாரின் களைப்பையெல்லாம் மறக்கடித்தது.

அழகி ஸோயியின் ஒவ்வொரு அசைவும் உமாரிடம் தன்னை மறந்த ஒரு நிலையையுண்டாக்கின.

அந்த இரவிலே அழகியின் கையணைப்பிலே, போர்க்களச் சகதியும், நண்பனின் சாவும் உமாருக்கு மறந்து போய்விட்டன. அமைதியாக மூச்சுவிட்டுக் கொண்டு உலக நினைவு எதுவுமில்லாமல் உமார் அயர்ந்து உறங்கினான்!

-------------

8. கணிதம் கற்க வந்தவன் ஒற்றனா? திருடனா?

உமார் தன் தந்தை இறந்த பிறகு தன் நண்பன் ரஹீமின் வீட்டிலே உல்லாசமாக வாழ்ந்தவன். ஆனால் போர்க்களத்திலிருந்து அவன் திரும்பி வந்ததும், ரஹீமின் சாவுச் செய்தியைக் கொண்டுவந்த அவனை ரஹீமின் பெற்றோர்கள் துர்க்குறியென்றே நினைத்துக் கடுமையாக நடத்தினார்கள். அவன் அழைத்து வந்த அழகி ஸோயியையும் அடிமைச் சந்தையிலே விற்பதற்காகப் பறித்துக் கொண்டு போய்விட்டார்கள். உமார் தங்குவதற்கு இடமில்லாமல் நிஜாப்பூர் பட்டணத்தின் தெருக்களில் சில நாட்கள் அலைந்தான். ஒரு காலத்தில் தன் உயிர் நண்பனோடு உல்லாசமாகத் திரிந்த வீதிகளில் இப்போது நடமாடுவதுகூட அவனுக்குப் பொறுக்க முடியாத துயரமாக இருந்தது. அதை மறப்பதற்காகத் தன் கவனத்தை வேறுவழியில் திருப்ப வேண்டுமென்று நினைத்துக் கணிதப் பேராசிரியர் அலி அவர்களிடம் வந்து அவருடைய மாணவனாக அவருடைய மாளிகையிலே தங்கியிருந்தான்.

பேராசிரியர் அலி அவர்களுக்கு எழுபத்து மூன்று வயதாகிவிட்டது. பழுத்த கிழவர், “ஞானக்கண்ணாடி’ என்ற பட்டப் பெயரால் பலராலும் சிறப்பிக்கப்படுபவர். சுல்தான் அரண்மனையிலுள்ள அமைச்சர்கள் ஆதரவால் அவர் வாழ்ந்து வந்தார். புனித நூலாகிய திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக, அவர் மனப்பூர்வமாகவும் உயிருக்குயிராகவும் விரும்புவது கணிதநூல் ஆகும். அவருடைய வீட்டில் எல்லாச்செயல்களும் மணிப்படிதான் நடக்கும். மணி அறிந்து கொள்வதற்காக முன் கூடத்தில் மீன் தொட்டிக்கு அருகில் ஒரு நீர்க்கடிகாரம் அமைக்கப்பட்டிருந்தது.

அவருடைய உதவியாட்கள், அவருடைய வேலைகளை நேரத்தைப் பார்த்தே கணக்குச் செய்து விடுவார்கள். இத்தனை மணியாகியதால் ஆசிரியர் குளித்துக் கொண்டிருப்பார்; இப்பொழுது படித்துக் கொண்டிருப்பார், இந்நேரம் எழுதிக் கொண்டிருப்பார், இந்தச்சமயம் சாப்பாடு நடந்து, கொண்டிருக்கும் என்று கணக்காகச் சொல்லிவிடுவார்கள்.

வானவெளியிலுள்ள கோளங்கள் கணக்காகச் சுழல்வது போல் பேராசிரியர் அலி அவர்களின் வீட்டில் நீர்க்கடிகாரப்படி, ஜந்து வேளைத் தொழுகையும், இரண்டு வேளைச் சாப்பாடும். பனிரெண்டு மணிநேர வேலையும் மாறிமாறி நடந்து கொண்டிருக்கும். அவர் தம் மாணவர்களுக்குப் போடும் சாப்பாட்டில்கூட எந்தவிதமான மாற்றமும் கிடையாது. எப்படித் தினந்தினமும் ஒரே கதிரவன் உதிக்கிறானோ, அது போலவே தினந்தினமும் ஒரேவிதமான சாப்பாடும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்!

பேராசிரியர் அலி சில சமயங்களில் நிஜாப்பூர் பட்டணத்திற்குக் கிளம்பிப்போவதுண்டு. அப்பொழுது அவர்தம் பதவிக்குத் தகுந்த ஆடம்பரமான பழுப்புநிற உடையணிந்து கொண்டிருப்பார். ஒரு மட்டக் குதிரையின்மேல் சவாரி செய்து கொண்டு போவார். சின்னப் பட்டுக் குடையொன்று வெயிலை மறைப்பதற்காகவும், கரிய அடிமைப் பையன் ஒருவன், குதிரையை அடித்து நடத்துவதற்காகவும் அவர் உடன் கொண்டு செல்வது வழக்கம். அவருடைய வீடு நிஜாப்பூருக்குத் தெற்கே, விளைநிலங்களுக்கெல்லாம் அப்பால், பாலைவனத்தின் உப்புப் படுகைகளின் அருகிலே தனியாக இருந்தது. இது தொந்தரவு எதுவுமில்லாமல் நிம்மதியாகக் கணித ஆராய்ச்சியும் கல்வி போதனையும் செய்வதற்கு வசதியாக இருந்தது.

சுல்தான் அவர்களின் அமைச்சர், பல ஆண்டுகளுக்கு முன், பேராசிரியர் அலியை, கணிதநூல் ஒன்று, புது முறையிலே ஆக்கும்படி பணித்தார். அதற்கிணங்க அடையாள எழுத்துக்களின் மூலமாகவே எண்களின் நுட்பத்தன்மையைக் கணிக்கும் (அல்ஜீப்ரா) நூலொன்றை அலி எழுதி முடித்திருந்தார். அவருடைய மாணவர்களின் வேலை என்னவென்றால், அவர் கூறும் விஷயங்களைக் குறிப்பெடுப்பதும், அவர் கட்டளையிடும்போது, கணக்குகளைப் போட்டுக் காண்பிப்பதும், பழைய நூல்களிலிருந்து, அவருடைய ஆராய்ச்சிக்குத் தேவையான விஷயங்களைத் திரட்டிக் கொடுப்பதுமாகும். அதற்குப் பதிலாக, அந்தப் பேராசிரியர் அலி பிற்பகலில் மூன்று மணிநேரம் கணித விஞ்ஞானக்கலை நுட்பம் பற்றி விரிவுரை நிகழ்த்துவார். தம் செலவில் சாப்பாடும்போட்டு அவர்களை ஆதரித்தும் வந்தார்.

அவருடைய மாளிகையில் எட்டு மாணவர்கள் தங்கியிருந்தார்கள். கணித விஞ்ஞானக்கலையை, அவர்கள் ஒவ்வொருவரும் கசடறக் கற்றுத் தெளியவேண்டுமென்று அவர் அரும்பாடுபட்டு வந்தார். அவருடைய மரணத்திற்குப்பிறகு அல்லாவை வணங்கும் உலகப் பகுதியிலே கணித விஞ்ஞானம் அழிந்து போய்விடக் கூடாதென்பதற்காகவும், தம்முடைய ஆராய்ச்சி நூல்கள் பிற்கால உலகிற்குப் பயன்பட வேண்டுமென்பதற்காகவும், அவர் ஆர்வத்துடன் போதித்து வந்தார். அந்த எட்டுப்பேரிலும் உமார் மீதுதான் அவருக்கு நம்பிக்கையில்லை. பத்து மாதங்களுக்கு முன்வந்து அவரிடம் அண்டிய உமார் எதிர்காலத்தில் எப்படியிருக்கப் போகிறான் என்பது ஆசிரியருக்குப் புரியவேயில்லை. சிக்கலான கணித பிரச்சினைகளை எளிதாகக் கண்டு பிடிக்கும் சக்தியும் ஆபத்தைத் தரக்கூடிய கற்பனைத் திறமையும் உமாரிடம் மிதமாக இருப்பதாக ஆசிரியர் எண்ணினார். “கணிதம் என்பது, அஞ்ஞானத்திலிருந்து, அறிவுலகத்திற்கு அழைத்துச் செல்லும் பாலம் போன்றது, அஞ்ஞானத்தைக் கடப்பதற்குக் கணிதத்தைவிடச் சரியான பாலம் வேறு எதுவுமில்லை” என்று பேராசிரியர் அலி அடிக்கடி தம் மாணவர்களுக்குச் சொல்வது வழக்கம்.

மத நம்பிக்கையற்ற கிரேக்கர்களின் கணித ஆராய்ச்சியை அவர் அடியோடு வெறுத்தார். எண்களைத் தங்கள் அடிமைகளாக்கிய முதல் கணிதநூல் ஆசிரியர்களான பழங்காலத்து எகிப்தியர்களின் கணிதக் கலைகளை அவர் மனதாரப் பாராட்டினார். எகிப்தியரின் கணித வேலைகள் பலப்பல பெரிய கட்டிடங்களை எழுப்பப் பயன்பட்டு வந்தது.

ஒருநாள் மாணவர்களில் ஒருவன் ஆசிரியர் அலியை நோக்கி, “குவாஜா இமாம் அவர்களே! நமக்கு மாதங்களைக் கணக்கிடுவதற்கு தீர்க்கதரிசி முகமது நபியவர்கள் ஏற்பாடு செய்த பிறைக்கணக்கு இருக்கிறது, ஒளி வருவதற்குக் கதிரவன் இருக்கிறான். அப்படியிருக்கும்போது, நட்சத்திரங்களைப்பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பது என்ன பயன் தரும்? என்று கேட்டான்.

பேராசிரியர் அலி அவர்கள், மெக்காவுக்குப் போய் வந்தவர். புனிதமான ஹஜ்யாத்திரை செய்து வந்ததற்கு அடையாளமாக அவர் ஒரு பச்சைத் தலைப்பாகை அணிந்திருப்பார். அவருக்கு நட்சத்திரப் பலன்களிலோ சோதிடத்திலோ சிறிதுகூட நம்பிக்கை கிடையாது. ஆனால் சுல்தானும், பெரிய பெரிய பிரபுக்களும் சோதிடத்திலே நீங்காத நம்பிக்கை கொண்டிருந்த காரணத்தினால், ஆந்த நம்பிக்கைக்குப் பாதகமான தம்முடைய கருத்தை அவர் வெளியிடுவதில்லை.

சுல்தானின் அமைச்சர், தம் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு, யாரேனும் உளவாளிகளை அடிக்கடி அனுப்பி வைக்கக்கூடும் என்ற சந்தேகம் வேறு இருந்தது.

அப்படி அனுப்பி வைக்கப்பட்ட உளவாளியாக உமார் இருக்கக்கூடும் என்றும் எண்ணினார். அப்படி எண்ணுவதற்கு ஆதாரம் இல்லாமலும் இல்லை. உமார் தனக்கு உறவினர்கள் யாரும் இல்லையென்று சொல்லியிருக்கிறான். இது உண்மையாக இருக்காது. நிஜாப்பூருக்கு வெளியே, பல நாட்கள் சுற்றியலைந்துவிட்டுத் தன்னந்தனியாகத் தன்னிடம் வந்து, கணிதப் பேராசிரியரிடம் பாடம் கேட்க ஆவலுடன் வந்திருப்பதாகத் தெரிவித்தான். பார்ப்பதற்கு ஒரு போர் வீரனைப் போலவும், பசியெடுத்து இரைதேடிக் கொண்டிருக்கும் சிங்கத்தைப் போன்ற உடற்கட்டும் கொண்டிருக்கும் இவன் படித்துவிட்டுப் பள்ளியாசிரியனாகவா வரப்போகிறான்? பின் எதற்காக இவன் என்னிடம் பாடம் கற்க வரவேண்டும்? நிச்சயமாக இவன் உளவாளிதான்!” என்று அவனைப்பற்றி ஆசிரியர் அலி தீர்மானித்து வைத்திருந்தார். ஆகவே மிகுந்த எச்சரிக்கையுடன், கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லத் தொடங்கினார்.

“கற்றறிந்த மேதையான அபூரயான் பிருனி என்ற நூலாசிரியர் தம்முடைய சோதிடக்கலை நூலின் முதல் அதிகாரத்திலே, நட்சத்திரங்களைப்பற்றிய அறிவு ஒரு விஞ்ஞானம் என்றும், அந்த அறிவிருந்தால், அதன் உதவியால், மனிதர்கள், அரசர்கள், நகரங்கள், அரசியல் இவற்றிலே ஏற்படக்கூடிய மாறுதல்களைப்பற்றி முன்கூட்டியே அறிந்துசொல்ல முடியுமென்றும் கூறியிருக்கிறார். சோதிடநூல் அறியாமலேயே ஒருவன் வானநூலில் தேர்ச்சி பெற்ற அறிவுடையவனாயிருக்கலாம். ஆனால் வானநூல் அறியாதவன் சோதிடம் சொல்லுவதென்பது முடியாத காரியம். ஆகவே நட்சத்திரங்களைப் பற்றிய ஆராய்ச்சி சோதிடக்கலைக்கு முக்கியம்” என்று ஆசிரியர் பதில் கூறியார்.

கேள்விகேட்ட மாணவனுக்கு ஒரு நப்பாசையிருந்தது. தங்கம் செய்யக்கூடிய முறைகள் ஏதாவது தென்படுமா என்று பேராசிரியருடைய புத்தகங்களிலே புரட்டிப்புரட்டி ஆராய்ச்சி செய்து பார்த்தான். ஆனால், அவன் கண்ணுக்கு அது அகப்படவேயில்லை அடுத்தபடியாக அவன் ஒரு கேள்வி கேட்டான்.

“பழையநூல் ஒன்றிலே பொன்னின் தன்மை சூரியனிடம் இருக்கிறதென்று எழுதியிருக்கிறது. சூரியனுடைய சத்து நெருப்பு. நெருப்பின் மூலமாக நாம் பொன்னைப் பெறலாம், நெருப்பின் சத்தை நாம் கண்டுபிடித்துவிட்டால் தங்கம் பெறலாம். நெருப்பின் சத்தை நாம்பெறுவதற்கு... வழி... எதுவும் இருக்கிறதா?” என்று ஐயம் கேட்பவன்போல் கேட்டான். பக்கத்திலேயிருந்த மாணவன் வேடிக்கையாக “அடுப்பின் மூலம் அடையலாமே!” என்றான்.

பேராசிரியர் அலி பேசத் தொடங்கினார்! “எல்லாம்வல்ல அல்லா அவர்கள் தங்கத்தை மண்ணின் கீழிருந்துதான் பெற வேண்டுமென்று விதித்திருக்கிறார்கள். உண்மையான அறிவுள்ளவர்கள், இது போன்ற வீணான ஆராய்ச்சிகளில் இறங்கக்கூடாது” - இதைச் சொல்வதற்கு முன் பேராசிரியர் தம் மனத்தைத் திடப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. சுல்தான் போன்றவர்கள், தங்கம் செய்யும் வித்தை தெரியும் என்று சொல்லிக்கொண்டு வந்தவர்களை நம்பிப் பலமுறை ஏமாந்திருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியும். ஏமாந்ததன் மூலமாக, யாராலும் தங்கம் செய்யமுடியாது என்பதை அவர்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதை மனத்தில் இருத்திக் கொண்டுதான் அவர், தம் கருத்தைத் தைரியமாகச் சொன்னார். இருந்தாலும் உளவாளி என்று கருதப்படுகிற உமார் தம்மைக் கவனிக்கிறானா, என்ன நினைக்கிறான் என்று அவன் முகத்தை லேசாகப் பார்த்துக் கொண்டார். உமாரோ ஒரு தாளில் இறகு பேனாவில் ஏதோ வரைந்து கொண்டிருந்தான்.

பேராசிரியர் விரிவுரையாற்றும் போதும் உமார் அடிக்கடி இந்த மாதிரிப் பேனாவினால் ஏதோ எழுதிக் கொண்டிருப்பதை அவர் கவனித்திருக்கிறார். ஆரம்பத்தில் அவன் தன்னுடைய உரைகளைக் குறிப்பெடுக்கிறான் என்று அசட்டையாக இருந்தார். அவன் அமைச்சருடைய ஒற்றனாக இருப்பானோ என்ற எண்ணம் ஏற்பட்ட நாளிலிருந்து இந்தக் குறிப்புகளை அவன் அமைச்சரிடம் கொண்டு போய்க் காண்பிப்பதற்கு அத்தாட்சியாகப் பயன்படுத்தக்கூடுமே என்ற எண்ணம் ஏற்பட்டது. மேலும் இப்படி அவன் எழுதும் தாள்களை அவனுடைய படுக்கைக்குப் பக்கத்திலேயுள்ள மரப்பெட்டியில் பூட்டி வைத்துக் கொள்ளும் வழக்கமும் வைத்திருந்தான். ஆகவே, ஆசிரியரின் சந்தேகம் உறுதிப்பட்டது.

அன்று பேராசிரியர் திடீரென்று எழுந்து உமாரின் அருகிலே வந்து அவன் எழுதிக் கொண்டிருந்த தாளை கவனித்தார். ஒரு கனஅளவைக் காட்டும் படம் வரைந்து, பல கோடுகளால் பிரிக்கப்பட்டிருந்ததையும் அவற்றின் இடையே எண்கள் எழுதப்பட்டிருப்பதையும் அந்தத் தாளிலே கண்டார். வியப்புடன் “இது என்ன?” என்றார்.

“கனஅளவின் மூலங்களின் கணக்கு” என்று பதில் சொன்னான் உமார்.

கனஅளவு மூலங்களைப்பற்றிய கஷ்டமான கணக்கொன்றை அவனுக்குக் கொடுத்திருந்தது அவருக்கு நினைவுவந்தது.

“எவ்வளவு தூரம் செய்திருக்கிறாய்?” என்று கேட்டார்.

“முடிந்து விட்டது” என்றான்.

அவரால் நம்ப முடியவில்லை. அந்தக் கணக்கை அவரால் செய்ய முடியவில்லை. கிரேக்கர்கள் அந்த மாதிரியான கணக்கிற்கு விடைகண்டு பிடித்திருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் உமார் அதற்கு விடைகண்டு பிடித்திருக்கிறான் என்பது அவருக்குச் சந்தேகமான விஷயமாகயிருந்தது, ஆகவே, வகுப்பைக் கலைத்துவிட்டு, உமாரைத் தம்முடன் தனிஅறைக்கு அழைத்துச்சென்று அந்தத்தாளில் உள்ள விஷயங்களை ஆராய்ந்தார்.

“இந்த விஷயம் என்னால் புரிந்துகொள்ள இயலாததாயிருக்கிறது. கனஅளவைச் சிறுசிறு கோள அளவுகளாகப் பிரித்திருக்கிறாய் அல்லவா? கிரேக்கர்களின் விடையை நீயும் தெரிந்து கொண்டிருக்கிறாய்!” என்றார் அலி.

“அவர்கள் எப்படி இதன் விடையைக் கணக்கிட்டார்கள்? என்று உமார் கேட்டான்.

“இதுவரை நான் அதை அறிந்து கொள்ளவில்லை”

உமாருக்குக் கணக்குக் கொடுக்கும் போது, அதன் விடையைச் சொல்லவில்லை என்பது பேராசிரியருக்கு நினைவு இருந்தது. அவருடைய குறிப்புத் தாள்களுக்கிடையே, அந்தக் கணக்கைப்பற்றிய குறிப்பும் விடையும் வைத்திருந்தார். அவருடைய ஆசனத்தின் அருகிலே இருந்த திருக்குர்ஆன் புத்தகத்துக்குள்ளே அந்தக் குறிப்பைத் திணித்து வைத்திருந்தார். அவருடைய அறையைத் தவிர்த்து அந்தப் புத்தகத்தை அவர் வெளியில் எடுத்து வருவது கிடையாது. தம் மாணவர்களையும் அறைக்குள் தாம் இல்லாதபோது வரக்கூடாதென்று கட்டுப்படுத்தி வைத்திருந்தார். ஆகவே ஒன்று உமார் அதைத் திருடிப்பார்த்து விடையைத் தெரிந்து கொண்டு கணக்கைச் செய்திருக்க வேண்டும் அல்லது அவன் இந்தக் கற்பனைக் கோடுகளின் உதவியால் தானாகவே செய்திருக்க வேண்டும்.

“இந்த முழுச்சதுரங்களின் அளவுகளைக் கொண்டு கனஅளவு மூலங்களைக்காட்டி வரைந்திருக்கிறாய், ஆனால் விடையை எந்த வழியாகக் கண்டு பிடித்தாய்? என்று அலி கேட்டார்.

உமார் குனிந்து வரைவுப் படத்தில் கைவைத்துக் காட்டியபடி “இந்தப் பகுதியைக் கழித்து இதையும் இதையும் கூட்டிப் பாருங்கள். விடைகிடைத்து விடுகிறது!” என்று காண்பித்தான்.

“என்னைக் குருடனென்றா நினைத்துக் கொண்டாய்? இது நான் உனக்குச் சொல்லிக் கொடுத்த அடையாளமுறைக் கணிதம் (அல்ஜிப்ரா) அல்லவே. மதநம்பிக்கை அற்ற கிரேக்கர்கள் கையாளுகின்ற இடைவெளிக் (ஜியோமிதி) கணிதம் அல்லவா இது.”

“இருக்கலாம், ஆனாலும் விடை கிடைத்து விட்டதல்லவா? எனக்கு அடையாள முறைக் கணிதத்தின் மூலம் செய்வது எளிமையாகத் தோன்றவில்லை.”

“இருந்தாலும் நான் கொடுத்தது அடையாள முறைக் கணிதம்தானே!”

“ஆம்! இப்பொழுது வழி கண்டுபிடித்து விட்டபடியால் அந்த முறையில் மாற்றிச் செய்வதும் கஷ்டமல்ல, எளிது தான்!” என்று சொல்லிக் கொண்டே உமார் அந்தக் கனஅளவு பார்த்துக் கொண்டே அடையாளக் கணித முறையின்படி அந்தக் கணக்கைச் செய்து காண்பித்தான். பேராசிரியர் அலி, உமாரின் திறமையைத் தெரிந்து கொண்டதுடன், அந்தக் கணித முறையையும் தம் நூலிலே சேர்த்துக் கொண்டார்.

இந்தக் கணிதத்தைச் செய்வதற்கு காரெஸ்மி என்ற கணிதப் பேராசிரியர் கூட முடியாதென்று சொல்லி முயற்சிக்காமலே போய்விட்டார். பாக்தாத் கல்லூரியில் இருந்த பேராசிரியர் உஸ்தாத், இம்மாதிரிக் கணக்குகளைச் செய்யப் பல்லைக் கடித்துக் கொண்டு முயற்சி செய்தும் பலன் ஏற்படவில்லை. “இது மாதிரியே வேறு கணக்குகளையும் செய்ய முயற்சிக்கிறாயா?” என்று பேராசிரியர் அலி வியப்போடு கேட்டார்.

“எத்தனையோ தடவை செய்திருக்கிறேன்” என்றான் உமார்.

“விடைகள் கிடைத்தனவா?”

“கிடைத்தன, ஆனால் ஒவ்வொரு முறை கிடைக்காமலும் போயிருக்கின்றன!”

“நீ செய்திருக்கும் மற்ற கணிதங்களையும் நான் பார்வையிடலாமா” என்று குழைந்து கொண்டே கேட்டார் அலி.

உமார் சற்று நிதானித்து ‘ஐயா நான் உங்கள் உப்பைத் தின்று வருகிறேன். உங்கள் காலடியில் இருந்து எத்தனையோ அறிய முடியாத விவரங்களை அறிந்திருக்கிறேன். நீங்கள் செய்யச் சொன்ன வேலைகளை நான் செய்து வந்திருக்கிறேன். ஆனால் இந்தக் கணித முறைகளெல்லாம், நான் சொந்தமாகக் கண்டு பிடித்தவை. அவற்றை உங்களுக்குக் காண்பிக்க இயலாதவனாக இருக்கிறேன். மன்னிக்க வேண்டும்” என்றான்.

பேராசிரியர் அலியின் கண்களிலே கடுகடுப்பு மிதந்தது. “அவற்றை வைத்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?”

“இன்னும் நான் அதைப்பற்றி ஒன்றும் முடிவு செய்யவில்லை” என்று கொஞ்சங்கூட அஞ்சாமல் உமார் பதில் கூறினான்.

“நீ செய்த கணிதங்களை யெல்லாம் பெட்டிக்குள்ளே பூட்டி வைத்திருக்கிறாய் அல்லவா?” என்று கேட்டார் அலி.

“ஆம்” என்றான் உமார்.

அவனை அனுப்பிவிட்டுப் பேராசிரியர் அலி, கன அளவுகளைப்பற்றிய கணக்குகளிலேயே தம் நினைவுகளை செலுத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அன்று பிற்பகல் வகுப்பு நடத்த வேண்டியதையும் மறந்து விட்டார். உமார் செய்தது போலவே, மற்றொரு கணக்கைச் செய்து பார்த்தார். வெற்றி கிடைக்கவில்லை. அடையாள முறை மூலம் செய்ய வேண்டிய கணிதத்தை இடைவெளிக்கணித முறையில் செய்யலாம் என்பதை அவரால் நம்பக்கூட முடியவில்லை. செய்யமுடியும் என்று உமார் செய்து காண்பித்துவிட்டான். இருந்தாலும் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சலிப்போடு தன் பேனாவையும் தாளையும் வீசி எறிந்தார்.

------------

9. எதிலும் ஐயமே; இதயம் குழம்புதே.

கிழவர் அலி மறுபடியும் தம் மாணவன் உமாரைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பம், ஒரு வாரத்திற்குப் பிறகு தற்செயலாக ஏற்பட்டது. அன்று மாலையில் அவருடைய வாசலில் ஒரு குதிரை வந்து நின்றது. ஒரு குதிரையுடன் கூட வந்த பனிரெண்டு பேர்களிலே, ஓர் அடிமை குதிரை நின்ற இடத்திலிருந்து பேராசிரியரின் வீட்டு வாசல் வரையில் ஒரு நடைமிதியை விரித்தான். மற்றொருவன் உள்ளே நுழைந்து “பேராசிரியர் அலியைப் பார்ப்பதற்காக டுன்டுஷ் வந்திருக்கிறார்” என்று கட்டியம் கூறினான்.

பட்டாடைகளுக்குள்ளே உருண்டு திரண்ட உடலும் நீலக்கல் பதித்த பெரிய தலைப்பாகையும் கம்பீரமான குரலும் கொண்ட டுன்டுஷ் உள்ளே நுழைந்து பேராசிரியரைக் கட்டி அணைத்துக் கொண்டான்.

“ஆண்டவன் அருள் புரிவாராக! ஞானக் கண்ணாடியில் வாழ்வு நலம் சிறப்பதாக! இன்னும் பல்லாண்டு பல நூற்றாண்டுகள் வாழ்ந்து அறியாமை மிக்க ஏழைகளுக்கு அறிவொளியைக் கொடுத்து வாழ்க! வாழ்க!” என்று வாழ்த்துக் கூறினான் டுன்டுஷ்.

“என்னை அளவுக்கு மிஞ்சி உயர்த்திப் பேசுகிறாய்!” என்று பேராசிரியர் அலி கூற, “நிஜாப்பூர் நகர் முழுவதும் உங்கள் புகழ் ஓங்கி விளங்குகிறது. பேராசிரியர் காரெஸ்மியும், பாக்தாதுக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் அந்த முட்டாள் உஸ்தாத்தும் உங்களுக்கு இணையாவார்களா? என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்! அறிஞர் அலிசென்னா கூட விஞ்ஞான அறிவில் தங்களைக் காட்டிலும் உயர்ந்தவரல்ல” என்று இன்னும் அதிகமாகப் புகழ்ந்தான் டுன்டுஷ்.

இரத்தினக் கம்பளமொன்றில் இருவரும் உட்கார்ந்து, பழங்களும் சர்பத்தும் அருந்தத் தொடங்கினார்கள். டுன்டுஷைப் பற்றி அலிக்கு அதிகமாக ஒன்றும் தெரியாது. அமைச்சருடைய பிரதிநிதிதான் டுன்டுஷ் என்றும், முத்துக்களையும், அழகிய வேலைப்பாடுள்ள பீங்கான் சாமான்களையும், பழைய கையெழுத்துப் பிரதிகளையும் அவன் சேகரித்து வருகிறான் என்றும் அவர் கேள்விப் பட்டிருந்தார். ஆனால் டுன்டுஷ் என்ன பதவியில் இருக்கிறான் என்பதோ, எங்கு குடியிருக்கிறான் என்பதோ அவருக்குத் தெரியாது.

அலி அவர்களின் கணித நூல் எவ்வளவு தூரம் பூர்த்தியாகியிருக்கிறது என்பதைப் பற்றிச் சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு, உமார்கயாம் என்ற மாணவன் ஒருவனைப் பார்க்க வேண்டுமென்று டுன்டுஷ் சொன்னான். தோட்டத்திலிருந்து உமார் அழைத்து வரப்பட்டான். உள்ளே நுழைந்த உமார் அந்த அறையின் ஒரு மூலையிலே, கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்தான். பேராசிரியர் அலி காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு, டுன்டுஷையும், உமாரையும் சந்தேகத்தோடும் கலவரத்தோடும் கவனித்துக் கொண்டிருந்தார்.

டுன்டுஷ் அழுத்தம் திருத்தமான குரலில், “கடந்த மாதம் ஒரு விசித்திரமான செய்தி வந்தது. கிறிஸ்துவர்களின் பேரரசனான ரோமானஸ் யாஜீன்ஸ், தன் நாட்டு மக்களாலேயே பிடித்துத் தாக்கப்பட்டுக் கண் பிடுங்கப்பட்டு கொடுரமாகக் கொல்லப் பட்டானாம்!” என்று கூறினான். உமாரின் முகம் சுருங்கியது. போரும் போரில் இறந்த அவன் உயிர்த் தோழனின் நினைவும் மனதில் தோன்றியது.

“போரில் பிடிபட்ட அந்தப் பகையரசனை நமது சுல்தான் அவர்கள் உயிரோடு விட்டதே அதிசயம், அதைக் காட்டிலும் அதிசயம், அந்த அரசன் தன் மக்களாலேயே கொல்லப்படுவது. இப்படிப்பட்ட ஒன்றை முன்னதாகவே தெரிந்து சொல்ல யாரால் முடியும்” என்று டுன்டுஷ் கேட்டுவிட்டு உமாரை நோக்கினான்.

தன்னிடமிருந்து, பதிலை எதிர்பார்க்கிறான் என்று உணர்ந்த உமார் “ஒருவராலும் முடியாது” என்று கூறினான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு உமார் கயாமை வெளியே அனுப்பிவிட்டார்கள். அவன் போன பின், டுன்டுஷ் மெல்லப் பேராசிரியர் அலியை நோக்கி, “சோதிடக் கலையை நீங்கள் நம்புகிறீர்களா? பின்னால் நடக்கப் போவதை யாராலும் முன்னால் சொல்லி விட முடியுமா?” என்று கேட்டான். “எல்லாம் அல்லாவினால்தான் முடியும் என்பது என் நம்பிக்கை, என்னுடைய சிற்றறிவு, கணித நூல் ஆராய்ச்சியைச் செய்து முடிப்பதிலேதான் ஈடுபட்டிருக்கிறது” என்று மழுப்பினார் ஆசிரியர்.

“நடக்கப் போகும் மூன்று விஷயங்களைப் பற்றி ஒருவன் முன்கூட்டியே சோதிடத்தின் மூலம் குறி சொல்கிறான் என்று வைத்துக் கொள்ளுவோம். அந்த மூன்று விஷயங்களும் தற்செயலாகவே நிறைவேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? உங்கள் அறிவுக்கு என்ன தோன்றுகிறது என்பதையே அறிய விரும்புகிறேன்” என்றான் டுன்டுஷ்.

“மூன்று விஷயங்களில் இரண்டு தற்செயலாக நடந்து விடலாம். ஆனால் மூன்றாவது நடக்கவே நடக்காது. எந்தச் சோதிடனும் மூன்று விஷயங்களைச் சேர்த்து முட்டாள் தனமாகச் சொல்லவே மாட்டான்” என்றார் அலி.

“அப்படிப்பட்ட சோதிடன் உங்கள் மாணவர்களிலேயே ஒருவன் இருக்கிறானே! சற்றுமுன் நாம் பேசிக் கொண்டிருந்தோமே; அவன்தான்” என்று டுன்டுஷ் கூறியதும், “உமாரா? அவன் செய்ய வேண்டியது அது ஒன்றுதான் பாக்கியிருக்கிறது” என்றார் அலி.

“அட; கடவுளே! வேறு என்ன என்ன செய்கிறான்? என்று டுன்டுஷ் கேட்டான்.

“பட்டு நூல்களில் கோர்த்த தந்த மணிகளை உன் விரல்களினால் எவ்வளவு எளிதாகத் தள்ளுகிறாயோ அவ்வளவு எளிதாக அவன் கன அளவுக் கணிதங்களைச் செய்து விடுகிறான்”.

“அப்படியானால் அவனிடம் ஏதோ ஒரு திறமையிருக்கிறது. ஓய்வு நேரத்தில் அவன் என்ன செய்கிறான்?”

“என் புத்தகங்கள் எல்லாவற்றையும் படிக்கிறான். பாலைவனத்தின் ஓரத்திலேதான் தன்னந் தனியாகச் சுற்றுகிறான். பழங்கள் சாப்பிடுகிறான்; சொக்கட்டான் ஆடுகிறான். தான் செய்யும் கணிதங்களை ஒரு பெட்டிக்குள்ளே ஒளித்து வைத்திருக்கிறான்!” என்று வேண்டா வெறுப்புடன் அடுக்கிக் கொண்டே போனார் ஆசிரியர்.

“பாலைவனத்தில் தனியாக ஒருவன் ஏன் நடந்து செல்ல வேண்டும்? உங்கள் பகுதியிலே யாரும் அழகிய, பெண்கள் மேல் மையல் கொண்டு சுற்றுகிறானா?”

“சொறி பிடித்த சலவைக்காரிகளைத் தவிர வேறு பெண்கள் இந்த பகுதியில் கிடையாது”.

உங்கள் மாணவன் உமார் கயாம் ஒரு விசித்திரமான ஆள்தான்! அவனுடைய ஆற்றல் கண்ணுக்குத் தெரியாத தேவதூதர்களின் சக்தியால் ஏற்பட்டதாக இருக்க வேண்டும். அல்லது பேய், பிசாசுகளின் செயலாக இருக்க வேண்டும். பேய்களின் கலையை மறைமுகமாகப் பயில்கின்ற அந்தப் பையனைத் தாங்கள் கவனித்து வரவேண்டும். அவனைப் பற்றிய விஷயங்களைக் குறித்து, ஒரு மாதம் ஆன பிறகு, குறிப்புகள் உள்ள தங்கள் தாள்களை உறையிலிட்டு மூடி முத்திரை வைத்து, அவன் கையிலே கொடுத்து, நிசாப்பூரிலுள்ள தாக்கின் வாசலில் வெள்ளிக்கிழமை மாலை என்னை வந்து சந்திக்கச் சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு எழுந்த டுன்டுஷ், “அறிவைத் தேடிக் கொண்டிருக்கும் நான் அறிவின் இருப்பிடமாகிய தங்களை விட்டுப் பிரிய நேரிடுவதற்காக வருந்துகிறேன்” என்று சொல்லி விட்டு வெளியேறினான்.

--------------

10. அதிசயத் திறமைக்கு அத்தாட்சிக் கடிதம்!

ஒரு மாதம் ஆன பிறகும்கூட உமாரைப் பற்றிய எந்த விதமான இரகசியத்தையும் பேராசிரியரால் கண்டு பிடிக்க முடியவில்லை. தம் மாணவன் அடையாள முறைக் கணிதத்திற்கு மாறுபாடாக இருப்பதன் காரணமும், புதுவிதமான கணக்குகளுக்கு விடை கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொண்டுள்ள காரணமும் என்னவென்பது அவருக்குப் புரியவில்லை. எந்தவிதமான குறளி வித்தையையும் கையாண்டு, அவன் கணிதங்களைச் செய்யவில்லை என்பது உறுதியாகத் தெரிந்தது. பேயோ, பிசாசோ, கண்ணுக்குத் தெரியாத எந்தப் பொருளோ, அவனுக்கு உதவி செய்யவில்லை என்பதிலும் அவனுடைய சொந்த மூளையைப் பயன்படுத்தியே கணித முறைகளைக் கண்டு பிடித்து விடை காண்கிறான் என்பதிலும் அவர் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருந்தார். எந்தவிதமான முடிவுக்கும் அவரால் வர முடியவில்லை.

திடீரென்று ஒருநாள், உமாரை அவர் சோதிக்கத் தொடங்கினார். “அமைச்சரிடம் நீ எப்பொழுது திரும்பிச்செல்லப் போகிறாய்?” என்று அவர் கேட்டார்.

“திரும்பிச் செல்வதா? அமைச்சரிடமா? நான் அவரைப் பார்த்ததேயில்லையே!” என்று விழித்துக் கொண்டிருந்தான் உமார்.

“அல்லாவின் ஆணையாகக் கேட்கிறேன், எதற்காக என்னிடம் இத்தனை நாட்களாகத் தங்கியிருந்தாய்?”

“என் நண்பன் ரஹீம் போர்க்களத்தில் மாண்டு விட்டான், அவனுடைய பிரிவை மறப்பதற்காக ஒரு வேலையில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணத்துடன் நிஜாப்பூரை விட்டுப் புறப்பட்டு தங்களிடம் படிக்கவந்தேன்” என்றான் உமார்.

“எந்த விஷயத்தைப் படித்து எப்படிப்பட்ட வேலையில் ஈடுபட நீ எண்ணியிருக்கிறாய்?” என்ற பேராசிரியர் ஒரு நீண்ட பிரசங்கமே செய்யத் தொடங்கிவிட்டார்.

“முதலில் அறிவு எப்படி உண்டாகிறது என்று பார்க்கவேண்டும். தீர்க்க தரிசிகளின் மூலமாக அறிவு இந்தச் சிறிய உலகத்திற்கு இறக்கிகொண்டு வரப்பட்டது. தீர்க்க தரிசிகளிடம் இயற்கையாகவே இருந்து விளங்கிய உள்ளொளியின் உதவியால்தான் காணாத உலகத்திலிருந்து அறிவைக் கல்லும் மண்ணும் நிறைந்த இந்த உலகத்திற்குக் கொண்டு வந்தார்கள். இந்த உலகில் அறிவை உண்டாக்கியவர்கள் தீர்க்கதரிசிகள் என்றால் அதை வளர்த்தவர்கள் தத்துவஞானிகள். தத்துவஞானிகள் தீர்க்கதரிசிகளின் வேத வாக்குகளை ஆராய்ந்து, விஞ்ஞானங்களில் திறமைபெற்று, சாதாரண மனிதர்களும் புரிந்துகொள்ளும்படி போதித்தார்கள். அவர்கள் இல்லாவிட்டால் அறிவுக் கலைகள் அனைத்தும் மக்களுக்குத் தெரியாமல் மறைந்து போயிருக்கும். மிக உயர்ந்து விளங்கிய அந்த தீர்க்கதரிசிகளைக் காலவரிசை முறைப்படி பார்க்கும்போது முதலாவதாக மூசாநபியும், அடுத்ததாக நாசரி ஈசாநபியும், மூன்றாவதாக முகமது நபி அவர்களும் வருகிறார்கள். தத்துவ ஞானிகளைப் பற்றிப்பேசும்போது அறிஞர்களுக்குள்ளே வேற்றுமையான கருத்துக்கள் நிலவுகின்றன. நான் அறிந்த வரையிலும், பிளேட்டோவும் அரிஸ்டாட்டிலும், நமது பேரறிஞர் அலி சென்னாவும் மக்கள் உள்ளத்திலே அறிவு விளக்கை ஏற்றி வைத்தவர்கள் ஆவார்கள்.

தத்துவஞானிகளை அடுத்துக் கவிஞர்கள் வருகிறார்கள், கவிஞர்களின் திறமையோ ஆபத்தானதாகும். அவர்கள் தங்கள் அபூர்வமான கற்பனையைப் பயன்படுத்திப் பெரியனவற்றைச் சிறியதாகவும் சிறியனவற்றைப் பெரியனவாகவும் மாற்றியமைத்து விடுவார்கள். கோபத்தையோ, காதல் உணர்ச்சியையோ தூண்டி விடுவதன் மூலம் விருப்பையும் வெறுப்பையும் வளர்த்து உலகில் பெரியனவும் சிறியனவுமான பொருள்களைப் படைத்து விடுவார்கள்.

கவிஞன் கற்பனையைத் தூண்டி விடுவானே தவிர, அறிவைப் பாகுபடுத்தி விளக்க இயலாதவனாக இருக்கிறான். அதனால் தத்துவவாதியின் திறமையைக் காட்டிலும் அவன் கலை தாழ்ந்திராதுதான். ஆனால் கணித விஞ்ஞானிகள் உழைப்பின் பலனோ அழிவில்லாதது. ஆண்டவன் ஒருவனே உண்மையான நிலையை அடைகிறான். அறியாமை யுலகத்திலிருந்து, அறிவுலகத்திற்குப் போகக்கூடிய பாலத்தைக் கட்டுபவன் கணிதமேதையே! அப்படிப்பட்ட கணிதக் கலையிலே அடையாள முறைக்கணிதமே மிகவும் நன்மை பயப்பது, சிறந்தது, உன்னுடைய திறமை முழுவதையும் நீ அக்கணித முறையில் தேர்ச்சி பெறுவதற்காகப் பயன்படுத்து வாயென்று எதிர்பார்க்கிறேன்.” என்று கூறிமுடித்தார்.

அவர் தன்னிடத்துக் காட்டிய அக்கறை, உமாரின் உள்ளத்தைத் தொட்டது. தன்னுடைய எண்ணத்தை அவரிடம் வெளிப்படுத்தக்கூடிய சொற்களைத் தட்டுத் தடுமாறி நினைவுக்குக் கொண்டு வந்து, “நட்சத்திரங்களின் போக்கை அறிந்து, ஆராய்ந்து விடை காண வேண்டுமென்பது என் ஆசை!” என்று கூறினான். “நட்சத்திரங்களைப் பற்றியா? அது சோதிடக்கலையைச் சேர்ந்ததல்லவா? சோதிடமென்பது, கோளங்களுக்கும், மனித காரியங்களுக்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றியதல்லவா? அதற்கும் கணிதத்திற்கும் சம்பந்தம் இல்லையே!” என்றார் ஆசிரியர்.

“இருந்தாலும் விஷயம் ஒன்றுதானே!”

“என்ன சொன்னாய்! என் புத்தகத்தில் உள்ள விஷயமும், ராஜ சோதிடனின் கூற்றும் ஒன்றா? அது தவறு. இன்னொரு முறை அதை என் காதில் படும்படி சொல்லாதே”.

“இருந்தாலும், ஒரு கலையின் மூலம் பெறப்படும் உண்மையும், வேறொரு கலையின் மூலம் பெறப்படும் உண்மையும் ஒன்றுதானே?”

“அப்படியல்ல மகனே; இந்த மாதிரியான வீணான எண்ணங்களை யெல்லாம் கொண்டு அவதிப்படாதே. நீ இளைஞன். காலம் வரும்போது அனுபவத்தின் மூலம், ஒரு கலை, மற்றொரு கலையின் பகுதியல்ல என்பதை உணர்ந்து கொள்வாய். கணிதக் கலையொன்றுதான் உண்மையான அறிவையுண்டாக்கக் கூடியது. உன்னுடைய கவனமெல்லாம் அதிலேயே செலுத்தப்பட வேண்டுமென்பதுதான் என் விருப்பம். நாளைக் காலையில் நான் உனக்கொரு கடிதம் தருகிறேன். அதையெடுத்துக் கொண்டு நிஜாப்பூருக்குச் சென்றால், அங்கே உன்னை ஆதரிக்கக்கூடிய ஒருவரைச் சந்திப்பாய். உன் பயணம் வெற்றி பெறுவதாக!” என்று வாழ்த்தினார். உமார், ஆசிரியரிடம் எவ்வளவோ பேச வேண்டுமென்று எண்ணினான். ஆனால், தன் கருத்தை அவரிடம் முழுவதும் விளக்க முடியவில்லையே என்று வருந்தினான். அவரை விட்டு எழுந்து செல்லும் போது, தன் வாழ்வின் மற்றொரு கதவும் அடைப்பட்டுவிட்டதாகத் தோன்றியது. அவன் சென்ற பிறகு பேராசிரியர் அலி, பேனாவும் வெள்ளைத் தாளையும் எடுத்து எழுதத் தொடங்கினார்.

“என்னுடைய மாணவன் உமார்கயாம் பாக்தாதுக் கல்லூரிப் பேராசிரியர் உஸ்தாது அவர்களுக்குச் சமமான திறமையுள்ளவன் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். எந்த விதமான கணித பிரச்சனைகளுக்கும் விடைகாணக்கூடிய அபூர்வ சக்தியொன்று அவனிடம் இருக்கிறது. ஆனால் அது எது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த அபூர்வத் திறமையைக் கொண்டு அவன் என்ன செய்வானென்று கூற முடியவில்லை. ஏனெனில் அவன் இன்னும் தன் கற்பனைக்கு அடிமையாகவே இருக்கிறான்.

என் வீட்டிலே வளர்ந்த அவனுடைய இந்த அறிவுத் திறனை தாங்கள் அறிந்த ஆதரவாளராக ஏற்றுக் கொள்ளும்படி செய்யுமாறு வேண்டுகிறேன். மேற்படி ஆதரவாளர்களுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டவன் அடியவன் அலி.”

