கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம்
அயோத்தியா காண்டம் (முதற் பகுதி) , படலங்கள் 1-5

rAmAyaNam
of kampar /canto 2 (ayOtyA kanTam), part 1
(paTalams 1-5, verses 1399- 2015)
In tamil script, unicode/utf-8 format

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம் - அயோத்தியா காண்டம்
(முதற் பகுதி) /படலங்கள் 1-5

2.0 கடவுள் வாழ்த்து 1399
2.1 . மந்திரப் படலம் (1400 – 1495)
2.2 . மந்தரை சூழ்ச்சிப் படலம் (1496 -1579 )
2.3 . கைகேயி சூழ்வினைப் படலம் (1580- 1694 )
2.4 . நகர் நீங்கு படலம் (1695- 1929 )
2.5 . தைலமாட்டு படலம் (1930- 2015)


2.0 கடவுள் வாழ்த்து 1399

1399 வான் நின்று இழிந்து வரம்பு இகந்த மா பூதம் அத்து இன் வைப்பு எங்கும்,
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறனும் உளன் என்ப ;
கூனும் சிறிய கோ தாய் உம் கொடுமை இழைப்பக் கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தை.
2.0.1

2.1 . மந்திரப் படலம் (1400 – 1495)


1400 தயரதன் மந்திராலோசனை மண்டபத்தை அடைதல்
மண் உறும் முரசு இனம் மழையின் ஆர்ப்பு உற
பண் உறு படர் சினப் பரும யானையான் ,
கண் உறு கவரியின் கற்றை சுற்று உற ,
எண் உறு சூழ்ச்சியின் இருக்கை எய்தினான் .
2.1.1
1401 தயரதன் தனித்திருத்தல்
புக்க பின் 'நிருபரும் பொரு இல் சுற்றமும்
பக்கமும் பெயர்க ' எனப் பரிவின் நீக்கினான் ;
ஒக்க நின்று , உலகு அளித்து , யோகின் எய்திய
சக்கரத்தவன் எனத் தமியன் ஆயினான் .
2.1.2
1402 வசிட்டன் முதலிய அமைச்சர்களை வரவழைத்தல்
சந்திரற்கு உவமைசெய் தரள வெண் குடை
அந்தரம் அத்து அளவும் நின்று அளிக்கும் ஆணையான் ,
இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த தன்
மந்திரக் கிழவரை 'வருக ' ! என்று ஏவினான் .
2.1.3
1403 வசிட்டன் வருகை
பூ வரு பொலன் கழல் பொரு இல் மன்னவன்
காவலின் ஆணை செய் கடவுள் ஆம் எனத்
தேவரும் முனிவரும் உணரும் தேவர்கள்
மூவரின் நால்வர் ஆம் முனி வந்து எய்தினான் .
2.1.4
1404 அமைச்சர்களின் பெருமை (1404-1408)
குலம் முதல் தொன்மையும் , கலையின் குப்பையும் ,
பல முதல் கேள்வியும் , பயனும் , எய்தினார் ,
நலம் முதல் நலியினும் நடுவு நோக்குவார் ,
சலம் முதல் அறுத்து , அரும் தருமம் தாங்கினார் .
2.1.5
1405 உற்றது கொண்டு மேல் வந்து உறு பொருள் உணரும் கோள் ஆர் ;
மற்று அது வினையின் வந்தது ஆயினும் , மாற்றல் ஆற்றும்
பெற்றியர் ; பிறப்பின் மேன்மைப் பெரியவர் ; அரிய நூலும்
கற்றவர் ; மானம் நோக்கின் கவரிமா அனைய நீரார் .
2.1.6
1406 காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரிந்து கற்ற
நூலுற நோக்கித் தெய்வம் நுனித்து , அறம் குறித்து , மேலோர்
சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் தெரிந்துகொண்டு ,
பால் வரும் உறுதி யாவும் தலைவன் கு பயக்கும் நீரார் .
2.1.7
1407 தம் உயிர்க்கு உறுதி எண்ணார் , தலைமகன் வெகுண்ட போதும்
வெம்மையைத் தாங்கி நீதி விடாது நின்று உரைக்கும் வீரர் ;
செம்மை இல் திறம்பல் செல்லாத் தேற்றத்தார் , தெரியும் காலம்
மும்மையும் உணர வல்லார் , ஒருமையே மொழியும் நீரார் .
2.1.8
1408 நல்லவும் தீயவும் நாடி , நாயகற்கு
எல்லையில் மருத்துவன் இயல்பின் எண்ணுவார் ;
ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியில்
தொல்லை நல்வினை என உதவும் சூழ்ச்சியார் .
2.1.9
1409 அமைச்சர்களின் வருகை (1409-1410)
அறுபதின் ஆயிரர் எனினும் , ஆண் தகைக்கு
உறுதியில் , ஒன்று இவர்க்கு உணர்வு என்று உன்னலாம்
பெறல் அரும் சூழ்ச்சியர் ; திருவின் பெட்பினர் ;
மறி திரைக் கடல் என வந்து சுற்றினார் .
2.1.10
1410 முறைமையின் எய்தினர் , முந்தி அந்தம் இல்
அறிவனை வணங்கித் தம் அரசைக் கை தொழுது ,
இறையிடை வரன்முறை ஏறி , ஏற்ற சொல்
துறை அறி பெருமையான் அருளும் சூடினார் .
2.1.11
1411 தயரதன் தன் கருத்தைக் கூறுதல் (1411-1429)
அன்னவன் அருள் அமைந்து இருந்த ஆண்டையின் ,
மன்னவன் அவர் முகம் மரபின் நோக்கினான் ;
'உன்னியது அரும் பெறல் உறுதி ஒன்று உளது ;
என் உணர்வு அனைய நீர் இனிது கேட்க ' எனா .
2.1.12
1412 'வெய்யவன் குலம் முதல் வேந்தர் மேலவர்
செய்கையின் ஒரு முறை திறம்பல் இன்றியே
வையம் என் புயத்திடை , நுங்கள் மாட்சியால் ,
ஐயிரண்டு ஆயிரம் அத்து ஆறு தாங்கினேன் . '
2.1.13
1413 'கன்னியர்க்கு அமைவரும் கற்பின் , மாநிலம்
தன்னை இ தகை தர தருமம் கைதர ,
மன் உயிர்க்கு உறுவதே செய்து வைகினேன் ,
என் உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன் .'
2.1.14
1414 'விரும்பிய மூப்பு எனும் வீடு கண்ட யான் ,
இரும் பியல் அனந்தனும் , இசைந்த யானையும் ,
பெரும் பெயர்க் கிரிகளும் , பெயரத் தாங்கிய
அரும் பொறை இனிச் சிறிது ஆற்ற ஆற்றல் ஏன் .'
2.1.15
1415 'நம் குலக் குரவர்கள் நவையின் நீங்கினார் ,
தம் குலப் புதல்வரே தரணி தாங்கப் போய் ,
வெம் குலப் புலன் கெட வீடு நண்ணினார் ,
எங்கு உலப்பு உறுவர் ? என்று எண்ணி நோக்குகேன் .'
2.1.16
1416 'வெள்ள நீர் உலகினில் , விண்ணில் , நாகரில் ,
தள் அரும் பகை எலாம் தவிர்த்து நின்ற யான் ,
கள்ளரில் கரந்து உறை காமம் ஆதியாம்
உள் உறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வென் ஓ ?'
2.1.17
1417 'பஞ்சி மென் தளிர் அடிப் பாவை கோல் கொள ,
வெம் சினத்து அவுணர் தேர் பத்தும் வென்று உளேற்கு ,
எஞ்சல் இல் மனம் எனும் இழுதை ஏறிய
அஞ்சு தேர் வெல்லும் ஈது அருமை ஆவது ஏ ?'
2.1.18
1418 'ஒட்டிய பகைஞர் வந்து உருத்த போர் இடை
பட்டவர் அல்லரேல் , பரம ஞானம் போய்த்
தெட்டவர் அல்லரேல் , செல்வம் ஈண்டென
விட்டவர் அல்லரேல் , யாவர் வீடு உளார் ?'
2.1.19
1419 'இறப்பு எனும் மெய்மையை இம்மை யாவர்க்கும்
மறப்பு எனும் அதனின் மேல் கேடு மற்று உண்டு ஓ ?
துறப்பு எனும் தெப்பமே துணை செயாவிடின்
பிறப்பு எனும் பெரும் கடல் பிழைக்கல் ஆகுமோ ?'
2.1.20
1420 'அரும் சிறப்பு அமைவரும் துறவும் , அவ் வழித்
தெரிஞ்சு உறவு என மிகும் தெளிவும் , ஆய் வரும்
பெரும் சிறகு உள எனில் , பிறவி என்னும் இவ்
இரும் சிறை கடத்தலின் இனியது யாவது ஏ ? '
2.1.22
1421 'இனியது போலும் இவ் அரசை எண்ணும் ஓ
துனி வரும் நலன் எனத் தொடர்ந்து ? தோற்கலா
நனி வரு பெரும் பகை நவையின் நீங்கி , அத்
தனி அரசாட்சியில் தாழும் உள்ளம் ஏ ? '
2.1.22
1422 'உம்மை யான் உடைமையின் உலகம் யாவையும்
செம்மையின் ஓம்பி நல் அறமும் செய்தனென் ;
இம்மையின் உதவி நல் இசை நடாய நீர் ,
அம்மையும் உதவுதற்கு அமைய வேண்டுமால் . '
2.1.23
1423 'இழைத்த தீ வினையை உம் கடக்க எண்ணுதல் ,
தழைத்த பேர் அருள் உடை தவத்தின் ஆகுமேல் ,
குழைத்தது ஓர் அமுது உடைக் கோரம் நீக்கி , வேறு
அழைத்த தீ விடத்தினை அருந்தல் ஆகும் ஓ ? '
2.1.24
1424 'கச்சை அம் கட கரிக் கழுத்தின்கண் உறப்
பிச்சமும் கவிகையும் பெய்யும் இன் நிழல்
நிச்சயம் அன்று எனின் , நெடிது நாள் உண்ட
எச்சிலை நுகருவது இன்பம் ஆகும் ஓ ? '
2.1.25
1425 'மைந்தரை இன்மையின் வரம்பு இல் காலமும்
நொந்தனென் , இராமன் என் நோவை நீக்குவான்
வந்தனன் ; இனி அவன் வருந்த , யான் பிழைத்து
உய்ந்தனென் போவது ஓர் உறுதி எண்ணினேன் .
2.1.26
1426 'இறந்திலன் செருக் களத்து இராமன் தாதை தான்
அறம் தலை நிரம்ப மூப்பு அடைந்த பின்னரும்
துறந்திலன் என்பது ஓர் சொல் உண்டான பின்
பிறந்திலன் என்பதில் பிறிது உண்டாகும் ஓ ? '
2.1.27
1427 'பெரும் மகன் என்வயின் பிறக்கச் சீதையாம்
திரு மகள் மணவினை தெரியக் கண்ட யான் ,
அரும் மகன் , நிறை குணத்து அவனிமாது எனும்
ஒரு மகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன் . '
2.1.28
1428 'நிவப்பு உறு நிலன் எனும் நிரம்பும் நங்கையும் ,
சிவப்பு உறு மலர் மிசை சிறந்த செல்வியும் ,
உவப்பு உறு கணவனை உயிரின் எய்திய
தவப் பயன் தாழ்ப்பது தருமம் அன்று அரோ . '
2.1.29
1429 'ஆதலால் இராமனுக்கு அரசை நல்கி , இப்
பேதைமைத்து ஆய் வரும் பிறப்பை நீக்குவான் ,
மா தவம் தொடங்கிய வனத்தை நண்ணுவேன் ;
யாது நும் கருத்து ? ' என இனைய கூறினான் .
2.1.30
1430 மன்னன் மாற்றம் கேட்ட அமைச்சர் நிலை
திரண்ட தோளினன் இப்படிச் செப்பலும் , சிந்தை
புரண்டு மீது இடப் பொங்கிய உவகையர் , ஆங்கே
வெருண்டு , மன்னவன் பிரிவு எனும் விம்முறும் நிலையால் ,
இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓர் ஆ என இருந்தார் .
2.1.31
1431 மன்னன் கருத்திற்கு அமைச்சர் இசைதல்
அன்னர் ஆயினும் , அரசனுக்கு அது அலது உறுதி
பின்னர் இல் எனக் கருதியும் , பெரும் நில வரைப்பில்
மன்னும் மன் உயிர்க்கு இராமனின் மன்னவர் இல்லை
என்ன உன்னியும் , விதியது வலியினும் , இசைந்தார் .
2.1.32
1432 வசிட்டன் மொழியத் தொடங்கல்
இருந்த மந்திரக் கிழவர் அது எண்ணமும் , தன்பால்
பரிந்த சிந்தை அம் மன்னவன் கருதிய பயனும் ,
பொருந்தும் மன் உயிர் கு உறுதியும் , பொது உற நோக்கித்
தெரிந்து , நால் மறை திசைமுகன் திரு மகன் செப்பும் .
2.1.33
1433 வசிட்டன் வாய்மொழி (1433-1439)
'நிருப ! நின் குல மன்னவர் நேமி பண்டு உருட்டிப்
பெருமை எய்தினர் யாவர் ஏ இராமனைப் பெற்றார் ?
கருமமே இது ; கற்று உணர்ந்தோய் கு இனிக் கடவ
தருமமும் இது ; தக்கதே நினைத்தனை , தகவோய் ! '
2.1.34
1434 'புண்ணியம் தொடர் வேள்விகள் யாவையும் புரிந்த
அண்ணல் ஏ ! இனி அருந்தவம் இயற்றவும் அடுக்கும் '
வண்ண மேகலை நிலம் மகள் மற்று உனைப் பிரிந்து
கண் இழந்திலள் எனச் செயும் , நீ தந்த கழலோன் . '
2.1.35
1435 'புறத்து நாம் ஒரு பொருள் இனிப் புகல்கின்றது எவன் ஓ ?
அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால் ,
பிறத்து யாவையும் காத்து அவை பின் உறத் துடைக்கும்
திறத்து மூவரும் திருத்திய திருத்தும் அத் திறலோன் . '
2.1.36
1436 'பொன் உயிர்த்த பூ மடந்தையும் , புவி எனும் திருவும் ,
இன் உயிர்த் துணை இவன் என நினைக்கின்ற இராமன் ,
என் உயிர்க்கு என்கை புல்லிது ; இங்கு இவற் பயந்து எடுத்த
உன் உயிர்க்கு என நல்லன் , மன் உயிர்க்கு எலாம் ; உரவோய் ! '
2.1.37
1437 `'வாரம் என் இனிப் பகர்வது ? வைகலும் அனையான்
பேரினால் வரும் இடையுறு பெயர்கின்ற பயத்தால் ,
வீர ! நின் குல மைந்தனை வேதியர் முதலோர்
யாரும் , 'யாம் செய்த நல் அறப் பயன் ' என இருப்பார் . ''
2.1.38
1438 `'மண்ணினும் நல்லள் ; மலர் மகள் , கலைமகள் , கலையூர்
பெண்ணினும் நல்லள் ; பெரும் புகழ்ச் சனகி ; பேர் உலகின்
கண்ணினும் நல்லன் ; கற்றவர் கற்றிலாதவரும்
உண்ணும் நீரினும் , உயிரினும் , அவனையே உவப்பார் . ''
2.1.39
1439 `'மனிதர் வானவர் மற்று உளோர் அற்றம் காத்து அளிப்பார் ,
இனி இம் மன் உயிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை ;
அனையது ஆதலின் , அரச ! நிற்கு உறு பொருள் அறியில் ,
புனித மாதவம் அல்லது ஒன்று இல் '' எனப் புகன்றான் .
2.1.40
1440 வசிட்டன் வாய்மொழியால் தயரதன் மகிழ்தல்
மற்று அவன் சொன்ன வாசகம் கேட்டலும் , மகனைப்
பெற்ற அன்றினும் , பிஞ்ஞகன் பிடித்த அப் பெரும் வில்
இற்ற அன்றினும் , எறி மழு வாளவன் இழுக்கம்
உற்ற அன்றினும் பெரியது ஓர் உவகையன் ஆனான் .
2.1.41
1441 மன்னன் வசிட்டனைப் பாராட்டுதல் (1441-1442)
அனையது ஆகிய உவகையன் , கண்கள் நீர் அரும்ப ,
முனிவன் மா மலர் பாதங்கள் முறைமையின் இறைஞ்சி ,
'இனிய சொல்லினை ; எம்பெருமான் அருள் விழியின்
தனியன் நால் நிலம் தாங்கியது ; அவற்கு இது தகாது ஓ ? '
2.1.42
1442 'எந்தை நீ உவந்து இதம் சொல , எம் குலத்து அரசர் ,
அந்தம் இல் அரும் பெரும் புகழ் அவனியில் நிறுவி ,
முந்து வேள்வியும் முடித்துத் தம் இரு வினை முடித்தார் ;
வந்தது அவ் அருள் எனக்கும் ' என்று உரைசெய்து மகிழ்ந்தான் .
2.1.43
1443 சுமந்திரன் சொல்லத் தொடங்குதல்
பழுது இல் மாதவன் பின் ஒன்றும் பணித்து இலன் இருந்தான் ;
முழுதும் எண் உறும் மந்திரம் கிழவர் , தம் முகத்தால்
எழுதி நீட்டிய இங்கிதம் , இறை மகன் கு ஏறத்
தொழுத கையினன் , சுமந்திரன் , முன் நின்று சொல்லும் .
2.1.44
1444 சுமந்திரன் கூற்று (1444-1445)
`'உறத் தகும் அரசு இராமற்கு என்று உவக்கின்ற மனம் அத்து ஐ
துறத்தி நீ எனும் சொல் சுடும் ; நின்குலத் தொல்லோர்
மறத்தல் செய்கிலாத் தருமத்தை மறப்பதும் வழக்கு அன்று ;
அறத்தின் ஊங்கு இனிக் கொடிது எனல் ஆவது ஒன்று யாதே ? ''
2.1.45
1445 `'புரைசை மா கரி நிருபர்க்கும் , புரத்து உறைவோர்க்கும் ,
உரைசெய் மந்திரக் கிழவர்க்கும் , முனிவர்க்கும் , உள்ளம்
முரைசம் ஆர்ப்ப , நின் முதல் மணிப் புதல்வனை முறையால்
அரைசன் ஆக்கிப் பின் அ புறம் அத்து அடுத்தது புரிவாய் . ''
2.1.46
1446 தயரதன் இராமனைக் கொண்டுவரச் சுமந்திரனை அனுப்புதல்

என்ற வாசகம் சுமந்திரன் இயம்பலும் , இறைவன் ,
'நன்று சொல்லினை ; நம்பியை நளி முடி சூட்டி
நின்று , நின்றது செய்வது ; விரைவினில் நீயே
சென்று , கொண்டு அணை திரு மகள் கொழுநனை ' என்றான் .
2.1.47
1447 சுமந்திரன் இராமனை அடைதல்
அலங்கல் மன்னனை அடி தொழுது , அவன் மனம் அனையான்
விலங்கல் மாளிகை வீதியில் விரைவு ஒடு சென்றான் ,
தலங்கள் யாவையும் பெற்றனன் தான் எனத் தளிர்ப்பான் ,
பொலன் கொள் தேரொடும் இராகவன் திரு மனை புக்கான் .
2.1.48
1448 சுமந்திரன் இராமனைக் காண்டல்
பெண்ணின் இன் அமுது அன்னவள் தன்னொடும் , பிரியா
வண்ண வெம் சிலைக் குரிசிலும் மருங்கு இனிது இருப்ப ,
அண்ணல் ஆண்டு இருந்தான் அழகு அரு நறவு என்னக்
கண்ணும் உள்ளமும் வண்டு எனக் களிப்பு உறக் கண்டான் .
2.1.49
1449 இராமன் தேர்மேற்கொள்ளல்
கண்டு கை தொழுது `'ஐய ! இக்
      கடல் இடைக் கிழவோன்
'உண்டு ஒர் காரியம் , வருக ' என
      உரைத்தனன் '' எனலும்
புண்டரீகக் கண் புரவலன்
      பொருக்கென எழுந்து , ஓர்
கொண்டல் போல் அவன் கொடி நெடும்
      தேர் மிசை கொண்டான்
2.1.50
1450 இராமன் தேரில் செல்லல்
முறையின் மொய்ம் முகில் என முரசு ஆர்த்திட , மடவார்
இறை கழன்ற சங்கு ஆர்த்திட , இமையவர் 'எங்கள்
குறை முடிந்தது ' என்று ஆர்த்திடக் , குஞ்சியைச் சூழ்ந்த
நறை அலங்கல் வண்டு ஆர்த்திடத் தேர்மிசை நடந்தான் .
2.1.51
1451 இராமனைக் கண்ட பெண்டிர் செயல்
பணை நிரந்தன , பாட்டு ஒலி நிரந்தன ; அனங்கன்
கணை நிரந்தன ; நாண் ஒலி கறங்கின ; நிறைப் பேர்
அணை நிரந்தன அறிவு எனும் பெரும் புனல் ; அனையார்
பிணை நிரந்து எனப் பரந்தனர் , நாணமும் பிரிந்தார் .
2.1.52
1452 நீள் எழுத் தொடர் வாயினும் குழையொடும் நெகிழ்ந்த ;
ஆளகம் அத்து இன் ஓடு அரமியத் தலத்தினும் அலர்ந்த ;
வாள் அரத்தம் வேல் வண்டொடு கெண்டைகள் மயங்கச்
சாளரம் அத்து இன் உம் பூத்தன ; தாமரை மலர்கள் .
2.1.53
1453 மண் தலம்தரு மதி கெழு மழை முகில் அனைய
அண்டர் நாயகன் , வரை புரை அகலத்துள் அலங்கல் ,
தொண்டை வாய்ச்சியர் நிறையொடும் நாணொடும் தொடர்ந்த
கெண்டையும் உள கிளை பயில் வண்டொடும் கிடந்த .
2.1.54
1454 சரிந்த பூ உள , மழையொடு கலை உறத் தாழ்வ ;
பரிந்த பூ உள , பனி கடை முத்து இனம் படைப்ப ;
எரிந்த பூ உள , இள முலை இழை இடை நுழைய ,
விரிந்த பூ உள , மீன் உடை வான் நின்றும் வீழ்வ .
2.1.55
1455 வள் உறை கழித்து ஒளிர்வன வாள் நிமிர் மதியம்
தள்ளுறச் சுமந்து எழுதரும் தமனியக் கொம்பில் ,
புள்ளி நுண் பனி பொடிப்பன , பொன் இடைப் பொதிந்த ,
எள் உடைப் பொரி விரவின , உள சில இளம் நீர் .
2.1.56
1456 இராமன் தயரதன்பக்கல் சார்தல்
ஆயது அவ் வழி நிகழ்தர , ஆடவர் எல்லாம்
தாயை முன்னிய கன்று என நின்று உயிர் தளிர்ப்பத்
தூய தம்பியும் , தானும் , அச் சுமந்திரன் தேர் மேல்
போய் , அகம் குளிர் புரவலன் இருந்துழிப் புக்கான் .
2.1.57
1457 இராமனைத் தயரதன் தழுவுதல் (1457-1458)
மா தவன் தனை வரன்முறை வணங்கி , வாள் உழவன்
பாத பங்கயம் பணிந்தனன் ; பணிதலும் , அனையான் ,
காதல் பொங்கிடக் கண் பனி உகுத்திடக் கனி வாய்ச்
சீதை கொண்கனைத் திரு உறை மார்பகம் சேர்த்தான் .
2.1.58
1458 நலம் கொள் மைந்தனைத் தழுவினன்
      என்பது என் ? நளி நீர்
நிலங்கள் தாங்குறும் நிலையினை
      நிலையிட நினைந்தான் ,
விலங்கல் அன்ன திண் தோளையும் ,
      மெய்த் திரு இருக்கும்
அலங்கல் மார்பையும் , தனது தோள்
      மார்பு கொண்டு அளந்தான் .
2.1.59
1459 தயரதன் இராமனை வேண்டுதல் (1459-1467)
ஆண்டு தன் மருங்கு இரீஇ , உவந்து , அன்பு உற நோக்கிப்
பூண்ட போர் மழு உடையவன் நெடும் புகழ் குறுக
நீண்ட தோள் ஐய ! நின் பயந்து எடுத்த யான் நின்னை
வேண்டி எய்திட விரைவது ஒன்று உளது ' என விளம்பும் .
2.1.60
1460 'ஐய ! சாலவும் அலசினென் ; அரும் பெரும் மூப்பும்
மெய்யது ஆயது ; பியல் இடம் பெரும் பரம் விசித்த
தொய்யல் மாநிலச் சுமை உறு சிறை துறந்து , இனி , யான்
உய்யல் ஆவது ஓர் நெறி புக உதவிட வேண்டும் . '
2.1.61
1461 உரிமை மைந்தரைப் பெறுகின்றது உறு துயர் நீங்கி
இருமையும் பெறற்கு என்பது , பெரியவர் இயற்கை ;
தருமம் அன்ன நின் தந்த யான் , தளர்வது தகவு ஓ ?
கருமம் என் வயின் செய்யில் , என் கட்டுரை கோடி . '
2.1.62
1462 'மைந்த ! நம் குல மரபினில் மணி முடி வேந்தர் ,
தம் தம் மக்களே கடைமுறை நெடு நிலம் தாங்க ,
ஐந்தொடு ஆகிய முப்பகை மருங்கு அற அகற்றி ,
உய்ந்து போயினர் ; ஊழி நின்று எண்ணினும் உலவார் . '
2.1.63
1463 'முன்னை ஊழ்வினைப் பயத்தினும் , முற்றிய வேள்விப்
பின்னை எய்திய நலத்தினும் , அரிதின் நிற் பெற்றேன் ;
இன்னம் யான் இந்த அரசியல் இடும்பையன் என்றால் ,
நின்னை ஈன்று உள பயத்தினில் நிரம்புவது யாதோ ? '
2.1.64
1464 'ஒருத்தலைப் பரத்து ஒருத்தலைப் பங்குவின் ஊர்தி
எருத்தின் , ஈங்கு நின்று இயல்வரக் குழைந்து இடர் உழக்கும்
வருத்தம் நீங்கி , அவ் வரம்பு அறு திருவினை மருவும்
அருத்தி உண்டு , எனக்கு ; ஐய ! ஈது அருளிடவேண்டும் . '
2.1.65
1465 'ஆளும் நல் நெறிக்கு அமைவரும் அமைதி இன்று ஆக ,
நாளும் நம் குல நாயகன் நறை விரி கமலத்
தாளின் நல்கிய கங்கையைத் தந்து , தந்தையரை
மீள்வு இல் இன் உலகு ஏற்றினான் , ஒரு மகன் மேல் நாள் . '
2.1.66
1466 'மன்னர் ஆனவர் அல்லர் , மேல் வானவர்க்கு அரசு ஆம்
பொன்னின் வார் கழல் புரந்தரன் போலியர் அல்லர் ,
பின்னும் மா தவம் தொடங்கி நோன்பு இழைத்தவர் அல்லர் ,
சொல் மறா மகப் பெற்றவர் அரும் துயர் துறந்தார் . '
2.1.67
1467 அனையது ஆதலின் , அரும் துயர்ப் பெரும் பரம் அரசன்
வினையின் என்வயின் வைத்தனன் எனக் கொளவேண்டா ;
புனையும் மா முடி புனைந்து இந்த நல் அறம் புரக்க
நினையல்வேண்டும் ; யான் நின் வயின் பெறுவது ஈது ' என்றான் .
2.1.68
1468 தந்தை பணியை மைந்தன் உடன்படல்
தாதை அப் பரிசு உரைசெயத் தாமரைக் கண்ணன்
காதல் உற்றிலன் ; இகழ்ந்திலன் ; கடன் இது என்று உணர்ந்தும் ,
'யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்று ஓ
நீதி எற்கு ? ' என நினைந்தும் , அப் பணி தலை நின்றான் .
2.1.69
1469 தயரதன் தன் கோயில் செல்லுதல்
குருசில் சிந்தையை மனம் கொண்ட கொற்ற வெண் குடையான் ,
'தருதி இவ் வரம் ' எனச் சொலி , உயிர் உறத் தழுவிச்
சுருதி அன்ன தன் மந்திரச் சுற்றமும் சுற்றப்
பொருவில் மேருவும் பொரு அரும் கோயில் போய்ப் புக்கான் .
2.1.70
1470 இராமன் தன் கோயிலுக்குச் செல்லுதல்
நிவந்த அந்தணர் , நெடுந்தகை மன்னவர் , நகரத்து
உவந்த மைந்தர்கள் , மடந்தையர் , உழையர் பின் தொடரச்
சுமந்திரன் தடம் தேர் மிசை சுந்தரத் திரள் தோள்
அமைந்த மைந்தனும் , தன் நெடும் கோயில் சென்று அடைந்தான் .
2.1.71
1471 தயரதன் வேந்தர்க்கு ஓலை போக்கியபின் வசிட்டனை
முடிபுனைதற்கு வேண்டுவ அமைக்க எனல்
வென்றி வேந்தரை 'வருக ' என்று , உவணம் வீற்றிருந்த
பொன் திணிந்த தோட்டு அரும் பெறல் இலச்சினை போக்கி ,
'நன்று சித்திர நளி முடி கவித்தற்கு , நல்லோய் !
சென்று வேண்டுவ வரன் முறை அமைக்க ' எனச் செப்ப .
2.1.72
1472 இராமனுக்கு முடிபுனைதலை மன்னவர்க்குத் தயரதன் கூறல்
உரிய மா தவன் , 'ஒள்ளிது ' என்று உவந்தனன் , விரைந்து , ஓர்
பொருவு இல் தேர்மிசை அந்தணர் குழாத்தொடும் போக ,
'நிருபர் ! கேண்மின்கள் ; இராமற்கு நெறி முறைமையின் ஆல்
திருவும் , பூமியும் , சீதையில் சிறந்தன ' என்றான் .
2.1.73
1473 தயரதன் மொழிகேட்டு நிருபர்கள் மகிழ்தல்
இறைவன் சொல் எனும் இன் நறவு அருந்தினர் யாரும்
முறையின் நின்றிலர் , முந்து உறு களி இடை மூழ்கி ,
நிறையும் நெஞ்சு இடை உவகை போய் மயிர் வழி நிமிர ,
உறையும் விண் அகம் உடலொடும் எய்தினர் ஒத்தார் .
2.1.74
1474 மன்னவர் மகிழ்ச்சியால் தயரதனுக்குக் கூறுதல் (1474-1475)
ஒத்த சிந்தையர் , உவகையர் , ஒருவரின் ஒருவர் ,
தம் தமக்கு உற்ற அரசு எனத் தழைக்கின்ற மனத்தார் ,
முத்த வெண் குடை மன்னனை முறை முறை தொழுதார் ,
'அத்த ! நன்று ' என அன்பினோடு அறிவிப்பது ஆனார் .
2.1.75
1475 `'மூவெழு முறைமை எம் குலங்கள் முற்று உற
பூ எழு மழுவினால் பொருது போக்கிய
சேவகன் சேவகம் செகுத்த சேவகற்கு
ஆவது இவ் உலகம் ; ஈது அறன் ; `' என்றார் , அரோ .