மை உலர்ந்த பிறகு, கடிதத்தை மடித்து தன்னுடைய முத்திரையைப் பதித்து “டுன்டுஷ் பெருமகனார், தாக்கின் வாசல், நிஜாப்பூர்” என்று முகவரி எழுதினார்.

---------------

11. காத்திருந்தவளுக்கு ஆத்திரம் பொங்கியது!

அடுத்தநாள் வெள்ளிக்கிழமை அன்று காலையில், பேராசிரியர் அலி அவர்கள் கொடுத்த கடிதத்தை வாங்கிக் கொண்டு நிஜாப்பூரை நோக்கிப் பயணம் புறப்பட்டான். கால்நடையாகவே போய்க் கொண்டிருந்த உமார் வழியில் உப்பு ஏற்றிக் கொண்டு போகும் ஒட்டகச் சாரி ஒன்றைக் கண்டான். ஒட்டகங்களை நடத்திக்கொண்டு சென்ற அந்த மனிதர்கள் இரக்கப்பட்டு, உமாரைத் தங்கள் கழுதைகளில் ஒன்றின்மேல் ஏறி வரச் சொன்னார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டும் அவர்கள் பாடிய தில்லானாப் பாடல்களைக் கேட்டுக் கொண்டும், சென்றபடியால் கொளுத்தும் வெயிலின் கொடுமையையும் பொறுத்துக் கொண்டு போக முடிந்தது.

நிஜாப்பூருக்கு வந்தவுடன் அவன், நேரே தக்கின் வாசல் என்கிற இடத்திற்குப் போனான். ஒரு மசூதிக்கும் தக்கின் வாசலுக்கும் இடையேயுள்ள சந்தில் வரிசையாக உள்ள இறைச்சிக் கடைகளில் ஒன்றில் உட்கார்ந்து உமார் வறுத்தக்கறியும் கவாபும் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். காலை முதல் வெயிலில் பிராயணம் செய்து, அலுத்துப் பசியோடிருந்த அவனுடைய உடல் தளர்ச்சி, சாப்பிட்டவுடன் குறைந்தது. அந்தச் சந்தில் வெயில் குறைந்து நிழலும் வரத்தொடங்கியது, மாலை பொழுது நெருங்கிக் கொண்டிருந்த படியால் பள்ளிக்குத் தொழுவதற்காக மக்கள் வரத் தொடங்கினார்கள்.

ஒல்லியான உருவமொன்று உமாரைக் கடந்து, மெதுவாகப் போய்க் கொண்டிருந்தது. முக்காட்டுக்கு மடிப்புகளுக்கிடையே தோன்றிய அந்தப் பெண்ணின் கரிய விழிகளை உமார் உற்று நோக்கினான். முக்காட்டுக்கு வெளியே நீட்டிக்கொண்டு வளைந்திருந்த அவளுடைய பழுப்பு நிறக் கூந்தலின் சுருளும் அந்தக் கடைக்கண்பார்வையும் உமாருக்கு எங்கோ முன் பழக்கமான மாதிரியாகத் தோன்றியது.

போர்க்ளத்திலே கண்ட அந்த அடிமைப் பெண் ஸோயியின் நினைவு அவனுக்கு ஏற்பட்டது. கடையிலிருந்த அவன் விரைவாக எழுந்து, தன் புத்தகங்களையும் கையில் எடுத்துக் கொண்டு, திரும்பிப் பார்த்த அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்து சென்றான்.

அவள் மசூதிக்குள்ளே நுழைந்து விட்டாள். பின் தொடர்ந்து சென்ற உமாரின் காதுகளிலே, “நம்பிக்கையுள்ளவர்களே! தொழுகைக்கு வாருங்கள்! எல்லாம் வல்ல அல்லாவை ஏற்றிப் பணிவதற்கு வாருங்கள்!” என்ற அழைப்பு விழுந்தது. உள்ளே நுழைந்து ஓரிடத்தில் மண்டியிடுவதும், பிறகு எழுந்திருந்து மற்றோர் இடத்திற்கு நகருவதும் அந்த இடத்தில் மண்டியிடுவதும் இப்படியாக உமார் முன்னேறிக் கொண்டிருந்தான்.

அவனைச் சுற்றி எல்லோரும் வாய் முணுமுணுத்துக் கொண்டே தொழத்தொடங்கியதும் அவனும், தன்னுடைய செயலை விட்டு விட்டு மண்டியிட்டபடியே தொழுகையில் ஈடுபட்டான். தொழுகை முடிந்ததும் எல்லோரும் எழுந்து செல்ல வெளியே கிளம்பினார்கள். அவன் பெண்கள் பக்கம் தன் கண்களைச் செலுத்தினான். நீல முக்காட்டுக் காரியான அந்தப் பெண், மற்ற பெண்களுக்குப் பின்னே நிற்பதும், வேலைக்காரி யொருத்தியுடன் வெளியே புறப்படுவதையும் கண்டு பின்தொடர்ந்தான். வெளி முற்றத்தில் வந்து தன் கால் மிதியடியை மாட்டிக் கொண்ட அவள், அதைச் சரியாக மாட்டிக் கொள்ளாததால் சிறிது நடந்தவுடன் ஒரு மிதியடி சிதறிக் காலிலிருந்து நழுவிச் சிறிது தூரத்தில் விழுந்தது. அதை எடுப்பதற்காக குனிந்த அவள் அருகில் நிற்கும் உமாரைக் கண்டாள்.

“உமார்! என் பிறந்த தினத்தன்று நீ ரோஜாப் பூ அனுப்பி வைக்கவில்லையே? ஏன்?” என்று கேட்டு விட்டு, அவன் பதில் கூறுவதற்கு முன்னாலேயே, நழுவிபோய் வேலைக்காரியுடன் சேர்ந்து நடை கட்டி விட்டாள். மூன்று ஆண்டுகளுக்கு முன்னாலே சிறுமியாயிருந்த யாஸ்மி தனக்கொரு ரோஜாப் பூக் கொடுத்தது நினைவுக்கு வந்தது.

பிறகு அவன் இறைச்சிக் கடைகளைக் கடந்து தாக்கின் வாசலுக்கு வந்தபோது, அந்த வாசல் கதவுகள் மூடப்பட்டிருந்தன. துருக்கிய வீரர் ஈட்டிகளுடன் அங்கே காவல் செய்து கொண்டிருந்தார்கள்.

“கயாம்! ஏன் இவ்வளவு காலந் தாழ்ந்து வருகிறாய்?” என்ற கரகரத்த குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். குதிரை மீது வந்து நின்று கொண்டிருந்த டுன்டுஷை அவன் அடையாளங் கண்டுகொண்டான்.

பேராசிரியர் கொடுத்த கடிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினான். அவன் அதை உடைத்து அருகில் இருந்த விளக்கு வெளிச்சத்தில் படித்துப் பார்த்தான்.

பிறகு அதை மடித்து இடுப்பிலே சொருகிக் கொண்டான். ஒரு வெள்ளி நாணயத்தை எடுத்து அவன் உமாரிடம் கொடுத்தான். பேராசிரியர் கடிதம் அவன் உள்ளத்தில் விருப்பம் உண்டாக்கியதா இல்லையா என்பது உமாருக்குப் புரியவில்லை. பேராசிரியரோ, அவன் உமாரிடம் அன்பாக நடந்து கொள்வான் என்றுதான் கூறியிருந்தார்.

“நிசாப்பூரில் உன் வீடு எங்கேயிருக்கிறது?” என்று டுன்டுஷ் உமாரைக் கேட்டான்.

“குவாஜா அலி அவர்களின் நட்புக்குரிய பெரியவரே! தற்சமயம் எனக்கென்று ஒரு வீடும் கிடையாது”

“அப்படியானால் எனக்குத் தெரிந்த குதிரைச் சேணம் செய்பவன் ஒருவன் இருக்கிறான். உன்னை ஆதரித்துக் காப்பாற்றும்படி அவனிடம் சொல்லுகிறேன். நீ அதற்குப் பதிலாக அவனுடைய எட்டு குழந்தைகட்டும் புனிதமான கொரான் படிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்று கூறினான்.

அவன் பேசிய போக்கும் அலட்சியமான பார்வையும் ஏதோ நாய்க்கு ரொட்டித் துண்டை விண்டுத் தூக்கி எறிவது போல் இருந்தது. உமாரை அவமதிப்பதற்காகவே அவன் பேசியது போலிருந்தது.

உமாருக்கு ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு வந்தது. “இந்த மாதிரியான ஆதரவை எழுதப் படிக்கத் தெரிந்த யாராவது ஒரு காஜாப் பையனுக்குக் கொடுங்கள். ஏழைகளைக் காப்பாற்றும் இதயம் வாய்ந்தவரே! நான் விடைப் பெற்றுக் கொள்ளுகிறேன்” என்று எரிச்சலோடு கூறினான்.

“தாராளமாக” என்று கூறிவிட்டுத் தன் குதிரையைத் தட்டிவிட்ட டுன்டுஷ், வழியில் பழங்கந்தைகளுக்குள்ளே நெளிந்து கொண்டு பிச்சை கேட்டுக் கொண்டிருந்த பிச்சைக்காரன் அருகில் நின்று, அவன் பாத்திரத்தில் ஒரு நாணயத்தைப் போட்டான்.

“பழுப்புநிற உடையணிந்த அந்த இளைஞனைப் பின்பற்றிச் செல். அவன் என்ன செய்கிறான் என்பதையும் எங்கு தங்குகிறான் என்பதையும் கண்டு அறிந்து வந்து எனக்குச் சொல்” என்று வேறு யாருக்கும் கேட்காமல், பிச்சைக்காரன் காதில் மட்டும் படும்படியாக மெல்லிய குரலில் கூறினான்.

“உத்திரவு” என்று வணங்கிக் கூறிய அந்தப் பிச்சைக்காரன், அன்று கிடைத்த பெரும் வரும்படியை எண்ணிச் சந்தோஷப்பட்டான்.

உமாரோ, பல நிழல்களுக்கிடையே ஒரு நிழல்போல் அங்கிருந்து நடந்து செல்லத் தொடங்கினான். டுன்டுஷ் தன்னை அப்படி ஏளனப்படுத்தியதை நினைக்க அவனுக்குப் பொறுக்க முடியாமல் வந்தது. அவன் ஆதரிக்காவிட்டால் பிழைக்க முடியாதா என்ன? தன் கையிலே உள்ள இரண்டு நாணயங்களையும் எடுத்துப் பார்த்துக் கொண்டான். அவை உள்ள வரையிலே அவன் தனக்குத்தானே ஒரு ராஜாதான்! மேலும், முன் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று, புல்காயும் அந்த மொட்டை மாடியிலே படுத்துக் கொள்ளலாம். ஏதாவது உலகச் செய்திகளை உரைத்தால் அங்குள்ளவர்கள் தாமாகவே அவனுக்கு உணவு படைக்கத் தொடங்குவார்கள். சாப்பிட்டு விட்டு மேலே படுத்துக் கொள்ளலாம். ஆனால் ரஹீம் மட்டும் அங்கேயிருந்தால்...? எந்தவிதமான கவலையும் பட்டிருக்க வேண்டாமே!

நடந்து கொண்டே வந்தவன் புத்தகக் கடை வீதி வழியாக வந்து அந்த நீருற்றின் அருகிலே நின்றான். தண்ணீர் பானையுடன் அங்கு வந்து சேர்ந்த அந்தப்பெண், குனிந்து பானையில் தண்ணீர் எடுக்க வளைந்தாள். பானையை அமிழ்த்திப் பிடித்துத் தண்ணீர் மொண்டு கொண்டிருந்தாள். அவன், பக்கத்திலேயிருந்த பாறையில் போய் உட்கார்ந்தான். அவள், அவனைக் கவனிக்கவில்லை.

“யாஸ்மி” என்று அவன் மெதுவாகக் கூப்பிட்டான்.

அந்தப் பெரிய மரத்தடியிலே இருட்டின் ஊடேயும், முக்காட்டுத் துணிக்கு ஊடேயிருந்த அவளுடைய கண்கள், அவனுடைய கண்களைச் சந்தித்தன.

நெற்றியிலே புரண்டு கொண்டிருந்த கூந்தலின் சிறு கற்றையை ஒதுக்கி விட்ட அவளுடைய மெல்லிய மூச்சு வேகமாக ஓடிக் கொண்டிருப்பது அவன் செவிகளில் தெளிவாகக் கேட்டது.

இருட்டிலே நிற்கும் அந்த யாஸ்மி, புதுமையானவள், முன்போல் சிறுமியல்ல, அழகுவந்த பருவமங்கை. பன்னீர் மணம் கமழும் ஆடைகளும், முக்காடும் அணிந்து அமைதியே உருவமாக நிற்கிறாள். அவளுடைய கையிலிருந்த பானை ஒரு பக்கமாகச் சாய்ந்து அதில் இருந்த தண்ணீர் கீழே வழிந்து கொண்டிருந்தது. இருந்தும் அவள் அசையவில்லை.

“யாஸ்மி யாருக்காக காத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று மெல்லிய குரலிலே உமார் ஆசை பொங்கக் கேட்டான்.

“முட்டாளே! பெரிய அடி முட்டாளே! நான் யாருக்காகவும் காத்திருக்கவில்லை” என்று குறும்புச் சிரிப்புடன் கூறிவிட்டுக் கையிலிருந்த பானை நழுவிக் கீழே விழுந்ததையும் கவனியாமல் ஓடினாள். பைத்தியம் பிடித்தவள் போல் ஓடினாள். ஓடி மறைந்தே போய் விட்டாள்.
அவன் திரும்பி வருவான் வருவான் என்று ஒவ்வொரு நாளும் அவள் எதிர்பார்த்துக் காத்திருந்தது மூன்று வருடங்கள்! காத்துக் காத்திருந்து, அலுத்துச் சலித்துப்போன உள்ளம் பித்துப் பிடித்துப் போன்தில் வியப்பில்லை.

உமாரோ ஒன்றும் புரியாமல் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

மரத்தின் அடியிலிருந்து, கந்தையுடை பூண்ட ஓர் உருவம், நொண்டிக் கொண்டே அவன் அருகில் வந்தது அவனுடைய முகத்தைக் கூர்ந்து பார்த்தது.

பிறகு, “ஐயா! ஏழை, அருள் புரியுங்கள்! ஆண்டவனின் பெயரால் யாசிக்கிறேன், அருள் புரியுங்கள்!” என்று அந்தப் பிச்சைக்காரன் கெஞ்சினான்!

---------------

12. இடு காட்டின் பக்கம் பூத்துக் குலுங்கிய மணம்!

அன்று வெள்ளிக் கிழமை; சாந்தி தரும் நாள். கல்லறைகளே எங்கும் நிறைந்த அந்த இடுகாட்டை நோக்கிப் பெண்கள் கூட்டங் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள். இறந்து போனவர்கள் சாந்தியடையப் பிரார்த்திப்பதற்காக அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். இடுகாடு முழுவதும், இடிந்து கிடக்கும் கல்லறைகளின் மீதுங் கூட, என்னென்னவோ மாதிரியான பூஞ்செடிகள் எப்படியோ முளைத்துப் பூப்பூத்து அந்த இடுகாடு முழுவதும் ஒரு விநோதக் கம்பளம் விரித்து வைத்தது போல் காட்சியளித்தது. ஆண்களின் கல்லறைகளின் மீது தலைப்பாகை உருவமும் பெண்களின் கல்லறைகள் மீது மலர்க் கொத்துகளின் உருவமும் பொறிக்கப் பட்டிருந்தன. அவற்றின் மீது சூரிய ஒளி பட்டுத் தகதகத்தது, மரங்களின் நிழலிலே, முக்காடிட்ட வனிதாமணிரத்தினங்கள் கூடியிருந்தார்கள். அவர்கள் கல்லறைகளைச் சுற்றி வட்ட வட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களின் செம்மலர் வாயிதழ்கள் அசைந்து கொண்டிருந்தன. அதாவது பேசிக் கொண்டிருந்தன. சிறு குழந்தைகள் புற்றரையிலே தவழ்ந்து கொண்டிருந்தன. பிரார்த்திப்படைவிடப் பேசிக் கொண்டிருப்பதில் அவர்களுடைய உற்சாகம் அதிகமாயிருந்தது. சில பெரிய பெண்கள் ஒரு வட்டத்திலிருந்து ஒரு வட்டத்திற்கு மாறி மாறிப் போய்க் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் தங்களைப் பார்க்காத போது மரங்களினூடே மறைந்து போனார்கள். பெண்கள் பிரார்த்தனை செய்யும் நேரத்திலே ஆண்கள் அங்கே நுழைவது கிடையாது.

அந்தக் கூட்டத்தின் கண்களுக்குத் தப்பி வந்த யாஸ்மி, மரங்களினூடே புகுந்து ஆற்றங்கரையோரமாக வெகுதூரம் வந்து விட்டாள். கடைசியில் அலுத்துப் போய் ஒரு கற்பாறையின் மேலே கால் நீட்டியபடி உட்கார்ந்தாள். அவள் தலைக்கு மேலே புறாக்கள் வட்டமிட்டன. அந்தப் புறாக்கள் பக்கத்திலே பாதியிடிந்து கிடந்த சுவர்களையே தங்கள் இருப்பிடமாகக் கொண்டிருந்தன. அந்தச் சுவருக்கு மேலே கூரை கிடையாது. ஏனெனில் அது அந்தச் சுவருக்குள்ளே உயர்ந்து விளங்கிய பாழடைந்த கோபுரத்தின் சுற்றுச் சுவராகும். ஆற்றையும் இடுகாட்டுக்கப்பால் இருந்த வெளியையும் கண்காணித்துக் காவல் செய்வதற்காகக் கட்டப்பட்ட கோபுரம் அது. ஆனால், இப்பொழுது பல ஆண்டுகளாக நாட்டிலே அமைதியே நிலவி வருவதால், காவல் தேவையில்லையென்று கை விடப்பட்டது. கோபுரமும் ஓரளவு பாழாகி விட்டது. இப்பொழுது அந்தக் கோபுரத்திலே புறாக்கள் குடியிருக்கின்றன. உமாரைப் போல் அலைந்து திரிபவர்க்கும் சமயா சமயங்களில் அது பயன்பட்டு வந்தது. இரவில் நட்சத்திரங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு, அது உமாருக்குப் பெரிதும் பயன்பட்டு வந்தது.

உமாரும், யாஸ்மி அருகில் வந்து சேர்ந்தான். கதிரவனுக்கெதிரே புறாக்கள் வட்டமிட வட்டமிட, புறாவின் இதயம் போல வெண்மையான யாஸ்மியின் ஆசை எண்ணங்களும், சுழன்று சுழன்று எழுந்தன. இந்த மாதிரியான நேரத்தில் என்ன செய்வதென்று யோசித்தாள். தன் அக்காள் செய்தது போல, பக்கத்தில் இருந்தவன் மீது பார்வையை வீசி, அவன் தன்னை முழுமையாக மறந்து, தன்மேல் மாறாக்காதல் மயக்கங் கொள்ளும்படி ஆசை மொழிகளை அடுக்கிப்பேச எண்ணினாள். ஆனால் அவளுடைய கைகள் நடுங்கின. வார்த்தைகள் தடுமாறின. அவனோ நெடுநேரத்திற்குப் பேசாமலே உட்கார்ந்திருந்தான். அவனுடைய கண்களிலே ஒரு பசியிருந்தது.

“ஏதாவது பேசு!” என்றாள் அவள் ஆசையோடு.

“எதைப்பற்றிப் பேசுவது? யாஸ்மி” என்று முகத்தைக் கூடத் திருப்பாமல் உமார் பதில் சொன்னான்.

“நீ போருக்குப் போயிருந்தாயே, அங்கே சுல்தானைப் பார்த்தாயா? பல நகரங்களிலும் பல பெண்களைப் பார்த்திருப்பாயே? வேறு என்ன என்ன பார்த்தாய்! அவர்கள் எப்படி எல்லாம் இருந்தார்கள்? அவற்றை யெல்லாம் சொல்லு” என்றாள். அந்த நீண்ட கொரசான் வீதியும், ருஸாவும் அவன் நினைவுக்கு முன்னே தோன்றக் கண்டான்.

“அதுவா? விஷயம் ஒன்றுமில்லை, சொக்கட்டான் காய்களைப்போல அங்குமிங்கும் நாங்கள் உருட்டப்பட்டோம். கடைசியில் பெட்டிக்குள் அள்ளிப் போட்டு மூடப்பட்டவர்களாகி விட்டோம். போரைப் பற்றி யாரால் விளக்கிப் பேச முடியும்?" யாஸ்மி, தன்னுடைய இள வயதுக் கனவையும், வெள்ளைக் குதிரையில் ஏறி வரும் இளவரசனையும், அவன் தன்னை அழைத்துச் சென்று இருக்க வைக்கும் அன்னத் தடாகமுள்ள அரண்மனையையும் நினைத்துக் கொண்டாள்.

“நீ நிசாப்பூரிலே என்ன செய்யப் போகிறாய்?”

“யாருக்குத் தெரியும்?

“நீ திரும்பவும் போய்விடப் போகிறாயா?”

உமார் தலையை “இல்லை” என்பது போல ஆட்டினான். அவனுக்கு நிசாப்பூரை விட்டுப் போகவே மனமில்லை. யாஸ்மியைத் தவிர வேறு எதையும் நினைக்கக்கூட அவனால் முடியவில்லை. யாஸ்மிதான் எவ்வளவு தூரம் மாறிவிட்டாள்? சின்னஞ்சிறு சிறுமியாக இருந்த அவள், கருத்தைக் கலைக்கக் கூடிய அழகிய வெளவன மங்கையாக மாறிவிட்டாள். இருந்தும் அவள் மாறி விடவில்லை.

கன்னத்திலே கை வைத்தபடி தூரத்திலே இடுகாட்டிலிருந்து வெளிக்கிளம்பி நகரத்தை நோக்கி நகரும் பெண்களின் சிறிய உருவங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஞானக்கண்ணாடிப் பேராசிரியரின் அன்புக்குரிய மாணவன் நீயென்றும், நீயே ஒரு பேராசிரியராகப் போகிறாயென்றும் பேசி கொள்கிறார்களே, அது உண்மைதானா?”

உமார் இதைக் கேட்டு ஆச்சரியப்படவில்லை. பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட இந்த வதந்தி, அந்தத் தெருவில் உள்ள புத்தகக் கடைக்காரர்களிடமெல்லாம் பரவிவிட்டது. அதையே யாஸ்மியும் கேள்விப்பட்டிருக்கிறாள். புன்சிரிப்புடன் அவன் சொன்னான்.

“எனக்கு வேலை செய்வதற்கு ஓர் இடமும் கிடைக்கவில்லை; என்னை ஆதரித்துக் காப்பாற்றுவதற்கு யாரும் இல்லை; எனக்குச் சொந்தமாக எதுவுமே இல்லை. ஆசிரியருக்கு அவர் தொழில் பிழைப்பைத் தருகிறது. மதவாதிக்கு அவனுடைய சூழ்ச்சிகள் வாழ்வைத் தருகிறது. எனக்கு என்ன இருக்கிறது?" யாஸ்மி மகிழ்ச்சியுடன் நெருங்கி வந்து நின்று கொண்டாள். உமார் உண்மையாகவே பிச்சைக்காரனாகவே இருந்தாலும் நல்லதுதான். தன்னிடமிருந்து பிரிந்து போகமாட்டான் அல்லவா? அந்த அளவிற்கு அது நல்லது தான் “உனக்கு புத்தியே இல்லை. சோதிடம் சொல்லும் அகமதை விட நீ பெரிய முட்டாள்தான்! அவன் நட்சத்திரங்களைப் பார்த்துக் குறி சொல்வதற்காக நிறையப் பணம் பெறுகிறான். அவனுக்கு ஒரு கருப்பு அடிமையும் பட்டுச் சால்வையும் கூடக் கிடைத்தன. உனக்கு என்ன கிடைத்தன? அதோ பார்! கூட்டம் முழுவதும் கலைந்து விட்டது. பெண்களின் கடைசிக் கும்பல் கூடப் புறப்படத் தொடங்கி விட்டது. நான் போக வேண்டும்” என்றாள் யாஸ்மி.

யாஸ்மியின் பசுமை பொருந்திய கையை உமார் பிடித்துக் கொண்டான். இறுகிய அந்தப் பிடியிலிருந்து அவளுக்கு எழுந்து செல்ல மனம் வரவில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தாள். வானத்திலே வட்டமிட்டுக் கொண்டிருந்த புறாக்கள் அந்தப் பாழடைந்த காவல் கோபுரத்தில் அடைந்து விட்டன. வானம் வெறும் வெளியாகக் காட்சியளித்தது. சிறிது நேரம் சென்றதும் இருண்ட வானிலே பிறை நிலா எழுந்து தோன்றியது.

“அதோ பிறை தோன்றி விட்டது. நான் போகிறேன்” என்றாள் யாஸ்மி தீனமாக.

“அந்தப் புது நிலவின் இரு கொம்புகளுக்கும் ஊடே ஒரு நட்சத்திரமும் விரைவில் தோன்றப் போகிறது யாஸ்மி” என்றான் உமார் மெதுவாக ஆசை பொங்கும் குரலில்.

“நான் அதைப் பார்க்கப் போவதில்லை. உன்னுடைய அந்தப் பெரிய கோபுரத்திலே அடைந்து கொண்டு, நீ மட்டும் தன்னந்தனியாகப் பார்! அந்த ஒரு நட்சத்திரத்தை மட்டும் என்ன. எல்லா நட்சத்திரங்களையுமே பார்த்துக் கொண்டிரு! ஆமாம், இரவில் புதை குழிகளிலிருந்து வெளிக்கிளம்பி வரும் பிசாசுகளுக்கு நீ பயப்படுவத்தில்லையா?”

“அந்தப் பேய்கள் என்னுடைய நண்பர்கள், தெரியுமா? அளவுக் கருவிகளையும், நட்சத்திர விளக்குகளையும், கொண்டுவந்து, அவை எனக்கு நட்சத்திரங்களைப்பற்றிய எல்லா ஷயங்களையும் சொல்லித் தரும்!” என்று வேடிக்கையாக யாஸ்மியிடம் உமார் கூறினான். ஆனால் யாஸ்மியின் கண்கள் பயத்தால் விரிந்தன. பல அதிசயமான விஷயங்களைத் தெரிவிக்கக்கூடிய விசேஷ அறிவு ஒன்று உமாரிடம் இருப்பதாக ஊரில் பேசிக் கொண்டார்களே, அது நினைவுக்கு வந்தது. இறந்து போனவர்களின் ஆவிகளோடு அவன் பேசுவது உண்டு போலிருக்கிறது என்பதை கலவரத்தோடு நிச்சயப் படுத்திக் கொண்டாள்.

“அந்தப் பேய்களோடு நீ எப்படிப் பேசுவாய்? எந்த மொழியில் பேசுவாய்?” என்று கேட்டாள் குழந்தைத் தனமாக.

“கண்ணுக்குத் தெரியாத வானதேவதையொன்று, இந்தக் கோபுரச் சுவரிலே இரவில் தினமும் வந்து உட்காருவது வழக்கம். ஆவிகள் பேசுகிற எல்லா விஷயங்களையும் அது தான் எனக்குச் சொல்லும், அதற்கு உலகத்தில் உள்ள எல்லா மொழிகளும் தெரியும்!”

“சும்மா புளுகாதே! தேவதைகளைப் பற்றிப் புளுகுவது சரியல்ல! உண்மையில் பேய்கள் இங்கே வருமா? அதை மட்டும் எனக்குச் சொல்லு.”

தேவதையைப் பற்றி அவன் கூறியது புளுகென்று நினைத்த யாஸ்மிக்குப் பேய்களைப் பற்றிச் சொன்னது மட்டும். ஏதோ உண்மையாகத் தோன்றியது. இருளில் அரைகுரையாகத் தெரியும் கல்லறைகளின் பக்கம் சென்ற கண்ணைத் திருப்பவும் முடியாமல், பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாமல், ஓரக் கண்ணாலே பார்த்துக் கொண்டே, பயந்தபடி அவனை ஒட்டி உரசி உட்கார்ந்து கொண்டாள். உமார் தன் கைகளால் அவளை வளைத்து இறுக அனைத்துக் கொள்ளத் தொடங்கியபோது, பயந்து நடு நடுங்கி விடுவித்துக் கொள்ள முயன்றாள். உடலெல்லாம் வியர்த்தது. அவளுடைய நிலை தாழ்ந்தது. கண்கள் மூடிக் கொண்டன. பயத்தால் அவள் நெஞ்சு பட படவென்று துடித்துக் கொண்டிருந்ததை அவன் உணர்ந்தான். அவள் உதடுகள் வேகமாகத் துடித்தன. “பயமாக இருக்கிறது, பயமாக இருக்கிறது” என்ற மெல்லிய ஒலி அவள் உதடுகளிலே பிறந்தது. அவனுக்கோ விரகதாபத்தால் ஏற்பட்ட உள்ளத் துடிப்பு, அவளுக்கோ கன்னி பயம், பயத் துடிப்பு முனு முணுக்கும் குரலிலே இருவரும் பேசிக் கொண்டார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு அவனுடைய கைகள் அவள் உடலைத் தழுவியபடியே ஊர்ந்து வந்து அவள் கன்னங்களைப் பிடித்துக் கொண்டன. அவளுடைய முகத்தைத் திருப்பியபடியே தன் முகத்தின் எதிரே வைத்தபடி “என்னைப் பார்!” என்றான். ஆனால், அவளுடைய கண்கள் மூடிய படியே இருந்தன. இன்னும் பயம் போகவில்லை.

வெள்ளி நிலவின் வளைவு சிறிது மங்கியது. அதன் நடுவிலே, ஒரு நட்சத்திரம் தோன்றி ஒளி விட்டது. இருண்டவானத் திரையிலே எழுதி வைத்தது போல அது தோன்றியது. உமாரின் உள்ளத்தில் ஒரு விசித்திரமான ஆசையும் உடலெங்கும் தினுசான வேதனையின் துடிப்பும் தோன்றின. துடிக்கும் அவளுடைய வாயிதழ்கள் அவனுடைய உதடுகளிலே பொருந்திய அந்தக் கணத்திலேயே அந்தப் பசி அடங்கியது. அந்த வேதனை தீர்ந்தது!

இறுக்கி அவளை அணைத்துக்கொண்டான். “போதும்! வலிக்கிறது” என்று கூறிய யாஸ்மி பெருமூச்சு விட்டாள். நட்சத்திர வெளிச்சத்திலே அவளுடைய தோள்களிலே ஒளிபட்டுத் தெறித்தது. அவன் கழுத்தைக்கட்டிப் பிடித்திருந்த அவள் கைகள் அவனுக்கருகிலே அவளுடைய உதடுகளைக் கொண்டுவந்து நிறுத்தின. அந்த அழகிய உதடுகளின் கதகதப்பும், தன் நெஞ்சோடு ஒட்டியிருந்த அவளுடைய நெஞ்சின் ஓட்டமும், கண் பார்வையிலே தோன்றிய அவளுடைய காதல் நெருப்பின் வேகமும், அவனுடைய பசியை அடக்கி விட்டன. உலகை மறந்து, ஆழ்ந்த பெருமூச்சு விட்டுக் கொண்டு ஒருவர் அணைப்பிலே மற்றொருவர் பிணைந்து நெடுநேரம் அங்கேயே அவர்கள் கிடந்தார்கள்!

இரவு தொழுகை நேரம் கழிந்து வெகுநேரத்திற்குப் பிறகு அவர்கள் நகரத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். விஷந் தோய்ந்த வாள் போன்ற பிறை மதி விளங்க, தங்கள் காலடியின் கீழே தரையிருப்பது கூடத் தெரியாமல், கனவுலகில் மிதந்து செல்பவர்களைப் போல அவர்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள். புத்தகக்கடை வீதியின் அருகிலே அந்தப் பெரிய மரத்தடியின் கீழேயுள்ள நீருற்றின் பக்கத்திலே வந்ததும், யாஸ்மி அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு “என் இதயத்தில் வீற்றிருக்கும் இதயமே! உன்னை எப்படிப் பிரிந்து செல்வேன்?” என்று ஆசைப் பொங்கத் தவிப்போடு கேட்டாள். அவளுடைய காதலும் ஒன்றேதான். காதலனும் அவன் ஒருவனேதான். பிரிவின் வேதனை அவளைப் பெரிதும் வருத்தியது. கோபுரச் சுவருக்கு வான தேவதை வருவது உண்மைதான். கண்ணுக்குத் தெரியாத அந்த வான தேவதை பாழடைந்த கோபுரத்திற்கு வந்து அவளுடைய ஆத்மாவைத் தொட்டிழுத்து அவள் உடலில் உள்ள ரத்தம் முழுவதையும் உறிஞ்சிக் கொண்டு போனது உண்மைதான், என்று அவளுடைய உதடுகள் முணுமுணுத்தன!
----------------

13. குறிபார்த்த சுல்தான் கொல்லப்பட்டார்!

உமாருக்கு அசதியாக இருந்தது. எனினும் அவனால் தூங்க முடியவில்லை. எதுவும் சாப்பிடவும் அவன் விரும்பவில்லை. அந்த இரவின் மாயாஜாலத்திலேயே அவனுடைய புத்தி லயித்திருந்தது. தன் இருப்பிடத்தின் வாசலிலே சுருட்டிக் கொண்டு கிடந்த அந்தப் பிச்சைக்காரனைப் பார்த்து உமார் புன்னகை புரிந்தான். அந்தப் பிச்சைக்காரன் இரவு வெகு நேரத்திற்குப் பின்னும் விதிகளிலே நொண்டிக் கொண்டு திரிவதை உமார் கவனித்திருக்கிறான். சும்மா இருக்க முடியாமல் அவனுடைய கால்கள் அவனைப் பூந்தோட்டத்திற்கு இழுத்துச் சென்றன. காவற்காரர்கள் தங்கள் கைகளில் விளக்குகளுடன் அல்லாவின் பெயரால் ஒவ்வொரு மணி நேரத்தையும் கூறிக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு உள்ளுணர்வு, அந்த இரவின் விசித்திரக் காட்சிகளைப் பற்றி அவனை எச்சரிக்கையாக இருக்கச் செய்தது. அவனுக்குப் பின்னாலே ஒரு நிழல் மரங்களின் ஊடே நுழைந்து செல்வதும், அந்த உருவம் அனாதைகள் படுத்துத் தூங்கும் ஒரு குளக்கரையை நோக்கி விரைவதும் போலத் தெரிந்தது. இரவின் மாயா ஜாலங்களைப் பற்றி எதுவுமே உணராமல் அந்த அனாதைகள் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு கூனன் அருகிலே வெள்ளைக் கழுதையொன்று தூங்கிக் கொண்டிருந்தது. அந்தக் குளத்தின் கரையோரத்திலே ஒரு துணியை இழுத்துப் போர்த்திக் கொண்டு அந்தக் கூணன் முடங்கி கொண்டு உட்கார்ந்திருந்தான். அந்தக் கூனனையும், கழுதையையும் எங்கோ கனவில் கண்டது போல் இருந்தது உமாருக்கு. இப்போதிருக்கும் நிலையில் அப்பொழுது அந்த இரண்டு உருவங்களும் இருக்கவில்லை என்பதும் தெரிந்தது. ஆனால், எங்கே என்றுதான் நினைவில்லை.

உமார் அந்தக் கூனன் அருகிலே போய் உட்கார்ந்தான். அந்தக் கூனன் தண்ணீரைச் சுட்டிக் காண்பித்து, “கண்ணிர்க் கடலிலே மூழ்கிக்கிடக்கும் இந்த நிலாவைப் பார்த்தாயா அண்ணே!” என்று கேட்டான்.

அந்தக்குளத்தின் பரப்பிலே தோன்றிய பிறை நிலவின் உருவத்தை உமார் குனிந்து கவனித்தான். துன்பம் என்பது இந்த இரவிலே அவனுக்குப் பொருளற்ற ஒரு விஷயமாக இருந்தது. ஆனால் அந்தக் கூணன், துன்பப்படுவதை அவன் உணர்ந்தான்.

ஆதரவான குரலில் கூனனை நோக்கி, “நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான் உமார்.

“நான் காவல் காத்துக் கொண்டிருக்கிறேன். இதோ பார்; மற்றவர்களெல்லாம் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்கள். ஆனால், நான் அமிழ்ந்து போன அந்த நிலவுக்குக் காவலாக இருக்கிறேன். ஏனென்றால், அதுதான் உண்மையான நிலவு. ஆகாயத்திலே இருக்கும் அந்த நிலவு உண்மையானதல்ல; ஏனென்றால் அது மாறுவதில்லை; அழிவதுமில்லை இந்த இரவைப் போலவே எல்லா இரவுகளையும் நினைத்துக் கொண்டு, அது மறைவதும் தோன்றுவதுமாக இருக்கும்” என்று அந்தக் கூனன் விசித்திர விளக்கம் கொடுத்தான்.

உமார், “உண்மை, உண்மை” என்று ஒத்துதினான்.

தூங்கிக் கொண்டிருந்த பிச்சைக்காரர்களைச் சுட்டிக் காட்டிய அந்தக் கூனன், “இதோ, இதோ, இவர்களுக்கெல்லாம் புதிய தலைவன் இருக்கிறான். ஆனால், எனக்கு யாருமில்லை. என்னுடைய தலைவரை நான் இழந்து விட்டேன். என் தலைவர் கருணைக் கதிரவன்; அதிர்ஷ்டமில்லாத அனாதைகளின் ஆதரவாளர்; அடிமையிலே மிகத் தாழ்ந்தவனான, அங்க ஹீனனான இந்த ஜபாரக்கை, அவர் அன்பாக நடத்தினார். கதிரவனின் உலகமான இதை விட்டுக் கதிரவன் பிரிந்து விட்டான்; நம்பிக்கையுள்ளவர்களை விட்டுப் பாதுகாப்பு விலகி விட்டது; ஜபாரக்கிடமிருந்து அவனுடைய உயிருக்கு உயிராய் இருந்தவர் போய் விட்டார். ஆய்லல்லா அல்லல்லா! சுல்தான் ஆல்ப் அர்சலான் கொலை செய்யப்பட்டு விட்டார்!” என்று மிக உருக்கமாகக் கதறினான்.

நீரில் ஆடி அலையும் நிலவின் சிதறிய ஒளியைக் கவனித்துக் கொண்டிருந்த உமார் அவன் சொன்னதை மனதுக்குள் வாங்காமலே, “எனக்குத் தெரியாதே!” என்றுரைத்தான்.

“நிசாப்பூர் முழுவதும் தெரியும் இன்றுதானே சாமர்க்கண்டிலிருந்து அவருடைய உடலைத் தூக்கிக் கொண்டு திரும்பி வந்தோம். அவருடைய விதி அவ்வளவுதான்! அண்ணே! அவருடைய ஆட்சியில் அவர் பலமும் உறுதியும் வாய்ந்தவராகத்தான் இருந்தார். அவரைச் சுற்றி ஒரு பாதுகாப்புப் படையே இருந்தது. இருந்தாலும் விதியின் செயலிலிருந்து விடுபட முடியவில்லை. சாமர்க்கண்டில் ஒரு பிடிபட்ட நாயை அவர் முன்னாலே கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவர் எதிரிலே அந்தக் கைதியைக் கொண்டு வரும்போது, வாள் பிடித்த இரண்டு வீரர்கள் இவனைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த நாய் நம் பேரரசரைப் பார்த்து இகழ்ந்து பேசியது. அதனால் சுல்தான் உள்ளத்திலே கோபம் கொழுந்து விட்டெரிந்தது. தன் கையிலே வில்லையும் அம்பையும் எடுத்து அந்த நாயின் நெஞ்சுக்கு நேரே குறி வைத்தார். அந்த நாயைப் பிடித்துக் கொண்டிருந்த வாள் வீரர்களை விலகி இருக்கச் சொல்லி விட்டு, நாணை இழுத்து விட்டார். ஒரே அம்பிலே கொல்லப்பட்டிருக்க வேண்டிய அந்தக் கைதியின் மேல் அந்த அம்பு படவில்லை. என்றும் குறி தவறாத இயல்புடைய எம் தலைவர் குறி அன்று எப்படியோ தவறி விட்டது. உடனே அந்த நாய் தன் இடுப்பிலே மறைத்து வைத்திருந்த இரு கத்திகளையும் உருவிக் கொண்டு, சுல்தான் அவர்கள் நெஞ்சிலே திடீரென்று பாய்ந்து மூன்று முறை குத்தி விட்டான். நான்கு நாட்கள் கழிந்த பிறகு அவர் அல்லாவின் திருவருளில் கலந்து விட்டார்” என்று கூறி முடித்த அந்த விகடன் ஜபாரக்கின் கன்னங்கள் கண்ணிரில் ஊறிப் போயிருந்தன.

“ஆமென்! சாந்தியுண்டாகட்டும் சாந்தி! சாந்தி!” என்று உமார் முணுமுணுத்தான். அந்தக் கரிய இருளிலே தூரத்துக்கப்பால், ரஹீமின் புதைகுழியும், அதன் அருகிலே பொருமிக் கொண்டிருக்கும் அவனுடைய வேலைக்காரனும் தோற்றமளிப்பதை உமார் கண்டான்!

-------------

14. ஆசைக்கனவுகள் யாவும் பலித்தன.

“அவள் யார் அடிமைப் பெண்ணா? திருமணமானவளா? எப்படியிருப்பாள்?’ என்று டுன்டுஷ் கேட்டான். டுன்டுஷக்கு விவரம் சொன்ன அந்தப் பிச்சைக்காரன் “இருட்டிலே எதைச் சரியாகப் பார்க்க முடிகிறது. அவனோ இளைஞன், இரவும் பகலும் தொடர்ந்து விழித்துக் கொண்டேயிருப்பான் போலிருக்கிறது. எனக்குத் தூக்கம் கண்ணைச் சுற்றிக் கொண்டு வந்துங்கூட, வெள்ளிக்கிழமை இரவு விடாமல் தொடர்ந்து சுற்றினேன். அந்தப் பெண்தான் வீட்டு வேலைகளைப் பார்க்கும்படி ஏவப்படுகிறாள். கடுமையான வேலைகள் எல்லாம் கூடச் செய்கிறாள். ஆனால் அடிமைப் பெண் அல்ல. கலியாணமும் இன்னும் ஆகவில்லை” என்று சொல்லிக் கொண்டு வந்தான்.

“அவள் பெயர் என்ன?”

“யாஸ்மி, அப்துல் சாயித் என்ற மீஷத் நகரத்துத் துணி வியாபாரி அந்தக் கிழட்டுப் புத்தகக் கடைக் காரனிடம், அவன் மகள் யாஸ்மியைத் தனக்கு மணம் செய்து வைக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறான்!”

“அப்துல் சாயித்! ஆம், அவன் ஒரு பெரிய கூடாரமும் ஏராளமான ஒட்டகங்களும் வைத்திருக்கிறான்” என்று டுன்டுஷ் தனக்குத்தானே பேசிக் கொண்டான். அந்தப் பிச்சைக்காரன் கூலியை எதிர்பார்த்துக் காத்திருப்பதைத் தெரிந்து கொண்ட டுன்டுஷ் அவனைப் பார்த்து, “அப்படியானால், அந்தக் கூடாரம் செய்பவனின் மகன் புத்தகக் கடை வீதியை விட்டுப் போக மாட்டான். அங்கேதான் சுற்றிக் கொண்டிருப்பான். என்னிடமிருந்து செய்தி கிடைக்கும் வரை அவளைத் தொடர்ந்து கவனித்து வா. போ” என்றான்.

“செய்தி கொண்டு வருபவன் உங்களுடைய ஆள்தான் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது பிரபுவே?" "உன்னை இந்த மாதிரி காலால் உதைத்து, “கூடாரம் செய்பவன் எங்கேயிருக்கிறான்? என்று கேட்பவன் என்னுடைய ஆளென்று தெரிந்து கொள். அதுவரையிலே தூங்காமல் அவளைத் தொடர்ந்து திரி தெரிகிறதா! நீ தூங்கினால் அதைப் பார்ப்பதற்கும், உன் குறட்டையைக் கேட்பதற்கும் வேறு ஆட்களுக்குக் கண்ணும் காதும் இருக்கின்றன என்பதை மறவாதே’ என்று சொல்லிக் கைநிறைய செப்புக் காசுகளை அள்ளித் தரையிலே கொட்டினான். வீதியில் திரிந்தவர்கள் அதை அள்ளிக் கொள்ளுவதற்குள் பிச்சைக்காரன் குனிந்து புழுதியிலே கிடந்த அந்தக் காசுகளை அவசர அவரசமாகப் பொறுக்கினான். பொறுக்கும் பொழுதே வாயினால் அவற்றை எண்ணிக் கொண்டே வந்து “ஒரு வெள்ளி நாணயத்தின் அளவு மதிப்புக் கூட இல்லையே, உன்மையான உழைப்புக்குக் கிடைத்த பணம்! - பிரபுக்களின் கைப்பிடி தண்ணீர்போன்ற தாராளத்தன்மையாக இருக்கும்!” - என்று முனகி வைது கொண்டிருந்தான். இருப்பினும் டுன்டுஷக்கு அவன் மிக மிகப் பயந்தான். அவன் எந்த மனிதனிடம் வேலை செய்கிறான் என்பது அவனுக்குத் தெரியாமலிருந்தது. அந்த பெரிய மரத்தடியில் இருந்த நீருற்றுக்கு விரைந்து சென்று அங்கே உள்ள கல்லில் உட்கார்ந்து கொண்டான்.

அங்கிருந்தவாறே அவன் பள்ளிக்கூட வாசல் புறத்தில் நடந்த செயல்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். நீண்ட தாடியுடைய பெரிய மனிதர்கள், தங்கள் வேலைக்காரர்களுடன், அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தார்கள். பூங்காவனத்தின் வேலி ஓரத்திலே, வீதியின் வழியாக குதிரைப் படைகள் போய்க் கொண்டிருந்தன. விதியின் சக்கரம் சுழலுவதால் ஏற்பட்ட விந்தை மாற்றத்தின் காரணமாகச் சிந்தனையும் பரபரப்பும் கொண்டவர்களாக நிசாப்பூர்வாசிகள் இருந்தார்கள்.

சுல்தான் இறந்ததால், நகரமக்கள் ஆழ்ந்த துக்கத்தில் இருக்கும்பொழுது மசூதிகளில் தொழுகை நடத்துவார்கள். பிரார்த்தனையின் மத்தியிலே புதிய சுல்தானின் பெயரைச் சேர்த்துக் கொண்டார்கள்.

அழகும், இளமையும் பொருந்திய சுல்தானின் பெயர் மாலிக்ஷா, மக்கள் அவரை இளஞ்சிங்கம் என்று அழைத்து வந்தார்கள்! புத்தகங்களையும் ஆசிரியர்களையும், போலோ விளையாடும் மைதானத்தையும் விட்டு விட்டு விரைந்து வந்த அந்த மாலிக்ஷா முகத்தில் முழுவதும் தாடிவளராத - மத நம்பிக்கையுள்ளவர்களின் காவலனாகவும், கிழக்குக்கும் மேற்குக்கும் பேரரசராகவும் உலகத்தின் இறைவனாகவும், கதிரவனின் உலகமான கொரசான் தேசத்து அமீர்கள் அனைவரும் அடிபணியும் தலைவராகவும் இப்பொழுது விளங்குகிறார்.

இந்த விஷயங்களையெல்லாம் அந்தப் பிச்சைக்காரன் அரைகுறையாகவே தன் காதில் போட்டுக் கொண்டான். அவன் முழுக் கவனமும் உமார் - யாஸ்மி இவர்கள் மேலேயே பதிந்திருந்தது. பகல் நேரத்திலே அவர்கள் இருவரையும் பார்ப்பது அரிதாகவே இருந்தது. இருள் என்னும் திரையுலகத்தை வரைந்த பிறகு, இருளில் உலவும் இரு நிழல்கள் போல அவர்கள் நீருற்று அருகிலே சந்தித்தார்கள். சந்தித்த பிறகு, அவர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் உலகை மறந்தார்கள். வீதியிலே விரைந்து செல்லும் பலவகையான மக்களின் காலடியோசையையும் கூட அவர்கள் கவனிப்பதில்லை.

அந்தப் பெண் போட்டிருக்கும் அந்த கனத்த முக்காடு, அவளுடைய அளவை மட்டுமல்ல, அதிர்ஷ்டத்தையும் மறைத்தது.

அந்த முக்காடு மட்டும் இல்லையானால் அவளுடைய அழகை மட்டும் வெளியுலகம் அறியுமானால், எத்தனை பேர் அவளைச் சுற்றி வருவார்கள்; எத்தனை பேர் அவளைப் பற்றிப் பேசுவார், எவ்வளவு அதிர்ஷ்டம் வரும்! அவளைப் பற்றிப் பிச்சைக்காரன் கொண்டிருந்த கருத்து இது. உமாரைப் பற்றியும் அவன் உள்ளத்திலே ஒரு கருத்து உருவாகியிருந்தது.

படித்த மனிதனான இவனுக்குப் பார்வையும் பழுது, சாப்பாடைப் பற்றிய நினைவே இந்தப் பைத்தியக்காரனுக்குக் கிடையாது. எப்பொழுதாவது மசூதிக்கு அருகிலே உள்ள இறைச்சிக் கடையிலே யாத்திரீகர்களுடன் சாப்பிட்டு விட்டு வருவான். நீரூற்றுக்கு வந்ததும் தண்ணிரைக் குடிப்பான். யாருடனும் பேசுவதில்லை. வெறுந் தண்ணீரைக் குடித்து விட்டுப் பெரிய குடிகாரனைப் போல் திரிவான். பெரிய தோல் பையில் அடைத்து வைத்திருக்கும் மது முழுவதையும் குடித்து வயிற்றை நிரப்பிக்கொண்ட குடிகாரன் போல் காணப்படுவான். இந்தக் குடிகாரத் தன்மையை அடைவதற்கு அந்தப் பைத்தியக்காரனுக்கு ஒரு செல்லாத செப்புக் காசுகூடச் செலவானதில்லை. இதுதான் உமாரைப் பற்றி அவன் உருவாக்கியிருந்த குணச் சித்திரம்.

அடுத்த நாள் காலையில் ஒரு காவற்காரன் வந்து அந்தப் பிச்சைக்காரன் இடுப்பில் தன் செருப்புக் காலால் ஒரு உதைகொடுத்தான். “அழுக்குமுட்டையின் அரசே, தங்களின் பைத்தியக்காரக் கூடாரமடிப்பவன் எங்கே திரிகிறான்?” என்று கேட்டான்.

எரித்து விடுவது போல் அவனைப் பார்த்த பிச்சைக்காரன், உயர்ந்த பதவியில்லாத ஒரு சாதாரண வேலைக்காரன் அவன் என்பதைத் தெரிந்து கொண்டு “மதம் பிடித்த உளறு வாயனே! உன்னையனுப்பியவன் யார்?” என்று பதிலுக்குக் கேட்டான்.

“உன்னுடைய பிணத்தைக் கோட்டை வாசலிலே தொங்கவிட்டுக் காக்கைகள் கொத்தித் தின்னும்படி செய்யக் கூடியவர் யாரோ, அவர்தாம் என்னை அனுப்பினார்” என்று கூறி மற்றும் ஓர் உதை விட்டான்.

“என் கூலி?” என்று அந்த உதையையும் வாங்கிக் கொண்டு பிச்சைக்காரன் கேட்டான். ஒரு வெள்ளி நாணயம் அவன் கைக்கு மாறியது. நீருற்றின் பக்கம் கையைக் காட்டி விட்டு அவன் சென்றவுடன், “உன்னுடைய புதை குழியிலே நாய்கள் வந்து மலங்கழிக்கட்டும்! கழுகுகள் உன் எலும்பைக் கவ்விக் கொண்டு போகட்டும்! ஏழு நரகத்து நெருப்புகளும் உன் உடலை எரித்துச் சாம்பலாக்கட்டும்!” என்று அந்தக் காவற்காரனைச் சபித்தான்!

நீருற்றின் அருகிலமர்ந்திருந்த உமாரை கவனித்துவிட்ட அந்த காவற்காரன், அவனருகில் சென்று, “கோட்டையிலிருக்கும் அதிகாரி உன்னை அழைக்கிறார். உடனே என் பின்னால் வரவும்” என்று உரத்த குரலில் கூறினான்.

அந்தக் காவற்காரனைத் தொடர்ந்து உமார் கோட்டையில் உள்ள முதல் முற்றத்திற்கு வந்தான். அங்கே சேணம் பூட்டிய குதிரைகளின் அருகிலே ஆயுதமணிந்த ஆறு பிரபுக்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். அங்கே டுன்டுஷ் காவற்காரர்களுக்கு ஆணையிட்டபடி, இரைந்து கத்திக்கொண்டு உமாரின் கையைப் பிடித்து வெகுவேகமாகக் காவல்களைக் கடந்து அழைத்துக் கொண்டு, ஆசனங்கள் எதுவும் இல்லாத ஒரு சிறிய அறைக்குள்ளே போய்ச் சேர்ந்தான்.

“அட கடவுளே! குறிப்பிட்ட நேரம் கடந்து எவ்வளவு நேரமாகிவிட்டது. உன்னை அழைத்து வரச் சொன்னது யார் தெரியுமா?” என்று கேட்டுக் கொண்டே, ஒரு மாதிரியாக உமாரைப் பார்த்துக்கொண்டு, “அமைச்சர் நிசாம் அல்முல்க்” என்று கூறினான் டுன்டுஷ்.

உமாருடைய நாடித்துடிப்பு அதிகமாகியது. பெரும் வியப்பாக இருந்தது. உலக அமைப்பாளர் என்ற சிறப்புப் பட்டம் பெற்ற நிசாம் அல்முல்க் அவர்கள் இறந்துபோன சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்களின் அமைச்சர். சுல்தானுடைய மகன் மாலிக்ஷாவுக்கும் அமைச்சராகத் தொடர்ந்து பணியாற்றி வருபவர். சுல்தானுடைய அதிகாரத்தின் கீழே, சர்வாதிகாரியாக விளங்குபவர் என்று கூடச் சொல்லலாம். கற்றறிந்த மேதை அறிவுப்பெருங்கடல் - அவர் ஒரு பெர்ஷியக்காரர். படை தவிர மற்றுமுள்ள அதிகாரம் அனைத்தும் தன்வசப்படுத்திக் கொண்டவர். மாணவனான தன்னை அவர் அழைக்க வேண்டிய காரணம் அவனுக்குப் புரியாத புதிராகவே இருந்தது.

“தாக்கின் கோட்டை வாசலில் நான் உன்னிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டேன். அது ஒரு சோதனைக்காக நடத்தியதே. நிசாம் அல்முல்க் அவர்களின் உத்திரவுப்படி உன்னைத் தொடர்ந்து கவனித்து பாதுகாவலும் செய்து வந்தேன். நீ இளைஞனாகவும் கவலையற்றவனாகவும் இருக்கிறாய். ஆனால் இந்த நேரத்தில் உன்னுடைய முடிவு ஊசலாட்டத்தில் இருக்கிறது. நிசாம் அவர்களே உன்னைச் சோதிக்கப்போகிறார்கள். ஆகையால் நீ கவனமாக இரு” என்று டுன்டுஷ் உபதேசம் செய்தான். அவன் இவ்வளவு பேசியும் உமாருக்குப் புதிர் விளங்கவில்லை. தன்னை அழைத்திருப்பது தேவையற்ற ஓர் விஷயமாகவே அவனுக்குப் பட்டது.

இப்பொழுது சுல்தானாக இருக்கும் இளஞ்சிங்கம் தன்னை, அழைத்திருந்தால் அதில் பொருள் உண்டு. அவனுடைய எண்ணப் பாதையிலே இளஞ்சிங்கம் எங்கோ தூரத்தில் இருந்தார். யாஸ்மியின் அந்த அழகிய கண்கள்தான் அருகில் இருந்தன. இப்படி அவன் எண்ணத்தை ஓட விட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஓர் அடிமை எதிரே இருந்த கனமான திரையை அகற்றினான். அவர்கள் நின்றிருந்த அறை உண்மையில் நீண்ட சபா மண்டபம் ஒன்றின் நடுப் பகுதியேயாகும். ரோஜாப்பூவின் நிறமுள்ள ஒரு கனத்த திரையால் அது அறையாகத் தடுக்கப்பெற்றிருந்தது.

சபா மண்டபத்தின், நடுச்சுவரின் எதிரில் ஒரு மேசையின் முன்னே அறுபது வயது மதிக்கத்தகுந்த ஒருமனிதர் ஏதோ, வேலை செய்து கொண்டிருந்தார். கவனமாகச் சீவி விடப்பட்ட மெல்லிய பழுப்பு நிறத்தாடி அவர் மேலில் அணிந்திருந்த பட்டாடையைத் தொட்டுக் கொண்டிருந்தது. அங்கு நின்ற சில மனிதர்களிடம் சுருக்கமாக ஏதோ பேசிவிட்டுக் கையில் இருந்த தாள்களைப் பக்கத்தில் இருந்த ஒருவரிடம் நீட்டினார். அவருடைய செயலாளர் போல் தோன்றிய அவர் அவற்றை வாங்கிக் கொண்டார்.

பிறகு எல்லோரும் அவருக்கு சலாமிட்டுவிட்டுக் குனிந்தபடி தூரத்தில் இருந்த கதவை நோக்கி நடந்தனர்.

டுன்டுஷ் உமாரை அழைத்துக் கொண்டு அவர் அருகில் போனான். எதிரில் சென்றதும், இருவரும் நிசாம் அல்முல்க் அவர்களின் முன்னே இருந்த கம்பளத்தில், மண்டியிட்டுச் சலாமிட்டு எழுந்தனர். அடர்த்தியான புருவங்களுக்குக் கீழேயிருந்த அவருடைய கண்கள் சில வினாடிகள் உமாரை ஆராய்ந்தன.

பிறகு எதிரில் இருந்த சில தாள்களை விரல்களால் எடுத்து ஒரு பார்வை பார்த்தார்.

கூடாரம் அடிப்பவனான இப்ராகீம் மகனும் பேராசிரியர் அலியின் மாணவனும் கணித நூல் பயில்பவனும் ஆகிய உமார்கயாம் என்பது நீதானே! நீ சிறுவனாக இருந்தபோது அபி இமாம் முபாரக் என்பவரிடம் தத்துவ நூல் பயின்றிருக்கிறாயா?” என்று அவனைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் சொல்லிக் கேட்டார். அவருடைய குரல், பொதுக் கூட்டங்களிலே நீண்ட நேரம் சொற்பொழிவாற்றக் கூடிய, ஒரு சொற்பொழிவாளருடையதைப் போலப் பெருமிதமானதாகவும், கவனத்தைத் தன்பால் இழுக்கக் கூடியதாகவும் இருந்தது.

டுன்டுஷ் உமாரை விட்டு விலகியிருந்தான். எதுவுமே பேசவில்லை.

“பேராசிரியர் அலி, உன்னிடம் ஏதோ விசித்திர ஆற்றல் இருப்பதாக எழுதியிருக்கிறார். அல்லாவின் ஆற்றலைத் தவிர வேறு எவ்விதமான ஆற்றலும் இந்த உலகத்திலே கிடையாது. ஆனால், நீ எந்த விதமான தெய்வீக சக்தியைக் கொண்டு, முன்பு இளவரசராயிருந்த நம் சுல்தான் அவர்களுக்குச் சோதிடம் சொன்னாய் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். மாலங்கார்டில் நடந்த போரின் முடிவைப் பற்றியும், கிறிஸ்தவப் பேரரசரின் சாவைப் பற்றியும், புகழுக்குரிய நம் பெரிய அரசருடைய முடிவைப் பற்றியும் நீ எவ்வாறு முன்கூட்டியே சொன்னாய்? சொல்” என்றார். உமாரின் முகம் குருதியோடிச் சிவந்தது. ஏதாவது பொருத்தமான கற்பனை யொன்றைக் கூறினால் என்று யோசித்தான். கூரிய பார்வையும் கடிய குரலும் கொண்ட அவர் எந்த விதமான ஏமாற்றுதலையும் எளிதில் உடைத்துவிடுவார் என்பது தெரிந்தது.

“மேன்மை தங்கிய அமைச்சர் அவர்களே, உண்மையாகச் சொல்லப் போனால், அது அர்த்தமற்றது.”

“எது அர்த்தமற்றது? விளக்கமாகக் சொல் - அது அர்த்தமற்றதாக இருக்க முடியாது” என்று தன் பொறுமையிழந்து நிசாம் பொங்கினார்.

உமார் தன்னைத் திடப்படுத்திக் கொண்டான். பிறகு மெதுவாக தன் திடமான குரலில் “உள்ளபடியே அது அர்த்தமற்றதுதான்! அன்றைய இரவில், படைவீரர்களின் கூடாரங்களைப் பார்வையிட்டுக் கொண்டே நடந்து சென்றேன். அப்படிச் செல்லும்போது, துருக்கிய வீரர்கள் காவல் புரிந்த ஒரு கூடாரத்திற்குச் செல்ல நேரிட்டது. அவர்களுடைய பேச்சும் எனக்குப் பெரும்பாலும் புரியவில்லை; அங்கிருந்தவர் இளவரசர் என்றும் எனக்குத் தெரியாது. அவருடன் கூட இருந்த அறிஞர்கள், மூடத் தனமான ஒருதவறு செய்தார்கள். ஏதோ ஒரு நட்சத்திரத்தைக் காண்பித்து இதுதான் வடமீன் என்றார்கள். அவர்கள் கூறியது தவறு என்ற விளக்கப் போன என்னைக் குறி கேட்டதினால் திடீரென்று என் உள்ளத்தில் தோன்றிய கற்பனையை அவர்களுடைய ஆடம்பரப் போக்கிற்குத் தகுந்தபடி நான் அளந்து விட வேண்டியதாயிற்று. அதுவே நான் கூறிய அர்த்தமில்லாத ஜோதிடம்! வேறு ஒன்றுமில்லை!”.

“அர்த்தமில்லாத சோதிடம் எப்படி மூன்று விஷயங்களிலும் பலிக்க முடியும்? போரின் முடிவும், இரண்டு பேரரசர்களின் சாவும், கற்பனை ஜோதிடத்தின் மூலம் எப்படி நிறைவேறும். நீ இதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறாய்?”

உமார் சிறிது நேரம் சிந்தித்தான். “மேன்மையுள்ள பெரியவரே; நான் எப்படி இதற்குக் காரணம் கூற முடியும் அல்லாவின் விருப்பம் இல்லாமல் எந்தவிதமான செயலும் நடப்பதில்லை. இருந்தும் இது நடந்திருக்கிறது. நான் என்ன செய்வேன்?”

உண்மை. அல்லாவின் விருப்பம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை! ஆனால் உன்னை அவ்வாறு குறி சொல்லத் தூண்டியது எது என்பதையே நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். ரோமானியப் பேரரசர் பிறந்த தேதியும் நேரமும் உனக்குத் தெரிந்திருக்க முடியாது என்பது உண்மைதான்! அவர் பிறந்த ஜாதகத்தை நீ குறித்திருக்கவோ, சோதிடம் கணித்திருக்கவோ முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நம் சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்களுடைய ஜாதகத்தை நீ எப்படிக் கணித்தாய்?”

நிசாம் அவர்களுடைய பேச்சு உமாரை ஒரு பரிசோதனைக்குரிய உயிரற்ற பொருளாக மதித்துப் பேசுவது போலிருந்தது. சுற்றி வளைத்து தப்பித்துக் கொள்ள முடியாதபடி பேசும் அவருடைய ஆற்றலை வியந்தபடி டுன்டுஷ் வாயைப் பிளந்து கொண்டிருந்தான்.

“நான் அதைக் கணிக்கவில்லையே!” என்று உமார் அழுத்தந்திருத்தமாகக் கூறினான்.

“ஆனால் அப்படிப் பட்டவற்றைக் கணிக்கக்கூடிய ஆற்றல் உன்னிடம் இருக்கிறதல்லவா? "உண்மை! இதே ஆற்றலுடன் இன்னும் ஐநூறு பேர் இருக்கிறார்கள்!”

“இருக்கலாம், ஒரே ஜோதிடத்தில் மூன்றுகுறிகள் கூறியவர்களைப் பற்றி நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. மேலும் பேராசிரியர் அலி உன்னிடம் ஓர் அதிசய ஆற்றல் இருப்பதாக எழுதியிருக்கிறார்”.

டுன்டுஷ் அதை அமோதிப்பவன் போல் தலையை ஆட்டினான். உமார் என்ன செய்வதென்று புரியாமல் விழித்தான்.

“இப்ராஹீம் மகனே! உன் சுல்தான் மாலிக்ஷா அவர்கள் தன் தந்தை இறந்ததிலிருந்து, உன்னைக் காணவேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறாரே! அது உனக்குத் தெரியாதா?”

“தெரியாது!”

அவர்கள் இருவரும் உமாரைக் கவனித்தார்கள். நிசாம், அவனைப் பரிசோதனை செய்ததில் திருப்தி அடைந்தவர் போல் காணப்பட்டார். ஆனால் அதைப்பற்றி எதுவும் வெளிக்காட்டிப் பேசவில்லை.

“உமார்! அரச சபையில் இருக்க வேண்டிய வயது இன்னும் உனக்கு வரவில்லை, அதுவும் உன்னுடைய சோதிடமானது அர்த்தமற்றதாக இருப்பதால் சபையின் முன்னாலே நீ எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம். சுல்தான் மாலிக்ஷா அவர்கள் உன்னை அன்போடு வரவேற்பார் என்பதில் ஐயமில்லை. அதை நான் உன்னிடம் மறைக்கவும் விரும்பவில்லை. ஆனால் என்னிடம் பேசியதைப் போல், ஒரு வார்த்தை அவருடைய சபையில் நீ சொல்லிவிட்டாலும், நீ அவமானப் படுத்தப் படுவாய் அல்லது துன்பப்படுத்தப்படுவாய். உன்னுடைய இந்த விசித்திர சோதிடத்திற்காக, நீ சுல்தான் அவர்களிடம் என்ன வெகுமதி கேட்கப் போகிறாய்?”

நிசாம் இந்தக் கேள்வியை திடீரென்று கேட்டதும் உமார் திகைத்துப் போனான். வாய்க்கு வந்தபடி சொல்லி வைத்த அந்தச் சோதிடம் தலையின் மேல் வீழக் காத்திருக்கும் அரவைக் கல்லாக மாறி விட்டதே! என்று வருந்தினான். “அரச சபையில் நான் என்ன செய்வதற்கிருக்கிறது? எனக்கு வெகுமதி எதுவும் வேண்டாமென்று கதறினான். “சரி உனக்கு வெகுமதி எதுவும் தேவையில்லை என்றால் அதைப்பற்றிக் கவலையில்லை. உன் உடலுக்குப் பாதுகாப்புக் கொடுக்கவும், உன் ஆராய்ச்சிக்கு ஆதரவு கொடுக்கவும், என்னை ஆதரவாளனாக ஏற்றுக் கொள்கிறாயா” என்று தொடர்ந்து கேட்டார் அமைச்சர் நிசாம்.

“நன்றாக ஒப்புக் கொள்கிறேன்” என்றான் உமார். அவன் கண்களிலே மகிழ்ச்சியின் ஒளி மலர்ந்தது. அந்தக் கிழவனுக்கு அவனுடைய உள்ளம் நன்றி கூறியது. ஞானக் கண்ணாடியின் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு, கடந்த சில தினங்களாக அவன் பிச்சைக்கார வாழ்க்கை நடத்தி விட்டான். அது போதுமென்று தோன்றியது எப்படியாவது யாஸ்மியுடன் இருப்பதற்கு ஒரு வீடு கிடைத்து விட்டால் நல்லது என்று கூடத் தோன்றியது.

“உனக்கு என்னென்ன தேவைப்படுகிறதோ அவற்றையெல்லாம் சொல்”

“ஓர் ஆராய்ச்சிக் கூடம், வான கோளங்களை அளக்கும் கருவி ஒன்றும், அறிஞர் டோலமி அவர்களின் நட்சத்திர அட்டவணையும் வேண்டும்.”

“இன்னும் வேறு என்னென்ன வேண்டும்?”

“மெருகு தீட்டிய வெண்கல பூகோள வட்டம்; அதைத்தொட்டுக் கொண்டிருக்கும் வளையம்; நட்சத்திரம் பார்க்கும் விளக்கு; இவற்றுடன் ஒரு நீர்க்கடிகாரம்.”

“சரி, இந்த ஆராய்ச்சிக் கூடத்தை எந்த இடத்திலே வைத்துக் கொள்ளப் போகிறாய்?”

“அறிவும் மேன்மையும் மிக்கவரே! பழங்காத்தில் நிசாப்பூர் நகரைச் சுற்றிப் பல காவல் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பல வீதியோரங்களிலே இன்னும் கவனிப்பாரற்று நிற்கின்றன. ஆற்றங்கரையோரத்திலே, இடுகாட்டின் ஓரத்திலே அம்மாதிரியான காவல் கோபுரம் ஒன்று இருக்கிறது. அதைப் பல இரவுகள் நான் பயன்படுத்தியிருக்கிறேன். அதைச் சிறிது பழுது பார்த்து அதற்கொரு பூட்டுஞ்சாவியும் கொடுக்க வேண்டுகிறேன். சிலநல்ல ஜமுக்காளங்களும், தலையணைகளும், சீனத்துப் பட்டுத் திரையொன்று, வெள்ளித் தண்ணீர் குடம் ஒன்றும் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று உமார் கூறினான்.

“வல்லாஹி! வான நூல் ஆராய்ச்சிக்கு இத்தனை பொருள்கள் தேவைப்படுவது இல்லையே. இவையெல்லாவற்றையும் உனக்குக் கொடுக்கிறேன். ஆனால், அதற்கொரு கட்டுப்பாடு இருக்கிறது. அது என்னவென்றால், உன்னுடைய மாலஸ்கார்டு சோதிடம் அர்த்தமற்றது என்று யாருக்குமே நீ சொல்லக்கூடாது.

“நான் சொல்லவில்லை?”

“அப்படி யாரும் கேட்டு நீ சொல்ல வேண்டி நடந்து விட்டால், அது கடவுளின் அருள் வாக்கு என்று சொல்லிக் கொள்ளலாம்” என்று டுன்டுஷ் கூறினான்.

“அப்படியே! நீங்கள் சொல்கிறபடியே செய்கிறேன்” என்று உமார் மகிழ்ச்சி பொங்கக் கூவினான்.

“ஆமாம், பட்டுத் திரையும், வெள்ளித் தண்ணிர்ப் பானையும் கேட்டாய், உணவைப் பற்றியும் வேலையாட்களைப் பற்றியும் கேட்கவில்லையே. சரி! இந்தா இதை வைத்துக் கொள்” என்று பணம் அடங்கிய சிறுபையொன்றைக் கொடுத்து, டுன்டுஷை உமாருக்காக இரண்டு வேலைக்காரர்கள் சேர்த்துக் கொடுக்கும்படி கூறினார்.

உண்மையில் உமார் தன்னைப் பற்றிச் சிந்திக்கவில்லை. பூப் போட்ட அந்தப் பணப்பையை ஒருமுறை புரட்டிப் பார்த்தான். இதுவரை அவன் இவ்வளவு பணம் கண்டதில்லை. அவனுக்கு ஒரு விதமான இன்ப உணர்வு பெருக்கெடுத்தது.

“அந்தக் கோபுரம் என்வசம் எப்பொழுது கிடைக்குமென்று அறிந்து கொள்ளலாமா?” என்று உமார் கேட்டான்.

நிசாம் டுன்டுஷைத் திரும்பிப் பார்க்க, “நாளை நடுப்பகல் நேரத்துக்குள் எல்லாம் தயார் செய்து விடுகிறேன்” என்றான்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்யக்கூடிய அதிசய வித்தையின் தன்மையை உமார் உணர்ந்து கொண்டான். “அருளாளனாகிய அல்லாவின் புகழ் ஓங்குக!” என்று கூவித் தலைகுனிந்து நிசாமை வணங்கிச் சலாமிட்டு விட்டு உமார் வெளியே கிளம்பினான். “பணப் பையை மறந்து விட்டாயே!” என்று டுன்டுஷ் குசுகுசுவென்று கூறியதும் திரும்பவும் போய் அதைக் கையில் எடுத்துக் கொண்டு கதவருகிலே சென்றதும் டுன்டுஷ் சொல்லிக் கொடுத்தபடி, மறுபடித் திரும்பி சலாம் கொடுத்துவிட்டு வெளியேறினான்.

டுன்டுஷம் நிசாமும் மட்டும் தனியே யிருந்தார்கள்.

“ஐயா, இவன் தங்கள் கைக்கருவியாக உபயோகப் படுத்துவதற்க்கு சரியான ஆள். இந்த நிசாப்பூர் முழுவதும் தேடினாலும் இவனைபோல ஒருவன் கிடைப்பது அபூர்வம். அதிசயமான அவனுடைய ஆற்றலும், விசித்திரமானமுறையில் உண்மையை ஒப்புக் கொள்ளும் களங்கமற்ற மனப்பான்மையும், வான நூல் ஈடுபாடுள்ள அவன் போக்கும் நமக்கு மிக மிகப் பயன் படக்கூடியன” என்று டுன்டுஷ் கூறினான்.

“அவனுடைய இரகசியத்தை அறிந்து கொள்ளவே நான் விரும்பினேன். ஆவனிடம் எந்த விதமான இரகசியமோ, அதை மறைக்கக்கூடிய தன்மையோ கிடையாது” என்று அமைச்சர் நிசாம் தம்முடைய சிந்தனையின் முடிவைத் தெரிவித்தார்.

“இரகசியமா? அப்படி எதுவும் அவனிடம் கிடையாது. அவன்பேசும் ஒவ்வொரு சொல்லும் உண்மை அவன் சொல் ஒவ்வொன்றும் உண்மையின் ஆதாரங்கள்! அவனை உண்மையின் அத்தாட்சி, என்றே அழைக்கலாம். அவனுக்கு ஒரு பேராசிரியருடைய உடுப்புக்களை அணிவியுங்கள். தெய்வீக அருள் வாய்த்தவர் போல் நடந்துகொள்ளும்படி அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். அதிகம் பேசாத அமைதி உடையவனாக நடந்து கொள்ளும்படி கூறுங்கள்! இந்தப் பாடங்கள் அனைத்திலும் அவன் தேர்ச்சியடைந்த பிறகு சுல்தான் மாலிக்ஷா அவர்களிடம் அழைத்துச் சென்று “மாலஸ்கார்டு போர்க்களத்தில் குறிசொல்லிக் கூடார மடிப்பவர் உமார் இதோ இருக்கிறார். அல்லாவின் அருட்பெருங்கருணையினால், யான் அரும்பாடுப் பட்டுத் தேடிக் கொண்டு வந்த செல்வம் இதோ இருக்கிறது” என்று கூறுங்கள். ஆடும் அழகு மங்கையின், பூவினும்மெல்லிய பொற்பாதங்களுக்குப் போடக் கிடைத்த பொருத்தமான மிதியடி போல இவன் நமக்குக் கிடைத்திருக்கிறான்” என்று நிசாம் அவர்களின் ஒற்றர் தலைவனான தந்திரம் வல்ல டுன்டுஷ் தெளிவு படக் கூறினான்.

“இருந்தாலும் அந்த இரகசியம், கண்ணுக்குத் தெரியாத ஒரு தேவதையின் அருளாக இருக்கலாம். இது போன்ற மனிதர்களுக்கு யாவும் தெரியும். ஆனால் தங்களுக்கு எப்படி அது தெரியவருகிறது என்ற விஷயம் மட்டும் தெரியாமல் இருக்கும்” என்றார் அமைச்சர் நிசாம்.

“உண்மை! உண்மை! தேவதைகளும் அல்லாவின் ஆணைக்கு அடங்கியவைதானே?”

“அவனுடைய அற்புதச் செயலான சோதிடத்திற்கு வேறு எந்தக் காரணமும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று மீண்டும் நிசாம் அழுத்தந் திருத்தமாகக் கூறினார்.

“உண்மை! உண்மையிலும் உண்மை” என்று ஒத்துப் பாடினான் டுன்டுஷ். அவனுக்கு அற்புதச் செயல்களில் எந்த விதமான நம்பிக்கையும் கிடையாது. நடந்ததாகச் சொல்லப்படுகின்ற அற்புதச் செயல்கள் அனைத்தும் வெறும் கட்டுக் கதைகள் என்பது அவனுடைய முடிவு. உமார் மீண்டும் சோதிடம் கூறத் தொடங்கி, அந்தச் சோதிடமும் பலிக்குமானால் என்ன ஆகும் என்று சிறிது நேரம் சிந்தித்தான். என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது! அவன் என்ன சொன்னாலும் இன்னொருமுறை பலிக்கப் போவதேயில்லை. உமார் கூட அப்படி எதுவும் பலிக்காது என்று உறுதியாகக் கூறிவிட்டான். கொஞ்ச நஞ்சம் அற்புதச் செயல்களில் அரைகுறை நம்பிக்கை வைத்திருக்கும் நிசாம் கூடப் பாதியளவு நம்பிக்கை யற்றவராகவேயிருக்கிறார். சே! சே! இந்த மாதிரியான விஷயங்களுக்கும் அதிசய நம்பிக்கைகளுக்கும் நம் வேலைக்கும் எந்தவிதமான பொருத்தமும் இல்லை; என்று டுன்டுஷ் தனக்குள் முடிவுகட்டிக்கொண்டான். தனக்கு உளவு கூறிய அந்தப் பிச்சைக்காரனையனுப்பி, எச்சரிப்பாக இருக்கக் கூடியவர்களாகவும், நம்பிக்கையான ஒற்றுச் சொல்லும் உளவாளிகளாகவும், கணவன் மனைவியாக உள்ளவர்களாகவும் உள்ள இரண்டு வேலைக்காரர்களை, உமாரின் கோபுரத்தில் வேலை செய்வதற்கு அமர்த்திவரும்படி அனுப்பினான்.

நிருற்றிலே, தன் தண்ணிர்ப் பானையை நிரப்பிக் கொண்டிருந்த யாஸ்மியின் காதிலே ஓர் இன்பகீதம் இசைத்தது. ஆம் உமார் தன் உள்ளத்தில் எழுந்த ஆர்வத்தை அவளிடம் கூறிக் கொண்டிருந்தான்.

“என் இதயப் பூவில் வீற்றிருக்கும் இன்பமங்கையே, உனக்கு இடமளிக்கக் கூடிய இடம் ஒன்று எனக்குக் கிடைத்து விட்டது. மதுவினும் இனிய உன் உதடுகளுக்கு மதுவில் ஊறிய திராட்சைப் பழங்களும், பசியைத் தணிக்கப் பலவிதமான உண்டிகளும், கிடைக்கும்! அவை மட்டுமல்ல, என்னருகிலேயே நீ என்றும் இருப்பாய்!”

“அது பாழடைந்த கோபுரம், ஆயிற்றே?” என்றாள் யாஸ்மி.

“பாழடைந்த மண்டபமானாலும் நீ பக்கத்திலே யிருந்தால், பாதி ரொட்டிதான் கிடைக்கு மென்றாலும் கூட, அரண்மனைச் சுல்தானைக் காட்டிலும் நான் அதிக இன்பம் அடைவேன்” என்றான் உமார்.

--------------

15. உதட்டோரம் மதுவோடவே உளம் நாடும் கவி பாடுவேன்

டுன்டுஷ் தன் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டான். ஆற்றங்கரையில், புதைகுழிகள் நிறைந்த அந்த இடுகாட்டின் அருகிலே இருந்த அந்தப் பழங்காலத்துப் பாழடைந்த கோபுரம் பழுது பார்க்கப்பட்டது. உமாரின் கையில் சாவி மறுநாள் மாலை ஒப்படைக்கப் பட்டது. அதன் பிறகும், பல நாட்கள் பழுதுபார்க்கும் வேலை தொடர்ந்து நடைபெற்றது. தச்சு வேலைக்காரர்களும் கொத்துவேலைக்காரர்களும், கோபுரத்தை அழகுறச் செய்தார்கள். சுவர்களுக்கெல்லாம் வெள்ளையடிக்கப்பட்டது. கீழ்த் தளத்தின் தரையிலே ஒரு பெரிய மிதியிருப்பு ஒன்றை விரிக்கும்படி உமார் ஆணையிட்டான். அந்தக் கீழ்த் தளம்தான் விருந்தினரை வரவேற்கப்படும் கூடமாக உபயோகிக்கப்பட வேண்டுமென்று திட்டமிட்டிருந்தான்! இரண்டாவது தளத்தில் மிக அழகான தரை ரிப்பு ஒன்றை விரிக்கச் செய்தான். சீனத்து வண்ணப் பட்டுத்திரை யொன்றை அந்தக் கூடத்தின் இடையிலே தொங்கவிட்டான். அதிலே பறக்கும் நாகத்தின் படம் நடுவில் கொடுக்கப்பட்டிருந்தது. மின்னி யொளிவிடும் தங்கச் சரிகைக் கரையுடைய அந்தப் பட்டுத் திரையின் பின்னாலே அவனுடைய படுக்கையும் சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய, சந்தனக் கட்டையால் செய்யப்பட்ட அலமாரி ஒன்றும் வைக்கப்பட்டன. அந்த அலமாரியிலே அவனுடைய ஆடைகளையும் பிற பொருள்களையும் வைத்துக் கொண்டான்.

மூன்றாவது தளத்தில், சில மேசைகளும், புறாக் கூடுகள் போன்ற அமைப்புள்ள அலமாரிகளும், இருந்தன. இந்தத் தளமே அவனுடைய ஆராய்ச்சிக்கூடமாக விளங்கும். மேசைகளில் வேலைகள் நடக்கும். கூடுள்ள அலமாரியில் கையெழுத்துப் படிகள் வைக்கப் பெறும். அவன் கேட்டிருந்த கருவிகள் முழுவதும் வந்து சேரவில்லை. ஏனெனில் அவை நிசாப்பூரில் கிடைக்கக்கூடிய சாதாரணக் கருவிகள் அல்ல. பாக்தாது தேசத்திலிருந்து வரவழைக்க ஏற்பாடு செய்திருப்பதாக டுன்டுஷ் கூறினான். நிசாம் அல்முல்க்கின் அன்பளிப்பாக ஏராளமான புத்தகங்களை டுன்டுஷ் கொண்டு வந்திருந்தான்; அவை யாவும் அலமாரிகளில் வைக்கப்பட்டன.

ஆராய்ச்சி செய்யவேண்டும் என்ற எண்ணமே உமாருக்கு அப்பொழுது ஏற்படவில்லை, யாருமில்லாத போது யாஸ்மியை அழைத்து வந்து அவளை ஆச்சரியத்தால் திணறடிக்க வேண்டும் என்ற எண்ணமே எழுந்தது. பெரும்பாலும் கோபுரத்து வாசல் கதவைப் பூட்டிச் சாவியைக் கையில் எடுத்துக் கொண்டு நிசாப்பூர்க் கடைத் தெருக்களையும் அங்காடிகளையும் சுற்றிவந்தான். கையிலிருந்த வெள்ளிக் காசுகளையெல்லாம் கடைகளிலே அள்ளியள்ளிக் கொடுத்தான். அதற்குப் பதிலாக, தன்னை மணம்புரிந்த பிறகு, யாஸ்மி உடுத்திக் கொள்வதற்காகப் பலவிதமான பட்டாடைகளை வாங்கினான். அவளுக்கு மிகவும் பிடித்தமான துல்லியமான வெண்பட்டுத் துகில்களை ஏராளமாக வாங்கினான். சீனியில் பதஞ்செய்யப்பட்ட பழங்கள் அடங்கிய பீங்கான் சாடிகளை வாங்கினான். மணங்கமழும் புகை எழுப்பும் பலவிதப் பொடிகளையும், தெளிந்த வானம் போன்ற நிறமுடைய நீலமணிக் கற்கள் அடங்கிய வெள்ளிப் பெட்டியொன்றும் வாங்கினான். கடைசியாக யாஸ்மியை அழைத்து வந்து இந்த வெகுமதிகளையெல்லாம் காண்பித்த போது, “ஆ! எல்லாம் மாய வித்தையாக இருக்கிறதே! இவ்வளவும் எனக்கா?” என்று யாஸ்மி பூரித்துப் போனாள்:

“அப்படியானால் நீ பெரிய மாயக்காரிதான். என் இதயத்தைக் கவர்ந்து விட்டாயே!”

யாஸ்மியின் மெல்லிய கரங்களைப் பிடித்து அவற்றிலே அவளுக்காக வாங்கிவைத்த வளையல்களை உமார் மாட்டினான். தரையில் விரிக்கப் பட்டிருந்த அந்தப் பெரிய விரிப்பையும், பட்டுப்படுதாவையும் அதிலேயிருந்த பறக்கும் நாகப்பாம்பையும் அகன்று விரிந்த தன் அழகிய கண்களால் ஆச்சரியத்துடன் யாஸ்மி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அவிழ்த்துவிட்ட கூந்தல் மார்பிலே புரண்டு கொண்டிருந்தது. உமார் தன் முரட்டுக் கைகளால், அந்த மெல்லிய கரிய மென்மையான கூந்தலை ஒதுக்கிவிட்டான். அப்படி ஒதுக்கிவிடும் போது அவனுடைய கைவிரல்கள் அவள் கழுத்தோரத்திலே நகர்ந்துவர, தொண்டையிலே துடித்துக் கொண்டிருக்கும் நாடியோட்டத்தை யுணர்ந்தன. திடுமென்று தோன்றிய இந்த இன்பமான காட்சிகளின் பாரத்தைத் தாங்க முடியாமல் அவளுடைய மனம் வேதனையடைவது போல் இருந்தது.

கூடத்திலேயிருந்த அத்தனை புத்தகங்களையும் பார்த்துவிட்டு, “இத்தனை புத்தகங்களும் நீ படிக்கிற புத்தகங்களா? நான் இல்லாத போது, இவற்றைத்தாம் படித்துக் கொண்டிருப்பாயா?” என்று கேட்டாள். அவளுக்கு அவனைப் பிரியும் போதெல்லாம் பயமாக இருந்தது. அவனைப் பிரிந்திருக்கும் போது, நீண்டு தோன்றும் காலமும், சிந்தனையில் மூழ்கி அமைதியான சூழ்நிலையில் இருக்கும் மனமும், எப்பொழுது அவனோடு என்றும் அருகில் இருக்கக்கூடிய காலம் வருமோ என்ற ஏக்கமும் எல்லாம் சேர்ந்து அவளை அப்படியொரு காலம் விரைவில் வந்து விடுமா என்று சற்று ஐயத்தோடு நினைக்கும்போது அவளுக்குப் பயமாகவே யிருந்தது! தான் அவனருகில் இல்லாத போது அவன் என்னென்ன செய்கிறான் என்பதையறிய அவளுக்கு ஆவலாயிருந்தது. "அத்தனை புத்தகங்களும் படித்து விடமுடியுமா? கவிதைகள் நிறைந்த ஒரு சிறு புத்தகம் மட்டும் நான் படித்து முடித்திருக்கிறேன்” என்றான் உமார்.

கவிதைகள் என்றதும் யாஸ்மிக்குப் பழைய காலத்துக் காவியங்களும் அவற்றிலே கவிஞ்ர்கள் பண்டைக்கால அரசர்களைப் பற்றியும், குதிரைகளைப் பற்றியும் போர்களைப் பற்றியும் பாடி வைத்திருப்பதாகக் கேள்விப் பட்டது நினைவுக்கு வந்தது.

“அந்தக் கவிதைகளிலே காதலைப் பற்றி ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டாள்.

“என் இதயத்தின் மூலையிலே இருக்கின்ற ஒரு சிறு குண்டுமணி அளவு காதலுக்குக்கூட அந்தப் புத்தகத்திலேயுள்ள காதல் ஈடாகாது” என்று கூறிய உமார், அவளைத் தன் முகத்துக்கு நேராகத் திருப்பி அவளுடைய கண்களுக்குள்ளே, தன் கண்களைச் சொருகினான், அந்தக் காட்சி அவளுக்கு நினைக்கும் போதெல்லாம் இன்பவேதனையை யுண்டாக்கிக் கொண்டேயிருந்தது.

“வெட்கமா யிருக்கிறது” என்று கூறி விலகிக் கொண்டாள்!

“யாஸ்மி! தோழிமார்களால் அழகு செய்யப்பட்டிருக்கும் பட்டத்து ராணியைக் காட்டிலும் நீ அழகாக இருக்கிறாய்”

“அதுகூடப் புத்தகத்தில் இருக்கிறதா?”

“இல்லை! என் இதயப் புத்தகத்திலேதான் அப்படி எழுதியிருக்கிறது”

“சரி! என் இதயத்திலே என்ன இருக்கிறது? சொல் பார்க்கலாம்?”

“உன் இதயத்திலா? இந்த உமாரின் வேதனைகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத, அலட்சிய மனப்பான்மையும் கொடுந்தன்மையும்தான் இருக்கின்றன”

யாஸ்மிக்கு உமாரைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது பெருமையாக இருந்தது. தன் காதலனுக்கு உலகத்தில் மற்ற எவருக்கும் இல்லாத ஒரு பேராற்றலும், அறிவும் இருப்பதை எண்ணி அவள் பெருமைப் பட்டாள். பண்டைக்காலத்து ஞானிகளின் அறிவும் அவர்களின் கவிதைகளைப் படித்துப் புரிந்து கொள்ளும் சக்தியும் அந்தக் கவிதைகளைக் காட்டிலும் அதிக இனிமையுள்ள இசையுடன் அவன்பேசும் தன்மையும் எண்ண எண்ண அவளுக்குப் பெருமையாக இருந்தது. பாழடைந்து கிடந்த ஒரு கோபுரத்தை அவளுக்காக அவன் சொர்க்கமாக மாற்றியமைத்து விட்டான். ஆனால், பெருமைக்குரிய இந்த எல்லா விஷயங்களைக் காட்டிலும் அவன் சாதாரண உமாராக, அவளைக் காதலிக்கும் உமாராக இருப்பதுதான் அவளுக்கு அதிகமான பெருமையைக் கொடுத்தது. கைகளை அகலமாக விரித்தபடி அருகில் இருந்த சாய்மான நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தபடி, அவனைத்தன் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டே, “உண்மையாகச் சொல்! நான் கொடுமைக்காரியா? உன்னை அலட்சிப் படுத்துகிறேனா?” என்று கேட்டாள்.

அவள் பார்வையால் உண்டாகிய மயக்கத்தில் குடிகாரனைப் போல், அவளைப் பிடித்துக் கொண்டு அவள் மேல் சாய்ந்தான் உமார்.

அந்தக் காதல் கோபுரத்துக்கு ஏதாவது பெயர் வைக்க வேண்டுமென்பது மிக முக்கியமாக யாஸ்மிக்குத் தோன்றியது. புதை குழிகளில் உள்ள ஆவிகளெல்லாம் அந்தக் கோபுரத்தில் வந்து கூடுவதாக நிசாப்பூரிலே மக்கள் பேசிக் கொண்டார்கள். தன் காதலன் அருகில் இருக்கும் போது எந்தவிதமான ஆவிகளுக்கும் யாஸ்மி சுண்டு விரல் முனையளவுகூடக் கவலைப்பட்வில்லை பயப்படவுமில்லை. அதற்கு ஏதாவது பெயர். நல்ல பொருத்தமான பெயர் வைக்க வேண்டுமென்பது அவளுடைய ஆவலாக இருந்தது. உமார் ஒவ்வொரு பெயராகச் சொல்லி வந்தான், அவளுக்கு ஒன்றுகூடப் பிடிக்கவில்லை.