2.1.76
1476 தயரதன் மீண்டும் கூறத் தொடங்குதல்
வேறு இலா மன்னரும் விரும்பி இன்னது
கூறினார் ; அது மனம் கொண்ட கொற்றவன் ,
ஊறின உவகையை ஒளிக்கும் சிந்தையான் ,
மாறும் ஓர் அளவைசால் வாய்மை கூறினான் .
2.1.77
1477 மன்னர் கருத்துணரத் தயரதன் வினாதல்
'மகன் வயின் அன்பினால் மயங்கி யான் இது
புகல , நீர் புகன்ற இப் பொம்மல் வாசகம் ,
உகவையின் மொழிந்தது ஓ ? உள்ளம் நோக்கி ஓ ?
தகவு என நினைந்தது ஓ ? தன்மை என் ? ' என்றான் .
2.1.78
1478 இராமனிடம் மக்கள் செய்யும் அன்பினை மன்னர் கூறல் (1478-1481)
இ வ்வகை உறைசெய , இருந்த வேந்தர்கள் ,
'செவ்விய நின் திரு மகற்குத் தேயத்தோர்
அவ் அவர்க்கு அவ் அவர் ஆற்ற ஆற்றுறும்
எவ்வம் இல் அன்பினை இனிது கேள் ' எனா .
2.1.79
1479 'தானமும் , தருமமும் , தவமும் , தன்மை சேர்
ஞானமும் , நல்லவர்ப் பேணும் நன்மையும் ,
மானவ ! வையம் நின் மகற்கு வைகலும்
ஈனம் இல் செல்வம் வந்து இயைக என்ன ஏ . '
2.1.80
1480 'ஊருணி நிறையவும் , உதவும் மாடு உயர்
பார் நுகர் பழுமரம் பழுத்தது ஆகவும் ,
கார் மழை பொழியவும் , கழனி பாய் நதி
வார் புனல் பெருகவும் , மறுக்கின்றார்கள் யார் ? '
2.1.81
1481 'பனை அவாம் நெடும் கரப் பரும யானையாய் !
நினை அவாம் தன்மையை நினைந்த மன் உயிர்க்கு
எனையவாறு அன்பினன் இராமன் , ஈண்டு அவற்கு ,
அனையவாறு அன்பின அவையும் ' என்றனர் .
2.1.82
1482 மன்னர்சொல் கேட்டுத் தயரதன் மகிழ்தல்
மொழிந்தது கேட்டலும் மொய்த்து நெஞ்சினைப்
பொழிந்த பேர் உவகையான் , பொங்கு காதலான் ,
கழிந்தது ஓர் இடரினான் , களிக்கும் சிந்தையான் ,
வழிந்த கண் நீரினான் , மன்னன் கூறுவான் .
2.1.83
1483 தயரதன் இராமனை மன்னவர் கையடையாக்கல்
`'செம்மையில் , தருமத்தில் , செயலில் , தீங்கின்பால்
வெம்மையில் ஒழுக்கத்தில் மெய்ம்மை மேவினீர் !
என் மகன் என்பது என் ? நெறியின் ஈங்கு இவன்
நும் மகன் ; கையடை நோக்கும் ஊங்கு '' என்றான் .
2.1.84
1484 தயரதன் இராமனுக்கு முடிபுனைநாள் பார்க்கப் போதல்
அரசரை விடுத்தபின் , ஆணை மன்னவன் ,
புரை தபு நாளொடு பொழுதும் நோக்குவான் ,
உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு , ஒரு
வரை பொரு மண்டப மருங்கு போயினான் .
2.1.85
1485 கோசலையின் பணிப்பெண்கள் சிலர் மகிழ்தல்
ஆண்டு அவன் நிலை ஆக , அறிந்தவர் ,
பூண்ட காதலர் , பூட்டு அவிழ் கொங்கையர் ,
நீண்ட கூந்தலர் , நீள் கலை தாங்கலர் ,
ஈண்ட ஓடினர் , இட்டு இடை இற்றிலர் .
2.1.86
1486 அம்மங்கையர் கோசலையை அடைதல்
ஆடுகின்றனர் , பண் அடைவு இன்றியே
பாடுகின்றனர் , பார்த்தவர்க்கே கரம்
சூடுகின்றனர் , சொல்லுவது ஓர்கிலார் ,
மாடு சென்றனர் , மங்கையர் நால்வரே .
2.1.87
1487 கோசலை வினாதல்
கண்ட மாதரைக் காதலின் நோக்கினாள் ,
கொண்டல் வண்ணனை நல்கிய கோசலை ,
'உண்டு பேர் உவகைப் பொருள் : அன்னது ,
தொண்டை வாயினிர் ! சொல்லுமின் ஈண்டு ' என்றாள் .
2.1.88
1488 இராமன் முடிசூடுதலைத் தெரிவித்தல்
” ‘மன் நெடும் கழல் வந்து வணங்கிடப்
பல் நெடும் பகல் பார் அளிப்பாய்’ என
நின் நெடும் புதல்வன் தனை நேமியான் ,
தொல் நெடு முடி சூட்டுகின்றான் '' என்றார் .
2.1.89
1489 கோசலை மகிழ்வும் நடுக்கமும் அடைதல்
'சிறக்கும் செல்வம் மகற்கு ' எனச் சிந்தையில்
பிறக்கும் பேர் உவகை கடல் பெட்பு அற
வறக்கும் மா வடவைக் கனல் ஆனது ஆல் ,
துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கம் ஏ .
2.1.90
1490 கோசலை திருமால் கோயிலுக்குச் செல்லுதல்
அன்னள் ஆயும் , அரும் பெறல் ஆரமும் ,
நல் நிதிக் குவையும் நனி நல்கித் தன்
துன்னு காதல் சுமித்திரையோடும் போய் ,
மின்னும் நேமியன் மேவு இடம் மேவினாள் .
2.1.91
1491 கோசலை திருமாலை வணங்கல்
மேவி , மெல் மலராள் நிலம் மாது எனும்
தேவிமாரொடும் , தேவர்கள் யாவர்க்கும்
ஆவியும் அறிவும் முதல் ஆயவன்
வாவி மா மலர்ப் பாதம் வணங்கினாள் .
2.1.92
1492 கோசலை , இறைவனை வேண்டல்
'என் வயிற்று அரு மைந்தற்கு இனி அருள்
உன் வயிற்றது ' என்றாள் , உலகு யாவையும்
மன் வயிற்றின் அடக்கிய மாயனைத்
தன் வயிற்றின் அடக்கும் தவத்தினாள் .
2.1.93
1493 கோசலைகோதானம் புரிதல்
என்று இறைஞ்சி , அவ் இந்திரை கேள்வனுக்கு
ஒன்றும் நால் மறை ஓதிய பூசனை
நன்று இழைத்து , அவண் நல்ல தவர்க்கு எலாம்
கன்று உடைப் பசுவின் கடல் நல்கினாள் .
2.1.94
1494 கோசலை சொன்னதானம் முதலியன செய்தல்
பொன்னும் , மா மணியும் , புனை சாந்தமும் ,
கன்னிமார் ஒடு காசினி ஈட்டமும் ,
இன்ன யாவையும் ஈந்தனள் , அந்தணர்க்கு ,
அன்ன தானமும் , ஆடையும் நல்கினாள் .
2.1.95
1495 கோசலை நோன்பிருத்தல்
நல்கி , நாயகன் நாள் மலர்ப் பாதத்தைப்
புல்லிப் போற்றி வணங்கிப் புரை இலா
மல்லல் மாளிகைக் கோயில் வலம் கொளாத்
தொல்லை நோன்புகள் யாவும் தொடங்கினாள் .
2.1.962.2 . மந்தரை சூழ்ச்சிப் படலம் (1496 -1579 )

1496 தயரதன் சோதிடரை நாள் கேட்டல்
கடி கமழ் தாரினான் கணித மாக்களை
முடிவுற நோக்கி , ஓர் முகமன் கூறிப் பின் ,
'வடி மழு வாளவற் கடந்த மைந்தற்கு
முடி புனை கடிகை நாள் மொழிமின் ' என்றனன் .
2.2.1
1497 தயரதன் அழைக்க வசிட்டன் வருதல்
'பொருந்தும் நாள் நாளை நின் புதல்வற்கு ' என்றனர்
திருந்தினார் : அன்ன சொல் கேட்ட செய் கழல்
பெரும் திண் மால் யானையான் , 'பிழைப்பு இல் செய் தவம்
வருந்தினான் வருக ' என , வசிட்டன் எய்தினான் .
2.2.2
1498 தயரதன் , இராமனுக்கு அரசியல் அறங்கூற வசிட்டனை வேண்டல்
'நல் இயல் மங்கல நாளும் நாளை ; அவ்
வில் இயல் தோளவன் கு ஈண்டு வேண்டுவ
ஒல்லையின் இயற்றி , நல் உறுதி வாய்மையும்
சொல்லுதி பெரிது ' எனத் தொழுது சொல்லினான் .
2.2.3
1499 இராமன் வசிட்டனை வரவேற்றல்
முனிவனும் , உவகையும் தானும் முந்துவான் ,
மனுகுல நாயகன் வாயில் முன்னினான் ;
அனையவன் வரவு கேட்டு , அலங்கல் வீரனும் ,
இனிது எதிர்கொண்டு தன் இருக்கை எய்தினான் .
2.2.4
1500 வசிட்டன் முடிசூட்டுவிழா நாளை எனல்
ஒல்கல் இல் தவத்து உத்தமன் ஓதும் நூல்
மல்கு கேள்வி அவ் வள்ளலை நோக்கினான் ;
`'புல்கு காதல் புரவலன் , போர்வலாய் !
நல்கும் நானிலம் நாளை நினக்கு '' என்றான் .
2.2.5
1501 வசிட்டன் செவியறிவுறூஉ (1501-1516)
என்று , பின்னும் இராமனை நோக்கி , 'நான்
ஒன்று கூறுவது உண்டு உறுதிப் பொருள் ;
நன்று கேட்டுக் கடைப் பிடி நன்று ' எனத்
துன்று தாரவற் சொல்லுதல் மேயினான் .
2.2.6
1502 'கரிய மாலினும் , கண்ணுதலானினும் ,
உரிய தாமரை மேல் உறைவானினும் ,
விரியும் பூதம் ஓர் ஐந்தினும் , மெய்யினும் ,
பெரியர் அந்தணர் ; பேணுதி உள்ளத்தால் . '
2.2.7
1503 'அந்தணாளர் முனியவும் , ஆங்கு அவர்
சிந்தையால் அருள் செய்யவும் , தேவரில் ,
நொந்து உளாரையும் , நோய் தவிர்ந்தாரையும் ,
மைந்த ! எண்ண வரம்பும் உண்டு ஆம் கொல் , ஓ ? '
2.2.8
1504 'அனையர் ஆதலின் , ஐய ! இவ் வெய்ய தீ
வினையின் நீங்கிய மேலவர் தாள் இணை
புனையும் சென்னியையாய்ப் புகழ்ந்து ஏத்துதி ;
இனிய கூறி நின்று ஏயின செய்தி , ஆல் . '
2.2.9
1505 'ஆவதற்கும் அழிவதற்கும் , அவர்
ஏவ நிற்கும் விதியும் என்றால் , இனி
யாவது , எப்பொருள் , இம்மையும் , அம்மையும் ,
தேவரைப் பரவும் துணை சீர்த்தது ஏ ? '
2.2.10
1506 'உருளும் நேமியும் ஒண் கவர் எஃகமும் ,
மருள் இல் வாணியும் , வல்லவர் மூவர்க்கும்
தெருளும் நல் அறமும் , மனச் செம்மையும் ,
அருளும் , நீத்தபின் ஆவது உண்டாகும் ஓ ? '
2.2.11
1507 'சூது முந்துறச் சொல்லிய மாத் துயர் ,
நீதி மைந்த ! நினக்கு இலை ; ஆயினும் ,
ஏதம் என்பன யாவையும் எய்துதற்கு
ஓதும் மூலம் அவை என ஓர்தியே . '
2.2.12
1508 'யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின் ,
போர் ஒடுங்கும் , புகழ் ஒடுங்காது ; தன்
தார் ஒடுங்கல் செல்லாது ; அது தந்தபின்
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ ? '
2.2.13
1509 'கோளும் ஐம்பொறியும் குறையப் பொருள்
நாளும் கண்டு , நடுக்குறு நோன்மையின்
ஆளும் அவ் அரசே அரசு ; அன்னது
வாளின் மேல் வரும் மாதவம் , மைந்தன் ஏ ! '
2.2.14
1510 'உமைக்கு நாதற்கும் , ஓங்கு புள் ஊர்திக்கும் ,
இமைப்பு இல் நாட்டம் ஓர் எட்டு உடையானுக்கும் ,
சமைத்த தோள் வலி தாங்கினர் ஆயினும் ,
அமைச்சர் சொல் வழி ஆற்றுதல் ஆற்றலே . '
2.2.15
1511 'என்புதோல் உடையார்க்கும் , இலார்க்கும் , தம்
வன் பகைப் புலன் மாசு அற மாய்ப்பது என் ?
முன்பு பின்பு இன்றி , மூ உலகத்தினும் ,
அன்பின் அல்லது ஒர் ஆக்கம் உண்டாகும் ஓ ? '
2.2.16
1512 'வையம் மன் உயிராக , அம் மன்னுயிர்
உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு ,
ஐயம் இன்றி அறம் கடவாது அருள்
மெய்யின் நின்றபின் வேள்வியும் வேண்டும் ஓ ? '
2.2.17
1513 'இனிய சொல்லினன் , ஈகையன் , எண்ணினன் ,
வினையன் , தூயன் , விழுமியன் , வென்றியன் ,
நினையும் நீதிநெறி கடவான் , எனில் ,
அனைய மன்னற்கு அழிவும் உண்டு ஆம் கொல் ஓ ? '
2.2.18
1514 சீலம் அல்லன நீக்கிச் செம் பொன் துலைத்
தாலம் அன்ன தனி நிலை தாங்கிய
ஞால மன்னற்கு , நல்லவர் நோக்கிய
காலம் அல்லது , கண்ணும் உண்டு ஆகுமோ ? '
2.2.19
1515 'ஓர்வின் நல் வினை ஊற்றத்தினார் உரை
பேர்வு இல் தொல் விதி பெற்று உளது என்று அரோ ,
தீர்வு இல் அன்பு செலுத்தலில் , செவ்வி ஓர்
ஆர்வம் மன்னவற்கு ஆயுதம் ஆவதே . '
2.2.20
1516 'தூமகேது புவிக்கு எனத் தோன்றிய
வாம மேகலை மங்கையரால் வரும்
காமம் இல்லை எனில் , கடும் கேடு எனும்
நாமம் இல்லை ; நரகமும் இல்லை ஏ . '
2.2.21
1517 வசிட்டன் இராமனுடன் திருமால் கோயிலை அடைதல்
ஏனை நீதி இனையன , வையகப்
போனகற்கு விளம்பிப் , புலன் கொளீஇ ,
ஆனவன் ஒடும் , ஆயிரம் மௌலியான்
தானம் நண்ணினன் , தத்துவம் நண்ணினான் .
2.2.22
1518 இராமனை நீராட்டித் தருப்பையில் இருக்கச் செய்தல்
நண்ணி , நாகு அணை வள்ளலை நால் மறை
புண்ணியப் புனல் ஆட்டிப் , புலமையோர்
எண்ணும் நல் வினை முற்றுவித்து , ஏற்றினான் ,
வெள் நிறத்த தருப்பை விரித்து , அரோ .
2.2.23
1519 தயரதன் நகரை அணிசெயச் சொல்லல்
ஏற்றிட , ஆண் தகை இனிது இருந்துழி ,
நூல் தட மார்பனும் நொய்தின் எய்தப் போய் ,
ஆற்றல் சால் அரசனுக்கு அறிவித்தான் ; அவன் ,
'சாற்றுக , நகர் அணி சமைக்க ' என்றனன் .
2.2.24
1520 வள்ளுவர் முரசறைதல்
ஏவின வள்ளுவர் , `'இராமன் நாளை ஏ
பூமகள் கொழுநன் ஆய்ப் புனையும் மௌலி ; இக்
கோ நகர் அணிக '' எனக் கொட்டும் பேரி , அத்
தேவரும் களி கொளத் , திரிந்து சாற்றினார் .
2.2.25
1521 இராமன் முடிபுனைவது அறிந்து நகரமக்கள் மகிழ்தல்
'கவி அமை கீர்த்தி அக் காளை நாளையே
புவி அமை மணி முடி புனையும் ' என்ற சொல் ,
செவி அமை நுகர்ச்சி அது எனினும் , தேவர்தம்
அவி அமுது ஆனது ; அந்நகர் உளார்க்கு எலாம் .
2.2.26
1522 நகரமக்களின் மகிழ்வுறு செயல்கள்
ஆர்த்தனர் , களித்தனர் , ஆடிப் பாடினர் ,
வேர்த்தனர் , தடித்தனர் , சிலிர்த்து மெய்ம் மயிர்
போர்த்தனர் , மன்னனைப் புகழ்ந்து வாழ்த்தினர் ,
தூர்த்தனர் நீள்நிதி சொல்லினார்க்கு எலாம் .
2.2.27
1523 நகரை அழகு செய்தல் (1523-1531)
திணி சுடர் இரவியைத் திருத்தும் ஆறும் , அப்
பணியிடைப் பள்ளியான் பரந்த மார்பிடை
மணியினை வேகடம் வகுக்கும் ஆறும் போல் ,
அணி நகர் அணிந்தனர் அருத்தி மாக்கள் ஏ .
2.2.28
1524 வெள்ளிய , கரியன , செய்ய , வேறு உள ,
கொள்ளை வான் கொடி நிரைக் குழாங்கள் தோன்றுவ ,
கள் அவிழ் கோதையான் செல்வம் காணிய
புள் எலாம் திரு நகர் புகுந்த போன்றவே .
2.2.29
1525 மங்கையர் குறங்கு என வகுத்த வாழைகள் ;
அங்கு அவர் கழுத்து எனக் கமுகம் ஆர்ந்தன ;
தங்கு ஒளி முறுவலில் தாமம் நான்றன ;
கொங்கையை நிகர்த்தன கனக கும்பமே .
2.2.30
1526 முதிர் ஒளி உயிர்த்தன , முடுகிக் காலையில்
கதிரவன் வேறு ஒரு கவின் கொண்டான் என ,
மதி தொட நிவந்தன மகர தோரணம்
புதியன வலந்தன புதவ ராசியே .
2.2.31
1527 துனி அறு செம் மணித் தூணம் , நீறு தோய்
வனிதை ஓர் கூறினன் வடிவு காட்டின ;
புனை துகில் உறை தொறும் பொதிந்து தோன்றின ,
பனி பொதி கதிர் என பவளத் தூண்களே .
2.2.32
1528 முத்தினின் முழு நிலவு எறிப்ப , மொய்ம் மணிப்
பத்தியின் இள வெயில் பரப்ப , நீலத்தின்
தொத்தினம் இருள்வரத் தூண்டச் , சோதிட
வித்தகர் விரித்த நாள் ஒத்த , வீதி ஏ !
2.2.33
1529 ஆடல் மான் தேர்க் குழாம் , அவனி காணிய ,
வீடு எனும் உலகின் வீழ் விமானம் போன்றன ;
ஓடை மாக் கட களிறு , உதய மால் வரை
தேடரும் கதிரொடும் திரிவ போன்றவே .
2.2.34
1530 வளம் கெழு திரு நகர் வைகும் வைகலும்
பளிங்கு உடை நெடும் சுவர் படுத்த பத்தியில்
கிளர்ந்து எரி சுடர் மணி இருளைக் கீறலால் ,
தளர்ந்தில பிரிந்தில சக்(க)ர வாகமே .
2.2.35
1531 பூ மழை , புனல் மழை , புது மென் சுண்ணத்தின்
தூ மழை , தரளத்தின் தோம் இல் வெண் மழை ,
தாம் இழை நெரிதலில் தகர்ந்த பொன் மழை ,
மா மழை நிகர்த்தன , மாட வீதியே .
2.2.36
1532 பிடியும் களிறும் செல்லுங் காட்சி
காரொடு தொடர் மதக் களிறு சென்றன ,
வாரொடு தொடர் கழல் மைந்தர் ஆம் என ;
தாரொடு நடந்தன பிடிகள் , தாழ் கலைத்
தேரொடு நடக்கும் அத் தெரிவை மாரின் ஏ .
2.2.37
1533 அயோத்தியை அமரர் அமராவதியாகவே எண்ணுதல்
ஏய்ந்து எழு செல்வமும் , அழகும் , இன்பமும் ,
தேய்ந்தில ; அனையது தெரிகிலாமையால்
ஆய்ந்தனர் பெருகவும் அமரர் , இம்பரில்
போந்தவர் , 'போந்திலம் ' என்னும் புந்தியால் .
2.2.38
1534 கூனி தோன்றுதல்
அ நகர் அணிவு உறும் அமலை , வானவர்
பொன் நகர் இயல்பு எனப் பொலியும் ஏல்வையில் ,
இன்னல் செய் இராவணன் இழைத்த தீமை போல் ,
துன்ன அரும் கொடு மனக் கூனி தோன்றினாள் .
2.2.39
1535 கூனியின் சினம்
தோன்றிய கூனியும் துடிக்கும் நெஞ்சினாள் ,
ஊன்றிய வெகுளியாள் , உளைக்கும் உள்ளத்தாள் ,
கான்று எரி நயனத்தாள் , கதிக்கும் சொல்லினாள் ,
மூன்று உலகினுக்கும் ஓர் இடுக்கண் மூட்டுவாள் .
2.2.40
1536 கூனி கைகேயியிடம் விரைதல்
தொண்டை வாய் கேகயன் தோகை கோயில் மேல்
மண்டினாள் , வெகுளியின் மடித்த வாயினாள் ,
பண்டை நாள் இராகவன் பாணி வில் உமிழ்
உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள் .
2.2.41
1537 கைகேயியைக் கூனி அடைதல்
நாற் கடல் படும் மணி நளினம் பூத்தது ஓர்
பால் கடல் படு திரைப் பவள வல்லியே
போல் , கடைக்கண் அளி பொழியப் பொங்கு அணை
மேல் கிடந்தாள் தனை , விரைவின் எய்தினாள் .
2.2.42
1538 கூனி கைகேயியை எழுப்புதல்
எய்தி , அக் கேகயன் மடந்தை ஏடு அவிழ்
நொய்து அலர் தாமரை நோற்ற நோன்பின் ஆல்
செய்த பேர் உவமை சால் செம் பொன் சீறடி
கைகளில் தீண்டினாள் , காலக் கோள் அனாள் .
2.2.43
1539 கூனி கூறத் தொடங்குதல்
தீண்டலும் , உணர்ந்த அத் தெய்வக் கற்பினாள் ,
நீண்ட கண் அனந்தரும் நீங்குகிற்றிலள் ;
மூண்டு எழு பெரும் பழி முடிக்கும் வெம் வினை
தூண்டிடக் கட்டுரை சொல்லல் மேயினாள் .
2.2.44
1540 கூனி கைகேயியை வெகுண்டு கூறல்
'அணங்கு வாள் விட அரா அணுகும் எல்லையும்
குணம் கெடாது ஒளி விரி குளிர் வெண் திங்கள் போல் ,
பிணங்கு வான் பேர் இடர் பிணிக்க நண்ணவும் ,
உணங்குவாய் அல்லை , நீ உறங்குவாய் ? ' என்றாள் .
2.2.45
1541 கைகேயி , எவ் விடர் தனக்கு வரும் எனல் (1541-1542)
வெம் விடம் அனையவள் விளம்ப , வேல் கணாள் ,
'தெவ் அடு சிலை கை என் சிறுவர் செவ்வியர் ;
அவ்வவர் துறை தொறும் அறம் திறம்பலர் ;
எவ் இடர் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு ? ' எனா .
2.2.464
1542 'பராவு அரும் புதல்வரைப் பயக்க யாவரும் ,
உராவு அரும் துயரை விட்டு உறுதி காண்பர் ஆல் ;
விராவு அரும் புவிக்கு எலாம் வேதம் ஏ அன
இராமனைப் பயந்த எற்கு இடர் உண்டோ ? ' என்றாள் .
2.2.47
1543 கூனி , கைகேயிக்கு வீழ்வும் கோசலைக்கு வாழ்வும் வந்தமை கூறல்
ஆழ்ந்த பேர் அன்பினாள் அனைய கூறலும் ,
சூழ்ந்த தீ வினை நிகர் கூனி சொல்லுவாள் ,
'வீழ்ந்தது நின் நலம் ; திருவும் வீந்தது ;
வாழ்ந்தனள் கோசலை மதியினால் ' என்றாள் .
2.2.48
1544 கைகேயி , கோசலை எய்தும் வாழ்வு யாது எனல்
அன்னவள் அவ் உரை உரைப்ப , ஆய் இழை ,
'மன்னவர் மன்னன் என் கணவன் ; மைந்தன் ஏல் ,
பன்னரும் பெரும் புகழ்ப் பரதன் ; பார் தனில் ,
என் இதன்மேல் அவட்கு எய்தும் வாழ்வு ? ' என்றாள் .
2.2.49
1545 இராமன் முடிசூடுவான் எனல்
'ஆடவர் நகை உற , ஆண்மை மாசு உறத்
தாடகை எனும் பெயர்த் தையலாள் படக்
கோடிய வரி சிலை இராமன் , கோ முடி
சூடுவன் நாளை ; வாழ்வு இது ' எனச் சொல்லினாள் .
2.2.50
1546 கைகேயி மகிழ்தல்
மாற்றம் அஃது உரைசெய , மங்கை உள்ளமும்
ஆற்றல் சால் கோசலை அறிவும் ஒத்தவால் ;
வேற்றுமை உற்றிலள் , வீரன் தாதை புக்கு
ஏற்று அவள் இருதயத்து இருக்கவே கொல் ஆம் !
2.2.51
1547 கைகேயி கூனிக்கு மாலை கொடுத்தல்
ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழத் ,
தேய்வு இலா முக மதி விளங்கித் தேசு உறத் ,
தூயவள் உவகை போய் மிகச் , சுடர்க்கு எலாம்
நாயகம் அனையது ஓர் மாலை நல்கினாள் .
2.2.52
1548 கூனி மாலையை எறிதல்
தெழித்தனள் , உரப்பினள் , சிறு கண் தீ உக
விழித்தனள் , வைதனள் , வெய்து உயிர்த்தனள் ,
அழித்தனள் , அழுதனள் , அம் பொன் மாலையால்
குழித்தனள் நிலத்தை , அக் கொடிய கூனியே .
2.2.53
1549 கூனி , தன் கருத்தை விளக்குதல் (1549-1557)
வேதனைக் கூனி , பின் , வெகுண்டு நோக்கி , அப்
பேதையைப் 'பித்தி ! நிற் பிறந்த சேயொடும்
நீ துயர்ப் படுக ! நான் நெடிது உன் மாற்றவள்
தாதியர்க்கு ஆள் செயத் தரிக்கிலேன் ' என்றாள் .
2.2.54
1550 'சிவந்த வாய்ச் சீதையும் , கரிய செம்மலும் ,
நிவந்த ஆசனம் அத்து இனிது இருப்ப , நின் மகன் ,
அவந்தனாய் வெறுநிலத்து இருக்கல் ஆனபோது ,
உவந்தவாறு என் இதற்கு ? உறுதி யாது ? ' என்றாள் .
2.2.55
1551 'மறந்திலள் கோசலை உறுதி ; மைந்தனும் ,
சிறந்த நல் திருவினில் திருவும் எய்தினான் ;
இறந்திலன் , இருந்தனன் , என்செய்து ஆற்றுவான் ?
பிறந்திலன் பரதன் , நீ பெற்றதால் ' என்றாள் .
2.2.56
1552 'சரதம் இப் புவி எலாம் தம்பியோடும் இவ்
வரதனே காக்குமேல் , வரம்பு இல் காலமும் ,
பரதனும் இளவலும் பதியின் நீங்கிப் போய்
விரத மா தவம் செய விடுதல் நன்று ' என்றாள் .
2.2.57
1553 'பண் உறு கட கரிப் பரதன் , பார் மகள்
கண் உறு கவினராய் இனிது காத்த அம்
மண் உறு முரசு உடை மன்னர் மாலையில்
எண் உறப் பிறந்திலன் , இறத்தல் நன்று ' என்றாள் .
2.2.58
1554 'பாக்கியம் புரிந்திலாப் பரதன் தன்னைப் பண்டு
ஆக்கிய பொலன் கழல் அரசன் , ஆணையால்
தேக்கு உயர் கல் அதர் கடிது சேண் இடை
போக்கிய பொருள் எனக்கு இன்று போந்தது ஆல் . '
2.2.59
1555 மந்தரை பின்னரும் வகைந்து கூறுவாள் ,
'அந்தரம் தீர்ந்து உலகு அளிக்கும் நீர் இன் ஆல்
தந்தையும் கொடியன் , நல் தாயும் தீயளால் ;
எந்தை ஏ ! பரதன் ஏ ! என் செய்வாய் ? ' என்றாள் .
2.2.60
1556 'அரசர் இல் பிறந்து , பின் அரசர் இல் வளர்ந்து ,
அரசர் இல் புகுந்து , பேர் அரசி ஆன நீ ,
கரை செயற்கு அரும் துயர்க் கடலில் வீழ்கின்றாய் !
உரை செயக் கேட்கிலை ; உணர்தியோ ? ' என்றாள் .
2.2.61
1557 'கல்வியும் , இளமையும் , கணக்கில் ஆற்றலும்
வில் வினை உரிமையும் , அழகும் , வீரமும் ,
எல்லை இல் குணங்களும் , பரதற்கு எய்திய ,
புல் இடை உக்க நல் அமுதம் போலும் ஆல் . '
2.2.62
1558 கைகேயி சினந்து கூறல் (1558-1562)
வாய் கயப்பு உற மந்தரை வழங்கிய வெம் சொல் ,
காய் கனல் தலை நெய் சொரிந்து எனக் கதம் கனற்றக் ,
கேகயர்க்கு இறை திரு மகள் , கிளர் இள வரிகள்
தோய் கயல் கண்கள் சிவப்பு உற நோக்கினள் , சொல்லும் .
2.2.63
1559 'வெயில் முறைக் குலக் கதிரவன் முதலிய மேலோர் ,
உயிர் முதல் பொருள் திறம்பினும் உரை திறம்பாதோர் ;
மயில் முறைக் குலம் அத்து உரிமையை , மனு முதல் மரபைச்
செயிர் உறப் புலைச் சிந்தையால் , என் சொனாய் ? தீயோய் !
2.2.64
1560 'எனக்கு நல்லையும் அல்லை நீ ; என்மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லை ; அத் தருமமே நோக்கின் ,
உனக்கு நல்லையும் அல்லை ; வந்து ஊழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை , மதி இலா மனத்தோய் ! '
2.2.65
1561 'பிறந்து இறந்து போய்ப் பெறுவதும் இழப்பதும் புகழேல் ,
நிறம் திறம்பினும் , நியாயமே திறம்பினும் , நெறியின்
திறம் திறம்பினும் , செய் தவம் திறம்பினும் , செயிர் தீர்
மறம் திறம்பினும் , வரன் முறை திறம்புதல் வழக்கோ ? '
2.2.66
1562 'போதி என் எதிர்நின்று ! நின் புன் பொறி நாவைச்
சேதியாது இது பொறுத்தனென் ; புறம் சிலர் அறியின் ,
நீதி அல்லவும் நெறிமுறை அல்லவும் நினைந்தாய்
ஆதி ; ஆதலின் , அறிவிலி ! அடங்குதி ' என்றாள் .