“அருளின் இருப்பிடம்”

“சொர்க்க மகால்”

“தேவதையின் முகாம்”

இந்தப் பெயர்கள் எதுவும் யாஸ்மிக்குப் பிடிக்கவில்லை. நல்லதேவதையொன்று அங்கே இறங்கி வந்து, அவர்களிடையிலே காதலை உண்டாக்கி அருள்புரிந்தது என்று யாஸ்மி நம்பினாலும்கூட அவளுக்கு இந்தப் பெயர்கள் பொருத்தமாகத் தோன்றவில்லை.

“நீ நட்சத்திரங்களின் தன்மையை ஆராய்ந்து மற்றவர்களின் விதிப்போக்கை அறிவதற்குச் சோதிடம் பார்க்கத்தானே போகிறாய்! ஆகையால், இதற்கு “விண்மீன் வீடு” என்று பெயர் வைக்கலாம்” என்றாள் யாஸ்மி.

உமார் உன்னிப்பாக அவளைக் கவனித்தபடி “நான் சோதிடம் சொல்கிறேனா? யார் உனக்குச் சொன்னார்கள்?” என்று கேட்டான்.

“சுல்தான் மாலிக்ஷா அரசாட்சிக்கு வருவார் என்று சோதிடம் சொன்னது நீதானாமே?” உனக்கு எல்லாம் தெரியுமாமே... நிசாப்பூர் தெருக்கள் எல்லாம், இந்த நாடெல்லாம் தான் பேசிக் கொள்கிறார்கள்!” என்று யாஸ்மி சொன்னாள். ராஜாக்களின் விதியைக்கூட அறியும் ஆற்றல் உள்ளவன் அவன் என்பதில் யாஸ்மிக்குப் பெருமையாக இருந்தது. இந்தக் கோபுரத்தில் அவன் இடம் பிடித்தது கூட, சோதிடத்தின் மூலம் மக்களின் தலைவிதியை அறிந்து கொள்வதற்காகத்தான் என்றும் அவள் எண்ணினாள். வானநூல் ஆராய்ச்சி செய்பவன் சோதிடம் கூறுவதில் தேர்ச்சி பெறுவான் என்பது அவள் கொண்டிருந்த முடிவு ஆகும்.

“எனக்குத் தெரியும்! அதனாலென்ன?” என்று கேட்டான் உமார்.

“அதனால் என்னவா? அடுத்த மாதத்திற்குள்ளே நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்யும் கருவிகள் எல்லாம் உனக்கு வந்துவிடும். நீயும் வேலை தொடங்கிவிடுவாய் பிறகு, பணம் நிறையக்கிடைக்கும் கிடைத்தவுடன் என் தந்தையிடம் வந்து எனக்குள்ள பெறுமதிப் பணத்தைக் கொடுத்துப் பெண் கேட்டாய், அதன்பிறகு நாம் மணக்கோலத்தில் சாட்சிகளின் முன்னே வீற்றிருப்போம்!”

நிசாமிடம் வாங்கிய பணம் முழுவதையும் பொருள்கள் வாங்குவதில் செலவழித்துவிட்டோமே. இல்லாவிட்டால், இப்பொழுதே பெண் கேட்டிருக்கலாமே என்ற எண்ணம் எழுந்தது உமாருக்கு. “இந்தப் பெண்ணின் பெறுமதி எவ்வளவோ? அவ்வளவு பணம் என்னால் கொடுக்க முடியுமோ முடியாதோ?”

“முட்டாளே! நிசாம் அல்முல்க் அவர்களுடைய வானநூல் சாஸ்திரியிடம், பணத்துக்காகவா பேரம் பேசுவார்கள், நீ வந்து கேட்டாலே போதும். நல்ல சம்பந்தம் என்று கொடுத்ததை வாங்கிக் கொண்டு திருமணம் செய்து கொடுப்பார்கள். அது நடக்க வேண்டும். என்னுடைய இந்த வீட்டிலே நான் வந்து தங்கவேண்டும். உன்னுடனேயே நான் எப்பொழுதும் இருக்கவேண்டும். இது நடக்காவிட்டால் என்னால் உயிர்வாழ முடியாது” என்றாள் யாஸ்மி.

“அப்படியானால், இப்பொழுது முதலே இங்கேயே இருந்துவிடு”

“அது எப்படி முடியும்? திருமணம் செய்யாமல் ஒரு பெண்ணையடைவது திருட்டுக்குச் சமமாயிற்றே! அவ்வாறு பெண்ணைக் கடத்திவருவது பெரும் பாவமாயிற்றே! திருமணத்தின் மூலமாகத்தான் நீ என்னை உன்னுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

அந்த நிலை வெகுவிரைவில் வரவேண்டுமென்று அளவற்ற அருளாளனும் அன்பின் இருப்பிடமுமான அல்லாவின் கருணையை நாடித்தினமும் வேண்டித்தொழுது வருவேன். இதுவே என் இன்பம். இதைத்தவிர வேறு இன்பம் எதுவும் எனக்குத் தேவையில்லை!

மறுநாள் யாஸ்மி வரவில்லை பச்சைப் புல்வெளியும், கல்லறைகளின் மேல் பூத்திருந்த காட்டுமலர்ச் செடிகளும் காலைக் கதிரவன் ஒளியில் அழகுடன் விளங்கின. உள்ளத்தில் அமைதியில்லாமல், கையில் கவிதைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை எடுத்துப்படிக்க முயற்சித்தான்.

பச்சைப் புல்வெளியிலே பூத்தமலர்ச் செடிகளைப்போல, புத்தகத்திலே நான்கு நான்கு வரிகளாகக் காட்சி தந்த அந்தக் கவிதைகள் தோன்றின. ஒரு வெள்ளைத் தாளிலே, அவன் உள்ளத்திலேயிருந்து புறப்பட்ட கீழ்க்கண்ட வரிகளை அவன் எழுதினான்.

அன்புக்குரிய யாஸ்மியைப் பற்றி அவன் இதயத்தின் அடித்தளத்திலேயிருந்து கிளம்பிய இந்தப் பாடலை அவள் படித்தால் எத்தனை மகிழ்ச்சியடைவாள்! அவளைப் பற்றியே அவளுக்காகவே பாடப்பட்ட இந்தக் கவிதை சாதாரணமானதுதான்.

காதலைப்பற்றிய அழகு வருணனை யாதும் அவன் எழுதிவிடவில்லை. அவனுடைய எண்ணத்தில் எழுந்த கருத்தைத்தான் நான்கு அடிகளாக எழுதி வைத்திருந்தான். இருந்தாலும் யாஸ்மிக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும், அடுத்த நாள்வரும்போது அவளிடம் காண்பிக்க வேண்டுமென்று இருந்தான்.

ஆனால், யாஸ்மி, அடுத்த நாளும் வரவில்லை; அதற்கடுத்த நாளும் வரவில்லை!
---------------

16. எங்கு போனாளே என்னுயிர்க் காதலி!

தொடர்ந்து யாஸ்மி வராமல் போகவும் பித்துப் பிடித்தவன் போலானான் உமார். நீருற்றுக்குப் பக்கத்திலே போய் நெடுநேரம் காத்திருப்பான். அவள் தண்ணிர் எடுக்க வருவதேயில்லை. தொழுகை நேரத்திலே மசூதிப்பக்கம் போய், வாசலின் உட்புறத்து ஓரத்திலே நின்று கொண்டு, பெண்கள் போகும் திசையிலே ஆராய்ந்து கொண்டிருப்பான். ஒன்றும் பயன்படவில்லை. பிற்பகல் நேரத்திலே, ஒருவேளை அவள் தன்னைத்தேடி விண்மீன் வீட்டுக்கு வந்திருக்கக்கூடும் என்று அவசர அவசரமாகக் கோபுரத்தை நோக்கி ஓடி விடுவான். அறைகளில் யாருமே இருக்க மாட்டார்கள். அவள் ஏன் வரவில்லை? நோயாகப் படுத்து விட்டாளோ? நோயாக இருந்தால் தகவல் சொல்லி விடலாமே! தகவல் சொல்லக்கூடிய அளவுக்கு மேல் நோய் வாட்டுகிறதோ என்னவோ? சேதியறிந்துவரச் சொல்வதற்கும் ஆள் இல்லை. வேலைக்கு ஆள்வைத்துக் கொள்ளும்படி டுன்டுஷ் சொன்னபோது மறுத்துவிட்டது எவ்வளவு கெடுதல் ஆகிவிட்டது என்று தோன்றியது. யாராவது பெண்கள் இருந்தாலும் புத்தகக் கடைக்காரர் வீட்டுக்குப் போய் விசாரித்துக் கொண்டுவரச சொல்லலாம். அப்படியாரும் கிடையாது!

இவ்வாறு குழம்பியபடி, மசூதியை நோக்கிக் கடைத்தெரு வழியாகப் போய்க் கொண்டிருந்தபோது, அம்மைத் தழும்புடன் கூடிய பழக்கமான ஒரு முகத்தைப் பார்க்க நேர்ந்தது.

சிறிது யோசித்துப் பார்த்ததும், புத்தகக்கடை வீதியில் தன்னைத் தொடர்ந்து உளவறிந்த பிச்சைக்காரன் அவன் என்பது நினைவுக்கு வந்ததது. அவனோ, உமாரைக் கண்டவுடன், ஒளிந்து கொள்வதற்காக விரைந்து நடக்கத் தொடங்கிவிட்டான் கவனிக்காதவன் போல.

உமார் விரைந்து சென்று, அவனுடைய தோளையழுத்திப் பிடித்துக் கொண்டான்.

“நீருற்றுக்குப் பக்கத்திலே என்னுடன் வந்து பேசிக் கொண்டிருப்பாளே; அவளை நீ பார்த்தாயா?” என்று ஆவலோடு கேட்டான், உமார்.

உமாரை உற்று விழித்துக் கொண்டே, “அவளை நான் பார்க்கவில்லையே! அவள் இங்கே இல்லையே போய்விட்டாளே!” என்று விட்டுவிட்டுச் சொன்னான்.

“போய் விட்டாளா? எங்கே?” என்று உமாரின் கேள்வியிலேயிருந்த ஆவலையும் அவசரத்தையும் அந்தப் பிச்சைக்காரன் கவனித்தான், யாருடைய முகத்தையும் பார்த்தவுடன் அவர்களுடைய மனவியல்பை எளிதாக அறிந்து கொள்ளக்கூடிய அந்தப் பிச்சைக்காரன், உமாரிடமிருந்து நன்றாகப் பணம் கறக்கலாம் என்று தெரிந்து கொண்டான்.

“நான் கேள்விப்பட்ட விஷயமிருக்கிறதே. அதைச் சொல்லத்தடையில்லை, ஆனால், மூன்று நாளாகப் பட்டினி கிடக்கிறேன், பசி பொறுக்க முடியவில்லை” என்று இழுத்த மாதிரியாகப் பேசினான். இயந்திரம் போல உமாரின் கைகள் தன் மடியைத் துழாவின, தன் மடியில் ஒரு செப்பு நாணயங்கூட இல்லையென்பதை உணர்ந்து கொண்டான். பிச்சைக்காரனைத் தன்னைத் தொடர்ந்து வரும்படி கூறிச் சைகை காண்பித்துவிட்டு தான் சிறுவயது முதல் அறிந்து வைத்திருந்த ஒரு வட்டிக் கடைக்காரனிடம் சென்றான். கிரேக்க நாணயங்களும், பாக்தாது நாணயங்களும், வட்டமும் சதுரமுமான பல தேசத்து நாணயங்களும் அவனிடம் இருந்தன.

“ஒருமாதத் தவணையில் எனக்கு ஒரு பொன் வேண்டும்” என்றான் உமார்.

“ஒரு மாதத்துக்கு ஒரு வெள்ளிவட்டி கொடுக்க வேண்டும். தெரியுமா?. இது வட்டிக்கடைக்காரனின் வாடிக்கைப் பேச்சு.

“பேச்சை நிறுத்து, பணத்தைச் சீக்கிரம் கொடு” என்று ஒரு பொன்னைச் சட்டென்று வாங்கிப் பிச்சைக்காரன் கையில் கொடுத்து, உனக்கு என்ன தெரியும்? சொல்! சொல்வது உண்மையாக இருக்க வேண்டும்! தெரிகிறதா?” என்று பிச்சைக்காரனை வெளியில் இழுத்துக் கொண்டுவந்தே கேட்டான்.

“நான் பொய் சொன்னால் என் தலையில் இடிவிழட்டும்! மூன்று நான்கு நாட்களுக்கு முன்னாலே அந்தப்பெண், அந்தப்புரத்தில் இருக்காமல் வெளியே போய்ச் சுற்றுவதைக் கண்டித்து வீட்டில் உள்ளவர்கள் அவளை அடித்திருக்கிறார்கள். இப்படித்தான் தண்ணிர் எடுக்க வந்த பெண்கள் பேசிக் கொண்டார்கள். அவளுடைய சிற்றப்பன்தான் அந்த வீட்டில் அதிகாரத்தில் பெரியவன். அவனுக்குக் கோபம் அதிகம்! அவள் அடிபட்ட மறுநாள் அப்துல்சைத் என்ற துணி வியாபாரியிடமிருந்து பெண்கேட்டு ஆள்வந்தது. பிறகு, சிற்றப்பன் அப்துல் சைதுக்கும், சாட்சிகளுக்கும், சாதிக்கும் ஆள் அனுப்பி வரவழைத்தான். எல்லோரும் வீட்டுக்குள் நுழைவதை என் கண்களால் பார்த்தேன். நண்பர்களும் சுற்றத்தார்களும் கூடினார்கள். திருமண விருந்துச் சாப்பாடும் இனிய சர்பத்தும் எல்லோருக்கும் வழங்கினார்கள். எனக்கும் கூடக்கொஞ்சம் கிடைத்தது”

உமாருக்கோ, ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. “சரி, அவள் என்ன ஆனாள்?” என்று கேட்டான்.

“வேலைக்காரர்கள் பேசிக் கொண்டார்கள். அந்தப்பெண் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தாளாம். எங்கேயோ வெளியிலிருந்து அவளை இரண்டுபேர் பிடித்துக் கொண்டு வந்தார்களாம். எங்கேயும் ஓடிப்போக முயற்சித்திருப்பாள். பிடிபட்டுவிட்டாள். எப்படியோ, அப்துல்சைத் என்ற துணி வியாபாரி அவள் அழகைக் கேள்விப்பட்டு, நல்லவிலை கொடுத்திருக்கிறான். அவனுக்கென்ன, எத்தனையோ கூடாரங்களுக்கும், குதிரைகளுக்கும் அதிபதி!” என்று பேசிக் கொண்டிருந்த பிச்சைக்காரன் நிறுத்திவிட்டுத் தன் கண்களை ஓடவிட்டான். ஏனெனில் உமார் ஓடினான்.

குருடனைப் போலக் கூட்டத்திலே இடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி ஓடிக் கொண்டிருந்தான் உமார். பித்து பிடித்தவன் போல் ஓடிய அவனைப் பார்ப்பதை நிறுத்திவிட்டுத் தன்கையில் இருந்த தங்க நாணயத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டான் பிச்சைக்காரன். பக்கத்தில் இருந்த ஒரு கல்லில் உரசிப்பார்த்து, நல்ல மாற்று என்று திருப்திப்பட்டுக் கொண்டான்.

மூன்று நாளைக்கு முன்னால், யாஸ்மி உமாரைப்போய்ச் சந்திப்பதைப்பற்றி அவளுடைய சிற்றப்பனிடம் கோள் சொல்லியதற்காகக் கிடைத்த வெள்ளி நாணயங்களுடன் பொன்னையும் சேர்த்து வைத்துக் கொண்டான், அந்த அம்மைத் தழும்பு மூஞ்சிப் பிச்சைக்காரன். உமார், அப்துல்சைத் இவர்கள் இருவரிடம் கறப்பதைக் காட்டிலும் அந்தச் சிற்றப்பனிடம், அதிகப் பணம் கறப்பது எளிது என்று பிச்சைக்காரன் முதலில் எண்ணியிருந்தான். ஆனால், உமார் தங்க நாணயமாகவே கொடுத்ததும் அவன் புத்தியில் கொஞ்சம் சபலமுண்டாகியது. நேரே வட்டிக்கடைக்காரனிடம் சென்று, “தெருவிலே சுற்றித்திரியும் அந்த அனாதைப் பயலுக்கு நம்பிப்பணம் கொடுத்தாயே! என்ன பிடித்து வைத்துக் கொண்டு கொடுத்தாய், முட்டாள்” என்றான்.

“ டேய் திருட்டுப்பயலே, உள்ளேவராதே ! பிச்சைக்காரப்பயல் நீ அவனை அனாதையென்கிறாயோ! அவன் யார் தெரியுமா? நிசாம் அல்முல்க் அவர்களின் அபிமானத்தைப் பெற்றவன்!” என்றான்.

இதைக்கேட்ட பிச்சைக்காரனுக்கு, யாரோ தன் சதையை வெட்டியெடுப்பது போல் வேதனையாக இருந்தது. இந்த விஷயம் மட்டும் முதலிலேயே தெரிந்திருந்தால், இந்த இரகசியத்தை அந்தப் பெண் வீட்டிலே சொல்லாமலேயே, சொல்லப் போவதாகப் பணம் கறந்திருக்கலாமே! முதலில் தெரியாமல் போய்விட்டதே!” என்று கவலையில் மூழ்கினான்.

உமாருக்கு ஆத்திரம் ஆத்திரமாகவந்தது. எல்லா விஷயங்களையும் அரைகுறையாகவே பார்த்தான் அரைகுறையாகவே தெரிந்து கொண்டான். எப்படியோ, தெருவீதிக்கு வந்து, நீருற்றின் அருகிலேயுள்ள யாஸ்மியின் வீட்டுக்குச்சென்று, அவளுடைய சிற்றப்பனைப் பார்க்க வேண்டுமென்று கூறினான். ஒரு மாதிரியான ஆள் உள்ளேயிருந்து வந்தான். எதற்காக வந்தான் என்று தெரிந்து கொண்டதும் எரிந்து விழுந்தான். இரைந்து கத்தினான். “திரைக்குப் பின்னால் இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றிக் கேட்கிறாயே! உனக்குப் பித்துப்பிடித்து விட்டதா? முட்டாளே! பெயர் சொல்லி எங்கள்வீட்டுப் பெண்ணை நீ எப்படி அழைக்கலாம்? அவர்கள் என்ன ஆடுமாடுகளா?” என்று பலப்பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே பெரும் சத்தமிட்டான். யாஸ்மியின் தகப்பனும், புத்தகக் குவியலின் மத்தியிலிருந்து எழுந்து வெளியே வந்தான். கண் தெரியாமல் முகம் வெளுத்து, முதுமையடைந்து காணப்பட்ட அவன் எதுவும் பேசவில்லை.

“அந்த வெட்கங்கெட்ட திருட்டுப்பயலை எச்சரித்து அனுப்பு! திருட்டுப்பயல்! இங்கேயே ஓடிவந்து விட்டானே! அவனைத் தூண்களில் கட்டியடி! கால் மணிக்கட்டை பெயர்த்தெடு” என்று உள்ளேயிருந்து ஒரு பெண்குரல் ஆணையிட்டது. ஆனால், பித்துப் பிடித்தவனைப் போல் இருந்த உமார் மீது கைவைக்கக்கூடிய தெம்பு, தைரியம் அந்த வீட்டிலேயிருந்த ஆண்களில் யாருக்கும் உண்டாகவில்லை. பெண்கள் மட்டும் வாயினால் கண்டபடி ஏசினார்கள். கடைசியாக உமார், தானாகவே அந்த ஏச்சுக்களைத் தாங்க முடியாமலோ என்னவோ, அந்த விட்டு வாசலைவிட்டு வெளியேறினான்.

எங்கெங்கோ சுற்றிவிட்டு நெடு நேரத்திற்குப் பிறகு, இரத்தினக்கடை ஒன்றிலே நீலக்கற்களை ஆராய்ந்து விலைபேசிக் கொண்டிருந்த டுண்டுஷ் உருவத்தைக் கண்டான் உமார். தன் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு டுண்டுஷ் இருந்த இடத்திற்கு வந்தான். தன்னுடைய கதையையும் தன் மனமுடைந்த நிலையையும் உடைந்த சொற்களால் அவனிடம் தெரிவித்தான். நீலக்கல்லை ஆராய்பவன் போலத் தோன்றினாலும், டுண்டுஷ் விஷயத்தை ஊன்றிக் கவனித்தான். அந்தப்பெண் சாதாரணப் பாடகியாகவோ, அடிமையாகவோ இருந்திருந்தால், தன் அதிகாரம், சூழ்ச்சி யெல்லாவற்றையும் பயன்படுத்தி அவளைத் தூக்கிக் கொண்டுவந்து உமாரிடம் ஒப்படைத்து விடுவான்.

ஆனால் அவளோ இஸ்லாமியன் ஒருவன் வீட்டின் அந்தப்புரத்தில் வசிப்பவள்! அவள் தன் கணவனுடைய சொத்து! திரைக்குப் பின்னாலே இருக்கும் முக்காட்டுப் பெண்கள் விஷயத்திலே தலையிடுவதென்பது நிசாம் அவர்களுக்கே பிடிக்காத விஷயம்! பெண்களைத் திரைக்குப் பின்னால் வைத்துப் பாதுகாப்பது இஸ்லாமிய மதச்சட்டம். அந்தச் சட்டத்தை வெளிப்படையாக எதிர்ப்பதென்பது யாரும் கனவில் கூடக்காண முடியாத விஷயம்! அதுவும் தவிர, யாஸ்மி உமாரைத் தன் அன்புத் தளையிலே சிக்க வைத்திருக்கிறாள். தன் ஆதரவில் வாழும் உமார் ஒரு பெண்ணுக்கு ஆட்பட்டு நடப்பதையும் டுண்டுஷ் விரும்பவில்லை! பல பெண்களோடு, அவன் தொடர்பு கொண்டிருந்தாலும்கூட அதனால் கெடுதல் இல்லை. மேற்கொண்டு அவர்களை ஒற்றர்களாகவும் வசப்படுத்திக் கொண்டு பலன் பெறலாம். ஆனால், யாஸ்மி போன்ற ஓர் இளம்பெண், முற்றிலும் காதல் வசப்பட்ட ஒரு பெண் எப்போதும் தன் நோக்கங்களுக்கு ஆபத்தானவளாக இருப்பாள். ஆகவே அவளுடைய தொடர்பு உமாருக்கு இருப்பது என்பது தன்னைப் பொறுத்தமட்டில் கூடாத ஒரு காரியமே! இத்தனை விஷயங்களையும் எண்ணித் தெளிந்து கொண்ட டுண்டுஷ், அவள் விஷயத்தில் தான் தலையிடக் கூடாதென்ற முடிவுடன் ஆதரவான, இரக்கத்துடன் கூடிய தொனியில், ஆறுதல் கூறத் தொடங்கினான்.

“ஆ! அப்படியா நேர்ந்துவிட்டது. எனக்கு மட்டும், கொஞ்ச நாட்கள் முன்பாகவே இந்த விஷயம் தெரிந்திருந்தால், உனக்கே திருமணம் செய்து முடித்து விட்டிருப்பேன். சாட்சிகள் எதிரில் நடந்து முடிந்துவிட்ட இந்தத் திருமணத்தால், உன்னுடைய காதலி இரும்புச் சங்கிலியில் கட்டப்பட்டவள் போல் ஆகிவிட்டாள். இனி யாரால் என்ன செய்யமுடியும் ஏதாவது செய்யமுடியுமா? என்று யோசித்துப் பார்க்கலாம்!” என்றான் டுண்டுஷ்.

“ஆனால், அவள் எங்கேயிருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அது உங்களால் முடியாத காரியமல்ல, அடுத்த மாதத்தில் நான் அவளைப் பெண் கேட்பதாக இருந்தேன்.”

“உம் விதி அப்படி! அதை யாரால் மாற்ற முடியும்!”

“எங்கேயிருக்கிறாள் என்று மட்டும் கண்டு சொல்லுங்கள். நான் அவளைப்பார்க்க வேண்டும்.”

“அது சரி, உடனே இன்று இரவே அங்காடிக் கட்டிடங்களுக்கு என்ஆட்களை அனுப்புகிறேன். நாளைப் பொழுதுக்குள் அவர்கள் அவள் இருப்பிடத்தைக் கண்டுவந்து சொல்லி விடுவார்கள். அதுவரையில் நீ என்கூடவே இரு” என்றான் டுண்டுஷ்.

அடுத்த நாட்காலையில் டுண்டுஷ் அனுப்பிய ஆட்கள் திரும்பி வந்தார்கள். துணி வியாபாரி அப்துல்சைத் என்பவன் நிசாப்பூரில் தற்பொழுது இல்லை என்றும், தன்னுடைய புது மனைவியையும் வேலைக்காரர்களையும் அழைத்துக் கொண்டு நகரைவிட்டு வெளியேறி விட்டானென்றும் ஆனால், எந்த ஊருக்கு எந்தத்திசையில் போனானென்பது தெரிந்து கொள்ள முடியவில்லையென்றும் கூறினார்கள். தினந்தினம் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். நகரில் இருந்து வெளியூர் செல்லும் பாதைகளும் எத்தனையோ இருக்கின்றன. அதனால், அந்த ஒரு வியாபாரி வெளியேறிய விவரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவர்கள் கூறினார்கள். இருப்பினும் ஒவ்வொரு பாதையையும் கவனித்துத் தகவல் தெரிவிப்பதாக உறுதி கூறினார்கள் அவர்கள் கூறிய விதத்திலிருந்து, அந்த வியாபாரி திரும்பவும் எப்பொழுதாவது வியாபார நிமித்தம் நிசாப்பூர் வரநேரிடக் கூடுமென்றும் அப்பொழுது கண்டுபிடித்து விடலாமென்றும் தோன்றியது!

இந்த விவரங்களால் உமார் மனஅமைதி பெற்று விடுவானென்று டுன்டுஷ் எண்ணியிருந்தான். ஆனால், அவன் எண்ணியது தவறாகிவிட்டது. உமார் தன்னுடைய பழைய பழுப்பு நிறமேலாடையுடன் அங்காடிப் பக்கமாகப் போனான். அங்கேயுள்ள பல கட்டடங்களிலும் உள்ள வியாபாரிகளுடனும், ஒட்டகக்காரர்களுடனும் பேசிக் கொண்டிருந்தான். பிறகு ஆளே நகரத்தை விட்டு மறைந்துவிட்டான். டுன்டுவினுடைய வல்லமையும் திறமையும்மிக்க ஒற்றர்களால் உமாரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. முதல்நாள் அப்துல்சையித் என்ற வியாபாரியைத் தேடியதைக் காட்டிலும் அதிக அக்கறையோடு உமாரைத் தேடினார்கள். பயன்தான் ஏற்படவில்லை.

உமார் ஒட்டகக்காரர்களுடன் கிளம்பிப்போய் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தான். நல்ல தூக்கம் வந்து கண்ணைச் சுழற்றும் அதிகாலை வேளையிலே எழுந்திருப்பதும், ஒட்டகக்காரர்கள் தங்கும் கூடாரங்களிலும், வியாபாரிகள் தங்கும் சத்திரங்களிலும் நுழைந்து நுழைந்து வெளிவருவதும், கண்ணெதிரில் தோன்றிய மனிதர்களையெல்லாம். மீஷிட் நகரைச்சேர்ந்த அப்துல்சைத் என்ற துணிவியாபாரியைச் சந்தித்ததுண்டா என்று விசாரிப்பதும் இப்படியாக ஒரே வெறியாக ஊர் ஊராகப் பாலைவனம் பாலைவனமாக எங்கும் தேடிக் கொண்டிருந்தான். சந்தையிரைச்சலின் ஊடேயும், புழுதிபடிந்த பாதைகளிலும், தன்னுடைய கேள்விகளைத் துணையாகக் கொண்டு அலைந்து கொண்டிருந்தான்.

காய்ச்சலால் உடல் காய்ந்து கொண்டிருக்கும் நேரத்திலும், உள்ளத்தின் காய்ச்சல் அதிகமாக உந்தித்தள்ள மீஷித் நகரத்தின் தங்கும் விடுதிகளையும், யாத்திரிகர்கள்கூடும் புண்ணியத் தலங்களையும் தேடிச் சென்றான். செப்ஸிவார் நகரில் உள்ள கற்றூண் அடியிலும், பூஸ்தான் நகரத்து ஒட்டக நிலையத்திலும் நெடுநேரம் உட்கார்ந்திருந்தான். ஒருமுறை அப்துல்சைத் என்ற ஒரு வணிகனைப் பின்தொடர்ந்து வடமலைத் தொடர்வரையிலும் சென்று, கடைசியாக அவன் போகாத சந்தையிலே பழைய துணிவிற்கின்ற ஒரு கந்தல் வியாபாரி என்பதைத் தெரிந்து கொண்டான்.

இடைவிடாத அவனுடைய உடல்வேதனை அவனை ஓரிடத்தில் கூடத்துங்க முடியாமல் செய்தது. சுமைகளுடன் நீண்டதுரம் போகும் ஒட்டகங்களுடன் கூடவிரைந்து ஓடும்போது, அவனுக்கு உடல் வேதனை குறைவாகத் தோன்றியது. “யாஸ்மி என்ன வேதனைப்படுவாளோ? ஓர் அடிமையைப்போல விற்கப்பட்டு, ஓர் அடிமையைப் போலவே அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் அவளுடைய உள்ளம் எவ்வளவு துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும்? அன்றைக்கு அடித்த அடியில் அவள் எவ்வளவு துடித்துப் போயிருப்பாள். இப்பொழுது எந்த இடத்திலே, எந்தப் பாதையிலே சென்று கொண்டிருக்கிறாளோ? உன்னுடன்கூட இருப்பதைக் காட்டிலும் வேறு வாழ்வு எனக்குக் கிடையாது என்றாளே!” என்று நினைக்க நினைக்க அவன் உள்ளம் வேதனையால் வெடித்துவிடும் போல் இருந்தது. நாட்கள் வாரங்களாயின வாரங்கள் மாதங்களாயின.

இளவேனிற் காலத்தின் சிலுசிலுப்பைக் கோடைகாலத்துச் சூரியன் உறிஞ்சிவிட்டது. குழகுழவென்று இருந்த சேறுஞ்சகதியும் இறுகிய இரும்பு வார்ப்புப்போல கட்டித் தன்மையடைந்து விட்டது. பச்சைப்புல் தரைகள் பழுப்பு நிறமடைந்தன.

கோடை வெயிலின் கொடுமையும், இடைவிடாத அலைச்சலின் அயர்ச்சியும் சேர்த்து அவனை நோயில் கிடத்திவிட்டன. காய்ச்சலும் சள்ளைக்கடுப்பும் சேர்ந்து இரண்டு வாரங்கள்வரை அவனைப் படுத்த படுக்கையாகக் கிடத்திவிட்டன இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவன் எழுந்திருக்க முடிந்தபோது, அவனுடைய கால்களைத் தரையில் ஊன்றுவதற்குப் போதிய வலிவுகூட இல்லாதவனாக இருந்தான், மீஷித் நகரத்தைச் சேர்ந்த கருணையுள்ளம் படைத்த ஒருவன், அவனைத் தன் கழுதையின்மேல் ஏற்றி நிசாப்பூரில் கொண்டுவந்து விடுவதாகக் கூறினான். நோய் வந்துகிடந்து எழுந்தபிறகு அவன் மூளையில் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டது. இந்த மாதிரி ஊருக்கு ஊர் அலைந்து திரிவது உபயோகமற்றது என்பதை அவன் தெரிந்து கொண்டான். தன் உள்ளத்துக்குள்ளேயே வீற்றிருக்கும் அந்த வேதனையிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஊர் ஊராக ஓடியலைந்ததாக அவனுக்குத் தோன்றியது. எங்கு ஓடினாலும் இருக்கிற வேதனையும் கூடவேதானே வருகிறது என்பது இப்பொழுதுதான் அவனுக்குப் புரிந்தது. இவ்வளவு நாட்களுக்குள் யாஸ்மியிடமிருந்து ஏதாவது செய்தி கிடைத்திருக்க வேண்டும். தன் கோபுரத்திற்கு அவள் நிச்சயம் செய்தி யனுப்பியிருப்பாள். டுன்டுஷ் உடைய ஒற்றர்கள்கூட ஏதாவது கண்டு பிடித்திருக்கலாம். அங்கிருந்து வெளியேறியது எவ்வளவு முட்டாள் தனமாகிவிட்டது. இப்பொழுது திரும்ப நினைத்தாலும் உடனே திரும்ப முடியவில்லை. தேறுவதற்காகச் சிலநாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

-------------

17. தேடித் தேடிக் காணாமல் திரும்பி வந்து சேர்ந்தானே!

பலநாள் கழுதையின் மீது பயணம் செய்து கடைசியாக ஒருநாள் மாலையில் நிசாப்பூருக்கு வந்து சேர்ந்தான் உமார். இடுகாட்டுக்குப் போகும் பாதையில் இறங்கிக் கொண்டு அந்தக் கழுதைக் காரனுக்கு நன்றி கூறினான். பூட்டிக்கொண்டு வந்த தன்னுடைய கோபுரம் எப்படியிருக்கிறதோ என்று எண்ணிக்கொண்டே அதை நோக்கி நடந்தான். எங்கு யாரும் இருக்க மாட்டார்கள், என்று எண்ணினானோ அங்கு அவன் பலப்பல மாறுதல்களையும், பலப்பல புதிய ஆட்களையும் கண்டு வியப்படைந்தான்.

கோபுரத்தைச் சுற்றியிருந்த சுவருக்குள்ளே புதுப்புதுக் கட்டிடங்கள் காட்சியளித்தன. அழகான பல பூஞ்செடிகள் நிறைந்து ஒரு தோட்டம் உருவாகியிருந்தது. இரண்டு தோட்டக்காரர்கள் அங்கே வேலை செய்து கொண்டிருந்தார்கள். கோபுரத்தின் மேலேயிருந்த வரந்தைச் சுவர் ஓரமாக வெண்கலக் கருவிகள் பல ஒளிவீசிக் கொண்டிருந்தன. இன்னும் பலப்பல மாறுதல்களையும் வியப்புடன் பார்த்துக் கொண்டு வெளியே நின்று கொண்டிருந்த உமாரிடம், தாடி வைத்திருந்த வேலைக்காரன் ஒருவன் மரியாதையாக வந்து நின்று சலாம் வைத்தான்.

“தலைவரே! தங்கள் வரவு நல்வரவாகுக! தங்கள் வேலையைத் தொடங்குவதற்குரிய எல்லா வசதிகளையும் செய்து வைத்திருக்கிறோம். தயவுசெய்து உள்ளே வருகிறீர்களா?” என்று மிக வினயத்தோடு வரவேற்றான். தூசிபடிந்த மேனியும், அழுக்கடைந்த உடையும், பித்துப் பிடித்தவன் போன்ற தோற்றமும் உடைய உமாரை அந்த வேலைக்காரன் ஏதோ ஒரு விசித்திரமான பிராணியைப் பார்ப்பது போல் பார்த்தான்.

“சரி” என்று சொல்லிவிட்டு உமார் உள்ளே சென்றான். நேராகத் தன்னுடைய பொருள்கள் இருக்கும் கூடத்திற்குச் சென்றான். அங்கேயிருந்த பொருள்கள் அனைத்தும் வைத்தது வைத்தபடியேயிருந்தன. யாரும் எதையும் தொடவேயில்லை. பட்டுத்திரையும் அதில் பொறிக்கப்பட்ட பறக்கும் பாம்பும் அப்படியே முன்போலவே தொங்கிக் கொண்டிருந்தன. அவனுடைய படுக்கையின் ஒரு புறமாகத் தலையணிகள் அடுக்கி வைக்கப்பெற்றிருந்தன.

“ஏதாவது செய்திகள் கிடைத்தனவா? எனக்காக அனுப்பப்பட்ட ஒருசெய்தி வந்து சேர்ந்ததா?” என்று அந்த வேலைக்காரனை உமார் கேட்டான்.

“தலைவரே! தினந்தினமும் டுன்டுஷ் பிரபு அவர்களிடமிருந்து ஒரு செய்திவரும்.தாங்கள் வருகை புரிந்துவிட்டீர்களா? என்ற கேள்வியாகத்தான் அந்தச் செய்தியிருக்கும்! இதோ, இப்பொழுது கூடத்தாங்கள் வந்துவிட்டீர்கள் என்ற செய்தியை, நிசாம்பூரில் தெரிவிப்பதற்காக ஒரு பையனை அனுப்பிவிட்டேன்” என்றான்.

“வேறு எந்தவிதமான செய்தியும் இல்லையா? ஏதாவது கடிதம் கொடுக்கப் படவில்லையா?”

“இல்லை, வேறு எந்தவிதமான செய்தியும் கிடையாது! எந்தக் கடிதமும் இங்குக் கிடைக்கவில்லை.”

பலகணிக்கருகிலே போய், ஒரு தாழ்ந்த நாற்காலியிலே உமார் உட்கார்ந்தான். வேலைக்காரன் ஒரு வெள்ளிக் கூசாவிலே தெளிந்த தண்ணீர் கொண்டுவந்து அவனுடைய பாதங்களைக் கழுவினான். அப்பொழுது நல்வாழ்த்துக் கூறியபடி ஒரு மனிதன் உள்ளே வந்தான். வெள்ளிய தாடியுடன் கூடிய அந்த மனிதன் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். மேன்மைக்குரிய நிசாம் அவர்களால், பாக்தாது நகரத்திலே ஏற்படுத்தப்பட்ட பாக்தாது நிசாமியா என்ற ஆராய்ச்சிக் கழகத்திலே, கணிதப் பேராசிரியராக இருப்பவன் தான் என்றும், தன் பெயர் மைமன் இபின்நஜிப் ஆல்வாஸிட்டி என்றும் கூறினான். உமார் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தான். அவனுடைய அமைதியைக் கண்ட மைமன் வியப்புடன் மீண்டும் கரகரத்த குரலிலே பேசத் தொடங்கினான்.

“பேரறிஞர் டோலமி அவர்களின் நட்சத்திர அட்டவணையும், அறிஞர் அலிசென்னா அவர்கள் பயன்படுத்தி வந்த வெண்கலப் பூகோள உருண்டையும் நிசாம் அவர்கள் ஆணையிட்டபடி கொண்டு வந்திருக்கிறேன்” என்றான்.

“நல்லது” என்று உமார் எங்கோ கவனமாகப் பதில் சொன்னான். வெயிலின் வெப்பமும், பாலைவனத்து மணற்குடும் உடலின் காய்ச்சலும் வாட்டியபின் இங்கு வந்ததும் அமைதியாக இருந்தது. ஆனால், அந்த அமைதியின் இடையே மைமன் கரகரத்தகுரல் என்னவோ மாதிரியிருந்தது.

ஆமையின் முதுகோட்டிலே தவறுதலாக ஏறிவிட்ட நாரைபோல, வெகு வேகமாகப் பின்வாங்கி அந்த இடத்தைவிட்டுச் சென்றான் மைமன் என்ற அந்தக்கணிதப் பேராசிரியன். ஆனால், இரவு நெடுநேரத்திற்குப்பிறகு, கோபுரத்தின் உச்சியிலேயிருந்த தளத்தில் உமார் உலவிக் கொண்டிருந்தபொழுது, அந்த முதிய பேராசிரியன் மைமன் தான் கொண்டு வந்த கருவிகளை நோக்கிச் செல்லாமல் இருக்க முடியவில்லை. அங்கே சென்று, உமார் கவனிக்காமல் இருக்கும்போதே, அந்தப் பூகோள உருண்டையின் நான்கு புறமும் இருந்த விளக்குகளை ஏற்றினான். அந்த உருண்டையின் மேல்பாதியில் வெளிச்சம் படும்படிக்கு அந்த விளக்குகளை ஒழுங்குபடுத்தினான்.

அப்பொழுது, உலாவிக் கொண்டிருந்த உமார் திரும்பிப் பார்த்தான். மெருகேறிய அந்த வெண்கல உருண்டையின் மீது அவன் கண்கள் பதிந்தன. அருகில் வந்து அதை நன்றாக உற்றுக் கவனித்தான். நட்சத்திரங்கள் இருக்கும் இடங்களின் எடுத்துக்காட்டுக்கள் அதில்வலை பின்னியது போல் சிறுசிறு உருவங்களில் வரையப்பட்டிருந்தன.

எத்தனையோ பேர் அந்த உருண்டையைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். பழைய கோடுகளையும், புதிதாக அதில் சேர்க்கப்பட்டிருந்த கோடுகளையும் உமார் கவனித்தான். அடிவானத்தை நோக்கி வலப்புறத்தையும், இடப்புறத்தையும் கவனித்துவிட்டு உமார், பூகோள உருண்டையை மெதுவாகச் சுற்றிக்கொண்டு வந்து, தன் தலைக்கு நேரே உள்ள வானத்தோடு பொருந்தும் நிலைமையில் அதை நிறுத்தினான். பொத்தானைத் தடவி, அழுத்தி அந்த நிலையில் அதை நிலைபெறும்படி செய்தான். பெரும் பேராசிரியர்கள் கண்டுபிடித்த கருவிகளும், பாக்தாது நகரத்துக் கணிதப் பேராசிரியன் ஒருவனும், அறிஞர் அலிசென்னாவின் ஆராய்ச்சிகளின் பலனும், அனைத்தும் உமாரின் கையிலே இப்பொழுது சேர்ந்திருக்கின்றன. இருப்பினும் அவன் அதனால் கர்வமடையவில்லை.

வேகமாக உள்ளே நுழைந்த டுன்டுஷ் “அடேயப்பா! மிருக ராஜ்யத்திலிருந்து வந்த முனிபுங்கவர் மாதிரியிருக்கிறாயே! உன்னை எங்கெங்கே தேடுவது? நெருப்புப்போல பறக்கும் நிசாம் அவர்களின் கோபத்தை நீ எப்படித் தவிர்க்கப் போகிறாய்? என்ன பதில் சொல்லப் போகிறாய்? சரி, சரி இப்பொழுது இங்கு வந்து சேர்ந்தாயே, அதுவே பெரிது!” என்றான்.

“நான் வெளியேறிச் சென்றிருந்தபோது, யாஸ்மி எதாவது செய்தி அல்லது அடையாளம் அனுப்பியிருந்தாளா?” என்று உமார் அவனை வினவினான்.

ஒற்றர்களின் தலைவனான அந்த டுன்டுஷ் விழிக் கோணத்தாலேயே சிரித்தபடி, “ஓ அந்தப் பெண்ணா, அவளைப்பற்றி நான் ஒன்றும் கேள்விப்படவில்லையே!” என்றான்.

“உன்னுடைய ஆட்களுக்கு ஏதாவது செய்தி கிடைத்திருக்க வேண்டுமே!”

டுன்டுஷ் தலையை அசைத்துக் கொண்டே, ‘ஊஹாம்! ஒரு தகவலும் இல்லை. என்னுடைய ஆட்கள் எவ்வளவோ முயற்சிசெய்து தேடிப்பார்த்தார்கள் பயனில்லை. நீ ஏன் இதற்காக இத்தனை கவலைப்படுகின்றாய்? அவள் போய்விட்டால் இந்த உலகத்திலே பெண்களே இல்லாமலா போய்விட்டார்கள்? பாரசீகத்துப் பைங்கிளிகளும் சீனத்துச் சிங்காரிகளும் எத்தனையோ பெண்கள் அடிமைச் சந்தையிலே இருக்கின்றார்கள். எடுப்பும் அழகும் வாய்ந்த ஒருத்தியை எளிதில் தேர்ந்தெடுத்து உன்னுடையவள் ஆக்கிக் கொள்ளலாம். அதற்கு வேண்டிய ஏற்பாட்டை நான் கவனித்துக் கொள்கிறேன். ஆனால், நிசாம் இப்பொழுது கோபமாக இருக்கிறார். அவரைச் சமாதானப் படுத்துவதற்கு ஏதாவது இங்கு வேலை நடந்ததாக நீ காண்பித்துக் கொள்ள வேண்டும். அவர் எதிரிலே ஏதாவது ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டும். என்ன செய்யப் போகிறாய்?” என்று டுன்டுஷ் உமாரைக் குடைந்தான். உமார் பேசாமலிருந்தான் அவனிடம் எந்த விதமான திட்டமோ அதைப்பற்றிய எண்ணமோ கிடையாது.

“அவர் உன் ஆதரவாளர் என்பதை மறந்துவிடாதே! அவர் மனம் சமாதானம் அடையத் தக்கசெயல் ஏதாவது நீ செய்திருக்க வேண்டும். உன்னால் ஏதாவது பயன் இருப்பதாக அவர் கருத வேண்டும். உன்னுடைய அறிவினால், அறிவின் திறமையால் செய்யக்கூடிய ஒரு திட்டத்தைப் பற்றித் தெரிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர் உன்னைப் பயன் உள்ளவனென்று கருதுவார்.”

“சரி! ஒரு புதிய பஞ்சாங்கம் அமைக்கப் போவதாக அவரிடம் அறிவிப்போம்!” என்றான் உமார். “என்ன? என்ன சொல்கிறாய்?” என்று தன்னையே நம்பமுடியாத குரலில் அதிர்ந்து போய்க் கேட்டான் டுன்டுஷ்.

“இப்பொழுதுள்ள பஞ்சாங்கத்தின்படி நாம் பலமணி நேரங்களை இழந்து வருகிறோம். தவறுதல் எதுவும் இல்லாமல் காலத்தைக் கணக்கிடுவதற்குரிய ஒரு முறையை நாம் ஏற்படுத்துவோம் என்று நான் சொல்கிறேன்” என்று சொன்னான் உமார் கம்பீரமாக.

டுன்டுஷ் அச்சங்கலந்த உள்ளத்துடன் உமாரை நோக்கினான். ஏற்கெனவே, வேலைக்காரர்கள் தங்கள் தலைவரின் விசித்திரப் போக்கைப் பற்றிக் கூறியிருக்கிறார்கள். இப்பொழுது உமாரின் விசித்திரப் போக்கைத் தானே நேரில் காண நேர்ந்ததும் அவனுக்குப் பயமாயிருந்தது. அவனுடைய பேச்சு பைத்தியக்காரத்தனம்ாக அவனுக்குத் தோன்றியது. இருந்தாலும் சிரித்துக் கொண்டே, “நான் பேசுவதில் ஏதும் தவறிருந்தால், கருணைகாட்டி மன்னித்து விடு. அல்லாவினால் படைக்கப்பட்ட நிலவு நமக்கிருக்கிறது. ஒவ்வொரு முறையும் முதற் பிறையுடன் அது வெளித் தோன்றும்பொழுது நம்முடைய மாதத்தின் முதல் நாள் தொடங்குகிறது. நிலவைக் காட்டிலும் சிறந்த காலத்தை அளக்கும் கருவியை எந்த மனிதனாலும் செய்யமுடியாதல்லவா? என்று கேட்டான் டுன்டுஷ்.

“ஏன் செய்ய முடியாது? எகிப்தியர்கள் செய்திருக்கிறார்கள்! கிறிஸ்துவர்களும் கூடச் செய்திருக்கிறார்களே! இதோ நீ இங்கே ஊன்றி வைத்திருக்கிறாயே, மரத்துண், அது ஓடும் காலத்தை அளப்பதற்கு உதவாது. விளையாடும் சிறுவர்க்கு வேண்டுமானால் பயன்படும்! வந்து பார்” என்று ஆத்திரமாகக் கூறிவிட்டு, டுன்டுஷை இழுத்துக் கொண்டு போனான். வெயிலின் மூலமாக நேரத்தை அறிந்து கொள்வதற்காகப் பூசிமெழுகிய தரையின் நடுவிலே டுன்டுஷ் மிகுந்த முயற்சிகொண்டு ஓர் அழகிய மரக்கம்பத்தை நட்டு வைத்திருந்தான். வெயில் பட்டு விழும் கம்பத்தின் நிழல் மூலமாக நேரத்தையறியலாம் என்பது டுன்டுஷ் நினைப்பு. பழங்காலத்தில் மக்கள் அவ்வாறே நேரத்தை அளந்து வந்தார்கள். கோபத்துடன் அவனை இழுத்துச் சென்ற உமார், தன் தோளை அந்தக் கம்பத்தின் மீது மோதி, இரண்டு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஒரே மூச்சில் பிடுங்கிக் கீழே சாய்த்தான். அந்தப் பாலைவனத்துப் பறவையின் உள்ளத்திலே கோபத் தீ கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது.

“இந்தக் கம்பம் காற்றிலே வளைந்து வெயிலில் சுருங்கி உருமாறிப் போய்விடுமே! நாம் என்ன விளையாட்டுப் பிள்ளைகளா? கண்டதையெல்லாம் நம்புவதற்கு? மத விரோதிகளான கிறிஸ்துவர்கள் வைத்திருப்பதைப் போன்ற தூண் இருக்க வேண்டும். ஐந்து ஆள் உயரமுள்ள பளிங்குக்கல் தூண்வேண்டும். அது கை நகத்தைப் போல் சுற்றிலும் சம வளைவுள்ளதாகவும், தேய்த்து மெருகு தீட்டப் பெற்றதாகவும், நீர் மட்டத்தோடு பொருந்தியதாகவும், செப்பினால் நேராகப் பொருத்தப்பட்டும் இருக்கவேண்டும். பருவ மாறுதல்களால் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் அந்தப் பளிங்குத் தூண்! அதன் பக்கத்திலே ஒரு நீர்க்கடிகாரமும் இருக்கவேண்டும். கொத்தர்களையும் தச்சர்களையும் என்னிடம் அனுப்பு. எப்படிச் செய்யவேண்டுமென்று நான் அவர்களிடம் விளக்குகிறேன்” என்று கடகடவென்று பேசினான் உமார்.

“மதத் துரோகத்தின் சின்னத்தை நிலைநாட்டுவதுபோல் இது எனக்குத் தோற்றமளிக்கிறது. ஆகவே நிசாம் அவர்களின் ஒப்புதலை முதலில் பெற்றுக் கொள்ளவேண்டுமென்று நினைக்கிறேன்” என்று முணுமுணுத்த குரலில் டுன்டுஷ் கூறினான்.

“நிழலின் மூலமாக ஒரு மயிரிழையளவு காலத்தையும் கணக்கிடுவதற்குரிய ஒரே வழி அதுதான்!” “மயிரிழையளவு காலத்தையும்” டுன்டுவின் வாய் முணுமுணுத்தது. அவனால் இதை நம்ப முடியவில்லை. அருகில் நின்ற குவஜா மைமன் பக்கம் திரும்பி நோக்கினான். அவன் இதை நம்புகிறானா என்ற கேள்வி அவன் கண்களிலே தோன்றியது. இவன் கருத்தைப் புரிந்துகொண்ட அந்தக் கணிதப் பேராசிரியன், மைமன் “அவர் குழப்பத்துடன்தான் பேசுகிறாரோ என்னவோ, அது தெரியவில்லை. ஆனால், அவர் கணிதங்களைச் செய்வதிலே மூடரல்ல. அவர் விளக்குகிறபடியான கால அளவுத் தூண் நிச்சயமாகச் சரியானதாகவேயிருக்கும். சரியான முறையில் அவர் கூறுகிறபடி தூண் அமைக்கப்பட்டால் அறிஞர் அலி சென்னாவின் பூகோள உருண்டை எவ்வளவு சரியானதோ, அவ்வளவு சரியாக அந்தத் தூணும் இருக்கும். இதில் ஐயமில்லை!” என்றான். எந்த முடிவுக்கும் வரத் தோன்றாது அவ்விடத்தைவிட்டு அகன்றான் டுன்டுஷ்.

டுன்டுஷ் கூறிய இந்தக் குழப்பமான கதையை நிசாம், வெறுப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். உமாரை வைத்துக்கொண்டு செய்வதற்கிருந்த அவருடைய திட்டங்களெல்லாம்கூட அவன் மறைவினால் தவிடு பொடியாகியிருந்தன. அந்தக் கோபத்துடன் குவாஜா மைமன் வேறு, உமாரின் இந்தப் புதிய பஞ்சாங்க முறையை ஒப்புக்கொள்கிறான் என்பதும் சிந்திக்கவேண்டிய விஷயமாக இருந்தது.

“புதுப் பஞ்சாங்கமா? அது நம் பழக்க வழக்கத்திற்கு மாறுபட்டதாயிற்றே! மதத் தலைவர்களின் உலோமா சபை எதிர்க்குமே! - கிறிஸ்துவர்களுக்கு எனத் தனியே ஒரு பஞ்சாங்கம் இருக்கிறது! காத்தாணியர்களுக்கு வட்டப் பஞ்சாங்கம் இருக்கிறது. பாரசீகர்களாகிய நமக்கு, இஸ்லாமிய ஆட்சிக்கு முன்னிருந்தே இந்தப் பஞ்சாங்க முறையிருந்து வருகிறது இதில் மாறுதல் செய்வதென்பது ஆபத்தாயிற்றே!”

நிசாமின் இந்த ஆராய்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்த டுன்டுஷ் கண்களை முடிப் பெருமூச்சு விட்டபடியே “உமார் காலம் ஒன்றே ஒன்றுதான் என்று கூறுகிறான். நாட்டின் காவலராகிய தாங்களோ, நான்கு காலங்களைப் பற்றிக் கூறுகிறீர்கள் எனக்கு மூளை குழம்புகிறது.” "நான்கு காலங்கள் அல்ல; நான்கு பஞ்சாங்கங்கள்! சுல்தான் மாலிக்ஷா இவனைக் கொண்டு வரச் சொல்லி இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறாறே!”

“மாலிக்ஷா இவனைக் கொண்டுவா என்கிறார். இவன் காலத்தை அளக்கப் புதிய கருவியைக் கொண்டு வா என்கிறான். இந்தக் கருவியை வைத்துக் கொண்டு என்னதான் செய்வதோ தெரியவில்லை. விழித்தெழுந்ததிலிருந்து தூக்கம் வரும்வரை ஒவ்வொரு வினாடியையும் அளந்து கொண்டிருப்பான் போலிருக்கிறது” என்று டுன்டுஷ் சலித்துக் கொண்டான்.

“இல்லையில்லை இளவேனிற் காலத்திலும் முன்பனிக் காலத்திலும் இரவும் பகலும் சரி சமமாக இருக்கும் ஒரு நாளை அவன் கண்டுபிடிக்க முடியும். இந்தப் பெருந்துணின் துணையால் கதிரவனின் நிழல் மிக மிக நீண்டு விழும். குளிர் காலத்தின் ஒரு நாளில் நிழல் மிக மிகக் குறுகி விழும். கோடைகாலத்தின் ஒரு நாளையும் அவன் முடிவு செய்ய முடியும்.

இந்த ஆராய்ச்சிகளையும், விண்மீன்களின் இயக்கத்தைப் பற்றி அவன் செய்திருக்கும் ஆராய்ச்சிகளையும் பயன்படுத்தி அவன் புதுமையான ஒரு காலக் கணித முறையை ஏற்படுத்த முடியும். அவன் என்ன செய்வானென்பது எனக்குப் புரிகிறது” என்று நிசாம் ஓர் ஆராய்ச்சியே நடத்தினார்.

“அல்லல்லா! ஆண்டவன் அருள் பாலிப்பானாக!” என்றான் டுன்டுஷ்.

“ஆண்டவன் அருள் பாலித்தால், மாலிக் ஷா அவர்களின் ஆட்சியில் நாம் ஒரு புதிய பஞ்சாங்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.”

இது ஓர் அருமையான ஏற்பாடாக நிசாம் அவர்களின் மூளையில் தோன்றியது. மாலிக் ஷாவின் ஆட்சியில் அவருக்கே சொந்தமான ஒரு பஞ்சாங்க முறை அமுலுக்கு வந்தால், அவருக்குப் பெருமையாக இருக்கும். பெருமையின் பூரிப்பால் அவர் முதன் முதலாக அரசாங்க வானநூல் கலைஞராக அமர்த்திக் கொள்வார். இது சரியான ஏற்பாடு என்று தோன்றியது. “அவன் கேட்டபடியே காலம் அளக்கும் கருவியை அமைத்துக் கொடுப்போம். ஆனால், அவன் ஏன் அப்படி அலைந்து சுற்றிக் கொண்டிருந்தான்!” என்று நிசாம் கேட்டார்.

“அது ஆண்டவனுக்குத்தான் தெரியும் ! தங்கள் அடியவனுக்கு எதுவும் தெரியாது!” என்று உள்ளத்தை மறைக்கும் ஒரு புன்சிரிப்புடன் டுன்டுஷ் கூறினான்.

“அவன் மறுபடியும் சுற்றியலையாமல் பார்த்துக் கொள்வதை உன் வேலையாக வைத்துக் கொள். அவன் இங்கேயிருக்க வேண்டியது இன்றியமையாதது” என்று ஆணையிட்டு, அவனுக்கு விடைகொடுத்தார் நிசாம்.

தன் வீட்டுக்குச் சென்ற டுன்டுஷ் அங்கிருந்து ஓரிடத்திற்குச் சென்றான். அந்த இடம் ஒரு பழைய கிட்டங்கி. அது கடைத் தெருவை நோக்கிக் கொண்டிருந்தது. தான் மறைந்து கொள்வதற்காகவும், தன் வசம் கிடைத்த பிறர் பார்க்கக் கூடாத பொருள்களை மறைத்து வைப்பதற்காகவும் அந்தக் கிட்டங்கியை அவன் பயன்படுத்தி வந்தான். எகிப்திய ஊமையொருவன் அதைக் காவல் புரிவதற்காக வைக்கப்பட்டிருந்தான். அவன், தானே அந்தக் கிட்டங்கிக்கு உரிமையாளன்போல நடித்து வந்தான். அங்கே சென்ற டுன்டுஷ், ஒரு மூலையிலேயிருந்த பெட்டகத்தின் மூன்று பூட்டுக்களையும் திறந்து உள்ளேயிருந்து ஒரு பொருளையெடுத்தான். நீலக்கல் பதித்த ஒரு சோடி வெள்ளி வளையலே அது. அந்த வளையலை ஒரு கூனன் கொண்டு வந்து கொடுத்தாள். அவன், இறந்துபோன சுல்தானின் அன்புக்குரிய விகடனாக இருந்தவன், மேற்குத் திசையில் அலப்போ நகரை நோக்கிச் செல்லும் சாலை வழியில், கொண்டு செல்லப்பட்ட யாஸ்மி என்ற பெண், அன்பின் அடையாளமாக உமார் என்பவனுக்கு அனுப்பிய பொருளே இந்த வளையல் என்று அந்தக் கூனன் கூறினான். இந்த வளையல் மட்டும் உமார் கையில் கிடைத்தால், அலெப்போ நகர் நோக்கிப் பறந்து விடுவான். பிறகு நிசாம் அவர்கள் பெருங் கோப்த்திற்குத் தான் ஆளாக நேரிடும். இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்த டுன்டுஷ், அந்த வளையல்களைத் தன் மடிக்குள்ளே எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு ஓர் ஊற்றுக்கிணற்றை நோக்கி வந்தான்.

யாரும் கவனியாத சமயம் பார்த்து, அந்த வளையல்களை கிணற்றுக்குள்ளே போட்டு விட்டுப் பட்படவென்று நடந்து அந்த இடத்தை விட்டுச் சென்றான். ஆராய்ச்சிக் கூடத்தில் வேலைகள் சுறுசுறுப்பாய் நடப்பதைக் கண்டு நிசாம் அல்முல்க் மிக மகிழ்ச்சியடைந்தார். கோடைக்காலம் முடியும் தருவாயில் நீர்க்கடிகாரமும் பளிங்குக்கல் தூணும் அமைக்கப் பெற்றுவிட்டன. நீர்க் கடிகாரத்தில், மணிக்கு அறுபது முறை சுற்றுகிற ஒரு சிறு சக்கரம் அமைக்கப் பெற்றிருந்தது. மணிக்கு ஒரு முறை அசைகின்ற ஒரு பெரிய சக்கரமும் அதில் பொருத்தப் பெற்றிருந்தது. ஈட்டி முனை போன்ற ஒரு வெள்ளி முனை அளவு படுத்தப்பட்ட ஒரு கோட்டின் மீது ஒவ்வொரு மத்தியானத்திற்கு ஒரு முறை நகர்ந்து சென்றது. ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்ப அந்தக் கோட்டின் மீது நகர்ந்து கொண்டிருந்தது. இவற்றையெல்லாம் பார்த்த டுன்டுஷ் எவ்வளவு சரியாக எவ்வளவு போற்றத்தக்கதாக இருக்கிறது என்று வியப்படைந்தான். ஆனால், கணிதப் பேராசிரியன் மைமன், ஓர் ஆண்டின் முடிவில்தான் உண்மை நேரத்திற்கும், இதற்கும் உள்ள வேற்றுமை தெளிவுபடும் என்று விளக்கினான். கோட்டையில் நாளைக் கணக்கிடுவதற்கு, வேல்பிடித்தவீரன் ஒருவன் இருப்பதுபோல், இங்கேயும் ஒருவன் இல்லாததுதான் பெருங்குறையென்று டுன்டுஷ் கருதினான். அவனுடைய அறியாமைக்காகப் பேராசிரியன் மைமன் இரக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைத்தான்.

எல்லாம் ஆயத்தமான பிறகு, ஆராய்ச்சியாளர் நால்வர் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். தங்கள் வேலையைத் தொடங்குவதற்கு எல்லோரும் ஆயத்தமாகினர். ஏழெட்டு ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகே இதன் முடிவு தெரியும் என்று மைமன் கருதினான். நான்கைந்து ஆண்டுகள் போதுமென்று உமார் கூறினான்.

“அடேயப்பா! நாலைந்து வாரத்தில் ஒரு பெரிய அரண்மனையே கட்டிவிடலாமே! இந்த வேலைக்கு வருடக் கணக்கில் ஆகுமா? என்ன பயன்?” என்றான் டுன்டுஷ்.

“உன்னுடைய அரண்மனை காலப்போக்கில் மண்ணோடு மண்ணாகப் போய்விடும். என்னுடைய பஞ்சாங்கம் என்றென்றும் பயன்படும். போபோ!” என்று உறுமினான் உமார்.

சூரியனுக்கு நேராய் பூமி இருக்கக்கூடிய முன்பனிக்காலத்தில் ஒரு நாள் தங்கள் வேலையைத் தொடங்க ஆறு வான நூல் ஆராய்ச்சியாளர்கள் ஆயத்தமாக இருப்பதாக ஒரு வாரம் முன்பாகவே உமார், நிசாம் அவர்களுக்குத் தெரிவித்தான். பேரரசர் சுல்தான் அவர்கள் ஆராய்ச்சிக் கூடத்தைப் பார்வையிடுவதற்கு வேண்டிய வேலைகளையும், அவர் எதிரில் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் நாடகம் போல் நடத்திக் காட்ட நிசாம் ஏற்பாடு செய்தார்.

----------------

18. கிழியட்டும் பழம் பஞ்சாங்கம்

சுல்தான் மாலிக்ஷா அவர்கள் ஆராய்ச்சிக் கூடத்தைப் பார்வையிட வருவதாக இருந்த அன்று, அவர் காலையில் முதலில் மான்வேட்டை முடிந்தபிறகு மாலையில் அங்கே நேரே வருவதாக இருந்தது. மத்தியானத்துக்குப் பிறகு அந்த ஆராய்ச்சிக்கூடம் பார்ப்பதற்கு ஒரு கேளிக்கைக்கூடாரம் போல் காட்சியளித்தது. புதிதாக அமைக்கப்பட்டிருந்த தோட்டம் முழுவதும் தரையில் ரத்னக் கம்பளங்கள் விரிக்கப் பட்டிருந்தன. மரத்தடிகளிலே, பலவிதமான கோப்பைகளிலே விதவிதமான கறிவகைகளும், சர்பத்தும், பிற உணவுப் பொருள்களும் வைத்துக்கொண்டு வேலையாட்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அடையாள முறைக் கணிதப் பேராசிரியரும், உமாரின் கணித ஆசிரியருமான அலி அவர்களும், பல்வேறு கலைக் கழகங்களின் பேராசிரியர்களும் தங்கள் அரசாங்க உடைகளையணிந்துகொண்டு அங்கு வந்து கூடினார்கள். பள்ளி வாசலிலிருந்து வந்த மதத் தலைவர்களான முல்லாக்களும் வந்தார்கள். அவர்கள் அனைவரும் எதுவும் பேசாமலும், எவருடன் கலவாமலும் தனியே ஒரு புறத்தில் இருந்தார்கள். முல்லாக்களையெல்லாம் அவரவர்களுக்குரிய மரியாதையுடன் நிசாம் அவர்களே வரவேற்று, சுல்தான் அவர்களின் ஆஸ்தான மேடையின் அருகிலே உள்ள ஆசனங்களில் அமர வைத்தார். நாட்டிலே முழு ஆற்றலும் வாய்ந்த சமயப் பேரவையின் உறுப்பினர்களான அவர்களுடைய கருணை நிறைந்த ஆதரவு இருந்தால்தானே விஞ்ஞானம் பிழைக்க முடியும். அதற்காகவேதான் நிசாம் அவர்களுக்கு மிகுந்த மரியாதை செலுத்தினார். அவர்களோடு பேசும்போது, நேர் எதிராக நின்று பேசுவது கூடாதென்றும், அது மரியாதைக் குறைவு ஆகுமென்றும், அவர்களின் பின் பக்கமாக நின்றுபேசவேண்டுமென்றும் உமாருக்கும் எச்ரிக்கை செய்தார். ஆனால், அவர்கள் அங்கே கருணை உள்ளத்தோடு வரவில்லை.

உமார் எதுவும் பேசக் கூடியவனாக இல்லை. யாரோ நடத்துகிற விருந்தில் கலந்து கொள்ள வந்த ஒருவனாகவே அவன் அங்கு நடமாடினான். வெளியிலே குதிரைகளின் காலடிச் சத்தம் கேட்டதும் எல்லோருடைய கண்களும் தலைவாசல் புறம் திரும்பின. சுல்தான் வருவதை அறிந்ததும் உமாருக்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தது.

அவர் குதிரையிலிருந்து இறங்கியதும் வேலைக்காரர்கள் அவசர அவசரமாக அரசர் எதிரில் ஒரு நடைவிரிப்பை விரித்தார்கள். தன்னுடைய வேட்டையாடும ஈட்டியை அருகில் இருந்த அடிமை ஒருவனிடம் கொடுத்துவிட்டுக் கீழே இறங்கிய சுல்தான் மாலிக்ஷா உள்ளே வந்தார். அவர் உடல் முழுவதும் தூசி படிந்திருந்தது. களைப்பாக இருந்தாலும் அவர் களிப்பாக இருந்தார். இருப்பினும், இந்த நிசாமையும் வயது முதிர்ந்த முல்லாக்களையும் பார்க்க நேர்ந்ததில் அவர் உண்மையில் மகிழ்ச்சியடைந்திருக்க மாட்டார் என்றே உமார் நினைத்தான். ஒரு மிருகம் நடப்பதுபோல் நடந்து வந்த மாலிக்ஷா தாம் பேசும்போது கைகளை அசைக்கவும் இல்லை. குரலை உயர்த்தவும் இல்லை.

அவருக்கு வணக்கம் கூறுவதற்காக நிசாம் உமாரை அழைத்து வந்தபோது, சுல்தான் அவனை உற்றுநோக்கிவிட்டு, ‘ஆம்! இவனேதான்!” என்று மெல்லிய குரலில் கூறினார்.

“இந்த உலகத்தையாளும் இறைவரே! தங்களின் வேலைக்காரன் நான்” என்று கூறி உமார் அடி வணங்கினான்.

“கொராசன் பாதையிலே, நான் தங்கியிருந்த இடத்திற்கு நீ வந்தாய்! என்னைப் பற்றிய ஒரு குறி கூறினாய். நீ கூறியபடி அது நிறைவேறி விட்டது. அதை நான் மறக்க வில்லை; என்றும் மறக்கவும் முடியாது. இப்பொழுது நீ என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறாய்!” என்று அவனை சுல்தான் மாலிக்ஷா கேட்டார்.

“அரசே! தங்கள் பணியாளாக என்னை அமர்த்திக் கொள்ளும்படி வேண்டுகிறேன்!” என்றான் உமார். "அப்படியே ஆகட்டும்! சரி, இப்பொழுது நீ இங்கே என்ன செய்து வைத்திருக்கிறாய்? காட்டு!” என்றார் சுல்தான்.

உயர்ந்த பளிங்குத் தூண் கருவியையும், அங்கிருந்த வேறு விஞ்ஞானக் கருவிகளையும் அக்கறையோடு கவனித்தார். வயது முதிர்ந்த கணிதப் பேராசிரியனாகிய மைமன், அரசன் முன்னிலையில் நிற்கிறோமே என்ற பயத்தில் கை நடுங்கி, மெய்நடுங்கி, வாய் குளறி விளக்கம் சொன்னதைக் கேட்கப் பொறுக்காமல், சுல்தான் உமார் பக்கம் திரும்பி ‘நீயே விளக்கிக் கூறு’ என்றார். அந்த இளம் வானநூல் ஆசிரியரான உமாரின் தெளிவான சொற்களை அவர் பெரிதும் விரும்பினார். உமாருக்கு அப்பொழுது வயது இருபத்திரண்டு. சுல்தான் மாலிக்ஷாவுக்கோ இருபதுதான். அவர் உமாரின் ஆற்றலைக் கண்டு வியந்தார்.

விஞ்ஞானக் கருவிகளை சுல்தான் கருத்தோடு கவனிப்பதைக் கண்டு பொறுக்காத பெரிய முல்லா, தம்முடைய தகுதியை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் மதவாதத்தை நிலைநிறுத்துவதற்காகவும் முன்வந்தார்.

“கவனியுங்கள், நீங்கள் ஆண்டவனின் தொண்டர்களாய் இருந்தால் அவன் ஒருவனுக்கே அடிபணியுங்கள்! அவரால் படைக்கப்பட்ட கதிரவனையும் நிலாவையும் போற்றி வணங்காதீர்கள் என்று புனிதத் திருமறை புகல்கிறது” என்று கூவினார் பெரியமுல்லா.

திருக்குரானில் உள்ள இந்த வாக்கியங்களைக் கேட்டதும் வழக்கம்போல மற்ற முல்லாக்களும், தங்கள் ஒப்புதலை ஒத்த குரலிலே தெரிவித்தார்கள்.

“இரவும் பகலும் கதிரும் நிலவும் எல்லாம் ஆண்டவனின் படைப்புகளே! அவனால் படைக்கப்பட்ட பொருள்கள் தெளிவாக்கப்படாவிட்டால், அவற்றை (அவற்றின் பயனை) நாம் பெறமுடியுமா? இப்படியும் கூடத்தான் திருமுறை கூறுகிறது” என்று உமார் கூறினான்.

மாலிக்‌ஷா எதுவும் கூறவில்லை. அவரும் மத நம்பிக்கையுள்ள நிசாம் போலவே, மதப்பெரியோர்க்கு மிகவும் மரியாதை செலுத்துபவர். இந்த விஷயத்தில் அவர் எதுவும் பேசுகின்றாற்போல இல்லை. பெரியமுல்லா அவர்களிடம் சென்று மரியாதை செலுத்தி விடைபெற்றுக் கொண்டு குதிரையேறப் போனார். குதிரையில் ஏறி உட்கார்ந்ததும் உமாரை அருகில் அழைத்து, “அரசாங்க வானநூல் கலைஞராக உன்னையேற்றுக் கொள்ளும்படி அமைச்சர் நிசாம் வேண்டிக் கொண்டார். அவ்வாறே ஆணையிட்டிருக்கிறேன். நாளைக் கூடும் சபையில், உனக்கு அரசாங்க மரியாதையுடன் பதவி வழங்கப்படும். அடிக்கடி சபைக்குவா. என் அருகில் அடிக்கடி வந்து இரு. உண்மையான குறிகளை அவ்வப்பொழுது உணர்ந்து கொள்வதற்கு நீ என் அருகில் இருப்பது இன்றியமையாதது” என்று கூறிவிட்டு, கடிவாளத்தை ஒரு சுண்டு சுண்டிக் குதிரையைத் தட்டிவிட்டார். அவருடன் கூடவந்த, அலுவலர்களும், வேலையாட்களும் அவரைத் தொடர்ந்து சென்றார்கள். குதிரையின் காலடி கிளப்பிய தூசியிலே அவர்கள் மறைந்து சென்றார்கள். ஆனால் நிசாம்தான் மனம் வருந்தினார்!

மறுநாள் நிசாம் உமாரைத் தனியாகச் சந்தித்தபோது, “நேற்று நீ மோசமாக நடந்து கொண்டாய். உலேமா முல்லாக்களுடன் இவ்வாறு எதிர்த்துப் பேசியிருக்கக் கூடாது. உன்னுடைய பாதையில் அவர்கள் அடிக்கடி தடையெழுப்புவதற்கு வாய்ப்பளித்து விட்டாயே!” என்று வருந்தினார்.

“தந்தையே! என் வேலைக்கும் உலேமாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?” என்று உமார் கேட்டான்.

“அவர்களுடைய ஆதரவில்லாத எந்தக் காரியமும் வெற்றிபெற முடியாது. நீ தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இப்பொழுது, அரச சபையில் நீ பதவியேற்கப் போகிறாய். வருடத்திற்குப் பனிரெண்டாயிரம் மிஸ்கல் நாணயங்கள்-வரியைக் கழிக்காமல் உனக்குச் சம்பளமாகக் கிடைக்கும். மாலிக்ஷா பிரியப்படுகிற போதெல்லாம் உனக்குப் பொன்னாக வாரிக் கொட்டுவார். அந்த வரும்படி வேறு கிடைக்கும்” என்று நிசாம் சொல்லிக்கொண்டு வரும்போதே உமார் அதிசயித்தான். இத்தனை பெரிய தொகையை அவன் எண்ணிக் கூடப் பார்த்ததேயில்லை.

“அவருடைய ஆதரவு உனக்கு இருக்கும்வரையிலே, வெகுமதிகளும் பரிசுகளும் விரும்பியபோதெல்லாம் கொடுப்பார். ஆனால் அவர் ஒருவரிடம் வைத்திருக்கும் நம்பிக்கை குறையுமானால், கொல்லும் கத்தி முனையைக் காட்டிலும் கொடுரமாக மாறிவிடுவார். அரசர்களின் போக்கே இதுதான். அன்பிருந்தால் ஒரேயடியாகத் தூக்கி வைத்துக் கொள்ளுவார்கள். வெறுப்பிருந்தால் உயிருக்கு உலை வைக்கும் ஆயுதமாக அவர்களே மாறிவிடுவார்கள். அவருடைய கருணை உன்மீது என்றும் இருக்குமென்றே எண்ணுகிறேன். அப்படியே அல்லா அருள் புரிவாராக! ஆயினும் அவருடைய அரண்மனை முழுவதும் அவருடைய உளவாளிகள் தேனடையை மொய்க்கும் தேனீக்களைப் போல - எங்கும் சுற்றிக் கொண்டே யிருப்பார்கள். அவர்களுடைய கண்களுக்கு எந்த விஷயமும் தப்பாது, உன்மீது வெறுப்பூட்டுவதற்குப் பலர் முயல்வார்கள். அவருடைய ஆதரவு இருக்கும் வரை உன் வாழ்வு இன்ப வாழ்வுதான். அது நீங்கியதோ, உன்னுடைய வாழ்வு பெருமை, செல்வம், உயிர் எல்லாம் அழிந்து போக வேண்டியதுதாம். என்னுடைய ஆதரவு உனக்கு எப்போதும் உண்டு. ஆண்டவன் அருளால் என்னை நேரடியாக எதிர்ப்பவர்கள் யாருமே இப்போது இல்லை. மேலும் என்னுடைய அரசியல் செல்வாக்கிற்குக் காரணம் என்னுடைய பெரும் உழைப்புத்தான். இந்த சாம்ராஜ்யத்தை அமைப்பதில் நான் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறேன்.”

இவ்வாறு பலவிதமான உபதேசங்களைச் செய்து வந்த நிசாம், தமக்கு அந்த சாம்ராஜ்யத்தை படைப்பதில் நெடுநாளாக இருந்து வந்த பெரும் பங்கையும், தன் உழைப்பையும், அரசுக்கும் தனக்கும் உள்ள தொடர்பையும் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அவருடைய விளக்கத்திலே மூன்று தலைமுறைகள் சரித்திரமே அடங்கி யிருந்தது. பழைய சுல்தான் ஆல்ப் அர்சலான் புயல் போலப் புகுந்து பல நாடுகளை வென்று பாக்தாதிலே வெற்றிக்கொடி நாட்டியதையும், அலெப்போ நகரையும் மெக்காவையும், மெதினாவையும் கைப்பற்றியதையும் சாமர்கண்டிலிருந்து, கான்ஸ்டாண்டி நோபில் வரை பரந்து கிடக்கும் அந்தப் பெரிய சாம்ராஜ்யத்தையும் அதன் ஏகபோகச் சக்ரவர்த்தியாக இப்போது விளங்கும் இளஞ் சிங்கம் சுல்தான் மாலிக்ஷாவின் நிலைமையையும் மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தினான். உமார், இப்படிப்பட்ட ஓர் அரசனுக்குச் சேவை செய்வதில் பெருமை இருப்பதாகக் கருதினான். “அடிக்கடி தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கும் எகிப்து தேசத்தின் காலிப்பிடமிருந்து மூன்றாவது புண்ணியஸ்தலமாகிய ஜெருசலத்தைக் கைப்பற்றிக்கொள்ள சுல்தான் மாலிக்ஷா திட்டமிட்டிருக்கின்றார். வருகின்ற வாடைக் காலத்தில் அலெப்போ வழியாக நமது படைகள் ஜெருசலத்தின் மீது படையெடுக்கப் போகின்றன.” என்று நிசாம் கூறினார்.

நினைத்தவுடன் திட்டமிட்டு இப்படிப்பட்ட அழகிய நகரங்களைத் தம் சாம்ராஜ்யத்தில் சேர்த்துக் கொள்ளக் கூடிய இந்தச் செல்வ நிலையை, அந்த நிலையின் வியத்தகு ஆற்றலை எண்ணி வியந்தான் உமார். நிசாம் அவர்கள் உமாரைத் தினந் தினமும் அழைத்து அவனுக்கு அரசாங்க விஷயங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். சட்டங்களை அமுல் நடத்துவதும், வரி வசூலிப்பதும், படையமைப்பதும், ஒற்று ஆடலும் பற்றிய எல்லா விவரங்களையும் எடுத்தெடுத்துக் கூறினார்.

சுல்தான் மாலிக்ஷாவுக்கிருந்த ஆர்வமுள்ள விஷயங்கள் பற்றியும் நிசாம் தெளிவாகக் கூறினார். “வேட்டையாடுவதில் சுல்தானுக்கு விருப்பம் அதிகம். பெண்களை இதயமில்லாத அடிமைகளாக எண்ணி நடத்துவது அவருடைய வழக்கம். தெய்வீகத்திலும், அருள் வாக்குகளிலும் மூட நம்பிக்கை அதிகம் கொண்டவர். அவருடைய பாட்டன் அநாகரீகமான குடியைச் சேர்ந்தவன். சுல்தான் மாலிக்ஷா அவர்களின் பக்கத்தில் எவனாவது சோதிடர்களைக் கொண்டுவந்து எதிரிகள் வைத்து விட்டால் போதும், அந்தத் தெய்வீக நம்பிக்கையைக் கொண்டே அவரை அழித்து விட முடியும். அவ்வளவு தூரம் தெய்வீக விஷயங்களிலே மூட நம்பிக்கை கொண்டவர். இதை நினைவிலே வைத்துக் கொள்! உன்னுடைய செயல் மிகவும் கஷ்டமானது. ஜாதகங்களிலோ சோதிடத்திலோ உனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கையில்லையென்றே தோன்றுகிறது. என்னைப் பொறுத்த வரையில் நட்சத்திரங்களின் ஒழுங்கான இயக்கமே, கடவுளின் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டு என்று நம்புகிறேன். சுல்தான் மாலிக்ஷா-ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றியோ, ஏதாவது காரியம் மேற்கொள்ளுவதற்குரிய நல்ல நேரத்தைப்பற்றியோ, அந்தச் செயலால் ஏற்படும் வெற்றி தோல்வியைப் பற்றியோ உன்னுடைய யோசனையைக் கேட்டால், அவருடைய ஜாதகத்தை வைத்துக் கொண்டு உண்மையான கணிதமுறையால் பலாபலன்களை வகுத்துச் சொல்லு. வேறொருவன், அவரைத் தன் வசப்படுத்தும்படி விட்டு விடாதே, உன்னையும் உன் செயலையும் பொறாமைக் கண்களுடன் கவனித்து வருபவர் ஏராளம் என்பதை எப்பொழுதும் மறந்து விடாதே.” இவ்வாறு நிசாம் அவனுக்குச் சொல்லி அவன் நிலையையும், வேலையையும் அதன் பொறுப்பையும் உணர்த்தினார்.

உமார் அவர் கூறியவற்றையெல்லாம் ஏற்றுக் கொண்டான். மாலிக்ஷா ஏதாவது தெய்வீகக் குறிகளின் விளக்கத்தைக் கேட்டால், அதற்கு விடையிறுப்பது மிக எளியதே ! பழங்காலத்துச் சோதிடக் கலைஞர்கள் வகுத்து வைத்த விதிமுறைகளின்படி கணக்கிட்டு, அவற்றிற்கு குறிப்பிடப் பற்றுள்ள பலன்களை அப்படியப்படியே ஒப்பிக்க வேண்டியதுதான்.

அப்படிப்பட்ட குறிகளில் அர்த்தமில்லை என்றால் அதனால் என்ன வந்து விட்டது. நம்புகிறவர் நம்பிக் கொண்டிருக்கட்டும். நமக்கென்ன நட்டம்? என்று நினைத்தான்.

“இன்னொன்று கூறுகிறேன். அரசாங்க விஷயமாக ஏதாவது ஆருடம் கேட்டால், நீ எனக்கு ஆளனுப்பு! விவரத்தைத் தெரிந்துகொண்டு அதற்குக் கூறவேண்டிய சரியான பதிலை நான் உனக்குத் தெரிவிக்கிறேன். ஏனெனில், அரசியல் போக்குப் பற்றி ஆருடம் கூறுவது முடியாத காரியம். அது, அரசியல் சூழ்நிலையை ஆராய்ந்து சொல்ல வேண்டியது. அது என் ஒருவனால்தான் முடியும். ஏனெனில், அரசியல் முறையை வகுப்பதும் நடத்துவதும் என் கையிலேயிருக்கிறது. ஆகவே அந்த விஷயங்களில் என்னைக் கலந்துகொண்டு நீ சோதிடம் கூறலாம்” என்றார் நிசாம்.

உமார் அவரை வியப்புடன் நோக்கினான்.

“ஆண்டவன் அருளின் உதவியால், இரண்டு கைகள் இந்தப் பேரரசை ஆளுகின்றன. முடிபுனைந்த பேரரசின் கையொன்று; தலைப்பாகையணிந்த இந்த அமைச்சனின் கையொன்று, போரும் வெற்றியும் தண்டனையும் வெகுமதியும் அரசரின் கையால் ஆக்கப்பெறுவன. ஒழுங்கும், வரிமுறையும், அரசியல் கொள்கையும் அமைச்சரின் கையால் படைக்கப்படுவன. நான் சுல்தான் மாலிக்ஷா அவர்களுக்கு உண்மையாகவே உழைக்கிறேன். என் உழைப்பின் பயனாகப் புதியதொரு சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தை அமைக்கப் பாடுபடுகிறேன். ஆகவேதான், அரசியல் கொள்கை சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும்போது மட்டும் நீ என்னைக் கலந்து கொள்ள வேண்டும் என்கிறேன், புரிகிறதா?” என்று கேட்டார் நிசாம்.

“அப்படியே!” என்று உமார் ஒப்புக் கொண்டான். கண்டிப்பு நிறைந்த இந்த மனிதருடைய முழு நம்பிக்கைக்குரியவனாகத் தான் மாறி விட்டதையுணர்ந்தான். தன்னைக் காட்டிலும், சுல்தான் மாலிக்ஷாவைக் காட்டிலும் இன்னும் சொல்லப் போனால் மதத் தலைவர்களான உலேமா சபையினரில் யாரையும் காட்டிலும் அறிவாளியான இவருடைய நம்பிக்கைக்குரியவனாகத் தான் ஆகியதை எண்ணி மகிழ்ந்தான். நிசாமும், தன்னுடைய நெடுநாளைய திட்டம், நிறைவேறியதையெண்ணி மகிழ்ந்தார்.

உமாரின் ஒப்புதல் கிடைத்த மகிழ்ச்சியில், நிசாம் டுன்டுஷ் பக்கம் திரும்பி, “இவனுடைய செல்வாக்கைக் கொண்டு நாம் மாலிக்ஷாவை வசப்படுத்திக் கொள்ளலாம்” என்றான். ஆனால், உமார் அடுத்துக் கூறிய விஷயம் அவருடைய மனக்கோட்டையைத் தகர்த்தது.

“இப்பொழுது ஒரு வருட காலத்திற்கு நான் இங்கே யிருக்கத் தேவையில்லை. ஏனெனில் தினந்தோறும், கால அளவைக் குறிப்பெடுத்துக் கொண்டிருக்க வேண்டிய வேலைதான். அதைப் பேராசிரியர் மைமனும், மற்றவர்களும் கவனித்துக் கொள்ளுவார்கள். இந்த இடைக் காலத்தில், படையெடுத்துச் செல்லும் சுல்தான் மாலிக்ஷாவுடன், நான் மேற்குத் திசையிலே ஒரு பயணம் போய் வரப்போகிறேன். சுல்தானும், தன்னுடன் வரவேண்டுமென்று என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.” என்று வான சாஸ்திரியான உமார் பதில் உரைத்தான்.

உண்மையில் உமார்தான் சுல்தான் மாலிக்ஷாவுக்கு மேற்றிசைப் படையெடுப்புப் பற்றிய எண்ணத்தை உண்டாக்கினான். ஏனெனில், மேற்றிசையில் பயணம் செல்லும் சாக்கில் தன் அன்புக்குரியவளான யாஸ்மியைத் தேடிப் பிடிக்கலாமல்லவா? இப்பொழுது அவள் எங்கிருந்தாலும், தேடிப்பிடித்து வரக்கூடிய நிலை அவனிடம் இருந்தது. பொருளும், ஆட்களும், அதிகாரமும், பலமிகுந்த சக்கரவர்த்தி ஒருவரின் பக்க பலமும் எல்லாம் அவனிடம் இருந்தன.

டுன்டுஷ், உமார் மேற்றிசை செல்வதன் நோக்கத்தை உடனே புரிந்து கொண்டான். யாஸ்மி என்ற அந்தச் சிறுமிக்காகத்தான் என்பது ஒற்றர் தலைவனாகிய அவனுக்கு எட்டாத விஷயமல்ல.

“இதே உமார், தப்பியோடியதற்காக என்னைக் கண்டித்தாயே, நாய் போல் அலையவிட்டாயே, கிழவா! இப்பொழுது, நீயே அவனை நழுவ விடப் போகிறாய்!” என்று தன் மனத்திற்குள்ளேயே நினைத்துக் கொண்ட அவன், வெளியில் கேட்கும்படி, பணிவுடன் “எழுதியபடிதானே நடக்கும்” என்று ஒரு மத நம்பிக்கையுள்ளவனுடைய குரலில் கூறினான்.
--------------

19. அவமதிக்க வந்தவன் சவமாகிப் போனான்!

அலையடித்து நுரையடித்துப் பொங்கிச் சீறிக்கொண்டிருந்தது அந்த ஏபிரேட்ஸ் ஆறு. அந்த ஆற்றைக் கடப்பதற்காக அதன் கரையிலேயிருந்த பாழடைந்த பாபிலோன் நகரத்தின் ஒரு பகுதியிலே சுல்தானின் படைகள் காத்துக் கொண்டிருந்தன. சுல்தானைத் தொடர்ந்து உமாரும் பிரபுக்களும் பேரீச்சம் பழக்காடுகளைக் கடந்து அந்த ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் கட்டிடங்கள் இடிந்து குவிந்து கிடந்த கற்களும், மணற் குன்றுகளும் காட்சியளித்தன. அழிந்துபோன அந்தக் குட்டிச் சுவர்களின் ஊடே சுற்றிக் கொண்டிருந்தான் உமார். வேட்டையாடாத நேரத்திலே, நடனங்களும் கண்கட்டு வித்தைகளும் காண்பதிலே சுல்தானுக்கு விருப்பம் அதிகம்.

பாழடைந்து போன ஒரு ராஜசபா மண்டபத்திலே சுற்றிலும் வண்ணத் திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டன. பளிங்குப் படிகக் கற்களின் மேலே விரிப்புகள் விரிக்கப் பட்டன. அரசனுக்கும் அந்தக் கேளிக்கைக்காரர்களுக்கும், அரங்கம் அமைக்கப்பட்டது. இதிலே தினமும் நடனங்களும், வித்தைகளும் நடைபெற்றன. ஒரு நாள் மாலை உமாரும் அங்கு அழைக்கப்பட்டான். “நட்சத்திரங்களையே பார்த்துக் கொண்டிருக்கும் வானசாஸ்திரியாரே, என்னுடைய இந்த நாய்களின் ஆட்டத்தையும் கொஞ்சம் பாரும்” என்று சுல்தான் அவனை அமர்ந்து பார்க்கும்படி கேட்டுக் கொண்டார்.

இரத்தினக் கம்பளத்திலே, உமாருக்காக ஓரிடம் ஒதுக்கிக் கொடுக்கப் பெற்றது. அவன் எதிரே, நடனக்காரர்கள் சுழன்று சுழன்று வந்தார்கள், வேடிக்கைக் காரர்களின் தலைவன் தானே ஓர் இசை கருவி போலக் காட்சியளித்தான். அவனுடைய இடுப்பிலே பிணைத்துக் கட்டப் பட்டிருந்த ஒரு முரசத்தில் அவனுடைய விரல்கள் ஒலியெழுப்பின. அதே சமயத்தில் அவனுடைய தோள்களில் கட்டப்பட்டிருந்த சிறு மணிகள் குலுங்கி இசைத்தன. அவன் சுழன்று ஆடும்போது அவனுடைய தலைமுடியவிழ்ந்து சுழன்றது.

ஆடிக் கொண்டிருந்த அந்தக் கேளிக்கைக் காரர்களின் தலைவன் சட்டென்று நின்று, உமாரின் எதிரிலே மண்டியிட்டுத் தன் கையை நீட்டி வெகுமதி கேட்டான். அவிழ்ந்து முன் தொங்கிய முடிக்கற்றையின் ஊடாக அவனுடைய விழிகள் உமாரைக் கூர்ந்து நோக்கின. உமாரும் அவனைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே, தன் விரல் நுனியில் வைத்துக் கொண்டே, ஒரு நாணயத்தை வெகு திறமையாகச் சுண்டிச் சுண்டிச் சுழற்றி விட்டான்.

“கண்கட்டு வித்தையில் தேர்ந்த கலைஞரே! இது என்ன பிரமாதம்! வானத்துப் பனிக்கட்டிகளை (ஆலங்கட்டிகளை) கீழே வரவழைப்பேன். மணற்புயலையும் எழுப்பி வீசச் செய்வேன்! இன்னும் உங்கள் எண்ணத்தில் இருப்பதையும் எடுத்துரைப்பேன்!”