2.2.67
1563 மந்தரை மேலும் மொழிதல் (1563-1571)
அஞ்சி மந்தரை அகன்றிலள் , அ மொழி கேட்டும் ;
நஞ்சு தீர்க்கினும் தீர்கிலாது அது நலிந்து என்ன
`'தஞ்சமே ! உனக்கு உறு பொருள் உணர்த்துகை தவிரேன் ;
வஞ்சி போலி ! '' என்று அடி மிசை வீழ்ந்து உரை வழங்கும் .
2.2.68
1564 'மூத்தவற்கு உரித்து அரசு எனும் முறைமையின் , உலகம்
காத்த மன்னனில் இளையன் அன்று ஓ கடல் வண்ணன் ?
ஏத்தும் நீள் முடி புனைவதற்கு இசைந்தனன் என்றால் ,
மீத் தரும் செல்வம் பரதனை விலக்கும் ஆறு எவன் ஓ ? '
2.2.69
1565 'அறம் நிரம்பிய அருள் உடை அரும் தவர் கு ஏனும் ,
பெறலரும் திருப் பெற்ற பின் சிந்தனை பிறிது ஆம் ;
மறம் நினைந்து உமை வலிகிலர் ஆயினும் , மனத்தால்
இறல் உறும்படி இயற்றுவர் இடையறா இன்னல் . '
2.2.70
1566 'புரியும் தன் மகன் அரசு எனில் , பூதலம் எல்லாம்
விரியும் சிந்தனைக் கோசலைக்கு உடைமையாம் என்றால் ,
பரியும் நின் குலப் புதல்வற்கும் , உனக்கும் , இப் பார் மேல்
உரியது என் , அவள் உதவிய ஒரு பொருள் அல்லால் ? '
2.2.71
1567 'தூண்டும் இன்னலும் வறுமையும் தொடர்தரத் துயரால்
ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு , இரு நிதி , அவளை
வேண்டி ஈதி ஓ ? வெள்குதியோ ? விம்மல் நோயால்
மாண்டு போதி ஓ ? மறுத்தியோ ? எங்ஙனம் வாழ்தி ? '
2.2.72
1568 'சிந்தை செய்கையில் திகைத்தனை ; இனிச் சில நாளில் ,
தம் தம் இன்மையும் எளிமையும் நின்கொண்டு தவிர்க்க ,
உந்தை , உன்னை , உன் கிளைஞர் , மற்று உன் குலத்து உள்ளோர் ,
வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ ? மதியாய் . '
2.2.73
1569 'காதல் உன் பெருங்கணவனை அஞ்சி , அக் கனி வாய்
சீதை தந்தை உன் தாதையைத் தெறுகிலன் ; இராமன்
மாதுலன் அவன் : உந்தைக்கு வாழ்வு இனி உண்டோ ?
பேதை உன் துணை யார் உளர் பழி படப் பிறந்தார் ? '
2.2.74
1570 'மற்றும் நுந்தைக்கு வான் பகை பெரிது உள ; மாற்றார்
செற்றபோது இவர் சென்று உதவார் எனில் , செருவில்
கொற்றம் என்பது ஒன்று எவ் வழி உண்டு ? அது கூறாய் ;
சுற்றமும் கெடச் சுடு துயர்க் கடல் விழத் துணிந்தாய் . '
2.2.75
1571 'கெடுத்து ஒழிந்தனை உனக்கு அரும் புதல்வனை ; கிளர் நீர்
உடுத்த பார் அகம் உடையவன் ஒரு மகற்கு எனவே
கொடுத்த பேர் அரசு , அவன் குலக் கோமைந்தர் தமக்கும்
அடுத்த தம்பிக்கும் ஆம் ; பிறர்க்கு ஆகுமோ ? ' என்றாள் .
2.2.76
1572 கவிக்கூற்று (1572-1573)
தீய மந்தரை இவ் உரை செப்பலும் , தேவி
தூய சிந்தையும் திரிந்தது ; சூழ்ச்சியின் இமையோர்
மாயையும் , அவர் பெற்ற நல் வரம் உண்மை ஆல் உம் ,
ஆய அந்தணர் இயற்றிய அரும் தவம் அத்து ஆல் உம் .
2.2.77
1573 அரக்கர் பாவமும் , அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க , நல் அருள் துறந்தனள் தூ மொழி மட மான் ;
இரக்கம் இன்மை அன்றோ இன்று இவ் உலகங்கள் இராமன்
பரக்கும் தொல் புகழ் அமுதினைப் பருகுகின்றனவே ?
2.2.78
1574 கைகேயி , பரதன் முடிசூட வழி வினாதல்
அனைய தன்மையள் ஆகிய கேகயன் அன்னம் ,
வினை நிரம்பிய கூனியை விரும்பினள் நோக்கி ,
'எனை உவந்தனை ; இனியை என் மகனுக்கும் ; அனையான் '
புனையும் நீள் முடி பெறும் படி புகலுதி ' என்றாள் .
2.2.79
1575 கூனி , என் சொல்வழிநிற்பின் எளிது எனல்
மாழை உண் கணி உரைசெயக் கேட்ட மந்தரை , 'என்
தோழி வல்லள் ! என் துணை வல்லள் ! ' என்று அடி தொழுதாள் ;
'தாழும் மன் நிலை ; என் உரை தலைநிற்பின் , உலகம்
ஏழும் ஏழும் உன் ஒரு மகற்கு ஆக்குவென் ; ' என்றாள் .
2.2.80
1576 கூனி கூறும் உபாயம் (1576-1577)
'நாடி ஒன்று உனக்கு உரை செய்வென் ,
      நளிர் மணி நகையாய் !
தோடு இவர்ந்த தார்ச் சம்பரன்
      தொலைவுற்ற வேலை ,
ஆடல் வென்றியான் அருளிய
      வரம் அவை இரண்டும்
கோடி ' என்றனள் , உள்ளமும்
      கோடிய கொடியாள் .
2.2.81
1577 'இரு வரத்தினில் , ஒன்றினால் அரசு கொண்டு , இராமன்
பெரு வனம் அத்து இடை ஏழ் இரு பருவங்கள் பெயர்ந்து
திரிதரச் செய்தி ஒன்றினால் ; செழும் நிலம் எல்லாம்
ஒரு வழி படும் உன் மகற்கு ; உபாயம் ஈது ' என்றாள் .
2.2.82
1578 கைகேயியின் உவகை
உரைத்த கூனியை உவந்தனள் , உயிர் உறத் தழுவி ,
நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி ,
'இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய் !
தரைக்கு நாயகன் தாய் இனி நீ ; எனத் தணியா . '
2.2.83
1579 கைகேயியின் உறுதிமொழி
நன்று சொல்லினை ! நம்பியை நளிர் முடி சூட்டல் ,
துன்று கானத்தில் இராமனைத் துரத்தல் , இவ் இரண்டும்
அன்று அது ஆம் எனில் , அரசன் முன் ஆர் உயிர் துறந்து
பொன்றி நீங்குதல் புரிவென் யான் ; போதி நீ ' என்றாள் .
2.2.842.3 . கைகேயி சூழ்வினைப் படலம் (1580- 1694 )

1580 கைகேயி அலங்காரத்தை அழித்தல் (1580-1583)
கூனி போனபின் , குல மலர்க் குப்பை நின்று இழிந்தாள் ;
சோனை வார் குழல் கற்றையில் சொருகிய மாலை ,
வான வார் மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள் போல் ,
தேன் அவாவுறு வண்டினம் அலமரச் , சிதைத்தாள் .
2.3.1
1581 விளையும் தன் புகழ் வல்லியை வேர் அறுத்து என்ன ,
கிளை கொள் மேகலை சிந்தினள் ; கிண்கிணியோடும்
வளை துறந்தனள் ; மதியினில் மறுத் துடைப்பாள் போல்
அளக வாள் நுதல் அரும் பெறல் திலதமும் அழித்தாள் .
2.3.2
1582 தா இல் மா மணிக் கலன் மற்றும் தனி தனி சிதறி ,
நாவி நன் குழல் நால் நிலம் தைவரப் பரப்பிக் ,
காவி உண் கண்கள் அஞ்சனம் கான்றிடக் கலுழாப் ,
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப் , புவி மிசைப் புரண்டாள் .
2.3.3
1583 நவ்வி வீழ்ந்து என , நாடக
      மயில் துயின்று என்ன ,
கவ்வை கூர்தரச் , சனகியாம்
      கடி கமழ் கமலத்து
அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து
      அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் எனக் , கிடந்தனள் ,
      கேகயன் தனயை .
2.3.41
1584 தயரதன் கைகேயியின் மனைக்குப் போதல்
நாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை ,
யாழ் இசை அஞ்சிய அம் சொல் ஏழை கோயில் ,
'வாழிய ! ' என்று அயில் மன்னர் துன்ன , வந்தான் --
ஆழி நெடும் கை மடங்கல் ஆளி அன்னான் .
2.3.5
1585 தயரதன் கைகேயியை அடைதல்
வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப , வந்து ஆங்கு
ஏயின செய்யும் மடந்தைமார் ஒடு ஏகிப் ,
பாயல் துறந்த படைத் தடம் கண் மென் தோள்
ஆயிழை தன்னை அடைந்த ஆழி மன்னன் .
2.3.6
1586 தயரதன் கைகேயியை எடுத்தல்
அடைந்து , அவள் நோக்கி , 'அரந்தை என்கொல் வந்து
தொடர்ந்தது ? ' எனத் துயர்கொண்டு சோரும் நெஞ்சன் ,
மடந்தையை மானை எடுக்கும் ஆனையே போல்
தடம் கைகள் கொண்டு தழீஇ , எடுக்கல் உற்றான் .
2.3.7
1587 கைகேயி பேசாது நெட்டுயிர்த்தல்
நின்று தொடர்ந்த நெடும் கை தம்மை நீக்கி ,
மின் துவள்கின்றது போல மண்ணில் வீழ்ந்தாள் ,
ஒன்றும் இயம்பல் அள் , நீடு உயிர்க்கல் உற்றாள் ,
மன்றல் அரும் தொடை மன்னன் ஆவி அன்னாள் .
2.3.8
1588 தயரதன் நிகழ்ந்ததை வினாதல்
அன்னது கண்ட அலங்கல் மன்னன் , அஞ்சி ,
`'என்னை நிகழ்ந்தது ? இஞ் ஞாலம் ஏழில் வாழ்வார்
உன்னை இகழ்ந்தவர் மாள்வர் ! உற்றது எல்லாம்
சொன்னபின் என் செயல் காண்டி ! சொல்லிடு ! '' என்றான் .
2.3.9
1589 கைகேயி வரம் கேட்டல்
வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை ,
கொண்ட நெடும் கண் இன் ஆலி கொங்கை கோப்ப ,
'உண்டு கொல் ஆம் அருள் என் கண் ? உன் கண் ஒக்கில்
பண்டைய இன்று பரிந்து அளித்தி ' என்றாள் .
2.3.10
1590 தயரதன் தருவேன் எனல்
கள் அவிழ் கோதை கருத்து உணராத மன்னன் ,
வெள்ள நெடும் சுடர் மின்னின் மின்ன நக்கான் ;
'உள்ளம் உவந்து அது செய்வென் ; ஒன்று உலோவேன் ;
வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை ! ' என்றான் .
2.3.11
1591 இரண்டு வரங்களையும் ஈக எனல்
ஆன்றவன் அவ் உரை கூற , ஐயம் இல்லாள் ,
'தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல் ,
சான்று இமையோர் குலம் ஆக , மன்ன ! நீ அன்று
ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி ! ' என்றாள் .
2.3.12
1592 இப்பொழுதே ஈவேன் எனல்
'வரம் கொள இ துணை மன்னும் அல்லல் எய்தி
இரங்கிட வேண்டுவது இல்லை ; ஈவன் ; என் பால்
பரம் கெட இ பொழுது ஏ ; பகர்ந்திடு ! ' என்றான் ;
உரம் கொள் மனத்தவள் வஞ்சம் ஓர்கிலாதான் .
2.3.13
1593 கேட்ட வரம் இவையெனல்
'ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது ; சீதை கேள்வன் , ஒன்றால்
போய் வனம் ஆள்வது ; ' எனப் புகன்று நின்றாள் ;
தீயவை யாவையினும் சிறந்த தீயாள் .
2.3.14
1594 அது கேட்ட தயரதன் நிலை (1594-1598)
நாகம் எனும் கொடியாள் , தன் நாவின் ஈந்த
சோக விடம் தொடரத் துணுக்கம் எய்தா ,
ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து , அராவின்
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான் .
2.3.15
1595 பூதலம் உற்று அதனில் புரண்ட மன்னன் ,
மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார் ?
வேதனை முற்றிட வெந்து வெந்து , கொல்லன்
ஊது உலையில் கனல் என்ன , வெய்து உயிர்த்தான் .
2.3.16
1596 உலர்ந்தது நா ; உயிர் ஓடல் உற்றது ; உள்ளம்
புலர்ந்தது ; கண்கள் பொடித்த பொங்கு சோரி ;
சலம் தலை மிக்கது -- 'தக்கது என்கொல் ? ' என்று என்று
அலந்து , அலையுற்ற அரும் புலன்கள் ஐந்தும் .
2.3.17
1597 மேவி நிலத்தில் இருக்கும் ; நிற்கும் ; வீழும் ;
ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும் ;
பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும் ;
ஆவி பதைப்ப அலக்கண் எய்துகின்றான் .
2.3.18
1598 பெண் என உற்ற பெரும் பழிக்கு நாணும் ;
உள் நிறை வெப்பு ஒடு உயிர்த்து உயிர்த்து உலாவும் ;
கண்ணினில் நோக்கும் ; அயர்க்கும் ; வன் கை வேல் வெம்
புண் நுழைகிற்க உழைக்கும் ஆனை போல்வான் .
2.3.19
1599 கைகேயி மனம் மாறாமை (1599-1600)
கம்ப நெடும் களி யானை அன்ன மன்னன் ,
வெம்பி விழுந்து அழும் விம்மல் கண்டு வெய்து உற்று ,
உம்பர் நடுங்கினர் ; ஊழி பேர்வது ஒத்தது ;
அம்பன கண்ணவள் உள்ளம் அன்னதே ஆல் .
2.3.20
1600 அஞ்சலள் , ஐயனது அல்லல் கண்டும் உள்ளம்
நஞ்சிலள் , நாண் இலள் என்ன நாணம் ஆம் ஆல் ;
வஞ்சனை பண்டு மடந்தை வேடம் என்று ஏ
தஞ்சு என மாதரை உள்ளலார்கள் தக்கோர் .
2.3.21
1601 தயரதன் மீட்டும் வினாதல்
இ நிலை நின்றவள் தன்னை எய்த நோக்கி
நெய்ந் நிலை வேலவன் , 'நீ திசைத்தது உண்டு ஓ ?
பொய் நிலையோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ ?
அ நிலை சொல் எனது ஆணை உண்மை ' என்றான் .
2.3.22
1602 கைகேயியின் மறுமாற்றம்
'திசைத்ததும் இல்லை ; எனக்கு வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை ; முன் ஈந்த இவ் வரங்கள் ,
குசை பரியோய் ! தரின் இன்று கொள்வென் ; அன்றேல் ,
வசை திறம் நின் வயின் வைத்து மாள்வென் ' என்றாள் .
2.3.23
1603 தயரதன் வருந்தல் (1603-1607)
இந்த நெடும் சொல் அவ் ஏழை கூறும் முன்னே ,
வெந்த கொடும் புணில் வேல் நுழைந்தது ஒப்பச் ,
சிந்தை திரிந்து , திகைத்து , அயர்ந்து வீழ்ந்தான் ,
மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன் .
2.3.24
1604 'ஆ ! கொடியாய் ! ' எனும் ; ஆவி காலும் ; 'அந்தோ !
ஓ ! கொடிதே அறம் ! ' என்னும் ; 'உண்மை ஒன்றும்
சாக ! ' எனா எழும் ; மெய் தளாடி வீழும் ;
மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான் .
2.3.25
1605 'நாரியர் இல்லை இஞ் ஞாலம் ஏழும் என்னக்
கூரிய வாள் கொடு கொன்று நீக்கி யானும்
பூரியர் எண் இடை வீழ்வன் ' என்று பொங்கும் ;
வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான் .
2.3.26
1606 கையொடு கையைப் புடைக்கும் ; வாய் கடிக்கும் ;
'மெய் உரை குற்றம் ' எனப் புழுங்கி விம்மும் ,
நெய் எரி உற்றென நெஞ்சு அழிந்து சோரும் ;
வையகம் முற்றும் நடந்த வாய்மை மன்னன் .
2.3.27
1607 'ஒறுப்பினும் அந்தரம் ; உண்மை ஒன்றும் ஓவா
மறுப்பினும் அந்தரம் ' என்று வாய்மை மன்னன் ,
'பொறுப்பினும் அ நிலை போகிலாள் ஐ வாளால்
இறுப்பினும் ஆவது இரப்பது ' என்று எழுந்தான் .
2.3.28
1608 தயரதன் கைகேயியின் காலில் வீழ்தல்
கோல் மேல் கொண்டும் குற்றம் அகற்றக் குறி கொண்டார்
போல் , மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை என்னாக் ,
கால் மேல் வீழ்ந்தான் , கந்து கொல் யானைக் களி மன்னர் ,
மேல் மேல் வந்து முந்தி வணங்க மிடைதாளான் .
2.3.29
1609 தயரதன் வேண்டுகோள் (1609-1612)
'கொள்ளான் நின் சேய் இவ் அரசு ;
      அன்னான் கொண்டாலும் ,
நள்ளாது இந்த நால் நிலம் ;
      ஞாலம் தனில் என்றும்
உள்ளார் எல்லாம் ஓத
      உவக்கும் புகழ் கொள்ளாய் ,
எள்ளா நிற்கும் வன் பழி
      கொண்டு என் பயன் ? ' என்றான் .
2.3.30
1610 'வானோர் கொள்ளார் ; மண்ணவர் உய்யார் ; இனி மற்று என்
ஏனோர் செய்கை ? யாரொடு நீ இவ் அரசு ஆள்வாய் ?
யானே சொல்லக் கொள்ள இசைந்தான் , முறையாலே
தானே நல்கும் உன் மகனுக்கும் தரை ' என்றான் .
2.3.31
1611 'கண்ணே வேண்டும் என்னினும் ஈய கடவேன் ; என்
உள் நேர் ஆவி வேண்டினும் இன்றே உனது அன்றோ ?
பெண்ணே ! வண்மைக் கேகயன் மானே ! பெறுவாயேல்
மண்ணே கொள் நீ ; மற்றையது ஒன்றும் மற ' என்றான் .
2.3.32
1612 'வாய் தந்தேன் என்றேன் ; இனி , யான் ஓ அது மாற்றேன் ;
நோய் தந்து என்னை நோவன செய்து நுவலாது ஏ ;
தாய் தந்து என்னத் தன்னை இரந்தால் தழல் வெம் கண்
பேய் தந்து ஈயும் ; நீ இது தந்தால் பிழை ஆம் ஓ ? '
2.3.33
1613 கைகேயி மறுமொழி
இன்னே இன்னே பன்னி இரந்தான் இகல் வேந்தன் ;
தன் நேர் இல்லாத் தீயவள் உள்ளம் தடுமாறாள்
'முன்னே தந்தாய் , இவ் வரம் நல்காய் முனிவாயேல் ,
என்னே மன்னா ! யார் உளர் வாய்மைக்கு இனி ? ' என்றாள் .
2.3.34
1614 மறுமொழி கேட்ட மன்னன் கூறல் (1614-1616)
அச்சொல் கேளா ஆவி புழுங்கா அயர்கின்றான்
பொய் சொல் பேணா வாய் மொழி மன்னன் பொறை கூர
'நச்சுத் தீயே , பெண் உரு அன்று ஆம் ' என நாணா
முச்சு அற்றார் போல் பின்னும் இருந்தே மொழிகின்றான் .
2.3.35
1615 'நின் மகன் ஆள்வான் ; நீ இனிது ஆள்வாய் ; நிலம் எல்லாம்
உன் வயம் ஆமே ; ஆளுதி ; தந்தேன் ; உரை குன்றேன் ;
என் மகன் , என் கண் , என் உயிர் , எல்லா உயிர்கட்கும்
நல் மகன் , இந்த நாடு இறவாமை நய ! ' என்றான் .
2.3.36
1616 'மெய்யே என் தன் வேர் அற நூறும் வினை நோக்கி ,
நையா நின்றேன் ; 'நாவும் உலர்ந்தேன் ; நளினம்போல்
கையான் இன்று என் கண் எதிர் நின்றும் கழிவானேல்
உய்யேன் ; நங்காய் ! உன் அபயம் என் உயிர் ' என்றான் .
2.3.37
1617 கைகேயியின் மறுமொழி
இரந்தான் சொல்லும் இன் உரை
      கொள்ளாள் ; முனிவு எஞ்சாள் ;
மரம் தான் என்னும் நெஞ்சினள் ,
      நாணாள் ; வசை பாராள் ;
`'சரம் தாழ் வில்லாய் ! தந்த
      வரத்தைத் தவிர்க என்றல்
உரம் தான் அல்லால் , நல் அறம்
      ஆமோ ? உரை '' என்றாள் .
2.3.38
1618 தயரதன் துன்பச்சொல் (1618-1624)
கொடியாள் இன்ன கூறினள் ; கூறக் குல வேந்தன் ,
'முடி சூடாமல் காத்தலும் மொய் கான் இடை மெய்யே
நெடியான் நீங்க நீங்கும் என் ஆவி இனி ' என்னா ,
இடி ஏறு உண்ட மால் வரை போல் மண் இடை வீழ்ந்தான் .
2.3.39
1619 வீழ்ந்தான் ; வீழா வெம் துயரத்தின் கடல் வெள்ளத்து
ஆழ்ந்தான் ; ஆழா அ கடலுக்கு ஓர் கரை காணான் ,
சூழ்ந்தாள் துன்பம் சொல் கொடியாள் , சொல் கொடு நெஞ்சம்
போழ்ந்தாள் , உள்ளப் புன்மையை நோக்கிப் புலர்கின்றான் .
2.3.40
1620 'ஒன்றா நின்ற ஆர் உயிர் ஓடு உம் உயிர் கேள்வர்
பொன்ற முன்னம் பொன்றினர் ; என்னும் புகழ் அல்லால் ,
இன்று ஓர் காறும் எல் வளையார் , தம் இறையோரைக்
கொன்றார் இல்லை ; கொல்லுதியோ நீ கொடியோளே ! '
2.3.41
1621 'ஏவம் பாராய் ; இன முறை நோக்காய் ; அறம் எண்ணாய் ;
ஆ ! என்பாயோ அல்லை ; மனத்தால் அருள் கொன்றாய் ;
நா அம்பால் என் ஆர் உயிர் உண்டாய் ; இனி , ஞாலம்
பாவம் பாராது இன் உயிர் கொள்ளப்படுகின்றாய் ! '
2.3.42
1622 'ஏண்பால் ஓவா நாண் மடம் அச்சம் இவையே தம்
பூண்பால் ஆகக் காண்பவர் நல்லார் , புகழ் பேணி
நாண்பால் ஓரா நங்கையர்தம் பால் நணுகாரே ;
ஆண்பாலாரே பெண்பாலாரோடு அடைவு ; அம்மா ! '
2.3.43
1623 'மண் ஆள்கின்றார் ஆகி , வலத்தால் மதியால் வைத்து
எண்ணாநின்றார் யாரையும் எல்லா இகலாலும்
விண்ணோர் காறும் வென்ற எனக்கு , என் மனை வாழும்
பெண்ணால் வந்தது அந்தரம் ; என்னப் பெறுவேனோ ? '
2.3.44
1624 என்று என்று உன்னும் ; பன்னி
      இரக்கும் ; இடர் தோயும் ;
ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல்
      உழக்கும் ; 'உயிர் உண்டோ ?
இன்று , இன்று ! ' என்னும் வண்ணம்
      மயங்கும் ; இடியும் ; பொன்
குன்று ஒன்று ஒன்றோடு ஒன்றியது
      என்னக் குவி தோளான் .
2.3.45
1625 கைகேயி கூற்று (1625-1626)
ஆழிப் பொன் தேர் மன்னவன் இவ் ஆறு அயர்வு எய்திப்
பூழிப் பொன் தோள் முற்றும் அடங்கப் புரள் போழ்தில் ,
`'ஊழில் பொய்த்தால் என் உரை இன்றே உயிர் மாய்வென் ;
பாழிப் பொன் தார் மன்னவ ! '' என்றாள் ; பசையற்றாள் .
2.3.46
1626 'அரிந்தான் முன் ஓர் மன்னவன்
      அன்றே அரும் மேனி ?
வரிந்து ஆர் வில்லாய் ! வாய்மை
      வளர்ப்பான் ; வரம் நல்கிப்
பரிந்தால் என் ஆம் ? ' என்றனள் ;
      பாயும் கனல் ஏ போல்
எரிந்து ஆறாது ஏ இன் உயிர்
      உண்ணும் எரி அன்னாள் .
2.3.47
1627 தயரதன் தந்தேன் எனல்
வீந்தாளே இவ் வெய்யவள்
      என்னா மிடல் வேந்தன் ,
'ஈந்தேன் ஈந்தேன் இவ் வரம் ;
      என் சேய் வனம் ஆள ,
மாய்ந்தே நான் போய் வான் உலகு
      ஆள்வென் , வசை வெள்ளம்
நீந்தாய் நீந்தாய் நின் மக
      னோடும் நெடிது ; ' என்றான் .
2.3.48
1628 தயரதன் செயலறுதலும் கைகேயி துயிலுறுதலும்
கூறாமுன்னம் , கூறுபடுக்கும் கொலை வாளின்
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்திடை மூழ்கத்
தேறான் ஆகிச் செய்கை மறந்தான் ; செயல் முற்றி
ஊறாநின்ற சிந்தையினாளும் துயில்வு உற்றாள் .
2.3.49
1629 கங்குலின் கழிவு
சேண் உலாவிய நாள் எலாம் உயிர்
      ஒன்று போல்வன செய்து , பின்
ஏண் உலாவிய தோளினான் இடர்
      எய்த ஒன்றும் இரங்கிலா ,
வாள் நிலா நகை மாதராள் செயல்
      கண்டு மைந்தர் முன் நிற்கவும்
நாணினாள் என ஏகினாள் நளிர்
      கங்குல் ஆகிய நங்கையே .
2.3.50
1630 கோழி கூவுதல்
எண் தரும் கடை சென்ற யாமம்
      இயம்புகின்றன-- ஏழையால்
வண்டு தங்கிய தொங்கல் மார்பன்
      மயங்கி விம்மிய ஆறு எலாம்
கண்டு , நெஞ்சு கலங்கி அம் சிறை
      ஆன காமர் துணைக் கரம்
கொண்டு தம் வயிறு எற்றி எற்றி
      விளிப்ப போன்றன கோழியே .
2.3.51
1631 பறவைகளின் ஒலி
தோய் கயத்தும் மரத்தும் மென் சிறை
      துள்ளி மீது எழு புள் எலாம் ,
தேய்கை ஒத்த மருங்குல் மாதர்
      சிலம்பின் நின்று சிலம்புவ ,
கேகயத்து அரசன் பயந்த
      விடத்தை இன்னது ஒர் கேடு சூழ்
மா கயத்தியை உள் கொதித்து
      மனத்து வைவன போன்றவே .
2.3.52
1632 யானைகள் துயிலெழல்
சேமம் என்பன பற்றி , அன்பு
      திருந்த இன் துயில் செய்தபின் ,
'வாம மேகலை மங்கையோடு
      வனம் அத்து உள் , யாரும் மறக்கிலா
நாம நம்பி , நடக்கும் ' என்று
      நடுங்குகின்ற மனத்தவாய் ,
'யாமும் இ மண் இறத்தும் ' என்பன போல்
      எழுந்தன-- யானையே .
2.3.53
1633 விண்மீன் மறைதல்
சிரித்த பங்கயம் ஒத்த செம் கண்
      இராமனைத் திருமாலை , அக்
கரிக் கரம் பொரு கை தலம் அத்து , உயர்
      காப்பு நாண் அணிதற்குமுன் ,
வரித்த தண் கதிர் முத்து அது ஆகி , இம்
      மண் அனைத்தும் நிழற்ற , மேல்
விரித்த பந்தர் பிரித்தது ஆம் என
      மீன் ஒளித்தன வானமே .
2.3.54
1634 காலை முரசொலி கேட்டுக் காரிகையார் எழுதல்
'நாம வில் கை இராமனைத் தொழும்
      நாள் அடைந்தது ; உமக்கு எலாம்
காம விற்கு உடை கங்குல் மாலை
      கழிந்தது ; ' என்பது கற்பியாத்
தாம் ஒலித்தன பேரி ; அவ் ஒலி
      சாரல் மாரி தழங்கல் ஆ
மா மயில் குலம் என்ன முன்னம்
      மலர்ந்து எழுந்தனர் மாதரே .
2.3.55
1635 தென்றல் வீசுதல்
இன மலர்க் குலம் வாய் விரித்து இள வாச மாருதம் வீச , முன்
புனை துகில் கலை சோர நெஞ்சு புழுங்கினார் சில பூவைமார் ;
மனம் அனுக்கம் விடத் தனித்தனி வள்ளலைப் புணர் கள்ள வன்
கனவினுக்கு இடையூறு அடுக்க மயங்கினார் சில கன்னிமார் .
2.3.56
1636 குமுதம் குவிந்தமை
சாய் அடங்க நலம் , கலந்து
      தயங்கு தன் குல நன்மையும்
போய் அடங்க , நெடுங் கொடும் பழி
      கொண்டு அரும்புகழ் சிந்தும் அத்
தீ அடங்கிய சிந்தையாள் செயல்
      கண்டு , சீரிய நங்கைமார்
வாய் அடங்கின என்ன வந்து
      குவிந்த வண் குமுதங்களே .
2.3.57
1637 காலைப் பாட்டு
மொய் அராகம் நிரம்ப , ஆசை முருங்கு தீயின் முழங்க , மேல்
வை அராவிய மாரன் வாளியும் , வால் நிலா நெடு வாடையும் ,
மெய் அராவிட , ஆவி சோர , வெதும்பும் மாதர்தம் மென் செவிப் ,
பை அரா நுழைகின்ற போன்றன , பண் கனிந்து எழு பாடலே .
2.3.58
1638 மைந்தர் துயிலெழல்
'ஆழியான் முடி சூடும் நாள் , இடை
      ஆன பாவி இது ஓர் இரா
ஊழி ஆயின ஆறு ! ' எனா , 'உயர்
      போதின் மேல் உறை பேதையும்
ஏழு லோகமும் எண் தவஞ் செய்த
      கண்ணும் , எங்கள் மனங்களும்
வாழும் நாள் இது ! ' எனா , எழுந்தனர் ;
      மஞ்சு தோய் புய மஞ்சரே .
2.3.59
1639 மாதர் துயில் எழுதல்
ஐ உறும் சுடர் மேனியான் எழில்
      காண மூளும் அவாவினால் ,
கொய் உறும் குல மா மலர்க் குவை
      நின்று எழுந்தனர் , கூர்மை கூர்
நெய் உறும் சுடர் வேல் நெடுங்கண்
      முகிழ்த்து நெஞ்சில் நினைப்பொடும்
பொய் உறங்கும் மடந்தைமார் , குழல்
      வண்டு பொம் என விம்மவே .
2.3.60
1640 ஊடியவர் கூடாது எழுதல்
ஆடகம் தரு பூண் முயங்கிட
      அஞ்சி அஞ்சி அநந்தரால்
ஏடு அகம் பொதி தார் பொருந்திட ,
      யாம பேரி இசைத்தலால் ,
சேடு அகம் புனை கோதை மங்கையர் ,
      சிந்தையில் செறி திண்மையால் ,
ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர் ,
      நையும் மைந்தர்கள் உய்யவே .
2.3.61
1641 காலை ஒலிகள்
தழை ஒலித்தன ; வண்டு ஒலித்தன ;
      தார் ஒலித்தன ; பேரி ஆம்
முழவு ஒலித்தன ; தேர் ஒலித்தன ;
      முத்து ஒலித்து எழும் அல்குலார்
இழை ஒலித்தன ; புள் ஒலித்தன ;
      யாழ் ஒலித்தன ; எங்கணும்
மழை ஒலித்தன போல் கலித்த
      மனத்தின் முந்து உறு வாசியே .
2.3.62
1642 விளக்கொளி மழுங்கல்
வையம் ஏழும் ஒர் ஏழும் ஆர் உயிரோடு
      கூட வழங்கும் அம்
மெய்யன் , வீரருள் வீரன் , மா மகன் மேல்
      விளைந்தது ஓர் காதலால் ,
நைய நைய நல் ஐம்புலன்கள்
      அவிந்து அடங்கி நடுங்குவான்
தெய்வ மேனி படைத்த செம் ஒளி
      போல் மழுங்கின தீபமே .
2.3.63
1643 பல்வகை வாத்திய ஒலிகள்
வங்கியம் பல தேன் விளம்பின ;
      வாணி முந்தின பாணியின்
பங்கி அம்பரம் எங்கும் விம்மின ;
      பம்பை பம்பின ; பல் வகை
பொங்கு இயம் பலவும் கறங்கின ;
      நூபுரங்கள் புலம்ப வெண்
சங்கு இயம்பின ; கொம்பு அலம்பின
      சாம கீதம் நிரந்தவே .
2.3.64
1644 சூரியன் தோன்றுதல்
தூபம் முற்றிய கார் இருள் பகை
      துள்ளி ஓடிட , உள் எழும்
தீபம் முற்றவும் நீத்து அகன்று என ,
      சேயது ஆர் உயிர் தேய , வெம்
பாபம் முற்றிய பேதை செய்த
      பகைத் திறத்தினில் , வெய்யவன்
கோபம் முற்றி மிகச் சிவந்தனன்
      ஒத்தனன் , குண குன்றிலே .
2.3.65
1645 தாமரை மலர்தல்
மூவராய் முதலாகி மூலமது
      ஆகி ஞாலமும் ஆகும் அத்
தேவதேவர் பிடித்த போர் வில்
      ஒடித்த சேவகர் , சேண் நிலம்
காவல் மா முடி சூடு பேர் எழில்
      காணலாம் எனும் ஆசை கூர்
பாவைமார் முகம் என்ன முன்னம்
      மலர்ந்த பங்கய ராசியே .
2.3.66
1646 கவிக்கூற்று
இன்ன வேலையின் , ஏழு வேலையும்
      ஒத்தபோல இரைத்து எழுந்து
அன்ன மாநகர் , 'மைந்தன் மா முடி
      சூடும் வைகல் இது ஆம் ' எனாத் ,
துன்னு காதல் துரப்ப வந்தவை
      சொல்லல் ஆம் வகை எம்மனோர்க்கு
உன்னல் ஆவன அல்ல என்னினும் ,
      உற்ற பெற்றி உணர்த்துவாம் .
2.3.67
1647 மங்கையர் புனைவு
குஞ்சரம் அனையார் சிந்தை கொள் இளையார் ,
பஞ்சினை அணிவார் ; பால் வளை தெரிவார் ;
அஞ்சனம் என வாள் அம்புகள் இடை ஏ
நஞ்சினை இடுவார் ; நாள் மலர் புனைவார் .
2.3.68
1648 மைந்தர் மகிழ்ச்சி
பொங்கிய உவகை வெள்ளம் பொழிதரக் , கமலம் பூத்த
சங்கை இல் முகத்தார் , நம்பி தம்பியர் அனையர் ஆனார் ,
செம் கயல் நறவம் மாந்திக் களிப்பன சிவணும் கண்ணார்
குங்குமச் சுவடு நீங்காக் குவவுத் தோள் குமரர் எல்லாம் .
2.3.69
1649 நகர மக்கள் மகிழ்ச்சி
மாதர்கள் , கற்பின் மிக்கார் , கோசலை மனத்தை ஒத்தார் ;
வேதியர் வசிட்டன் ஒத்தார் ; வேறு உள மகளிர் எல்லாம்
சீதையை ஒத்தார் ; அன்னாள் திருவினை ஒத்தாள் ; அவ் ஊர்
சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார் .
2.3.70
1650 அரசர்கூட்டம் வருகை
இமிழ் திரைப் பரவை ஞாலம் எங்கணும் வறுமை கூர ,
உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட வந்தது அன்றே ,
குமிழ் முலைச் சீதை கொண்கன் கோ முடி புனைதல் காண்பான்
அமிழ்து உணக் குழுமுகின்ற அமரரின் அரசர் வெள்ளம் .
2.3.71
1651 தெருவில் மக்கள் நெருங்குதல் (1651-1652)
பாகு இயல் பவளச் செவ்வாய்ப் பணை முலைப் பரவை அல்குல்
தோகையர் குழாமும் , மைந்தர் சும்மையும் துவன்றி , எங்கும் ,
'ஏகுமின் ஏகும் ' என்று என்று , இடை இடை நிற்றல் அல்லால் ,
போகில மீளகில்லா , பொன் நகர் வீதியெல்லாம் .
2.3.72
1652 'வேந்தரே பெரிது ' என்பாரும் , 'வீரரே பெரிது ' என்பாரும் ,
'மாந்தரே பெரிது ' என்பாரும் , 'மகளிரே பெரிது ' என்பாரும் ,
'போந்ததே பெரிது ' என்பாரும் , 'புகுவதே பெரிது ' என்பாரும் ,
தேர்ந்ததே தேரின் அல்லால் , யாவரே தெரியக் கண்டார் ?
2.3.73
1653 மகளிர் குழுமுதல்
குவளையின் எழிலும் வேலின்
      கொடுமையும் குழைத்துக் கூட்டித் ,
திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த
      நஞ்சினைத் தெரியத் தீட்டித் ,
தவள ஒண் மதியுள் வைத்த
      தன்மை சால் தடங்கண் நல்லார் ,
துவளும் நுண் இடையார் ஆடும்
      தோகை அம் குழாத்தில் தொக்கார் .
2.3.74
1654 முடிபுனை விழாவிற்கு வாராதோர்
நலம் கிளர் பூமி என்னும் நங்கையை நறும் துழாயின்
அலங்கலான் புணரும் செல்வம் காண வந்து அடைந்து இலாதார் ,
இலங்கையில் நிருதரே , இவ் ஏழ் உலகம் அத்து வாழும்
விலங்கலும் , ஆசை நின்ற விடா மத விலங்கலே ஆல் .
2.3.75
1655 மன்னர் முடிசூடும் மண்டபத்துப் புகுதல்
சந்திரர் கோடி என்னத் தரள வெண் கவிகை ஓங்க ,
அந்தரத்து அன்னம் எல்லாம் ஆர்ந்து என கவரி துன்ன ,
இந்திரற்கு உவமை சாலும் இருநிலக் கிழவர் எல்லாம்
வந்தனர் , மௌலி சூட்டும் மண்டபம் மரபில் புக்கார் .
2.3.76
1656 அந்தணர் புகுதல்
முன் பயந்து எடுத்த காதல் புதல்வனை முறையினோடும்
இல் பயன் சிறப்பிப்பாரின் ஈண்டிய உவகை தூண்ட ,
அற்புதன் திருவைச் சேரும் அருமணம் காணப் புக்கார் ,
நல் பயன் தவத்தின் உய்க்கும் நான்மறைக் கிழவர் எல்லாம் .
2.3.77
1657 பல்வகை நிகழ்ச்சிகள்
விண்ணவர் விசும்பு தூர்த்தார் ; விரி திரை உடுத்த கோல
மண்ணவர் திசைகள் தூர்த்தார் ; மங்கலம் இசைக்கும் சங்கம் ,
கண் அகன் முரசின் ஓதை , கண்டவர் செவிகள் தூர்த்த ;
எண் அரும் கனக மாரி எழு திரைக் கடல்கள் தூர்த்த .
2.3.78
1658 பல ஒளிகள்
விளக்கு ஒளி மறைத்த மன்னர்
      மின் ஒளி ; மகுடம் கோடி
துளக்கு ஒளி விசும்பின் ஊரும்
      சுடரையும் மறைத்த ; சூழ்ந்த
அளக்கர் வாய் முத்த மூரல்
      முறுவலார் அணியின் சோதி ,
வளைக்கல் ஆம் என்று அவ் வானோர்
      கண்ணையும் மறைத்த அன்று ஏ .
2.3.79
1659 வசிட்டன் வருகை
ஆயது ஓர் அமைதியின்கண் , ஐயனை மகுடம் சூட்டற்கு
ஏயும் மங்கலங்கள் ஆன யாவையும் இயையக் கொண்டு ,
தூய நால் மறைகள் வேத பாரகர் சொல்லத் , தொல்லை
வாயில்கள் நெருக்கம் நீங்க , மாதவக் கிழவன் வந்தான் .
2.3.80
1660 வசிட்டன் செயல்கள்
கங்கையே முதல ஆய கன்னி ஈறு ஆன தீர்த்த
மங்கலப் புனலும் , நாலு வாரியின் நீரும் , பூரித்து ,
அங்கியின் வினையிற்கு ஏற்ற யாவையும் அமைத்து , வீரச்
சிங்க ஆதனமும் வைத்துச் , செய்வன பிறவும் செய்தான் .
2.3.81
1661 மன்னனைக் கொணரச் சுமந்திரன் போதல்
கணிதம் நூல் உணர்ந்த மாந்தர் ,
      'காலம் வந்து அடுத்தது ' என்னப் ,
பிணி அற நோற்றுநின்ற
      பெரியவன் , `'விரைவின் ஏகி ,
மணி முடி வேந்தன் தன்னை
      வல்லையில் கொணர்தி '' என்னப் ,
பணி தலைநின்ற காதல்
      சுமந்திரன் பரிவின் சென்றான் .
2.3.82
1662 கைகேயி இராமனைக் கொணர்க எனல்
விண் தொட நிவந்த கோயில்
      வேந்தர் தம் வேந்தன் தன்னைக்
கண்டிலன் வினவக் கேட்டான் ,
      கைகயள் கோயில் நண்ணித்
தொண்டை வாய் மடந்தைமாரில்
      சொல்ல , மற்று அவரும் சொல்ல
பெண்டிரில் கூற்றம் அன்னாள் ,
      'பிள்ளையைக் கொணர்க ! ' என்றாள் .
2.3.83
1663 சுமந்திரன் இராமனிடம் கூறத்தொடங்கல்
'என்றனள் ' என்னக் கேட்டான் , எழுந்த பேர் உவகை பொங்கப்
பொன் திணி மாடவீதி பொருக்கென நீங்கிப் புக்கான் ;
தன் திரு உள்ளம் அத்து உள் ஏ தன்னையே நினையும் மற்றக்
குன்று இவர் தோளினானைத் தொழுது வாய் புதைத்துக் கூறும் .
2.3.84
1664 சுமந்திரன் சொல்
'கொற்றவர் , முனிவர் , மற்றும்
      குவலயத்து உள்ளார் , உன்னைப்
பெற்றவன் தன்னை போல
      பெரும் பரிவு இயற்றிநின்றார் ;
சிற்றவை தானும் ஆங்கே
      கொணர்க எனச் செப்பினாள் ; அப்
பொன் தட மகுடம் சூடப்
      போதுதி விரைவின் ' என்றான் .
2.3.85
1665 இராமன் புறப்பாடு
ஐயனும் அச் சொல் கேளா ,
      ஆயிரமௌலியானைக்
கை தொழுது , அரசவெள்ளம்
      கடல் எனத் தொடர்ந்து சுற்றத் ,
தெய்வ கீதங்கள் பாடத் ,
      தேவரும் மகிழ்ந்து வாழ்த்தத் ,
தையலார் இரைத்து நோக்கத் ,
      தாரணி தேரில் சென்றான் .
2.3.86
1666 இராமனைக் கண்ட மக்கள் மகிழ்ச்சி ((1666-1682))
திரு மணி மகுடம் சூடச்
      சேவகன் செல்கின்றான் என்று ,
ஒருவரின் ஒருவர் முந்தக் ,
      காதலோடு உவகை உந்த ,
இரு கையும் இரைத்து மொய்த்தார் ;
      இன் உயிர் யார்க்கும் ஒன்றாய்ப்
பொரு அரு தேரில் செல்லப்
      புறத்திடைக் கண்டார் போல்வார் .
2.3.87
1667 துண் எனும் சொல்லாள் சொல்லச் சுடர் முடி துறந்து , தூய
மண் எனும் திருவை நீங்கி வழி கொளா முன்னம் , வள்ளல் ,
பண் எனும் சொல்லினார்தம் தோள் எனும் பணைத்த வேயும் ,
கண் எனும் கால வேலும் , மிடை நெடும் கானம் புக்கான் .
2.3.88
1668 சுண்ணமும் மலரும் சாந்தும்
      கனகமும் தூவ வந்து ,
வண்ண மேகலையும் நாணும்
      வளைகளும் தூவுவாரும் ;
புண் உற அனங்கன் வாளி
      புழைத்த தம் புணர் மென் கொங்கை
கண் உறப் பொழிந்த காம
      வெம் புனல் கழுவுவாரும் .
2.3.89
1669 'அம் கணன் அவனி காத்தற்கு
      ஆம் இவன் ' என்னல் ஆமோ ?
'நம் கண் அன்பு இலன் ; ' என்று உள்ளம்
      தள்ளுற நடுங்கி நைவார் ;
'செங்கணும் கரிய கோல
      மேனியும் தேரும் ஆகி ,
எங்கணும் தோன்றுகின்றான்
      எனைவரோ இராமன் ? ' என்பார் .
2.3.90
1670 இனையர் ஆய் மகளிர் எல்லாம்
      இரைத்தனர் நிரைத்து மொய்த்தார் ;
முனைவரும் நகர மூதூர்
      முதியரும் இளைஞர் தாமும்
அனையவன் மேனி கண்டார் ;
      அன்பினுக்கு எல்லை காணார்
நினைவினர் மனத்தால் வாயால்
      எநிகழ்ந்தது நிகழ்த்தல் உற்றாம் .
2.3.91
1671 'உய்ந்தது இவ் உலகம் ! ' என்பார் ;
      'ஊழி காண்கிற்பாய் ! ' என்பார் ;
'மைந்த ! நீ கோடி எங்கள்
வாழ்க்கைநாள் யாவும் ! ' என்பார் ;
'ஐந்து அவித்து அரிதில் செய்த
தவம் உனக்கு ஆக ! ' என்பார் ;
'பைந்துழாய்த் தெரியலாய்க்கே
நல்வினை பயக்க ! ' என்பார் .
2.3.92
1672 'உயர் அருள் ஒண் கண் ஒக்கும்
தாமரை , நிறத்தை ஒக்கும்
புயல் பொழி மேகம் , என்ன
புண்ணியம் செய்த ? ' என்பார் ;
'செயல் அரும் தவங்கள் செய்து இச்
செம்மலைத் தந்த செல்வத்
தயரதற்கு என்ன கைம்மாறு
உடையம் யாம் தக்கது ? ' என்பார் .
2.3.93
1673 'வாரணம் அரற்ற வந்து , கரா உயிர் மாற்றும் நேமி
நாரணன் ஒக்கும் , இந்த நம்பிதன் கருணை ! ' என்பார் ;
ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கிக் ,
காரணம் இன்றியேயும் , கண்கள் நீர் கலுழ நிற்பார் .
2.3.94
1674 'நீல மா முகில் அனான்தன் நிறையினோடு அறிவும் நிற்க ,
சீலம் ஆர்க்கு உண்டு ? கெட்டேன் ! தேவரின் அடங்குவானோ ?
காலமாக் கணிக்கும் நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற
மூலமாய் , முடிவு இலாத மூர்த்தி இம் முன்பன் ! ' என்பார் .
2.3.95
1675 'ஆர்கலி அகழ்ந்தோர் கங்கை
அவனியில் கொணர்ந்தோர் , முந்தைப்
போர் கெழு புலவர்க்கு ஆகி
அசுரரைப் பொருது வென்றோர் ,
பேர் கெழு சிறப்பின் வந்த
பெரும் புகழ் நிற்பது ஐயன் ,
தரர் கெழு திரள் தோள் தந்த
புகழினைத் தழுவி ! ' என்பார் .
2.3.96
1676 'சந்தம் இவை , தா இல் மணி ஆரம் இவை யாவும் ,
சிந்துரமும் , இங்கு இவை செறிந்த மத வேழப்
பந்திகள் , வயப்பரி , பசும்பொனின் வெறுக்கை ,
மைந்த ! வறியோர் கொள வழங்கு ! ' என நிரைப்பார் .
2.3.97
1677 மின் பொருவு தேரின் மிசை வீரன் வரு போழ்தில் ,
தன் பொரு இல் கன்று தனி தாவி வரல் கண்டு , ஆங்கு
அன்பு உருகு சிந்தையொடும் ஆ உருகுமாபோல்
என்பு உருகி நெஞ்சு உருகி நஞ்சு உருகி நிற்பார் .
2.3.98
1678 'சத்திரம் நிழற்ற நிமிர் தானையொடு நானா
அத்திரம் நிழற்ற அருளோடு அவனி ஆள்வார் ,
புத்திரர் இனிப் பெறுதல் புல்லிது ; ' என நல்லோர் ,
சித்திரம் எனத் தனி திகைத்து உருகி நிற்பார் .
2.3.99
1679 'கார் மினொடு உலாயது என நூல் கஞலும் மார்பன்
தேர் மிசை நம் வாயில் கடிது ஏகுதல் செய்வான் ஓ ?
கூர் கனக ராசியொடு கோடி மணியாலும்
தூர்மின் நெடு வீதியினை ! ' என்று சொரிவாரும் .
2.3.100
1680 'தாய் கையில் வளர்ந்திலன் ; வளர்த்தது தவத்தால்
கேகயன் மடந்தை ; கிளர் ஞாலம் இவன் ஆள ,
ஈகையில் உவந்த அவ் இயற்கை இது ; என்றால் ,
தோகை இவள் பேர் உவகை சொல்லல் அரிது ! ' என்பார் .
2.3.101
1681 'பாவமும் அரும் துயரும் வேர் பறியும் ! ' என்பார் ;
'பூவலயம் இன்று தனி அன்று பொது ! ' என்பார் ;
'தேவர் பகை உள்ளன இவ் வள்ளல் தெறும் ! ' என்பார் ;
'ஏவல் செயும் மன்னர் தவம் யாவது கொல் ? ' என்பார் .
2.3.102
1682 ஆண்டு இனையர் ஆய் இனைய கூற , அடல் வீரன் ,
தூண்டு புரவிப் பொரு இல் சுந்தர மணித் தேர்
நீண்ட கொடி மாட நிரை வீதி நிறையப் போய்ப் ,
பூண்ட புகழ் மன்னன் உறை கோயில் புகலோடும் .
2.3.103
1683 அரண்மனையில் அரசனைக் காணாமை
ஆங்கு வந்து அடைந்த அண்ணல் , ஆசையின் கவரி வீசப் ,
பூ குழல் மகளிர் ஆடும் புதுக் களி ஆட்டம் நோக்கி ,
வீங்கு இரும் காதல் காட்டி , விரி முகக் கமல பீடம் அத்து
ஓங்கிய மகுடம் சூடி , உவகை வீற்று இருப்ப காணான் .
2.3.104
1684 இராமன் கைகேயியின் கோயில் புகுதல்
வேத்து அவை முனிவரோடு
      விருப்பொடு களிக்கும் , மெய்மை
ஏத்து அவை இசைக்கும் , செம்பொன்
      மண்டபம் இனிதின் எய்தான்
ஓத்து அவை உலகத்து எங்கும்
      உள்ளவை உணர்ந்தார் உள்ளம்
பூத்தவை வடிவை ஒப்பான்
      சிற்றவை கோயில் புக்கான் .
2.3.105
1685 மக்கள் பேச்சு
புக்கவன் தன்னை நோக்கிப் புரவலர் , முனிவர் யாரும்
'தக்கதே நினைந்தான் ; தாதை தாமரைச் சரணம் சூடித்
திக்கினை நிமிர்த்த கோல் அச் செல்வனே செம் பொன் சோதி
மிக்கு உயர் மகுடம் சூட்டச் சூடுதல் விழுமிது ' என்றார் .
2.3.106
1686 இராமன்முன் கைகேயி வருதல்
ஆயன நிகழும் வேலை , அண்ணலும் அயர்ந்து தேறாத் ,
தூயவன் இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி ,
'நாயகன் உரையான் வாயால் , நான் இது பகர்வேன் ' என்னாத்
தாய் என நினைவான் முன்னே கூற்று எனத் தமியள் வந்தாள் .
2.3.107
1687 இராமன் கைகேயியை வணங்கி நிற்றல்
வந்தவள் தன்னைச் சென்னி
      மண் உற வணங்கி , வாய்த்த
சிந்துரப் பவளச் செவ்வாய்
      செங்கையில் புதைத்து , மற்றைச்
சுந்தரத் தட கை தானை
      மடக்கு உற , துவண்டு நின்றான் ;
அந்தி வந்து அடைந்த தாயைக்
      கண்ட ஆன் கன்றின் அன்னான் .
2.3.108
1688 கைகேயி கூற்று
நின்றவன்தன்னை நோக்கி
      இரும்பினால் இயன்ற நெஞ்சின்
கொன்று உழல் கூற்றம் என்னும்
      பெயர் இன்றிக் கொடுமை பூண்டாள் ,
'இன்று எனக்கு உணர்த்தல் ஆவது
      ஏயதே என்னின் ஆகும் ;
ஒன்று உனக்கு உந்தை , மைந்த !
      உரைத்தது ஓர் உரை உண்டு ' என்றாள் .
2.3.109
1689 இராமன் கூறுதல்
`'எந்தையே ஏவ , நீரே
      உரைசெய இயைவது உண்டேல் ,
உய்ந்தனன் அடியேன் ; என்னில்
      பிறந்தவர் உளரோ ? வாழி !
வந்தது என் தவத்தின் ஆய
      வரு பயன் மற்று ஒன்று உண்டு ஓ ?
தந்தையும் தாயும் நீரே ;
      தலைநின்றேன் பணிமின் ! '' என்றான் .
2.3.110
1690 கைகேயி கட்டளை இதுவெனல்
`''ஆழி சூழ் உலகம் எல்லாம்
      பரதனே ஆள , நீ போய்த்
தாழ் இரும் சடைகள் தாங்கித் ,
      தாங்க அரும் தவம் மேற் கொண்டு ,
பூழி வெம் கானம் நண்ணிப் ,
      புண்ணியத் துறைகள் ஆடி ,
ஏழ் இரண்டு ஆண்டின் வா ' என்று
      இயம்பினன் அரசன் '' என்றாள் .
2.3.111
1691 கவிக் கூற்று ((1691-1692))
இ பொழுது எம் அனோரால்
      இயம்புதற்கு எளிதே ! யாரும்
செப்ப(அ)ரும் குணத்து இராமன்
      திரு முகம் செவ்வி நோக்கில்
ஒப்பதே முன்பு ; பின்பு அவ்
      வாசகம் உணரக் கேட்ட
அப்பொழுது அலர்ந்த செந்தா
      மரையினை வென்றது அம்மா !
2.3.112
1692 தெருள் உடை மனத்து மன்னன்
      ஏவலில் திறம்பல் அஞ்சி
இருள் உடை உலகம் தாங்கும்
      இன்னலுக்கு இயைந்து நின்றான் ,
உருள் உடைச் சகடம் பூட்ட
      உடையவன் உய்த்த கார் ஏறு
அருள் உடை ஒருவன் நீக்க
      அ பரம் அகன்றது ஒத்தான் .
2.3.113
1693 இராமன் விடைபெறுதல் ((1693-1694))
'மன்னவன் பணி அன்று ஆகில்
      நும் பணி மறுப்பன் ஓ ? என்
பின்னவன் பெற்ற செல்வம்
      அடியனேன் பெற்றது அன்று ஓ ?
என் இனி உறுதி அப்பால் ?
      இப்பணி தலைமேல் கொண்டேன் ;
மின் ஒளிர் கானம் இன்றே
      போகின்றேன் ; விடையும் கொண்டேன் . '
2.3.114
1694 இராமன் கோசலைபால் செல்லுதல் ((1994-1695))
என்று கொண்டு இனைய கூறி , அடி இணை இறைஞ்சி மீட்டும் ,
தன் துணைத் தாதை பாதம் அ திசை நோக்கித் தாழ்ந்து ,
பொன் திணி போதினாள் உம் பூமியும் புலம்பி நையக் ,
குன்றினும் உயர்ந்த தோளான் கோசலை கோயில் புக்கான் .
2.3.1152.4 . நகர் நீங்கு படலம் (1695- 1929 )

1695 குழைக்கின்ற கவரி இன்றிக் ,
      கொற்ற வெண் குடை உம் இன்றி ,
இழைக்கின்ற விதி முன் செல்லத் ,
      தருமம் பின் இரங்கி ஏக ,
'மழை குன்றம் அனையான் மௌலி
      கவித்தனன் வரும் ' என்று என்று ,
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்
      முன் , ஒரு தமியன் சென்றான் .
2.4.1
1696 கோசலையின் வினா
'புனைந்திலன் மௌலி ! குஞ்சி
      மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன் ! என்கொல் ? ' என்னும்
      ஐயத்தாள் , நளின பாதம் ,
வனைந்த பொன் கழல் கால் வீரன்
      வணங்கலும் , குழைந்து வாழ்த்தி ,
'நினைந்தது என் ? இடையூறு உண்டோ
      நெடும் முடி புனைதற்கு ? ' என்றாள் .
2.4.2
1697 'பரதன் முடிசூடுகின்றான் ' என இராமன் கூறல்
மங்கை அ மொழி கூறலும் மானவன் ,
செங்கை கூப்பி , `'நின் காதல் திரு மகன் ,
பங்கம் இல் குணத்து எம்பி பரதனே
துங்க மா முடி சூடுகின்றான் '' என்றான் .
2.4.3
1698 கோசலை 'முடிசூடப் பரதன் தக்கவனே ' எனல்
`'முறைமை அன்று என்பது ஒன்று உண்டு ; மும்மையின்
நிறை குணத்தவன் நின்னினும் நல்லன் ஆல் ;
குறைவு இலன் ; `' எனக் கூறினள் , நால்வர்க்கும்
மறு இல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள் .
2.4.4
1699 கோசலை 'பரதனோடு ஒன்றி வாழ்க ' எனல்
என்று , பின்னரும் , `'மன்னவன் ஏவியது
அன்று எனாமை மகனே ! உனக்கு அறன் ;
நன்று நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து
ஒன்றி வாழுதி ஊழி பல '' என்றாள் .
2.4.5
1700 இராமன் 'மன்னனேவிய மற்றோர் பணியுண்டு ' எனல்
தாய் உரைத்த சொல் கேட்டுத் , தழைக்கின்ற
தூய சிந்தை அத் தோம் இல் குணத்தினான் ,
`'நாயகன் எனை நல் நெறி உய்ப்பதற்கு
ஏயது உண்டு ஒர் பணி '' என்று இயம்பினான் .
2.4.6
1701 இராமன் தந்தை பணி இதுவெனல்
'ஈண்டு உரைத்த பணி என்னை ? ' என்றவட்கு
`'ஆண்டு ஒர் ஏழினொடு ஏழ் அகன் கான் இடை
மாண்ட மா தவர் ஓடு உடன் வைகிப் பின்
மீண்டு நீ வரல் வேண்டும் என்றான் '' என்றான் .
2.4.7
1702 கான்புகல் கேட்ட கோசலைநிலை ((1702-1707))
ஆங்கு அவ் வாசகம் என்னும் அனல் குழை
தூங்கு தன் செவியில் தொடரா முனம் ,
ஏங்கினாள் , இளைத்தாள் , திகைத்தாள் , மனம் ,
வீங்கினாள் , விம்மினாள் , விழுந்தாள் , அரோ .
2.4.8
1703 `'வஞ்சமோ , மகனே ! உனை 'மா நிலம்
தஞ்சமாக நீ தாங்கு ' என்ற வாசகம் ?
நஞ்சமோ ? இனி நான் உயிர் வாழ்வென் ஓ ?
அஞ்சும் அஞ்சும் ! என் ஆருயிர் அஞ்சும் ஆல் ! ''
2.4.9
1704 கையைக் கையின் நெரிக்கும் ; தன் காதலன் ,
வைகும் ஆல் இலை அன்ன வயிற்றினைப்
பெய் வளைத் தளிரால் பிசையும் ; புகை
வெய்து உயிர்க்கும் ; விழுங்கும் ; புழுங்குமால் .
2.4.10
1705 'நன்று மன்னன் கருணை ! ' எனா நகும் ;
நின்ற மைந்தனை நோக்கி , 'நெடும் சுரம் அத்து
என்று போவது ? ' என எழும் ; இன் உயிர்
பொன்றும்போது உற்றது உற்றது போலும் ஏ .
2.4.11
1706 'அன்பு இழைத்த மனம் அத்து அரசற்கு நீ ,
என் பிழைத்தனை ? ' என்று நின்று ஏங்கும் ஆல் ;
முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர்
பொன் பிழைக்கப் பொதிந்தனர் போல ஏ .
2.4.12
1707 'அறம் எனக்கு இலை ஓ ? ' எனும் ; 'ஆவி நைந்து
இற அடுத்தது என் ? தெய்வதங்காள் ! ' எனும் ;
பிற உரைப்பது என் ? கன்று பிரிந்துழிக்
கறவை ஒப்பக் கரைந்து , கலங்கினாள் .
2.4.13
1708 இராமன் கோசலையைத் தேற்றுதல் ((1708-1711))
இத் திறத்தின் இடர் உறுவாள் தனை
கை தலத்தின் எடுத்து , 'அருங் கற்பினோய் !
பொய்த் திறத்தினன் ஆக்குதி ஓ ? புகல் ;
மெய்த்திறத்து நம் வேந்தனை நீ ' என்றான் .
2.4.14
1709 பொற்பு உறுத்தன , மெய்ம்மை , பொதிந்தன ,
சொல் பொறுத்தற்கு உரியன , சொல்லினான் ;
கற்பு உறுத்திய கற்பு உடையாள் தனை
வற்புறுத்தி மனம் கொளத் தேற்றுவான் .