அவன் தன்னை ஆபத்தில் மாட்டிவிட முயலுகிறான் என்பதை யறியாத உமார் “அப்படியானால், நீ பெரிய வித்தைக்காரன்தான்!” என்றான்.

“வானநூற்கலைஞரே நான் ஒரு மோசமான அயோக்கியன் என்று தாங்கள் எண்ணுகிறீர்கள். இருப்பினும் எனக்குப் பயப்படுகிறீர்கள்!” என்றான். அவனுடைய கூரிய பார்வை உமாரின் மேலேயே பதிந்திருந்தது. சுல்தானுக்கு இது ஒரு வேடிக்கையாக இருந்தது. ஆவலுடன் அவனைக் கவனித்தார். “வானநூற்கலைஞரே! என் மனத்தில் இருப்பதைத் தாங்கள் கூறுங்கள்! தங்களால் முடியவில்லை என்றால் பரவாயில்லை. முடியாது என்று சொல்லி விட்டால் போதும்!” என்றான். அவனுடைய பரந்த தலையை யாட்டிக் கொண்டே, “எங்கே, நான் எந்த வாசல் வழியாகப் போகப் போகிறேன். சொல்லுங்கள் பார்க்கலாம்! கிழக்கா, வடக்கா, மேற்கா அல்லது தெற்கா? எது வழியே நான் வெளியேறப் போகிறேன். தீர்க்கதரிசியாரே! சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றான் அவன். அது உமாருக்கு ஒரு சவால் போலவே இருந்தது!

உமாருக்கு சிரிப்புச் சிரிப்பாக வந்தது. ஒருவன் வெளியே செல்வதையும் விண்மீனையும் சம்மந்தப்படுத்துகின்ற பேதைமையை எண்ண எண்ணச் சிரிப்புதான் வந்தது. ஆனால் அவன் சிரிக்கவில்லை. காரணம் மாலிக்ஷா அவனைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவரோ, இந்த மாதிரி விஷயங்களிலே நம்பிக்கையுள்ளவர். கத்திச் சண்டைக்குத் தயாராக இருக்கும் வீரர்களைப் பார்க்கும் அதே ஆர்வத்தோடு, அவர் உமாரையும், நாடகத் தலைவனையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

“இது மிகச் சாதாரண விஷயம்..” என்று இழுத்தான் உமார். “மக்கள் பேசிக் கொள்கிறார்கள். தாங்கள் பெருந் திறமை வாய்ந்தவர் என்று. அப்படிப்பட்டவர் ஏன் பின் வாங்குகிறீர்கள். இப்பொழுது நான் எந்த வாசல், வழியாகப் போவேன் என்று சொல்லுங்கள், பார்ப்போம்!” என்றான் அவன்.

மற்ற ஆட்டக் காரர்களும் அவனைச் சுற்றிலும் வந்து நின்று கொண்டார்கள். சுல்தானுடைய ஆட்கள், நெருங்கி வந்து நின்று கொண்டார்கள், நன்றாகக் கேட்பதற்காக. மாலிக்ஷா உமாரின் பதிலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார். நட்சத்திரங்களை ஆராய்வதற்கும் இந்த மாதிரி சம்பந்தமும் இல்லை என்று சொல்ல எண்ணினான் உமார். ஆனால், வாய் திறக்க வரவில்லை. உதடுகள் அசையவில்லை.

சுல்தானோ, அந்த மனிதன் எண்ணுவதைத் தன்னால் சொல்ல முடியுமென்று நம்பிக் கொண்டிருக்கிறார். எந்தக் காரணம் காட்டி எவ்வளவு விளக்கினாலும், மாலிக்ஷாவின் மூட நம்பிக்கையைப் போக்குவது முடியாத காரியம் என்பதை உணர்ந்து கொண்டான் உமார். இந்த ஆட்டக்காரன் தன்னைக் கவிழ்த்து விட வேலை செய்கிறானென்பதை, நெடுநேரத்திற்குப் பிறகு அவன் புரிந்து கொண்டான். இந்தச் சூழ்ச்சியைத் தகர்க்கத் தன்னுடைய புத்திசாலித் தனத்தைப் பயன்படுத்தியே வெற்றி காண முடியும் என்று முடிவு கட்டினான்.

“பேனாவும் தாளும் கொண்டு வாருங்கள்” என்று உமார் கட்டளையிட்டான்.

அரசரின் செயலாளர் ஒருவர், அவன் முன் வந்து மண்டியிட்டு ஒரு சிறு காகிதச் சுருளும், சிறகு பேனாவும் கொடுத்துவிட்டு போனார். சூழ்ச்சியைச் சூழ்ச்சியால்தான் பாராட முடியும் என்ற எண்ணத்துடன் அவற்றை வாங்கிக் கொண்டான் உமார். அரசரின் வானசாஸ்திரியின் கடமை இதுதான் போலும் என்று எண்ணிக்கொண்டே, யோசித்தான். தான்சொல்லுவது தவறாகிவிட்டால் மாலிக்ஷா மதிக்கவும் மாட்டார், இந்த நிகழ்ச்சியை மறக்கவும் மாட்டார். சொல்லுவது மட்டும் சரியாக இருந்துவிட்டால்...? நான்கு கதவுகள், கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு... ஏதோ முடிவுக்கு வந்து, தாளில் என்னவோ சில சொற்களை எழுதி முடித்தான் உமார். தாளை மடித்தான், எழுந்தான், மாலிக்ஷாவின் அனுமதியுடன் முன் நடந்து, படிக்கட்டுகளின் பக்கத்திலேயிருந்த பளிங்குக் கல்லின் மேலேயிருந்த படிவத்தின் கீழே அதைச் செருகி வைத்துவிட்டு மீண்டும் தானிருந்த இடத்தில் வந்து உட்கார்ந்தான்.

ஆட்டக்காரனைப் பார்த்து, “இனிமேல் நீ போகலாம்!” என்றான்.

ஆட்டக்காரனின் கண்கள் ஒளி வீசின. தன் சூழ்ச்சி பலிக்கப் போகிறதென்ற எண்ணத்திலே அவன் உள்ளம் பூரித்தது. முன்னுக்குச் சில அடிகள் நடந்து வந்தவன், கீழ்த்திசை வாசலை நோக்கி ஓடினான். அவன் தோள் மணிகள் குலுங்கியொலித்தன. பிறகு, வெற்றிக் குரல் எழுப்பிக் கொண்டே, பக்கத்திலேயிருந்த சுவரை நோக்கிப் பாய்ந்தான். பூவேலையுடன் தொங்கிய திரைச் சீலையைத் தூக்கிச் சுற்றியபடி, சுவரின் நடுவில் இருந்த சிறு கதவைத் திறந்து கொண்டே “இந்த வழியாக நான் வெளியே பாகிறேன்!” என்று சொல்லி விட்டுப் போனான். அவன் சென்றதும், தூக்கிய திரைச்சீலை கீழே விழுந்தது. பார்வையாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மாலிக்ஷா, அந்தத் தாளை எடுத்து வரும்படி தன்னுடைய செயலாளரைப் பணித்தார்.

அவர் கொண்டு வந்து கொடுத்ததும், பிரித்துப் படித்தார். அவருடைய கண்கள் வியப்பால் விரிந்தன. எழுதியிருந்ததை இரைந்து படித்தார்.

“ஐந்தாவது கதவு வழியாக!”

“யா அல்லா தேவதைகளின் பேராசானே! உண்மையில் நீ ஒருவனின் எண்ணங்களைத் தெரிந்து கொள்கிறாய்!” என்று பாராட்டினார்.

உமார் ஒன்றும் சோதிடக் கணக்குப் பார்க்கவில்லை. அந்தப் பயலின் சூழ்ச்சியைப் பற்றிச் சிறிது யோசித்துப் பார்த்தான். நான்கு திசைக் கதவுகளில் ஏதாவது ஒன்றின் வழியாக அவன் போவதாக இருந்து, தானும் ஒரு திசையைக் குறிப்பிட்டால், தன் அதிர்ஷ்டவசமாகத் தான் குறிப்பிடும் திசையும் அவன் வெளியேறும் திசையும் ஒன்றாகவே இருந்து விடவும் கூடும். ஆனால், தன்னை நிச்சயமாக மோசம் செய்ய நினைத்த அந்தப் பயல், அதிர்ஷ்டம் விளையாடுவதற்குரிய வாய்ப்பைக் கூட தனக்குக் கொடுக்க மாட்டான். உமார் நிச்சயமாகத் தோல்வியடைவதையே விரும்புவான்.

ஆகவே, உமார் நான்கில் எதையாவது சொல்லுவதை எதிர்பார்த்து, இங்குள்ள யாருக்கும் தெரியாத வேறொரு தனிக் கதவு ஒன்றின் வழியாக, அவன் போவதற்குத் திட்டமிட்டிருக்க வேண்டும் என்று சூழ்ச்சியின் போக்கையாராய்ந்து முடிவு செய்தானே தவிர வேறில்லை.

மாலிக்ஷா அவனருகில் நெருங்கி வந்து உட்கார்ந்து கொண்டு அவன் தோளிலே தட்டிக் கொடுத்தார். ‘நீ தான் இரண்டாவது அறிஞர் அலி சென்னா’ என்று மனமாரப் பாராட்டினார். தன் செயலாளரைக் கூப்பிட்டு, “உமாரின் வாய் நிறையத் தங்க நாணயங்களை அள்ளிக் கொட்டு. இந்தப் பொன்னான வாயை பொன்னாலேயே நிரப்பு” என்றார் உட்னே அந்தச் செயலாளன், சுல்தான் அருகில் இருந்த பெட்டியைத் திறந்து, உமாரின் வாயிலே பொன் நாணயங்களைத் திணிக்கத் தொடங்கிவிட்டான். “சரி, எழுந்து போய், அந்த ஆட்டக்கார நாயைத் தேடிப் பிடித்து, வயிறு நிறையும் வரை வாயிலே மணலைக் கொட்டி நிரப்பு. நம் அறிவுலக மேதையை அவமதித்த குற்றத்திற்கு அதுதான் தண்டணை” என்றான். அரசர் ஆணையை நிறைவேற்றச் சில ஏவலர் வெளியில் சென்றார்கள்.

உமார் தப்பினான். அவன் வாயிலே எல்லா நாணயத்தையும் திணிக்காமல், பெட்டியோடு கொடுத்தார்கள். விடைபெற்றுக் கொண்டு உமார் வெளியேறினான். அடிமையொருவன், பெட்டியைத் தூக்கிக் கொண்டு அவன் கூடப் போனான்.

வழியிலே ஒரே கூட்டமாக இருந்தது. சிப்பாய்கள் இரண்டு பேர் பிடியிலே சிக்கித் துடித்துக் கொண்டிருந்தான் ஆட்டக்காரன். மூன்றாவது ஆள் வாளால் அவன் வாயைக் கிழித்து, சாக்கு மணலை அதில் சாய்த்துக் கொண்டிருந்தான். பாவம்! அவன் அழுகுரலைக் கேட்டுக் கொண்டே உமார் அங்கிருந்து தன் கூடாரம் சென்றான்.
---------------

20. நள்ளிருளில் ஒருவன் நட்பு வேண்டுமென்றான்!

அன்று இரவு உமார் வெகுநேரம் வரை தன் புத்தகங்களிலேயே ஆழ்ந்திருந்தான். தன்னுடன், பணப்பெட்டி தூக்கிக்கொண்டு கூட வந்த அந்தக் கரிய அடிமை வழக்கம்போலத் தூங்கவில்லை என்பதைக் கவனித்தான். அவன் முணுமுணுத்துக்கொண்டே முடங்கிக் கிடந்தான். இரண்டாவது நிழலுருவம் ஒன்று அந்த அடிமையின் அருகிலே வந்ததும், இரண்டு பேரும் மெல்லிய குரலிலே பேசிக்கொண்டிருந்தார்கள். உமாருக்கு அதன் பிறகு வேலை ஒடவில்லை. தன் இருக்கையிலிருந்து எழுந்தான். அதைக் கண்ட அந்த அடிமை.

“யா! சூலாஜா அவர்களே! இன்றைய இரவு, பெரிய மாயத்தன்மையுடையதாக இருக்கிறது. தங்கள் அடிமை நாய் அச்சங் கொள்கிறது” என்றான்.

மற்றொருவன், “தயவுசெய்து, தங்கள் காலடியின் அருகிலேயே எங்களையமர்ந்திருக்க அனுமதியுங்கள். இரவு எங்களைப் பயமுறுத்துகிறது.” என்றான். எரிந்துகொண்டிருந்த விளக்கின் அருகிலே நகர்ந்து வந்து, அந்தப் புதிய வேலைக்காரன் சொல்லத் தொடங்கினான். கடைத் தொழுகைக்குப் பிறகு அவன் பாழடைந்து கிடந்த இடங்களின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தானாம். ஒரு மேட்டின் மீது பெரும் வெளிச்சமாயிருந்ததாம். அது நிலவின் வெளிச்சம் அல்ல. ஏனெனில் நிலவு அன்று கிடையாது அமாவாசை அந்த வெளிச்ச வட்டத்தின் மத்தியிலே ஒரு மனித உருவம் தோன்றியது அருகில் நெருங்கிப் பார்த்தபொழுது வேறு இரு உருவங்கள் தெரிந்தன.

அரை நிர்வாணமாக இருந்த ஒரு மனித உடல், நெளியும் பாம்பைப் போல் தரையில் நகர்ந்து கொண்டிருந்தது. பழுப்பு நிறமுடைய பெரிய கழுகு ஒன்று அந்த ஒளி வட்டத்தைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டே, வந்ததாம். இவ்வாறு அவன் சொல்லி வரும்பொழுதே, அதைக் கண்ணால் பாராத அந்த அடிமை தொடர்ந்து சொல்லத் தொடங்கினான். நேரே அவன் பார்க்காவிட்டாலும், அந்தப் புதிய வேலைக்காரன் ஏற்கெனவே கூறியதை அவன் திருப்பிச் சொன்னான்.

“அந்தப் பெரிய மேட்டிலே இருந்த அந்த வெள்ளைப் பிசாசு, கழுகுடன் பேசியது. அது பேசிக்கொண்டிருந்த போதே கீழே கிடந்த அரை நிர்வாணஉருவம் ஒரு பாம்பாக மாறிவிட்டது. அங்கே ஒரு கத்தியும் இருந்தது. இது ஓர் அதிசய மாய வித்தையல்லவா? நினைக்கும்போதே பயமாயிருக்கிறது” என்றான் நீக்ரோ அடிமை,

வேலைக்காரன் தொடர்ந்தான்; “நகர்ந்து வந்து கொண்டிருந்ததே உருவம், அதுதான் வயிறு நிறைய மண்ணுண்ட ஆட்டக்காரன். அறிவின் ஆசானே! தங்கள் பெயர் அங்கு பேசப்படுவதையும் கேட்டோம். எத்தனை பெரிய மாயவித்தை அவர்களுடையது? என்றான்.

“எங்கே?

“அதோ அங்கே, அத்தப் பெரிய மணல் மேட்டிலே!”

“ஒரு விளக்கெடுத்துவா. எனக்கு வழிகாட்டு. அங்கே போகவேண்டும்” என்றான் உமார். யாரோ, அந்த மணல் மேடுகளின் ஊடே அந்த ஆட்டக் காரனைப் புதைத்துக் கொண்டு இருந்திருக்க வேண்டும். அதைப் பார்த்துவிட்டு ஏதோ உளறுகிறான் வேலைக்காரன் என்று உமார் எண்ணினான். ஆனால் பயப்பட்டுக் கொண்டிருக்கும் இரண்டு அடிமைகளையும் தன்னோடு ஓர் இரவு முழுவதும் வைத்துக் கொண்டிருக்க உமார் விரும்பவில்லை. அவர்களுக்கு வேலைக்கொடுக்க தீர்மானித்தான். அந்த வேலைக்காரன், உமார் கூறியபடி ஒரு கைவிளக்கை எடுத்துக் கொண்டு வந்தான். உமார் அவனைப் பின்தொடர்ந்தான். மற்றொரு அடிமை பயத்தால் உடம்பு கிடுகிடுக்க, உமாரையொட்டிய படியே தொடர்ந்து சென்றான். சிறிது தூரம் சென்ற பிறகு, ஓரிடத்தில் வளைந்து, குட்டிச் சுவர்களின் ஊடாகச் சென்று ஏற்கெனவே ஒரு பெரிய தெருவாக இருந்திருக்க வேண்டிய ஒரு பாதையில் வந்து நின்றார்கள். அங்கே நின்றதும், வேலைக்காரன் தன் கைவிளக்கை ஆட்டினான். அப்படி ஆட்டினால் அது இன்னும் நன்றாக எரியும் என்பதற்காக ஆட்டுபவன் போல் ஆட்டினான்.

“இன்னுங் கொஞ்ச தூரம்தான். சிறிது தூரம் சென்று வலது புறமாகத் திரும்பிப் போக வேண்டியதுதான். நான் இங்கேயே.... நிற்கிறேனே!” என்றான் விளக்கு வைத்திருந்த அந்தப் புதிய வேலைக்காரன். அவன் கையில் இருந்த விளக்கை வாங்கிக் கொண்டு உமார் நடந்தான். அதே சமயத்தில் பின்னால், அந்த இரண்டு வேலைக்காரர்களும் விழுந்தடித்துக் கொண்டு ஓடும் ஓசை கேட்டது. பக்கத்துக்குப் பக்கம் திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டே அவன் தன்னந்தனியாகச் சென்றான். அவ்வாறு செல்லும்போது தனக்கு நேரே உயரத்தில் மங்கலாக வெளிச்சம் ஒன்று தெரிந்ததைக் கண்டான்.

அந்த வெளிச்சம்! ஏற்கெனவே இருந்த ஒரு கோயிலின் இடிந்த குவியலின் மேல் தெரிந்தது. பகல் முழுவதும் சுற்றிக் கொண்டிருந்த உமார் இந்தப் பகுதியில் சுற்றியிருந்தபடியால் அதன் உயரப் போவதற்குரிய வழியைத் தேடுவது எளிதாக இருந்தது. அந்தக் குவியலின் உச்சியை அவன் அடைந்தபொழுது ஒரு சுவரின் வெடிப்பின் ஊடாக அந்த வெளிச்சம் வருவதைக் கண்டான். சாதாரண எண்ணெய் விளக்கின் ஒளியைக் காட்டிலும் அந்த வெளிச்சம் மிகுந்த ஒளிப்படைத்ததாயிருந்தது. அந்த ஒளிவட்டத்தின் இடையே உட்கார்ந்திருந்த அந்த மனிதன், உமாரின் வருகைக்காகக் காத்திருந்தவன் போல் எழுந்து நின்றான்.

“ஒருவன் போகிறான்! மற்றொருவன் வருகிறான்!” என்று அந்த மனிதன் கூறினான். உமாரைக் காட்டிலும் குட்டையாகவும், அடர்ந்த புருவமும், சுருண்ட மழித்த தாடியும் உடையவனாகவும் ளங்கிய அந்த மனிதன் அரபிக் காரர்களைப்போல் அவனுடைய அகன்ற தோள்களிலே ஒரு சால்வை போர்த்தியிருந்தான். ஆனால் அவனைப் பார்த்தால் ஓர் அராபியனைப் போல் தோன்றவில்லை.

தரையை நோக்கிக் குனிந்த அவன் கீழே கிடந்த அந்த ஆட்டக்காரனின் பிணத்தின் மேல் உமாரின் பார்வை படும்படி செய்தான். மார்பின் நடுவே பாய்ந்திருந்த ஒரு கத்தியின் பிடி மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. “அவனுடைய வேதனையைப் பொறுக்க முடியாமல் நான்தான் குத்தித் தீர்த்தேன்” என்றான் அந்த மனிதன்.

மேலே ஒரு கழுகு வட்டமிட்டுக் கொண்டிருந்தது. உமார் அதைக் கவனித்தான். “அது என்னுடைய கூட்டாளி உயர்ந்த இடங்களிலே அது என்னோடு வந்து சேர்ந்து கொள்ளும்” என்றான் அந்தக் குட்டை மனிதன்.

“நீ யார்?’ என்று கேட்டான் உமார்.

“மலைப்பிரதேசத்தைச் சேர்ந்தவன். ரே நகரவாசி” என்று பதில் கூறினான். அப்படிக் கூறும்பொழுது அவனுடைய ஒளி மிகுந்த கண்களிலே புது மின்னல் தோன்றியதுபோல் இருந்தது.

ரே என்பது பாரசீகத்தின் பனிமலைச் சிகரங்களின் ஊடே உள்ள மலைப்பிரதேசத்திலே யிருந்த ஒரு நகரம். இந்த மனிதன் ஒரு பாரசீகத்தவனாக இருக்கலாம். எனினும் அவனுடைய மொழி உச்சரிப்பு எகிப்தியர்களுடையதைப் போல் தோன்றியது. பல மொழிகளையும் இயல்பாகப் பேசக்கூடிய பயிற்சியுடையவனென்பதும் அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ள முடிந்தது.

“கூடார மடிப்பவனாயிருந்து, அரசரின் வானநூற்கலைஞனாகி இருப்பவன் நீ, அல்லவா? இப்பொழுது, இஸ்டாரின் கோயிலிலே நின்றுகொண்டு பலரும் பைத்தியம்


--------------

21. புதிய மதம் பரப்பப் புறப்பட்ட ஒரு கூட்டம்

நிசாம் அல்முல்க் அவர்கள் வெகு தூரத்தில் இருந்து கொண்டே தன்னைக் கண்காணித்து வருவதை உமார் புரிந்து கொண்டான். மறுபடியும், நாடோடிகளான ஆட்டக்காரர்கள் தன் பாதையில் குறுக்கிடவில்லை; குறுக்கிடும்படி விடப்படவில்லை என்பதையும் உணர்ந்து கொண்டான். எப்பொழுதும் புன்சிரிப்புடன் கூடிய இந்து மதத்தினனான ஒரு கடிதம் எழுதுபவன், உமார் தன் கூடாரத்தில் தனியாக இருக்கும்பொழுது வந்து சாமர்கண்டிலும், பால்க் நகரிலும் நடக்கக்கூடிய விஷயங்களைப் பற்றியும் வதந்திகளைப் பற்றியும் சுல்தான் மாலிக்ஷா அவர்களின் நடவடிக்கைகளைப் பற்றியும் அடிக்கடி சொல்லுவான்.

வாரந்தோறும், நிசாம் அவர்களிடமிருந்து வரும் கடிதங்கள் அவனுக்கு மிகமிகப் பயன்பட்டன. பெரும்பாலும், இந்தக் கடிதங்களில் நிசாம் அவர்களின் வேலைத் திட்டங்களைப் பற்றிய செய்திகளைத் தெரிவித்தன. வரக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்து, பிறகு கொள்ளப்பட வேண்டிய கொள்கைகளைப் பற்றி அவை கூறின. இவ்வாறாக, மாலிக்ஷாவின் படைகள் புனித ஸ்தலமான ஜெருசலத்தைக் கைப்பற்ற வேண்டியது எவ்வளவு இன்றியமையாதது என்பதை உமார் உணர்ந்து கொண்டான்.

கோடிக்கணக்கான மத நம்பிக்கையுள்ளவர்களால், இஸ்லாத்தின் தலைவராகவும், பாக்தாது தேசத்தின் காலிப்பாகவும் கருதப்படும் அளவுக்கு மாலிக்ஷா மதிப்புடையவராகி விட்டார். ஏற்கெனவே மெக்கா மெதினா என்ற இரு புண்ணிய ஸ்தலங்களையும் துருக்கியர்கள் கைப் பற்றியாகி விட்டது. முறை கெட்ட அரசு செய்யும் கெய்ரோவின் காலிப் கையிலிருந்து மூன்றாவது புண்ணிய ஸ்தலமான ஜெருசலத்தையும் கைப்பற்றி மாலிக்ஷா அவர்களின் பெரிய சாம்ராஜ்யத்தில் சேர்க்கப்பட வேண்டியது மிக முக்கியமானது.

இதன் காரணமாகவே, மாலிக்ஷா அவர்கள் வடக்கேயுள்ள மதவிரோத்திகளான பைசாந்தியர்களை எதிர்த்தும் தம் படைகளைச் செலுத்த வேண்டியிருந்தது. புனிதமான இந்தப் போராட்டத்திலே இஸ்லாத்தின் மாபெரும் தலைவரான சுல்தான் அவர்கள் ஈடுபடும் வரையில், அவருடைய கொடியின் கீழ் படை திரண்டு கொண்டேயிருக்குமே தவிரக் குறையாது. சமவெளிப் பிரதேசங்களிலிருந்து, புதிது புதிதாகத் துருக்கிப் போர் வீரர்கள் வந்து கொண்டேயிருந்தனர். படையில் சேருவதற்காக மேற்கு நோக்கி மீண்டும் மீண்டும் நிசாம் வீரர்களை அனுப்பிக் கொண்டேயிருந்தார்.

உருவமில்லாத கம்பளி மயிர்களின் குவியல்களைச் சேர்த்து நூலாக்கித் தறியின் முன்னேயிருந்து கொண்டு துணிகளை நய்யும் நெசவாளியைப் போல், நிசாம் அவர்கள், இருந்த இடத்தில் இருந்து கொண்டே, இந்த சாம்ராஜ்யத்தை உருவாக்கும் பெரும் பணியில் ஈடுபட்டிருப்பதை உமார் மிக மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டான்.

“ஜெருசலத்தில் படையெடுக்கலாமா? நல்ல காலம்தானா?” என்று மாலிக்ஷா அவர்கள் கேட்டபொழுது, ‘ஆகா! இந்த மாதம் மிகப் பொருத்தமாக இருக்கிறது. தங்கள் கிரகத்தின் அருகிலேயே செவ்வாயும் வந்து நெருங்கியிருப்பதால், உடனே படையெடுக்க வேண்டியதுதான்” என்று சோதிடம் சொன்னான் உமார்.

அவன் கூறிய சோதிடம் உண்மை என்பதை மாலிக்ஷா நன்றாக அறிவார். இருப்பினும் உமார் படையெடுப்பை மறுத்திருந்தால் தன்னுடைய வான நூற் கலைஞரின் மேல் மிகமிக மதிப்பு வைத்திருந்த சுல்தான், நிச்சயமாகத் தன்னுடைய போர்த் திட்டத்தை மாற்றிக் கொண்டிருப்பார். அவ்வளவு தூரம் அவருக்கு உமார் மீது நம்பிக்கை யிருந்தது.

சுல்தானின் படைகள் அப்பொழுது அலெப்போ நகரின் செம்மண் வெளிப் பிரதேசத்தில் முகாமிட்டிருந்தன. ஜெருசெலத்தைக் கைப்பற்றுவதற்காகச் செல்லவிருந்த தளபதி அமீர் அஜீஸின் படைகளோடு தானும் செல்வதெனத் தீர்மானித்தான் உமார். அவன் மேற்குக் கடலைப் பார்க்க வேண்டுமென்று விரும்புவதாகவும் அதற்கு முன் எந்தக் கடற்கரையையும் அவன் பார்த்ததேயில்லையென்றும், மேலும் ஜெரூசலத்தில் உள்ள மசூதிக்கு யாத்திரிகனாகப் போகவேண்டுமென்றும் விரும்புவதாகவும் சுல்தான் மாலிக்ஷாவிடம் அவன் தெரிவித்தான். உண்மையில் அவன் நோக்கம் அவையல்ல. வழியில் கடந்து வந்த நகரங்கள் முழுவதும், அப்பொழுது தங்கியிருந்த அலெப்போ நகர் முழுவதும், சந்தை கூடுமிடம் எங்கும் அவன் விசாரித்துப் பார்த்தும் யாஸ்மியைப் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்க வில்லை. மீஷித் நகரிலிருந்து ஓர் இளம் மனைவியுடன் வந்த துணி வியாபாரியைப் பார்த்ததாக அடையாளம் சொல்லக் கூடியவர் யாரையும் அவன் காணவில்லை. ஆகவே மேலும், ஜெருசலம் வரை சென்று அவளைத் தேட வேண்டுமென்பதே அவனுடைய நோக்கம்.

அலெப்போவிலிருந்து, தென்முகமாகச் செல்லும் பாதையிலே சென்றால், டமாஸ்கஸ் பட்டணத்திற்கும், பாலைவனத்தைக் கடந்தால் எகிப்துக்கும் போகலாம். இந்தத் தென் திசைப் பாதையில் சென்றால், யாஸ்மியைப் பற்றிச் செய்தி எதுவும் அறியலாம். இதுவே அவனுடைய திட்டம், டுன்டுஷைப் போல் செய்திகளைச் சேகரிக்கும் ஆற்றல் தனக்கில்லையே என்று வருந்தினான்.

“உன்னுடைய புனித யாத்திரை தொடங்கட்டும்! நீ அங்கு செல்லும் பொழுது, துரத்தில் இருக்கும் அந்த மசூதியின் தொழுகை மண்டபத்தில், என் சார்பாக ஒன்பது முறை தொழுகை நடத்தி ஆண்டவன் அருளைப் பெற்றுவா !” என்று அனுமதித்தார் மாலிக்ஷா.

கூடார மடிப்பவனின் மகனாகப் பிறந்த உமார், கடவுளின் அருளால் அரும்பெரும் ஞானம் பெற்றவனாக விளங்கும் உமார், தன் படையெடுப்பு நடைபெறும் பொழுதே இப்படிப்பட்டதொரு புனித யாத்திரையை முடிப்பது மிகப் பொருத்தமானதேயென்று அந்த இளந் துருக்கியரான சுல்தான் மாலிக்ஷா எண்ணினார். ஆனால், உமார் தன்னைவிட்டுப் பிரிந்திருக்கக்கூடிய அந்த இடைக்காலத்திலேயுள்ள ஒவ்வொரு நாளிலும், அதிர்ஷ்டந்தரக் கூடிய நல்ல நாட்களையும், வேண்டாத நாட்களையும், பற்றிய பட்டியல் ஒன்றைக் குறித்து வாங்கிக் கொள்ள அவர் தவறவில்லை. சுல்தானின் ஜாதகத்தில் செவ்வாய் சனி, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சேர்த்துக் காணப்படுவதால், திடீர் சம்பவங்கள் ஏற்படக் கூடுமென்பது ஜாதகப் பலனாகக் காணப்பட்டதால் சுல்தான் இதிலே மிகக் கவனமாக இருந்தார். சுல்தான் தம் வானநூல் கலைஞருக்கு ராஜாங்கக் கொடி பிடிக்கும் ஒரு குழுத்தலைவனையும், காத்தாயானி வகுப்பைச் சேர்ந்த கரிய நிறம்படைத்த குதிரை வீரர்கள் பன்னிருவரையும், பிரயாணத்தின் பாதுகாப்பாளராக நியமித்து அனுப்பினார். உமார் விழித்திருந்தாலும், தூங்கினாலும் அவன் மேல் கண் வைத்தபடி எப்பொழுதும் இரண்டு வீரர்கள் இருந்தபடி இருக்கவேண்டும் என்று அந்தக் குழுத் தலைவனுக்கு ஆணையிட்டார். அதன்படியே, உமார் எங்கு சென்றாலும், வாய்பேசாது இருவீரர்கள் எப்பொழுதும், தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள். உமாரைக் கண்காணிக்காமல் தன்பார்வையிலிருந்து தப்பிச் செல்லும்படி எவன் விடுகிறானோ அவன் தலை தரையில் உருள்வது உறுதி என்று அவ்வீரர்களுக்குக் குழுத் தலைவன் எச்சரிக்கை கொடுத்திருந்தான்.

உமார் அவர்களை, எதிர்பாராத எந்தெந்தப் பாதைகளிலோ இழுத்துக் கொண்டு சுற்றினான். டமாஸ்கஸ் பட்டணத்துச் சந்தை கூடுமிடங்களிலும், பைன் மரக்காடுகள் நிறைந்த லெபனானிலும், பனிமலைச் சிகரத்தை யுடைய ஹெர்மான் மலைப் பிரதேசத்திலும் கடற்கரை வெளிகளிலும் அவர்களை அலைக்கழித்துக் கொண்டு திரிந்தான். சிப்பித் தூண்கள் நிறைந்த கடற்கரை ஓரத்தில், மணல் வெளியில் வீசும் காற்றின் ஊடே அலைந்து கொண்டிருந்தான்.

கிரேக்கர்களும், ரோமானியர்களும் தங்கள் மரக்கலங்களிலே வந்திறங்கித் துறை முகங்களும் பளிங்குக் கட்டிடங்களும் அமைந்த பெருங்கடலின் கரையிதுதான். இப்பொழுது அந்தக் கட்டிடங்களெல்லாம் பாழடைந்து கிடந்தன. ஆழ்கடலின் நெடுந்துரம் வரையிலே சிறந்து விளங்கிய டைர் நகரமும், கடலின் அடித்தளத்திலே, தன் அஸ்திவாரமும் அமிழ்ந்து போய் விளங்கும் சீடான் நகரமும் இருந்த இடம் சிறந்து விளங்கிய பிரதேசம் இதுதான். அபூர்வமான கிருஸ்தவ ஞானிகள் வாழ்ந்து மறைந்த இடமான கார்மல் குன்றின்மேலேயும் உமார் ஏறித்திரிந்தான். பிறகு உள்நாட்டு பிரதேசமான ஆழ்ந்து கிடந்த காலிலீ ஏரிப் பிரதேசத்துச் சரிவிலே இறங்கினான்.

பூமாதேவியின் அடிவயிறுபோல் விளங்கிய இந்தப் பள்ளத்தாக்குப் பிரதேசத்திலும், அதன் கந்தகக்குழம்பு ஊற்றுக்களிலும், மறக்கப்பட்டு மறைந்துபோன அரண்மனைகளின் விசித்திர வேலைப்பாடுகள் நிறைந்த கற்பதிப்புக்கல்களிலும் அங்கு வாழ்ந்த பரிதாபத்திற்குரிய, தாடி வளர்ந்த பெரிய மனிதர்களான யூதர்களின் வாழ்க்கை நிலையிலும் தங்கள் கவனத்தைச் செலுத்திய உமாரின் கூடவந்த காத்தாயனிய வீரர்களுக்கு இந்தப் பிரதேசங்களில் பேய்கள் குடிகொண்டது போலத் தோன்றியது. அந்தப் பகுதியிலே அப்படிப்பட்ட சுடு காட்டுத் தன்மை நிலவியது.

ஆனால், ஜெருசலத்தை நோக்கித் தங்கள் வழியைத் திருப்பிக் கொண்ட பிறகு, அவர்கள் தங்களுக்குப் பழக்கமான ஒரு சூழ்நிலையைக் கண்டார்கள். சுல்தானுடைய படைகள் ஜெருசலத்தைக் கைப்பற்றிய பிறகு நாட்டுப் புறத்திலே இருந்த மத விரோதிகளான எதிரிகளின் சொத்துக்களையெல்லாம் கொள்ளையடித்தனர். தானியங்கள் நிறைந்த வயல்களின் வழியாக குதிரைகளைச் செலுத்தி அவ்வயல்களின் விளைவுகளை அழித்துக்கொண்டும், பாதிரி மடங்களைச் சோதனையிட்டுப் பொருள்களை அள்ளிக்கொண்டும் சென்றார்கள். தலைப்பாகையணியாத மனிதர்களும், இடுப்பில் குழந்தைகளுடன், முக்காடு கூடப் போடாத பெண்களும், குவிந்து கிடக்கும் பிணக் குவியல்களுக்குச் சவக்குழிதோண்டும் வேலையில் ஈடுபட்டிருப்பதையும் கண்டார்கள்.

பெருஞ்சாலை வழியாக உமாரும் பாதுகாப்புப் படை வீரர்களான காத்தாயனியர்களும் போகும்போது, எதிரிலே அடிமைகள் வரிசை வரிசையாகச் செல்வதைக் கவனித்தார்கள். துருக்கிய வீரர்களிடமிருந்து, அடிமை வியாபாரிகளால் விலைக்கு வாங்கப்பட்ட, இந்த ஜெருசலத்து அடிமைகள் டமாஸ்கஸ் பட்டணத்தில் லாபத்துடன் விற்கப்படுவதற்காக நடத்திச் செல்லப்பட்டார்கள். இந்த அடிமைகளைக் கண்டபோது, உமாருக்குக் கொரசான் போர்க்களமும் அங்கே தான் சந்திக்க நேர்ந்த அடிமைகளான யார்மார்க்கும், ஸோயி என்ற பெண்ணும் நினைவுக்கு வந்தார்கள்.

ஜெருசலத்தை நோக்கிச் சென்ற அவன், இரவு நெருங்கி வரவே, நகருக்கு வெளியில், மாலிக்ஷாவின் தளபதியான அமீர் அஜீஸின் கூடாரத்தில் தங்கினான். ஏனெனில் கூட வந்த பாதுகாப்புக் குழுத் தலைவன் இரவில் நகருக்குள் இருப்பது பாதுகாப்பானதல்ல என்று கூறிவிட்டான். மறுநாள் காலையில், ஜெருசலம் நகருக்குள் சென்று, இஸ்லாமியப் புனிதப் பள்ளிக்குச் சென்றான். அங்கு எந்தவிதமான போரும் நடக்கவில்லை. பட்டாளத்துடன் கூடவே வந்த முல்லாக்கள், பளிங்கினால் கட்டப்பட்ட இந்தப் பள்ளி வாசலுக்குள்ளே கூடியிருந்தார்கள். அகிஸா மசூதியையும் அவர்கள் உரிமைப் படுத்திக் கொண்டார்கள்.

வேதமோதும் மேடையிலிருந்தபடி பிரார்த்தனையை நடத்தி வைத்த இமாம் அவர்கள், பாக்தாது காலிப்பின் பெயராலும், சுல்தான் மாலிக்ஷாவின் பெயராலும் தொழுகையைத் தொடங்கி வைத்தார். இதற்கு முன் பிரார்த்தனையை நடத்தி வைத்த எகிப்தியர்கள் ஊரை விட்டே ஓடிவிட்டார்கள். கூட்டத்தின் நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக, உமார், பாறையினாலான வட்டக் கோபுரத்தின் உள்ளே நுழைந்து கொண்டான். அரை யிருட்டாக இருந்த அதன் உட்பகுதியில் அமைதி நிலவியது. அங்கே அவன் மண்டியிட்டு, அங்கிருந்த புனிதமான சாம்பல் நிறப்பாறையைத் தொட்டுக் கொண்டே தொழுகை நடத்தினான். மெக்காவில் உள்ள பள்ளியின் கருங்கல்லின் அளவு புனிதம் வாய்ந்ததல்ல இந்தச் சாம்பல் நிறப் பாறை. அதற்கு அடுத்தபடியாகத்தான் கொள்ள வேண்டும். எந்த மதத்திலும் சேராத இரண்டும் கெட்டான்களான அந்த காத்தயானிய வீரர்களும் அவன் கூடவே மண்டியிட்டார்கள். தொழுவதற்குப் பதிலாக அழகிய பளிங்குத் தூண்களையும், தங்கத் தோரணங்களையும் கண்டு வியப்படைந்தார்கள்.

தொழுது முடிந்து உமார் எழுந்திருந்தபோது, மரியாதை பொருந்திய மெல்லிய குரல் ஒன்று அவனுக்கு வாழ்த்துக் கூறியது.

“மோட்சத்தைத் தேடுபவரே; சாந்தியுண்டாகட்டும்! என்று அந்தக் குரல் வாழ்த்தியது.

“சாந்தி, உமக்கும் உண்டாகட்டும் என்று பதிலுக்கு வாழ்த்தினான் உமார். திரும்பிப் பார்த்தால், அவன் அருகிலேயே ஹாஸான் இபின் சாபா என்ற அந்தக் குட்டை மனிதன் நின்றான். அவனுடன் மற்றொருவனும் கூட வந்திருந்தான். ஹாஸான், ஓர் யாத்திரிகனுடைய உடையில் இருந்தான். அரபு மொழியிலே பேசினான். முன் சந்தித்த போது பாரசீக மொழியிலே எவ்வளவு இயற்கையாகப் பேசினானோ அவ்வளவு இயற்கையாகத் தன் சொந்தமொழிபோலவே, இப்பொழுது அரபு மொழியிலே பேசினான்.

அவன் புன்சிரிப்புடன், “அல்லாவின் அருள் நிலைபெறுவதாக! நான் என் நண்பனை மீண்டும் சந்திக்கும்படி கூட்டி வைத்த அல்லாவின் புகழ் நிலைபெறுவதாக!” என்று கூறிவிட்டு, “இந்தப் பாறைக் கோபுரத்தின் உள்ளே என்ன இருக்கிறது தெரியுமா? பாறையைத் தவிர வேறு என்ன இருக்கிறது தெரியுமா? என்று கேட்டான். உமார் ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தான். கூட இருந்தவர்களும் அயர்ந்து போனார்கள்!

சுற்றிலும் இருந்தவர்கள், திரும்பி ஹாசன் பேச்சைக் கவனிக்கத் தொடங்கினார்கள். எவரையும், தன் பேச்சினால் கவர்ச்சி செய்யும் சக்தி ஹாஸனுக்கு இருந்தது. சுற்றிலும் இருந்தவர்கள் நெருங்கி வந்ததும் அவன் சொல்லத் தொடங்கினான். ‘இதோ இந்தச் சாம்பல் நிறக்கல்லிலே ஓர் அடையாளம் காணப்படுகிறதே; இது என்ன தெரியுமா? தீர்க்கதரிசியான முகமது நபியவர்கள் இந்த இடத்திலே நின்றபடிதான் சுவர்க்கத்துக்கு எழும்பிப் போனார். அவருடைய காலடி பதிந்த இடந்தான் இந்த குறி. அப்படி அவர் எழும்பிப் போனபோது, அவர் கூடவே இந்த பாறையும் போய்விடாமல் தடுப்பதற்காக கபீரியல் தேவதை இந்தப் பாறையை அழுத்திப் பிடித்துக் கொண்டது. அதன் கைவிரல்கள் பதிந்த இடங்கள்தாம் இந்தப் பாறையின் விளிம்பிலே உள்ள துவாரங்கள்!” இந்த மாதிரியான அதிசயத் தெய்வீகச் சம்பவங்களை ஹாசன் எடுத்துக் கூறத் தொடங்கியதும், ஆச்சரியத்துடன், நெருங்கி வந்தார்கள் அந்தக் காத்தயானியர்கள்.

“இதன் அடியிலே ஒரு குகையிருக்கிறது. காத்திருக்கும் உயிர் ஆவிகளெல்லாம் தீர்ப்புநாள் அன்று அந்தக் குகையிலேதான் ஒன்று கூடும். என்னைத் தொடர்ந்து வாருங்கள்” என்று கூறி முன் நடந்தான். அந்த இடம் முழுவதும் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தவன் போல் அவன் ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தி அங்கிருந்த முல்லா ஒருவரை ஏவிப் பாறையின் அடிப்புறத்தில் உள்ள குகை வழியாக அனைவரையும் அழைத்து வரச் செய்தான். வழியில் சில சில குறியீடுகளைக் காட்டி அவற்றின் தெய்வீகத் தன்மையைப் பற்றி விவரித்தான். அந்த விவரங்களைக் கேட்க, செப்புத் தலைக் கலசமும், தோல் உடைக்கவசமும் அணிந்த வீர்களான காத்தயானியர்கள் பயந்து போனார்கள். ஹாஸானுடன் கூட வந்த அந்தத் தடிமனிதன் உமாரின் காதில், “உலகத்தின் ஆவிகளெல்லாம் தீர்ப்பு நாளன்று ஒன்று கூடும் இடமாக இந்தச் சிறு குகை இருக்குமானால், அத்தனை ஆவிகளும், அணுவினும் சிறியதாக மாறினாலன்றி முடியாது” என்று தன் தெய்வீக அவநம்பிக்கையை எடுத்துரைத்தான்.

புனிதம் நிறைந்த இடமான வட்ட அரங்கத்தின் மேல் ஏறி நின்று கொண்டு தன் கையில் இருந்த மெழுகுவர்த்தியை ஓர் உத்தரத்தின் அருகிலே தூக்கிப் பிடித்தான். “திருத்தூதர் முகமது நபியவர்கள், விண்ணுலகம் ஏறிய பிறகு, நீண்ட நாட்களுக்கு முன் இருந்த இஸ்லாமிய காலிப் ஒருவர் இதில் உள்ள வாக்கியங்களைப் பொன்னால் எழுதி வைக்கும்படி உத்தரவிட்டார். இதோ பாருங்கள்” என்று ஹாஸான் காண்பித்தான். உமாரால் அந்த எழுத்துக்களைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஹாஸான் அவற்றை எளிதாக வாசித்தான்.

“ஆண்டவனைத் தவிர வேறு கடவுள் எதுவும் கிடையாது. அவருக்குப் பங்காளியும் கிடையாது. மேரியின் திருமகனான இயேசுநாதர், கடவுளின் செய்திகளை நமக்குத் தெரிவிக்கும் தூதுவரேயாவார். கடவுளையும் அவருடைய தூதுவர்களையும் நம்புங்கள். மூன்று கடவுள் இருப்பதாக மொழியாதீர்கள். அதுவே உங்களுக்கு நல்லதாகும்”

ஹஸான் உமாரின் கையைப் பிடித்துக் கொண்டு, “இந்தத் திருவாக்கியங்கள் எழுதப்பெற்ற பின்னர் இதைக் கண்டவர்கள் சிலரே! இதைப் படித்தவர்கள் மிகமிகச்சிலரே! ஆனால் புரிந்து கொண்டவர் யார் இருக்கிறார்கள்? ஆனால், நீ நிச்சயமாகப் புரிந்து கொள்வாய் என்றே எண்ணுகிறேன்” என்றான்.