2.4.15
1710 'சிறந்த தம்பி திரு உற , எந்தையை
மறந்தும் பொய் இலன் ஆக்கி , வனத்து இடை
உறைந்து தீரும் உறுதி பெற்றேன் ; இதின் ,
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ ? '
2.4.16
1711 'விண்ணும் , மண்ணும் , இவ் வேலையும் , மற்றும் வேறு
எண்ணும் பூதம் எலாம் இறந்து ஏகினும் ,
அண்ணல் ஏவல் மறுக்க அடியனேற்கு
ஒண்ணுமோ ? இதற்கு உள் அழியேல் ! ' என்றான் .
2.4.17
1712 கோசலையும் 'வனத்திற்கு வருவேன் ' எனல்
`'ஆகின் , ஐய ! 'அரசன்தன் ஆணை ஆல்
ஏகல் ' என்பது யானும் உரைக்கலேன் ;
சாகலா உயிர் தாங்க வல்லேனையும் ,
போகின் , நின்னொடும் கொண்டனை போகு '' என்றாள் .
2.4.18
1713 இராமன் மறுமொழி ((1713-1719))
'என்னை நீங்கி இடர் கடல் வைகுறும்
மன்னர் மன்னன் ஐ வற்புறுத்தாது , உடன்
துன்னு கானம் தொடரத் துணிவது ஓ ?
அன்னையே ! அறம் பார்க்கிலை ஆம் ' என்றான் .
2.4.19
1714 'வரி வில் எம்பி இ மண் அரசு ஆய் , அவற்கு
உரிமை மாநிலம் உற்றபின் , கொற்றவன் ,
திருவின் நீங்கித் தவம் செயும் நாள் , உடன்
அருமை நோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே . '
2.4.20
1715 'சித்தம் நீ திகைக்கின்றது என் ? தேவரும்
ஒத்த மா தவம் செய்து உயர்ந்தார் அன்று ஏ ?
எத்தனைக்கு உள ஆண்டுகள் ? ஈண்டு அவை
பத்தும் நாலும் பகல் அலவோ ? ' என்றான் .
2.4.21
1716 'முன்னர்க் கோசிகன் என்னும் முனிவரன்
தன் அருள் தலை தாங்கிய விஞ்சையும்
பின்னர் எய்திய பேறும் , பிழைத்த ஓ ?
இன்னம் நன்று , அவர்க்கு ஏயின செய்தலே . '
2.4.22
1717 'மா தவர்க்கு வழிபாடு இழைத்து , அரும்
போதம் முற்றிப் , பொரு அரு விஞ்சைகள்
ஏதம் அற்றன தாங்கி , இமையவர்
காதல் பெற்று , இ நகர் வரக் காண்டி ஆல் . '
2.4.23
1718 'மகர வேலை மண் தொட்ட வண்டு ஆடு தார்ச்
சகரர் , தாதை பணி தலைநின்று , தம்
புகர் இல் யாக்கையின் இன் உயிர் போக்கிய
நிகர் இல் மாப் புகழ் நின்றது அன்று ஓ ? ' எனா .
2.4.24
1719 'மான் மறி கரத்தான் மழு ஏந்துவான் ,
தான் மறுத்திலன் தாதை சொல் , தாயை ஏ
ஊன் அறக் குறைத்தான் ; உரவோன் அருள்
யான் மறுப்பது என்று எண்ணுவது ஓ ? ' என்றான் .
2.4.25
1720 கோசலை சிந்தனை
இத்திறத்த எனைப் பல வாசகம்
உய்த்து உரைத்த மகன் உரை உட்கொளா ,
'எ திறத்தும் இறக்கும் இ நாடு ' எனா ,
மெய்த் திறத்து விளங்கு இழை உன்னுவாள் .
2.4.26
1721 கோசலை தயரதனிடம் போதல்
'அவனி காவல் பரதனது ஆகுக ;
இவன் இஞ் ஞாலம் இறந்து இரும் கான் இடை
தவன் நிலாவகை காப்பென் , தகைவு இலாப்
புவனி நாதன் தொழுது ' என்று போயினாள் .
2.4.27
1722 இராமன் சுமித்திரைமாளிகைக்குப் போதல்
போகின்றாளைத் தொழுது , புரவலன் ,
'ஆக ; மற்றிவள் தன்னையும் ஆற்றி , இச்
சோகம் தீர்ப்பவள் ' என்று சுமித்திரை
மேகம் தோய் தனிக் கோயிலை மேயினான் .
2.4.28
1723 தயரதனைக் கண்ட கோசலையின் நிலை
நடந்த கோசலை , கேகயநாட்டு இறை
மடந்தை கோயிலை எய்தினள் ; மன்னவன்
கிடந்த பார் மிசை வீழ்ந்தனள் , கெட்டு உயிர்
உடைந்த போழ்தின் உடல் விழுந்தென்னவே .
2.4.29
1724 கோசலை அரற்றல் ((1724-1727))
'பிறியார் பிரிவு ஏது ? ' என்னும் ;
      'பெரியோய் ! தகவோ ? ' என்னும் ;
'நெறியோ ? அடியேம் நிலை நீ
      நினையா நினைவு ஏது ? ' என்னும் ;
'வறியோர் தனமே ! ' என்னும் ;
      'தமியேன் வலியே ! ' என்னும் ;
'அறிவோ ? வினையோ ? ' என்னும் ;
      'அரசே ! அரசே ! ' என்னும் .
2.4. 30
1725 'இருள் அற்றிட உற்று ஒளிரும்
      இரவிக்கு எதிரும் திகிரி
உருளத் தனி உய்த்து , ஒரு கோல்
      நடவிக் , கடைகாண் உலகம்
பொருள் அற்றிட முற்றுறும் அப்
      பகலில் புகுதற்கு என்றோ ?
அருளக் கருதிற்று இதுவோ !
      அரசர்க்கு அரசே ! ' என்னும் .
2.4. 31
1726 'திரையார் கடல் சூழ் உலகின்
      தவமே ! திருவின் திருவே !
நிரையார் கலையின் கடலே !
      நெறியார் மறையின் நிலையே !
கரையா அயர்வேன் எனை , நீ ,
      கருணை ஆலயன் ஏ ! என் ? என்று
உரையா இதுதான் அழகோ ?
      உலகு ஏழ் உடையாய் ! ' என்னும் .
2.4. 32
1727 'மின் நின்று அனைய மேனி
      வெறிது ஆய் விட நின்றது போல் ,
உன்னும் தகைமைக்கு அடையா
      உறுநோய் உறுகின்று உணரான் ;
என் ? என்று உரையான் ; என்னே !
      இதுதான் யாது ? என்று அறியேன் ;
மன்னன் தகைமை காண
      வாராய் , மகனே ! ' என்னும் .
2.4. 33
1728 வசிட்டன் வருகை
இவ்வாறு அழுவாள் இரியல்
      குரல் சென்று இசையாமுன்னம் ,
'ஒவ்வாது ! ஒவ்வாது ! ' என்னா ,
      ஒளி வாள் நிருபர் , 'முனிவ !
அ வாறு அறிவாய் ' என்ன ,
      வந்தான் முனிவன் ; அவனும் ,
வெம் வாள் அரசன் நிலை கண்டு ,
      'என்னாம் விளைவு ? ' என்று உன்னா .
2.4. 34
1729 வசிட்டன் நினைவு
'இறந்தான் அல்லன் அரசன் ;
      இறவாது ஒழிவான் அல்லன் ;
மறந்தான் உணர்வு ' என்று உன்னா ,
      வன் கேகயர் கோன் மங்கை ,
துறந்தாள் துயரம் தன்னை ;
      துறவாது ஒழிவாள் இவள் ஏ ;
பிறந்தார் பெயரும் தன்மை
      பிறரால் அறிதற்கு எளிது ஓ ? '
2.4. 35
1730 கைகேயி கூறல்
என்னா உன்னா , முனிவன் ,
      இடரால் அழுவாள் துயரம்
சொன்னாள் ஆகாள் , என , முன்
      தொழு கேகயர்கோன் மகளை ,
'அன்னாய் ! உரையாய் , அரசன்
      அயர்வான் நிலை என் ? ' என்னத் ,
தன்னால் நிகழ்ந்த தன்மை
      தானே தெரியச் சொன்னாள் .
2.4. 36
1731 வசிட்டன் மன்னனைத் தேற்றுதல்
சொற்றாள் சொல்லாமுன்னம் ,
      சுடர் வாள் அரசற்கு அரசைப்
பொன் தாமரை போல் கையால்
      பொடி சூழ் படிநின்று எழுவிக் ,
`'கற்றாய் ! அயரேல் ; அவளே
      தரும் நின் காதற்கு அரசை ;
எற்றே செயல் ? இன்று ஒழி நீ ''
      என்று என்று , இரவாநின்றான் .
2.4. 37
1732 தயரதன் மயக்கம் தெளிதல்
சீதப் பனி நீர் அளவித்
      திண் கால் உக்கம் மென் கால்
போதத்து அளவே தவழ்வித்து ,
      இன் சொல் புகலாநின்றான் ;
ஓதக் கடல் நஞ்சு அனையாள்
      உரை நஞ்சு ஒருவாறு அவியக் ,
காதல் புதல்வன் பெயரே
      புகல்வான் உயிரும் கண்டான் .
2.4. 38
1733 வசிட்டன் 'வருந்தேல் ' எனல்
காணா , 'ஐயா ! இனி நீ
      ஒழிவாய் கழி பேர் அவலம்
ஆண் நாயகனே இனிநாடு
      ஆள்வான் ; இடையூறு உளதோ ?
மாணா உரையாள் தானே
      தரும் ; மா மழையே அனையான்
பூணாது ஒழிவான் எனில் யாம்
      உளமோ ? பொன்றேல் ' என்றான் .
2.4. 39
1734 தயரதன் வசிட்டனை வேண்டுதல்
என்ற அம் முனிவன் தன்னை
      நினையா வினையேன் இனியான்
பொன்றும் அளவில் , அவனைப்
      புனை மா மகுடம் புனைவித்து ,
ஒன்றும் வனம் என்று உன்னா
      வண்ணம் செய்து , என் உரையும்
குன்றும் பழி பூணாமல்
      காவாய் , கோவே ! ' என்றான் .
2.4. 40
1735 வசிட்டன் கைகேயியை வேண்டுதல்
முனியும் , முனியும் செய்கைக்
      கொடியாள் முகமே முன்னி ,
'இனி , உன் புதல்வற்கு அரசும் ,
      ஏனையோர்க்கு இன் உயிரும் ,
மனுவின் வழி நின் கணவற்கு
      உயிரும் உதவி , வசை தீர்
புனிதம் மருவும் புகழே
      புனையாய் பொன்னே ! ' என்றான் .
2.4. 41
1736 கைகேயியின் மறுமொழி
மொய் மாண் வினை வேர் அற வென்று
      ஒழிவான் மொழியாமுன்னம் ,
விம்மா அழுவாள் , 'அரசன்
      மெய்யில் திரிவான் என்னில் ,
இம் மா உலகத்து உயிரோடு
      இனி வாழ்வு உகவேன் ; என்சொல்
பொய் மாணாமற்கு இன்றே
      பொன்றாது ஒழியேன் ' என்றாள் .
2.4. 42
1737 முனிவன் முனிந்து மொழிதல் ((1737-1739))
'கொழுநன் துஞ்சும் எனவும் ,
      கொள்ளாது உலகம் எனவும் ,
பழி நின்று உயரும் எனவும் ,
      பாவம் உளதாம் எனவும் ,
ஒழிகின்றிலை ; அன்றியும் ஒன்று
      உணர்கின்றிலை ; யான் இனிமேல்
மொழிகின்றன என் ? ' என்னா
      முனியும் 'முறை அன்று ' என்பான் .
2.4. 43
1738 கண் ஓடாதே , கணவன்
      உயிர் ஓடு இடர் காணாதே ,
புண்ணோடு ஓடும் கனலோ
      விடமோ என்னப் புகல்வாய் !
பெண் ஓ ? தீ ஓ ? மாயாப்
      பேய் ஓ ? கொடியாய் ! நீ ; இம்
மண்ணோடு உன்னோடு என் ஆம் ?
      வசையோ வலிதே ' என்றான் .
2.4. 44
1739 'வாயால் மன்னன் மகனை
      வனம் ஏகு என்னா முன்னம் ,
நீயோ சொன்னாய் ; அவனோ
      நிமிர் கான் இடை வல் நெறியில்
போயோ புகலோ தவிரான் ;
      புகழோடு உயிரைச் சுடு வெந்
தீயோய் ! நின்போல் தீயோர்
      உளரோ ? செயல் என் ! ' என்றான் .
2.4. 35
1740 தயரதன் கைகேயியை நோதல் ((1740-1742))
தாவு இல் முனிவன் புகலத் ,
      தளராநின்ற மன்னன் ,
நாவில் நஞ்சம் உடைய
      நங்கை தன்னை நோக்கிப் ,
'பாவி நீயே வெம் கான்
      படர்வாய் என்று என் உயிரை
ஏவினாய் ஓ ? அவனும்
      ஏகினானோ ? ' என்றான் .
2.4. 46
1741 'கண்டேன் நெஞ்சம் ; கனிவு ஆய்க்
      கனி வாய் விடம் நான் நெடுநாள்
உண்டேன் ; அதனால் , நீ என்
      உயிரை முதலோடு உண்டாய் ;
பண்டே எரி முன் உன்னைப் ,
      பாவீ ! தேவி ஆகக்
கொண்டேன் அல்லேன் , வேறு ஓர் கூற்றம்
      தேடிக் கொண்டேன் . '
2.4. 47
1742 'விழிக்கும் கண் வேறு இல்லா
      வெம் கான் என் கான்முளையைச்
சுழிக்கும் வினையால் ஏகச்
      சூழ்வாய் , என்னைப் போழ் வாய் ;
பழிக்கும் நாணாய் , மாணாப்
      பாவி ! இனி என் பல ? உன்
கழுத்தின் நாண் உன் மகற்குக்
      காப்பின் நாண் ஆம் ; ' என்றான் .
2.4. 48
1743 தயரதன் வசிட்டனிடம் கூறல்
இன்னே பலவும் பகர்வான் ,
      இரங்காதாளை நோக்கிச்
'சொன்னேன் ; இன்றே இவள் என்
      தாரம் அல்லள் , துறந்தேன் ;
மன்னே ஆவான் வரும் அப்
      பரதன் தனை உம் மகன் என்று
உன்னேன் , முனிவா ! அவன் என்
      உரிமைக்கு ஆகான் ' என்றான் .
2.4. 49
1744 கோசலையின் நிலை ((1744-1745))
'என்னைக் கண்டும் ஏகா
      வண்ணம் இடையூறு உடையான்
உன்னைக் கண்டும் இலனோ ? '
      என்றான் , உயர் கோசலையை ;
பின்னைக் கண்தான் அனையான்
      பிரியக் கண்ட துயரம்
தன்னைக் கண்டே தவிர்வாள்
      தளர்வான் நிலையில் தளர்வாள் .
2.4. 50
1745 மாற்றாள் செயல் ஆம் என்றும் ,
      கணவன் வரம் ஈந்து உள்ளம்
ஆற்றாது அயர்ந்தான் என்றும்
      அறிந்தாள் ; அவளும் அவனைத்
தேற்றா நின்றாள் ; மகனைத்
      திரிவான் என்றாள் ; அரசன்
'தோற்றான் மெய் ' என்று உலகம்
      சொல்லும் பழிக்கும் சோர்வாள் .
2.4. 51
1746 கோசலையின் கூற்று
'தள்ளா நிலை சால் மெய்ம்மை
      தழுவா வழுவா வகை நின்று
எள்ளா நிலை கூர் பெருமைக்கு
      இழிவாம் என்றால் , உரவோய் !
விள்ளா நிலை சேர் அன்பால்
      மகன்மேல் மெலியின் , உலகம்
கொள்ளாது அன்றோ ? ' என்றாள் ,
      கணவன் குறையக் குறைவாள் .
2.4. 52
1747 கவிக்கூற்று
'போவாது ஒழியான் ' என்னாள் ;
      புதல்வன் அகலக் கணவன்
சாவாது ஒழியான் என்று என்று
      உள்ளம் தள்ளுற்று அயர்வாள் ,
'காவாய் ' என்றாள் மகனைக் ,
      கணவன் புகழுக்கு அழிவாள் ;
ஆ ! ஆ ! உயர் கோசலையாம்
      அன்னம் என் உற்றனள் ஏ !
2.4. 53
1748 தயரதன் புலம்பல் (1748-1759)
உணர்வான் அனையாள் உரையால் ,
      'உயர்ந்தான் உரைசால் குமரன்
புணரான் நிலமே வனமே
      போவானே ஆம் ' என்னா ;
இணர் ஆர்தரு தார் அரசன்
      இடரால் அயர்வான் , 'வினையேன்
துணைவா ! துணைவா ! ' என்றான் ;
      'தோன்றால் ! தோன்றாய் ' என்றான் .
2.4. 54
1749 'கண்ணும் நீராய் உயிரும்
      ஒழுகக் கழியாநின்றேன் ,
எண்ணும் நீர் நான்மறையோர் ,
      எரிமுன் , நின்மேல் சொரிய
மண்ணும் நீராய் வந்த புனலை ,
      மகனே ! வினையேற்கு
உண்ணும் நீராய் உதவி
      உயர் கான் அடைவாய் ' என்றான் .
2.4. 55
1750 'படை மாண் அரசைப் பல கால்
      பகுவாய் மழுவால் எறிவான் ,
மிடை மா வலிதான் , அனையான்
      வில்லால் அடுமா வல்லாய் !
`'உடை மா மகுடம் புனை '' என்று
      உரையா , உடனே கொடியேன்
சடை மா மகுடம் புனையத்
      தந்தேன் , அந்தோ ! ' என்றான் .
2.4. 56
1751 'கறுத்தாய் உருவம் ! மனமும்
      கண்ணும் கையும் செய்ய
பொறுத்தாய் ! பொறையே ! இறைவன்
      புரம் மூன்று எரித்த போர் வில்
இறுத்தாய் ! தமியேன் என்னாது
      என்னை இம் மூப்பு இடை ஏ
வெறுத்தாய் ; இனி நான் , வாழ்நாள்
      வேண்டேன் , வேண்டேன் ' என்றான் .
2.4. 57
1752 'பொன்னின் முன்னம் ஒளிரும்
      பொன்னே ! புகழின் புகழே !
மின்னின் மின்னும் வரி வில்
      குமரா ! மெய்யின் மெய்யே !
என்னின் முன்னம் வனம் நீ
      அடைதற்கு எளியேன் அல்லேன் ;
உன்னின் முன்னம் புகுவேன்
      உயர் வானகம் யான் ' என்றான் .
2.4. 58
1753 நெகுதற்கு ஒத்த நெஞ்சும் , நேயம் அத்து ஆல் ஏ ஆவி
உகுதற்கு ஒத்த உடலும் உடையேன் , உன்போல் அல்லேன் ;
தகுதற்கு ஒத்த சனகன் தையல் கையைப் பற்றிப்
புகுதக் கண்ட கண்ணால் போகக் காணேன் ' என்றான் .
2.4. 59
1754 `'எற்றே பகர்வேன் இனி யான் ?
      என்னே ! உன்னில் பிரிய
வற்றே உலகம் எனினும் ,
      வானே வருந்தாது எனினும் ,
பொன் தேர் அரசே ! தமியேன்
      புகழே ! உயிரே ! உன்னைப்
பெற்றேன் அருமை அறிவேன் ;
      பிழையேன் , பிழையேன் ; `' என்றான் .
2.4. 60
1755 'அள்ளல் பள்ளப் புனல் சூழ் அகல் மா நிலம் உம் , அரசும் ,
கொள்ளக் குறையா நிதியின் குவையும் முதலாம் எவையும் ,
கள்ளக் கைகேசிக்கே உதவிப் , புகழ் கைக் கொண்ட
வள்ளல்தனம் , என் உயிரை மாய்க்கும் ! மாய்க்கும் ! ' என்றான் .
2.4. 61
1756 'ஒலி ஆர் கடல் சூழ் உலகத்து ,
      உயர் வான் இடை , நாகரினும் ,
பொலியாநின்றார் உன்னைப்
      போல்வார் உளரோ ? பொன்னே !
வலி யார் உடையார் ? ' என்றான்
      மழு வாள் உடையான் வரவும்
சலியா நிலையாய் என்றால் ,
      'தவிர்வார் உளரோ ? ' என்றான் .
2.4. 62
1757 'கேட்டே இருந்தேன் எனினும் , கிளர் வான் இன்றே அடைய
மாட்டேன் ஆகில் அன்றோ , வன் கண் என் கண் ? மைந்தா !
காட்டே உறைவாய் நீ , இக் கைகேசியையும் கண்டு இந்
நாட்டே உறைவேன் என்றால் , நன்று என் தன்மை ! ' என்றான் .
2.4. 63
1758 'மெய் ஆர் தவமே செய்து , உன்
      மிடல் மார்பு அரிதில் பெற்ற
செய்யாள் என்னும் பொன்னும் ,
      நிலமாது என்னும் திருவும்
உய்யார் ! உய்யார் ! கெடுவேன் !
      உன்னைப் பிரியின் வினையேன் '
ஐயா ! கைகேசியை நேர்
ஆகேனோ நான் ? ' என்றான் .
2.4. 64
1759 'பூண் ஆர் அணியும் , முடியும் , பொன் ஆசனமும் , குடையும் ,
சேண் ஆர் மார்பும் , திருவும் , தெரியக் காணக் கடவேன் ,
மாணா மரம் வற்கலை உம் , மானின் தோலும் , அவை நான்
காணாது ஒழிந்தேன் என்றால் நன்று என் கருமம் ' என்றான் .
2.4. 65
1760 வசிட்டன் மொழிதல்
ஒன்றோடு ஒன்று ஒன்று ஒவ்வா
      உரைதந்து , 'அரசன் , உயிரும்
சென்றான் இன்றோடு ' என்னும்
      தன்மை எய்தித் தேய்ந்தான் ;
மென்தோல் மார்பின் முனிவன் ,
      'வேந்தே ! அயரேல் ; அவனை
இன்று ஏகாத வண்ணம்
தகைவென் உலகோடு ' என்னா .
2.4. 66
1761 தயரதன் நிலை
முனிவன் சொல்லும் அளவில் ,
'முடியுங் கொல் ! ' என்று , அரசன் ,
தனி நின்று உழல் தன் உயிரைச்
சிறிதே தகைவான் , 'இந்தப்
புனிதன் போனால் இவனால்
போகாது ஒழிவான் ' என்னா ;
மனிதன் வடிவம் கொண்ட
மனுவும் தன்னை மறந்தான் .
2.4. 67
1762 கோசலை அரற்றல்
'மறந்தான் நினைவும் உயிரும்
மன்னன் ' என்ன மறுகா ,
'இறந்தான் கொல்லோ அரசன் ? '
என்னா , இடர் உற்று அழிவாள்
'துறந்தான் மகன் முன் எனையும் ,
துறந்தாய் நீயும் , துணைவா !
அறந்தான் இதுவோ ஐயா !
அரசர்க்கு அரசே ! ' என்றாள் .
2.4. 68
1763 'மெய்யின் மெய்யே ! உலகின் வேந்தர்க்கு எல்லாம் வேந்தே !
உய்யும் வகை நின் உயிரை ஓம்பாது இங்ஙன் தேம்பின் ,
வையம் முழுதும் துயரால் மறுகும் ; முனிவன் உடன் நம்
ஐயன் வரினும் வரும் ஆல் ; அயரேல் , அரசே ! ' என்றாள் .
2.4. 69
1764 தயரதன் மொழிதல் ((1764-1765))
என்று என்று , அரசன் மெய்யும் , இரு தாள் இணையும் , முகமும்
தன் தன் செய்ய கையால் தைவந்திடு கோசலையை ,
ஒன்றும் தெரியா மம்மர் உள்ளத்து அரசன் , மெள்ள ,
'வன் திண் சிலை நம் குரிசில் வருமே ? வருமே ? ' என்றான் .
2.4. 70
1765 'வல் மாயக் கைகேசி , வாக்கால் , என்தன் உயிரை
முன் மாய்விப்பத் துணிந்தாள் ; என்றும் , கூனி மொழியால்
தன் மா மகனும் தானும் தரணி பெறுமாறு உன்னி
என் மா மகனைக் கான் ஏகு என்றாள் என்றாள் ; ' என்றான் .
2.4. 71
1766 சாபவரலாறு கூறத் தொடங்குதல்
'பொன் ஆர் வலயத் தோளான் கானோ புகுதல் தவிரான் ;
என் ஆருயிரோ அகலாது ஒழியாது ; இது , கோசலை ! கேள் ;
முன் நாள் ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது ' என்று
அ நாள் உற்றது எல்லாம் , அவளுக்கு , அரசன் அறைவான் .
2.4. 72
1767 சாப வரலாறு ((1767-1782))
'வெய்ய கானம் அத்து இடை ஏ , வேட்டை வேட்கை மிகவே
ஐய , சென்று , கரியோடு அரிகள் துருவித் திரிவேன் ;
கையிற் சிலையும் கணையும் கொடு கார் மிருகம் வரும் ஓர்
செய்ய நதியின் கரைவாய்ச் சென்றே மறைய நின்றேன் .
2.4. 73
1768 'ஒரு மா முனிவன் மனையோடு
      ஒளி ஒன்று இலவாய் நயனம்
தரு மா மகவே துணையாய்த்
      தவமே புரி போழ்தினின் வாய்
அரு மா மகனே புனல் கொண்டு
      அகல்வான் வருமாறு அறியேன்
பொரு மா கணை விட்டிடலும்
      புவிமீது அலறிப் புரள . '
2.4. 74
1769 'புக்குப் பெரு நீர் நுகரும்
      பொரு போதகம் என்று , ஒலிமேல்
கை கண் கணை சென்றது அலால் ,
      கண்ணில் தெரியக் காணேன் ;
அக் கைக் கரியின் குரலே
      அன்று , ஈது என்ன வெருவா ,
மக்கள் குரல் என்று அயர்வேன் ,
      மனம் நொந்து அவண் வந்தனென் ஆல் .
2.4. 75
1770 `'கையும் , கடனும் , நெகிழக் ,
      கணையோடு உருள்வோர் காணா ,
வெய்ய தனுவும் , மனனும் ,
      வெறிது ஏகிட ஏ , வீழா ,
'ஐயன் ! நீதான் யாவன் ?
      அந்தோ ! அருள்க ' என்று அயரப்
பொய் ஒன்று அறியா மைந்தன்
      'கேள் நீ ' என்னப் புகல்வான் . ''
2.4. 76
1771 `''இரு கண்களும் இன்று யாய்க்கும்
      எந்தைக்கும் ; இங்கு அவர்கள்
பருகும் புனல் கொண்டு அகல்வான்
      படர்ந்தேன் , பழுது ஆயினதால் ;
இரு குன்று அனைய புயத்தாய் !
      இபம் என்று உணராது எய்தாய் ;
உருகும் துயரம் தவிர் நீ ;
      ஊழியின் செயல் ஈது என்றே.' "
2.4. 77
1772 " 'உண் நீர்வேட்கை மிகவே
      உயங்கும் எந்தைக்கு , ஒரு நீ
தண்ணீர் கொடுபோய் அளித்து ,
      என் சாவும் உரைத்து , `'உம் புதல்வன்
விண் மீது அடைவான் தொழுதான் ;
      எனவும் அவர்பால் விளம்பு ' என்று
எண் நீர்மையினான் , விண்ணோர்
      எதிர் கொண்டிட , ஏகினன் ; ஆல் . ''
2.4. 78
1773 `'மைந்தன் வரவே நோக்கும்
      வள மாதவன் பால் , மகவோடு
அம் தண் புனல் கொண்டு அணுக ,
      'ஐயா ! இதுபோது அளவாய்
வந்து இங்கு அணுகாய் ; என்னோ
      வந்தது ? என்றே நொந்தேம் ;
சந்தம் கமழும் தோளாய் !
      தழுவி கொள வா ' எனவே . ''
2.4. 79
1774 'ஐயா ! யான் ஓர் அரசன் ;
      அயோத்திநகரத்து உள்ளேன் ;
மை ஆர் களபம் துருவி ,
      மறைந்தே வதிந்தேன் இருள் வாய் ;
பொய்யா வாய்மைப் புதல்வன்
      புனல் மொண்டிடும் ஓதையின் மேல்
கை ஆர் கணை சென்றது அலால் ,
      கண்ணில் தெரியக் காணேன் . '
2.4. 80
1775 `'வீட்டுண்டு அலறும் குரலால் ,
      வேழம் குரல் அன்று எனவே
ஓட்டந்து எதிரா , 'நீ யார் ? '
      என , உற்ற எலாம் உரையா
வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய் ,
      நின்றான் வணங்கா ; வானோர்
ஈட்டம் எதிர் வந்திடவே ,
      இறந்து ஏகினன் விண் இடை ஏ . ''
2.4. 81
1776 `''அறுத்தாய் கணையால் என ஏ ,
      அடியேன் தன்னை , ஐயா !
கறுத்தே அருளாய் ; யானோ
      கண்ணில் கண்டேன் அல்லேன் ,
மறுத்தான் இல்லான் வனம் மொண்டிடும்
      ஓதையின் எய்தது அலால் ;
பொறுத்தே அருள்வாய் ' என்னா
      இருதாள் சென்னி புனைந்தேன் . ''
2.4. 82
1777 `'வீழ்ந்தார் ; அயர்ந்தார் ; புரண்டார் ;
      'விழி போயிற்று இன்று ' என்றார் ;
ஆழ்ந்தார் துன்பக் கடலுள் ;
      'ஐயா ! ஐயா ! ' என்றார் ;
'போழ்ந்தாய் நெஞ்சை ' என்றார் ;
      'பொன் நாடு அதனில் போய் நீ
வாழ்ந்தே இருப்பத் தரியேம் ;
      வந்தேம் ! வந்தேம் இனியே ! ''
2.4. 83
1778 `'என்று என்று அயரும் தவரை
      இரு தாள் வணங்கி , 'யானே
இன்று உம் புதல்வன் ; இனி நீர்
ஏவும் பணி செய்திடுவேன் ;
ஒன்றும் தளர்வுற்று அயரீர் ;
      ஒழிமின் இடர் ! ' என்றிடலும்
'வன் திண் சிலையாய் ! கேண்மோ ! '
      எனவே , ஒருசொல் வகுத்தான் ''
2.4. 84
1779 `''கண்ணுள் மணி போல் மகவை
            இழந்தும் உயிர் காதலியா
உண்ண எண்ணி இருந்தால் ,
      உலகோர் என் என்று உரைப்பார் ?
விண்ணின் தலை சேருதும் யாம் ;
      எம்போல் விடலை பிரியப்
      பண்ணும் பரிமா உடையாய் !
      அடைவாய் படர்வான் ! ' என்னா ''
2.4. 85
1780 `''தாவாது ஒளிரும் குடையாய் !
      தவறு இங்கு இது நின் சரணம்
காவாய் ' என்றாய் ; அதனால் ,
      கடிய சாபம் கருதேம் ;
'ஏவா மகவைப் பிரிந்து இன்று
      எம் போல் இடர் உற்றனைநீ
போவாய் அகல்வான் ' என்னாப்
      பொன் நாடு இடை போயினர் ஆல்.''
2.4. 86
1781 'சிந்தை தளர்வுற்று அயர்தல்
      சிறிதும் இலனாய் , இன் சொல்
மைந்தன் உளன் என்ற தனால்
      மகிழ்வோடு இவண் வந்தனென் ஆல் ;
அந்த முனி சொற்றமையும் ,
      அண்ணல் வனம் ஏகுதலும் ,
என்றன் உயிர் வீகுதலும் ,
      இறையும் தவறா ' என்றான் .
2.4. 87
1782 இம் மா மொழி தந்து , அரசன் இடர் உற்றிடு போழ்தினில் அச்
செம் மா மயில் கோசலையும் திகையா உணர்வு ஓவினள் ஆல் ;
மெய்ம் மா நெறியும் , விதியின் விளைவும் , தளர்வின்று உணரும்
அம் மாதவனும் , விரைவோடு அவலம் தரு நெஞ்சினன் ஆய் .
2.4. 88
1783 வசிட்டன் அரசவைக்குப் போதல்
உரைசெய் பெருமை உயர் தவத்தோர் ஓங்கல்
புரைசை மத களிற்றான் பொன் கோயில் முன்னர் ,
முரைசம் முழங்க , முடி சூட்ட , மொய்த்து ஆண்டு
அரைசர் இனிது இருந்த நல் அவையின் ஆயினான் .
2.4. 89
1784 முனிவனை மன்னர் வினவல்
வந்த முனியை முகம் நோக்கி வாள் வேந்தர் ,
'எந்தை புகுதற்கு இடையூறு உண்டாயது ஓ ?
அந்தம் இல் சோகத்து அழுதகுரல்தான் என் கொல் ?
சிந்தை தெளிந்தோய் ! தெளிவி ' எமக்கு என்று உரைத்தார் .
2.4. 90
1785 வசிட்டன் சொல்லல் ((1785-1786))
'வேந்தன் பணியினால் , கைகேசி மெய்ப் புதல்வன்
பாந்தள் மிசைக் கிடந்த பார் அளிப்பான் ஆயினான் ;
ஏந்து தடம் தோள் இராமன் , திருமடந்தை
காந்தன் , ஒரு முறை போய்க் காடு உறைவான் ஆயினான் . '
2.4. 91
1786 `'கொண்டாள் வரம் இரண்டு
      கேகயர்கோன் கொம்பு ; அவட்குத்
தண்டாத செங்கோல்
      தயரதனும் தான் அளித்தான் ;
ஒண் தார் முகிலை 'வனம்
      போகு ' என்று ஒருப்படுத்தாள் ;
எண்தானும் வேறு இல்லை ;
      ஈது அடுத்தவாறு '' என்றான் .
2.4. 92
1787 வசிட்டன்சொல் கேட்ட மக்கள் நிலை ((1787-1805))
வார் ஆர் முலையாரும் , மற்று உள்ள மாந்தர்களும் ,
ஆராத காதல் அரசர்களும் , அந்தணரும் ,
பேராத வாய்மைப் பெரியோன் உரை செவியில்
சாராத முன்னம் , தயரதனைப்போல் வீழ்ந்தார் .
2.4. 93
1788 புண் உற்ற தீயில் புகை உற்று உயிர் பதைப்ப ,
மண் உற்று அயர்ந்து மறுகிற்று உடம்பு எல்லாம் ;
கண் உற்ற வாரி கடல் உற்றது ; அ நிலை ஏ
விண் உற்றது , எ மருங்கும் விட்டு அழுத பேர் ஓசை .
2.4. 94
1789 மாதர் அரும் கலம் உம் மங்கலமும் சிந்தித் , தம்
கோதை புடை பெயரக் , கூற்று அனைய கண் சிவப்பப் ,
பாத மலர் சிவப்பத் , தாம் பதைத்துப் பார் சேர்ந்தார்
ஊதை எறிய ஒசி பூ கொடி ஒப்பார் .
2.4. 95
1790 'ஆ ஆ ! அரசன் அருள் இலனே ஆம் ' என்பார் ;
'காவா அறத்தை இனிக் கைவிடுவேம் யாம் ' என்பார் ;
தாவாத மன்னர் தலைத்தலை வீழ்ந்து ஏங்கினார் .
மாவாதம் சாய்த்த மராமரமே போல்கின்றார் .
2.4. 96
1791 கிள்ளையொடு பூவை அழுத ; கிளர் மாடம் அத்து
உள் உறையும் பூசை அழுத ; உரு அறியாப்
பிள்ளை அழுத ; பெரியோரை என் சொல்ல ?
'வள்ளல் வனம் புகுவான் ' என்று உரைத்த மாற்றத்து ஆல் .
2.4. 97
1792 செம்மை ஆம்பல் போது அனைய செம் கனி வாய் வெண் தளவப்
போது ஆம் பல் தோன்றப் , புணர் முலைமேல் , பூ தரள
மா தாம்பு அற்று என்ன மழைக் கண்ணீர் ஆலி உக ,
நாதாம் பற்றா மழலை நங்கைமார் ஏங்கினார் .
2.4. 98
1793 ஆவும் அழுதன ; கன்று அழுத ; அன்று அலர்ந்த
பூவும் அழுத ; புனல் புள் அழுத ; கள் ஒழுகும்
காவும் அழுத ; களிறு அழுத ; கால் வயப் போர்
மாவும் அழுதன ; அம் மன்னவன் ஐ மான ஏ .
2.4. 99
1794 ஞானீயும் உய்கலான் என்னாதே , நாயகனைக்
'கான் ஈயும் ' என்று உரைத்த கைகேசியும் , கொடிய
கூனீயும் அல்லால் கொடியார் பிறர் உளரோ ?
மேனீயும் இன்றி , வெறு நீரே ஆயினார் .
2.4. 100
1795 தேறாது அறிவு அழிந்தார் எங்கு உலப்பார் ? தேர் ஓட
நீறு ஆகிச் , சுண்ணம் நிறைந்த தெரு எல்லாம் ,
ஆறு ஆகி ஓடின கண்ணீர் ; அரு நெஞ்சம்
கூறு ஆகி ஓடாத இத்தனையே குற்றமே .
2.4. 101
1796 'மண் செய்த பாவம் உளது ' என்பார் ; 'மாமலர் மேல்
பெண் செய்த பாவம் அதனில் பெரிது ' என்பார் ;
'புண் செய்த நெஞ்சை , விதி ' என்பார் ; 'பூதலத்தோர்
கண் செய்த பாவம் கடலில் பெரிது ' என்பார் .
2.4. 102
1797 'ஆளான் பரதன் அரசு ' என்பார் ; 'ஐயன் இனி
மீளான் நமக்கு விதி கொடிதே காண் ! ' என்பார் ;
'கோள் ஆகி வந்தவா கொற்ற முடி தான் , ' என்பார் ;
'மாளாத நம்மின் மனம் வலியார் ஆர் ? ' என்பார் .
2.4. 103
1798 'ஆதி அரசன் , அருங் கேகயன் மகள் மேல்
காதல் முதிரக் , கருத்து அழிந்தான் ஆம் ' என்பார் ;
'சீதை மணவாளன் தன்னோடும் தீ கானம்
போதும் ; அது அன்றேல் புகுதும் எரி ' என்பார் .
2.4. 104
1799 கையால் நிலம் தடவிக்
      கண்ணீர் மெழுகுவார் ;
'உய்யாள் பொன் கோசலை ' என்று
      ஓதுவார் , வெய்து உயிர்ப்பார் ;
'ஐயா ! இளங்கோவே !
      ஆற்றுதி ஓ நீ ? ' என்பார் :
நெய் ஆர் அழல் உற்றது
      உற்றார் அந் நீள் நகரார் .
2.4. 105
1800 'தள் ஊறு வேறு இல்லை ;
      தன் மகற்குப் பார் கொள்வான்
எள் ஊறிய கருமம்
      நேர்ந்தாள் இவள் ' என்பார் ;
'கள் ஊறு செவ்வாய்க்
      கணிகைகாண் கைகேசி ,
உள் ஊறு காதல்
      இலள் போல் ; ' என்று உள் அழிந்தார் .
2.4. 106
1801 'நின்று தவம் இயற்றித் தான் தீர நேர்ந்ததோ ?
அன்றி உலகத்துள் ஆருயிராய் வாழ்வாரைக்
கொன்று களையக் குறித்த பொருள் அது ஓ ?
நன்று ! வரம் கொடுத்த நாயகற்கு நன்று ' என்பார் .
2.4. 107
1802 'பெற்று உடைய மண் அவளுக்கு
      ஈந்து , பிறந்து உலகம்
முற்று உடைய கோவைப்
      பிரியாது , மொய்த்து ஈண்டி
உற்று உறைதும் ; யாரும்
      உறையவே , சில் நாளில் ,
புற்று உடைய காடு எல்லாம்
      நாடு ஆகிப் போம் ' என்பார் .
2.4. 108
1803 'என்னே நிருபன் இயற்கை இருந்தவா !
தன் நேர் இலாத தலை மகன்கு தாரணியை
முன்னே கொடுத்து , முறை திறம்பத் தம்பிக்குப்
பின்னே கொடுத்தால் பிழையாதோ மெய் ? ' என்பார் .
2.4. 109
1804 'கோதை வரி வில் குமரற் கொடுத்த நில
மாதை ஒருவர் புணர்வராம் ? வஞ்சித்த
பேதை சிறுவனைப் பின் பார்த்து நிற்கும் ஏ
சீதை பிரியினும் தீராத் திரு ? ' என்பார் .
2.4. 110
1805 உந்தாது , நெய் வார்த்து உதவாது , கால் எறிய ,
நந்தா விளக்கின் நடுங்குகின்ற நங்கைமார் ,
'செந் தாமரைத் தடம் கண் செவ்வி அருள் நோக்கம் ,
அந்தோ ! பிரிதுமோ ? ஆ ! விதியே ! ஓ ! ' என்பார் .
2.4. 111
1806 இலக்குவன் சீற்றநிலை ((1806-1814))
கேட்டான் இளையோன் ;
      'கிளர் ஞாலம் வரத்தினாலே
மீட்டாள் ; அளித்தாள்
      வனம் தம்முனை ; வெம்மை முற்றித்
தீட்டாத வேல் கண்
      சிறு தாய் ' என , யாவராலும்
மூட்டாத காலக்
      கடை தீ என மூண்டு எழுந்தான் .
2.4. 112
1807 கண்ணில் கடைத் தீ உக ,
      நெற்றியில் கற்றை நாற ,
விண்ணில் சுடரும்
      சுடர் வீய , மெய் நீர் விரிப்ப ,
உள் நிற்கும் உயிர்ப்பு எனும்
      ஊதை பிறக்க , நின்ற
அண்ணல் பெரியோன் தனது
      ஆதியின் மூர்த்தி ஒத்தான் .
2.4. 113
1808 'சிங்கக் குருளைக்கு இடு
      தீஞ் சுவை ஊனை நாயின்
வெங்கண் சிறு குட்டனை
      ஊட்ட விரும்பினாள் ஆல் !
நங்கைக்கு அறிவின் திறம்
      நன்று இது ! நன்று இது ! ' என்னாக்
கங்கைக்கு இறைவன்
      கடகம் கை புடைத்து நக்கான் .
2.4. 114
1809 சுற்று ஆர்ந்த கச்சில்
      சுரிகை புடை தோன்ற ஆர்த்து ,
வில் தாங்கி , வாளிப்
      பெரும் புட்டில் புறம் அத்து வீக்கிப் ,
பற்று ஆர்ந்த செம் பொன்
      கவசம் , பனி மேரு ஆங்கு ஓர்
புற்று ஆம் என ஓங்கிய
      தோள் ஒடு மார்பு போர்க்க .
2.4. 115
1810 அடியில் சுடர் பொன்
      கழல் ஆர்கலி நாண ஆர்ப்பப்
பொடியில் தடவும்
      சிறு நாண் பெரும் பூசல் ஓசை
இடியில் தொடரக் ,
      கடல் ஏழும் மடுத்து , இஞ் ஞாலம்
முடிவில் குமுறும் மழை
      மும்மையின் மேல் முழங்க .
2.4. 116
1811 வானும் நிலனும் முதல் ஈறு இல் வரம்பு இல் பூதம்
மேல் நின்று கீழ்காறும் விரிந்தன வீழ்வ போலத் ,
தானும் , தன் தம்முனும் அல்லது , மும்மை ஞாலத்து
ஊனும் உயிரும் உடையார்கள் உளைந்து ஒதுங்க .
2.4. 117
1812 புவி பாவை பரம் கெடப் ,
      போரில் வந்தோரை எல்லாம்
அவிப்பானும் அவித்து அவர்
      ஆக்கையை அண்டம் முற்றக்
குவிப்பானும் , எனக்கு ஒரு
      கோவினைக் கொற்ற மௌலி
கவிப்பானும் , நின்றேன் ; இது
      காக்குநர் காமின் ! ' என்றான் .
2.4. 118
1813 'விண் நாட்டவர் , மண்ணவர் ,
      விஞ்சையர் , நாகர் மற்றும்
எண் நாட்டவர் , யாவரும்
      நிற்க ; ஒர் மூவர் ஆகி ,
மண் நாட்டுநர் , காட்டுநர் ,
      வீட்டுநர் , வந்தபோதும்
பெண் நாட்டம் ஒட்டேன் , இனிப்
      பேர் உலகம் அத்து உள் ' என்னா .
2.4. 119
1814 காலைக் கதிரோன் நடு உற்றது ஓர் வெம்மை காட்டி ,
ஞாலத்தவர் கோமகன் , அந் நகரத்து நாப்பண் ,
மாலைச் சிகரத் தனி மந்தர மேரு முந்தை
வேலைத் திரிகின்றது போல் , திரிகின்ற வேலை .
2.4. 120
1815 இராமன் நாணொலி கேட்டல்
வேற்றுக் கொடியாள்
      விளைவித்த வினைக்கு விம்மித் ,
தேற்றத் தெளியாது
      அயர் சிற்றவை பால் இருந்தான் ,
ஆற்றல் துணைத் தம்பிதன்
      வில் புயல் , அண்ட கோளம்
கீற்று உற்று உடையப்
      படும்நாண் உருமேறு கேட்டான் .
2.4. 121
1816 இராமன் வருகை
வீறு ஆக்கிய பொன் கலன் வில் இட , ஆரம் மின்ன ,
மாறாத் தனிச் சொல் துளி மாரி வழங்கி வந்தான் ;
கால் தாக்க நிமிர்ந்து , புகைந்து , கனன்று , பொங்கும்
ஆறாக் கனல் ஆற்றும் ஓர் அஞ்சன மேகம் என்ன .
2.4. 122
1817 இராமன் வினவுதல்
மின் ஒத்த சீற்றக் கனல் விட்டு விளங்க நின்ற ,
பொன் ஒத்த மேனிப் , புயல் ஒத்த தடக்கையான் ஐ ,
'என் அத்த ! என் , நீ , இறையேனும் முனிவு இலாதாய் ,
சன்னத்தன் ஆகித் தனு ஏந்துதற்கு ஏது ? ' என்றான் .
2.4. 123
1818 இலக்குவன் விடை ((1818-1819))
'மெய்யைச் சிதைவித்து , நின்
      மேல் முறை நீத்த நெஞ்சம்
மையில் கரியாள் எதிர் ,
      நின்னை அம் மௌலி சூட்டல்
செய்யக் கருதித் , தடை
      செய்குநர் தேவரேனும் ,
துய்யைச் சுடு வெம்
      கனலில் சுடுவான் துணிந்தேன் . '
2.4. 124
1819 'வலக் கார்முகம் என் கையது ஆக , அவ்
      வான் உளோரும்
விலக்கார் ; அவர் வந்து விலக்கினும் ,
      என் கை வாளிக்கு
இலக்கா எரிவித்து , உலகு ஏழினொடு
      ஏழும் , மன்னர்
குலம் காவல் உம் , இன்று , உனக்கு யான் தரக்
      கோடி ' என்றான் .
2.4. 125
1820 இராமன் வினவுதல்
இளையான் இது கூற , இராமன் ,
      'இயைந்த நீதி
வளையா வரும் நல் நெறி நின் அறிவு
      ஆகும் அன்றே ?
உளையா அறம் வற்றிட , ஊழ் வழு
      உற்ற சீற்றம் ,
விளையாத நிலத்து , உனக்கு எங்ஙன்
      விளைந்தது ? ' என்றான் .
2.4. 126
1821 இலக்குவன் மறுமொழி ((1821-1822))
நீண்டான் அது உரைத்தலும் ,
      நித்திலம் தோன்ற நக்குச்
'சேண் தான் தொடர் மா நிலம் நின்னது என்று
      உந்தை செப்பப்
பூண்டாய் ; பகையால் இழந்தே வனம்
      போதி என்றால் ,
யாண்டு ஓ அடியேற்கு இனிச் சீற்றம்
      அடுப்பது ? ' என்றான் .
2.4. 127
1822 `'நின் கண் பரிவு இல்லவர் நீள் வனத்து
      உன்னை நீக்கப் ,
புன்கண் பொறி யாக்கை பொறுத்து , உயிர்
      போற்றுகேன் ஓ ?
என் கண் புலம் முன் உனக்கு ஈந்து வைத்து
      'இல்லை ' என்ற
வன் கண் புலம் தாங்கிய மன்னவன்
      தான் கொல் ? '' என்றான் .
2.4. 128
1823 இராமன் கூறும் அமைதி (1823-1824)
`'பின் குற்றம் மன்னும் பயக்கும்
      அரசு என்றல் பேணேன் ,
முன் கொற்ற மன்னன் , 'முடி கொள்க ' எனக் ,
      கொள்ள மூண்டது
என் குற்றம் அன்றோ ? இகல் மன்னவன்
      குற்றம் யாது ஓ ?
மின் குற்று ஒளிரும் வெயில் தீ கொடு
      அமைந்த வேலோய் ! ''
2.4. 129
1824 'நதியின் பிழை அன்று நறும் புனல்
      இன்மை ; அற்றே ,
பதியின் பிழை அன்று ; பயந்து
      நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று ; மகன் பிழை
      அன்று ; மைந்த !
விதியின் பிழை ; நீ இதற்கு என்னை
      வெகுண்டது ? ' என்றான் .
2.4. 130
1825 இலக்குவன் மறுமொழி
'உதிக்கும் உலையுள் உறு தீ என
      ஊதை பொங்கக்
கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென் ?
      கோள் இழைத்தாள்
மதிக்கும் மதி ஆய் , முதல் வானவர்க்கும்
      வலீஇது ஆம் ,
விதிக்கும் விதி ஆகும் என் வில் தொழில்
      காண்டி ! என்றான் .
2.4. 131
1826 இராமன் கூறல்
ஆய் தந்து , அவன் , அவ் உரை கூறலும்,
      'ஐயன் , 'நின் தன்
வாய் தந்தன கூறுதியோ மறை
      தந்த நாவால் ?
நீ தந்தது அன்றே நெறியோர் கண்
      இலாதது ? ஈன்ற
தாய் தந்தை என்றால் அவர்மேல்
      சலிக்கின்றது என்னோ ? '
2.4. 132
1827 இலக்குவன் மறுமொழி
'நல் தாதையும் நீ ; தனி நாயகன் நீ ; வயிற்றில்
பெற்றாயும் நீயே ; பிறர் இல்லை ; பிறர்க்கு நல்கக்
கற்றாய் ! இது காணுதி இன்று ' எனக் கை மறித்தான் ,
முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தான் ஐ அன்னான் .
2.4. 133
1828 இராமன் மொழி (1828-1829)
வரதன் பகர்வான் , 'வரம் பெற்றவள் தான் இவ் வையம்
சரதம் உடையாள் ; அவள் , என் தனித் தாதை , செப்பப்
பரதன் பெறுவான் ; இனி , யான்படைக் கின்ற செல்வம்
விரதம் ; இதின் நல்லது வேறு இனி யாவது ? ' என்றான் .
2.4. 134
1829 ஆன்றான் பகர்வான் பினும் , 'ஐய இவ் வையம் மையல்
தோன்றா நெறி வாழ் துணைத் தம்பியைப் போர் தொலைத்து ஓ ?
சான்றோர் புகழ் நல் தனித் தாதையை வாகை கொண்டு ஓ ?
ஈன்றாளை வென்றோ ? இனி இக் கதம் தீர்வது என்றான் .
2.4. 135
1830 இலக்குவன் மொழிதல்
செல்லும் சொல் வல்லான் எதிர்
      தம்பியும் , `'தெவ்வர் சொல்லும்
சொல்லும் சுமந்தேன் ; இரு
      தோள் எனச் சோம்பி ஓங்கும்
கல்லும் சுமந்தேன் ;
      கணை புட்டில் உம் , கட்டு அமைந்த
வில்லும் சுமக்கப்
      பிறந்தேன் ; வெகுண்டு என்னை ? '' என்றான் .
2.4. 136
1831 இராமன் மறுமொழி
நன் சொற்கள் தந்து ஆண்டு எனைநாளும்
      வளர்த்த தாதை
தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது
      தக்கது அன்று ஆல்
என் சொல் கடந்தால் உனக்கு யாதுளது
      ஈனம் ? என்றான் ;
தென் சொல் கடந்தான் வடசொல் கலைக்கு
      எல்லை தேர்ந்தான் .
2.4. 137
1832 இலக்குவன் தணிவு
சீற்றம் துறந்தான் ; எதிர் நின்று
      தெரிந்து செப்பும்
மாற்றம் துறந்தான் ; மறை நான்கு என
      வாங்கல் செல்லா
நால் தெண் திரை வேலையின் நம்பி தன்
      ஆணை யாலே
ஏற்றம் தொடங்காக் கடலில் தணிவு
      எய்தி நின்றான் .
2.4. 138
1833 இராமன் தம்பியைத் தழுவிச் சுமித்திரை கோயிலை அடைதல்
அன்னான்தனை ஐயனும் ஆதியொடு
      அந்தம் என்று
தன்னாலும் அளப்பு அரும் தானும் தன்
      பாங்கர் நின்ற
பொன் மான் உரியானும் தழீஇ எனப்
      புல்லிப் பின்னைச்
சொல் மாண்பு உடை அன்னை சுமித்திரை
      கோயில் புக்கான் .
2.4. 139
1834 சுமித்திரையின் துன்பம்
கண்டாள் , மகனும் மகனும் தன
      கண்கள் போல்வார் ,
தண்டா வனம் செல்வதற்கே சமைந்
      தார்கள் தம்மை ;
புண் தாங்கு நெஞ்சத்தனள் ஆய்ப் படி
      மேல் புரண்டாள் ;
உண்டாய துன்பக் கடற்கு எல்லை
      உணர்ந்திலாதாள் .
2.4. 140
1835 இராமன் ஆற்றுதல் (1835-1836)
சோர்வாளை ஓடித் தொழுது ஏந்தினன் ,
      துன்பம் என்னும்
ஈர்வாளை வாங்கி மனம் தேற்றுதற்கு
      ஏற்ற செய்வான் ,
'போர்வாள் அரசர்க்கு இறை பொய்த்தனன்
      ஆக்க கில்லேன்
கார்வான் நெடும் கான் இறை கண்டு இவண்
      மீள்வன் ' என்றான் .
2.4. 141
1836 கான் புக்கிடினும் கடல்புக்
      கிடினும் கலிப் பேர்
வான் புக்கிடினும் எனக்கு அன்னவை ,
      மாண் அயோத்தி
யான் புக்கது ஒக்கும் ; எனை யார்
      நலிகிற்கும் ஈட்டார் ?
ஊன் புக்கு , உயிர் புக்கு , உணர் புக்கு
      உலையற்க என்றான் .
2.4. 142
1837 மரவுரி வருதல் (1837-1838)
தாய் ஆற்றுகிலாள் தனை ஆற்றுகின்றார்கள் தம் பால் ,
தீ ஆற்றுகிலார் , தனிச் சிந்தையின் நின்று செற்ற
நோய் ஆற்றுகில்லார் , உயிர்போல நுடங்கு இடையார் ,
மாயாப் பழியாள் தர வற்கலை ஏந்தி வந்தார் .
2.4. 143
1838 கார் வானம் ஒப்பான் தனை காண்தொறும்
      காண்தொறும் போய்
நீராய் உகு கண்ணினும் நெஞ்சு
      அழிகின்ற நீரார்
பேரா இடர்ப் பட்டு அயலார் உறு
      பீழை கண்டும்
தீரா மனத்தாள் தர வந்தன
      சீரம் என்றார் .
2.4. 144
1839 மரவுரியை இலக்குவன் பெறல்
      வாள் நித்தில வெள் நகை ஆர்தர
      வள்ளல் தம்பி
யாணர்த் திரு நாடு இழப்பித்தவர்
      ஈந்த எல்லாம்
பூணப் பிறந்தானும் நின்றான் அவை
      போர் விலோடும்
காணப் பிறந்தேனும் நின்றேன் அவை
      காட்டுக என்றான் .
2.4. 145
1840 மரவுரி பெற்ற இலக்குவன் அன்னையை வணங்குதல்
அன்னான் அவர் தந்தன ஆதரத்தோடும் ஏந்தி ,
'இன்னா இடர் தீர்ந்து உடன் ஏகு ' என எம்பிராட்டி
சொன்னால் , அதுவே துணை ஆம் ; எனத் தூய நங்கை
பொன் ஆர் அடிமேல் பணிந்தான் ; அவளும் புகன்றாள் .
2.4. 146
1841 சுமித்திரை இலக்குவனுக்குச் சொல்லியது (1841-1842)
ஆகாதது அன்றால் உனக்கு அவ் வனம்
      இவ் அயோத்தி ;
மா காதல் இராமன் நம் மன்னவன் ;
      வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம் பூ குழல்
      சீதை என்றே
ஏகாய் ; இனி , இவ் வயின் நிற்றலும்
      ஏதம் என்றாள் .
2.4. 147
1842 பின்னும் பகர்வாள் , 'மகனே ! இவன்
      பின் செல் ; தம்பி
என்னும்படி அன்று ; அடியாரினில்
      ஏவல் செய்தி ;
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின்
      வா ; அது அன்றேல்
முன்னம் முடி ; ' என்றனள் பால் முலை
      சோர நின்றாள் .
2.4. 148
1843 இராம இலக்குவர் விடைபெற்றுப் போதல்
இருவரும் தொழுதனர் ; இரண்டு கன்று ஒரீஇ ,
வெருவரும் ஆவினில் தாயும் விம்மினாள் ;
பொரு அரும் குமரரும் போயினார் புறம்
திரு அரைத் துகில் ஒரீஇச் சீரை சாத்தியே .
2.4. 149
1844 இலக்குவனுக்கு இராமன் மொழிதல் (1844-1845)
தான் புனை சீரையைத் தம்பி சாத்திடத் ,
தேன் புனை தெரியலான் செய்கை நோக்கின் ஆன் ;
வான் புனை இசையினாய் ! மறுக்கிலாது நீ
யான் புகல் இனையது ஓர் உறுதி கேள் எனா .
2.4. 150
1845 `'அன்னையர் அனைவரும் ஆழி வேந்தனும்
முன்னையர் அல்லர் ; வெம் துயரில் மூழ்கினார் ;
என்னையும் பிரிந்தனர் இடர் உறாவகை
உன்னை நீ என் பொருட்டு உதவுவாய் ; `' என்றான் .
2.4. 151
1846 இலக்குவன் மறுமொழி (1846-1850)
ஆண்டகை அ மொழி பகர , அன்பனும் ,
தூண் தகு திரள் புயம் துளங்கத் துண் எனா ,
மீண்டது ஓர் உயிர் இடை விம்ம விம்முவான் ,
'ஈண்டு உனக்கு அடியனேன் பிழைத்தது யாது ? ' என்றான் .
2.4. 1520
1847 'நீர் உள எனின் உள , மீனும் நீலமும் ;
பார் உள எனின் உள , யாவும் ; பார்ப்பு உறின் ,
நார் உள தனு உளாய் ! நானும் சீதையும்
ஆர் உளர் எனின் உளம் ? அருளுவாய் ' என்றான்
2.4. 153
1848 'பசிமை தொடி ஒருத்தி சொல் கொண்டு , பார் மகள்
நைந்து உயிர் நடுங்கவும் 'நடத்தி கான் ' எனா ,
உய்ந்தனன் ; இருந்தனன் ; உண்மை காவலன்
மைந்தன் ; என்று இனைய சொல் வழங்கின் ஆய் ? ' எனா .
2.4. 154
1849 'மாறு இனி என்னை ? நீ வனம் கொள்வாய் என
ஏறின வெகுளியை , 'யாதும் முற்று உற
ஆறினை தவிர்க ' என ஐய ! ஆணையின்
கூறிய மொழியினும் கொடியது ஆம் ' என்றான் .
2.4. 155
1850 'செய்து உடைச் செல்வம் ஓ யாதும் தீர்ந்து , எமைக்
கை துடைத்து ஏகவும் கடவை ஓ ? ஐயா !
நெய் துடைத்து , அடையலர் நேய மாதர் கண்
மை துடைத்து , உறை புகும் வயம் கொள் வேலினாய் ! '
2.4. 156
1851 இராமன் நிலை
உரைத்த பின் இராமன் ஒன்று உரைக்க நேர்ந்திலன் ;
வரைத் தடம் தோளினான் வதனம் நோக்கினான் ;
விரைத் தடம் தாமரைக் கண்ணின் மிக்க நீர்
நிரைத்து , இடையிடை விழ நெடிது நிற்கின்றான் .
2.4. 157
1852 வசிட்டன் வந்து வருந்துதல் (1852-1856)
அ வயின் அரசு அவை நின்றும் அன்பினன் ,
எவ்வம் இல் இரும் தவன் முனிவன் எய்தினான் ;
செவ்விய குமரரும் சென்னி தாழ்ந்தனர் ;
கவ்வை அம் பெருங்கடல் முனியும் கால் வைத்தான் .
2.4. 158
1853 அன்னவர் முகத்தினோடு அகத்தை நோக்கினான் ;
பொன் அரைச் சீரையின் பொலிவும் நோக்கினான் ;
என் இனி உணர்த்துவது ? எடுத்த துன்பத்தால் ,
தன்னையும் உணர்ந்திலன் உணரும் தன்மையான் .
2.4. 159
1854 'வாழ் வினை நுதலிய மங்கலத்து நாள்
தாழ் வினை அது வரச் சீரை சாத்தினான் ;
சூ வினை நால் முகம் அத்து ஒருவர்ச் சூழினும்
ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கல் பாலது ஓ ? '
2.4. 160
1855 'வெம் வினை அவள் தர விளைந்ததே உம் அன்று ;
இ வினை இவன்வயின் எய்தற்பாற்றும் அன்று ;
எ வினை நிகழ்ந்ததோ ? ஏவர் எண்ணமோ ?
செவ்விதின் ஒருமுறை தெரியும் பின் ' என்றான் .
2.4. 161
1856 வில் தடம் தாமரைச் செம் கண் வீரனை
உற்று அடைந்து , 'ஐய ! நீ ஒருவி , ஓங்கிய
கல் தடம் காணுதி என்னில் , கண் அகன்
மல் தடம் தானையான் வாழ்கிலான் ; ' என்றான் .