சுற்றிலும் கூடியிருந்த கூட்டத்தின் நெருக்கடியைப் பொறுக்க முடியாதவனைப்போல, உமாரை அழைத்துக் கொண்டு வெளியே வந்த ஹாஸான், அந்த நகரின் சந்து பொந்தெல்லாம் அவனை அழைத்துக் கொண்டு சென்று, மற்றவர்கள் கவனிக்கத் தவறிய பல விஷயங்களைக் காண்பித்தான். கூடவந்த அந்த மனிதன் இவற்றையெல்லாம் ஊன்றிக் கவனிக்கவில்லை. ஏதோ சொந்த யோசனைகளிலே மூழ்கியவனாக ஒன்றும் பேசாமல் இவர்களைத் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான்.

“அதோ அந்த இடத்தைப் பார். அங்கேயிருக்கிறதே வளைவு அருகிலே ஜன்னல், அங்கேயிருந்து கொண்டுதான் பொண்டியால் பைலேட் என்ற ரோமானிய அரசப் பிரதிநிதி யூதமதக் குருக்களுடன் பேசிக் கொண்டிருந்தான். அதே கிறிஸ்துவரான அரசப் பிரதிநிதி சிலுவையில் வைத்துக் கொல்லப்படுவதற்காகப் பட்டாளத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டான். இப்பொழுது அந்தச் சிலுவையைத் தாங்கியிருக்கும் பாறை கிறிஸ்துவர்களால் மறக்கப்பட்ட இடமாகி விட்டது”

தெருக்களிலே இடிந்து கிடந்த குவியல்களின் மேல் உட்கார்ந்து, வம்பளந்து சிரித்துக் கொண்டிருந்த துருக்கியப் போர் வீரர்களைக் கடந்து உமாரைத் தள்ளிக் கொண்டு போன ஹாஸான் மேலும் பேசினான்.

“ஜெருசலத்தின் கதை இப்படியே நடந்து கொண்டிருக்கிறது. சுவர்கள் இடிக்கப்படுவதும், அரசர்களாலும், படைவீரர்களாலும் மக்கள் கொல்லப்படுவதும், வழக்கமாகிவிட்டது. திருத்துதுவர் முகமது நபியின் கடைசிக் காலத்திலே சோஸ்ரேஸ் என்ற பாரசீக நாட்டான் யூதர்களால் துரத்தப்பட்டான். நகர் பாழாகியது. பிறகு ஹெராகளிட்டஸ் என்ற ரோமானியச் சக்ரவர்த்தியின் வாள்வலி யூதர்களிடமிருந்து இந்த நகரைப் பிடித்துக் கொண்டது. யூதர்கள் கிறிஸ்தவர்களால் வெட்டித் தள்ளப்பட்டார்கள். நம்முடைய காலிப் அவர்கள் ஓர் ஒப்பந்தத்தின் மூலமாக இந்த நகரைக் கைப்பற்றினார். இரத்தம் சிந்தப்படவில்லை. அங்கே உள்ள புனிதப் பாறையில் படிந்திருந்த பாவக் கறைகளையும், அழுக்குகளையும் நீக்கித் தூய்மைப்படுத்தினார். சோலோமன் டேவிட் ஆகியவர்களின் புனிதமான பாறையைப் புனிதமாகவே வைத்திருந்தார். ஆனால், இப்பொழுது இந்தத் துருக்கியர்கள் அறியாமையால் இரத்தம் சிந்தும்படி செய்துவிட்டார்கள். அவர்கள் நீண்ட நாட்கள் இங்கு வாழ முடியாது. விரைவில் இந்த நகரம் புதிய எதிரிகளால் கைப்பற்றிக் கொள்ளப்படும்” என்றான் ஹாஸான்.

“யார் அந்தப் புதிய எதிரிகள்?’ என்று உமார் கேட்டான்.

“அது யாருக்குத் தெரியும்? கண்ணுக்குத் தெரியாத அந்த தெய்வீகத் திரைக்கு அப்பால் இருக்கும் விஷயத்தை நான் எப்படிச் சொல்லிக் காட்ட முடியும்? முஸ்லீம்கள் ஜெருசலத்தை இழப்பார்கள் என்பது மட்டுமே நான் சொல்லுகிறேன். புதிய பயங்கரமான எதிரிகள் யாரோ கைப்பற்றிக் கொள்வார்கள்.”

“கடவுளையும் அவருடைய துதர்களையும் நம்புங்கள். மூன்று கடவுள் இருப்பதாக மொழியாதீர்கள். அதுவே உங்களுக்கு நல்லதாகும் என்ற இந்தத் திருமொழியின் உண்மையை அறியாதவர்கள் எப்படி இங்கு அமைதியாக வாழ முடியும்” என்று ஹாசான் கேட்டான்.

உமாரின் சிந்தனை வேலை செய்தது. சாம்ராஜ்யமென்னும் ஒரு பெரிய ஆடையை நெய்து கொண்டிருக்கும் நிசாமையும், மாலிக்ஷாவையும் பற்றி நினைத்தான். அவர்கள் இருவரும் எங்கெங்கோ இருக்கிறார்கள். தீக்கிறையாகிக் கருகிய திருமடங்களையும், இறந்துபோன சுற்றத்தாரை எடுத்துப் புதைத்துக் கொண்டு இருக்கும் ஏழை மக்களை காணும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை. ஹாஸானின் உணர்ச்சிகரமான பேச்சு உமாரின் உள்ளத்தைக் கலக்கியது.

“மக்களின் மனத்திலே மூன்று கடவுள்கள் பதிந்திருக்கின்றன என்பதைத்தான் நாம் அறிவோமே! யூதர்களின் யஹோலா ஒரு கடவுள்; கிறிஸ்தவர்களின் ஆண்டவர் ஒரு கடவுள்; குர் ஆன் கூறும் அல்லா ஒரு கடவுள்; என்றான் ஹாசானின் கூட வந்த அந்த மனிதன்.

“நன்றாகச் சிந்தித்துப் பார். மூன்று முறையும் நீ என்ன கூறினாய்? ஒரு கடவுள் என்ற சொல்லைத்தானே மூன்று முறையும் கூறினாய். இந்தக் கிறிஸ்தவர்களும், யூதர்களும், இஸ்லாமியர்களும் எல்லோரும் உண்மையைக் கொஞ்சம் உள்ளத்தால் ஆராய்ந்து பார்த்தால் என்ன? அல்லா என்று சொல்வதைக் காட்டிலும் “ஒரு கடவுள்” என்ற கொள்கையை ஏன் பெரிதாகக் கொள்ளக் கூடாது?” பேசிக்கொண்டே வந்த ஹாசான், திடீரென்று நிறுத்திக் கொண்டான்.

அவர்கள் இருவரையும் தன்னைத் தொடரும்படி கண் காட்டினான். புனிதமான பள்ளியைநோக்கி கூட்டிச் சென்ற அவன் அதற்குச் செல்லாமல் கிழக்குப் புறத்தில் திறந்திருந்த கோட்டை வாசல் வழியாக அழைத்துச் சென்றான். முஸ்லீம்களின் இடுகாட்டுப் புதை குழிகளின் ஊடாகச் சென்றார்கள். அந்த இடுகாடு நகரக் கோட்டைச் சுவர் வரையிலே பரந்து கிடந்தது.

அவர்கள் சென்ற பாதை வரண்டு கிடந்த ஓர் ஓடைப் படுகை வழியாகச் சென்றது. களிமண்ணும், கூழாங்கற்களும் நிறைந்து கிடந்த அந்தக் குறுகிய பாதை வழியாக, கரிய நிறமுடைய வெள்ளாடுகளையும் செம்மறியாடுகளையும் ஒட்டிக்கொண்டு சில வேடுவர்கள் குதிரை மீது சென்றார்கள். உமாருக்கு அந்த ஆட்டு மந்தையின் இடையே புகுந்து நடப்பதற்கு ஆசையாயிருந்தது. அவன் ஆடுகளின் நடுவே நடக்க முயல்வதைக் கண்ட, காத்தயானிய வீரர்கள் இருவரும், விரைந்து அந்த ஆடுகளை விலக்கி நடுவிலே ஒரு பாதை ஏற்படுத்திக் கொண்டு சென்றார்கள். போர் வீரர்களின் உடையைக் கண்டதும் அந்த வேடர்களும், விரைந்து, ஆடுகளை விலக்கி உதவினார்கள்.

ஹாஸானின் கூட வந்த அந்த மனிதன், மிகவும் பருமனாயிருந்தபடியால் மெதுவாகக் காலடியெடுத்து வைத்து ஆடி அசைந்து நடந்து வந்தான். அவனுடயை கண்கள் அலை பாய்ந்து, களைத்துப்போய் இருந்தாலும், கூரிய தன்மை மாறாமல் இருந்தது. அவன் அதிகமாகப் பேசாவிட்டாலும், பேசும் சில சில சொற்களும் குத்தலாக இருந்தன. அவனுடைய பேச்சைக் கொண்டு, அவனைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ள இயலாமல் இருந்தது. அவன் பெயர் அக்ரோனோஸ் என்றும், எல்லா வியாபாரிகளுக்கும் பாட்டன் போன்றவன் என்றும் அவனைப் பற்றி ஹாஸான் கூறினான்.

அந்த அக்ரோனாஸ், உமாரை நோக்கி, “இந்தப் போர் வீரர்களைப் பார்த்தால் உன்னுடைய வேலைக்காரர்கள் போல் தோன்றுகிறதே!” என்று கேட்டான்.

“சந்தேகம் என்ன? போர் வீரர்கள் சுல்தானின் ஆணைக்குக் கட்டுபட்டவர்கள். சுல்தானின் ஆணையை உருவாக்குபவர் ஆசிரியர் உமார் அவர்கள்தானே! உமார், ஆஸ்தானத்துச் சோதிடர் மட்டுமல்ல. தீர்க்க தரிசியும் கூட! இன்னும் குறிப்பாகச் சொன்னால் இளஞ் சுல்தான் அவர்களின் தீர்க்கதரிசி!” என்று ஹாஸான் விளங்கக் கூறினான்.

அக்ரோனோஸ், தன் உணர்ச்சிகள் எதையும் வெளிக்குக் காட்டாமல், உமாரைத் தன் பார்வையால் அளவிடுவது போல் நோக்கினான். அப்பொழுது அவர்கள் ஆலிவ் மரக்காடுகள் அடர்ந்த ஒரு பகுதியைக் கடந்து ஒரு சரிவின் மேல் ஏறிக் கொண்டிருந்தார்கள். அந்த மரங்களுக்குப் பின்னால் ஒரு சிலுவையில், இரண்டு கைகளையும் விரித்தபடி ஒரு பிணம் தொங்கிக் கொண்டிருந்தது. கரிய மேலங்கியணிந்த அந்த உருவம் ஒரு துறவியினுடையது. வழித்துவிடப்பட்டிருந்த அந்தப் பிணத்தின் தலை, சாம்பல் நிறமுடைய அந்தக் கற்களின் இடையிலே, ஒரு வெள்ளைக் கல் போலத் தெரிந்தது. “இது கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலம். நாம் எறிக் கொண்டிருக்கும் இந்த இடத்தை ஆலிவ் மூடி ... என்று அழைக்கிறார்கள் என்று ஹாஸான் கூறினான்.

இறங்கிக் கொண்டிருக்கும் மாலைக் கதிரவனின் ஒளிக்கதிர்கள் அந்தக் குன்றின் மேல் சாய்ந்து கொண்டிருந்தன. அவர்கள் மூவரும் அங்கே அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். கீழேயுள்ள ஆழமான பள்ளத்தாக்கில் சின்னஞ்சிறிய மனித உருவங்கள் அங்கும் இங்கும் போய்க் கொண்டிருந்தன. தூரத்திலே உள்ள பாறைக் கோபுரத்தில் மாலைக் கதிரவன் தங்க முலாம் பூசிக் கொண்டிருந்தான்.

உமாருக்கு அந்தப் பள்ளத்தாக்கின் பெயர் தெரியும். அதன் பெயர் வாடி ஜெகனம் என்பதாகும். அதாவது பாவிகளின் பள்ளத்தாக்கு என்று பொருள்! எல்லா ஆவிகளையும் அழைத்துத் தீர்ப்பு வழங்கும் நாளன்று எடைபோட்டுப் பார்க்கும் பொழுது, பாவம் செய்தவர்கள் என்று தீர்மானிக்கப்படும் ஆட்களின் ஆவிகள், இந்தப் பள்ளத்தாக்கின் வழியாகத்தான் செல்லும் என்று இஸ்லாமிய முல்லாக்கள் கூறியிருக்கிறார்கள். அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்குக் கீழேயுள்ள சரிவில் விசித்திரமான தோற்றமுடைய கல்லறைகள் பல இருந்தன. கதிரவன் நெருப்புப் பந்துபோல் மாறி செக்கச் சிவந்து விளங்கியது. அதன் செவ்வொளி அந்தப் புனித நகரத்தின் கோபுரங்களில் எல்லாம் சாய்ந்து அழகைப் பெருக்கியது. அவர்களின் அருகிலே, வரிசை வரிசையாகக் கிழவர்கள் நடந்து செல்லும் காட்சி ஒன்று தோன்றியது. அந்தக் கிழவர்கள் ஒருவர் முதுகை ஒருவர் பிடித்துக் கொண்டபடி, தட்டுத் தடுமாறி மேலும் கீழும் தலையைத் திருப்பிக் கொண்டு, கீழேயுள்ள பள்ளத்தாக்கை நோக்கி வரிசையாகச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் குருடர்கள்.

ஹாஸான் திடீரென்று பேசத் தொடங்கினான். “இதோ கவனியுங்கள். நாம் வானத்தை உற்று நோக்குகிறோம். பூமியை ஆராய்கிறோம். நம் குருட்டுக் கண்களால் இவ்வளவு உண்மையை அறிந்து கொள்ளுவதில்லை”.

“ஏன்? போதுமான அளவு, உண்மைகளை நாம் தெரிந்து வைத்திருக்கிறோமே!”என்றான் அக்ரோனோஸ். “இல்லை. நாம் குருடர்களாகத்தான் இருக்கிறோம். புதையுண்ட எலும்புகளையும் பழைய கற்களையும்தான் நாம் புனிதமாகக் கருதுகிறோம். திருக்குரானிலே அல்லாவே பெரிய கடவுள் என்று கூறப்பட்டுள்ளது. அவரைக் காட்டிலும் பெரிய ஒகு கடவுள் இருந்தால் என்ன வந்துவிட்டது? என்று ஹாஸான் கேட்டான். அக்ரோனோஸ், தன் விரல்களால் தாடியைத் தடவிக் கொண்டே, பேசாமல் இருந்தான்.

உமார், நெருப்புப் பிழம்பாக மாறி மறைந்து கொண்டிருக்கும் கதிர்ப்பந்தைக் கவனித்துக் கொண்டிருந்தான். ஹாஸான், புதுமாதிரியான ஒரு பேச்சைத் தொடக்கிக் கொண்டிந்தான்.

இதுவரை மனித அறிவினால் ஆராய்ந்து காணப்படாத ஒரு புதிய கடவுளைப் பெரிதும் நம்பினான். இதுவரை உண்டான மதங்களெல்லாம், முடிவான ஒரு முடிவை எட்டிப் பிடிக்கப் பயன்பட்ட ஏணிப்படிகளே என்று கூறினான். அந்த மதங்களெல்லாம், மனிதனின் அறிவைக் குறிப்பிட்ட அளவுதாம் ஒளி பெறச் செய்தன என்றும், ஆதம், நோவா, இப்ராகிம், மூசா, இயேசு, முகமது என்ற ஆறு தீர்க்க தரிசிகளும் காட்டாத ஒரு பேருண்மையை, முடிவான அசல் உண்மையைக் காட்ட ஏழாவது தீர்க்கதரிசி ஒருவர் நிச்சயமாகப் பிறந்து வருவார் என்றும் கூறினான்.

“அந்த ஏழாவது தீர்க்க தரிசியை நாம் அறிந்து கொள்ளும் வழி எது?” என்று அக்ரோனோஸ் கேட்டான்.

“அந்தத் தீர்க்கதரிசி தாம் தோன்ற வேண்டிய காலம் வருவதற்கு முன்னும் நம் கூடவேயிருந்து வந்திருக்கிறபடியால், நாம் அவரைத் தெரிந்து கொள்வோம். அலி அவர்களின் இனத்தில் ஏழாவது இமாமாகவும் அலி அவர்களின் ஆவியின் வாரிசுதாரராகவும் அவர் விளங்கியிருக்கிறார். சிலருக்கு அவர் ஏழாவது இமாமாகவும் சிலருக்கு மூடிமறைக்கப் பட்டவராகவும் அவர் காணப்படுகிறார். பெயரைப் பற்றி என்ன? அவரே மாதி! அவரே நாம் அறியாமலே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தேவதூதர் மாதி! மாதி என்ற அந்தப் புனிதமான தீர்க்கதரிசி, மூசா நபியவர்களின் வெள்ளிய கை மரக் கிளையிலிருந்து வளியில் நீட்டிக் கொண்டு வந்த காலத்திலும், பிறகு இயேசுநாதர் இந்த உலகத்திலே உயிர் வாழ்ந்த காலத்திலும் கூட இருந்திருக்கிறார். ஆனால், அவர் திரும்பவும் தோன்றுவார்” என்று ஹாஸான் மிகுந்த உணர்ச்சியுடன் பேசினான்.

அந்தப் புனித நகரத்தின் கோபுரத்திற்கும் கோட்டைச் சுவருக்கும் அப்பால் கதிரவன் சென்று மறைந்தான். அவர்களின் பின்னே யாரோ வந்து நிற்பது போல் காலடிச் சத்தம் கேட்டதும், அவ்வளவு நேரமும், இவர்கள் பேச்சைக் கவனியாமலே அரைத் தூக்கத்தில் உட்கார்ந்திருந்த காத்தயானியக் காவல் வீரர்களிலே ஒருவன் வந்து நின்று, “நேரமாகிவிட்டது, கூடாரத்திற்குத் திரும்ப வேண்டும்” என்று உமாரை அழைத்தான்.

தன் கூடாரத்திலே உணவு உண்டு ஓய்ந்திருந்த அந்த வேளையிலும், உமாரின் நினைவிலே ஆலிவ் முடியில் உடகார்ந்து கொண்டிருக்கையிலே கண்ட அந்த அந்திவானத்தின் அழகு நின்று கொண்டிருந்தது. அந்த அழகுக் காட்சியை மனத்திரையிலே கண்டு கண்டு ஆனந்தங் கொண்டிருக்கும் அந்த வேளையிலே, அக்ரோனோஸ் என்ற அந்த ஆள் வந்தான். அவன் கூட வந்த ஒரு பையன் தான் தூக்கி வந்த ஒரு வெள்ளைப் பட்டுத் துணி முட்டையை உமாரின் காலடியில் வைத்து விட்டுப்போனான்.

“என்ன இது?” என்று கேட்பது போல் உமார் அவனை நோக்கினான்.

“நம்முடைய சந்திப்பின் அடையாளமாக இந்தச் சிறிய பரிசைத் தாங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். தங்களுக்கு இந்த வியாபாரியின் உதவி தேவைப்படும் போது...காத்திருக்கிறேன்!” என்று குழைந்தான்.

“ஹாஸானைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று உமார் கேட்டான்.

அக்ரோனோஸ், நரைத்த தன் தாடியைத் தடவிக் கொண்டே, “அவன் பைத்தியம் போல் உளறலாம்; ஆனால், நான் சந்தித்த பல மனிதர்களிலே, மற்றவர்கள் யாரையும் காட்டிலும், பல விஷயங்கள் தெரிந்தவனாக இருக்கிறான் ஹாஸான்! அவனுடைய இந்தச் செய்தியை நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். அது இருக்கட்டும். ஒட்டக விடுதிகளிலே எனக்கொரு செய்தி கிடைத்தது. தாங்கள் எதோ ஒரு செய்தியை எதிர்பார்ப்பதாகக் கேள்விப்பட்டேன்” என்றான்.

“ஆம்”

“மீஷித் நகரத்துத் துணி வியாபாரி அப்துல் சையித் என்பவன், நிசாப்பூரிலே, வேறொரு மனைவியைத் தேடிக் கொண்டதாகப் பல மாதங்களுக்கு முன் நான் கேள்விப் படநேர்ந்தது.” என்று கூறிவிட்டு உமாரை நோக்கினான்.

“அப்புறம்?”

“அலெப்போ நகரில் சில நாட்கள் இருந்துவிட்டு வடதிசை நோக்கிச் சென்றுவிட்டான். இது பல மாதங்களுக்கு முன்னால் நடந்தது.”

இதைக் கேட்ட உமார் ஆழ்ந்த பெருமூச்சொன்று விட்டான். அப்படியானால், யாஸ்மி அலெப்போ நகரில் இருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. அவளைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ளவாவது முடியும்!

“நீ எனக்கு இரண்டு பரிசுகள்_கொண்டு வந்திருக்கிறாய், என்னிடமிருந்து உனக்கு என்ன கிடைக்கவேண்டும். சொல்” என்று ஆவலோடு உமார் கேட்டான்.

ஆனால் பின்னர் அவன் சொன்ன பதில் உமாரைத் திகைப்பூட்டியது.

“எனக்கு ஒன்றும் தேவையில்லை. ஆனால், ஹாஸானைப் பற்றிக் கொஞ்சம் நல்ல எண்ணத்தோடு எண்ணிப் பாருங்கள். அவன் தங்கள் நண்பனாக இருக்கக் கூடியவன். அவன் தங்கள் கருணைக்காகப் பிரார்த்திக்கும் காலம் ஒன்று வரக்கூடும். அப்பொழுது நீங்கள் அவனிடம் அன்பு காட்டவேண்டும்” என்று கூறினான். பிறகு, சலாம் செய்துவிட்டு வெளியேறினான்.

திடீரென்று ஏதோ நினைவு வந்தவன்போல, உமார் தனக்கு நிசாமிடமிருந்து வந்த கடிதங்கள் வைத்திருக்கும் பெட்டியிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்தான். அதை நன்றாக கவனத்துடன் படித்தான். கடவுள் நம்பிக்கையற்ற முலாஹித்துக்கள் என்ற ஒரு புதிய கூட்டத்தாரைப் பற்றி எச்சரித்து நிசாம் எழுதியிருந்தார். மாதி என்ற ஒரு புதிய தேவதூதர் பிறக்கப் போவதாகவும், அவர், இஸ்லாமிய மதக் கோட்பாடுகளையும் அரசுகளையும் அகற்றிவிடுவாரென்றும், அவர்களுடைய அந்தப் புதிய மதம் உலகத்தின் ஏழாவது மதமாகவும், கடைசி மதமாகவும் விளங்குமென்றும் அந்தக் கூட்டத்தில் பிரசாரம் செய்து வருவதைச் சுட்டிக் காட்டியிருந்தார். கொரசானிய பூமியிலே மறைந்து கிடக்கும் அந்தப் புதிய தீர்க்கதரிசி என்று சொல்லப்படும் மாதியைப் பின்பற்றுவோர் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் அந்தக் கூட்டத்தார் மக்களிடையே மறைமுகமாகப் பிரச்சாரம் செய்து வருவதையும், அவர்கள் பிரார்த்தனை நடத்தும்போதும், பொய்யான விஷயங்களைப் பற்றிப் போதிக்கும்போதும், வெள்ளை அங்கி அணிந்திருப்பார்களென்றும், அல்லா இவர்களை மீளாத நரகத்தில் ஆழ்த்த வேண்டுமென்றும் குறிப்பிட்டு நிசாம் அந்தக் கடிதத்தை எழுதி, உமாருக்கு எச்சரிக்கை செய்திருந்தார்.

இதைப் படித்து முடித்த உமார் தன் எதிரில் இருந்த வெண்பட்டு முட்டையை பார்த்தான். சிரிப்பு வந்தது. நிசாம் மட்டும் இதைக் கண்டால், இது யாரிடமிருந்து கிடைத்ததென்று தெரிந்தால், வருகிற கோபத்தில் அப்படியே எரிகிற நெருப்பில் போட்டுக் கொளுத்திச் சாம்பலாக்கியிருப்பார். ஆனால், அந்த வெண்பட்டிலே ஓர் அழகான மேலங்கி தைத்துக் கொள்ள வேண்டுமென்று உமார் நினைத்துக் கொண்டான்.
--------------

22. அனாதைகளின் கூட்டத்தில் ஆருயிரின் மாதரசி

அலெப்பா நகரில் உள்ள ஜம்மீ மசூதியின் அருகே இருந்தக் குளத்தின் அருகிலே, மாலைத் தொழுகை நேரத்திலே, ஆறு பிச்சைக்காரச் சாமியார்களும் ஒரு கூனனும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் பழைய போர்வைகளைக் கொண்டு தங்கள் உடலைச் சுற்றியிருந்தார்கள். பிச்சைக்காரர்களுக்கே உரிய கந்தைத் துணிகளை உடுத்தியிருந்தார்கள்.

அந்தக் கூணன், ஒரு கைத்தடியின்மேல் சாய்ந்து கொண்டு, தன்னுடைய வளைந்த கைகளை நீட்டி, வழியில் வருவோர் போவோரிடமெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அந்த வழியாகப் பலப்பல விதமான மனிதர்கள் சென்று கொண்டிருந்தார்கள். படோடோபமான உடையணிந்தவர்களும், முக்காடிட்ட முகங்களுடன் அருகே நெருங்கி ஒருவரோடொருவர் பேசிக்கொண்டும், தாங்கள் வாங்கியுள்ள சாமான்களைப் பற்றியும், துணிமணிகளைப் பற்றியும் விவரித்துக் கொண்டு செல்லும் பெண்களும், தங்கள் தம்பிமார்களை முதுகிலும் இடுப்பிலும் தூக்கிக்கொண்டு கிடுகிடுவென்று ஓடும் சிறுமிகளும் இப்படிப் பலப் பலர் சென்றனர். கழுத்தில் மணி கட்டிய ஒரு கழுதையுடன் தொழுகைக்கு வந்த ஒரு பணக்கார அராபியன்தன் கையில் இருந்த பணத்தை ஒவ்வொன்றாக எண்ணி மற்றொரு பையில்போட்டுக் கொண்டிருந்தான்.

இதைப் பார்த்துவிட்ட கூணன், “ஏழைகள்! ஏழைகள் கருணைக்காக ஏங்குகிறார்கள். ஆண்டவன் பெயரால் அருள் காட்டுங்கள்! அன்பு காட்டுங்கள்! ஆதரவு தாருங்கள்!” என்று கூவினான்.

“இழவு பிடித்தவர்கள்” என்று முணுமுணுத்துக் கொண்டே, எண்ணிய பணத்தை ஒரு பெரிய பையில் போட்டு அதைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டான் அந்தப் பணக்கார அராபியன்.

“கருணை காட்டுங்கள்! அல்லாவின் பெயரால் ஆதரவில்லாத ஏழைகளுக்கு, நோயாளிகளுக்கு அருள் புரியுங்கள்! என்று மீண்டும் கத்தினான் கூனன்.

தன்னுடைய நீண்ட அங்கி தரையிலே உள்ள தூசியிலே புரண்டு வர நடந்து வந்த ஒரு முல்லா “மசூதிக்கு வா, ஏதாவது உண்ணக் கொடுக்கிறேன்.” என்றார்.

“எனக்கல்ல, பசியோடிருக்கும் இன்னோர் ஆத்மாவுக்கு ஏதாவது வேண்டும்” என்றான் கூனன். முல்லா போய்விட்டார். அந்த வழியாக இதைக் கவனித்து கொண்டே வந்த பெண்மணியொருத்தி, அங்கே நின்று, அவனைக் கூப்பிட்டு, “உலகத்துப் பாவங்கள் அனைத்தும் ஒழிவதற்காக கண்ணிர் விடும் அந்தப் புனிதமான ஏழைக்கு இதைக் கொடு” என்று தான் வாங்கிக் கொண்டு சென்ற பொட்டலத்தை அவிழ்த்து ஒரு ரொட்டியைக் கொடுத்து விட்டுப் போனாள். இந்த உலகத்தின் பாவங்களை கழுவுவதற்காகவே ஏழைகள் கண்ணிர் விடுகிறார்கள் என்று அந்தப் பெண்மணிக்கு தெரிந்திருந்தது.

அதை வாங்கிக் கொண்ட கூணன், “அம்மா, இது சாதாரண ஆளுக்கல்ல, இரத்தக்கண்ணிர் விட்டுக் கொண்டிருக்கும் ஓர் ஏழைக்கு உதவியாகும்” என்று நன்றியுடன் கூறினான். அந்த வழியாக, கம்பீரமான ஒரு குதிரையிலே, வெள்ளிச் சரிகையிட்ட கெளரமான ஆடையணிந்து உமார் வந்தான். உமாரைக் கண்டதும், கூனன் ஓடோடி வந்து, “தலைவரே! நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்!” என்று சொல்லியபடியே குதிரையின் சேணத்து மிதியை நடுங்கும் தன் கைகளினால் பிடித்துக் கொண்டான். “இரண்டு வருடம் பத்து மாதங்களாகத் தங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றான்.

உமார் அந்தக் கூனனுடைய ஆவல் நிறைந்த முகத்தை உற்றுப் பார்த்தான். முன் ஒரு நாள் நள்ளிரவிலே, ஒரு குளத்திற்குள்ளே நிலவு முழுகிக் கொண்டிருப்பதைக் கண்டு அழுது கொண்டிருந்த அந்தக் கூணன், பழைய சுல்தானுடைய விகடன் என்ற விவரங்கள் அவன் நினைவுக்கு வந்தன. அன்று கூட இருந்த வெள்ளைக் கழுதையை விட்டுப் பிரிந்து கிழிந்த கந்தலாடையுடுத்திப் பிச்சைக்காரனாகத் திரியும் அந்தக் கூனனைக் கண்டு வியந்தபடி, “ஜபாராக்” என்று கூவினான்.

“ஜபாரக்! ஏன் இப்படி ஏழைகளுக்கும் சாமியார்களுக்கும் இடையே கிடந்து அவதிப்படுகிறாய்? எனக்குச் சொல்லியனுப்பக்கூடாதா?” என்று உமார் கேட்டான்.

“சொல்லி அனுப்புவதா? நான்தான் தங்கள் வீட்டுக்கு வெள்ளி வளையல்களைக் கொண்டு வந்தேனே! தங்களைப் பார்க்க முடியவில்லை. பிறகு அலெப்பா நகருக்கு வந்தேன். ஒவ்வொரு பிறையாகத் தாங்கள் வருவீர்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். முதலில் அவளுக்குத் தங்களைப் பார்க்க வேண்டுமென்று ஆவல் அதிகமாக இருந்தது. தங்களை நினைத்து அடிக்கடி பைத்தியம் போல் சிரிப்பாள். தங்கள் வீட்டுக்கே அவளை அழைத்துக்கொண்டு வரலாமென்று எண்ணினேன். ஆனால், ஓர் அழகான பெண்ணோடு முழு முட்டாளான நான் வழிப் பயணம் செய்வது ஆபத்தென்று பட்டது. எங்களிடம் பணமும் இல்லை. நீங்கள் எப்படியும் வந்து விடுவீர்கள் என்றே அவள் சொல்லிக் கொண்டிருப்பாள். தாங்கள் அவளை மறந்து விட்டீர்களா? யாஸ்மியைப் பற்றிய நினைப்பே இல்லையா? என்று கூனன் கேட்டதும், உமார் அவனுடைய மெலிந்த கைகளைப் பிடித்துக் கொண்டு, “இங்கே யிருக்கிறாளா? இப்பொழுது இருக்கிறாளா?” என்று படபடப்புடன் கேட்டான்.

ஜபாரக் என்ற அந்தக் கூனன், தன் கையிடுக்கில் வைத்திருந்த அந்த ரொட்டியைக் காட்டி, “நான் பிச்சையெடுத்து அவளைக் காப்பாற்றி வருகிறேன். ஒவ்வொரு நாள் மாலையிலும், தங்களிடமிருந்து ஏதாவது செய்தி கிடைத்ததா என்று கேட்டுக் கொண்டேயிருகிறாள்” என்று பதில் கூறினான்.

“இப்பொழுதே நான் அவளைப் பார்க்கவேண்டும். அவள் எங்கே இருக்கிறாள்?” என்று உமார் பறந்தான்.

முன் கடிவாளத்தைப் பிடித்துக் குதிரையை நடத்திக் கொண்டு ஒரு சந்து வழியாகச் சென்றான் ஜபாரக் கூனிக் கூனித் தவளை போல் நடந்த அவன், தன் கையில் இருந்த ரொட்டியை விடவில்லை. அந்தச் சந்திலே ஓரிடத்தில் குதிரையை நிறுத்தி விட்டு, நிமிர்ந்து உமாரை நோக்கி, - ‘அவ்ளை நோய் அரித்துத் தின்று கொண்டிருக்கிறது. படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். தாங்கள் சற்று இங்கே காத்திருங்கள். நான் போய், அவளிடம் அல்லா அருள் புரிந்து விட்டார் என்ற விஷயத்தைக் கூறிவிட்டு வந்து விடுகிறேன்.” என்று சொல்லிவிட்டு, எதிரில் இருந்த ஒரு கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். உமார், குதிரையை விட்டுக் கீழே இறங்கி அதன் முதுகிலே தன் தலையைச் சாய்த்தபடி, யாஸ்மியின் நினைப்புடன் நின்று கொண்டிருந்தான். சிறிது நேரத்தில், புன்னகையுடனும் பூரிப்புடனும் ஜபாரக் வெளியில் வந்தான்.

“என்ன ஆர்வம்! எத்தனை உணர்ச்சி! இவ்வளவு நாளும், கூட்டுப் புறாப்போல் அடைந்து கிடந்தவள், இப்பொழுது ஆடுவதும், பறப்பதும், வண்ணப் பூச்சைத் தேடுவதும் கண்ணுக்கு மை போடுவதுமாக இருக்கிறாள். உடுத்திக் கொள்ளப் பட்டாடையில்லை என்று தங்களுக்கு எச்சரிக்கை செய்யும்படி கூறினாள்”.

“அவள் என்னைப் பார்க்கத் தயாராக இருக்கிறாளா? நான் மேலே போகலாமா?” என்று உமார் கேட்டான். கேட்டுக் கொண்டே கதவை நோக்கிச் சென்றான்.

இருள் நிறைந்த பாதை வழியே, கற்படிகளின்மேல் தட்டுத் தடுமாறி ஏறிச் சென்று, வீட்டின் உச்சிக்குச் சென்றான். வழியிலே ருந்த தளங்களிலே, மங்கலான உருவங்கள் அவனைக் கூர்ந்து நோக்கின. ஈரத் துணிகளும், நார்த்தங் காய்களும் காயவைக்கப் பட்டிருந்த உச்சித் தளத்திலே, ஒரு மூலையிலே ஒரு கூரையின் அடியிலே, கறை பிடித்த ஒரு படுக்கையிலே யாஸ்மி படுத்துக் கிடந்தாள். அவன் அவளுடைய உருவத்தைக் காணவில்லை, அவள் இருந்த நிலையைப் பார்க்கவில்லை. ஆவல் ததும்பும் அவளுடைய கண்களை மட்டுமே பார்த்தான்.

அவள் அருகிலே சென்று மண்டியிட்டு அமர்ந்து, “என் உள்ளத்தின் உள்ளமே.” என்று மெல்லிய குரலில் அழைத்தான்.

“பெருமை மிகுந்த என் பிரபுவே! தங்களுக்கு ஒரு கந்தைத் துணிகூடக் கொடுக்கக்கூடிய நிலையில் இல்லாத ஏழை நான்” என்று கூறியவள் அவன் கழுத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். சூடேறிப் போயிருந்த அவளுடைய கன்னங்களின் மேலே, கண்ணிர் ஓடுவதை அவனுடைய கைகள் தெரிந்து கொண்டன. அழுது ஓய்ந்த பிறகு, அவன் அருகிலே நெருங்கி வந்தாள். அவளுடைய முகம் வெளுத்து, ஒளியிழந்து மெலிந்து காணப்பட்டது. ஆளே மாறியிருந்தாள். அவளுடைய காதல் பொருந்திய கரிய விழிகளும், இருண்ட மணம் பொருந்திய கூந்தலும் மட்டுமே முன்போல இருந்தன.

“நான் இங்கே நோயாகக் கிடக்கும்பொழுது, இரவு நேரத்தில் உச்சியில் தெரியும் விண்மீன்களையே பார்த்துக் கொண்டிருப்பேன். ஏனென்றால், அவைதாம், தங்கள் நட்சத்திர வீட்டுக்கு மேலேயும் தெரியும். தாங்களும் அவற்றையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள்! அங்கே பட்டுத் திரையிலே பறக்கும் பாம்பு இருந்ததே; அது அப்படியே இருக்கிறதா? உயிருக்குயிரானவரே! என் மனக் கண்முன்னே, அந்த நட்சத்திர விடும், தங்கள் அறையும், அதில் இருந்த பொருள்களும் அப்படியப்படியே இருக்கின்றனவா? நான் பார்த்தபொழுது இருந்தபடியே இப்பொழுதும் இருக்கின்றனவா?”

“அப்படியே இருக்கின்றன அன்பே ! அவை உன் வரவுக்காகக் காத்திருக்கின்றன!” யாஸ்மி நிம்மதியான ஒரு பெருமூச்சு விட்டாள். “அப்படித்தான் நினைத்தேன்! நட்சத்திரங்களின் பெயரையெல்லாம் என்னால் நினைவு வைத்திருக்க முடியவில்லை. இரண்டொன்றின் பெயர்தான் எனக்குத் தெரியும். ஜபாரக் சில நட்சத்திரங்களின் பெயர்களைச் சொல்வான். நட்சத்திரங்களைப் பார்க்கும்பொழுதெல்லாம் தங்கள் உருவம் தோன்றும். சுல்தான் அவர்களின் சபையிலே தாங்கள் மிகப் பெரியவராக வந்து விட்டீர்களாமே! இந்த அங்கியில் உள்ள ஜரிகை எவ்வளவு அழகாக இருக்கிறது” என்று அன்பு மொழிகளை அள்ளி வீசினாள்.

“நான் உனக்கு காத்தயானியப் பட்டாடையும், பூ வேலை செய்த நடையனும் வாங்கி வருகிறேன்” என்றான் உமார்.

“சர்க்கரைப் போட்ட சுக்குத் தண்ணிரும் வாங்கி வாருங்கள்” என்று கூறிச் சிரித்தாள். “நாம் விருந்து சாப்பிடவேண்டும். அந்த விருந்திலே குடிப்பதற்குச் சர்பத்தும் இருக்க வேண்டும்” என்றாள். “உன்னுடைய உதட்டு மதுவும் இருக்குமல்லவா?” என்று உமார் கேட்டான். வெட்கத்துடன் அவள் அவனுடைய அழகிய கன்னத்தைத் தொட்டாள். அவனுடைய அழகிய கால் சோடுகளை ஆவலோடு பார்த்தாள். “எனக்குப் பலமில்லை! இன்பத்தால் இதயம் வேகமாகத் துடிக்கும் போது வேதனையாக இருக்கிறது. தங்கள் அடிமையான நான், அழகையும் இழந்து விட்டேன்!” என்றாள்.

“அன்பே என் கண்ணுக்கு நீ அதிகமான அழகுடன் தோன்றுகிறாய்!” என்று அவளை மகிழ்வித்தான் உமார். அவள் அவன் உதடுகளில் தன் மெல்லிய விரல்களை வைத்தாள். அவன் அவற்றிற்கு முத்தம் கொடுத்து “இதோ என்னைப் பாருங்கள்! உண்மையாகச் சொல்லுங்கள்! நட்சத்திர வீட்டில் என்னுடைய அறையில், தங்களின் வேறொரு மனைவியிருக்கிறாளா?” என்று கேட்டாள்.

உமார் இல்லை என்பதற்கடையாளமாகத் தலையை அசைத்தான். அவள் அமைதியடைந்தாள்.

“எனக்குத் திருமணம் நடந்தபொழுது, என் உள்ளத்திலே கொள்ளி வைத்ததுபோல் இருந்தது. ஓடி விட முயற்சித்தேன். அப்துல் சையிது என்னை அணைக்கும் பொழுதெல்லாம் எனக்கு வேதனையாக இருந்தது. பிறகு இந்தக் காய்ச்சல் நோய் வந்தது. ஒட்டகத்தின் மேல் வைக்கும் பிரம்புக் கூடைகளில் வைத்து என்னை எங்கெங்கோ அழைத்துச் சென்றார்கள். சில சமயம் எந்த ஊருக்குப் போகிறோம் என்றே தெரியாது. மலைப் பிரதேசத்திலே இருந்த ஒரு விடுதியிலே, இந்தக் கூனன் ஜபாரக்கைச் சந்தித்தேன். அவன் என் மீது இரக்கம் காட்டினான். உடனே அவசர அவசரமாக என்னுடைய நீலக்கல் பதித்த வெள்ளி வளையல்களைக் கழட்டி அவனிடம் கொடுத்தேன். நிசாப்பூருக்குச் செல்வதாக இருந்த அவனிடம் அதைக் கொடுத்து தங்களிடம் என்னைப் பற்றிக்கூறும்படி கேட்டுக் கொண்டேன். இங்கு அலெப்போ வந்ததும், என் கணவனுக்கு என் மேல் கோபம் கோபமாக வந்தது. தனக்கு இணங்காமல் இருப்பதால், நான் அவனைப் பழிப்பதாக முடிவு கட்டினான். வெளியில் சென்று சாட்சிகளைக் கூட்டி வந்து, என்னை மணவிலக்குச் செய்து விட்டதாக அறிவித்து விட்டான். நான் பெருநோய் பிடித்தவளென்றும், கொடுமனம் படைத்தவளென்றும் சாட்சிகளிடம் காரணம் கூறினான். என்னை இங்கே அனாதையாக விட்டு விட்டு அவன் போய்விட்டான்” என்று யாஸ்மி தன் கதையைக் கூறினாள்.

“வளையலைப் பற்றியும் உன் செய்தியைப் பற்றியும் எனக்கு ஒன்றுமே தெரிவிக்கப்படவில்லை” என்று வருந்தினான் உமார்.

“நான் இப்பொழுது மணவிலக்குச் செய்யப்பட்டவள்!”

“இல்லை. நீ மணப்பெண். இன்னும் ஒரு மணிநேரத்தில் நான் உன்னை என்னுடைய மனைவியாக்கிக் கொள்ளப்போகிறேன். புதுப் பெண்ணே உனக்கு இது சம்மதமா?”

“இந்த மணப்பெண்ணுக்கு அழகும் இல்லை. வரதட்சயணையளிக்கப் பொருளும் இல்லை” என்று வருத்தத்தோடு பரிகாசமாகப் பேசினாலும், யாஸ்மியின் கன்னக் கதுப்புகளில் சூடான இரத்தம் பரவிச் சிவந்து விளங்கின. கண்கள் புதிய ஒளி பெற்றன. அந்த மகிழ்ச்சியில் எழுந்து உட்கார்ந்த யாஸ்மி தன் வேதனையை மறந்து உமார் எழுந்து செல்லும் வரை உட்கார்ந்தேயிருந்தாள். அவன் விடைபெற்றுச் சென்ற பிறகுதான் வலி தோன்றியது; படுக்கையில் சாய்ந்தாள்.

ஜபாரக் குதிரையைப் பார்த்துக் கொண்டு கீழே நின்றிருந்தான். கடிவாளத்தை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு, குதிரையின் மேல் ஏறியுட்கார்ந்து கொண்டு ஜபாரக்கோடு பேசினான் உமார். “இன்று மாலை நான் யாஸ்மியைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். காஜீயொருவரையும் சாட்சிகளையும் அழைத்து வரச் சொல்லுகிறேன். நீ ரொட்டிக் கிடங்கிற்கு சென்று, இனிய கேக்குகளும், அரிசிக் கூழும் இனிப்பான ஷெல்லிப் பழங்களும், சிவந்த திராட்சை மதுவும் மற்ற பொருள்களும் வாங்கி வா. இந்தத் தெருவில் உள்ள மக்களையெல்லாம், மணவிழாவில் பங்கெடுத்துக் கொள்ளும்படி அழைத்து வா! குழல் ஊதுபவன் ஒருவனையும், மெழுகுவர்த்திகளையும் கொண்டுவர மறந்து விடாதே!” என்று கூறிவிட்டு, குதிரையைத் திருப்பிக் கொண்டு சென்றான். அதிசயத்தோடு அவனைப் பார்த்துக் கொண்டு, ஏந்திய கைகளுடன் நின்ற பிச்சைக் காரர்களைக் கவனிக்க அவனுக்கு அப்போது நேரமில்லை.

சாக்கு முட்டை நிறையச் சாமான்களுடன் வந்த ஜபாரக் வழி நெடுகிலும், “நம்பிக்கையுள்ளவர்களே! ஓ! மத நம்பிக்கை உள்ளவர்களே! திருவிழாக் கதவு திறந்திருக்கிறது! எல்லோரும் வாருங்கள்!” என்று அழைப்பு விடுத்துக் கொண்டே வந்தான்.

திருமணச் சடங்கு தொடங்கியது. முக்காடுடன் ஒரு மூலையிலே இருக்கும் யாஸ்மியைப் பற்றியே உமார் நினைத்துக் கொண்டிருந்தான். அவனருகிலே விரிப்பில் உட்கார்ந்திருந்த காதியின் கர கரத்த குரல் கேட்டது. “புத்தக வியாபாரி ஒருவரின் மகள். சரி, அவள் வரதட்சணையாக என்ன தருகிறாள்? அதாவது அவள் உனக்கு என்ன சொத்து தரப் போகிறாள் என்று கேட்கிறேன்” என்று காதி திரும்பத் திரும்பக் கேட்டார்.

நீதிபதியின் பின்னால், ஒரு குறிப்பெடுக்கும் எழுத்தாளர், திருமண ஒப்பந்தத்தின் விவரங்களை எழுதிக் கொண்டிருந்தார்.