2.4. 162
1857 இராமன் மாற்றம்
'அன்னவன் பணி தலை ஏந்தி ஆற்றுதல்
என்னது கடன் ; அவன் இடரை நீக்குதல்
நின்னது கடன் ; இது நெறியும் ' என்றனன் ;
பன்னகப் பாயல் உள் பள்ளி நீங்கினான் .
2.4. 163
1858 வசிட்டன் மறுமொழி
'``வெவ் அரம் பயில் சுரம் விரவு '' என்றான் அலன் ;
தெவ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள் தனக்கு
அவ் அரம் பொருத வேல் அரசன் , ஆய்கிலாது
`'இவ் வரம் தருவன் '' என்று ஏன்றது உண்டு ' என்றான் .
2.4. 164
1859 இராமன் மறுமொழி
'ஏன்றனன் எந்தை இவ் வரங்கள் ; ஏவினாள்
ஈன்றவள் ; யான் அது சென்னி ஏந்தினேன் ;
சான்று என நின்ற நீ தடுத்தியோ ? ' என்றான் ;
தோன்றிய நல் அறம் நிறுத்தத் தோன்றினான் .
2.4. 165
1860 இராமன் புறப்பாடு
என்ற பின் முனிவன் ஒன்று இயம்ப நேர்ந்து இலன் ;
நின்றனன் நெடும் கண் நீர் நிலத்து நீத்து உக ;
குன்று அன தோளவன் , தொழுது , கொற்றவன்
பொன் திணி நெடு மதில் வாயில் போயினான் .
2.4. 166
1861 கவிக்கூற்று
சுற்றிய சீரையன் ; தொடர்ந்த தம்பியன் ;
முற்றிய உவகையன் ; முளரிப் போதினும்
குற்றம் இல் முகத்தினன் ; கொள்கை கண்டவர் ,
உற்றதை ஒருவகை உணர்த்துவாம் ; அரோ .
2.4. 167
1862 மக்கள் துயர்நிலை (1862-1869)
அந்தணர் , அருந்தவர் , அவனி காவலர் ,
நந்தல் இல் நகர் உளார் , நாட்டு உளார்கள் தம்
சிந்தை என் புகல்வது ? தேவர் உள்ளமும்
வெந்தனர் , மேல் வரும் உறுதி வேண்டலர் .
2.4. 168
1863 ஐயனைக் காண்டலும் அணங்கு அனார்கள் தாம் ,
மொய் இளந் தளிர்களால் முளரி மேல் விழும்
மையலின் மதுகரம் கடியும் ஆறு எனக்
கைகளின் மதர் நெடுங் கண்கள் எற்றினார் .
2.4. 169
1864 தம்மையும் உணர்ந்திலர் , தணிப்பில் அன்பினால்
அம்மையின் இரு வினை அகற்ற ஓ ? அன்றேல் ,
விம்மிய பேர் உயிர் மீண்டு இலாமை கொல் ?
செம்மல் தன் தாதையில் சிலவர் முந்தினார் .
2.4. 170
1865 விழுந்தனர் சிலர் ; சிலர் விம்மி விம்மி மேல்
எழுந்தனர் ; சிலர் முகத்து இழி கண்ணீர் இடை
அழுந்தினர் ; சிலர் பதைத்து அளக வல்லியின்
கொழுந்து எரி உற்று என துயரம் கூர்கின்றார் .
2.4. 171
1866 கரும்பு அன மொழியினர் , கண் பனிக்கிலர் ;
வரம்பு அறு துயரினால் மயங்கியே கொல் ஆம் !
இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர் ;
பெரும் பொருள் இழந்தவர் போலும் பெற்றியார் .
2.4. 172
1867 நெக்கன உடல் ; உயிர் நிலையின் நின்றில ;
இக்கணம் ! இ கணம் ! என்னும் தன்மையும்
புக்கன ; புறத்தன புண்ணில் கண் மலர்
உக்கன நீர் வறந்து உதிர வாரியே .
2.4. 173
1868 இரு கையின் கரி நிகர் எண் இறந்தவர் ,
பெரு கையில் பெயர்த்தனர் , தலையைப் பேணலர்
ஒரு கையில் கொண்டனர் உருட்டுகின்றனர் ;
சுரிகையில் கண் மலர் சூன்று நீக்கினார் .
2.4. 174
1869 சிந்தின அணி ; மணி சிதறி வீழ்ந்தன ;
பசுமை துணர் மாலையில் பரிந்த மேகலை ;
நந்தினர் நகையொளி விளக்கம் நங்கைமார் ;
சுந்தர வதனமும் மதிக்குத் தோற்றவே .
2.4. 175
1870 அரசன் தேவியர் அழுகை (1870-1875)
அறுபதினாயிரர் , அரசன் தேவியர் ,
மறு அறு கற்பினர் , மழை கண் நீரினர் ,
சிறுவனைத் தொடர்ந்தனர் , திறந்த வாயினர் ,
எறி திரைக் கடல் என இரங்கி ஏங்கினார் .
2.4. 176
1871 கன்னி நல் மயில்களும் , குயில் கணங்களும் ,
அன்னமும் சிறை இழந்து அவனி சேர்ந்தன
என்ன , வீழ்ந்து உழந்தனர் ; இராமன் அல்லது ,
மன் உயிர்ப் புதல்வரை மற்றும் பெற்றிலார் .
2.4. 177
1872 கிளையினும் நரம்பினும் நிரம்பும் கேழன ,
அளவு இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மைபால்
தொளைபடு குழலினோடு யாழ்க்குத் தோற்றன ;
இளையவர் அமுதினும் இனிய சொற்களே .
2.4. 178
1873 புகலிடம் கொடு வனம் போலும் என்று , தம்
மகன் வயின் இரங்குறும் மகளிர் வாய்களால்
அகல் மதில் நெடும் மனை அரத்த ஆம்பல்கள் ,
பகல் இடை மலர்ந்தது ஓர் பழனம் போன்றவே .
2.4. 179
1874 திடர் உடைக் குங்குமச் சேறும் , சாந்தமும் ,
இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன ;
மிடை முலைக் குவடு ஒரீஇ , மேகலைத் தடம்
கடல் இடை புகுந்த , கண் கலுழி ஆறு அரோ .
2.4. 180
1875 தண்டலைக் கோசலத் தலைவன் மாதரைக்
கண்டனன் இரவியும் , கமல வாள் முகம் ;
விண் தலத்து உறையும் நல் வேந்தற்கு ஆயினும்
உண்டு இடர் உற்ற போது என் உறாதன ?
2.4. 181
1876 பெண்டிர் மொய்த்தல்
தாயரும் கிளைஞரும் சார்ந்து உளார்களும்
சேயரும் அணியரும் சிறந்த மாதரும் ,
காய் எரி உற்றனர் அனைய கௌவையர் ,
வாயிலும் முன்றிலும் மறைய மொய்த்தனர் .
2.4. 182
1877 இராமன் சீதையிடம் செல்லல் (1877-1878)
இரைத்தனர் , இரைத்து எழுந்து ஏங்கி எங்கணும்
திரைப் பெரும் கடல் எனத் தொடர்ந்து பின் செல ,
உரைப்பதை உணர்கிலன் ; ஒழிப்பது ஓர்கிலன் ;
வரைப் புயம் அத்து அண்ணல் , தன் மனையை நோக்கினான் .
2.4. 183
1878 நல் நெடு நளிர் முடி சூட நல் மணிப்
பொன் நெடும் தேர் ஒடு உம் பவனி போனவன்
துன் நெடும் சீரையும் சுற்றி மீண்டும் அப்
பொன் நெடுந் தெரு இடை போதல் மேயினான் .
2.4. 184
1879 பொது மக்கள் சொல்லும் செயலும் (1879-1894)
'அஞ்சன மேனி இவ் அழகற்கு எய்திய
வஞ்சனை கண்ட பின் , வகிர்ந்து நீங்கலா
நெஞ்சினும் , வலிது உயிர் ; நினைப்பது என் சில ?
நஞ்சினும் வலிது நம் நலம் ' என்றார் சிலர் .
2.4. 185
1880 'மண் கொடு வரும் என வழி இருந்தது யாம் ,
எண்கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ ?
பெண் கொடு வினை செயப் பெற்ற நாட்டினில்
கண் கொடு பிறத்தலும் கடை ' என்றார் சிலர் .
2.4. 186
1881 `'முழுவதே பிறந்து உலகு உடைய மொய்ம்பினோன் ,
'உழுவை சேர் கானம் அத்து உறைவென் யான் ' என
எழுவதே ? எழுதல் கண்டு இருப்பதே ? இருந்து
அழுவதே ? அழகிது இவ் அன்பு ! '' என்றர் சிலர் .
2.4. 187
1882 வலம் கடிந்து ஏழையர் ஆய மன்னரை ,
'நலம் கடிந்து அறம் கெட நயக்கலீர்கள் ; நும்
குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை
நிலம் கடிந்தாள் ஒடு நிகர் ' என்றார் சிலர் .
2.4. 188
1883 'திரு அரை சுற்றிய சீரை ஆடையன் ,
பொருவு அருந் துயரினன் , தொடர்ந்து போகின்றான்
இருவரைப் பயந்தவள் ஈன்ற கான்முளை
ஒருவனோ இவற்கு இவ் ஊர் உறவு ? ' என்றார் சிலர் .
2.4. 189
1884 'முழுக்கலின் வலிய நம் மூரி நெஞ்சினை
மழுக்களில் பிளத்தும் ' என்று ஓடுவார் , வழி
ஒழுக்கிய கண்ணினில் கலுழி ஊற்றிடை
இழுக்கலில் வழுக்கி வீழ்ந்து இடர் உற்றார் சிலர் .
2.4. 190
1885 பொன் அணி , மணி அணி மெய்யில் போக்கினர் ;
மின் என மின் என விளங்கும் மெய்விலைப்
பல் நிறத் துகிலினைப் பறித்து நீக்கினர் ,
சின்ன நுண் துகிலினைப் புனைகின்றார் சிலர் .
2.4. 191
1886 `'நிறை மக உடையவர் , நெறி செல் ஐம்பொறி
குறை மக குறையினும் கொடுப்பர் ஆம் உயிர் ;
முறை மகன் வனம் புக , மொழியைக் காக்கின்ற
இறை மகன் திரு மனம் இரும்பு '' என்றார் சிலர் .
2.4. 192
1887 வாங்கிய மருங்குலை வருத்தும் கொங்கையர்
பூ கொடி ஒதுங்குவ போல் ஒதுங்கினர் ,
ஏங்கிய குரலினர் , இணைந்த காந்தளில்
தாங்கிய செங்கை தம் தலைகள் மேல் உளார் .
2.4. 193
1888 தலைக் குவட்டு அயல் மதி தவழும் மாளிகை
நிலைக் குவட்டு இடை இடை நின்ற நங்கைமார் ,
முலைக் குவட்டு இழி கண் நீர் ஆலி மொய்த்து உக ,
மலைக் குவட்டு அகவுறும் மயிலின் , மாழ்கினார் .
2.4. 194
1889 மஞ்சு என அகில் புகை வழங்கும் மாளிகை
எஞ்சல் இல் சாளரம் அத்து இரங்கும் இன் சொலார் ,
அஞ்சனக் கண்ணின் நீர் அருவி சோர்தரப்
பஞ்சரத்து இருந்து அழும் கிளியில் , பன்னினார் .
2.4. 195
1890 நல் நெடும் கண்களின் நான்ற நீர்த் துளி
தன் நெடும் தாரைகள் தளத்தின் வீழ்தலால் ,
மன் நெடும் குமரன் மாட்டு அழுங்கி , மாடமும் ,
பொன் நெடுங்கண் குழித்து , அழுவ போன்றவே .
2.4. 196
1891 மக்களை மறந்தனர் மாதர் , தாயரைப்
புகு இடம் அறிந்திலர் புதல்வர் ; பூசல் இட்டு
உக்கனர் , உயங்கினர் ; உருகிச் சோர்ந்தனர் ;
துக்கம் நின்று அறிவினைச் சூறை ஆடவே .
2.4. 197
1892 காமரம் கனிந்து என கனிந்த மெல் மொழி
மா மடந்தையர் எலாம் மறுகு சேர்தலால் ,
தேமரு நறும் குழல் திருவின் நீங்கிய
தாமரை ஒத்தன தவள மாடமே .
2.4. 198
1893 மழைக் குலம் புரை குழல் விரிந்து மண் உற ,
குழைக் குல முகத்தியர் குழாம் கொண்டு ஏகினர் ,
இழைக் குலம் சிதறிட , ஏ உண்டு ஓய்வு உறும்
உழைக் குலம் உழைப்பன ஒத்து , ஒர்பால் எலாம் .
2.4. 199
1894 நகரின் பொலிவழிவு (1894-1907)
கொடி அடங்கின மனைக் குன்றம் ; கோ முரசு
இடி அடங்கின ; முழக்கு இழந்த பல் இயம் ;
படி அடங்கலும் நிமிர் பசுங் கண் மாரியால் ,
பொடி அடங்கின மதில் புறத்து வீதியே .
2.4. 200
1895 அட்டிலும் இழந்தன புகை ; அகில் புகை
நெட்டிலும் இழந்தன ; நிறைந்த பால் கிளி
வட்டிலும் இழந்தன ; மகளிர் , கால் மணித்
தொட்டிலும் இழந்தன மகவும் , சோரவே .
2.4. 201
1896 ஒளி துறந்தன முகம் உயிர் துறந்தெனத்
துளி துறந்தன முகில் தொகையும் ; தூயவாம்
தளி துறந்தன பலி ; தான யானையும் ,
களி துறந்தன ; மலர்க் கள் உண் வண்டினே .
2.4. 202
1897 நிழல் பிரிந்தன குடை ; நெடுங் கண் ஏழையர்
குழல் பிரிந்தன மலர் ; குமரர் தாள் இணை
கழல் பிரிந்தன ; சினக் காமன் வாளியும்
அழல் பிரிந்தன ; துணை பிரிந்த அன்றில் ஏ .
2.4. 203
1898 தார் ஒலி நீத்தன புரவி , தண்ணுமை
வார் ஒலி நீத்தன மழையின் விம்முறும் ;
தேர் ஒலி நீத்தன தெருவும் ; தெண் திரை
நீர் ஒலி நீத்தன நீத்தம் போலவே .
2.4. 204
1899 முழவு எழும் ஒலி இல , முறையின் யாழ் நரம்பு
எழ எழும் ஒலி இல , இமைப்பில் கண்ணினர்
விழவு எழும் ஒலி இல , வேறும் ஒன்று இல ,
அழ எழும் ஒலி அலது , அரச வீதியே .
2.4. 205
1900 தெள் ஒலி சிலம்புகள் சிலம்பு பொன் மனை
நள் ஒலித்தில , நளிர் கலையும் அன்னவே ;
புள் ஒலித்தில புனல் , பொழிலும் அன்னவே ;
கள் ஒலித்தில மலர் , களிறும் அன்னவே .
2.4. 206
1901 செய் மறந்தன புனல் ; சிவந்த வாய்ச்சியர்
கை மறந்தன பசுங் குழவி ; காந்து எரி
நெய் மறந்தன ; நெறி அறிஞர் யாவரும்
மெய் மறந்தனர் ; ஒலி மறந்த வேதமே .
2.4. 207
1902 ஆடினர் அழுதனர் , அமுத ஏழ் இசை
பாடினர் அழுதனர் , பரிந்த கோதையர்
ஊடினர் அழுதனர் , உயிரின் அன்பரைக்
கூடினர் அழுதனர் , குழாம் குழாம் கொடே .
2.4. 208
1903 நீட்டில களிறு கைந் நீரின் ; வாய் புதல்
பூட்டில புரவிகள் ; புள்ளும் பார்ப்பினுக்கு
ஈட்டில இரை ; புனிற்று ஈன்ற கன்றையும்
ஊட்டில கறவை ; நைந்து உருகிச் சோர்ந்த ஏ .
2.4. 209
1904 மாந்தர் தம் மொய்ம்பினில் மகளிர் கொங்கையாம்
ஏந்து இள நீர்களும் வறுமை எய்தின
சாந்தம் ; அ மகிணர் தம் முடியில் , தையலார்
கூந்தலும் வறுமைய மலரின் கூலமே .
2.4. 210
1905 ஓடை நல் அணி முனிந்தன
      உயர் களிறு உச்சிச்
சூடை நல் அணி முனிந்தன
      தொடர் மனை ; கொடியின்
ஆடை நல் அணி முனிந்தன
      அம் பொன் செய் இஞ்சி ;
மேடை , நல் அணி முனிந்தன
      வெள் இடை , பிறவும் .
2.4. 211
1906 'திக்கு நோக்கிய தீவினைப்
      பயன் ' எனச் சிந்தை
நெக்கு நோக்குவோர் , 'நல் வினை
      பயன் ' என நேர்வோர் ,
பக்கம் நோக்கல் என் ? பருவரல்
      இன்பம் என்று இரண்டும்
ஒக்க நோக்கிய யோகரும்
      அரும் துயர் உழந்தார் .
2.4. 212
1907 ஓவு இல் நல் உயிர் உயிர்ப்பின் ஓடு
      உடல் பதைத்து உலைய ,
மேவு தொல் அழகு எழில் கெட ,
      விம்மல் நோய் விம்மத்
தாவு இல் ஐம்பொறி மறுகுறத்
      தயரதன் என்ன ,
ஆவி நீக்கின்றது ஒத்தது அவ்
      அயோத்தி மா நகரம் .
2.4. 213
1908 இராமன் சீதையின் உறையுளை அடைதல்
உயங்கி அ நகர் உலைவு உற ,
      ஒருங்கு உழை சுற்ற ,
மயங்கி ஏங்கினர் வயின் வயின்
      வரம்பு இலர் தொடர ,
இயங்கு பல் உயிர்க்கு ஓர் உயிர்
      என நின்ற இராமன்
தயங்கு பூண் முலைச் சானகி
      இருந்துழிச் சார்ந்தான் .
2.4. 214
1909 இராமன் கோலத்தைக் கண்ட சீதையின் நிலை (1909-1910)
அழுது , தாயரோடு அருந்தவர் ,
      அந்தணர் , அரசர் ,
புழுதி ஆடிய மெய்யினர் ,
      புடை வந்து பொருமப்
பழுது சீரையின் உடையினன்
      வரும்படி பாரா ,
எழுது பாவை அன்னாள் மனத்
      துணுக்கமொடு எழுந்தாள் .
2.4. 215
1910 சீதை இராமனை நோக்கி வினவுதல் (1910-11)
எழுந்த நங்கையை மாமியர்
      தழுவினர் , ஏங்கிப்
பொழிந்த உண் கண் நீர் புது புனல்
      ஆட்டினர் , புலம்ப ,
அழிந்த சிந்தையள் , அன்னம் இது
      இன்னது என்று அறியாள் ,
வழிந்த நீர் நெடுங் கண்ணினள் ,
      வள்ளலை நோக்கி .
2.4. 216
1911 'பொன்னை உற்ற பொலன் கழலோய் ! புகழ்
மன்னை உற்றது உண்டோ ? மற்று இவ் வன் துயர்
என்னை உற்றது ? இயம்பு ! ' என்று இயம்பினான் ,
மின்னை உற்ற நடுக்கம் அத்து மேனியாள் .
2.4. 217
1912 இராமன் விடை
'பொருவு இல் எம்பி புவி புரப்பான் ; புகல்
இருவர் ஆணையும் ஏந்தினென் , இன்று போய்க்
கருவி மா மழை கல் கடம் கண்டு நான் ,
வருவென் , ஈண்டு வருந்தலை நீ ' என்றான் .
2.4. 218
1913 சீதை வருத்தம்
நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும் ,
மேய மண் இழந்தான் என்றும் விம்மலள் ;
'நீ வருந்தலை ; நீங்குவென் யான் ; ' என்ற
தீய வெம் சொல் செவி சுடத் தேம்புவாள் .
2.4. 219
1914 கவிக்கூற்று
துறந்து போம் எனச் சொற்ற சொல் தேறும் ஓ ?
உறைந்த பால் கடல் சேக்கை உடன் ஒரீஇ ,
அறம் திறம்பும் என்று ஐயன் அயோத்தியில்
பிறந்த பின்பும் பிரிவு இலள் ஆயினாள் .
2.4. 220
1915 சீதை வினவுதல்
அன்ன தன்மையள் `'ஐயனும் அன்னையும்
சொன்ன செய்யத் துணிந்தது தூயது ஏ ;
என்னை என்னை ? 'இருத்தி ' என்றாய் '' என்றாள்
உன்ன உன்ன உயிர் உமிழா நின்றாள் .
2.4. 221
1916 இராமன் விடை
`'வல் அரக்கரின் மால் வரை ஊடு எழும் ,
அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர்க்
கல் அரக்கும் , கடுமைய அல்ல நின்
சில் அரக்கு உண்ட சேவடிப் போது '' என்றான் .
2.4. 222
1917 சீதையின் மாற்றம்
'பரிவு இகந்த மனத்தொடு பற்று இலாது
ஒருவுகின்றனை ; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டை அது ? ஈண்டு நின்
பிரிவினும் சுடுமோ பெரும் காடு ? ' என்றாள் .
2.4. 223
1918 இராமன் சிந்தனை
அண்ணல் அன்ன சொல் கேட்டனன் ; அன்றியும்
உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன் ;
கண்ணின் நீர்க் கடல் கைவிட நேர்கிலன் ,
எண்ணுகின்றனன் , 'என் செயல் பாற்று ? ' எனா .
2.4. 224
1919 சீதை சீரையுடுத்து வருதல்
அனைய வேலை , அகல் மனை எய்தினள் ,
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள் ,
நினைவின் , வள்ளல் பின் வந்து , அயல் நின்றனள் ,
பனையின் நீள் கரம் பற்றிய கையினாள் .
2.4. 225
1920 கவிக் கூற்று (1920-1921)
ஏழைதன் செயல் கண்டவர் யாவரும்
வீழும் மண் இடை வீழ்ந்தனர் ; வீந்திலர் ;
வாழும் நாள் உள என்ற பின் மாள்வரோ ?
ஊழி பேரினும் உய்குநர் உய்வரே !
2.4. 226
1921 தாயர் முதலியோர் வருந்துதல்
தாயர் , தவ்வையர் , தன் துணைச் சேடியர் ,
ஆயம் , மன்னிய அன்பினர் என்று இவர்
தீயில் மூழ்கினர் ஒத்தனர் ; செம் கண் ஆன் ,
தூய தையலை நோக்கினன் , சொல்லுவான் .
2.4. 227
1922 இராமன் சொல்
'முல்லையும் கடல் முத்தும் எதிர்ப்பினும்
வெல்லும் வெண் நகையாய் ! விளைவு உன்னுவாய்
அல்லை ; போத அமைந்தனை ; ஆதலின்
எல்லை அற்ற இடர் தருவாய் ' என்றான் .
2.4. 228
1923 சீதையின் மாற்றம்
கொற்றவன் அது கூறலும் , கோகிலம்
செற்றது அன்ன குதலையள் சீறுவாள் ,
'உற்று நின்ற துயரம் இது ஒன்றும் ஏ ?
என் துறந்த பின் இன்பம் கொல் ஆம் ? '' என்றாள் .
2.4. 229
1924 இராமன் புறப்படுதல்
பிறிது ஒர் மாற்றம் பெரும் தகை பேசலன் ,
மறுகி வீழ்ந்து அழ மைந்தரும் மாதரும் ,
செறுவின் வீழ்ந்த நெடுந் தெருச் சென்றனன் ,
நெறி பெறாமை அரிதினில் நீங்குவான் .
2.4.230
1925 மூவரும் போம் முறை
சீரை சுற்றித் திரு மகள் பின் செல ,
மூரி வில் கை இளையவன் முன் செலக்
காரை ஒத்தவன் போம்படி கண்ட அவ்
ஊரை உற்றது , உணர்த்தவும் ஒண்ணும் ஓ ?
2.4.231
1926 மக்கள் பின் தொடர்தல்
ஆரும் பின்னர் அழுது அவலித்து இலர் ;
சோரும் சிந்தையர் யாவரும் சூழ்ந்தனர் ;
'வீரன் முன் வனம் மேவுதும் யாம் ' எனாப்
போர் ஒன்று ஒல் ஒலி கை மிக போயினார் .
2.4.232
1927 இராமன் தாயருக்குக் கூறல்
தாதை வாயில் குறுகினன் சார்தலும்
கோதை வில்லவன் தாயரைக் கும்பிடா ,
'ஆதி மன்னனை ஆற்றுமின் நீர் ' என்றான் ;
மாதராகும் விழுந்து மயங்கினார் .
2.4.233
1928 தாய்மார் வாழ்த்துதல்
ஏத்தினார் , தம் மகனை , மருகியை
வாழ்த்தினார் ; இளையோனை வழுத்தினார் ;
'காத்து நல்குமின் தெய்வதங்காள் ! ' என்றார் ,
நாத் தழும்ப அரற்றி நடுங்குவார் .
2.4.234
1929 இராமன் முதலியோர் தேர்மிசைப் போதல்
அன்ன தாயர் அரிதில் பிரிந்த பின் ,
முன்னர் நின்ற முனிவனைக் கைதொழாத்
தன்னது ஆர் உயிர் தம்பியும் , தாமரைப்
பொன்னும் , தானும் , ஓர் தேர் மிசை போயினான் .
2.4.2352.5 . தைலமாட்டு படலம் (1930- 2015 )

1930 இராமனுடன் யாவரும் செல்லுதல்
ஏவிய குரிசில் பின் யாவர் ஏகிலார் ?
மா இயல் தானை அம் மன்னை நீங்கலாத்
தேவியர் ஒழிந்தனர் ; தெய்வம் மா நகர்
ஓவியம் ஒழிந்தன , உயிர் இலாமையால் ,
2.5.1
1931 இராமன் தேர் செல்லுதல்
கைகள் நீர் பரந்து , கால் தொடரக் கண் உகும்
வெய்ய நீர் வெள்ளம் அத்து மெள்ளச் சேறல் ஆல் ,
உய்ய ஏழ் உலகும் ஒன்றான நீர் உழல்
தெய்வ மீன் ஒத்தது அச் செம்பொன் தேர் அரோ .
2.5.2
1932 சூரியன் அத்தமித்தல் (1932-1933)
மீன் புகல் பெற , வெயில் ஒதுங்க , மேதியோடு
ஆன் புகக் கதிரவன் அத்தம் புக்கனன் ,
'கான் புகக் காண்கிலேன் ' என்று கல் அதர்
தான் புக முடுகினன் என்னும் தன்மையான் .
2.5.3
1933 பகுத்த வான் மதி கொடு பதுமத்து அண்ணலே
வகுத்த வாள் நுதலியர் வதன ராசிபோல் ,
உகுத்த கண்ணீரின , ஒளியும் நீங்கின ,
முகிழ்த்து அழகு இழந்தன , முளரி ஈட்டமே .
2.5.4
1934 இரவின் தோற்றம் (1934-1935)
அந்தியில் வெயில் ஒளி அவிய வானகம் ,
நந்தல் இல் கேகயன் பயந்த நங்கைதன்
மந்தரை உரை எனும் கடுவின் மட்கிய
சிந்தையில் இருண்டது செம்மை நீங்கியே .
2.5.5
1935 பரந்து மீன் அரும்பிய பசலை வானகம் ,
அரந்தை இல் முனிவரன் அறைந்த சாபத்தால்
நிரந்தரம் இமைப்பு இலா நெடுங்கண் ஈண்டிய
புரந்தரன் உரு எனப் பொலிந்தது எங்குமே .
2.5.6
1936 இராமன் முனிவரொடு தங்குதல்
திரு நகர்க்கு ஓசனை இரண்டு , சென்று , ஒரு
விரை செறி சோலையை விரைவின் எய்தினான் ,
இரதம் நின்று இழிந்து , பின் இராமன் இன் துணை
உரை செறி முனிவரோடு உறையும் காலையே .
2.5.7
1937 இராமனைத் தொடர்ந்து வந்தோர் செயல் (1937-1938)
வட்டம் ஓர் ஓசனை வளைவிற்றாய் நடு
எள் தனை இடவும் ஓர் இடம் இலா வகை
புள் தகு சோலையின் புறத்துப் போர்த் தென
விட்டது ; குரிசிலை விடாத சேனையே .
2.5.8
1938 குயின்றன குலம் மணி நதியின் கூலத்தில் ,
பயின்று உயர் வாலுகப் பரப்பில் , பசுமை புல் இல் ,
வயின்றொறும் வயின்றொறும் வைகினார் ; ஒன்றும்
அயின்றிலர் ; துயின்றிலர் ; அழுது விம்மினார் .
2.5.9
1939 இராமனைத் தொடர்ந்து வந்த மக்கள் துயிலுதல் (1939-1945)
வாவி விரி தாமரையின் மா மலரின் வாசக்
காவி விரி நாள் மலர் முகிழ்த்து அனைய கண்ணார் ,
ஆவி விரி பால் நுரையின் ஆடை அணை ஆக
நாவி விரி கூழை இள நவ்வியர் துயின்றார் .
2.5.10
1940 பெரும் பகல் வருந்தினர் ,
      பிறங்கும் முலை தெங்கின்
குரும்பைகள் பொரும் செவிலி
      மங்கையர் குறங்கில் ,
அரும்பு அனைய கொங்கை அயில்
      அம்பு அனைய உண் கண்
கரும்பு அனைய செம் சொல் நவில்
      கன்னியர் துயின்றார் .
2.5.11
1941 பூ அகம் நிறைந்த புளினத் திரள்கள் தோறும்
மா வகிரின் உண் க(ண்)ணர் மட பிடி இன் வைகச்
சேவகம் அமைந்த சிறு கண் கரிகள் என்னத்
தூ அகல் இல் குந்த மற மைந்தர்கள் துயின்றார் .
2.5.12
1942 தகவும் மிகு தவமும் இவை தழுவ , உயர் கொழுநர்
முகமும் அவர் அருளும் நுகர்கிலர்கள் , துயர் முடுக ,
அகவும் இள மயில்கள் உயிர் அலசியன அனையார் ,
மகவு முலை வருட இள மகளிர்கள் துயின்றார் .
2.5.13
1943 மாகம் மணி வேதிகையில் மாதவி செய் பந்தர்க்
கேகய நெடுங்குலம் எனச் சிலர் கிடந்தார் ;
பூக வனம் மூடு படுகர்ப் புளின முன்றில்
தோகை இள அன்ன நிரையில் சிலர் துயின்றார் .
2.5.14
1944 சம்பக நறும் பொழில்களில் தருண வஞ்சிக்
கொம்பு அழுது ஒசிந்தன எனச் சிலர் குழைந்தார் ;
வம்பு அளவு கொங்கையொடு வாலுகம் வளர்க்கும்
அம் பவள வல்லிகள் எனச் சிலர் அசைந்தார் .
2.5.15
1945 குங்கும மலைக் குளிர் பனிக் குழுமி என்னத்
துங்க முலையில் துகள் உறச் சிலர் துயின்றார் ;
அங்கை அணையில் பொலிவு அழுங்க முகம் எல்லாம்
பங்கயம் முகிழ்த்தன எனச் சிலர் படிந்தார் .