“சொத்துத்தானே! புயற்காற்றைப் போன்ற கருத்த கூந்தலும், பூங்கொடி போன்ற அவளுடைய மெல்லிய இடையும், காதல் ஒன்றைத் தவிர வேறு எதையும் அறியாத அவள் இதயமும், இவை போதுமே! வேறு சொத்து எதுவும் அவள் தர வேண்டியதில்லை. விரைவில் மணத்தை முடியுங்கள்!” என்றான் உமார்.

“விலைமதிப்புள்ள பொருள் எதுவும் இல்லை என்று எழுது” என்று குறிப்புக்காரனிடம் கூறிவிட்டு உமாரை நோக்கி, “தாங்கள் அவள் பெயரில் என்ன சொத்துக்களை எழுதி வைக்கப் போகிறீர்கள்?” என்று காதி கேட்டார். அவன் சொன்னதைக் கேட்டதும் அவருக்கு சிரிப்புதான் வந்தது. “என்னிடம் இருக்கும் எல்லாப் பொருள்களையுமே எழுதி வைக்கிறேன்” என்றான் உமார்.

காதி தன் கைகளைக் கட்டிக் கொண்டார். சங்கடமான குரலில் குமுறியெழும் கோபத்தை வெளிக்காட்டாமல் மிக மரியாதையுடன் உமாரிடம் கூறினார். “நாம் இப்பொழுது, சட்டப்படி ஓர் ஒப்பந்தம் செய்கிறோம். காரணத்திற்கு உட்பட்ட வார்த்தைகளைக் கொண்டு பத்திரம் எழுதப்படவேண்டும். எல்லாம் என்பது எதையும் குறிப்பிடக்கூடிய சொல் அல்ல. சட்டத்தின் முன் அது பயனற்றதாகும், விவரத்துடன் ஒவ்வொரு பொருளாகக் குறிப்பிட்டு எழுதவேண்டும். எத்தனை ஏக்கர் நிலம் என்பதும் அது இருக்கும் இடமும், எல்லைகளும் அதில் இருக்கும் அசையும் பொருள், அசையாப் பொருள்களைப் பற்றிய விவரங்களும், நீர்க்குளங்களும், குளத்தில் மீன் பிடிக்கும் உரிமையும், நிலத்தின் ரொக்க மதிப்பும் குறிப்பிடப்பட வேண்டும். அடுத்துக் கொடுக்கும் பொருள்களைப் பற்றிய விவரங்கள், ஆடைகள், துணிகள் கஜக்கணக்கு, கம்பளிகள் பட்டாடைகள் பற்றிய கணக்கு, ஒட்டகங்கள், ஆடு மாடுகள், பறவைகள் எத்தனையெத்தனை என்ற விவரம், தந்தம், மான்கொம்பு, மீன் எலும்பு, இரத்தினம், வைரம், நீலம், பச்சைக் கற்களின் விவரங்கள், எத்தனை அடிமைகள் கொடுக்கிறீர்கள். இவைகளின் தனித்தனி விலைமதிப்பு...” என்று காதி அடுக்கிக் கொண்டு போனார்.

“விலை மதிப்புள்ள எல்லாப் பொருள்களுமே கொடுக்கப்படுகின்றன என்று எழுதிக்கொள்” என்று உமார், நீதிபதியின் தோளுக்கு மேலே எட்டிக் குறிப்பாளனிடம் கூறினான். ஏற்கெனவே கட்டிக் கொண்ட தன் கைகளைத் தளர்த்திக் கொண்டே காதி ஆயாசத்துடன், “ஆண்டவனே! அல்லா! திருமண ஒப்பந்தப் பத்திரத்தில் இப்படிப்பட்ட சொற்களை இதற்கு முன் யாரேனும் கேட்டதுன்டா? இப்படிப்பட்ட அறிவிப்பு இதுவே முதன் முறையாகும். மேலும் இந்த அறிவிப்பை ஏற்றுக் கொண்டால் இதற்குமுன் மணம் செய்து கொண்ட அத்தனை மனைவியரின் உரிமைகளையும் பாதிக்காதா?” என்று அந்த நீதிபதி விவகாரம் பேசிக்கொண்டிருந்தார். உமார் எழுந்து சென்று கை நிறையத் தங்கநாணயங்களை அள்ளிக் கொண்டு வந்தான். தன் அடிமைகளையும் அள்ளி வரச் செய்தான். நீதிபதி பேசுவதற்காக வாயைத் திறந்த போதெல்லாம், அவருடைய தாடியின் மத்தியில் இருந்த உதடுகள் விரிந்த போதெல்லாம் ஒவ்வொரு தங்க நாணயத்தை வாயினுள் போட்டு அவர் பேச்சை ஒரு வழியாக நிறுத்தினான். சுற்றியிருந்த சாட்சிகள் மடியில் எல்லாம் கை நிறையப் பொன் நாணயங்களை அள்ளிக் கொட்டினான். குறிப்பாளனிடமிருந்து காகிதச் சுருளைப் பறித்துச் சாட்சிகளைக் கையெழுத்திடும்படி ஆணையிட்டான். குறிப்பாளனின் எதிரேயிருந்த கோப்பையிலே நல்ல மதுவைக் கொண்டுவந்து ஜபாரக் ஊற்றினான். மதுவின் ஊடே, தன்னுடைய அருமையான வைர மோதிரமொன்றை நழுவ விட்டான் உமார். காதியைப் பார்த்து “தங்கள் சொற்களெல்லாம் பொன் மொழிகள்” என்று உமார் கூறினான்.

கூட்டத்தினர் வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் இந்த நிகழ்ச்சிகளைக் கண்டு கொண்டிருந்தார்கள். அங்கே ஓர் ஆடும் பொம்மைபோல அந்தக் காதியாகிய நீதிபதி விளங்கினார். திருமணம் முடிந்து “உங்கள் அனைவரின் சாட்சியாக இன்று இந்தப்பெண்ணை நான் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். மறந்து விடாதீர்கள். விருந்து காத்திருக்கிறது. குழல் வாத்தியம் வாசியுங்கள்! விருந்து சாப்பிடுங்கள்!” என்று உமார் எல்லோரையும் கேட்டுக் கொண்டான்.

எழுந்து சென்று, வராந்தா ஓரமாக நின்று தெருவைப் பார்த்தான். அங்கே எரியும் விளக்குகளின் பிரகாசமான வெளிச்சத்திலே இருக்கும் ஏழை மக்களையும், பிச்சைக்காரர்களையும் குழந்தைகளையும் குட்டிகளையும் கண்டான். குழல் வாசிப்பவன் காதல் கீதம் ஒன்றை அருமையான ராகத்திலே ஆலாபனம் செய்தான். உமார் அங்கே கூடியிருந்த அனைவரையும் நோக்கி, “நன்றாக உண்ணுங்கள்! உண்ணுவதற்குப் போதுமான அளவு கேக்குகள் இல்லாமல் இருந்தால், கேக்குக் கிடங்கிலிருப்பவைகள் அனைத்தையுமே உண்டு விடுங்கள். சர்பத்தும், மதுவும், மாமிசமும் அரிசிக் கூழும் எல்லாம் வயிறு நிறைய உண்ணுங்கள். மகிழ்ச்சிக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியில்லாதவர் யாருமே இங்கு இருக்கக் கூடாது. அப்படி யாராவது இருக்கிறீர்களா?” என்று கேட்டான். “இல்லை! இல்லை! அல்லாவின் அருளால் எல்லோரும் இன்பமாகவே இருக்கிறோம்!” என்று பதில் குரல்கள் பலப்பல ஒலித்தன.

உமாருக்கு மகிழ்ச்சி பொங்கியது. “எல்லாரும் மட்டற்ற மகிழ்ச்சியடைய வேண்டும். என் அன்புக்குரிய யாஸ்மியை நான் அடையும் இந்தத் திருமண நன்னாளிலே யாவரும் இன்பமாக இருக்க வேண்டும்!” என்று விரும்பினான். அவன் பார்வை பக்கத்திலே, இருந்த கணக்கனின் கைகளிலே இருந்த பணப் பெட்டியின் மேல் விழுந்தது. “அந்தப் பணப்பெட்டியை வெளியே தூக்கியெறி!” என்றான்.

“தலைவரே! இது பணப்பெட்டி” என்றான் அவன்.

“தெரியுமடா தெரியும் ! இந்தப் பணம் போனால் எனக்கென்ன பணமா இல்லை. என்னைப்போல் பணக்காரன் எவனடா இருக்கிறான்? இன்ப சொர்க்கத்தின் மதுவை குடித்துவிட்ட என்னைக் காட்டிலும் எவனடா பணக்காரன் இருக்கிறான்? என்று சொல்லிக் கொண்டே பணப் பெட்டியைப் பறித்து மேலேயிருந்தவாறு திறந்து தெருவிலே கொட்டினான். ஏழைகளும் பிச்சைக்காரர்களும், குழந்தைகளும், குட்டிகளும், ஆடவரும், பெண்டிரும், இளைஞர்களும் முதியவர்களும் எல்லோரும் விழுந்த பொன் நாணயங்களின் மேலே விழுந்து விழுந்து பொறுக்கினார்கள். வயிறாற உண்டறியாத அந்த வறுமையாளர் கூட்டம் அன்று வயிறாற உண்டதுடன் மின்னும் பொற்காசுகளும் கிடைத்த மிக்க மகிழ்ச்சியிலே ஆடிப்பாடிக் கொண்டு சென்றது. இவ்வாறு சீரும் சிறப்பும் பாட்டு, கூத்தும் கேளிக்கையும் வேடிக்கையுமாக உமார் கயாம்-யாஸ்மி திருமணம் நடைபெற்று முடிந்தது;


------------------

23. இதயந்தாங்காத இன்ப வேதனை

உமார் யாஸ்மியைத் தன்னுடைய கைகளிலே தூக்கிக் கொண்டான். அவள் நோயினால் நடுங்கிக் கொண்டே அவனுடைய கழுத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். அவளை அப்படியே தெருவுக்குக் கொண்டு வந்தான். அங்கே தயாராகக் காத்திருந்த பல்லக்கின் உள்ளே, விரித்திருந்த பஞ்சு மெத்தையிலே மெதுவாக அவளை வைத்தான். அமீர் அஜீஸ் என்ற உமாரின் நண்பனிடமிருந்து, தற்சமயத்திற்காக வாங்கப்பட்ட பல்லக்கு அது. அதற்குக் காவலுக்கு இரண்டு வீரர்களையும் அமீர் அஜீஸ் அனுப்பியிருந்தார்.

“என் அருமை மணப் பெண்ணே! இனி நீ என்றென்றும் என்னுடைய கைகளிலேயே இருப்பாய்!” என்று அவள் காதில் மட்டும் விழும்படியாக உமார் கூறினான்.

பாதுகாப்பு வீரர்கள் பல்லக்குத் திரைகளை இழுத்து மூடினார்கள். அதுவரையில் அனாதையாகக் கிடந்த யாஸ்மியோடு ஒன்றாக வாழ்ந்த பிச்சைக் காரர்கள் எல்லாரும் விலகி வழிவிட்டார்கள்.

“அல்லாவின் புகழ் நிலைப்பதாக! பொன் நாணயங்களை அள்ளி வழங்கும் அருளாளன்; அறிவாளன் புகழ் ஓங்குவதாக!” “கூடாரமடிப்பவன் புகழ் வளர்வதாக!” என்று வாழ்த்தினார்கள்.

“இந்த மணமக்கள் வாழ்வில் இன்பம் நிறைவதாக!” என்று கூவினார்கள். கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஓடி வந்த ஒரு சிறுமி தன் கையில் இருந்த கூடையில் நிறைந்திருந்த ரோஜாப்பூ இதழ்களை உமாரின் குதிரையின் மீது கொட்டினாள்.

“தலைவரே! நாங்கள் எங்கு செல்ல வேண்டும்? கட்டளைக்குக் காத்திருக்கிறோம்!” என்று வீரன் ஒருவன் கேட்டான்.

“அங்காடிச் சந்தைக்கு செல்” என்று ஆணையிட்டான் உமார்.

“அங்காடி இந்நேரம் மூடப்பட்டிருக்குமே? பிற்பகல் தொழுகைக்குப் பிறகு அடைத்துவிடுவது வழக்கமாயிற்றே!”

“இருக்கட்டும்! நீ அங்கே செல்! விரைந்து செல்!” என்று மீண்டும் கூறினான் உமார்.

கரிய நிறமுடைய அடிமைகள் பல்லக்கைத் தூக்கினார்கள். பல்லக்கு நகர்ந்தது. அதன் பக்கத்திலேயே குதிரையை மெல்ல நகர்த்திக் கொண்டு சென்றான் உமார். பாதுகாப்பு வீரர்களும் உடன் நடந்தார்கள். அந்த வீரர்களில் ஒருவன் ஜபாரக்கிடம் மெதுவாக, “உங்கள் தலைவர் குடி மயக்கத்தில் இருக்கிறாரோ?” என்று கேட்டான். “அவர் குடித்திருப்பது போன்ற மதுவை உன் ஆயுள் முழுவதுமே குடிக்க முடியாது. பேசாமல் வா!” என்று அதட்டினான் அந்த விகடன்.

அங்காடிச் சந்தையின் தெருவாசல் அருகிலே, இராவிளக் கொன்று எரிந்து கொண்டிருந்தது. அந்த இடத்திலே ஈட்டி தாங்கிய வீரர்கள் அறுவரும், காவல் தலைவன் ஒருவனும் காவல் செய்து கொண்டிருந்தார்கள். காவல் தலைவன், பல்லக்கையும், பல்லக்குடன் வரும் அரசாங்க உடுப்பணிந்த பாதுகாப்பு வீரர் இருவரையும், பக்கத்திலே வரும் உமாரையும் கண்டான். உமாரின் தோற்றத்தைக் கண்டதும் ஏற்பட்ட ஒரு மரியாதையுணர்ச்சியால் எதிரில் சடக்கென்று நின்று சலாம் வைத்தான்.

“தலைவரே! பேரரசர் சுல்தான் அவர்களின் ஆணைப்படி இந்தக் கதவுகள் இரவு நேரங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. இதைத் திறப்பதோ, கடப்பதோ இயலாத செயல்” என்று பணிவாகவும், சட்டத்தின் பிடிப்பை விட்டுக் கொடுக்காமலும் அந்தக் காவல் தலைவன் கூறினான்.

“சுல்தான் அவர்களின் அன்பைப் பெற்ற எனக்கு இன்றிரவு எதுவுமே அடைக்கப்படக் கூடாது. நீ இதைத் திறப்பதற்கு அனுமதிப்பதன் அடையாளமாக இந்த மோதிரத்தை வைத்துக் கொள். சீக்கிரம் கதவுகளைத் திற!” என்று கட்டளையிட்டான் உமார்.

“ஆஸ்தான சோதிடரை இவ்வளவு நேரமா காக்க வைப்பது? திற திற!” என்று உறுமினான் ஜபாரக்.

காவல் தலைவன், மோதிரத்தைப் பெற்றுக் கொண்டு சந்தேகம் கலந்த பார்வையுடன் தலையை அசைத்தான். வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே வாசலின் இரட்டைக் கதவுகளில் ஒன்றைத் திறந்து விட்டான். தன்னுடைய வீரர்களை விலகி விடும்படி கூறினான். உமாரும், பல்லக்கும் உள்ளே நுழைந்தனர். பல்லக்குக்குப் பின்னாடியே ஒரு தாடிக்காரக் கிழவன் ஒட்டிக்கொண்டு உள்ளே நுழைந்து விட்டான். வீரர்கள் கண்ணுக்கும் காதுக்கும் எட்டாத தொலை உள்ளே நுழைந்ததும், அந்தத் தாடிக் காரக் கிழவன், உமாரின் குதிரைச் சேணத்தைப் பிடித்துக் கொண்டு, “குவாஜா அவர்களே, இந்த வழியே வாருங்கள். இந்த ஏழை எலிராக்கின் கடைக்கு வாருங்கள். பட்டுத் துணிகளும் பவழக் கற்களும் முத்து வைரமும் எத்தனையோ வகைகள் என் கடையில் இருக்கின்றன. தங்கள் மணப் பெண்ணின் சிவந்த உதட்டுக்குக் பொருத்தமான முத்துப் பதித்த தங்கப் புல்லாக்கும் இன்னும் வகை வகையான நகைகளும் இருக்கின்றன” என்றான்.

அதற்குள்ளே, மற்றொரு தாடிக்காரன் வந்து, “ஏழைகளின் பாதுகாவலரே! எங்கள் சுல்தானின் தோழரே! இந்தப் புறம் வாருங்கள். ஸீராக்கிற்கு வைரக் கல்லுக்கும் படிகாரத்துக்கும் உள்ள வேறுற்றுமை கூடத் தெரியாது. அவனுடைய கடைப்பொருள்கள் எல்லாம் போலி. எல்லாம் இந்த அலெப்போவிலேயே செய்யப்பட்டவை. என் கடைக்கு வாருங்கள். தங்க நூல் இழைத்து நெய்யப்பட்டப் பட்டுத் துணி வகைகள் கட்டுகட்டாக இருக்கின்றன. பவழம் பதித்த வண்ணத் துணிகள், டமாஸ்கஸ் பட்டணத்திலிருந்து வரவழைக்கப் பட்டவை. எத்தனையோ விதங்கள்” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே இன்னொருவன் வந்து உமாரின் சேணத்தைப் பிடித்துக் கொண்டான்.

“தலைவரே! மதவிரோதிகளான இந்த நாய்களுடன் ஏன் பேரம் செய்கிறீர்கள்! அழுக்குப் பிண்டங்களே, எங்கள் தலைவரின் தோழியான மங்கையின் வெள்ளிக் கழுத்துக்குப் பொருத்தமான ஒளி வீசும் மணிக் கற்கள் வேண்டும் என்ப்து உங்கட்குத் தெரியவில்லையா? ஒடுங்கள்! ஒடுங்கள்! தலைவரே! உண்மையான மத நம்பிக்கையுடையவனும், சையத்தின் பேரனுமாகிய என் கடைக்கு அருள் கூர்ந்து வருகை புரியுங்கள். அழகான பொருள்கள் அனைத்தும் தங்கள் விருப்பப்படி வாங்கிக் கொள்ளலாம்” என்று, குதிரையை இழுத்தான்.

“இருட்டில் வழி மறிக்கும் குருடர்களே! உங்களிடம் எல்லாப் பொருள்களையும் நான் வாங்கிக் கொள்கிறேன். ஆனால், அவற்றின் விலையை சுல்தான் அவர்களே கொடுப்பார்கள். தெரிகிறதா? இந்த இரவு மீண்டும் வரப்போவதில்லை. உம் கடைகளை எல்லாம் திறவுங்கள்” என்று உமார் அவசரப் படுத்தினான்.

அன்று இரவு, ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு நிமிடமாகப் பறந்தது. கோடைக் காலமாகவும், புழுக்கமாகவும் இருந்ததால், உமார் தன் கூடார வாசலில் படுக்கையைப் போட்டிருந்தான். யாஸ்மி அதில் சாய்ந்து கிடந்தாள். அருகிலே படுத்திருந்த உமார் அவளுடைய கூந்தலின் கற்றையின் டையே தன் விரல்களை நுழைத்து கோதிவிட்டான். நீண்ட நாளைக்குப் பிறகு இப்பொழுதுதான் அவனுக்கு மறுபடி உயிர் வந்தது போலிருந்தது. அன்றைய இரவு அழுத்தம் நிறைந்ததாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளின் துன்பப் பொழுதுகள் எல்லாம் தொலைந்து போய் விட்டன. கடலின் மேல் தோன்றிய தீய தோற்றம் கடலுக்குள்ளேயே மீண்டும் மறைந்தது. போல், அந்த நாட்கள் மறைந்து போய் விட்டன. விண்மீன் வெளிச்சத்தின் ஒளிப்பெருக்கு, அவனருகில் இருந்த யாஸ்மியின் சிவந்த கைகளைக் கோடிட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தது.

அவள் மூச்சு விடும்போதெல்லாம் அவள் மேல் போர்வை ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. வெளியிலே, மணல் வெளியில் முளைத்திருந்த பச்சைப் பூண்டுகளின் காய்ந்த வாசனை காற்றோடு காற்றாகக் கலந்து வந்து கொண்டிருந்தது.

“அன்பே, இனியும் தூங்காமல் இருக்கிறாயே” என்று உமார் யாஸ்மியைக் கேட்டான்.

“எனக்கு மகிழ்ச்சி பொறுக்க முடியவில்லை. அது உடலைத் துன்புறுத்துகிறது. என் இன்பத்தின் அளவை எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது தவறானதா?” என்று யாஸ்மி சோகம் பொருந்திய புன்முறுவலுடன் கேட்டாள்.

“அது தவறாக இருந்தால், நான் பெரும் பாவியாக இருக்க வேண்டும்!” என்றான் உமார்.

யாஸ்மி தன் விரல்களால் உமார் உதடுகளை மூடினாள். “உஷ் அப்படிச் சொல்லாதீர்கள். எனக்குப் பயமாக இருக்கிறது. உங்கள் அன்பை நினைத்து ஏங்கி ஏங்கி நட்சத்திரங்கள் தோன்றியதிலிருந்து மறையும் வரை காத்திருந்தும், பார்த்துக் கொண்டே நடந்துமாய் கழித்த இரவுகள் எத்தனையோ! இப்பொழுது நம் காதல் நிேைவறி விட்டது. இனி. இனிமேல், தங்களைப் பிரிந்திருப்பதென்பது என்றால் நினைக்கக் கூட முடியவில்லை. அப்படிப் பிரிந்து விட்டால் அதைப்போல் கொடுமையானது வேறில்லை. தங்களைப் பிரிந்து விடும்படி மீண்டும் எதுவும் நேரிடுமோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது. மிகப் மிகப் பயமாக இருக்கிறது.”

“பயப்படாதே! நாம் இருவருமே, நிசாப்பூருக்குச் சென்று விண்மீன் வீட்டிலே போய் இருப்போம். நான், சுல்தானிடம் அனுமதி வாங்கிக் கொண்டு வருகிறேன்.”

“தங்களால் அது முடியாதா என்ன? தங்களுக்குள்ள சக்தியை நான் மறந்து விட்டேனே. ஆமாம்! எனக்காக அங்காடியிலே எத்தனை எத்தனை பொருள் வாங்கி விட்டீர்கள்! அப்படியானால் இனிமேல் நான் பிச்சைக்காரியில்லை; அல்லவா?”

“நீ என்னுடைய உயிர். மூன்று வருடங்களாக என் ஆவி நோய்ப் பட்டிருந்தது. இப்பொழுதுதான் என் நோய் தீர்ந்தது.

“நினைத்துப் பார்த்தாலே நம் வாழ்க்கை பெரும் அதிசயமாக இருக்கிறது! இல்லையா? எத்தனையோ தடவை நான் இதை எண்ணியெண்ணி ஆச்சரியப்பட்டிருக்கிறேன். முதலில் புத்தகக் கடை வீதியில் தங்களைக் கண்ட பொழுதே காதல் கொண்டு விட்டேன்.

பிறகு, தங்களைத் தவிர வேறு எதையும் பொருட்படுத்தாத மனவுறுதி பெற்றேன். தங்கள் அருகில் இருப்பதே பேரின்பம் என்று நினைத்தேன். ஏதோ மாயவுலகில் இருப்பது போல் மகிழ்ந்தேன். தங்களைப் பிரிந்திருந்தபொழுது என் உடலின் ஒவ்வோர் அங்கமும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது.”

“இப்பொழுது எல்லாம் போய் விட்டது. அப்படித்தானே?” என்று முடித்தான் உமார்.

“ஆம்! துன்பம் எல்லாம் போய் விட்டது. ஆனால், உடல் வலி போகவில்லையே!”

“என்ன,” என்று திடுக்கிட்டபடி உமார் தலையைத் தூக்கினான். கிழக்கில், இருட்டின் நிறம் மாறிக்கொண்டிருந்தது. “கண்ணே நீ என்ன சொன்னாய்! பார், இரவு முடிந்து பகல் தோன்றுகிறது.

இரவு முழுவதும் உறங்காமல் இருந்து விட்டோமே, வருந்தாதே! இது நமக்கு விடிவுகாலம். இன்றைய விடிவு போல் என்றைய விடிவும் இருக்கப் போவதில்லை.

“ஆம்! இருக்கப் போவதில்லை!” என்று சொல்லி அவள் சிரித்தாள்! அது என்ன சிரிப்பு?

“இதோ, சுல்தான் கூடாரத்தில் மணியடித்து விட்டார்கள். இப்பொழுது, நான் குளித்துக் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு சுல்தானைப் போய் பார்க்க வேண்டும். அவரிடம் நாம் ஊர் திரும்புவதற்கு அனுமதி வாங்கிக் கொண்டு வரவேண்டும்; யாஸ்மி!”

“போய் அனுமதி பெற்றுக்கொண்டு விரைவில் வாருங்கள்! ஒரு சிறிது நேரமே தங்களைப் பிரிவதென்றாலும் எனக்குப் பொறுக்க முடியாது. ஆகவே, விரைவில் திரும்பி வாருங்கள்!” என்று யாஸ்மி விடை கொடுத்தாள்.

ஆனால் அவள் கொடுத்த விடை ஜன்மாந்திர விடை போலத் தோன்றியது.

-----------------

24. பேகம் பொற்சித்திரமும் பினமாகிப் போனதுவே

சுல்தான் மாலிக்ஷா அவர்கள், அவன் செல்வதற்கு அனுமதியளித்து விட்டார். அவனுடைய காதல் நெஞ்சில் களிப்பு நிறைந்திருந்தது. பயணத்திற்குப் பாதுகாப்பு வீரர்களைத் தெரிந்தெடுத்துக் கொண்டான். அடிமைகள் அவனுடைய சாமான்களை மூட்டைக் கட்டினார்கள். இரண்டு குதிரைகளுக்கிடையே கட்டிப் பொருத்தப்படக்கூடிய முறையிலே மூடப்பட்ட ஒரு பிரம்புத் தொட்டில் ஒன்றை வாங்கினான். அதிலே யாஸ்மியைப் படுக்க வைத்துக் கொள்ளலாம். ஜபாரக்கிற்காக ஒரு புதிய கழுதை வாங்கினான்.

“ஜபராக், திரும்பவும் பிச்சை யெடுக்கவே வேண்டியதில்லை” என்று சொல்லி சிரித்தான்.

அந்தக் கூன விகடன் அவனைக் கலவரத்தோடு பார்த்தான். “தலைவரே! ஒரு விஷயம் தங்களுக்கு எச்சரிக்க விரும்புகிறேன். தாங்கள் மிகவும் பலமுள்ளவர். ஆனால், யாஸ்மி மிகப் பலவீனமாக இருக்கிறாள். மகிழ்ச்சியைத் தாங்க முடியாத அளவு பலவீனமாக இருக்கிறாள்” என்றான்.

“நீ ஒரு புத்தியுள்ள முட்டாள்!”

“இல்லை, அங்கஹlனன்! வேதனையை அனுபவித்திருந்த என்னைப் போன்றவர்களுக்குத்தான் ஒரு பெண்ணின் உணர்ச்சிகள் தெரியும்!” என்று சொன்னான் ஜபாரக்.

பிற்பகலில், உமாரை வழியனுப்புவதற்காக பெரிய அமீர்கள் வந்து சேர்ந்தார்கள். குளிர்ச்சியான மாலை நேரத்திலே ஜபாரக் தன் கழுதையின்மேல் ஏறி வழிகாட்டிக் கொண்டு முன் செல்ல உமாரின் பயணம் தொடங்கியது.

அன்று இரவு யாஸ்மிக்குக் குளிர் பிடித்துக் கொண்டது. அதைத் தொடர்ந்து காய்ச்சல் வந்தது. அவள் எந்தவிதமான உணவையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை. ஆவலோடு உமார் அருகில் வந்தபொழுது அவள் புன்சிரிப்புடன் இருந்தாள்.

“நான் மிக அதிகமான மகிழ்ச்சியை அடைந்துவிட்டேன்! இனி அது நிச்சயமாகப் போய்விடும்” என்றாள்.

இரண்டாவது நாள் இரவு. அவர்கள் எபிரேட்ஸ் ஆற்றங்கரையிலே தங்கள் கூடாரத்தை அமைத்தார்கள். அடுத்த நாள் காலையில் பிரயாணிகளுக்காக விடப்படும் மிதப்புத் தோணிகளிலே ஆற்றைக் கடந்து செல்லவேண்டும். யாஸ்மி கூடாரத்திற்குள்ளே, ஏழெட்டுப் போர்வைகளால் மூடப்பட்டுக் கிடந்தாள். அவளுடைய கன்னங்களில் மகிழ்ச்சியொளி பாய்ந்து விளங்கியது. உமார் கூடாரத்திற்குள்ளே நடையிட்டுக் கொண்டிருந்தாள். அவள் சென்ற திசையெல்லாம் அவள் கண்களும் சென்றன. ஆனால், கழுத்தை மட்டும் அவளால் திருப்ப முடியவில்லை.

“நான் பாக்கியமில்லாத மனைவி, என் கணவனுக்குத் தொண்டு செய்ய வேண்டியதிருக்க, எனக்குத் தாங்கள் பணிவிடை செய்யும்படியான நிலையில் இருக்கிறேன். என் திருமணத்திற்காக வாங்கிய விலையுயர்ந்த சில சாமான்களைப் பார்க்கலாமா?” என்று கேட்டாள் பிரமையோடு.

அவளைச் சந்தோஷப்படுத்துவதக்ாக, பூவேலை செய்யப் பெற்ற பொன்னாடைகளையும், முத்துப் பதித்த மேலாடைகளையும் எடுத்துக் காட்டினான். தன்னை மறந்தவளாக அவள் அவற்றை விரல்களால் தடவித் தடவிப் பார்த்தாள். ஒற்றை நீலமணிக்கல் பதித்த வெள்ளித் தலைமுடியொன்றை யெடுத்துக் காண்பித்தான். “ஆ! இது மிக அழகாக இருக்கிறது. நாளைக் காலையில் எழுந்து தலைவாரிக் கொண்டு இந்த முடியை நான் அணிந்து கொள்வேன். பிறகு ஒருநாள் நாம் ஆற்றங்கரை அரண்மனையில் இந்த இடத்தில் அல்ல. நம்முடைய சொந்த அரண்மனையில்வெண்மையான அன்னங்கள் நீந்திச் செல்லும் அழகான ஆற்றங்கரையில் உள்ள நம் சொந்த அரண்மனையில் இருப்போம், அல்லவா?”

இப்படிப் பேசிக் கொண்டிருந்த யாஸ்மி திடீரென்று ஜன்னி கண்டவள்போல் பிதற்றத் தொடங்கினாள். நோயின் கடுமை அதிகமாகியது. அவளுடைய கண்கள் இருண்டன. உமார் பயந்து ஜபாரக்கை அழைத்தான். அவன் வந்து பார்த்தவுடனேயே முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

“பிளேக் வியாதி (கொள்ளைநோய்) போல் தோன்றுகிறது” என்றான் ஜபாரக்.

“இல்லை. அது ஒரு விதமான காய்ச்சல். கடவுளைப் பிரார்த்திப்போம்! பொழுது விடிவதற்குமுன் வியாதி நின்று போகும்படி வேண்டுவோம்” என்றான் உமார்.

“தொழுவதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை!” என்று முடித்தான் விகடன்.

குளிர் நீங்குவதற்காக ஜபாரக் கூடாரத்தைச் சுற்றி நெருப்பு எரிக்கப் பெற்றது. துணியினால் ஆன கூடாரச் சுவர்களில் நெருப்பின் செவ்வொளிப்பட்டு விளங்கிக்கொண்டிருந்தது. யாஸ்மி வேதனையால் முனகிக்கொண்டு பக்கத்துக்குப் பக்கம் புரண்டுக் கொண்டிருந்தாள். பக்கத்தில் உமார் மண்டியிட்டுக் கொண்டிருப்பதும், கூடாரத்தின் ஒருமூலையிலே ஜபாரக் உட் கார்ந்து கொண்டு கடவுளின் புனிதமான பெயர்களையெல்லாம் உச்சரித்துக் கொண்டு இருப்பதெல்லாம் அவள் அறிவதற்கு அப்பாற்பட்ட விஷயங்களாகிவிட்டன. நெருப்பு அமர்ந்து சாம்பலாகி விட்டது. கூடாரத்துச் சுவர்களில் ஆடி ஒளி வீசிக்கொண்டிருந்த செந்நிறமும் மறைந்து விட்டது.

திடீரென்று உமார் ஜபாரக்கை அழைத்தான். “விளக்குளை ஏற்று. அவள் பேசிவிட்டாள். இதோ என்னைத் தொட்டுக் கொண்டிருக்கிறாள் காய்ச்சல் விட்டுவிட்டது” என்றான். விளக்கைப் பிடித்துக்கொண்டு அவர்கள் அருகிலே வந்து நின்றான் ஜபாரக், யாஸ்மியைக் கவனித்தான். அவள் அசையாமல் படுத்திருந்தாள். அவளுடைய கண்கள் முடியிருந்தன. அவளுடைய ஒரு கை உமாரின் கழுத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. அவள் உதடுகள் அசைந்து கொண்டிருந்தன.

“என் உயிரே! என் உயிரே!” அசையும் உதடுகளிலிருந்து வந்த சொற்கள் நின்றன. அவள் கழுத்தைத் திருப்பிக் கொண்டாள். ஜபாரக் விளக்கைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தான். உமார் அவளைக் கவனித்துக் கொண்டிருப்பதாக அவன் நினைத்தான். யாஸ்மி, மூச்சு விடுவதை நிறுத்திவிட்டாள். ஆனால் உமார் அவளையே கவனித்துக் கொண்டிருப்பது அவனுக்கு என்னவோ மாதிரியிருந்தது. விளக்கைக் கீழே வைத்துவிட்டு, உமாரின் தோள்களைத் தொட்டான்.

உமாரினுடைய ஆட்கள் எல்லோரும் கூடாரத்திற்கு வெளியே உட்கார்ந்திருந்தார்கள். திடீரென்று எழுந்த காற்று தூசியைக் கிளப்பி திரையிட்டு கொண்டிருந்தது. அந்தத் தூசித் திரையின் ஊடே சூரியன் ஒளி வீசிக் கொண்டிருந்தது. ஜபாரக் உள்ளும் புறமும் வருவதும் போவதுமாக இருந்தான். உமாரின் நிலையை வெளியே யிருப்பவர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தான். “அவர் இன்னும் பேசமாட்டேன் என்கிறார். அவளுடைய முடிய கண்களில் பன்னீர் ஊற்றிக் கொண்டிருக்கிறார்”.

“அவள் என்ன பிளேக் நோயினால்தானே இறந்துபோனாள்!” என்று ஒரு சிப்பாய் கேட்டான்.

“அவள் இறந்துபோனாள் என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. இல்லாவிட்டால், திருமண நகைகளெல்லாம் எடுத்து அவளுக்கு அணிவித்துக் கொண்டிருப்பாரா?” என்று ஜபாரக் அவர்களுக்குக் கூறினான்.

“ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, வருத்தியழுதால்தான் சாகக் கொடுத்தவனுக்கு நிம்மதி ஏற்படும்.” என்றான் ஒருவன்.

“அதெல்லாம் அழுது விட்டார். இனி அவர் அழப் போவதில்லை. மழை பெய்தபின் பூத்த பாலைவனத்துப் பூப்ப்ோல் இருந்த அவள் அடுத்த நாளே அடிபட்டதுபோல் போய்விட்டாள். வெள்ளிய பூப்போல அவள் தரையில் கிடக்கிறாள். இவ்வளவு இளமையான காலத்தில் இறந்துபோகும்படி நேர்ந்ததே!” என்று ஜபாரக் வருந்தினான்.

அந்த மனிதர்கள் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பக்கத்திலேயிருந்த மரத்தடியில் ஒரு மேட்டிலே பெரிய புதை யான்ற்ை வெட்ட நேர்ந்ததும், சாவுக் கூடாரத்திற்கு மூடப்பட்ட அந்தத் தொட்டிலைத் தூக்கிவரத் நேர்ந்ததும் என்றுமில்லாத வழக்கமாக அவர்களுக்குத் தோன்றியது. சிறுபெண்கள் பிரசவத்தின் போதும் நோயினாலும் இறந்துபோவது எதிர்பார்க்கக் கூடியதே! தலையில் அப்படி எழுதப்பட்டிருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்? கரையிலே, ஆய்த்தமாக இருக்கும் தெப்பத்தை அவர்கள் சங்கடத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“அவன் பித்துப் பிடித்தவன்போல் இருக்கிறான்” என்று ஒருவன் வருந்தினான்.

“இதற்குப் போய் இவ்வளவு வருந்துகிறாரே! எண்ப வெள்ளிகள் கொடுத்தால் பாக்தாதிலே எத்தனையோ பெண்கள் வாங்கலாம்!” என்றான் ஒருவன்.

“சீ நாயே! உனக்கென்ன தெரியும்? காதலின் தன்மையும் ஆற்றலும் உனக்கு எப்படித் தெரியும்?” என்று ஜபாரக் சீறினான்.

அவன் உள்ளே சென்று நெடு நேரங்கழித்துத் திரும்பி வந்தான். அடிமைகளை அழைத்து, குன்றின் உச்சியில் தோண்டப்பட்டுள்ள புதை குழிக்குத் தொட்டிலை எடுத்துச் செல்லும்படி கூறினான்.

“தலைவர், அவளைத் தொட்டிலில் வைத்து, அவளுடைய வெகுமதிப் பொருளையும்கூடவே வைத்துவிட்டார். அவருடைய கையாலேயே எல்லாம் செய்து விட்டார்.

அவளைப் பிரிந்து விட வேண்டிய நேரம் வந்து விட்டதென்று எண்ணுகிறார். அவர் கீழே படுத்திருக்கிறார். சீக்கிரம் போய்த் தொட்டிலைத் தூக்கிக்கொண்டு வாருங்கள், சீக்கிரம்!” என்று அடிமைகளை ஏவினான் ஜபாரக்.

ஒட்டகக் காரர்கள், “நாங்கள் பிணத்தைத் தூக்கிச் செல்ல மாட்டோம், மிதப்புத் தோணியிலும் ஏற்றமாட்டார்கள்” என்று கத்தினார்கள்.

“புதை குழிக்குத்தான் தூக்கிச் செல்லவேண்டும். பயணத்திற்கல்ல, புதைகுழிதான் ஏற்கெனவே தோண்டப் பெற்றிருக்கிறதே! சீக்கிரம்!” என்றான் ஜபாரக்.

பயந்துகொண்டிருந்த அவர்களை விரட்டியடித்து, பிணத் தொட்டிலைத் தூக்கும்படி செய்தான். அவர்கள் பயத்துடனும் அவசரமாகவும், மேட்டின்மேல் அந்தக் கனமான தொட்டிலைத் தூக்கிச் சென்றார்கள். மெதுவாகக் கீழே இறங்கிப் புதைகுழிக்குள்ளே வைத்துவிட்டு, மண்ணை வாரிக் கொட்டி மூடினார்கள். அதன் மேல் ஏற்கெனவே சேர்த்து வைத்திருந்த கற்களைக் குவித்து வைத்து விட்டு வேகவேகமாகக் கூடாரத்தை நோக்கி ஓடிவந்தார்கள். ஒட்டகக் காரர்கள் தங்களுடைய மூட்டை முடிச்சுகளையும் சாமான்களையும் ஒட்டகங்களிலே ஏற்றிக்கொண்டிருந்தார்கள். சிப்பாய்கள் குதிரைகளிலே சேணம் பூட்டித் தயாராக நின்றார்கள்.

“தலைவரே! எல்லா வேலையும் முடிந்து ஆயத்தமாக நிற்கிறோம். புறப்படவேண்டியதுதான்” என்று உமாரை நோக்கி ஜபாரக் கூறினான்.

வாயில் வழியாக வெளியில் வந்த உமாரின் தலைப்பாகையின் வால் நுனி அவனுடைய வாயிதழ்களில் ஊடே பறந்து வந்து சிக்கிக் கொண்டது. வெளியில் சுழன்று கொண்டிருக்கும் தூசிக் காற்றையும் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் கலங்கிய நீரையும் சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றான். புறப்படுவதற்குத் தயாராக நின்ற அந்த மனிதர்களைப் பார்த்து,

“இந்தக் கூடாரத்தைக் கொளுத்தி விடுங்கள். உங்களிடம் உள்ள பொருள்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். எங்காவது ஓடித் தொலையுங்கள் மீண்டும் என் கன்முன்னே உங்கள் முகத்தைக் காட்டாதீர்கள். மீண்டும் நீங்கள் என்முன்னே வருவீர்களானால், உங்கள் முகங்கள் என் நினைவுகளைக் கிளறிவிடும். அதை என்னால் பொறுக்க முடியாது. போய்விடுங்கள்!” என்றான்.

“தலைவரே!” என்று ஜபாரக் மறுத்துக் கூற முன் வந்தான்.

“உன்னையும்தான். நீயும் போய்விடு. இந்த இடத்தில் பிளேக் வியாதி (கொள்ளை நோய்) இருக்கிறதென்பது உனக்குத் தெரியவில்லையா? போ! போ” என்று விரட்டினான்.

மிதப்புத் தோணி ஆற்றைக் கடந்து சென்றது. உமார் அதிலிருந்து கவனித்தான். மனிதர்களும், ஒட்டகங்களும், மிருகங்களும் கண்ணுக்கு மறைந்து விட்டார்கள். அவன் தங்கியிருந்த கூடாரம் எரியும் புகை மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது. வளையம் வளையமாக எழுந்த அந்தப் புகை, பாலைவனத்துத் தூசித் திரையை இருளச் செய்தது. கதிரவன் உச்சிக்கு ஏறியதும் அதுவும் மறைந்து விட்டது.

கதிரவன் ஒரு பெரிய விளக்குபோலத் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்தது. அதைச் சுற்றி மேகங்கள் வானத்தை அலங்கரிக்கும் கொடிகள் போல விளங்கின. ஆற்றின் இருபுறமும் தெரிந்த சாம்பல் நிறமான மணல்வெளி ஒரே வெட்டவெளியாக, ஒன்றுமில்லாத தன்மையுடன் காட்சியளித்தது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலே எதுவும் இல்லை. அவனுடன் கூட வந்த கூட்டம் வெட்ட வெளியிலே கலந்து மறைந்துவிட்டது. கூடாரத்தை எரித்துச் சாம்பலாக்கிய நெருப்பு அவன் உள்ளத்திலே, உடலிலே எரிந்து கொண்டிருந்தது.

ஆற்றின் அக்கரை சேர்ந்ததும், உமார் தண்ணிர் குடிப்பதற்காக ஆற்றிற்குள்ளே இறங்கப் போனான். கூடவே வந்த ஜபாரக் அவன் தோள்களைப் பிடித்து நிறுத்தினான். “தலைவரே! அது ஆறு! இறங்காதீர்கள்! சாவு நேரிடலாம்!” என்று தடுத்தான்.

இறங்கிய அவன் கால்களை அடித்துத் தள்ளிக் கொண்டு அந்த ஆறு பெருக்கெடுத்தோடியது. கரையோரத்துக் களிமண் சிறுசிறு துண்டுகளாக ஓடும் நீரில் விழுந்து கரைந்து மறைந்து கொண்டிருந்தது. கரைக்கு இழுத்து வரப்பட்ட உமார். தரையிலே உட்கார்ந்து கொண்டு ஓடும் வெள்ளத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்திலே ஒட்டகச் சாரியின் மணியோசை அவன் காதுகளிலே ஒலித்தது. கரையில் இருந்த தங்கும் இடத்தில் அந்தப் புதிய வியாபாரிகளின் கூட்டம் வந்து முகாமிட்டது. மிதப்புத் தோணி மீண்டும் ஆற்றைக் கடந்து செல்லத் தொடங்கியது. புதிய மனிதர்கள் தங்கள் குதிரைகளை நீர் குடிப்பதற்காக ஆற்றுக்குக் கொண்டு வந்தார்கள்.

“இல்லை, இது பிளேக் நோய் அல்ல. இவருக்குக் காய்ச்சலேயில்லை. நோய் இவர் உடம்பிலே இல்லை; மனதிலேதான் இருக்கிறது. இவ்வளவு தூரம் கவலைப் படுவாரென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏதாவது இவருக்குச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். தங்களிடம் ஏதாவது இருக்கிறதா?” என்று அருகிலிருந்த யாருடனோ பேசிக் கொண்டிருந்த ஜபாரக் கேட்டான்.

அப்பொழுது இன்னொரு மனிதன் அருகிலே வந்தான். உமாரின் கையில் ஒரு கனத்த குவளையைக் கொடுத்தான். அதிலே இரத்தம் போல் சிவந்த நிறமுடைய திராட்சை மதுவை ஊற்றினான். “ஆற்று நீர் நல்லதல்ல; இது மிக மிக நல்லது. குடியுங்கள்” என்று கூறினான். அந்தக் குரல் எங்கோ முன்பு கேட்ட குரல் போல் இருந்தது. ஆம்! அது வியாபாரி அக்ரோனோஸின் குரல்தான். அக்ரோனோஸின் கை, குவளையைப் பிடித்து உமாரின் உதட்டருகிலே நகர்த்தியது. உமார் சிறிது குடித்தான். இப்படியே குவளை காலியாகும் வரை குடித்தான். அவன் குடிக்கக் குடிக்க அக்ரோனோஸ் ஊற்றிக்கொண்டேயிருந்தான். அவன் ஊற்ற ஊற்ற உமார் குடித்துக் கொண்டே யிருந்தான்.

பிறகு இன்னும் சிறிது குடித்தான். அந்த மது கெட்டியாகவும் நல்ல மணம் பொருந்தியதாகவும் இருந்தது. உமாரின் மூளையில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைத் தணித்தது.

------------------

This file was last updated on 24 Jan. 2018.
Feel free to send the corrections to the .