2.5.16
1946 இராமன் சுமந்திரன்பால் தேரைத் திருப்பிக்கொண்டு
      செல்லுமாறு வேண்டல் (1946-1947)
ஏனையரும் இன்னணம்
      உறங்கினர் ; உறங்கா
மானவனும் , மந்திரி
      சுமந்திரனை 'வா ' என்று ,
`'ஊனம் இல் பெரும் குணம்
      ஒருங்கு உடைய உன்னால்
மேல் நிகழ்வது உண்டு ; அ(வ்)வுரை
      கேள் '' என விளம்பும் .
2.5.17
1947 'பூண்ட பேரன்பினாரைப்
      போக்குவது அரிது ; போக்காது
ஈண்டு நின்று ஏகல் பொல்லாது ;
      எந்தை ! நீ இரதம் இன்னே
தூண்டினை மீள்வது ஆக்கின் ,
      சுவடு தேர்ந்து என்னை அங்கே
மீண்டனன் என்ன மீள்வர் ;
      இதுநின்னை வேண்டிற்று ' என்றான் .
2.5.18
1948 சுமந்திரன் கூறுதல் (1948-1954)
`'செவ்விய குரிசில் கூறத்
      தேர்வலான் செப்புவான் , `'அவ்
வெவ்விய தாயில் தீய
      விதியினில் மேலென் போலாம் ,
இவ்வயின் நின்னை நீக்கி ,
      இன் உயிர் தீர்ந்து இன்று ஏகி ,
அ வயின் அனைய காண்டற்கு
      அமைதலால் அளியன் '' என்றான் .
2.5.19
1949 தேவியும் இளவலும் தொடரச் செல்வனைப்
பூ இயல் கானகம் புக உய்த்தேன் என்கோ ?
கோவினை உடன் கொடு குறுகினேன் என்கோ ?
யாவது கூறுகேன் ? இரும்பின் நெஞ்சினேன் .
2.5.20
1950 `'தார் உடை மலரினும் ஒதுங்கத் தக்கிலா
வார் உடை முலையொடு மதுகை மைந்தரைப்
பார் இடை செலுத்தினேன் ; பழைய நண்பினேன் ,
தேரிடை வந்தனென் , தீதிலேன் '' என்கோ ?
2.5.21
1951 வன் புலக் கல் மன மதியில் வஞ்சனேன் ,
என்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்பால்
உன் புலக்கு உரிய சொல் உணர்த்தச் செல்கென் ஓ ?
தென் புலக் கோமகன் தூதில் செல்கெனோ ?
2.5.22
1952 `'நால் திசை மாந்தரும் நகர மாக்களும்
தேற்றினர் கொணர்வர் என் சிறுவன் தன்னை ' என்று
ஆற்றின அரசனை , ஐய ! வெய்ய என்
கூற்று உறழ் சொல்லினால் கொலைசெய்வேன் கொலோ ? ''
2.5.23
1953 “ ‘அங்கி மேல் வேள்வி செய்து , அரிதில் பெற்ற , நின்
சிங்க ஏறு , அகன்றது ' என்று உணர்த்தச் செல்கெனோ ?
எங்கள் கோ மகற்கு இனி என்னில் , கேகயன்
நங்கையே கடைமுறை நல்லள்போலும் ஆல் . ''
2.5.24
1954 முடிவு உற இன்னன மொழிந்த பின்னரும்
அடி உறத் தழுவினன் , அழுங்கு பேர் அரா ,
இடி உறத் துவளுவது என்னும் இன்னலன் ,
படி உறப் புரண்டனன் , பலவும் பன்னினான் .
2.5.25
1955 சுமந்திரனை எடுத்துத் தழுவி இராமன் கூறுதல் (1955-1967)
தடக் கையால் எடுத்து அவற்றழுவிக் கண்ண நீர்
துடைத்து , வேறு இருத்தி , மற்று இனைய சொல்லினான் ;
அடக்கும் ஐம்பொறியொடு கரணம் அத்து அப்புறம்
கடக்கும் வால் உணர்வினுக்கு அணுகும் காட்சியான் .
2.5.26
1956 பிறத்தல் ஒன்று உற்ற பின் பெறுவ யாவையும் ;
திறத்துளி உணர்வது ஓர் செம்மை உள்ளத்தாய் !
புறத்து உறு பெரும் பழி பொது இன்று எய்தவும் ,
அறம் திறம் மறத்தியோ ? அவலம் உண்டு எனா .
2.5.27
1957 முன்பு நின்று இசை நிறீஇ முடிவு முற்றிய
பின்பும் நின்று உறுதியைப் பயக்கும் பேர் அறம் ;
இன்பம் வந்து உறும் எனில் இயைவது , அ இடை
துன்பம் வந்து உறும் எனில் துறக்கல் , ஆகுமோ .
2.5.28
1958 நிறப் பெரும் படைக்கலம் நிறத்தின் நேர் உற ,
மறப் பயன் விளைக்குறும் வன்மை அன்று ; அரோ
இறப்பினும் , திரு எலாம் இழப்ப எய்தினும் ,
துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே .
2.5.29
1959 கான் புறம் சேறலில் அருமை காண்டல் ஆல் ,
வான் பிறங்கிய புகழ் மன்னர் தொல் குலம் ,
யான் பிறந்து அறத்தினின்று இழுக்கிற்று என்ப ; ஓ
ஊன் திறந்து உயிர் குடித்து உழலும் வேலினாய் !
2.5.30
1960 “ ‘வினைக்கு அரு மெய்ம்மையன் வனத்து விட்டனன்
மனைக்கு அரும் புதல்வனை ' என்றல் , மன்னவன்
தனக்கு அருந்தவம் ; அது தலைக்கொண்டு ஏகுதல்
எனக்கு அருந்தவம் ; இதற்கு இரங்கல் எந்தை ! நீ . ''
2.5.31
1961 `'முந்தினை முனிவனைக் குறுகி , முற்றும் என்
வந்தனை முதலிய மாற்றம் கூறினை ,
எந்தையை அவனொடும் எய்தி , ஈண்டு என
சிந்தனை உணர்த்துதி '' என்று செப்புவான் .
2.5.32
1962 `'முனிவனை எம்பியை 'முறையில் நின்று அரும்
புனித வேதியர்க்கும் மேல் உறை புத்தேளிர்க்கும்
இனியன இழைத்தி ' என்று இயம்பி , 'எற்பிரி
தனிமையும் தீர்த்தி ' என்று உரைத்தி '' தன்மையால் .
2.5.33
1963 'வெவ்வியது அன்னையால் விளைந்தது ஈண்டு ஒரு
கவ்வை ' என்று , இறையும் தன் கருத்தின் நோக்கலன் ,
'எவ் அருள் என் வயின் வைத்தது , இன்சொலால்
அவ் அருள் , அவன் வயின் அருளுக ' என்றியால் .
2.5.34
1964 `''வேண்டினென் இவ் வரம் ' என்று மேலவன்
ஈண்டு அருள் எம்பிபால் நிறுவி , ஏகினை ,
பூண்ட மா தவனொடும் கோயில் புக்கு , இனிது
ஆண்டகை வேந்தனை அவலம் ஆற்றிப் பின் . ''
2.5.35
1965 “ ‘ஏழிரண்டு ஆண்டும் நீத்து , ஈண்ட வந்து , உனைத்
தாழ்குவன் திரு அடி , தளரல் ஈண்டு ' எனச்
சூழி வெம் கட களிற்று அரசற் சொல்லிப் பின் ,
வாழி மாதவன் சொலால் மனம் தெருட்டுவாய் . ''
2.5.36
1966 'முறைமையால் எற் பயந்தெடுத்த மூவர்க்கும்
குறைவு இலா என் நெடு வணக்கம் கூறிப் பின்
இறை மகன் துயர் துடைத்து இருத்தி மாடு ' என்றான் ,
மறைகளை மறைந்து போய் வனத்து வைகுவான் .
2.5.37
1967 'ஆள்வினை ஆணையில் திறம்பல் அன்று ' எனாத்
தாள் முதல் வணங்கிய தனித் திண் தேர்வலான் ,
'ஊழ்வினை வரும் துயர் நிலை ' என்று உன்னுவான்
வாழ் வினை நோக்கியை வணங்கி நோக்கினான் .
2.5.38
1968 சீதை சொல்லல்
அன்னவள் கூறுவாள் , `'அரசர்க்கு அத்தையர்க்கு
என்னுடை வணக்கம் முன் இயம்பி , 'யான் உடைப்
பொன் நிறப் பூவையும் கிளியும் போற்றுக ' என்று
உன்னும் என் தங்கையர்க்கு உணர்த்துவாய் '' என்றாள் .
2.5.39
1969 சுமந்திரன் துயரடைதல்
தேர் வ(ல்)லான் அவ் உரை கேட்டுத் தீங்கு உறின்
யார் வ(ல்)லார் ? உயிர் துறப்பு எளிதன்றே ! எனாப்
போர் வ(ல்)லான் தடுக்கவும் பொருமி விம்மினான் ;
சோர்வு இ(ல்)லாள் அறிகிலாத் துயர்க்குச் சோர்கின்றான் .
2.5.40
1970 சுமந்திரன் இலக்குவனைச் செய்தி கூறுக எனல்
ஆறினன் போல் சிறிது அவலம் அவ் வழி ,
வேறு இலா அன்பினான் , 'விடை தந்து ஈக ' என ,
ஏறு சேவகன் தொழுது இளைய மைந்தனைக்
'கூறுவது யாது ? ' என , இனைய கூறினான் .
2.5.41
1971 இலக்குவன் கூறுதல் (1971-1973)
உரைசெய்து எம் கோ மகற்கு உறுதி ஆக்கிய
தரை கெழு செல்வத்தைத் தவிர , மற்றொரு
விரை செறி குழலிமாட்டு அளித்த மெய்யனை
அரைசன் என்று இன்னம் ஒன்று அறையல் பாலது ஓ ?
2.5.42
1972 'கானகம் பற்றி நல் புதல்வன் காய் உணப்
போனகம் பற்றிய பொய் இல் மன்னற்கு இங்கு ,
யான் அகம் பற்றிய துயரொடு இன்னும் போய்
வானகம் பற்றிலா வலிமை கூறு ' என்றான் .
2.5.43
1973 மின்னுடன் பிறந்த வாள் பரத வேந்தற்கு , 'என்
மன்னுடன் பிறந்திலேன் , மண் கொண்டு ஆள்கின்ற
தன்னுடன் பிறந்திலேன் , தம்பி முன் அலேன் ,
என்னுடன் பிறந்த யான் வலியன் என்றி ' ஆல் .
2.5.44
1974 சுமந்திரன் திரும்பிச் செல்லுதல் (1974-1975)
ஆரியன் இளவலை நோக்கி , 'ஐய ! நீ
சீரிய அல்லன செப்பல் ' என்ற பின்
பாரிடை வணங்கினன் பதைக்கும் நெஞ்சினன்
தேரிடை வித்தகன் சேறல் மேயினான் .
2.5.45
1975 கூட்டினன் தேர்ப் பொறி , கூட்டிக் கோள் முறை
பூட்டினன் புரவி , அப் புரவி போம் நெறி
காட்டினன் , காட்டித் தன் கல்வி மாட்சியால்
ஓட்டினன் ஒருவரும் உணர் வுறாமல் ஏ .
2.5.46
1976 இராமன் வனத்துட்போதல்
தையல்தன் கற்பும் தன் தகவும் தம்பியும்
மை அறு கருணையும் உணர்வும் வாய்மையும்
செய்ய தன் வில்லுமே சேமம் ஆகக் கொண்டு
ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே .
2.5.47
1977 மதித்தோற்றம் (1977-1978)
பொய் வினைக்கு உதவும் வாழ்க்கை
      அரக்கரைப் பொருந்தி , அன்னார்
செய் வினைக்கு உதவும் நட்பால்
      செல்பவர்த் தடுப்பது ஏய்க்கும்
மை விளக்கியதே அன்ன
      வயங்கு இருள் துரக்க , வானம்
கை விளக்கு எடுத்தது என்ன
      வந்தது கடவுள் திங்கள் .
2.5.48
1978 மருமத்துத் தன்னை ஊன்றும்
      மறக் கொடும் பாவம் தீர்க்கும்
உரும் ஒத்த சிலையினோரை
      ஒருப்படுத்து , உதவி நின்ற
கருமத்தின் விளைவை எண்ணிக்
      களிப்பொடு காண வந்த
தருமத்தின் வதனம் என்னப்
      பொலிந்தது தனி வெண் திங்கள் .
2.5.49
1979 மலர்கள் குவிதல்
காம்பு உயர் கானம் செல்லும்
      கரியவன் வறுமை நோக்கித்
தேம்பின குவிந்த போலும்
      செங்கழுநீரும் , சேரைப்
பாம்பின தலைய ஆகிப்
      பரிந்தன குவிந்து சாய்ந்த
ஆம்பலும் என்ற போது
      நின்றபோது அலர்வது உண்டோ ?
2.5.50
1980 இராமன் முதலியோர் வழி நடத்தல்
அஞ்சனக் குன்றம் அன்ன
      அழகனும் , அழகன் தன்னை
எஞ்சல் இல் பொன் போர்த்த அன்ன
      இளவலும் , இந்து என்பான் ,
வெம் சிலைப் புருவத்தாள் தன்
      மெல் அடிக்கு ஏற்ப வெள் நூல்
பஞ்சு இடை படுத்தால் அன்ன
      வெள் நிலாப் பரப்பப் போனார் .
2.5.51
1981 சீதை வருந்தாது வழி நடந்தமை
சிறு நிலை மருங்கின் கொங்கை
      ஏந்திய செல்வம் என்னும்
நெறி இருங் கூந்தல் நங்கை
      சீறடி நீர்க் கொப்பூழின்
நறியன தொடர்ந்து சென்று
      நடந்தன ; நவையுள் நீங்கும்
உறுவலி அன்பினூங்கு ஒன்று
      உண்டு என உணர்வது உண்டோ ?
2.5.52
1982 இரவிடை இராமன் முதலியோர் இரண்டுயோசனை வழி கடந்தமை
பரிதி வானவனும் கீழ்பால் பரும் வரை பற்றா முன்னம்
திருவின் நாயகனும் தென்பால் ஓசனை இரண்டு சென்றான் ;
அருவி பாய் கண்ணும் புண்ணாய் அழிகின்ற மனமும் தானும்
துரித மான் தேரில் சென்றான் செய்தது சொல்லல் உற்றாம் .
2.5.53
1983 சுமந்திரன் செய்தி சொல்லக்கேட்ட வசிட்டன் சொல்லும் செயலும் (1983-1984)
கடிகை ஓர் இரண்டு மூன்றில்
      கடி மதில் அயோத்தி கண்டான் ,
அடியிணை தொழுதான் , ஆதி
      முனிவனை ; அவனும் உற்ற
படி எலாம் கேட்டு , நெஞ்சில்
      பருவரல் உழந்தான் ; முன்னே
முடிவு எலாம் உணர்ந்தான் அந்தோ
      முடிந்தனன் மன்னன் என்றான் .
2.5.54
1984 `'நின்று உயர் பழியை அஞ்சி
      நேர்ந்திலன் தடுக்க வள்ளல் ;
ஒன்றும் நான் உரைத்த நோக்கான்
      தருமத்துக்கு உறுதி பார்ப்பான் ;
வென்றவர் உளரோ மேலை
      விதியினை ? '' என்று விம்மாப்
பொன் திணி மன்னன் கோயில்
      சுமந்திரனோடும் புக்கான் .
2.5.55
1985 சுமந்திரன் தேர்வரவு கண்ட உழையர் நிலை
'தேர் கொண்டு வள்ளல் வந்தான் '
      என்று தம் சிந்தை உந்த
ஊர் கொண்ட திங்கள் என்ன
      மன்னனை உழையர் சுற்றிக்
கார் கொண்ட மேனியானைக்
      கண்டிலர் ; கண்ணில் வற்றா
நீர் கொண்ட நெடுந் தேர் பாகன்
      நிலை கண்டே நிலையில் தீர்ந்தார் .
2.5.56
1986 தசரதன் இராமன் வந்தானோ ? எனல்
'இரதம் வந்துற்றது ' என்று ஆங்கு
      யாவரும் இயம்பலோடும் ,
'வரதன் வந்துற்றான் ' என்ன
      மன்னனும் மயக்கம் தீர்ந்தான் ;
புரை தபு கமல நாட்டம்
      பொருக்கென விழித்து நோக்கி ,
விரத மாதவனைக் கண்டான் ,
      'வீரன் வந்தானோ ' என்றான் .
2.5.57
1987 தசரதன் தளர்தலும் வசிட்டன் அகலலும்
'இல்லை ' என்று உரைக்கலாற்றான் ,
      ஏங்கினன் முனிவன் நின்றான் ;
நல்லவன் முகமே நம்பி
      நடந்தனன் என்னும் மாற்றம்
சொல்லலும் , அரசன் சோர்ந்தான் ;
      துயர் உறும் முனிவன் , 'நான் இவ்
அல்லல் காண்கில்லேன் ' என்னா
      ஆங்கு நின்று அகலப் போனான் .
2.5.58
1988 இராமன் வனம்புக்கதறிந்து தசரதன் வான்புக்கது (1988-1989)
நாயகன் பின்னும் தன் தேர்ப் பாகனை நோக்கி , 'நம்பி
சேயனோ ? அணியனோ ? ' என்று உரைத்தலும் , தேர் வலான் உம் ,
'வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும்
போயினன் ' என்றான் ; என்ற போழ்து அத்து ஏ ஆவி போனான் .
2.5.59
1989 இந்திரன் முதல்வராய
      கடவுளர் யாரும் ஈண்டிச்
சந்திரன் அனையது ஆங்கு ஓர்
      மானத்தில் தலையில் தாங்கி ,
'வந்தனன் எந்தை தந்தை '
      என மனம் களித்து , வள்ளல்
உந்தியான் உலகின் உம்பர்
      மீள்கிலா உலகத்து உய்த்தார் .
2.5.60
1990 கோசலை வருந்திப் புலம்புதல் (1990-1997)
உயிர்ப்பு இலன் , துடிப்பும் இல்லன் ,
      என்று உணர்ந்து , உருவம் தீண்டி ,
அயிர்த்தனள் நோக்கி , மன்னற்கு
      ஆர் உயிர் இன்மை தேறி ,
மயில் குலம் அனைய நங்கை
      கோசலை மறுகி வீழ்ந்தாள் ;
வெயில் சுடு கோடைதன்னில்
      என்பு இ(ல்)லா உயிரின் வேவாள் .
2.5.61
1991 இருந்த அந்தணனோடு எல்லாம்
      ஈன்றவன் தன்னை ஈனப்
பெருந் தவம் செய்த நங்கை ,
      கணவனில் பிரிந்து , தெய்வ
மருந்து இழந்தவரின் விம்மி ,
      மணி பிரி அரவின் மாழ்கி ,
அருந்துணை பிரிந்த அன்றில்
      பெடை என அரற்றல் உற்றாள் .
2.5.62
1992 'தானே தானே தஞ்சம் இலாதான் தகவு இல்லான்
போனான் போனான் எங்களை நீத்து இ பொழுது ' என்னா ,
வான் நீர் சுண்டி , மண் அற வற்றி , மறுகு உற்ற
மீனே என்ன , மெய் தடுமாறி விழுகின்றாள் .
2.5.63
1993 'ஒன்றா நல் நாட்டு உய்க்குவர்
      இ நாட்டு உயிர் காப்பார்
அன்றே ! மக்கள் பெற்று உயிர்
      வாழ்வார்க்கு அவம் உண்டே ?
இன்றே வந்து ஈண்டு 'அஞ்சல் '
      எனாது எம் மகன் என்பான்
கொன்றான் நன்றோ தந்தையை ? '
      என்றாள் குலைகின்றாள் .
2.5.64
1994 நோயும் இன்றி , நோன் கதிர் வாள் வேல் இவை இன்றி ,
மாயும் செல்வ மக்களின் ஆல் ஓ மற மன்னன் ;
'காயும் புள்ளிக் கர்க்கடம் நாகம் கனி வாழை
வேயும் போன்றான் ' என்று மயங்கா விழுகின்றாள் .
2.5.65
1995 கைகேயியை நோக்கிக் கூறுதல்
'வடித் தாழ் கூந்தல் கேகயன்
      மாதே ! மதியால் ஏ
பிடித்தாய் வையம் , பெற்றனை
      பேரா வரம் , இன்னே
முடித்தாய் அன்றே மந்திரம் '
      என்றாள் ; முகில்வாய் மின்
துடித்தால் என்ன மன்னவன்
      மார்பில் துவள்கின்றாள் .
2.5.66
1996 இறந்த தசரதனை நோக்கிக் கூறியது (1996-1997)
'அருந்தேரானைச் சம்பரனைப்
      பண்டு அமர் வென்றாய் !
இருந்தார் வானோர் நின்
      அருளாலே , இனிது , அன்னார்
விருந்து ஆகின்றாய் ! என்றனள் ;
      வேழம் அத்து அரசு ஒன்றைப்
பெருந்தாள் அன்பின் சூழ் பிடி
      என்னப் பிரிவு உற்றாள் .
2.5.67
1997 'வேள்விச் செல்வம் துய்த்தி கொல் !
      மெய்ம்மைத் துணையின்மை
சூழ்விற் செல்வம் துய்த்தி கொல் ?
      தோலா மனு நூலின்
வாழ்விற் செல்வம் துய்த்தி கொல் !
      மன் ' என்றனள் , வானோர் ,
கேள்விச் செல்வம் துய்க்க
      வயிற்று ஓர் கிளை தந்தாள் .
2.5.68
1998 தசரதன் தேவியர் அழுது துயருறுதல்
ஆழி வேந்தன் பெரும் தேவி ,
      அன்ன பன்னி அழுது அரற்றத்
தோழி அன்ன சுமத்திரையும்
      துளங்கி ஏங்கி உயிர் சோர ,
ஊழி திரிவது எனக் கோயில்
      உலையும் வேலை , மற்று ஒழிந்த
மாழை ஒண் கண் தேவியரும்
      மயிலின் குழாத்தின் வந்து இரைத்தார் .
2.5.69
1999 தசரதன் தேவியர் தாமும் உடனுயிர் துறக்கத் துணிதல் (1999-2001)
துஞ்சினானைத் தம் உயிரின்
      துணையைக் கண்டார் துணுக்கம் அத்து ஆல்
நஞ்சு நுகர்ந்தார் என , உடலம்
      நடுங்குகின்றார் என்றாலும் ,
அஞ்சி அழுங்கி விழுந்திலர் ஆல் ;
      அன்பில் தறுகண் பிறிது உண்டோ ?
வஞ்சம் இல்லா மனத்தானை
      வானில் தொடர்வான் மனம் வலித்தார் .
2.5.70
2000 அளம் கொள் அளக்கர் இரும்பரப்பில்
      அண்டர் உலகில் அ புறத்தில்
விளங்கும் மாதர் கற்பினார்
      இவரின் யாவர் ? என நின்றார் ,
களங்கம் நீத்த மதி முகத்தார்
      கான வெள்ளம் கால் கோப்பத்
துளங்கல் இல்லாத் தனிக் குன்றில்
      தொக்க மயிலில் சூழ்ந்து இருந்தார் .
2.5.71
2001 கைத்த சொல்லால் உயிர் இழந்தும்
      புதல்வன் பிரிந்தும் கடை ஓட
மெய்த்த வேந்தன் திரு உடம்பைப்
      பிரியார் பற்றி விட்டிலரால் ;
பித்த மயக்கு ஆம் சுறவு எறியும்
      பிறவிப் பெரிய கடல் கடக்க
உய்த்து மீண்ட நாவாயில்
      தாமும் போவார் ஒக்கின்றார் .
2.5.72
2002 வசிட்டமுனிவன் வந்து வருந்துதல் (2002-2003)
மாதரார்கள் அறுபதினாயிரரும்
      உள்ளம் வலித்து இருப்பக்
கோது இல் குணத்துக் கோசலையும்
      இளைய மாதும் குழைந்து ஏங்கச்
சோதி மணித் தேர்ச் சுமந்திரன் சென்று
      அரசன் தன்மை சொல , வந்த
வேத முனிவன் விதிசெய்த
      வினையை நோக்கி விம்முவான் .
2.5.73
2003 வந்த முனியும் வரம் கொடுத்து ,
      மகனை நீத்த , வன்கண்மை
எந்தை தீர்ந்தான் , என உள்ளத்து
      எண்ணி எண்ணி , இரங்குவான்
உந்து கடலில் பெருங்கலம் ஒன்று
      உடையாநிற்பத் தனி நாய்கன்
நைந்து நீங்கச் செயல் ஓரா
      மீகாமனைப் போல் நைவுற்றான் .
2.5.74
2004 வசிட்டன் தசரதன் உடலை எண்ணெய்க்கொப்பரையில் இடல்
'செய்யக்கடவ செயற்கு உரிய
      சிறுவர் ஈண்டையார் அல்லர் ,
எய்தக் கடவ பொருள் எய்தாது
      இகவா , என்ன இயல்பு ? ' என்னா ,
'மையல் கொடியாள் மகன் , ஈண்டு
      வந்தால் முடித்தும் மற்று ' என்னாத்
தையல் கடல் நின்று எடுத்து அவனைத்
      தயிலக் கடலின் தலை உய்த்தான் .
2.5.75
2005 பரதனை அழைத்துவருமாறு தூதரை அனுப்புதல்
தேவிமாரை 'இவற்கு உரிமை
      செய்யும் நாளில் செம் தீயில்
ஆவி நீத்திர் ' என நீக்கி ,
      அரிவைமார்கள் இருவரையும்
தா இல் கோயில் தலை இருத்தித்
      தண் தார்ப் 'பரதற் கொண்டு அணைக ' என்று
ஏவினான் , மன்னவன் ஆணை
      எழுதும் முடங்கல் எடுத்தோரை .
2.5.76
2006 வசிட்டமுனிவன் தன் தவப்பள்ளியை அடைதல்
போனார் அவரும் கேகயர் கோன்
      பொன்மா நகரம் புக வெய்தின்
ஆனா அறிவின் அரும் தவனும்
      அறம் ஆர் பள்ளியது சேர்ந்தான் ;
'சேனாபதியில் சுமந்திரனே
      செயற்பாற்கு உரிய செய்க ' என்னா
மேல் நாம் சொன்ன மாந்தர்க்கு
      விளைந்தது இனி நாம் விளம்புவாம் .
2.5.77
2007 கதிரவன் தோற்றம்
மீன் நீர் வேலை முரசு இயம்ப ,
      விண்ணோர் ஏத்த , மண் இறைஞ்சத்
தூ நீர் ஒளி வாள் புடை இலங்கச் சுடர்
      தேர் ஏறித் தோன்றினான் ;
'வானே புக்கான் அரும் புதல்வன் ,
      மக்கள் அகன்றார் , வரும் அளவும்
யானே காப்பென் இவ் உலகை '
      என்பான் போல எறி கதிரோன் .
2.5.78
2008 விழித்தெழுந்த மக்கள் இராமனைக்காணாது வருந்தல் (2008-2009)
வருந்தா வண்ணம் வருந்தினார் ,
      மறந்தார் தம்மை , வள்ளலும் ஆங்கு
இருந்தான் என்றே இருந்தார்கள்
      எல்லாம் எழுந்தார் ; அருள் இருக்கும்
பெருந் தாமரைக் கண் கரும் முகிலை
      பெயர்ந்தார் , காணார் , பேதுற்றார் ;
'பொருந்தா நயனம் பொருந்தி நமைப்
      பொன்றச் சூழ்ந்த ' எனப் புரண்டார் .
2.5.79
2009 எட்டுத் திசையும் ஓடுவார் ,
எழுவார் , விழுவார் , 'இடர்க் கடலுள்
விட்டு நீத்தான் நமை ' என்பார் ;
      'வெய்ய வினையின் விளைவு ' என்பார் ;
'ஒட்டிப் படர்ந்த தண்டகம் இவ்
      உலகத்து உளதன்றோ ? உணர்வைச்
சுட்டுச் சேர்தல் ஆற்றுதுமோ ?
      தொடர்தும் தேரின் சுவடு ' என்பார் .
2.5.80
2010 விழித்தெழுந்த மாந்தர் தேர்ச்சுவடு நோக்கி அயோத்திக்கு மீளுதல் (2010-2012)
தேரின் சுவடு நோக்குவார் ,
      திரு மா நகரின் மிசைத் திரிய
ஊரும் திகிரிக் குறி ஒற்றி
      உவந்தார் எல்லாம் உயிர் வந்தார் ,
'ஆரும் அஞ்சல் ! ஐயன் போய்
      அயோத்தி அடைந்தான் ' என அசனிக்
காரும் கடலும் ஒரு வழி கொண்டு
      ஆர்த்த என்னக் கடிது ஆர்த்தார் .
2.5.81
2011 மான அரவின் வாய் தீய
      வளை வான் தொளை வாள் எயிற்றின் வழி
ஆன கடுவுக்கு அரு மருந்தா
      அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து
போன பொழுதில் புகுந்த உயிர்
      பொறுத்தார் ஒத்தார் பொரு அரிய
வேனில் மதனை மதன் அழித்தான்
      மீண்டான் என்ன ஆண்டையார் .
2.5.82
2012 ஆறு செல்லச் செல்லத் தேர்
      ஆழி கண்டார் , அயல் அப்பால்
வேறு சென்ற நெறி காணார் ,
      விம்மாநின்ற உவகையராய் ,
மாறி உலகம் வகுக்கும் நாள்
      வரம்பு கடந்து மண் முழுதும்
ஏறி ஒடுங்கும் எறி கடல் போல்
      எயில் மா நகரம் எய்தினார் .
2.5.83
2013 மீண்ட மக்கள் தசரதன் மாண்டமையும் இராமன் வனம்புக்கமையும் அறிந்து வருந்துதல்
புக்கார் , அரசன் பொன் உலகம்
      போனான் என்னும் பொருள் கேட்டார் ;
உக்கார் நெஞ்சம் ; உயிர் உகுத்தார் ;
      உற்றது எம்மால் உரைப்ப அரிது ஆல் !
தக்கான் போனான் வனம் என்னும்
      தகையும் உணர்ந்தார் ; மிகை ஆவி
அ காலம் அத்து ஏ அகலுமோ ?
      அவதி என்று ஒன்று உளது ஆனால் .
2.5.84
2014 மீண்டுவந்து வருந்திய மக்களை வசிட்டமுனிவன் தேற்றுதல்
மன்னற்கு அல்லர் , வனம் போன
      மைந்தற்கு அல்லர் , வாங்க அரிய
இன்னல் சிறையின் இடைப்பட்டார் ,
      இருந்தார் ; நின்ற அருந்தவனும் ,
'உன்னற்கு அரிய பழி அஞ்சி
      அன்றோ ஒழிந்தது யான் ' என்று
பன்னற்கு அரிய பல நெறியும்
      பகர்ந்து பதைப்பை நீக்கினான் .
2.5.85
2015 வசிட்டமுனிவன் உரையால் மக்கள் ஆறியிருத்தல்
வெள்ளத்திடை வாழ் வடக்கு அனலை
      அஞ்சி , வேலை கடவாத
பள்ளக் கடலின் , முனி பணியால்
      பையுள் நகரம் வைகிட , மேல்
வள்ளல் தாதை பணியினால் ,
      வானோர் தவத்தால் , வயங்கு இருளின்
நள்ளில் போன வரி சிலைக் கை
      நம்பி செய்கை நடத்துவாம் .
2.5.86

---------------------

This file was last updated on 10 June 2012.
.